நல்ல நேரம்

புத்தாண்டு நல்ல பொழுதாக விடிந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏன் என்றால் நேற்று (31 டிசம்பர் 2019) மாலைதான் நான் ஆனந்தவிகடன் இதழுக்கான சிறந்த மொழிபெயர்ப் பாளராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்ற தொலைபேசிச் செய்தி வந்தது.
இது எனது உழைப்புச் சார்ந்த விஷயம் என்றாலும் இப்படித் தேர்ந்தெடுக்கப்படுவது மிகுந்த அதிர்ஷ்டவசமானது என்றுதான் சொல்லவேண்டும். ஒரே பத்திரிகை, மூன்றாவது முறையாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பது அரிதல்லவா?
முதல்முறை 2011இல் ஆந்திரக் கவிஞர் வரவர ராவின் ‘சிறைப்பட்ட கற்பனை’ (Captive Imagination) நூல் மொழிபெயர்ப்புக்காக இவ்விருது கிட்டியது.
இரண்டாவது முறை 2016இல் இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு நூலுக்காக. அப்போதுதான் மிக ‘கிராண்ட்’ஆக விழாக் கொண்டாடும் முறையும் தொடங்கியது.
மூன்றாவது முறை இப்போது 2019இல் ‘நாகரிகங்களின் மோதல்’ நூலுக்காக.
விருதுவழங்குவிழா ஜனவரி 24 அன்று சென்னை வணிக வளாகத்தில் நடைபெற உள்ளது.
மகிழ்ச்சிதான். இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டும் (சொந்தமாகவும், பெயர்ப்பாகவும்) என்ற எண்ணத்தை உறுதியாகத் தோற்றுவிக்கிறது. வாழ்நாள் அதற்குத்தக உதவ வேண்டும்.


விளைவுவாதமா, கடமைவாதமா?

விளைவுவாதமா, கடமைவாதமா?

அண்மையில் ஆந்திராவில் ஒரு குற்றத்திற்காகச் சில குற்றவாளிகள் போலீசாரால் என்கவுண்டர் கொலை செய்யப்பட்டனர். கொன்ற போலீஸ்காரர்களுக்குப் பெரிய பாராட்டு கிடைத்தது. பொதுமக்களுடன் சேர்ந்து, ஆந்திர அமைச்சர்கள் முதல் தமிழக அமைச்சர்கள் வரை இந்த என்கவுண்டர் கொலையைப் பாராட்டினர். ஆனால் ஜனநாயக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இதை எதிர்த்தனர். இந்த நிகழ்ச்சி நமது மரபில் சில சிந்தனைகளைத் தூண்டுகிறது.

இந்தியச் சிந்தனை மரபில் நீதி-நியாயம் என்ற இரண்டு உள்ளன. உதாரணமாக, குற்றவாளிகளை போலீசார் தண்டிக்கின்றனர். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்தான், தகுந்த நீதி கிடைத்துவிட்டது என்று பலரும் அவர்களைப் பாராட்டுகின்றனர்.

ஆனால் கொல்லப்பட்டவர்களில் நிரபராதியும் இருந்திருக்கலாம், அது மட்டுமல்ல, அவர்களுக்குப் பின் அவர்கள் குடும்பம் என்ன ஆகும், மேலும் இத்தகைய தண்டனை குற்றங்கள் நிகழாமல் நிறுத்திவிடுமா, போலீஸ் நீதியைக் கையில் எடுக்கலாகுமா, குற்றவாளிகளின் பின்னணி வலுவானதாக இருந்தால் இப்படி நிகழுமா, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் (உதாரணமாக செம்மரம் கடத்தியதாக இருபது தமிழர்கள் கொல்லப்பட்டது) என்கவுண்டர் நியாயம் ஆகுமா போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இவை நியாயத்தின் பாற்பட்டவை.

நீதியைவிட நியாயம் முக்கியமானது என்பது என் கருத்து. இதற்காக நாம் பழைய இதிகாசமான பாரதக் கதையை நோக்கலாம் என்று நினைக்கிறேன். மகாபாரதத்தில் பகவத்கீதை முக்கியமான பகுதி. அதில் நடக்கும் உரையாடல் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

கதையின்படி, பாண்டவர்கள் நேர்மைமிக்க அரசக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள். அவர்களின் தலைவன் யுதிஷ்டிரன் (அர்ஜுனனின் அண்ணன், அரியணைக்கு சட்டபூர்வ வாரிசு) ஒருபுறம். மறுபுறம், பாண்டவர்களின் பெரியப்பன் பிள்ளைகளான கெளரவர்கள். அவர்கள் தவறான முறையில் பாண்டவர்களுக்குரிய அரசைக் கைப்பற்றியவர்கள். இந்த இதிகாசப் போரில், இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் உள்ள அரசக் குடும்பங்கள் பல ஏதேனும் ஒரு பக்கத்தில் சேர்ந்துள்ளன. அவற்றின் ஆடவர்களில் நல்ல உடல்திடம் கொண்ட இளைஞர்கள் பெரும்பாலோர் படைகளின் இருபுறமும் உள்ளனர். பாண்டவர் களின் பக்கத்தில் உள்ள மிகப் பெரிய வீரன் அர்ஜுனன். அர்ஜுனனின் தேர்ச்சாரதி கிருஷ்ணன். அவன் கடவுளின் அவதார வடிவமாக நோக்கப் படுகிறான்.
அர்ஜுனன்-கிருஷ்ணன் இடையில் நடக்கும் விவாதத்தின் வலிமை இதிகாசக் கதைக்கு வளம் சேர்க்கிறது. ஆனால் பல நூற்றாண்டுகளாக அது அதிக அளவு ஒழுக்கம் சார்ந்த, அரசியல் சிந்தனைகளையும் தூண்டியுள்ளது. அதனால்தான் இங்கு அதை நோக்குகிறோம். விவாதத்தின் உணர்ச்சிகரமான இயல்பு சாதாரண மக்களையும் வசப்படுத்துகிறது. மேலும் மத, தத்துவ விசாரங்களை யும் ஈர்த்துள்ளது.

அர்ஜுனனும் கிருஷ்ணனும் இரு பக்கமும் உள்ள சேனைகளை நோக்குகிறார்கள். போரில் ஈடுபடுவது தனக்கு அவசியம்தானா என்ற தீர்க்கமான சந்தேகத்தினை அர்ஜுனன் வெளியிடுகிறான். தங்கள் தரப்பு நியாயமானது என்பதிலோ, இது செய்யவேண்டியதொரு நேர்மையான போர் என்பதிலோ, தனது பக்கம் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதிலோ அவனுக்குச் சந்தேக மில்லை. ஆனால் போரில் மிகுந்த அளவு மரணம் நிகழும் என்பதை அவன் உணர்கிறான். தானே நிறைய எண்ணிக்கையிலான பேர்களைக் கொல்ல வேண்டி வரும் என்பதும் அவன் கவலை. மேலும் போரில் ஈடுபட்டு இறக்கப் போகின்ற பெரும்பாலானோர், (விசுவாசத்தினாலோ, நட்பினாலோ, வேறு காரணங்களாலோ) குறிப்பிட்ட ஒரு தரப்பைச் சேர உடன்பட்டு வந்தவர்கள் என்பதற்கு மேல் குறிப்பாகத் தீமை எதையும் செய்தவர்கள் அல்ல.

அர்ஜுனனின் கவலையில் ஒரு பகுதி நிகழப் போகின்ற படுகொலைகளால் ஏற்படப்போகும் பேரழிவிலிருந்து எழுகிறது. மற்றொரு பகுதி, அவனே செய்யப் போகின்ற கொலைகள் பற்றியதாக, தான் அன்பு செலுத்துகின்ற, தனக்கு நெருக்கமான பலரையும் கொல்லப் போவது பற்றியதாக இருப்பதால் ஏற்படுகிறது.

போரிடவும் கொலைசெய்யவும் தனக்கு விருப்பமில்லை என்று அர்ஜுனன் சொல்கிறான். கெளரவர்கள் பறித்துக் கொண்ட நாட்டை அவர்களே ஆளவிட்டுவிடலாம், போரின் தீமையைவிட இது குறைந்ததாகும் என்று சொல்கிறான். கிருஷ்ணன் இதற்கு எதிராகப் பேசுகிறான். அவனது எதிர்வினை விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்வதன் முதன்மை பற்றியதாக அமைகிறது. இந்திய மத, ஒழுக்க, தத்துவ விவாதங்களில் திரும்பத் திரும்பப் பேசப் படுகின்ற பிரச்சினை இது. பாண்டவர்களின் கட்சி சார்ந்த ஆதரவாளன் என்ற நிலையிலிருந்து கடவுளின் அவதாரம் என்ற நிலைக்கு (விசுவரூப தரிசனத்தின் வாயிலாக) மெதுவாக கிருஷ்ணன் மாறுகிறான். அதனால் கீதை இந்து இறையியல் சார்ந்த ஒரு பெரிய ஆவணமாக மாறிவிட்டிருக்கிறது.

என்ன வந்தாலும் சரி, அர்ஜுனன் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்கிறான் கிருஷ்ணன். போரிடும் கடமை அவனுக்கு இருக்கிறது. அதில் என்ன விளைவு ஏற்பட்டாலும் சரிதான். ஒரு பெரும் வீரன், படைத் தலைவன் என்ற முறையில் அவனை அவன் தரப்பினர் சார்ந்திருக்கிறார்கள். எனவே அவன் தன் கடமையில் தளரக்கூடாது. கிருஷ்ணனின் கடமை சார்ந்த, ஆனால் விளைவு சாராத, தத்துவம் பல நூற்றாண்டு களாக ஆழமான செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது.

இந்த விஷயத்தில் கடமை என்பது அர்ஜுனன் ஒரு பெரிய வன்முறைப் போரில் ஈடுபடுவது. நியாயமாக அதை அஹிம்சை போதகரான காந்தி ஆதரிக்த்திருக்கக்கூடாது. ஆனால் அவரும்கூட “விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்” என்கின்ற கிருஷ்ணனின் வார்த்தைகளால் எழுச்சி கொண்டு கீதையை அடிக்கடி மேற்கோள் காட்டவும் செய்தார். இப்படிக் கிருஷ்ணனின் வாதங்களைப் பாராட்டுவது உலக முழுவதும் ஒரு நீடித்த நிகழ்வாக உள்ளது.
அர்ஜுனன் வாதங்கள் தவறா? ஒரு நேர்மையான, பயனை எதிர்பார்க்காத கடமையைச் செய்வது என்பது, தான் நேசிக்கும் மக்கள் உள்ளிட்ட பிறரைக் கொல்லக்கூடாது என்ற காரணத்தைவிட முக்கியமானதா? சண்டையிடாமல் மறுப்பது அர்ஜுனன் நோக்கிலிருந்து நிச்சயமாகச் சரியானது என்பது மட்டுமல்ல, கிருஷ்ணன் கவனம் செலுத்திய விஷயங்களைவிட அர்ஜுனன் போரிலிருந்து விலகுவதற்கு எதிரான வாதங்கள் பல இருந்தன.

குருட்சேத்திரப் போர் அன்றைய இந்திய மக்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடியது. எனவே என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய பெரிய அளவு விவாதம் தேவை. என்ன வந்தாலும் கடமையைச் செய், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதே போன்ற எளிய விடை போதாது. இந்த வகையில் ஒரு மதநூல் என்ற வகையில் கீதை கிருஷ்ணனின் சார்பாகவே பேசுகிறது. ஆனால் அர்ஜுனன் கவலை முக்கியமானது. அர்ஜுனனின் ஆழ்ந்த சந்தேகங்களுக்கு நியாயம் இருக்கிறது. மகாபாரதம் பெருமளவு ஒரு துன்பியலாகத்தான் முடிகிறது. ‘நேர்மையான’ காரணத்துக்காகச் சண்டை யிட்டாலும் வெற்றியைத் தொடர்ந்து கவலையும் துன்பமும்தான் விளைகின்றன.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க அணுகுண்டுப் படைக்குத் தலைமை தாங்கிய ராபர்ட் ஓப்பன்ஹீமர், கிருஷ்ணனின் “பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்” என்ற வாதத்தினால்தான் கவரப் பட்டதாகச் சொல்கிறார். அணுகுண்டின் விளைவுகளைப் பார்த்த பிறகு, அவர் வருத்தப்பட்டிருக்கிறார். நீதியைவிட நியாயம் முக்கியமானது.

நமது ஒழுக்க, அரசியல் சிந்தனைகளில் உலக மக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது முக்கியமானது என்பது அர்ஜுனனது நம்பிக்கை. உண்மையில் என்ன நடக்கிறது என்பதற்குக் கண்ணை மூடிக்கொண்டு, நடக்கப்போகின்ற விஷயங்களின் விளைவுகளை அறவே புறக்கணித்துவிட்டுத் தனது பயன்சாராத கடமையைச் செய்ய வேண்டும் என்பது கிருஷ்ணனின் போதனை.

மகாபாரதத்தில் கிருஷ்ணனின் தரப்பு நீதியின் பாற்பட்டது. அர்ஜுனனின் வாதங்கள் நியாயத்தின் பாற்பட்டவை. அர்ஜுனனின் வாதங்கள் மனித உயிர்களின் முக்கியத்துவம் பற்றியவை. தான் செய்யும் செயலின் விளைவுகள் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்கிறான் அர்ஜுனன். என்ன நிகழ்ந்தாலும் தான் செய்யும் செயல்களின் விளைவு களைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் ஒருவன் தன் கடமையைச் செய்யவேண்டும் என்கிறான் கிருஷ்ணன். அர்ஜுனனின் வாதங்களை விளைவுவாதம் அல்லது பயன்நோக்கு வாதம் என்று சொல்லலாம். கிருஷ்ணனுடைய கடமைவாதம் எனலாம். விளைவுவாதமா, கடமைவாதமா என்பதில் பகவத்கீதையில் கடமைவாதம் ஜெயித்தாலும் விளைவுவாதமே முக்கியம் என்பதை அனுபவம் காட்டுகிறது.


ஜனநாயகம் பற்றிய சில சொற்கள்

ஜனநாயகம் பற்றிய சில சொற்கள்—ஒரு குறிப்பு

சுதந்திரம், விடுதலை, தற்சார்பு நிலை, மக்களாட்சி, குடியரசு

நாம் 1947இல் சுதந்திரம் அடைந்தோம் அல்லது பெற்றோம் என்றுதான் பெரும்பாலும் யாவரும் எழுதுகிறார்கள். சுதந்திரம் என்ற வடமொழி சார்ந்த, ஆனால் தமிழில் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்ட சொல்லுக்கு, ஆங்கிலத்தில் ஏறத்தாழ ஒரே மாதிரியான மூன்று சொற்கள் உள்ளன. லிபர்ட்டி, ஃப்ரீடம், இண்டிபெண்டென்ஸ் என்பன அவை.

தமிழில் விடுதலை என்ற சொல்லையும் பயன்படுத்துகிறோம். அதன் பொருள் சுதந்திரம் என்பதிலிருந்து சற்றே வேறுபட்டது. உதாரணமாக இந்தியா சுதந்திரம் அடைந்தது, விடுதலை அடைந்தது என்ற பயன்பாடுகளில் வேற்றுமை இல்லை.
ஆனால் ஒருவர் சிறையிலிருந்து விடுதலை அடைந்தார் என்று சொல்வது போல சிறையிலிருந்து சுதந்திரம் பெற்றார் என எவரும் எழுதுவதில்லை.
ஆங்கிலப் பயன்பாட்டில் “இந்தியா அட்டெய்ன்ட் லிபர்ட்டி” என்று பெரும்பாலும் எழுதுவதில்லை.
“இந்தியா அட்டெய்ன்ட் ஃப்ரீடம்” என்பதிலோ
“இந்தியா காட் இன்டிபென்டென்ஸ்” என்பதிலோ தவறில்லை. இதற்கு இந்த மூன்று சொற்களுக்கும் உள்ள அர்த்த எல்லைகள்தான் காரணம்.
லிபர்ட்டி என்பது தானே இயல்பாக சுதந்திரமாக இருக்கும் நிலை. அது ஒருவர் கொடுத்து மற்றவர் பெறுவதல்ல என்று கருதுகிறேன். ஐரோப்பியர் வருகைக்கு முன் இந்தியா உட்படப் பல நாடுகள் அப்படித்தான் தாங்களே சுதந்திரமாக இருந்தன. அவர்கள் வந்துதான் அடிமைப் படுத்தினார்கள். மேலும் தாங்களே அந்த நாடுகளைக் கண்டுபிடித்ததாகவும் பெருமையடித்துக் கொண்டார்கள்.

லிபர்ட்டி என்ற சொல்லின் பயன்பாட்டைப் பாருங்கள். “ஐ ஆம் அட் லிபர்ட்டி டு டூ சம்திங்”. அது ஒரு இடம். ஐ ஆம் அட் ஹோம் என்பது போல ஐ ஆம் அட் லிபர்ட்டி. “நான் ஏதோ ஒன்றைச் செய்யும் (செய்வதற்குச்) சுதந்திரத்துடன் இருக்கிறேன்”. லிபர்ட்டி, எதைச் செய்வதற்கு என்பதோடு தொடர்புடையது.
ஃப்ரீடம் என்பது வேறு ஏதோ ஒன்றிலிருந்து பெறுகின்ற விடுபாடு அல்லது விடுதலை. குடிப் பழக்கத்திலிருந்து ஒருவர் விடுதலை அடையலாம், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு விடுதலை அடையலாம். அது எதிலிருந்து—என்பதோடு தொடர்புடையது. ஆனால் அதை நாமேதான் சிரமப்பட்டு அடைய வேண்டும். “அட்டெய்ன்” என்ற சொல் (சிரமப்பட்டு அடைவது) அதற்கேற்றதாக உள்ளது.

லிபர்ட்டி என்ற சொல்லின் வேர் லிப்ரே என்ற ஃபிரெஞ்சுச் சொல். ஆனால் அதற்கும் கட்டற்ற நிலை, விடுபட்டநிலை என்றுதான் அர்த்தம். அர்த்தங்கள் ஒன்றாக இருந்தாலும் பயன்பாடுகள் இவற்றுக்கு வேறாக உள்ளன.
இன்டிபென்டன்ஸ் என்பது ‘டிபன்டன்ஸ்’-க்கு எதிர்ச்சொல். ‘டிபன்டன்ஸ்’ என்பது ஒன்றைச் சார்ந்திருக்கும் தன்மை. இன்டிபன்டென்ஸ் என்றால் அதைச் சாராத நிலை. சுயசார்புநிலை. நாம் இப்போது பல நாடுகளை நமது வர்த்தகத்திற்குச் சார்ந்திருக்கிறோம். பொருளாதாரத்தில் நமக்குச் சார்பற்ற நிலை இல்லை. “வி ஆர் நாட் இன்டிபென்டண்ட் இன் இகனாமிக் ஃபீல்ட். வி ஆர் டிபென்டன்ட் ஆன் அமெரிக்கா”. இண்டிபெண்ட்ன்ஸை அடைய வேண்டும், பெற முடியாது. அது ஒரு சாதனை (அச்சீவ்மெண்ட்).

மேலும் ஃப்ரீடம் பொதுநிலை, இண்டிபெண்டன்ஸ் தனிநிலை. உதாரணமாக, ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்பிரஷன் என்றால் வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு, எழுத்துச் சுதந்திரம். ஆனால் இண்டிபெண்டன்ஸ் ஆஃப் எக்ஸ்பிரஷன் என்றால் ஒரு தனிநபரது எழுத்து அல்லது பேச்சுப்பாணி, நடை.

இந்தியா ‘லிபர்ட்டி’ அடையவில்லை. அயல்நாட்டார் வருவதற்கு முன் இந்தியா என்பதும் இல்லை. தனித்தனி நாடுகள்தான் இருந்தன. அந்த நாடுகள் லிபர்ட்டி நிலையில் இருந்தன. அடிமைப்பட்ட இந்தியா, இங்கிலாந்திடமிருந்து ‘ஃப்ரீடம்’ பெற்றது, அதனால் ‘இன்டிபென்டன்ஸ்’ (தற்சார்பு) அடைந்தது என்பது வரலாறு.
லிபர்ட்டி இயல்பான இருப்புநிலை, ஃப்ரீடம் பிறரிடமிருந்து பெறுவது, இண்டிபெண்டன்ஸ் தான் எய்தவேண்டியது. ஆனால் மூன்றுமே தமிழில் சுதந்திரம்தான்.
இன்று நம்மிடம் இந்த மூன்றுமே இல்லை. நாம் விரும்புவதைச் செய்யுமாறு ‘சுதந்திரமாக’ இல்லை. “வீ ஆர் நாட் அட் லிபர்ட்டி”. சமூகத்திலிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பல அடிமைத்தனங்களிலிருந்து நாம் விடுதலை பெறவில்லை.
சிந்திப்பதற்கும் செயல்படுவதற்குமான சுதந்திரமும் (ஃப்ரீடம்) இன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் வெளிப்பாட்டுச் சுதந்திரம் (ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்பிரஷன்) பறிக்கப்படுகிறது.

நாம் யாரையும் சாராத நிலையிலும் (இண்டிபெண்டன்ட் ஆகவும்) இல்லை.
இரண்டைப் பெற்றோம், மூன்றையும் இன்று இழந்து நிற்கிறோம் என்பது உண்மை.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாம் 1952இல் “ரிபப்ளிக்” நிலை அடைந்தோம். ரிபப்ளிக் என்பதற்கு மக்களாட்சி—அதாவது ஜனநாயகம், குடியரசு என்ற இரு அர்த்தங்கள் உள்ளன. மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என்பது நம்மை நாமே ஆளுகின்ற தன்மை. அது பரந்துபட்ட பொருளுடையது. குடியரசு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களாட்சி நிறைவேற்றப் படுகின்ற தன்மை. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
உதாரணமாக அருந்ததி ராய் “ப்ரோகன் ரிபப்ளிக்” என்று ஒரு நூல் எழுதினார். அவர் மக்களாட்சி நொறுங்கியது என்கிறாரா, குடியரசு நொறுங்கியது என்கிறாரா?
குடியரசு நொறுங்கியது என்றால் இந்தியா குடியரசு நாடாக இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தம். ஆனால் சுதந்திர நாடாக அது இருக்கலாம். உதாரணமாக பழங்கால அரசாட்சிகள் சுதந்திரமாகத்தான் இருந்தன, ஆனால் அவை குடியரசுகள் அல்ல.
மக்களாட்சி அல்லது ஜனநாயகம் நொறுங்கியது என்றால் மக்களை மக்களே ஆளும் தன்மை இல்லாமல் போய்விட்டது, அடிமைத்தனம் நிலவுகிறது என்று அர்த்தம். குடியரசு நொறுங்கியது என்றால் அதன் அடிப்படையான குடிமக்களாக இருக்கும் தன்மை (சிட்டிசன்ஷிப்) போய்விட்டது என்று பொருளாகும். இன்றைய இந்தியாவில் எது நொறுங்கியது, எது போய்விட்டது என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும்.


கீழடி நமக்கு அளிப்பது என்ன?

தமிழ்ச் சங்க இலக்கியங்களையும் தொல்காப்பியத்தையும் படிப்பவர்களுக்கு அவை பல காலத் தளங்களில் அமைந்தவை என்பது நன்கு தெரிந்த விஷயம். உதாரணமாக, புறநானூற்றில் கி.மு. 300இல் எழுதப்பட்ட கவிதையும் இருக்கும், கி.பி. 300இல் எழுதப்பட்ட கவிதையும் இருக்கும். தொல்காப்பியத்திலும் அ்வ்வாறே. கி.மு. 500 இல் எழுதப்பட்ட நூற்பாக்களும் உண்டு, கி.பி. 500இல் எழுதிச் சேர்க்கப்பட்ட நூற்பாக்களும் உண்டு. சங்க இலக்கியம் முழுவதும் ஏறத்தாழ அதிகபட்சமாக ஆயிரம் ஆண்டுகள் முதலாகக் குறைந்தபட்சம் ஐநூறு ஆண்டுகள் வரை காலவேறுபாட்டைக் காட்டக்கூடிய ஒரு தொகுப்பு. அதனால் சங்க இலக்கியங்களின் மேல் எல்லை ஏறத்தாழ குறைந்த அளவு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு (அதாவது இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்) என நிர்ணயிக்கலாம். அவற்றில் காணப்படும் நாகரிகமும் பண்பாடும் தமிழர்கள் வாழ்க்கையை இன்னும் குறைந்த அளவு ஓர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னதாகக் கொண்டு செல்லக்கூடியவை, அதாவது கி.மு. 1500 (இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு) என்பதை தமிழர் நாகரிகத்தின் குறைந்தபட்ச எல்லையாகக் கொள்ளலாம் என்பது இன்றுள்ள ஆய்வாளர்கள் யாவருக்கும் தெரியும்.
அப்படியானால் கீழடி ஆய்வின் பயன் என்ன? அதன் காலம் ஏறத்தாழ 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இதனால் ஏற்கெனவே தமிழர் நாகரிகத்தின் பழமை பற்றி நமக்கிருக்கும் கருத்து மாறுபடப் போகிறதா? தமிழர் நாகரிகத்தின் காலத்தைப் பற்றிப் புதிதாக வெளிச்சம் கிடைக்கிறதா? இல்லை.
ஆனால் வரலாற்றுப் பெருமக்கள் இலக்கியங்களையும், இலக்கியத்திலிருந்து கிடைக்கும் தரவுகளையும் எல்லாம் இரண்டாம் நிலைத் தரவுகள் (செகண்டரி) என்று சொல்லிவிடுவார்கள். அவர்களுக்கு முதல்நிலைத் தரவுகள் என்பன கல்வெட்டுகள், கட்டட எச்சங்கள், ஆயுதங்கள், பானை ஓட்டு அல்லது கல்லில் பொறித்த எழுத்துகள், நடுகற்கள், நாணயங்கள், அயல்நாட்டார் குறிப்புகள் போன்ற தொல்லியல் பொருட்கள்தான். அந்த வகையில் கீழடி நமக்குத் தமிழர் நாகரிகத்துக்கான, சங்ககாலத்துக்குச் சற்று முந்திய காலப்பகுதிக்கான முதல்நிலைத் தரவுகளை அளிக்கிறது. அதுவும் மிகப் பெரிய ஒரு நகர நாகரிக அடிப்படையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் காட்டுகிறது. உண்மையில் இத்தகைய நகர அமைப்பை மொகஞ்ச தாரோவிலும் ஹரப்பாவிலும் கண்டுள்ளோம். ஆகவே அதன் தொடர்ச்சி இது என்பதையும் நாம் ஓரளவு உய்த்துணரலாம். கி.மு. 1500 அளவில் வந்த ஆரியர்களுக்கு நகர நாகரிகம், விவசாயம் எல்லாம் கிடையாது. ஆங்காங்கு மிகச் சிறிய குடிசைகளை அமைத்துக் கொண்டு மாடுமேய்த்து வந்தவர்கள் அவர்கள். எனவே தமிழர் நாகரிகம் ஆரிய நாகரிகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதற்கான சான்றுகளையும் இது அளிக்கிறது.
ஆனால் ஏறத்தாழ இன்னும் ஆயிரம் ஆண்டு முற்பட்ட இதே போன்ற கட்டடக்கலை சார்பான அகழ்வாய்வுகள் கிடைத்தால் தமிழர் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி என்பதை அறுதியிட்டே கூற முடியும். அதுதான் இன்று தேவையாக இருக்கிறது. ஒருவேளை மேலும் பல அகழ்வாய்வுகளைச் செய்தால் அப்படிப்பட்ட ஆதாரங்களும் கிடைக்கலாம்.
ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்று காலக்கணிப்புக்கு போராடி வரும் நிலையில் நமது விளம்பரங்கள் மிக எளிதாகக் கருத்தேற்றம் செய்து வடநாட்டவரின் வீண் பெருமையைத் தூண்டி விடுகின்றன. உதாரணமாக இந்தியா முழுவதும் செல்கின்ற ஆயுர்வேதப் பொருள் (சோப்பு…) ஒன்றின் விளம்பரம், ஆயுர்வேதம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூசாமல் சொல்கிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் யார் வாழ்ந்தார்கள், ஆரியர்கள் அப்போது இந்தியாவில் புகவே இல்லையே, அப்படியானால் அந்தப் பழமையைத்தான் ஆயுர்வேதம் எடுத்துக் கொள்கிறதா போன்ற கேள்விகளுக்கு பதில்கிடையாது. யாரோ ஒரு சாமியார் (முனிவர்!) குழவியில் மருந்தை அரைப்பது போன்ற படத்தைப் போட்டு இது ஆயுர்வேதம், ஐந்தாயிரம், ஏன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று சொல்லிவிட்டால் நம்புவதற்கு ஏராளமான கூகைகள் உள்ளன. மதத்தை எப்படியெல்லாம் திணிக்கிறார்கள்!


கைவீசம்மா கைவீசு

குழந்தைப் பாடல்கள் (Nursery Rhymes)

குழந்தைப் பாடல்கள் நடக்கத் தொடங்கும் பருவம் முதலாக பள்ளிக்குச் செல்லும் பருவம் வரையில் பாடுவதற்கு உரியவை. மகிழ்ச்சியோடு பாடி துள்ளிக்குதித்து ஆடுவதற்கான பாடல்கள் இவை.

குழந்தைப் பாடல்கள் பழங்காலத்திலேயே தமிழில் இருந்தவைதான். எழுதப்பட்ட குழந்தைப் பாக்கள் அறநெறியை மையமாகக் கொண்டவை. ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்றவை. வாய்மொழி மரபில் வந்த,

நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடிவா

போன்ற குழந்தைப் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளன.

குழந்தைப் பாடல்களில் நல்ல எதுகை மோனை அமைந்திருக்க வேண்டும். ஒரே மாதிரியான அசைகள் திரும்பத் திரும்ப வரவேண்டும். எளிய சொற்கள் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.

பாடற்பொருள் குழந்தைகளுக்கு இசைவாக இருக்க வேண்டும். தர்க்கரீதியான பொருளே இல்லாமல் இருந்தாலும் நல்லதுதான். கருத்துகளைத் திணிக்கலாகாது. பொருளற்ற ஒலிகளும் ஒலித்தொடர்களும் சுவை கூட்டுவனவாக அமையும். எதிர்மறைக் கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

அண்மைக்காலத்தில் கவிமணி தேசிகவிநாயகம், அழ. வள்ளியப்பா போன்றோர் சிறந்த குழந்தைப் பாடல்களை இயற்றியுள்ளனர். இங்கே இரண்டு பழைய கால குழந்தைப் பாடல்களைத் தருகிறேன்.

சாஞ்சாடம்மா சாஞ்சாடு (சாய்ந்தாடம்மா என்பதன் கொச்சை)
சாயங் கிளியே சாஞ்சாடு
குத்து விளக்கே சாஞ்சாடு
கோயில் புறாவே சாஞ்சாடு
கண்ணே மணியே சாஞ்சாடு
கட்டிக் கரும்பே சாஞ்சாடு.

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு

மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு

சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய் போடலாம் கைவீசு

‍பொம்மை வாங்கலாம் கைவீசு
தங்கைக்குத் தரலாம் கைவீசு

வேடிக்கை பார்க்கலாம் கைவீசு
வேண்டியது வாங்கலாம் கைவீசு

கோயிலுக்குப் போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு


அறப்பளீசுர சதகம்

சதகம் என்பது ஒரு சிற்றிலக்கிய வகை. சதகம் என்றால் நூறு பாக்கள் கொண்ட இலக்கிய வகை என்று பொருள். சதக நூல்கள் நல்ல நீதிகளை எளிய நடையில் இனிமையாக எடுத்துரைப்பனவாக உள்ளன. தமிழில் பல சதக நூல்கள் உண்டு. அதில் அறப்பளீசுர சதகம் என்பதும் ஒன்று.
அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. நூற்பெயர் பாட்டுடைத் தலைவனால் வருவது. அறப்பளீசுவரர் கோயில் (சிவன் கோயில்) கொல்லி மலையில் உள்ளது. இதில் நூறு பாக்கள் இல்லை, 51 பாக்களே உள்ளன. சான்றுக்கு ஒரு பாவினைக் காணலாம். இது 14ஆம் பாட்டு.

வாலிபம் தனில் வித்தை கற்க வேண்டும் கற்ற வழியிலே நிற்க வேண்டும்
வளைகடல் திரிந்து பொருள் தேட வேண்டும் தேடி வளர்அறம் செய்ய
வேண்டும்
சீலமுடையோர்களைச் சேர வேண்டும் பிரிதல் செய்யாதிருக்க வேண்டும்
செந்தமிழ்ப் பாடல் பல கொள்ள வேண்டும் கொண்டு தியாகம் கொடுக்க
வேண்டும்
ஞாலமிசை பல தருமம் நாட்ட வேண்டும் நாட்டி நன்றாய் நடத்த வேண்டும்
நம்பன் இணையடி பூசை பண்ண வேண்டும் பண்ணினாலும் மிகு பக்தி
வேண்டும்
ஆலம் அமர் கண்டனே, பூதியணி முண்டனே, அனக எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை தருசதுர கிரிவளர் அறப்பளீசுர தேவனே.

எனக்காகவே எழுதப்பட்டது போன்ற ஒரு பாடல் இது.

கோபமே பாவங்களுக்கெலாம் தாய் தந்தை கோபமே குடிகெடுக்கும்
கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது கோபமே துயர் கொடுக்கும்
கோபமே பொல்லாது கோபமே சீர்கேடு கோபமே உறவு அறுக்கும்
கோபமே பழிசெயும் கோபமே பகையாளி கோபமே கருணை போக்கும்
கோபமே ஈனமாம் கோபமே எவரையும் கூடாமல் ஒருவனாக்கும்
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீநரகு குழியினில் தள்ளிவிடுமால்
ஆபத்தெலாம் தவிர்த் தென்னை ஆட்கொண்டருளும் அண்ணலே அருமை
மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் அறப்பளீசுர தேவனே.

அருமையான எளிய இந்த நூலைப் படித்துப் பயனடைவோம்.


ஆத்திசூடி

இன்றைய சிறார்கள் பழந்தமிழ் நீதிநூல்கள் சிலவற்றையேனும் படிப்பதும் மனப்பாடம் செய்வதும் அவசியம். ஆனால் அவை கிடைப்பதில்லை. புத்தகச் சந்தைகளில்கூட ஆங்கிலம் கற்கும், பேசும் நூல்கள் மண்டிக்கிடக்கின்றனவே ஒழிய தமிழ் அறநெறி நூல்களைக் காண முடிவதில்லை.
இந்தப் பதிவில் ஒளவையார் இயற்றிய ஆத்திசூடி நூலைப் படைக்கிறேன். ஆத்திச் சூடி அல்ல. ஆத்தி சூடிதான். ஆத்தி சூடி என்றால் ஆத்தியைச் சூடுபவன், அதாவது ஆத்தி மாலையைச் சூடுகின்ற சிவபெருமான். மொத்தம் நூற்றெட்டு அடிகளை உடையது இந்நூல். இதைக் கற்பதும் மனப்பாடம் செய்வதும் மிக எளிது.
ஆத்திசூடி–நூல்

அறஞ்செய விரும்பு 1
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கம் அது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புர ஒழுகு
ஓதுவது ஒழியேல் 11
ஒளவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
கண்டொன்று சொல்லேல்
ஙப்போல் வளை
சனிநீராடு
ஞயம்பட உரை
இடம்பட வீடு எடேல்
இணக்கமறிந்து இணங்கு
தந்தைதாய் பேண்
நன்றி மறவேல் 21
பருவத்தே பயிர்செய்
மண்பறித்து உண்ணேல்
இயல்பலாதன செயேல்
அரவம் ஆட்டேல்
இலவம் பஞ்சில் துயில்
வஞ்சகம் பேசேல்
அழகலாதன செயேல்
இளமையிற் கல்
அறனை மறவேல்
அனந்தல் ஆடேல் 31
கடிவது மற
காப்பது விரதம்
கிழமைப்பட வாழ்
கீழ்மை அகற்று
குணமது கைவிடேல்
கூடிப் பிரியேல்
கெடுப்பது ஒழி
கேள்வி முயல்
கைவினை கரவேல்
கொள்ளை விரும்பேல் 41
கோதாட்டு ஒழி
சக்கர நெறிநில்
சான்றோர் இனத்திரு
சித்திரம் பேசேல்
சீர்மை மறவேல்
சுளிக்கச் சொல்லேல்
சூது விரும்பேல்
செய்வன திருந்தச்செய்
சேரிடம் அறிந்துசேர்
சை எனத் திரியேல் 51
சொற் சோர்வு படேல்
சோம்பித் திரியேல்
தக்கோன் எனத்திரி
தானமது விரும்பு
திருமாலுக்கடிமை செய்
தீவினை அகற்று
துன்பத்திற்கிடங் கொடேல்
தூக்கி வினைசெய்
தெய்வம் இகழேல்
தேசத்தோடு ஒத்துவாழ் 61
தையல்சொல் கேளேல்
தொன்மை மறவேல்
தோற்பன தொடரேல்
நன்மை கடைப்பிடி
நாடு ஒப்பன செய்
நிலையில் பிரியேல்
நீர் விளையாடேல்
நுண்மை நுகரேல்
நூல் பல கல்
நெற்பயிர் விளை 71
நேர்பட ஒழுகு
நைவினை நணுகேல்
நொய்ய உரையேல்
நோய்க்கு இடங்கொடேல்
பழிப்பன பகரேல்
பாம்பொடு பழகேல்
பிழைபடச் சொல்லேல்
பீடு பெற நில்
புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
பூமி திருத்தி உண் 81
பெரியாரைத் துணைக் கொள்
பேதமை யகற்று
பையலோடு இணங்கேல்
பொருள்தனைப் போற்றிவாழ்
போர்த்தொழில் புரியேல்
மனம் தடுமாறேல்
மாற்றானுக்கு இடம்கொடேல்
மிகைபடச் சொல்லேல்
மீதூண் விரும்பேல்
முனைமுகத்து நில்லேல் 91
மூர்க்கரோ டிணங்கேல்
மெல்லிநல்லாள் தோள்சேர்
மேன்மக்கள் சொற்கேள்
மைவிழியார் மனையகல்
மொழிவது அற மொழி
மோகத்தை முனி
வல்லமை பேசேல்
வாது முற்கூறேல்
வித்தை விரும்பு
வீடுபெற நில் 101
உத்தமனாய் இரு
ஊருடன் கூடிவாழ்
வெட்டெனப் பேசேல்
வேண்டி வினைசெயேல்
வைகறைத் துயிலெழு
ஒன்னாரைத் தேறேல்
ஓரஞ்சொல்லேல் 108


யாரும் யானும்

தமிழ்மொழியின் தனித்தன்மை, தனது சாதாரணச் சொல்லமைப்பு முறையிலேயே அற்புதமான கருத்துகளை உணர்த்துவதாகும்.
தமிழில் ரகர மெய் பன்மையையும் னகர மெய் ஒருமையையும் உணர்த்துவது. சான்றாக,
கணவர் (பன்மை) – கணவன் (ஒருமை)
மன்னர் (பன்மை) – மன்னன் (ஒருமை)
திருடர் (பன்மை) – திருடன் (ஒருமை)
தமிழ் தெரிந்தவர்களுக்கு இதற்கு மேலும் உதாரணங்கள் தேவையில்லை. இதேபோல,
யார் (பன்மை) – யான் (ஒருமை) (இக்காலத் தமிழில் இது ‘நான்’ என்று ஆகிவிட்டது)
எந்தக் கேள்வி ‘யார்’ என்பதைக் கொண்டு கேட்டாலும் அதற்கு ஒருமை வடிவம் ‘யான்’. அதுவே பதிலாகவும் அமைகிறது.

உதவி செய்தது எவர் என்று பன்மையிலோ, உதவி செய்தது எவன் என்று ஒருமையிலோ கேட்க முடியும். ஆனால், “உதவி செய்தது யான்?” என்று ஒருமையில் அமைக்க முடியுமா? பன்மையில்தான் கேட்டாக வேண்டும். “உதவி செய்தது யார்?” அதற்கு விடை அந்தக் கேள்வியேதான், அதன் ஒருமை வடிவம், “யான்”.
ஆட்சி அமைத்தது யார்? (ஒருமை வடிவத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டால், “ஆட்சி அமைத்தது யான்?” விடை கேள்வியிலேயே இருக்கிறது–“யான்”.)
தவறு செய்தது யார்? யான்
குற்றமிழைத்தது யார்? யான்
நல்லது செய்தது யார்? யான்.
இதுபோலவே எல்லாக் கேள்விகளுக்கும் யான் என்று அமைக்க முடியும். யார் என்று பன்மையில் முடியும் எல்லாக் கேள்விகளுக்கும் அதன் ஒருமை வடிவமே பதிலாக (யான்) உள்ளடங்கி நிற்கிறது. அதாவது உலகில், நன்மையோ, தீமையோ எல்லாவற்றுக்கும் மூல காரணம் “யான்” (நான்).

பழங்காலத்தில் மனச் செயல்களை சித்தம்–புத்தி–அகங்காரம் எனப் பகுத்தார்கள். (சித்தம் என்பது முடிவெடுத்தல் சார்ந்த மனச்செயல், புத்தி என்பது பகுத்தாராய்கின்ற, காரண-காரிய ஆய்வைச் செய்கின்ற மனச்செயல். அகங்காரம், இவை எல்லாவற்றுக்கும் காரணம் நான் என உணர்கின்ற செயல்.)
யான் என்பது சித்தம்-புத்தி-அகங்காரம் என்ற மனச் செயல்கள் மூன்றில் அகங்காரத்தின் இருப்பிடம். அந்த ஆணவமலம் நீங்க வேண்டும் என்பதற்காகத்தான் (எவன் என்பது போல் அன்றி, யான் என்ற வகையில் கேள்வி அமைப்பதைவிட்டுத்) தமிழில் பன்மையில் “யார்” என அமைத்தார்கள் போலும்.


தாலாட்டு

நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டு என்பதும் ஒருவகை. இந்தக் காலப் பெண்களுக்குத் தாலாட்டு வருவதில்லை. சென்ற தலைமுறை வரை பெண்கள் தாலாட்டுப் பாடுவதில் வல்லுநர்களாக இருந்தார்கள். தால் என்றால் நாக்கு. நாக்கை அசைத்து ‘உளஉளாயி’ என்று  (நம் பார்வையில்) ஒரு பொருளற்ற சத்தத்தை எழுப்பி, ஆராரோ ஆரிரரோ என்று தொடங்கிக் குழந்தைக்கென ஒரு ராகத்தில் பெண்கள் பாடுவார்கள். திரைப்படப் பாடல்கள் வந்த காலம் முதலாகப் பெண்கள் தாலாட்டுப் பாடுவதை விட்டுவிட் டார்கள். எங்கள் வீட்டிலும் எங்கம்மா காலம் வரை தாலாட்டு இருந்தது. என் சகோதரிகள் யாரும் தாலாட்டுப் பாடியதில்லை. இப்போது என் மகளும் மருமகளும்கூட அதே நிலைதான். இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்றால் ரேடியோவையோ தொலைக்காட்சியையோ டேப் ரிகார்டரையோ சற்றே சத்தமாக வைத்துச் சில பாட்டுகளைக் குழந்தைக்காக வைப்பார்கள். இந்தக் காலத்தில்தான் செல்ஃபோன் வரை வந்து விட்டதே.

ஆராரோ ஆராரோ
ஆரிவரோ (ஆரிரரோ) ஆராரோ
யார் அடித்து நீ அழுதாய்
அடித்தாரைச் சொல்லியழு
பிடித்துவைத்து தண்டிப்பேன்
பாட்டி அடித்தாளோ
பாலூட்டும் கையாலே
தாத்தா அடித்தாரோ
தாங்கி வரும் கையாலே
மாமா அடித்தாரோ
மாலையிடும் கையாலே
யாரும் அடிக்கவில்லை
யார்விரலும் தீண்டவில்லை
பசிக்குத்தான் அழுதாயோ
பாசமுள்ள என் குழந்தாய்.