பொங்கல், ‍தைப் புத்தாண்டு வாழ்த்துகள்

இந்தப் பொங்கல் நன்னாள், பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள், உருவம் அருவம் என்ற பேதமற்று ஆதவனை வழிபடும் நன்னாள்,

உலகத்தில் உள்ள அனைவருக்கும், இன பேதமற்று, சாதி பேதமற்று, மத பேதமற்று, எல்லாரும், நல்லவரும் பொல்லாதவரும் அனைவரும் சிறப்புற்று வாழுகின்ற பொலிவுறும் ஆண்டாக இது மலர வேண்டும் என்னும் என் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிறேன்.

நல்லவரும் தீயவரும் மாக்களும் மனிதர்களும் விலங்குகளும் பூச்சிபுழுக்களும் தாவரங்களும் கண்ணுக்குப் புலப்படாச் சிற்றுயிர்களும்- அனைத்தும் நல்லவிதமாக வாழவேண்டும்.

அததற்கு, உயிருள்ளதற்கும் இல்லாததற்கும்கூட – ஒரு பணி இயற்கையில் இருக்கிறது. அதனதன் பணியை அதுஅது ஆற்றவேண்டும்.

ஆனால் எல்லையற்றதாகிய – இன்ஃபினிடி யாகிய இயற்கையே, ஒரே ஒரு வேண்டுகோள்.

நல்லவர்கள் தலைவர்களாகட்டும். நாட்டை ஆள்வோராகட்டும். அவரவர்க்கேற்ற அறிவுப் பதவிகளில் அமரட்டும்.

தீயவர்கள் அவரவர் தகுதிக்கேற்ப கீழ்நிலையிலே இருக்கட்டும்.

அப்போதுதான் இயற்கையாகிய நீ உய்வாய், பூமி வாழும், மக்கள் வாழ்வார்கள். இல்லையேல் மக்களுக்கு முன்னாலேயே இந்தத் தாயகமாகிய எங்கள் பூமியும் பல்வேறு வித இயற்கைச் சூழல் மாசுபாடுகளால் அழிந்து போகும்.

உலகில் எந்தப் பிராணியும் தனக்குள் சண்டையிட்டுத் தன்னையே அழித்துக் கொள்வதில்லை, தான் வாழும் இயற்கையையும் அழிப்பதில்லை. மனிதன் மட்டும் ஏனோ அவ்விதம் செய்கின்ற கேடான பிராணியாக உருவெடுத்துவிட்டான். இம்மனிதர்க ளிடமிருந்து எங்களைக் காப்பாற்று இயற்கையே…