பெண் அடிமைத்தனம்

“பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கும் நீங்கள், பெண்களின் உரிமை பற்றிப் பேசும் நீங்கள், ஏன் வீட்டிலுள்ள, அல்லது வெளியிலும் கூட பெண்களைக் கடுமையாக (அடிமை போல) நடத்துகிறீர்கள்?” என்று சிலர் (என் மகன் உள்படக்) கேட்டுள்ளனர். பெண்களை அதட்டுவதும் வேலை செய்யச் சொல்வதும் தவறுசெய்தால் திட்டுவதும் பெண்ணடிமைத்தனம் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அப்படியானால் நாம் ஆண்களைத் திட்டுவதோ, அதட்டுவதோ, வேலை செய்யச் சொல்வதோ இல்லையா? அந்தச் சமயத்தில் அவர்கள் இது ஆணடிமைத்தனம் என்று குரல் கொடுப்பார்களா? ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும், சரிவரக் கொடுத்த பணியைச் செய்யவில்லையானால் (என் மாணவர்களை) நான் பலமுறை திட்டியிருக்கிறேன். அதனால் நான் அவர்களை அடிமையாக நினைத்தேன் என்பது அல்ல. அது அவர்களுக்கும் தெரியும்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்பது குறள்.
இதை மேற்கோள் காட்டுபவர்கள், முதற்பகுதியை மட்டும் காட்டிவிட்டு வசதியாக பிற்பகுதியை மறந்துவிடுகிறார்கள்.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பினால் வருகின்ற உரிமைகள், பசி தாகம் போன்றவற்றையும் பிற அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் உரிமைகள் உண்டு, ஆனால், நாம் அதற்காக யாவருக்கும் சம அந்தஸ்து தரவேண்டியதில்லை என்பதுதான் வள்ளுவர் கருத்து. யோசித்துப் பாருங்கள், ஒரு கலெக்டர் ஆபீசிலுள்ள டவாலிக்கும் எழுத்தருக்கும் கலெக்டருக்கும் ஒரேவித மரியாதையையா நாம் தருகிறோம்? இதுதான் “சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்ற தொடருக்குப் பொருள். ஆனால் எல்லாருக்கும் நிரந்தரமான பணி வாய்ப்பு, அந்தந்த வேலைக்கான உரிமைகள், ஊதியப் பிடித்தம், படிகள் என்பது போன்றவற்றை நாம் ஏற்கிறோம், எந்தத் தொழிலாளர ஆனாலும் போராடுகிறோம் அல்லவா? அதுபோலதத்தான் சமத்துவம், என்பதற்கும் சிறப்பு (அந்தஸ்து) என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

ஒரு எச்சரிக்கை–சிறப்பு என்பதைப் பார்ப்பனியம் சொல்வது போன்ற பிறப்பினால் வருகின்ற பேதமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை வள்ளுவர் ஒப்பவில்லை.


அருட்பெருஞ்சோதி

“அருட்பெருஞ் சோதி தனிப்பெரும் கருணை” என்பது வள்ளலாரின் தாரக முழக்கம்.
அவர் குறிப்பிடும் அருட்பெருஞ்சோதி எது என்று யோசித்தேன்.
“பசியநீலக் கடலின்மீது எழுகின்ற ஞாயிறு போல பச்சையும் நீலமும் கலநத் நிறத்தினை உடைய மயிலின் மீது அமர்ந்துள்ள முருகப் பெருமானின் தோற்றம் அமைந்துள்ளது” என்று திருமுருகாற்றுப்படையின் தொடக்க அடிகளில் நக்கீரர் உரைக்கின்றார்.
“போல” என்று உவம உருபு சேர்த்து உவமையாகச் சொன்னாலும், முருகனின் உருவமும் ஞாயிற்றின் உருவமும் ஒன்றுதான். முருகன் என்றால் ஞாயிறு. முருகன் என்ற சொல்லுக்கு அழகு, அறிவு, கூர்மை, இயற்கை எனப் பல அர்த்தங்கள் உண்டு. இயற்கையின் ஒரு கூறாக இருக்கும் ஞாயிறு என்ற அர்த்தமும் உண்டு. முருகனை எண்ணி “ஒருமையுடன் நினதுதிரு” என்று பாடிய வள்ளலார் அந்த முருகனை இயற்கையாகவே காண்பவராக வளர்ச்சிபெற்றமைதான் அருட்பெருஞ்சோதி என்ற சொல்லில் தெளிவுபடுகிறது.
ஆம், அருட்பெருஞ்சோதி என்பது இயற்கை ஒளிகளுக்கும், குறிப்பாக நமக்கு வெயிலை அளிக்கும் ஞாயிற்றுக்கும்தான் பொருந்தும்.

அவ்வாறானால், தனிப்பெருங்கருணை என்பது?
ஞாயிற்றின் கருணைதான் தனிப்பெருங்கருணை. ஒளியில்லாமல் பூமியில் உயிர் வாழ்க்கை ஏது? அதனால்தான் பொங்கலின் முதல்நாளாக ஞாயிற்றை வழிபடுகிறோம்.
ஞாயிற்றின் ஒளி வாயிலாக நிகழும் ஒளிச்சேர்க்கை இல்லையேல் தாவரங்களும் மரங்களும் பயிர்களும் விளைச்சலும் விவசாயமும் ஏது?
மனிதன் ஆட்டைத் தின்றாலும், அந்த ஆடும் பசிய இலைகளை அல்லவா தின்கிறது? அசைவ உணவுக்கும் சைவ உணவுதான் அடிப்படை. அதனால்தான் ஜீவகாருண்யத்தையும் போற்றினார் வள்ளலார். தனிப்பெருங்கருணை என்பது உயிர்களை ஒளிச்சேர்க்கை போன்ற செயல்கள் வாயிலாக வாழவைக்கும் ஆதவனின் கருணைதான்.
எனவே நாம் உருவங்களை வழிபடுவதை விட்டு, அவற்றிற்காக அடித்துக் கொள்வதை விட்டு, மதச் சண்டைகள் இடுவதை விட்டு அருட்பெருஞ்சோதியான ஞாயிற்றையும் அதன் தனிப்பெருங்கருணையையும் வழிபடுவோம்.


மதம்

உங்கள் கருத்தில் மதம் என்றால் என்ன?

இக்கேள்வியை நிறையப் பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதனால்தான் கேள்வி-பதில் முறையில் இதைச் சொல்ல முனைந்தேன்.
மதம் என்பதற்குப் பிடிவாதமான, அசைக்கமுடியாத நம்பிக்கை அல்லது கருத்து என்று அர்த்தம். ஆங்கிலத்தில் Dogma என்று சொல்வதற்கு ஒப்பானது இது. அதனால்தான் வள்ளலார் “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்றார். பல இடங்களிலும் இவ்வாறு மதத்தைச் சாடியிருக்கிறார்.
இன்றுள்ள எல்லா மதங்களும் வெறும் Faith என்று சொல்லக்கூடிய விசுவாசமாக மட்டும் இல்லை. அவை ‘டாக்மா’க்களாகத்தான் இருக்கின்றன. இதற்கு இந்து மதம் பற்றி வடமாநிலங்களில் நிலவும் மனப்பான்மையே நல்ல உதாரணம்.
வடமொழியிலும் இந்தியிலும் மதம் என்பதைக் குறிக்க ‘தர்மம்’ என்ற சொல்லைக் கையாள்கிறார்கள். தர்மம் என்பதற்குத் தமிழில் நாம் கொள்ளும் அர்த்தப்படி நோக்கினால் இந்து தர்மம் என்று சொல்வது தவறு. மதத்துக்கும் அறத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
என் சான்றிதழில் என் மதம் இந்து என்று குறிப்பிடப் பட்டிருந்தாலும், நான் இந்து அல்ல. எனக்கு மதம் கிடையாது, சமயம் என்ற ஒன்று கிடையாது என்று சொல்லவே ஆசைப்படுகிறேன். இன்றைய இந்து மதம் செல்லும் போக்கில் எனக்கு எள்ளளவும் சம்மதமில்லை. கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் ஆகியவை ‘டாக்மேடிக்’ மதங்கள். அதாவது பிடிவாதமான மதங்கள். திருமணம் செய்தாலும் கூட நீங்கள் தான் கிறித்துவராகவோ முஸ்லிமாகவோ ஆகவேண்டுமே தவிர அவர்கள் இந்துவாக மாட்டார்கள். அதனால்தான் ‘டாக்மேடிக்’ என்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து மதம் தளர்ச்சியான, ‘எந்தச் சாமியையும் நீ கும்பிடலாம்’, ‘கும்பிடாமல் நாத்திகனாகவும் இருக்கலாம்’ என்று சொல்கின்ற மதமாகத்தான் அது இருந்திருக்கிறது. இப்போது வடநாட்டு ‘டாக்மேடிக்’ தன்மையை இங்கு புகுத்தப் பார்க்கிறார்கள். கூடவே சமஸ்கிருதத்தையும், இந்தியையும். இதில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை.
நான் கோயிலுக்குச் செல்வதில்லை. கடவுளைக் கும்பிடுவது என்ற செயல் ஒருபக்கம் பிடிக்காதிருந்தாலும், அங்கு நிகழும் சுரண்டலும், பார்ப்பனிய மேலாண்மையும், பணத்துக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்கும் தன்மையும் எனக்குச் சற்றும் ஒவ்வாதவை. மிக இளமையிலிருந்தே இந்த மனப்பான்மை எனக்கு வருவதற்கு என் தந்தையும் என் சித்தப்பாக்களும்தான் காரணம்.


அதோ அந்தப் பறவை போல…

மகாத்மா காந்தி மிக வேகமாக நடப்பாராம். தாகூர் அவரது நடையைப் பற்றி ஒருமுறை சொன்னாராம்: “அவர் நடப்பதில்லை, பறவை போலப் பறக்கிறார்.” ஒரு காலத்தில் என் தந்தையின் நடையும் அப்படித்தான் இருந்தது. இளம்வயதில் என் நடையும் கூட வேகமானதுதான். ஆனால் கால்முறிவு ஏற்பட்டுக் கண்ணும் ஒன்று போனபின்பு நடப்பதே இல்லை, நடந்தாலும் பிறர் துணையோடுதான் என்று ஆகிவிட்டது.
இனி மீண்டும் நடக்கப் பழகவேண்டும். ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமேனும். பறவை போல, அதன் இறகு போல மனமும் உடலும் இலேசாகி நடக்க வேண்டும். பழங்காலத்தில் சொல்வார்கள்: “பெண்கள் பாதம் பூமியில் படிவதே தெரியக்கூடாது. ஒலி எழக்கூடாது. தம தம் என்று நடக்கக்கூடாது”. உண்மை. உழைப்பாளிப் பெண்களுக்கு இது பொருந்தாவிட்டாலும், நடுத்தர வர்க்க, மேல்தட்டுப் பெண்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடியதுதான். அப்படியே, ஆண்களுக்கும்.


வணங்குதல்

வணங்குதல் பற்றி உங்கள் கருத்தென்ன?

1. கடவுளை வணங்குபவர்கள் எல்லாரும் கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். உதாரணமாகக் கிறித்தவர்கள், ஒவ்வொரு உணவின்போதும் “இன்றைய உணவை எங்களுக்கு அளித்த பிதாவே உங்களுக்கு நன்றி” என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். இதையே முஸ்லிம்களும், நிறைய இந்துக்களும் செய்வதை-அதாவது இறைவனுக்கு நன்றி பாராட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.

நாம் இளமையில் நம் அப்பாவின் ஊதியத்தில்தான் சாப்பிட்டு, உடைகள், பிற வசதிகள் போன்றவற்றைப் பெற்று, கல்வியும் பெற்றோம். ஒவ்வொருமுறை வீட்டிலும் சாப்பிடும்போதும், “நீங்கள் சம்பாதித்த பணத்தில்தான் நான் சாப்பிடுகிறேன், உங்களுக்கு நன்றி” என்று கூறுவோமா? கூறியிருந்தால் அவர்களுக்கும்தான் எப்படி இருந்திருக்கும்? அதுபோல கடவுளைப் பிதா, அதாவது தந்தை, அதாவது அப்பா என்று உண்மையில் நினைத்தால், ஏன் நன்றி கூற வேண்டும்? நமக்குத் தந்தையும் தாயும் செய்வனவற்றைக் கடமை என்றல்லவா நினைக்கிறோம்? அதுபோல ஏன் கடவுளுக்கும் நினைக்கலாகாது?

2. வணங்குதல் என்றால் ‘பணிவாக இருத்தல்’,’ கீழ்ப்படிந்து நடத்தல்’ (ஒபீடியன்ஸ்) என்றுதான் நேரான அர்த்தம். Pray என்ற அர்த்தம் இல்லை. கிராமத்தில் கடையில் பையனைப் போட்டால், சில நாட்கள் கழித்து, “பையன் வணங்கி நடந்து கொள்கிறானா, வணக்கமாக இருக்கிறானா” என்று கேட்பார்கள். அதாவது கீழ்ப்படிந்து, அடக்கமாக என்று பொருள். கடவுளுக்கும் நீ கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பது இதன் உள்ளர்த்தம். உண்மையில் கடவுளை நம்புபவர்கள் யாரும் கடவுளின் போதனையாகச் சொல்லப்படும், வேதநூல்களில் கூறப்படும் எந்தக் கருத்தையும் ஏற்று நடப்பதில்லை. உதாரணமாக “ஒட்டகத்தின் காதில் ஊசி நுழைந்தாலும் ஒரு செல்வந்தன் சொர்க்கத்தில் நுழைய முடியாது” என்று கிறித்துவம் கூறுகிறது. ஆனால் உலகத்தின் மிகப் பெரும் பணக்காரர்கள் எல்லாம் கிறித்துவர்கள்தானே? “திருடாதே, பொய் சொல்லாதே” என்றெல்லாம் மதங்கள் போதிக்கின்றன. யார்தான் கீழ்ப்படிந்து இவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள்? சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லாரும் திருடுகிறோம், நமக்குத் தேவை என்று நினைத்தால் பொய் சொல்கிறோம். அப்படிச் செய்யாதவர்களுக்குப் ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று பெயரும் சூட்டுகிறோம்.


ஓடு ஓடு ஓடிக்கொண்டே இரு…

நட, நட, நடந்துகொண்டே இரு
செய், செய், செய்துகொண்டே இரு
இதுதான் வாழ்க்கை

உடலின் உறுப்புகள் ஒரு நிமிடம் வேலையை நிறுத்தினால்
உயிரோடு இருப்போமா நாம்?
இயங்கு இயங்கு இயங்கிக் கொண்டே இரு.
இதைக் கற்றுத் தருவது நமது உடல்.
இயற்கை அளித்த வரப்பிரசாதம்.


அறிவுரை

முகநூலிலும் வாட்சப்பிலும் குட்மார்னிங் என்று போட்டும் போடாமலும் நிறையச் செய்திகள் வருவதைப் பார்க்கிறேன். இவை பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கின்ற அறிவுரைகள். என்னைப் பொறுத்தவரை நான் இம்மாதிரிச் செய்திகள் ஒன்றையும் இதுவரை வெளியிட்டதில்லை. நான் பின்பற்றாத எதையும் நான் என் மாணவர்களுக்கும்கூட அறிவுரையாகக் கூறியதில்லை. எதை நான் பின்பற்றினேனோ அவற்றை மட்டுமே அவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். “சொல்லுதல் யார்க்கும் எளியவாம் அரியவாம் சொல்லியவண்ணம் செயல்” என்ற குறள் மூதுரை என் மனத்தில் என்றும் நிலைத்திருக்கிறது.