ராபின்சன் குரூஸோ

நண்பர்களே, முதல் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸின் ‘ஆலிவர் ட்விஸ்ட்’  பற்றிப் பார்த்தோம். ஆனால் ஆங்கில நாவல் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது. அதனால் பதினெட்டாம் நூற்றாண்டின் நாவலிலிருந்து தொடங்குவதுதான் முறை.

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டேனியல் டேஃபோ என்பவர் எழுதிய ராபின்சன் குரூஸோ என்ற நாவல் வெளியானது. பலரும் இதைத்தான் முதல் ஆங்கில நாவல் என்று கொள்கிறார்கள. இதற்குப் பின் பல நாவல்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றினாலும், அவற்றில் மிக முக்கியமானதென்று பலரும் சொல்லுவது லாரன்ஸ் ஸ்டெர்ன் என்பவர் எழுதிய டிரிஸ்ட்ரம் ஷேண்டி என்னும் நாவலை. முதலில் இங்கு ராபின்சன் குரூஸோ நாவலைப் பற்றிக் காண்போம்.

முதல் நாவல் என்ற தகுதி ஒருபுறமிருக்க, இந்த நாவலுக்கு முதல் கடற்பயண நாவல் என்ற தகுதியும் காலனியாதிக்க நாவல் என்ற தகுதியும் உண்டு. ஆங்கிலத்தில் கடற்பயண நாவல்கள் என்பது ஒருவகை. கோரல் ஐலண்ட், டிரெஷர் ஐலண்ட் போன்றவை இவற்றுள் பிரபலமானவை. இவற்றுக்கு முன்னோடி ராபின்சன் குரூஸோ.  இவை யாவும் சிறுவர்கள் படிக்கின்ற அட்வென்ச்சர் (சாகசச் செயல்) நாவல்களாகவும் இருக்கின்றன.

நம்மில் பலரும், முறையாக இந்த நாவலைப் பற்றி அறியாவதவர்களும், ராபின்சன் குரூஸோ பற்றியும் அவனது அடிமையான ஃப்ரைடே என்பவன் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். ராபின்சன் ஒரு ஜெர்மானிய மரபில் வந்த தந்தைக்கு இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவன். இளம் வயதில் சட்டம் படிக்குமாறு கூறும் தந்தையின் சொல்லைக் கேளாமல் மனம்போன போக்கில் கடற் பயணங்களில் ஈடுபடுகிறான். அவ்வாறு சென்ற பயணம் ஒன்றில் கப்பல் உடைந்து ஒரு மூர் இனத்தவனிடம் அடிமையாகிறான். இரண்டாண்டுகள் கழித்து ஜூரி என்ற சிறுவனுடன் அவனிடமிருந்து தப்புகிறான். ஒரு போர்ச்சுகீசிய கப்பல் தலைவன் இருவரையும் காப்பாற்றி பிரேசில் அழைத்துச் செல்கிறான். ஜூரியை அவனிடம் விற்றுவிட்டு பிரேசிலில் ஒரு பெரிய பண்ணைக்குச் சொந்தக்காரனாகிறான் குருஸோ.

அந்தப் பண்ணைக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கொண்டுவரக் கப்பலில் புறப்படுகிறான். மீண்டும் கப்பல் கவிழ்ந்து தான் மட்டும் தப்பி ஒரு தீவில் சேர்கிறான். அங்கு இவனைத் தவிர வேறு எவரும் இல்லை. முயற்சி செய்து தனக்கு ஒரு இருப்பிடம் அமைத்துக் கொள்கிறான். கப்பலிலிருந்து மீட்ட பொருள்களையும் கருவிகளையும் கொண்டு பயிர் செய்து வாழத்தொடங்குகிறான். பைபிள் ஒன்றும் கப்பலிலிருந்து கிடைக்கிறது. ஒரு நாள்காட்டியை அவனே உருவாக்குகிறான். இவ்வாறு 15 ஆண்டுகள் வாழ்கிறான். அந்தத் தீவில் தன்னைத் தவிர மனிதனை உண்ணும் பழங்குடிகளும் இருப்பதைக் கண்டுபிடிக்கிறான். அவர்களிடம் சிக்கிய இருவரை மீட்கிறான், ஒருவனைத் தப்பவிட்டு, மற்றொருவனுக்கு ஃப்ரைடே (அவன் கிடைத்த நாள்) என்று பெயரிட்டு அவனுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்து, கிறித்துவனாக்குகிறான்.

மீண்டும் பழங்குடியினரிடமிருந்து இரண்டுபேரைக் காப்பாற்றுகிறான். அதில் ஒருவன் ஃப்ரைடேயின் தந்தை, மற்றொருவன் ஸ்பெயின்நாட்டவன். வேறு மக்களும் தீவின் மத்தியில் இருக்கிறார்களா என்று தேடிவர அவனை அனுப்புகிறான். அதற்குள் தீவுக்கு வந்த ஒரு கப்பலில் எழுச்சி ஏற்படுகிறது. அதன் தலைவனைத் தீவில் விட்டுவிட முயலும்போது, அவனைக் காப்பாற்றி, எழுச்சியை அடக்கி, மற்ற மாலுமிகளையும் துணைக்கு வைத்துக் கொள்கிறான். 28 ஆண்டுகள் தனிமை வாழ்க்கைக்குப் பிறகு தீவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தை அடைகிறான். இங்கிலாந்தில் அவன் இறந்துவிட்டதாகக் கருதியதால் அவன் தந்தையின் சொத்து அவனுக்குக் கிடைக்கவில்லை. பிரேசிலின் பண்ணையிலிருந்து கிடைத்த செல்வத்தை ஃப்ரைடேயின் உதவியுடன் போர்ச்சுகலுக்குக் கொண்டுவந்து, பிறகு கடைசியாகச் சில வீரச் செயல்களுக்குப் பிறகு அவற்றை இங்கிலாந்திற்குத் தரைவழியே மாற்றிக்கொண்டு சுகமாக வாழ்கிறான். கதை இவ்வளவுதான்.  ஆனால் அதை ஆழ்ந்த படிக்கும்போது அது பலவித ஆதிக்கப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது புரிகிறது.

முதலில், மதம். குரூஸோ தனியாக இருக்கும்போது அவனுக்கு ஆறுதல் தருவது பைபிள்தான். விருப்பப்பட்ட போதெல்லாம் பைபிளில் ஏதாவதொரு பக்கத்தைப் படித்து ஆறுதல் அடைவதுடன் அது அப்படியே நடக்கும்  என்று நம்புகிறான். காட்டுமிராண்டிகளின் மதத்தை அவன் வெறுக்கிறான். ஃப்ரைடேயைக் கிறித்துவனாக ஆக்குகிறான். அவன் காலத்தில் உலகெங்கும் சென்று கிறித்துவத்தை போதித்த குருமார்களின் வாழ்க்கையை அவன் அப்படியே பின்பற்றுகிறான்.

இரண்டாவது, பொருளாதாரம். குரூஸோ ஒரு காலனியவாதி. புதிய நாட்டில் (தென் அமெரிக்காவில் ஸ்பெயின்) வளங்களை அபகரித்தல், புதிய நாடுகளில் பண்ணைகளை உருவாக்குதல், அவற்றில் வேலை செய்ய ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கொண்டுவர முயற்சி செய்தல், இறுதியாக எல்லாவற்றையும் தன் நாட்டுக்கு கொண்டு செல்லுதல் என அவன் செயல்கள் அமைகின்றன.

மூன்றாவதாக, கலாச்சாரம். தனது கலாச்சாரம் மட்டுமே உயர்ந்தது, அது பரப்பப்பட வேண்டியது என்ற மனப்பான்மை அவனிடம் இருக்கிறது. அவனுக்கு ஏற்ற அடிமையாக ஃப்ரைடே அமைகிறான். 18-19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் உயர்வு மனப்பான்மையுடன் நடந்துகொண்ட ஆங்கிலேயர்கள், இந்தியர்களை அவர்கள் அடிமையாக நடத்தியது இவற்றுக்கு உதாரணமாக அவன் செயல்கள் உள்ளன. இந்தியர்களைப் பிரதிபலிக்கும் வடிவமாக ஃப்ரைடே இருக்கிறான்.

நான்காவதாக காலனி ஆதிக்கம். குறிப்பாக, அவன் பிரிட்டிஷ் காலனியாதிக்கக்காரர்களின் மூல உருவமாக இருக்கிறான். தனக்கு மட்டும் சுதந்திரத்தன்மை, ஆழ்மனத்திலிருக்கும் கொடுங்கோன்மை, விடாமுயற்சி, மெதுவாகச் செயல்படுகின்ற, ஆனால் திறன்மிக்க அறிவு, பாலியல் வெறுப்பு, அதிகம் பிறரிடம் பழகாமல் ஒதுங்கியிருக்கும் தன்மை ஆகிய ஆங்கிலேயத் தன்மைகள் அவனிடம் சிறப்பாக வெளிப்படுகின்றன என்று புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜேம்ஸ் ஜாய்ஸ் குறிப்பிடுகிறார்.

ஐந்தாவதாகச் சுயநலமும் அடுத்துக் கெடுத்தலும். குரூஸோவை மூரிடமிருந்து தப்பிக்க உதவியவன் ஜூரி என்ற சிறுவன். ஆனால் அவன் கருப்பன் என்பதால் தனக்கு உதவி செய்த அவனையே போர்ச்சுகீசியனிடம் விற்றுவிடுகிறான். இந்திய மன்னர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு மக்களை அடிமையாக்கிய கிழக்கிந்திய கம்பெனி போல, தன் தீவுக்கு ஒரு கப்பல் வரும்போது, கப்பல் தலைவனை “தோஸ்த்” ஆக்கிக் கொண்டு மாலுமிகளை அடிமைப்படுத்துகிறான்.

இந்த நாவலை ஆங்கிலத்தில் படித்த, ஆங்கிலேயர்களுக்கு  அடிமையாக  ஃப்ரைடே போல உதவிசெய்த,  நம் இந்திய நாட்டு மேற்குடி மக்களும்  குரூஸோவின் இந்தப் பண்புகளைப் பின்பற்றியதில், இன்னமும் பின்பற்றுவதில், ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இப்படிக் கலாச்சாரச் சார்புத்தன்மை பற்றியும் பல செய்திகளை இந்நாவல் உணர்த்துகிறது. இந்த  அளவுக்கு  மிகச் சிறந்த நாவல் ஒன்றை ஆங்கிலத்தின் முதல் நாவலாக உருவாக்கிய டேனியல் டேஃபோ பாராட்டத்தக்கவர் என்பதில் ஐயமில்லை. இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியா போன்ற நாடுகளைக் காலனியாக அடிமையாக்குவதற்கு முன்னரே எழுதப்பட்டது இந்த நாவல் என்பது நமக்கு வியப்பளிக்கிறது. கிழக்கிந்தியக் கம்பெனியும் குரூஸோவைப் போல வியாபாரம் செய்யப் புறப்பட்ட ஒன்றுதானே!


ஆலிவர் ட்விஸ்ட்

தமிழுக்கு அப்பால்  என்ற தலைப்பில் நான் படித்த, என்னைக் கவர்ந்த, இலக்கியக் கதைகளைப் பற்றிப் பேச முற்படுகிறேன். கதை கேட்பதில் எல்லார்க்கும் ஆர்வம் உண்டல்லவா? அதனால் வெறுமனே, ஒவ்வோர் இலக்கியமாக எடுத்துக் கொண்டு அதன் கதையைச் சுருக்கமாகச் சொல்வது தான் எனது நோக்கம். மேலும் சில சமயம் ‘இலக்கியமல்லாத இலக்கியம்’ பற்றியும் எனது கருத்தோட்டங்கள், எண்ணங்கள் பற்றியும்கூட இதில் ஒருவேளை வரக்கூடும். இதை ஒரு தொடராக அளிப்பதுதான் என் நோக்கம். ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடம் வரை படிக்கக்கூடிய ஒரு கதை.

ஆலிவர் ட்விஸ்ட்

இப்போது எனக்கு வயது 72. ஏறத்தாழ என் 12 வயது முதலாக அறுபதாண்டுகளாகத் தமிழ் நூல்களையும், 16 வயது முதலாக ஆங்கில நூல்களையும் படித்து வருகிறேன். நான் படித்த நூல்களின் சாராம்சத்தை உங்களுக்கு வழங்குவது இந்தத் தொடரின் நோக்கம். நீங்களும் அந்நூல்களைப் படிக்க ஒரு உந்துதலையும் ஆர்வத்தையும் உண்டாக்கினால் இத்தொடரின் நோக்கம் நிறைவேறிற்று என்பேன். மேலும் இவற்றையெல்லாம் நன்கு  படித்தவர்களுக்குக்கூட சில ஆண்டுகள் சென்றபின் சில தகவல்கள் மறந்துபோனால் அவற்றைச் சரிபார்த்துக் கொள்ள உதவுவதாகவும் இந்த அறிமுகம் அமையக்கூடும்.

நாங்கள் படித்த காலத்தில் (ஆயிரத்தித் தொள்ளாயிரத்து ஐம்பது-அறுபதுகளில்) உயர்நிலைப் பள்ளி தான் இருந்தது. மேல்நிலைப் பள்ளி கிடையாது. உயர்நிலைப் பள்ளி என்றால் 6 முதல் 11 வகுப்புகள். பியூசி அல்லது புகுமுக வகுப்பு என்ற பெயரில் 12ஆம் வகுப்பு கல்லூரியில் இருந்தது. நான் பதினொன்றாம் வகுப்பை முடித்தது 1963ஆம் ஆண்டு. நாங்கள் படித்த காலத்தில் 9, 10, 11ஆம் வகுப்புகளில் ஆங்கிலத்திற்கு துணைப்பாடங்கள் உண்டு. ஏதேனும் ஒரு இலக்கியம் அல்லது நாவல் வைக்கப்பட்டிருக்கும். (மேலும் தமிழில் பொதுத் தமிழ், சிறப்புத் தமிழ் என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. சிறப்புத் தமிழ் என்பதில் ஏதாவது ஒரு கதை பாடமாக இருக்கும். நான் எட்டாம் வகுப்பு வந்தபோது, ஏனோ தெரியவில்லை, இந்த நடைமுறை எடுக்கப்பட்டுவிட்டது!)

அவ்வாறு எனக்கு 9, 10, 11 வகுப்புகளில் ஆங்கிலத்தில் துணைப்பாடங் களாக வந்தவை டேவிட் காப்பர்ஃபீல்டு, தாகூர் சிறுகதைகள், கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் என்ற கதைகள். இவை எல்லாமே அக்காலத்தில் மாணவர்களுக்கென எளிமைப்  பதிப்புகளாக வந்தவை. அக்காலத்தில் E. F. Dodd, Blackie and Sons போன்ற கம்பெனிகள் இருந்தன. அவை பெரிய ஆங்கில நாவல்களையும் மாணவர் படிக்குமளவில் எளிமையான ஆங்கிலத்தில் சுருக்கி வெளியிட்டன. கல்லூரி வந்தபிறகுதான் அசலான நூல்களாகப் படிக்கும் வழக்கம் ஏற்பட்டது. புகுமுக வகுப்பில் ‘ஆலிவர் ட்விஸ்ட்’ என்ற நாவலை முதன்முதலாக அசலாகப் படித்தேன்.

ஆலிவர் ட்விஸ்ட், டேவிட் காப்பர்ஃபீல்டு, கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் ஆகிய மூன்றும் சார்லஸ் டிக்கன்ஸ் என்ற ஒரே நாவலாசிரியர் எழுதியவை. அவர் நூல்கள்தான் எங்களைப் போன்ற பிள்ளைகள் படிக்கத் தகுதியானவை என்று கருதினார்கள் போலும். இப்போது அவரைப் பற்றிய மதிப்பீடு எனக்குள் மாறியிருந்தாலும், இந்த மூன்று நாவல்களையும் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல இருக்கிறேன். பிறகு அவரது நாவல்களில் முக்கியமானதாக நான் கருதுகின்ற ப்ளீக் ஹவுஸ் என்பதைப் பற்றியும் சற்றுப் பின்னால் சொல்கிறேன்.

முதலில் ஆலிவர் ட்விஸ்ட் கதை

. இது தமிழ் உட்பட பெரும்பாலான இந்திய மொழிகளில் திரைப்படமாகவும் வந்துள்ளது. தமிழில் அனாதை ஆனந்தன் என்ற பெயரில் படமாக வந்ததாக ஞாபகம். இது சார்லஸ் டிக்கன்ஸின் இரண்டாவது நாவல். 1838இல் வெளியானது. (முதல் நாவல் பிக்விக் பேப்பர்ஸ்.) இந்த நாவலுக்கு ஓர் ‘அநாதைச் சிறுவனின் பயணம்’ என்ற துணைத்தலைப்பை ஆசிரியர் அளித்திருந்தார். அது இதற்கு முன் வெளிவந்த ஜான் பன்யனின் கிறித்துவப் பயணியின் பயணம்  என்பதை நையாண்டி செய்வதுபோல் இருந்தது. (எனக்குக் கூட “கைம்மா-யணம்”, “மகா மாரகம்” என்றெல்லாம் கதை எழுத ஆசை உண்டு. நம் ஊரில் உடனே தேசத்துரோகி என்று சொல்லி சிறையில் போட்டுவிடுவார்கள் என்ற பயந்தான்!)

ஆலிவர் ட்விஸ்ட் என்பவன் ஓர் அநாதைச் சிறுவன். லண்டனுக்கு 70 மைல் தொலைவிலுள்ள ஓர் ஊரில் அநாதை இல்லத்தில் 9 வயது வரை வளர்கிறான். அங்கு வயிறார உணவுகூட அளிக்கப்படுவதில்லை. ஒரு கரண்டி கஞ்சிதான் காலை உணவு. பசியில் “இன்னும் கொஞ்சம் கஞ்சி” என்று கேட்க (அதுவும் மற்றச் சிறுவர்களுக்காக!), அதற்காக பலமாக அடிக்கப்பட்டு இருட்டறையில் அடைக்கப்படுகிறான். (இந்தக் காட்சி பல பழைய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளது.)

பிறகு சவப்பெட்டி செய்யும் ஒருவனிடம் விற்கப்படுகிறான் ஆலிவர். அங்கும் கடைக்காரன் மனைவி அவனை மோசமாக நடத்துகிறாள். வாழ்க்கை இப்படித்தானா என்று நொந்தவாறு, லண்டனுக்குக் கால்நடையாகவே தப்பிச் செல்கிறான். அங்கே ஏமாற்று வித்தை தெரிந்த டாட்ஜர் என்ற சிறுவனைச் சந்திக்கிறான். அவன் ஃபேகின் என்ற கிழவன் நடத்தி வந்த பிக்பாக்கெட் கும்பலில் ஒருவன். (ஃபேகின் என்ற இந்தப் பாத்திரமும் நமது சினிமாக்காரர்களின் ஃபேவரைட். கமல ஹாசன் நடித்த திரைப்படம் ஒன்றில் மனோரமாகூட இவ்வித வேஷம் போட்டு நடித்திருப்பார்.) ஃபேகினின் வேலை அநாதைச் சிறுவர்களை பிக்பாக்கெட்டுகளாகப் பயிற்சி அளித்து, அவர்கள் திருடுவதைத் தான் பெற்று சொகுசாக வாழ்வதுதான்.

ஒருநாள் ஆலிவரை, வேறு இரு சிறுவர்களுடன் சேர்ந்து திருடிவருமாறு ஃபேகின் அனுப்புகிறான். பெரிய பணக்காரர்களின் விலையுயர்ந்த கைக்குட்டைகள், பேனாக்கள், கடிகாரங்கள் போன்றவற்றைத்  திருடுவது இவர்கள் வேலை. அப்படி ஒரு புத்தகக்கடையில் நின்ற பிரவுன்லோ என்ற பிரபுவின் கைக்குட்டையை டாட்ஜர் திருடிவிட்டு ஓட, பயந்துபோன ஆலிவரும் ஓடுகிறான். ஓடியதால் அவன் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். ஆனால் அவன் தண்டிக்கப்படாமல் காப்பாற்றி, பிரவுன்லோ தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். பயந்துபோன ஆலிவர் நோய்வாய்பபடுகிறான். நோய்குணமாகி சந்தோஷமாகச் சிலநாட்கள் இருக்கிறான்.

ஒருநாள் பிரவுன்லோ அவனைப் புத்தகம் வாங்கிவருமாறு அனுப்ப, அவனைத் தேடிக் கொண்டிருந்த ஃபேகின் கும்பலைச் சேர்ந்த நான்சி என்ற பெண், தன் காதலன் பில் சைக்ஸ் என்பவனுடன் சேர்ந்து ஆலிவரைப் பிடித்துக்கொண்டு போய் ஃபேகின் கும்பலில் விட்டுவிடுகிறாள். மீண்டும் அக்கும்பல் ஒரு வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபடுகிறது. திருடுவதற்காக ஆலிவரை ஒரு ஜன்னல்வழியே உள்ளேசென்று கதவைத் திறக்கும்படி விடுகிறார்கள். அந்த முயற்சி தோல்வியடைந்து கும்பல் ஓடிவிடுகிறது. ஆலிவர் மீண்டும் சிக்கிக் கொள்கிறான். ஆலிவரை அந்த வீட்டுப் பெண் ரோஸ், மே லீ என்பவர்கள் காப்பாற்றுகின்றனர். (ரோஸ் முன்பு நாம் பார்த்த பிரவுன்லோவுக்கு உறவினள்.)

இடையில் மங்க்ஸ் என்பவன் ஃபேகினுக்கு உதவிசெய்ய வருகிறான், ஆலிவரைத் திரும்பக் கொண்டுவந்து அழிக்க முயற்சிசெய்கிறான். இவர்கள் திட்டத்தை நான்சி பிரவுன்லோவுக்குக் கூற முயற்சி செய்கிறாள். அவளது ‘துரோகம்’ பில்சைக்ஸ்க்கு தெரிந்து அவளை அடித்துக் கொன்று விடுகிறான். பிறகு அவனும் மக்களிடமிருந்து தப்பிக்க முயன்றபோது தற்செயலாகத் தூக்கில் தொங்கி இறக்கிறான். மே லீக்கள் பிரவுன்லோவுடன் ஆலிவரைச் சேர்க்கின்றனர். பிரவுன்லோ மங்க்ஸை விசாரிக்கும்போது அவன் ஆலிவரின் மாற்றாந்தாய் மகன் (ஆலிவரின் தந்தையின் முதல் மனைவியின் மகன்) என்று தெரிகிறது. இறந்துபோன தன் தகப்பனின் பெரிய அளவிலான சொத்தினைத் தான் மட்டுமே அடையவேண்டி அவன் ஆலிவரை அழிக்க முயற்சி செய்தான். ஆலிவரின் தாய் ஏக்னஸ் என்பவள். பிரவுன்லோவின் நண்பர் மகள், ஆலிவரைப் பிரசவித்தவுடன் அவள் இறந்துவிட்டாள் என்ற செய்தியும் வெளிப்படுகிறது. மங்க்ஸுக்கு அவன் பாதிப்பங்கு சொத்தினை பிரவுன்லோ அளிக்க, அவன் அமெரிக்காவுக்கு ஓடிவிடுகிறான். ஃபேகின் கும்பல் பிடிபட்டு, ஃபேகின் தூக்கில் தொங்குகிறான். மே லீக்களும், பிரவுன்லோவும் ஆலிவரும் கிராமப்புறத்துக்குச் சென்று நிம்மதியாக வாழ்கிறார்கள். சுபம்!

சார்லஸ் டிக்கன்ஸுக்கு பெரும் புகழ் பெற்றுத் தந்த நாவல் இது. சம்பவங்கள் நிறைந்தது. ஆலிவரின் வாழ்க்கையில் ஒரு மர்ம முடிச்சு இறுதியில் அவிழ்க்கப்படுகிறது. நாவல் முழுவதும் டிக்கன்ஸின் சமூக அக்கறை வெளிப்படுகிறது. விக்டோரியா பேரரசிக் கால இங்கிலாந்து எப்படி இருந்தது என்பதை மிகுந்த அக்கறையோடு வெளிப்படுத்துகிறார். ஏழ்மைச் சட்டங்கள், அநாதை இல்லங்கள், கிரிமினல் கும்பல்கள், வேசிகள், இவற்றுடன் கருணை நிறைந்த பிரபுக்கள், மேன்மக்கள் போன்றோர் நிறைந்ததோர் உலகம் அது. டிக்கன்ஸின் வருணனைத் திறனும் பாத்திரங்களுக்கு உயிரூட்டும் திறனும் பெயர்பெற்றவை.

ஆனால் இன்றைய நவீன இலக்கியத் தமிழுலகில் டிக்கன்ஸை எவரும் மதிப்பதோ பேசுவதோ இல்லை. இவர்களெல்லாம் நேரடியாக யதார்த்தச் சித்திரிப்பு முறையில் கதை சொல்பவர்கள் என்று ஒதுக்கப்பட்டு விட்டார்கள். ஒருவேளை டிக்கன்ஸைப் பேசுவதுகூட கவுரவக் குறைவு என்று இன்று பலர் கருதக்கூடும்.