ஆங்கிலேய நோயாளி

(“ஆங்கில நோயாளி “அல்ல)
ஆங்கிலேய நோயாளி என்பது மைக்கேல் ஓன்டாட்ஜீ என்ற நாவலாசிரியர் 1992இல் எழுதிய நாவல். இவர் இலங்கையில் பிறந்த கனடா நாட்டவர். உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர்.

கதையின் பின்னணி, வட ஆப்பிரிக்காவிலும் இத்தாலியிலும் நடக்கும் உலகப் போர். கதை தொடர்ச்சியாகச் சொல்லப்படாமல் முன்னும் பின்னும் மாறிமாறி நான்-லீனியராகச் சொல்லப்படுகிறது. நாவல் முழுவதும் பல வேறு ஞாபகங்களின் கொலாஜாக (ஒட்டிணைப்புகளாக) அமைந்து போர், தேசியத்தன்மை, அடையாளம், இழப்பு, காதல் போன்ற பல விஷயங்களைப் பேசுகிறது.  

கதையின் பாத்திரங்கள் ஒருவர்க்கொருவர் தொடர்பற்ற நான்கு பேர். 1945இல் ஓர் இத்தாலிய நாட்டு வில்லாவில் (கன்னிமாடம்-வில்லா சான்கிராலாமோ) வசிப்பவள் இளம் கனடா நாட்டு நர்ஸ் ஹானா. ஜெர்மானியர்கள் பின்வாங்கும்போது எல்லா இடங்களிலும் வெடிகளைப் புதைத்துச் சென்றிருக்கிறார்கள். மற்ற நர்ஸுகள் ஓடிவிட்டாலும் அவள் மட்டும் தன் நோயாளியுடன் தங்கியிருக்கிறாள். அந்த நோயாளி விமானம் எரிந்து விழுந்தபோது உடல்முழுவதும் கரிந்து உருத்தெரியாமல் போனவன். அவனுடன் அவள் ஒரு கேரவானில் வந்தாலும், அவனை இடம்பெயர்க்க முடியாமையால் கன்னிமாடத்தில் தங்குகிறாள். அவன் ஆங்கிலேயன் என்று நினைக்கிறாள். அவனுடைய ஒரே சொத்தான ஹெரோடோடஸின் வரலாற்றுக் கதைகளைப் படித்துக் காட்டுகிறாள். அவன் அவ்வப்போது நினைவுவந்து தன் பழைய கதைகளைச் சொன்னாலும் அவனுக்குத் தன் பெயர் மறந்து போய்விட்டது. 

ஒருநாள் ஹானாவின் தந்தையின் பழைய நண்பன் கேரவாகியோ (இத்தாலிய-கனடியன்) அவளைத் தேடி வருகிறான். வட ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ்காரர்களுக்காகப் பணிபுரிந்தவன். ஜெர்மானியர்களிடம் அவன் பிடிபட்டபோது அவன் கட்டைவிரல்களை வெட்டிவிடுகிறார்கள். நான்குமாதம் ஒரு மருத்துவமனையில் குணம் பெற்று வந்தபோது ஹானாவைப் பற்றி கேள்விப்பட்டு அவளை வந்து அடைகிறான்.  

ஒருநாள் அந்த வில்லாவின் பழைய பியானோ ஒன்றை ஹானா வாசிக்கிறாள். இசைக்கருவிகளிலும் வெடிகுண்டுகளை மறைத்துவைப்பது ஜெர்மானியர் வழக்கம். அதனால் அதைச் சோதிப்பதற்காக இரண்டு பிரிட்டிஷ் படைவீரர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவன் சீக்கியன் (கிர்பால் சிங், சுருக்கமாக கிப்). கிப் வில்லாவின் குண்டுகளை நீக்க அங்கேயே தங்குகிறான். 

ஆங்கிலேய நோயாளிக்கு நினைவு வந்து தன் பழைய கதையைச் சொல்கிறான். பிரிட்டிஷ்காரர்களுக்காக வட ஆப்பிரிக்கப் பாலைவனத்தை ஆராய்ந்து நிலப்படம் வரைந்து கொண்டிருந்தவன். பெயர் (லாஜ்லோ டி) அல்மாசி. ஹங்கேரி நாட்டுப் பிரபு. ஒருசமயம் ஜெஃப்ரி கிளிப்டன், அவன் மனைவி கேதரீன் என்பவர்கள் அவனோடு இணைகிறார்கள். கேதரீனோடு அவனுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்படுகிறது. விரைவில் கேதரீன் விலகிவிட்டாலும், அவள் கணவன் கண்டுபிடித்து விடுகிறான். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெஃப்ரி அல்மாசிமீது விமானத்தை மோதிக் கொல்ல நினைக்கிறான். ஆனால் துரதிருஷ்ட வசமாக அவனே இறந்துபோகிறான். கேதரீன் படுகாயமடைகிறாள். அல்மாசிக்கு காயமில்லை. காதரீனைக் காப்பாற்ற எண்ணி ஸ்விம்மர்ஸ் குகையில் அவளை ஒளித்து வைக்கிறான். நான்கு நாட்கள் பாலைவனத்தில் நடந்து அடுத்த நகரத்தை (எல் தாஜ்) அடைந்தபோது தன் பெயர் காரணமாக ஆங்கிலேயர்களாலேயே ஒற்றன் எனக் கைதுசெய்யப் படுகிறான். கேதரீன் இறந்துபோகிறாள். அல்மாசி பிறகு விடுதலை செய்யப்படுகிறான். 

கேதரீனைத் தேடிவந்த அல்மாசி, மணலில் புதைந்திருந்த ஒரு விமானத்தில் அவள் உடலை ஏற்றிச் செல்ல நினைக்கிறான். பறக்கும்போது விமானம் எரிந்து போகிறது. அல்மாசியின் உடல் முழுவதும் கரிந்துபோகிறது. அப்போது பெடூயின் இனத்தவர் அவனைக் காப்பாற்றுகிறார்கள். 

அல்மாசியைப் பற்றி கேரவாகியோவுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. அவன்மீது சந்தேகம். ஆனால் உடல்கரிந்த நிலையில் அவன் இன்னான் என நிரூபிக்க முடியவில்லை.

கிப், பிரிட்டிஷ் படையில் வெடிகுண்டு நீக்கும் ஏவலாளனாகப் பணிபுரிகிறான். சஃபோக் பிரபு என்பவரின்கீழ் பயிற்சி பெற்றவன் அவன். அவர்கள் குடும்பம் இறந்துபோன பிறகு அவன் இத்தாலிக்கு வருகிறான். கருப்பனாகவும் இந்தியனாகவும் வெடிகுண்டு நீக்குபவனாகவும் இருந்ததால் அவனை வெள்ளையர் அவமதிக்கின்றனர். முதலில் ஹானாவும் வெறுத்தாலும் பிறகு அவனும் ஹானாவும் காதலர்கள் ஆகின்றனர்.

விரைவில் ஹானாவின் இருபத்தோராம் பிறந்த நாள் வருகிறது. எல்லாரும் கொண்டாடுகின்றனர். 

இந்த நான்கு பேரும் தங்கள் தங்கள் ஊரிலிருந்து போரினால் இடம் பெயர்ந்து மிகத் தொலைவில் இருப்பவர்கள். அந்தக் கைவிடப்பட்ட வில்லாவில் தங்கள் வாழ்க்கையை மீட்டமைக்கலாம் என்று நினைக்கின்றனர்.  

கிப்பும் ஓரளவு சுகமாகவே நாட்களைக் கழித்து வருகிறான். அந்தச் சமயத்தில் திடீரென வானொலி வாயிலாக அமெரிக்கர்கள் ஜப்பானில் அணுகுண்டு போட்ட செய்தி வருகிறது. வெள்ளையர்கள்மீது நன்னம்பிக்கை வைத்திருந்த கிப்புக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. அணுகுண்டு வீச்சு ஒரு மிகப்பெரிய இனப்படுகொலை எனக் கருதுகிறான். கேரவாகியோவும் அமெரிக்கர்கள் ஒரு வெள்ளையர் நாட்டின்மீது நிச்சயமாக குண்டு போட்டிருக்க மாட்டார்கள் என்கிறான். குண்டுபோட்ட வெள்ளையர்களின் பிரதிநிதியாக ஆங்கிலேய நோயாளியைக் கருதி தனது துப்பாக்கியால் அவனைச் சுடுவதற்குத் தயாராகிறான். ஆனால் மனமின்றி, தனது மோட்டார் சைக்கிலில் அங்கிருந்து ஓடிமறைகிறான். பிறகு அந்த வில்லாவுக்கு அவன் திரும்பி வரவேயில்லை. (பிறகு அல்மாசி இறந்து போகிறான், ஹானா மருத்துவக் கேரவானில் தன் பணிக்குத் திரும்பிவிடுகிறாள்.)

பல ஆண்டுகள் கழித்து, காட்சி மாறுகிறது. கிப் இந்தியாவில் இருக்கிறான். அவன் இப்போது ஒரு டாக்டர். சொந்தமாகக் குடும்பம். சிரிக்கும் அழகான மனைவி. அவன் வாழ்க்கை நிறைவுபெற்று விட்டது. ஆனால் அவ்வப்போது ஹானாவுக்கு என்ன நேர்ந்தது என்று நினைத்துக் கொண்டே இருக்கிறான்.

ஓன்டாட்ஜீ ஒரு கவிஞர், நம் சமகால நாவலாசிரியர். கொழும்பில் 1943இல் பிறந்தவர். இந்த நாவலுக்கு புக்கர் பரிசு, கவர்னர் ஜெனரல் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள் கிடைத்துள்ளன. இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.


நம்பிக்கை

நட்சத்திரங்களைப் பார், பாதங்களை அல்ல

பார்ப்பனவற்றின் பொருளை உணர முயற்சி செய்

பிரபஞ்சத்தை இயக்குகிற சக்தியை நினைத்து வியப்படை

ஆர்வத்தோடிரு.

வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீ செய்து வெற்றியடைய முடிகின்ற ஏதாவது ஒன்று உண்டு.

விட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே முக்கியம். (ஸ்டீபன் ஹாக்கிங்)


வளையாபதியும் நீலகேசியும்

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்தை நீக்கிப் பிற காப்பியங்கள் பற்றி காணத் தொடங்கினோம். அப்படி இதுவரை மணிமேகலை, சீவகன் கதை, குண்டலகேசி என்னும் மூன்று தமிழ்க் காப்பியக் கதைகளைக் கண்டுள்ளோம். நியாயமாக இந்த வரிசையில் இறுதியாக வரவேண்டியது வளையாபதி என்ற கதை.

வளையாபதி

நவகோடி நாராயணன் என்ற பெருவணிகனுக்கு இரு மனைவியர். ஒருத்தி அவன் குலத்தைச் சேர்ந்தவள், மற்றொருத்தி வேறொரு குலத்தினள். அதனால் அவளைத் தன் குலத்தினர் வற்புறுத்தலின்படி தள்ளிவைத்தான் கணவன். இரண்டாம் மனைவி தன் துன்பம் தீர காளி தேவியை வழிபட்டு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனே வளையாபதி. அவனை நன் முறையில் வளர்த்து வந்தாள். அச்சிறுவனுடைய விளையாட்டுத் தோழர்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று ஏளனம் செய்யவே, அச்சிறுவன் அதுபற்றி தன் தாயிடம் முறையிட்டான். அவள் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவித்தாள். அவன் தன் தந்தையைத் தேடிச் சென்று தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். ஆயினும் ஊர்க் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு நவகோடி நாராயணன் அவனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறான். பின்னர் அவன் தாய் காளியின் உதவியால் செட்டிச்சாதிப் பெரியவர்களிடம் தன் கற்பின் உண்மையை நிலைநாட்டுகிறாள். நாராயணனும் அவனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டு, அவர்களுடன் இனிது வாழ்ந்தான்.

உண்மையில் ஐந்தாவது காப்பியமாக பெருங்கதை, நீலகேசி போன்ற பிற முழுமையாகக் கிடைக்கும் கதைகளில் ஒன்றையே நாம் ஏற்க முடியும். நீலகேசி என்பதும் சமணத் தமிழ்க் காப்பியங்களில் ஒன்று. தமிழ்க் காப்பிய மரபின்படி பெண்ணின் பெருமை பேசும் நூலாகையால் இதுவே ஐந்தாவது காப்பியமாக ஏற்கத்தக்கது. நீலகேசி என்ற பெண் தத்துவ தரிசனங்களில் அறிவாற்றல் பெற்று பிற மதத்தினரின் தத்துவங்களை வென்று புகழ் பெற்றவள்.

ஆனால் நீலகேசியின் கதையும் அக்காப்பியத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கவில்லை. நீலகேசியின் கதைகளாக இன்று கிடைப்பவை யாவும் பிற புராணங்களில் காணப்படுபவையே. அவற்றில் மூன்றை மட்டும் இங்கே காண்போம்.

நீலகேசி

கதை 1. இரத்தின கரண்டகம் என்ற வடமொழி நூலில் நீலி என்ற சமணப் பெண் கதை காணப்படுகிறது. அவள் ஜினதத்தன் என்ற வணிகன் மகள். பிருகுகச்சம் என்ற ஊரைச் சேர்ந்தவன் அவன். அதே ஊரைச் சேர்ந்த சாகர தத்தன் அவளை மணக்க விரும்பினான். ஆனால் அவன் பவுத்தன். எனவே பெற்றோருடன் சமணராக வேடமிட்டு இந்தப் பெண்ணை மணந்து கொண்டான். அவளும் வேறு வழியின்றித் தன் சமணசமயத்தில் இருந்து கொண்டே இல்லறக் கடமையாற்றிவந்தாள். ஒருநாள் பிட்சு ஒருவனுக்கு உணவு ஆக்கி அளிக்குமாறு வீட்டினர் கட்டளையிட்டனர். அவன் ஊன் உண்பவன். அவளோ ஊன் சமைக்காத சமணத்தி. எனவே புத்தத் துறவி அணிந்திருந்த தோல் மிதியடியில் ஒன்றை எடுத்து திறம்படச் சமைத்து கறியாக்கி உணவிட்டாள். துறவி விடைபெற்றுப் போகும்போது மிதியடி ஒன்றைக் காணாமல் தேடினான். நீலி அவன் உண்டது மிதியடியைத் தான் என்று கூறினாள்.

எனவே அவள்மீது பழிக்குப் பழி வாங்கும் போக்கில் நீலியின் கற்பின் மீது பழி சுமத்தினர். ஆனால் நல்ல வேளையாக ஒரு தெய்வத்தின் செயலால் அவள் கற்புத் திறம் புலனாயிற்று. நகரின் கோட்டைவாயில் அடைபட்டுப் போயிற்று. கற்புடைய பெண்கள் மட்டுமே அதைத் திறக்க முடியும் என்று மரபு. யாராலும் அசைக்க முடியாத அக்கதவை நீலி சென்று எளிதாகத் திறந்தாள். அவள் மீது இருந்த பழி நீங்கி கற்பின் கனலி என்று பெயர் பெற்று வாழ்ந்தாள்.

கதை 2. வடக்கில் பாஞ்சால நாட்டில் பலாலயம் என்ற இடத்தில் கோயில் கொண்டிருந்த காளிக்கு அவ்வூர் மக்கள் பலி கொடுத்து வழிபட்டனர். இதனைக் கண்ணுற்ற முனிசந்திரர் என்ற சமண முனிவர் பலி கொடுத்தலைத் தடுத்தார். பலாலயத்தின் காளிக்கு உயிர்ப்பலி கிடைக்காததால் தமிழ்நாட்டுப் பழையனூர் நீலி என்ற நீலகேசியிடம் முறையிட்டாள். நீலகேசி முனிசந்திரரைப் பலவிதமாகத் துன்புறுத்தியும் செல்லாதது கண்டு அவருக்கு அடங்கிச் சமணத் துறவியாக மாறினாள். பிறகு அவள் பெளத்த மதத்தைச் சேர்ந்த குண்டலகேசியிடம் வாதிட்டு வென்றாள்.

இந்நீலி வாழ்ந்த ஊர் பழையனூர். இது சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் இரயில் பாதையில் திருவாலங்காடு என்ற இரயில் நிலையச் சிற்றூரின் அருகில் உள்ளது. திருவாலங்காடு நால்வர் பாடல் பெற்ற திருத்தலம். இங்கு நீலி வடிவம் எடுத்த காளியுடன் சிவபெருமான் நடனப் போட்டியில் ஈடுபட்டு அவளை வென்றதாகக் கதை உள்ளது. இக்கதை தேவார ஆசிரியர்களாலும் சேக்கிழாராலும் சொல்லப்பட்டுள்ளது.

கதை 3. மேல் இரண்டு கதைகளையும் விட சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறும் பழையனூர் நீலி கதையே பிரபலமானது. ஒரு வணிகன் தன் மனைவியைப் புறக்கணித்து வேசியரிடம் தன் செல்வத்தை எல்லாம் தொலைத்தான். ஆதரவற்ற அவன் மனைவி தன் பெற்றோரிடம் சென்று இருந்துவந்தாள். பொருளிழந்த வணிகன், தன் மனைவியைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்தான். வழியில் அவள் அணிகலன்களைப் பறித்துக் கொண்டு அவளையும் குழந்தையையும் பாழும் கிணறு ஒன்றில் தள்ளிக் கொன்றான். பாழும் கிணற்றில் விழுந்து இறந்த அந்தப் பெண் அது முதல் பேயாகத் திரிந்தாள். அவளே நீலி.

பின்னொரு சமயம் மேலும் பொருளீட்டுவதற்காக அந்த வணிகன், அந்தப் பேய் இருந்த இடத்தின் வழியாகச் சென்றான் அவனுக்கு ஒரு முனிவர் துணையாக இருந்து ஒரு வாளைப் பரிசளித்திருந்தார். இப்போது அந்தப் பேய் மனித உருவில் கைக்குழந்தையுடன் அவனைப் பின்தொடரலாயிற்று. முனிவரின் வாள் காரணமாக அவள் அவனை நெருங்க முடியவில்லை. அது பேய் என்பதை அறிந்த வணிகன் விரைந்து பக்கத்திலுள்ள பழையனூருக்குள் ஓடினான். அந்தப் பேய்ப்பெண் கண்ணீரும் கம்பலையுமாக அவ்வூர்ப் பெருமக்களான வேளாளர் எழுபதின்மரிடம் அவனை இட்டுச் சென்றாள். மனைவியாகிய தன்னையும் தன் குழந்தையையும் அவன் கைவிட்டு வேசியிடம் செல்கிறான் என்றும், தன்னை ஏற்றுக் கொள்ளும்படி அவனை ஊரார் தூண்ட வேண்டும் என்று அவள் முறையிட்டாள்.

வணிகன் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறினான். அவர்கள் முன் வாதாடுவது பெண் அல்ல, பெண் உருவம் கொண்ட மாயப் பேயே என்றும் விடாமல் எடுத்துரைத்தான். வேளாளர்கள் அவன் கூறிய கதையை நம்பவில்லை. அவனுக்குத் தீங்குவராமல் காப்பதாக உறுதி அளித்தனர். நீலி பிள்ளையுடன் வணிகனோடு தங்கினாள். அப்போதும் அவள் பழிவாங்கும் செயலுக்கு முனிவர் தந்த மந்திர வாள் தடையாக இருந்தது. அந்த வாளால் அவன் தன்னைக் கொன்று விடுவான் என்று வேளாளரிடம் முறையிட்டு அந்த வாளை அவனிடமிருந்து அகற்றினாள் நீலி. இரவில் வணிகனுடைய உடலைப் பிளந்து இரத்தத்தைக் குடித்துவிட்டு பழையபடியே பேயாக மாறிச் சென்றுவிட்டாள். இச் செய்தி கண்ட வேளாளர் தங்கள் தவற்றை உணர்ந்து வருந்தி தங்கள் உறுதிமொழி தவறாது தீக்குளித்து இறந்தனர்.

எவ்வாறாயினும் நீலகேசி என்னும் தருக்க நூலைப் படிக்க நீலகேசி பற்றிய இக்கதைகள் தேவையே இல்லை. நண்பர்கள் யாவரும் நமது பழைய தத்துவங்களையும் தர்க்க முறைமையையும் அறிய இந்த நூலைப் பயில வேண்டியது அவசியம்.

இதன் ஆசிரியர் சமய திவாகர வாமன முனிவர் என்பர். இது தரும உரைச் சருக்கம், குண்டலகேசி வாதச் சருக்கம் அருக்க சந்திர வாதச் சருக்கம், மொக்கல வாதச் சருக்கம், புத்த வாதச் சருக்கம், ஆசீவக வாதச் சருக்கம், சாங்கிய வாதச் சருக்கம், வைசேடிக வாதச் சருக்கம், வேத வாதச் சருக்கம், பூத வாதச் சருக்கம் எனப் பத்துப் பிரிவுகள் கொண்டது. ஒவ்வொரு சருக்கமும் ஒரு மதக் கொள்கையை நீலகேசி வாதிட்டு வெல்வதை எடுத்துரைக்கிறது. வடமொழிப் பயிற்சி இல்லாத தமிழர்கள் பல மத தத்துவங்களையும் தமிழ் மொழியில் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஒரு சமய திவாகரமாக (சூரியனாக)த் திகழ்கிறது.


உடோபியா

இதை ஒரு நாவல் என்று சொல்வது கடினம். அமெரிக்கா என்ற புதிய உலகம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒரு புதிய கற்பனை நாட்டை–அதன் பெயர் உடோபியா–அறிமுகப்படுத்தி பெரும்பாலும் அதன் சிறப்பான பண்புகளை விளக்குவது இந்த எடுத்துரைப்பு. இது 1551ஆம் ஆண்டு வெளியானது. இதைப் பின்பற்றி உலக மொழிகள் அனைத்திலும் மட்டுமல்ல, ஆங்கிலத்திலுமே நியூ அட்லாண்டிஸ் போன்ற பல நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் மு. வரதராசனார், கி.பி.2000 என்ற பெயரில் இப்படிப்பட்ட நாவல் ஒன்றை வரைந்தார்.

தாமஸ் மூர் என்பவர் ஓர் ஆங்கிலேயேப் பணியாளர். பெல்ஜியத்தில் தன் நண்பர் பீட்டர் கைல்ஸ் என்பவரைச் சந்திக்கிறார். அவர் தன் நண்பர் ரஃபேல் ஹைத்லோடே-வுக்கு மூரை அறிமுகப் படுத்துகிறார். ரஃபேல், ஒரு போர்ச்சுகீசியர். அமெரிக்காவுக்குப் பெயரளித்த அமெரிகோ வெஸ்பூச்சி யுடன் உலகம் சுற்றியவர். அவர் தான் கண்டதாக உடோபியா என்ற நாட்டைப் பற்றிச் சொல்கிறார். (உடோபியா என்பதற்கு “இல்லாத இடம்” என்று பொருள்)

ரஃபேலை ஏன் அரசாங்க வேலை ஏற்கக்கூடாது என்று கேட்கிறார் மூர். அதற்கு அவர் தெரிவிக்கும் கருத்துகள் புரட்சிகரமாக உள்ளன. அரசாங்க வேலை என்பது அடிமை வேலை. எந்த ஆட்சியாளனுக்கும் மக்களின் நன்மையில் ஆர்வம் கிடையாது… என்று பல விஷயங்களைப் பற்றி அவர் பேசுகிறார். உதாரணமாக, மரண தண்டனை கூடாது என்பது அவர் கருத்து. ஏனெனில் மனிதனை மனிதன் கொல்லக் கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். பாரசீகத்தில் தான் கண்டதுபோல, யாராவது திருடினால் திருடிய பொருளைத் திரும்ப அவன் சொந்தக்காரரிடம் கொடுத்துவிட வேண்டும். ஒருவேளை திரும்பத் தர எதுவும் இல்லை என்றால், அவன் பொதுப்பணித் துறையில் வேலை செய்ய வேண்டும். மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்தான் அரசனுக்குச் சிறப்பு. அவர்கள் பொருளின்றித் திருடுவதும் சாவதும் ஆட்சியாளனை ஜெயிலராகவும் கொலைகாரனாகவும் மாற்றுகிறது.

பிறகு உடோபியா பற்றி உரையாடல் தொடர்கிறது. உடோபியர்கள் மகிழ்ச்சியும் இனிமையும் நிறைந்த வாழ்க்கையை மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால் நல்லவர்கள், நேர்மையானவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும். தனிமனிதச் சொத்து, பொருள்குவிப்பு அற்ற நிலையில்தான் மகிழ்ச்சி இருக்க முடியும். பணக்காரர்கள் எல்லாரும் வில்லன்கள், குற்றவாளிகள், சோம்பேறிகள் என்று உடோபியர்கள் கருதுகிறார்கள். ரஃபேலும் அதை ஆதரிக்கிறார்.  

உடோபியாவில் தங்கத்துக்கு மதிப்பு கிடையாது. யாரும் ஆபரணத்தைப் பயன்படுத்துவதில்லை. எல்லாப் பொருள்களுமே இலவசமாகக் கிடைக்கின்றன. எனவே நாளைக்கு என்று சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

உடோபியா ஒரு தீவு. அதை உருவாக்கியவர் உடோபஸ் என்ற பிரயாணி. ஆளற்ற ஒரு தீபகற்பத்தை அவர் கண்டவுடன் அதைச் சொந்தமாக்கித் தீவாக மாற்றுகிறார், மக்களைக் குடியேற்றுகிறார்.

உடோபியாவில் 54 நகரங்கள் உள்ளன. அவை யாவும் ஒரே மாதிரியான அமைப்புள்ளவை. ஒரு நகரத்தில் 6000 பேர் மட்டுமே இருக்கலாம். அமாரூட் என்பது தலைநகரம். ஒவ்வொரு நகரத்திற்கும் சொந்தமாக நிலம் உண்டு. அதைக் குடும்பங்கள் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் 40 ஆடவர் பெண்டிர் இருக்கலாம். 2 அடிமைகள் இருக்கலாம். உழவுக்கான கருவிகளை மேஜிஸ்டிரேட் அளிப்பார்.

சுழற்சி முறையில் இருபது இருபது குடும்பங்களாக நகரத்திலிருந்து கிராமப்புறம் சென்று விவசாயம் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு ஊரில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கலாம்.

எல்லாரும் மிக அழகான, ஆனால் ஒரே மாதிரியான அலங்காரமற்ற, நடைமுறைப் பயனுடைய உடையை மட்டுமே உடுத்துகின்றனர். கட்டடங் களும் எளிமையானவை. தேவையற்ற உழைப்பை அவை குறைக்கின்றன. எல்லாரும் 6 மணிநேரம் மட்டுமே உழைத்தாலும் மிகையாக உற்பத்தி செய்கிறார்கள். குருமார்கள், சாமியார்கள், பூசாரிகள் போன்றோர் உழைப்பற்றவர்கள், தேவையற்றவர்கள் என்பதால் நாட்டில் அவர்கள் இல்லை.   

நகரத்திற்கு ஃபைலார்க் எனப்படும் மாஜிஸ்திரேட் (தலைவர்) உண்டு. ஒவ்வோராண்டும் அவர் முப்பது குடும்பங்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். ஊர் விட்டு ஊர் செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை. அதை அரசனிடமிருந்து பெறலாம். ஃபைலார்க்குகள் அரசனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அதிகமாகக் குழந்தை பெற்றால் இல்லாதவர்களுக்கு அளிக்கப்படும். அதேபோல ஒரு நகரத்தில் மக்கள் தொகை அதிகமானால் சிறு நகரங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.  

நாட்டில் அடிமைகள் உண்டு. போரில் தோற்றவர்கள் அடிமைகளாகக் கொள்ளப்படுவார்கள். தேவையான விவசாய நிலம் இல்லாமல் போனால் மட்டுமே போர் தேவைப்படும், நிகழும்.

தனக்குத் தேவையானதற்கு மேல் எவரும் எந்தப் பொருளையும் எடுப்பதில்லை. ஏனெனில் திருடுதல், பறித்துக் கொள்ளுதல் என்பவை எல்லாம் அங்கு கிடையாது.

“உடோபியாவில் எல்லாருக்கும் எல்லாவற்றின்மீதும் உரிமை உண்டு. பொதுக் கடைகளை எப்போதும் நிரப்பி வைத்திருந்தால், எவரும் தேவையின்றி எடுக்கமாட்டார்கள். ஏனெனில் சமமற்ற விநியோகம் கிடையாது. அதனால் யாரும் ஏழைகளும் இல்லை, யாரிடமும் எதுவும் கிடையாது என்றாலும் எல்லாரும் செல்வமுள்ளவர்களே.”   

பெண்கள் 18 வயதுக்கு முன், ஆடவர் 22 வயதுக்கு முன் திருமணம் செய்யலாகாது. திருமணத்துக்கு முன்னால் பாலியல் உறவு கொள்ளக் கூடாது. பலதார மணம், விபசாரம் என்பவையும் தடுக்கப் பட்டவை. உடோபியாவில் வழக்கறிஞர்கள் கிடையாது. யாவரும் தங்களுக்குத் தாங்களே வழக்காட வேண்டும்.

தாங்களே இராணுவத்தை வைத்துக் கொள்வதைவிட இராணுவங்களை வாடகைக்கு அமர்த்துவதையே உடோபியர்கள் விரும்பினார்கள். ஆனால் கணவன் போருக்குச் சென்றால் மனைவியும் உடன் சென்று போரிடலாம்.

மதத்தைப் பற்றி இறுதியாகத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார் ரஃபேல். ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பதால் அங்கே எண்ணற்ற மதங்கள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு தெய்வம் உண்டு. உடலுடன் ஆன்மா இறந்துபோகிறது என்று கருதக் கூடாது. அதனால் நோயுற்றால் வருந்துவார்களே ஒழிய இறப்புக்கு யாரும் வருந்துவதில்லை.

ரஃபேல் தனது வருணனைகளை முடிக்கும்போது, மூரின் மனத்தில் பல சந்தேகங்களும் கேள்விகளும் தோன்றியுள்ளன. ஆனால் ரஃபேல் களைத் திருந்ததால் மூர் அவற்றைக் கேட்காமல் அடக்கிக் கொள்கிறார். தங்கள் அரசாங்கங்களும் உடோபியாவின் சில விதிகளைக் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே இறுதியில் சொல்கிறார்.

இப்படிப்பட்ட எளிய, ஆனால் ஏழ்மையற்ற வாழ்க்கையைத்தான் நமது தமிழ் முன்னோர் வாழ்ந்துவந்தனர். பொங்கல் என்ற தன்னிறைவுக் கொண்டாட்டம் இந்தமாதிரி வாழ்க்கையின் அடையாளம். இப்போதும் நாகரிகம்(!) பரவாத காட்டுப் பகுதிகளில் பல பழங்குடியினர் இப்படித்தான் வாழ்கின்றனர்.

ஆனால் மேலும் மேலும் பொருளையும் பணத்தையும் குவிப்பதைத்தான் சிறந்த வாழ்க்கை என்று நமக்குக் கற்பிக்கிறது இந்த உலகம். எதற்காக ஒருவனுக்கு பதினைந்து லட்ச ரூபாய் கோட்டு? எதற்காக ஒருவன் இரண்டு கோடிக்குக் கார் வாங்கி, வரி கட்டாமல், கோர்ட்டில் போய் நிற்க வேண்டும்? எதற்காக கோடிக்கணக்கான பேர் வயிற்றுக்குச் சோறின்றி சாலையோரங்களில் வாழ்ந்து இறக்க வேண்டும்? சிந்தியுங்கள்.

தன்னளவில் நிறைவாக எளிமையாக வாழ்பவனைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறது இவ்வுலகம். “வளர்ச்சி வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையையும் உலகத்தையும் அழிக்க வேண்டும். பிறகு எல்லாவற்றுக்குமாக உட்கார்ந்து என்ன செய்வது என்று ஐ.நா.வில் பன்னாட்டுக் கூட்டங்கள் போட்டுப் போலியாக அழ வேண்டும்!”       


சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும்

2022 புத்தாண்டை மகிழ்ச்சியான சிறுவர் கதை ஒன்றுடன் தொடங்குவோம். கள்ளமற்ற சிறார்களைக் கொண்டாடுவதும், கிறித்துவின் தியாகவடிவமாக ஒரு பெருஞ்சிங்கத்தைப் படைத்திருப்பதும் ஆகிய கதை ஒன்றைக் காண்போம்.

“நார்னியாவின் காலவரிசைக்கதைகள்” (Chronicles of Narnia) என்பது சி. எஸ். லூயிஸ் (1898 – 1963) என்ற பேராசிரியரால் எழுதப்பட்டு சிறார்கள் (சிறுவர் சிறுமியர்) இடையிலே) புகழ்பெற்றது. ஏழு கதைகள் கொண்ட தொடர் இது. அதில் முதல் கதை ‘சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும்’. இது 1950இல் வெளியாயிற்று.

இந்தக் கதை 2005இல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. புகழ்பெற்ற அதன் மொழிமாற்ற வடிவத்தைத் தமிழ்ச் சிறார்களும் கண்டு களித்திருப்பார்கள். தமிழ்த் தொலைக்காட்சிகளில் அடிக்கடி திரையிடப்படும் படம் இது.

கதை 1940இல் நிகழ்கிறது. பீட்டர், சூசன், எட்மண்ட், லூசி என்ற நான்கு சிறார்களும் உலகப் போரின் காரணமாக லண்டனிலிருந்து வெளியேற்றப் பட்டு பேராசிரியர் டிகோரி கிர்க்கே என்பவருடன் ஒரு கிராமப்புற வீட்டில் தங்கியிருக்குமாறு அனுப்பப் படுகிறார்கள். பாவம், அவர்களுக்குத் தாங்கள் ஒரு மாய உலகிற்குள் பயணிக்கப் போகிறோம் என்பது அப்போது தெரியாது.

அந்த இருண்ட வீட்டைச் சுற்றி ஆராயும்போது லூசி ஒரு பெரிய ஆடையலமாரியைக் கண்டு அதற்குள் புகுந்தவள், அப்படியே நார்னியா என்ற மாய உலகிற்குள் சென்றுவிடுகிறாள். அங்கு மிருகங்கள் பேசுகின்றன. டம்னஸ் என்ற ஆட்டுமனிதனைச் சந்திக்கிறாள். தான் வெள்ளை விட்சின் (சூனியக்காரியின்) பணியாள் என்றும் லூசியை அவளிடம் அறிமுகப்படுத்த இருந்ததாகவும் டம்னஸ் சொல்கிறான். அந்தமாயயக்காரி, நார்னியா நாட்டின் அரசியாக வேடமிட்டு, அதைக் கிறிஸ்துமஸ் அற்ற நிரந்தரப் பனிக்காலத்தில் ஆழ்த்தியிருக்கிறாள்.

டம்னஸ் மனம் வருந்தி லூசியைத் திரும்பவும் அவள் வீட்டுக்கே அனுப்பிவிடுகிறான். மற்ற மூவரும் இவள் கதையை நம்ப மறுக்கிறார்கள். ஆனால் எட்மண்ட் ஆடையலமாரிக்குள் புகுந்து நார்னியாவில் வேறொரு இடத்துக்குச் சென்று விடுகிறான். வெள்ளை மாயக்காரியைச் சந்திக்கிறான். அவள் எட்மண்டுக்கு ஒரு கேக்கைக் கொடுத்து குஷிப்படுத்தி அவனது மற்ற உடன்பிறப்புகளைக் கொண்டுவந்தால் அவனை இளவரசன் ஆக்குவதாகச் சொல்கிறாள். எட்மண்டும் லூசியும் வீட்டுக்குத் திரும்புகின்றனர்.

சிலநாள் கழித்து நான்கு பேருமே நார்னியாவுக்குச் செல்கின்றனர். சதி செய்ததற்காக டம்னஸ் கைது செய்யப்பட்டுவிட்டான். நான்குபேரும் பீவர் தம்பதிகளுடன் நட்புக் கொள்கிறார்கள். “ஆதாமின் மகன்கள் இருவரும் ஏவாளின் மகள்கள் இருவரும் பாரவல் கோட்டையின் சிம்மாசனங்களில் அமரும்போது வெள்ளை மாயக்காரியின் ஆட்சி முடியும் என்றும் நார்னியாவின் உண்மையான அரசனாகிய அஸ்லான் என்னும் சிங்கம் கல்மேஜைக்குத் திரும்பும்போது இது நிகழும் என்றும் பீவர் தம்பதியர், சொல்கிறார்கள்.

எட்மண்ட் தனியே வெள்ளை மாயக்காரியின் அரண்மனைக்குச் சென்று அவள் பகைவர்கள் அனைவரும் கற்சிலைகளாக மாற்றப்பட்டிருப்பதைக் காண்கிறான். அவனிடமிருந்து சிங்கம் திரும்பவரப் போகிறது என்று அறிந்த மாயக்காரி, கல்மேஜையை நோக்கிப் படையெடுக்கிறாள். பிற சிறார்களையும் பீவர் ஜோடியையும் கொல்ல உத்திரவிடுகிறாள். ஆனால் அவர்கள் தப்பி கல்மேஜையை நோக்கிச் செல்கின்றனர். வழியில் பனி உருகுவதை நம்பிக்கைச் சின்னமாகக் கொள்கின்றனர். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தாவும் தோன்றிப் பரிசுகளும் ஆயுதங்களும் வழங்கி நம்பிக்கை அளித்துச் செல்கிறார்.

அதற்குள் மாயக்காரியின் சேனைத்தலைவனாகிய மோக்ரிம் என்ற ஓநாய் சேனையுடன் வந்துவிடுகிறது. அதைப் பீட்டர் கொல்கிறான். மாயக்காரி தோன்றி, “காலவிடியலின் ஆழ்ந்த மாயத்தால்” எட்மண்டைக் கொல்வதாகச் சொல்கிறாள். அஸ்லான் மாயக்காரியிடம் தனியாகப் பேசி எட்மண்டைக் காப்பாற்றுகிறது. அனைவரும் தங்கள் படைவீட்டுக்குச் செல்கிறார்கள்.

அஸ்லானைப் பின்தொடரும் சூசனும் லூசியும் அது மாயக்காரியால் எட்மண்டுக்கு பதிலாகக் கொலைசெய்யப்படுவதைக் காண்கின்றனர். ஆனால் அடுத்தநாள் காலை, “காலவிடியலின் மிகஆழ்ந்த மாயத்தால்” உயிர் பெறுகிறது அஸ்லான். அது அனைவரையும் மாயக்காரியின் அரண்மனைக்குக் கொண்டுசென்று, அங்கு கல்லாகியிருந்தவர்களையும் உயிர்பெறச் செய்கிறது. அவர்கள் அனைவரும் அஸ்லானின் சேனையில் சேர்கிறார்கள். போரில் அஸ்லான் மாயக்காரியைக் கொல்கிறது. நான்கு சிறார்களும் நார்னியாவின் ராஜா-ராணிகளாக பாரவல் கோட்டையில் முடிசூடுகிறார்கள்.

காலம் பறக்கிறது. இப்போது நான்கு சிறார்களும் இளைஞராகி விட்டனர். தன்னைப் பிடிப்பவர்களுக்கு வேண்டிய வரம் கொடுக்கும் வெள்ளைக் கலைமானைத் தேடி அவர்கள் ஒருநாள் நார்னியாவின் எல்லைக்குச் சென்று விடுகின்றனர். தாங்கள் வந்த ஆடையலமாரியை அவர்கள் மறந்து விட்டனர். இப்போது அதன்வழியே விருப்பமே இன்றி நுழைந்து தங்கள் பழைய வீட்டுக்குத் திரும்புகிறார்கள். ஆ! அவர்கள் இப்போது மீண்டும் பழையபடியே சிறார்களாக மாறிவிட்டனர்! இந்த உலகில் கால மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

தங்கள் கதையைக் கிர்க்கேயிடம் சொல்கின்றனர். அவர் “எதிர்பாராத ஓர் நாளில் நீங்கள் மீண்டும் நார்னியாவுக்குச் செல்வீர்கள்” என ஆசி வழங்குகிறார்.

இது ஒரு தொடர் உருவகக் கதை. கொல்லப் பட்டு, உயிர்த்தெழுகின்ற அஸ்லான் என்ற சிங்கம் கிறித்துவின் வடிவம். இதுபோல் பிற பாத்திரங்களும் உருவகங்களே.

நார்னியா கதைகள் அனைத்தும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. மேலும் தொலைக்காட்சித் தொடர், நாடகம், கணினி விளையாட்டு, வானொலி போன்ற அனைத்து ஊடகங்களும் இக்கதையைப் பயன்படுத்தி யுள்ளன. மாயக் கதை உருவாக்கத்தில் டோல்கியனுக்கு இணையாகப் பேசப்படும் ஆசிரியர் சி.எஸ். லூயிஸ்.


வள்ளலார்

சிதம்பரம் இராமலிங்கம் என்று எளிமையாகத் தன்னை அழைத்துக் கொண்ட திருவருட்பிரகாச வள்ளலார் சித்தி பெற்று 148 ஆண்டுகள் ஆகின்றன. அவரது நினைவைப் போற்றும் வகையான் அவரது வாழ்க்கைக் குறிப்புகளையும், அவற்றிற்கு உறுதுணையான அவர் இயற்றிய பாடல்கள் சிலவற்றையும் காண்போம்.

வள்ளல் இராமலிங்க அடிகளார் ஒரு தலைசிறந்த ஞானி. இந்த உலகம் உய்வதற்காக சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியையும், அந்நெறி தழைக்க சமரச சன்மார்க்க சங்கம் என்கிற அமைப்பையும், அற்றார் அழிபசி தீர்க்க சத்திய தருமச்சாலை என்ற உணவுச்சாலையையும், மன இருளை அகற்றி நித்திய ஜோதியை நினைவில் இருத்த சத்திய ஞான சபை என்கின்ற அருள் நிலையத்தையும் சிதம்பரம் அருகிலுள்ள வடலூரில் அமைத்து, இம்மானுடம் மரணமிலாப் பெருவாழ்வு காண விழைந்த அவர் ‘திரு அருட்பா’ என்னும் ஞான நூலையும் அருளிச் சென்றுள்ளார்.

அவரது வாழ்க்கைக் குறிப்புகள்:
இயற்பெயர்: இராமலிங்கம்
தந்தை: இராமையா பிள்ளை
தாயார்: சின்னம்மாள்
சமயம்: சைவம்
குலம்: வேளாண்குலம்
மரபு: கருணீகர் மரபு
தோற்றம்: 5-10-1823
(சுபானு ஆண்டு, புரட்டாசித் திங்கள், 21-ஆம் நாள்
ஞாயிற்றுக் கிழமை, மாலை 5:30 மணியளவில்)
பிறப்பிடம்: மருதூர் (சிதம்பரம் அருகே)
உடன் பிறந்தோர்:
தமையன்கள்:
சபாபதி
பரசுராமன்
தமக்கைகள்:
உண்ணாமுலை
சுந்தரம்.
ஆசிரியர்கள்:
தமையனார் சபாபதி பிள்ளை
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்
ஞானாசிரியர்: அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இதை வள்ளலாரின் கீழ்வரும் பாடல்கள் கூறும்:

நாதா பொன்னம்பலத்தே
அறிவானந்த நாடகஞ் செய்
பாதா துரும்பினும் பற்றாத
என்னைப்பணி கொண்டெல்லாம்
ஓதாது உணர உணர்த்தி உள்ளே
நின்று உளவு சொன்ன
நீதா நினை மறந்தென்
நினைக்கேன் இந்த நீணிலத்தே!
(நான்காம் திருமுறை பாடல் 2775)
**
………..
கற்றது நின்னிடத்தே
பின் கேட்டது நின்னிடத்தே
கண்டது நின்னிடத்தே
உட்கொண்டது நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே
இன்புற்றது நின்னிடத்தே
பெரிய தவம் புரிந்தேன்
என் பெற்றி அதிசயமே!
(ஐந்தாம் திருமுறை பாடல் 3044)
**
ஏதுமறியாது இருளில் இருந்த
சிறியேனை எடுத்து விடுத்து
அறிவு சிறிது ஏய்ந்திடவும்
புரிந்து ஓதுமறை முதற்
கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந்து உணர்த்தி
அருள் உண்மை நிலை காட்டி….
(ஐந்தாம் திருமுறை பாடல் 3053)
**
…………..
ஓதி உணர்ந்தவர் எல்லாம்
எனைக் கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்து உணர்வாம்
உருவுறச் செய் உணர்வே….
(ஆறாம் திருமுறை பாடல் 4112)
**
ஒன்றென இரண்டென
ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய
அருட் பெருஞ் ஜோதி
ஓதாது உணர்ந்திட ஒளி
அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்
பெரும் ஜோதி…!
(ஆறாம் திருமுறை பாடல் 4615 வரிகள் 21-24)
**
…………………
முன்னைப் பள்ளி பயிற்றாத
என்தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர்வித்து உடல்
பழுதெலாம் தவிர்த்தே
எனைப் பள்ளி எழுப்பிய
அருட்பெருஞ் சோதி
என்னப்பனே பள்ளி
எழுந்தருள்வாயே!
(ஆறாம் திருமுறை பாடல் 4891)
**
சோதி மலையில் கண்டேன்
நின்னைக் கண் களிக்கவே
துய்த்தேன் அமுதம் அகத்தும்
புறத்தும் பரிமளிக்கவே
ஓதி உணர்தற்கு அரிய
பெரிய உணர்வை நண்ணியே
ஓதாது அனைத்தும் உணர்கின்றேன்
நின் அருளை எண்ணியே!
(ஆறாம் திருமுறை பாடல் 5004)

ஞான வாழ்க்கை:
வள்ளலார் தமது பன்னிரண்டாம் வயதிலேயே
ஞான வாழ்க்கை வாழத்தலைப்பட்டார். கீழ்வரும் அவரது பாடல்களால் இதை அறியலாம்.

பன்னிரண்டாண்டு தொடங்கி நான்
இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது
அதனால் ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுள்ளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும்
இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த
வண்ணமே வகுப்பதென் நினக்கே!
(ஆறாம் திருமுறை பாடல் 3535)
**
பன்னிரண்டாண்டு தொடங்கி
இற்றைப் பகலின் வரையுமே
படியில் பட்ட பாட்டை
நினைக்கில் மலையும் கரையுமே
துனியாது அந்தப்பாடு முழுதும்
சுகமது ஆயிற்றே
துரையே நின் மெய்யருள்
இங்கு எனக்குச் சொந்தமாயிற்றே!
(ஆறாம் திருமுறை பாடல் 5041)
**
ஈராறாண்டு தொடங்கி
இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை
நினைக்கில் இரும்பும் கரையுமே
ஏராய் அந்தப் பாடு
முழுதும் இன்பமாயிற்றே
இறைவா நின் மெய்யருள்
இங்கு எனக்குச் சொந்தமாயிற்றே!
(ஆறாம் திருமுறை பாடல் 5042)

திருமணம்:
1850-ல் உற்றார் மனம் நோகாது, தன்னுடைய தமக்கை உண்ணாமுலை அம்மையின் மகள் தனம்மாளை மணம் முடித்தாலும் அவர் இல்லறத்தை ஏற்கவில்லை. இதனையும் அவருடைய பாடல்களால் அறியலாம்:

முனித்த வெவ்வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன், மோகம் மேலின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்
குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பினேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்ததோறும் உள்
உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்
(ஆறாம் திருமுறை பாடல் 3452)
**
முன்னொரு பின்னும் நீ தரு மடவார்
முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபை நடத்தரசு
உன் புணர்ப்பலால் என் புணர்ப்பலவே
என்னொடும் இருந்திங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவதென்னோ
சொன்னெடு வானத்து அரம்பையர் எனினும்
துரும்பு எனக் காண்கின்றேன் தனித்தே!
(ஆறாம் திருமுறை பாடல் 3391)

வள்ளலாரின் மாணாக்கர்கள்:
தொழுவூர் வேலாயுத முதலியார்,இறுக்கம் இரத்தின முதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, காயாறு ஞானசுந்தர ஐயர், பண்டார ஆறுமுகம் அய்யா,
வீராசாமி முதலியார் ஆகியோர்

உறைவிட மாற்றம்:
சென்னை ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் வாழ்ந்து வந்த வள்ளலார் ஆரவாரம் மிகுந்த அவ்விடத்தைத் தவிர்த்து 1857-ல்
சிதம்பரம் அருகேயுள்ள கருங்குழி என்னும் கிராமத்தில் மணியக்காரர் வேங்கட ரெட்டியார் இல்லத்தில் 1867 வரை வாழ்ந்து வந்தார். இக்காலத்தில் அவர் நாள்தோறும் சிதம்பரம்
சென்று வழிபடுவது வழக்கம்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம்:

வள்ளல் இராமலிங்கம் கடவுள் ஒருவரே என்றும், அவரை அன்புடன் ஜோதி வடிவில் வழிபட வேண்டும் என்றும், சிறு தெய்வ வழிபாடு கூடாது, உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணலாகாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது, எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் ஆன்ம நேய ஒருமைப்பாடு வேண்டும், ஏழைகளின் பசி தீர்க்கும் ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல், புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா, இறந்தவரைப் புதைக்க வேண்டும்; எரிக்கக் கூடாது,
கருமாதி; திதி முதலிய சடங்குகள் தேவை இல்லை, போன்ற நெறிகளை வலியுறுத்திய
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

சத்திய தருமச்சாலை:

வள்ளல் பெருமானின் தலையாய கொள்கை
ஜீவகாருண்யம். புலால் மறுத்தலும், அற்றார் அழிபசி தீர்த்தலும் ஜீவகாருண்யத்தில் அடங்கும்.
எனவே அற்றார் அழிபசி தீர்க்கும் பொருட்டு, வடலூரில் சத்திய தருமச்சாலையை 1867-ல்
நிறுவினார். தமது உறைவிடமாக அதனையே ஏற்று
1870 வரை அங்கேயே உறைந்திருந்தார்.

சித்திவளாகம்: (மேட்டுக்குப்பம்)

தனிமையை நாடிய வள்ளலார் 1870-ல் வடலூருக்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பத்தில் வாழத் தொடங்கினார். தாம் உறைந்த அத்திருமாளிகைக்கு சித்திவளாகம் என்ற பெயரை அவரே இட்டார். அவர் சித்தி அடைந்த வளாகமும் அதுவே.

சத்திய ஞானசபை:
இறைவனை ஒளிவடிவில் கண்ட பெருமானார்
ஒளி வழிபாட்டிற்கென சத்திய ஞான சபை என்னும் வழிபாட்டு சபை ஒன்றை நிறுவ எண்ணினார்.
அன்பர்கள் உதவியுடன் வடலூரில் 1871-ல் பணிகள் தொடங்கப் பெற்று, 1872-ல் தைப்பூசம்
நன்னாளில் தொடங்கிய சத்தியஞான சபையில் தினமும் ஜோதி வழிபாடு நடைபெறுகின்றது.

சன்மார்க்கக் கொடி:
ஞானிகள் தம் கொள்கைளுக்காக கொடி ஏதும் கண்டதில்லை. வள்ளலார் ஒருவரே தமது மார்க்கத்திற்கு தனிக்கொடி கண்டவர். 1873-ல் தாம் உறைந்து வந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத்
திருமாளிகையில் சன்மார்க்கக் கொடியைக் கட்டி பேருரை ஒன்றையும் ஆற்றினார்.

சித்தி
ஶ்ரீமுக ஆண்டு தைத் திங்கள் 19-ஆம் நாள் 30-1-1874, வெள்ளிக்கிழமை இரவு 12 மணி.
சித்திவளாகத்தின் திருமாளிகையில் தமது அறைக்குள் நுழைந்து, கதவைத் திருக்காப்பு
இட்டுக்கொண்டு, இரண்டரை நாழிகையில்
இறைவனோடு இரண்டறக் கலந்து ஞானசித்தி
பெற்றார். வள்ளலார் சுத்த தேகம், பிரணவ தேகம்,
ஞான தேகம், என்னும் மூவகை தேகசித்தியையும்
பெற்றவர். அத்தகைய தேகசித்தி பெற்றவர் உடம்பு நிலத்தில் விழாது. இறைவனோடு இரண்டறக் கலந்து ஞானசித்தி பெற்ற அவருக்கு மறுபிறவியும் இல்லை. மரணமிலாப் பெருவாழ்வு காண அவர் காட்டிய வழி சுத்த சன்மார்க்கம் என்பதாம். அதை வள்ளலார் கூற்றாலேயே காண்போம்:

இறப்பொழிக்கும் சன்மார்க்கம்:

‘துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்கச்
சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேது செய் மரணத்துக் கெது செய்வோம் என்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ்ஜோதி கண்டு ஆடேடி பந்து
ஆடேடி..
(ஆறாம் திருமுறை பாடல் 4959)
**
உற்றமொழி உரைக்கின்றேன்
ஒருமையினால் உமக்கே
உற்றவன் அன்றிப் பகைவன்
என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும்
அழிந்திடக் காண்கின்றீர்
காரணம் எலாம் கலங்க வரும்
மரணமும் சம்மதமோ
சற்றும்இதைச் சம்மதியாது
என் மனந்தான் உமது
தன் மனம்தான் கன்மனமோ
வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம்
என்னொடும் சேர்ந்திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே!
(ஆறாம் திருமுறை பாடல் 5601)

திரு அருட்பா:
சென்னை கந்தகோட்டத்துள் வளர் முருகனையும், திருவொற்றியூர் ஈசனையும் சமயக் குரவர்களையும் சிதம்பரம் நடத்தரசையும், திருத்தங்களையும் தன்னுடைய ஞானத்தின் ஒளியை உலக மக்கள் உணரும் வண்ணம் சமரச சுத்த சன்மார்க்க நெறியமைந்த பாடல்களையும் பாடினார். எளிமையும் இனிமையும் கொண்ட அவரது அருட் பாக்களின் உருக்கம் கல்லும் கரைய வைக்கும் தன்மையது. மனிதன் உயரிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு வேண்டிய அத்துணை வழிகளையும் அவரது ‘திருஅருட்பா’ பாடல்களில் காணலாம். அவர் பாடிய 5818 பாக்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

அன்பு, தயவு இவைகளை இரு கண்களைப்போல் கருதிய வள்ளலார், ஞானத்தின் பழுத்த நிலையில் சமய நெறி மேவாது சன்மார்க்க நெறியைக் கண்ட பெருமான். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்ற வள்ளல். வாழ்க அவரது புகழ்!
**
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே!
**
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி!
**

இக்கட்டுரையைத் தயாரித்து அளித்தவர் திரு. கோ. சுப்பிரமணியன் அவர்கள் (மேப்பத்துரை). புத்தாண்டுக்கு நல்ல தொடக்கமாக அமைய வேண்டி இது வெளியிடப் பெறுகிறது.