சூளாமணி

சூளாமணி என்பது தமிழிலுள்ள காப்பியங்களில் ஒன்று. இதைச் சிறுகாப்பியம் என்று வழக்கமாகக் கூறிவந்தாலும், இது சீவக சிந்தாமணி போன்ற பெருங்காப்பியமே என்று இலக்கிய வரலாற்றாசிரியர் மு. அருணாசலம் கூறுவார். இது ஏறத்தாழ கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டிருக்கலாம். சீவக சிந்தாமணியைப் போன்ற காப்பியம் ஒன்று எழுத சமண மதத்திற்கென எழுத வேண்டும் என்ற எண்ணத்தால் இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர் இதை எழுதியிருக்கலாம். மதம் சார்ந்த கதைகள் எல்லாம் (இன்றைய திரைப்பட பக்திப் படங்கள் போல) வெறும் அற்புதச் செயல் புனைவும் இறுதியாக இறைவனை அடைதலும் என்ற பண்புகளை மட்டுமே கொண்டவை. அற்புதச் செயல்களைப் போற்றுவது எந்த மதத்திற்கும் நன்மை தருவதன்று. மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவும்.  

சீவக சிந்தாமணிக்குப் பிற்பட்ட தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் இன்றைய திரைப்படக் கதைப் பாணியைக் கொண்டவைதான். அதாவது எல்லாரையும் வெல்லக்கூடிய ஒரு தலைவன் (கதாநாயகன்). அவன் அநீதியை எதிர்த்துச் (!) செய்யக்கூடிய வீரச்செயல்கள். அவனுக்கேற்ற ஓர் அழகான கதாநாயகி. பிறகென்ன? திருமணம். அவ்வளவுதான். ஆனால் சமணக் காப்பியங்கள் இத்துடன் நிற்காமல் அந்த அரசனோ அவனைப் பெற்றவனோ துறவு கொள்வதையும் சம்பிரதாயமாகச் சொல்லுபவை. இருந்தாலும், இந்தக் கதையைச் சற்றே காண்போம்.

சுரமை என்று ஒரு கற்பனை நாடு. அதன் தலைநகர் போதனம் என்ற நகரம். அதை பயாபதி என்ற அரசன் ஆண்டு வருகிறான். அவனுக்கு மிகாபதி, சசி என இரண்டு மனைவியர். இவர்களுக்கு விசயன், திவிட்டன் என்ற குழந்தைகள் பிறக்கின்றனர். இங்கிருந்தே விசயனை பலராமனுடனும், திவிட்டனை கண்ணனுடனும் ஒப்பிடும் ஒரு மோசமான போக்கினை தொடங்கிவைத்துவிடுகிறார் ஆசிரியர். நல்ல வேளை, இவன் கண்ணனைப் போல கீதை உரைக்கத் தொடங்கிவிடவில்லை. ஆனால் கண்ணன் கோவர்தன மலையைத் தூக்கியது போலவே இவனும் ஒரு மலையைத் தூக்குகிறான், கண்ணனைப் போலவே ஆற்றில் குளிக்கும் பெண்களின் உடைகளைக் கவர்ந்து இரசிக்கிறான். சும்மா சொல்லக்கூடாது இந்தியக் காப்பியங்களை! (இதுவும் வடமொழிக் காப்பியத்தின் தழுவல்தான்). அப்புறம் இன்று நித்தியானந்தாக்கள் உருவாகாமல் வான்மீகிகளா வருவார்கள்? புராண கால பலராமனைப் போலவே இந்த விசயனும் எதுவும் செய்வதில்லை.

இது இவ்வாறிருக்க, வித்யாதர நாட்டின் ஒரு பகுதியில் சுவலன சடி என்ற அரசன் ஆண்டுவருகிறான். அவனுக்கு அருக்க கீர்த்தி என்ற மகனும் சுயம்பிரபை என்ற மகளும் உள்ளனர். சுயம்பிரபை பிறந்தபோதே அவள் ஒரு மானிடனை (நம் கதாநாயகனைத்தான்) திருமணம் செய்வாள் என்று ஜோசியன் கூறிவிட்டான். அதற்குச் சான்றாக, திவிட்டன் இன்னும் ஒரு மாதத்தில் ஒரு சிங்கத்தைக் கொல்வான் என்கிறான்.

சடி, தன் ஒற்றர்களை வைத்து திவிட்டன் சிங்கத்தைக் கொல்கிறானா எனக் கண்காணிக்கிறான். இதற்கிடையில் வித்தியாதர நாட்டு வடக்குப் பகுதியில் ஆளும் அச்சுத கண்டன் என்ற அரசன், சுவலன சடி வித்தியாதர மகளை ஒரு மானிடனுக்கு மணமுடித்துத் தருகிறானே என்ற முடிவால் கோபமுற்று, திவிட்டன் நாட்டின்மீது படைகளை ஏவுகிறான். அவற்றை எளிதாக திவிட்டன் வெல்லவே, அவனது அமைச்சன் ஒரு தூதனைச் சிங்க வடிவத்தில் சென்று மக்களைக் கொல்லுமாறு கூற, அவனை திவிட்டன் விரட்ட, அவன் பயந்துபோய் உண்மையான சிங்கம் இருந்த ஒரு குகைக்குள் புகுந்து ஓடிப்போகிறான். குகையிலிருந்து உண்மையான சிங்கம் வெளிவரவும், திவிட்டன் அதன் வாயைப் பிளந்து கொல்கிறான்.

சுவலனசடி ஜோசியன் கூறியது உண்மையே என உணர்ந்து, போதனமாபுரம் வந்து, தன் மகளைத் திவிட்டனுக்குத் திருமணம் செய்கிறான். இப்போது அச்சுவ கண்டன் தன் முழுப் படைகளோடு வந்து தாக்க, போர் நடக்கிறது. போரில் திவிட்டனுக்கு சங்கும் சக்கரமும் (திருமாலின் ஆயுதங்கள்) வந்து தாங்களாகவே பொருந்துகின்றன. கருடன் வந்து வாகனமாக அமைகிறது. கம்சனைக் கண்ணன் அழித்தது போல அச்சுவ கண்டனை திவிட்டன் அழிக்கிறான்.

காலப்போக்கில், சுயம்பிரபைக்கு ஒரு மகனும் மகளும் பிறக்கின்றனர். சுவலனசடியின் மைந்தனான அருக்க கீர்த்திக்கும் ஒரு மகனும் மகளும் பிறக்கின்றனர். உரிய காலத்தில் இவர்களுக்கும் திருமணம் நடக்கிறது.

பயாபதி மன்னனுக்கு வயது மிகுதியாக ஆகிறது. துறவு மேற்கொள்ள வேண்டிய அவன், தன் அமைச்சர்களைக் கேட்கும் கேள்விகள் சிறுபிள்ளைத் தனமாக உள்ளன. கூற்றுவன் (எமன்) எதற்காக வருகிறான்? எதை எடுக்கப் போகிறான்? அவனிடமிருந்து எப்படித் தப்பலாம்? என்றெல்லாம் கேட்கிறான். அவன் அமைச்சர்களோ, “அரசே, எமனிடமிருந்து தப்பும் வித்தையை நாங்கள் கற்கவில்லையே” என்று பதிலளிக்கிறார்கள். பிறகு அரை மனதாக பயாபதி தன் மனைவியரோடு (!) துறவு மேற்கொண்டு உரிய காலத்தில் அருகன் அடி அடைகிறான். விஜயனும் திவிட்டனும் சிறப்பாகத் தங்கள் நாட்டை ஆண்டு வருகின்றனர்.

எவ்விதத் திருப்பமும் அற்ற, நேரான கதை. திவிட்டன் பிறந்தான் – வளர்ந்தான் – பகைவரை வென்றான் – திருமணம் செய்தான் – அரசாட்சி பெற்றான், அவ்வளவுதான்.

இந்தக் காப்பியம் மகாபுராணம் என்ற வடமொழிச் சமணக் காப்பியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது என்பர். சமணக் காப்பியங்கள் சிலப்பதிகாரத்தைப் பின்பற்றிச் சுயமான படைப்பில் இறங்கியிருந்தால் நல்ல தமிழ்ப் படைப்புகளை உருவாக்கியிருக்கலாம். புலமை சிறப்பாக இருந்தும் என்ன காரணமோ, இம்மாதிரிப் புலவர்கள் வடமொழியில் இயற்றப்பட்ட மேருமந்தர புராணம், சாந்தி புராணம், நாரத சரிதை போன்ற எண்ணற்ற புராணங்களிலிருந்து தங்கள் கதைகளை எடுத்துக் கொண்டனர். சுயதூண்டலின்றி, உந்துதல் இன்றி, பார்த்துச் செய்ய வேண்டும் என்பது எவ்வளவு மோசமாக அமைந்துவிடும் என்பதற்கு இந்தச் சமணப் புராணங்களைக் கண்டாலே போதுமானது.

இதற்குப்பின் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம் என்ற நூலும் இதே கதையைச் சொல்கிறது. இது தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. சமணர்களும், இராமானுஜர் வழிவந்த ஸ்ரீவைணவர்களுமே தமிழில் மணிப்பிரவாளம் என்ற போக்கினை உருவாக்கியவர்கள். மதத்தால் மொழிக்கு நேர்ந்த கேடுகளில் இதுவும் ஒன்று.

இப்படித்தான் பத்தாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் வருகை வரை தமிழ்ப் புராணப் படைப்புகள் இருந்தன. விஜயநகரப் பேரரசு வந்த பிறகு அவர்கள் தெலுங்கிற்கு மட்டுமே ஆதரவளித்ததால் புராணங்களும் மறைந்து தமிழில் சிற்றிலக்கியங்கள் மட்டுமே தோன்ற ஆரம்பித்தன என்பது வரலாறு.


மரணப்படுக்கையில் நான் கிடந்த வேளையில்

“மரணப்படுக்கையில் நான் கிடந்த போது” (As I lay dying) என்பது அமெரிக்க நவீனத்துவ எழுத்தாளர்களில் சிறந்தவராகக் கருதப்படும் வில்லியம் ஃபாக்னர் எழுதிய நாவல் (1930). இவரது மற்றொரு புகழ்பெற்ற நாவல் The Sound and the Fury. As I lay dying நாவலைவிட அது செறிவானதாகவும் கடினமானதாகவும் கருதப்படுகிறது.

As I lay dying பாதி வேடிக்கையும் பாதி வேதனையுமாகச் செல்கின்ற விசித்திரமான நாவல். இதன் சம்பவங்கள் நினைத்துப் பார்க்கும்போது “இப்படியெல்லாம் நிகழக்கூடுமா” என வேடிக்கையாகவும் இருக்கின்றன. அவற்றின் அடியாக இருக்கின்ற பல்வேறு கவலைகள், வறுமை, நல்ல பண்புகள், மோசமான தீய மனநிலைகள் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாகவும் உள்ளன. நாவலில் வரும் கதாபாத்திரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. இவற்றிற்கிடையிலும் இறந்த மனைவியைப் புதைத்தவுடனே தன் அடுத்த மனைவியை அறிமுகப் படுத்துகின்ற குடும்பத் தலைவனின் மனநிலை பிரமாதம்!

இந்த நாவலில் 59 பகுதிகள் உள்ளன. அவை பதினைந்து கதாபாத்திரங்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. முதல் பகுதி டார்ல் பண்ட்ரனால் சொல்லப்படுகிறது. அவனது சகோதரர்கள் கேஷ், ஜுவல். நாவலின் தொடக்கத்தில் இவர்களின் தாய் அடீ பண்ட்ரன் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். சில நாட்களில் இறந்துவிடுவாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழைக் குடும்பம். 1920களின் காலம். குடும்பத்தில் கொடிய வறுமை.

அடுத்த சில பகுதிகளில் அன்சே (அவர்களின் தகப்பன்), சிறிய தம்பி வர்தமான் (சுமார் 7 வயது சிறுவன்), டூயி டெல் என்ற தங்கை (17 வயது) யாவரும் அறிமுகமாகின்றனர். கேஷ் ஒரு நல்ல தச்சன். தன் தாய்க்கான சவப்பெட்டியை அவள் அடுத்த அறையின் ஜன்னலில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே செய்து முடிக்கிறான். ஜுவலும் டார்லும் வெறும் மூன்று டாலர் ஊதியம் கிடைக்கும் ஒரு வேலைக்காக வெர்னான் என்ற நகருக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் திரும்பிவருவதற்குள் அடீ இறந்து விடுகிறாள். அவள் இறந்த இரவு பெரும் புயல், மழை.

அவளது கடைசி ஆசை ஜெஃபர்சன் என்ற தன் சொந்த ஊரில் புதைக்கப்பட வேண்டும் என்பது. 15 மைல் தொலைவு என்றாலும் இந்த ஊரிலிருந்து அதற்குச் சரியான பாதை இல்லை. இருந்தாலும் இறந்தவளின் இறுதி ஆசைக்கு மதிப்புக் கொடுத்து ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளப் படுகிறது.

குடும்பம் அடீயின் சவத்தை ஒரு மாட்டு வண்டியில் வைத்து ஜெஃபர்சனுக்குப் பிரயாணத்தைத் தொடங்குகிறது. பல சமயங்களில் உணவின்றியும், ஆங்காங்கு தானியம் அடிக்குமிடங்கள் போன்ற இடங்களில் தங்கியும் செல்கிறது.

ஏற்கெனவே கேஷின் கால் உடைந்திருக்கிறது. டெல் திருமணமாகாமலே கர்ப்பமாக இருக்கிறாள். மோசமான வானிலை. மீண்டும் கேஷின் கால் உடைந்து விடுகிறது. வழியில் வெள்ளம் பெருகிய ஆற்றைக் கடக்கும்போது வண்டிமாடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. மற்றவர்களும் அநேகமாக மூழ்கிவிடுகின்றனர். ஆற்றில் சவப்பெட்டி ஏறத்தாழ அமிழ்ந்தே போகிறது. வர்தமான் ஆற்றில் பார்க்கும் மீனும் செத்துப்போன தன் தாயும் ஒன்று என்று  நினைத்துக் கொள்கிறான். இருப்பினும் வண்டியையும், பிறரையும், சவப் பெட்டியையும் ஜுவல் ஒருவனே தன்னந்தனியனாகக் காப்பாற்றுகிறான். ஜுவல் ஒரு குதிரை வைத்திருக்கிறான். அதன்மீது அவனுக்கு அளவற்ற அன்பு.

அடீயின் பழைய கதை அவளாலேயே சொல்லப்படுகிறது. விட்ஃபீல்டு என்ற மதகுருவின் தொடர்பில் பிறந்த ஜுவல்மீது மட்டும் அவளுக்குப் பாசம். அவன்தான் தன்னைக் காப்பவன் என்கிறாள். ஆனால் தனது பிற நேரிய பிள்ளைகள்மீது பாசம் கிடையாது.

கேஷின் காலை சரிப்படுத்த அதன்மீது சிமெண்டை ஊற்றுகிறான் அன்சே. ஜுவலின் குதிரையை அவனுக்குத் தெரியாமல் விற்று வண்டிமாடுகள் வாங்குகிறான். பல ஊர்கள் வழியாக இந்த ஊர்வலம் செல்லவேண்டி யிருக்கிறது. சவப்பெட்டியிலிருந்து வரும் துர்நாற்றம் தாங்க முடியாததாக இருக்கிறது. மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள். தங்க இடமும் தருவதில்லை.

கடைசி இரவில் ஜில்லஸ்பீ என்பவனின் பண்ணையில் தங்குகிறார்கள். டார்ல் நாற்றமடிக்கும் பிணத்தை எரித்துவிடலாமென்று அங்கிருந்த வைக்கோல் முதலியவற்றைக் கொளுத்திவிடுகிறான். ஆயினும் ஜுவல் எப்படியோ சவப்பெட்டியைத் தீயிலிருந்து காப்பாற்றிவிடுகிறான்.

ஜெஃபர்சன் ஊருக்கு குடும்பம் வந்து சேர்கிறது. டூயி டெல் தன் கருவைக் கலைக்க மாத்திரை வாங்குவதற்காக முன்பின்தெரியாத ஒருவனுடன் உறவு கொள்கிறாள். ஆனால் அது கருக்கலைப்பு மாத்திரை அல்ல, வெறும் முகப்பவுடர் என்று பின்னால் தெரிகிறது. அவளது பணத்தை அவள் அப்பன் அன்சே தனக்குப் பல்செட் வாங்குவதற்காக எடுத்துக் கொண்டு போய்விடுகிறான். ஊரின் டாக்டர் கேஷின் உடைந்த காலின்மீது சிமெண்ட் ஊற்றியதால் அது அழுகிப்போய்விட்டது என்கிறார். ஜிலெஸ்பீ பண்ணையை டார்ல் கொளுத்தியதற்காக தண்டனையிலிருந்து தப்ப அவன் மனநிலை பிறழ்ந்தவன் என்று பொய் சொல்லவேண்டிவருகிறது. அவனை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்கின்றனர். அன்சே அடீயின் உடலைப் புதைக்கிறான். குழிதோண்டுவதற்கு கடப்பாறை, மண்வெட்டி முதலியவற்றை ஒரு பெண் கடனாக அளிக்கிறாள். அவளோடு அன்சே காதலில் ஈடுபடுகிறான். தன் பிள்ளைகளுக்கு அவளைத் தன் புது மனைவி என்று அறிமுகம் செய்கிறான்.


விடைபெறுதல் (Farewell to arms)

எர்னஸ்ட் ஹெமிங்வே என்னும் புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியரின் கதை A Farewell to Arms. இவரது மற்றொரு கதையான கடலும் கிழவனும் என்பதைப் படித்திருப்பீர்கள்.

Farewell to Arms 1929இல் வெளியானது. இது சுயசரித்திரக் கதை என்பவர்கள் உண்டு. முதலாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த ஒரு போர்வீரன் கதை இது. இன்று முதலாம் உலகப் போரிலிருந்து (1914-18) நூறாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், மூன்றாம் உலகப் போர் போன்ற ஒன்று உக்ரைனில் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தக் கதை பற்றிச் சிந்திப்பது பயனுடையது.

arms என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. கைகள், ஆயுதங்கள். இந்தக் கதை சிலேடையாகவே இந்தச் சொல்லைக் கையாளுகிறது. தழுவிய கரங்களிலிருந்து விடுதலை என்றோ, போரிலிருந்து விடுதலை என்றோ இருவிதமாகவும் இதை மொழிபெயர்க்கலாம். கதையின் இறுதியில் நாயகன் போரின் ஆயுதங்கள், தன்னைத் தழுவிய கைகள் – இரண்டில் இருந்துமே விடைபெறுகிறான். முதல் உலகப் பெரும்போரின் கொடுமைகளைச் சொல்லும் நாவல்களில் இது முதலாவது. இரண்டாம் உலகப் போர் பற்றிய மற்றொரு நாவலான கேட்ச் 22 என்பதைப் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

1915 கோடைகாலம். முதலாம் உலகப் போர் நடக்கிறது. பிரடெரிக் ஹென்றி, ரோமில் தங்கி கட்டடக்கலை பயிலும் அமெரிக்க மாணவன், இத்தாலியப் படையில் அவனாகத்தான் சேர்கிறான். போரின் வடக்கு முனையில் கோரிஜியா என்ற இடத்திலுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் குழு ஒன்றுக்குத் தலைவனாகிறான். போர் இத்தாலியர்களுக்குச் சாதகமாக இல்லை என்றாலும் அடுத்த ஆண்டில் அவர்கள் ஆஸ்திரிய-ஹங்கேரிப் படையினரை வெற்றி கொள்கிறார்கள். சில நாட்கள் கடும்போருக்குப் பிறகு லீவில் சென்றிருந்து திரும்பும் பிரடெரிக், கேதரின் பார்க்லி என்ற இங்கிலாந்து நாட்டு நர்ஸைக் காண்கிறான். அவள் ஏற்கெனவே நிகழ்ந்த தன் காதல் முறிந்த நிலையில் கவலையோடு இருப்பதாகத் தோன்றுகிறது.

காயம் பட்ட அவனை மிலன் நகர மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறார்கள். அங்கு கேதரீனும் வந்து சேர்கிறாள். அப்போதுதான் அவளைக் காதலிப்பதாக உணர்ந்து அவளிடம் தெரிவிக்கிறான். அவளும் அதை ஏற்கிறாள்.

கேதரீன் அவன் மனைவியாகவே ஆகிவிடுகிறாள். அவனை நன்கு கவனித்துக் காப்பாற்றுகிறாள். கொஞ்சகாலத்திற்குப் பிறகு அவள் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவிக்கிறாள். உடல் குணமான பிறகு இருவரும் ஆறுமாதம் விடுப்பில் செல்லலாம் என்று திட்டமிடுகின்றனர். என்றாலும் அவன் மிகுதியாகக் குடிக்கிறான். கடுமையான தொனியில் நர்ஸுகளிடம் பேசுகிறான். அவன் போக்கு பிடிக்காத மருத்துவமனைத் தலைவி அவனை உடனே விடுவித்துவிடுகிறாள். கோரிஜியாவுக்கே சென்று போர்முனையில் சேர ஆணை வருகிறது. காதலியோடு கொஞ்ச நேரம் இனிமையாகக் கழித்துவிட்டு இருவரும் இனி சந்திப்போமா என்ற ஏக்கத்தில் இருக்கும்போதே ஹென்றி இரயில் ஏறுகிறான்.

இப்போது 1917 கோடை. நிறைய ஆட்கள் இறந்திருப்பதால் படையின் மனநிலை சரியில்லை. நான்கு ஆம்புலன்சுகளை வடக்கில் கேபரெட்டோ நகருக்குக் கொண்டுசெல்லுமாறு இவனுக்கு ஆணை தரப்படுகிறது. செல்லும் வழியில் தாக்கப்படுவதால் இவர்கள் குறுக்குவழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓர் ஆற்றைக் கடக்கும்போது சேற்றில் சிக்கிக் கொள்கிறார்கள். இடையில் சேர்ந்துகொண்ட சார்ஜெண்ட் ஒருவன் உதவி செய்ய மறுப்பதால் அவன் ஆட்களுக்கும் இவன் ஆட்களுக்கும் சண்டை நடக்கிறது. இவன் ஒருவனைச் சுட்டுக் கொன்றுவிடுகிறான். இதுதான் அவன் செய்த முதல் கொலை. ஒன்று தப்பியோட வேண்டும் அல்லது கொலைக்காகச் சரணடைய வேண்டும் என்ற நிலையில் பயந்தோடும் பொது மக்களோடு இவனும் சேர்ந்து ஓடுகிறான், பிறகு நதியில் குதித்துவிடுகிறான் நீரிலிருந்து எழும்போது தான் சிப்பாய் என்ற அடையாளத்தை விட்டு சாதாரண மனிதனாக (போர்க்களத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய் ஆக) எழுகிறான். (Farewell to military arms).

எப்படியோ மிலனுக்குச் சென்று சேர்கிறான். கேதரினைத் தேடிச் செல்கிறான். அவள் ஸ்ட்ரெஸா என்ற இடத்துக்குப் போய்விட்டதாகத் தெரிகிறது. அங்குச் சென்று அவளை அடைகிறான். சில நாட்கள் காதலர்கள் மிக மகிழ்ச்சியாக அங்கு வாழ்கிறார்கள்.

போரிலிருந்து தப்பி வந்தவர்களைக் கைது செய்து இராணுவக் கோர்ட்டில் நிறுத்துவார்கள். அதனால் இவன் கைதுசெய்யப்படும் தருணம் ஏற்படுகிறது. இராணுவத்துக்கு பயந்து ஒரு சிறு படகில் இருவரும் மிக அருகிலுள்ள ஸ்விஸ் நாட்டுக்குத் தப்பிச் செல்கிறார்கள். குளிர்கால விளையாட்டு களுக்காக ஸ்விட்சர்லாந்துக்கு வந்த தம்பதியினர் என்று சொல்லி அங்கு தங்குகிறார்கள்.

ஸ்விஸ் நாடு எந்தப் போரிலும் ஒருபோதும் ஈடுபட்ட நாடு அல்ல. நிரந்தர நடுநிலை நாடு. அதனால் பயமற்று அவர்கள் அங்கே வாழ முடிகிறது.

ஆல்ப்ஸ் மலைகளின்மீது காதலர் இருவரும் மிக மகிழ்ச்சியோடு நடந்தும் ஓடியும் தழுவியும் தங்கள் தனிமையைக் கொண்டாடுகிறார்கள். மலைமுகட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். பிரசவத்துக்கு ஒரு மாதம் முன்புவரை வாழ்க்கை இனிமையோ இனிமை! கேதரினுக்குப் பிரசவகாலம் நெருங்குகிறது. மருத்துவமனைக்கு அருகில் இருப்பது நல்லது என்று பக்கத்திலுள்ள நகரத்துக்குச் சென்று ஒரு தங்கும் விடுதியில் தங்குகிறார்கள்.

பிரசவ வலி ஏற்பட்டபிறகு விஷயங்கள் தாறுமாறாகின்றன. குழந்தை மாலைசுற்றிப் பிறக்கிறது (நஞ்சுக்கொடி உடல் முழுவதும் சுற்றி இறந்து பிறத்தல்). கேதரினுக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டதால் அவளும் இறந்துவிடுகிறாள். ஃபிரடெரிக் கையற்ற நிலையில் மருத்துவமனையை விட்டு நீங்குகிறான் (Farewell to the hugging arms of the wife).

காதலன் காதலியைச் சந்திக்கிறான்–அவளைக் கை நழுவ விடுகிறான்–ஒன்று சேர்கிறான்–மீண்டும் அவளை இழக்கிறான் என்ற எளிமையான கதைத்திட்டம் கொண்ட கதை இது. ஆனால் இதனை உணர்ச்சிப் பெருக்குடைய ஒரு பெருங்காவியமாக ஆக்கியிருக்கிறார் ஹெமிங்வே. அவரது மற்ற எல்லாக் கதைகளையும் விட இதுவே சிறந்ததாகப் போற்றப் படுகிறது.


வெள்ளாட்டின் பலி

நம் நாட்டில் கிராமத் திருவிழாக்களில் வெள்ளாட்டை பலி கொடுப்பது ஒரு முக்கியச் சடங்கு. திருச்சியில் உறையூரில் நடக்கும் ஒரு அம்மன் திருவிழாவில் (இதைக் குட்டி-குடி திருவிழா என்பார்கள்) ஓர் ஆட்டின் தலையை வெட்டி அப்படியே பூசாரி இரத்தத்தைக் குடித்துவிடுவான். இதுபோல இலத்தீன் அமெரிக்க நாடாகிய பெரூவிலும் ஒரு வெள்ளாடு பலி தரப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு வெள்ளாடு என்பது குறியீடாக அந்நாட்டுச் சர்வாதிகாரி ஒருவனைக் குறிக்கிறது.

வெள்ளாட்டின் விருந்து (The Feast of the Goat) என்பது பெரூ நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் மராயோ வார்காஸ் லோஸா என்பவரால் எழுதப்பட்டது. இது ஓர் அரசியல் வரலாற்று யதார்த்த நாவல். இப்படிப்பட்ட நாவல் தமிழில் இதுவரை கிடையாது. இது ஸ்பானிய மொழியில்  2000ஆம் ஆண்டில் வெளியானது. ரஃபேல் ட்ருஜில்லோ என்ற கொடுங்கோலனின் நீண்ட ஆட்சியின் (1930-61) இறுதிப்பகுதி பற்றியது. லத்தீன் அமெரிக்க நாவல்களின் ஓர் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது இந்த நாவல். பெரு நாவலாசிரியர்களில்

அகஸ்டோ ரோவா பாஸ்டோஸின் I the Supreme,

அலெஜோ கார்பெண்டியரின் Reasons of State.

காப்ரியேல் கார்சியா மார்க்விஸின் Autumn of the Patriarch

ஆகிய அரசியல் நாவல்களின் வரிசையில் வருகிறது வார்காஸ் லோஸாவின் இந்த நாவல்.

இந்த நாவலின் கதை மூன்று பகுதிகளாக உள்ளது. ஒன்று யுரேனியா சாப்ரால் என்ற டொமினிகன் பெண் சம்பந்தப்பட்டது. மற்றொன்று பெரு நாட்டின் சர்வாதிகாரி ட்ரூஜில்லோவின் கொலை தொடர்பானது. இன்னொன்று ட்ரூஜில்லோவின் இறுதி நாளில் நிகழ்ந்த அவனது சொந்த நிகழ்வுகள். 1961 முதல் 1996 வரை நடந்த கதையை இந்த மூன்று பகுதிகளும் மாறி மாறிச் சொல்கின்றன.

கதையின் தொடக்கத்தில் யுரேனியா தன் சொந்த நகரமான சாண்டோ டொமினிகோவுக்கு 1996இல் திரும்புகிறாள். 1961இல் 35 ஆண்டுகளுக்கு முன் தன் 14 வயதில் அதை விட்டுச் சென்றவள் அவள். பிறகு ஹார்வர்டு சட்டப்புலத்தில் பயின்று இப்போது அவள் நியூ யார்க்கில் உலக வங்கிக்கான ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராக இருக்கிறாள். சாகக் கிடக்கும் தன் தந்தை அகஸ்டீன் சாப்ராலைக் காண வருகிறாள். அவள் தன் குடும்பத்தைப் பிரிந்து சென்றதிலிருந்து இதுவரை எந்தவிதத் தொடர்பையும் அவர்களுடன் வைத்துக் கொண்டதில்லை. ஒருவேளை தன் தந்தையின் மரணத்தில் தன் வெற்றியைக் காண வந்திருக்கிறாள் என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்.

இரண்டாவது பகுதி 1961 மே 30இல் பெருவின் சர்வாதிகாரி ட்ருஜில்லோ வின் கொலை நடந்த நிகழ்வுக்குத் திரும்புகிறது. (இவன்தான் “ஆடு” எனப்படுகிறான்.) முதலில் அமெரிக்காவின் அன்புக்குப் பாத்திரமாக அவன் இருக்கிறான். ஓர் அமெரிக்கத் தலைவன் கூறியது போல, ‘he was a son of a bitch, but he was our son of a bitch.’ இப்போது அவன் அமெரிக்க ஆதரவை இழந்துவிட்டான். அவனால் பாதிக்கப்பட்ட சிலர் பிற அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து அவனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மூன்றாவது பகுதி மே 30 அன்று ட்ருஜில்லோவின் சிந்தனைகள், செயல்கள் பற்றியதாக அமைகிறது. அவன் சிந்தனையில் 1937இல் பல ஆயிரக்கணக்கான ஹைட்டியர்களைக் கொன்றது போன்றவை வந்து செல்கின்றன. கென்னடி, ஃபிடல் கேஸ்ட்ரோ ஆகியவர்களின் சமகாலத்தொடர்பும் கொண்டிருந்தான். அவன் உடல்நலம் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவன் அதை ஏற்காமல் வழக்கம்போல் மாலை நேரத்தில் பெண்களைச் சந்திக்க விழைகிறான். அப்படிப்பட்ட சந்திப்பு ஒன்றிற்குச் செல்லும்போதுதான் அவன் கொலை செய்யப் படுகிறான். கொலைகாரர்கள் முதலில் போட்டிருந்த திட்டப்படி அவர்களின் காரியங்கள் நடக்கவில்லை. அவன் வரக் காத்திருந்த நேரத்தில் அவர்களில் ஒவ்வொருவனும் அந்தச் சர்வாதிகாரியால் தாங்கள். அடைந்த பாதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். என்றாலும் எதிர்பாராத விதமாக தனியாக அவன் சிக்கியதால் உடனே கொன்றுவிடுகிறார்கள்.

இந்த மூன்று பகுதிகளும் கதையில் கடிகார நிகழ்வுகள் போல மாறி மாறி வருகின்றன. கதையின் பெரும்பகுதி ட்ருஜில்லோ தன் மக்களை எவ்வாறு வதைத்தான் என்பதைச் சொல்கிறது.

சதிகாரர்களில் மிக முக்கியமானவன் ப்யூபோ ரோமன் என்பவன். அந்நாட்டின் ஆயுதம் தாங்கிய படைகளின் தலைவன். மற்றொருவன் பலாகேர் என்ற, அதுவரை பொம்மை ஜனாதிபதியாக இருந்த ஆள். ஆனால் கொலை நடந்த பிறகு சதிகாரர்கள் இருவரையும் தேடினாலும், அவர்களைக் காணவில்லை. கதை இந்த இருவரின் செயல்களையும் உணர்வுகளையும் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. ட்ருஜில்லோவின் மகன் பாரிஸிலிருந்து வந்ததும், பலாகேர் அவனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு கலகக்காரர்கள் அத்தனை பேரையும் அழித்து விடுகிறான். பிறகு கத்தோலிக்கத் திருச்சபையுடன் சமரசம் செய்து கொண்டு அவனே ஜனாதிபதியும் ஆகிவிடுகிறான்.

யுரேனியாவின் தந்தை முன்பு, 1960கள் காலத்தில் அரசாங்கத்தில் ட்ருஜில்லோவின் நெருக்கமான ஆளாக இருந்தவன். அவனுக்கு தலைவனின் ஆதரவு குறைந்ததால் அதனைச் சரிக்கட்ட ஒரு நண்பனின் ஆலோசனைப்படி தன் 14 வயது மகளை ட்ருஜில்லோவுக்கு “பலியாடாக” அனுப்புகிறான். ட்ருஜில்லோவின் பாலியல் வன்முறைக்கு ஆளான அவள் தான் படித்த கான்வென்ட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுகிறாள். பிறகு அங்கிருந்த சகோதரியர் அவளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இப்போது மரணப்படுக்கையில் அவள் தந்தை இருக்கிறான். அவனைக் காணவந்தவள் இயக்கமிழந்த தன் தந்தையிடம் தானறிந்த வகையில் ட்ருஜில்லோவின் அரசாங்கத்தின் பயங்கரங்களைச் சொல்கிறாள். அவற்றில் எவ்வளவு சாப்ராலுக்குத் தெரியும், எந்த அளவுக்கு அவற்றில் அவனுக்குப் பங்கு இருக்கிறது என்றெல்லாம் கேட்கிறாள். ஆனால் அவன் புரிந்துகொண்டானா என்பது கூடத் தெரியவில்லை. அவள் குடும்ப உறுப்பினர்கள் அவள் ஏன் தொடர்பை அறுத்துக் கொண்டாள் என்று வசைபாடுகிறார்கள். ட்ருஜில்லோவின் கொலைக்குப் பிறகு யுரேனியா தன் குடும்பத்து உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறி வெளியேறுகிறாள்.