நிலவுக்கல் (மூன்-ஸ்டோன்)

இவ்வாரம் ஒரு மாறுதலுக்காக, ஒரு மர்மக் கதையைக் காணலாம். நிலவுக்கல் (மூன்-ஸ்டோன்) என்ற (கோஹினூர் போன்ற) கற்பனை “மிளிர்கல்லை”ப் பற்றியது இக்கதை. இந்தப் பெரிய மஞ்சள் நிற ஒளி வீசும் கல்லை நம் நாட்டில் “சந்திரகாந்தக்கல்” என்று அழைப்பது வழக்கம். அதனால் நாமும் அப்படியே குறிப்பிடுவோம்.

இக்கதைப்படி இது ஸ்ரீரங்கப்பட்டணக் கோயிலின் ஒரு கடவுள் சிலை மீது பதிக்கப்பட்டிருந்ததாம். திப்புசுல்தான் காலத்தில் மைசூர்ப் போர் நடந்தபோது ஜான் ஹெர்ன்கேசில் என்ற படைத்தலைவன் சந்திரகாந்தத்திற்குக் காவலான மூன்று பிராமணர்களைக் கொன்று, அதைத் திருடிக்கொண்டு பிரிட்டனுக்கு வந்துவிட்டான். அந்தக் கல்மீது கடவுளின் சாபம் உண்டு என்றும், அதை எடுத்தவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்றும் கதை.

குடும்பத்தில் எல்லாரும் ஜானை அவன் பண்பற்ற நடத்தைக்காக வெறுத்தனர். தன் உறவினளான வெரீந்தர் சீமாட்டி என்பவள் மகளான ரேச்சலுக்குப் பதினெட்டு வயதாகும்போது அக்கல்லைப் பரிசளிக்க வேண்டுமென்று கூறிவிட்டு இறந்திருந்தான் ஜான். அதை அளிக்க வேண்டிய ஆள் ஃப்ராங்க்லின் பிளேக். ரேச்சலின் மனத்துக்குப் பிடித்த நண்பன். சந்திரகாந்தத்தினால் தனக்கு ஆபத்து ஏற்பட இருப்பதைத் தெரிந்தே தனது வெறுப்பினால் ரேச்சலுக்கு அக் கல்லை ஜான் பரிசளித்தான் என்று ஃப்ராங்க்லின் நினைக்கிறான். தன்னைச் சில இந்தியர்கள் பின்தொடர்வதனால் அவன் சந்தேகம் உறுதிப்படுகிறது.

ரேச்சலின் பிறந்தநாள் இரவன்று காட்ஃப்ரே ஏபில்ஒயிட் என்ற அவள் உறவினன் வருகிறான். அவன் ஒரு புகழ்பெற்ற கொடையாளி. அவளைத் திருமணம் செய்ய நினைக்கிறான். ஆனால் ஃப்ராங்க்லின் மீது காதல் கொண்டிருந்த ரேச்சல் அவனை மறுத்துவிடுகிறாள். ஏற்பாட்டின் படியே, ஃப்ராங்க்லின் அவளுக்கு மாணிக்கத்தைப் பரிசளிக்கிறான். அவள் அதை நிகழ்ச்சி முழுவதும் அணிந்திருக் கிறாள். பிறகு தன் படுக்கையிடத்தில் வைத்துக் கொள்கிறாள். ஆனால் காலையில் அக்கல்லைக் காணவில்லை.

மறுநாள் ரேச்சல் உள்ளூர்க்காவலர்களின் புலனாய்வுக்கு ஒத்துழைக்காததோடு, ஃப்ராங்க்லினையும் கடுமையாக நடத்துகிறாள். ஃப்ராங்க்லின் லண்டன் போலீசின் திறமை மிக்க சார்ஜண்ட் கஃப்-ஐ அழைக்கிறான். கஃப் ரோசன்னா என்ற பணிமகளைச் சந்தேகிக்கிறான். திருட்டு நடந்து பல நாட்கள் ஆன பிறகு, ரோசன்னா ஒரு பாக்கெட்டை மறைத்து வைத்தது பற்றி அவன் ஆராய்கின்ற போது அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். இதனால் ரேச்சல்மீதே சந்தேகம் திரும்புகிறது. கஃப் பணியிலிருந்து விலக்கப்படுகிறான். வெரீந்தர் சீமாட்டி ஒரு மாறுதலுக்காக ரேச்சலுடன் லண்டன் சென்று தங்குகிறாள்.

அடுத்து, ரேச்சல், காட்ஃப்ரேயுடன் திருமணத்திற்கு ஒப்புக் கொள்வது பற்றியும் பிறகு ஒப்பந்ததை முறிப்பது பற்றியும் வேறொரு நபரால் கதை சொல்லப்படுகிறது. வெரீந்தர் சீமாட்டி இறக்கிறாள். ரேச்சல் அனைத்துச் சொத்துக்கும் வாரிசாகிறாள். காட்ஃப்ரே பணத்திற்காகவே ரேச்சலை மணப்பதாகத் தெரிந்ததால் ஒப்பந்தத்தை முறித்து விட்டாள் என்று குடும்ப வழக்கறிஞரான ப்ரஃப் சொல்கிறார். லண்டனில் தொடர்ந்து இந்தியர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார். அவர்கள் செப்டிமஸ் லூக்கர் என்ற லேவாதேவிக்காரனிடம் சந்திரகாந்தம் இருப்பதாகக் கருதித் தொடர்கிறார்கள்.

அடுத்தபடி கதைசொல்லும் ஃப்ராங்க்லின் பிளேக், ரோசன்னா ஸ்பியர்மன் தனக்கு விட்டுச் சென்ற கடிதத்தைப் பற்றிச் சொல்கிறான். அவள் அவனைக் காதலித்தாள். ஆகவே ஃப்ராங்க்லின்தான் சந்திரகாந்தத்தை எடுத்தான் என்ற செய்தியைச் சொல்லாமல் மறைத்துவிட்டாள். ஆனால் அவளை அவன் புறக்கணிப்பது தெரிந்ததும் தற்கொலை செய்துகொண்டாள். தான் அக் கல்லை எடுத்தததாகவே நினைவில்லாததால் ஃப்ராங்க்லின் ஆச்சரிய மடைகிறான். ஆனால் ரேச்சல் அவன்தான் எடுத்தான் என்பதை உறுதிப்படுத்துகிறாள்.

தன் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஃப்ராங்க்லின் தொடர்ந்து புலனாய்வில் ஈடுபடுகிறான். லேடி வெரீந்தரின் மருத்துவர் கேண்டி. அவருக்கு உதவியாளான எஸ்ரா ஜென்னிங்ஸ் ஒரு விளக்கம் தருகிறார். அதாவது கேண்டி, தன் மருத்துவச் சந்தேகம் ஒன்றை நிவர்த்தி செய்வதற்காக, ஃப்ராங்க்லினுக்கு அவனுக்குத் தெரியாமல் ரேச்சலின் பிறந்தநாள் இரவன்று அபின் (போதை மருந்தை) அளித்திருக்கிறார். மாணிக்கத்தின் பாதுகாப்பு பற்றிய பயத்தினால் ஃப்ராங்க்லின் மருந்தின் போதையில் அதை எடுத்துவந்துவிட்டான். இது மறுபடியும் அதேபோன்ற நிகழ்த்தலால் உண்மை என நிரூபிக்கப்படுகிறது. ஆகவே ஃப்ராங்க்லின் மருந்தின் தாக்கத்தால் அக்கல்லை எடுத்ததால் அவன் குற்றமற்றவன் என நிரூபணமாகிறது, ரேச்சலும் ஃப்ராங்க்லினும் சமாதானம் ஆகி அவர்களுக்குள் திருமண உறுதிப்பாடு நிகழ்கிறது.

லண்டனில் வழக்கறிஞர் ப்ரஃப், அந்தக் கல் செப்டிமஸ் லூக்கர் என்பவன் வழியாக, கருநிற மாலுமி ஒருவனுக்குச் சென்று விட்டதாகக் கண்டுபிடிக்கிறார். ஃப்ராங்க்லினும் சார்ஜண்ட் கஃப்பும் அவனைத் தேடுகிறார்கள். கண்டுபிடிக்கும்போது அவன் கொல்லப் பட்டிருக்கிறான். அவன் கருப்பாகத் தன்னை உருமாற்றிக் கொண்டிருந்த காட்ஃப்ரே ஏபில்ஒயிட் என்பது தெரிகிறது. காட்ஃப்ரே இரட்டை வாழ்க்கை வாழ்ந்ததாக கஃப் சொல்கிறார்.

ரேச்சலின் அறையிலிருந்து ஃப்ராங்க்லின் சந்திரகாந்தத்தை எடுத்து அபின் மயக்கத்தால் காட்ஃப்ரேயிடம் கொடுத்துத் தன் தந்தையின் வங்கியில் பத்திரமாக வைக்கும்படி கூறிச் சென்றுவிட்டான். காட்ஃப்ரே அதை அடமானம் வைத்துக் கடன் பெற்றிருந்தான். பிறகு இப்போது கடனை அடைத்துவிட்டு, அதைத் திரும்ப எடுத்து, அதை மேலும் அழகுற வெட்டி மிளிரச் செய்வதற்காக ஐரோப்பாவுக்குக் கொண்டுசெல்ல இருந்தான். ஆனால் இறுதியாக இந்தியர்கள் அவனைக் கொன்றுவிட்டுத் தங்கள் சிலைமீது பதிப்பதற்காக அக்கல்லை எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று கதை முடிகிறது.

இக்கதையை எழுதியவர் வில்கி காலின்ஸ் என்பவர். சார்லஸ் டிக்கன்ஸின் நண்பர். பிற்காலத் துப்பறியும் கதைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த துப்பறியும் நாவல் இது. 1868இல் எழுதப்பட்டாலும், இன்று எழுதப்பட்டதொரு புதிய மர்மக்கதை போன்றே புத்தம் புதிதாக நம்மை உணரச் செய்கிறது இந்த நாவல். துப்பறியும் நாவல் என்றாலும் பாத்திரப் படைப்புகள் சிறந்து விளங்குவது இதன் மற்றொரு சிறப்பு. இந்த ஆசிரியரின் மற்றொரு புகழ்பெற்ற நாவல் ‘வுமன் இன் ஒயிட்’ ஆகும். அதுவும் ஒரு மர்மக்கதையே என்றாலும் கிளர்ச்சிமிகு (சென்சேஷனல்) நாவல் என்பார்கள்.


விலங்குப் பண்ணை

“கனவு காணுங்கள்” என்று சொல்லிக் கொண்டே இருந்தார் நமது மதிப்பிற்குரிய அப்துல் கலாம். இலட்சியவாதிகள் எல்லாம் கண்டிப்பாகக் கனவு காண்கிறார்கள். அந்தக் கனவுகள் ஒரு தனிமனிதனின் முன்னேற்றத்தை மட்டும் குறித்தவை ஆயின் பிரச்சினைகள் குறைவுதான். ஆனால் சமூகத்தின் ஒரு பகுதியை பாதிக்கும் கனவுகளும் உண்டு. ஒட்டுமொத்தச் சமூகத்தையே, ஏன் உலகத்தையே பாதிக்கும் கனவுகளும் உண்டு. அவை நல்ல பயனையோ தீய பயனையோ அல்லது இரண்டையும் சேர்த்தோ அளிக்க வல்லவையாக இருக்கின்றன. அவற்றை மதிப்பிடுபவர்களும்  தங்கள் கொள்கைகளை மனத்தில் வைத்தே மதிப்பிடுகிறார்கள். உதாரணமாக, லெனின் கண்ட கனவுதான் ரஷ்யாவில் சமதர்மச் சமுதாயத்தை மலர வைத்தது.  அமெரிக்கா, பிரிட்டன் போன்ற முதலாளித்துவச் சமூகங்களைச் சேர்ந்த ஒருவரால் அதை எதிர்மறையாகத்தான் நோக்கமுடியும். அப்படித்தான் நோக்குகிறார் ஜார்ஜ் ஆர்வெல் (1903-1950) என்னும் பிரிட்டிஷ் ஆசிரியர். அதற்கு ஓர் உருவகக் கதை வடிக்கிறார். அதுதான் விலங்குப்பண்ணை.

1984 என்னும் புகழ்பெற்ற கதையையும் அவர் எழுதியிருக்கிறார். அதில் ஒரு நாடு ஒரு “முத்தண்ணா”வால் (யாவருக்கும் பெரிய சர்வாதிகாரியால்-பிக் பிரதர்பிக் பாஸ்) ஆளப்படுகிறது. அதில் எல்லா மக்களுமே ஓர் உளவுச் செயலியால் (பெகாசஸ் நினைவுக்கு வருகிறதா?) கண்காணிக்கப் படுகிறார்கள். இரண்டு கதைகளும் முதலாளித்துவச் சார்பின என்றாலும் அவற்றில் பொதுவாக மனித இனம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. இன்றும் உலகில் அமெரிக்கா, பிரேசில், கொரியா, சீனா, (இந்தியா, இலங்கையும் கூட!) போன்ற பல நாடுகள் முத்தண்ணாக்களால்தான் ஆளப்படுகின்றன. இந்த இரு நாவல்களுமே தமிழில் பிரபல எழுத்தாளர் க. நா. சுப்பிரமணியம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

“விலங்குப் பண்ணை”யும் ஒரு கனவில்தான் தொடங்குகிறது. விலங்குகளின் வாழ்க்கையையே மாற்றி அமைத்த கனவு அது. மனித எஜமானர்களின் கொடுமையின்றித் தாங்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்னும் விலங்குகளின் கனவு.

“மேனர் பண்ணை” யின் உரிமையாளன் ஒரு குடிகாரன். பெயர் ஜோன்ஸ். அதை மோசமாக நிர்வகிக்கிறான். பண்ணையிலிருந்த விலங்குகளுக்குப் பசியாற உணவுகூடக் கிடைக்காத நிலை. ஒருநாள் ஓல்டு மேஜர் எனப்படும் ஒரு முதிய பெரும்பன்றி எல்லா விலங்குகளையும் ஒரு கூட்டமாகக் கூட்டுகிறது. நோக்கம், அது கண்ட ஒரு கனவைச் சொல்லி, புரட்சிக்கான விதையை விதைப்பதுதான். அது பாடும் “இங்கிலாந்தின் விலங்குகளே” என்ற பாட்டு பெரிய அதிர்வை எழுப்புகிறது.

ஓல்டு மேஜர் இறந்தபின், ஸ்னோபால், நெப்போலியன் என்ற இரு பன்றிகள் புரட்சிக்குத் தலைவர்கள் ஆகின்றன. பண்ணையின் பெயரை “விலங்குப் பண்ணை” என மாற்றுகின்றன. விலங்கியம் என்னும் கோட்பாட்டைத் தோற்றுவிக்கின்றன. அதில் ஏழு கட்டளைகள் உள்ளன.

இரண்டு கால்களில் செல்பவை யாவும் நமது எதிரிகள்;

நான்கு கால்களில் நடப்பவையும், பறப்பவையும் நமது நண்பர்கள்;

எந்த விலங்கும் உடை அணியக்கூடாது;

எந்த விலங்கும் படுக்கையைப் பயன்படுத்தலாகாது;

எந்த விலங்கும் மது அருந்தலாகாது;

எந்த விலங்கும் மற்றொன்றைக் கொல்லலாகாது;

எல்லா விலங்குகளும் சமம்

என்பன அக்கட்டளைகள். இக் கருத்தியலினால் தூண்டப்பட்ட விலங்குகள் ஒரு புரட்சியை நிகழ்த்தி, பண்ணையிலிருந்து ஜோன்ஸையும் பிற மனிதர்களையும் துரத்தி விடுகின்றன. பிறகு பகிர்ந்து உண்ணுகின்றன, யாவற்றுக்கும் மிக அதிக உணவு கிடைக்கிறது.

ஸ்னோபால் தலைவனாகிறது. விலங்குகளைப் படிப்பித்து, ஒரு காற்றாலை அமைத்து, புதிய கொள்கைகளை உருவாக்கி, பண்ணையின் முன்னேற்றத்துக்கு உழைக்கிறது. பண்ணையைத் திரும்பக் கைப்பற்ற வரும் ஜோன்ஸையும் ஒரு போரில் விரட்டியடிக்கிறது. ஆனால் ஆதிக்க வெறி பிடித்த நெப்போலியன் ஸ்னோபாலின் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கிறது. அதைப் பண்ணையை விட்டே வேட்டை நாய்களைக் கொண்டு துரத்திவிடுகிறது.

நெப்போலியன் ஆட்சியைக் கைப்பற்றியதும், விலங்குகளின் நிலை மோசமாக மாறுகிறது. ஓயாமல் உழைக்கின்றன. போதிய உணவு அவற்றுக்குக் கிடைக்கவில்லை. நெப்போலியனை எதிர்க்கும் விலங்குகள் தண்டிக்கப்படுகின்றன. அவற்றிடம் ஒப்புதல்கள் எழுதி வாங்கப்படுகின்றன.

காற்றாலை அமைப்பதில் பாக்ஸர் என்ற குதிரை மிகவும் உழைக்கிறது. ஆனால் ஒரு புயலில் அந்த ஆலை வீழ்ந்துவிடுகிறது. விலங்குப் பண்ணை தாழ்ந்து போனதற்கு ஸ்னோபாலின் தவறுகளே காரணம் என்று நெப்போலியன் பிரச்சாரம் செய்கிறது. அதன் ஆதிக்க வெறி அதிகரித்து, தன் மனத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்ற ஒரு சர்வாதிகாரி ஆகிவிடுகிறது. பன்றிகளால் அரசியலமைப்பின் ஏழு கட்டளைகளும் தகர்க்கப்படுகின்றன. உதாரணமாக, எந்த விலங்கும் மது குடிக்கலாகாது என்ற கட்டளை மிகுதியாகக் குடிக்கலாகாது என்று வசதிக்கேற்ப மாற்றப்படுகிறது.

மீண்டும் காற்றாலை அமைக்க பாக்ஸர் உதவுகிறது. அது களைத்துச் சோர்ந்து விழும் நிலையில் ஒரு கசாப்புக் கடைக்காரனுக்கு விற்கப்பட்டுவிடுகிறது. ஆனால் மற்ற விலங்குகளிடம் அது (கால்நடை) மருத்துவரிடம் சேர்க்கப்பட்டு நோய்ப் படுக்கையில் அமைதியாக இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆண்டுகள் செல்கின்றன. விலங்குகளின் வாழ்க்கை மேலும் மேலும் கொடுமையானதாக மாறுகிறது. ஆனால் பன்றிகள் மட்டும் ஆடம்பரத்தையும் அதிகாரத்தையும் அனுபவிக்கின்றன. மனிதர்களைப் போலவே உடை அணிகின்றன, படுக்கைகளில் உறங்குகின்றன, மது அருந்துகின்றன, சீட்டு விளையாடுகின்றன, முக்கியமாக மனிதர்களைப் போலவே பின்னங்கால்களால் – இரண்டு கால்களால் நடக்கின்றன. பில்கிங்டன் போன்ற பிற பண்ணை உரிமையாளர்களுடன் வியாபாரத்தில் ஈடுபடுகின்றன. கடைசியாக, ஏழு கட்டளைகளும் ஒரே கட்டளை ஆக்கப்படுகிறது.

எல்லா விலங்குகளும் சமம்ஆனால் சில விலங்குகள் பிறவற்றை விட அதிகச் சமம்

பண்ணையின் பெயரை பழையபடியே மேனர் பண்ணை என்று நெப்போலியன் மாற்றிவிடுகிறது. இறுதியாக ஜோன்ஸின் வீட்டில் பன்றிகள் யாவும் அவனுடன் அமர்ந்து மது அருந்துகின்றன. வெளியிலிருந்து நோக்குகின்ற விலங்குகளுக்கு, மேனர் பண்ணையில் உள்ள பன்றிகள், வித்தியாசமே இன்றி மனிதர்களைப் போலவே தோற்றம் அளிக்கின்றன.


குண்டலகேசி

இது இத்தொடரின் 26ஆம் பகுதி. அதாவது இத்தொடரைத் தொடங்கி ஆறுமாதங்கள் – அரை ஆண்டு நிறைவடைந்துவிட்டது. ஏறத்தாழத் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மழையின் நீரிலும் வெள்ளத்திலும் மக்கள் துன்பப்படும்போது இந்தக் கால நிறைவைக் கண்டு மகிழ்ச்சி கிடைப்பது இயலாது என்றாலும் தீர்வு நம்மிடம் இல்லை என்பதால் இயற்கையின் கருணையை வேண்டி நம் கடமையைத் தொடர்வோம்.

தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் எதுவுமே வைதிகம் சார்ந்தவை அல்ல என்பது எண்ணத்தக்கது. இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி மூன்று மட்டுமே முழுதாகக் காப்பாற்றப்பட்டு விட்டன. குண்டலகேசி, வளையாபதி இவற்றில் சிற்சில பாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன. அடுத்து வந்த சைவ வைணவ பக்திக் காலத்தின் ஊடாக இவற்றை எவ்விதமோ காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இவ்விரண்டில் குண்டலகேசி பெளத்தக் காப்பியம். வளையாபதி சமணக் காப்பியம். குண்டலகேசியின் தொடர்ச்சியாக ஏற்பட்டது நீலகேசி என்னும் சமணக் காப்பியம்.

குண்டலகேசியின் வரலாறாக நீலகேசி உரையாசிரியர் சமயதிவாகரர் கூறும் கதை இது:

இராசகிருக நாட்டு அமைச்சன் மகள் பத்திரை. அவள் தனது மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அரச சேவகர்கள் கள்வன் ஒருவனைக் கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டாள். (அவன் பெயர் காளன் என்று சில கதைகள் கூறுகின்றன) அவனுடைய இளமையும் அழகும் அவள் மனதைக் கவர்ந்தன. அவன்மேல் அவள் காதல் கொண்டாள். இதை அறிந்த தந்தை, கள்வனை விடுவித்துத் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். இருவரின் அன்புக் காதல் வாழ்க்கை இனிதே நடக்கிறது. ஒரு நாள் ஊடல் கொண்ட பத்திரை‘நீ கள்வன் அல்லவா’ என விளையாட்டாகச் சொல்ல, அது அவன் உள்ளத்தைப் பாதிக்கிறது. அவளைக் கொல்லக் கருதிய அவன், அவளை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று, அவளைக் கீழே தள்ளிக் கொல்லப் போவதாகக் கூறுகிறான். நிலைமையை உணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள் போல் நடித்து, “நான் இறப்பதற்குமுன் உம்மை வலம் வரவேண்டும்” என்கிறாள். பின் அவனைச் சுற்றி வலம் வருபவளைப் போல, பின்பக்கம் சென்று அவனைக் கீழே தள்ளிக் கொன்று விடுகிறாள்.

பிறகு, பத்திரை, வாழ்க்கையை வெறுத்தவளாய், பல இடங்களில் அலைந்து திரிந்து, பின் சமண சமயத்தவர் வாழும் மடத்தை அடைந்து, சமணத் துறவியாகிறாள். சமண சமயத்துறவி ஆகும்போது தலைமயிரை மழித்துக் கொள்ளுதல் முறை ஆதலின் அவ்விதமே செய்கிறாள். ஆனால் அவளுக்குச் சுருண்ட கூந்தல் வளர்கிறது. அதனால் அவள் குண்டலகேசி எனப்படுகிறாள். (குண்டலம் = சுருண்டு வளைந்தது, கேசி = கேசத்தை, அதாவது  தலைமுடியை உடைய பெண்). சமணக் கொள்கைகளைக் கற்றுத் தேர்ந்து, பின் பிற சமயக் கருத்துகளை எல்லாம் முறைப்படி கற்றுத் தேர்கிறாள். ஒருநாள் கௌதம புத்தரின் மாணவர் சாரிபுத்தர், வாதம் செய்வதற்கென பத்திரைநட்டு வைத்த நாவலைப் பிடுங்கி எறிந்து விடுகிறார். இருவருக்கும் இடையே சமய வாதம் நிகழ்கிறது. வாதத்தில் பத்திரை தோற்க, சாரிபுத்தர் ஆணைப்படி அவள் பௌத்தத் துறவியாகிறாள். சாரிபுத்தர் குண்டலகேசியை பகவான் புத்தரிடம் அழைத்துச் செல்ல, அவர் முன்னிலையில் அவள் பௌத்தத் துறவியாகிறாள்.

இக்கதையின் தொடக்கப்பகுதியை மந்திரி குமாரி என்னும் திரைப்படமாக , அதற்குக் கதை வசனம் எழுதிய கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மந்திரி குமாரி 1950இல் எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்தது.

[முல்லை நாட்டில் ராஜ குருவின் சொல்படி நடப்பவர் அந்நாட்டரசர். ஆயினும், அவர் கருத்துக்கு மாறாக, வீரமோகனை தளபதியாக நியமனம் செய்கிறார். அதில் கோபமடைகிறார் ராஜ குரு. அவர் மகன் பார்த்திபன், பகல் நேரங்களில் அரசாங்கத்திலும், இரவு நேரங்களில் வழிப்பறியிலும் ஈடுபடுகிறான். இளவரசி ஜீவரேகாவை மணக்க ஆசைப்படுகிறான். ஆனால் ஜீவரேகா வீர மோகனை விரும்புகிறாள். பார்த்திபன் ஜீவரேகாவிற்கு அனுப்பிய தூது தவறுதலாக மந்திரி மகள் அமுதவல்லியை சென்றடைந்து அவள் பார்த்திபனைப் பார்க்கச்செல்கிறாள். இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.

இந்நிலையில், வழிப்பறிக் கொள்ளையர்களை பிடிக்க அரசர் வீர மோகனை அனுப்புகிறார். பார்த்திபனை பிடித்து அரசபையில் நிறுத்துகிறான் வீர மோகன். ராஜ குரு தன் மகனைக் காப்பாற்ற நாடகம் ஆடி, பார்த்திபன் நிரபராதி என்றும், வீர மோகனை நாடு கடத்த வேண்டும் என்றும் உத்தரவிடுகிறார்.] பின்னர், பார்த்திபன் அமுதவல்லியை மணந்துகொள்கிறான்.

பார்த்திபனைத் திருந்துமாறு அமுதவல்லி கேட்டுக்கொண்டாலும், அவள் தூங்கும் பொழுது அவன் வழிப்பறியில் ஈடுபடுகிறான். அமுதவல்லியைக் கொன்றுவிட திட்டம் தீட்டி மலை உச்சிக்குப் பார்த்திபன் அழைத்து செல்கிறான். மாறாக, அமுதவல்லி அவனைத் தள்ளிக் கொன்று, தான் ஒரு புத்தமதத் துறவியாகிறாள்.

இது திரைப்படத்தின் முழுக்கதையன்று. கலைஞர் குண்டலகேசி கதையைப் பயன்படுத்திக் கொண்ட பகுதி மட்டுமே.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற “வாராய், நீ வாராய்” என்ற பாடலை திருச்சி லோகநாதன்-ஜிக்கி பாடியிருந்தனர். இன்றுவரை கேட்கப்படும் இனிமையான புகழ்பெற்ற பாடலாக அது அமைந்துள்ளது. பார்த்திபன் மலையுச்சிக்கு அமுதவல்லியை அழைத்துச் செல்லப் பாடும் பகுதிகள் சிலேடையாக அமைந்துள்ளன. “உலவும் தென்றல் காற்றினிலே” என்னும் மற்றொரு பாடலும் இனிமையாக அமைந்துள்ளது.


சம்ஸ்கார (சம்ஸ்காரம்)

சம்ஸ்கார என்பது ஏறத்தாழ நம் சமகால எழுத்தாளராக (1932-2014) வாழ்ந்த பேராசிரியர் யு. ஆர். அனந்தமூர்த்தி எழுதிய கன்னட நாவல். அவரின் தாய்தந்தை மாத்வ பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள். சம்ஸ்கார போன்ற புகழ்பெற்ற படைப்புகளுக்காக அவர் ஞானபீடப் பரிசு (1994) பெற்றார். பத்மஸ்ரீ விருதும் அவருக்கு 1998இல் வழங்கப் பட்டது.

மோதி பிரதமர் ஆவதற்குமுன் “மோதி ஆளும் நாட்டில் நான் வாழ விரும்பவில்லை…மோதி பிரதமர் ஆனால் நான் உயிர்வாழ மாட்டேன்” என்று துணிச்சலாக பகிரங்கமாக அறிவித்தவர் இவர்.

சம்ஸ்கார(ம்) என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு என்றாலும் முக்கியமாக இந்த நாவலில் இது இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன் முதலிய சடங்குகளைக் குறிக்கிறது.

தூர்வாசபுரம் என்பது ஓர் அக்ரகாரம். மாத்வ ஐயங்கார் இனத்தவர் மட்டுமே வாழும் இடம். பிராணேசாசார்யர் (பிராணேச ஆசாரியர்) என்ற உயர்ந்த படிப்பும் ஒழுக்கமும் கொண்ட மனிதர் அங்கே ஆன்மிகத் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். காசியில் சமஸ்கிருதப் படிப்பை முடித்து வேதாந்த சிரோமணி பட்டம் பெற்றவர். பாகீரதி என்ற நடக்க இயலாத நோயாளிப் பெண்ணை மணந்து அவளுக்கு நிஷ்காமியத் தொண்டு செய்வதில் இன்பம் காண்கிறார்.

அதே அக்கிரகாரத்தில் நாரணப்பா என்ற ஒழுக்கம்கெட்ட, திட்டமிட்டு பிராமண ஒழுக்கத்தைச் சீரழித்துவரும் பிராமணன் ஒருவனும் இருக்கிறான். ஒருநாள் பிற்பகல் பிராணேசரிடம் நாரணப்பா இறந்துவிட்ட செய்தியை அவனது வைப்பாட்டியான சந்திரி வந்து தெரிவிக்கிறாள். அவனுக்கு பிராமண முறைப்படியான சம்ஸ்காரங்கள் செய்வதா என்ற கேள்வி அக்ரகார பிராமணர்கள் அனைவர் முன்னாலும் எழுகிறது. அவ்விதம் செய்யலாகாது என்பது பலரின் கருத்தாக உள்ளது. எனினும் சாத்திரங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று ஆராய்ந்து பிராணேசர் தம் கருத்தைச் சொல்லவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். நாரணப்பாவின் பிணத்தை எரிக்கும்வரை அவர்களால் உணவு கொள்ளவும் முடியாது.

சந்திரி நாரணப்பாவின் இறுதிச்சடங்குச் செலவுக்குத் தன் பொன் நகைகளை அளிக்கிறாள். அதைப் பார்த்தவுடன் நாரணப்பாவின் உறவினர்களான கருடப்பா, லக்ஷ்மணப்பா இருவரும் தங்களில் ஒருவர் இறுதிச் சடங்கைச் செய்வதாகவும் தங்களுக்கே அந்த நகைகள் வேண்டும் என்றும் சண்டையிடுகின்றனர்.

“பல பிறவிகளில் செய்த நன்மைகளால்தான் ஒருவன் பிராமணனாகப் பிறக்கமுடியும். நாரணப்பாவும் அப்படித்தான் நற்கருமங்கள் செய்திருப்பான். ஒருவேளை அவன் இறக்கும்போது கடவுளைச் சரணடைந்திருந்தால் அவன் இந்நேரம் கடவுளை அடைந்திருப்பான். அவ்வாறிருக்க அவனை எவ்விதம் ஜாதிப்பிரஷ்டம் செய்வது” என்ற கேள்வி பிராணேசருக்கு எழுகிறது. ஆனால் அவன் வாழ்ந்த வாழ்க்கைப்படி அவன் பிராமணச் சடங்குகளுக்கு உரியவனாகவும் இல்லை. சாத்திரங்கள் இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பது பிராணேசருக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

இடையில் அக்ரகார பிராமணர்கள், தாசாசாரியன் என்பவனின் அறிவுரைப்படி பாரிஜாதபுரத்திற்குச் செல்கின்றனர். அங்கே நாரணப்பாவின் நெருங்கிய நண்பனான மஞ்சய்யா இருக்கிறான். அவனை நாரணப்பாவின் உடலை எரிக்குமாறு வேண்டுகின்றனர். ஆனால் அவனும் மறுக்கிறான். அதனால் ஒன்றும் புரியாமல் அவர்கள் மீண்டும் பிராணேசரின் உத்தரவைப் பெற ஊருக்கு வந்து சேர்கின்றனர். ஒரு நாள் முழுவதும் சென்றுவிடுகிறது.

மறுநாள் மாலை பிராணேசர் ஆற்றில் நீராடி, ஈர உடையோடு காட்டிலுள்ள அனுமன் கோவிலுக்குச் சென்று உத்தரவு வேண்டுகிறார். இரவு முற்றுகிறது. ஆனால் அனுமன் எந்த உத்தரவும் அளிக்கவில்லை. அவர் கோவிலை விட்டு வெளியேவரும்போது அங்கே காத்திருந்த சந்திரி, அவர் காலில் விழுகிறாள். அவள் மார்பு அவர் முழங்கால்களைத் தழுவ, அவர் உணர்ச்சி மிகுதியால் அவளுடன் சேர்கிறார்.

பிராணேசர் சந்திரியிடம் தனக்கு இனி வேறு எவர் சம்ஸ்காரம் பற்றியும் அறிவுரைக்கத் தகுதி இல்லை என்று கூறி வீட்டுக்குச் செல்கிறார். நாரணப்பாவின் வீட்டுக்குவரும் சந்திரி, சடலம் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு, அவனது நண்பனான மீன்வியாபாரி அகமது பாரி என்பவன் உதவியோடு இரவோடிரவாகப் பிணத்தை எரித்துவிடுகிறாள். ஆனால் இது அக்ரகாரத்தில் எவருக்கும் தெரியாது.

நாரணப்பாவின் நண்பர்கள், ஒரு நாடகக் குழுவினர், இரவில் மாட்டுவண்டியில் வந்து நாரணப்பாவின் பிணத்தை எரிக்க நினைக்கின்றனர். ஆனால் பிணத்தைக் காணாமல் அவன் பேயாகிவிட்டான் என்று கூக்குரலிடுகிறார்கள். அக்ரகாரத்தில் வசிக்கும் விதவையான லக்ஷ்மிதேவம்மா என்பவளும் சேர்ந்து கூச்சலிட, எல்லாரும் பயந்து அவரவர் வீட்டில் ஒடுங்குகின்றனர்.

மூன்றாம் நாள் காலை, வழக்கப்படி தன் மனைவியை நீராட்டி உணவு தரும் ஆசாரியருக்குத் தன் கருமங்களில் அருவருப்பு எழுகிறது. அவளுக்கும் பிளேக் அறிகுறிகள். தவிக்கிறார். ஆனால் அக்ரகாரத்தினரிடம் சந்திரியிடம் தான் உறவு கொண்டதைக் கூற அவருக்கு தைரியமில்லை. அன்று தன்னை அறிவுரை கேட்கவந்த பிராமணர்களிடம் “நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிடுகிறார்.

அதன்பின் பிராமணர்கள் கைமரம் என்னும் ஊரில் சுப்பணாசார் யனைச் சந்திக்கச் செல்கின்றனர். அவனும் அவர்களுக்கு உணவிட்டுவிட்டு, மடத்தில் ஆசாரியரிடம் அறிவுரை கேட்கச் சொல்கிறான். தாசாசார்யனுக்கு ஜுரமும் மயக்கமும் ஏற்படுகின்றன.

மட ஆசாரியர், நாரணப்பாவை முறைப்படி எரித்துவிடுமாறும் நகைகளை மடத்துக்கு அளித்துவிடுமாறும் உத்தரவிடுகிறார். கருடாசார்யனுக்கும் தாசாசார்யன் போன்றே ஜுரம் ஏற்படுவதால் இருவரையும் விட்டுவிட்டுப் புறப்படுகிறார்கள்.

அடுத்த நாள் பிராணேசர் ஆற்றுக்கு நீராடச் சென்று திரும்பிவந்த போது பிளேக்கினால் தாக்கப்பட்ட அவர் மனைவியும் இறந்து விடுகிறாள். அவளைக் கொண்டுசென்று எரித்த பிராணேசர், தன் வீடு, உடமைகளை விட்டு அப்படியே கிழக்குநோக்கி நடக்கத் தொடங்கிவிடுகிறார்.

பிராணேசர் குந்தபுரா என்னும் ஊருக்குச் செல்ல நடக்கிறார். வழியில் புட்டன் என்ற கீழ்ச்சாதி ஆள் முற்பிறப்பு வினைபோல அவருடன் ஒட்டிக் கொள்கிறான். அவன் மேளிகையில் நடக்கும் திருவிழாவுக்குக் அவரைக் கூட்டிச் செல்கிறான். பல சம்பவங்கள் நிகழ்கின்றன. சேவற் சண்டை, கயிற்றின்மீது நடக்கும் பெண் ஆகியவற்றைப் பார்க்கிறார். புட்டனோடு காப்பிக் கிளப்புக்குச் சென்று காப்பி குடிக்கிறார். பத்மாவதி என்ற வேசி வீட்டுக்கு அழைத்துச் செல்லும் புட்டா, இரவு வருவதாகச் சொல்லிவிட்டு, கோயில் பார்ப்பனர்களுக்கு இடும் விருந்துக்கு அவரை அழைத்துச் செல்கிறான். உணவு கொள்ளப் போகும்போது, கோயில் மடப்பள்ளி ஆள் அவரைத் தெரிந்து கொண்டதால், வெளியே எழுந்து ஓடிவந்து விடுகிறார். புட்டனிடம் தான் தூர்வாசபுரம் போகப் போவதாகச் சொல்கிறார். அங்கு தன் உண்மையைச் சொல்லிவிடலாம் என நினைக்கிறார். தன் நண்பன் நாரணப்பாவைச் சந்திக்க புட்டனும் வருவதாகச் சொல்கிறான்.

சாலையில் தூர்வாசபுரம் செல்லும் வண்டி ஒன்று வருகிறது. வண்டிக்காரன் ஒருவரை மட்டும் ஏற்றிக் கொள்வதாகக் கூறியதால் புட்டன் பிராணேசரை அதில் ஏற்றிவிடுகிறான். தீர்த்தஹள்ளியில் இருக்கும் தன் மனைவியைப் பார்க்கப் போவதாகப் புறப்பட்டு விடுகிறான். ஒரு மன அவசத்துடன் கூடிய எதிர்பார்ப்புடன் பிராணேசர் தூர்வாசபுரம் திரும்புவதாக நாவல் முடிகிறது.

பிராமணச் சமூகத்தின் அடிப்படைகளையே ஆட்டம் காண வைக்கும் கேள்விகளை எழுப்பியதால் கன்னடச் சமூகத்தில் ஒரு கடும்புயலைக் கிளப்பிய நாவல் இது.