பொன்னிறக் கையேடு

இருபதாம்-இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நாவல்களில் அதற்கு முன்பு போல நேரடியாகக் கதை சொல்லப்படுவது கிடையாது. சுற்றி வளைத்தோ, நான்-லீனியர் என்பது போன்ற காலப் பிறழ்ச்சியுடனோ, பெருமளவு கற்பனையும் உருவகமும் கலந்தோ, தொடர்ச்சியற்ற பகுதிகளாகவோ சொல்லப்படுகின்றன. வாசிப்பதற்குச் சற்றுச் சிரமம் தருகின்ற டாரிஸ் லெஸிங்கின் பொன்னிறக் கையேடு (தி கோல்டன் நோட்புக் -1962) என்பதும் அப்படிப்பட்ட ஒரு நாவல்தான்.

டாரிஸ் லெஸிங் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ஆங்கில நாவலாசிரியை. 1919இல் ஈரானில் பிரிட்டன் நாட்டுப் பெற்றோருக்குப் பிறந்தவர். பிறகு தெற்கு ரொடீஷியாவில் (இன்றைய ஜிம்பாப்வே) 1949 வரை வசித்தபின், இங்கிலாந்திற்குச் சென்றார். 2007இல் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. 2013இல் மறைந்தார். பொன்னிறக் கையேடு என்பது அவரது அரிய எழுத்து முயற்சியாகக் காணப்படுகிறது,

இந்த நாவல் மாறிமாறிவரும் பகுதிகளைக் கொண்டது. அனைத்தையும் உள்ளடக்கும் கதையாக சுதந்திரப் பெண்கள் என்பது வருகிறது. அதன் தலைவி அன்னா வுல்ஃப். உள்ளடக்குக் கதை 1957இல் தொடங்கினாலும் பின்னோக்கில் அன்னாவின் வாழ்க்கை நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.

அன்னா நான்கு நோட்டுப்புத்தகங்களில் குறிப்புகளை எழுதுகிறாள். கருப்பு, சிவப்பு, மஞ்சள், நீல நிறக் கையேடுகள் அவை. அன்னாவின் வாழ்க்கையின் வெவ்வேறு தளங்களை இவை பிரதிபலிப்பதோடு, அன்னாவின் மனத்தைச் சரிப்படுத்திக் கொள்ள இவை உதவுகின்றன. கருப்புக் கையேடு, ஆப்பிரிக்காவில் அவள் வாழ்ந்த காலத்தை எடுத்துரைக்கிறது. இப்போதைய கதை தொடங்குவதற்குப் பத்தாண்டுகள் முன்பு நன்கு விற்பனையான அவளது முதல் நாவலுக்கு அடிப்படையும் அந்தக்கையேட்டின் குறிப்புகள்தான்.

மஞ்சள் கையேட்டில் தன் எதிர்காலத் திட்டங்களுக்கான சிந்தனைகளை எழுதுகிறாள். சிவப்புக் கையேடு ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்திலும் பொதுவுடைமைக் கட்சியுடன் அவள் அனுபவங்களை விவரிக்கிறது. அன்னாவின் உண்மையான டயரி, நீலக் கையேடுதான். தனது வாழ்க்கைச் சம்பவங்களை அப்படியே அதில்தான் எழுதுகிறாள். அது அவளது சுயம் எவ்வளவுதூரம் நடப்பிலிருந்து பிரிந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டு வதாக உள்ளது.

அதனால் பொன்னிறக் கையேட்டுக்கான தேவை எழுகிறது. அது கடைசியாக வருகிறது. முன் நான்கு கையேடுகளையும் ஒன்றாக்கி இணைப்பதற்கான முயற்சியாக மட்டுமன்றி, அவளது மனச் சிதைவின் உணர்வினையும் எடுத்துரைப்பதாக அது உள்ளது.

அன்னா ஓர் ஆங்கிலக்காரி. இரண்டாம் உலகப்போர் தொடங்கும்போது 1939இல் ரொடீஷியாவுக்குச் செல்கிறாள். அங்கு இடதுசாரி அரசியலில் ஈர்க்கப்பட்டு, ஒரு நண்பர் வட்டத்தை உருவாக்குகிறாள். மேக்ஸ் வுல்ஃப் என்பவனை 1945இல் மணந்து கொள்கிறாள். அவளுக்கு ஜேனட் என்ற பெண் குழந்தை 1946இல் பிறக்கிறது. மேக்ஸ் அவளை விவாகரத்து செய்ததால் குழந்தையுடன் இங்கிலாந்துக்குத் திரும்புகிறாள்.

கருப்புக் கையேடு, மத்திய ஆப்பிரிக்காவில் வெள்ளைக்காரச் சமதர்மவாதி களுடன் அவள் கழித்த காலத்தைச் சொல்கிறது. ஆப்பிரிக்காவில் தனது அனுபவங்களை வைத்துப் போர்முனைகள் என்ற நாவலை எழுதுகிறாள். கருப்புக் கையேட்டில் போர்முனைகள் நாவலின் கதைச்சுருக்கம் சொல்லப் படுவதுடன், அது ஏற்கப்படுமா என்ற அவள் கவலையையும் பற்றியதாக அப்பகுதி உள்ளது. அதைப் பிரசுரிக்கிறாள். அதில் போதிய பணம் கிடைக்கிறது. அதை வைத்து பிரிட்டிஷ் பொதுவுடைமைக் கட்சிக்காகப் பாடுபடுகிறாள்.

மாலி என்ற பெண்ணுடன் அவள் வசிக்கிறாள். மாலியின் கணவன் ரிச்சட். அவளுக்கு ஒரு வயதுவந்த மகன், டாமி. ரிச்சட், அவளை விட்டுப் பிரிந்துவிட்டான். அன்னாவும் மைக்கேல் என்ற திருமணமான ஆடவனுடன் காதலுறவு கொண்டிருக்கிறாள். அது ஐந்தாண்டுகள் நீடிக்கிறது. 1954இல் மைக்கேலுடனான உறவு முடிகிறது. அதேகால அளவில் அன்னாவின் கம்யூனிஸ்டுக் கட்சித் தொடர்பும் முடிகிறது.

இரண்டாவதான சிவப்புநிறக் கையேடு அவள்  பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுக் கட்சியில் உறுப்பினளாக ஆவதிலிருந்து தொடங்குகிறது. ஏற்கெனவே மாலி அதில் உறுப்பினளாக இருக்கிறாள். கட்சியில் உள்ளவர்கள் சோவியத் யூனியனின் நிலைப்பாட்டை எல்லாநிலைகளிலும் ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். அதனால் கட்சியின் கருத்தியலுடன் அன்னாவுக்கு உடன்பாடில்லை.

மூன்றாவது மஞ்சள் கையேடுமூன்றாவதன் நிழல் என்று அதற்குப் பெயர். அது லண்டனில் அன்னாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவலுக்கான கையெழுத்துப்பிரதியாகத் தொடங்குகிறது. அதில் தலைவியாக எல்லா என்பவள் வருகிறாள். பெண்கள் பத்திரிகை ஒன்றில் பணி புரிகிறாள். அவளுடன் மட்டுமின்றி வேறு பல பெண்களுடனும் தொடர்பிலுள்ள, மணமான உளச்சிகிச்சையாளன் பால் டேன்னர் என்பவனுடன் எல்லாவுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் அவன் அவளைவிட்டு நைஜீரியாவுக்குச் சென்றுவிடுகிறான். அவள் வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறிவிடுகிறது.

நீலநிற ஏடு என்பது அவளது நாட்குறிப்பு. அதில் தொடர்ச்சியற்ற, சந்தேகமும் முரண்பாடுகளும் நிரம்பிய அவளது தினசரிக் குறிப்புகள் உள்ளன. திருமதி மார்க்ஸ் என்ற உளச்சிகிச்சையாளருடன் அன்னா கொள்ளும் சிகிச்சைப்பகுதிகள் குறிக்கப்படுகின்றன. அவள் டயரியில் குறிப்பதைப் பற்றி திருமதி மார்க்ஸ் அறிந்ததும் அன்னாவின் குறிப்புகள் நான்கு ஆண்டுகளுக்கு நின்றுவிடுகின்றன. மீண்டும் அவள் எழுத நினைக்கும் போதுதான் மைக்கேல் அவளை விட்டுப் பிரிவதாக அவள் கேள்விப்படுவதால் அவளால் எழுத முடிவதில்லை. திருமதி மார்க்ஸ் அவள் கையேட்டைப் பற்றிக் கேட்பதனால் சிகிச்சைக்குப் போவதை நிறுத்திவிடுகிறாள்.

டாமிக்கும் மாலிக்கும் அன்னா உதவ மனம் கொண்டிருக்கிறாள். டாமி தற்கொலை செய்ய முனைந்து அம்முயற்சியில் குருடனாகிறான். டாமியின் தற்கொலை முயற்சி தன் வாழ்க்கையைப் பற்றி அன்னாவை மேலும் யோசிக்க வைக்கிறது. இரண்டாவதாக ஒரு நாவல் எழுத வேண்டும் என அவள் நினைத்தாலும் எப்படி அதில் மேற்செல்வது என்பது பற்றித் தெளிவில்லை. அவள் மகள் ஜேனட் வளர்ந்து, உண்டுறை பள்ளிக்குச் செல்வதால், அன்னா தனியாக விடப்படுகிறாள். இடையில் ஒரு அமெரிக்க திரைஎழுத்தாளனுடன் தொடர்பு ஏற்படுகிறது. அதன் கசப்பினால் மனம் முறியும் நிலைக்கு அவள் சென்றாலும், அடுத்த நாவலை எழுத அது உந்துசக்தியாக அமைகிறது. அந்த நாவலின் முதல் வாக்கியத்தை எழுதும் காட்சி, உள்ளடக்குக் கதையும் அன்னா எழுதியதோர் பெருங்கதைதான் என்று வெளிப்படுத்துகிறது.

இறுதியாக அன்னா வேலை தேட முயற்சி செய்கிறாள். மாலியிடம் தான் திருமண ஆலோசகராகவும் ஆசிரியராகவும் பணியாற்ற இருப்பதைப்பற்றிச் சொல்கிறாள். மாலியும் மறுதிருமணம் செய்ய திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள். தங்கள் தங்கள் தினசரி வாழ்க்கைகளை இந்த இரு பெண்களும் நிதானமாகக் கழிப்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

பெண்ணியத்திற்கான பிரச்சினைகளை லெஸிங்கின் நாவல்கள் பேசினாலும் அவர் தன்னைப் பெண்ணியக்காரராக ஏற்றுக் கொண்டதில்லை. இருபதாம் நூற்றாண்டுப் பெண்களின் வாழ்நிலையை வெளிப்படையாகப் படம்பிடித்துக் காட்டியவர் அவர் என்று பாராட்டப்பட்டவர்.


இன்றைய ஒன்றிய ஆட்சி செய்துள்ள குற்றங்கள்

படம்

இது பண்பாட்டுத் துறையில் மட்டுமே பாஜக ஆற்றிய குற்றங்கள் என மார்க்சிஸ்டு கட்சி பட்டியலிட்டிருப்பவை. சமூக, பொருளாதார துறைகளில் அவர்கள் ஆற்றிய குற்றங்கள் இன்னும் மிகப் பல. அவற்றை இன்னொரு நாள் வெளியிடுவோம்.


கடவுளின் அழுகை

கடவுள் ஒரு நாள், உலகில் உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் தன்னைச் சந்திக்க அனுமதித்தார்; அவர்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் தன்னிடம் எழுப்பலாம் என்றும் சொன்னார்.

“இந்த பூமிப் பந்தில் உள்ளோர் அனைவரும் வியந்து போற்றும் உன்னதமான நாடாக அமெரிக்கா எப்போது ஆகும்?” என்று கேட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

“இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா அந்த மாதிரியான நிலைமையைப் பெறும்” என்று சொன்னார் கடவுள். அந்த பதிலைக் கேட்டதும், பைடன், “ஐந்து ஆண்டுகளா ? அதைக் காண நான் அதிபராக இருக்க மாட்டேனே!” என்று கதறிக் கண்ணீர்விட்டார்.

அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், “அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு பிரிட்டன் எப்போது அதிவேகமாக வளர்ந்து மெச்சத் தகுந்த நிலையினை அடையும்” என வினவினார். “இன்னும் 25 ஆண்டுகள் ஆகும்” என்றார் கடவுள். “இன்னும் 25 ஆண்டுகளா? அதைப் பார்க்க நான் இருக்கமாட்டேனே!” என்று அரற்றி அழ ஆரம்பித்துவிட்டார் போரிஸ் ஜான்சன்.

அடுத்து நரேந்திர மோடிக்கான வாய்ப்பு. அவர் நேர்த்தியான தோற்றத்துடன் இருந்தார். தூய இந்தியில் கடவுளிடம் கேட்டார்; “இந்தியா எல்லோரும் போற்றும் எழிலார்ந்த நாடாக இன்னும் எத்தனை காலம் ஆகும்?” என்று. இதைக் கேட்டதும் கடவுள், தேம்பி அழத் தொடங்கினார். “அதைக் காண நானே இருக்க மாட்டேன்” என்றார் தேம்பிக்கொண்டே கடவுள்!

(கலைஞர் செய்திகளில் இருந்து)


செம்மீன்

செம்மீன் என்பது தகழி சிவசங்கரன் பிள்ளை 1956-இல் எழுதிய ஒரு மலையாள நாவல் ஆகும். உலகப் புகழ் பெற்ற ஒரு படைப்பு இது. செம்மீன் என்பது இறால்மீனைக் குறிக்கும் சொல்.

இந் நாவலைப் பற்றி, அதன் பெயர் கொண்ட திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ்மக்கள் பலர் அறிந்திருப்பார்கள்.

இந்து மதத்தைச சேர்ந்த ஒரு  மீனவனின் மகளான கருத்தம்மைக்கும் முஸ்லிம் மொத்த மீன் வியாபாரி ஒருவனின் மகனான (கொச்சு முதலாளி) பரீக்குட்டிக்கும் இடையேயான காதலைப் பற்றிய கதை. கதை, யதார்த்தத் தளத்திலும் தொன்மத் தளத்திலும் சிறப்பாக இயங்குகிறது. நடை, அந்தச் சமுதாயத்தின் பேச்சு மொழியில் அமைந்துள்ளது.

இதன் மையக்கரு,  கேரள மாநிலத்தின் கடலோரத்தில் வசிக்கக்கூடிய மீனவ சமுதாய மக்களின் இடையே உள்ள நம்பிக்கை பற்றியது. அதாவது மனைவி ஒருத்தி கற்புத் தவறிவிட்டால்,  அவளுடைய கணவன் கடலுக்குச் சென்றால் கடல் தெய்வம் (கடல் அன்னை அல்லது கடலம்மா) அவனை விழுங்கிவிடும் என்பது அந்த நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்துகின்ற வகையிலேயே தகழி சிவசங்கரன் பிள்ளை இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார்.

இந்நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருதினை 1957இல் தகழி பெற்றார். ஏறத்தாழ 30 படைப்புகளை அளித்த அவர் பின்னர் 1975இல் ஞானபீட விருதினையும் பெற்றார்.

இந்தப் புதினத்தில் தகழி மீனவ மக்களின் வாழ்க்கையை உணர்ச்சி பூர்வமாக விளக்கியுள்ளார். மீனவ சமுதாய மக்களின் பழக்க வழக்கங்களையும், விலக்குகளையும் (செய்யக் கூடாதவைகளாக அவர்கள் கருதுவது), நம்பிக்கைகள், சடங்குகளையும், அவர்களின் அன்றாடத் தொழில் நிகழ்வுகளையும், அவர்களின் வலிகள் போன்ற அனைத்தையும் இயல்பு மாறாமல் தகழியின் அற்புதமான எழுத்துக்களால் அறிய முடிகிறது.

செம்பன்குஞ்சு என்பவன் ஒரு மீனவன். தனக்குச் சொந்தமாக ஒரு  படகையும்மீன் வலையையும் வாங்க வேண்டும் என்பதே அவன் வாழ்க்கையின் ஒரே நோக்கமாக இருக்கிறது. இதனை ஒரு முஸ்லீம் மீன் மொத்தவியாபாரியின் மகனான பரீக்குட்டியின் உதவியுடன் அவன் நிறைவேற்றிக் கொள்கிறான். தன்னிடமிருந்த அனைத்துப் பொருளையும் உதவும் பரீக்குட்டி ஒரே ஒரு நிபந்தனை விதிக்கிறான். அது செம்பன்குஞ்சுவுக்குக் கிடைக்கும் மீன்கள் அனைத்தையும் தன்னிடமே விற்க வேண்டும் என்பதாகும்.

செம்பன்குஞ்சுவிற்கு அழகான ஒரு மகள் இருக்கிறாள். அவளுடைய பெயர் கருத்தம்மா. கருத்தம்மைக்கும் பரீக்குட்டிக்கும் இடையே காதல் மலருகிறது. இதனைத் தெரிந்துகொண்ட கருத்தம்மாவின் தாய் சக்கி, அவளுடைய காதல், தங்கள் சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என எச்சரிக்கை செய்கிறாள். கருத்தம்மா, பரீக்குட்டிக்கான தனது காதலைத் தியாகம் செய்கிறாள். பின் பழனி என்ற அநாதை உழைப்பாளியைத் திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்தின்போதே பரிசமாக பழனி தரவேண்டிய 75 ரூபாயைத் தர முடியாததால் இருபுறத்துக்கும் சண்டை ஏற்படுகிறது. அப்போது கருத்தம்மாவின் மீதும் பழி சுமத்தப்படுகிறது. செம்பன்குஞ்சு கருத்தம்மாவை வெறுத்துத் தலைமுழுகிவிடுகிறான். இருப்பினும் சக்கி அவள் உதவிக்கு வருகிறாள். உடனே அவள் கணவனுடன் புறப்படுமாறு வலியுறுத்துகிறாள்.

கருத்தம்மா கணவனுடன் அவனுடைய ஊரான திருக்குன்னப்புழைக்குச்  செல்கிறாள். செம்பன்குஞ்சு மற்றுமொரு படகையும் வலையையும் வாங்குகிறான். ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்து விடவே பேராசைக்காரனாகவும், இதயமற்றவனாகவும் ஆகிறான். பரீக்குட்டியிடம் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த மறுக்கிறான். இடையில் அவன் மனைவி சக்கி இறக்கிறாள். அவள் இறுதியாக பரீக்குட்டியிடம் கருத்தம்மாவை அவன் சகோதரியாக நினைத்துப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறாள். சக்கி இறந்த செய்தியைக் கூட செம்பன்குஞ்சு கருத்தம்மாவுக்குச் சொல்லவில்லை.

அவள் தாய் இறந்த செய்தியைப் பரீக்குட்டி கருத்தம்மாவிடம் கூறச் செல்கிறான். அவனைக் கண்டதும், அந்த ஊரார் அவர்களிருவருக்கும் தொடர்பிருப்பதாகக் கதை பரப்புகின்றனர். பழனியுடன் மற்ற மீனவர்கள் செல்ல மறுக்கிறார்கள். அவன் தனியாகச் சென்று ஒரு நாள் படகை இழந்து வருகிறான். தனது நகைகளைக் கொடுத்து வேறுபடகு வாங்குவதற்குக் கருத்தம்மா உதவுகிறாள். மீண்டும் இல்லறம் தொடர்கிறது. கருத்தம்மாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

செம்பன்குஞ்சு பாப்பிக் குஞ்சு என்ற பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறான். அவளுக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருக்கிறான். அவன் பணம் திருடுவதைப் பஞ்சமி தனது தந்தைக்குச் சொல்கிறாள். பாப்பிக்குஞ்சை விரட்டும் செம்பன்குஞ்சு தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் பரீக்குட்டியிடம் தருகிறான்.

தந்தை மறுமணம் செய்ததால் அவளது சகோதரி பஞ்சமி கருத்தம்மாவின்  வீட்டிற்குச் செல்கிறாள். கருத்தம்மா இதுவரை ஒரு நல்ல மனைவி யாகவும் தாயாகவும் நடந்துவருகிறாள். ஆனால் பரீக்குட்டியுடன் அவளுக்கிருந்த காதலை அந்த ஊர் மக்கள் பழனியிடம் தவறாக எடுத்துக் கூறுகின்றனர். பழனியின் நண்பர்கள் இதனைக் காரணம் காட்டி அவனைத் தங்களுடன் மீன்பிடிக்க அழைத்துச்செல்வதில் இருந்து விலக்கி வைக்கின்றனர்.

ஆத்திரமடைந்த பழனி கடலில் மிகுந்த ஆழத்துக்குச் செல்கிறான். அவன் வலையில் ஒரு சுறா சிக்குகிறது அப்போது ஒரு பெரிய நீர்ச்சுழி அவனை விழுங்குகிறது. அன்று இரவில் பரீக்குட்டியும் கருத்தம்மாவும் சந்திக்கின்றனர். அந்தச் சந்திப்பின் போது அவர்களின் பழைய காதல் மீண்டும் துளிர்க்கிறது. அடுத்தநாள் கடற்கரையின் ஓரத்தில் கருத்தம்மாவும் பழனியும் கைகோர்த்தபடி இறந்து கிடக்கின்றனர். சற்றுத் தொலைவில் தூண்டில்முள் தொண்டையில் சிக்கியபடி பெரிய சுறா ஒன்றும் கிடக்கிறது.

இந்த நாவல் 1965இல் திரைப்படமாகவும் வெளியாகி விமரிசன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. இதை இயக்கியவர் ராமு காரியத். இசையமைத்தவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி. இதன் பாடல்கள் அனைத்தையும் பாடியவர் கே. ஜே. ஏசுதாஸ். “கடலினக்கரப் போனோரே, போய்வரும்போள் எந்து கொண்டுவரும்–கைநிறைய” என்ற பாடல் மிகப் பிரசித்தமானது. “மானசமைனே வரூ” போன்ற பிற பாடல்களும் புகழ்பெற்றவை. தலைமைப் பாத்திரங்களில் ஷீலா, மது ஆகியோர் நடித்திருந்தனர்.


ஜேன் அயர்

ஜேன் அயர் என்பது சார்லட் பிராண்ட் என்ற பெண் எழுத்தாளரால் எழுதப் பட்ட நாவல். வெளிவந்த ஆண்டு 1847. ஒரு பெண்ணின் வளர்ச்சி குறித்த நாவலாகவும், ஆங்கிலச் சமூகத்தின் ஒழுக்கம் -பழக்கவழக்கங்கள் -நெறிமுறைகள் குறித்த நாவலாகவும் இது உள்ளது என்ற காரணத்தால் ஜேன் ஆஸ்டினின் பிரைட் அண்ட் பிரெஜுடிஸ் என்ற நாவலுடன் இதுவும் இன்றுவரை சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஜேன் அயர் என்ற அநாதைப் பெண் திருமதி ரீட் என்ற செல்வமிக்க, கொடுமைக்காரியான அத்தையினால் வளர்க்கப்படுகிறாள். அவளுக்கு வேண்டிய சிறுசிறு உதவிகளை பெஸ்ஸீ என்ற வேலைக்காரி செய்கிறாள். ஒரு நாள் தன் அத்தை மகனுடன் ஜேன் சண்டையிட்டாள் என்று சொல்லி, அவளை அவள் மாமா இறந்த அறையில் அ்டைக்கிறார்கள். அங்கு பேயைப் பார்த்ததாக பயந்துபோன ஜேனை லாயிட் என்ற மருத்துவரின் ஆலோசனையின் பேரில் லோவுட் என்ற ஒரு பள்ளியில் சேர்க்கிறார்கள்.

அந்தப் பள்ளியின் தலைமையாசிரியன் பிராக்கிள்ஹஸ்ட் ஒரு போலித்தனமான, கொடிய, வதைக்கின்ற மனிதன். அந்தப் பள்ளியில் ஜேனுக்கு ஹெலன் பர்ன்ஸ் என்ற ஒரு நல்ல தோழி கிடைக்கிறாள். ஆனாலும் அவள் ஒரு கொள்ளை நோயில் இறந்துபோகிறாள். பிறகு பள்ளியின் தலைமை மாறும்போது ஜேனின் நிலையும் மாறுகிறது. அப் பள்ளியிலே படித்த பிறகு அங்கேயே ஆசிரியையாகவும் ஆகிறாள். பிறகு வேறிடங்களுக்கு விண்ணப்பிக்கிறாள்.

தார்ன்ஃபீல்டு என்ற பண்ணைவீட்டில் அடீல் என்ற பெண்ணுக்கு ஆசிரியை மற்றும் பாதுகாப்பாளியாக இருக்கும் பணி கிடைக்கிறது. அந்த எஸ்டேட் டின் மேற்பார்வை திருமதி ஃபேர்பாக்ஸ் என்ற நல்ல பெண்மணியிடம் இருக்கிறது. அதன் உரிமையாளர் ரோசஸ்டர் என்ற உணர்ச்சிமிக்க வாலிபர். அவர்மீது ஜேனுக்கு ஈடுபாடு ஏற்படுகிறது.

ரோசஸ்டரை ஒருமுறை தீயிலிருந்து ஜேன் காப்பாற்றுகிறாள். அந்தத் தீ விபத்துக்குக் காரணம் கிரேஸ்பூல் என்ற வேலைக்காரி என்கிறார் ரோசஸ்டர். ஆனால் அதை ஜேன் நம்ப இயலவில்லை. அது ஒரு மர்ம மாளிகையாக உள்ளது.

ஒருசமயம் ரோசஸ்டரின் உறவினளான பிளாஞ்ச் இன்கிராம என்பவள் அந்த மாளிகைக்கு வருகிறாள். ரோசஸ்டருக்கும் அவளுக்கும் திருமணம் நடக்கும் என்று ஜேன் எதிர்பார்க்கிறாள். ஆனால் ரோசஸ்டர் ஜேன்மீது தன் காதலை வெளிப்படுத்துகிறார். அவளும் ஒப்புக் கொள்கிறாள்.

திருமண நாளன்று இருவரும் மணம்புரிய இருக்கும் நிலையில், மேசன் என்பவன் ரோசஸ்டருக்கு ஏற்கெனவே பெர்த்தா என்ற பெண்ணுடன் திருமணமாகிவிட்டது என்ற செய்தியை வெளிப்படுத்துகிறான். ஆனால் அவள் பைத்தியம் என்று ரோசஸ்டர் கூறினாலும், ஒரு மனைவி ஏற்கெனவே இருப்பதனால் இரண்டாவது மணம் புரிய அவரால் இயலவில்லை. ரோசஸ்டர் அனைவரையும் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று பைத்தியமான பெர்த்தாவைக் காட்டுகிறார். அவளைக் கட்டுக்குள் வைத்திருப்பதே கிரேஸ்பூல் என்ற வேலைக்காரியின் பணி. மனமுடைந்த ஜேன் தார்ன்ஃபீல்டை விட்டுச் செல்கிறாள்.

ஏறத்தாழ பிச்சைக்காரி நிலைக்கு வந்துவிட்ட ஜேனை மேரி, டயானா, செயின்ட் ஜான் ரிவர்ஸ் என்ற உடன்பிறந்தோர் மூவர் காப்பாற்றுகின்றனர். செயின்ட் ஜான் மூலமாக ஜேனுக்கு ஆசிரியை வேலையும் கிடைக்கிறது. ஒருநாள் ஜேனின் தாய்மாமன் ஜான் அயர் அவளுக்குப் பெரும் சொத்தினை விட்டு இறந்துவிட்டார் என்று செய்தி கிடைக்கிறது. மேலும் இந்த உடன்பிறந்தோர் மூவரும் ஜேனின் கஸின்கள் என்ற செய்தியும் தெரிய வருகிறது. ஜேன் தன் சொத்தினை இந்த மூவருடனும் சமமாகப் பகிர்ந்து கொள்கிறாள்.

செயின்ட்ஜான் ஜேனைத் திருமணம் செய்துகொண்டு இந்தியா போக நினைக்கிறார். ஆனால் ஜேனை ரோசஸ்டரின் குரல் அழைப்பது போலத் தோன்றுகிறது. உடனே ஜேன் தார்ன்ஃபீல்டுக்கு ஓடுகிறாள். தார்ன்ஃபீல்டு மாளிகை எரிந்து கரியாகக் கிடக்கிறது. பெர்த்தா அதை எரித்துவிட்டாள் என்றும், அப்போது அவளும் இ்றந்து விட்டாள் என்றும் தெரியவருகிறது. பணியாளர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ரோசஸ்டரின் கண்களும் ஒரு கையும் போய்விட்டன. அவர் இப்போது ஃபெர்ன்டீன் என்ற இடத்தில் வசிக்கிறார். இருவரும் இப்போது திருமணம் செய்துகொள்ளத் தடையில்லை. எனவே திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஏறத்தாழ இரண்டாண்டுகள் கழித்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. ரோசஸ்டருக்கும் ஒரு கண் பார்வை திரும்புகிறது. அவரால் தன் குழந்தையைப் பார்க்க முடிகிறது என்று ஜேன் தெரிவிப்பதுடன் இக் கதை நிறைவுபெறுகிறது.

நாவலில் உண்மையான துன்பம் என்பது எந்நிலையிலும் ஜேனுக்கு ஏற்படுவதில்லை. சிறுசிறு இடர்கள் வந்தாலும் அவை உடனடியாக நீங்கி விடுகின்றன, அவற்றுக்கு மாற்றாகப் பெரிய நன்மைகளும் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட கதைகளைத்தான் காலங்காலமாக தமிழ் இரசிகர்கள் விரும்பி வந்திருக்கிறார்கள். கூடவே இனிய பாடல்களும் இருந்தால் யதேஷ்டம். ஏறத்தாழ எம்ஜிஆர் கதைகள் எல்லாவற்றின் ஃபார்முலாவும் இப்படியே இருப்பதைக் காணலாம்.

இந்த நாவலின் கதையும் தமிழில் சிற்சில மாற்றங்களுடன் சாந்தி நிலையம் என்ற திரைப்படமாக ஆக்கிக் கொள்ளப்பட்டது. இனிய கருத்துள்ள பாடல்களும் அதில் அமைந்திருந்தன. மேலும் ரோசஸ்டர் கண்பார்வை இழந்தது போன்ற பின்னிகழ்வுகள் படத்தில் இடம் பெறவில்லை. எனவே தமிழ்நாட்டுப் பார்வையாளர்களுக்குப் பிடித்தமான ஒரு திரைப்படமாக சாந்தி நிலையம் அமைந்ததில் வியப்பில்லை.


ஏழைபடும் பாடு

பிரெஞ்சு இலக்கியத்தில் முக்கிய இடம் வகிப்பவர் விக்டர் ஹ்யூகோ. அவர் எழுதிய “லே மிசரப்ளே“  (வறுமைவாய்த் துயரப்பட்டவர்கள்) என்ற  நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஐரோப்பிய நாவலாகக் கருதப்படுகிறது. 1862இல் வெளிவந்தது. ஐந்து பாகங்களாக அமைந்துள்ளது. சிக்கலானதொரு கதை. தைரியம், காதல், மனிதனின் இடைவிடாத் தாங்கும் சக்தி போன்ற பல செய்திகளை உள்ளடக்கியது. எல்லாவற்றையும் விட மேலாக, மானிட மாண்பினை வலியுறுத்தும் நாவலாக இது அமைந்துள்ளது என்பதுதான் இதன் இடைவிடாப் புகழுக்குக் காரணம்.
ழான் வல்ழான் (Jean Valjean) ஒரு மரம் வெட்டும் தொழிலாளியின் மகன். சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்தவன். கணவனை இழந்த ஆதரவற்ற தனது சகோதரிக்காகவும் அவளது ஏழு குழந்தைகளுக்காகவும் பாடுபடுகிறான். ஒருசமயம் ரொட்டிக் கடையில் திருடும்போது பிடிபடுகிறான். ஐந்தாண்டுகளுக்கு தண்டிக்கப்பட்டாலும், இடையிடையே சிறைச்சாலையிலிருந்து தப்புதல், சின்னச் சின்னக் குற்றங்கள் என்று தண்டனை நீண்டு, பத்தொன்து வருட சிறைத் தண்டனை அனுபவிக்கிறான். பின்னர் விடுதலையாகி வெளியில் வரும்போது அவன் ஒரு குற்றவாளி என்பதைக் குறிக்கும் மஞ்சள் பாஸ்போர்ட் தரப்படுகிறது. எங்குச் சென்றாலும் அவன் அதனைக் காட்டியாக வேண்டும். அவன் குற்றவாளி என்பதால் அவனுக்கு உண்ண உணவோ தங்கும் இடமோ எவரும் தருவதில்லை.

அவனது சகோதரியைப் பற்றியும் அவள் குழந்தைகளைப் பற்றியும் விசாரிக்கிறான். அவள் பாரீசில் ஏழு வயதான ஒரு குழந்தையோடு அச்சுக் கூடத்தில் கூலி வேலை செய்வதாகக் கேள்விப்படுகிறான். பின்னர்  அவன் பாரிசுக்கு அருகில் திக்னே என்ற நகருக்கு வருகிறான். அங்கு தனக்கு அடைக்கலம் கொடுத்த மிரியேல் என்ற பாதிரியார் வீட்டில் வெள்ளி விளக்குகளைத் திருடிக் கொண்டு ஓடுகிறான். போலீசாரிடம் சிக்கிக் கொள்கிறான். அவர்கள் ழான் வல் ழானைப் பாதிரியாரிடம் கொண்டு வருகிறார்கள். அந்த வெள்ளி விளக்குகளை அவன் திருடவில்லை என்றும், தானே அவனுக்கு கொடுத்தத்தாகவும் சொல்லிப் பாதிரியார் அவனைக் காப்பாற்றுகிறார். இதனால் மனம் திருந்திய ழான் தனது பழைய வாழ்க்கையை மறந்து மதிலெய்ன் என்ற பெயரில் தன்னுடைய உழைப்பால் மாண்ட்ரியால் நகரில் ஒரு கண்ணாடித் தொழிற்சாலையை நிறுவி ஏழை மக்களுக்கு உதவுகிறான்.  அவனுடைய சேவை மனப்பான்மை யைக் கண்ட அந்நகர மக்கள் அவனை மேயராக்குகிறார்கள். அப்போது ழானின் பழைய வாழ்க்கையைத் தெரிந்திருக்கும்  இன்ஸ்பெக்டர் ஜாவர் அந்த ஊருக்கு போலீஸ் அதிகாரியாக வருகிறான். அவன் பழைய குற்றவாளியான, இப்போது  மேயராக இருக்கும் ழானைக் கைது செய்ய அலைகிறான்.

மதிலெய்னின் தொழிற்சாலையில் பாந்தீன் என்ற பெண் வேலை செய்து வருகிறாள். காதலனால் கைவிடப்பட்டு ஒரு குழந்தைக்குத் தாயான அவளை விபச்சாரம் செய்ததாகக் கருதி இன்ஸ்பெக்டர் ஜாவர் கைது செய்கிறான். அவளது துன்பக் கதை ழான் மனத்தை உருக்குகிறது. தெனாடியர் என்பவனது விடுதியில் அவளது மகள் கோஸத் வேலைக்காரி யாகக் கஷ்டப்படுவதையும் அறிகிறான். மேயர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பாந்தீனை விடுதலை செய்கிறான் ழான். அவளது மகளை தெனாடியரிடமிருந்து மீட்டுத் தருவதாகவும் உறுதி சொல்கிறான். இதற்கிடையே ஒரு திருடனை  ழான் வல் ழான் என்று கைது செய்கிறார்கள். மனச்சாட்சி உறுத்த, கோர்ட்டில் தான்தான் உண்மையான ழான் வல் ழான் என்று சொல்லி அந்தக் கைதி  விடுதலை பெற வழி வகுக்கிறான். இன்ஸ்பெக்டர் ஜாவர் ழானைக் கைது செய்து சிறையில் அடைக்கிறான். தனது மகள் என்ன ஆவாளோ என்ற அதிர்ச்சியில் பாந்தீன் இறந்து விடுகிறாள்.

கைதிகளிடையே கப்பலில் வேலை செய்தபோது பாய்மரத்தில் ஏறிய ஒரு மாலுமி கீழே விழும் நிலையில் அவனைக் காப்பாற்றி விட்டு, கடலில் விழுந்து யாருக்கும் தெரியாமல் தப்பி விடுகிறான். உலகம் அவன் இறந்துவிட்டதாக நம்புகிறது.

தப்பிய அவன்  போஷல்வான் என்ற பெயரில் வாழும்போது, கோஸத்தைக் கண்டு பிடிக்கிறான். விடுதி நடத்தி வந்த தெனாடியரிடமிருந்து அவளைப் பணம் கொடுத்து, விடுதலை செய்து அவளை ஒரு கிறித்துவக் கன்னி மடத்தில் படிக்க வைக்கிறான்.  கோஸத்தை தனது வளர்ப்பு மகளாகவே ஏற்றுக் கொள்கிறான்.  வளர்ந்து பெரியவளான கோஸத்தை மாரியஸ் என்ற இளைஞன் விரும்புகிறான். அவளும் அவனை விரும்புகிறாள். ழான் வல் ழான் இறந்ததை நம்பாத இன்ஸ்பெக்டர் ஜாவர்  கடைசியில் அவனைக் கண்டு பிடித்து கைது செய்யப் போகிறான். ஆனால் தனது மனசாட்சி உறுத்த,  அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர்   ஸீன் நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான். இறுதியில் மாரியனையும் கோஸத்தையும்  சேர்த்து வைத்துவிட்டு ழான் இறக்கிறான்.

பிரான்சில் இந்தக் கதை நடக்கும் சமயம் பிரெஞ்சுப் புரட்சிக் காலம். இது வெளியான ஆண்டு 1862. அக்கால நிகழ்வுகளை இந்த நாவல் மிக யதார்த்தமாகச் சித்திரிக்கிறது. குறிப்பாக ‘கேலீஸ்’ என்ற தண்டனைக் கப்பல்களில் குற்றவாளிகள் படும் துயரம் அளவற்றது. இருப்பினும் நமது பார்வையில், ஒரு ஐரோப்பிய ஏழையால் கூட தொழிற்சாலை அமைக்க முடிகிறது, மேயர் ஆகும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கிறது,  ஜாதிகளால் பிளவுண்டு, மிகக் கேவலமான தொழில்களையும் செய்ய வைக்கப்படுகின்ற நம் நாட்டு ஏழைகள் இம்மாதிரிக் கனவு காணவும் முடியாது. இதைவிட மோசம், அடிமைகளாகவே விற்கப்பட்ட ஆப்பிரிக்கக் கருப்பர்களின் துயரம் இதைவிடப் பன்மடங்கானது.

இந்த நாவலை ”ஏழைபடும் பாடு“ என்ற பெயரில் யோகி சுத்தானந்த பாரதியார் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இது திரைப்படமாகவும் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

திரைப்படத்தில், ஜாவர் என்ற இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் எழுத்தாளரான சீதாராமன். தன் மிகச் சிறந்த நடிப்பினால் ஜாவர் சீதாராமன் என்றே அவர் அழைக்கப் படலானார். உடல் பொருள் ஆனந்தி, பணம் பெண் பாசம் போன்ற கதைகளை எழுதியுள்ளார். இவர்தான் ‘பட்டணத்தில் பூதம்’ திரைப்படத்தில் ‘ஜீ பூம்பா’ என்ற பூதமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.