பாரன்ஹீட் 451

(நமது உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்பார்கள். அதுபோல பாரன்ஹீட் 451 (ஏறத்தாழ 232.8 டிகிரி செல்சியஸ்) என்பது காகிதம் (புத்தகங்கள்) தீப்பிடித்து எரிகின்ற வெப்பநிலை ஆகும் என்று இந்நூலின் ஆசிரியர் ரே பிராட்பரி விளக்குகிறார்.)

புத்தகங்களால்தான் மனித வாழ்க்கை குழப்பமடைகிறது, கலகங்களும் புரட்சிகளும் உண்டாகின்றன, இந்நிலையைத் தடுக்க வேண்டும், ஆகவே எவரும் புத்தகங்கள் படிக்கலாகாது, எல்லாப் புத்தகங்களையும் எரித்துவிட வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு ஒடுக்குமுறைச் சமுதாயத்தை இந்த நாவல் காட்டுகிறது. தங்கள் சமூக மக்கள் சிக்கல், முரண்பாடு, குழப்பம் என்பவைகளை அறியலாகாது, அவற்றின் மூலங்களை அழித்துவிட வேண்டும், குடிமக்களுக்கு எல்லாம் எவ்விதச் சிக்கலுமற்ற மகிழ்ச்சி மட்டுமே கிடைக்கவேண்டும் என்று அந்நாட்டை ஆள்வோர் நினைக்கின்றனர்.  

கை மாண்டாக் என்பவன் இந்தச் சமூகத்தில் வாழும் ஒரு மனிதன். சாதாரண மனிதனல்ல, புத்தகங்களை எரிக்கும் படைவீரர்களில் ஒருவன். அந்த நிலையிலிருந்து மாறி, புத்தகம் படிக்கும் புரட்சியாளனாக அவன் எப்படி மாறுகிறான் என்பதைத்தான் பிராட்பரியின் பாரன்ஹீட் 451 என்ற கதை விவரிக்கிறது.

ஆனால் நாவலின் போக்கில் மாண்டாக் அவனது சக-தோழர்கள், குடிமக்கள் அவ்வளவு ஒன்றும் நன்றாக வாழவில்லை என்பதையும் அவர்கள் ஆன்மிக ரீதியாக உள்ளீடற்றவர்களாக இருப்பதையும் அறிகிறான். இவ்வுலகின் மக்கள் தொடர்ந்து விளம்பரங்களாலும், ஆழமற்ற பொழுதுபோக்குகளாலும் தாக்கப்படுகிறார்கள். அவர்களுக்குத் தங்களைப் பற்றிச் சிந்திக்க நேரம் தரப்படுவதில்லை. தங்களது உணர்வுநிலைகளைப் பற்றி ஆராயவும் அவர்களால் முடிவதில்லை. இதன் விளைவு, தொடர்ந்து சுயநலவாதிகளாகவும், இன்பத்தைத் தேடுவதாகவும், தொடர்பற்றவர் களாகவும், வெற்றுமனம் படைத்தவர்களாகவும் மட்டுமே வாழும் ஒரு சமூகம் உருவாகிறது.

நாவலின் தொடக்கத்தில் அவன் ஒளித்துவைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத் தொகுப்பை எரித்துகொண்டிருக்கிறான். தனது அனுபவத்தால் மகிழ்கிறான். எரிப்பது எவ்வளவு இன்பமானது? திரும்பி வரும்போது கிளாரிஸா மெக்லெல்லன் என்ற சுதந்திரமாகச் சிந்திக்கும் பெண்ணை முதன்முதலாக மாண்டாக் சந்திக்கிறான். முதலில் அவள் நடத்தை தன்னைக் குழப்புவதாக அவன் நினைக்கிறான். “நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?” என்று அவள் அவனைக் கேட்கிறாள். உடனடியாக பதில் சொல்ல முடியாமல் போனாலும், அதைப் பற்றியே அவனுக்குச் சிந்தனை ஏற்படுகிறது. முதலில் தனக்குள் எதிர்மறையாகவே பதில் சொல்லிக் கொள்கிறான். நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? அவள் என்ன நினைக்கிறாள்? நான் மகிழ்ச்சியாக இல்லை என்றா? ஆனால் பின்னால் அவனுக்குள் ஒரு உணர்தல் ஏற்படுகிறது. நான் நன்றாக இல்லை. மகிழ்ச்சியை நான் ஒரு முகமூடி போல அணிந்து கொண்டிருந்தேன். அதை அவள் கொண்டு ஓடிப்போய்விட்டாள். அவள் வீட்டுக்கதவைத் தட்டி அதைத் திரும்பப்பெற எனக்கு வழியில்லை என்று நினைக்கிறான்.

மாண்டாக் தன் மனைவி மில்ட்ரட் மிகுதியாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு உணர்வற்றுக் கிடக்கிறாள் என்பதை அறிகிறான். அவளைப் பார்ப்பதற்கு முன்னரே இந்த மாற்றம் ஏற்படுகிறது என்பது முக்கியமானது. மருத்துவக் குழுவினர் வந்து அவள் வயிற்றைச் சுத்தம் செய்து இரத்தம் ஏற்றுகிறார்கள். அவர்கள் இந்த மாதிரிதான் இப்போதெல்லாம் எங்கும் நிகழ்கிறது என்று அவனுக்குச் சொல்கிறார்கள். ஏறத்தாழ மரணத்துக்கருகில் செல்லும் அனுபவம் ஏற்பட்டும் அவன் மனைவிக்குள் எந்த மாற்றமும் இல்லை. அவள் மனம் முற்றிலும் வெற்றிடமாகி அவள் எப்போதும்-விழித்துக் கொண்டிருக்கும் போதும் கூட உணர்வற்றுத் தூங்கிக் கொண்டே இருக்கிறாள் என்பது அவனுக்குப் புலனாகிறது.

இடையில் கிளாரிஸா ஒரு காரில் அடிபட்டு இறந்துபோனாள் என்று அறிகிறான்.

தனது மகிழ்ச்சியின்மைக்கும், தனது மனைவியின் வெற்று நிலைக்கும் இடையில் இப்போதிருக்கும் நிலையில் ஏதோ குளறுபடி உள்ளது என்பது அவனுக்குப் புலனாகிறது. அவன் ஓய்வெடுக்கலாம் என்று கூறும்போது அவன் மனைவி சுவர் முழுவதும் தொலைக்காட்சிகள் எல்லாப் பக்கங்களிலும் நிறைந்த தன் வீட்டைவிட்டு வர மறுக்கிறாள். 

அவன் புத்தகங்களை எரிக்கச் செல்லும் இடத்தில் அதைத் தடுப்பதற்காக ஒரு பெண்மணி தன்னைத் தானே தீயிட்டு எரித்துக் கொண்டு சாகிறாள். இந்நிகழ்வு அவனுக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது. இதனால் அவன் பிரக்ஞைக்குள் தன் சமூகத்தில் ஆழமான பிரச்சினைகள் உள்ளன என்ற எண்ணம் ஆழத் தோன்றுகிறது.        

அவன் அந்தப் பெண்மணியின் வீட்டிலிருந்து ஒரு புத்தகத்தைத் திருடிக் கொண்டு வருகிறான். அது தற்செயலாக ஒரு பைபிளாக அமைந்துவிடு கிறது. அதனை எடுத்துக் கொண்டு வந்ததால் அவன் மேலதிகாரி கேப்டன் பியாட்டிக்கும் அவனுக்கும் இ்டையில் மோதல் உண்டாகிறது. இவன் இப்படித்தான் திருடித் திருடிப் புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறான் போலும் என்ற சந்தேகம் பியாட்டிக்கு எழுகிறது. உடனே அவன் வீட்டுக்கு பியாட்டி வருகிறான். அப்போது அவன் சமூகத்தில் புத்தகங்களைத் தடை செய்யவேண்டி ஏற்பட்ட சமூக, தொழில்நுட்ப மாற்றங்களின் வரலாற்றைச் சொல்லுகிறான். இந்தக் கதை மாண்டாக்-கின் உள்ளத்தில் எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறது. அவனை மேலும் புத்தகங்களைப் படிக்குமாறு தூண்டுகிறது. தான் செய்யும் தொழிலை அவன் வெறுக்கத் தொடங்குகிறான்.

புத்தகங்களின் மதிப்பைத் தேடும் முயற்சியில் மாண்டாக் ஈடுபடுகிறான். அவன் மனைவி மில்ட்ரட் அவன் படிப்பதை மிகக் கடுமையாக எதிர்க்கிறாள். ஒருநாள் அவன் பணிக்குச் சென்று வரும்போது மில்ட்ரடும் அவள் தோழியர் சிலரும் முற்றத்தில் உள்ள தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கிடையே சண்டை முற்றுகிறது.

அவர்களின் ஆழமின்மையைப் பொறுக்காத மாண்டாக், அவர்களைப் புத்தகத்திலிருந்து தான் படிக்கும் ஒரு பகுதியைக் கேட்குமாறு கட்டாயப் படுத்துகிறான். இதையெல்லாம் ஒரு ஜோக் போல அவன் செய்தாலும் அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக அவனை எரிக்கும் படையிடம் பிடித்துக் கொடுக்கிறார்கள்.

சிக்கல் முற்றுகிறது. அவன் தலைவனான பியாட்டி, மான்டாக்-ஐக் கூப்பிட்டு “உன் வீட்டை எரித்துவிடு” என்கிறான். அவனுக்கு மான்டாக் தன் வீட்டில் ஏதேனும் புத்தகங்களை ஒளித்து வைத்திருக்கலாம் என்று சந்தேகம். ஆனால் கட்டளையை மான்டாக் ஏற்பதற்கு பதிலாக, பியாட்டியைக் கொளுத்திவிட்டு ஓடிப்போகிறான். நகரத்தைவிட்டு வெளியே வந்து ஓர் ஆற்றில் மிதந்து சென்று நாட்டுப்புறத்திற்குள் செல்கிறான். அங்கே அவன் ஓர் கூட்டத்தைக் காண்கிறான். அவர்கள் அரிய புத்தகங்களைத் தாங்கள் மனப்பாடம் செய்துவைத்துக் காப்பாற்றுகிறார்கள். அப்போது அவர்களுக்கு நகரத்தின்மீது ஒரு குண்டு விழும் சத்தம் கேட்கிறது. நகரம் எரிந்து பாழாகிறது. மாண்டாக், அந்த அறிஞர்கள் குழுவை நகரத்தை நோக்கி அழைத்துச் செல்கிறான். மீண்டும் அந்த நகரத்தைப் புதிய முறையில் ஆக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. நாவலின் இறுதி, மாண்டாக் முற்றிலும் புதிய மனிதனாக மாறிவிட்டதைக் காட்டுகிறது. அவனால் புத்தகங்களைப் படித்து முற்றிலும் செரித்துக் கொள்ள முடியவில்லை என்றாலும், தனது சமூகத்தைவிட்டு வெளியேறி, புதியதொரு சமூகத்தைக் கட்ட வேண்டும் என்பதில் அவனுக்கு ஆர்வம் இருக்கிறது. பழைய சமூகம் அறிவை மறுத்ததால் அழிந்து போன சமூகம். புதிய சமுகத்தின் அடித்தளமாக அறிவே இருக்கும்.

ரே பிராட்பரி ஒரு புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர். 1920இல் பிறந்து 2012இல் மறைந்தார். இந்த நாவலைத் தவிர, டான்டிலியன் ஒயின், தி வெல்ட், செவ்வாய்க் கிரகக் கதைகள் எனப் பல நாவல்களை எழுதியுள்ளார். அவரது கதைகள் ஒரு உடோப்பிய வகையான சமூகத்திற்கு பதிலாக, அதற்கு நேர் எதிரான ஒரு அவலமான (டைஸ்டோபிய வகைச்) சமூக அமைப்பைக் காட்டுகின்றன.


மோரூவின் தீவு

எச்.ஜி. வெல்ஸ் என்ற புகழ்பெற்ற ஆங்கிலப் படைப்பாளரின் நாவல் இது. அறிவியல் எந்த எல்லைவரை செல்லும், எதுவரை எப்படி அதைப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய கேள்விகளைப் படிப்போர் மனத்தில் உருவாக்கும் நாவல் இது. பொதுவாக எச். ஜி. வெல்ஸின் நாவல்கள் அனைத்துமே இத்தன்மையைக் கொண்டவைதான். 

எட்வர்ட் பிரெண்டிக் என்ற உயிரியலாளன் கப்பல் உடைந்து கடலில் சில நாட்களாகத் தத்தளித்தபோது, மற்றொரு சிறு கப்பலில் வந்த டாக்டர் மாண்ட்கோமரி என்பவர் அவனைக் காப்பாற்றுகிறார். தானும் அந்தக் கப்பலில் வரும் கூண்டிலடைக்கப்பட்ட மிருகங்களும் ஒரு பெயர் தெரியாத தீவுக்குச் செல்வதாகச் சொல்கிறார். ஆனால் அந்தத் தீவை அடைந்தபோது டாக்டர் அவனைத் தீவுக்குள் உடனழைத்துச் செல்வதாக இல்லை. ஆயினும் கேப்டன் அவனைக் கடலில் பிடித்துத் தள்ளிய பிறகு வேறு வழியின்றி மாண்ட்கோமரி, அவனை அழைத்துச் சென்று, அந்தத் தீவிலிருக்கும் டாக்டர் மோரூ-வை அறிமுகப்படுத்துகிறார். பிரெண்டிக்கை ஒரு வீட்டின் முன்னிடத்தில் தங்க வைக்கின்றனர்.

தீவைச் சுற்றி வரும்போது, பிரெண்டிக் விலங்குத்தன்மையும் மனிதத் தன்மையும் கலந்திருக்கும் பல விசித்திரப் பிராணிகளைக் காண்கிறான். வீட்டுக்கு வந்து மாண்ட்கோமரியை விளக்கம் கேட்டபோது அவர் தவிர்த்து விடுகிறார்.

மறுநாள் மோரூ ப்யூமா என்ற விலங்கை ஆய்வுக்குக் கொண்டு செல்கிறார். அதன் வலிநிறைந்த கதறல்கள் பிரெண்டிக்கைக் காட்டுக்குள் ஓட வைக்கின்றன. அங்கும் பாதி மனிதன்-பாதி மிருகமாகக் காணப்படுபவர்கள் அவனைத் துரத்த, ஓடிவந்து தூங்கிவிடுகிறான். மறுநாள் எழுந்து கதவைத் திறந்து பார்த்தபோது மோரூவின் மேஜையில் மனிதவிலங்காக இருக்கும் ஓர் உருவத்தைக் காண்கிறான். மனிதர்களை வைத்து மோரூ ஆய்வு செய்கிறார் என்றும் அடுத்தபடி தன்னைத்தான் மோரூ ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் போகிறார் என்றும் நினைத்து பயந்து காட்டுக்குள் ஓடுகிறான். அங்கும் ஒரு குரங்குமனிதனையும் அவனைப் போன்ற விலங்கு மனிதர்கள் பலரையும் காண்கிறான். அந்த விலங்குமனிதர்கள் மந்திரம் போன்ற பாடலைப் பாடி ஒவ்வொரு பல்லவிக்கும் இறுதியில் “நாங்கள் மனிதர்கள் இல்லையா?” என்றும் மோரூவைப் பாராட்டியும் முடிக்கின்றன. பிரெண்டிக்கையும் அவை தங்களுக்குள் ஒருவனாகக் கருதுவதுபோலத் தோன்றுகிறது.

திடீரென்று மோரூ அங்கே வரவும், பிரெண்டிக் பயந்து கடலுக்குள் குதிக்கச் செல்கிறான். ஆனால் மாண்ட்கோமரியும் மோரூவும் குறுக்கிடுகின்றனர். தான் மனிதர்களை ஆய்வு செய்வதில்லை என்றும் விலங்குகளை மட்டுமே மனிதர்களாக மாற்றும் ஆய்வைப் பதினொரு ஆண்டுகளாகச் செய்துவருவதாகவும் மோரூ சொல்கிறார். ஆனால் அவர் இன்னும் முழுவதுமாகத் தன் பணியில் வெற்றி பெறவில்லை.

மாண்ட்கோமரி, ஒரு குடிகாரர். அன்பாக இருப்பினும், அவர் மனித சமூகத்துக்கு ஒவ்வாதவராகவும், மோரூவின் உதவியாளாக இருப்பதற்குப் பொருத்தமானவராகவும் தோன்றுகிறார்.

ஒருநாள் மாண்ட்கோமரியும் பிரெண்டிக்கும் காட்டுக்குள் செல்லும்போது பாதி உண்ணப்பட்ட ஒரு முயலைக் காண்கின்றனர். மாமிசம் உண்பது அந்தத் தீவில் தடை செய்யப்பட்ட ஒன்று. மோரூ ஒரு சிறுத்தை மனிதன்தான் அவ்வாறு செய்தது என்பதைக் கண்டுபிடிக்கிறார். தண்டனை, மீண்டும் மோரூவின் ஆய்வுமேஜைக்குச் செல்வதுதான். (அதை வலிவீடு என்று விலங்குமனிதர்கள் சொல்கின்றனர்.)

ஆனால் மோரூ ஆய்வுக்கு உட்படுத்த முடியாதமாதிரி, பிரெண்டிக் மனமிரங்கி, அதைக் கொன்றுவிடுகிறான். இன்னும் விலங்குகள் போலவே நடந்துகொள்ளும் அரைவிலங்குகள் அங்கு வேறுசிலவும் இருக்கின்றன.  

ஆறுவாரங்கள் கழித்து, ஆய்வுக்கு வந்த ப்யூமா தப்பிவிடுகிறது. அதைத் தொடர்ந்து செல்லும் மோரூவையும் கொன்றுவிடுகிறது. அதனால் விலங்கு மனிதர்களுக்கு மோரூவின் சக்தியில் சந்தேகம் உண்டாகிறது.

மது அருந்தித் தப்பிச்செல்லும் மாண்ட்கோமரி, விலங்கு மனிதர்களுடன் அமர்ந்து மதுவைப் பகிர்ந்துகொள்கிறார். பிரெண்டிக் தடுத்தும் அவ்வாறு பகிர்ந்துகொள்ளும்போது ஏற்படும் சண்டையில் இறந்துபோகிறார்.      

இப்போது தீவிலுள்ள ஒரே மனிதன் பிரெண்டிக் மட்டுமே. ஏறத்தாழ பத்து மாதங்கள் அவன் அத்தீவில் தனியாக இருக்க நேரிடுகிறது. வேறு வழியின்றி விலங்குமனிதர்கள் கூட்டத்தில் அவனும் ஒருவனாக வாழ நேரிடுகிறது. ஆனால் அதேசமயத்தில் அக்கூட்டத்தின் ஒழுங்கும் அமைப்பும் சிதைந்து விலங்கு மனிதர்கள் பழையபடியே விலங்குகளாக மாறத் தொடங்குகிறார்கள். நாய் மனிதன் அவனுக்கு உற்ற துணைவனாக இருக்கிறான், ஆனால், கழுதைப்புலிப் பன்றியால் கொல்லப்படுகிறான். அதை பிரெண்டிக் தன் துப்பாக்கியால் கொல்கிறான்.

அவன் ஒரு தெப்பத்தைக் கட்டி மோரூவின் தீவிலிருந்து தப்பிச் செல்ல நினைக்கிறான். ஆனால் தான் ஒரு தச்சன் அல்ல, தெப்பம் கட்ட தன்னால் முடியாது என்று உணர்கிறான். ஆனால் தக்க தருணம் வாய்க்கிறது. இரண்டு மனிதர்கள் போரிட்டு இறந்த ஒரு சிறுபடகு அத்தீவின் கரையில் ஒதுங்குகிறது. அதில் தப்பிச் செல்கிறான், மூன்று நாள் கழித்து ஒரு கப்பலினால் காப்பாற்றப் படுகிறான். அதில் தன் அனுபவங்களைக் கூறும்போது கப்பலில் உள்ளவர்கள் அவனைப் பைத்தியம் என்று நினைக்கின்றனர். அதிலிருந்து மீள்வதற்காக, கடலில் நினைவிழந்தவன் போல பிரெண்டிக் நடிக்கிறான். இறுதியாக மோரூவின் தீவுக்குச் சென்றதிலிருந்து ஓராண்டு கழித்து இங்கிலாந்தை அடைகிறான், ஆனால் மற்ற நாகரிகமடைந்த மனிதர்களுடனும் இயல்பாக அவனால் இருக்க முடியவில்லை. அவர்கள் யாவரும் விலங்குநிலைக்குத் திரும்பி விடக்கூடய பாதி-விலங்கு மனிதர்கள் என்று அவனுக்குத் தோன்றுகிறது. ஆகவே தனிமையில் இருந்து கொண்டு வேதியியல், வானியல் ஆகிய துறைகளில் ஆய்வில் ஈடுபட்டவாறு அமைதியாகத் தன் காலத்தைக் கழிக்கிறான்.  

எச். ஜி. வெல்ஸ் (1866-1946) மிகச் சிறந்த ஆங்கில எழுத்தாளர். அறிவியல் புதினத்தின் தந்தை என்று புகழப்படுபவர். நாவல்கள் மட்டுமின்றி வேறுபல துறைகளிலும் எழுதியவர். கண்ணுக்குப் புலப்படாத மனிதன், டாக்டர் மோரூவின் தீவு, கால யந்திரம், உலகங்களின் போர், டோனோ பங்கே எனப் பலப்பல நாவல்களை எழுதியவர். ஏறத்தாழ ஜூல்ஸ் வெர்னுடன் அறிவியல் நாவல்கள் எழுதியதிலும் முன்னோடித் தன்மையிலும் ஒப்பிடத் தகுந்தவர் என்றாலும், ஜூல்ஸ் வெர்னைவிட இவர் படைப்புகளில் மனித இனம் குறித்த அக்கறை சிறப்பாக அமைந்திருக்கிறது.