புதுநெறி ஆத்திசூடி

பாவேந்தர் பாரதிதாசன் வழங்கிய புதுநெறி ஆத்திசூடி

  1. அனைவரும் உறவினர்
  2. ஆட்சியைப் பொதுமைசெய்
  3. இசைமொழி மேலதே
  4. ஈதல் இன்பம்
  5. உடைமை பொதுவே
  6. ஊன்றுளம் ஊறும்
  7. எழுது புதியநூல்
  8. ஏடு பெருக்கு
  9. ஐந்தொழிற்கு இறைநீ
  10. ஒற்றுமை அமைதி
  11. ஓவியம் பயில்
  12. ஔவியம் பெருநோய்
  13. கல்லார் நலிவர்
  14. காற்றினைத் தூய்மைசெய்
  15. கிழிப்பொறி பெருக்கு
  16. கீழ்மனம் உயர்வுசெய்
  17. குள்ள நினைவுதீர்
  18. கூன்நடை பயிலேல்
  19. கெடுநினைவு அகற்று
  20. கேட்டு விடையிறு
  21. கைம்மை அகற்று
  22. கொடுத்தோன் பறித்தோன்
  23. கோனாட்சி வீழ்த்து
  24. சதுர்பிறர்க்கு உழைத்தல்
  25. சாதல் இறுதி
  26. சிறார்நலம் தேடு
  27. சீர்பெறு செயலால்
  28. சுவைஉணர் திறங்கொள்
  29. சூழ்நிலை நோக்கு
  30. செல்வம் நுண்ணறிவாம்
  31. சேய்மை மாற்று
  32. சைகையோடு ஆடல்சேர்
  33. சொற்பெருக்கு ஆற்றல் கொள்
  34. சோர்வு நீக்கு
  35. தளையினைக் களைந்து வாழ்
  36. தாழ்வு அடிமைநிலை
  37. திருஎனல் உழுபயன்
  38. தீங்கனி வகைவிளை
  39. துன்பம் இன்பத்தின்வேர்
  40. தூயநீ ராடு
  41. தெருவெலாம் மரம்வளர்
  42. தேன்எனப் பாடு
  43. தைக்க இனிது உரை
  44. தொன்மை மாற்று
  45. தோல்வி ஊக்கம்தரும்
  46. நடுங்கல் அறியாமை
  47. நால்வகைப் பிறவிபொய்
  48. நினைவினில் தெளிவுகொள்
  49. நீணிலம் உன்இல்லம்
  50. நுண்ணிதின் உண்மைதேர்
  51. நூலும் புளுகும்
  52. நெடுவான் உலவு
  53. நேர்பயில் ஆழ்கடல்
  54. நைந்தார்க்கு உதவிசெய்
  55. நொடிதோறும் புதுமைசேர்
  56. நோய் தீ யொழுக்கம்
  57. பல்கலை நிறுவு
  58. பார்ப்பு பொதுப்பகை
  59. பிஞ்சுபழுக் காது
  60. பீடு தன்மானம்
  61. புதுச்சுவை உணவுகாண்
  62. பூப்பின் மணங்கொள்
  63. பெண்ணோடு ஆண்நிகர்
  64. பேய்இலை மதம்அலால்
  65. பைந்தமிழ் முதல்மொழி
  66. பொழுதென இரவுகாண்
  67. போர்த்தொழில் பழகு
  68. மறைஎனல் சூழ்ச்சி
  69. மாறுவது இயற்கை
  70. மிதியடியோடு நட
  71. மீச்செலவு தவிர்
  72. முகச்சரக்காய் வாழ்
  73. மூப்பினுக்கு இடம்கொடேல்
  74. மெய்கழிவு அயற்கின்னா
  75. மேலை உன் பெயர்பொறி
  76. மையம் பாய்தல் தீர்
  77. மொடுமாற்றுப் பொது இன்னா
  78. மோத்தலில் கூர்மை கொள்
  79. வறுமை ஏமாப்பு
  80. வாழாட்கு வாழ்வு சேர்
  81. விடுதலை உயிக்குயிர்
  82. வீடுஎனல் சாதல்
  83. வெறும்பேச்சு பேசேல்
  84. வேளையோடு ஆரஉண்
  85. வையம் வாழ வாழ்

நன்றி-பாவேந்தர்பாரதிதாசன் பேரவை


மேகதாது அணை

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்துவருகிறது. கடந்த காலங்களில் பல்வேறு காலகட்டங்களில் கர்நாடக அரசு முயற்சித்தும் தமிழக அரசின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டும் வந்தது. 1996ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. மேகதாதுவில் 2 நீர்மின் திட்டங்களையும் ஓகேனக்கல்லில் தேசிய நீர்மின் கழகம் அமைக்கும் என்கிற திட்டத்தையும் வைத்தது. தமிழ்நாடும் கர்நாடகாவுக்கு இதுகுறித்து பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின.

ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்நாடகா தாங்களாகவே மேகதாது திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்துபோது அந்த பேச்சுவார்த்தையிலிருந்து தமிழ்நாடு விலகிக்கொண்டது. ஒன்றியத்தில் பாஜக வந்தபிறகு அணை கட்டுவதற்கான முயற்சிகள் வேகம்பிடிக்க ஆரம்பித்தது . காவிரி நடுவர் ஆணைய உத்தரவை அமுல்படுத்த உச்சநீதிமன்றம் தெரிவித்து அரசிதழில் வெளியான பிறகு, கர்நாடகாவிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அணை கட்டுவதற்கான வேகம் அதிகரித்துள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தில் எழும் எதிர்ப்பை சமாளிக்க ஒன்றிய அரசு யோசித்து உருவாக்கிய திட்டம்தான் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம். மேகதாதுவில் அணை காட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சினையும் கிடையாது என கர்நாடக அரசு சொல்வது உண்மைக்குப் புறம்பானது.

மேகதாது அணை, கிருஷ்ணராஜ சாகர்-கபினி மற்றும் மேட்டூர் அணைகளுக்கு இடையே கட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மொழியில் “balancing reservoir” என்று அழைக்கப்படும் மேகதாது அணை கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்த்தேக்கங்களிலிருந்து வரும் நீரை தேக்கி குடிநீர் மற்றும் மின்னுற்பத்திக்கு பயன்படுத்துவதுதான் நோக்கம் என கர்நாடக அரசு சொல்கிறது.

தமிழ்நாட்டின் பார்வையில் மேகதாது அணையின் அடிப்படையே சிக்கல்தான். கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்தேக்கத்திலிருந்து வெளிவரும் “நீர்வழிப் பாதையில்” 67 டிஎம்சி கொள்ளளவில்  மேகதாது அணை அமைய இருப்பதால் கர்நாடகாவிற்கும் மேட்டூர் அணைக்கும் இடைப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர்  தமிழகத்திற்கு கிடைக்காமல் போகும்.

கடந்த 25 ஆண்டுகளில்,குறிப்பாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீர் இந்த இரு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீர்தான். கர்நாடகா திறந்துவிடும் நீர் கிடையாது. கிருஷ்ணராஜ சாகர் – மேட்டூர் அணைகளுக்கு இடையே உள்ளநீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து ஓடிவரும் நீரால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது.

இதுதான் கர்நாடகாவை உறுத்துகிறது.இதை குறிவைத்துதான் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் துடியாய்த் துடிக்கிறது.

கோதாவரி தண்ணீரை தமிழகத்திற்கு தருவதற்கு நதியின் வடிகால் பகுதியில் உள்ள ஐந்து மாநிலங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டாலும் தண்ணீர் வருமா என்பது பெரிய கேள்விதான். இந்தியாவின் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளதை நாம் நினைவில் கொண்டால் எந்த கோதாவரி தண்ணீரை திருப்புவீர்கள் என கேள்வி கேட்கலாம்.

ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசு நடத்தும் இந்த சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படவேண்டும், கோதாவரி-காவிரி இணைப்பு குறித்த எந்த கோரிக்கையையும் வைக்க தேவையில்லை.

தமிழ்நாடு அரசு கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் என்கிற அறிவிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது. கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தபோது ஓடிச்சென்று வரவேற்றார் அன்றைய முதல்வர்  எடப்பாடி.

நதிகளை இணைக்கிற அறிவிப்பே காவிரியில் நமக்கு உள்ள உரிமையை மறுக்கச் செய்வதற்கான வேலை என அப்போதேபூவுலகு  உள்ளிட்ட அமைப்புகள் எச்சரித்திருந்தனர். கடந்த வாரத்தில் மேகதாது அணை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த நாடகத்தைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

இவ்விதமாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது.

எந்த நதிநீரும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. இப்போது கிருஷ்ணா நதிநீர் சென்னைக்குக் கிடைப்பதைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். எல்லா நதிகளும் ஆந்திரத்தின் மையத்தில் உள்ளன. அங்கிருந்து தமிழ்நாட்டு எல்லைக்குள் நீரைக் கொண்டுவருவது அரிது, வர முடிந்தாலும், 90 சதவீத நதிநீர் இணைப்புப் பகுதி ஆந்திரத்தின் எல்லைக்குள் இருப்பதால் அவர்களே பயன்பெறுவார்கள் (திருடிக் கொள்வார்கள் என்பது சற்றே வன்மையான தொடர்).

இனிமேலும் கர்நாடகா எந்த அணையும் கட்டாமல் தடுப்பதும் நீரைச் சிக்கனமாகக் கையாள்வதும் மட்டுமே தமிழகத்தின் டெல்டாப் பகுதியின் நீர்த்தேவையை நிறைவு செய்யும். கோதாவரி இணைப்பே சாத்தியமில்லை என்கிறபோது கங்கை-காவிரி இணைப்பு முதலிய திட்டங்கள் பற்றிப் பேசவே வேண்டாம். ஏறத்தாழ கடல்மட்ட அளவில் உள்ள கங்கைச் சமவெளியிலிருந்து 1000 மீட்டருக்குமேல் தக்கணப் பீடபூமியில் நீரை ஏற்றி, பிறகு கோதாவரிச் சமவெளியில் இறக்கி, கிருஷ்ணா, பெண்ணை சமவெளியைத் தாண்டி, மீண்டும் 500 மீட்டருக்கு மேல் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைத் தாண்டி, அப்புறம் தமிழ்நாட்டுப் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாற்றாங்கரைப் பகுதிகளைத் தாண்டி காவிரியில் கொண்டு வந்து இணைப்பார்களாம். எந்த முட்டாள் பொறியியலாளன் சொன்ன ஐடியாவோ இது?


உலகைச் சுற்றி எண்பது நாட்கள்

இன்று உலகத்தைச் சுற்றுவது என்பது ஒருவரிடம் உள்ள பணத்தைப் பொறுத்திருக்கிறது. பெரும்பணக்காரச் “சூரர்கள்” சொந்த விமானத்தில் இரண்டே நாளில்கூட உலகைச் சுற்றிவிட்டுப் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடலாம். “சூரர்” அல்லாதோர் வாழ்நாளெல்லாம் முயன்றாலும் விமானநிலையத்தின் வாசலைக்கூட தாண்டமுடியாது. இக்கதை எழுதப்பட்ட காலத்திலும் இதுதான் நிலைமை என்றாலும், அக்கால ‘அம்பானி’ ஒருவர் உலகத்தை 80 நாட்களில் சுற்ற எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருந்தது என்பதைத்தான் இக்கதை விவரிக்கிறது.

கதைத்தலைவர் பிலியாஸ் ஃபாக். அவரது வேலையாள் ஒரு பிரெஞ்சுக் காரன், பஸ்பார்தூ(த்). தான் உறுப்பினராக இருக்கும் ரிஃபார்ம் கிளப்பில் உலகைச் சுற்றி 80 நாட்களில் போய்வந்துவிடுவேன் என்று ‘பெட்’ கட்டுகிறார் ஃபாக். பந்தயப்பணம் அப்போது(1830) இருபதாயிரம் பவுண்டு. அவரது சொத்தில் பாதி.

அக்காலத்தில் விமானம் கிடையாது. மொத்தப் பயணமும் இரயில், கப்பல் வழியாக மட்டுமே. அவர் உலகைச் சுற்றுவேன் எனப் பந்தயம் கட்டக் காரணமாக இருந்தவை இரண்டு நிகழ்வுகள்.

ஒன்று, இந்தியாவின் குறுக்கே பம்பாய்-கல்கத்தா இரயில் பாதை அமைக்கப்பட்டு விட்டது என்ற செய்தி. மற்றது, அமெரிக்காவின் குறுக்கே மேற்குக்கரை முதல் கிழக்குக் கரை வரை இரயில் பாதை முற்றுப் பெற்றுவிட்டது என்ற செய்தி.

  1. லண்டனிலிருந்து சூயஸ் வழியாக இந்தியாவை (பம்பாயை) அடைதல்.
  2. பம்பாயிலிருந்து கல்கத்தா சென்று, அங்கிருந்து ஹாங்காங் செல்லுதல்.
  3. ஹாங்காங்கிலிருந்துயோகஹாமா வழியாக சான்பிரான்சிஸ்கோ.
  4. அங்கிருந்து அமெரிக்காவினூடாகப் பயணித்து நியூயார்க் அடைதல்.
  5. நியூயார்க்கிலிருந்து லண்டன் திரும்புதல் —

என்பது அவர் பயணத்திட்டம். இதைத் தான் எண்பதே நாட்களில் செய்வதாக அவரது பந்தயம். ஆனால்…

இங்கிலாந்து பேங்க்கைக் கொள்ளையடித்து விட்டுத்தான் உலகை அவர் ஜாலியாகச் சுற்றுகிறார் என்று அவரைக் கைதுசெய்ய ஃபிக்ஸ் என்ற சிஐடி சூயஸில் காத்துக் கொண்டிருக்கிறான். பிடியாணை வராமல் தாமதப் படுகிறது. அவரை ஏதாவதொரு இங்கிலாந்தின் காலனியப் பகுதியில்–இந்தியாவிலோ ஹாங்காங்கிலோ–கைது செய்துவிடுவது அவன் திட்டம்.

பம்பாயில் பஸ்பார்தூ ஓர் இந்துக்கோயிலுக்குள் ஷூவோடு நுழைந்து மாட்டிக் கொள்கிறான். எப்படியோ உயிர் தப்பித்து இரயிலைப் பிடித்தால், கல்கத்தா இரயில்பாதை முற்றுப் பெறவில்லை என்று தெரிகிறது. பாதி வழியில் இறங்கி, அவர்கள் யானை ஒன்றை அமர்த்திக் கொண்டு பயணம் செய்கிறார்கள். கணவன் இறந்ததால் உடன்கட்டை ஏறுமாறு செய்யப்பட்ட அவுதா என்ற பெண்ணை ஃபாக், பஸ்பார்தூ இருவரும் வழியில் காப்பாற்றி உடனழைத்துச் செல்கிறார்கள். இந்துக்கோயிலில் பஸ்பார்தூ புகுந்ததை வைத்துக் கல்கத்தாவில் கைதுசெய்து தாமதப்படுத்துகிறான் ஃபிக்ஸ். ஆனால் பணம் கொடுத்துச் சமாளித்து, ஹாங்காங் செல்கிறார் ஃபாக்.

பஸ்பார்தூவுக்கு போதை மருந்தளித்து அவனைத் தனியே பிரித்து விடுகி றான் ஃபிக்ஸ். அதன் மூலம் ஹாங்காங்கிலிருந்து யோகஹாமா (ஜப்பான்) செல்லும் கப்பலில் ஃபாக் செல்லவிடாமல் தடுக்கிறான். அதனால் ஷாங்காய் சென்று அதேகப்பலைப் பிடிக்க நினைக்கிறார் ஃபாக். எப்படியோ தப்பி முன்னால் யோகஹாமா வந்துவிட்ட பஸ்பார்தூவை ஒரு சர்க்கஸ் குழுவில் கண்டுபிடிக்கிறார். பிறகு எல்லாரும் (நண்பனாக நடித்து உடன் வருகின்ற ஃபிக்ஸ் உள்பட) சான்ஃபிரான்சிஸ்கோ செல்கிறார்கள். இடையில் அவுதா – ஃபாக் காதல்!

சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து நியூ யார்க் செல்லும் இரயிலைப் பிடிக்கி றார்கள். வழியில் அரசியல் சண்டைகள். பிறகு இரயில் ஒரு வலுவற்ற பாலத்தைக் கடந்து செல்ல முடியாத நிலை. எப்படியோ மிக வேகமாக ஓட்டிச் சென்று இரயில் அதைக் கடக்குமாறு செய்கிறார்கள்.

அடுத்து பிரெய்ரிப் பகுதியில் சிவப்பிந்தியர்களின் தாக்குதல் நிகழ்கிறது. அவர்கள் பஸ்பார்தூவைக் கடத்திச் செல்கிறார்கள். ஃபாக் அவர்களைத் தொடர்கிறார். அவர்களை விட்டு இரயில் சென்றுவிடுகிறது. பஸ்பார்தூ வைக் காப்பாற்றி அழைத்துவரும் ஃபாக், ஸ்லெட்ஜ் மூலமாகச் சென்று அடுத்த இரயிலைப் பிடிக்கிறார். ஆனால் அவர்கள் செல்வதற்குள் இங்கிலாந்து செல்லும் கப்பல் போய்விடுகிறது.

என்ன செய்வது இப்போது? மனம் தளராத ஃபாக், ஒரு கப்பலையே வாங்கு கிறார். வழியில் அதற்கு எரிபொருள் தீர்ந்துபோனதால், அக்கப்பலின் மரத் தையே எரித்து, இன்னல் பட்டு, அயர்லாந்து அடைந்து, பிறகு இங்கிலாந் தின் லிவர்பூலை அடைகிறார். அங்கே ஃபிக்ஸ் ஃபாக்-கைக் கைதுசெய்து தாமதப்படுத்துகிறான். [ஆனால் மூன்றுநாட்கள் முன்னதாகவே உண்மை யான பேங்க் திருடன் கைது செய்யப்பட்டுவிட்டான் என்ற செய்தி அவனுக் குக் கிடைக்கிறது. ஃபிக்ஸின் ‘உலகப் பயணம்’, முழுவிரயம்!]

ஃபாக் அடுத்த இரயிலில் லண்டனை அடையும்போது தான் வரவேண்டிய நேரத்திற்குச் சிலநிமிடங்கள் தாமதமாகிவிட்டதையும் பந்தயத்தில் தான் தோற்று விட்டதையும் காண்கிறார்.

பாதிச் சொத்து பயணத்தில் போயிற்று, மீதிச் சொத்து பந்தயத்திற்குப் போயிற்று. அவுதாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப் பஸ்பார்தூவை சர்ச்சுக்கு அனுப்புகிறார். அவன் மகிழ்ச்சியோடு துள்ளிக்குதித்துக் கொண்டு திரும்பி வருகிறான்–அவர்கள் கிழக்குப் புறமாக உலகைச் சுற்றியதால் ஒருநாள் கூடுதலாக அவர்களுக்குக் கிடைத்திருக் கிறது! (அந்தக் காலத்தில் டேட்லைன் வகுக்கப்படவில்லை). ஆக, உடனே புறப்பட்டுத் தன் நேரத்துக்குச் சரியாக ஐந்து நிமிடம் இருக்கும்போது ரிஃபார்ம் கிளப்பை அடைந்து, தன் பந்தயப் பணத்தை வெல்லுகிறார் ஃபாக்!

இந்த நாவலின் ஆசிரியர் ஜூல்ஸ் வெர்ன் (1828-1905) பிரெஞ்சுக்காரர். அறிவியல் புதினத்தின் தந்தை.

வெர்ன் அக்காலத்தில் கற்பனை செய்ததெல்லாம்–நீர்மூழ்கிக்கப்பல்கள் உள்பட–அவரது எட்டுக் கற்பனைகளேனும் பிற்காலத்தில் அப்படியே அறிவியலினால் உண்மையாயின என்று சொல்வார்கள். விண்வெளி முதல் ஆழ்கடல் வரை, மின்விளக்குகள் முதல் கணினி வரை அவர் தொடாத விஷயங்கள் இல்லை. நிலவுக்குச் செல்வது, எரிமலைக்குள் பயணிப்பது, வானில் பறப்பது முதல், நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்குள் சுற்றுவது, பூமியின் மையத்துக்கே செல்வது என்றெல்லாம் கற்பனையைப் பறக்கவிட்டவர் அவர்! “நாம் எல்லாருமே, ஏதோ ஒரு வகையில், ஜூல்ஸ் வெர்னின் வாரிசுகள்தான்” – புகழ்பெற்ற அறிவியல் புதின ஆசிரியர் ரே பிராட்பரி.

“அறிவியல் தவறுகளினால் ஆனதுதான். ஆனால் அவை பயனுடைய தவறுகள். ஏனென்றால் அவை கொஞ்சம் கொஞ்சமாக உண்மையிடம் கொண்டு சேர்க்கின்றன!” – ஜூல்ஸ் வெர்ன்.


டிராகுலா

இன்றைய இலக்கிய நூல்கள் வரிசையில் எனது கல்லூரிக்காலத்தில் படித்த ஒரு நாவலை அறிமுகப்படுத்த இருக்கிறேன். பயங்கர நாவல், காதிக் நாவல், வேம்பயர் நாவல் என்றெல்லாம் சொல்லப்படும் ஒரு இலக்கிய வகையை உருவாக்கிய கதை அது. டிராகுலா என்று பெயர். பேய்க்கதை. நான் 1967இல் கல்லூரியில் படிக்கும் காலத்திலும் ஒரு டிராகுலா கதை திரைப்படமாக வந்தது. அதைப் பார்த்துவிட்டு (வேலூரில் தினகரன் என்ற தியேட்டர். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.) இரவெல்லாம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு முன்னாலேயே அந்தக் கதையை நான் படித்திருந்தேன். எழுதியவர் பெயர் பிராம் ஸ்டோகர். இலக்கிய அறிஞர்கள் இம்மாதிரிக் கதைகளை இலக்கியம் என்ற வகைக்குள் சேர்க்க மாட்டார்கள். ஆயினும் என்னைப் பொறுத்தவரை இதுவும் இலக்கியம்தான்.

கதை, கடிதங்கள், டயரிக்குறிப்புகள், கப்பல் குறிப்புகள் வாயிலாகப் பெரும் பாலும் சொல்லப்படுகிறது. கதை நிகழுமிடங்கள் டிரான்சில்வேனியாவும் இங்கிலாந்தும். கதை ஓராண்டில் மே 3ஆம் நாள் தொடங்கி நவம்பர் 6இல் முடிகிறது. இந்த நாவல் 1897இல் வெளிவந்தது.

ஜானதன் ஹார்க்கர் ஒரு வழக்கறிஞன். அவன் கார்ப்பேதிய மலையிலுள்ள டிராகுலா என்ற பிரபுவின் மாளிகைக்குச் செல்கிறான். டிராகுலா பிரபு லண்டனில் ஒரு மாளிகை வாங்க உதவுவது அவன் வேலை. டிராகுலா ஒரு வேம்பயர். வேம்பயர் என்றால் இறந்தபிறகும் உயிருடன் மற்றொரு உடலில் உலவும் ஒரு பேய். கூர்மையான கடைவாய்ப் பற்கள். இரத்தம்தான் அவன் உணவு. உள்ளங்கையில் மயிர் இருக்கும். வேறு உருவில் இருந்தாலும் கண்ணாடியில் அவன் உண்மை வடிவம் தென்படும்…இத்தகைய பேய்க்கதைகளை நீங்களும் படித்திருப்பீர்கள்.

டிராகுலாவின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் ஹார்க்கர் அவன் மாளிகையில் சுற்றுகிறான். இரண்டு வேம்பயர் பெண்களைச் சந்திக்கிறான். டிராகுலா முதலில் அவனைக் காப்பாற்றினாலும் பிறகு அந்தப் பெண்களுக்கு ஹார்க்கரை இரையாக விட்டுவிட்டு வெளியே செல்கிறான். ஹார்க்கர் தப்பிக்கும் காட்சிகள் மயிர்க்கூச்செறிய வைப்பவை. எப்படியோ தப்பித்து புடாபெஸ்டில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான்.

டிராகுலா ஒருசில மண்பெட்டிகளுடன் தன் மாளிகையிலிருந்து லண்டனுக்குக் கப்பலில் வருகிறான். கப்பலில் உள்ள அனைவரும் இறந்துவிடுகின்றனர். கேப்டன் மட்டுமே அதை ஓட்டவேண்டி உயிருடன் விடப்படுகிறான். லண்டன் துறைமுகத்தை அடையும் முன்பே, ஒரு தரைப்பகுதியில் நாய்போன்ற ஒரு மிருகம் கப்பலில் இருந்து வெளியேறுகிறது.

லண்டனில் வசிக்கும் மீனா மரே என்பவள், ஹார்க்கருக்கு நிச்சயம் செய்யப்பட்டவள். அவளது தோழி லூசிக்கும் ஹோம்வுட் என்பவனுக்கும் திருமணம் நிகழஇருக்கிறது. அவனது நண்பர்கள் டாக்டர் செவார்ட், குவின்சி மாரிஸ் என்போர். லூசியைக் காண வருகிறாள் மீனா. அவளுக்கு ஹார்க்கர் பற்றிக் கடிதம் வந்ததால் புடாபெஸ்ட் சென்று சாகும் தருவாயில் இருந்த அவனைக் காப்பாற்றி அழைத்துவருகிறாள்.

லண்டனில் லூசி நோய்வாய்ப்படுகிறாள். தூக்கத்தில் நடக்கிறாள். அவளது நோயைக் கண்டுபிடிக்க வந்த பேராசிரியர் வான் ஹெல்சிங், அவளுக்கு அளவுக்கதிகமான இரத்தசோகை இருப்பதைக் காண்கிறார். இது பேயின்வேலை என்று கணிக்கும் அவர் பூண்டுகளை அவள் அறையில் போட்டு அவள் கழுத்திலும் மாலையாக அணிவிக்கிறார். ஆனால் அவள் தாய் அவற்றை அகற்றிவிடுகிறாள். செவார்டும் ஹெல்சிங்கும் இல்லாத போது ஓநாய் ஒன்று வீட்டுக்குள் புகுகிறது. அதிர்ச்சியால் தாய் இறக்கிறாள். பிற்பாடு லூசியும் இறந்துபோகிறாள்.

லண்டன் செய்தித்தாள்களில் ஓர் அழகிய பெண் உருவம் இரவில் பிள்ளைகளை எடுத்துச்செல்வதாகச் செய்தி வருகிறது. லூசி வேம்பயராக மாறிவிட்டதை அறிந்த வான் ஹெல்சிங், நண்பர்களுடன் சவப்பெட்டியைத் திறந்து பார்க்கும்போது அவள் உயிருடன் இருப்பதுபோல் காணப்படுகிறது. வாயில் இரத்தம். அவள் தலையை வெட்டி, இதயத்தில் சிலுவையைப் பாய்ச்சி, வாயில் பூண்டு திணித்து சவப்பெட்டிக்குள் இடுகிறார் பேராசிரியர். திருமணம் செய்துகொண்ட ஹார்க்கரும் மீனாவும் இவர்களுடன் இணைகின்றனர்.

இடையில் டிராகுலா டாக்டர் செவார்டின் பைத்தியக்கார நோயாளி ரென்ஃபீல்டுடன் தொடர்புகொள்கிறான். அவன் மூலமாக செவார்டு குழுவினரின் திட்டங்களை அறியும் டிராகுலா, மூன்று முறை மீனாவைத் தாக்குகிறான். அவன் மீனாவைத் தன் இரத்தத்தையும் குடிக்க வைக்கிறான். அதனால் அவளும் ஒரு வேம்பயராக மாறுகிறாள். வேம்பயர்கள் மண்ணில் மட்டுமே ஓய்வெடுக்க முடியும் என்பதால் அவனது வீட்டைத் தாக்கும் செவார்டு குழுவினர் அவன் கொண்டுவந்த மண் பெட்டிகளை புனிதப் படுத்தி, அவனுக்குப் பயன்படாமல் செய்கின்றனர். டிராகுலாவை அவனது இருப்பிடத்தில் சிறைப்படுத்த முயலுகின்றனர். ஆனால் அவன் மீதியிருக்கும் ஒரு மண்பெட்டியுடன் தன் டிரான்சில்வேனியா வீட்டுக்கு தப்பித்துச் செல்கிறான்.

மீனாவுக்கும் அவனுக்கும் மனத்தொடர்பு இருப்பதால், அவளை ஹிப்னடைஸ் செய்து அவள் மூலமாக அவன் செல்லும் வழியை அறிகின்றனர் செவார்டு குழுவினர். ருமேனியாவில் செவார்டு குழு இரண்டாகப் பிரிகிறது. பேராசிரியரும் மீனாவும் டிராகுலாவின் மாளிகைக்கு முன்னதாகவே சென்று வேம்பயர் பெண்களைக் கொல்கின்றனர். ஹார்க்கரும் ஹோம்வுட்டும் படகில் டிராகுலாவைத் துரத்துகின்றனர். குவின்சியும் செவார்டும் அவனைத் தரைமார்க்கமாகப் பின்தொடர்கின்றனர். இறுதியில் தன் பெட்டியை தன்தோழர்கள் உதவியால் ஒரு வேகனில் டிராகுலா ஏற்றும்போது நேரடியாகத் தாக்கி ஹார்க்கர் அவன் கழுத்தை வெட்டுகிறான், குவின்சி அவன் மார்பின் சிலுவையைப் பாய்ச்சுகிறான். டிராகுலா தூள்தூளாக உதிர்ந்து அழிகிறான். ஆனால் குவின்சி இறந்துபோகிறான். மீனா வேம்பயர் நிலையிலிருந்து மீள்கிறாள். சில ஆண்டுகள் கழித்து அவளுக்கும் ஹார்க்கருக்கும் பிறக்கும் ஆண்குழந்தைக்கு குவின்சி எனப் பெயர் இட்டதாகத் தெரியவருகிறது.

ப்ராம் ஸ்டோக்கர் ஏழாண்டுகள் மத்திய ஐரோப்பாவில் நிலவிய வேம்பயர் கதைகளையும் நாட்டுப்புறக் கதைகளையும் படித்து இந்த நாவலை எழுதியதாகத் தெரிகிறது. ஏறத்தாழ 1885 அளவிலேயே ரைடர் ஹேகார்டு, ருட்யார்ட் கிப்லிங், ஆர் எல் ஸ்டீவன்சன், கானன் டாயில், எச் ஜி வெல்ஸ் போன்ற ஆசிரியர்கள் தங்கள் இயற்கைமீறிய கதைகள் வாயிலாக இந்தக் கதையின் ஏற்றுக் கொள்ளும் வகையில் மக்கள் மனநிலையைத் தயார் செய்து வைத்திருந்தனர். எனவே முதலில் ஒரு வீரசாகசக் கதையாகவே இது வாசிக்கப்பட்டது. ஆனால் இது திரைப்படமாக வந்தபிறகு சிறந்த ஒரு பேய்க்கதையாக வாசிக்கப் படலாயிற்று. 1922இல் நுஸ்ஃபெராட்டு என்ற பெயரில் ஆசிரியர் அனுமதி பெறாமலே நாடகமாக அரங்கேற்றப்பட்டு பெரும் வெற்றி யடைந்தது.

வெளிவந்தவுடனே விமரிசகர்களின் பாராட்டைப் பெற்ற நாவல் இது. ஷெர்லக் ஹோம்ஸ் பாத்திரத்தை உருவாக்கிய கானன் டாயில், “பல ஆண்டுகளில் நான் மிகவும் சுவைத்த பேய்க்கதை இது” என்று ஸ்டோக்கருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவ்வளவு விறுவிறுப்பு. இரத்தத்தை உறைய வைக்கும் சித்திரிப்புகள். எனினும் இந்த நாவலின் வாயிலாகப் பெரும்பணம் ஒன்றும் ஸ்டோக்கருக்குக் கிடைக்க வில்லை. ஏழையாகவே இறந்தார்.

இக்கதை இன்றுவரை பலமுறை பல வடிவங்களில் திரைப்படமாக எடுக்கப் பட்டிருக்கிறது. இதை அடிப்படையாக வைத்தும் பல கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. 125 ஆண்டுகள் கழித்தும் இதற்கு இணையான பேய்க்கதை எதுவும் இன்றுவரை தோன்றவில்லை என்பது வியப்புக்குரிய செய்தி. நம் நாட்டுப் பேய்க்கதைகள் எல்லாமே வெறும் தமாஷ்தான்.


தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்

“எப்போதும் ‘அப்பால்’ மட்டுமே பார்க்கவேண்டுமா, ‘இப்பாலும்’ பார்த்தால் என்ன? தமிழில் உள்ள நல்ல படைப்புகளைப் பற்றியும் இந்தத் தொடரில் எழுதினால் என்ன?” என்று சில நண்பர்கள் கேட்டார்கள். சரி என்றேன். தமிழில் படித்த கதைகள் ஏராளம். எதைப் பற்றி முதலில் எழுதுவது? தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரம் பற்றியே எழுதலாமே…ஒன்றரை நூற்றாண்டுக்குமுன் வெளிவந்த அது இப்போது பலருக்கும் புதியதாகத்தானே இருக்கும்!

ஆங்கிலக் கதைகளை நான் பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்க நேர்ந்தது. தமிழின் கதை வேறு. என் அம்மாதான் இதில் எனக்கு முன்னோடி. அவர்கள் நான்காவது படித்து அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டார்களாம். ஆனால் படிப்பதை நிறுத்தவில்லை. பதின்மூன்று வயதில் திருமணமாகி புருஷன் வீட்டுக்கு வந்துவிட்டாலும் கையில் கிடைத்த கதைகளை எல்லாம் படிப்பது அவர்கள் வழக்கம். என் தந்தையும் ஊரில் உள்ள நூலகங்களில் எல்லாம் உறுப்பினராகி, என் தாயார் கேட்ட கதைப் புத்தகங்களை எல்லாம் வாங்கி வந்து கொடுத்தார். ஆக நான் பிறந்து ஐந்தாறு வயது ஆவதற்குள், என் அம்மா அக்கால நாவல்களை எல்லாம் தீர்த்துக் கட்டிவிட்டார்.

புலி எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி அல்லவா? அதனால் நானும் சிறு வயதிலிருந்தே கதைகள் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுவிட்டேன். நான் முதன் முதலில் படித்தது கல்கியின் சிவகாமியைத் தான். இருந்தாலும் சில காலத்துக்குள்ளாகவே பிரதாப முதலியார் சரித்திரம், கோகிலாம்பாள் கடிதங்கள், கமலாம்பாள் என்று ஆரம்பித்து விட்டேன். இப்படித் தரமான(!) நாவல்களில் தொடங்கினாலும் எனக்குப் பிடித்தவை என்னவோ அக்காலத் துப்பறியும் நாவல்கள்தான். ஜே. ஆர். ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்று. இடையில் வை. மு. கோதைநாயகி அம்மாளுடைய நாவல்கள். இவை பெரும்பாலும் குடும்பக் கதைகளாக இருந்தாலும் எல்லாவற்றிலும் துப்பறியும் கதைகளின் சுவையும் தேசபக்தியின் மணமும் நிறைய அறிவுரையும் இருக்கும். கல்லூரி சேர்ந்த காலத்தில்தான் மு.வ., நா. பார்த்தசாரதி, அகிலன் என்று பழக்கமானார்கள்.

பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை. சத்தியபுரி என்ற ஊரில் வாழ்ந்த பிரதாப முதலியார், நன் மதிப்புள்ள பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது சிறுவயது முதல் கதை தொடங்குகிறது.

இந்தக் கதையை வசதிக்காக நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

  1. முதல் பகுதி பிறப்பு வளர்ப்புப் படலம். இதில் பிரதாப முதலியும் அவன் தாய்மாமன் மகள் ஞானாம்பாளும் கனகசபை என்ற பையன் ஒருவனும் சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்தும் படித்தும் வருகின்றனர். பின்னர் கனகசபை ஒரு ஊருக்கே அதிபதி என்று தெரிய வருகிறது. பிரதாபனும் ஞானாம்பாளும் ஒருவரை ஒருவர் நேசித்து வளர்கின்றனர்.
  2. இரண்டாம் பகுதி திருமணப் படலம். பிரதாபனுக்கு திருமணம் பேசுகிறார் அவன் தந்தை. ஞானாம்பாளின் தந்தை சம்பந்தி முதலியார் திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை தன் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சொல்ல, திருமணம் முறிந்துவிடுகிறது.

பிறகு சம்பந்தி முதலியார் தன் பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையும், பிரதாபனின் தந்தை வேறு ஒரு பெண்ணையும் பார்த்து ஏற்பாடு செய்கிறார்கள். ஏட்டிக்குப் போட்டியாக இருவரும் ஒரே ஊரில் ஒரே நாளில் ஒரே வீட்டில் திருமணங்களை ஏற்பாடு செய்கிறார்கள்! ஆனால் பிரதாபன்-ஞானாம்பாள் இரு வீட்டாருமே திருமணத்தைத் திடீரெனத் தள்ளி வைக்க நேர்கிறது. இந்தச் செய்தி தெரியாமல் இவர்கள் பார்த்த மற்ற மாப்பிள்ளை, பெண் வீட்டார்கள் அந்த வீட்டுக்கு வந்துவிட, அவர்களுக்குள் திருமணம் முடிந்துவிடுகிறது.

இடையில் ஞானாம்பாளை ஒருவன் கடத்திச்செல்ல, பிரதாபன் அவளைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறான். பிறகு தடை ஏது? இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

மூன்றாம் பகுதி ஓடிப்போய் ஒன்றுசேர்ந்த படலம். ஞானாம்பாள் கருவுறுகிறாள். ஆண் குழந்தை பிறந்தால் தனக்கு சுவீகாரம் கொடுக்க வேண்டும் என்று சம்பந்தி முதலியார் கேட்க, பிரதாபன் தந்தை மறுக்க, தம்பதியர் பிரிகின்றனர். குழந்தையும் பிறக்காமல் போகிறது, ஞானாம்பாள் நோயுறுகிறாள். பிரிவு நீண்டுகொண்டே செல்கிறது. பிறகு கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு ஊர்களிலிருந்தாலும், திட்டமிட்டு ஒன்றாக ஓடிவிடுகின்றனர். வழியில் கனகசபையின் தந்தை தேவராஜ பிள்ளை ஆட்சி செய்கின்ற ஆதியூருக்கு வருகின்றனர். அங்கு தங்களைப் பிரிந்து தவித்திருந்த தாய்தந்தையருடன் ஒன்று சேர்கின்றனர். கதை இத்துடன் முடிந்திருக்க வேண்டியதுதானே?

நான்காம் பகுதி ஆட்சிப்படலம். ஆதியூரிலிருந்து வேட்டை காணச்சென்ற பிரபதாப முதலியை ஒரு யானை தூக்கிச் சென்று வேற்று நாட்டருகில் விட்டுவிடுகிறது. அந்நாட்டில் பிரதாப முதலி பல துன்பங்களையும் அனுபவித்து சிறையில் இருக்கிறான். அவனைத் தேடி ஆண்வேடத்தில் வந்த ஞானாம்பாள் அந்நாட்டின் அரசன் ஆகிறாள். அவள் பிரதாபனை விடுவிக்கிறாள், இருவரும் சில நாள் அவ்வூரை ஆட்சி செய்கின்றனர். அந்நாட்டின் பழைய அரசன் மகளாகிய ஆனந்தவல்லியைக் கண்டுபிடித்து அவளுக்கு முடிசூட்டுகிறாள் ஞானாம்பாள். பிறகு அனைவரும் தத்தம் ஊர்களுக்குத் திரும்பி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

இக்கதையைப் படிக்கும்போது, அது ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட சம்பவங்களைப் பற்றிப் பேசுகிறதா, இக்கால நிலைமைகளைப் பற்றிச் சொல்லுகிறதா என்று படிப்போர்க்குச் சந்தேகமே ஏற்பட்டுவிடும்.

உதாரணமாக, ஒரு திருடனைப் பிடித்து தேவராஜ பிள்ளை விசாரிக்கும் போது, அவன் “நான் ஒரு ரூபாய் திருடினேன், ஒப்புக் கொள்கிறேன், ஆனால் அரசாங்கத்திலிருந்து இலட்சக் கணக்கான ரூபாய்களைத் திருடிக் கொண்டு ஓடிப்போய் விடுகிறார்களே, அவர்களுக்கு என்ன தண்டனை? இன்னும் அரசாங்கமே மக்களைத் திருடுகின்றதே அதற்கு என்ன தண்டனை?” என்று கேட்கிறான். அவன் பேசும் வாதங்களைக் கேட்கும் போது இன்று நம் நாட்டில் வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் திருடிக் கொண்டு வெளிநாடுகளில் ஓடிப்போயிருக்கின்ற பல பேர்களும், ஊழலாட்சி புரிகின்ற தலைவர்களும் நம் நினைவுக்கு வருகின்றனர். இன்னும் இது போன்ற சம்பவங்கள் பலவற்றை வாசகர்கள் தாங்களே படித்து அனுபவிக்கத்தான் வேண்டும்.

இந்தக் கதையின் அறிவுக் கூர்மை மிக்க மாந்தரும், ஆண்களைப் பலவேறு சங்கடங்களிலிருந்தும் காப்பாற்றுபவர்களும் பிரதாபனின் தாயாரான சுந்தரத்தண்ணியும் அவன் மனைவி ஞானாம்பாளுமே. தமிழின் முதற் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை பெண்ணின் பெருமை பேசுவனவாக அமைந்தன. அந்த மரபு மாறாமல் இந்த ‘ஞானாம்பாள் சரித்திரமும்’ பெண்ணின் பெருமை உரைப்பதாகவே அமைவது குறிப்பிடத் தக்கது.

நாவலின் நடை சற்றே பழையதாக இருந்தாலும் நம்மைச் சிரமப் படுத்துவ தில்லை. இதற்கு ஒரு ஆங்கில முன்னுரை அளித்துள்ளார் வேதநாயகர். அதில் யதார்த்தப் பாணியைப் பின்பற்றாமல், டாக்டர் ஜான்சனைப் பின்பற்றி அறமுரைத்தலையே இலக்காகக் கொண்டு எழுதியதாகச் சொல்கிறார். ஆனால் நாவல் என்னும்படி இன்றி, “எங்கெங்குக் காணினும் கதைகளடா”…என்னும்படி எண்ணற்ற கதைகளின் தொகுப்பாகவே இது அமைந்திருக்கிறது. ஒரு கதைக் களஞ்சியத்தையே முதல் நாவல் என நமக்களித்த வேதநாயகம் பிள்ளை நம் நினைவில் என்றென்றும் நிற்பார்.


பன்னிரண்டாம் இரவு

இன்றைய இலக்கிய நூல்கள் வரிசையில் எனது கல்லூரிக்காலத்தில் படித்த ஒரு நூலை அறிமுகப்படுத்தலாம் என்று ஆவல். ஷேக்ஸ்பியரை அறிமுகம் செய்துகொள்ளாமல் ஆங்கில இலக்கியத்தை அறிந்தேன் என்று யாராவது கூற முடியுமா? உலகக் காவிய கர்த்தாக்களுக்கெல்லாம் தலைவன் கம்பன், உலக நாடககர்த்தாக்களுக்கெல்லாம் தலைவன் ஷேக்ஸ்பியர் என்றால் போதுமானது.

நாங்கள் கல்லூரியில் படித்த நாட்களில் பி.ஏ., பி.எஸ்சி படிப்புகளில் மாணவர்கள் இரண்டு ஷேக்ஸ்பியர் நூல்களையேனும் (அசலாக!) படித்தாக வேண்டும். பாடத்திட்டம் அதற்குத் தகவே அமைக்கப் பட்டிருந்தது. இன்று செமஸ்டர், டிரைமெஸ்டர் என்றெல்லாம் கல்லூரியின் ஒரே ஆண்டின் படிப்பையே இரண்டாக மூன்றாகப் பகுத்துப் படிக்கிறோம். ஆனால் எங்கள் காலத்தில் அப்படி இல்லை. (நான் 1968இல் பட்டப்படிப்பை முடித்த ஆள்). எங்களுக்கு பகுதி 1-ஆங்கிலம், பகுதி 2-தமிழ். பகுதி 3இல் மேஜர் பாடம் ஒன்று, ஆன்சிலரி பாடங்கள் இரண்டு உண்டு. அப்போது முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு ஆகிய இரு ஆண்டுகளுக்கான  மொத்தப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் இரண்டாம் ஆண்டின் இறுதியில்தான் நடக்கும். மேஜர் பாடத்தில் ஏதேனும் சில தாள்கள், ஒரு ஆன்சிலரியின் அனைத்துத் தாள்களும், தமிழுக்கான தாள்கள், ஆங்கிலத்துக்கான தாள்கள் ஆகிய அனைத்தும் அப்போது தேர்வில் முடிக்கப்படும். இரண்டு ஆண்டுகள் படித்ததை ஒட்டுமொத்தமாக நினைவு வைத்திருந்து தேர்வு எழுத வேண்டும். மூன்றாவது ஆண்டில் மேஜர் பாடத்தின் பிற தாள்கள் மட்டுமே.

ஆக, இரண்டு ஆண்டுகள் ஆங்கில இலக்கியமும் தமிழ் இலக்கியமும் தொடர்ச்சியாகக் கற்பிக்கப்படும். அன்றைய பகுதி ஒன்று ஆங்கிலப்பாட முறைப்படி, முதல் ஆண்டில் ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகம் ஒன்று பாடத்திட்டத்தில் இடம் பெறும். ஏதேனும் ஒரு இன்பியல் நாடகத்தைப் பாடமாக வைப்பார்கள்.

இரண்டாம் ஆண்டில் ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகம் – ஹேம்லட், ஒதெல்லோ இம்மாதிரி துன்பமுடிவு நாடகங்களில் ஏதாவதொன்று பாடமாக இருக்கும். இப்போது நினைக்கும் போது இவையெல்லாம் ஒரு வசந்தகால நினைவாகவே தோன்றுகின்றன. ஆம், தத்துவம், வரலாறு, உளவியல் முதற்கொண்டு, பெளதிகம், வேதியியல், கணிதம் என எந்தப் பட்டத்திற்காகப் படித்த மாணவனாயினும் இரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்களை மூலநூலாகப் படித்திருப்பான் என்பது ஓர் அரிய விஷயமல்லவா? பின்னாட்களில்  பட்டப் படிப்பில் செமஸ்டர் முறை வந்தபோது இந்த ஷேக்ஸ்பியர் நாடகப் படிப்புகள் கைவிடப்பட்டன. ஒரு அரையாண்டிற்குள் (வகுப்புகள் தொடக்கம், ஆயத்தங்கள், தேர்வுகள் போன்றவை எல்லாம் போக, ஒரு செமஸ்டரின் உண்மையான பாடம் நடக்கும் கால அளவு மொத்தமே மூன்றுமாதம்தான் வரும்) எப்படி ஒரு ஷேக்ஸ்பியர் நூலைப் படிக்க முடியும்?

சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். நான் படித்தபோது, 1965-66இல் ‘ட்வெல்த் நைட்’ என்ற இன்பியல் நாடகத்தையும் 1966-67இல் ‘ஆண்டனி அண் கிளியோபாட்ரா’ என்ற துன்பியல் நாடகத்தையும் படித்தேன். முதலில் ட்வெல்த் நைட் (பன்னிரண்டாம் இரவு) என்ற ரொமாண்டிக் காமெடியைப் பார்ப்போம். (ரொமாண்டிக் காமெடி என்பது தமிழ்த் திரைப்படம் பார்க்கும் இரசிகருக்கு நன்கு அறிமுகமான விஷயம். தீவிரமான கதை ஒன்றும் இருக்காது. ஒரு காதல் கதை. ஒரு இனிமையான, அழகிய அல்லது அற்புதப் பின்னணியில் வைத்துச் சொல்லப்படும். அவ்வளவுதான். காதலிக்க நேரமில்லை, ஊட்டிவரை உறவு போன்ற தமிழ்த் திரைப்படங்கள் மிக நல்ல உதாரணங்கள்.)

இனி ட்வெல்த் நைட் என்ற கதையைப் பார்க்கலாம். நமக்கெல்லாம் முக்கோணக் காதல் கதை நன்கு அறிமுகமான ஒன்று. இரண்டு தலைவர்கள் – ஒரு தலைவி, அல்லது இரண்டு தலைவிகள் – ஒரு தலைவன் என்று கதையில் அமைந்தால் ஒரு முக்கோணக் காதல்கதை உருவாகிவிடும். கடைசியில் இன்னொரு தலைவியோ, தலைவனோ நுழையும்போது அதில் இரண்டு காதல் ஜோடிகள் உருவாகி கதையின் சுப முடிவு ஏற்படும். (அப்படி இல்லையானால் ஒரு தலைவியோ தலைவனோ இறக்க வேண்டும், அது துன்பியல் ஆகிவிடும், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ போல). ஆனால் ட்வெல்த் நைட் ஒரு சுபமுடிவு முக்கோணக் காதல்கதைதான்.

வயோலா என்ற உயர்குலப் பெண் ஒருத்தி, கப்பல் உடைந்து இல்லிரியா என்ற ஒரு நாட்டிற்குள் வருகிறாள். அவளுடன் பயணம் செய்த அவள் சகோதரன் செபாஸ்டியன் இறந்துவிட்டதாக நினைக்கிறாள். புதிய நாட்டில் பெண்ணாக உலா வருவது சரியல்ல என்று கருதி ஆண்வேடம் தரித்துக் கொள்கிறாள். அங்கு தலைவனாக இருக்கக்கூடிய ஆர்சினோ என்பவனுக்கு அவள் செஸாரியோ என்ற பெயரில் வேலைக்காரனாகச் சேர்கிறாள். அவனைக் காதலிக்கிறாள். ஆனால் ஆர்சினோ, அதே ஊரில் இருக்கும் உயர்குடிப் பெண்ணான ஒலிவியா என்பவளைக் காதலிக்கிறான். ஒலிவியாவை அவன் அணுகும்போது அவள் அவனுக்குப் பிடி கொடுக்கவில்லை. ஆகவே தன்னிடம் ஏவலனாக இருந்த வயோலாவிடமே ஒலிவியாவுக்கு காதல் கடிதம் கொடுத்து, அவள் மனத்தைத்  தனக்குச் சார்பாக மாற்றுமாறுகூறி  அனுப்புகிறான் ஆர்சினோ. ஆனால் கடிதம் கொண்டுவரும் செஸாரியோவை (வயோலாவை) ஆண் என்று கருதி ஒலிவியா காதலிக்கிறாள். ஆக, வயோலா ஆர்சினோவை காதலிக்க, ஆர்சினோ ஒலிவியாவை காதலிக்க, ஒலிவியா வயோலாவை காதலிக்க (காதல் முக்கோணம் பிடிபடுகிறதா?) ஏக களேபரம்தான். கடைசியாக வயோலாவைப் போலவே அச்சு அசலாக இருக்கும் அவளது சகோதரன் செபாஸ்டியன் அதே இடத்திற்கு வந்துசேர முக்கோணம் நாற்கோணமாகிறது. ஆர்சினோ வயோலாவையும், வயோலாவின் ஆணுருவான செபாஸ்டியனை ஒலிவியாவும் மணக்க, எல்லாம் இனிதாக முடிகிறது! இதுதான் ட்வெல்த் நைட்-டின் கதை.

ஆமாம், இந்த நாடகத்துக்குப் பன்னிரண்டாம் இரவு என்ற தலைப்பு எதற்காக? பன்னிரண்டாம் இ்ரவு என்பது அக்காலத்தில் கிறிஸ்துமஸ் முடிந்து பன்னிரண்டாம் நாளான ஜனவரி 5 அன்று ‘எபிஃபனி இரவு’ என்ற பெயரில் கிறித்துவர்களால் கொண்டாடப்பட்ட ஒரு கும்மாளக்  கொண்டாட்டம். (சிலர் ஜனவரி 6 இரவு என்றும் கொள்கிறார்கள்). அன்று விதிகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு வேலைக்காரர்கள், எஜமானர்கள் எல்லாம் ஒன்றாகக் கூடி வேறுபாடு இன்றி குடித்துக் கும்மாளம் அடிப்பார்கள். அன்றைய இரவில் ‘முட்டாள்தனமான’ இந்நாடகம் போடப்பட்டதாக சாமுவேல் பெபிஸ் என்ற வரலாற்றாளர் தெரிவிக்கிறார். அதனால்  இந்த நாடகத்தின் தலைப்பும் ட்வெல்த் நைட் என்றே வந்துவிட்டது என்கிறார்கள்.

ட்வெல்த் நைட் நாடகத்தின் முக்கியக் கதைப் பகுதியைப் பார்த்துவிட்டோம். ஆனால் இதற்கு இணையாக ஒரு உபகதை – மற்றொரு கதைப்பகுதி இந்நாடகத்தில் இருக்கிறது. முன் கதைக்குச் சுவை கூட்ட இது பயன்படுகிறது. இதில் முக்கியக் கதாபாத்திரங்களாக, ஒலிவியாவின் வீட்டில் ஒரு கும்பலே இருக்கிறது.  ஒலிவியாவின் குடிகார அங்கிள் சர் டோபி, அவனது முட்டாள் நண்பன் ஆண்ட்ரூ ஆகூசீக், அவளது புத்திசாலியான ஏவல்தோழி மரியா, வீட்டின் விதூஷகன் ஃபெஸ்டி, வீட்டின் ஏவலர் தலைவன் மெல்வோலியோ என இவர்கள் யாவும் இந்த துணைக்கதையின் உறுப்பினர்கள். இந்தத் துணைக்கதையின் முக்கிய நோக்கம் மெல்வோலியோ இளக்காரமாக எல்லாரையும் நடத்துவதால் அவனைப் பைத்தியக்காரன் ஆக்கிப் பழிவாங்குகிறாள் மரியா.

இடையில் செபாஸ்டியன் இறக்கவில்லை எனத் தெரிகிறது. அவன் தன் சகோதரி வயோலாவைத் தேடி வருகிறான். செபாஸ்டியனின் நண்பனாகிய அண்டோனியோ என்பவன் ஆர்சினோவின் எதிரி. செபாஸ்டியனை  வயோலா (செஸாரியோ) எனக்கருதி காதலுக்காக இருவர்ப் போருக்கு (டியூவல்) அழைக்கும் ஆண்ட்ரூ அகூசீக்கின் கதை ஒருபுறம், ஆர்சினோவின் எதிரியான அண்டோனியோவை காவலர்கள் பிடித்துச் செல்ல அதில் ஏற்படும் குழப்பம் இன்னொரு புறம் எனக் கதை இறுதியில் சற்றே நீளுகிறது. இவற்றை எல்லாம் விரிவாகப் படிக்க வேண்டுமானால், நாடகத்தையே படிக்க வேண்டியதுதான். எப்படியோ எல்லா ‘முட்டாள்தனங்களும்’ ஒருவழியாக கதை இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு (ரிசல்யூஷன்) வந்து முடிகின்றன.  ஷேக்ஸ்பியரின் மற்ற பல கதைகளைப் போலவே இந்தக் கதைக்கும் பல பரிமாணங்கள் இருப்பதாக விமரிசகர்கள் கூறுகிறார்கள்.

ஷேக்ஸ்பியரின் ஆஸ் யூ லைக் இட்,  எ மிட் சம்மர் நைட்ஸ்’ ட்ரீம் போன்றவையும் மிகச் சிறந்த ரொமாண்டிக் காமெடிகளாக உள்ளன. முடிந்தால் இவற்றைப் படித்துப் பார்க்குமாறு வாசக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அசலாகத்தான் படிக்க வேண்டும் என்பதில்லை. இவற்றின் விரிவான (!) கதைச் சுருக்கங்கள் இண்டர்நெட்டில் எங்குத் தேடினும் கிடைக்கும், தமிழிலும்கூடக் கிடைக்கும்!