யாரும் யானும்

தமிழ்மொழியின் தனித்தன்மை, தனது சாதாரணச் சொல்லமைப்பு முறையிலேயே அற்புதமான கருத்துகளை உணர்த்துவதாகும்.
தமிழில் ரகர மெய் பன்மையையும் னகர மெய் ஒருமையையும் உணர்த்துவது. சான்றாக,
கணவர் (பன்மை) – கணவன் (ஒருமை)
மன்னர் (பன்மை) – மன்னன் (ஒருமை)
திருடர் (பன்மை) – திருடன் (ஒருமை)
தமிழ் தெரிந்தவர்களுக்கு இதற்கு மேலும் உதாரணங்கள் தேவையில்லை. இதேபோல,
யார் (பன்மை) – யான் (ஒருமை) (இக்காலத் தமிழில் இது ‘நான்’ என்று ஆகிவிட்டது)
எந்தக் கேள்வி ‘யார்’ என்பதைக் கொண்டு கேட்டாலும் அதற்கு ஒருமை வடிவம் ‘யான்’. அதுவே பதிலாகவும் அமைகிறது.

உதவி செய்தது எவர் என்று பன்மையிலோ, உதவி செய்தது எவன் என்று ஒருமையிலோ கேட்க முடியும். ஆனால், “உதவி செய்தது யான்?” என்று ஒருமையில் அமைக்க முடியுமா? பன்மையில்தான் கேட்டாக வேண்டும். “உதவி செய்தது யார்?” அதற்கு விடை அந்தக் கேள்வியேதான், அதன் ஒருமை வடிவம், “யான்”.
ஆட்சி அமைத்தது யார்? (ஒருமை வடிவத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டால், “ஆட்சி அமைத்தது யான்?” விடை கேள்வியிலேயே இருக்கிறது–“யான்”.)
தவறு செய்தது யார்? யான்
குற்றமிழைத்தது யார்? யான்
நல்லது செய்தது யார்? யான்.
இதுபோலவே எல்லாக் கேள்விகளுக்கும் யான் என்று அமைக்க முடியும். யார் என்று பன்மையில் முடியும் எல்லாக் கேள்விகளுக்கும் அதன் ஒருமை வடிவமே பதிலாக (யான்) உள்ளடங்கி நிற்கிறது. அதாவது உலகில், நன்மையோ, தீமையோ எல்லாவற்றுக்கும் மூல காரணம் “யான்” (நான்).

பழங்காலத்தில் மனச் செயல்களை சித்தம்–புத்தி–அகங்காரம் எனப் பகுத்தார்கள். (சித்தம் என்பது முடிவெடுத்தல் சார்ந்த மனச்செயல், புத்தி என்பது பகுத்தாராய்கின்ற, காரண-காரிய ஆய்வைச் செய்கின்ற மனச்செயல். அகங்காரம், இவை எல்லாவற்றுக்கும் காரணம் நான் என உணர்கின்ற செயல்.)
யான் என்பது சித்தம்-புத்தி-அகங்காரம் என்ற மனச் செயல்கள் மூன்றில் அகங்காரத்தின் இருப்பிடம். அந்த ஆணவமலம் நீங்க வேண்டும் என்பதற்காகத்தான் (எவன் என்பது போல் அன்றி, யான் என்ற வகையில் கேள்வி அமைப்பதைவிட்டுத்) தமிழில் பன்மையில் “யார்” என அமைத்தார்கள் போலும்.


தாலாட்டு

நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டு என்பதும் ஒருவகை. இந்தக் காலப் பெண்களுக்குத் தாலாட்டு வருவதில்லை. சென்ற தலைமுறை வரை பெண்கள் தாலாட்டுப் பாடுவதில் வல்லுநர்களாக இருந்தார்கள். தால் என்றால் நாக்கு. நாக்கை அசைத்து ‘உளஉளாயி’ என்று  (நம் பார்வையில்) ஒரு பொருளற்ற சத்தத்தை எழுப்பி, ஆராரோ ஆரிரரோ என்று தொடங்கிக் குழந்தைக்கென ஒரு ராகத்தில் பெண்கள் பாடுவார்கள். திரைப்படப் பாடல்கள் வந்த காலம் முதலாகப் பெண்கள் தாலாட்டுப் பாடுவதை விட்டுவிட் டார்கள். எங்கள் வீட்டிலும் எங்கம்மா காலம் வரை தாலாட்டு இருந்தது. என் சகோதரிகள் யாரும் தாலாட்டுப் பாடியதில்லை. இப்போது என் மகளும் மருமகளும்கூட அதே நிலைதான். இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்றால் ரேடியோவையோ தொலைக்காட்சியையோ டேப் ரிகார்டரையோ சற்றே சத்தமாக வைத்துச் சில பாட்டுகளைக் குழந்தைக்காக வைப்பார்கள். இந்தக் காலத்தில்தான் செல்ஃபோன் வரை வந்து விட்டதே.

ஆராரோ ஆராரோ
ஆரிவரோ (ஆரிரரோ) ஆராரோ
யார் அடித்து நீ அழுதாய்
அடித்தாரைச் சொல்லியழு
பிடித்துவைத்து தண்டிப்பேன்
பாட்டி அடித்தாளோ
பாலூட்டும் கையாலே
தாத்தா அடித்தாரோ
தாங்கி வரும் கையாலே
மாமா அடித்தாரோ
மாலையிடும் கையாலே
யாரும் அடிக்கவில்லை
யார்விரலும் தீண்டவில்லை
பசிக்குத்தான் அழுதாயோ
பாசமுள்ள என் குழந்தாய்.


காக்காப் பாட்டு

காக்கா காக்கா
கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி
கொண்டைக்குப் பூக் கொண்டு வா
கொக்கு கொக்கு
குழந்‍தைக்குத் தேன் கொண்டு வா
கிளியே கிளியே
கிண்ணத்தில் பால் கொண்டு வா


நிலாப்பாட்டு

நிலா நிலா எங்கே போறாய்?
நீல மலைக்கு நில்லாமல் போறேன்
நீல மலைக்கு நீயேன் போறாய்?
நிறைய நிறைய கல் எடுத்துவர
கல் எடுத்து என்ன செய்யப் போற?
கட்டடம் ஒண்ணு கட்டப் போறேன்
கட்டடம் கட்டி என்ன பண்ணுவாய்?
கல்யாணம் பண்ணிக் குடித்தனம் செய்வேன்
குடித்தனம் எதுக்கு செய்ய வேணும்?
குழந்தை ஒன்று பெற்றுக் கொள்ள.
குழந்தை எதற்கு? குழந்தை எதற்கு?
கூடி விளையாட உன்னைப் போல.


அம்புலியும் நிலாவும்

தினம் ஒன்றிரண்டு சிறுவர்ப் பாடல்கள் – சில நாட்களுக்கு

அம்புலி

அம்புலி அம்புலி வா வா
ஆகாயத்துல வா வா
அம்புலி அம்புலி போ போ
அப்பன் அழறான் போ போ (அப்பன் என்பது இங்கே குழந்தையைக் குறிக்கும் சொல்)
அம்புலி அம்புலி வா வா
ஆகாசத்தில வா வா
அப்பன் சிரிக்கிறான் வா வா
அம்புலி அம்புலி தா தா
அழகா வெளிச்சம் தா தா

நிலா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டுவா
நடு வீட்டில் வையே
நல்ல துதி செய்யே

இது அசலான பாடம் (வெர்ஷன்).இப்போது யூட்யூபில் இந்த அடிகளோடு பம்பரம் போல சுற்றி வா என்றெல்லாம் வேறு சில அடிகளைச் சேர்த்துப் பாடுகிறார்கள்.


தமிழ்க் குழந்தைப் பாடல்கள்

ஆங்கிலவழிக்கல்வி வந்ததால் ஏற்பட்ட கேடுகள் பல. அவற்றில் ஒன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் வழங்கிவந்த குழநதைப் பாடல்கள் (பலபேருக்கு நர்சரி ரைம்ஸ் என்று சொன்னால்தான் புரியும்) மறைந்து போயினமை. எனக்குத் தோன்றியவரை சில நாட்களுக்குத் தமிழ்க் குழநதைப் பாடல்களை இந்தத் தளத்தில் பிரசுரிக்க எண்ணம்.
இன்றைக்கு ஒரு பாட்டு.

நிலா நிலா எங்கே போற?
மலைக்குப் போறேன், மலைக்குப் போறேன்
மலைக்கு எதுக்கு?
மரம் வெட்ட.
மரம் எதுக்கு?
சொப்புச் செய்ய.
சொப்பு எதுக்கு?
காசு போட
காசு எதுக்கு?
மாடு வாங்க
மாடு எதுக்கு?
பால் கறக்க
பால் எதுக்கு?
நீ குடிக்க, நீ குடிக்க.