கணினி யுக இலக்கியம்

இலக்கியம் முதலில் எப்படி உருவாயிற்று என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் உருவானதிலிருந்து அது எண்ணற்ற மாறுதல்களைச் சந்தித்துள்ளது என்பது நமக்குத் தெரிகிறது. பல காலங்களைக் கடந்தும் அது செழிப்பாக வளர்ந்துள்ளது. அவ்வப்போது, அந்தந்தக் காலங்களுக்குரிய மக்களின் தேவைக்கேற்ப அது ஒவ்வொருவிதமாக வரையறுக்கவும் படுகிறது. உதாரணமாகச் செவ்வியல் காலத்தில் அது செம்மையாகச் செய்யப்பட்ட ஒரு பொருளாக பாவிக்கப்பட்டது. ரொமாண்டிக் காலத்திலோ அது தன்னெழுச்சியின் வெளிப்பாடாக, தானாகப் பீறிட்டு வருவதாக நோக்கப் பட்டது. கடந்த சில நூற்றாண்டுகளாக அது வர்க்கப் போராட்டக் கருவியாகவும், இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் இடையிலுள்ள ஒரு சமனியாகவும் நோக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கவிதை மட்டுமே இலக்கியமாக இருந்தது. இப்போதோ கவிதை தன் சிறப்புகளை எல்லாம் இழந்து நிர்க்கத்தியாக நிற்க, உரைநடை செங்கோல் ஓச்சுகிறது. விமரிசகர்களின் கருத்துப்படி இது உரைநடைப் புதினங்களின் காலம். 

காலம் மிகவும் முன்னேறிவிட்டது. இப்போது கதைகளை 150 சொற்களில் எழுதிவிடலாம் என்று சொல்கிறார்கள். ஃப்ளாஷ் ஃபிக்-ஷன், மைக்ரோ ஃபிக்-ஷன் போன்ற சொற்கள் உருவாகியுள்ளன. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. முன்பெல்லாம் ஒரு தேடலுக்காகக் கன்னிமரா போன்ற நூலகங்களுக்குச் சென்று மணிக்கணக்காகச் செலவிட வேண்டியிருந்தது. இப்போதோ உங்களிடம் கணினி அல்லது இன்றைய அலைபேசி யிருந்தால், நீங்கள் “கூகுள்” செய்தால் போதும். ஒரு காலத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பேரகராதி போன்றவற்றை எடுத்துப் புரட்டுவதே பெருஞ் சுமையாக இருக்கும். இன்று எல்லாமே ஒரு “எலி”யின் விரல் அழுத்தத்தில் கிடைக்கின்றன.       

ஆங்கிலத்தில் 6 சொற்களில் நாவல்கள் எழுதலாம் என்று சொல்கிறார்கள். ரெபக்கா ஜேம்ஸ் என்பவர் எழுதிய அறுசொல் நாவல் இது: After she died, he came alive. (“அவள் இறந்தபிறகு அவன் உயிருடன் வந்தான்” வந்தான் என்பதற்கு பதிலாக மீண்டான் அல்லது புத்துயிர் பெற்றான் என்று போடலாமா? இது மொழிபெயர்ப்பின் பிரச்சினை.)

மார்சி என்பார் எழுதிய நாவல் இது: “One gun, two shots, three dead”. இதுதான் நாவல் எழுதுவதில் புதிய ஃபேஷன். இப்படி எழுதுவது சவாலுக் குரியதாகவும், புத்தாக்கத் திறனுடனும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழில் இப்படிப்பட்ட புத்தாக்கத் திறனுடன் கூடிய புதினத் தலைப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. உதாரணமாக, “அகம் புறம் அந்தப்புரம்” (முகில்) என்பது ஒரு நாவலின் தலைப்பு. மேற்கண்ட அறுசொல் நாவல் கணக்குப்படி பார்த்தால் இது ஒரு முச்சொல் நாவலாக ஆகக்கூடும். இம்மாதிரி புத்தாக்கத் தலைப்புகள் வைப்பதில் சிறந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். (உதாரணமாக சுஜாதா, ராஜேஷ் குமார், இந்திரா சவுந்தரராஜன். ஆனால் அவர்கள் எழுதியது நாவல் என்றால் அது பல்ப் ஃபிக்-ஷன் வகையறா என்று சிலர் என்னை அடிக்கவரக் கூடும். ஆனால் ஜெயமோகனும் இப்படிப்பட்ட தலைப்புகள் பலவற்றை வைத்திருக்கிறார்.)

ஒரு நீண்ட கதையை எழுதுவது எளிய விஷயமாக இருக்கலாம், ஆனால் ஆறு சொற்களில் நாவல் எழுதுவது மிகுந்த புத்தாக்கத் திறனை வேண்டுவது என்று மேற்கண்ட ஒரு அறுசொல் நாவல் அறிமுகப் படுத்தப்படுகிறது. பிரதாப முதலியார் கதை எழுதிய காலத்தில் வேதநாயகர் இப்படி யோசித்திருக்கவும் முடியுமா? இம்மாதிரி 100 அல்லது 150 எழுத்துகளில் எழுதப்படும் பனுவல்களின் ஊடே அதிக இடைவெளிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். வாசகன் தனது யூகத்தினால் பலவித அர்த்தங்களை உருவாக்க முடிவதால் இதுதான் எழுத்தாள நாவல் (writerly novel) என்றும் கூட சிலர் மதிப்பிடலாம். இந்த நோக்குப்படி நாம் ஒருகாலத்தில் நாவலாக மதிக்காதவை எல்லாம் (ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள்…) இப்போது நாவல்கள் ஆகின்றன.

ட்விட்டர் கதைகள் என்றே ஒரு தனிப்பிரிவு உருவாகியுள்ளது. இதற்கெனவே தனிப் பெயர்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். உதாரணமாக, ட்விட்டரில் வரும் த்ரில்லர்கள், ட்வில்லர்கள் எனப்படுகின்றன, ஹைக்கூ-கள் ட்வைக்கூகள் ஆகின்றன. இம்மாதிரிக் கதைகள் பின்நவீனத்துவ நாவலின் ஒரு வகை என்றும் கூறப்படுகின்றன. இவற்றில் சுருக்கம், பன்முக அர்த்தங்கள், பனுவலின் ஊடான தொடர்புகள் எல்லாம் இருப்பதாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்த அவசரக் காலத்தில் இவற்றுக்கு வரவேற்பு மிகுதியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. கலையை இது மாற்றியமைக்கிறது என்கிறார்கள். இப்படிப் பார்த்தால் நமது தனிப்பாடல்கள் (காளமேகப் புலவர், அவ்வை போன்றோர் இயற்றியவை) ஒவ்வொன்றையும் உரைநடையில் கூறினால் ஒரு மைக்ரோ-ஃபிக் ஷனாக ஆக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. அவை மட்டுமல்ல, யூ-ட்யூபில் சென்று உலவிப் பாருங்கள், 5 நிமிடங்களில் படிக்கக்கூடிய குட்டிக் கதைகள் எத்தனை எத்தனை? வாட்சப் பதிவுகளில் வருகின்ற சின்னச் சின்னக் கதைகள் எத்தனை எத்தனை? முகநூலில் எழுதப்படும் “சிறு-கதைகள்” எத்தனை? திடீரென ஒரு பெரிய இலக்கிய வெள்ளம் வந்து நம்மை எல்லாம் அடித்துச் செல்வது போலத் தோன்றுகிறது. ப்ளாகு(blogs)கள், வலைத்தளங்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு பேரிலக்கியவாதி என்று சொல்லிவிடலாம்.   

இது மட்டுமல்ல, நவீனங்களை எல்லாம் ஓரிருவரிகளில் சுருக்கிச் சொல்லும் முயற்சிகளும் உள்ளன. உதாரணமாக, பிரபல நாவலாசிரியர் ஜே.டி.சாலிங்கர் எழுதிய Catcher in the Rye நாவலை ஒருவர் ட்விட்டரில் இப்படி மொழிபெயர்க்கிறார் (இதுவும் ஒருவகை மொழிபெயர்ப்புதான்): Rich kid thinks everyone is fake except for his little sister. Has breakdown. அவ்வளவுதான். நாம் கூட கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை இப்படிச் சுருக்கிவிடலாம்: “(சீதையை இராவணன் தூக்கிச் சென்றதுபோல) சிவகாமியை நாகநந்தி தூக்கிச் செல்கிறான். இடையில் பரஞ்சோதி (அனுமன்போல) தூது செல்கிறான். வர மறுத்த சிவகாமியை, நரசிம்ம பல்லவன் (இராமன்) வந்து மீட்டுவருகிறான்.” கதைச் சுருக்கத்துடன் இப்படி ஒப்பீடுகளும் நிகழ்த்திவிடலாம்!

ஆனால் இம்மாதிரி எழுத்துகளுக்கு எதிர்ப்பும் மிகுதியாகவே உள்ளது. இவை முறைசாரா நடையில் (informal style) உள்ளன; இவற்றில் இலக்கணப் பிழைகள் மிகுதி; மோசமான நடை; கொச்சை மொழியையும் சேரிமொழியையும் பாலியல் தொடர்களையும் (I’ll pen you in; asshole…) மிகுதியாகப் பயன்படுத்துகின்றன; சற்றும் மரியாதை அற்ற வெளிப்பாடுகள் (Zombie Jesus). ஒரு சரியான (valid), நளினமான நடை என்பதில்லை. இவர்களிடம் இலக்கணம் செத்துப்போனது; எல்லாம் எஸ்எம்எஸ் பாஷைதான்! (I c u என்பது போல) ஆங்கிலத்தில் உயிரெழுத்துகளை நீக்கிவிட்டுச் சுருக்கி எழுதும் போக்கு மிகுதியாகி வருகிறது. (நல்லவேளை! தமிழில் இப்படிச் சுருக்கமுடியாது என்று நினைக்கிறேன். மெய்யெழுத்துகளாகச் சுருக்க முடியாது, ஏனெனில் புள்ளியிட வேண்டும். வேண்டுமானால் ஓலைச்சுவடி பாஷையைக் காப்பியடித்துப் பார்க்கலாம்!) மொழிவளம் குன்றிவிட்டது. எழுத்துச் சேர்ப்பு, புணர்ச்சி முறை எல்லாம் போய்விட்டது. பங்ச்சுவேஷன் அறவே தேவையில்லை. இந்த வேகவாழ்க்கை நடை இலக்கியப் படைப்புக்கு ஒத்துவருமா? சுருக்கமாக ஆர்வமூட்டுவதாக மட்டும் மொழி இருந்தால் போதுமா?


இயற்கை நினைவில் கொள்கிறது, பரிசளிக்கிறது

ஒரு காலத்தில் ஆரோக்கியமான மூன்று பிள்ளைகளைக் கொண்ட விவசாயி ஒருவன் இருந்தான். முதல் இரண்டு மகன்களும் காளைகளைப் போன்ற வலிமையும், குறி தவறாமல் எய்வதற்குக் கழுகினைப் போன்ற கூரிய பார்வையும் கொண்டவர்கள். மூன்றாவது மகனோ, சற்றே ஒல்லியான தோற்றத்துடன், சிந்தனையாளன் போலக் காட்சியளித்தான்.
தானே தன் பண்ணைநிலத்தை யாருக்குக் கொடுப்பது என்று முடிவு செய்வதைவிட, அவர்கள் தாங்களே தங்கள் எதிர்காலத்தைத் தேடட்டும் என்று முதிய விவசாயி நினைத்தான்.
ஆகவே அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். வழியில் பாதைக்கருகில் ஓர் எறும்புப் புற்று உயரமாக இருந்தது. சலிப்புற்ற இரண்டாவது மகன் அதை உதைக் கச் சென்றான். அதிலிருந்து பயந்தோடும் எறும்புகளைப் பார்த்து மகிழ்ச்சியடையலாம் என்று நினைத்தான்.
“உதைக்காதே” என்றான் மூன்றாமவன். “அவைகளுக்கும் பாதுகாப்பாக வாழ உரிமை இருக்கிறது.”
கொஞ்சம் கழித்து அவர்கள் தெளிந்த நீரைக்கொண்ட ஓர் ஏரியை அடைந்தார்கள். தங்கள் மூட்டைகளைப் பிரிக்க உட்கார்ந்தார்கள். சில வாத்துகள் ஏரியில் இறங்கி நீந்தின.
“இவற்றில் ஒன்று நம் உணவுக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்” என்று முணுமுணுத்தவாறு தன் வில்லைத் தேடினான் மூத்தமகன்.
“நகராதே!” வாத்துகள் அதிர்ந்து, ஏரியிலிருந்து பறந்தோடி விடுமாறு உரக்கக் கத்தி னான் இளைய மகன். “பலநாட்களுக்குத் தேவையான உணவு நம்மிடம் இருக்கிறதே!”
ஒரு முதிய காட்டின் விளிம்பை அவர்கள் அடைந்தபோது எழுத்து மறையும் நேரம். இரவுநேரத்தில் தங்கள் கூடுகளுக்குத் தேனீக்கள் திரும்பிய சத்தம் அமைதியைக் குலைத்தது.
“ஆஹா, என் ரொட்டிக்குக் கொஞ்சம் தேன் இருந்தால் போதுமே”….ஓசையைத் தொடர்ந்து அவன் சென்றான். உள்ளீடற்ற ஒரு மரத்தின் அருகில் சென்ற போது அதன் பட்டைமீது தேன் சொட்டிக்கொண்டிருந்தது.
மற்ற இருவரும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். நடுமகன் சொன்னான், மரத்தை நாம் எரித்தால், எழும் புகையில் தேனீக்களை விரட்டிவிடலாம்.
“அப்புறம் காடு முழுவதையும் உசுப்பிவிடுவதா?” என்றான் இளையவன். “தேனீக்களை அவற்றின் வீட்டில் விடுங்கள்.”
மற்ற இரண்டு சகோதரர்களும் எரிச்சலடைந்தார்கள். இவனை விட்டுவிட்டு வந்திருந் தால் நன்றாக இருக்குமே!
களைத்தவாறு நடந்து, இருண்ட காட்டின் மத்தியில், பாழடைந்த ஒரு குடிசையை அடைந்தார்கள் அவர்கள். மூத்தவன் கதவைத் தட்டினான். நரைத்த முதியவர் ஒருவர் அவர்களை உள்ளே அனுமதித்தார்.
“எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று ஓர் இனிய குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், ஓர் அழகிய இளம்பெண்.
“எங்கள் அதிர்ஷ்டத்தை நாடிப் புறப்பட்டிருக்கிறோம்” என்று விடையிறுத்தான் மூத்தவன்.
“இதயத்தில் துணிச்சலும் கண்களில் கூர்மையும் இருந்தால் அதை நீங்கள் அடைந்து விட்டதாகவே வைத்துக் கொள்ளலாம்” என்றார் முதியவர்.
“இரண்டுமே எங்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்று பெருமையடித்துக் கொண்டான் இரண்டாமவன்.
“அப்படியானால்,” தொடர்ந்தார் முதியவர், “உங்களில் யார் இந்தக் கற்பலகையைப் பார்த்து முயற்சி செய்யத் தயார்?”
மூத்தவன் தைரியமாக எழுந்து கற்பலகையிலிருந்த செய்தியைப் படித்தான். “காட்டில் இருக்கும் முத்துகளைக் கண்டுபிடிக்கவேண்டும். சூரியன் மறையும்போது ஒரு முத்து கூட விடுபட்டிருக்கக்கூடாது. இல்லையென்றால் நீ கல்லாகிவிட நேரும்.”
கிழவரைப் பார்த்து மூத்தவன் கேட்டான்: “எத்தனை முத்துகள் விடுபட்டிருக்கின்றன?”
“ஆயிரம்.”
விடியலில் அவன் புறப்பட்டான். இலைகளும் கொடிகளும் மூடியிருந்த காட்டின் தரையைப் பார்த்து ஏறத்தாழப் புலம்பிவிட்டான்.
குன்றுகளின் பின்னால் சூரியன் மறைவதற்குள் பத்து முத்துகளை மட்டுமே பொறுக்கமுடிந்தது. குந்திய நிலையிலேயே சிலையாகிவிட்டான்.
இரண்டாம் சகோதரன் மறுநாள் காலையில் போனான். சூரியாஸ்தமனத்திற்கு முன் இருபது முத்துகளை மட்டுமே சேகரித்தான். அவனும் சிலையாகிவிட்டான்.
மூன்றாமவனின் முறை வந்தது. புறப்பட்டவுடன் அவன் காதில் ஒரு சன்னமான குரல் கேட்டது. “சஞ்சலப்படாதே.”
திகைத்துப்போய் காலடியைப் பார்த்தான். பாதை முழுவதும் எறும்புகளின் கூட்டம். மெல்லிய குரல் ஒன்று சொல்லியது: “நான்தான் நீ காப்பாற்றிய எறும்புக்கூட்டத்தின் அரசன். நாங்கள் உன்னைக் காப்பாற்றுவோம்.”
சூரியன் மறையும் நேரத்தில் அவன் ஆயிரம் முத்துகளைக் கொண்ட இரண்டு பெரிய பைகளுடன் வீட்டுக்குத் திரும்பிவந்தான்.
இரண்டாவது பணிக்கு அவனை முதியவர் அனுப்பினார். ஒரு பெண்ணின் மோதிரம். ஓர் ஆழமான கருத்த ஏரியில் விழுந்துவிட்ட அதைத் தேடி எடுக்கவேண்டும். சற்றேறக் குறைய அழுதேவிட்டான் இளைஞன்.
“பயப்படாதே” என்று ஒரு வாத்தின் ஒலி கேட்டது. “நீ ஏன் கூட்டத்தைக் காப்பாற் றினாய். உன்னை நாங்கள் காப்பாற்றுவோம்” என்றது தாய் வாத்து.
சூரியாஸ்தமன நேரத்தில் கையில் பொன் மோதிரத்தோடு திரும்பினான் இளைஞன்.
மூன்றாவது ஒரு பணிக்கு அவன் மீண்டும் அனுப்பப் பட்டான். ஒரு உயர்ந்த மாளிகையின் மேல்மாடிக்குச் செல்லவேண்டும். சென்றான். அங்கே மூன்று பட்டாடை அணிந்த பெண்கள்-அச்சாக ஒரே மாதிரி இருந்தார்கள்-உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்திதான் இளவரசி. தன் இளவரசனுக்காகக் காத்திருப்பவள்.
“ஐயோ” விசனித்தான் இளைஞன். “எப்படி நான் இவர்களில் என் இளவரசியைக் கண்டுபிடிப்பேன்?”
கவலைப் படாதே என விர்ரென்று ஒரு குரல் கேட்டது. அது இராணித் தேனியின் குரல். அது ஒவ்வொரு பெண்ணாக முகர்ந்துகொண்டே சென்றது. மூன்றாவது பெண் ணின் உதட்டில் போய் அமர்ந்தது.
அந்த அழகிய இளவரசிக்கு ஒரு தகுதியான கணவன் கிடைத்தான் என்று காட்டின் ஜந்துக்கள் யாவும் குதூகலித்தன.
-ஜெர்மானிய நாட்டுப்புறக் கதை.


உடோபியா

இதை ஒரு நாவல் என்று சொல்வது கடினம். அமெரிக்கா என்ற புதிய உலகம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஒரு புதிய கற்பனை நாட்டை–அதன் பெயர் உடோபியா–அறிமுகப்படுத்தி பெரும்பாலும் அதன் சிறப்பான பண்புகளை விளக்குவது இந்த எடுத்துரைப்பு. இது 1551ஆம் ஆண்டு வெளியானது. இதைப் பின்பற்றி உலக மொழிகள் அனைத்திலும் மட்டுமல்ல, ஆங்கிலத்திலுமே நியூ அட்லாண்டிஸ் போன்ற பல நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் மு. வரதராசனார், கி.பி.2000 என்ற பெயரில் இப்படிப்பட்ட நாவல் ஒன்றை வரைந்தார்.

தாமஸ் மூர் என்பவர் ஓர் ஆங்கிலேயேப் பணியாளர். பெல்ஜியத்தில் தன் நண்பர் பீட்டர் கைல்ஸ் என்பவரைச் சந்திக்கிறார். அவர் தன் நண்பர் ரஃபேல் ஹைத்லோடே-வுக்கு மூரை அறிமுகப் படுத்துகிறார். ரஃபேல், ஒரு போர்ச்சுகீசியர். அமெரிக்காவுக்குப் பெயரளித்த அமெரிகோ வெஸ்பூச்சி யுடன் உலகம் சுற்றியவர். அவர் தான் கண்டதாக உடோபியா என்ற நாட்டைப் பற்றிச் சொல்கிறார். (உடோபியா என்பதற்கு “இல்லாத இடம்” என்று பொருள்)

ரஃபேலை ஏன் அரசாங்க வேலை ஏற்கக்கூடாது என்று கேட்கிறார் மூர். அதற்கு அவர் தெரிவிக்கும் கருத்துகள் புரட்சிகரமாக உள்ளன. அரசாங்க வேலை என்பது அடிமை வேலை. எந்த ஆட்சியாளனுக்கும் மக்களின் நன்மையில் ஆர்வம் கிடையாது… என்று பல விஷயங்களைப் பற்றி அவர் பேசுகிறார். உதாரணமாக, மரண தண்டனை கூடாது என்பது அவர் கருத்து. ஏனெனில் மனிதனை மனிதன் கொல்லக் கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். பாரசீகத்தில் தான் கண்டதுபோல, யாராவது திருடினால் திருடிய பொருளைத் திரும்ப அவன் சொந்தக்காரரிடம் கொடுத்துவிட வேண்டும். ஒருவேளை திரும்பத் தர எதுவும் இல்லை என்றால், அவன் பொதுப்பணித் துறையில் வேலை செய்ய வேண்டும். மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால்தான் அரசனுக்குச் சிறப்பு. அவர்கள் பொருளின்றித் திருடுவதும் சாவதும் ஆட்சியாளனை ஜெயிலராகவும் கொலைகாரனாகவும் மாற்றுகிறது.

பிறகு உடோபியா பற்றி உரையாடல் தொடர்கிறது. உடோபியர்கள் மகிழ்ச்சியும் இனிமையும் நிறைந்த வாழ்க்கையை மட்டுமே விரும்புகிறார்கள். ஆனால் நல்லவர்கள், நேர்மையானவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும். தனிமனிதச் சொத்து, பொருள்குவிப்பு அற்ற நிலையில்தான் மகிழ்ச்சி இருக்க முடியும். பணக்காரர்கள் எல்லாரும் வில்லன்கள், குற்றவாளிகள், சோம்பேறிகள் என்று உடோபியர்கள் கருதுகிறார்கள். ரஃபேலும் அதை ஆதரிக்கிறார்.

உடோபியாவில் தங்கத்துக்கு மதிப்பு கிடையாது. யாரும் ஆபரணத்தைப் பயன்படுத்துவதில்லை. எல்லாப் பொருள்களுமே இலவசமாகக் கிடைக்கின்றன. எனவே நாளைக்கு என்று சேர்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

உடோபியா ஒரு தீவு. அதை உருவாக்கியவர் உடோபஸ் என்ற பிரயாணி. ஆளற்ற ஒரு தீபகற்பத்தை அவர் கண்டவுடன் அதைச் சொந்தமாக்கித் தீவாக மாற்றுகிறார், மக்களைக் குடியேற்றுகிறார்.

உடோபியாவில் 54 நகரங்கள் உள்ளன. அவை யாவும் ஒரே மாதிரியான அமைப்புள்ளவை. ஒரு நகரத்தில் 6000 பேர் மட்டுமே இருக்கலாம். அமாரூட் என்பது தலைநகரம். ஒவ்வொரு நகரத்திற்கும் சொந்தமாக நிலம் உண்டு. அதைக் குடும்பங்கள் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் 40 ஆடவர் பெண்டிர் இருக்கலாம். 2 அடிமைகள் இருக்கலாம். உழவுக்கான கருவிகளை மேஜிஸ்டிரேட் அளிப்பார்.

சுழற்சி முறையில் இருபது இருபது குடும்பங்களாக நகரத்திலிருந்து கிராமப்புறம் சென்று விவசாயம் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு ஊரில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கலாம்.

எல்லாரும் மிக அழகான, ஆனால் ஒரே மாதிரியான அலங்காரமற்ற, நடைமுறைப் பயனுடைய உடையை மட்டுமே உடுத்துகின்றனர். கட்டடங் களும் எளிமையானவை. தேவையற்ற உழைப்பை அவை குறைக்கின்றன. எல்லாரும் 6 மணிநேரம் மட்டுமே உழைத்தாலும் மிகையாக உற்பத்தி செய்கிறார்கள். குருமார்கள், சாமியார்கள், பூசாரிகள் போன்றோர் உழைப்பற்றவர்கள், தேவையற்றவர்கள் என்பதால் நாட்டில் அவர்கள் இல்லை.

நகரத்திற்கு ஃபைலார்க் எனப்படும் மாஜிஸ்திரேட் (தலைவர்) உண்டு. ஒவ்வோராண்டும் அவர் முப்பது குடும்பங்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். ஊர் விட்டு ஊர் செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை. அதை அரசனிடமிருந்து பெறலாம். ஃபைலார்க்குகள் அரசனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அதிகமாகக் குழந்தை பெற்றால் இல்லாதவர்களுக்கு அளிக்கப்படும். அதேபோல ஒரு நகரத்தில் மக்கள் தொகை அதிகமானால் சிறு நகரங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.

நாட்டில் அடிமைகள் உண்டு. போரில் தோற்றவர்கள் அடிமைகளாகக் கொள்ளப்படுவார்கள். தேவையான விவசாய நிலம் இல்லாமல் போனால் மட்டுமே போர் தேவைப்படும், நிகழும்.

தனக்குத் தேவையானதற்கு மேல் எவரும் எந்தப் பொருளையும் எடுப்பதில்லை. ஏனெனில் திருடுதல், பறித்துக் கொள்ளுதல் என்பவை எல்லாம் அங்கு கிடையாது.

“உடோபியாவில் எல்லாருக்கும் எல்லாவற்றின்மீதும் உரிமை உண்டு. பொதுக் கடைகளை எப்போதும் நிரப்பி வைத்திருந்தால், எவரும் தேவையின்றி எடுக்கமாட்டார்கள். ஏனெனில் சமமற்ற விநியோகம் கிடையாது. அதனால் யாரும் ஏழைகளும் இல்லை, யாரிடமும் எதுவும் கிடையாது என்றாலும் எல்லாரும் செல்வமுள்ளவர்களே.”

பெண்கள் 18 வயதுக்கு முன், ஆடவர் 22 வயதுக்கு முன் திருமணம் செய்யலாகாது. திருமணத்துக்கு முன்னால் பாலியல் உறவு கொள்ளக் கூடாது. பலதார மணம், விபசாரம் என்பவையும் தடுக்கப் பட்டவை. உடோபியாவில் வழக்கறிஞர்கள் கிடையாது. யாவரும் தங்களுக்குத் தாங்களே வழக்காட வேண்டும்.

தாங்களே இராணுவத்தை வைத்துக் கொள்வதைவிட இராணுவங்களை வாடகைக்கு அமர்த்துவதையே உடோபியர்கள் விரும்பினார்கள். ஆனால் கணவன் போருக்குச் சென்றால் மனைவியும் உடன் சென்று போரிடலாம்.

மதத்தைப் பற்றி இறுதியாகத் தன் கருத்தைத் தெரிவிக்கிறார் ரஃபேல். ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பதால் அங்கே எண்ணற்ற மதங்கள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு தெய்வம் உண்டு. உடலுடன் ஆன்மா இறந்துபோகிறது என்று கருதக் கூடாது. அதனால் நோயுற்றால் வருந்துவார்களே ஒழிய இறப்புக்கு யாரும் வருந்துவதில்லை.

ரஃபேல் தனது வருணனைகளை முடிக்கும்போது, மூரின் மனத்தில் பல சந்தேகங்களும் கேள்விகளும் தோன்றியுள்ளன. ஆனால் ரஃபேல் களைத் திருந்ததால் மூர் அவற்றைக் கேட்காமல் அடக்கிக் கொள்கிறார். தங்கள் அரசாங்கங்களும் உடோபியாவின் சில விதிகளைக் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே இறுதியில் சொல்கிறார்.

இப்படிப்பட்ட எளிய, ஆனால் ஏழ்மையற்ற வாழ்க்கையைத்தான் நமது தமிழ் முன்னோர் வாழ்ந்துவந்தனர். பொங்கல் என்ற தன்னிறைவுக் கொண்டாட்டம் இந்தமாதிரி வாழ்க்கையின் அடையாளம். இப்போதும் நாகரிகம்(!) பரவாத காட்டுப் பகுதிகளில் பல பழங்குடியினர் இப்படித்தான் வாழ்கின்றனர்.

ஆனால் மேலும் மேலும் பொருளையும் பணத்தையும் குவிப்பதைத்தான் சிறந்த வாழ்க்கை என்று நமக்குக் கற்பிக்கிறது இந்த உலகம். எதற்காக ஒருவனுக்கு பதினைந்து லட்ச ரூபாய் கோட்டு? எதற்காக ஒருவன் இரண்டு கோடிக்குக் கார் வாங்கி, வரி கட்டாமல், கோர்ட்டில் போய் நிற்க வேண்டும்? எதற்காக கோடிக்கணக்கான பேர் வயிற்றுக்குச் சோறின்றி சாலையோரங்களில் வாழ்ந்து இறக்க வேண்டும்? சிந்தியுங்கள்.

தன்னளவில் நிறைவாக எளிமையாக வாழ்பவனைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறது இவ்வுலகம். “வளர்ச்சி வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையையும் உலகத்தையும் அழிக்க வேண்டும். பிறகு எல்லாவற்றுக்குமாக உட்கார்ந்து என்ன செய்வது என்று ஐ.நா.வில் பன்னாட்டுக் கூட்டங்கள் போட்டுப் போலியாக அழ வேண்டும்!”