அழகிய தோட்டம்

ஒரு புகழ்பெற்ற கோயிலில் இருந்த தோட்டத்திற்குப் பொறுப்பாக ஒரு பூசாரி இருந்தார். பூக்கள், செடிகள், மரங்களையெல்லாம் அவர் நேசித்ததால் அவருக்கு அந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கு அருகிலேயே இன்னொரு சிறிய கோயில். அங்கு வயதான மதபோதகர் ஒருவர் வாழ்ந்துவந்தார். 
ஒருநாள், பூசாரியைத் தேடிச் சில விருந்தினர் வருவதாக இருந்தது. அதனால் இன்னும் கவனத்துடன் தன் தோட்டத்தை அவர் அழகுசெய்தார். களைகளைப் பிடுங்கி எறிந்தார், செடிகளை வெட்டி ஒழுங்காக்கினார், பாசிகளையெல்லாம் நீவி விட்டார், மிக எச்சரிக்கையாகவும் கவனத்துடனும் இலையுதிர்காலத்து உலர்ந்த இலைகளைத் தேடிச் சேகரித்து ஒதுக்கிவைத்தார். 
அவர் வேலைசெய்யும்போது, இரண்டு கோயில்களையும் பிரித்த குறுக்குச் சுவருக்கு அப்பாலிருந்து மதபோதகர் பார்த்துக்கொண்டேயிருந்தார். 
தன் வேலையை முடித்ததும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பூசாரி அழகு பார்த்தார். மதபோதகரைப் பார்த்து, "அழகாக இருக்கிறதா, தோட்டம்?" என்று கேட்டார். 
"ஆமாமாம், ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது. இந்தச் சுவரில் நான் ஏறிவர உதவுங்கள், சரிசெய்கிறேன்" என்றார் கிழவரான மதபோதகர்.
கொஞ்சம் தயங்கிவிட்டு, பூசாரி கிழவர் சுவரின்மீது ஏறிவர உதவினார். அவரை இறக்கிவிட்டார். 
மெதுவாக, தோட்டத்தின் நடுவிலிருந்த மரத்திடம் மதபோதகர் நடந்துசென்றார். அதன் நடுமரத்தைப் பற்றிக் குலுக்கினார். தோட்டம் முழுவதும் இலைகள் விழுந்தன. 
"இப்போது சரியாகிவிட்டது" என்றார் அந்தக் கிழவர். "என்னை அனுப்பி விடுங்கள்."

-ஜென் கதை.
கதையின் நீதி: மனிதன் உருவாக்கும் எதையும்விட இயற்கை மேலும் முழுமையானது. நமது பார்வையில் அதை அழகாக்குவது என்பது அதன் இயல்பான தன்மையைக் குலைத்து இயற்கையை அழகற்றுப்போகச் செய்வதாகும்.