கணினி யுக இலக்கியம்

இலக்கியம் முதலில் எப்படி உருவாயிற்று என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் உருவானதிலிருந்து அது எண்ணற்ற மாறுதல்களைச் சந்தித்துள்ளது என்பது நமக்குத் தெரிகிறது. பல காலங்களைக் கடந்தும் அது செழிப்பாக வளர்ந்துள்ளது. அவ்வப்போது, அந்தந்தக் காலங்களுக்குரிய மக்களின் தேவைக்கேற்ப அது ஒவ்வொருவிதமாக வரையறுக்கவும் படுகிறது. உதாரணமாகச் செவ்வியல் காலத்தில் அது செம்மையாகச் செய்யப்பட்ட ஒரு பொருளாக பாவிக்கப்பட்டது. ரொமாண்டிக் காலத்திலோ அது தன்னெழுச்சியின் வெளிப்பாடாக, தானாகப் பீறிட்டு வருவதாக நோக்கப் பட்டது. கடந்த சில நூற்றாண்டுகளாக அது வர்க்கப் போராட்டக் கருவியாகவும், இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் இடையிலுள்ள ஒரு சமனியாகவும் நோக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கவிதை மட்டுமே இலக்கியமாக இருந்தது. இப்போதோ கவிதை தன் சிறப்புகளை எல்லாம் இழந்து நிர்க்கத்தியாக நிற்க, உரைநடை செங்கோல் ஓச்சுகிறது. விமரிசகர்களின் கருத்துப்படி இது உரைநடைப் புதினங்களின் காலம். 

காலம் மிகவும் முன்னேறிவிட்டது. இப்போது கதைகளை 150 சொற்களில் எழுதிவிடலாம் என்று சொல்கிறார்கள். ஃப்ளாஷ் ஃபிக்-ஷன், மைக்ரோ ஃபிக்-ஷன் போன்ற சொற்கள் உருவாகியுள்ளன. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. முன்பெல்லாம் ஒரு தேடலுக்காகக் கன்னிமரா போன்ற நூலகங்களுக்குச் சென்று மணிக்கணக்காகச் செலவிட வேண்டியிருந்தது. இப்போதோ உங்களிடம் கணினி அல்லது இன்றைய அலைபேசி யிருந்தால், நீங்கள் “கூகுள்” செய்தால் போதும். ஒரு காலத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பேரகராதி போன்றவற்றை எடுத்துப் புரட்டுவதே பெருஞ் சுமையாக இருக்கும். இன்று எல்லாமே ஒரு “எலி”யின் விரல் அழுத்தத்தில் கிடைக்கின்றன.       

ஆங்கிலத்தில் 6 சொற்களில் நாவல்கள் எழுதலாம் என்று சொல்கிறார்கள். ரெபக்கா ஜேம்ஸ் என்பவர் எழுதிய அறுசொல் நாவல் இது: After she died, he came alive. (“அவள் இறந்தபிறகு அவன் உயிருடன் வந்தான்” வந்தான் என்பதற்கு பதிலாக மீண்டான் அல்லது புத்துயிர் பெற்றான் என்று போடலாமா? இது மொழிபெயர்ப்பின் பிரச்சினை.)

மார்சி என்பார் எழுதிய நாவல் இது: “One gun, two shots, three dead”. இதுதான் நாவல் எழுதுவதில் புதிய ஃபேஷன். இப்படி எழுதுவது சவாலுக் குரியதாகவும், புத்தாக்கத் திறனுடனும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழில் இப்படிப்பட்ட புத்தாக்கத் திறனுடன் கூடிய புதினத் தலைப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. உதாரணமாக, “அகம் புறம் அந்தப்புரம்” (முகில்) என்பது ஒரு நாவலின் தலைப்பு. மேற்கண்ட அறுசொல் நாவல் கணக்குப்படி பார்த்தால் இது ஒரு முச்சொல் நாவலாக ஆகக்கூடும். இம்மாதிரி புத்தாக்கத் தலைப்புகள் வைப்பதில் சிறந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். (உதாரணமாக சுஜாதா, ராஜேஷ் குமார், இந்திரா சவுந்தரராஜன். ஆனால் அவர்கள் எழுதியது நாவல் என்றால் அது பல்ப் ஃபிக்-ஷன் வகையறா என்று சிலர் என்னை அடிக்கவரக் கூடும். ஆனால் ஜெயமோகனும் இப்படிப்பட்ட தலைப்புகள் பலவற்றை வைத்திருக்கிறார்.)

ஒரு நீண்ட கதையை எழுதுவது எளிய விஷயமாக இருக்கலாம், ஆனால் ஆறு சொற்களில் நாவல் எழுதுவது மிகுந்த புத்தாக்கத் திறனை வேண்டுவது என்று மேற்கண்ட ஒரு அறுசொல் நாவல் அறிமுகப் படுத்தப்படுகிறது. பிரதாப முதலியார் கதை எழுதிய காலத்தில் வேதநாயகர் இப்படி யோசித்திருக்கவும் முடியுமா? இம்மாதிரி 100 அல்லது 150 எழுத்துகளில் எழுதப்படும் பனுவல்களின் ஊடே அதிக இடைவெளிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். வாசகன் தனது யூகத்தினால் பலவித அர்த்தங்களை உருவாக்க முடிவதால் இதுதான் எழுத்தாள நாவல் (writerly novel) என்றும் கூட சிலர் மதிப்பிடலாம். இந்த நோக்குப்படி நாம் ஒருகாலத்தில் நாவலாக மதிக்காதவை எல்லாம் (ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள்…) இப்போது நாவல்கள் ஆகின்றன.

ட்விட்டர் கதைகள் என்றே ஒரு தனிப்பிரிவு உருவாகியுள்ளது. இதற்கெனவே தனிப் பெயர்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். உதாரணமாக, ட்விட்டரில் வரும் த்ரில்லர்கள், ட்வில்லர்கள் எனப்படுகின்றன, ஹைக்கூ-கள் ட்வைக்கூகள் ஆகின்றன. இம்மாதிரிக் கதைகள் பின்நவீனத்துவ நாவலின் ஒரு வகை என்றும் கூறப்படுகின்றன. இவற்றில் சுருக்கம், பன்முக அர்த்தங்கள், பனுவலின் ஊடான தொடர்புகள் எல்லாம் இருப்பதாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்த அவசரக் காலத்தில் இவற்றுக்கு வரவேற்பு மிகுதியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. கலையை இது மாற்றியமைக்கிறது என்கிறார்கள். இப்படிப் பார்த்தால் நமது தனிப்பாடல்கள் (காளமேகப் புலவர், அவ்வை போன்றோர் இயற்றியவை) ஒவ்வொன்றையும் உரைநடையில் கூறினால் ஒரு மைக்ரோ-ஃபிக் ஷனாக ஆக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. அவை மட்டுமல்ல, யூ-ட்யூபில் சென்று உலவிப் பாருங்கள், 5 நிமிடங்களில் படிக்கக்கூடிய குட்டிக் கதைகள் எத்தனை எத்தனை? வாட்சப் பதிவுகளில் வருகின்ற சின்னச் சின்னக் கதைகள் எத்தனை எத்தனை? முகநூலில் எழுதப்படும் “சிறு-கதைகள்” எத்தனை? திடீரென ஒரு பெரிய இலக்கிய வெள்ளம் வந்து நம்மை எல்லாம் அடித்துச் செல்வது போலத் தோன்றுகிறது. ப்ளாகு(blogs)கள், வலைத்தளங்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு பேரிலக்கியவாதி என்று சொல்லிவிடலாம்.   

இது மட்டுமல்ல, நவீனங்களை எல்லாம் ஓரிருவரிகளில் சுருக்கிச் சொல்லும் முயற்சிகளும் உள்ளன. உதாரணமாக, பிரபல நாவலாசிரியர் ஜே.டி.சாலிங்கர் எழுதிய Catcher in the Rye நாவலை ஒருவர் ட்விட்டரில் இப்படி மொழிபெயர்க்கிறார் (இதுவும் ஒருவகை மொழிபெயர்ப்புதான்): Rich kid thinks everyone is fake except for his little sister. Has breakdown. அவ்வளவுதான். நாம் கூட கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை இப்படிச் சுருக்கிவிடலாம்: “(சீதையை இராவணன் தூக்கிச் சென்றதுபோல) சிவகாமியை நாகநந்தி தூக்கிச் செல்கிறான். இடையில் பரஞ்சோதி (அனுமன்போல) தூது செல்கிறான். வர மறுத்த சிவகாமியை, நரசிம்ம பல்லவன் (இராமன்) வந்து மீட்டுவருகிறான்.” கதைச் சுருக்கத்துடன் இப்படி ஒப்பீடுகளும் நிகழ்த்திவிடலாம்!

ஆனால் இம்மாதிரி எழுத்துகளுக்கு எதிர்ப்பும் மிகுதியாகவே உள்ளது. இவை முறைசாரா நடையில் (informal style) உள்ளன; இவற்றில் இலக்கணப் பிழைகள் மிகுதி; மோசமான நடை; கொச்சை மொழியையும் சேரிமொழியையும் பாலியல் தொடர்களையும் (I’ll pen you in; asshole…) மிகுதியாகப் பயன்படுத்துகின்றன; சற்றும் மரியாதை அற்ற வெளிப்பாடுகள் (Zombie Jesus). ஒரு சரியான (valid), நளினமான நடை என்பதில்லை. இவர்களிடம் இலக்கணம் செத்துப்போனது; எல்லாம் எஸ்எம்எஸ் பாஷைதான்! (I c u என்பது போல) ஆங்கிலத்தில் உயிரெழுத்துகளை நீக்கிவிட்டுச் சுருக்கி எழுதும் போக்கு மிகுதியாகி வருகிறது. (நல்லவேளை! தமிழில் இப்படிச் சுருக்கமுடியாது என்று நினைக்கிறேன். மெய்யெழுத்துகளாகச் சுருக்க முடியாது, ஏனெனில் புள்ளியிட வேண்டும். வேண்டுமானால் ஓலைச்சுவடி பாஷையைக் காப்பியடித்துப் பார்க்கலாம்!) மொழிவளம் குன்றிவிட்டது. எழுத்துச் சேர்ப்பு, புணர்ச்சி முறை எல்லாம் போய்விட்டது. பங்ச்சுவேஷன் அறவே தேவையில்லை. இந்த வேகவாழ்க்கை நடை இலக்கியப் படைப்புக்கு ஒத்துவருமா? சுருக்கமாக ஆர்வமூட்டுவதாக மட்டும் மொழி இருந்தால் போதுமா?

இலக்கியம்