வளையாபதியும் நீலகேசியும்

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்தை நீக்கிப் பிற காப்பியங்கள் பற்றி காணத் தொடங்கினோம். அப்படி இதுவரை மணிமேகலை, சீவகன் கதை, குண்டலகேசி என்னும் மூன்று தமிழ்க் காப்பியக் கதைகளைக் கண்டுள்ளோம். நியாயமாக இந்த வரிசையில் இறுதியாக வரவேண்டியது வளையாபதி என்ற கதை.

வளையாபதி

நவகோடி நாராயணன் என்ற பெருவணிகனுக்கு இரு மனைவியர். ஒருத்தி அவன் குலத்தைச் சேர்ந்தவள், மற்றொருத்தி வேறொரு குலத்தினள். அதனால் அவளைத் தன் குலத்தினர் வற்புறுத்தலின்படி தள்ளிவைத்தான் கணவன். இரண்டாம் மனைவி தன் துன்பம் தீர காளி தேவியை வழிபட்டு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனே வளையாபதி. அவனை நன் முறையில் வளர்த்து வந்தாள். அச்சிறுவனுடைய விளையாட்டுத் தோழர்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று ஏளனம் செய்யவே, அச்சிறுவன் அதுபற்றி தன் தாயிடம் முறையிட்டான். அவள் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவித்தாள். அவன் தன் தந்தையைத் தேடிச் சென்று தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். ஆயினும் ஊர்க் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு நவகோடி நாராயணன் அவனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறான். பின்னர் அவன் தாய் காளியின் உதவியால் செட்டிச்சாதிப் பெரியவர்களிடம் தன் கற்பின் உண்மையை நிலைநாட்டுகிறாள். நாராயணனும் அவனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டு, அவர்களுடன் இனிது வாழ்ந்தான்.

உண்மையில் ஐந்தாவது காப்பியமாக பெருங்கதை, நீலகேசி போன்ற பிற முழுமையாகக் கிடைக்கும் கதைகளில் ஒன்றையே நாம் ஏற்க முடியும். நீலகேசி என்பதும் சமணத் தமிழ்க் காப்பியங்களில் ஒன்று. தமிழ்க் காப்பிய மரபின்படி பெண்ணின் பெருமை பேசும் நூலாகையால் இதுவே ஐந்தாவது காப்பியமாக ஏற்கத்தக்கது. நீலகேசி என்ற பெண் தத்துவ தரிசனங்களில் அறிவாற்றல் பெற்று பிற மதத்தினரின் தத்துவங்களை வென்று புகழ் பெற்றவள்.

ஆனால் நீலகேசியின் கதையும் அக்காப்பியத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கவில்லை. நீலகேசியின் கதைகளாக இன்று கிடைப்பவை யாவும் பிற புராணங்களில் காணப்படுபவையே. அவற்றில் மூன்றை மட்டும் இங்கே காண்போம்.

நீலகேசி

கதை 1. இரத்தின கரண்டகம் என்ற வடமொழி நூலில் நீலி என்ற சமணப் பெண் கதை காணப்படுகிறது. அவள் ஜினதத்தன் என்ற வணிகன் மகள். பிருகுகச்சம் என்ற ஊரைச் சேர்ந்தவன் அவன். அதே ஊரைச் சேர்ந்த சாகர தத்தன் அவளை மணக்க விரும்பினான். ஆனால் அவன் பவுத்தன். எனவே பெற்றோருடன் சமணராக வேடமிட்டு இந்தப் பெண்ணை மணந்து கொண்டான். அவளும் வேறு வழியின்றித் தன் சமணசமயத்தில் இருந்து கொண்டே இல்லறக் கடமையாற்றிவந்தாள். ஒருநாள் பிட்சு ஒருவனுக்கு உணவு ஆக்கி அளிக்குமாறு வீட்டினர் கட்டளையிட்டனர். அவன் ஊன் உண்பவன். அவளோ ஊன் சமைக்காத சமணத்தி. எனவே புத்தத் துறவி அணிந்திருந்த தோல் மிதியடியில் ஒன்றை எடுத்து திறம்படச் சமைத்து கறியாக்கி உணவிட்டாள். துறவி விடைபெற்றுப் போகும்போது மிதியடி ஒன்றைக் காணாமல் தேடினான். நீலி அவன் உண்டது மிதியடியைத் தான் என்று கூறினாள்.

எனவே அவள்மீது பழிக்குப் பழி வாங்கும் போக்கில் நீலியின் கற்பின் மீது பழி சுமத்தினர். ஆனால் நல்ல வேளையாக ஒரு தெய்வத்தின் செயலால் அவள் கற்புத் திறம் புலனாயிற்று. நகரின் கோட்டைவாயில் அடைபட்டுப் போயிற்று. கற்புடைய பெண்கள் மட்டுமே அதைத் திறக்க முடியும் என்று மரபு. யாராலும் அசைக்க முடியாத அக்கதவை நீலி சென்று எளிதாகத் திறந்தாள். அவள் மீது இருந்த பழி நீங்கி கற்பின் கனலி என்று பெயர் பெற்று வாழ்ந்தாள்.

கதை 2. வடக்கில் பாஞ்சால நாட்டில் பலாலயம் என்ற இடத்தில் கோயில் கொண்டிருந்த காளிக்கு அவ்வூர் மக்கள் பலி கொடுத்து வழிபட்டனர். இதனைக் கண்ணுற்ற முனிசந்திரர் என்ற சமண முனிவர் பலி கொடுத்தலைத் தடுத்தார். பலாலயத்தின் காளிக்கு உயிர்ப்பலி கிடைக்காததால் தமிழ்நாட்டுப் பழையனூர் நீலி என்ற நீலகேசியிடம் முறையிட்டாள். நீலகேசி முனிசந்திரரைப் பலவிதமாகத் துன்புறுத்தியும் செல்லாதது கண்டு அவருக்கு அடங்கிச் சமணத் துறவியாக மாறினாள். பிறகு அவள் பெளத்த மதத்தைச் சேர்ந்த குண்டலகேசியிடம் வாதிட்டு வென்றாள்.

இந்நீலி வாழ்ந்த ஊர் பழையனூர். இது சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் இரயில் பாதையில் திருவாலங்காடு என்ற இரயில் நிலையச் சிற்றூரின் அருகில் உள்ளது. திருவாலங்காடு நால்வர் பாடல் பெற்ற திருத்தலம். இங்கு நீலி வடிவம் எடுத்த காளியுடன் சிவபெருமான் நடனப் போட்டியில் ஈடுபட்டு அவளை வென்றதாகக் கதை உள்ளது. இக்கதை தேவார ஆசிரியர்களாலும் சேக்கிழாராலும் சொல்லப்பட்டுள்ளது.

கதை 3. மேல் இரண்டு கதைகளையும் விட சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறும் பழையனூர் நீலி கதையே பிரபலமானது. ஒரு வணிகன் தன் மனைவியைப் புறக்கணித்து வேசியரிடம் தன் செல்வத்தை எல்லாம் தொலைத்தான். ஆதரவற்ற அவன் மனைவி தன் பெற்றோரிடம் சென்று இருந்துவந்தாள். பொருளிழந்த வணிகன், தன் மனைவியைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்தான். வழியில் அவள் அணிகலன்களைப் பறித்துக் கொண்டு அவளையும் குழந்தையையும் பாழும் கிணறு ஒன்றில் தள்ளிக் கொன்றான். பாழும் கிணற்றில் விழுந்து இறந்த அந்தப் பெண் அது முதல் பேயாகத் திரிந்தாள். அவளே நீலி.

பின்னொரு சமயம் மேலும் பொருளீட்டுவதற்காக அந்த வணிகன், அந்தப் பேய் இருந்த இடத்தின் வழியாகச் சென்றான் அவனுக்கு ஒரு முனிவர் துணையாக இருந்து ஒரு வாளைப் பரிசளித்திருந்தார். இப்போது அந்தப் பேய் மனித உருவில் கைக்குழந்தையுடன் அவனைப் பின்தொடரலாயிற்று. முனிவரின் வாள் காரணமாக அவள் அவனை நெருங்க முடியவில்லை. அது பேய் என்பதை அறிந்த வணிகன் விரைந்து பக்கத்திலுள்ள பழையனூருக்குள் ஓடினான். அந்தப் பேய்ப்பெண் கண்ணீரும் கம்பலையுமாக அவ்வூர்ப் பெருமக்களான வேளாளர் எழுபதின்மரிடம் அவனை இட்டுச் சென்றாள். மனைவியாகிய தன்னையும் தன் குழந்தையையும் அவன் கைவிட்டு வேசியிடம் செல்கிறான் என்றும், தன்னை ஏற்றுக் கொள்ளும்படி அவனை ஊரார் தூண்ட வேண்டும் என்று அவள் முறையிட்டாள்.

வணிகன் தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறினான். அவர்கள் முன் வாதாடுவது பெண் அல்ல, பெண் உருவம் கொண்ட மாயப் பேயே என்றும் விடாமல் எடுத்துரைத்தான். வேளாளர்கள் அவன் கூறிய கதையை நம்பவில்லை. அவனுக்குத் தீங்குவராமல் காப்பதாக உறுதி அளித்தனர். நீலி பிள்ளையுடன் வணிகனோடு தங்கினாள். அப்போதும் அவள் பழிவாங்கும் செயலுக்கு முனிவர் தந்த மந்திர வாள் தடையாக இருந்தது. அந்த வாளால் அவன் தன்னைக் கொன்று விடுவான் என்று வேளாளரிடம் முறையிட்டு அந்த வாளை அவனிடமிருந்து அகற்றினாள் நீலி. இரவில் வணிகனுடைய உடலைப் பிளந்து இரத்தத்தைக் குடித்துவிட்டு பழையபடியே பேயாக மாறிச் சென்றுவிட்டாள். இச் செய்தி கண்ட வேளாளர் தங்கள் தவற்றை உணர்ந்து வருந்தி தங்கள் உறுதிமொழி தவறாது தீக்குளித்து இறந்தனர்.

எவ்வாறாயினும் நீலகேசி என்னும் தருக்க நூலைப் படிக்க நீலகேசி பற்றிய இக்கதைகள் தேவையே இல்லை. நண்பர்கள் யாவரும் நமது பழைய தத்துவங்களையும் தர்க்க முறைமையையும் அறிய இந்த நூலைப் பயில வேண்டியது அவசியம்.

இதன் ஆசிரியர் சமய திவாகர வாமன முனிவர் என்பர். இது தரும உரைச் சருக்கம், குண்டலகேசி வாதச் சருக்கம் அருக்க சந்திர வாதச் சருக்கம், மொக்கல வாதச் சருக்கம், புத்த வாதச் சருக்கம், ஆசீவக வாதச் சருக்கம், சாங்கிய வாதச் சருக்கம், வைசேடிக வாதச் சருக்கம், வேத வாதச் சருக்கம், பூத வாதச் சருக்கம் எனப் பத்துப் பிரிவுகள் கொண்டது. ஒவ்வொரு சருக்கமும் ஒரு மதக் கொள்கையை நீலகேசி வாதிட்டு வெல்வதை எடுத்துரைக்கிறது. வடமொழிப் பயிற்சி இல்லாத தமிழர்கள் பல மத தத்துவங்களையும் தமிழ் மொழியில் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஒரு சமய திவாகரமாக (சூரியனாக)த் திகழ்கிறது.

இலக்கியம்