எழுபத்தொன்றில் அடியெடுத்து…

1949 மே 14 என் பிறந்த நாள். அந்தக் கணக்குப்படி இன்று எழுபது முடிந்து எழுபத்தொன்றாம் வயதில் அடியெடுத்து வைக்கிறேன். மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 40 ஆண்டுகள் முடிந்தபோது-41இல் அடியெடுத்து வைத்தபோது, நானும் மனைவியும் மகன் துணையோடு சீனாவுக்குச் சென்று வந்தோம். (அந்தக் குறிப்புகளைக்கூட இன்றுவரை எழுதமுடியவில்லை!) என் வாழ்க்கை வரலாற்றில்தான் அதைப் பற்றி எழுத வேண்டும். இப்போது எழுபத்தொன்றாவது வயதில் அடிவைக்கும்போது, வெளிநாட்டுக்கு இல்லை என்றாலும், மீண்டும் ஒரு சிறு பயணமேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதன்படி மங்களூர், மேற்குக் கடற்கரை வரை சென்றுவர வேண்டும் என்று முடிவுசெய்தேன். நேற்று மூகாம்பிகைக்கும் முருதேஷ்வருக்கும் சென்றுவிட்டு வரும் வழியில் உடுப்பி அருகில் மேற்குக் கடற்கரைச் சாலையில், கடற்கரையில் மாலை நேரம் சுமார் மூன்று மணிநேரம் செலவிட்டோம். பக்திக்காகக் கோயிலுக்குச் செல்ல வில்லை. மனத்துக்குப் பிடித்த மேற்குக் கடற்கரைச் சாலை, அரபிக் கடலில் சூரிய அஸ்தமனக் காட்சி…இம்மாதிரி விஷயங்களுக்காகத்தான். கடவுள் என ஒன்றிற்குப் பெயர்தர வேண்டுமானால், இயற்கைதான் கடவுள். இயற்கையின்றி மனிதன் ஏது?
இன்று பெங்களூர் திரும்புகிறோம்.


என் வாழ்க்கையில் சில பக்கங்கள்-2

என் மகனுக்குப் பெண் நிச்சயித்த சமயம். 2012 பிப்ரவரி-மார்ச் ஆக இருக்கலாம். பெண்வீட்டாரில் ஒரு பதினைந்துபேர் எங்கள் வீட்டைப் பார்க்க வந்தார்கள். அப்போது நாங்கள் கிண்டியில் ஒரு வீட்டு மாடியில் வாடகைக்குக் குடியிருந்தோம். நான் நிறைய எழுதியிருந்த போதிலும் அங்கீகாரங்களோ விருதுகளோ கிடைக்காத காலம் அது. 2011இல் ஆனந்தவிகடனின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது கிடைத்திருந்த போதிலும் அவர்கள் அப்போது அதற்கான பட்டயங்களோ அடையாளங்களோ எதையும் அளித்திருக்கவில்லை.
மாமரத்தில் ஏறிய குரங்குப் பட்டாளம் போல் வீடுமுழுவதையும் அடைத்துக் கொண்டார்கள். அவர்கள் திமிர்ப்பேச்சு தாங்க முடியவில்லை. பெண்ணுக்குத் தாய்வழிப் பாட்டனாம் ஒரு கிழவன். எங்கள் பெண்ணைப் போல் உலகத்தில் இருக்க முடியாது, எவ்வளவு சீர்செனத்தி செய்வீர்கள்? 100 பவுன் போடுவீர்களா? என்றெல்லாம் கிண்டலோ, நிஜமோ தெரியாது, பேசிக் கொண்டிருந்தான். பெண் ஏதோ ஒரு கம்பெனியில் இரண்டு வருஷமாக வேலை செய்கிறாளாம். பெண்ணின் மாமன் என்று ஒருவன். இவன் இரயில்வேயில் உத்தியோகத்தில் இருக்கிறானாம், இவனுடைய ஆணவப் பேச்சையும் சகிக்க முடியவில்லை. இதற்கு நடுவில் என் மகனோ மனைவியோ, “இவங்க ஒரு எழுத்தாளர். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறாங்க” என்று என்னைப் பற்றிக் கூறினார்கள். “எழுத்தாளராம்…எழுதுகிறானாமே இவன்? என்ன சார் எழுதறீங்க?” என்று கிண்டலடித்தார்கள் பெண் வீட்டில். சாண்டில்யனைப் படித்துக்கூட புரிந்துகொள்ள முடியாத கும்பல், இந்த மாதிரிப் பேசியது. சிவனே என்று பொறுத்துக் கொண்டு உபசரித்து அனுப்பிவைத்தோம். வெறும் பண அருமை தவிர வேறு எதுவும் தெரியாத கும்பல். அப்போதே அதன் தகுதி தெரிந்துவிட்டது. கட் பண்ணி யிருக்க வேண்டும். ஆனால் பெண்பார்த்த அன்றே “உங்கள் பெண் பிடித்திருக்கிறது, எடுத்துக் கொள்கிறோம்” என்று என் மனைவியையும் கேட்காமல் வாக்குக் கொடுத்துவிட்டேன். அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக அன்றும் பேசாமல் இருந்தேன். அதனால் எனக்குப் பின்னால் ஏற்பட்ட அவமானங்கள் சொல்லி முடியாது. என்ன செய்ய?
கொண்டு குலம்பேசக் கூடாது என்பார்கள். ஆனால் தேவையின்றி எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் வாழ்க்கையில் மிகுதி. குறிப்பாக எங்கள் சாதியைச் சொல்லவேண்டும். எப்படியோ பிஎஸ்.சி, பி.இ., என்றெல்லாம் சற்றே படித்து, பெரும்பாலோர் வேலையில் இருந்தார்கள். ஆனால் பொது அறிவு பூஜ்யம். பாடப்புத்தக அறிவுக்குமேல், பணம் சம்பாதிப்பதற்குமேல், சற்றும் வெளி விஷயங்கள் இருக்கின்றன என்பதை அறியாத சோற்றுக் கூட்டம்.
இப்படிப்பட்ட சாதியில் பிறந்துவிட்ட வள்ளலார் என்ன பாடு பட்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க மனம் தாள முடியவில்லை. அதனால்தானோ என்னவோ, “கடைவிரித்தேன், கொள்வாரில்லை” என்று கடைசியில் சொல்லிப் போனார், பூவினும் மெல்லிய மனமுடைய அந்தப் பெரியார்.


சிரிப்பாக‍ எடுத்துக் கொள்க

சவூதி அரேபியா சதுரங்க (செஸ்) விளையாட்டை ஆபத்தானது என்று சொல்லித் தடை செய்துள்ளது. காரணங்கள்
(1) ஆட்டத்தின் ராணி புர்க்கா அணியவில்லை
(2) ராணி எங்கு வேண்டுமானாலும் போகிறது
(3) ராஜாவை விட ராணிக்கு அதிகாரம் அதிகம்
(4) எதிரிப் பிரதேசத்திற்குள் எல்லாம் ராணி போகிறது…
இவற்றை எல்லாம் விட முக்கியக் காரணம்:
(5) ராஜாவுக்கு ஒரே ஒரு ராணிதானாம்! என்ன கொடுமையப்பா இது!


“ஆய்வு”

ஒரு மேலாளர் தனது தொழிற்சாலைப் பகுதியில் மேற்பார்வை (இந்தக்காலச் சொல்லில் “ஆய்வு”)செய்து கொண்டிருந்தார். ஓர் இளைஞன் எந்த வேலையும் செய்யாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவனிடம் சென்று, “ஏம்பா, உன் சம்பளம் என்ன?” என்றார். “ரெண்டாயிரம் ரூபாய் சார்” என்றான் அவன். உடனே பாக்கெட்டிலிருந்து நாலாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து “இந்தா ரெண்டு மாச சம்பளம். இனிமே இந்தத் தொழிலகம் பக்கமே தலையைக் காட்டாதே..சோம்பேறிகளுக்கு இங்கே இடமில்லை” என்றார். அவன் வாங்கிக் கொண்டு போய்விட்டான். 
பிறகு அவர் பக்கத்திலிருந்த தொழிலாளியிடம் “அவன் என்ன வேலை செய்துவந்தான்” 
என்று கேட்டார். “சார், அவன் பக்கத்து சங்கீதா மெஸ் ஆள். நாங்க அங்கதான் சாப்பிடுவோம். இங்கே மத்தியான சாப்பாடு இன்னிக்கு எததனை பேருக்கு வேணும்னு கேட்டுத் தெரிஞ்சிக்க வந்திருந்தான்” என்றார் அந்தத் தொழிலாளி.


சாதுரியம்

பெரியோர்களின் வாழ்க்கையையும் கொள்கைகளையும் உதட்டளவில் வெகுவாகப் புகழ்ந்து பேசி, தங்கள் வாழ்க்கையில் அவற்றை ஒரு சிறிதும் பின்பற்றாமல் வாழ்கின்ற இந்திய மக்களின் நடைமுறைக்கு காந்தி ஜெயந்தி ஒரு நல்ல உதாரணம். கொள்கைகளை மதிப்பிட்டு ஏற்று நடப்பதோ புறக்கணிப்பதோ அன்றி வெறும் சொல்லளவு மரியாதையினாலும் ஊருக்கு ஊர் சந்திக்குச் சந்தி வைக்கப்படும் பொம்மைகளாலும் அவற்றிற்கு ஆண்டுக்கு ஒருமுறை இடப்படும் மாலைகளாலும் பயன் என்ன?


இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 8

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 8

இந்திய வல்லரசு: உலகமயமாக்கலை விற்பனை செய்தல்

ஆழமாகும் சமமின்மை, வளரும் பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவற்றின் இடையில் எழும் இயற்கையான கேள்வி, எப்படி இந்த உலகமயமாக்கல் வடிவத்தை மக்கள்திரள் ஏற்றுக் கொள்ளுமாறு செய்தனர் என்பது. மாநில, தேசியத் தேர்தல்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையேனும் மக்களின் ஒப்புதலைப் பெறவேண்டிய அரசியல் கட்சிகள், முதலீட்டு நீக்கம், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் என்பவற்றை எவ்விதம் அவர்களிடம் விற்பனை செய்கின்றன?

கல்வியாளர்கள் – கொள்கை வகுப்போர் இடையில் உலகமயமாக்கல் பற்றி இன்னும் விவாதம் நடந்துகொண்டிருந்தபோதே, மேட்டுக்குடிக் கட்டத் திலிருந்து சீர்திருத்தங்கள் நகர்ந்து, வெகுமக்கள் கட்டத்திற்குச் சென்ற போதுதான் (1990களின் இடைப்பகுதியிலிருந்து) சாதாரணமக்கள், தாராளமயமாக்கலின் தாக்கத்தை உணரத் தொடங்கினர். பிஜேபி வழிநடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது (1998-2004) தாராள மயமாக்கலின் வெகுமக்கள் கட்டத்தின் பெரும்பகுதி நிகழ்ந்தது. காங்கிரஸ் வழிநடத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அதைத் தொடர்ந்தது.

பழைய காந்திய இலட்சியமான சுதேசி அல்லது சுயசார்பு என்பதை இரண்டு கட்சிகளுமே “உலக அரங்கில் இந்தியாவை வல்லமையுள்ளதாக ஆக்கக்கூடிய எதுவும்” என்று அர்த்தப்படுத்தும் விதமாக மெதுமெதுவாக மறுவரையறை செய்தன. கொஞ்சம் கொஞ்சமாக நாம் சுதேசியைப் பற்றிக் குறைவாகவும், வல்லரசு என்பதைப் பற்றி மிக அதிகமாகவும் கேட்கத் தொடங்கினோம்.

1998இல் பிஜேபி அரசாங்கம் நடத்திய அணுச் சோதனைகளுக்குப் பிறகு வல்லரசு என்ற பேச்சு அடிக்கடி கேட்கப்படலாயிற்று. உலக அரங்கில் இந்தியாவின் கௌரவத் திற்கு மிகப்பெரிய சக்தி கொடுப்பனவாக இச்சோதனைகள் விளக்கப்பட்டன. ராப் ஜென் கின்ஸ் என்பவருடைய கூற்றுப்படி, பொருளாதார வட்டத்திலும், பிஜேபி அதேவித கௌரவத்தை உருவாக்கும் என்று உறுதியளித்தது.

“பிஜேபியின் பார்வையில், சர்வதேசச் சமூகத்தில் இந்தியா தனக்குரிய இடத்தை எடுத்துக் கொள்ளும் என்பதற்கு உலக மயமாக்கல் களமாக அமைந்தது; உலகப் பாதுகாப்புத் துறையில் 1998இன் அணுச் சோதனைகளால் இது அடையப்பட்டது போலவே, இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப நிபுணத்துவமும், வணிக புத்திக்கூர்மையும் இந்தியாவை உலகப் பொருளாதாரத் துறையிலும் செழிக்கவைக்கும்.”

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கின் பின்வரும் கூற்று ‘வல்லரசு சுதேசி’ (வல்லரசு இந்தியா) என்ற சொல்-அலங்காரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்.

“அறிவுத்தொழில்துறையில் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்….நாம் உலகத்தைச் சென்றடைந்து நமது இருப்பை உலகமயமாக்கலின் மூலமாகப் பதிவுசெய்து கொண்டிருக்கிறோம். இன்று இந்தியத் தொழில் முனைவோர் கொண் டாடப்படுகின்றனர். டாடா, டேவூ நிறுவனத்தை வாங்குவதையும், ரிலையன்ஸ் ஃப்ளாக் நிறுவனத்தை வாங்குவதையும் பாருங்கள். ஆய்வு வெளிநாடு செல்கிறது. மருந்துக் கம்பெனிகள் வெளிநாடு செல்கின்றன. இந்திய நிறுவனங்கள் வெளியே சென்று உலகமயமாகின்றன. இதுதான் சுதேசி.” (அழுத்தம் என்னால் தரப்பட்டது).

இன்று எல்லாக் கட்சிகளுமே வல்லரசு அந்தஸ்தை இந்தியா அடையப்போகிறது என்ற உறுதிமொழியைத் தங்கள் தேர்தல் பேச்சுகளில் பயன்படுத்துகின்றன. அயல்நாட்டு முதலீட்டுக்கு எதிராகக் காவலிருக்கும் சங்கப் பரிவார அமைப்பான சுதேசி ஜாக்ரண் மஞ்ச்-சும்கூட இந்தப் பார்வையை ஏற்றுக்கொண்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நீண்டகாலமாகக் கடுமையான விமரிசனம் செய்துவந்த சுதேசி ஜாக்ரண் மஞ்ச்சின் தலைவரான எஸ். குருமூர்த்தி, இந்துத்துவ நோக்கில் உலகமயமாக்கலை ஆதரிக்கின்ற சிந்தனையமைப்பான இந்தியன் ஃபர்ஸ்ட் ஃபவுண்டேஷனின் இயக்குநர் கள் குழுவில் அமர்ந்துகொண்டு, “உலகப் பொருளாதார பலத்தைப் பெற அளவிட்ட உலகமயமாக்கல் கருவியாகும்” என்று பேசுகிறார்.

ஆனால் இந்துத்துவ அணிகளின் உள்ளிருந்தே தனியார்மயமாக்கலுக்கும் உலகமயமாக்கலுக்கும் – குறிப்பாக, ஆர்எஸ்எஸ்-ஸின் கூட்டுத் தொழிற்சங்கமான ‘பாரதிய மஜ்தூர் சங்கத்’ (பிஎம்எஸ்)திடமிருந்தும்,
சிறு-உற்பத்தியாளர்களிடமிருந்தும் எதிர்ப்பு இருக்கிறது. இவர்களால் (பெரும்பாலும் சீனாவிலிருந்து) மலிவாக இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு எதிராகப் போட்டியிட முடியவில்லை. சங்கப் பரிவாரத்தின் அதிகப் போர்க்குணமுடைய பிரிவுகளிலிருந்து, மேற்கத்தியக் கலாச்சார இறக்குமதிகளுக்கும் (உதாரணமாக, காதலர்தினக் கொண்டாட்டம், அழகிப்போட்டிகள், மதுபான விடுதிகள்) குறிப்பிட்ட அளவில், அவ்வப்போது வன்முறை சார்ந்தும் எதிர்ப்பு இருக்கிறது. இதுபோன்ற நாசவேலைகள் செய்பவர்களை பிஜேபி மறைமுகமாக ஆதரிக்கிறது; அதேசமயம், மத்தியவர்க்கத்தினர்கள் இடையே தனக்கு வளர்ந்து வரும் வாக்கு ஆதரவினை பாதிக்காத அளவில் தன்னை அவர்களிடமிருந்து தொலைவு படுத்திக்கொள்ளவும் செய்கிறது.

சுதந்திரச் சந்தைகளை சற்றும் தயக்கமின்றி ஆதரிக்கும் கருத்தியல் சொல்லாடலை மேற்கொள்பவர்களில் மேலும் இரண்டு குழுவினர் உள்ளனர். முதலாவது குழுவினர், சங்கப் பரிவாரத்தின் மதவாத திட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள். “இந்துமதம், தனிநபரை மேம்படுத்தும் மதம்” என்ற விளக்கத்தை ஆதரிப்பவர்கள் இவர்கள். இவர்களில் முக்கியமானவர்களும், செல்வாக்கு மிகுந்தவர்களும் என, (முந்தியபகுதி ஒன்றிலேயே ஒரு விசித்திரமான அரசியல்-பொருளாதாரவாதி என்று நாம் கண்ட) சுப்பிரமணியம் சுவாமி, (நன்கு அறியப்பட்ட பொதுமனிதரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அரசுமுதலீட்டுநீக்க அமைச்சராகப் பணிபுரிந்தவருமான) அருண் ஷோரி ஆகியோரைக் கூறலாம்.

உலகெங்கிலுமுள்ள தொழிலதிபர்கள், பெருவணிகர்களின் செல்லப்பிள்ளை ஆகியுள்ள, குஜராத்தின் முதலமைச்சரான [இப்போது இந்தியப் பிரதமர்!] நரேந்திர மோடியையும் இவர்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். இம்மாதிரிக் கருத்து நோக்கினைக் கொண்டவர்களை இந்துத்துவ நவதாராளவாதிகள் எனலாம்.

இரண்டாவது குழுவினர், மதச்சார்பின்மையை (அல்லது குறைந்தபட்சம், இந்துத்துவம் அற்ற நோக்கினை) முன்நிறுத்தும் வலதுசாரிக் கட்சியினர். இவர்கள் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸின் பிரிவுபடுத்தும் முஸ்லிம் எதிர்ப்பு, கிறித்துவ எதிர்ப்புத் திட்டங்களை ஒதுக்குபவர்கள். தனிநபர் உரிமைகள், சுதந்திரம், சிறு அரசாங்கம், மதத்தையும் அரசையும் வேறுபடுத்தல் ஆகியவற்றில் செவ்வியல் தாராளவாத நிலைப்பாடுகளைப் பிரபலப்படுத்துபவர்கள். ஒருவிதமான இன்றைய சுதந்திராக் கட்சிக்காரர்கள். இந்தக் கருத்தியலைப் பகிர்ந்துகொள்பவர்களை நியாயமாக இந்துத்துவம்-சாராத நவதாராளவாதிகள் எனலாம்.

இந்துத்துவ நவதாராளவாதிகள், அமெரிக்க மதவாத நவபழமை வாதிகளுக்கு (தியோகான்கள் அல்லது இறையியல் பழமையாளர்கள்) நெருங்கிய கருத்தியல் உறவினர் ஆவர். அமெரிக்கத் தியோகான்கள், ரோமன் கத்தோலிக்க மதத்தின் இயற்கைச் சட்ட மரபிலிருந்து பெறப்பட்ட இறையியல் உலகப் பார்வையிலிருந்து தங்கள் தீவிர ஆர்வத்துடன்கூடிய அமெரிக்க தேசியவாதத்தையும், முதலாளித்துவ விருப்பத்தையும் நியாயப் படுத்துபவர்கள். (ட்ரம்ப்பை நினைவு கொள்ளுங்கள்!)

கொள்கைரீதியிலாவது அமெரிக்க அடிப்படைக் கோட்பாடான திருச்சபை – அரசு பிரிவினையை ஏற்றுக் கொள்ளும் மைய நீரோட்டச் சீர்திருத்தக் கிறித்துவப் பிரிவுகளைப் போலன்றி, தியோகான்கள், மதச்சார்பின்மையை ஒரு தீட்டாகவும், அமெரிக்காவின் கலாச்சார நோய்களுக்கு முதன்மையான மூலமாகவும் நோக்குபவர்கள். ஜியார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் விசுவாச அடிப்படை (தொழில்தொடக்க) முயற்சிகளுக்குத் தத்துவரீதியான நியாயப்படுத்தலை வழங்கியவர்கள். அமெரிக்க தேசத்திற்கு முன்நிபந்தனையும் முதலாளித்துவ சுதந்திரச் சந்தைகளின் செயல்பாட்டுக்கு முதல் தேவையும் கிறித்துவமத விசுவாசமே என்று வலியுறுத்துபவர்கள்.

இதேபோல, இந்திய தேசத்திற்கு முன்நிபந்தனையும், இந்திய முதலாளித்துவம் முறையாகச் செயல்படுவதற்கான முன் தேவையும் இந்து மதமே என்ற கருத்தியலை இந்தியத் தியோகான்களாகிய இந்துத்துவ நவதாராளவாதிகள் முன் வைக்கின்றனர். இந்த நிலைப்பாட்டை சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துகள் எடுத்துக்காட்டுபவை. 1970களில் இந்து மறுமலர்ச்சியையும் முதலாளித்துவத்தின் தலையிடாக் கொள்கையையும் இணைக்கவேண்டும் என்று சுப்பிரமணியம் சுவாமி கூறியபோது சிரித்து ஒதுக்கப்பட்டார். ஆனால் இதே சிந்தனைகள், பலவேறு பத்திகளிலும், இணையதள வலைப்பூக்களிலும் மறுசிப்பம் செய்து இன்று தரப்படும்போது, உள்நாட்டிலும், அயல்நாட்டிலுள்ள அயலக இந்தியர்கள் இடையிலும் புதிய வரவேற்பைப் பெறுகின்றன.

நேருவின் சமதர்மவாத, சகிப்புத்தன்மையின் எல்லாக் கூறுகளையும் கலைத்தெறியவும்,
ஆண்டுக்கு 10 சதவீதம் என மொத்த உள்நாட்டு உற்பத்தி வளரும்படி தனியார் துறை செழிக்கும்படியாக உள்கட்டமைப்பை ஆக்கவும், கொள்கைகளையும் வழங்குமளவுக்கு மட்டும் அரசைக் குறுக்கவும்,
தங்கள் ஆர்வங்களை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் செயல்தந்திர ஆர்வங்களுடன் ஒத்துச்செல்லவும்,
தேவையான அரசியல் விருப்புறுதியை இந்தியர்கள் வளர்த்துக் கொண்டால்,
2025அளவில் இந்தியா ஓர் உலக வல்லரசாக மாறும் என்று சுவாமி வாக்களிக்கிறார்.

இவை அனைத்தும் தேவை என்றே வைத்துக் கொள்வோம்!
இந்தப் பொருளாதார, அயல்நாட்டுக்கொள்கைச் சீர்திருத்தங்கள் இதற்குப் போதுமானவை அல்ல. மேலும் தேவையானது, இந்துஸ்தானத்தின் (இந்தியாவுக்கு அவர் விரும்பும் பெயர்) வெகுமக்களின் (முஸ்லிம்கள், கிறித்துவர்கள் உள்பட) இதயங்களிலும் மனங்களிலும், பள்ளிகள், அரசாங்கம், பெருவணிக நிறுவனங்களிலும் சமஸ்கிருத இந்துமதம் மீண்டும் அரியணை ஏறவேண்டும் என்பதே. பொருளாதார வல்லரசுத்தனம் என்பது இந்து மறுமலர்ச்சியோடு சேரும்போதுதான் வரும்!

“இந்தியா உலகப் பொருளாதார சக்தியாக மாறுவது போதாது. உலகமுறைமையில் அவள் உரிய இடத்தைப் பெற வேண்டுமானால், சுயசந்தேகம் அற்ற ஓர் ஆண்மையுள்ள மன அமைப்பினால் முழுமையான இணைப்பைப் பெறுவதோடு, கடந்த ஆயிரம் ஆண்டுகளாகச் சேகரித்த அழுக்கையும், தேவையற்ற மூட்டைமுடிச்சையும் சுத்தப்படுத்த ஓர் இந்து மறுமலர்ச்சிக்கும் ஆளாகவேண்டும்.”

வேடிக்கை என்னவெனில், தனியார் தொழில்களின் வழியிலிருந்து அரசு விலகியிருக்க வேண்டுமாம், ஆனால் மக்களின் பொதுப்பணத்தை மட்டும் இந்துமத மறுமலர்ச்சியை ஊக்கத்தோடு மேம்படுத்த அது பயன்படுத்தவேண்டுமாம்! சுவாமியும் அவருடைய சக இந்துத்துவ நவதாராளமய வாதிகளும் இதைத்தான் விரும்புகிறார்கள்.

அதாவது, பொருளாதார விஷயங்களில் அரசு குறைந்தபட்சப் பங்கும், இந்துமதத்தைப் பரப்புவதில் மிகப்பெரிய பங்கும் வகிக்கவேண்டும்.

இந்தியாவை ஆரியர்களின் தாயகமாக ஆக்கும் ‘சரியான வரலாற்றை’ அரசு கற்றுக்கொடுக்க வற்புறுத்தவேண்டும்.

மேலும், அறிவியலையும் இந்து ஆன்மிகத்தையும் வகுப்பறையில் ஒன்றாகக் கொண்டுவந்து ஒரு இந்திய முன்மாதிரிக் கல்வியை அரசு மேம்படுத்த வேண்டும்.

தங்கள் சொந்த மத நம்பிக்கைகள், மரபுகள் என்னவாக இருப்பினும் எல்லா இந்தியர்களும் இந்த ‘அறிவியல் ஆன்மிகத்தை’த் தங்கள் சொந்தப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ஏற்கவேண்டும்.

(இங்கும், அமெரிக்காவின் மத வலதுசாரியினரோடு இவர்களுக் குள்ள இணைவரைகள் மிக முனைப்பானவை. பழமைவாத நற்செய்தியினரும், கத்தோலிக்கக் குழுக்களும் புஷ்ஷின் வெள்ளை மாளிகையின் சக்தியைக் குழந்தை பெறும் உரிமை கள், ஸ்டெம்செல் ஆய்வு, விசுவாச அடிப்படையிலான முனைப்புகள் ஆகியவற்றில் சமூகத்தில் பழமைவாதச் சட்டங்களைக் கொண்டுவருவதற்குப் பயன்படுத்துவதில் எவ்வித உறுத்தலையும் அடையவில்லை. ஆனால் அரசாங்கத்தின் பொதுநலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியில் மிகப்பெரிய வெட்டுகளை மட்டும் ஆதரித்தார்கள்.)

இப்போது இந்துத்துவம் சாராத நவதாராளவாதிகளுக்கு வருவோம். 2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலகத்தில் பிஜேபி கூட்டாளியானதால் ஏமாற்றமடைந்து, சுந்திரச் சந்தையின் உற்சாகிகளில் பலர் பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பிக்க தீவிரமாகச் சிந்தித்தனர். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தொழிலதிபர்களில் இருவர் இம்மாதிரி திட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தனர். பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட தகவல்தொழில்நுட்ப, அயல்சேவைப் பயன்பாட்டு நிறுவனம் எம்பசிஸ். இதன் நிறுவனரும் தலைமை அதிகாரியுமான ஜயதீர்த் (ஜெரி) ராவ்,

“மலிவான வெகுஜனத் திட்டங்களில் ஒளிந்துகொள்ளாமல், வெளிப்படையான, தற்காப்புவாதமற்ற, சுதந்திரச் சந்தைகளுக்கு ஆதரவு தருகின்ற சுதந்திரா போன்றதொரு புதிய கட்சியைத் தொடங்கவேண்டும்”

என வாதிட்டுள்ளார்.

இந்தியாவில் மிக நன்கு அறியப்பட்ட மென்பொருள் குழுமமான இன்ஃபோசிஸின் நிறுவனரும் தலைமை அதிகாரியுமான நாராயணமூர்த்தி, பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பித்து, அதன் தளத்தில் நின்று தேர்தல்களைச் சந்திக்கத் தனது சொந்தப் பணத்திலிருந்து நாற்பதுகோடி ரூபாய்வரை செலவுசெய்ய விருப்பமாக உள்ளார் என்று சொல்லப்பட்டது.

நவதாராளவாதிகள் இடையில் மிகச் செல்வாக்குமிக்க குரலாக எழுச்சி பெற்று வந்துள்ள குர்சரண் தாஸ், பின்வருமாறு செய்யக்கூடிய ஒரு கட்சியை உருவாக்கவேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்:

“அரசியல் காரியங்களைவிடப் பொருளாதாரத்திற்கு முக்கியத் துவம் தரும், அதிகாரி வர்க்கத்தைவிடச் சந்தைகளை நம்பும். இதுவரை எந்தக் கட்சியும் செய்யாததைச் செய்யக்கூடியதாக இருக்கும்….அதாவது, பொருளாதார, சமூக, நிர்வாகச் சீர்திருத்தங்களை மக்களுக்கு விற்பதாக இருக்கும் .… கடைசி யாக, அது மதத்தைப் பொதுவெளி யிலிருந்து அகற்றித் தனி(நபர்) வெளிக்குள் இருத்தச் செயல்படும்.”

சுதந்திராக் கட்சியைப் போற்றுபவர்களுக்கு, இப்படிப்பட்டதொரு கட்சி தேர்தல்களில் வெற்றிபெறும் வாய்ப்பு மிகக் குறைவு என்று நன்றாகத் தெரியும். ஆகவே அவர்கள் இரண்டாவது சிறந்த வாய்ப்பைத் தேர்வுசெய்யத் தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது.
சுதந்திரச் சந்தையைப் பாதுகாக்கவும், வளர்ச்சிக்கு ஆதரவான தீர்வுகளைப் பொதுவட்டத்தில் தரவும், சிந்தனை அமைப்புகள், அரசுசாரா அமைப்புகளுடன் சேர்ந்து ஓர் இயக்கம் தொடங்கவேண்டும். தில்லியை அடிப்படையாகக் கொண்ட குடிமக்கள் சமூக மையம் (செண்டர் ஃபார் சிவில் சொசைட்டி), பிரகதி என்ற மாத இதழைக் கொண்டுவரும் வலைப்பூக்காரர்களின் சங்கமான ‘தி இந்தியன் நேஷனல் இண்டரஸ்ட்’ என்ற அமைப்பு உருவாக்கம், ஆங்கில நாளிதழ்களின் ஆசிரியவுரை, கருத்துப்பக்கங்கள் ஆகியவற்றில் காணப்படும் நவதாராளவாத நிலைப்பாடுகளின் அதிக அளவிலான நீடித்த தன்மை ஆகியவற்றால் இப்படிப்பட்ட இயக்கம் தோன்றுவதற்கான தொடக்கத்தை நாம் காணமுடியும். இம்முயற்சிகள் நாட்டின் தேர்தல் அரசியலில் ஏற்படுத்தும் நிஜமான தாக்கத்தைக் காலம்தான் கூற இயலும்.

இந்து வலதுசாரிகளின் கைகளில் பழைய சுதந்திராவைப் புகச் செய்த அதே தவறுகளையே நவ-சுதந்திராக்காரர்களும் செய்வதாகத் தோன்றுகிறது. ஏற்றத்தாழ்வுகள் ஆழமாக வேரூன்றியிருக்கும் இந்தியாவில், பெற்றுக்கொள்ளும் முனையிலிருக்கும் ஏழைகளுக்குத் தங்கள் முன்னோர்களைப் போல, நவசுதந்திராக்காரர்களும் “கீழ்நோக்கிக் கசிதல்” என்ற மந்திரத்தை மட்டுமே கொண்டுள்ளனர். தங்கள் முன்னோர்களைப் போலவே, அவர்களும், இந்தியக் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்து காணப்படும் படிநிலைசார்ந்த சிந்தனைப்போக்குகளின் மத அடிப்படைகளைப் புறக்கணிக்கிறார்கள், அல்லது மென்மையாகக் கையாளுகிறார்கள். அரசாங்கக் குறுக்கீட்டின் பாவங்கள் மீது மட்டுமே தங்கள் கோபத்தைக் குவிக்கிறார்கள்.

உதாரணமாக, கோத்ரா குற்ற நிகழ்வுக்கு பிஜேபி உடந்தையாக இருந்தமை ‘இறுதியாக’ அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துவதற்கு முன்னால், அவர்கள் அதிகாரத்திலிருந்த பிஜேபியுடன் கூட்டுச்சேர்ந்து பணியாற்றத் தயாராக இருந்தார்கள்.
உரிமைகளைக் கொண்ட தனிமனிதருக்கு மரியாதை தருவதன் அடிப்படையிலான தத்துவரீதியான தாராள வாதத்தை, எந்தவகையிலும் பிஜேபி ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. குறைந்தபட்ச அரசு பற்றிய பிஜேபியின் கருத்தாக்கம், சாதிச் சமூகத்திலுள்ள சுயகட்டுப்பாட்டின் அடிப்படை ஒழுங்கை ஆதாரமாகக் கொண்டது.
தங்கள் நற்செயலாக, நவதாராள வாதிகள் பிஜேபி, சங்கப் பரிவாரம் ஆகியவற்றின் நச்சுத் தன்மை கொண்ட மத வாதத்தைப் புறக்கணித்துவிட்டார்கள்.
ஆனால் இந்தியச் சமூகத்தின் பொதுப்புத்தியாக இன்னும் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மானிடத்துவம் (இது ஒரு சாதிச் சமூகத்தின் உலகநோக்கு) என்பதன் தாராளமற்ற உலகநோக்குடன் மோதிப்பார்க்க அவர்கள் சிரத்தை மேற்கொள்ளவில்லை.

இந்திய தாராளவாதிகள், இந்து பாரம்பரியத்தன்மையின் தாராளமற்ற உலகநோக்கிற்குச் செயலூக்கத்துடன் சவால் விடும் வரையில், இந்துத்துவ நவதாராளவாதிகளைத் தாங்களே சேர்த்துக்கொள்ளவும், அல்லது அவர்களால் சேர்த்துக்கொள்ளப் படவுமான அபாயத்திலிருந்து தப்பிக்கவே முடியாது. ஒரு புதிய மதச்சார்பற்ற கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான சவாலைச் செயலூக்கத்துடன் அவர்கள் மேற்கொள்ளும்வரை, மதத்தைத் தனிமனித அளவில் நிறுத்துவது பற்றிய அவர்களின் பேச்சு பொருளற்றதாகத்தான் இருக்கும்.

இது வரை நாம் நோக்கியது இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் காணப்படுகின்ற அரசியல் பொருளாதாரப் பின்னணி பற்றிய ஒரு கண்ணோட்டம் ஆகும். இந்திய மேட்டுக்குடியினர், எவ்விதம் நேரு-காந்தியச் சிந்தனையான சுயசார்பு என்பதைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு, உலகச் சந்தைகளை நேசிக்கத் தொடங்கினார்கள் என்பதன் வரலாற்றை இது காட்டுகிறது.

புதிய பொருளாதாரத்தின் இலாபங்களை மிகப் பெரும்பான்மையினரான பணியாளர்கள் (பெற இயலாமல்) மூடிவிட்ட அதன் அமைப்புக்கூறுகளை இந்தக் கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது.
புதிய பொருளாதாரத்தில் பங்கேற்கத் தேவையான கலாச்சார மூலதனத்தைப் பெறுவதற்கான திறவுகோலாகிய கல்வி, குறிப்பாக உயர்கல்வி, மேலும் மேலும் வணிகமயமாகி வருவதைக் காட்டுகிறது. கடைசியாக, வல்லரசு அந்தஸ்துக் கனவின் வாயிலாக வெளிப்படுகின்ற தேசியப் பெருமிதத்தின் வளர்ச்சியையும் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.


ரோசா லக்சம்பர்க்-திரைப்படம்

ரோசா லக்சம்பர்க்கைப் பற்றிக் கேள்விப்படாத மார்க்சியர்கள் இருக்கமுடியாது. அவரைப் பற்றிய திரைப்படம் 1986இல் ஜெர்மனியில் எடுக்கப்பட்டது, மார்கரெத் வான் த்ரோத்தா என்னும் பெண்மணியால் இயக்கப்பட்ட படம் அது. ஜெர்மன் மொழியில் சிறந்த திரைப்படத்திற்கான பரிசையும் அது 1986இல் பெற்றது. மிகச் சிக்கலானதோர் ஆளுமையின் மிகச் சிறந்த வெளிப்பாடு இப்படம் என்னும் சிறப்பை இந்தப் படம் பெறக்காரணம், இதன் முதன்மை நடிகை பார்பாரா சுக்கோவா, ரோசா லக்சம்பர்கின் குணாதிசயத்தை மிக அருமையாக வெளிப்படுத்தியிருந்த சிறப்புதான்.

இங்கு சுருக்கமாக ரோசா லக்சம்பர்க் பற்றிய அறிமுகத்தைத் தருவது நன்றாக இருக்கும். 1871இல் போலந்தில் பிறந்த அவர் 1919இல் பெர்லினில் மறைந்தார். மதிநுட்பம் மிகுந்தவராகவும், கல்வியில் சிறந்த மாணவியாகவும் விளங்கிய ரோசா, சோஷலிச நடவடிக்கைகளில் இளம் வயதிலேயே ஈடுபட்டார். அதன் விளைவாகக் கைதாவதைத் தவிர்க்க ஸ்விட்சர்லாந்து சென்றார். பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்கை விஞ்ஞானம் முதலியவற்றோடு அரசியல் பொருளாதாரம் பயின்றார். போலந்து சோஷலிசக் கட்சியின் தேசியவாதத்தை எதிர்த்து, சமூக ஜனநாயகக் கட்சியைத் தொடங்கினார். அக்கட்சியின் முக்கிய அமைப்பாளர் லியோ ஜோகிசசுடன் தீவிர அரசியல் பிணைப்புக் கொண்டிருந்தார். 1898இல் தன் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஜெர்மனி சென்றார்.

ஐரோப்பிய சோஷலிசம் பற்றிய விவாதங்களில் மையமான இடத்தைப் பெற்ற சிந்தனையாளர் ரோசா. ‘சீர்திருத்தமா, புரட்சியா’ என்ற நூல் அப்போது அவர் எழுதியது. முதலாளியம் இருக்கும்வரை அதனுள் நிலவும் முரண்களும் சிக்கல்களும் ஒழிக்கப்பட முடியாதவை என்றும், பெர்ன்ஸ்டீன் முன்வைத்த திருத்தல்வாதம் போன்றவை சோஷலிச உருவாக்கத்தின் அஸ்திவாரத்தை மறுத்து அதனைக் கற்பனாவாதமாக மாற்றிவிடும் என்றும் அதில் வாதிட்டிருக்கிறார். சீர்திருத்த நடவடிக்கைகள் முதலாளிய உற்பத்தி உறவுகளை ஒழிக்கப் போதுமானவை அல்ல. தொழிலாளர் இயக்கம் தன் இறுதி இலட்சியமான புரட்சிக்கான அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்பதை மறந்துவிடலாகாது. 1904இல் ‘ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் அமைப்புரீதியான கேள்விகள்’ என்ற பிரசுரத்தில், லெனினை இறுக்கமான மையப்படுத்தப்பட்ட கட்சி தேவை என்றதற்காக விமர்சித்திருக்கிறார். அது தொழிலாளர் வர்க்கத்தை சேவக நிலையிலேயே வைத்துவிடும் என்றார். 1905இல் புரடசிக்கான ஒத்த எதிர்வினை லெனினையும் அவரையும் இணங்கிவரச் செய்தது. ரஷ்யப்புரட்சியை எதிர்நோக்கிய அவர், ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியையும் அதுபோன்ற பணியில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார். ‘பொது வேலைநிறுத்தமும், கட்சியும், தொழிற்சங்கங்களும்’ என்ற நூலில், பொது வேலைநிறுத்தத்தினைத் தொழிலாளர் புரட்சிக்கான சிறந்த வடிவமாகக் கண்டுள்ளார். 1910இல் இந்த நோக்கு காட்ஸ்கியுடன் பிளவு ஏற்படக் காரணமாயிற்று.

ஏகாதிபத்தியம் குறித்து மிகுதியாகச் சிந்தித்தவர் ரோசா. ‘மூலதனக் குவிப்பு’ என்ற (அக்யூமுலேஷன் ஆஃப் கேபிடல்) முக்கியமான நூலை 1913இல் வெளியிட்டார். ‘ஜூனியஸ் பிரசுரம்’ என்பதன் வாயிலாக, முதல் உலகப்போரில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்ததால், போரின் பெரும்பகுதியை அவர் சிறையில் கழிக்கவேண்டி வந்தது. சிறையில் ரஷ்யப் புரட்சி என்ற நூலை எழுதினார். அதில் சோஷலிச ஜனநாயகத்தைக் குறுக்கும் போக்கினை விமர்சித்திருக்கிறார்.

இத்திரைப்படம் 1898 முதல் 1919வரை பெரிதும் ஜெர்மனியில் ரோசா வாழ்ந்த காலத்தின் சித்திரிப்பாகும். அரசியல் செய்தியாளராக, ஆசிரியராக, பேச்சாளராக, கருத்தியல் நூல்களின் ஆசிரியராகப் பெரும்புகழ் பெறுவதிலிருந்து தொடங்குகிறது படம். மீண்டும் மீண்டும் அரசியல் காரணங்களுக்காகச் சிறைப்படுவதை விவரிக்கிறது. 1919இல் ஜெர்மன் அரசின் இராணுவத்தினால் அவர் கொலைப்படுவதுடன் முடிகிறது.

இத்திரைப்படத்தில் ரோசாவின் பெண்புரட்சியாளர் பிம்பம், ஒரு மென்மையான, சமாதான விரும்பியான, தாவரங்களையும் விலங்குகளையும் நேசித்த அவர் பண்புகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமைகளை ஏற்றுக்கொள்ள அஞ்சாத பெண் என்பதும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


திரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்

movie-crews-seven-samuraiசெவன் சாமுராய்ஸ் என்ற ஜப்பானியப் படத்தை நான் சரியாக முப்பதாண்டுகளுக்கு முன்பு திருச்சி திரைப்படச் சங்கத்தில் (சினி ஃபோரத்தில்) பார்த்தேன். உலகம்போற்றும் திரைப்படக் கலைமேதைகளில் முக்கியமானவர் அகீரா குரோசேவா. அவரது திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது இப்படம். சத்யஜித் ராய்க்கும் மிகவும் பிடித்த படம் இது. (நம்மூர் ரஜனிகாந்த் கூடச் சில படங்களில்-உதாரணம் தளபதி-ஜப்பானிய சமுராய் வீரன் வேஷத்தில் அவ்வப் போது காட்சியளித்திருக்கிறார்!)

விறுவிறுப்பான நிகழ்ச்சிகளும் வீரசாகசமும் வன்முறையும் காதலும் நிறைந்த கதை. அதைச் சுவையாகச் சொல்கிறார். கூடவே அதில் வெளிப்படும் ஆழ்ந்த சிந்தனை, நுணணறிவு, படக்கோவை நேர்த்தி ஆகியவற்றைப் பார்த்துத் தான் தெரிந்துகொள்ளமுடியும்.

சாமுராய்கள் என்பவர்கள் யுத்ததர்மம் அறிந்த ஜப்பானிய வீரமறவர். நிலப்பிரபுத்துவ வரலாற்றில் மிக உன்னதமாக வாழ்ந்த குலத்தினர். இப்படம் காட்டுவது அக்குல¢சீர்கெட்டு அழிந்துவரும் காலத்தை. நித்தம் சோறு தேடித் திரியும் நிலை.

ஒரு கிராமத்தில் கொள்ளைக்காரர்களின் அட்டகாசம் அத்துமீறிப் போகிறது. இனி நம்மால் சமாளிக்கமுடியாது என்று அக்கிராமத்தினர் சாமுராய் கள் ஏழுபேரைக் கூலிபேசி அழைத்துவருகிறார்கள். கொள்ளையரிடமிருந்து ஊரைப் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். வேலை முடிகிறவரை அவர்களுக்கு மூன்று வேளை சோறு என்பதுதான் கூலி. அந்த ஊர் ஏழை விவசாயிகளால் அவ்வளவுதான் முடியும்.

இந்த ஏழுபேரின் தலைவன், ஒரு சேனைத் தளபதியைப் போலவே சாதுரியத்துடன் பாதுகாப்பு உத்திகளை திட்டமிடுகிறான். தன் சகாக்களையும் கிராமத்தினரையும் சேர்த்துக்கொள்கிறான். குதிரையேறித் துப்பாக்கிகளுடன் படையெடுத்துவந்த கொள்ளையரை ஒருவர் விடாமல் அழிக்கிறார்கள் சாமுராய்கள்.

ஆனால் ஏழுபேரில் நான்குபேர் போரில் மடிந்துபோகிறார்கள். மூவர் மட்டும் பிழைத்திருக்கிறார்கள். வந்த காரியம் முடிந்துவிட்டது. கிராமத்தினரிடம் அவர்களது ஒப்பந்தமும் முடிந்துவிட்டது. கிராமத்தைவிட்டு நகர்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லக்கூட ஒரு ஜீவன் இல்லை. விவசாயிகள் தங்கள் நடவுவேலையைப் பார்க்க ஆனந்தமாகப் போய்விடுகிறார்கள்.

ஊருக்கு வெளியே வீரமரணம் எய்திய நான்கு சாமுராய்களின் கல்லறைகள். அனைத்தையும் மறந்து சற்றுத்தொலைவிலேயே பாடிக்கொண்டு வேலைசெய்யும் மக்கள். அவற்றைப் பார்த்துநிற்கிறார்கள் மூவரும். தலைவன் சொல்கிறான்: “தோற்றுப்போனது நாம்தான்”.

வீர சாகசங்களோடு, விறுவிறுப்பும் வயிறுகுலுங்கச் செய்யும் நகைச்சுவை யும் கூடிய படம். ஒரு ஜனரஞ்சக “த்ரில்லர்” என்று எளிதாகச் சொல்லிவிடலாம். அமெரிக்க வெஸ்டர்ன்ஸ் மரபில் வந்த படம். இது எப்படி உன்னதமான கலைப் படைப்பாகவும் ஆகிறது, இதைப் பற்றி எவ்வளவு உற்சாகமாக இன்னும் திரைப் படக்கலையின் படைப்பாளிகளும் விமரிசகர்களும் எழுதுகிறார்கள்! மிக ஜனரஞ் சகமான திரைப்படத்தையே மிக உயர்ந்த கலைப்படைப்பாக மாற்றும் அபூர்வ ரசவாதி அகீரா குரோசேவா. பார்க்க முயற்சி செய்யுங்கள்!


அப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)

640px-SatyajitRay

அப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க இயலாது. அவருடைய முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி 1955இல் வெளிவந்தது. தொடர்ந்து அபராஜிதா என்ற படம் 1956இலும், அப்பு சம்சார் என்ற படம் 1959இலும் வெளிவந்தன. இந்த மூன்று படங்கள்தான் அப்பு மூவரிசை (அப்பு டிரைலஜி) என்று அழைக்கப்படுகின்றன. மூன்றிலும் கதாநாயகன் ஒருவனே-அபூர்வகுமார் ராய், சுருக்க மாக அப்பு.
1975இல் திருச்சியில் பணிக்குச் சென்ற நான், அங்கே உள்ள சினிஃபோரம் என்ற திரைப்படக் கழகத்தில் 1978இல் சேர்ந்தேன். அங்கே முதன்முதலாக நான் பார்க்க வாய்ப்புக் கிடைத்த படங்களில் ஒன்று பதேர் பாஞ்சாலி. பிறகு இரண்டு மூன்றாண்டுகளுக்குள் திரைப்பட விழாக்களில் பிற இரண்டு படங்களையும் பார்த்துவிட்டேன். பதேர் பாஞ்சாலியின் கதையைச் சுருக்கமாகச் சொன்னால், ஹரிஹர் என்ற வங்காளி பிராமணனின் கதை. அவனுக்கு இரண்டு குழந்தைகள்- அப்பு, துர்க்கா. இந்த இரண்டு குழந்தைகளையும் சத்யஜித் ராய் படைத்திருக்கும் விதம் மனதை உலுக்கும். எத்தனையோ காட்சிகள் ஓவியம் போல நினைவில் நிற்கின்றன. உதாரணமாக மழைக்காட்சி, இரயிலைப் பிள்ளைகள் ஓடிச் சென்று பார்க்கும் காட்சி என.
ஒரு விஷயம்-இந்த மூன்று படங்களையுமே சத்யஜித் ராய், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயில் எடுத்தார் என்கிறார்கள். பதேர் பாஞ்சாலிக்கு ஆன செலவு ஏறத்தாழ முப்பதாயிரம் ரூபாய் மட்டுமே. இன்றைக்கு நூறு மடங்கு விலைவாசி உயர்ந்திருப்பதாக வைத்துக்கொண்டாலும் இன்று முப்பது லட்சம் ரூபாயில் ஒரு திரைப்படம் எடுப்பதற்குச் சமம் இது. நம் தமிழ்த் திரைப்படக் காரர்கள் ஒரு காட்சிக்கு ஒருகோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தாலும் இந்தப் படம்போல ஒரு காவியத்தை உருவாக்க முடியவில்லை.
அபராஜிதா என்றால் வெல்லமுடியாதவன் என்று அர்த்தம். இது அடுத்த திரைப்படம். முன் கதையில் பிழைப்புக்காக வாரணாசிக்குச் சென்ற குடும்பம் மறுபடியும் வங்காள கிராமத்திற்கே திரும்பிவருகிறது. எப்படியோ அப்பு நன்றாகப் படித்து முன்னேறுகிறான். அவன் தாய் இறந்துவிடுகிறாள்.
மூன்றாவது திரைப்படம், அப்பு சம்சார் (அப்புவின் திருமணபந்தம்). தொடர்ந்து அப்பு ஓர் எழுத்தாளனாக முயலுவதையும், ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிவருவதையும், குழந்தைப் பேற்றின்போது அவள் இறந்துவிடுவதையும், துறவுமனப்பான்மையோடு குழந்தையை விட்டுச் செல்லும் அப்பு, பின்னர் திரும்பிவந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதையும் காட்டுகிறது.
உலகின் சிறந்த கலைத்திரைப்படங்களின் வரிசையில் இடம்பெறும் இந்தப்படங்கள், திரைப்படக் கல்லூரிகளில் பயில்பவர்களுக்குப் பாடங்களாகவும் வைக்கப்படுகின்றன.
மூன்று படங்களையும் பார்க்கமுடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பதேர் பாஞ் சாலியை மட்டுமாவது பாருங்கள். அரியதோர் வாய்ப்பு என்றே அதனை நான் நினைக்கிறேன். (ஒரு குறிப்பு-சத்யஜித் ராய், ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல, நல்ல சிறுகதை எழுத்தாளரும்கூட. அதைப் பற்றி இன்னொரு சமயம்.)

 


மொழிபெயர்த்த நூல்கள்

20050311002109802
1. குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்
2. மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. அறிக்கை
3. சிறார் உரிமை பற்றிய ஐ.நா. அறிக்கை
இவை மூன்று நூல்களும் தொடக்கத்தில் (1980களில்) தன்னார்வாக் குழுக்களின் பயன்பாட்டிற்கெனச் செய்யப்பட்டவை.

1. விஷன்ஸ் கையேடு-மனித உரிமைகளும் குடியுரிமையும்
2. விஷன்ஸ் கையேடு-உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள்
இவையும் தன்னார்வக் குழுக்களுக்கெனச் செய்யப்பட்டவையே. இவை இப்போது அடையாளம் பதிப்பகத்தில் கிடைக்கும்.

1. உலகமயமாக்கல்
2. நீட்சே
3. இறையியல்
4. பயங்கரவாதம்
5. சமூகவியல்
6. இசை
இவை யாவும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்த மிகச்சுருக்கமான அறிமுகம் என்ற வகையைச் சேர்ந்தவை. அடையாளம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டவை.)

1. சிறைப்பட்ட கற்பனை (வரவர ராவ்)
2. பொறுப்புமிக்க மனிதர்கள் (மனு ஜோசப்)
3. நள்ளிரவின் குழந்தைகள் (சல்மான் ருஷ்தீயின் மிட்நைட்ஸ் சில்ட்ரன்)
4. காந்தியைக் கொன்றவர்கள் (The men who killed Gandhiநூலின் தமிழாக்கம்)
இவை யாவும் எதிர் பதிப்பகத்தின் வெளியீட்டிற்கெனச் செய்யப்பட்டவை.

1. நொறுங்கிய குடியரசு (அருந்ததி ராயின் The Broken Republic)
2. ஊரடங்கு இரவு (பஷரத் பீர்)
இவையிரண்டும் காலச்சுவடு பதிப்பகத்திற்கெனச் செய்யப்பட்டவை.

1. டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள் (பெண்கள் மருத்துவ நூல்)
2. பேற்றுச்செவிலியர் கையேடு
இவை இரண்டும் முக்கியமான மருத்துவ நூல்கள். டாக்டர் இல்லாத இடத்தில் என்று முதன்முதலாக க்ரியா வெளியிட்ட வரிசையில் வருபவை. ஹெஸ்பீரியன் ஃபவுண்டேஷனின் நூல்கள்.

பிற மருத்துவ நூல்கள்
1. இணை மருத்துவம், மாற்றுமருத்துவம், உங்கள் உடல்நலம்
2. தலைமுடி இழப்பு-மருத்துவம்
3. மூல வியாதி
4. ஐம்பது உடல்நலக் குறிப்புகள்
5. இயற்கை ஞானம்
6. மரபணு மாற்றிய உணவுகள்

பிற நூல்கள்
1. இரண்டாம் சரபோஜி ஆட்சியின்கீழ் தஞ்சாவூர்
2. கீழையியல் தத்துவம்
3. பின்நவீனத்துவம்
4. புவி வெப்பமயமாதல்
5. நிலத்தோற்றமும் கவிதையும் (தனிநாயகம் அடிகளுடைய Landscape and Poetry)
6. மவுலானா அபுல்கலாம் ஆசாத்
மொத்தம் 32 நூல்கள். தத்துவம், வரலாறு முதல் இலக்கியம், மருத்துவம் வரை பல்வேறு வகைகளிலும் இவை உள்ளன என்பதைப் பெருமையுடன் கூறமுடியும்.