அரசுத் துறை நிறுவனங்களின் எதிர்காலம்?

பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒரு காரியத்தை கண்ணும்,கருத்துமாகச் செய்கிறது எனில்,அது அரசுத் துறை நிறுவனங்களை அழித்து அம்பானியை வாழ வைப்பதாகும்! இதை ஏதோ எடுத்தேன்,கவிழ்த்தேன் என நான் எழுதவில்லை!அம்பானிக்கு சேவை செய்வதையே தன் பிறவிப் பயனாக பாஜக அரசு கருதி,தொண்டுழியம் செய்வதற்கும் மேலாக அம்பானிக்காக இந்திய பொதுத்துறை நிறுவனங்களை அழித்துக் கொண்டிருப்பது தான் வேதனையிலும் வேதனையாகும்!

கொரானா காலத்திலும் கூட – 140 கோடி மக்கள் ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையிலும் கூட – அம்பானி மட்டுமே அபார லாபம் ஈட்டினார் என்றால், இந்த காலகட்டத்தில் மட்டுமே அம்பானியின் சொத்து மதிப்பு 2,77,000 கோடிகள் அதிகரித்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அதாவது ஊரடங்கு காலகட்டத்தின் ஒவ்வொரு நிமிஷத்திற்கும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அம்பானி கம்பெனி லாபம் பார்த்துக் கொண்டிருந்தது. இந்திய அரசே இந்த காலகட்டத்தில் பொருளாதாரத்தில் ஆட்டம் கண்டு கொண்டிருக்க,அம்பானியோ,இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தலையில் கால்பதித்து ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட அம்பானி நிறுவனங்களுக்குத் தான் அரசுத் துறை வங்கிகள் 1,25,000 கோடிகள் கடன்களாக அள்ளி வழங்கியுள்ளன! அம்பானிக்கும்,மோடிக்கும் உள்ள நட்பு இன்று,நேற்றல்ல, மோடி குஜராத் முதல்வராக இருக்கும் காலத்திலேயே அரும்பியது எனலாம்.

2012 குஜராத் முதல்வராக இருந்த போது தொடங்கியே மோடி தனது நண்பர்களான அம்பானி குழுமமும், அதானி குழுமமும் 1500 கோடி லாபம் பெறும் வகையில் நிதி ஆதாரங்களை தவறாக பயன்படுத்தினார். இதை முதன்முதலாக கண்டு பிடித்து மத்திய அரசின் முதன்மை தணிக்கையாளர் (CAG) அம்பலப்படுத்திய போது, அதை ஊடகங்கள் கண்டு கொள்ள வில்லை.

மோடி குஜராத் முதல்வரானதும் அரசின் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை (GSPC) 2009 ஆண்டிலிருந்து படிப்படியாக அழித்தார். அதானி, எஸ்ஸார், அம்பானி குரூப்களுக்கு சாதகமாக அதை மாற்றினார். தணிக்கை ரிப்போர்ட் சொல்வது என்னவென்றால் GPSC தனது எரிவாயுவை மிகக் குறைந்த விலையில் அம்பானிக்கும், அதானிக்கும் விற்றுள்ளது. இதனால் அரசுக்கு ஐயாயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மோடியை வைத்து குஜராத்தை சுரண்டியது போல், இந்தியா வையே சுரண்ட ஒரு திட்டத்தை அம்பானி தீட்டினார். அதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் விளம்பரத்திற்கும் 5000 கோடியை செலவு செய்தார். வங்கக் கடலில், 11,000 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான ஒ.என்.ஜி.சி எரிவாயு வயல்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் க்கு மாற்றப்பட்டது. அங்கு ரிலையன்ஸ் சட்டவிரோதமாக எரிவாயு எடுக்கத் தொடங்கியது. பெருவாரி யான ஊடகங்கள் இதை மறைத்துவிட்டன. ஒரு சில ஊடகங் களே இதை எழுதின.

2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பிக்கப்பட்டு, பி.எஸ்.என்.எல் நிறுவனம் படிப்படியாக அழிக்கப்பட்டது. அதன் உடமைகள், அலைக்கற்றைகள் அம்பானிக்குச் சாதகமாக மாற்றப்பட்டன. உதாரணத்திற்கு பி.எஸ்.என்.எல் லின் 66,600 செல் பேசி டவர்களை ரிலையன்ஸ் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது பாஜக அரசு.

4 ஜி அலைக்கற்றை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதை அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லுக்கு ஒதுக்க மறுத்து ரிலை யன்ஸ் ஜியோவிற்கு வழங்கியது பாஜக அரசு! இதனால், ஜியோ தனது சேவையை மேற்கொள்ளவும், அரசு நிறுவனம் மக்கள் ஆதரவை இழக்கவும் துணை போனது மோடி அரசு. அத்துடன் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சுமார் 78,000 பேர் ஒரே நாளில் விருப்ப ஓய்வு தந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். கிட்டத்தட்ட சரிபாதி ஊழியர்களை அரசு நிறுவனம் இழந்த துர்ப்பாக்கியமான புதிய வரலாற்றை இந்தியா கண்டது. அந்த ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் இன்று வரை முழுமையாகத் தரப்படவில்லை. பி.எஸ்.என்.எல்லின் ஒப்பந்த ஊழியர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்தனர்… ஆலமரம் போல விழுதுகள் விட்டு கிளை பரப்பி நின்ற அரசு நிறுவனம் ஒரு தனி முதலாளிக்கு சேவை செய்ய அராஜகமாக அழிக்கப்பட்ட வரலாற்றை பாஜக. எழுதியது.

தொலைத் தொடர்புத் துறையில் சட்டவிரோதமாக மூன்று மாதத்திற்கும் மேல் இலவசமாகச் சேவை வழங்கியது ஜியோ. இது அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத் தியது. ஜியோவின் இலவச சேவையை அனுமதித்து, கோடிக் கணக்கான பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களை ஜியோ விற்கு மாற்றியது மத்திய அரசு. பி.எஸ்.என்.எல் மட்டுமல்ல, ஏர்டெல்,வோடோ போன் ஆகிய பல நிறுவனங்கள் பலவீனப் பட மத்திய அரசின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டது. மிகச் சிறிய முதலீட்டுடன் தொடங்கப்பட்ட ஜியோவிற்கு பல நூறு கோடிகள் கடன் அரசுத்துறை வங்கிகள் மூலமாக வழங்கப் பட்டது. ஆனால் ஒன்றரை லட்சம் கோடி சொத்து மதிப்புக் கொண்ட பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பாஜக அரசு பிச்சைக் காரனாக்கிவிட்டது.

இதைப் போன்று பல பொதுப்பணித்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட்டுகளுக்காக அழித்தது, அழித்துக் கொண்டுள்ளது மோடியின் அரசு.

பல பொதுத்துறை நிறுவனங்களை ( BSNL, BHEL, ONGC, HAL, SAIL, BPCL, Air India..) உருவாக்கிய நேரு, அவற்றை நவீன இந்தியாவின் ஆலயங்கள் என்றார். ஏனென்றால், பொதுத் துறை மூலம் மக்களுக்கு சேவை தரமுடிவது ஒருபுறமென் றால்,அவற்றின் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. இதனால்,அரசுக்கு அதிக வருவாயும் வந்தது, அதைவைத்து பல சமூகநலத் திட்டங்களைச் செயல் படுத்த முடிந்தது. ஆனால் இப்போது எல்லாவற்றையும் தனியாருக்கு விற்றுக்கொண்டு வருகிறது பாஜக அரசு. நன்றாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்த்து கொண்டிருக்கிற பஞ்சமா பாதகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அம்பானியின் நிறுவனங்கள் அனைத்துமே பொதுத்துறை நிறுவனங்களை அழித்து வளர்க்கப்பட்டவைகளே. அப்படிப்பட்ட அம்பானி நிறுவனங்களின் பட்டியலே இது:

BSNL > Reliance Jio; BPCL > Reliance Petroleium; LIC > Reliance Insurance; ONGC > Reliance Gas; HAL > Reliance Naval and Engineering Ltd. ; APMC > Reliance Retail; Airports. Railways. Power, Ports > Reliance Infrastructure…

அதிரடியாக ஒரு நாள் நள்ளிரவில் தொடங்கப்பட்டது ரிலை யன்ஸ் டிபன்ஸ். இதற்கு இத் துறையில் முன் அனுபவம் கிடையாது, ஒரு தொழிற்சாலை கிடையாது, வெறும் லெட்டர் பேட் நிறுவனமான இதற்குத் தான், ரபேல் விமானம் செய்யும் ஆர்டர் கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான HAL ஓரம் கட்டப் பட்டது. புதிதாக ரஷ்யா, ஸ்பெயின் நாடுகளிடம் போடப்பட்ட ஒப்பந்தங்களிலும் ரிலையன்ஸ்க்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் முயற்சித்தது பாஜக அரசு.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக அரசு பதவி ஏற்ற 2014 ஆம் ஆண்டு அம்பானியின் சொத்து மதிப்பு 1,68,000 கோடியாக இருந்தது. தற்போது அது 6,58,400 கோடியாக வளர்ந் துள்ளது! அதானியின் சொத்து மதிப்பு 50,400 கோடியாக இருந்தது. அது தற்போது,1,40,200 கோடியாக வளர்ந்துள்ளது!தனியார் நிறுவனங்கள் செழிக்கவும், அரசுத் துறை நிறுவனங் களை அழிக்கவுமான அணுகுமுறைை மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். மக்கள் உருவாக்கிய மாபெரும் இந்தியாவை அம்பானி, அதானி போன்ற ஆலகால விஷப் பாம்புகளுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக அரசு…

(ஒரு முகநூல் பதிவிலிருந்து)


ப்ளூமின் வகைபாட்டியல்-4

முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி

மாணவர்களின் அறிவைச் சோதிக்க, பட்டியலிடு, திரும்பக்கூறு, வரையறு போன்ற சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. விவாதி, விளக்கு, வருணி போன்ற சொற்கள் மாணவர்கள் தங்கள் புரிந்துகொள்ளலை வெளிக்காட்ட உதவுகின்றன. எண்ணு, வரை, பயன்படுத்து, செயல்படுத்து போன்றவை பயன்பாட்டை வெளிப்படுத்து பவை. ஒப்பிடவும் முரண்படுத்தி நோக்கவும் வகைபடுத்து, கூறாக்கு, ஆய்வுசெய் போன்ற சொற்கள் பயன்டுத்தப் படுகின்றன. பாத்திரமேற்று நடித்தலும், யூகித்தலும் உருவாக்கத்திற்கு உதவும். ஆழ்ந்து நோக்கு, நிர்ணயமசெய், பரிந்துரை போன்றவை மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட மதிப்புகளை வெளியிட உதவும். கேள்விகளிலும் செயல்பாடுகளிலும் செயல்வினைகளைப் பயன்படுத்தி, ஆசிரியர் மாணவர்களை அந்தக் குறிப்பிட்ட நிலையில் இயங்க வைக்க முடியும். பாடத்தை திட்டமிடும்போது புத்தாக்கம் செய்தலும், எந்த அளவு செயல்வினைகளைப் பயன்படுத்த முடியும் என்பதும் ஆசிரியரின் கற்பனைத்திறனைச் சார்ந்தவை.

IX. ப்ளூமின் வகைதொகையியலை வகுப்பறையில், மாணவர்களுக்குப் பயன்படுத்துவது எப்படி?

பாடத் திட்டமிடுதலிலும் (சிலபஸ்) கல்வித்திட்ட (கரிகுலம்) நிர்ணயத்திலும் நாம் இதுவரை ப்ளூமின் மாதிரியைப் பின்பற்றிப் பார்த்தோமா என்பது கேள்விக்குரியது.

IX. ப்ளூமின் வகைதொகையியலை வகுப்பறையில், மாணவர்களுக்குப் பயன்படுத்துவது எப்படி?

பாடத் திட்டமிடுதலிலும் (சிலபஸ்) கல்வித்திட்ட (கரிகுலம்) நிர்ணயத்திலும் நாம் இதுவரை ப்ளூமின் மாதிரியைப் பின்பற்றிப் பார்த்தோமா என்பது கேள்விக்குரியது.

முதலில் மாணவர்களுக்கு தெளிவான திட்டவட்டமான அளக்கக்கூடிய இலக்குகள் தேவை.

இலக்கிய (பிஏ, எம்ஏ போன்ற) வகுப்புகளில் கட்டுரைவடிவ விடையளிப்புக்கு அதிக முதன்மை தர வேண்டும். ஏனெனில் அப்போதுதான் எழுதும் பயிற்சி வளரும். அவற்றில் காலியிடத்தைப் பூர்த்தி செய், பொருத்துக போன்ற கேள்விகள் கேட்டால் மாணவர்களின் அறிவும் வளராது. எழுதும் திறனும் வளராது என்பதை ப்ளூம் குறிப்பிட்டுள்ளார். பழையகால முதுகலை வகுப்புகளில் ‘எஸ்ஸே’ என்று ஒரு தாள் உண்டு. மூன்று மணிநேரம் ஒரே ஒரு கட்டுரையை மட்டுமே விடையாக எழுத வேண்டும். இம்மாதிரிப் பயிற்சிகள் எழுத்துத் திறன், மொழியைக் கையாளும் திறன், பேச்சுத் திறன், கருத்துகளை ஒருங்கிசைக்கும் திறன், ஒரு கருத்தை எடுத்து வாதிடும் திறன் போன்றவற்றை மேம்படுத்தின.

உதாரணமாக ஏதேனும் ஒரு கவிதையை அளித்து அதைத் தக்க முறையில் ஆய்வு செய்து கட்டுரை வரைக என்று கேள்வி கேட்டால், எத்தனை வகையான திறன்கள் மாணவர்களுக்குத் தேவைப்படும்? ஆனால் அதற்குத் தேவையான விமரிசன முறைகளில் பயின்ற, பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களும் வேண்டும். தமிழ்நாட்டில் இரண்டிற்கும் இடமே இல்லை. பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பல்கலைக்கழகக் குழுக்களும் கூட முன்னாள் பாடத்திட்டங்களை அல்லது பிற பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களைப் பார்த்து அரைத்த மாவை அரைப்பவை யாகவே உள்ளன. முன்னேறிச் சிந்திக்கும் நபர்கள் குறைவு. அவர்கள் நமது அமைப்பில் ஓரம் கட்டப்பட்டு விடுகிறார்கள். ப்ளூமின் வகைதொகையியல் இந்த விஷயங்களில் நாம் முன்னேறிச் செல்ல உதவும்.

ப்ளூமின் மாதிரியைப் பின்பற்றினால் மாணவர்களுக்கு முதலில் அவர்கள் பின்பற்றக்கூடிய தெளிவான திட்டவட்டமான அளக்கக்கூடிய இலக்குகள் தேவை. அவற்றை அடைய முன்னரே குறிப்பிட்ட வினைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். ஒரு திட்டத்தில் புத்தாக்க அடிப்படைகளைப் புரிந்துகொள்ள ஒப்பிடுக, விவாதிக்க, முன்னுணர்த்துக போன்ற கேள்விகள் மிகவும் பயனுள்ளவை. தேடியறிக, புலனாய்வு செய்க, தொடர்பு படுத்துக போன்ற கேள்விகள் பகுத்தல் நிலைக்கு உதவுபவை. இம்மாதிரி ஆசிரியர்கள் தங்களுக்குள் விவாதித்து ஒவ்வொரு பாடத்திலும் ஒவ்வொரு நிலைக்குமான கேள்விகளைத் தயாரிக்க வேண்டும். உதாரணமாக, தமிழ் முதுகலை நிலையில்,

சிந்தனையைத் தூண்டும் பாடத்திட்டமும் கேள்விகளும்

தமிழ்ப் புராணங்களில் கிரேக்க சீயூஸ் போன்ற பாத்திரப் படைப்பு உ்ண்டா, ஆராய்க.

காப்பிய முதற்பகுதியில் கண்ணகியைச் செயலற்ற பாத்திரமாகவே இளங்கோவடிகள் படைத்திருப்பதற்குக் காரணம் ஏதேனும் உண்டா? ஆராய்க.

சமண சமயத்தைச் சேர்ந்த சீவகன் பல பெண்டிரை மணப்பதற்கு அக்காலச் சமூக நிலை இடம் தந்தாலும், அதைத் தவிர வேறு காரணங்களாக எவற்றைக் குறிப்பிடலாம்? ஆராய்க.

இம்மாதிரிக் கேள்விகள் சிந்தனையைத் தூண்டுவனவாக அமையும். ஆனால் இதற்கு எத்தகைய தயாரிப்பு தேவைப்படும்? அதற்குத்தான் ப்ளூமின் வகைதொகையியல் நமக்கு உதவுவதாக இருக்கிறது.

பாடவிஷயங்கள், தலைப்புகள், விரிவுரைகள், ஒப்புவிப்புகள், வகுப்பறைச் செயல்பாடுகள் போன்ற பலவற்றால் மாணவர்கள் கற்றல் திறன்களின் கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு எளிதாக வர முடியும். நம் வகுப்பறைகளில் விவாதம் என்பது அனுமதிக்கப்படாத ஒன்று. ஒன்று, பாடத்திட்டத்தை முடிக்க அவகாசமில்லை என்று ஆசிரியர் மறுப்பார், மற்றொன்று அவருக்கே விடைகள் தெரியாது. விடைகள் தெரியாவிட்டால் பரவாயில்லை, விவாதம் நடக்கத்தான் வேண்டும். ஏனெனில் சிந்திக்கச் செய்வதே கல்வியின் முதன்மை நோக்கம் என்று ப்ளூம் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தான் முதல் பரப்பு, இரண்டாம் பரப்பு ஆகியவற்றை விட மூன்றாம் பரப்பான அறிவு என்பதற்கு மட்டுமே அதிக இடமளித்திருக்கிறார். நம் ஆசிரியர்கள் எத்தனை பேருக்கு மாணவர்களைப் பார்த்து “நான் தெரிந்துகொண்டு வந்து அடுத்த வகுப்பில் சொல்கிறேன்” என்று கூறும் துணிச்சலாவது உண்டு? கல்வி பரந்து விரிந்தும் ஆழமாகவும் செல்லக் கூடியது. நமக்குத் தெரிந்தது கையளவுகூட இல்லை என்ற பணிவு முதலில் வேண்டும். அதை நமது நடத்தைப் பாங்கினால் மாணவர்கள் உணரவேண்டும். வெளிப்படையாக எவருக்கும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. (next slide)

செயலூக்கமுள்ள கற்றல்

நவீன வகுப்பறைகளில் மாணவர்கள் செயலின்றி ஒரு மணிநேரம் சும்மா அமர்ந்திருந்து விரிவுரையைக் கேட்ட காலம் மலையேறி வருகிறது. மொபைல் பேசி போன்றவையும் ஆன்லைன் பாடவிஷயங்களும் இதை மாற்றி வருகின்றன. ஆனால் இ்ம்மாதிரிக் கருகைளை வைத்தும் பழைய முறைகளை மாற்றாமல் கல்வி அளிக்கப்படலாம்.

1. சான்றாக முதல்நிலையான நினைவுகூர்தலில், மாணவர்கள் தங்களிடத்தில் அமர்ந்து முந்தைய செய்திகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருப்பதைவிட, அவர்களே அதில் ஈடுபடுமாறு செய்தல் வேண்டும். மாணவர்களைக் குழுக்களாகப் பிரிந்து ஒரு குழு பழைய நினைவுகூர வேண்டிய செய்திகளைப் பற்றிக் கேள்வி கேட்க, அடுத்த குழு பதிலளிக்க வேண்டும். இப்படியே மாற்றிமாற்றிச் செய்யலாம். அல்லது ஒரு வகுப்பு முடியும் நிலையில் அதில் சொல்லப்பட்ட செய்திகளை ஒன்றுவிடாமல் நினைவுகூரச் செய்யலாம்.

2. பகுத்தல் நிலையில் பிரச்சினைகள் ஆராயப்படவேண்டும். மாணவர்களின் வாழ்க்கையுடன் குறிப்பிட்ட பாடம் எவ்வகையில் தொடர்புறுகிறது என்று ஒப்பிட்டு நோக்க வேண்டும். 

3. வகுப்பறையில் என்ன நிகழவேண்டும் என்று ஆசிரியர் எதிர்பார்ப்பதை வெளிப்படையாகத் தெரிவிப்பது நல்லது. அது சரியான திசையில் மாணவர்களை வழிநடத்தும். இதனால் தங்கள் பயிலுதலுக்கு மாணவர்கள் தாங்களே பொறுப் பேற்குமாறும் செய்யலாம். உதாரணமாக ஒரு சமூகவியல் வகுப்பில் பருவத்தின் இடையில் ஒரு திறன்மிக்க தொலைக்காட்சி விளம்பரத்தின் பகுதிக்கூறுகளை மாணவர்கள் அறிந்தால் மட்டும் போதாது, ஏன் அது அந்த நிறுவனத்துக்கு/ சமூகத்துக்கு முக்கியமானது, எப்படி அந்தக் குழுமத்திலுள்ளவர்கள் ஒற்றுமையாக முழு அளவில் வெற்றிகரமாக அதைத் தயாரிக்கிறார்கள் என்பது போன்றவற்றையும் அறிய வேண்டும். (next slide)

4. முறைப்படியான சோதனை (டெஸ்ட்) களில் ஒரு மாணவர் என்ன தரம் (கிரேடு) பெறுகிறார் என்பதை ஆசிரியர்கள் கணித்துவர வேண்டும். அது படிப்பை மதிப்பிடுவதற்கல்ல, மாறாக மாணவர்கள் ப்ளூமின் வகைதொகைப் படிநிலையில் எவ்விதம் முன்னேறுகிறார்கள் என்பதை அளவிடுவதற்கு உதவுவது. மாணவர்களின் வெற்றி தோல்விக்கான அளவுகோல் அல்ல அது. வகுப்பறை போதனைக்குத் தொடர்ச்சியாக மனத்தில் கொண்டிருக்கவேண்டிய கருவி.

உங்கள் மாணவர்கள் எதைச் சாதிக்க (அடைய) வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? அதற்கு மாணவர்களின் மதிப்பெண்களைப் பார்ப்பதைவிட, ப்ளூமின் வகைதொகையியலில் அவர்களின் செயல் எந்த இடத்தைப் பெறும் என்பதைக் காணுங்கள். அதை விரிவுரையின் உத்திகள், கேள்விகளுடன் பொருத்திப் பார்த்து, அது எவ்விதம் தேர்வுக்குப் பயன்படும் என்பதை அளவிடுங்கள்.         

நினைவுகூர்தல், புரிந்துகொள்ளல் நிலைகளில், ஆரம்ப வகுப்புகளில் பலவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் கேள்விகளும், சரி/தவறு கேள்விகளும் அர்த்தமுள்ளவை. மேல்நிலை வகுப்புகளுக்கும் ப்ளூமின் மேல்நிலைகளுக்கும் வரும்போது வாய்மொழித் தேர்வும் கட்டுரை வடித்தலும் மிகத் தேவையானவை. அவை தேர்வு மதிப்பெண்ணுடன் சம்பந்தப்படாவிட்டாலும், அந்தச் செயல்கள் எந்த அளவுக்கு மாணவர்கள் உண்மையான தேர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து பாடவிஷயங்களையோ, தங்கள் அணுகுமுறைகளையோ மாற்றிக் கொள்ள உதவும். ஒட்டுமொத்த மதிப்பீட்டுக்கு வரும்போது இது மாணவர்களை ஆயத்தப்படுத்த உதவும்.

5. தேர்வு மதிப்பீட்டுக்கும் ப்ளூமின் வகைதொகை முறை உதவும். குறிப்பாக இறுதித் தேர்வாக இல்லாத இடைத் தேர்வுகளில் மாணவர்களை நினைவுகூர்தல் முதலாக பயன்படுத்தல் வரையிலான நிலைகள் வரை கேள்விகள் கேட்கலாம். ஆனால் இறுதித் தேர்வில் பகுத்தல், மதிப்பிடுதல், புத்தாக்கம் செய்தல் போன்றவற்றுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.

6. எல்லாவற்றுக்கும் மேலாக பாட விஷயத்துக்கு அப்பால், மாணவர்கள் தங்கள் அறிவை நடைமுறைச் சூழல்களுக்கும் சம்பவங்களுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடியவர்களாக வேண்டும். அவற்றைப் பற்றிச் சரியாகக் கருத்துரைத்து அவற்றை ஆதரிக்கும் திறன் வேண்டும். இதையும் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.  (next slide)                

7. பல பாடங்களின் வாயிலாக ஒரே ஒரு நோக்கத்தினை திட்டமிடுதல்

ஒரே ஒரு பாடத்தில் முடிக்க முடியாத ஒரு நோக்கத்தினைப் பல பாடங்களில் முடிக்குமாறு ப்ளூமின் முறை கொண்டு திட்டமிட்டுக் கொள்ளலாம். உதாரணமாக, மாணவர்களின் தனித்துப் பணியாற்றவும், தங்கள் விமரிசனச் சிந்தனையை மேம்படுத்திக் கொள்ளவும் ஆசிரியல் பல பாடங்களில் திட்டமிட வேண்டியிருக்கும். ப்ளூமின் வகைதொகையைச் சட்டகமாகப் பயன்படுத்தி மேற்செல்லும் நோக்கம் நடத்தும் பல பாடங்களின்மீது கவிய இயலும். அப்பாடங்களின் தொடக்கத்தில் ஆசிரியர் தான் போதிக்க விரும்பும் நோக்கத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவர்கள் அந்தக் கருத்தைப் புரிந்துகொள்ளும்போது, அந்தத் திறனை அவர்கள் படிக்கும் பலவேறு பாடங்களில் எவ்விதம் பயன்படுத்த இயலும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மெதுவாக அவர்கள் படிநிலைகளில் ஏறி உச்சிக்குச் செல்வார்கள், அந்தக் கருத்தை மதிப்பிடுவார்கள்.

8. வகைதொகை நிலைகளை ஒன்றுசேர்ப்பதன் வாயிலாக பாடங்களை திட்டமிடுதல்

இரண்டிரண்டு நிலைகளாக ஒன்று சேர்த்து மூன்று குழுக்களை உருவாக்கிப் பாடத்தை திட்டமிடும் நிலையை ப்ளூம் அறிமுகம் செய்தார்.

9. ஒரு பாடத்தில் எல்லா நிலைகளும் உள்ளனவா என்று உறுதிப்படுத்திக் கொள்ள, அந்த நிலைகளை மூன்றாகப் பகுத்துக் கொள்ளவும்.

ஃ அறிவும் புரிதலும் அடிப்படை நிலைகள்

ஃ பயன்படுத்தலும் பகுப்பும் கருத்துகள்மீது கவனத்தைக் குவித்து ஆராய உதவுபவை

ஃ தொகுப்பும் மதிப்பீடும் மிகச் சிக்கலான உயர்நிலைகள்

பாடத்தை மூன்றாகப் பகுத்து ஒரு குழுவுக்கு ஒரு நிலை என்பதாக அளிக்கவும். ஒவ்வொரு பாடப்பகுதியிலும் முன்வைக்கப்படும் நிலைகளை மையப்படுத்தி செயல்களையும் கேள்விகளையும் வடிவமைக்கவும். ஒரு செயல்பாட்டினையும் இவ்வாறே கையாள முடியும். பாடத்துக்கு பதிலாகச் செயல்பாட்டை மூன்றாகப் பகுத்துக் கொள்ளவும்.

அந்தச் சட்டகத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் கேள்விகளை உருவாக்கலாம்

வகைதொகையைக் கேள்விகளை உருவாக்கப் பயன்படுத்துவது, ஆசிரியர்களுக்குத் தங்கள் பாடங்களை திட்டமிடுவதில் மிக நன்கு உதவுகிறது. மாணவர்கள் தங்கள் சகாக்களைச் சோதிக்கும் அளவில் கேள்விகளை உருவாக்க வேண்டும்.

முதலில் ப்ளூமின் வகைதொகையை உதாரணங்கள் தந்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும். பிறகு வகுப்பைப் பல குழுக்களாகப் பிரிக்கலாம் அவர்களுக்கு ஐந்து முதல் ப்த்து நிமிடம் வரை நேரம் கொடுத்து ஒரு வகைதொகைநிலைக்கு இரண்டு கேள்விகள் வீதம் பாடத்திலிருந்து கேட்கச் சொல்லவும்.

இந்தக் கேள்விகளின் நோக்கம், அவர்களது பாடத்தின் அறிவையும் புரிதலையும் சோதிப்பதற்கு ஆகும். குழுக்களை எதிரெதிராக நிறுத்தி ஒருவர் கேட்கவும் மற்றவர் பதிலுரைக்கவும் செய்யலாம். (next slide)

உதாரணமாக, ப்ளூமின் அமைப்பைப் பயன்படுத்தி மூன்று சவாலுக்குரிய செயல்கள்:

1.விளம்பரம் ஒன்றைத் தயாரித்தல்

2.ஒரு கூற்றினைத் தற்காப்புச் செய்தல் (ஆதரித்தல்)

3.சொந்தமாக எழுதுதல்  

X. ப்ளூமின் வகைதொகையியலை இந்தியா ஏற்ற விதம்

இந்தியச் சூழலுக்குப் பொருத்தமாக ப்ளூமின் திட்டத்தை சில மாற்றங்களுடன் என்சிஇஆர்டி (NCERT) ஏற்றுக் கொண்டுள்ளது. அறிவாற்றல் தளத்தை மட்டுமினறி, மூன்று பரப்புகளையுமே அது ஏற்றுக்கொண்டுள்ள விதம் பாராட்டத் தக்கதாக உள்ளது. 

​அறிவாற்றல் பரப்பில், அறிவு புரிந்துகொள்ளல் இவற்றுடன், பயன்பாடு என்ற ஒன்றைச் சேர்த்துள்ளது என்சிஇஆர்டி. இதில் பகுப்பு, தொகுப்பு, மதிப்பீடு ஆகிய மூன்றும் இணைக்கப்பட்டுள்ளன. உளஉடல் இயக்கப் பரப்பில் திறன் என்ற ஒன்றை மட்டும் ஏற்றுள்ளது. இவை பாடசம்பந்தமான எந்தத் திறனாகவும், படம் வரைதல் முதலாக நடிப்பது, சோதனை செய்வது வரை எதுவாகவும் இருக்கலாம். உணர்ச்சிப் பரப்பில், பாராட்டு, ஆர்வம், மனப்பாங்கு ஆகியவை உள்ளன. ஆளுமைகள், நிகழ்வுகள், பண்பாடு, மரபு, தனிமனிதர்களின் நற்செயல்கள் போன்ற எல்லாமே பாராட்டில் அடங்கும். மேலும் கற்று, செயல்களில் (நேர்காணல், ஆல்பம் தயாரிப்பு, புல்லடின்கள், இதழ் நடத்தல், பிற திட்டங்கள் போன்றவற்றில்) ஆர்வம் கொள்ளுதல் அடுத்த நிலை. இறுதியாக இவற்றின் விளைவாக ஆக்கபூர்வமான மனப்பாங்கு ஏற்பட வேண்டும்.

NCERTயின் கோட்பாட்டின்படி போதனை நோக்கங்களும் குறித்த நோக்கங்களும்

ஒரு பயனுள்ள விளைவை அடைய வகுப்பறை போதனைக்கு திறன்மிக்க திட்டம் தேவையாகிறது. பாடத்தை திட்டமிடுவதில்தான் வகுப்பறைச் செயல் அடங்கி யுள்ளது. பொதுவான போதனை திட்டத்திற்குள் குறிப்பான நோக்கங்கள் அடங்குகின்றன. இவற்றை ஓர் அட்டவணை வாயிலாகக் காண்போம்.  

XI. ப்ளூமின் மீதான விமரிசனங்கள்

ப்ளூமின் வகைதொகையியல் என்பது மாற்றமுடியாத விதிகளைக் கொண்ட சட்டவிதிப் புத்தகம் அல்ல. தனிப்பட்ட போதனைப் பாங்குகள், வழிமுறைகள், பாடத் திட்டமிடல்கள் போன்றவற்றுக்குப் பொருந்தக்கூடிய வழிகளைக் கொண்ட ஒரு கோட்பாட்டுக் கட்டமைப்புதான் அது. சில உளவியலாளர்கள் அது கீழ்நிலைக் கற்றலுக்குத்தான் உதவும் என்கிறார்கள். மாணவர்கள் கற்கும் செயல்முறை முழுவதிலும் தங்கள் மனங்களில் தாங்களாகவே அறிவை உருவாக்குகிறார்கள் என்னும் புதிய அறிவாற்றல் உளவியல் முன்னேற்றங்களை அது ஏற்கவில்லை என்கிறார்கள். பலர் அடிப்படைநிலையிலிருந்து உச்சநிலைக்குச் செல்லுதல் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது, ஆகவே இதை ஏற்கவியலாது என்கிறார்கள்.

பலரும் படைப்பாக்கம் என்பது ஒரு இலக்கன்று, அது ஒரு கருவியாகப் பயன்படக்கூடியது என்றும் தெரிவிக்கிறார்கள். அதனை அடிப்படை நிலைகளிலேயே உருவாக்கலாம் என்றும், அதை மேற்கொண்டு பாட போதனைக்குப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கிறார்கள். உதாரணமாக சிறுவகுப்புகளிலேயே உலகம் வெப்பமயமாதலைப் பற்றி அவர்கள் கண்கூடாகக் காணும் வெள்ளம், புயல், சுனாமி, வறட்சி போன்றவை வாயிலாக அறிமுகப்படுத்தி அதற்கான தீர்வுகளை அவர்களே காணச் சொல்லலாம் என்றும், அதை மேற்கொண்டு பாடம் நடத்துவதற்கான (அதைப்பற்றிய அறிவை அளிப்பதற்கான) அடிப்படையாகப் பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறார்கள்.

இலக்கியத்தில் சிறார்களே புத்தாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் மிகுதி. பாரதி சிறுவயதில் படம் மடம் கடம் என்று எதுகைச் சொற்களை உருவாக்கிக் கொண்டிருந்ததாகச் சொல்வார்கள். அது பின்னர் அவர் ஒரு பெரிய கவிஞராக வழிவகுத்தது. (next slide)

சிலர் ப்ளூமின் கட்டமைப்பை ஒரு முக்கோணமாக அன்றி மண்டல அமைப்பிலும் காணலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். (next slide)

எவ்விதமாயினும் முற்றிலும் இதன்மீது அதிநம்பிக்கை வைப்பது தேவையற்றது என்றும் தேவைப்படும் நிலைகளில் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.  

நம்மைப் பொறுத்தவரை, இதன் பயன்கள் எவ்விதம் இருப்பினும் நமது சூழல்களை முதலில் கருத்தில் கொள்ளவேண்டும். நம் ஆசிரியர்களைப் படிக்கவேண்டாம் என்று அரசே தடுக்கிறது. படிப்பதைக் கற்றுத் தருவதன்றி, நீ வேறு பல வேலைகளைச் செய்ய வேண்டும், எழுத்தனாக இயங்க வேண்டும் என்று இப்போதைய பாடத்திட்டம் சொல்லுகிறது. அதற்கே அவர்களின் நேரம் சரியாகப் போகிறது. அரசாங்கம் கொரோனாவுக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்தலாமா, மக்கள் கணக்கெடுப்புக்குப் பயன்படுத்தலாமா என்று யோசிக்கிறது. ஆக நம் அரசாங்கங்கள் இப்போதிருக்கும் கல்வி முறைக்கே உதவியாக இல்லை. அப்படியிருக்க ப்ளூமின் முறைகளை எல்லாம் பின்பற்ற யார் கல்வித்திட்டம் வகுக்கப் போகிறார்கள், யார் உதவி செய்யப் போகிறார்கள்?

வகுப்பறையில் இருபது மாணவர்களுக்கு மிகாத, அனைத்து வசதிகளும் கொண்ட, ஆசிரியரும் வாரத்திற்கு இருபது வகுப்புகளுக்கு மேல் பாடச்சுமையின்றி இருக்கின்ற அமெரிக்க வகுப்பறைகளுக்கு இம்மாதிரிக் கொள்கையை எளிதாகப் பயன்படுத்த முடியலாம். நடத்த வசதியின்மை என்ற காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடுகின்ற அமைப்பு நம்முடையது. ஐம்பது அறுபது மாணவர்களுக்கு மேல் வகுப்பறையில்  இருக்கின்ற, ஆசிரியரும் வாரத்திற்கு முப்பது முப்பத்தைந்து வகுப்புகளுக்குமேல் எடுத்தாக வேண்டும் என்ற கட்டுப்பாட்டில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மரத்தடிகளில் பாடம் நடத்துகின்ற பள்ளிகளைக் கொண்ட நம் நாட்டில் டிஜிடல் யுகத்தில் காலெடுத்து வைத்திருக்கிறோம். இத்தகைய வழி முறைகளை நாம் பயன்படுத்த இயலுமா என்பது அடிப்படையான கேள்வி. சமூகத்தைப் பற்றிய அக்கறையை ப்ளூமின் வகைதொகையியலினால் வளர்க்க முடியுமா என்பது அடுத்தநிலைக் கேள்வி. அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கு வேண்டுமானால் சமூக அக்கறை ஒருவேளை தேவைப்படாமல் இருக்கலாம். மூன்றாம் உலக நாடுகளாகிய நமக்குச் சமூக அக்கறையும் சமூகத்தின் பல தரத்தினர், தளத்தினர், அவர்களுக்கிடையில் நிலவும் தொடர்புகள் போன்றவற்றைப் பற்றிய செய்திகளும், சமூக விழிப்புணர்வும் கட்டாயம் தேவை.     மேலும் இதன் இயலுமை இயலாமைகளைப் பற்றி நாம் நிறைய விவாதிக்க இடமிருக்கிறது.

————-


ப்ளூமின் வகைபாட்டியல்-3

முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி

மாணவர்கள் எந்த அறிவைப் பெற வேண்டும், ஆறு நிலைகளில் எந்தப் புலனுணர்வுப் பரிமாணத்தைப் பெற வேண்டும் என்பன இதனால் ஆசிரியர்களுக்குத் தெளிவாகிறது.    

1. நினைவுகூர்தல்

வகைதொகையியலின் அறிவுநிலை எனக் கருதப்பட்ட நினைவு கூர்தல் நிலையில், மாணவர்கள் தாங்கள் கற்றதை ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்பதைச் சோதிக்கவே கேள்வி கேட்கப்படுகிறது. இதுதான் வகைதொகை யியலின் கீழ்மட்டம். இதற்கு, கோடிட்ட இடத்தில் பூர்த்தி செய்க, சரியா-தவறா, பலவற்றில் ஒன்றைத் தேர்வுசெய், போன்ற வினாக்கள் கேட்கப்படுகின்றன.

வரலாறாயின் முக்கியமான நிகழ்ச்சி நடந்த ஆண்டுகளை மனப்பாடம் செய்திருக்கிறார்களா, அறிவியலாயின் அன்றைய பாடத்தில் சொல்லப்பட்ட முக்கியச் செய்திகள் என்ன என்று கேட்கலாம். சொல் வரையறைகளைக் கேட்கலாம். இலக்கியம் என்றால் சில முக்கியப் பகுதிகளை மனப்பாடம் செய்யுமாறும் கேட்கலாம்.

2. புரிந்துகொள்ளல்

குறிப்பிட்ட பத்தியைப் படித்துப் புரிந்துகொண்டார்களா மாணவர்கள் என்று சோதிக்கும் காம்ப்ரஹென்ஷன் சோதனை போன்ற வினாக்கள் இதில் அடங்கும். புரிந்துகொள்ளல் நிலையில் மாணவர்கள் வெறுமனே மெய்ம்மைகளை எடுத்துரைப்பதில்லை, மாறாக அவற்றுக்கு மனத்தில் விளக்கம் கொண்டு கேள்விகளுக்கு விடையளிக்கிறார்கள். சான்றாக, முகில்களில் எத்தனை வகைகள் உள்ளன என்பது நினைவுகூர்தல் வினா. எப்படி அந்த வகைகள் உருவாகின்றன என்பது புரிந்துகொள்ளல் சார்ந்த வினா.

3. பயன்படுத்தல்

தாங்கள் கற்றுக் கொண்ட விஷயத்தைப் பயன்படுத்துவது இந்த நிலை. மாணவர்கள் ஒரு கேள்விக்குச் சரியான தீர்வு காணத் தகவலைப் பயன்படுத்த முற்படுகிறார்கள். சான்றாக, நமக்கு முன் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன கற்றுக் கொண்ட விதிகளின், சட்டத்தின் அறிவைக் கொண்டு ஒரு பிரச்சினையில் எது சரியானது என்று மாணவர்கள் இரு பிரிவாகப் பிரிந்து விவாதிக்குமாறு செய்யலாம்.

4. பகுத்தல்

பிரச்சினைகளைத் தீர்க்கச் சரியான வடிவப்பாணிகளை மாணவர்கள் கண்டுபிடிக்கிறார்களா என்பதை அடையாளப்படுத்துவதற்கு இந்த நிலை உதவுகிறது. ஒரு பாடப்பகுதியில் அகவயமாகவும் புறவயமாகவும் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பகுத்து, தங்கள் தீர்வுத் திறனை அடிப்படையாகக் கொண்டு எவை சரியானவை என்ற முடிவுக்கு வருதல் இதில் அடங்கும். இலக்கியக் கல்வியில் ஆயின், ஒரு கதையின் முதன்மைப் பாத்திரம் எவ்வித உள்மனநோக்கங்களின் அடிப்படையில் செயல்படுகிறான் என்பதைக் காணலாம். இதற்கு மாணவர்கள் அந்த நபரின் பண்புக்கூறுகளை எல்லாம் பகுத்து நோக்கி, தங்கள் பகுத்தறிவின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருதல் வேண்டும்.

5. மதிப்பிடுதல் (next slide)

பழைய வகைதொகை முறையில் தொகுப்பு என்று கூறப்பட்ட நிலையில், மாணவர்கள் புதிய கொள்கைகளை உருவாக்கவோ, முன்னுணர்தல்களைக் கூறவோ கேட்கப்படுகிறார்கள். இதற்குப் பல வேறுவிதப் பாடங்களில் படித்து பெற்றுக் கொண்ட திறன்களையும் கருத்துகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தி, ஒரு முடிவுக்கு வரும் முன்பாக அந்தத் தகவலைத் தொகுக்கின்ற தன்மை வேண்டும். உதாரணமாக, பெருங்கடலின் நீர்மட்டம் கடந்தசில ஆண்டுகளில் எவ்வாறிருந்திருக்கிறது என்ற தகவல் தொகுதியைப் பயன்படுத்தி, இனி வானிலைப் போக்குகளால் வரும் ஐந்தாண்டு களில் நீர்மட்டம் எவ்வாறிருக்கும் என்று முன்னறிவது மதிப்பீடு செய்தல் என்பதில் அடங்கும்.     

6. புத்தாக்கம் செய்தல்

முன்னர் மதிப்பீடு என்று அழைக்கப்பட்ட உயர்பகுதி இப்போது புத்தகம் செய்தல் என்று கூறப்படுகிறது. புத்தாக்கம் செய்யும் திறனை வெளிப்படுத்துகின்ற மாணவர்கள், எப்படி முடிவுகளுக்கு வருவது, கேள்விகளைக் கேட்பது, புதிய செய்திகளை எவ்விதம் கண்டுபிடிப்பது என்பவற்றை அறிந்திருக்க வேண்டும்.

உதாரணமாகத் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு, கருத்துகளை உருவாக்கிக் கொண்டு, ஓர் ஆசிரியரின் முற்சாய்வு (பயாஸ்) என்ன, அல்லது ஒரு சட்டத்துக்கான நியாயம் என்ன என்பதை எல்லாம் கணிக்க முடிவதோடு, அதற்கான காரணங்களை எடுத்துரைக்கவும் (நியாயப்படுத்தவும்) தெரிந்திருக்க வேண்டும். பெரும்பாலும் மாணவர்கள் தாங்களாகவே ஒரு நூலிலுள்ள அல்லது விஷயத்திலுள்ள பிரச்சினைகள் என்ன என்பதைக் கண்டுபிடித்து, அதற்கான தீர்வுகளையும் கண்டுபிடிக்குமாறு கேட்கப்படும்.  

இந்த வகைகள் படிநிலையில் இருந்தாலும், ஒன்றை முடித்த பிறகுதான் அடுத்ததற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை என இப்போது கருதப்படுகிறது. மேலும் உயர்நிலையின தான் முக்கியமானவை, கீழ்நிலையின முக்கியமற்றவை என்றும் அர்த்தமல்ல.

அறிவாற்றல் வளர்ச்சியிலும் இயலுமை வளர்ச்சியிலும் ஒவ்வொரு நிலைக்கும் பணிகள் உண்டு. உதாரணமாக நினைவுகூர்தல் அடிநிலையினதாகும். ஆயினும் நன்கு மனப்பாடம் செய்யும் மாணவன், அந்த அறிவை உடனே கொண்டுவந்து பகுப்பின்போதோ, புத்தாக்கம் செய்யும்போதோ, மதிப்பிடும்போதோ பயன்படுத்த முடியும். மேலும் தகவல்களை அடையாளம் காணவும் இணைத்துப் பார்க்கவும் அது உதவுகிறது.

Anderson et al.’s (2001) taxonomy involves two basic dimensions. The first is referred to as the knowledge domain and involves four types of knowledge: factual, conceptual, procedural, and metacognitive. Factual knowledge involves “basic elements students must know to be acquainted with a discipline or solve a problem in it” (p. 29). Conceptual knowledge involves “the interrelationships among the basic elements within a larger structure that enable them to function together” (p. 29). Procedural knowledge involves “how to do something, methods of inquiry, and criteria for using skills, algorithms, techniques, and methods” (p. 29). Metacognitive knowledge involves “knowledge of cognition in general as well as awareness and knowledge of one’s own cognition” (p. 29).

(next slide)

VII. ப்ளூமின் வகைதொகையியல் ஆசிரியர்களின் பாடத்தயாரிப்புக்கு எவ்விதம் பயன்படுகிறது?

ஆசிரியர்கள் இந்த மூவகை அமைப்பைக் கையில் கொள்வதற்குப் பல காரணங்கள் உள்ளன. எனினும் வகுப்பறைச் செயல்முறை அறிவாற்றல் நிலையில் மட்டுமே பாடத்தைத் திட்டமிடுவதற்குப் பயன்படுத்துகிறது. ஓர் கற்றல் இலக்கினை மாணவர்கள் அடைவதற்கு எவ்விதச் சிந்தனை மற்றும் செயல் முறையை அவர்கள் அடைய வேண்டும் என்பதை இந்த அமைப்பு தெளிவு படுத்துகிறது.  

ஒரு பாடத்திற்கோ, அல்லது அலகிற்கோ கற்றல் இலக்குகளை முதலில் நிறுவ வேண்டும்.

பாடத்தின் தொடக்கத்தில் மாணவர்கள் எவ்வித சிந்தனை, காரணஆய்வு முறைகளைக் கொண்டிருக்கலாம், அது முடியும்போது அவற்றில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதற்கு முதல் மூன்று நிலைகள் பயன்படும்.

வளர்ச்சி நிலையில் எதையும் தவிர்க்காமல் முற்றிலும் புரிந்துகொள்வதற்குத் தேவையான அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிக் கொள்வதற்கு இந்த அமைப்பு பயன்படும்.

கேள்விகளையும் பணிகளையும் திட்டமிடும்போது ஒவ்வொரு நிலைக்கும் தேவையான நோக்கத்தை மனத்தில் வைத்திருக்க வேண்டும்.   

பாடத்தை திட்டமிடும்போது, ஆசிரியர் போதிக்கும் விஷயத்துக்குத் தொடர்புள்ள செயல்களையும் கேள்விகளையும் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

மிக நன்றாக திட்டமிடப்பட்ட பாடம் மாணவர்களைச் சிந்திக்க வைக்கும், ப்ளூமின் வகைதொகையின் எல்லா நிலைகளையும் பெரும்பாலும் உட்கொண்டிருக்கும்.

கேள்விகளையும் பணிகளையும் வடிவமைக்கும்போது, மாணவர்கள் அதைப் பற்றித் தாங்களாகவே சிந்திக்கும் தன்மை பெற்றிருக்கிறார்களா என்பதை ஆசிரியர் கருத்தில் கொள்ள வேண்டும். ஆம் என்றால் அவர்கள் பகுக்கவும், மதிப்பிடவும், புத்தாக்கம் செய்யவும் தயாராக இருப்பார்கள். இல்லை எனில் மேலும் நினைவுகூர்தல், புரிந்துகொள்ளல், பயன்படுத்தல் ஆகியவற்றில் மாணவர்கள் ஈடுபட வைக்க வேண்டும்.

மாணவர்கள் தாங்களாகவே இயங்கவும் தங்கள் பணியை அர்த்தமுள்ளதாக்கவும் ஆன வாய்ப்புகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். உதாரணமாக, தங்கள் வட்டார வரலாற்றின் முக்கியப் புள்ளிகளை அவர்கள் நினைவுகூர வேண்டும். அல்லது பள்ளியில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களை வகைப்படுத்தி தீர்வுகள் காண வேண்டும். இலக்கிய மாணவர்களாக இருந்தால் தாங்களாகவே ஒரு படைப்பின் கருத்தினையும் உள்ளடக்கத்தையும் பெற வேண்டும். சிறந்த முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்க விதிமுறைகள்தான் முக்கியமான கருவிகள்.   

ஆசிரியர்கள் செய்யவேண்டிய இருபது செயல்கள்

பாடத்தை திட்டமிடுதல், கேள்விகளை உருவாக்குதல், கணிப்புகளைச் செய்தல் என்பவை அடிப்படை வழிகள்.

1. எத்தனை மாணவர்கள் இருப்பினும் மாணவர்களின் நிலையறிந்து அவர்கள் நிலைக்குத் தாழ்ந்து ஆசிரியர்கள் கற்றுத்தர முற்பட வேண்டும்.

2. தாங்களே கற்றறியும் முறைக்கு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

3. அவ்வப்போது தக்க பின்னூட்டம் அளிக்க வேண்டும்.

4. கல்வித்திட்டத்தை (கரிகுலம், சிலபஸ் அல்ல) வரையறுத்தறிய வேண்டும்.

5. மாணவர்களின் முன்னேற்றத்தை வடிவப்படுத்திக் காட்டவேண்டும். (next slide)

6. மாணவர் ஒரு தலைப்பைப் புரிந்துகொண்டதை மதிப்பிட வகைதொகையியலைப் பயன்படுத்த வேண்டும்.

7. பாடத்தைத் தொடங்கும் முன்பு அதைச் சுருக்கியுரைத்தல் வேண்டும்.

8. வகுப்பறையிலும் முறைசாரா விதத்திலும் விவாதங்களை நடத்தலாம்.

9. பாடங்களைப் புரிந்துகொள்ளச் செய்ய மாணவர்களின் சிந்தனைகளை/ வினாக்களைக் கேட்டறிய வேண்டும் (பிரெயின்ஸ்டார்மிங்).

10. வரலாற்று நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை மதிப்பிட வேண்டும். பாடத்திற்குத் தகுந்தவாறு இதை மாற்றிக் கொள்ளலாம். (next slide)

11. கணிப்புகளையும் பின்தொடர்வுகளையும் அவ்வப்போது மேம்படுத்தவேண்டும்.

12. பலவேறு நிலைகளையும் உள்ளடக்குமாறு நேரடிக் கேள்விகளை மேம்படுத்த வேண்டும்.

13. வீடியோ பாடத் தொடர்கள், பாட்கேஸ்டுகள், வெபினார்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

14. டிஜிடல் மானிட மேம்பாட்டுச் செயல்பாடுகள், முகாம்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

15. திட்ட அடிப்படை கொண்ட கற்றல் முறைகளைத் திட்டமிட வேண்டும். (next slide)

16. பாடங்கள், கேள்விகள், செயல்பாடுகளுக்கான கேள்விகளைப் புயலாக விரைந்து உருவாக்க வேண்டும். (பிரெயின்ஸ்டார்ம் செய்யுங்கள்).

17. விவாதங்களிலும் வகுப்பறைச் செயல்பாடுகளிலும் வெற்றி பெற்றவர்களை மதிப்பிட வேண்டும்.

18. பாடத்திற்கேற்றவாறு வேட்டை விளையாட்டினை திட்டமிட்டு உருவாக்கவும்.

19. வகைதொகையியல் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.

20. டிஜிடல் (எண்ணியல்) கல்விச்சூழலுக்கேற்ப திட்டமிட வேண்டும்.                  

VIII. ப்ளூமின் செயல்வினைச் சொற்கள்

ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ற செயல்வினைச்சொற்கள் உள்ளன. அவை பாடத்தை திட்டமிடும்போது ஆறு நிலைகளையும் ஒன்றுசேர்த்துக் கொள்ள உதவுகின்றன. அவற்றை ஆசிரியர் பயன்படுத்தும்போது, அவை மாணவர்களுக்குள் வேறொரு வழியிலான சிந்தனையைத் தூண்டக்கூடும்.

ஒவ்வொரு நிலையிலும் திறன்மிக்க கேள்விகளை வடிவமைக்கப் பின்வரும் முக்கிய வார்த்தைகளையும் தொடர்களையும் பயன்படுத்துங்கள்.

Level Keywords
Remembering who, what, why, when, where, which, choose, find, how, define, label, show, spell, list, match, name, relate, tell, recall, select
Understanding demonstrate, interpret, explain, extend, illustrate, infer, outline, relate, rephrase, translate, summarize, show, classify
Applying apply, build, choose, construct, develop, interview, make use of, organize, experiment with, plan, select, solve, utilize, model
Analyzing analyze, categorize, classify, compare/contrast, discover, dissect, examine, inspect, simplify, survey, distinguish, relationships, function, motive, inference, assumption, conclusion
Evaluating build, combine, compose, construct, create, design, develop, estimate, formulate, plan, predict, propose, solve/solution, modify, improve, adapt, minimize/maximize, theorize, elaborate, test
Creating choose, conclude, critique, decide, defend, determine, dispute, evaluate, judge, justify, measure, rate, recommend, select, agree, appraise, opinion, interpret, prove/disprove, assess, influence, deduct
 

(தொடரும்)


ப்ளூமின் வகைபாட்டியல்-2

முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி.

III. உணர்ச்சி விளைவு சார்ந்த பரப்பில் போதனையின் நோக்கங்கள் 

உணர்ச்சிவிளைவுக் களம் மாணவரின் இதயம், மனம் சார்ந்தது. உணர்வுகள், உணர்ச்சிகள், ஆர்வங்கள், மனப்பாங்கு, இரசனை, மதிப்புகள் ஆகியவை அதில் அடங்கும். உணர்ச்சி விளைவுப் பரப்புடன் அறிவாற்றல் பரப்பினையும் ஒருங்கிசைப்பதை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும். சான்றாக, காந்தியக் கொள்கைகளையும் குடிமக்கள் உரிமைகளையும் கடமைகளையும் உணர்ச்சி விளைவுப் பரப்புடன் சேர்க்காமல் வெறுமனே அறிவுப்பரப்புடன் இணைத்துப் படிப்பவன் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனற்றவன். ஆகவே உணர்ச்சிவிளைவுப் பரப்புடன் இணைந்து அறிவாற்றல் பரப்பு செல்கின்றதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டியது ஆசிரியரின் கடமை. ப்ளூமும் க்ராத்வோலும் 1964இல் பின்வரும் படிநிலையை உணர்ச்சிவிளைவுப் பரப்பிற்காக உருவாக்கினர்.   

1. பெறுதல்

அடிப்படையில் மாணவர்கள் சில நிகழ்வுகள் நடப்பதை கவனிக்கிறார்கள். சிலவிதத் தூண்டல்கள் தங்களுக்கு ஏற்படுவதை அறிகிறார்கள். இவற்றைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவதால் குறிப்பிட்ட நபர், கொள்கை, தத்துவம், சம்பவங்கள் போன்றவற்றில் ஆர்வம் ஏற்படுகிறது. சிலர் மதக் கொள்கைகள், சிலர் காந்தியம், சிலர் மனிதநேயம், சிலர் மார்க்சியம் எனப் பலவிதமான கொள்கை களைப் பிறர் வாயிலாக ஏற்பதை உதாரணமாகக் காட்டலாம்.

2. எதிர்வினை புரிதல்

நல்லவிதமாக கொள்கைகளைப் பெறுதல், பொறுப்பான எதிர்வினைக்குத் தூண்டுகிறது. உதாரணமாக “ஆருயிர்கட்கெல்லாம் அன்புசெயல் வேண்டும்” என்ற ஒரு நல்ல செய்தியை உளப்பூர்வமாகப் பெற்ற மாணவர், அதற்கு நேர்முகமான எதிர்வினையைப் புரிகிறார். மூத்தவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் அன்பு காட்டுகிறார். நேரடி வாழ்க்கை அனுபவங்களில் நேர்மையாக நடக்கிறார்.

3. மதிப்பிடுதல்

நல்வழியில் எதிர்வினை புரிவதனால், தங்கள் வாழ்க்கைக்கு நெறிமுறைகளை மாணவர்கள் வகுத்துக் கொள்கின்றனர். நல்லொழுக்க மதிப்புகளை ஏற்றுக் கொள்ளுதல், அவற்றிற்கு முன்னுரிமை அளித்தல், அவற்றைப் பேணுதல் என்பவை இந்தத் தளத்தில் நிகழும் முக்கிய மாற்றங்களாகும். வன்முறையற்ற நடத்தை, உண்மையுடனும் நேர்மையுடனும் நடத்தல் போன்றவற்றில் நேர்முக மனப்பாங்கினைக் கொள்கின்றனர்.

4. அமைத்துக் கொள்ளல்

மாணவர்கள் இந்நிலையில் ஒழுக்க அமைவு ஒன்றைத் தங்களுக்கென அமைத்துக் கொள்கின்றனர். இதன்வழியாகச் சமூகத்தில் தங்களுக்கென ஒரு நடத்தை விதிமுறையையும் (code of conduct) பொதுவாழ்க்கைத் தரத்தையும் உருவாக்கிக் கொள்கின்றனர். இது நேர்முகமாகவும், எதிர்மறையாகவும் நடக்கலாம். எதிர்மறை நிலையில் பொய்சொல்லுதல், லஞ்சம் கொடுத்தலும் பெறுதலும், சாதிப்படிநிலை களைப் போற்றுதல் என்றெல்லாம் இது செல்லும்.      

5. பண்புருவாக்கம்

இதுதான் உணர்ச்சிவிளைவுப் பரப்பின் உச்சநிலை. ஒழுக்க மதிப்புகள் உள்வாங்கப்பட்டுக் குறித்த நபரின் வாழ்க்கை முறையாக அவை மாறுகின்றன. சான்றாக, எளியவர் மீது எல்லையற்ற இரக்கத்தினால் அவர்கள் வாழ்க்கை நிலைக்குக் காரணங்களை ஆராயும் ஒருவன் மார்க்சியவாதியாக மாறக்கூடும். அல்லது காந்தியவாதியாகி ஆசிரமம் ஒன்று நடத்தக்கூடும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் கொள்கைகளை எந்த நிலையிலும் விட்டுத்தர மாட்டார்கள். தாங்கள் தனியாகப் போரிட நேரிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள். (next slide) 

IV. உளஉடலியக்கம் (திறன்) சார்ந்த பரப்பில் போதனையின் நோக்கங்கள்

செயல்படுதல், நிகழ்த்தல் நிலைகளில் திறன் சார்ந்த பரப்பு செயல்படுகிறது. இதற்குத் தசையியக்கமும், நரம்பு-தசை ஒருங்கிணைப்பும் தேவை. சில செயல்பாடுகளில் குறித்த திறமையை அடைவது என்பது இந்தக்களத்தில் கல்வியின் நோக்கமாகிறது. இதனைப் பின்வருமாறு காணலாம்.

1. உள்வாங்கல் (அவதானித்தல்)

இதுதான் முதல்நிலை. பொருள்கள், அவற்றின் பண்புகள், அவற்றிற்கிடையிலான உறவுகள் ஆகியவற்றைப் புலனுறுப்புகளால் குழந்தைகள் அறிவது இந்த நிலை.  

2. ஆயத்தம்

ஒரு குறித்த செயல் அ்ல்லது அனுபவத்துக்குச் சிறார்கள் ஆயத்தமாகி ஒத்து வருவது இந்த நிலை. மனத்தளவிலும், உடலளவிலும் இதற்கு மாணவர்கள் தயாராக வேண்டும்.

3. வழிகாட்டுதலில் பெற்ற எதிர்வினை   

 சிறார்கள், மாணவர்கள் முதலில் தங்கள் மூத்தவர்களை, பெற்றோரை, ஆசிரியர்களைச் செயல்களில் பின்பற்றுகின்றனர். பிறகு தாங்களாகச் செய்து பார்க்கின்றனர். சான்றாக, எழுத்துகளை மாணவர் அரிச்சுவடி நிலையில் எழுதிப்பார்க்க முனைவதைக் கூறலாம். அச்சமயத்தில் அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் கிடைக்கும்போது முன்னேறுகின்றனர்.

4. இயக்கம்

இது மாணவர்கள் தாங்களாகவே இயங்கும் நிலை. தாங்களாகவே முயற்சி-தவறுதல் என்ற வழியில் செயல்படுகிறார்கள். இங்கு இதுவரை கற்ற எதிர்வினைகள் பழக்கமாகின்றன. இச்சமயத்தில் ஆசிரியர்கள் இயக்கத்தின் ஒவ்வொரு நிலையையும் நுண்ணாய்வு செய்து பயிற்சி அளித்தல் வேண்டும்.

5. சிக்கலான மேலெதிர்வினை

இச்சமயத்தில் சிக்கலான இயக்கப் பாணிகளைக் கொண்ட செயல்களை மாணவர்களால் செய்யமுடிகிறது. அவர்கள் உயர்வகைத் திறன் பெற்று எந்தச் செயலையும் எளிதாகவும் தயக்கமின்றியும் செய்ய முடிகிறது. இந்தநிலையின் சிறப்புகள், நுணுக்கமான தசை ஒருங்கியக்கமும், மிக எளிதாக நிகழ்த்துதலும் ஆகும். ஓடுதல், தாண்டுதல், கைகளை எவ்விதமாகவும் இயக்குதல் போன்ற செயல்களைச் செய்ய இயலுகிறது.

6. தகஅமைத்துக் கொள்ளலும், அசலான செயல்நிலையும்  

சாதாரண இயக்கங்கள் மட்டுமின்றி, தச்சு, பானை வனைதல் போன்ற தொழில்களையும் சிக்கலான விளையாட்டு ஆட்டங்களையும் சிறப்பாகச் செய்ய இயலும். இதுதான் மிக உயர்ந்த நிலை. செய்வதைத் துல்லியமாகச் செய்யும் திறன் மட்டுமின்றி, புதிதாகச் செயல்பாணிகள், நடைகளையும் உருவாக்க முடிகிறது.

உணர்ச்சி விளைவுப் பரப்பு, திறன் பரப்பு இவையிரண்டையும் விட ப்ளூம் அறிவாற்றல் பரப்பு என்பதற்கே முதன்மை அளிப்பதாலும் வகுப்பறை பாடபோதனை என்பதை அது ஒட்டியது என்பதாலும் அறிவாற்றல் நிலை வளர்ச்சி பற்றி இனிக் காணலாம்.   (next slide 1956 figure)           

V. ப்ளூமின் வகைதொகையியலில் அறிவாற்றல் பரப்பில் ஆறு நிலைகள்

அறிவாற்றல் வளர்ச்சியில் ஆறு படிநிலைகளை ப்ளூமின் வகைதொகையியல் விளக்குகிறது. கடைசி நிலையான அறிவிலிருந்து, புரிவு, பயன்பாடு, பகுப்பு, தொகுப்பு என்ற நிலைகளைத் தாண்டி மதிப்பீடு என்ற இறுதிநிலைக்குச் செல்கிறது இது. ப்ளூமின் சிறந்த கொடையாகக் கருதப்படுவதும் இந்தப்பகுதிதான். (next slide)

அறிவு என்பது வெறும் நினைவாற்றல்தான். மாணவர் மனப்பாடம் செய்வதனாலும் அர்த்தம் தெரியாத குருட்டுப்பாடத்தினாலும் மாணவர் கற்றுக் கொண்டவை. சிறுவர்களுக்கு மதப்பாடல்களையும் ஓதுதல்களையும் கற்றுத் தருவது, ஆத்திசூடி நன்னெறி போன்ற நூல்களை மனப்பாடம் செய்ய வைப்பது போன்றவை.

புரிவு என்பது மாணவர் கற்றுக் கொண்ட தகவலைத் தனது சொந்த வார்த்தையில் விளக்கவோ சுருக்கியுரைக்கவோ இயலுமாறு உள்வாங்கிக் கொள்ளும் தன்மை. ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றும் தன்மையும் இதில் அடக்கம். பொழிப்புரை சொல்வது, ஒரு கவிதையை உரைநடைக்கு மாற்றுவது, உரைநடையைக் கவிதை நடைக்கு மாற்றுவது, புதுக்கவிதையை மரபுக் கவிதையாக்குவது போன்றவை. அதன் வாயிலாக, போக்குகள், விளைவுகள், பயன்கள் ஆகியவற்றைக் கணித்தல். (next slide)

பயன்பாடு என்பது மாணவர் தான் கற்றுக் கொண்ட விதிகளை, கொள்கைகளை, சட்டதிட்டங்களைப் பயன்படுத்திப் புதிய சூழல்களில் நடைமுறைத் தீர்வுகளைக் காணக் கற்றுக் கொள்ளுதல். பிரச்சினையைத் தீர்த்தல், சிந்தனைகளைத் துருவியெடுத்தல் போன்றவை இதில் அடங்கும்.

பகுப்பு என்பது உள்ளடக்கத்தைப் பகுதிகளிடையிலான உறவுகளை விளக்கும் வண்ணமாகப் பிரித்தல், தனித்த பகுதிகளை அடையாளம் காணுதல், கட்டமைப்பினைக் கண்டுபிடித்தல் ஆகியவற்றைக் கொண்டது.

தொகுப்பு என்பதில் கோட்பாடு, வடிவமைப்பு, சோதனை ஆகியவற்றின் வாயிலாகத் திட்டமிட, உருவாக்க, புதிய அமைப்புகளை அமைக்கத் தேவையான புத்தாக்கச் செயல் அடங்கும்.

ஃ மாணவர் தனது முடிவினை அல்லது தீர்மானத்தைக் கணித்தல், நடுநிலையோடு ஆராய்தல், விமரிசனம் செய்தல் ஆகியவற்றின் வாயிலாக ஆதரிக்கத் தேவையான இயலுமை, மதிப்பீடு ஆகும்.

இவற்றில் அறிவு அல்லது நினைவாற்றல் என்ற அடிப்படைக் கீழ்நிலையிலிருந்து ஏணிப்படி முறையில் ஒவ்வொன்றாக அடுத்த நிலைக்கு மேலேறி வரவேண்டும் என்று கருதப் படுகிறது. கீழ்நிலையில் குறைந்த அறிவாற்றல் இயக்கம் தேவைப்படுகிறது. உயர்நிலையில் அதிக அறிவாற்றல் தேவைப்படும். இதனை அடையக் கீழ்நிலைகளை முற்றிலும் கற்று அடைந்திருப்பது அவசியம். (next slide 2001figure)  

VI. ப்ளூமின் வகைதொகையியலில் மாற்றம்

2001இல் அறிவாற்றல் உளவியலாளர்கள், கல்வித்திட்ட வல்லுநர்கள், போதனை ஆய்வாளர்கள், சோதித்தல் வாயிலான கணிப்பின் திறனாளர்கள் போன்ற பலர் லோரின் ஆண்டர்சன் தலைமையில் இணைந்தனர். லோரின் ப்ளூமின் மாணவர். அவர்கள் சேர்ந்து ப்ளூமின் பழைய வகைதொகை முறையைச் சற்றே மாற்றியமைத்தனர். அவ்விதம் மாற்றிய போது, அதில் மூன்று விஷயங்கள் முக்கியமாக மாற்றப்பட்டன. அவர்கள் வகைகளுக்குப் பெயர்களுக்குப் பதிலாக வினைச் சொற்களைப் பயன்படுத்தினர். (next slide)

அறிவு             – நினைவுகூர்தல்

புரிவு              – புரிந்துகொள்ளல்

பயன்பாடு         – பயன்படுத்தல்

பகுப்பு             – பகுத்தல்

தொகுப்பு          – மதிப்பிடுதல்

மதிப்பீடு           – புத்தாக்கம் செய்தல்           மூன்று வகைகளுக்குப் புதுப்பெயர் சூட்டினர். அறிவு என்பது நினைவுகூர்தல் ஆக்கப்பட்டது, புரிதல் என்பது புரிந்துகொள்ளல் ஆக்கப்பட்டது, தொகுப்பு என்பது புத்தாக்கம் செய்தல் ஆக்கப்பட்டது. படிநிலையமைப்பில் புத்தாக்கம் செய்தல் உயர்நிலையாகவும், மதிப்பிடுதல் அடுத்த உயர்நிலையாகவும் ஆயின. (தொடரும்)


ப்ளூமின் வகைபாட்டியல்-1

ப்ளூமின் வகைதொகையியல்

கல்வி என்பது நடத்தை, மனப்பாங்கு, திறன் என்ற மூவழிகளிலும் மனிதர் களிடையே மாற்றத்தை ஏற்படுத்துகின்ற செயல். அதேசமயம் கற்பவர்களும் கல்வியால் தங்கள் இயலுமைகளும், சாத்தியங்களும் மேம்பட்டதை அறிய முடிய வேண்டும். பிற வழிகள் இருந்தாலும் வகுப்பறை போதனையும் செயல்களும் இதற்கு வாயில்களாக உள்ளன. ஆகவே குறித்த ஒரு போதனைக்கான நோக்கங்களை ஆசிரியர் தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். வகுப்பறை ஊடாட்டத்தின் விளைவாக உடனடியாக அடையக்கூடிய குறித்த இலக்கினைத் தான் நோக்கம் என்கிறோம். ஆசிரியர் ஒரு பாடத்தை அல்லது தலைப்பை நடத்துவதற்கு இலக்கு அதுதான். நோக்கம் என்பது இல்லையானால், போதனை என்பது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலக்கற்றதாகவும் நேரத்தை வீணடிப்பதாகவும் போகும். மாணவர்களின் வெவ்வேறு பரப்புகளை வளரச் செய்வதாக நோக்கங்களை அமைக்க வேண்டும்.     

மாணவர்கள் நன்கு கற்பதற்கும் ஆசிரியர்கள் நன்கு போதிப்பதற்கும் தேவையான வழிமுறைகளைப் பலவிதமாக அறிஞர்கள் காலந்தோறும் கூறிவந்துள்ளனர். அதில் அண்மைக்காலத்தில் புகழ்பெற்றது ப்ளூமின் வகைதொகையியல் என்ற சட்டகம். இதைப் பின்வரும் தலைப்புகளில் நாம் காண இருக்கிறோம்.

I. ப்ளூமின் வகைதொகையியல்-(Bloom’s taxonomy) என்றால் என்ன? அதற்கு முக்கியத்துவம் ஏன்?

I. ப்ளூமின் வகைதொகையியல்-(Bloom’s taxonomy) என்றால் என்ன? அதற்கு முக்கியத்துவம் ஏன்?

taxonomy என்ற சொல் கிரேக்கச் சொல்லான  ‘taxis’ என்பதிலிருந்து வந்தது. அதற்கு systematic classification என்று பொருள். ப்ளூமின் வகைதொகையியல் என்பது 1956 முதல் இருந்துவரும் ஓர் புலன் அறிவாற்றல் சட்டகம் (Framework of cognition). அது கல்வியாளர்கள், நன்கு வரையறுக்கப்பட்ட கற்றல் இலக்கு களை வடிவமைப்பதற்குத் தேவையான விமரிசனபூர்வ காரணஆய்வினை வகைப்படுத்துகிறது. அது கல்வியியல் அடைவுகளுக்கான (Achievements) சட்டகம். அதில் ஒவ்வொரு நிலையும் தனக்குக் கீழே உள்ள நிலையைச் சார்ந்துள்ளது.

பெஞ்சமின் ப்ளூம் ஒரு அமெரிக்கக் கல்வி உளவியலாளர். அவர் கல்விச் செயலுக்கான நிலைகளை வரையறுக்க முயன்றார். அதற்கு முக்கோண வடிவ அமைப்பு ஒன்றினைச் செய்தார். 1940களில் தம்மோடு பணிபுரிந்த மேக்ஸ் எங்கல்ஹார்ட், எட்வர்ட் ஃபஸ்ட், வால்டர் ஹில், டேவிட் க்ராத்வோல் என்பவர்களுடன் சேர்ந்து தமது வகைதொகை அமைப்பை உருவாக்கினார். கல்விசார் இலக்குகளைக் குறித்த வகைகளுக்குள் கொண்டுவரும்போது, அவை கல்லூரி மாணவர்களின் செயல்திறன்களை நன்கு கணிக்க உதவும் என்பது அவரது நம்பிக்கை.

1940 முதல் 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து ப்ளூம் போன்ற கல்வியாளர்கள் ஒவ்வோராண்டும் பல்வேறான சட்டகங்களை அமைத்து வந்தனர். 1956இன் அமெக்க உளவியல் சங்கத்தின் கூட்டத்தில் தாங்கள் செம்மைப்படுத்திய வடிவத்தைக் கல்வியியல் இலக்குகளின் வகைதொகையியல் என்ற பெயரால் வெளியிட்டனர். கல்வியின் நோக்கம் சிந்தனையாளர்களையும் செயல்படு வோரையும் உருவாக்குவது என்பது அவர்கள் கருத்து. ஒரு கருத்தின் அல்லது கல்வித்திறனின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை தொடர்வதற்கு, அல்லது மாணவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி மாணவர்கள் படைப்பாற்றலோடு சிந்தித்து பிரச்சினைகளைத் தாங்களாகவே தீர்ப்பதற்கு, ஒரு வழியமைத்துத் தருவது இந்த வகைதொகையியலின் நோக்கம். ஆகவே மாணவர்கள் கற்கும் போது அதைத் தாங்கும் விதமான பாடஅமைப்புகளை ஆசிரியர்கள் தங்கள் போதனையின் சட்டகத்தின் எல்லா நிலைகளிலும் கொண்டிருக்க வேண்டும்.

ப்ளூமின் இந்தத் திட்டத்தின் மையத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய கற்றல் இலக்குகளை உருவாக்கும் திறன் இருக்கிறது. அவற்றை அடைவதற்கு திட்டவட்டமான வழியும் இருக்கிறது. போதிப்பவர்கள் கற்றல் இலக்குகளை நடத்தையியல் சார்ந்து காண வேண்டும். மாணவர்கள் ஒவ்வொரு நிலையிலும் தாங்கள் எதைப் பெற்றார்கள் என்பதை நேரடியாக அவர்கள் கணிக்க வேண்டும்.

இந்த வகைபாட்டைப் பயன்படுத்தினால் கல்வியாளர்கள் தங்கள் நோக்கங்களைத் திறமையுடன் அமைத்து அதற்குத் தக்கவாறு உள்ளடகத்தைக் கொண்ட பாடத் திட்டத்தையும் கட்ட முடியும். அதற்கேற்ற சரியான கணிப்புக் கருவிகளையும் உத்திகளையும் வடிவமைக்க முடியும். இந்த வகைதொகையில் ஆறு நிலைகள் உள்ளன. மிகக் கீழ்நிலையில் அறிவாற்றலின் அடிப்படைத் திறன்களும் உச்சநிலை யில் சிறந்த அறிவாற்றல், சிக்கலான சிந்தனையை உள்ளடக்கிய திறன்களும் உள்ளன. ஏணிப்படி முறையில்அமைந்த அடிப்படையான இந்த எளிய இலக்கு களை ஒவ்வொன்றாக வெற்றி கொண்டு வந்தாலொழிய மாணவர்கள் உயர் நிலைச் சிந்தனையை அடைவதில் வெற்றிபெற இயலாது என்பது கருத்து.

மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தற்போது என்ன அறிந்திருக்கிறார்கள் என்பதற்கும் அடுத்த நிலை அறிவைப் பெற அவர்கள் கற்க வேண்டியது என்ன என்பதற்குமான இடைவெளியை ஒரு பாலமாகக் கடக்க இந்த வகைதொகை அமைப்பு உதவிசெய்கிறது. கற்றல் செயல்முறையின் இறுதியில், மாணவர் ஒரு புதிய திறனை அடைந்திருக்க வேண்டும், ஒரு புதிய அறிவுநிலையை அடைந்திருக்க வேண்டும், தங்கள் மனப்பாங்கில் ஒரு மாற்றத்தைப் பெற்றிருக்க வேண்டும். இந்த மாற்றங்களை போதனையாளர்கள் அடுத்தடுத்துத் திறம்படக் கணித்துவர வேண்டும். இதற்கு இந்த வகை தொகை அமைப்பு உதவுகிறது.

அமெரிக்கக் கல்விமுறையில் மட்டுமன்றிப் பிற நாடுகளிலும் மிகப் பெரிய சாதனையை இந்த வகைதொகையியல் உருவாக்கியிருப்பதாகக் கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.             

II. ப்ளூமின் முதல் வகைபாடுமூன்று பரப்புகள்  

ப்ளூமின் வகைபாடு அடிப்படையில் மூன்று கற்றல் பரப்பெல்லைகளைக் கொண்டுள்ளது. அறிவாற்றல் சார்ந்த பரப்பு, உணர்ச்சிவிளைவு சார்ந்த பரப்பு, உள-உடல் இயக்கம் சார்ந்த பரப்பு என்று அவற்றைக் கூறலாம். சுருக்கமாக இவற்றைக் கேஎஸ்ஏ (K- Knowledge. S- Skills (psychomotor),  A- Attitudes)  என்று சொல்வர். அதாவது, ஒரு கற்றல் காலப்பகுதியின் முடிவில் மாணவர் புதிய அறிவு, புதிய மனப்பாங்குகள், புதிய திறன்கள் ஆகியவற்றை அடைந்திருக்க வேண்டும் என்பது கருத்து.

1. அறிவாற்றல் சார்ந்த பரப்பு

நுண்ணறிவு சார்ந்த திறன்களை அடைவது அறிவாற்றல் பரப்பின் மையம். இதில் மாணவர் புதிய மெய்ம்மைகளையும் பாணிகளையும் மேலதிகக் கற்றலுக்கு அடிப்படையான கருத்துகளையும் அறியவும் நினைவுக்குக் கொண்டுவரவும் இயல வேண்டும். இதில் ப்ளூமின் வகைதொகையியலின் அடிப்படையான ஆறு முகங்கள் உள்ளன. அறிவாற்றல், புரிதல், பயன்பாடு, பகுப்பு, தொகுப்பு, மதிப்பீடு என்பன அந்த ஆறு முகங்கள்.

2. உணர்ச்சிவிளைவு (மனப்பாங்கு) சார்ந்த பரப்பு

இதில் தாங்கள் கற்ற பொருளைப் பற்றியும் அந்தப் பொருள்பற்றிய தங்கள் மனவோட்டத்தைப் பற்றியும் மாணவர்கள் புதிய உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பெறுகிறார்கள். பலவேறு உந்துதல்கள், மனப்பாங்குகள் இவற்றோடு மாணவர்கள் சிலவற்றை உயர்வாகப் பாராட்டுதல், அதிக மதிப்புக் கொள்ளுதல் ஆகியவற்றையும் பெற வேண்டும். சான்றாக, ஒரு மருத்துவச் சூழலில் என்றால், நோயாளிகள், சிறார்கள் மீது அதிகப் புரிவுணர்ச்சியை (எம்பதி) அவர்கள் காட்ட வேண்டும். மரியாதையுடன் பிறரைச் செவிமடுக்கும் பண்பு, மாறாது கவனத்தைச் செலுத்துதல் போன்ற பல பண்புகளால் இந்த மாற்றங்கள் நடைபெற்றிருப்பதை உணரலாம். மேலும் விவாதங்களில் பண்புடன் ஈடுபடவும், மோதல்களைத் தீர்க்கவும, உள்ளேற்றுக்கொண்ட ஒழுக்கமதிப்புகளை வெளிக்காட்டவுமான செயல்பாடுகள் அதிகரிக்கும்.

3. உள-உடலியக்கம் (திறன்) சார்ந்த பரப்பு இது முதலில் ப்ளூமின் வகைபாட்டில் இல்லை. பின்னர் சேர்க்கப்பட்டது. ஆரம்ப நிலைக் கல்வியின் இறுதியில் மாணவர்கள் புதிய திறன்கள் பலவற்றைப் பெறுகிறார்கள் என்ற கணிப்பின் அடிப்படையில் இது சேர்க்கப்பட்டது. உடலியக்க மாற்றங்கள், உடல்நுட்பத் திறன்களை ஒருங்கிசைத்தல் இரண்டும் இதில் அடங்கும். உதாரணமாக, ஒரு மாணவன் மரத்தில் நுட்பமான வேலைத்திறன்களைச் செய்தல், ஒரு மருத்துவ மாணவன் விரைந்து காயத்திற்குத் தைத்தல் போன்றவை இம்மாதிரி மாற்றங்கள், இயக்க ஒருங்கிசைத்தல்கள் ஆகியவற்றில் அடங்கும். மிகச் சிறுவயதிலிருந்தே இவை தொடங்குகின்றன. ஓர் இடத்தைக் கழுவுதல் போன்ற பரந்த நிலையிலிருந்து கோலம் போடுதல் போன்ற நுட்பநிலைகளை நம் சமுதாயப்  பெண்கள் அடைவதும் இதில் வரும். தொழிலாளர் களுக்குப் பின்னர் தேவைப்படும் கனரக எந்திரங்களை இயக்குதல், லேத்துகளை இயக்குதல் போன்றவை வளர்கின்றன. வேகம், நுட்பம், தொலைவு, செயல்முறைகள், உத்திகள் ஆகியவற்றின் திறமையைக் கொண்டு உள-உடல் இயக்கத் திறன்கள் மதிப்பிடப் படுகின்றன. (தொடரும்)


இறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3

முன்பு, இறப்பைக் கண்டு எனக்கு அச்சமில்லை என்று குறிப்பிட்டேன். காரணம் இருக்கிறது.

பலரும் உயிர் ஒன்று தனியாக ஆவி ரூபத்தில் இருப்பதாக நம்புகிறார்கள். இன்னும் பலப்பலர் ஆன்மா என்று ஒன்று உண்டு, அது அழியாதது, நாம் இறந்தபிறகும் அது இருக்கிறது என்று கருதுகிறார்கள். இறந்த பிறகு அடையக்கூடிய நல்ல கதி என்பது என்ன என்பது அவரவர் மதத்தையும் சிந்தனையையும் பொறுத்து வேறுபட்டாலும் அவர்கள் எல்லாருக்கும் (கிறித்துவர்கள், முஸ்லிம்கள் உட்பட) தாங்கள் நல்ல கதி அடையவேண்டும் என்ற கவலை இருக்கிறது. ஆன்மா சொர்க்கத்திற்குப் போகவேண்டும், நரகத்திற்குப் போய்விடக்கூடாது என்று பலரும் கவலைப்படுகிறார்கள். இன்னும் பலர் கைலாய பதவி கிடைக்குமா, வைகுண்ட பதவி கிடைக்குமா என்று இறந்தபிறகும் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். இன்னும் பலருக்குச் சாவு என்பது ஒரு சித்திரவதையாக, பயங்கரமாக, அச்சத்தைத் தருவதாக இருக்குமோ, இறந்த பிறகு என்ன ஆகுமோ நமக்கு என்ற கவலை இருக்கிறது.

எனக்கு அப்படிப்பட்ட கவலை எதுவும் இல்லை. முதலாவதாக ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. எனவே இறந்தபிறகு அது என்ன ஆகுமோ என்ற கவலையும் இல்லை.

அப்படியானால் உயிர் என்பது இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். உயிர் என்பது இருக்கிறது. ஆனால் பலரும் நினைப்பதுபோல அது ஒரு ஆவியோ, மூச்சுக்காற்றோ, அல்லது வேறுவிதமான காற்றோ அல்ல.

எங்கள் குடும்பம் சைவக்குடும்பம். உயிர் என்பது ஓர் காற்றுப் போன்றதுதான் என்பது அவர்கள் எண்ணம். ஒன்பது வாயிற் குடிலை என்று மாணிக்கவாசகர் பாடியதையும் (யாராவது இறந்தால், சிவபுராணத்தைப் பாடுவார்கள்) நம்புபவர்கள். ஆகவே யாராவது இறந்தால் உயிர் நவதுவாரங்களில் எதன் வாயிலாகப் போயிற்று என்று ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்துவார்கள். இறந்தபோது மலசலம் இருந்தால் அபானத்தின் (ஆசனவாய்) வழியாகப் போயிற்று என்பார்கள். சிலர் ஆவி கண்கள் வழியாக, சிலரது ஆவி காது வழியாக, பலரது ஆவிகளும் வாய் வழியாக, சிலபேருக்கு மண்டைவழியாகக்கூடப் போயிற்று என்று சான்று காட்டுவார்கள். அநேகமாக ஒருவருக்கும் மூக்கின் வழியாக உயிர் போவதே இல்லை போலும்.

என்னைப் பொறுத்தவரை உயிர் என்பது உடம்பின் எல்லா செல்களிலும், திசுக்களிலும் இருக்கிறது. அப்படித்தான் உயிரியல் எனக்குக் கற்பித்திருக்கிறது. அறிவியலை நான் வெறும் பாடமாகப் படிக்க வில்லை. அதனால் விஞ்ஞானத்தை நன்றாகப் படித்தும்கூட ஆன்மா இருக்கிறது என்றோ, உயிர் எங்கேயோ தனியாக ஒரு வாயுவாக இருக்கிறது என்றோ நான் கருதுகின்ற மூடத்தனத்தைச் செய்யவில்லை.

எல்லாச் செல்களிலும் உயிர் இருக்கிறது என்பதன் அர்த்தம் ஒன்றுதான். நமக்கு வயதாகும்போது அவை தளர்ச்சியுற்று ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. அப்படி அவை ஓய்வெடுத்துக் கொள்ளும்போது நமக்கு இறப்பு ஏற்படுகிறது. தினசரி தற்காலிகமாக நமது செல்கள் களைப்படைந்து ஓய்வெடுக்கும்போது தூக்கம் வருகிறது. நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டும் என்ற அளவுக்கு செல்கள் தளர்ச்சியுறும்போது சாவு நிகழ்கிறது.

இதை அறிந்துதானோ என்னவோ, நம் திருவள்ளுவர், “உறங்குவது போலும் சாக்காடு” என்று அழகாகக் கூறிவிட்டார். உறங்கி விழிப்பது போல (மறு) பிறப்பு உண்டா என்பது நமக்குத் தெரியாது. தெரியாத, என்றைக்குமே தெரிந்துகொள்ள முடியாத விஷயத்தில் சிந்தனையைச் செலுத்துவது வீண்.


இறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2

பொதுவாக இன்றைய உலகில் ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிக காலம் வாழ்வதாகச் சொல்கிறார்கள். அதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.
என் சொந்த அனுபவத்திலும் இது உண்மை என்பதைக் கண்டிருக்கிறேன்.
எனது குடும்பத்திலேயே நான் கண்கூடாகக் கண்டவை இவை. என் தாத்தா மறைந்த பிறகுதான் பாட்டி மறைந்தார். என் தந்தையார் மறைந்த பிறகு என் தாயார் எட்டு ஒன்பதாண்டுகள் இருந்தார்கள். என் மாமனார் மறைந்த பிறகுதான் மாமியார் இறந்தார்.
எனக்கு இரண்டு சிற்றப்பாக்கள். முதல்வர் இறந்தபிறகு அவருடைய துணைவியார் – என் முதல் சித்தி பத்தாண்டுகள் இருந்தார்கள். அடுத்த சிற்றப்பா மறைந்து இப்போது ஒன்பதாவது ஆண்டு என்று நினைக்கிறேன். இப்போதும் என் இரண்டாவது சித்தி இருக்கிறார்கள்.
தாய்வழியிலும் அப்படித்தான். என் தாய்மாமன் இறந்தபிறகும் மாமி இருக்கிறார்கள். என் சித்திமார் இருவர் (தாயின் தங்கையர்). அவர்களும் தத்தம் கணவன்மார்கள் இறந்தபிறகும் இன்றும் இருக்கிறார்கள்.
ஆகவே ஆடவரைவிடப் பெண்டிர் சில ஆண்டுகள் அதிகமாக வாழ்வது பொது விதி என்றே தோன்றுகிறது. எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, கணவன் இறந்தபிறகு, மனைவி சராசரியாகப் பத்தாண்டுகள் உயிரோடு வாழ்வது வழக்கமாக இருக்கிறது.
இதற்கு ஒரு காரணம் திட்டமாக இருக்கிறது. பழைய காலங்களில் கணவரைவிட மனைவி ஏழு எட்டு ஆண்டுகள்கூட வயதில் குறைந்தவராகவே இருப்பார். மற்றொரு காரணம், அநேகமாக எல்லா மனைவிமார்களுமே தங்கள் கவலைகளைத் தங்கள் கணவர்மீது சுமத்திவிட்டுத் தாங்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
என் மனைவியைப் பொறுத்தவரை இதுவரை என்னை நன்கு கவனித்துவருகிறார். இனிமேலும் நான் உயிருடன் இருக்கும் காலம்வரை அவர் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டிருந்து, என்னை அனுப்பிவிட்டு தக்க காலம்வரை மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.
இதில் மகிழ்ச்சிதான். ஏனெனில் மனைவி இறந்தபிறகு கணவன் வாழ்ந்தால், அவனை கவனிக்க ஆள் இருக்காது. ஆனால் தந்தை இறந்த பிறகு தாய் இருந்தாலும் பிள்ளைகள் நன்கு கவனித்துக் கொள்வார்கள். தாய்மைக்கு அந்த அளவு சக்தி இருக்கிறது. ஆனால் ஒரேவிஷயம், அந்தத் தாய் தன் மருமகளுடன் சற்றே ஒத்துப் போய்விட வேண்டும்.


இறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1

இறப்பு அல்லது மரணம் என்பதைக் கண்டு பலரும் பயப்படுகிறார்கள் என்று சொல்லப்படுவதைக் கேட்டிருக்கிறேன்.
எனக்கு என் இறப்பைப் பற்றிக் கவலையோ, அச்சமோ எதுவுமில்லை.
ஏதோ நல்ல குலத்திலே பிறந்தேன். நன்றாக வளர்ந்தேன். படித்தேன். தக்க வேலையில் அமர்ந்தேன். திருமணம் ஆயிற்று. என் சந்ததிக்கென இருவரை உருவாக்கினேன். அவர்களையும் படிக்க வைத்தேன். நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தேன். என் பணியை நன்றாகச் செய்தேன். சில புத்தகங்கள் எழுதினேன். சமூகத்தைப் பற்றிக் கொஞ்சம் கவலைப் பட்டேன்.
அவ்வளவுதான். வாழ்ந்தாயிற்று. என்னைவிட வயதில் மூத்தவர்களும் திடகாத்திரமாக இருப்பதையும் காண்கிறேன். என்னைவிட வயதில் குறைந்தவர்களும் எனக்கு முன்னால் போய்விட்டதையும் பார்க்கிறேன்.
இந்த வாழ்க்கையை நன்றாக வாழ்ந்தாயிற்று. இனிமேல் எப்போது வேண்டுமானாலும் போகத் தயார். எந்தக் கவலையும் இல்லை. சாவைப் பற்றி பயம் இல்லை. என்றைக்குப் பிறந்தோமோ அன்றைக்கே இறப்பு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் எழுதப்பட்டுவிட்ட ஒன்று. இதில் கவலைப்படவோ பயப்படவோ என்ன இருக்கிறது? என்றைக்கு இறப்பு வருகிறதோ அன்றைக்கு ஜாலியாகவே போய்ச் சேரலாம்.
அவ்வளவுதான் வாழ்க்கை. இதற்குமேல் ஒன்றுமில்லை.


தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம்

தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் மனித அறிவினால் விளையும் கண்டுபிடிப்புகள் மிக விரைந்து பெருகிவருவது இந்த நூற்றாண்டின் தனித்தன்மை. பல நூற்றாண்டுகளாகத் தளர்நடையிட்டு வந்த வந்த பல அறிவுத் துறைகள், இந்த நூற்றாண்டில் ஒரு ஓட்டப்பந்தய வீரனின் வேகத்தோடு விரைந்து வளர்ந்தன. ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஏதோ ஒரு கொள்கையோ புத்தாக்கமோ அடுத்தநாட்டிற்குப் பரவிப் பாடப்புத்த கத்தில் இடம் பெறுவதற்குள் பழமையடைந்து விடுகின்ற காலம் இது. அறிவுத் துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை கலைச்சொற்கள். தக்க கலைச் சொற்களின்றிக் கருத்துகளைச் செம்மையாக, துல்லியமாக, சுருக்கமாக உணர்த்த முடியாது.

இந்த நிலையில்தான் தமிழ் கலைச்சொல்லாக்கத் துறையில் ஈடுபட நேர்ந்தது. இத்தகைய விழிப்பு காலம் கடந்தே ஏற்பட்டது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சென்ற நூற்றாண்டிலேயே அது ஏற்பட்டிருந்தால், மிக எளிதாக இந்த நூற்றாண்டில் புதிய கருத்துகளை நாம் உள்வாங்கிச் செரித்துக் கொண்டிருக்க முடியும்.

இதற்குமுன் ஒரு சிறிய செய்தியைச் சொல்லவேண்டும். தமிழில் கலைச்சொற்கள் அவசியமா என்று பலர் கேட்கிறார் கள். முதலில் கல்லூரி அளவில் இல்லாவிட் டாலும் பள்ளி வகுப்புகள் வரையிலேனும் தமிழ் வழிக்கல்வி இன்றி யமையாதது என்பதில் ஐயமில்லை. அந்த அளவிலேனும் கலைச்சொற்களை உருவாக்கித்தான் தீரவேண்டும். அது நம் கடமை. அந்தந்த மக்கள் அவரவர் தாய்மொழியில் பயிலாவிட்டால் புரிந்துகொண்டு அறிவைப் பெருக்குதலோ புதிய கண்டுபிடிப்பு களைச் செய்தலோ இயலாது என்பதை உளவியலார் எத்தனையோ பேர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

இந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதி முடிந்த பிறகுதான் தமிழில் கலைச்சொற்கள் வேண்டும் என்ற விழிப்பு ஏற்பட்டது. அதற்கு இந்நூற்றாண் டின் தொடக்கத்தில் ஏற்பட்ட கல்விப் பெருக்கம் ஒரு காரணமாக அமைந்தது. தமிழ்ப்பொழில் இதழும் இருபதாம் நு£ற்றாண்டின் முதல் காற்பகுதி முடிந்த பிறகுதான் தோன்றியது. எனவே அதில் கலைச்சொல்லாக்கம் பற்றிய புதிய உணர்ச்சி வெளிப்பட்டதில் வியப்பில்லை.

தமிழ்ப்பொழிலில் கலைச்சொல்லாக்க முறைகள் பற்றித் தனியே கட்டுரைகள் வரையப்படவில்லை. கலைச்சொல் லாக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்டுரை கள் உண்டு. கலைச்சொல்லாக்கப் பகுதிகளும் உண்டு. நேரடியாகக் கலைச் சொல்லாக்க முறை பற்றி எவரும் கருத்துகள் தெரிவிக்காவிட்டாலும், பொழிலாசிரியர்களின் முன்னுரைகள், அவர்கள் அனுமதித்த கட்டுரைகள், விளம்பரங்கள் போன்றவற்றிலி ருந்து அவர்கள் எவ்வித முறைகளைக் கையாளுவதை ஆதரித்தார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ளமுடியும்.

அ. சாமி. வேலாயுதம் பிள்ளை, கலைச்சொற்கள் என்ற தலைப்பில் அறிவியல் தொடர்பான சொற்களை அவ்வப்போது வெளியிட்டார்.1 இவற்றில் கணிதம் முதலிடம் பெற்றது. அவர் கணித ஆசிரியராக இருந்தமை இதற்கு ஒரு காரணம் ஆகலாம். (இவரது கலைச்சொற்கள் வெளியான ஐம்பது பக்கங்களில் ஏறத்தாழ இருபத்தைந்து பக்கங்கள் கணிதத்திற்கே ஒதுக்கப்பட்டன.)

ஆ. ஆங்காங்கே என்ற தலைப்பில் கோ. தியாகராசன் என்பவர் ஒரு நீண்ட கலைச்சொற் பட்டியல் வெளியிட்டார்.2

இ. பொழிலாசிரியர், தமிழ் மொழி வளர்ச்சியில் ஒரு கூறு என்ற தலைப்பில் கலைச்சொற்கள் சிலவற்றை வெளியிட்டார்.3

இவற்றில் சாமி. வேலாயுதம் பிள்ளையின் முயற்சி 1941-44 ஆண்டுகளிலும், கோ. தியாகராசனின் முயற்சி 1950-53 ஆண்டுகளிலும், பொழிலாசிரியரின் முயற்சி 1972-73 ஆண்டுகளிலும் நடைபெற்றது. முதல் முயற்சி அறிவியற் சொற்களை மட்டும் உருவாக்கியது, பின்னர் நிகழ்ந்த இரு முயற்சிகளும் பொதுப் பயன்பாட்டிற்கென, பல்துறை அறிவுக்கென நிகழ்ந்தவை.

கலைச்சொல்லாக்கம் பற்றிய கருத்துரைகள் தமிழ்ப்பொழில் இதழில் அவ்வப்போது வெளியிடப்பட்டன. அவற்றுள் பின்வருவன அடங்கும்.

1. கலைச்சொல்லாக்கம் என்ற தலைப்பில் பொழிலாசிரியர் வரைந்த முன்னுரைக் கட்டுரை (ஆசிரியவுரை)-துணர் 16 பக். 116-17, 248-50, 278-79, 285-87, 353-57,

2. சொல்லாக்கக் குழு பற்றிக் கல்விச் செயலர்க்கு வரைந்த கடிதங்கள் (ஆங்கிலத் திலும், தமிழிலும்)-துணர் 16 பக். 283-88

3. கலைச்சொல்லாக்கம் (கட்டுரை)-அ. இராமசாமி கவுண்டர், துணர் 19 பக்.169-72, 223-36

4. கலைச்சொல்லாக்கம்-கோ. தியாகராசன், துணர் 23 பக்.231-36

5. கலைச்சொல்லாக்கம் (அறிக்கை)-வா. பொ. பழனிவேலன், துணர் 29 பக்.141-42

6. கலைச்சொற்களின் சீர்கேடு-ச. இராசகோபாலாச்சாரியார் (ராஜாஜி)-துணர் 22 பக்.238-43

7. தமிழில் கலைச்சொற்கள்-இராஜா சர். அ. முத்தையா செட்டியார், துணர் 22 பக். 200, 217-19

8. தமிழுக்கு வடசொல்லடியாகப் பிறந்த கலைச்சொற்களா?-தமிழ் அறிஞர் கழகம் வேண்டுகோள், துணர் 22 பக்.195-99

இவை தவிர துணர் 22இல் மிகுதியான வேண்டுகோள்கள், அறிக்கைகள், உரைகள் முதலியன இடம் பெற்றன. இவற்றை நோக்கும்போது துணர் 16 முதல் 22 வரை (1938-48) இப்படிப்பட்ட செய்தி கள் இடம் பெற்றுள்ளமை தெரிகிறது. இதற்கான காரணத்தை நோக்கலாம்.

அப்போதைய தமிழ்மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி ஆதரவினால் 1934இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பு ஏற்பட்டது.. இதன் முதல் மாநில மாநாடு 1934 ஜூன் 10, 11இல் சென்னையில் நிகழ்ந்தது. இம்மாநாட்டில் தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கிக் கல்வியைத் தமிழ்வழி பயிற்ற ஆவன செய்யவேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பெற்றது. இத்தீர்மானத்தின் படி 1934 அக்டோபர் 14 அன்று இச்சங்கத்தின் சார்பில், சொல்லாக் கக் கழகம் ஒன்று அமைக்கப்பெற்றது. இக்கழகத்தினரின் உழைப்பினால், ஒன்பது துறைகளில், பத்தாயிரம் கலைச் சொற்கள் கொண்ட தொகுப்பு ஒன்று, கலைச்சொற்கள் என்ற தலைப்பிலேயே 1938இல் வெளியிடப் பெற்றது.

இக்குழுவினர் உருவாக்கிய கலைச்சொற்கள், தமிழ் அடிப்படையில் சிறந்த முறையில், ஓர் எடுத்துக்காட்டு அளவில் அமைந்திருந்தன. எளிதில் புரியக்கூடியவையாகவும் இருந்தன. கூடியவரை நல்ல தமிழ்ச் சொற்களை மட்டுமே இவர்கள் அமைத்தனர். சாமி. வேலாயுதம் பிள்ளை தமிழ்ப் பொழிலில் வெளியிட்ட கலைச்சொற்கள், இதன் ஒருபகுதியே ஆகும். அவர் சொல்லாக்கக் கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவர் என்பது மனம்கொள்ளத் தக்கது. 1940

ஜூன் 8ஆம் நாள் சீனிவாச சாத்திரியார் என்பவர் தலைமையில் ஒரு கலைச் சொல்லாக்கக் குழு அமைக்கப்பட்டது.4 ஆட்சிச்சொற்களையும் கலைச்சொற்களையும் உருவாக்குவது இக்குழுவின் நோக்கம். ஆனால் இக்குழுவினரில் பலர் வடமொழிச் சார்பாளராக இருந்தனர்.5 இவர்கள் கலைச்சொல்லாக்கம் என்ற பெயரால் வடமொழியாக்கம் செய்தனர். சான்றுக்குச் சில சொற்களைக் காணலாம்.

disinfectant – பூதிநாசினி

electrolysis – வித்யுத் வியோகம்

basic (chem) – க்ஷாரமான

triangle – திரிபுஜை

similar – ஸஜாதீய

இம்மாதிரியான கலைச்சொற்கள் தமிழ்ப் பற்றுள்ளவர்களுக்கு எரிச்சல் ஊட்டியதில் வியப்பில்லை.6

இக்குழுவினர் சிலரையும், பிற சிலரையும் சேர்த்து 1947இல் சென்னை அரசாங்கம் ஒரு கலைச்சொல்லாக்கக் குழு அமைத்தது. இக்குழு வெளியிட்ட கலைச் சொற்கள் சீனிவாச சாத்திரியார் குழு வெளியிட்டவற்றையும் விஞ்சு வனவாக அமைந் தன. இவை வேடிக்கையும் வேதனையும் ஒருங்கே தருவனவாக அமைந்திருந்தன என்று சொல்லத் தோன்றுகிறது. சான்றுக்குச் சில சொற்களைக் காணலாம்.

hydrogen – அப்ஜனகம்

protein  – ஓஜஸ் திரவியம்

spinal chord – கசேரு லதை

berry – பூர்ண புஷ்டம்

undetermined – அநிஷ்கர்ஷித

census – குலஸ்த்ரீ புருஷபால விருத்த ஆயவ்யய பரிமாணம்

rotate – சக்ராக்ருதி

evaporation – பரிசோஷணம்

carpel – கர்ப்ப பத்ரம்

இக்குழுவின் மொழிபெயர்ப்புத் திறனைக் காட்டுவதற்கு மேற்கண்ட எடுத்துக் காட்டுகள் போதுமானவை எனக் கருத லாம். இராஜாஜி காலத்தில் வெளியிடப்பட்ட கலைச்சொற்களில் முப்பது விழுக்காடும், வட மொழிச் சொற்கள் பத்து விழுக்காடும், மணிப்பிரவாளச் சொற்கள் அறுபது விழுக்காடுமாக அமைந்த தொகுதி ஆயிற்று இது. எனவே இக்குழுவின் முயற்சிகள், தமிழறிஞர் குழுக்கள், மாவட்டப் புலவர் கழகங்கள், செனை மாகாணத் தமிழ்ச்சங்கம், பிற தமிழ்ச்சங்கங்கள் அனைத்தின் எதிர்ப்புக்கும் உள்ளாயின. இந்த எதிர்ப்புகளைத் தமிழ்ப் பொழில் அவ்வப்போது வெளியிட்டது. கரந்தைத் தமிழ்ச்சங்கமும் இது குறித்துக் கூட்டங்கள் நடத்தின் தன் எதிர்ப்புகளையும் ஆலோசனைகளையும் வெளியிட்டது.7 இதன் விளைவாக, சீனிவாச சாத்திரியார் குழுவின் கலைச்சொற்களைத் திருத்தியமைக்க இரா.பி. சேதுப்பிள்ளை, இ.மு. சுப்பிர மணிய பிள்ளை, அ. முத்தையா ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.8 இது தான் இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் தமிழ்ப்பொழிலில் மிகுதியாகக் கலைச் சொற்கள் பற்றிய வேண்டுகோள்களும் கட்டுரைகளும் வெளிவந்த காரணம். (இதற்கு விதிவிலக்கு, துணர் 45இல் வெளியான கலைச்சொல்லாக்கம் என்ற கட்டுரை).

கலைச்சொல்லாக்கத்தைக் குறித்துப் பொழிலாசிரியர் கருத்து பின்வருமாறு: “அறிவியல்துறையில் புதிதுபுதிதாகக் கண்டுபிடிக்கப்படுகின்ற பொருள்களுக்கு வேறு வழியின்றித் தொடக்கத்தில் வேற்றுமொழிச் சொற்களைக் கடன்வாங்கினாலும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஏற்ற தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதே தக்கது. இன்றியமையாத பிறமொழிச் சொற்களைத் தேவைப்படும் காலத்திற்குப் பயன்படுத்தலாம்….(அவற்றையும்) கூடியவரையில் தமிழ்மொழியில் தன் வயப்படுத்திய சொற்களாகவே அமைத்துக் கொள்ளவேண்டும்.”9 சுருக்கமாகச் சொன்னால், மொழிபெயர்ப்பையும் சொற்பெயர்ப்பையும் தேவைக் கேற்றவாறு பயன்படுத்தலாம் என்பது தமிழ்ப்பொழிலின் கருத்து. ஆனால் சொற் பெயர்ப்பு, தமிழ் ஒலியமைதிக் கேற்றவாறு அமைதல் வேண்டும். தக்க சொல் கிடைத்தவுடன் அதை நீக்கிவிடவேண்டும் என்பதும் இந்த இதழின் கருத்து எனக்கூறலாம்.

அடிக்குறிப்பு

1. துணர் 15 பக். 361-64, 404-09, துணர் 16 பக். 102-03, 259-63, 323-26, 358, 376-81, துணர் 17 பக். 139-42, 211-16, 358-61, துணர் 18 பக். 29-32, 121-24, 241-43.

2. துணர் 25 பக் 189-93, துணர் 26 பக்.41-46, 209-14, 289-94, 393-97 துணர் 27 பக். 41-46, 97-102, 204-08, 281-86, 337-40, 383-88, துணர் 28 பக். 19-24, 57-60, 61-6497-100, 151-56, 179-83, 207-08, துணர் 29 பக். 120-24.

3. துணர் 45 பக். 3, 4, 67, 68, 99, 100, 130-32, 164, 19, 230, 261, 262, 293, 294, 324-26, 358, 387, 388.

4. சீனிவாச சாத்திரியார் குழுவில் தமிழறிஞர் ஒருவருமே இல்லை எனச் சென்னைத் தமிழறிஞர் கழகம் கருத்துரை வெளியிட்டது. அது உண்மைதான். இக்குழுவில் இருந்தோர் பின்வருமாறு:

வி.எஸ். சீனிவாச சாத்திரியார, தலைவர்

கே. சுவாமிநாதய்யர், ஆங்கிலப் பேராசிரியர், சென்னை

டாக்டர் சி. ஆர். ரெட்டி

ஆர். எம். ஸ்டாத்தம்

எச். சி. ஸ்டோக்

ஏ. டேனியல், குண்டூர்

டி. சூரியநாராயணா

வித்வ ஜி. டி. சோமயாஜி

டி. சி. ஸ்ரீநிவாசய்யங்கார் (மதுரைத் தமிழ்ச் சங்கம்)

என். வெங்கட்ராமய்யர், கள்ளிக்கோட்டை

வி. ராஜகோபாலய்யர், கொள்ளேகால்

டி. ராம பிஷோரி, மங்களூர்

சி. கே. கௌசல்யா, இராணி மேரிக் கல்லூரி

அனந்த பத்மநாப ராவ், பிச்சாண்டார் கோவில்

மொகமது அப்துல் ஹக்

தமிழ்க் கலைச் சொல்லாக்கக் குழுவிற்கு ஒரே ஒரு தமிழறிஞர்கூடக் கிடைக்காமல் போயினார் போலும்!

5. சீனிவாச சாத்திரியார் குழுவைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் சரியாக எடையிட்டது. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், நீ. கந்தசாமிப் பிள்ளை சென்னைக் கல்வித் துறைச் செயலருக்கு ஒரு கடிதம் விடுத்தார். அதில் அவர் கூறியிருந்த சில செய்திகள்:

“8-6-40இல் கலைச்சொல்லாக்கத்திற்கு அமைக்கப்பெற்ற சாத்திரியார் குழு ஒரே போக்குடையது, மிகச் சிறியது, சிறிதும் திறமையற்றது. இச்சாத்திரியார் குழுவிற்குத் தரப்பட்ட ஆய்வுக்கூற்றுகள் (tமீக்ஷீனீs ஷீயீ க்ஷீமீயீமீக்ஷீமீஸீநீமீ), குறுகிய வை, ஈரெட்டானவை, பிழையுடையவை. இக்குழுவின் தாங்குரைகள், ஒருபோக்குடையன, முரண்பாடுடையன, இயன்முறை யற்றன. தகுதியற்றன, குறுகியநோக்கமுடையன, செயல்முறைக் கொவ்வாதன, வீணான வை, பிடிவாதமுடையன.”

6. இது பற்றிச் சென்னைத் தமிழறிஞர் கழக அறிக்கையைத் தமிழ்ப்பொழில் துணர் 22 பக். 220-22இல் காண்க.

7. கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்திய கூட்டங்கள், அவற்றில் சங்கத்தின் தலைவர் ஆ. யா. அருளானந்தசாமி நாடார் ஆற்றிய உரைகள், அவற்றில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோள், தமிழறிஞர் கழகத் தின் வேண்டுகோள் ஆகியவற்றின் விவரங்களைத் தமிழ்ப்பொழில் துணர் 22 பக். 225-28, 229-31, 236-37, 209-12, 167-68, 220-22 ஆகிய பக்கங்களில் காணலாம்.

8. தமிழ்ப்பொழில் துணர் ப. 230. 9. பொழிலாசிரியர், தமிழ்மொழி வளர்ச்சியில் ஒரு கூறு, தமிழ்ப்பொழில், துணர் 45, ப.4.

குறிப்பு: தமிழ்ப் பொழில் 1925 முதல் வெளிவந்த இதழ். நான் அதில் முதல் ஐம்பதாண்டு இதழ்களை என் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன்.


நானும் (என்?) தமிழும்

நானும் (என்?) தமிழும்

(சுயவரலாற்றுப் போக்கில் அமைந்த இந்த நீண்ட கட்டுரை, திரு. கோவை ஞானி அவர்களின் வேண்டுகோளின்படி 2011-இல் எழுதப் பட்டு, தமிழ்நேயம் இதழில் வெளியிடப்பட்டது. அதைச் சற்றும் மாற்றாமல் இங்கு வெளியிட்டிருக்கிறேன். தேவையெனில் இதற்கு ஓர் இரண்டாம், மூன்றாம் பாகம் எழுதிக்கொண்டால் போயிற்று!)

எனக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? யோசித்துப் பார்த்தால் மிகவும் தற்செயலான ஒன்றுதான். தமிழகத்தில் பிறக்காமல், வேறு எந்த மாநிலத்திலாவது, நாட்டிலாவது பிறந்திருந்தால், அல்லது வேறு உயிரினமாகவே பிறந்திருந்தால் எனக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு இருக்கக்கூடும்? குறிப்பிட்ட தம்பதிக்குப் பிறந்த குழந்தை அவர்களுக்குத் தாய், தந்தை என்று மதிப்புக் கொடுப்பதுபோல, குறிப்பிட்ட பிரதேசத்தில் பிறந்ததால் நமது மொழிக்கு மரியாதை தருகிறோம் (அல்லது தராமல் புறக்கணிக்கிறோம்.) ஆனால், பிறந்துவிட்ட பிறகு நம்மீது சமூகத்தாலும் மொழியாலும் திணிக்கப்படும் அத்தனை இயல்புகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறோம், அவற்றை இயல்பு என்றே ஏற்றுக்கொள்கிறோம் என்பது வேறுகதை.
நம் அருகிலேயே, நமக்கு மிக நெருக்கமாக நாம் அறியாத (உப)பண்பாடுகளும் வரலாறுகளும் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றன. இவற்றில் எவை நிஜமானவை, எவை நிலை நிற்பவை? எனக்கு என்மீது என் சூழல் சுமத்திய விஷயங்கள் பற்றி மட்டும்தான் தெரியும். அதைத்தான் இங்கு சுருக்கமாகச் சொல்லமுடியும்.

மொழிபோலவே தற்செயலாக நம்மீது சுமத்தப்பட்டவைதான் ஜாதி, மதம், இனம், பாலியல்பு போன்ற பல விஷயங்களும். அப்படியிருக்க, ஏன் இவற்றிற்காக முனைப்புக் கொண்டு மனிதர்கள் போராடுகிறார்கள் என்று எனக்குப் புரியவே இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால், கோவை நூலகத்தில் ஒரு சிறுகூட்டத்தில், ஞானியும் அருகில் இருந்தார்-அப்போது இப்படிக் குறிப்பிட்டேன். “உலகின் நாகரிகங்கள் பல அழிந்திருக்கின்றன. ஆஸ்டெக், மாயன் நாகரிகம் என்னவாயிற்று? மிகப் பழைய எகிப்து நாகரிகம் என்னவாயிற்று? பாபிலோனிய நாகரிகம் என்ன வாயிற்று? அதுபோலத் தமிழ்நாகரிகமும் ஒரு சமயத்தில் அழிந்து போகத்தான் வேண்டுமென்றால் அதில் வருத்தப்பட என்ன இருக் கிறது?” (இந்தக் கருத்தை அந்தக் கூட்டத்தில் இருந்தவர் ஒருவரும் ரசிக்கவில்லை).
ஒரு மொழி, ஒரு பண்பாடு அழிய வேண்டுமானால், அதற்கான குணாதிசயங்கள் அந்தப் பண்பாட்டில் எச்.ஐ.வி. கிருமிகள் போல எப்படியோ புகுந்து பரவி வளர்ந்து விடுகின்றன. இதைச் சொல்லக் காரணம், தமிழ்ப்பண்பாடும் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது. மீளமுடியாத அளவுக்கு தமிழ்ப்பண்பாடு, மொழி, நாகரிகம் ஆகிய அனைத்தும் பாழ்பட்டு நாசமாகியிருக்கின்றன. பண்பாடு, மொழி மட்டுமா? சுற்றுச்சூழல், அரசியல், கல்வி, தொழில், தினசரி வாழ்க்கை, எல்லாமேதான். இதனைத் தமிழகத்துக்கு மட்டுமே உரிய நிலையாகக் காணாமல், இந்தியா முழுவதும் இப்படித்தான் என்பவர்கள் உண்டு. இல்லை, உலகத்தின் நிலையே இப்படித்தான் என்பார்கள் சிலர். இல்லை, மனிதநிலைமை (Human condition) என்பதே இப்படித்தான் இருக்கி றது என்று சிலர் வேதாந்தம் பேசலாம். எப்படியானாலும், மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலின் ஆட்கள் கதியற்ற நிலையில் கடைசி யாக என்ன செய்வார்கள்? அதைத் தான் நாமும் செய்யப் போகிறோம். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? நாம் தமிழில் இன்று செய்யும் முயற்சிகள் எல்லாம் ‘எஸ்ஓஎஸ்’ செய்திகள் தான். சரி, என் சொந்தக் கதைக்கு வருவோம்.

இந்தியா சுதந்திரம்பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வடஆர்க்காடு மாவட்டம் ஆர்க்காடு என்ற ஊரில் நிலம்நீச்சு, சொத்துபத்து அற்ற ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவன் நான். சொந்த ஊர் செய்யாறு பக்கத்தில் வெங்களத்தூர் அருகில் ஒரு குக்கிராமம். (அந்த ஊரில் பிறந்தவர்தான் வெ(ங்களத்தூர்) சாமிநாத சர்மா என்பதில் எனக்கு ஒரு பெருமை. அதேபோல எங்கள் ஆர்க்காட்டிலிருந்து பத்து கி.மீ. தொலைவிலுள்ள வேலம் என்ற ஊரில்தான் பேராசிரியர் மு. வரதராசனார் பிறந்தார் என்பதிலும் எனக்குப் பெருமை உண்டு. என்னை இளமையில் பாதித்தவர்கள் இவர்கள் இருவரும்.) இவர்களைவிட என்னை பாதித்தது, இன்றும் பாதித்துக்கொண்டிருப்பது, ஆர்க்காட்டின் வழியே ஓடும் பாலாறு.

அதில் ஆந்திராக்காரன் வந்து அணைகட்டப்போகிறான் என் றால் மனம் தாளவில்லை. அப்படித்தான் பாலாறு பல கிலோ மீட்டர் தூரம் ஆந்திராவிற்குள் ஓடுகிறதா என்றால் அதுவும் இல்லை. ஏற்கெனவே இரண்டு பெண்ணையாறுகளில் ஒன்றை- வடபெண்ணையை ஆந்திராவுக்கு தாரைவார்த்து விட்டோம். வடக்கில் இருப்பது இந்த ஒரே ஆறுதான். இதையும் தோல் தொழில் செய்யும் முதலாளிகள் நாசமாக்கிவிட்டார்கள். மணல் கொள்ளை அடிப்பவர்கள் மிச்சமிருப்பதையும் நாசமாக்கி விட்டார் கள். இனி என்ன இருக்கிறது? ஏன் இப்படித் தமிழர்களை அருகிலிருப்பவர்கள் – கன்னடியர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் – எல் லோரும் – ஏமாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்ற பிரச்சினைக்கு இது இட்டுச்செல்கிறது. முடிந்தால் அது பற்றிப் பின்னால்.
பாலாறு உண்மையிலேயே மிகச் சிறந்த ஆறாகத்தான் (என் இளமைப்பருவம் வரை) இருந்தது. ஆர்க்காடு கிச்சடி சம்பா அரிசி சுவைக்குப் பெயர்போன ஒன்று. திருவிளையாடற் புராண ஆசிரியர், மிகச் சரியாகவே “தாயைப் போலப் பாலூட்டும் ஆறு” என்பதால் பாலாறு என்ற பெயர்வந்ததாகக் குறித்திருக்கிறார் என ஞாபகம். பாலாற்றில் ஒருபோதும் வற்றாமல் நீர் ஓடுவதில்லை. ஆனால் நீர் நன்றாகச் சுரக்கும். எங்கள் இளமைப்பருவத்தில் கையினால் சற்றே தோண்டினாலே நன்றாக நீர்வரும். பரிசுத்த மான சுவையான நீர். ஊற்று நீர். குழந்தை விரும்பிவந்தால் சுரக்கும் தாய் முலைபோல, நாங்கள் விரும்பினால் சுரக்கும் தாயல்லவா பாலாறு? (இந்த உவம யைக் கம்பர் தவறாக சரயூ நதிக்குக் கையாண்டுவிட்டார்). ஆனால் இனி எப்போதுமே இப்படி நீர் சுரப்பதை நாங்கள் காணப்போவதில்லை. நாசமாகிவிட்டது. அல்ல, நாசமாக்கி விட்டார்கள் கயவர்கள்.

அசைவ உணவோடு தொடர்பற்ற ஒருசிறு ஜாதியைச் சேர்ந்த குடும்பம். நான் பிறந்த 1949இலேயே தமிழகத்தின் வடக்கு மாவட் டங்கள் மூன்றில் மட்டும் ஊருக்கு ஒரு குடும்பம் வீதம்தான் இந்த ஜாதியினர் இருந்தார்கள். எல்லாம் நகரமயமாகிவிட்ட இக் காலத்தில் பெரும்பான்மையினர் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து விட, அத்தொகையும் அருகிவிட்டது. நான் கல்வி பயின்றவரை, பள்ளி ஆசிரியனாக இருந்தவரை, இது உயர்ஜாதியாகக் கருதப் பட்டது, முன்னேறிய ஜாதியாக இருந்தது. பிறகு கல்லூரிப் பணிக்கு நான் வரும்போது பிற்பட்ட ஜாதியாகிவிட்டது.

எங்கள் குடும்பத்தில் தமிழ்ப்பற்று இயல்பாகவே இருந்தது. அதேபோல் சைவப் பற்றும். என் தாயார் நாலாம் வகுப்புவரை படித்தவர். தந்தையார் எட்டாம் வகுப்பு (அந்தக் காலத்தில் ஈஎஸ்எல்சி என்பார்கள்) படித்தவர். அந்தக் காலத்தில் ஈஎஸ்எல்சி படித்தவர்களே ஆசிரியப் பயிற்சிபெற்று தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியராக வரலாம். அந்த வகையில் ஆசிரியர் ஆனவர். பிறகு ஓவியப்பரீட்சை எழுதி மாவட்டக் கழக (போர்டு) உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக உயர்ந்தார். அந்தக் காலத்தில் கழகப் பள்ளிகளில் மாதா மாதம் ஒழுங்காகச் சம்பளம் தரமாட் டார்கள். என் இளம் பருவத்தில், வருமானத்தைப் பற்றிய ஒரு நிச்சயம் இருந்தது கிடையாது. அதிலும் நான் எட்டாவது படித்தது முதல் கல்லூரிப்படிப்பை முடிக்கும்வரை என் தந்தையார் பெரும் பாலும் நோய்வாய்ப்பட்டே இருந்தார். அதனாலும்தான்.

தாலாட்டுப்பாடும் வழக்கம் இப்போது எந்தக் குடும்பத்திலும் இல்லாமற் போய் விட்டது. எங்கள் குடும்பத்தில் அந்த வழக்கம் இருந்தது. ஆனால் ஒரு வித்தியாசம், என் தாயார் பாரதியார், பாரதிதாசன் பாட்டுக்களைத்தான் தாலாட்டாகப் பாடி எங்களை வளர்த்தார். என் தங்கை தம்பிகளுக்குத் தொட்டிலில் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’, ‘தலைவாரிப்பூச்சூடி உன்னை’ போன்ற பாட்டுகளைப் பாடுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் முருக பக்தை.

என் தந்தையாருக்கு தேவாரம் திருப்புகழ் போன்றவை நல்ல பாடம் என்றாலும், அவ்வளவாக அவருக்குக் கடவுள்பக்தி இருந் ததாகச் சொல்லமுடியாது. கோவிலுக்குச் சென்றுதான் கடவுளை வழிபடவேண்டும் என்பதை வெறுத்தவர். பார்ப்பன ஆதிக்கத்தையும் வெறுத்தவர். இருப்பினும் கடவுள் பக்திக்கும் பார்ப்பனருக்கும் கட்டுப்பட்டு வாழ்க்கை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு- அவர்காலத்தில் இருந்தது.

என் தந்தையார் நல்ல தமிழ்ப்பெயர்களைத்தான் தன் மகன்கள் மகள்களுக்குச் சூட்டினார். எனக்கு அவர் வைத்த பெயர் நிறைமதி. (வைகாசி மாதப் பவுர்ணமி அன்று நான் பிறந்ததால் இந்தப் பெயர்.) அவர் பணிசெய்த பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த என்.எஸ். ராஜகோபாலய்யர் என்பவர், “என்னய்யா, திராவிடக் கட்சியில் சேர்ந்துவிட்டாயா? அப்புறம், நிறைமதி என்றால் பெண்பெயர் மாதிரி இருக்கிறது, பூரணச்சந்திரன் என்று மாற்றிவிடு” என்று சொன்னதைக் கேட்டு என் பெயரை மாற்றி விட்டார். என் அடுத்த தங்கைக்கு அறச்செல்வி என்று பெயர். இன்னொரு தங்கைக்குச் சூட்டியது, மணிமேகலை என்ற பெயர்.

இயல்பாகவே தமிழ்ப்பற்றும் தமிழ் படிப்பதற்கேற்ற சூழலும் எனக்கு வாய்த்திருந்தன. தந்தை ஓவிய ஆசிரியர் ஆனதால் கலைகளில் ஈடுபாடும் இருந்தது. ஆனால் நான் முதலில் படித்ததென்னவோ பிஎஸ்.சி. இயற்பியல்தான். இயற்பியல் படித்ததற்குக் காரணம், முடித்தபிறகு எம்.ஐ.டி.யில் சேர்ந்து விமானப் பொறியியல் கல்வி பயில வேண்டும் என்ற ஆசை. பார்ப்பனனாகப் பிறந்திருந்தால் நிச்சயம் படித்திருப்பேன். அதற்கேற்ற உயர்ந்த மதிப்பெண்ணும் இருந்தது. எங்களுடையதும் ‘முன்னேறிய’ ஜாதிதான். ஆனால் படித்தவர்கள், வழிகாட்டுபவர்கள் கிடையாது. முன்னேறிய ஜாதி என்பதால் உதவிப்பணம் கிடையாது. வீட்டின் நிலையும் சிரமமாக இருந்தது. ஆசிரியனாகி விட்டேன். (அப்போதெல்லாம் தேடி வேலை கொடுத்தார்கள். வியப்பாக இருக்கிறதல்லவா?)

பள்ளியில் படித்தபோது என்னை மிகவும் கவர்ந்தவர் பி.வி. சண்முகம் எனனும் கணித ஆசிரியர். மிக நன்றாகச் சொல்லிக் கொடுப்பவர். பத்தாம் வகுப்பு காம் போசிட் கணிதம் படித்தபோது, தேற்றங்கள் சொல்லித் தந்தார். “சிலவற்றில், நாம் நேரடியாகத் தீர்வுக்கு வரமுடியாது. வழக்கமான வழியில் சென்றால், எடுத்துக் கொண்ட கருதுகோள் தவறாகப் போகும் என்று நிரூபித்து, ஆகவே இதுதான் சரியான வழி எனக் கொள்ளவேண்டும்” என்று ஒரு வழிமுறை (Method). அதற்கு REDUCTIO AD ABSURDUM என்று பெயர் எனக் கற்றுத்தந்தார். இன்றும் பல கருதுகோள்களில் நாம் அப்படித் தான் செய்யவேண்டியுள்ளது. இது சரிவரும் என்று நேரடியாக நிரூபிப்பதற்கு பதிலாக, வேறு எந்த வழியை மேற்கொண்டாலும் இது சரிவராது என்று நிரூபிக்க வேண்டும். வாழ்க்கையில் மிகவும் பயன்பட்ட கருத்து இது.

பிஎஸ்.சி. படித்தபோது என் தந்தையின் பணி காரணமாக, விரிஞ்சிபுரம் என்ற ஊரில் இருந்தோம். (வேலூருக்கு மேற்கில் பத்து கி.மீ. தொலைவிலுள்ள ஊர். திரு விரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் என்ற அருமையான நூலை அவ்வூர் முருகப் பெருமான்மீது இயற்றியிருக்கிறார்கள்). மார்கழி மாதத்தில் கோயிலில் அருமையாகத் திருவெம்பாவைப் பாட்டு ஒலிபெருக்கியில் வைப்பார்கள். யார் பாடியது என்று எனக்குத் தெரியாது. பெண் குரல். (நிச்சயம் பட்டம்மாளோ, எம்.எஸ்.சுப்புலட்சுமியோ, வேறு நானறிந்த கர்நாடக சங்கீதக் கலாமணி எவருமோ கிடையாது). ஆனால் இன்றும் என் காதில் இராகத்தோடு அப்பாடல்கள் ஒலித்துக்கொண்டே யிருக்கின்றன. இப்படிக் காதால் கேட்டே எனக்குத் திருவெம்பாவை மனப்பாடமாகிவிட்டது. அக்காலத்தில் கோயிலில் கச்சேரிகளும் நடக்கும். மேலும் தினசரி மாலை வேளையில் அற்புதமாக நாயனம் வாசிப்பார்கள். பிற் காலத்தில் கர்நாடக இசை கற்றுக்கொள்ள என்னைத் தூண்டியவை நான் கோவிலில் கேட்ட இவைதான்.

விரிஞ்சிபுரத்திற்கு வருவதற்குமுன் ஆர்க்காட்டிற்குத் தெற்கே எட்டு கி.மீ. தொலைவிலுள்ள திமிரி என்ற ஊரில் என் பள்ளிக் கல்வி முழுவதையும் முடித்தேன். அங்கு நெசவு நெய்யும் செங்குந்த முதலியார்கள் அதிகம். அவர்களுக்குத் தமிழ்ப்பற்று மிகுதி. அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் பள்ளியில் தமிழாசிரியர்களாகவும் இருந் தார்கள். ஏறத்தாழ ஏழாண்டுகள் அவ்வூரில் இருந்தோம். அங்கே முக்கியமாகக் குறிப் பிடவேண்டியது கோடை காலங்களைப் பற்றி. ஏப்ரல்-மே மாதங்களில் பகலில் பாரதக் கதை நடக்கும். பகலில் படித்த பாரதக் கதைப்பகுதியை இரவில் அப்படியே தெருக் கூத்தாக நிகழ்த்துவார்கள். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக தெருக் கூத்தினை (தற்போது நடப்பதுபோல் செயற்கையாக, மேடைக்காக அல்ல) பார்த்து மகிழ்ந்தவன் நான். அதனால், பாரதக்கதையும் இராமாயணக் கதையும் புத்தகங்களைப் படிக்காமலே நுணுக்கமாக மனத்தில் பதிந்துவிட்டன.

என் இளமைப் பருவத்தைப் பற்றி முக்கியமாகச் சொல்லவேண்டியது என் தாழ்வு மனப்பான்மை பற்றி. ஊருக்கு ஒரு குடும்பம் கூட இல்லாத ஜாதியில் பிறந்ததால், எந்தத் தெரு விஷயத்துக்கும், ஊர் விஷயத்துக்கும் நாங்கள் போவதில்லை. பொது விஷயங்களில் எங்கள் குரல் ஒலித்தால் எவரும் கேட்பதும் இல்லை, கேலியும் கிண்டலும், பிறருடைய ஆதரவின்மையும், உதாசீனமும்தான் நான் இளமையில் கண்டது. மேலும் பலவீனமான சிறிய உடல் கொண்டவனாக இருந்தேன். விளையாடுவேன், ஆனால் எல்லாவற்றிலும் தோற்றுத்தான் போவேன். அதனால் ஏகப்பட்ட கேலிக்கு ஆளாகியிருக்கிறேன். இதைப் படிப்பில் நேர் செய்துவிட வேண்டும் என்ற காரணத்தினாலேயே நன்றாக கவனம் செலுத்திப் படிக்கலானேன்.

இளமையில் எனக்கு ஏற்பட்ட அவமானங்களை நினைத்து நான் கூனிக் குறுகி வாழ்க்கை நடத்துபவனாக இருந்தேன். இளமையில் தலைநிமிர்ந்து நேராகப் பார்த்து நடந்ததும் கிடையாது. தரையைப் பார்த்தபடிதான் நடை. (வாத்தியாரான பிறகு மாண வர்களுக்கு நன்றாகக் கற்பிப்பதன்மூலம் இந்த மனப்பான்மையை ஓரளவு ஈடுகட்டினேன்.)

ஆனால், இலக்கியக் களங்களிலும் எனக்கு எண்பதுகளின் மத்திவரை அவமானம்தான் நிகழ்ந்தது. குறிப்பாக, இன்று விளிம்பு நிலை மக்களைப் பற்றியும், பெரியாரைப் பற்றியும் மிகவும் அக்கறையோடு எழுதும் ஸ்ரீரங்கத்து ஐயங்காரான ராஜன் குறை, திருச்சி வாசகர் அரங்கத்திலும், திரைப்படச் சங்கத்திலும் என்னை நையாண்டியும் அவமானமும் செய்யாத நாள் கிடையாது.) சாதாரணமாகப் பேசும் போது கூட ‘தமிழ் வாத்தியார்டா’ என்று ஏளனத்தோடே பேசியதைத்தான் எதிர்கொண்டிருக்கிறேன். அந்த அரங்குகளிலும் எனக்கு ஆதரவான குரல்களைத் தேட வக்கற்று பலஹீனமான நிலையில்தான் இருந்தேன். மேலும் Quick wit, Repartee என்று சொல்லப்படும் உடனடி புத்திசாலித்தனம் இல்லாத நேரான, கள்ளமற்ற, வெள்ளையான, மனத்தில் தோன்றும் உணர்ச்சிகளை அப்படியே பிரதிபலிக்கும் ஆளாக இருந்ததனால் ஏறத்தாழ நாற்பது வயதுவரை தாழ்வுணர்ச்சியோடுதான் வாழ்ந்து வந்தேன். பிறகுதான் அதை ஓரளவு தவிர்க்க என்னால் முடிந்தது. நான் அதிகமாக எழுதாமற் போனதற்கு என் தாழ்வு மனப்பான்மை ஒரு முக்கியக் காரணம். (என் தாய் இன்னொரு காரணம்).

1968இல் கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு ஆசிரியப்பயிற்சிப் படிப்பைச் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் முடித்தேன். ஆறாண்டுகள் உயர் நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினேன். வேறு வழியில்லாமல் ஆசிரியர் ஆகவில்லை நான். அப்போதே தமிழ்நாடு பணி ஆணையத்தின் வாயிலாக சப்ரெஜிஸ்திரார் முதலிய சில வேலைகள் எனக்கு எளிதில் கிடைத்தன. சென்னை தோல் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வாளராகப் பணிகிடைத்தது. ஆனால் ஆசிரியர் வேலை குலத் தொழில். கல்லாமலே பாகம் பட்டது.

அச்சமயத்தில் தமிழ் முதுகலை, ஆங்கில முதுகலைப் படிப்புகளைத் தனிப்பட்ட முறையில் படித்து (அக்காலத்தில் அஞ்சல்வழிக் கல்வி, தொலைக்கல்வி முறைகள் வரவில்லை) இரண்டிலும் பல்கலைக்கழக முதல்தகுதி பெற்றேன். ஆகவே எனக்கு வழிகாட்டி என்று சொல்லக் கூடிய கல்லூரிப் பேராசிரியரோ, தமிழ் அறிஞரோ எவரும் இல்லாமற் போய் விட்டார்கள். இது ஒருவகையில் இழப்புதான். காரணம், என்காலத்தில் தமிழ் ஆசிரியப் பணிக்கு வந்த எவரும் “நான் வ.சுப.மாணிக்கனாரின் மாணவன், நான் நான் முத்து சண்முகத்தின் மாணவன், பேராசிரியர் நன்னனிடம் படித்தவன் நான்” என்பதுபோல அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த தமிழ் ஆசிரியர்கள், அறிஞர்களின் பெயரைச் சொல்லிக்கொள்வது வழக்கம், அதனால் பல விஷயங்களில் அவர்களுக்குப் பலவித வாய்ப்புகளும், பதவிகளும், பதவிமேம்பாடுகளும் எளிதில் கிடைப்பதுண்டு. இப்படிப்பட்ட ஒரு புரவலர் நமக்கு இல்லையே என்ற வருத்தமும் எனக்கு நீண்டநாள் இருந்தது.

நான் எழுத ஆரம்பித்தது ஊரிசுக் கல்லூரியில் இளமறிவியல் படிக்கும்போது. ஆனால் என்னவோ, நான் எழுதிய எதையும் அக்காலத்தில் எவரும் பாராட்டியதே யில்லை. நன்றாகத்தான் எழுதியிருக்கிறேன் என்று நினைப்பேன். ஆனால் ஒரே ஒரு நல்ல சொல் கூடக் கிடைக்காது. (உதாரணத்திற்கு மிகப் பின்னால் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். 1983இல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆறுமாதக் குறுகிய காலப் பணித்திட்டம் ஒன்று அப்போதிருந்த துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களின் ஆணையால் எனக்குக் கிடைத்தது. 1900 முதல் 1980 வரை தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு எழுதித்தர வேண்டும். 1983 மார்ச்சில் ஆரம்பித்த நான், காலந் தவறாமல் செப்டம்பரில் எழுதி முடித்து விட்டேன். ஆனால் அதற்கு ஒரு சொல்லும் பாராட்டாகத் துணைவேந்தரிடமிருந்து கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல, அதை அப்போது தாமரையில் முற்போக்குக் கட்டுரைகள் எழுதிவந்த மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரிடம் மதிப்பீட்டுக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பேராசிரியர் அந்த நூலில் மு.வ. பற்றி நான் எழுதியிருந்த பகுதிகள் மட்டுமே சரி, பிற யாவுமே தவறானவை, மாற்றி எழுதவேண்டும் என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பிவிட்டார். அழகியல் திறனாய்வுச் சார்பு அந்நூலில் கூடுதலாக இருந்ததுதான காரணம் என நினைக்கிறேன். மார்க்சியத் திறனாய்வாளர்களின் குறைகளை அதில் சுட்டிக் காட்டி யிருந்தேன். ஆனால் அவர்களைப் பாராட்டியும் இருந்தேன். (இன்று வரை எனக்கு மிகப் பிடித்தமான திறனாய்வாளர் கைலாசபதிதான்). அந்த ஆசிரியர் முன்னுரையைத் தாண்டிப் படித்திருக்கமாட்டார் என்று தோன்றியது. அந்த நூலின் இறுதி வரிகள் இவை:

டி.எஸ். எலியட் கூறுவதுபோல, “ஒரு நூல் இலக்கியத் தரமானதா என்பதை
இலக்கிய அளவுகோல்கள் கொண்டு மதிப்பிட வேண்டும். சிறந்த இலக்கியமா
என்பதை மற்ற அளவுகோல்களைக் கொண்டு மதிப்பிடவேண்டும்”. இங்கு
இலக்கிய அளவுகோல்கள் என்பது அழகியல் பகுப்பாய்வு முறைகளையும், மற்ற
அளவுகோல்கள் என்று குறிப்பது, சமூக, உளவியல் பார்வைகள் போன்ற எல்
லாப் பார்வைகளையும் குறிப்பதாக நாம் ஏற்றுக் கொண்டால் இக்கருத்து
நமக்கு மிகப் பொருத்தமானது.

அமைப்பிய, பின்னமைப்பியப் பார்வைகள் வராத அக்காலத்தில் இது சரியான முடிவாகவே எனக்குப் பட்டது. ஆனால் அப்படியே அந்த நூல் தமிழ்ப் பல்கலைக் கழகக் கிடப்பில் போடப்பட்டது.)

பிறகு-இதை நான் மிக்க நன்றியுடன் குறிப்பிட வேண்டும்-மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் (2008இல், இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து) அது, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறையின் பொறுப்பாளராக இருந்த ஆறு. இராமநாதன் அவர்கள் முயற்சியால் (ஒரு வரிகூட மாற்றப்படாமல்) வெளியிடப்பட்டது. அதில் இன்னொரு வேடிக்கை, அதற்கு முன்னுரை தந்த அப்போதைய (அதாவது 2008இல் இருந்த) துணைவேந்தர் சி. சுப்பிரமணியம் அவர்கள், ஏதோ நான் கஷ்டப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் உழைத்து(!) அந்த நூலை உருவாக்கினேன் என்ற அர்த்தம் தொனிக்குமாறு எழுதியிருந்தார்.

அந்த நூல் எழுதப்பட்ட சமயத்தில் (1983இல்) வெளிவந்திருந்தால், இன்று எனக்கு ஒருவேளை பெருமை, புகழ் எல்லாம் கிடைத் திருக்கக்கூடும். அதுதான் தமிழில் எழுதப்பட்ட முதல் திறனாய்வு வரலாறு. இவற்றில் மண்அள்ளிப் போட்ட அந்த மாநிலக்கல்லூரி மகா பேராசிரியருக்கு-அவர் அப் போது சாகித்திய அகாதெமி முதலிய பல நிறுவனங்களின் தொடர்பில் இருந்தவர்-என் மனமார்ந்த வந்தனங்கள்.

எம்.ஏ. படிப்பு முடித்தபிறகு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பணியில் சேர்ந்தேன். முதலில் மூன்று ஆண்டுகள், அக்காலத்தில் புகுமுக வகுப்பு என்று சொல்லப்பட்ட (இப்போதைய பன்னிரண்டாம்) வகுப்புக்குப் பாடம் எடுக்கும் வேலை தான். அது எனக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. பிறகு அடுத்த நான்கு ஆண்டுகள் பட்டப் படிப்புக்குப் பாடம் எடுக்கும் வேலை. இடையில், புகுமுகவகுப்பைக் கல்லூரி யிலிருந்து நீக்கி, உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டதால், பல தமிழாசிரியர்களுக்கு வேலைபோயிற்று. நானும் அநேகமாக நீக்கப்படலாம் என்ற பயத்தில் இருந்தேன். ஆனால் என்னைத் தற்காலிகமாகத் தஞ்சாவூரில் கரந்தைப் புலவர் கல்லூரியில் பணி யாற்றச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். பிறகு தமிழ் முதுகலை வகுப்பு தொடங்கிய பிறகு தாய்க் கல்லூரிக்கே திரும்பிவந்தேன்.

கல்லூரியில் சேர்ந்தபிறகுதான் மார்க்சிய நோக்கு சற்றே பிடிபடலாயிற்று. நான் பொதுவாக வாழ்ந்த இடங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் வாழுமிடங்கள்தான். என்னைச் சுற்றிப் பணி செய்தவர்களைக் கூர்மையாக நோக்கிய காலம் அது. நடைபாதை யில் கடை வைத்தவர்கள், காய்கறி வண்டி தள்ளுபவர்கள், சாக்கடையையும் மலத் தையும் தள்ளியோ அள்ளியோ செல்பவர்கள், கூலிகள், தொழிலாளிகள் இப்படி. ஆஹா, எத்தனை பேர் முதுகின்மேல் ஏறிச் சவாரிசெய்து கொண்டிருக்கிறோம் நாம், எத்தனை பேர் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற விஷயம் யாரும் சொல்லாமலே மனத்தில் உறைத்தது. இதற்குப் பிறகுதான் மார்க்சிய நூல்களை-என்சிபிஎச் நூல்கள்தான் எளிதாகக் கிடைத்தன-படிக்கத்தொடங்கினேன், அல்லது படிக்காமல் விட்டேன்.

1981 என ஞாபகம். மதுரையில் எம்.ஜி.ஆர். உலகத்தமிழ் மாநாடு நடத்தினார். அதை வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றேன். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டம், ஊர்வலம் முதலியவற்றில் தற்செயலாகக் கலந்துகொண்டேன். அப்போதுதான் முதன்முதலாக க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, வானம்பாடிக் கவிஞர் அக்னிபுத்திரன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் போன்ற பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கருத்தரங்கில் எம்.ஜி.ஆரைப் பற்றியே ஒரு கட்டுரை படிக்க சிவத்தம்பி கொண்டுவந்திருந்தார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதற்கு முன், 1968இலேயே சென்னைக்குச் சென்று அண்ணா நடத்திய உலகத்தமிழ் மாநாட்டையும் வேடிக்கை பார்த்துவந்தேன். அப்போது எனக்கு எந்தத் தமிழறிஞரும் தெரியாது. ஆர்க்காட்டில், எங்கள் கிராமத் திருவிழாவைப்போல, மிகப் பெரிய ஒரு சென்னைத் திருவிழாவாகவே அது எனக்குக் காட்சி தந்தது.

கல்லூரியில் பணியாற்றத் தொடங்கியபிறகு ஏறத்தாழ 1980 முதலாகவே கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருந்தேன். கர்நாடக இசையும் கற்றுவந்தேன். பிஎச்இல் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு நண்பர்-மிக நல்லவர்தான், ஆனால் சாதிக்கே உரிய பண்புகள் எப்போதும் மறைவதில்லைதானே-திருச்சி நாடக சங்கத்தின் இசையமைப்பாளர் அவர்தான்-அவர் தனக்குத்தான் இசைதெரியும் என்றவாறு செய்த ‘டார்ச்சர்’ தாங்காமல்தான் இசை கற்க நேர்ந்தது. ஆனால் இன்றுவரை, கர்நாடக இசையைவிட எனக்கு மேற்கத்திய இசையே மிகவும் பிடித்தமான விஷயம். பீதோவன், பாஹ், மோசார்ட், சைகாவ்ஸ்கி, விவால்டி என்று மேற்கத்திய செவ்விய இசைக்காரர்கள் யாவருமே எனக்குப் பிடித்தவர்கள். அடுத்தநிலையில் பிடித்தது இந்துஸ்தானி இசை.

ஒருநிலையில் கர்நாடக இசை தேங்கிவிட்டது. இன்று அதில் ஜீவனே இல்லை. வெறும் தொழில்நுணுக்கச் சமாச்சாரங்கள்தான் இருக்கின்றன. அதேபோல்தான் நாட் டியமும். இதிலும் இருப்பது வித்தை சமாச்சாரங்களே. பரத நாட்டியத்தைவிட பிரபு தேவாவின் நடனமே மேல் என்பது என் தனிப்பட்ட கருத்து. காரணம், இக்கலைகள் இரண்டுமே வெகுஜன மக்களுடைய தொடர்பற்று ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கே உரிமை என்று கொண்டாடப்படும் நிலைதான்.

இந்துஸ்தானியில் இந்த நிலை இல்லை. கர்நா டக இசை கற்க ஒரு முஸ்லிம் வந்தால் “இசை பற்றி உனக்கு என்ன தெரியும்” என்று ஏளனமாக இங்கே கேட்கப்படுகிறது. ஆனால் இந்துஸ்தானியின் மகாபண்டிதர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்கள்தான்.

அது போகட்டும், இன்றுவரை எங்கள் கல்லூரியிலிருந்தும்-ஏன், நான் பணி செய்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்துகூட எவரும் என் கட்டுரைகளைப் படித்தது இல்லை என்பது எனக்குப் பெருமை தரக்கூடியது அல்லவா? (அதனால் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதற்கும் என்னைப் பயன்படுத்தியதில்லை).

நான் கட்டுரையாளனாக என் எழுத்து வாழ்க்கையைத் தொடங்க நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உதவியாக இருந்தது. 1966முதலே நாட்குறிப்பு எழுதும் வழக்கம் எனக்கு இருந்தது. நாட்குறிப்பு என்றால், தினசரிக் கடைக்கணக்கோ சலவைக் கணக்கோ எழுதும் விவகாரம் அல்ல. ஒரு நானு£று பக்க நோட்டுப்புத்தகம் வாங்கிக் கொள்வேன். போதாவிட்டால் இன்னொன்று. அன்றன்றைய நாளிட்டு என் மனத்தில் அன்று நிகழ்ந்து தங்கியிருப்பவை, மனத்தை பாதித்தவை எல்லாவற்றையும் எழுதும் வழக்கம் இருந்தது. ஆனால் இது பலசமயங்களில் வினையாகவும் இருந்தது. ஏனென்றால் என் வீட்டில் அப்பா என் பொருள்களைத் தொடமாட்டார். அம்மா தொடுவதோடு மட்டுமல்ல, அவற்றை அடுக்கிவைப்பதோடு மட்டுமல்ல, என் நாட் குறிப்பு உட்பட எல்லாவற்றையும் படித்துவிடுவார். மிகவும் Puritan மனப்பான்மை உள்ளவராகையால் பலசமயங்களில் அவருக்கும் எனக்கும் மனத்தாங்கல் முதல் பெரிய சண்டைகள் வரை நடக்கும். பல நாட்கள் பேசாமலும் இருந்திருக்கிறேன். அவர் ஏற்படுத்திய Inhibitions நான் கதைகள் எழுத முனையாமைக்கு இன்னொரு காரணம். நான் மு.வ. போலவே அறக்கருத்துகளை வைத்துத்தான் கதைகள் எழுதவேண்டும் என்றால் எப்படி எழுத மனம் போகும்?

நாட்குறிப்பைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். நாட்குறிப்பு எழுதத்தொடங்கிய நாள்தொட்டு என்வயதை நாள்கணக்கில் குறிக்கும் வழக்கம் இருந்தது. அதாவது இன்று என் 6105 ஆம் நாள், 7232ஆம் நாள் என்பது போல. வாழ்க்கையை ஆண்டுகளாகப் பார்க்காமல், நாள்களாகப் பார்க்கும் வழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அதனால் இந்த 63ஆம் வயதிலும், “இனி ஒரு வேளை எனக்கு வாழ்வதற்கு ஒரு 4000 நாட்கள் கிடைக்குமானால், 80 நாளுக்கு ஒரு புத்தகம் என்ற வீதத்தில் எழுதினாலும் இனிமேல் ஒரு ஐம்பது நூல்களாவது எழுதமுடியுமா என்று பார்க்கலாம்”-என்றுதான் சிந்தனை செல்கிறது.
“முன்பு சொன்னீரே ஐயா, தமிழ் நாகரிகமே அழியப்போகிறது என்றால் எதற்காக எழுதினாய்? எழுதுகிறாய்?” என்று நீங்கள் கேட்கலாம், உயிரோடு இருக்கும் வரை எதையாவது செய்தாக வேண்டும் இல்லையா? எனக்கு வேறு என்ன தொழில் தெரியும்?
மேற்கண்ட நாள் கணக்குச் சிந்தனையின் கிளைத் தேற்றங்களாக என் வேறு நான்கு சிந்தனைகளைக் குறிப்பிட வேண்டும்.

தன்முனைப்பு-அகம்பாவம், ஆணவம் என்ற நோய் என்னை ஒருபோதும் ஆட் கொள்ளக்கூடாது என்பது முதல் சிந்தனை. சிறுவயதிலிருந்தே யாரையும் ஏளனப் படுத்தியோ, தாழ்வுபடுத்தியோ நான் பேசியது இல்லை. எவரையும் ஜாதி அடிப்படை யில்கூட இழிவாக நினைத்ததும் இல்லை. இதற்கு வள்ளலாரின் கொள்கைகளை ஊன்றிப் படித்தது காரணமாக இருக்கலாம்.

இரண்டாவது, நாம் இருக்கப்போவது சிலநாள்-வாழ்க்கை 80 வயது என்று வைத்துக் கொண்டால் கூட நினைவறிந்து வாழ்வது ஒரு 25000 நாட்கள் இருக்குமா? இந்தச் சின்ன வாழ்க்கைக்குள் எதற்குத் தற்பெருமை, அகங்காரம், திமிர், ஆணவம், மதர்ப்பு எல்லாம்? வாடகைக்கு ஒரு வீட்டில் போய் 1000 நாள் 2000 நாள் என்று இருப்பதைப்போல, நமக்கு இந்த உலக வாழ்க்கைக்கு என ஒரு இருபத்தைந்தாயிரம் நாள் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதானே? அதனால் உலகில் எதற்காக இத்தனை அரசியல் சண்டைகள், ஜாதிச் சண்டைகள், அந்தஸ்துச் சண்டைகள், மதச் சண்டைகள்-எனக்குப் புரியவில்லை. (இவற்றின் பின்னணிகள் தெரியாமல் இக் கருத்தைச் சொல்லவில்லை). அதைவிட நம் சிறுபத்திரிகைகளில் எழுத்தாளர்கள் போட்டுக் கொள்ளும் சண்டையைப் பார்த்து வெறுத்தே போய்விட்டது. நமது மாணவர்களுக்கு நிலையாமை பேசும் இலக்கியங்களை நன்கு கற்பிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

நாட்கணக்கு பற்றிப் பேசும்போது, அதனுடன் தொடர்புடையதுதானே-சாவு பற்றிய நினைவும் வருகிறது. சம்பத் எழுதிய இடைவெளி என்னும் நாவலில் மரணத் துடன் அவர் உரையாடுகிறார், அந்த நாவல் எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. சாவைப் பற்றி உரையாட என்ன இருக்கிறது? பிறப்பு போலவே மிகத் தற்செயலான விஷயம் சாவு. பிறக்கும்போது யாருடன் சம்வாதம் செய்து பிறந்தோம்? எந்த நொடியில் வேண்டுமானாலும் சாவு நேரலாம். சாவில் எனக்கு பயமில்லை. எனக்கு இழக்கவோ கொண்டுசெல்லவோ எதுவுமில்லை. எப்போதும் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக வாழ்பவன் நான். சிரித்துக்கொண்டே இறந்தால் போயிற்று.

ஒருவேளை சாவுக்கு பயப்படுபவர்கள் அந்த நேரத்தில் ஏற்படும் உடல்வாதை, நோவு இவற்றிற்காக பயப்படக்கூடும். சிலர் பிறருக்குத் தொல்லைதர நேர்ந்துவிடுமோ என்பதற்காக பயப்படலாம். ஏறத்தாழ இந்த வாதைகளையெல்லாம் நான் சில விபத் துகளிலேயே அனுபவித்துவிட்டேன். சிலர் ஒருவேளை எதிர்பாராத, முன்பின் அறியாத ஒரு இடத்துக்குச் செல்கிறோம் என்று பயப்படலாம். சிலர் சொர்க்கம்-நரகம் இருக்கின்றன என்று நம்பியும் பயப்படலாம். மறுபிறப்பில் நம்பிக்கை வைத்தவர்கள், ஒருவேளை இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு தண்டனை வந்து சேருமோ என்று பயப்படக்கூடும்.

சாவு என்பது என்ன? என்னைப் பொறுத்தவரை, உடலிலுள்ள முக்கியமான செல்கள், “எங்களுக்குச் சோர்வு ஏற்பட்டுவிட்டது, இனிமேல் நாங்கள் வேலை செய்ய முடியாது” என்று மறுத்து, தங்கள் வேலையை நிறுத்துவதுதான் சாவு. நாம் வேலை செய்து களைத்துப்போனால் ஓய்வெடுத்துக் கொள்ளவில்லையா? உடலின் செல்கள் அனைத்தும் ஓய்வுகொண்டால் நாம் மீளாத நித்திரைக்குப் போகிறோம். உறங்குவது போலும் சாக்காடு என்று வள்ளுவர் சொன்னது சரி. ஆனால் மீண்டும் உறங்கி விழிப்பதோ மறுபிறப்போ கிடையாது. வள்ளுவர் மட்டும் மறுபிறப்பு உண்டு என அறிந்தா எழுதினார்?

சாவுடன் தொடர்புடைய இன்னொரு விஷயம் நீக்குதல் அல்லது நீங்குதல் பற்றியது. திருவள்ளுவர் அழகாகவே குறிப்பிட்டிருக்கிறார்-யாதனின் யாதனின் நீங்கி யான் நோதல் அதனின் அதனின் இலன் என்று. மிகச் சாதாரணமாக, பஸ்ஸில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும்-ஒரு நான்கு மணிநேரம் கழித்து பஸ்ஸை எங்கேயாவது நிறுத்தினால் பஸ்ஸிலிருந்தே அவிழ்த்தவாறே ஓடுவார்கள். எதற்கு? கழிப்பதற்கு. மலம் சிறுநீர் போன்றவற்றைக் கழித்தபிறகு ஏற்படும் ஆசு வாசமும், நிம்மதியும், மகிழ்ச்சியும் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சாதாரண இந்த மலங்களே இப்படியென்றால்-நம் மனத்தைக் கவ்வியிருக்கும் ஆசாபாசங்களையும் அத்தனை மலங்களையும் ஒவ்வொன்றாகக் கழித்தால் எவ்வளவு ஆசுவாசமும் நிம்மதியும் உண்டாகும்? ஆனால் கழிக்கத்தான் ஒருவருக்கும் மனசு வரமாட்டேன் என்கிறது. இப்படி நான் நினைப்பது பற்றிச் சிலர் சைவசித்தாந்தம் போலிருக்கிறதே என்று நினைக்கலாம். சிலர் ஆசீவகவாதி என்று கருதலாம். பெண்ணியவாதிகள் என்னைத் திட்டக் கூடும்-இவையெல்லாம் ஆண்மரபுச் சிந்தனைகள் என்று.

ஒருவேளை சாமியார் வேடம் போட்டுக்கொண்டு இந்தக் கருத்தையே சில மேற்கோள்களோடு (முக்கியமாக சமஸ்கிருத மேற்கோள்களாக இருக்கவேண்டும்) பெரிய பணக்காரர்களுக்குச் சொன்னால், அவர்கள் கன்னத்தில் போட்டுக்கொண்டு இலட்சக் கணக்காகப் பணமும் தரக்கூடும். இப்படித்தானே ஏராளமான சாமியார்கள் இன்று வாழ்கிறார்கள்? ஆனால் அதனால் அந்த முதலாளிகளின் புத்தி மாறாது, அவர்களிடம் வேலைசெய்யும் தொழிலாளர் நிலையும் மாறாது, அவர்களுடைய சுரண்டலும் மாறாது. ஏன் இப்படி?

முதலாளிகள் என்பவர்கள் தனி மனிதர்கள் அல்ல. முதலாளித்துவம் என்பது ஒருவகைச் சமூக அமைப்பு. அந்த அமைப்பை மாற்றாதவரை சமஅறச் சமுதாயத்தை ஏற்படுத்தமுடியாது. நக்சல்பாரி இயக்கம் தோன்றி, அதைப்பற்றிப் (பின்னர்) படித்த போதும் இதைத்தான் நினைத்தேன். (எங்கள் கல்லூரியில்-என்னிடம் இளநிலை வகுப்பில் படித்து, என்னுடன் நிறைய விவாதித்து, பாதியில் நக்சல்போராளியாகப் ‘போய்’விட்ட மாணவர் ஒருவரின் நினைவு இங்கே வருகிறது. ஏறத்தாழ பத்தாண்டுகள் கழித்து, அவர் பெயரை இறந்தவர்கள் பட்டியலில் பார்த்தேன்).

தனிமனிதர்களை ஒழிப்பதனால் மனிதவாழ்நிலையோ அமைப்போ மேம்படாது. அமைப்பை மாற்ற வேண்டும். ஒரு அதிகாரியைக் கொன்றால் இன்னொரு அதிகாரி வருவான். ஒரு தொழிலதிபரைக் கொன்றால் இன்னொரு அதிபர் வருவான். ஓர் அரசியல்வாதியைக் கொன்றால் அதேபோல இன்னொருவன். இப்படிப்பட்டவர்கள் தோன்ற முடியாத ஓர் அமைப்பு தேவை.

இதைப்பற்றி ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோது, ஒருவர் சமதர்மச் சமுதாயம் என்பது இயலாதது என்றார். ஏன் என்று கேட்டேன். எல்லோருமே சுயநலத்தைத் தான் முதலில் கருதுகின்றார்கள். தனக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்று நம் பழ மொழியே சொல்கிறது. பெரிய பெரிய முதலாளிகள் போகட்டும், சமதர்மத்தை, சோசலிசத்தைப் பிரச்சாரம் செய்யும் நமது பொதுவுடைமைத் தலைவர்களே தனியுடைமையை ஆதரிக்கவில்லையா? சொத்து சேர்த்துக் கொள்ளவில்லையா? பணத்தை மதிக்கவில்லையா? பிராமணனாக வீட்டில் பூணு£ல் போட்டுக்கொண்டு சடங்குகளில் கலந்துகொள்ளவில்லையா? பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தங்கள் மாநிலங்களில் இடம் அளிக்கவில்லையா என்று கேட்டார். பதில்சொல்லத் தெரியவில்லை.

ஆனால் சொத்துசேர்க்கும் ஆசை-இது மட்டும்தான் மனிதனிடம் இருக்கிறதா? கிடைத்ததைப் பகிர்ந்துண்ணும் மனப்பாங்கு மனிதனிடம் இல்லையா? சுதந்திரத்திற்கான ஆவல் இல்லையா? அன்பு இல்லையா? பரிவு இல்லையா? கிடைத்ததைப் பகிர்ந்துண்ணும் மனப்பாங்கு என்று சொன்னால் தவறான இடத்துக்கு-மகாத்மா காந் தியின் தர்மகர்த்தாக் கொள்கைக்கு கொண்டுபோய் விட்டுவிடக் கூடும். அப்படியானால் பொதுவுடைமைக்கு அணுக்கமான மனித உள்இயல்பு, அல்லது ஆசை எது? இதைக் கண்டறிவதற்காகவேனும் நமது மார்க்சியர்கள் உளவியலை மிகநன்றாகப் படித்திருக்க வேண்டும்.

ஆங்கில இலக்கியம் படித்தவன் என்ற முறையில், குறிப்பாக அமெரிக்க இலக்கியமும் படித்தவன் என்ற முறையில், புதுத்திறனாய்வு என்னை மிகவும் பாதித்தது. அமைப்பியம் படித்தபிறகுதான் ரஷ்ய அழகியல் திறனாய்வு பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலும் என் திறனாய்வுகளில் புதுத் திறனாய்வுக் கொள்கைகளையும் முறைகளையும்தான் பின்பற்றினேன். அநேகமாக மார்க்சியவகைத் திறனாய்வை நான் பயன்படுத்தவே இல்லை. காரணம், இயல்பாகவே இலக்கிய வடிவத்தின்மீதுதான் என் கவனம் சென்றது.
இரண்டாவது, மார்க்சியத் திறனாய்விற்கு ஆழ்ந்த வரலாற்றறிவு வேண்டும். அது எனக்குப் போதாது. இதற்காக நான் வருத்தப்படவில்லை. பெரும்பாலும் மார்க்சியத் திறனாய்வு இலக்கிய விஷயத்தை (உள்ளடக்கத்தை) மட்டுமே ஆராய்கின்ற ஒருபோக்குத் திறனாய்வாகத்தான் இருந்துள்ளது.

நாம் என்ன குறை சொன்னாலும், தரமதிப்பீடு தவிர்க்கமுடியாதது. அழகியல் அடிப்படையில், இன்றிருக்கும் நவீன தமிழ் இலக்கியம் (ஏன், பழைய தமிழ் இலக்கியங்களையும்தான்) முழுவதையும் உயர்ந்த இலக்கியம்-தாழ்ந்த இலக்கியம் அல்லது இலக்கியம் அல்லாதது என்று இரண்டே பிரிவுகளில் அடக்கமுடியாது. உயர் இலக்கியம், நடுத்தர இலக்கியம், தாழ்ந்த இலக்கியம், இலக்கியமல்லாதவை என நான்கு பிரிவுகளேனும் வேண்டும். இதற்கு மார்க்சிய அளவுகோல்கள் எதுவும் இல்லை. இவற்றை அழகியல் அடிப்படையில்தான் தீர்மானிக்கமுடியும் என்று வெங்கட் சாமிநாதன் போன்ற பழைய விமரிசகர்கள் நம்புகின்றனர். ஆனால், அமைப்பியம்-பின்ன மைப்பியம் இவற்றின் சரியான கூறுகளைப் பயன்படுத்தினால், உருவம்-உள்ளடக்கம் என்றோ, அழகியல்-கருத்தியல் என்றோ பிரிக்காமலே இலக்கிய விமரிசனத்தில் ஈடுபட முடியும் என்பது என் கருத்து.

இதுபோக, ரேமண்ட் வில்லியம்ஸ் உயர்ந்த இலக்கியம்-வெகுஜன இலக்கியம் என்று பகுத்துநோக்கக்கூடாது என்று வேறு சொல்கிறார். இது எனக்கு உடன்பாடாகத் தெரிந்தாலும் நமது சூழலில் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை.

இலக்கியம் உட்பட்ட மேற்கட்டுமானச் செயற்பாடுகள், நுகர்வோரைச் சமூக மயப்படுத்தி, அடித்தளத்தை, அதன்மூலம் சமூக அமைப்பை மறு உற்பத்தி செய்கின்றன என்று மரபுவழி மார்க்சியம் கூறுகிறது. இந்த நோக்கில் பல கேள்விகள் எழுகின்றன. சமூகத்தில், வாசிக்கும்/நுகரும் மனிதன் மாற்றத்திற்கென செய்யக்கூடிய பணியே ஏதும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. மேலும், இலக்கியத்தை மேற்கட்டுமானமாகக் காண்பதில் எனக்கு உடன்பாடில்லை. லக்கான் போன்ற திறனாய்வாளர்கள், மனிதன் சமூகத்தில் பங்குபெறுவதே மொழியின் வாயிலாகத்தான் என்று கூறும் போது மொழியும், அதன்மீது உருப்பெறும் இலக்கியமும் அடிக்கட்டுமானமாகி விடுகின்றன. அவற்றினால்தான் பிற துறைகள் அனைத்துமே-பொருளாதாரம் உட்பட உருப்பெறுகின்றன என்றாகிவிடுகிறது.

இலக்கியத்தை மேற்கட்டுமானமாக ஏற்கமுடியாததால்தான், எனக்கு கட்சி சார்ந்த மார்க்சியங்களோ, வானமாமலை, கேசவன் போன்றோரின் இறுக்கமான மார்க்சியங்களோ பிடிக்கவில்லை. அதனாலேயே ஞானியும், எஸ்.என். நாகராசனும் எனக்கு மிகவும் நெருக்கமானார்கள். அவர்கள்தான் மொழி, பண்பாடு போன்ற அனைத்தையும் மார்க்சியத்தில் வைத்துப் பேசினார்கள்.
நம்நாட்டில் மொழி பற்றி பொதுவாக மூன்று கருத்துநிலைகள் நிலவுகின்றன.
நமக்குப் பழக்கமான, சாதாரணமாக இன்றளவும் படிக்கும் மாணவர்கள்மீது திணிக் கப்படுகின்ற (படித்தவர்களும் கொண்டிருக்கின்ற) கருத்தோட்டம் என்னவென்றால், மொழி வெறும் கருவி மட்டுமே, ஆகவே வாழ்க்கைக்குப் (பொருளீட்டப்) பயன்படுகின்ற எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம், தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியமில்லை என்பதே. இந்தக் கருத்தைத்தான் பெரியாரும் கொண்டிருந்தார். இன்று தமிழ்நாடு முழுவதும் ஆங்கிலம் கற்கும் மாநிலமாக மாறிப்போனது இதனால்தான்.

இரண்டாவது கருத்துநிலைப்படி, மொழி, கலாச்சாரத்தின் ஒரு பகுதி, ஆகவே மொழி முக்கியமானது. தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றவேண்டுமானால், தமிழைப் படிக்க வேண்டும். எனவே தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான். இது திராவிட இயக்கப் பார்வை என்று சொல்லலாம். பாவாணர் முதல் பெருஞ்சித்திரனார் வரை இப்படிப் பட்ட பார்வையையே வைத்திருந்தனர். எனவே மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் மொழி அழிந்துவிடும் என்ற பயமும் இவர்களுக்கு இருந்தது. எனவே மொழியைக் “காப்பாற்றவேண்டும்” என்ற காவல்காரன் குரலை இவர்களிடம் மிகுதியாகக் கேட்கலாம். கி.ஆ.பெ. விசுவநாதம் முதலியோர் மொழிக் காவலர் களாகக் கருதப்பட்டது இப்படித்தான்.

மொழியை யாரும் அழித்துவிடவும் முடியாது, உருவாக்கிவிடவும் முடியாது. நாம்தான் மொழியின் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்படுகிறோம். மொழி வேறு வர லாறு வேறல்ல. தமிழக வரலாற்றைப் பார்த்தாலே இது புரியும். மேற்கூறிய திராவிடக் கருத்தியலைக் கொண்டவர்கள் மொழி அழிந்துவிடும் என்று நினைத்ததால் மொழியை ஆக்கவும் முடியும்-குறிப்பாகக் கலைச்சொற்களை ஆக்கினால் மொழி வாழ்ந்துவிடும் என்று நினைத்தனர். அதனால் தூய தமிழ்ச் சொற்களை ஆக்கிக்கொண்டே இருந்தனர். ஆனால் நாம் ஆங்கிலத்திலிருந்தோ பிறமொழியிலிருந்தோ ஒரு சொல்லை ஆக்குவதற்குள் ஆயிரம் சொற்கள் அறிவுத்துறைகளில் புகுந்துவிடுகின்றன. எனவே இதுவரை செய்யப்பட்டுவந்த தமிழ்ச் சொல்லாக்க முறைகள் பயனற்றவை. புதியதொரு முறையை நாம் இனி கண்டுபிடிக்கவேண்டும்.

மூன்றாவது, மொழிதான் எல்லாவற்றிற்கும் ஆதாரமானது என்ற கருத்து நிலை. மொழியின் வாயிலாகவே மனிதன் சமூகத்திற்குள், பண்பாட்டிற்குள் புகுகிறான். மொழி வாயிலாகவே சிந்தனை செய்ய இயலும். ஒரு மொழியின் பலங்களும் பலவீனங்களும் எல்லாமே ஒருவனின் சிந்தனையை பாதிக்கின்றன. அதனால்தான் ஒரு தமிழனின் சிந்தனை வேறாகவும் இந்திக்காரனின் சிந்தனை வேறாகவும் இருக் கின்றன. மார்க்சியர்கள் கருதுவது போல இச்சிந்தனை வேறுபாட்டிற்கு வரலாறு, இடச்சூழல், பொருளாதாரம் போன்றவை மட்டுமே காரணமல்ல. மொழி ஓர் இயங் கியல் கருவி. சமூகத்தின் ஓர் அங்கமான குழந்தைக்குச் சிந்தனை ஏற்படத் தான் காரணமாக இருப்பது போலவே, சமூகத்தின் பயன்பாட்டினாலும் அது தீர்மானிக்கப்படுகிறது.

நாம் யாவரும் மொழியின் பிரவாகத்தில் அடித்துச்செல்லப்படும் துரும்புகள் தான். எனவே யாரும் தனிமனிதனாக நின்று மொழியை ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. இன்னும் கேட்டால் மொழிக்குத் தொண்டு செய்வதுகூட எவராலும் முடியாது. தமிழுக்குத் தொண்டு செய்கிறேன் என்று சொல்லிக்கொள்வது என்னைப் பொறுத்தவரை கேலிக்கூத்தானது. ஆற்றில் அடித்துச்செல்லப்படும் தவளை நான் ஆற்றை மாற்றிவிட்டேன், ஆற்றுக்குத் தொண்டுசெய்தேன் என்பதுபோலத்தான் இதுவும். எனவே “என் தமிழ்” என்று சொல்லிக் கொள்ள எனக்குத் தயக்கமாக இருக் கிறது.
ஆற்றின் பிரவாகத்தில் சந்தனமும் சண்பகமும்கூடக் கலக்கின்றன, மலமும் ஆலைக் கழிவுகளும்கூட கலக்கத்தான் செய்கின்றன. இதுபோலத்தான் மொழிப்பிரவாகத்திலும் என்னென்னவோ கலக்கின்றன. ஒரு சமயத்தில் மலமும் சந்தனமும் ஒன்றாகச் சேர்ந்தே வண்டலாகலாம். எதற்கு என்ன பணி, எது தொண்டு என்பதைச் “சூழல்” -அதாவது “வரல்-ஆறு” (இங்கே ஆற்றின் பயோடைவர்சிடி)தான் தீர்மானிக்க வேண்டும்.

இதுதான் மொழி பற்றிய எனது நிலைப்பாடு.

இலக்கியம் பற்றிய எனது நிலைப்பாடும் இதுதான்.

மொழி எப்படி ஒரு கருவி என்று சிலர் நினைக்கிறார்களோ, அதுபோலவே மனித வாழ்க்கைக்கு இலக்கியமும் ஒரு கருவி என்று சிலர் நினைக்கிறார்கள். இவர்கள் தான் இலக்கியத்தைப் பிரச்சாரமாக்குகிறவர்கள். (பழங்கால இந்திய இலக்கியக்கொள் கையும் இப்படித்தான் சொல்கிறது. அறம், பொருள், இன்பம், வீடு அடைவதுதான் நூற்பயன்.) அந்தக்கால நாலடியார் படைத்தவராயினும், இந்தக்காலத்தில் வறட்டு நோக்கில் மார்க்சிய நாவல் படைப்பவராயினும் இந்த அடிப்படைக் கொள்கை உடையவர்கள்தான்.

இரண்டாவது கருத்துநிலைப்படி, மொழி என்பது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. அது போலவே இலக்கியம் என்பது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று கருதுபவர்கள். மொழி என்பது சுத்த சுயம்புவானது, சொற்களை தனித்தமிழில் உருவாக்கிவிட்டால் மொழி வளர்ந்துவிடும் என்று நினைப்பவர்களைப் போலவே, இலக்கியம் சுத்த சுயம்பு வானது, அது ஒரு தரிசனம், அதை உன்னதமாக வளர்த்துவிட்டால் உலகமே மாறிப்போய்விடும் என்று கருதுகிறார்கள். சிறுசிறு கொள்கை வேறுபாடுகள் இருந் தாலும், க.நா.சு. முதல் சுந்தரராமசாமி, தற்போது எழுதும் ஜெயமோகன்வரை பெரும் பாலான எழுத்தாளர்கள் இந்தக் கொள்கையில் நம்பிக்கையுடையவர்களே.

மூன்றாவது கருத்து, மொழிதான் சிந்தனையைத் தீர்மானிக்கும் சக்தி, வாழ்க்கைக்கு ஆதாரமான சக்தி, சமூகத்திற்குள் மனிதன் புக ஆதாரமான சக்தி மொழி என்பது போல, இலக்கியம்தான் வரலாற்றுக்குள் நம்மைப் புகவைக்கும் சக்தி, வாழ்க்கைக்கு ஆதாரமான சக்தி. கஞ்சிக்கு அல்லல்படும் சாதாரணமனிதனுக்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம், அவன் வாழ்க்கைக்கு ஆதாரமாக இலக்கியத்தைச் சொல்லலாமா என்று கேட்டால், நிச்சயம் சொல்லலாம். படிக்காத மக்களுக்கும், மக்கள் இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம் போன்றவை உண்டுதானே? சினிமா இன்றைய இலக்கிய ரூப மல்லாமல் வேறு என்ன? தரம் பற்றிய கேள்விகள் வேறு. அது சூழலால் ஏற்படுவது. ஆனால் எல்லோரும் தத்தம் அளவில் படைப்பாளிகள், எல்லோரும் படைப்பை ரசிக்கும் வாசகர்கள் என்பது உறுதி.

சாக்கடைக்கு அருகில் நடைபாதையில் வசிப்பவன் நோய்க்கிருமிகளைப் பற்றி தினசரி நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், சாப்பிடத்தான் முடியுமா? இது ஒரு சூழல். அடுக்குமாடியில் வசிப்பவன், ஒரு தூறலில் நனைந்துவிட்டு வந்தாலே சளி பிடித்துக்கொள்கிறது, வைரஸ் தாக்கிவிட்டது என்கிறான், இது இன்னொரு சூழல். இது போலத்தான் தரமதிப்பீடுகளும்.
மொழி சிந்தனையை உருவாக்குவதாகவும், கூட்டுச் சிந்தனையால் உருவாகுவ தாகவும் இருக்கிறது. இலக்கியமும் அதுபோலத்தான். அனுபவ உணர்வை, ரஸனை யை, கலைத் தன்மையை, அழகியலைத் தனிமனிதனிடம் உருவாக்குவதாகவும், வெளிப் படுத்துவதாகவும் இருக்கிறது, இலக்கியம். வரலாற்றினால் தான் தீர்மானிக்கப் படுவதாகவும், வரலாற்றிற்குள் நம்மைச் செலுத்துவதாகவும், வரலாற்றை ஓரளவு படைக்கத் தூண்டுவதாகவும் இருக்கிறது.

மனிதன் இரண்டுவித சூழல்களின் வார்ப்பு. ஒரு சூழல், புறச்சூழல். எங்கே, எப்படி, எந்த இடத்தில், எந்த ஜாதியில், எவ்விதமான குடும்பத்தில் பிறக்கிறான், எப்படி வளர்கிறான் என்பதிலிருந்து நம்மைச் சூழல்கள் பாதிக்கின்றன. இன்னொன்று, மனிதனின் குரோமோசோம்களில் உள்ள மரபணுக்கள் கடத்தும் பண்புகள். (நெடுங் கால-கோடிக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றில் அல்லாமல் மரபணுக்கள் எங்ங னம் உண்டாயின?) அல்லது யூங்கின் பார்வையில், மனித இனத்தின் ஆரம்பகாலத் திலிருந்து படிந்துள்ள கூட்டு நனவிலி. ஒன்றைத் தவிர்த்து இன்னொன்றை மட்டுமே பிரதானப்படுத்துவது வாழ்க்கையில் உதவாது. ஆனால் ஒவ்வொருவருக்கும் இவை யிரண்டின் விகிதாசாரம் வெவ்வேறு அளவில் இருக்கக்கூடும்.

முன்பு மார்க்சியவாதிகள் சமூகமே எல்லாம் என்றார்கள். இப்போது பின்ன மைப்பியம்,
பின்நவீனத்துவம் பேசுபவர்கள் மொழியே எல்லாம் என்கிறார்கள்.

எந்தக் கருத்தும் சூனியத்திலிருந்து தோன்றிவிடுவதில்லை. அதற்கேற்ற சூழல் இருக்கும்போதுதான் சமூகத்தில் ஒரு கருத்து அல்லது நிலைப்பாடு தோன்றுகிறது. இயற்கையில் செடி வளர்வதைப்போலத்தான். சில மண்கள்தான் சிலவற்றுக்கு ஏற் றவையாக இருக்கின்றன. பருத்தி விளையும் கரிசல் நிலத்தில் நான் கரும்புதான் பயிரி டுவேன் என்பவன் முட்டாள். (இப்போது இருக்கும் புத்திசாலிகள் வெளிநாட்டு விதையை வாங்கி நான் பயிரிட்டுவிடுவேன் என்று சொன்னாலும் சொல்வார்கள்). அதைப் போலத்தான் சிந்தனைகளும், இதைக் கொச்சையாகப் புரிந்துகொண்டதனால் தான் தமிழ் இலக்கியச் சூழலைச் சிலர் பாலையாகக் கண்டார்கள், இங்கே வாழை விளையுமா என்று கேட்டார்கள். பாலையாக இருந்தால்தான் என்ன தவறு? ஏன், சகாரா பாலை நிலத்திலும், சைபீரியாவிலும்கூட வாழ்பவர்கள் இல்லையா? சில நிலங்களில் சில கருத்தியல்கள் சூழலுக்கேற்ப, மொழிக்கேற்ப விளைகின்றன. அவற்றை அப்படியே வேறிடத்தில் பறித்து நட்டால் வேரூன்றுமா?

மேற்கத்திய சிந்தனைகள் நமக்குப் பெருமளவு ஏற்றவை அல்ல. (மேலை, மேல் என்ற சொற்களை நான் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் மேற்கு என்ற அர்த்தத் தைத் தவிர, உயர்வான என்ற அர்த்தமும் அவற்றுக்கு இருக்கிறது. மேல்நாடு என்ற சொல் போலவே மேல்ஜாதி என்ற சொல்லும் இருக்கிறது). கிப்லிங், “கிழக்கு கிழக்கு தான், மேற்கு மேற்குதான், இரண்டும் ஒருபோதும் சந்திக்கஇயலாது” என்று கூறியது ஒருவகையில் சரிதான். அதற்காக, ஷேக்ஸ்பியரையோ, மோலியேரையோ நான் புரிந்து கொள்ள முடியாது என்பதும் அல்ல.

மொழி என்பது ஒரு கூட்டுமனத்தின் வெளிப்பாடு என்பதுபோலவே இலக்கியமும் ஒரு கூட்டுமனத்தின் வெளிப்பாடு. அதனால்தான் உலகமுழுவதும் பொதுமைகள் ஏராளமாகக் காணக்கிடக்கின்றன. பொதுவான சிந்தனைகள் உலகமுழுவதும் இருப்பதற்கும் பொதுவான கலை இலக்கியத்தன்மைகள் உலகமுழுவதற்கும் இருப்பதற்கும் காரணம் இதுதான். சத்யஜித் ராயின் படத்தை கான் திரைப்பட விழாவில் ரசிப்ப தற்கும் கெர்னிகா ஓவியத்தை இங்கே நான் ரசிப்பதற்கும் காரணம் இதுதான்.

அதேசமயம், ஒரே கூட்டுவரலாற்று மனத்தின் அமைப்பும் தன் சூழலின் அமைப்பும் மொழி வாயிலாக வெளிப்பட்டாலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளின் பேச்சு (வெளிப்பாடு) எவ்விதம் வேறு வேறாக அமைகிறதோ, அப்படித்தான் சுந்தர ராமசாமியும் ராஜேஷ்குமாரும் வேறுபடுகின்றனர்.

அது சரி, இது தப்பு, அது உயர்வு, இது தாழ்வு என்பதெல்லாம் அந்தந்த சூழல் சார்ந்தவை. சங்ககாலத்தில் பரத்தையை வைத்திருந்தது சரி. 1900த்தின் ஆரம்ப காலத் தில்கூட தாசிக் கலாச்சாரம் இருந்தது, அது உயர்வு. இன்று அவை தப்பு. 1920இல் நம் தாத்தாக்கள் இருதாரம் மணந்தது சரி. இன்று அது தப்பு. இந்தமாதிரியான தப்பு-சரி அடிப்படையில்தான் இலக்கியப்புனிதத்தொகுதிகள் உருவாக்கப்படுகின்றன.

நம் மீது திணிக்கப்பட்ட மொழியை, சமூகத்தை நாம் ஏற்பதுபோல நம் மீது திணிக்கப்படும் தொல்காப்பியம்-சங்கஇலக்கியம்-பதினெண் கீழ்க்கணக்கு-காப்பியங்கள்-சில சிற்றிலக்கியங்கள்-பாரதி-பாரதிதாசன் என்பதுபோன்ற இலக்கியப் புனிதத் தொகுதிகளையும் ஏற்றுக் கொள்கிறோம். அவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்பதில்லை.

எதிர்த்துக் கேள்வி கேட்பவன்தான் விமரிசகன். ஏன் இந்தத்தொகுதி? வேறு ஒன்று ஏன் இருக்கலாகாது? இந்தக் கேள்வி எழும்போதுதான் விமரிசனம் பிறக்கிறது. ஒவ்வொரு இலக்கிய விமரிசகனும் தன்னளவில் சில புனிதத்தொகுதிகளை உருவாக்கவே செய்கிறான். உதாரணமாக, க.நா.சு. பல புனிதத் தொகுதிகளை (பட்டியல்களை) உருவாக்கினார். அவற்றில் பலவற்றை தலித்திய, பெண்ணிய எழுத்தாளர்கள் ஏற்கவில்லை. அவர்கள் தங்கள் தங்கள் காரணங்களைச் சொல்லி, வேறு தொகுதிகளை முன்வைத்தார்கள். இங்குதான் இலக்கியக் குழுக்களும் உருவாகின்றன. பழைய இலக்கியத் தொகுதிகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள் பண்டிதர்கள் எனப்படுகிறார்கள். வர்க்கப் பார்வை அடிப்படையில் இலக்கியத் தொகுதிகளை உருவாக்குபவர்கள் மார்க்சிய இலக்கியவாதிகள் எனப்படுகிறார்கள்.

நான் மனத்தில் வைத்திருக்கும் என் இலக்கியத் தொகுதி அடிப்படையிலேயே புதிதாக வரும் எந்த நூலையும் மதிப்பிடுகிறேன். தமக்கென ஒரு இலக்கியப் பார்வை-இலக்கியத்தொகுதி இருந்ததால்தான் 1940இல் மு. அருணாசலம் இன்றைய உரைநடை பெரும்பாலும் உதவாதது என்று மதிப்பிட்டார். சுந்தர ராமசாமி அதனால்தான் மு.வ.வை, அ.ச. ஞானசம்பந்தனை ‘மொண்ணைகள்’ என்று மதிப்பிட்டார். வெங்கட் சாமிநாதன் ஒரு சிலரை ‘மார்க்ஸின்
கல்லறையிலிருந்து குரலெழுப்புபவர்கள்’ என்றார்.

மேற்கத்திய சிந்தனைகள் பொருள்சார்ந்த, முதலாளித்துவ சிந்தனையிலேயே இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலாக வளர்ந்தவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் முதலாளித்துவம் ஏது என்று கேட்கவேண்டாம். முதலாளித்துவம் இல்லாவிட்டாலும் பொருள் அடிப்படையிலான சிந்தனைகள் நிறைய இருந்தன. அடிமைச் சிந்தனை எகிப்திய, கிரேக்க கலாச்சாரங்கள் தொட்டே இருந்தது. மேற்கத்திய தத்துவங்கள் பலவும் இப்படிப்பட்ட சமூகங்களின் அடிப்படையில் தோன்றியவைதான்.
அதனால்தான் அமைப்பியம், பின்அமைப்பியம், பின்நவீனத்துவம் இவற்றில் எல்லாம் எனக்கு முழுநம்பிக்கை இல்லை. இவற்றை மிகவும் எச்சரிக்கையாகப் பயன்படுத்தவேண்டும்.

அமைப்பியம், பின்நவீனத்துவம் பேசியவர்கள், சமூகப் பாதுகாப்புக்காகவும், பணத்துக்காகவும் சண்டைபோட்டுக்கொண்டு பிரிந்ததையெல்லாம் நாம் இலக்கியச் சூழலில் பார்க்கவில்லையா?
மேற்கத்திய நிலவுடைமை முறைக்கும் நமது முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அவர்களுடைய நிலவுடைமை முறை பொருள்சார்ந்தது என்பதால் உடனடியாக முதலாளித்துவத்துக்கு மாறிவிட்டது. நமது முறை-எப்போதிருந்து என்று தெரியவில்லை-ஜாதியுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுவிட்டது. எது மாறினும் நான் மாறமாட்டேன் என்கிறது ஜாதி. ஒடுக்கப்பட்டோர் சார்பான இயக்கங்கள்கூட ஜாதி அரசியலை வளர்க்கின்றனவே தவிர, ஜாதி இல்லை என்ற மனப்பான்மையை வளர்ப்பனவாக இல்லை. அந்த இயக்கங்களைச் சொல்லிக் குறையில்லை. எப்போது குழந்தையை வகுப்பில் சேர்க்கிறோமோ அன்றிலிருந்து ஜாதி ஆளத்தொடங்கிவிடுகிறது. அதற்கு முன்னரும் கலாச்சாரம் என்ற பெயரில் பெரியவர்கள் ஆட்சி செய்கி றார்கள். நம் வாழ்க்கையில் நாம் ஜாதியின்றி இருப்பவை குழந்தைப் பருவத்தின் ஓர் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் நாட்கள்தான்.

இதனால் எனக்கு விதியிலும் ஒரு அசையாத நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. மார்க்சிய நோக்கு ஏற்பட்ட பிறகும் விதி என்ற பார்வையை என்னால் கைவிட முடியவில்லை. விதி என்றால் முன்நிர்ணயம் (பிரமன் தலையில் எழுதிவிட்டான் என்பது போல) அல்ல. நாம் எதிர்பாராத எத்தனையோ விஷயங்கள் தற்செயலாக வாழ்க்கையில் நடக்கின்றனவே, அதற்கெல்லாம் அறிவியல்பூர்வமாகக் காரணம் சொல்லிவிட முடியுமா? வேதியியலில், மூலக்கூறுகள் ஒழுங்கற்ற ஓட்டத்தினால் எந்த ஒன்றையாவது எதுவும் மோதலாம் என்று படிக்கிறோமே, அந்தமாதிரித் தற்செயல் விளைவினால் ஏற்படும் நிகழ்வுகளை-நாம் காரணம்காண இயலாதவற்றை விதி என்று கருதுகிறேன்.

சரி, மீண்டும் சற்றே என் சொந்த விஷயங்களுக்கு.
என் தந்தை எந்த விஷயத்திலும் என்னைக் கட்டுப்படுத்தியதே இல்லை. தாயை விட என்னை மிகவும் பாதித்தவர் அவர்தான். முக்கியமாக இன்று நான் மார்க்சிய ஈடுபாடு உள்ளவனாகவும், கடவுள் சமாச்சாரம் முதலிய நம்பிக்கைகள் இல்லாதவனாகவும் இருக்கிறேன் என்றால் என் தந்தையே காரணம். என் தந்தைக்கு இரு தம்பிகள். கடைசித்தம்பி-அவருக்கு சிவலிங்கம் என்று பெயர்-ஒரு பெரியாரிய வாதி யாகவே இறுதிவரை வாழ்ந்தவர்.

1969 அல்லது 1970 இருக்கலாம்-ஆர்க்காட்டில் தலைமைத் தமிழ் வளர்ச்சி மன்றம் என்ற ஓர் அமைப்பு இருந்தது. அதனைத் தொடங்கியவர் என் கல்லூரித் தோழரான திருஞானம் என்பவர். (மறுபடியும் ஒரு வேடிக்கையான செய்தி, அப்போது அந்த அமைப்பின் புரவலர் ஆர்க்காடு வீராசாமி). எல்லா இடங்களிலும் (வெறும்) தமிழ்வளர்ச்சி மன்றம், தமிழ் வளர்ச்சிக் கழகம் என்றே பெயர் வைப்பதால், “தலைமை என்ற அடைமொழி சேர்த்து வைக்கலாம்” என்று கூறினார் திருஞானம். அதில் நாங்கள் யாவரும் கவிஞர்கள். முக்கியமாக வலசை ப. கணேசன், பார்த்தசாரதி போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. மேல்விஷாரம் அப்துல் அக்கீம் கல்லூரி யில் தமிழ்ப்பேராசிரியராக இருந்த சோதிவாணன் என்பவரும் சிலகாலம், அதில் உறுப்பினர், கவிஞர். ‘மலைச்சாரல்’ என்ற ஒரு பத்திரிகையை அவர் வெளியிட்டார். சிற்றிதழ்களுக்கே உரிய தன்மையோடு அது இரண்டு மூன்று இதழ்கள் வந்தபின் நின்றுவிட்டது.
இந்த மன்றத்தின் சார்பாக ஆர்க்காடு மண்டியின் மையத்தில் திருவள்ளுவர் அமர்ந்திருப்பது போன்ற சிலையும் வைத்தோம். (இப்போதும் இருக்கிறது). செய்தவர் இன்று பிரபலமாக அறியப்பட்டிருக்கின்ற கணபதி ஸ்தபதி. அப்போதெல்லாம் திருவள்ளுவர் உருவம்-முக அமைப்பு-பிரபலமானதல்ல.

மன்றத்தின் மாதாந்திரக் கூட்டம், ஒவ்வொரு மாதமும், வெள்ளுவா (பவுர்ணமி) நாளன்று பாலாற்றின் மத்தியில் மணலில் மாலை சுமார் ஐந்து ஐந்தரைக்குக் கூடும். ஏழெட்டுப்பேர் கவிதை படிப்போம். அதற்கு மாதமொரு மேடை என்று பெயர். நல்ல யாப்புள்ள கவிதைகள். புதுக்கவிதைமீது அப்போது எங்களுக்கு மரியாதை இல்லை. பிறகு படித்த கவிதைகளைக் கிழி கிழி என்று கிழிப்போம். அதற்கு சங்கப்பலகை என்று பெயர். கூட்டம் ஏறத்தாழ இரவு ஏழரை எட்டு மணிக்கு முடிவடையும். இப்படித்தான் நான் கவிஞன் ஆனேன்.

இளமையில் எழுதத்தொடங்கும்போது எந்தவிதமான முதன்மை நோக்கும் கிடையாது. ஏதோ எழுதவேண்டும் என்னும் ஆவல். சமூக அக்கறை. மாற்றம் வேண்டும் என்ற நினைப்பு. பார்ப்பனிய எதிர்ப்பு. ஆதிக்க எதிர்ப்பு.

ஆதிக்க எதிர்ப்பு என்னும் கோட்பாடு ஆழமாக எவரிடம் இருந்தாலும் அது கடைசியில் மார்க்சியத்தில்தான் கொண்டுபோய்விடும். இது எனது அனுபவம். பல பேர் ஒரு தற்காலிகப் புகழுக்காக எழுதுகிறார்கள், காணாமல் போய்விடுகிறார்கள். அப்போது என் கருத்துகளாக இருந்தவை-சமுதாய விஷயங்களை எழுதவேண்டும். தனிப்பட்ட அனுபவங்களும் கவிதைகளாக வெளிப்படுவது தவிர்க்கமுடியாதது. ஆனால், அவற்றையும் உரிய சமூகப் பின்னணியோடுதான் எழுதவேண்டும். காதல் ஒரு சமூகப் பிரச்சினை. தனிமனித அனுபவங்களுக்கும் அரசியல் சமூகப் பின்னணி நிச்சயம் உண்டு.

அப்போதெல்லாம் பௌர்ணமிப் பாலாற்றங்கரையின் அழகைப் பார்த்திருந்தால்தான் தெரியும். வெள்ளை வெளேரென்ற மணற் பரப்பு. எங்கேயாவது முளைத்திருக்கும் பெரும்புல்தாவரங்கள். தூரத்தில் பார்த்தால் சற்றே மேடாகத் தெரியும்-ஊற்றுகள் தோண்டி ஒரு பர்லாங்கு தூரம், இரண்டு பர்லாங்கு தூரம் விட்டிருப் பார்கள். ஊற்று தோன்றுமிடத்திற்குத் தலைப்பு என்று பெயர். மல்லூரான் தலைப்பு, ஆடவந்தான் தலைப்பு, இப்படியெல்லாம் அவற்றுக்குப் பெயர்கள்.

வெளிப்படையான திராவிட இயக்கச் சார்பு எங்களுக்கு உண்டு. நான் கல்லூரியில் சேர்ந்த ஆண்டு 1964. 1965இன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நாங்கள். நான் உருவத்தில் சிறியவனாக இருந்ததால் என் கல்லூரி நண்பர்கள் என்னை உயரத்தூக்கிப் பிடித்துக் கையில் தார்க்குச்சியைத் தர, அதை வைத்து வேலூர் கண்டோன்மெண்ட் இரயில் நிலைய இந்தி எழுத்துகளை அழித்த ஞாபகம் பசுமையாக மனத்தில் நிற்கிறது. இந்தி ஆதிக்கம் வேண்டாம் என்பது தவிர இந்தச் செயலுக்குக் காரணம் இல்லை. அந்த இரயில் நிலையத்தின் எதிர்ப்பக்கம் கஸ்பா என்ற இடத்தில்தான் எனது வீடு இருந்தது. அழித்தவுடனே போலீஸ் கண்ணில் படாமல் வீட்டுக்கு ஓடிப்போய்விடலாம் என்ற பயம் கலந்த நப்பாசை.

இந்தி ஆதிக்கம்தான் எனக்குப் பிடிக்காதே தவிர, இந்தியை அப்போதே நான் நன்றாகப் படித்திருந்தேன். தக்ஷிண பாரத் இந்தி பிரச்சார சபா நடத்திய பிரவீண் (வித்துவான்) படிப்புவரை. பிறமொழிகள்மீது எனக்கு ஒருபோதும் வெறுப்பு இருந்ததே இல்லை. கல்லூரியில் பணியாற்றியபோதுகூட, பலசமயங்களில் பிராகிருதம், கன்னடம், ரஷ்ய மொழி, ஃபிரெஞ்சுமொழி ஆகியவற்றைப் படிக்க முயற்சிசெய்து அரைகுறையாக முடிந்திருக்கிறது.

கல்லூரியில் படிக்கும்போதே சிலப்பதிகாரம், குறுந்தொகை, கலித்தொகை ஆகிய நூல்களை நோட்டுப்புத்தகத்தில் எழுதிப்படித்த ஞாபகம் இருக்கிறது. அந்தக் காலத்தில் புத்தகம் வாங்கிப் படிக்கக் காசு கிடையாது. இது எனக்கு மிக நல்ல பயிற்சியாக அமைந்தது. பிற்காலத்தில் சங்கப்பாக்களை உரைகள் உதவியின்றி எளிதாகப் புரிந்துகொள்ள வழி வகுத்தது. கல்லூரியில் படித்தபோதுதான் சிலப்பதிகாரம் புகார்க்காண்டத்திற்கு ஆர். கே. சண்முகம் செட்டியாரின் உரையைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த நூல் தந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. பிறகு பிற காண்டங்களுக்கும் அவர் உரை எழுதியிருப்பார் என்று நினைத்துத் தேடி ஏமாந்தேன். கல்லூரியில் படிக்கும்போது, அக்கால வழக்கம் போலவே என்னை மிகவும் கவர்ந்தவர் மு.வ. அவருடைய நூல்கள் அனைத்தையும் (அப்போது கடைசியாக வாடாமல்லி என்ற கதை வெளிவந்திருந்தது) படித்து முடித்திருந்தேன்.

ஆனால் என்னை முதன் முதல் கவர்ந்த ஆசிரியர் மு.வ. அல்ல. அநேகமாக நான் மூன்றாம் நான்காம் வகுப்பு படித்த காலமாக இருக்கலாம். என் தாய்க்குக் கதைகள் படிப்பதில் பைத்தியம். என் தந்தை பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை எல்லாம் வாங்கிவந்து தருவார். அப்படி வாங்கிவந்து, என் தாயார் படித்துக் கொண்டிருந்த நூல் கல்கியின் பொன்னியின் செல்வன். நான் என் தாய் படிக்கும்போது அவர் முதுகைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருப்பேன். அவர் அப்போது மூன்றாம் பாகத்தைப் படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். அந்தச் சிறுவயதில், என்னால் முற்றிலும் படிக்கவோ விஷயத்தைத் தெரிந்து கொள்ளவோ முடியவில்லை என்றாலும், புத்த விகாரத்தின் படிகளில் நந்தி ஒன்றின் பின்னணியில், ஒரு பெண்ணை (வானதியை) ஒரு மாடு துரத்திச் செல்லும் ஓவியம் (மணியத்தினுடையது என்று நினைக்கிறேன்) மனத்தில் நின்றுவிட்டது. பொன்னியின் செல்வன், குந்தவை, வானதி, வந்தியத்தேவன் போன்ற பெயர்களும் அப்போது நினைவில் நின்றுவிட்டன-அவை மட்டுமல்ல, தமிழகத்தின் பொற்கால பிம்பமும் பசுமையாக என் மனத்தில் பதிந்துவிட்டது. இந்தப் பொற்காலப் படிமம் என் மனத்தைவிட்டு நீங்க வெகுகாலம் ஆயிற்று.
ஏறத்தாழ பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அளவில் கல்கி என்றால் உயிர். தேர்வு சமயத்தில் என் தந்தை சிவகாமியின் சபதம் நூலை வாங்கிக்கொண்டுவர, அதை நான் இரவு முழுவதும் பெற்றோருக்குத் தெரியாமல் தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்து படித்தது ஞாபகம் இருக்கிறது. அப்போதெல்லாம் சிம்னி விளக்குதான். நான் பள்ளியிறுதி படிக்கும் வரை காலில் செருப்பு அணிந்தது கிடையாது. கால் சட்டையும் அரைக்கால்சட்டை தான். அப்போதெல்லாம் சாண்டில்யனையும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக, வருணனைகள் செய்யும்போது சமஸ்கிருத நூல்களிலிருந்து மேற் கோள்கள் சொல்லி ஒப்பிட்டு வருணிப்பார். அப்போதுதான் யவனராணி என்ற தொடர்கதை குமுதத்தில் வந்துகொண்டிருந்ததாக ஞாபகம்.

இதற்கெல்லாம் மாற்றம் வந்தது கல்லூரியில். தமிழ் நாவல்களை மட்டுமே படித்துக்கொண்டிருந்த எனக்கு ஆங்கில இலக்கிய உலகம் பரிச்சயமாயிற்று. முதன் முதலில் டிக்கன்ஸின் ஆலிவர் டுவிஸ்டைத்தான் (முழுநூலாகப்) படித்தேன். அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை. கதைக்குள் நிகழும் சோக நிகழ்ச்சிகளை யெல்லாம் டிக்கன்ஸ் மிக எளிதாக சமன் செய்துவிடுவார். பிறகு பிற ஆசிரியர்கள் பரிச்சயமானார்கள். டெஸ் அவ் டி அர்பர்வில் என்ற ஹார்டியின் நாவலைக் கல்லூரி இறுதியாண்டில் படித்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. மிகவும் பாதித்தது. அழ வைத்தது. எம்.ஏ. படிக்கும்போதோ, டர்ன் அவ் தி ஸ்க்ரூ, அம்பாஸடர் முதல் ட்ரிஸ்ட்ரம் ஷேண்டி வரை பெரும்பாலான ஆங்கில ஆசிரியர்கள் பழகிவிட்டார்கள்.

ஆனாலும் திராவிட இயக்கத் தாக்கத்திலிருந்து அப்போதும் தப்ப முடிய வில்லைதான். அதற்கு ஒரு காரணம், நாங்கள் சிறுவர்களாக இருந்தபோதே எங்க ளைக் கவர்ந்தது திராவிட இயக்கம். எந்த வயதில் என்று நினைவில்லை-“அழைக் கின்றார், அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா! அருமைமிகு திராவிடத்தின் துயர்துடைக்க இன்றே” போன்ற பாட்டுகளைக் கேட்டிருக்கிறேன். (பின்னால் இது போன்ற பாடல்களைப் பாடியவர் நாகூர் ஹனீபா என்று தெரிந்துகொண்டேன்.) தி.மு.க. நடத்திய ஒரு படிப்பகமும் எங்கள் ஊரில் இருந்தது. அங்கு காஞ்சி, மன்றம், திராவிடநாடு போன்ற பத்திரிகைகளைப் படித்திருக்கிறேன். அப்போதே எனக்கு அறிமுகமான பெயர், இங்கர்சால். நான் பள்ளிப் படிப்பை முடித்த 1963ஆம் ஆண்டாக இருக்கலாம்-அந்தப் படிப்பகத்தில்தான் ஜீவா என்ற மனிதர் மறைந்ததை ஒரு பலகை யில் எழுதிவைத்து துக்கம் கொண்டாடினார்கள்.

வகுப்பிற்கு வெளியில் உதாசீனப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலும் என் மாண வர்கள் என்னை ஒரு தமிழ் ஆசிரியராக நினைத்தது அபூர்வம். ஆங்கிலத் துறை சார்ந்தவனாகவே பெரும்பாலும் என்னைக் கருதுவார்கள். என் வகுப்புகளிலும் நான் அக்காலத்தில் பெரும்பாலோர் செய்தது போலத் தூய தமிழைக் கையாண்டதோ, தமிழ்ப் பாக்களைப் பாடி நடத்தியதோ கிடையாது. இன்னும் கேட்டால், தமிழ்க் கவிதையைப் பாடி நடத்துவது கூடாது என்பது என் கருத்து. இசைப் பாடலின் அமைப்பு வேறு, இயற்பாக்களின் அமைப்பு வேறு. கீர்த்தனைகளைப் பாடுவதுபோல, ஆலாபனைகளோடு ஸ்வர விந்யாசங்கள் செய்து பாடவா திருக்குறள் எழுதப் பட்டிருக்கிறது?

பெரும்பாலும் என் வகுப்புகளை மாணவர்கள் நன்றாக ரசித்தாலும் ஆசிரியர்கள் ஒரு போதும் நல்ல விதமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. ஏனெனில் ஒரு வகுப்பில் அன்றைக்குத் திருக்குறள் நடத்தவேண்டியதாக இருக்கும். உள்ளே போகும்போது திருக்குறள் இலக்கியமா என்று க.நா.சு. கேள்வி எழுப்பியது ஞாபகம் வரும். வகுப்பு முழுவதும் திருக்குறள் இலக்கியமா இல்லையா என்று இருதரப்பிலும் வாதிட்டுவிட்டுத் திரும்பிவருவேன். இதை எந்தத் தமிழ்த்துறை மனமார ஏற்றுக் கொள்ளும்?

நான் கல்லூரிப்பணியில் சேர்ந்தது 1976இல். அப்போது பெரும்பாலும் மாணவர்கள் தமிழ் வகுப்பைப் பொழுதுபோக்கிற்கான ஒரு வகுப்பாகவே நினைப்பார்கள். தமிழ் ஆசிரியர்கள் கதை சொல்லவேண்டும், அல்லது பட்டிமன்றப் பாணியில் வகுப்பு நடத்தவேண்டும். (இப்போதும் அப்படித்தான் நிலை என்று நினைக்கிறேன்.) இதனால் கல்லூரியின் பிற ஆசிரியர்கள் அனைவரும் தமிழாசிரியர்களைக் கேவலமாகப் பார்ப்பது வழக்கம்.

ஆனால் அனைவரிலும் கடுமையான பணி தமிழாசிரியர்களுடையதுதான். ஏனெனில் பாடத்தை மட்டும் நடத்தினால் கண்டிப்பாக ‘போர் அடிக்கிறான்’ ‘அறுக்க வந்துவிட்டான்’ ‘ரம்பம்’, ‘பிளேடு’ என்பார்கள். சற்றே தளர்ச்சியாக விட்டாலோ, வகுப்பை ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளை வகுப்பாக்கி விடுவார்கள். இறுகப் பிடிக்கவும் கண்டிக்கவும் தண்டிக்கவும் தமிழ் வாத்தியாருக்கு வலிமை கிடையாது. ஏனெனில் தமிழுக்கு மதிப்போ தமிழிடம் பயமோ எவருக்கும் கிடையாது. இருக்கவே இருக்கிறார் கோனார்.

ஆங்கிலத்தில் பரிச்சயமில்லாவிட்டால் பரீட்சையில் தவறிவிடுவோம், அல்லது ஆங்கிலம் பேசவராது என்பதால் ஆங்கில வாத்தியாரிடம் பயமுண்டு. முதன்மைப் பாடங்களிலோ நல்ல மதிப்பெண் வாங்கியே தீரவேண்டும். அப்போதுதான் முதல் வகுப்பில் தேறமுடியும். பிறகு வேலை கிடைக்கும். மேலும் அந்த ஆசிரியர்களைப் பகைத்துக் கொண்டால், ஆய்வகத்தில் பழிவாங்கிவிடுவார்கள் என்ற பயமும் உண்டு. கல்லூரியில் தமிழ்வாத்தியான்தான் இளிச்சவாயன்.
பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு இந்தத் தொல்லை இல்லை. ஏனென்றால் அவர்கள் சந்திக்க முடிவது முதுகலை, அதற்கு மேற்பட்ட படிப்புக்குரிய பணிவான மாணவர்களையே.

ஆனால் தாய்மொழியில் பேசமுடிவதால், தமிழ் ஆசிரியர்களுக்குத்தான் பல வசதிகளும் இருந்தன. நாட்டின், மொழியின், சமூகத்தின் நிலை பற்றியெல்லாம் எளிதாகப் புரியும்படி கருத்துச்சொல்லக்கூடிய வாய்ப்பு அவர்களுக்கு மட்டுமே இருந்தது. உணர்வு பூர்வமாக மாணவர்களை ஈர்க்கக்கூடிய சக்தியும் அவர்களுக்கு மட்டுமே உண்டு. இதை அந்தக் காலத்தில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நன்கு பயன் படுத்திக் கொண்டார்கள்.

தமிழ் இலக்கியத்தைக் கல்லூரியில் (பள்ளிகளிலும்கூட) கற்றுத்தரும் முறையே தவறு. இலக்கியத்தை இரசிக்கவேண்டிய, பிறகு சமூகத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக ஆக்குவதற்கு பதிலாகத் தமிழாசிரியர்கள் எல்லாரும் பொழிப்புரைதான் சொன்னார்கள். எனவே மரபுவழித் தமிழாசிரியர்கள் புதுக்கவிதை வந்தபோது என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கலானார்கள். ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’க்கு எப்படி பொழிப்புரை சொல்லித்தரமுடியும்? அவர்களுக்கு கவிதையை அணுகவேண்டிய முறை தெரியாது. “என்ன செய்வது இந்தக் கையை வைத்துக் கொண்டு” என்ற சி. மணியின் கவிதைதான் நினைவுக்கு வரும்-என்னிடம் சிலர் “என்னய்யா செய்வது இந்தக் கவிதையை வைத்துக்கொண்டு” என்று கேட்டிருக்கிறார்கள்.

நான் பணியாற்றிய பிஷப் ஹீபர் கல்லூரிதான் திருச்சியில் தோன்றிய முதல் கல்லூரி (புனித வளனார் கல்லூரி அல்ல). அக்காலத்தில் அது எஸ்.பி.ஜி. கல்லூரி என்று அழைக்கப்பட்டது. எஸ்.பி.ஜி. என்றால் Society for Propagation of Gospels. பாரதியார் தம் கட்டுரைகளில் பல இடங்களில் இக்கல்லூரியைக் குறிப்பிட்டிருக் கிறார். இதில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் முதலிய தமிழறிஞர்கள் பலர் பணியாற்றி யிருக்கிறார்கள். குறிப்பாக, பி.எஸ். (பின்னங்குடி சாமிநாத சாஸ்திரி மகன்) சுப்பிரமணிய சாஸ்திரி இங்கு தமிழ்த்துறைத் தலைவராக ஏறத்தாழ ஏழெட்டு ஆண்டுகள் இருந்திருக்கிறார். சிறந்த மொழியியற் புலமை வாய்ந்தவர் அவர். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்த்தவர்களுள் ஒருவர். தொல்காப்பியக் குறிப்பு என்று அவர் எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் எழுதியவை மிகச் சிறந்தவை. இப்படிப்பட்ட பேரறிஞர்களின் வழிவந்த ஆசிரியன் நான் என்ற எண்ணம் என் மனத்தில் எப்போதும் இருந்தது.
என் வகுப்புகள் நிச்சயமாக ஓய்வுக்கான வகுப்புகள் அல்ல-ஆனால் பாடமும் முக்கியமல்ல. பலவிதமான விஷயங்களைக் கூறிவிட்டு, “தம்பி, நான் சொல்லும் கருத்துகள் உங்களில் ஒரு சிலருக்குப் பிடிக்கலாம், ஒரு சிலருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். நன்றாகச் சிந்தியுங்கள். உங்களைச் சிந்திக்கவைப்பது மட்டுமே என் கடமை. கோனார் நோட்ஸ் போலப் பாட்டைப் படித்து உரை சொல்வதல்ல” என்று நூற்றுக் கணக்கான முறை சொல்லியிருக்கிறேன். என் கல்லூரி வாழ்க்கை முழுவதும் நான் கடைப்பிடித்தது இது ஒன்றே ஒன்றுதான்.

திருச்சியில் பணிக்கு வந்ததனால் எனக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. நவீன தமிழ் இலக்கியப் பரிச்சயம் அதனால்தான் ஏற்பட்டது. திருச்சியில் பணிக்குவராமல் எங்காவது ஒரு சிற்று£ரில் கல்லூரி ஆசிரியனாகப் போயிருந்தால் கலாப்ரியா, ஞானக்கூத்தன், வண்ணநிலவன் போன்ற பெயர்களைக் கேள்விப்படாமலே போயிருக்கக்கூடும்.

அநேகமாக 1977ஆம் ஆண்டாக இருக்கலாம். திருச்சியில் சினிஃபோரம் என்ற ஓர் அமைப்பு (திரைப்படக் கழகம்) இருந்தது தெரியவந்தது. அதில் ஆண்டுச்சந்தா கட்டினால் உலகத் திரைப்படங்களில் சிறந்தவற்றைப் பெரும்பாலும் பார்க்கமுடியும். சினிஃபோரம் என்ற அமைப்பை ராஜன் என்ற நண்பர் (முன்னே கூறிய ராஜன்குறை தான்) பாழாக்கும் வரை அதில் என்னைப் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந் தோம். அதில் உறுப்பினர்கள் சேர்ப்பதற்குப் பாடுபட்டோம். சிலசமயம் செயலாளராகவும், துணைத்தலைவராகவும் அதில் நான் பங்கேற்றிருக்கிறேன். பிற ஊர்களின் திரைப்படக் கழகங்களில் காணக்கிடைக்காத ஒரு முக்கிய விஷயம், சினிஃபோரத்தில் திரைப்படம் பார்த்தபிறகு ஒரு அரைமணி ஒருமணி நேரமாவது உட்கார்ந்து அதைப் பற்றி விவாதிப்போம். இதனால் உலகத் திரைப்படங்களைப் புரிந்துகொள்வது மட்டு மல்ல, திரைப்படக் கலையின் இரகசியங்களும் எளிதாகப் புரிந்தன. மேலும் எழுத்து சார்ந்த இயக்கங்கள் யாவுமே பொதுவாகக் கலைகள் சார்ந்த இயக்கங்கள்தான் என்பதைப் புரிந்துகொள்ளும் ஞானமும் பக்குவமும் வந்தன. உதாரணமாக, பின் நவீனத்துவ வகை எழுத்து மட்டுமல்ல, பின்நவீனத்துவ இசை உண்டு, பின்நவீ னத்துவத் திரைப்படம் உண்டு, ஓவியம் உண்டு, சிற்பம் உண்டு என்பது தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும்?

சினிஃபோரத்தின் உறுப்பினராக அக்காலத்தில் இருந்தவர்தான், இன்று நல்ல டாக்குமெண்டரிகளும், ‘ஒருத்தி’ என்ற கலைத்திரைப்படமும் எடுத்த நண்பர் அம்ஷன் குமார். வங்கியில் அப்போது பணியாற்றிவந்தவர் அவர். வங்கிப்பணியை விட்டுத் திரைப்படம் எடுக்கச் சென்றார். அவர் எடுத்த ‘பாரதி’ திரைப்படம் தொழில்நோக்கில் ஞான. இராஜசேகரனால் எடுக்கப்பட்ட படத்தைவிட மிக மேலானது. அதில் பாரதி யாக நடித்தவர் விமலாதித்த மாமல்லன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்).

திரைப்படச் சங்கத்தின் வாயிலாக எனக்கு அறிமுகமான மிகமுக்கியமான நண்பர் பேராசிரியர் ஆல்பர்ட். அவர் ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கிலத் துறை யில் பணியாற்றிவந்தார். அவர்மூலமாகத் திருச்சியின் வாசகர் அரங்கத்தில் (பெரும் பாலும் நாங்கள் ரீடர்ஸ் ஃபோரம் என்றே சொல்வது வழக்கம்) பங்கேற்று விவாதிக் கும் வாய்ப்பு கிடைத்தது. முக்கியமாக, பாலம் என்ற இதழ் வெளிவந்தபோது மனோகர் என்ற நண்பர் அதைக் கல்லூரி தேடிக் கொண்டுவந்து எனக்குத் தந்ததும், அதைப் பற்றி விவாதித்ததும் நினைவில் நிற்கின்றன. (இதில்தான் பிருமீளின் நக்ஷ்த்திர வாசி நாடகம் வெளிவந்தது).

அக்காலத்தில் படித்த பல புதுக்கவிதைகள்-குறிப்பாக சி.சு.செல்லப்பாவின் புதுக்குரல்கள் தொகுப்பிலுள்ளவை-என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. என்னதான் பெண் உறுப்புகளைப் பற்றிய வருணனைகளைத் தமிழ்ப்ழங்கவிதைகளில் படித்திருக்கி றோம் என்றாலும், சி.மணியின் நரகம் போன்ற கவிதைகள் அதிர்ச்சி, ஆவல் இரண் டையுமே ஏற்படுத்தின. பழந்தமிழ்ப்படிப்பு, எவ்வளவோ உடல்வருணனைகள் போன்ற வற்றைத் தாண்டிவந்தாலும், ஓர் இறுக்கமான ஒழுக்க மனப்பான்மையைத்தான் ஏற் படுத்துகிறது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்தரை ஆறுமணிக்குக் கோட்டை ரயில்வேநிலைய வாசலில் (அப்போதெல்லாம் புல்தரை) ஏழெட்டுபேர் கூடுவோம். அந்தவாரத்தில் வெளிவந்த கதைகள், கவிதைகள், கட்டுரைகள் பற்றியெல்லாம் விவாதிப்போம். விவாதித்தவற்றில் சில பத்திரிகைகளிலும் வெளிவந்தன. அப்போது திருச்சி வாசகர் அரங்கம் சார்பாக மானுடம் என்ற சிறுபத்திரிகையும் வெளிவந்தது. அதில் அம்ஷன் குமார் எக்சிஸ்டென்ஷியலிசம் பற்றி எழுதிய கட்டுரை முக்கியமானது (இன்றும் கவனத்தில் கொள்ளக்கூடியது). அப்போது திருச்சி வாசகர் அரங்கத்தில் கோ. ராஜாராம் (சிலர் இவரை வானம்பாடிக் கவிஞராகக் கணித்துள்ளனர்), வெளி என்ற நாடக இதழ் நடத்திய ரங்கராஜன் ஆகியவர்களும் இருந்தனர். பின்னால் வந்த ராஜன்குறை, கிராமியன் போன்றவர்கள் பிறகு நிறப்பிரிகைக் குழுவரை சென்றவர்கள்.

பெரும்பாலும், வாசகர் அரங்கத்திலும் சினிஃபோரத்திலும் இருந்தவர்களில் சிலர் திருச்சி நாடக சங்கம் என்ற அமைப்பிலும் இருந்தோம். அண்மையில் மறைந்த வங்க நாடகக் கலைஞரான பாதல் சர்க்கார் சென்னையில் ஒரு நாடகப் பயிற்சி வகுப்பு அக்காலத்தில் நடத்தினார். எழுத்தாளர் பூமணி போன்றவர்கள் அதில் கலந்து கொண்டனர். ஆல்பர்ட், மனோகர், கோவிந்தராஜ் போன்றவர்கள் திருச்சியிலிருந்து பங்குபற்றினர். அவர்களுடைய ஆவலால் உருவானது திருச்சி நாடக சங்கம். பிஎஸ்என்எல் அலுவலரான ஜம்புநாதன் அதன் பிரதான எழுத்தாளர். முதன்முதலில், பாதல் சர்க்காரின் நாடகமான ஏவம் இந்திரஜித் என்பதைப் பிறகொரு இந்திரஜித் என்று ராஜாராம் மொழிபெயர்க்க, அதனை நாங்கள் திருச்சி நாடக சங்கத்தின் சார்பாக நடத்தினோம். திருச்சி நாடக சங்கம் சிறப்பான மொழிபெயர்ப்பு நாடகங்கள் பலவற்றையும் நடத்தியது. அதில் முதன்மையாகக் குறிப்பிடவேண்டியவை மராட்டி ஆசிரியர் விஜய் டெண்டூல்கரின் ‘அமைதி அமைதி கோர்ட் நடக்கிறது’ என்ற நாடகமும், கன்னட நாடகாசிரியர் கிரீஷ் கர்னாடின் ‘ஹய வதனா’ நாடகமும்.

திருச்சி நாடக சங்கம் எனக்கு மேக்கப் போடுவது முதல் மேடையமைப்பது, நாடகப் பிரதி எழுதுவது, நாடக இயக்கம் வரை பலவிஷயங்களைச் சொல்லித்தந்தது. நாடகத்தைப் பற்றிய ஒரு முழுமையான அறிவைத் தந்தது திருச்சி நாடக சங்கம். இதன் மூலமாகத்தான் எனக்கு சென்னை ஞாநியின் பரிச்சயமும், நிஜநாடக இயக்கம் மு. இராமசாமியின் பரிச்சயமும், இராமாநுஜத்தின் பரிச்சயமும் கிடைத்தன.

1989ஆம் ஆண்டு, திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி கம்யூனிடி செண்டரில் வைத்து, திருச்சி நாடக சங்கம், பாதல் சர்க்கார் நாடக விழா ஒன்றையும் நடத்தியது. அதை நடத்தும் பொறுப்பாளனாக நான் அப்போது இருந்தேன். (அதற்குக் கோவை ஞானி அவர்களும் வந்திருந்தார்.) அச்சமயத்தில் பாதல் சர்க்காரின் ஆறு நாடகங்கள் அங்கு நிகழ்த் தப்பெற்று விவாதிக்கப்பட்டதோடு, நாடகம் பற்றிய பொதுவான பிரச்சினைகள் பல வும் பேசப்பட்டன. இருபதாம் நூற்றாண்டு தமிழ் நாடக வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்த சந்தர்ப்பம் இவ்விழா. இதைத்தொடர்ந்து மதுரையிலும் வேறு பல இடங்களிலும் நாடக விழாக்கள் நடந்தன.

திருச்சி நாடக சங்கம் அளித்த நாடக அனுபவத்தால் பிஷப் ஹீபர் கல்லூரியில் நான் அநேகமாக ஆண்டுக்கு ஒருமுறை, முத்தமிழ் விழாவில் ஒரு நாடகமேனும் நடத்துவது இயல்பான விஷயமாயிற்று. அந்த நாடகங்களில் நடித்த பலர் இப்போது பலவித அலுவல்களில் பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் நாடகத்தைப் பல விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். வள்ளியப்பன் என்ற மாணவர் பத்திரிகை உலகிற்குச் சென்றுவிட்டார். (இப்போது தமிழ் ஃபெமினா ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.) திருச்சி நாடக சங்கத்தின் ‘அமைதி அமைதி கோர்ட் நடக்கிறது’ என்ற நாடகத்தில் மும்முறை நடித்தவர், ஏ.ஆர். முருகதாஸ் என்ற மாணவர். பி.ஏ. வரலாறு படித்தபோது அவருக்குத் தமிழ்ப்பாடம் நடத்தியவன் நான். மிகத் திறமைசாலியான அவரை சினிஃபோரத்திலும் திருச்சி நாடக சங்கத்திலும் சேர்த்திருந்தேன். அந்த அனுபவத்தாலும், அவரது சுயஆற்றலினாலும் இன்று அவர் மிகவும் பிரபலமான ஒரு திரைப்பட இயக்குநர் (ரமணா, கஜினி போன்ற படங்களை இயக்கியவர்).

1976ஆம் ஆண்டில் எனக்குத் திருமணமாயிற்று. எண்பதுகளில் எனக்கு இரு குழந்தைகள் பிறந்தனர். பையனுக்குச் செவ்வேள் என்றும் பெண்ணுக்குச் சிந்தனா என்றும் பெயர் வைத்தேன். என் தமிழ்த்துறை ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிக்கல்வியில் படிக்கவைத்தபோது, நான் என் குழந்தைகளைப் பன்னிரண்டாம் வகுப்புவரை தமிழ்வழி படிக்கவைத்தேன். ஆனால் இதில் எனக்குப் பெருமை கொள்ளமுடியவில்லை. காரணம், என் மகன் மகள் இருவருக்குமே தாங்கள் ஆங்கில வழி படித்திருந்தால் இன்னும் நல்ல படிப்புக்கும், வேலைக்கும் சென்றிருக்கலாமே என்ற எண்ணம் உண்டு. குறிப்பாக என் மகளுக்கு. அவளுக்கு நன்றாக ஆங்கிலம் பேச முடியவில்லையே என்றும் குறை. இன்றைய இந்தச் சூழலுக்கு என்ன செய்வது? இதை எப்படி மாற்றுவது?

1981 ஜனவரியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கெனப் பதிவு செய்தேன். (அப்போது திருச்சியில் தமிழில் டாக்டர் பட்டம் வாங்கிய பேராசிரியர் ஒருவர்கூட இல்லை என்பது இப்போது அனைவருக்கும் வியப்பளிக்கக்கூடிய விஷயம். இப்போது ஒவ்வொரு கல்லூரிக்கும் பத்துப்பேர் இருக்கிறார்கள்.) 1980 இறுதியில் இதற்காகச் சென்னை சென்றேன். பேராசிரியர் ந. சஞ்சீவி இலக்கியத் துறைத் தலைவர். அவரிடம் எனக்கான தலைப்பு குறித்து விவாதித்தேன். தமிழ் இதழ் களைப் பற்றிய ஆய்வு, செய்ய வேண்டிய ஒன்றென்று உணர்த்திய அவர், செந்தமிழ் இதழையும், செந்தமிழ்ச் செல்வி இதழையும் ஆய்வுத் தலைப்புகளாக வேறு இரு வர்க்குக் கொடுத்துவிட்டதாகக்கூறி, தமிழ்ப்பொழில் என்ற இலக்கியஇதழ் பற்றி என்னை ஆய்வுசெய்யுமாறு கூறினார். அதற்குப்பின் அவர் மறைந்துவிட்டார். எனவே சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் இருக்கையில் இருந்த பேராசிரியர் கு. மோகனராசு என்பாரிடம் நான் முனைவர் பட்டத்திற்குப் பதிவுசெய்துகொண்டேன்.

அந்தச் சூழலில், மிகத் திகைப்பினை உண்டாக்கிய தலைப்பு அது. எந்தக் கோணத்தில் எவ்வாறு செய்வது, அதற்கான ஆய்வுப் பிரச்சினை என்பது என்ன, கருதுகோள் என்ன என்ற ஒரு தெளிவும் கிடையாது. இன்னும்கேட்டால், தலைப்பை எவ்விதம் அமைப்பது என்றே தெரியவில்லை. எனக்கு முன்னோடிகளும் இல்லை. பின்னர், ஐந்தாண்டுகள் கழித்து, ஒரு வரலாற்றுப் பார்வையில் பார்த்து முடித்தேன்.

ஆய்வு செய்த மறுஆண்டு ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதற்கென அனுமதி வாங்கினேன். ஆனால் பேராசிரியர் ஆல்பர்ட், “நீங்கள் செய்யக்கூடிய நல்ல காரியம், எவருக்கும் வழிகாட்டியாக இருந்து இன்னும் ஆய்வாளர்களை உருவாக்காமல் இருப்பதுதான்” என்று குறிப்பிட்டார். அவருக்குப் பல்கலைக்கழக ஆராய்ச்சிகளில் சற்றும் மரியாதை கிடையாது. பிஎச்.டி. போகட்டும், அவர் எம்.ஃபில் கூட செய்யவில்லை. அதனால் அவர் கல்வித்துறையில் பல வாய்ப்புகளை இழந்தவர். அதை அவர் பெரிதாகக் கருதவில்லை. தொடக்கத்தில் வழிகாட்டியாகக் கூடாது என்றுதான் ஐந்தாறு ஆண்டுகள் இருந்தேன். ஆனால் முற்றிலும் அவ்வாறிருக்க முடியவில்லை. “நீங்களாவது நல்ல ஆய்வு வளரத் துணை செய்யலாமே” என்று எல்லோரும் எனக்குச் சொன்னார்கள். ஏறத்தாழ அப்படித்தான் நான் செய்து வந்திருக்கிறேன். இதுவரை என்னிடம் பிஎச்.டி. ஆய்வு செய்தவர்கள் 10 பேர். எம்.ஃபில் ஆய்வுசெய்தோர் 63 பேர். (என் மேற்பார்வையில் முதலில் பாக்யலக்ஷ்மி என்னும் ஓர் ஆசிரியை (இப்போது அவர் சென்னை அண்ணாசாலை காயிதேமில்லத் அரசுக் கல்லூரியில் பேராசிரியை) “ஞானக்கூத்தன் கவிதைகள்-வடிவவியல் நோக்கு” என்னும் தலைப்பில் ஆய்வு செய்தார்.)

நான் ஆய்வுசெய்தபோது நிகழ்ந்த, குறிப்பிடவேண்டிய விஷயங்கள் இரண்டு. ஒன்று, எனக்கு அப்போது வயது முப்பதுகளில்தான். அப்போதே இரு கண்களிலும் தொடர்ந்து ஒவ்வொரு கண்ணாகப் பிறை வளர்ந்து பார்வை கெட்டதால் ஆய்வு செய்வது தாமதமாகியது. இன்னொன்று, எனக்கும் என் ஆசிரியர் மோகனராசுக்கும் மொழிக் கையாளுகை விஷயத்தில் அவ்வப்போது எழுந்த சண்டைகள்.

அவர் தூயதமிழ்வாதி. நானோ மொழிக்கலப்பில் தவறில்லை என்பவன். மேலும் சாதிப் பட்டங்களை இடுவது அவருக்குப் பிடிக்காது. நான் வரலாற்று அமைவை மாற்றக்கூடாது என்பவன். வேங்கடசாமி நாட்டார் என்றால் ந. மு. வேங்கடசாமி என்றும், சாமிநாதையர் என்றால் உ.வே. சாமிநாதன் என்றும் ஆய்வேட்டில் எழுதுமாறு அவர் கூறுவார். இது வரலாற்றுமுறைக்கு ஒவ்வாதது என்று நான் வாதிடுவேன். (அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி. அவர் தெருப்பெயர்களிலுள்ள ஜாதி களையெல்லாம் நீக்கிவிடும்படி கட்டளையிட்டார். அதனால் ஜி.என்.செட்டி தெரு ஜி.என். தெருவாகியது. நடேசமுதலியார் சாலை நடேசன் சாலையாகியது. இத்தியாதி.) மற்றபடி அவர் என் கருத்துகளிலோ எழுத்திலோ குறைகண்டதில்லை. நல்ல வழி காட்டியாகவே இருந்தார்.

தமிழ்ப்பொழில் பற்றிய ஆய்வு, எனக்குத் தமிழக வரலாறு, கல்வெட்டாய்வு, இலக்கணம் போன்ற பல துறைகளில் எனக்கு நல்ல பரிச்சயத்தை உண்டாக்கியது. பழந்தமிழறிஞர்கள் பலரையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. அதற்கு நான் தயாரித்த கட்டுரை அடைவைப் பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அந்த ஆய்வினால் ஒருவித மரபான, சைவ, வைதிகப் பார்வையும் என்னை அறியாமலே என்னிடம் வந்திருக்கக்கூடும்.

ஏறத்தாழ எழுபத்தாறு முதல் எண்பதுகளின் தொடக்கம் வரை மார்க் சியத்தைக் கற்ற காலம். எண்பதுகளில் என்னை பாதித்த கொள்கை நூல்கள் சில. எஸ்.வி. ராஜதுரையின் எக்சிஸ்டென்ஷியலிசம், அந்நியமாதல் இரண்டும் அவற்றில் முக்கியமானவை. அப்போதுதான் எஸ்.என். நாகராஜனின் மார்க்சியம்-விடுதலையின் இலக்கணம் என்ற நூலும் எனக்குக் கிடைத்தது. மார்க்சியம் ஏதோ ஒரு அந்நியக் கொள்கை என்பதுபோலத்தான் நான் அதுவரை-குறிப்பாக ரஷ்யமொழியிலிருந்து மொழிபெயர்ப்பாக வந்த நூல்களைப் படித்து-எண்ணியிருந்தேன். அது நமக்கு மிகவும் நெருக்கமானது, எல்லோருக்கும் பொதுவானது என்ற புரிதலை உண்டாக் கியது நாகராசனின் நூல். தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிசம் நூலும் எனக்குப் பல புதிய விஷயங்களை உணர்த்தியது.

ஆங்கில இலக்கியத்தினால் ஸ்ட்ரக்சுரலிஸ்டு (அமைப்பியல்) மொழியியல் எனக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமாயிருந்தது. ஆனால் தமிழவன் அறிமுகப்படுத்திய ஸ்ட்ரக்சுரலிஸ்டு இயக்கம், அதன் தன்மைகள் முதலியன எனக்குப் புதியவை. ஏனெனில் ஆங்கில இலக்கியம் படித்தபிறகு நான் அதில் தோன்றிய இயக்கங்களைப் பற்றித் தொடர்ந்து படிக்கவில்லை. தமிழவனின் நூல் ஓர் இறுக்கத்தை உருவாக்கியது. காரணம், அதன் தமிழ் நடை. என்னதான் அமைப்பு மொழியியல் தெரிந்திருந்தும் அவர் சொன்ன பல விஷயங்கள் புரியவில்லை. உடனே ஆங்கிலத்துக்குத் தாவினேன். ஆங்கிலத்தில் நான் முதலில் படித்த ஆசிரியர் பார்த்து (ரோலாந் பார்த்)தான். அவருடைய குறியியல் முறையும் அமைப்பிய முறையும் எனக்குப் பரிச்சயமானதோடன்றி, மிகவும் பிடித்தும் இருந்தன. பிறரையும் தேடித்தேடிப் படித்தேன். இதன் காரணமாக 1990இல் எழுதப்பட்டதே அமைப்புமைய வாதமும் பின்னமைப்பு வாதமும் என்ற எனது நூல். இதனைக் கோவை ஞானி வெளியிட்டார். (இதற்கு அட்டைப்படம் வரைந்து தந்த முருகன் பின்னர் நாவலாசிரியராகிவிட்டார்.)

பொதுவாகவே நான் பயின்ற பள்ளிகளை நோக்கினால்-திருச்சி வாசகர் அரங்கம், நாடகசங்கம், திரைப்படச் சங்கம் இன்னபிற-இவை யாவுமே ஆதிக்க எதிர்க் கருத்தியல் சார்ந்தவை என்பது எளிதாகவே புரியும், ஆனால் இவற்றில் பங்கேற்ற அனைவரும் மார்க்சியம் சார்ந்தவர்கள் அல்ல.
அறிவுஜீவிகள் பொதுவாக வணிகத் திரைப்படங்களை ஒதுக்கிவிடுகிறார்கள். அல்லது விமரிசன நோக்கோடு பார்க்கிறார்கள். ஆனால் எம். ஜி. ஆரையும் இன்னும் பிற திரைப்பட நடிகர்களையும் வழிபடும் ஒரு சமூகமும் நமக்குள்ளே இருக்கத்தானே செய்கிறது? இந்தத் திரைப்படங்கள், அல்லது தொலைக்காட்சி, அதன் தொடர்கள், இவை போன்றவையெல்லாம் மக்களை ஒடுக்குமுறையை விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மனிதர்களாகத்தானே ஆக்குகின்றன? (முன்பே சொன்னமாதிரி, இதுவும் ஒரு தரமதிப்பீடுதான். அற நோக்கமும்தான். சமூகத்திற்கு உதவுமா என்ற நோக்கில், எல்லோரும் சமத்துவம் பெற ஒரு வழி என்ற நோக்கில், என் புனிதத் தொகுதிகள் அடிப்படையில்).

படிக்காதவர்கள்தான் இப்படி என்றால், பி.இ, பிஎச்.டி எம்.பி.பி.எஸ் போன்ற பெரும் படிப்புகளைப் படிப்பவர்களும் ஒடுக்குகின்ற ஒரு சமூக அமைப்பினுள் நாம் வாழ்கிறோம் என்பதை ஏன் பெரும்பாலும் புரிந்து கொள்வதே இல்லை? தங்களை ஒடுக்குகிற இச்சமூக அமைப்பை ஏற்றுக்கொள்ளும் மனிதராகத் தங்களை உருவாக்கு கின்ற இப்படிப்பட்ட வணிகக் கலைகளின் அம்சங்களைப் பார்வையாளர்கள், அல்லது வாசகர்கள், ஏன் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்? ஏன் பார்த்த திரைப் படங்களையே திரும்பத் திரும்பப் பார்க்கிறார்கள்? அவர்களால் பல சொந்தப் பிரச்சி னைகளுக்கும் இடையில் எப்படி இவற்றில் மகிழ்ச்சி காணமுடிகிறது? தினசரி மீனவர்கள் செத்துக்கொண்டே இருக்கின்ற, விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப் படுகின்ற, சுற்றுச்சூழல் அழிவு பூதாகாரமாக மாறிக்கொண்டேயிருக்கின்ற, விலை வாசிகள் ஏறிக்கொண்டே இருக்கின்ற, எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகின்ற ஒரு சமூகத்தில் எப்படி நம் மக்கள் தினசரி மூன்று வேளை சினிமா பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியோடு வாழ முடிகிறது?
———–
எண்பதுகளின் இறுதிவாக்கில், கத்தோலிக்கத் திருச்சபை அமைப்பு, இலக்கியப் பரிச்சயத்தை உண்டாக்கவேண்டியும், நல்ல எழுத்தாளர்களை உருவாக்கவேண்டியும் ஊருக்கு ஊர் எழுத்துப்பட்டறைகளை நடத்தத்தொடங்கியது. அதில் அமுதன் அடிகளும், பேராசிரியர் ஆல்பர்ட்டும் முக்கியமாக இணைந்திருந்தார்கள். நானும், சிலசமயங்களில் பேராசிரியர் நோயல் இருதயராஜும், அதில் இணைந்தோம். தொண்ணூறுகளில் தமிழகத்தின் பல ஊர்களில் நிகழ்ந்த கவிதைப் பட்டறை, சிறுகதைப் பட்டறை, நாடகப் பட்டறை போன்றவற்றில் நாங்கள் இரசனை வகுப்புகள் நடத்தினோம். இது எனக்கு நல்ல பயிற்சியைத் தந்தது. மேற்கண்டமாதிரியான கேள்விகளைத்தான் நான் பெரும்பாலும் எங்கும் கேட்டுவந்திருக்கிறேன்.

தஞ்சாவூரில் அப்போது நிகழ்ந்த பட்டறை ஒன்றில் மாலதியும் (இப்போது அவர் மாலதி மைத்ரி) கலந்துகொண்டதாக நினைவிருக்கிறது. பாமாவும் கலந்து கொண்டு அவரது முதல்நாவலின் கையெழுத்துப்பிரதியை (கருக்கு) அமுதன் அடிகளிடம் படிக்கத் தந்திருந்தார். அமுதன் அடிகள் அதை எனக்கும் படிக்கத் தந்தார். நாவலின் விஷயம் ஓரளவு எனக்குப் பிடித்திருந்தாலும் நடை எனக்கு உறுத்தியது. (ஒருவேளை என் தமிழாசிரிய மனப்பான்மை காரணமாக இருக்கலாம்).
இந்தப் பட்டறைகளினால் நல்ல எழுத்தாளர்களாகப் பலர் உருவானார்கள். எனக்கு இப்போது நினைவு வரும் பெயர்கள் இமையம், புதுவை ரஜினி, அரங்க. மல்லிகா போன்றவை.

இவர்களில் இமையத்தை யாவருக்குமே தெரியும். இமையத்தின் நாவல் கோவேறு கழுதைகளை என்னிடம் அவர் படிக்கத் தந்தபோது, நன்றாக இருக்கிறது என்பதால், அதை முதலில் சுந்தர ராமசாமியின் பார்வைக்கு அனுப்பிவைத்தேன். சுந்தர ராமசாமி, அதை க்ரியாவின் வாயிலாக வெளியிட இராமகிருஷ்ணனிடம் சொல்லி ஏற்பாடு செய்தார். அது வெளிவருவதற்கு முன் இராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதால், அதை நான் செம்மை செய்து தந்ததாக ஞாபகம்.

பாப்லோ அறிவுக்குயில் என்னும் சிறுகதை எழுத்தாளர் முதலில் போலியான கவிதைகள் எழுதுபவராக இருந்தார். அவருக்கு வகுப்பெடுக்க (அவர் பிஎஸ்.சி தாவர வியல், ஆனால் படிப்பை முடிக்கவில்லை) நான் சென்றபோது அவருக்குத் தனிப் பட்டமுறையில் இலக்கிய விஷயங்களை விவாதித்து, சிறுகதை எழுத்தாளர் ஆக்கினேன். நல்ல சிறுகதைகள் சிலவற்றை எழுதி அவர் இரண்டு தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார் (முதல் தொகுதி கிளுக்கி).

இதைத்தவிர தொண்ணு£றுகளில் நான் நெருங்கிப் பழகிய ஒருவர் அருட் தந்தை எக்ஸ்.டி. செல்வராஜ். விளிம்புநிலை மக்கள், தலித்துகள் பிரச்சினைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டியவர். திருச்சி செயின்ட் பால் செமினரியில் அவர் ஆசிரியராக இருந்தார். பெருமளவு தலித் பிரச்சினைகளில் எனக்குத் தெளிவு உண்டாக்கியவர் அவர்தான். சிலசமயங்களில் ராஜ் கௌதமனும் அங்கு வந்திருக்கிறார். இறையியல் கல்லூரியுடன் ஆல்பர்ட்டுக்கு நெருங்கிய தொடர்பிருந்ததால் அங்கும் பல திரைப்படங்களைப் பற்றி விவாதிக்கவும், பல கருத்தரங்குகளில் பங்கேற்கவும் வாய்ப் புக் கிடைத்தது.

அப்படிப்பட்ட கருத்தரங்கு ஒன்றில், (காந்தியின் இன்றைய பொருத்தப்பாடு பற்றியது) ஞானி அவர்களும், ராஜ் கௌதமனும் கலந்து கொண்டு கட்டுரை படித்தது நினைவிருக்கிறது. பிறகு இன்னும் ஓரிரு கருத்தரங்குகளுக்கென ஞானியுடன் எஸ்.என். நாகராஜனையும் சந்தித்திருக்கிறேன். அதற்கு முன்னரே சில ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜனைப் பற்றி ‘தி இல்லஸ்டிரேடட் வீக்லி’யில் வெளிவந்த குறிப்பு, படம் இவற்றைப் பார்த்திருக்கிறேன். அவ்வளவு பெரிய அறிஞரை நேரில் சந்திக்கமுடியும் என்று நான் நினைத்ததேயில்லை. அவருடைய கீழை மார்க்சியம் என்ற நோக்கு எனக்கு உகப்பாக இருந்தபோதிலும், அது செயல்முறையில் வரக்கூடியது என்று தோன்ற வில்லை. நமக்குத் தேவையான மார்க்சியம் எப்படிப்பட்டது என்று இன்னும் ஆழமான விவாதங்கள் தேவை.

எண்பதுகள் தொடங்கிப் பல கருத்தரங்குகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக நண்பர் வட்டம் கருத்தரங்குகள், இலக்கு கருத்தரங்குகள். 1981ஆம் ஆண்டாக இருக்கலாம்-இலக்கு கருத்தரங்கு ஒன்று திருச்சியில் நடைபெற்றது. 1970களில் திரைப்படத்தைப் பற்றி. நான் வெறும் கவனிப்பாளன்தான். ஆனால் தீவிரமாகத் திரைப்படத்தைப் பற்றி-குறிப்பாக வணிகத் திரைப்படத்தைப் பற்றி பல கருத்துகள் எனக்கு உருவாயின. அதில் பங்கேற்றவர் ஒருவர் நமது வணிகத் திரைப் படங்கள் இல்லாவிட்டால் இன்று தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை மிக அதிகமாக இருக்கும் என்று கூறியதாக ஞாபகம்.

1982 இலக்கு கருத்தரங்கு-எழுபதுகளில் கவிதையைப் பற்றியது-சென்னையில் நடைபெற்றது என நினைவு. அதில் ஆல்பர்ட் மிக அருமையான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். மேற்கத்தியக் கவிதைகளைப் படித்திருந்தாலும் கவிதைசார்ந்த என் எண்ணங்கள் கொஞ்சம் வேறு. புதுக்கவிதை யாப்பினைத் தவிர்த்தது மிகப் பெரிய இழப்பு என்றே சொல்ல வேண்டும். கவிதை தனது ஒலிச்சேர்க்கைகள் மூலமாகப் பெரிய வாய்ப்பினைப் பெறுகிறது. யாப்புக்கு இலக்கண அறிவு தேவையில்லை. யாப்பு ஏதோ இலக்கணம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதுபோல நினைத்துப் புதுக் கவிஞர்கள் அதை ஒதுக்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். புதுமைப்பித்தன் வெறும் வெண்பாவின் சந்தத்தை வைத்து (இலக்கணப்படி அது சரியல்ல) என்ன போடு போட்டிருக்கிறார்! புதுக்கவிதைகள் இப்படி ஆக்கபூர்வமாகப் பழைய யாப்பு களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது என் கருத்து.

1983 இலக்கு கருத்தரங்கு நாவலைப் பற்றி பெங்களூரில் நடந்ததாக ஞாபகம். அதில் நான் எனது முதல் கட்டுரையைப் படித்தேன். அதில் நான் பார்த்து தொடர்பு கொள்ள நினைத்தவர்கள் சிலர் உண்டு. உதாரணமாக ஆத்மாநாம். ஆனால் அவர் அடுத்த ஆண்டே மறைந்துவிட்டார். இன்னொருவர் பிரம்மராஜன்.

தமிழ் இலக்கிய உலகில் சிலர் எளிதில் நெருங்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள், சிலர் நெருங்கமுடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். சுந்தர ராமசாமி, செல்லப்பா போன்றவர்களை என்னால் எளிதில் அணுக முடிந்தது. ஆனால் க.நா.சு., பிருமீள் போன்றவர்களை எளிதில் அணுக முடியவில்லை. பொதுவாகத் தமிழ் எழுத்தாளர்களுக்கு விமரிசகர்களைப் பற்றியோ, கொள்கை நூல்கள் எழுதுபவர்களைப் பற்றியோ நல்ல அபிப்பிராயம் கிடையாது. தமிழ் வாத்தியார்களைப் பற்றி-சொல்லவே தேவையில்லை. படைப்புதான் மேலான பணி என்று அவர்கள் நினைக் கிறார்கள். ஆனால் இன்றைக்கு விமரிசனம் எழுதுவது மிகவும் கடினமான காரியம். இன்றுவரை தமிழில் பெரும்பாலும் மனப்பதிவுகள்தான் விமரிசனம் என்ற பெயரில் உலவி வருகின்றன.

ஆங்கிலத்தில் கொள்கை நூல்களும் விமரிசன நூல்களும் ஏராளமாக இருக்கின்றன. ஆங்கில இலக்கியமோ, பொதுவாக திறனுள்ள ஆங்கிலமோ படித்தவர்களுக்குத் தெரியும், ஐரோப்பிய மொழிகளில் திறனாய்வுக்கென்றே தனி பாஷை உருவாகியிருக்கிறது-சொற்கள் மட்டுமல்ல, தொடரமைப்புகள், எழுதும் முறை அனைத்தும் உட்பட. ஆங்கிலத்தின் திறனாய்வு மொழியை மட்டுமே கூட வசப்படுத்துவது மிகவும் கடினம். அதனால் அத்தகைய மொழியை வசப்படுத்தியவன் நான் என்று என்னை சிறந்த ஆங்கிலப் பேராசிரியரான நோயல் இருதயராஜ் பாராட்டியதை நான் பெருமையாக நினைக்கிறேன். ஆனால் வருத்தம் என்னவென்றால், இந்த மொழியை வசப்படுத்தாதவர்கள், ஆங்கிலத்தில் மேலோட்டமான பரிச்சயம் உடையவர்கள்தான் தமிழில் பின்னமைப்பு வாதிகளையும் பின்நவீனத்துவக் கொள்கைகளையும் அதிகமாக அறிமுகப்படுத்தியவர்கள்.

ஆள் பெயர்களை மட்டுமே எடுத்துக்கொண்டால் கூட, பார்த்தை பார்த்தேஷ் என்று படிப்பவர்களும், காயத்ரி ஸ்பீவக் சக்ரவர்த்தியை காயத்ரி ஸ்பைவக் சக்ரபோர்த்தி என்பவர்களும் இருக்கிறார்கள். ப்ரமீளா என்ற பெயர்-வங்காளியில் முதற்குறையாக ரமீளா-இதை ரொமிலா (தாப்பர்) என்பவர்கள்தான் அதிகம். இன்று கூட தமிழ்ப்பத்திரிகைகள் எல்லாமே ஒரு அரசியல் தலைவரை கட்காரி என்றே எழுதுகின்றன. தமிழ் படித்தவனுக்கெல்லாம் கடகரி (மதயானை) என்ற பெயர் தெரிந்ததுதான். அதை இதனுடன் இணைத்துப்பார்க்கத் தெரியவில்லை. அதுபோகட்டும். விண்வெளியில் விட்ட கணையைச் சந்திராயன் (நல்லவேளை சண்டி ராயன் என்று சொல்லவில்லை) என்று பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் சொன்னார்கள். மகாயானம், ஈனயானம் போல. சந்திரயானம்> சந்திரயான் என்றான சொல் அது என்பது புரியவில்லை. இவ்வாறு தொடர்புபடுத்தி அறியும் பண்பு 1950-60கள் வரை எளிதாக இருந்தது. இப்போது அறவே போய்விட்டது. இவையெல்லாம் கல்லூரியில் அறிந்துகொண்டவை அல்ல. பெரும்பாலும் அக்காலப் பள்ளிகளில்-அரசு உயர் நிலைப் பள்ளிகளில்!

அவ்வளவு ஏன்? நான் எண்பதுகளின் தொடக்கத்திலேயே சந்தித்த ஒரு தமிழ்க் கவிஞர், க்ஷ (க்ஷ)-வுக்கும், ஷ-வுக்கும் வித்தியாசம் தெரியாமலே தம் பெயரை எழுதிவந்தார். ஒரு திறனாய்வாளர், உடன்பாடு-எதிர்மறை என்ற இருமை எதிர்வு தெரியாமலே, நேர்மறை என்ற சொல்லை உருவாக்கிவிட்டார். நேர்மறை என்றால் நேராக மறுப்பது போலும்! இன்னொரு தமிழாசிரியர் பருமையைப் பருண்மை என்று ஆக்கினார். இன்னும்கேட்டால், அதைப் பொறுத்து என்று எழுதுவதற்கு பதிலாக அதைப் பொருத்து(!) (பொருத்தி வை) என்று எழுதும் மா பெ(று)ம் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இந்தத் தவற்றை தினமணி போன்ற பத்திரிகைகள் நியாயப்படுத்தி வருகின்றன. அவர்கள் டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்றோர் எழுதிய தமிழைப் (அவர்களின் பத்திரிகைக் களஞ்சியத்திலேயே கிடைக்கும்) பின்பற்றினாலே போதும்!

இதுபோன்ற மொழித்தவறுகள் இலக்கியம் படைக்கும்போது பெரியவை அல்ல, முக்கியமானவை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், மொழிமீதும், சொற்கள் மீதும் அக்கறை வேண்டும். மொழிமீதே அக்கறையில்லாமல் அதில் என்ன இலக்கியம் படைக்கமுடியும்? வெளிநாடுகளில் இதற்கென தனியாகச் செம்மையாக்கம் செய்பவர்கள் (எடிட்டர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் பணியில் ஆசிரியர்கள் தலையிட முடியாது. தமிழ்நாட்டில் இன்னும் அப்படிப்பட்ட எடிட்டர்கள் வரவில்லை. அதுவரை எழுதியதெல்லாம் தமிழ்தான்!

இன்று அக்கறையில்லாமல் அரைகுறை ஆங்கிலமும் தமிழும் படித்தவர்கள் செய்யும் மொழியாக்கங்கள் தமிழில் பெரிதும் ஆட்சி செய்கின்றன. அவை கலைச் சொற்களாகவும் நின்று நிலைத்து விடுகின்றன. மொழியை நன்கு கையாளத் தெரியாதவன் ஒரு நல்ல எழுத்தாளனோ, கவிஞனோ ஆகமுடியாது என்பது என் கருத்து.

ஒன்று இலக்கணத்தைச் செயல்முறை அறிவோடு-இன்றைய பேச்சுத்தமிழோடும் எழுத்துத் தமிழோடும் இணைத்துக் கற்கவேண்டும். அல்லது மரபு வழிவந்த சிறந்த தமிழ் அறிஞர்களின் நூல்களையேனும் படிக்கவேண்டும். முன்னதற்கு நமது தமிழ்க் கல்வி வாய்ப்புத் தரவில்லை. இன்னும் உதாரணங்கள்கூட நச்சினார்க்கினியர் கால உதாரணங்கள்தான். இன்றைய தமிழிலிருந்து தமிழ் இலக்கண நூல்களில் உதாரணங்களைக் காணமுடியாது. இன்றைய தமிழ் வாக்கியங்கள் பலவற்றை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். பின்னதற்கு நமது தமிழ்ப்பாடத்தில் வைக்கப்படும் இலக்கியம் சார்ந்த படைப்புகளும் கட்டுரைகளும்தான் வழிவகுக்கவேண்டும். ஆனால்
இதிலெல்லாம் அரசியல் புகுந்து நீண்ட காலமாயிற்று.

எந்தவகைச் சமச்சீர்க்கல்வியெல்லாம் வந்தாலும், எந்தப்பாடம் உருப்பட்டாலும், தமிழ்க்கல்வி உருப்பட வாய்ப்பில்லை. தமிழைப் படைத்ததாகக் கூறப்படும் அந்த ஆதிசிவன்தான் வந்து காப்பாற்றவேண்டும்.
——-
எண்பதுகளின் தொடக்கத்தில் இலங்கையிலிருந்து பத்மநாப ஐயர் சில முறை என் வீட்டுக்கு வந்திருக்கிறார். அவர் மூலமாக இலங்கை இலக்கியம் ஓரளவு பரிச்சய மாயிற்று. ஆனால் பிறகு அவருடைய தொடர்பு விட்டுப்போனது மிகப் பெரிய ஒரு இழப்பு. பின்னர் அவர் இலண்டனுக்குச் சென்றுவிட்டார். இப்போது காலச்சுவடு பத்திரிகையுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

எண்பதுகளில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். ஒருசில நிகழ் இதழில் வெளி வந்தன. ஓரிரண்டு காலச்சுவடு மலரில் வந்திருக்கின்றன. அமைப்புவாதம் நூலை ஞானி வெளியிட்ட பிறகு நான் சில நூல்கள் எழுதினேன். முக்கியமாக, செய்தித் தொடர்பியல் கொள்கைகள் (Theories of Communications) பற்றி, குறியியல் நோக்கில் ஒரு நூல். (இப்போது அடையாளம் மறுபதிப்பாக வர இருக்கிறது).

எண்பதுகள் இறுதியில் அமுதன் அடிகள் திருச்சியில் தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி என்ற ஒரு கல்லூரியைத் தொடங்கினார். அதில் வெகுஜனத் தொடர்பியல் (Mass communication) பற்றி நடத்துகின்ற பேராசிரியனாகச் சில ஆண்டு கள் இருந்தேன். மாலைநேரக் கல்லூரி ஆனதாலும், வாரம் சில வகுப்புகள் மட்டுமே நடக்கும் என்பதாலும் என் வழக்கமான கல்லூரிப் பணியை அது பாதிக்கவில்லை.

அந்த அனுபவத்தின் காரணமாக, தலையங்கம்-கருத்துரைகள் எழுதுவது பற்றிய முதல் நூலை எழுதினேன். (பத்திரிகை-தலையங்கம்-கருத்துரை என்பது புத்தகத் தலைப்பு). இன்னொரு நூலும் எழுதியதாக ஞாபகம். அதன்பின் கொள்கை நூல்கள் எழுதுவதில் சுவை இல்லாது போயிற்று.
நான் கட்டுரைகள் எழுதியது 1982 முதல் 1995 வரை மிகுதி. பிறகு அநேகமாக நின்றுவிட்டது. கல்லூரிப் பணிச்சுமை பெருகிவிட்டது. என் நாட்களெல்லாம் வகுப்பறைகளிலேயே கழிந்திருக்கின்றன. எனக்கு அதில் பெருமைதான். ஏனென்றால் மாண வர்களுக்கான என் கடமையை நான் எப்போதும் செம்மையாகச் செய்துவந்திருக்கிறேன். திருச்சியில் ஈ.வெ.ரா. பெரியார் கல்லூரியில் பணியாற்றிய மிகப் பெரிய பேராசிரியர் ஒருவர்-32 நூல்கள் எழுதிய மார்க்சிய அறிஞர்-ஒரு நாளும் வகுப்புக்குச் சென்றதில்லை. கல்லூரிக்குச் சென்றவுடனே எழுத உட்கார்ந்துவிடுவார். இப்படிப் பேர்பெற்ற எழுத்தாளனாக இருப்பதைவிட ஒரு நல்ல, நேர்மையான ஆசிரியனாக இருப்பதைத்தான் நான் விரும்பினேன். மேலும் ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்துவத்தையும் கொள்கையளவில் எதிர்த்துக் கட்டுரைகள் வரைந்த அவர், தன் மகனை மட்டும் நன்கு படிக்கவைத்து அமெரிக்காவுக்குத்தான் பணிசெய்ய அனுப்பினார். நம் எழுத்தாளர்களின் இரண்டக நிலை இப்படித்தான் இருக்கிறது. உண்மையில், வெங்கட் சாமிநாதன் “எழுத்தையும் எழுத்தாளனையும் பிரித்துப் பார்க்கக்கூடாது” என்று கூறும் போது கோபம்தான் வந்தது. ஆனாலும், இம்மாதிரிப் பார்வையைத் தவிர்க்க முடியவில்லை! நமக்கு நம் நம்பிக்கைகளில் உறுதிப்பாடு தேவையாகத்தானே இருக்கிறது?

பிறகு நிறைய நூல்கள் எழுதினேன். கவிதை மொழி-தகர்ப்பும் அமைப்பும் என்ற நூல். அதில் முதல் கட்டுரையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறப்பாடலையும், யாயும் ஞாயும் யாராகியரோ என்ற அகப்பாடலையும் நன்றாகவே தகர்த்து (கட்டுடைத்து)க் காட்டியிருக்கிறேன். அதை இன்றைய கட்டுடைப்பாளர்கள் எவரும் கவனித்ததாகத் தெரியவில்லை. நாகார்ஜுனனின் சொல் உடைப்புகளை கட்டுடைத்தல் என்று பெயரிட்டுப் பாராட்டிய மகானுபாவர்களுக்கு இந்தமாதிரிக் கட்டுரைகள் கண்ணில் படுவதே யில்லை.

சில நூல்களைப் பதிப்பித்தேன். அவை கல்லூரி மூலமாகவும், தமிழ் இலக்கியக் கழகம் மூலமாகவும் வெளிவந்தன. அமுதன் அடிகளுக்கு அறுபது வயது நிரம்பியபோது அமுதம் என்ற நூலை ஆல்பர்ட்டுடன் சேர்ந்து பதிப்பித்தேன். அதில் சிலப்பதிகாரம் பற்றி நான் எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒன்று-ரிசப்ஷன் தியரியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அந்தக் கொள்கை பற்றி நான் எங்கும் கட்டுரையில் குறிப்பிடாமலே எழுதியிருக்கிறேன்.

இரண்டாயிரத்திற்குப் பின் இந்திய இலக்கியம், நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள், இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள் போன்ற நூல்களை எழுதினேன். இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகளில் சில நல்ல திறனாய்வுக் கட்டுரைகள் உள்ளன. அந்நூலை சாகித்திய அகாதெமியின் தேர்வுக்காக அனுப்பு வதாக அப்போதிருந்த உறுப்பினர் ஒருவர் என்னிடம் பிரதிகள் வாங்கி அனுப்பினார். அது தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். எனக்குப் பரிசுகள் தேவை என நான் நினைக்கவில்லை. ஏனெனில் எனக்குமுன்னரே எழுதத்தொடங் கியவர்கள் பலப்பலர்-மிக நன்றாக எழுத்தைக் கையாள்பவர்கள் தமிழ்நாட்டில் எவ்வித பரிசும் அங்கீகாரமும் கிடைக்காமல் இருக்கிறார்கள். உதாரணமாக, ம. லெ. தங்கப்பா, ஞானி, செ. வை. சண்முகம் போன்றவர்களை நினைத்துக்கொள்கிறேன். எழுபது, எண்பது வயதுக்கு மேலானாலும் ஆர்வத்தோடு வேலை செய்துவருபவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அல்லவா முதலில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்!

என் கட்டுரைகள் தொகுக்கப்படாமல் கிடக்கின்றன. தொகுத்து வரிசையாக வெளியிட்டுப் பெயர்வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இல்லை, குறைந்த பட்சம் எந்த ஆண்டு, எப்போது, எதற்காக எந்தக் கட்டுரை எழுதினேன் என்றெல்லாம் நான் குறித்துவைத்துக்கொண்டதுகூட இல்லை. பல தொகுப்புகளில் என் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மேலோட்டமாகத் தேடிப்பார்ப்பவர்களுக்குக் கூட ஒரு இருபத்தைந்து கட்டுரைகள் கிடைக்கலாம்.

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்குமேல் இருக்கலாம்-ஒரு நாள் மதுரையில் இமையத்துடன் சந்தித்திருந்த என். சிவராமனிடம் (சுவர்கள் என்ற புத்தகம் எழுதியவர், அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர், வைகை என்ற இலக்கியச் சிற்றிதழுடன் தொடர்புடையவர்) என் பதினேழு கட்டுரைகளைத் தந்தேன். வெளியிடுவதாகக் கூறித்தான் வாங்கினார். பிறகு அந்தக் கட்டுரைகள் திரும்பிவரவே இல்லை. இப்படிச் சிலர் மூலமாகச் சில கட்டுரைகளை இழந்திருக்கிறேன். நான் எழுதியவற்றுக்கு என்னிடம் பிரதி வைத்துக் கொள்வது கிடையாது. இப்படிப் போன கட்டுரைகளை யெல்லாம் தள்ளிவிட்டால் கூட அநேகமாக சிறு பத்திரிகைகளில் ஏறத்தாழ ஒரு இருபது இருபத்தைந்து கட்டுரைகள் தேறும் என நினைக்கிறேன். கல்லூரிக் கருத்தரங்குகள், பிற கருத்தரங்குகள் இவற்றிலெல்லாம் வாசித்தவற்றைச் சேர்த்தால் ஒரு நூறு நிச்சயம் வரும்.

என் எழுத்தை நான் ஒருபோதும் பெருமையாகக் கருதியது இல்லை. இந்தக் கட்டுரையில் நான்-நான் என்று திரும்பத்திரும்பக் குறிப்பிட நேர்வதுகூட சங்கடமா கத்தான் இருக்கிறது. நிச்சயமாக எனக்குக் கவிதையாற்றல் இருந்தது, ஆனால் கவிதை எழுதுவதை நான் விட்டுவிட்டேன். தொடர்ந்திருந்தால் வானம்பாடிக் கவிஞர்கள் போன்றோரில் நானும் ஒருவனாகியிருப்பேன். சிறுகதை எழுதுவதிலோ நாவல் எழுதுவதிலோ எனக்கு ஆர்வமில்லை. கல்லூரியில் சேர்ந்தபோதே “தமிழில் இலக்கியத் திறனாய்வுதான் மிகவும் பலவீனமான துறையாக இருக்கிறது, அதில் மட்டுமே ஈடுபட வேண்டும்” என்றும், வணிகப் பத்திரிகைகளில் எழுதுவதில்லை என்றும் உறுதி எடுத்துக்கொண்டேன். இன்று வரை அதைக் கடைப்பிடித்தே வருகிறேன்.

2007-08 ஆண்டுகளில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாகக் கவிதையியல் என்ற நூல் ஒன்றும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாகத் தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு என்ற நூலும் வெளிவந்துள்ளன. 2007இல் பணி நிறைவு பெற்ற பிறகு, அடையாளம் பதிப்பகத்தைச் சேர்ந்த சாதிக் என்பவரின் நட்பு ஏற்பட்டது. அதன் காரணமாக, மூன்றாண்டுகளில் அப்பதிப்பகத்துக்கென சுமார் பன்னிரண்டு-பதின்மூன்றுநூல்கள் மொழிபெயர்த்திருப்பேன். இவற்றில் உலகமயமாக் கல், சமூகவியல், பயங்கரவாதம் போன்ற நூல்களை முதன்மையாக மதிக்கிறேன். ஆனால் அதிகமாக வேலை வாங்கியவை, இறையியல் என்ற நூலும், நீட்சே பற்றிய நூலும்தான்.
சில மருத்துவ நூல்களையும் மொழிபெயர்த்திருக்கிறேன், ‘டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள்’ என்னும் நூல் இன்னும் வெளிவரவில்லை. சில வெளிவந் திருக்கின்றன. இம் மொழிபெயர்ப்புகள் கடினமானவை, முக்கியமானவை. ஆனால் அவற்றிற்குப் பாராட்டு கிடைக்கவில்லை.

இத்தனைக்கும் Drawing Room என்பதை இழுப்பறை என்று மொழிபெயர்க்கும் ஆட்கள்தான் இன்று பெரிய மொழிபெயர்ப்பாளர் களாகக் கருதப்படுகிறார்கள். சங்கம் வைக்கிறார்கள். பரிசு பெறுகிறார்கள். நான் முதன்முதல் மொழிபெயர்த்த நூல், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கென, 365 நாட்களில் குழந்தையின் வளர்ச்சி என்ற மருத்துவ நூல்தான் (1980 என்று ஞாபகம்). அண்மையில் வரவரராவின் சிறைக்குறிப்புகள் பற்றிய நூலையும், பஷரத் பீர் என்பவர் காஷ்மீர் பற்றி எழுதிய நூலையும் (ஊரடங்கு இரவு) மொழிபெயர்த் தேன். மொழிபெயர்க்கும் நூல்-இலக்கியமோ, இலக்கியமல்லாததோ-எதுவாயினும், சமூகப்பயன் உள்ளதாகவோ, சமூகச் சிந்தனையைத் தூண்டக்கூடியதாகவோ இருக்க வேண்டும் என்பது எனது கொள்கை.
இப்போதும் மொழிபெயர்ப்பதற்கென, பின்நவீனத்துவம் பற்றிய நூல் ஒன்றும், மேற்கத்திய இசை பற்றிய நூல் ஒன்றும் எதிரில் கிடக்கின்றன. அண்மையில்தான் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு என்னும் நூலை எழுதி முடித்தேன். (இவ்வாண்டுக்குள் வெளிவரலாம்.)
இனி வரும் திறனாய்வு என்பது மார்க்சியம் இணைந்த பின்நவீனத்துவநோக்கோ, பின்நவீனத்துவ நோக்கு இணைந்த மார்க்சியமோ சார்ந்ததாகத்தான் இருந்தாக வேண்டும் என்று நான் நினைக் கிறேன். வேறு வழியில்லை. பின்நவீனத்துவத்தின் சில நல்ல பண்புகளை மார்க்சியம் ஏற்றுக்கொள்வது அதை வளமாக்குவதோடு மார்க்சியம் சார்ந்த எதிர்கால இலக்கியங் கள் வளம்பெறவும் வாய்ப்பினை உருவாக்கும். ஃபிரடெரிக் ஜேம்சன், ஈகிள்டன் முதலியவர்கள் முன்வைக்கும் மார்க்சியத்தை நாம் ஏற்கமுடியும். டெரிடாவின் தகர்ப்பமைப்புக் கோட்பாட்டினை மார்க்சியம் மிக நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பூத்ரியார் போன்ற அவநம்பிக்கைவாதிகளின் பின்நவீனத்துவத்தை நாம் ஏற்கத் தேவையில்லை.

இன்னும் வாழ்வது எத்தனை நாட்கள் என்பது பற்றிக் கவலை இல்லை. செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம். ஏற்கெனவே கூறியதுபோல, அவற்றின் மதிப்பீடு பற்றிக் கவலைஇல்லை. வரலாற்றுச் சுழலில் அடித்துச் செல்லப்படும் துரும்புகள்தானே நாமும் நம்முடைய படைப்புகளும்?

எழுதிய நூல்கள்
1. அமைப்பியமும் பின்னமைப்பியமும் (இரு பதிப்புகள்)
2. செய்தித்தொடர்புக் கொள்கைகள் (இரு பதிப்புகள்)
3. பத்திரிகை-தலையங்கம்-கருத்துரை
4. கவிதைமொழி-தகர்ப்பும் அமைப்பும்
5. இந்திய மொழிகள்-ஓர் அறிமுகம்
6. நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள்
7. இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள்
8. கவிதையியல்
9. தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு-1900 முதல் 1980 வரை

மொழிபெயர்ப்புகள்
1. குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்
2. மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. அறிக்கை
2. சிறார் உரிமை பற்றிய ஐ.நா. அறிக்கை
3. கீழையியல் தத்துவம்
4. உலகம் வெப்பமயமாதல்
5. நீட்சே
6. உலகமயமாக்கல்
7. இறையியல்
8. பயங்கரவாதம்
9. சமூகவியல்
10. விஷன்ஸ் கையேடு-மனித உரிமைகளும் குடியுரிமையும்
11. விஷன்ஸ் கையேடு-உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள்
12. சிறைப்பட்ட கற்பனைகள் (வரவர ராவ்)
13. ஊரடங்கு இரவு (பஷரத் பீர்)
14. டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள்
15, 16. மேயோ கிளினிக்கின் இரு மருத்துவ நூல்கள்

பதிப்பித்த நூல்கள்
1. கலைக்கோட்பாடு
2. உரசல்கள்
3. அமுதம்
4. வெள்ளிமணிகள்
5. நாற்றுகள்
6. தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் மேம்பாடும்
எழுதிய கட்டுரைகள் ஏறத்தாழ 100 இருக்கலாம். அவை இனிமேல்தான் தொகுக்கப் படவேண்டும்.

திட்டப்பணிகள்
1. தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு-1990 முதல் 1980 வரை (தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்காக)
2. தமிழ் இலக்கியத்தில் சுற்றுச்சூழல் (2005-2007)
3. தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் மேம்பாடும் கருத்தரங்கு-2005
4. 1990க்குப் பின் புதுக்கவிதை கருத்தரங்கு-2007
5. மொழிபெயர்ப்புக் கையேடு (இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்திற்காக)
6. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு-புதுவைப் பல்கலைக் கழகத்திற்கென.