இறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3

முன்பு, இறப்பைக் கண்டு எனக்கு அச்சமில்லை என்று குறிப்பிட்டேன். காரணம் இருக்கிறது.

பலரும் உயிர் ஒன்று தனியாக ஆவி ரூபத்தில் இருப்பதாக நம்புகிறார்கள். இன்னும் பலப்பலர் ஆன்மா என்று ஒன்று உண்டு, அது அழியாதது, நாம் இறந்தபிறகும் அது இருக்கிறது என்று கருதுகிறார்கள். இறந்த பிறகு அடையக்கூடிய நல்ல கதி என்பது என்ன என்பது அவரவர் மதத்தையும் சிந்தனையையும் பொறுத்து வேறுபட்டாலும் அவர்கள் எல்லாருக்கும் (கிறித்துவர்கள், முஸ்லிம்கள் உட்பட) தாங்கள் நல்ல கதி அடையவேண்டும் என்ற கவலை இருக்கிறது. ஆன்மா சொர்க்கத்திற்குப் போகவேண்டும், நரகத்திற்குப் போய்விடக்கூடாது என்று பலரும் கவலைப்படுகிறார்கள். இன்னும் பலர் கைலாய பதவி கிடைக்குமா, வைகுண்ட பதவி கிடைக்குமா என்று இறந்தபிறகும் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். இன்னும் பலருக்குச் சாவு என்பது ஒரு சித்திரவதையாக, பயங்கரமாக, அச்சத்தைத் தருவதாக இருக்குமோ, இறந்த பிறகு என்ன ஆகுமோ நமக்கு என்ற கவலை இருக்கிறது.

எனக்கு அப்படிப்பட்ட கவலை எதுவும் இல்லை. முதலாவதாக ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. எனவே இறந்தபிறகு அது என்ன ஆகுமோ என்ற கவலையும் இல்லை.

அப்படியானால் உயிர் என்பது இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். உயிர் என்பது இருக்கிறது. ஆனால் பலரும் நினைப்பதுபோல அது ஒரு ஆவியோ, மூச்சுக்காற்றோ, அல்லது வேறுவிதமான காற்றோ அல்ல.

எங்கள் குடும்பம் சைவக்குடும்பம். உயிர் என்பது ஓர் காற்றுப் போன்றதுதான் என்பது அவர்கள் எண்ணம். ஒன்பது வாயிற் குடிலை என்று மாணிக்கவாசகர் பாடியதையும் (யாராவது இறந்தால், சிவபுராணத்தைப் பாடுவார்கள்) நம்புபவர்கள். ஆகவே யாராவது இறந்தால் உயிர் நவதுவாரங்களில் எதன் வாயிலாகப் போயிற்று என்று ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்துவார்கள். இறந்தபோது மலசலம் இருந்தால் அபானத்தின் (ஆசனவாய்) வழியாகப் போயிற்று என்பார்கள். சிலர் ஆவி கண்கள் வழியாக, சிலரது ஆவி காது வழியாக, பலரது ஆவிகளும் வாய் வழியாக, சிலபேருக்கு மண்டைவழியாகக்கூடப் போயிற்று என்று சான்று காட்டுவார்கள். அநேகமாக ஒருவருக்கும் மூக்கின் வழியாக உயிர் போவதே இல்லை போலும்.

என்னைப் பொறுத்தவரை உயிர் என்பது உடம்பின் எல்லா செல்களிலும், திசுக்களிலும் இருக்கிறது. அப்படித்தான் உயிரியல் எனக்குக் கற்பித்திருக்கிறது. அறிவியலை நான் வெறும் பாடமாகப் படிக்க வில்லை. அதனால் விஞ்ஞானத்தை நன்றாகப் படித்தும்கூட ஆன்மா இருக்கிறது என்றோ, உயிர் எங்கேயோ தனியாக ஒரு வாயுவாக இருக்கிறது என்றோ நான் கருதுகின்ற மூடத்தனத்தைச் செய்யவில்லை.

எல்லாச் செல்களிலும் உயிர் இருக்கிறது என்பதன் அர்த்தம் ஒன்றுதான். நமக்கு வயதாகும்போது அவை தளர்ச்சியுற்று ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. அப்படி அவை ஓய்வெடுத்துக் கொள்ளும்போது நமக்கு இறப்பு ஏற்படுகிறது. தினசரி தற்காலிகமாக நமது செல்கள் களைப்படைந்து ஓய்வெடுக்கும்போது தூக்கம் வருகிறது. நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டும் என்ற அளவுக்கு செல்கள் தளர்ச்சியுறும்போது சாவு நிகழ்கிறது.

இதை அறிந்துதானோ என்னவோ, நம் திருவள்ளுவர், “உறங்குவது போலும் சாக்காடு” என்று அழகாகக் கூறிவிட்டார். உறங்கி விழிப்பது போல (மறு) பிறப்பு உண்டா என்பது நமக்குத் தெரியாது. தெரியாத, என்றைக்குமே தெரிந்துகொள்ள முடியாத விஷயத்தில் சிந்தனையைச் செலுத்துவது வீண்.

தினம்-ஒரு-செய்தி