கேள்விகளும் பதில்களும்

இரு மாதங்களுக்கு முன்பு கனடாவிலிருந்து

நண்பர் அகிலன் கேட்ட கேள்விகளும்

அவற்றுக்கு நான் அளித்த பதில்களும்

1. தனிநாயகம் அடிகளார் எழுதிய Nature in Ancient Tamil poetry என்னும் நூலை நிலஅமைப்பும் தமிழ்க் கவிதையும் என்ற பெயரில் மொழிபெயர்த் திருந்தீர்கள். அவர் இறந்து நீண்ட காலத்தின் பின் இவ்வரிய நூலை மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் என்ன? தனிநாயகம் அடிகளாரிடம் கல்வி கற்றதன் காரணமாக இம்மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டீர்களா?

முதலில் ஒரு யூகத்தைக் களைந்துவிடுகிறேன். நான் தனிநாயகம் அடிகளாரிடம் கல்வி கற்றவன் அல்ல. அதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனால் ஒரு வேடிக்கை தெரியுமா? நான் ஏழாம் வகுப்பு படித்தபோதே தனிநாயகம் அடிகளாரின் ஒன்றே உலகம் என்ற (பயண) நூலைப் பரிசாகப் பெற்றேன். அவரது பிற படைப்புகளையும் பின்னர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சியில்தான் நான் நீண்டகாலம்–32 ஆண்டுகள் (1975 முதல் 2007 வரை) கல்லூரிப் பேராசிரியனாகப் பணிபுரிந்தேன். அங்கு தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பை வைத்து நடத்திவருபவர் அருட்திரு. அமுதன் அடிகளார். அவர் தனிநாயகம் அடிகளோடு தொடர்புடையவர். அவர்தான் தனிநாயகம் அடிகளாரின் நூலை மொழிபெயர்த்துத் தருமாறு எனக்குக் கூறினார். அதனை நான் நிறைவேற்றினேன், அவ்வளவுதான்.     

2. ரஷ்ய இலக்கியங்கள் தமிழகத்தில் மாத்திரமல்ல இலங்கையிலும் அதிக செல்வாக்குச் செலுத்தின. அத்தோடு தமிழில் ரஷ்ய உருவவாதம் குறித்து வெளிப்படையாக யாரும் பேசாத நிலையில் உங்களின் ‘ரஷ்ய வடிவ வியல்’ கட்டுரை ஈழத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் பழங்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்து பேசும் பலர் அண்மைக்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்து பேசப்படாமைக்கான காரணம் என்ன?

அண்மைக்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்துப் பேசாமைக்குக் காரணம், அதற்கான தேவையின்றிப் போனதுதான் என்று நினைக்கிறேன். (கலாச்சார மாற்றம்தான் அதற்கான தேவை). எங்கள் சிறுவயதில் டால்ஸ்டாய் ஒரு பெரிய ஆதரிசமாக இருந்தார். ஆனால் தாஸ்தாயேவ்ஸ்கி குறித்து அப்போது அதிகம் கேள்விப்பட்டதில்லை.

நான் அதிகமும் ஈடுபாடு கொண்ட துறை இலக்கியக் கொள்கை. இன்றைய இலக்கியக் கொள்கை பற்றிப் பேச முனையும் எவரும் வடிவஇயல் வாதங்களான அன்றைய மேற்கத்திய வடிவஇயலையும் (Western Formalism) ரஷ்ய வடிவஇயலையும் (Russian Formalism) குறித்துப் பேசாமல் இருக்க முடியாது அல்லவா? மேலும் பக்தின் போன்றோர் அறிமுகப்படுத்திய பலகுரல் தன்மை போன்றவை இன்றைய இலக்கிய அடிப்படைகளாக உள்ளன.     பழங்கால ரஷ்ய இலக்கியத்தில் பூஷ்கின், டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி போன்ற பல ஆதரிசங்கள் இருந்தனர். அந்த அளவுக்குப் பின்னால்வந்த ரஷ்ய எழுத்தாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட நோக்கம் கருதி ரஷ்ய நாவல்களையும் படைப்புகளையும் மொழிபெயர்ப் பில் அளித்துவந்த என்சிபிஎச் போன்ற நிறுவனங்களும் அதை நிறுத்திக் கொண்டன என்பது முக்கியக் காரணம்.     

3. தமிழவன், தி.சு.நடராசன், பிரம்மராஜனைப் போன்று கவிதை இலக்கியம் குறித்து தமிழகத்தில் ஆழ, அகலமாக எழுதியவர்களுள் நீங்களும் ஒருவர். தெலுங்கு கவிஞர் வரவர ராவினால் சிறையில் இருந்து எழுதப்பட்ட கடிதங்களை சிறைப்பட்ட கற்பனை என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருந்தீர்கள். ஆயினும் ஒப்பீட்டளவில் கவிதைகள் குறித்தான உங்களுடைய மொழிபெயர்ப்புகள் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

இரண்டு காரணங்கள்: ஒன்று, எனக்கு அடையாளம் பதிப்பகத்திலிருந்து தான் மொழிபெயர்ப்புக்கான நூல்கள் கிடைத்தன. அடையாளம் சாதிக் உரைநடையில் ஆர்வம் காட்டியதுபோல கவிதையில் ஆர்வம் காட்டவில்லை என்றே நினைக்கிறேன். பெரும்பாலும் அவர் அளித்த நூல்களையே நான் மொழிபெயர்த்தேன்.  

இரண்டாவது, அன்றைய இலக்கிய நண்பர்கள் சிலர், கவிதை மொழிபெயர்ப்பு மிகவும் கடினமானது, அதைச் செய்யவேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தினார்கள். (இது பிழையானதொரு கருத்து என்று தெரிந்தாலும், மாற்றிக்கொள்ளவில்லை.)

4. ஆங்கிலத்தைப் போன்று இந்தி மொழியிலும் புலமைத்துவம் கொண்டவர் நீங்கள். ஆயினும் இந்தியில் இருந்து ஒரு சிறந்த மொழிபெயர்ப்பை உங்களால் ஏன் தரமுடியவில்லை?

வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக நான் சந்தை நிலவரத்துக்குக் கட்டுப்பட்டு (அடையாளம், எதிர் போன்ற பதிப்பகங்களின் பார்வையில்) மொழிபெயர்ப்புகளைச் செய்தவன். அவர்கள் எனக்கு நல்ல இந்தி நூல்கள் எதையும் மொழிபெயர்ப்புக்கெனப் பரிந்துரை செய்ய வில்லை. மேலும் என் ஆங்கிலப் புலமை நாடறிந்த ஒன்று. (தமிழ் வகுப்பு களையே ஆங்கிலத்தில் நடத்துபவன் என்று அக்காலத்தில் பேசப்பட்டவன் நான்.) அதனால் இந்தியில் இருந்து மொழிபெயர்ப்பதில் அக்கறை காட்ட வில்லை. அத்துடன், ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியில் அதே அளவு சிறந்த இலக்கியங்கள் இருந்ததாக (இன்றும்!) எனக்குத் தோன்ற வில்லை.  

5. ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகளாக நீங்கள் எதனைக் கருத்துகிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரை, ஒன்றே ஒன்றுதான். நேர்மை. அதாவது எந்த விதத்திலும் மூலத்தின் கருத்துகளைப் பிறழ உணர்த்தலாகாது. அதற்கு அடுத்த நிலையில்தான் இலக்கிய அழகு, நடை போன்றவை வருகின்றன. அழகிற்காக, அலங்காரத்திற்காக, நடைக்காகக் கருத்துகளை மாற்றுபவனை மொழிபெயர்ப்பாளன் என்று கூற முடியாது. தழுவலாளன் என்று வைத்துக் கொள்ளலாம்.

6. ஈழத்தில் கிளிநொச்சியில் நடைபெற்ற புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாட்டின்போது உங்களால் மொழிபெயர்க்கப் பட்ட சாமுவேல் பி.ஹண்டிங்டனின் ‘நாகரிகங்களின் மோதல்’ என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது. உலக ஒழுங்கின் மறு ஆக்கமான நாகரிகங்களின் மோதல் குறித்துப் பேசும் இந்நூல் பனிப்போருக்குப் பின்னரான உலக அரசியல் நிலையை தமிழ் உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இந்நூலாக்கத்தின் போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவப் பகிர்வை கூறமுடியுமா?

அச்சமயத்தில் இருந்த மனநிலையை இப்போது என்னால் சொல்ல முடிய வில்லை. அதை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த ஒரே சந்தர்ப்பம், ஆனந்தவிகடன் பரிசளிப்பு விழாவின்போது. ஆனால் கருத்துரையாளர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்களைப் பொறுத்தவரை மேடை என்பது ஜனரஞ்சகத்துக்கானது, கருத்துகளுக்கானதல்ல. என்னைப் பொறுத்தவரை என்றைக்குமே அமெரிக்காவின் (நாகரிகம் உள்ளிட்ட) ஆதிக்கக் கொள்கைகளுக்கு எதிரானவன். அதற்கு ஓரளவு இந்த நூல் உதவுமோ என்ற எண்ணம்தான் மொழிபெயர்ப்பின்போது எனக்கு இருந்தது. அவ்வாறில்லாமல் போய்விடக் கூடாதே என்ற அச்சமும் இருந்தது.

7. காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் போரினால் அலைக்கழிக்கப்பட்டு நொந்து நொடிந்து வாழும் மக்களின் இயல்பு வாழ்வை நுட்பமாக வரையும் சித்திரமே பஷரத் பீரின் ‘ஊரடங்கு இரவு’ இந்நூலை எச்சூழலில் மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டது?

அன்றல்ல, இன்றுவரை காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரானவன் நான். (இன்றைய பிரதமரின் நோக்கில் காஷ்மீர் துண்டாடப் பட்டு பிரிக்கப்பட்டது, காஷ்மீர்ப் “பண்டிதர்களை” வெளிப்படையாக ஆதரித்து அவர்களுக்காக முஸ்லிம்களைக் கொடுமைப் படுத்துவது போன்ற செயல்களையும் நான் ஆதரிக்கவில்லை. அதனால் திரு. கண்ணன் (காலச்சுவடு) ஊரடங்கு இரவு நூலை மொழிபெயர்க்கமுடியுமா என்று கேட்டபோது உடனே ஒப்புக் கொண்டேன்.

8. 1993இல் புக்கர் விருதைப் பெற்ற மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றே சல்மான் ரூஷ்தியின் நள்ளிரவின் குழந்தைகள். இந்தியா தன்னாட்சி நாடாக சுதந்திரமடைந்த நிலையில் நவீனத்துவத்துக்கும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் இடையில் போராடும்  சலீம் சினாயின் வாழ்வைப் பிரதிபலித்ததே நள்ளிரவின் குழந்தைகள் நாவல். இந்நிலை இந்தியாவில் இன்னும் தொடர்வதாக நீங்கள் நம்புகிறீர்களா?

கண்டிப்பாக. நான் சிறுவயதில் (ஏறத்தாழ ஐம்பத்தாறு ஐம்பத்தேழு ஆண்டு களுக்கு முன்பு) வேலூருக்கு அருகிலுள்ள விரிஞ்சிபுரம் என்ற ஊரில் வாழ்ந்தேன். இன்றும்கூட அங்கு பஸ்நிலையத்துக்கு மேற்குப்புறம் முஸ்லிம்கள் குடியிருப்பு தனியாக இருப்பதைக் காணமுடியும் என்றே நினைக்கிறேன். மேலும் என் சொந்த ஊர் ஆர்க்காடு. அதற்கு அருகிலேயே விஷாரம் என்ற முஸ்லிம்களின் தனிக்குடியிருப்பு (ஊர்) இருந்தது. உயர்ந்த அடுக்கு மாளிகைகள், குறுகிய, நெருக்கமான தெருக்கள், அழகும் சுகாதாரமும் அற்ற சூழ்நிலைகள் என்பன அவர்களைத் தனியே பிரித்துக் காட்டின. அங்குள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை ஏறத்தாழ சலீம் சினாயின் அனுபவத்தை எனக்கு 1965 வாக்கிலேயே அளித்தது என்று கூறலாம். அக்காலத்தில் (1960-70) அந்த முஸ்லிம்களால் நமது (பொது இந்திய, தமிழக) வாழ்க்கையுடன் ஒட்ட முடியவில்லை என்றே உணர்ந்தேன்.   

9. மாவோயிஸ்ட்கள் குறித்து தன் முன்னே நடந்த, தன்னைப் பாதித்த சம்பவங்களை மையமாகக் கொண்டு அருந்ததிராயால் எழுதப்பட்ட நூலே  ‘புரோக்கன் ரிபப்ளிக்’. இதனை ‘நொறுங்கிய குடியரசு’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருந்தீர்கள். இந்நூல் வெளிவந்து சில காலத்துக்குள்ளேயே விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிந்தேன். இந்நூலை மொழிபெயர்க்கும் போதே இந்நூல் அமோக வரவேற்பினை பெறும் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்களா? இவ்வாறான சூழலில் பதிப்பகங்கள் உங்களுக்கு றோயல்டி தருகின்றதா?

பொதுவாக அருந்ததிராயின் எழுத்துத்திறனில் எனக்கு நம்பிக்கை அதிகம்.

அதனால் அந்த நூலை மொழிபெயர்த்தேன். அது நல்ல வரவேற்புப் பெறும் என்பதற்கான அறிகுறிகள் முன்னரே தெரிந்தன. ஆனாலும் காலச்சுவடு கண்ணன், அந்த நூலைப் பற்றிய அருந்ததி ராயுடனான விவாதங்களில் எனக்கு இடமளிக்காமல் வேறு எவ்வெருக்கோ வாய்ப்பளித்தார். (அதனால் ஏற்பட்ட கசப்பில் பிறகு அவருக்காக எந்த நூலையும் நான் மொழிபெயர்க்க வில்லை.)

கேரள ராயல்டி மரபு திரு. கண்ணனுக்கு நன்கு தெரியும் என்றாலும் அவர் அதைப் பின்பற்றவில்லை. பொதுவாக எனக்கு தமிழ்ப் பதிப்பாளர்கள் ராயல்டி தருவதில்லை. அந்த நூல்கள் வெளிவந்தவுடனே (அவர்கள் அளவில் தகுதியானது என்று நினைக்கின்ற, பல சமயங்களில் சிறிய) ஒரு தொகையினைத் தந்துவிடுவார்கள். அவ்வளவுதான். அதற்குப் பிறகு நூலுக்கும் நமக்கும் தொடர்பில்லை. கேரளாவில் முறையான ராயல்டி தரும் மரபு இருக்கிறது. அதைப்பற்றி அடையாளம் சாதிக்-உடன் விவாதித்தும் இருக்கிறேன். அங்கே நூல்கள் விற்பனை அதிகமாக உள்ளது, இங்கு தமிழ்ச் சூழலில் நூல்கள் விற்காதநிலை-தேக்கம்தான் உள்ளது என்று அவர் காரணம் சொல்வார்.

10. ‘டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள்’, ‘பேற்றுச்செவிலியர் கையேடு’ , ‘இணை மருத்துவம், மாற்றுமருத்துவம், உங்கள் உடல்நலம் ‘,‘தலைமுடி இழப்பு-மருத்துவம்’, ‘மூல வியாதி’, ‘ஐம்பது உடல்நலக் குறிப்புகள்’ என அதிகளவான மருத்துவநூல்களை மொழிபெயர்க்கும் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களை இலக்கிய வெளி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பெரும்பாலும் நான் மொழிபெயர்க்கவேண்டிய நூல் எந்தத் துறையைச் சேர்ந்ததோ, அந்தத் துறையில் அடிப்படை நூல்களைப் படித்துவிடுவது எனது வழக்கம். அதனால் எனக்கு எந்தத் துறையிலும் மொழிபெயர்ப்பது எளிதாகவே இருந்தது. சிரமங்கள் என்று குறிப்பாக எதுவும் ஏற்பட்ட தில்லை. (இன்னும் இது பற்றிப் பேசவேண்டுமானால் விரிவான களம் வேண்டும்.) எனது மொழிபெயர்ப்பின் அடிப்படை, என் பரந்த படிப்பு. நான் படித்த துறைகள் மிகுதி. அநேகமாக கலையியல், மனிதவியல், அறிவியல் துறைகள் எல்லாவற்றிலும் எனக்குப் பரிச்சயம் உண்டு.

கலைச்சொல் உருவாக்கலில் பல சிரமங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதில் எனக்கு அக்காலக் கலைக்கதிர் பத்திரிகை, திரு. ஜி. ஆர். தாமோதரன் மேற்பார்வை யில் வெளிவந்த கலைச் சொல் உருவாக்க நூல்கள், மணவை முஸ்தபா வின் கூரியர் இதழ் போன்றவை ஊக்கமளித்தன. நானாகவும் நிறையச் சொற்களை மொழிபெயர்த்தேன். பொதுவாக, கலைச் சொல்லாக்கத் துறையில் எனக்கு முன்னர் இருந்தவர்கள் நல்ல பாதையை எனக்குச் செப்பனிட்டுத் தந்திருந்தார்கள் என்றே நினைக்கிறேன். குறிப்பான கலைச்சொல்லாக்கத்தைவிட, எடுத்துக் கொண்ட நூலின் கருத்து வாசகர்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதில்தான் எனது அக்கறை. தமிழ் பயின்றவன் என்பதைவிட அடிப்படையில் நான் ஓர் அறிவியல் மாணவன். பி.எஸ்சி இயற்பியல் எனது தலைமைப்பாடம். அதைப் படிக்கும்போதே விரிவாக அறிவியல்துறையில், குறிப்பாக மருத்துவத் துறையில் பல நூல்களையும் நான் படித்திருந்தேன்.

11. ‘கீழையியல் தத்துவம்’, ஸ்டீவ் புரூஷீன் ‘சமூகவியலின் அடிப்படைகள்’, ‘பின்நவீனத்துவம்’ ‘உலகமயமாக்கல்’, டிலான் இவான்சின் ‘உணர்வெழுச்சி ‘, டேவீட்எஃப் ஃபோர்டுவின் ‘இறையியல்’ என கோட்பாட்டு நூல்களை அதிகளவில் மொழிபெயர்த்து தந்த சிறந்த ஆளுமைகளில் நீங்களும் ஒருவர். இது தவிர கோட்பாட்டியல் சார்ந்து நிறையக் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து எழுதியுள்ளீர்கள்.அவ்வாறு மொழிபெயர்க்கும்போது சாதாரண தமிழில் பயின்று வராத சொற்களைத் தமிழ்ப்படுத்த வேண்டிய சூழல் உங்களுக்கு ஏற்படும். அவ்வாறு உங்களால் உருவாக்கப்பட்டு இன்று தமிழில் வழக்கத்தில் உள்ள கலைச்சொற்கள் குறித்து உங்கள் அனுபவப் பகிர்வுகளை எம்மோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? அடையாளம் பதிப்பகத்துக்காகவே இந்நூல்களை அதிகம் மொழிபெயர்த்திருந்தீர்கள் இது எதனால் விளைந்தது?

அடையாளம் பதிப்பத்துடனான என் தொடர்பு ஏறத்தாழ 2006இல் ஏற்பட்டது. முதன்முதலில் அவர் உலகமயமாக்கல் நூலை மொழிபெயர்த்துத் தர முடியுமா என்று கேட்டார். நான் இசைந்து மொழிபெயர்ப்புச் செய்தேன். அதிலிருந்து பல்வேறு துறைகளிலும் எனது மொழிபெயர்ப்புகள் அடையாளம் பதிப்பகத்துக்காகத் தொடங்கின. அடையாளம் பதிப்பகத்துடனான என் தொடர்பு, என் மொழிபெயர்ப்பு, கலைச்சொல் லாக்கப் பாதையில் ஒரு மைல்கல். பின்னர் சில நூல்களை எதிர் வெளியீட்டிற்காகவும் மொழிபெயர்த்தேன்.

முதன்முதலில் குளோபலைசேஷன் என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்துவதி லேயே ஒரு சிக்கல்- இதை உலகமயமாதல் என்பதா, உலகமயமாக்கல் என்பதா? “குளோபலைஸ்” என்ற சொல்லை ஆராயும்போது அது வேண்டு மென்றே (சிலரால்) செய்யப்படும் முன்னெடுப்பைத்தான் காட்டுகிறது. தானாக எதுவும் ‘குளோபலைஸ்’ ஆக முடியாது. எனவே உலகமயமாதல் என்பதைவிட உலகமயமாக்கல் என்பதே பொருத்தமாக இருக்கமுடியும். அதேபோல வெப்பமயமாதலா, வெப்பமயமாக்கலா? இம்மாதிரிச் சிறு சொற்கள் தொடங்கி, மிகத் துல்லியமான கலைச் சொற்களை உருவாக்குவது வரை பல நிலைகளில் சந்தேகங்கள் ஏற்படும். அவற்றை விரிவாக ஒரு நூலாகத் தான் எழுத முடியும்.

முதன்முதலில் நான் ஸ்ட்ரக்சுரலிசம் நூலைத் தமிழில் அளித்தபோதே (1990) நிறையக் கலைச் சொற்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த நூலிலேயே நூற்றுக்கணக்கான கலைச் சொற்களை நான் உருவாக்கியிருப்பதை நீங்கள் காண முடியும். தமிழவன் எந்தச் சிரமமும் படாமல் ஸ்­ட(?)ரக்சுரலிசம் என்றே தன் நூலுக்குப் பெயரிட்டிருந்தார். நான் (பொருள் அடிப்படையில்) அமைப்புமையவாதம் என்று அதைக் கையாண்டி ருந்தேன். பிறகு அச்சொல் அமைப்புவாதமாகி, இன்று அமைப்பியம் என்ற சொல்லாகியிருக்கிறது. இதிலிருந்தே, நான் பொருளை உணர்ந்து அதற் கேற்பச் சொல்லை உருவாக்குபவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இனிமேல்தான் நான் எந்தஎந்தச் சூழ்நிலையில் எந்தெந்தக் கலைச்சொற் களை என் நூல்களில் உருவாக்கியுள்ளேன் என்பதை ஆராய வேண்டும். இதை நானே செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை.  

முதன்முதலில் அமைப்புமைய வாதம், தொடர்பியல் கோட்பாடுகள் என்ற நூல்களை 1990இல் எழுதிய போதே கலைச்சொல் உருவாக்க முயற்சிகள் என்னிடம் தோன்றிவிட்டன. எவ்வளவு கலைச் சொற்களை நான் உருவாக் கியிருக்கிறேன், அது பற்றிய முறையான எனது நோக்கு என்ன என்பதைத் தனியாகத்தான் ஆராய வேண்டும்.

(வேறு செல்வாக்கு மிகுந்த ஆளாக இருந்தால் இதை ஆய்வு மாணவர்கள் இந்நேரம் செய்திருப்பார்கள்!)

பெரும்பாலும் எனது உள்ளுணர்வையும் என் அடிப்படையான அறிவுசார் நோக்கையும் நம்பியே நான் கலைச்சொற்களை உருவாக்குகிறேன். இதற்கு எனக்கு முன்னோடிகள் இல்லை.     

நான் உருவாக்கிய பலசொற்கள் இப்போது பொதுப் பயன்பாட்டில் உள்ளன. உதாரணமாக 1980இல் நான் உருவாக்கிய சொல் பின்னூட்டம் (Feedback) என்பது. இன்று அச்சொல் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது. நான் உருவாக்கி, இன்று பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்கள் பற்றி எனக்குக் கணக்குத் தெரியவில்லை. அதைப்பற்றி நான் மிகுதியாக அக்கறை கொள்ளவும் இல்லை. நம் நாட்டில் இண்டெக்ஸ் (Index-பொருளடைவு) என்பதை நூல்களில் சேர்க்கும் வழக்கம் இல்லை. என் நூல்கள் ஒவ்வொன்றுக்கும் அப்படி இண்டெக்ஸ் சேர்த்தால் நான் உருவாக்கிய சொற்களை எளிதாகவே கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

12. சமஸ்கிருதத்திலும் இந்திய ஆய்விலும் முனைவர் பட்டம் பெற்ற சமய வரலாற்று அறிஞர் வெண்டி டோனிகர் எழுதிய “இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு”  நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளீர்கள். இந்தியாவில் இந்நூலை ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட போது இந்நூலை தடை செய்யவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்துத்துவவாதிகள் வழக்குத் தொடுத்த சம்பவப்பின்னணி யையும் இதனை தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியநிலையும் ஏன் ஏற்பட்டது என்பதை எமக்கு கூறமுடியுமா?

வெளியான நூல்கள் தடைசெய்யப்படுவது போன்ற அரசியல் விஷயங் களில் நான் அதிகமாக அக்கறை காட்டியதில்லை. ஆங்கிலத்தில் நிறைய நல்ல நூல்களுக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். அதனால் அவற்றின் பிராபல்யமோ, மொழிபெயர்ப்புத் தன்மையோ குறைந்ததில்லை.

இம்மாதிரிச் சோதனைகள் எல்லாம் முடிந்தபிறகுதான் எதிர் வெளியீடு அனுஷ் இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு நூலுக்கான உரிமையை வாங்கி, என்னை மொழிபெயர்க்குமாறு சொன்னார். நூலை மொழிபெயர்க்கும் முன்பு அதை ஒருமுறை படித்துப் பார்ப்பது இயல்புதானே? அம்மாதிரி அந்த நூலைப் படிக்கும்போது அதைச் சிறப்பாக மொழிபெயர்த்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் ஏற்பட்டது. அப்போது அந்த நூல் பற்றிய வரலாற்றையும் தெரிந்து கொண்டேன். இதுபோலவே அடையாளம் பதிப்பகத்திற்கான ஒரு மதசம்பந்தமான நூலை மொழிபெயர்க்கும்போதும்  அனுபவம் ஏற்பட்டது. மொழிபெயர்ப்புக்கான நூல்களைப் பதிப்பகத்தினர் அளிக்கும்போதே இந்தப் பிரச்சினைகள் தீர்ந்தபிறகு அனுமதி வாங்கித்தான் செய்கிறார்கள். எனவே இதில் எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை. இருந்தால் பதிப்பகத்துக்குத் தான் இருக்கமுடியும்.

13. நவீன அரசியலின் இடர்பாட்டை விளக்கி நிற்கும் சிறந்த நூல்களில் ஒன்றே உங்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஹெரால்டு ஜே.லாஸ்கியின் ‘அரசியலின் இலக்கணம்’. இன்றைய சூழலில் அரசு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சர்வதேச உறவுகளின் முக்கியத்துவம் குறித்து இந்நூல் விளக்கிச் செல்கிறது. லாஸ்கியின் சிந்தனைகள் இந்திய அரசியலிலும் தமிழ்நாட்டிலும் பாரிய தாக்கத்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறதே இக்கருத்தின் உண்மைநிலை குறித்து கூறமுடியுமா?

லாஸ்கியின் சிந்தனைகள் இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் இதனை அன்றிருந்த, இன்றுள்ள அரசியல்வாதிகள் பலரும் படித்திருந்தால் இந்தியாவில் அரசியலின் போக்கே வேறுவிதமாகத்தான் இருந்திருக்க முடியும்.

அல்லது அரசியல்வாதிகள் படிப்பது வேறு, நடப்பது வேறு என்று காரணம் சொல்வீர்களா? அல்லது கட்சிகளின் கருத்தியல்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பீர்களா?

அறிஞர் அண்ணா இந்த நூலைப் படித்திருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. அவரது சமகாலத் தோழர்கள் (பேராசிரியர் அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோர்) இதைப் படித்திருக்கலாம். பின்னர் வந்த “அறிஞர்கள்” (இருபதாயிரம் நூல்களைப் படித்திருப்பதாகப் பெருமையடித்துக் கொண்ட ‘அறிஞர்கள்’ உட்பட) எவரும் இந்த நூலைப் படித்திருப்பர் என்று எனக்குத் தோன்றவில்லை.    இன்றைய நிலையில் இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பேராசிரியர்கள், அறிஞர்கள் சிலர் வாங்கிச் சென்று மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது என்று எழுதினர். அது எனக்கு மகிழ்ச்சியளித்தது.

14. கேரள எழுத்தாளர் மனுஜோசப் எழுதிய சீரியஸ்மென் நாவலை ‘பொறுப்பு மிக்க மனிதர்கள் என்ற பெயரில் தமிழாக்கம் செய்திருந்தீர்கள். இப்புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் சுதிர் மிஸ்ரா ஒரு திரைப்படத்தை வெளியிட்டார் என அறிய முடிகிறது. அது குறித்து ஏதேனும் கூறமுடியுமா? மற்றும் இந்நாவலை மொழிபெயர்த்தமைக்காக சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை 2016 ஆம் ஆண்டு பெற்றிருந்தீர்கள். வண்ணதாசனுக்கும் உங்களுக்கும் ஒரேகாலப்பகுதியில் இவ்விருது கொடுக்கப்பட்டது. அது குறித்த நினைவுகளை எம்மோடு இரமீட்டிப் பார்க்க முடியுமா?

சுதீர் மிஸ்ரா சீரியஸ் மென் என்ற தலைப்பிலேயே இந்தியில் இந்தப் படத்தை இயக்கி வெளியிட்டார் (2020) என்பதும், அவர் பல படங்களைச் சிறப்பாக இயக்கியவர் என்பதும் தெரியும். மற்றப்படி அதற்கு மேல் எனக்குச் செய்தி எதுவும் தெரியாது. அந்தப் படத்தைக் காணும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

தமிழ் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும், நல்ல வரவேற்புப் பெறும் என்பது எனக்கு அந்த நாவலை மொழிபெயர்த்தபோதே தெரியும்.   வண்ணதாசனுக்கும் எனக்கும் விருதுகள் ஒரேசமயத்தில் தரப்படவில்லை. எனக்கு மொழிபெயர்ப்புக்கான விருது அகர்தாலாவில் தனியாக அளிக்கப் பட்டது. அவருக்கு தில்லியில் அளித்தார்கள் என்று கேள்விப்பட்டேன். அக்காலப்பகுதியே குழப்பமானதாக இருந்தது. ஏன் என்று எனக்கு இப்போது நினைவில்லை.

15. அண்மைக்கால மொழிபெயர்ப்புகள் பல குறைபாடுகள் உடையதாகவே வருகிறது. குறிப்பாக வியாபாரச் சந்தைகளை மையப்படுத்தி இம் மொழிபெயர்ப்புக்கள் செய்யப்படுவதால் தரமான மொழிபெயர்ப்புகளை வாசகர் கண்டடைய முடியாமல் போகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. இக்கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?

நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டு உண்மையே என்பதை அனுபவத்தில் என்னால் உணர முடிகிறது. குறிப்பாகச் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகச் சந்தை நிகழும்போது இது பெரிய வேதனையையே ஏற்படுத்துகிறது. கிழக்கு போன்ற பெரிய பதிப்பகங்கள் பல தாறுமாறாக மொழிபெயர்ப்பு நூல்களை, அவற்றின் தேவை தரம் தகுதி பற்றிய எண்ணம் எதுவுமின்றி வெளியிடுகின்றன. விற்கும் என்று தெரியவந்தால் போதும், வெளியிட்டு விடுவார்கள்! இன்றுள்ள மோசமான நிலைக்குப் பதிப்பகங்களே காரணம்.

மொழிபெயர்ப்பாளர்கள் பதிப்பாளர்களை நம்பியே வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஒரு நல்ல நூலை மொழிபெயர்த்தால்கூட, இது மார்க்கெட்டில் நன்றாகப் போகுமா என்று “ஆராய்ந்து தெளிந்த” பிறகே பதிப்பாளர்கள் எங்களிடமிருந்து பிரதியைப் பெறுகின்றார்கள். அல்லது

சந்தையை முன்வைத்து, இந்தக் குறிப்பிட்ட நூலை மொழியாக்கம் செய்யமுடியுமா என்றுதான் பதிப்பகத்தினர் எங்களைக் கேட்கிறார்கள். சந்தையில் விற்காவிட்டால் நாங்கள் ஏன் வெளியிட வேண்டும் என்பது அவர்களின் கேள்வி. நூலின் தற்காலத் தேவை பற்றியோ, தரம் பற்றியோ அவர்களுக்கு அக்கறை இல்லை.    அண்மையில் இந்த நிலை மாற வாய்ப்பில்லை என்பதுதான் என் கருத்து. ஒரு நூலைப் பதிப்பித்தல் என்பது அதிகமாகப் பணம்போட்டு, விற்கும் என்ற எதிர்பார்ப்பை நம்பிச் செய்யப்படும் ஓர் ஊகவணிகம். இதில் மொழிபெயர்ப்புக்குச் சாதகமான நிலை நிலவவில்லை என்பது உண்மை.


கறை படிந்த எல்லைநிலம்

டாக்டர் பனீஸ்வரநாத் ரேணுவின் மைலா ஆஞ்சல் (கறைபடிந்த எல்லைப்பகுதி) என்பது இந்தியில் எழுதப்பட்ட முக்கிய நாவலாகும். பிரேம்சந்தின் கோதான் நாவலுக்கு அடுத்த நிலையில் இந்தியில் இரண்டாவது சிறந்த படைப்பாக வைத்து இது எண்ணப்படுகிறது. இந்த நாவலில் காணப்படும் அளவுக்குச் சாதி வெறியும் ஆணவக் கொலைகளும் தமிழகத்தின் தென் பகுதியில் காணப்பட்டாலும், இதே அளவுக்குச் சாதிப் பிளவுகளை, பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். சுமார் 200க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ள இந்த நாவலில் சாதிக்கு அப்பால் இயங்காதவர்கள் அபூர்வம்

.இது மைதிலி நாவல். மைதிலி இந்திய தேசிய மொழிகளில் ஒன்றாக தனியாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இதை இந்தி நாவல் என்றே சொல்வது மரபாக உள்ளது. மிதிலைப் பகுதியில் (பிஹார் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதி) பேசப்படும் மொழி மைதிலி. இது ஒரு வட்டார நாவல். இந்த நாவல் 1950களின் தொடக்கத்தில் வெளிவந்தது.

இந்திய சுதந்திரம் கிடைத்த வேளையில் மிதிலை நாட்டார் கதைகளையும் பாடல்களையும் பலவிதக் காதல்கதைகளையும்  கிராமப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டது இந்த நாவல். இதனால் கிராமப்புற வட இந்தியாவின் ஓர் அரிய சித்திரம் நமக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு தனிமனிதனின் கதையோ குடும்பத்தின் கதையோ அல்ல. ஒரு கிராமத்தின் கதை. எனவே இதில் தொடர்ச்சியான சிறுசிறு சம்பவங்கள் மட்டுமே உள்ளன. டாக்டர் பிரசாந்த்-கமலா, பாலதேவ்-லட்சுமி, காளிசரண்-மங்கலாதேவி, கலாசி-பூலியா என்ற நான்கு காதல் கதைகள் உள்ளன.

பிஹாரின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மேரீகஞ்ச் என்ற கிராமத்தில் கதை நிகழ்கிறது. 1946இல் இங்குள்ள ஆஸ்பத்திரியில் பிரசாந்த் குமார் என்ற லட்சிய பூர்வ டாக்டர் மலேரியா, காலாஅஜார் போன்ற நோய்களை குணப்படுத்த வருகிறான். கிராம மக்கள் அவனை மதிக்கின்றனர். (இவன் பூர்வகதை விரிவாகச் சொல்லப் பட்டுள்ளது. இவன் ஓர் அநாதைக் குழந்தை. பெற்றவள் கோசி ஆற்றில் போட்டுவிட்டுப் போய்விடுகிறாள். ஒரு நேபாளி பிராமணக் குடும்பம் தங்களது ‘ஆதர்ச ஆசிரமத்தில்’ இவனை விடுகிறது. அதை ஸ்நேகமயி என்பவள் மேற்பார்வை செய்கிறாள். அவள் வளர்ப்பினாலும் உதவியாலும் இவன் மெட்ரிகுலேஷன் படித்த பிறகு வாராணசிக்கு மருத்துவம் படிக்க வருகிறான். முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிப்பவன், ஒத்துவராமல் பிறகு பட்னா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்கிறான். பிறகு கிராமப்புற மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் இந்த மூலைமுடுக்கு கிராமத்துக்கு வருகிறான்.) இந்த டாக்டர் ‘பாபு’ நோய்களை மட்டுமல்ல, மக்களின் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது.

தாசில்தார் விசுவநாத் பிரசாத்தின் மகள் கமலாவை அவன் குணப் படுத்தும்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. கமலா கருவுறுகிறாள். இடையில் பிரசாந்த் ஒரு கம்யூனிஸ்ட் எனக் கைது செய்து பிறகு விடுவிக்கப்படுகிறான். கமலாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. நீலோத்பல் என்று அவனுக்குப் பெயர் வைக்கப்படுகிறது.

பாலதேவ் ஓர் இடையன் (யாதவ்). காங்கிரஸ் கட்சிக்காரன். அருகிலுள்ள பூர்னியா நகரைச் சேர்ந்தவன். அவன் அழகான தூய இந்தியில் காந்தியத்தைப் பேசுகிறான். ஆனால் அவன் பேசும் இந்தி இந்த மக்களுக்குப் புரியாத ஒன்று. இந்த கிராம மக்களை வைத்து ஒரு சுதந்திர ஊர்வலம் நடத்துகிறான். மஹந்த் சேவாதாஸ் என்பவன் கபீர் மடம் என்ற ஒன்றை நடத்துகிறான். அதில் வேலை செய்யும் லட்சுமி என்பவளை வைத்திருக்கிறான். ஆனால் அவள் வேலையைவிட்டு பாலதேவுடன் வாழச் செல்கிறாள்.

காளிசரண் என்பவனும் இடைச்சாதிதான். அவன் சிறந்த மல்யுத்த வீரன். அவன் காங்கிரஸ் கட்சியை விட்டு சோஷலிஸ்ட் கட்சிக்கு மாறி, உழைப்பாளர்கள், சாந்தலர்கள் ஆகியோரை வைத்து ஓர் அமைப்பைக் கட்டுகிறான். சர்க்காவில் நூற்கும் மங்கலா தேவி என்ற ஆசிரியையைக் காதலிக்கிறான். ஆனால் சோஷலிஸ்டுகள் கைதுசெய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகிறான்.

கலாசி என்பவன் ஒரு ஓஜா. மந்திரவாதி. நன்றாகப் பாடுபவன், நன்றாக கஞ்சிரா வாசிக்கிறான். தத்மா பகுதியின் பூலியா என்ற பெண்ணைக் காதலித்து மிகுந்த முயற்சிக்குப் பின் மணக்கிறான்.

கிராம மக்கள் சாதிக்கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது, ஆண்களைப் பெண்கள் எதிர்த்துப் பேசக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளனர். உதாரணமாக மஹந்த் முழு கிராமத்துக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்கிறான்.

*பிராமணர்கள்- எங்களுக்குத் தனியான சிறப்பிடம் ஒதுக்கப்படாவிட்டால் சாப்பிடமாட்டோம்

*சிப்பாய்கள்- நாங்கள் நாட்டுக்காக போராடியவர்கள். மற்றவர்களுடன் சரிசமமாக உண்ண எங்களால் முடியாது.

*ஹிபரன் சிங்- எங்கள் சாதியினர் மாடுமேய்ப்பவர்களுடன் சமமாக அமர்ந்து உண்ணமாட்டார்கள்.

*யாதவர்கள்- தானுக்குகளுடன் சமமாக அமர்ந்து யாதவர்கள் உண்ணமாட்டார்கள்.

விருந்து எவ்வளவு நன்றாக நடந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

இடையில் மஹந்த் சேவாதாஸ் இறக்க, காசியிலிருந்து வரும் ஒருவன் மஹந்த் ஆக முயலுகிறான். அங்கேயே பணியில் இருந்த ராமதாஸை காளிசரண் மஹந்த் ஆக்குகிறான். அவன் வைப்பாட்டியாக ராம்பியாரி என்பவள் தன் குழந்தைகளுடன் அந்த மடத்திலேயே வசிக்கிறாள்.

மாறிவரும் காலத்தை தாசில்தார் விஸ்வநாத் உணர்கிறான். அவன் செல்வாக்கும் சரிகிறது. தன் பதவியைத் துறந்து காங்கிரஸ் உறுப்பினன் ஆகிறான். இடையில் ஓர் இந்துத்துவ கும்பல் (கருந் தொப்பிக்காரர்கள்) நிலைபெற முயல்கிறது. அதன் தலைவனாக ராம் கிர்பால் சிங்கும் அவனைச் சேர்ந்த ராஜபுத்திரர்களும் இருக்கிறார்கள். சாந்தலர்களும் கீழ்ச்சாதியினரும் சோஷலிஸ்டு கட்சியில் சேர்கிறார்கள். ஆனால் அது ஊழல்மிக்க கட்சியாகிறது. பவன்தாஸ் என்ற குள்ளன் காந்தியுடன் இருந்தவன். அவன் மேரிகஞ்சிற்கு வருகிறான். அப்போதுதான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதை மேரீகஞ்சினர் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

காந்தி இறக்கிறார். கிராமத்தினர் துக்கம் கொண்டாடுகின்றனர். பவன்தாஸ், தன் கட்சியின் ஊழல், சாதிப்பற்று இவற்றால் மனம் நொந்து போராடும்போது ஒரு மாட்டுவண்டியின் அடியில் சிக்கி இறக்கிறான். அவன் உடல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தூக்கி வீசப்படுகிறது.

ஒரு நிலச்சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதன் அடிப்படையில் நிலவுரிமை கேட்டு சாந்தலர்களும் கிராமவாசிகளும் நீதிமன்றம் செல்கின்றனர். அவர்கள் வழக்குகள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. இடையில் காங்கிரஸ் கட்சி ஜமீன்தாரி முறை ஒழிந்தது என்று அறிவிக்கிறது. கிராமத்து நிலம் ஏலம் விடப்படும்போது பணக்காரர்கள் நிலங்களை வாங்கிக் கொள்கிறார்கள். எங்கும் குழப்பமும் போட்டியும். விஸ்வநாத் பிரசாத் பழைய நிலவுடைமை முறைக்கே மாறுவோம் என்று சொல்லிப் பஞ்சாயத்துக்கு அழைக்கிறான். ஆனால் வன்முறை வெடிக்கிறது. சாந்தலர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். மிச்சம்மீதி இருப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஜோத்கி என்ற பார்ப்பனப் பூசாரி, கீழ்ச்சாதி மக்களால்தான் கலகமும் அமைதியின்மையும் ஏற்பட்டது, டாக்டர்கள் விஷ ஊசிபோட்டு நோயைப் பரப்புகிறார்கள், என்றெல்லாம் பிரசாரம் செய்கிறான். அவனை அனைவரும் நம்புகிறார்கள். டாக்டர் பிரசாந்த் ஊரைவிட்டு ஓடும் நிலை ஏற்படுகிறது. டாக்டர் இல்லாததால் ஜோத்கி ஒரு கைம்பெண்ணைப் பேய்பிடித்தவள் என்று சொல்லிக் கொல்லச் செய்கிறான். இப்படி நாவல் முடிகிறது.

இருந்தாலும் ஒரு உடன்பாட்டு மனநிலையில்தான் நாவல் முடிகிறது. டாக்டரும் விஸ்வநாத்தும் மனம் ஒன்றாகின்றனர். கிராம மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விஸ்வநாத், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து பிகா (ஒரு பிகா என்பது இன்றைய அளவில் 0.619 ஏக்கர்) நிலத்தை தானமாக அளிக்கிறான்.


சூளாமணி

சூளாமணி என்பது தமிழிலுள்ள காப்பியங்களில் ஒன்று. இதைச் சிறுகாப்பியம் என்று வழக்கமாகக் கூறிவந்தாலும், இது சீவக சிந்தாமணி போன்ற பெருங்காப்பியமே என்று இலக்கிய வரலாற்றாசிரியர் மு. அருணாசலம் கூறுவார். இது ஏறத்தாழ கி.பி. பத்தாம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டிருக்கலாம். சீவக சிந்தாமணியைப் போன்ற காப்பியம் ஒன்று எழுத சமண மதத்திற்கென எழுத வேண்டும் என்ற எண்ணத்தால் இதன் ஆசிரியர் தோலாமொழித் தேவர் இதை எழுதியிருக்கலாம். மதம் சார்ந்த கதைகள் எல்லாம் (இன்றைய திரைப்பட பக்திப் படங்கள் போல) வெறும் அற்புதச் செயல் புனைவும் இறுதியாக இறைவனை அடைதலும் என்ற பண்புகளை மட்டுமே கொண்டவை. அற்புதச் செயல்களைப் போற்றுவது எந்த மதத்திற்கும் நன்மை தருவதன்று. மூடநம்பிக்கையை வளர்க்கவே உதவும்.  

சீவக சிந்தாமணிக்குப் பிற்பட்ட தமிழ்க் காப்பியங்கள் அனைத்தும் இன்றைய திரைப்படக் கதைப் பாணியைக் கொண்டவைதான். அதாவது எல்லாரையும் வெல்லக்கூடிய ஒரு தலைவன் (கதாநாயகன்). அவன் அநீதியை எதிர்த்துச் (!) செய்யக்கூடிய வீரச்செயல்கள். அவனுக்கேற்ற ஓர் அழகான கதாநாயகி. பிறகென்ன? திருமணம். அவ்வளவுதான். ஆனால் சமணக் காப்பியங்கள் இத்துடன் நிற்காமல் அந்த அரசனோ அவனைப் பெற்றவனோ துறவு கொள்வதையும் சம்பிரதாயமாகச் சொல்லுபவை. இருந்தாலும், இந்தக் கதையைச் சற்றே காண்போம்.

சுரமை என்று ஒரு கற்பனை நாடு. அதன் தலைநகர் போதனம் என்ற நகரம். அதை பயாபதி என்ற அரசன் ஆண்டு வருகிறான். அவனுக்கு மிகாபதி, சசி என இரண்டு மனைவியர். இவர்களுக்கு விசயன், திவிட்டன் என்ற குழந்தைகள் பிறக்கின்றனர். இங்கிருந்தே விசயனை பலராமனுடனும், திவிட்டனை கண்ணனுடனும் ஒப்பிடும் ஒரு மோசமான போக்கினை தொடங்கிவைத்துவிடுகிறார் ஆசிரியர். நல்ல வேளை, இவன் கண்ணனைப் போல கீதை உரைக்கத் தொடங்கிவிடவில்லை. ஆனால் கண்ணன் கோவர்தன மலையைத் தூக்கியது போலவே இவனும் ஒரு மலையைத் தூக்குகிறான், கண்ணனைப் போலவே ஆற்றில் குளிக்கும் பெண்களின் உடைகளைக் கவர்ந்து இரசிக்கிறான். சும்மா சொல்லக்கூடாது இந்தியக் காப்பியங்களை! (இதுவும் வடமொழிக் காப்பியத்தின் தழுவல்தான்). அப்புறம் இன்று நித்தியானந்தாக்கள் உருவாகாமல் வான்மீகிகளா வருவார்கள்? புராண கால பலராமனைப் போலவே இந்த விசயனும் எதுவும் செய்வதில்லை.

இது இவ்வாறிருக்க, வித்யாதர நாட்டின் ஒரு பகுதியில் சுவலன சடி என்ற அரசன் ஆண்டுவருகிறான். அவனுக்கு அருக்க கீர்த்தி என்ற மகனும் சுயம்பிரபை என்ற மகளும் உள்ளனர். சுயம்பிரபை பிறந்தபோதே அவள் ஒரு மானிடனை (நம் கதாநாயகனைத்தான்) திருமணம் செய்வாள் என்று ஜோசியன் கூறிவிட்டான். அதற்குச் சான்றாக, திவிட்டன் இன்னும் ஒரு மாதத்தில் ஒரு சிங்கத்தைக் கொல்வான் என்கிறான்.

சடி, தன் ஒற்றர்களை வைத்து திவிட்டன் சிங்கத்தைக் கொல்கிறானா எனக் கண்காணிக்கிறான். இதற்கிடையில் வித்தியாதர நாட்டு வடக்குப் பகுதியில் ஆளும் அச்சுத கண்டன் என்ற அரசன், சுவலன சடி வித்தியாதர மகளை ஒரு மானிடனுக்கு மணமுடித்துத் தருகிறானே என்ற முடிவால் கோபமுற்று, திவிட்டன் நாட்டின்மீது படைகளை ஏவுகிறான். அவற்றை எளிதாக திவிட்டன் வெல்லவே, அவனது அமைச்சன் ஒரு தூதனைச் சிங்க வடிவத்தில் சென்று மக்களைக் கொல்லுமாறு கூற, அவனை திவிட்டன் விரட்ட, அவன் பயந்துபோய் உண்மையான சிங்கம் இருந்த ஒரு குகைக்குள் புகுந்து ஓடிப்போகிறான். குகையிலிருந்து உண்மையான சிங்கம் வெளிவரவும், திவிட்டன் அதன் வாயைப் பிளந்து கொல்கிறான்.

சுவலனசடி ஜோசியன் கூறியது உண்மையே என உணர்ந்து, போதனமாபுரம் வந்து, தன் மகளைத் திவிட்டனுக்குத் திருமணம் செய்கிறான். இப்போது அச்சுவ கண்டன் தன் முழுப் படைகளோடு வந்து தாக்க, போர் நடக்கிறது. போரில் திவிட்டனுக்கு சங்கும் சக்கரமும் (திருமாலின் ஆயுதங்கள்) வந்து தாங்களாகவே பொருந்துகின்றன. கருடன் வந்து வாகனமாக அமைகிறது. கம்சனைக் கண்ணன் அழித்தது போல அச்சுவ கண்டனை திவிட்டன் அழிக்கிறான்.

காலப்போக்கில், சுயம்பிரபைக்கு ஒரு மகனும் மகளும் பிறக்கின்றனர். சுவலனசடியின் மைந்தனான அருக்க கீர்த்திக்கும் ஒரு மகனும் மகளும் பிறக்கின்றனர். உரிய காலத்தில் இவர்களுக்கும் திருமணம் நடக்கிறது.

பயாபதி மன்னனுக்கு வயது மிகுதியாக ஆகிறது. துறவு மேற்கொள்ள வேண்டிய அவன், தன் அமைச்சர்களைக் கேட்கும் கேள்விகள் சிறுபிள்ளைத் தனமாக உள்ளன. கூற்றுவன் (எமன்) எதற்காக வருகிறான்? எதை எடுக்கப் போகிறான்? அவனிடமிருந்து எப்படித் தப்பலாம்? என்றெல்லாம் கேட்கிறான். அவன் அமைச்சர்களோ, “அரசே, எமனிடமிருந்து தப்பும் வித்தையை நாங்கள் கற்கவில்லையே” என்று பதிலளிக்கிறார்கள். பிறகு அரை மனதாக பயாபதி தன் மனைவியரோடு (!) துறவு மேற்கொண்டு உரிய காலத்தில் அருகன் அடி அடைகிறான். விஜயனும் திவிட்டனும் சிறப்பாகத் தங்கள் நாட்டை ஆண்டு வருகின்றனர்.

எவ்விதத் திருப்பமும் அற்ற, நேரான கதை. திவிட்டன் பிறந்தான் – வளர்ந்தான் – பகைவரை வென்றான் – திருமணம் செய்தான் – அரசாட்சி பெற்றான், அவ்வளவுதான்.

இந்தக் காப்பியம் மகாபுராணம் என்ற வடமொழிச் சமணக் காப்பியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது என்பர். சமணக் காப்பியங்கள் சிலப்பதிகாரத்தைப் பின்பற்றிச் சுயமான படைப்பில் இறங்கியிருந்தால் நல்ல தமிழ்ப் படைப்புகளை உருவாக்கியிருக்கலாம். புலமை சிறப்பாக இருந்தும் என்ன காரணமோ, இம்மாதிரிப் புலவர்கள் வடமொழியில் இயற்றப்பட்ட மேருமந்தர புராணம், சாந்தி புராணம், நாரத சரிதை போன்ற எண்ணற்ற புராணங்களிலிருந்து தங்கள் கதைகளை எடுத்துக் கொண்டனர். சுயதூண்டலின்றி, உந்துதல் இன்றி, பார்த்துச் செய்ய வேண்டும் என்பது எவ்வளவு மோசமாக அமைந்துவிடும் என்பதற்கு இந்தச் சமணப் புராணங்களைக் கண்டாலே போதுமானது.

இதற்குப்பின் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸ்ரீபுராணம் என்ற நூலும் இதே கதையைச் சொல்கிறது. இது தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. சமணர்களும், இராமானுஜர் வழிவந்த ஸ்ரீவைணவர்களுமே தமிழில் மணிப்பிரவாளம் என்ற போக்கினை உருவாக்கியவர்கள். மதத்தால் மொழிக்கு நேர்ந்த கேடுகளில் இதுவும் ஒன்று.

இப்படித்தான் பத்தாம் நூற்றாண்டு முதல் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் வருகை வரை தமிழ்ப் புராணப் படைப்புகள் இருந்தன. விஜயநகரப் பேரரசு வந்த பிறகு அவர்கள் தெலுங்கிற்கு மட்டுமே ஆதரவளித்ததால் புராணங்களும் மறைந்து தமிழில் சிற்றிலக்கியங்கள் மட்டுமே தோன்ற ஆரம்பித்தன என்பது வரலாறு.


மரணப்படுக்கையில் நான் கிடந்த வேளையில்

“மரணப்படுக்கையில் நான் கிடந்த போது” (As I lay dying) என்பது அமெரிக்க நவீனத்துவ எழுத்தாளர்களில் சிறந்தவராகக் கருதப்படும் வில்லியம் ஃபாக்னர் எழுதிய நாவல் (1930). இவரது மற்றொரு புகழ்பெற்ற நாவல் The Sound and the Fury. As I lay dying நாவலைவிட அது செறிவானதாகவும் கடினமானதாகவும் கருதப்படுகிறது.

As I lay dying பாதி வேடிக்கையும் பாதி வேதனையுமாகச் செல்கின்ற விசித்திரமான நாவல். இதன் சம்பவங்கள் நினைத்துப் பார்க்கும்போது “இப்படியெல்லாம் நிகழக்கூடுமா” என வேடிக்கையாகவும் இருக்கின்றன. அவற்றின் அடியாக இருக்கின்ற பல்வேறு கவலைகள், வறுமை, நல்ல பண்புகள், மோசமான தீய மனநிலைகள் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கும்போது வேதனையாகவும் உள்ளன. நாவலில் வரும் கதாபாத்திரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. இவற்றிற்கிடையிலும் இறந்த மனைவியைப் புதைத்தவுடனே தன் அடுத்த மனைவியை அறிமுகப் படுத்துகின்ற குடும்பத் தலைவனின் மனநிலை பிரமாதம்!

இந்த நாவலில் 59 பகுதிகள் உள்ளன. அவை பதினைந்து கதாபாத்திரங்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. முதல் பகுதி டார்ல் பண்ட்ரனால் சொல்லப்படுகிறது. அவனது சகோதரர்கள் கேஷ், ஜுவல். நாவலின் தொடக்கத்தில் இவர்களின் தாய் அடீ பண்ட்ரன் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். சில நாட்களில் இறந்துவிடுவாள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏழைக் குடும்பம். 1920களின் காலம். குடும்பத்தில் கொடிய வறுமை.

அடுத்த சில பகுதிகளில் அன்சே (அவர்களின் தகப்பன்), சிறிய தம்பி வர்தமான் (சுமார் 7 வயது சிறுவன்), டூயி டெல் என்ற தங்கை (17 வயது) யாவரும் அறிமுகமாகின்றனர். கேஷ் ஒரு நல்ல தச்சன். தன் தாய்க்கான சவப்பெட்டியை அவள் அடுத்த அறையின் ஜன்னலில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே செய்து முடிக்கிறான். ஜுவலும் டார்லும் வெறும் மூன்று டாலர் ஊதியம் கிடைக்கும் ஒரு வேலைக்காக வெர்னான் என்ற நகருக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்கள் திரும்பிவருவதற்குள் அடீ இறந்து விடுகிறாள். அவள் இறந்த இரவு பெரும் புயல், மழை.

அவளது கடைசி ஆசை ஜெஃபர்சன் என்ற தன் சொந்த ஊரில் புதைக்கப்பட வேண்டும் என்பது. 15 மைல் தொலைவு என்றாலும் இந்த ஊரிலிருந்து அதற்குச் சரியான பாதை இல்லை. இருந்தாலும் இறந்தவளின் இறுதி ஆசைக்கு மதிப்புக் கொடுத்து ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளப் படுகிறது.

குடும்பம் அடீயின் சவத்தை ஒரு மாட்டு வண்டியில் வைத்து ஜெஃபர்சனுக்குப் பிரயாணத்தைத் தொடங்குகிறது. பல சமயங்களில் உணவின்றியும், ஆங்காங்கு தானியம் அடிக்குமிடங்கள் போன்ற இடங்களில் தங்கியும் செல்கிறது.

ஏற்கெனவே கேஷின் கால் உடைந்திருக்கிறது. டெல் திருமணமாகாமலே கர்ப்பமாக இருக்கிறாள். மோசமான வானிலை. மீண்டும் கேஷின் கால் உடைந்து விடுகிறது. வழியில் வெள்ளம் பெருகிய ஆற்றைக் கடக்கும்போது வண்டிமாடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. மற்றவர்களும் அநேகமாக மூழ்கிவிடுகின்றனர். ஆற்றில் சவப்பெட்டி ஏறத்தாழ அமிழ்ந்தே போகிறது. வர்தமான் ஆற்றில் பார்க்கும் மீனும் செத்துப்போன தன் தாயும் ஒன்று என்று  நினைத்துக் கொள்கிறான். இருப்பினும் வண்டியையும், பிறரையும், சவப் பெட்டியையும் ஜுவல் ஒருவனே தன்னந்தனியனாகக் காப்பாற்றுகிறான். ஜுவல் ஒரு குதிரை வைத்திருக்கிறான். அதன்மீது அவனுக்கு அளவற்ற அன்பு.

அடீயின் பழைய கதை அவளாலேயே சொல்லப்படுகிறது. விட்ஃபீல்டு என்ற மதகுருவின் தொடர்பில் பிறந்த ஜுவல்மீது மட்டும் அவளுக்குப் பாசம். அவன்தான் தன்னைக் காப்பவன் என்கிறாள். ஆனால் தனது பிற நேரிய பிள்ளைகள்மீது பாசம் கிடையாது.

கேஷின் காலை சரிப்படுத்த அதன்மீது சிமெண்டை ஊற்றுகிறான் அன்சே. ஜுவலின் குதிரையை அவனுக்குத் தெரியாமல் விற்று வண்டிமாடுகள் வாங்குகிறான். பல ஊர்கள் வழியாக இந்த ஊர்வலம் செல்லவேண்டி யிருக்கிறது. சவப்பெட்டியிலிருந்து வரும் துர்நாற்றம் தாங்க முடியாததாக இருக்கிறது. மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள். தங்க இடமும் தருவதில்லை.

கடைசி இரவில் ஜில்லஸ்பீ என்பவனின் பண்ணையில் தங்குகிறார்கள். டார்ல் நாற்றமடிக்கும் பிணத்தை எரித்துவிடலாமென்று அங்கிருந்த வைக்கோல் முதலியவற்றைக் கொளுத்திவிடுகிறான். ஆயினும் ஜுவல் எப்படியோ சவப்பெட்டியைத் தீயிலிருந்து காப்பாற்றிவிடுகிறான்.

ஜெஃபர்சன் ஊருக்கு குடும்பம் வந்து சேர்கிறது. டூயி டெல் தன் கருவைக் கலைக்க மாத்திரை வாங்குவதற்காக முன்பின்தெரியாத ஒருவனுடன் உறவு கொள்கிறாள். ஆனால் அது கருக்கலைப்பு மாத்திரை அல்ல, வெறும் முகப்பவுடர் என்று பின்னால் தெரிகிறது. அவளது பணத்தை அவள் அப்பன் அன்சே தனக்குப் பல்செட் வாங்குவதற்காக எடுத்துக் கொண்டு போய்விடுகிறான். ஊரின் டாக்டர் கேஷின் உடைந்த காலின்மீது சிமெண்ட் ஊற்றியதால் அது அழுகிப்போய்விட்டது என்கிறார். ஜிலெஸ்பீ பண்ணையை டார்ல் கொளுத்தியதற்காக தண்டனையிலிருந்து தப்ப அவன் மனநிலை பிறழ்ந்தவன் என்று பொய் சொல்லவேண்டிவருகிறது. அவனை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்கின்றனர். அன்சே அடீயின் உடலைப் புதைக்கிறான். குழிதோண்டுவதற்கு கடப்பாறை, மண்வெட்டி முதலியவற்றை ஒரு பெண் கடனாக அளிக்கிறாள். அவளோடு அன்சே காதலில் ஈடுபடுகிறான். தன் பிள்ளைகளுக்கு அவளைத் தன் புது மனைவி என்று அறிமுகம் செய்கிறான்.


என் கடவுள் கொள்கை

மதங்களும் ஆன்மிகவாதிகளும் சொல்வது போன்ற கடவுள் என்பது கிடையாது என்பதுதான் என் கடவுள் கொள்கை.

உலகில் இருப்பது பொருள்தான், அதுதான் சிந்தனை தோன்றுவதற்கு ஆதாரம். ஆகவே நான்  பொருள்முதல் வாதி. கடவுள் என்பது மனநோய் பிடித்தவர்களின் கற்பனை. Illusion. கடவுள் உண்டு என்று சொல்பவன் முட்டாள் என்று பெரியார் கூறினார். கடவுள் மனநோய் பிடித்தவர்களின் கற்பனை என்கிறேன் நான். உலகின் பெரும்பகுதி மக்கள் மனநோய் பிடித்தவர்கள் தான்.

ஹிஸ்டீரியா போன்ற இலேசான பிறழ்வுகளையும் நாம் மனநோய் என்றுதான் சொல்கிறோம். அந்த அர்த்தத்தில்தான் மனநோய் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். மனநோய் என்றால் உடனே பைத்தியம் பிடித்து சட்டையைக் கிழித்து அலைபவன் என்பது அல்ல பொருள்.

ஆனால், அதோ பார், மலைக்குமேல் மகரஜோதி ஆகாயத்தில் தெரிகிறது என்றால் கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகொண்டு கும்பிடுகிறானே அவனுக்கும் பைத்தியத்துக்கும் வித்தியாசம் in degrees only. கொஞ்ச அளவில்தான். அதனால்தான் மதவெறி பிடித்தவர்கள் பிறரைக் கொல்லும் அளவுக்கும் செல்கிறார்கள், பெற்ற பிள்ளைகளை பலி கொடுக்கும் அளவுக்கும் செல்கிறார்கள். சிறுத்தொண்டன் யார்?    

பொருள் என்பதைவிட்டு சிந்திக்க முடியாது. கடவுள் என்பதற்கே, கடந்தும் உள்ளும் இருக்கின்ற “பொருள்” என்றுதானே “பொருள்” சொல்கிறார்கள்?

கடவுள் என்றால் கடந்தும் உள்ளும் இருப்பதல்ல. கடவுகின்ற ஒன்று, கடவுள். நம்மை செலுத்துவது என்பது கடவுவது. நம்மை செலுத்துவது மனம். சிலசமயங்களில் புற நிகழ்வுகளும்தான் நம்மைச் செலுத்துகின்றன.. அதனால் கடவுள் என்பதை இன்னது என்று சொல்ல முடியாது.

உடனே மனம் என்றால் என்ன, எங்கிருந்து வந்தது என்று ஆரம்பித்து விடாதீர்கள். அதை இன்னொரு சமயம் விரிவாகப் பார்க்கலாம்.

கடவுள் இல்லை என்பதால் நான் இந்துவோ, கிறித்துவனோ, முஸ்லிமோ அல்ல. எல்லா மதங்களுமே மனநோய்கள் என்றால், இந்து மதம் என்பது வெறும்/பெரும் பைத்தியக்காரர்களின் உலகம். அதனால்தான் “எல்லா மக்களும் சமம் அல்ல, ஒருவன் பிரம்மனின் தலையில் பிறக்கிறான், மற்றொருவன் பாதத்தில் பிறக்கிறான் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். சாதிகள் உண்டு” என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை உலகில் ஒரே சாதிதான். அது இறப்பவர்களின் சாதி. இறக்காதவன் உலகில் எவனாவது இருந்தால் சொல்லுங்கள்.

உடனே பலர் அந்த சாமியார் இருந்தான், இந்தச் சித்தன் இருந்தான், அவர்கள் இறக்கவில்லை, வானத்தில் மிதக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் காட்டு என்றால் காட்ட மாட்டார்கள். நீ உன் மனத்துக்குள் பார் என்றெல்லாம் கப்சா விடுவார்கள். எல்லாருக்கும் ஒரே கதிதான், அது இறப்பு. சிலர் மனத்துக்குள் பார் என்றால் ஒரே ஹிப்னாடிசத் தூக்கத்தில் ஆழ்ந்து மரக்கட்டை போல் உட்கார்ந்திருப்பார்கள். (Self-hipnotism) அதற்குப் பெயர் தியானம் என்பார்கள்.

பிறப்பென்றால் என்ன, அது எப்படி நேர்ந்தது, இறப்பு என்றால் என்ன, அதற்குப் பின் என்ன என்றெல்லாம் நான் ஆராய்வதில்லை. நம்மால் ஆராய முடியாத விஷயங்கள் உலகத்தில் பல உள்ளன. இங்கிருந்து ஒரு 500 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் பொருளை–அப்படி ஒரு நட்சத்திர மண்டலம் இருக்கிறதென்றால்–காட்டு என்றால் காட்ட முடியுமா? பார் என்றால் பார்க்க முடியுமா? இவை எல்லாம் எப்படி புலன்களுக்கு புலப்படுவதில்லையோ அப்படித்தான் உலகில் பல விஷயங்களும். அதனால் புலப்படாத விஷயங்களைப் பற்றி நான் பேசுவதில்லை.

சரி, “உனக்கு புலப்படாவிட்டால் என்ன, எனக்கு புலப்படுகிறது” என்றால் வைத்துக்கொள். ஆனால் அதை நிரூபிக்க முடியாது. அது உன் மனக்காட்சி. Hallucination. அவ்வளவுதான். அதனால்தான் மனநோய் என்றேன். கஞ்சா அடித்துவிட்டு கடவுள் தோன்றுவதாகச் சொல்வது போலத்தான் அது. நான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை.

கடவுள் இல்லை என்பதால், மதமும் இல்லை, சடங்குகளும் இல்லை, சாதியும் இல்லை, பண்டிகைகளும் இல்லை, திருவிழாக்களும் இல்லை. இவையெல்லாம் மக்கள் தங்கள் சந்தோஷத்துக்காகக் கொண்டாடும் பொது விஷயங்கள், கூடுகைகள்.

இன்றைக்கு அவ்வளவுதான், பார்ப்போமா? இது பற்றி இன்னும் நிறையப் பேச இருக்கிறேன்


கணினி யுக இலக்கியம்

இலக்கியம் முதலில் எப்படி உருவாயிற்று என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் உருவானதிலிருந்து அது எண்ணற்ற மாறுதல்களைச் சந்தித்துள்ளது என்பது நமக்குத் தெரிகிறது. பல காலங்களைக் கடந்தும் அது செழிப்பாக வளர்ந்துள்ளது. அவ்வப்போது, அந்தந்தக் காலங்களுக்குரிய மக்களின் தேவைக்கேற்ப அது ஒவ்வொருவிதமாக வரையறுக்கவும் படுகிறது. உதாரணமாகச் செவ்வியல் காலத்தில் அது செம்மையாகச் செய்யப்பட்ட ஒரு பொருளாக பாவிக்கப்பட்டது. ரொமாண்டிக் காலத்திலோ அது தன்னெழுச்சியின் வெளிப்பாடாக, தானாகப் பீறிட்டு வருவதாக நோக்கப் பட்டது. கடந்த சில நூற்றாண்டுகளாக அது வர்க்கப் போராட்டக் கருவியாகவும், இருப்பவர்க்கும் இல்லாதவர்க்கும் இடையிலுள்ள ஒரு சமனியாகவும் நோக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கவிதை மட்டுமே இலக்கியமாக இருந்தது. இப்போதோ கவிதை தன் சிறப்புகளை எல்லாம் இழந்து நிர்க்கத்தியாக நிற்க, உரைநடை செங்கோல் ஓச்சுகிறது. விமரிசகர்களின் கருத்துப்படி இது உரைநடைப் புதினங்களின் காலம். 

காலம் மிகவும் முன்னேறிவிட்டது. இப்போது கதைகளை 150 சொற்களில் எழுதிவிடலாம் என்று சொல்கிறார்கள். ஃப்ளாஷ் ஃபிக்-ஷன், மைக்ரோ ஃபிக்-ஷன் போன்ற சொற்கள் உருவாகியுள்ளன. இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. முன்பெல்லாம் ஒரு தேடலுக்காகக் கன்னிமரா போன்ற நூலகங்களுக்குச் சென்று மணிக்கணக்காகச் செலவிட வேண்டியிருந்தது. இப்போதோ உங்களிடம் கணினி அல்லது இன்றைய அலைபேசி யிருந்தால், நீங்கள் “கூகுள்” செய்தால் போதும். ஒரு காலத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பேரகராதி போன்றவற்றை எடுத்துப் புரட்டுவதே பெருஞ் சுமையாக இருக்கும். இன்று எல்லாமே ஒரு “எலி”யின் விரல் அழுத்தத்தில் கிடைக்கின்றன.       

ஆங்கிலத்தில் 6 சொற்களில் நாவல்கள் எழுதலாம் என்று சொல்கிறார்கள். ரெபக்கா ஜேம்ஸ் என்பவர் எழுதிய அறுசொல் நாவல் இது: After she died, he came alive. (“அவள் இறந்தபிறகு அவன் உயிருடன் வந்தான்” வந்தான் என்பதற்கு பதிலாக மீண்டான் அல்லது புத்துயிர் பெற்றான் என்று போடலாமா? இது மொழிபெயர்ப்பின் பிரச்சினை.)

மார்சி என்பார் எழுதிய நாவல் இது: “One gun, two shots, three dead”. இதுதான் நாவல் எழுதுவதில் புதிய ஃபேஷன். இப்படி எழுதுவது சவாலுக் குரியதாகவும், புத்தாக்கத் திறனுடனும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் தமிழில் இப்படிப்பட்ட புத்தாக்கத் திறனுடன் கூடிய புதினத் தலைப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. உதாரணமாக, “அகம் புறம் அந்தப்புரம்” (முகில்) என்பது ஒரு நாவலின் தலைப்பு. மேற்கண்ட அறுசொல் நாவல் கணக்குப்படி பார்த்தால் இது ஒரு முச்சொல் நாவலாக ஆகக்கூடும். இம்மாதிரி புத்தாக்கத் தலைப்புகள் வைப்பதில் சிறந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். (உதாரணமாக சுஜாதா, ராஜேஷ் குமார், இந்திரா சவுந்தரராஜன். ஆனால் அவர்கள் எழுதியது நாவல் என்றால் அது பல்ப் ஃபிக்-ஷன் வகையறா என்று சிலர் என்னை அடிக்கவரக் கூடும். ஆனால் ஜெயமோகனும் இப்படிப்பட்ட தலைப்புகள் பலவற்றை வைத்திருக்கிறார்.)

ஒரு நீண்ட கதையை எழுதுவது எளிய விஷயமாக இருக்கலாம், ஆனால் ஆறு சொற்களில் நாவல் எழுதுவது மிகுந்த புத்தாக்கத் திறனை வேண்டுவது என்று மேற்கண்ட ஒரு அறுசொல் நாவல் அறிமுகப் படுத்தப்படுகிறது. பிரதாப முதலியார் கதை எழுதிய காலத்தில் வேதநாயகர் இப்படி யோசித்திருக்கவும் முடியுமா? இம்மாதிரி 100 அல்லது 150 எழுத்துகளில் எழுதப்படும் பனுவல்களின் ஊடே அதிக இடைவெளிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். வாசகன் தனது யூகத்தினால் பலவித அர்த்தங்களை உருவாக்க முடிவதால் இதுதான் எழுத்தாள நாவல் (writerly novel) என்றும் கூட சிலர் மதிப்பிடலாம். இந்த நோக்குப்படி நாம் ஒருகாலத்தில் நாவலாக மதிக்காதவை எல்லாம் (ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள்…) இப்போது நாவல்கள் ஆகின்றன.

ட்விட்டர் கதைகள் என்றே ஒரு தனிப்பிரிவு உருவாகியுள்ளது. இதற்கெனவே தனிப் பெயர்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். உதாரணமாக, ட்விட்டரில் வரும் த்ரில்லர்கள், ட்வில்லர்கள் எனப்படுகின்றன, ஹைக்கூ-கள் ட்வைக்கூகள் ஆகின்றன. இம்மாதிரிக் கதைகள் பின்நவீனத்துவ நாவலின் ஒரு வகை என்றும் கூறப்படுகின்றன. இவற்றில் சுருக்கம், பன்முக அர்த்தங்கள், பனுவலின் ஊடான தொடர்புகள் எல்லாம் இருப்பதாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்த அவசரக் காலத்தில் இவற்றுக்கு வரவேற்பு மிகுதியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. கலையை இது மாற்றியமைக்கிறது என்கிறார்கள். இப்படிப் பார்த்தால் நமது தனிப்பாடல்கள் (காளமேகப் புலவர், அவ்வை போன்றோர் இயற்றியவை) ஒவ்வொன்றையும் உரைநடையில் கூறினால் ஒரு மைக்ரோ-ஃபிக் ஷனாக ஆக்கிவிடலாம் என்று தோன்றுகிறது. அவை மட்டுமல்ல, யூ-ட்யூபில் சென்று உலவிப் பாருங்கள், 5 நிமிடங்களில் படிக்கக்கூடிய குட்டிக் கதைகள் எத்தனை எத்தனை? வாட்சப் பதிவுகளில் வருகின்ற சின்னச் சின்னக் கதைகள் எத்தனை எத்தனை? முகநூலில் எழுதப்படும் “சிறு-கதைகள்” எத்தனை? திடீரென ஒரு பெரிய இலக்கிய வெள்ளம் வந்து நம்மை எல்லாம் அடித்துச் செல்வது போலத் தோன்றுகிறது. ப்ளாகு(blogs)கள், வலைத்தளங்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு பேரிலக்கியவாதி என்று சொல்லிவிடலாம்.   

இது மட்டுமல்ல, நவீனங்களை எல்லாம் ஓரிருவரிகளில் சுருக்கிச் சொல்லும் முயற்சிகளும் உள்ளன. உதாரணமாக, பிரபல நாவலாசிரியர் ஜே.டி.சாலிங்கர் எழுதிய Catcher in the Rye நாவலை ஒருவர் ட்விட்டரில் இப்படி மொழிபெயர்க்கிறார் (இதுவும் ஒருவகை மொழிபெயர்ப்புதான்): Rich kid thinks everyone is fake except for his little sister. Has breakdown. அவ்வளவுதான். நாம் கூட கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை இப்படிச் சுருக்கிவிடலாம்: “(சீதையை இராவணன் தூக்கிச் சென்றதுபோல) சிவகாமியை நாகநந்தி தூக்கிச் செல்கிறான். இடையில் பரஞ்சோதி (அனுமன்போல) தூது செல்கிறான். வர மறுத்த சிவகாமியை, நரசிம்ம பல்லவன் (இராமன்) வந்து மீட்டுவருகிறான்.” கதைச் சுருக்கத்துடன் இப்படி ஒப்பீடுகளும் நிகழ்த்திவிடலாம்!

ஆனால் இம்மாதிரி எழுத்துகளுக்கு எதிர்ப்பும் மிகுதியாகவே உள்ளது. இவை முறைசாரா நடையில் (informal style) உள்ளன; இவற்றில் இலக்கணப் பிழைகள் மிகுதி; மோசமான நடை; கொச்சை மொழியையும் சேரிமொழியையும் பாலியல் தொடர்களையும் (I’ll pen you in; asshole…) மிகுதியாகப் பயன்படுத்துகின்றன; சற்றும் மரியாதை அற்ற வெளிப்பாடுகள் (Zombie Jesus). ஒரு சரியான (valid), நளினமான நடை என்பதில்லை. இவர்களிடம் இலக்கணம் செத்துப்போனது; எல்லாம் எஸ்எம்எஸ் பாஷைதான்! (I c u என்பது போல) ஆங்கிலத்தில் உயிரெழுத்துகளை நீக்கிவிட்டுச் சுருக்கி எழுதும் போக்கு மிகுதியாகி வருகிறது. (நல்லவேளை! தமிழில் இப்படிச் சுருக்கமுடியாது என்று நினைக்கிறேன். மெய்யெழுத்துகளாகச் சுருக்க முடியாது, ஏனெனில் புள்ளியிட வேண்டும். வேண்டுமானால் ஓலைச்சுவடி பாஷையைக் காப்பியடித்துப் பார்க்கலாம்!) மொழிவளம் குன்றிவிட்டது. எழுத்துச் சேர்ப்பு, புணர்ச்சி முறை எல்லாம் போய்விட்டது. பங்ச்சுவேஷன் அறவே தேவையில்லை. இந்த வேகவாழ்க்கை நடை இலக்கியப் படைப்புக்கு ஒத்துவருமா? சுருக்கமாக ஆர்வமூட்டுவதாக மட்டும் மொழி இருந்தால் போதுமா?


கோவை ஞானியின் விமரிசனச் சிந்தனை

ஞானியின் சமூக விமரிசன நோக்கு
ஞானியின் சமூக விமரிசன நோக்கிற்கு அடிப்படை பெரியாரியம். பார்ப்பன எதிர்ப்பு. இந்தியாவில் புரையோடியிருக்கும் பார்ப்பனியம் சமூக வாழ்க்கைக்கு முற்றிலும் எதிரான ஒன்று. பொருளாதார ஏற்றத்தாழ்வு, உலகெங்கிலும் காணப்படுவதுதான். ஆனால் அந்த ஏற்றத்தாழ்வுக்கு சாதியை அடிப்படையாக்கி, மனிதர்களில் பெரும்பான்மையினர் படிக்கலாகாது, மேற்சாதிகளையும் ஆளும் வர்க்கத்தையும் சார்ந்து வாழும் பொருளாதார அடிமைகளாகவே அவர்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை இன்றுவரை இந்தியாவில் மட்டுமே காணமுடியும். சாதியில் உயர்வுதாழ்வு, அதற்கு அடிப்படையாக விதிக் கொள்கையைப் பயன்படுத்துவது போன்ற அநீதியான கருத்தாக்கங்களால் மனிதனை ஒடுக்கி, அவனைச் சிந்திக்க விடாமல் செய்து ஆதிக்கம் செய்கிறது பார்ப்பனியம்.

“உலகமயமாதலோடு பார்பபனியம் ஒத்துப் போகிறது. அரசுத்துறை தொழில்துறை கலை இலக்கியம் ஊடகம் ஆகிய அனைத்தினுள்ளும் செயல்படுவது பார்ப்பனியம். இயற்கையை அழிப்பது பார்ப்பனியம். பெண்ணடிமைத் தனத்திற்கும் காரணம் பார்ப்பனியம். தமிழினம் ஒடுக்கப்படுவதற்கும் காரணம் பார்ப்பனியம். உச்சநீதிமன்றம் நாடாளுமன்றம் எல்லாவற்றிலும் பார்ப்பனியப் பாம்புகள். இடஒதுக்கீட்டை மறுப்பதும் பார்ப்பனியம் ….இந்தியா முழுவதும் பரவியிருக்கின்ற இந்துத்துவம் தான் தலித் மக்களை ஒடுக்குகிறது. பார்ப்பனியம் ஒழிக்கப்பட்டால்தான் தலித் மக்கள் விடுதலை பெறுவார்கள்…இந்தியாவில் பொருளியல் வகையில் ஆ்திக்கம் செய்பவர்களோடு பார்ப்பனரும் மதவாதிகளும் ஒத்துழைக்கிறார்கள்” என்று கடுமையாகக் கூறுகிறார் ஞானி. இட ஒதுக்கீட்டுக்காகப் பார்ப்பனர்களை எதிர்த்த நீதிக்கட்சியினர் பெரும் பணக்காரர்களாக இருந்தனர். தனியுடைமை, அரசு அதிகாரம் ஆகியவற்றின் காவலர்களாக இருந்தனர். அதன் பின் வந்த பெரியாரியம் பார்ப்பனியத்தை எதிர்த்தாலும், அது மெய்யியலை ஏற்கவில்லை. மார்க்சியத்தையும் பொதுவுடைமையையும் ஏற்கவில்லை. பெரியாருக்குத் தம் கொள்கையைச் சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு ஆகியவற்றில் அடக்குவது கூடாது என்ற எண்ணம் இருந்தது.அதனால் பெரியாரியமும் அதைப் பின்பற்றிய கட்சிகளும் பணத்தின்பின்னாலும் ஆதிக்கத்தின் பின்னாலும் ஓடினர்.

ஞானியின் பெண்ணிய நோக்கு
பெண்கள் வீட்டில் அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள், அவர்களுக்குத் தாங்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் இல்லை, அவர்களுக்கு விடுதலை வேண்டும் என்பன போன்ற கருத்துகள் பெரும்பாலும் அனைவரும் சொல்லக்கூடியவை. காலப்போக்கில் பெண்கள் கல்வியுரிமை, வாக்குரிமை, சமவேலை வாய்ப்பு, சொத்துரிமை என்பன போன்று சில உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் அவர்கள் விடுதலை பெற்றவர்கள் ஆகிவிடுவார்களா என்ற கேள்வியை ஞானி எழுப்புகிறார்.

ஞானியின் பெண்ணியப் பார்வை மார்க்சியத்திலிருந்து முகிழ்க்கிறது. உண்மையில் இருப்பது ஒரே ஆதிக்கம்தான். பணத்தின், பொருளின் ஆதிக்கம். இன்று ஆண் விடுதலை உள்ளவனாக இருக்கிறானா? முதலாளி பணத்துக்குச் சேவை செய்கிறான். ஆடவன் முதலாளிக்குச் சேவை செய்கிறான். ஆகவே ஆணும் அடிமையாகவே இருக்கிறான். இவன் எப்படிப் பெண்ணுக்கு உரிமை வழங்க முடியும்? ஆணாதிக்கம் என்பது ஆண் அடிமைப் பட்டிருப்பதன் பொய்முகந்தான்.

பெண்கள் படித்தால், சொத்துரிமை பெற்றால், எங்கும் இயங்குகின்ற உரிமையும் சம்பாதிக்கும் உரிமையும் பெற்றால் அவர்கள் சுதந்திரமான வர்கள் ஆகிவிடுவார்களா? பணத்துக்குச் சேவைசெய்யும் அதே முதலாளிக்குத்தான் அவர்களும் சேவைசெய்யப் போகிறார்கள். இது எப்படி விடுதலை ஆகும்?

எனவே தங்களுக்கான கல்வியை-ஆதிக்கத்துக்குத் துணைபோகாத கல்வியை எப்போது பெண்கள் வகுக்கிறார்களோ, எப்போது போர் ஆயுதங்களை ஒழிக்கிறார்களோ, எப்போது அன்பும் அமைதியும் நிரம்பிய உலகைப் பெண்கள் உருவாக்குகிறார்களோ அப்போதுதான் பெண்கள் விடுதலை பெறுவார்கள். இப்படிப்பட்ட பெண் விடுதலையில்தான் ஆணின் விடுதலையும் அடங்கியுள்ளது. ஒடுக்கப்பட்டோர் விடுதலையும், பெண்கள் விடுதலையும் இல்லாமல் மானிட விடுதலை சாத்தியமில்லை என்கிறார்

ஞானியின் தமிழ்த்தேசிய நோக்கு
தமிழ்த் தேசியத்திற்கான இடைஞ்சல்களை ஞானி அவ்வப்போது பட்டியலிட்டிருக்கிறார் என்றாலும் அது நாம் அடையமுடியக்கூடிய ஒரு இலக்கு என்பது போலத்தான் ஞானி கருதி வந்திருக்கிறார். தமிழ்த் தேசியத்தின் அடிப்படை தமிழ்மொழி மீதுள்ள பற்று, தமிழனுக்கு ஒரு தனி நாடு தேவை என்ற உணர்வு. உண்மையில் இந்தச் சமயத்தில் தமிழ்த் தேசியம் வளர்ந்திருக்க வேண்டும்.

“அண்மைக்காலத்தில் நேர்ந்த சில நெருக்கடிகள் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக வரலாற்றிலிருந்து வெளியேற்றக்கூடியனவாகத் தெரிகின்றன. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில், தமிழ் மக்களின் நிலம், காடுகள், கடல்வளம் முதலியவை அன்னியர்களிடம் ஒப்படைக்கப் படுகின்றன. ஆறுகளும் பிற நீர்நிலைகளும் நச்சுப் படுத்தப்படுகின்றன… முதலாளிகள் அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் மத்தியதர வர்க்கத்தினர் அனைவரும் நுகர்வு வெறிக்கு ஆளாகியுள்ளனர். அன்னியப் பொருட்களின் மீது மோகம் அதிகரிக்கிறது. தமிழ்மொழிக்கு மதிப்பில்லை. தமிழ் உணர்வு மதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் இயற்கை அழிந்த பிறகு தமிழ் மக்களுக்கு வாழ்வில்லை என்ற உண்மை இங்கு உறைக்கவில்லை” என்று எடுத்துக் காட்டுகின்றார் ஞானி.

ஆனால் நாம் மத்திய அரசினால் எந்தெந்த விதங்களில் ஒடுக்கப்படுகிறோம் என்பது இன்று சாதாரண மக்களுக்கும் தெரிகிறது. நம்மைக் கொள்ளை யடித்து இந்தியாவிலேயே மிகுந்த வரிப்பணத்தை நம்மிடமிருந்து எடுத்துச் செல்லும் மத்திய அரசு, நமக்குக் கொடுக்கப்பட வேண்டிய பணத்தைத் தருவதே இல்லை. பேரிடர்கள் நடந்தாலும் உதவி செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தை அழிக்கக்கூடிய, சுற்றுச்சூழலை அடியோடு பாதிக்கக்கூடிய திட்டங்கள்தான் இங்கு செயல்படுத்தப் படுகின்றன. இவற்றை எதிர்க்கக்கூடிய திராணியும் நம்மிடம் இல்லை. விவசாயிகளும் தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கில் அழிகின்றனர். இதெல்லாம் சாதாரண மக்களுக்கும் நன்கு தெரியும்படியாக இந்தப் பெருநோய்க் காலம் செய்திருக்கிறது. ஆனால் தமிழுணர்ச்சி எழுவதற்கு மாறாக சாதியுணர்ச்சி பொங்கி ஒடுக்கப்பட்ட சாதியினர் கொலைகளும் ஆணவக் கொலைகளும் நடந்து வருவதைத்தான் நாம் தினமும் செய்திகளாகக் காண்கிறோம்.

தமிழ்தேசியத்தின் முதல் எதிரி சாதி. சாதி இனக்குழுச் சமுதாயத்தின் எச்சம் போலவே தொடர்ந்து வருகிறது. அதைப் போலவே தனது குழுவின் பெருமையின்மேல், தனது மானத்தின் மேல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றை நீக்கிவிட்டு அந்த இடத்தில் தமிழ்ப் பெருமை என்பதைப் பொருத்தினால்தான் தமிழ்த் தேசியம் என்ற சிந்தனையை நாம் அடைய முடியும்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தெலுங்கர், மலையாளிகள், கன்னடர்களுக்குத் தனி மாநிலங்கள் கிடைத்தன. ஆனால் இன்றுவரை மற்ற மூன்று மாநிலத்தவர்களுக்குமான கூடுதல் மாநிலமாகவே தமிழ்நாடு இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பேசவேண்டிய நெருக்கடி இன்னும் அடர்த்தியாகத் தேவைப்படுகிறது என்று எடுத்துக் காட்டுகிறார் ஞானி. ஆனால் தமிழகத்தில் வாழும் பிறமொழியாளர்களை குணாவும் மணியரசனும் கூறுவது போல வெளியேற்றிவிட முடியுமா? இங்கு ஞானி சொல்லும் தீர்வு வேடிக்கையாக இருக்கிறது. அந்தப் பிறமொழியாளர்கள் தமிழகத்தைத் தங்கள் சொந்தத் தாயகமாக ஏற்க வைக்க வேண்டும் என்கிறார். தமிழகம் பிறமொழியாளர்களின் ஆதிக்க பூமியாக உள்ளதை இங்குள்ள மாணவர்கள், இளைஞர்கள் உணர்ந்தால் இதற்கு ஓரளவு தீர்வு எனலாம்.

ஆனால் தமிழர்களுக்கு மொழிப்பற்று என்பது உயிரில் கலந்த ஒன்றல்ல. இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் அவர்கள் அணிந்துகொள்ளும் மேல்துண்டு என்பதுபோலத் தமிழுணர்வை ஆக்கிவிட்டார்கள். அவ்வப்போது வெளியில் தமிழ் தமிழ் என்று கூக்குரலிட்டாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்திருக்கக் கூடிய ஒன்றாக அது இல்லாததால் செயலளவில் தமிழின் உயர்வு சாத்தியமின்றியே இருக்கிறது. தமிழ் தமிழ் என்று முழங்குவோர் அனைவரும் நடைமுறையென வரும்போது ஆங்கிலக் கல்விக்கே தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். தமிழ் உணர்வையும் அதன் பெருமைகளையும் வாயளவில் சொல்லாடி அதையும் தங்கள் பிழைப்பு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீய சக்திகளிட மிருந்து தமிழ் உணர்வை மீட்கின்ற வேலை மிகவும் முக்கியமானது என்கிறார் ஞானி. இந்தத் தீயசக்திகள் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, “தமிழைத் தங்கள் பணம் தேடும் புத்திக்குப் பயன்படுத்தும் படைப்பாளிகள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், பரிசு-பாராட்டுகளைத் தேடி தங்களைத் தாழ்த்திக் கொள்பவர்கள், கவியரங்கு, பட்டிமன்றம், கோவில் திருவிழா என்று தமிழை மலினப் படுத்துபவர்கள், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகள், தமிழாய்வு நிறுவனங்கள் என்று தமிழுக்கு எதிரான தீயசக்திகளைப் பலவற்றிலும் அடையாளம் காண்கிறார் ஞானி” (பஞ்சாங்கம்). ஆனால் அண்மைக் காலததில் தமிழர்கள் விழித்தெழுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஞானியின் இலக்கிய விமரிசன நோக்கு
ஞானியின் இலக்கிய விமரிசன நோக்கு சில சமயங்களில் வேடிக்கையாக உள்ளது. அவர் காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களில் ஏற்பட்டு வந்த மாற்றத்தையே திறனாய்வின் விளைவு என்று நோக்குகிறார். “தமிழிலக்கியப் பரப்பில் திறனாய்வுக்கென தனி நூல் இல்லை என்ற போதிலும் காலந்தோறும் இலக்கியத்தின் வடிவமும் உள்ளடக்கமும் தொடர்ந்து மாறி வந்தது என்பதை வைத்துப் பார்க்கும்போது திறனாய்வு இல்லாமல் இத்தகைய செயல்பாடுகள் நடந்திருக்க முடியாது என்பது தெரியும்” என்று அவர் கூறுகிறார். ஆனால் எல்லா மொழியிலும் காலந்தோறும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான் என்பதால் இதை ஏற்கமுடியுமா என்று தெரிய வில்லை. காலந்தோறும் கருத்துநிலைகளில் ஏற்படும் மாற்றங்களை ஹிஸ்டரி ஆஃப் ஐடியாஸ் என்ற தனித்துறையாக ஆராய்கின்றனர் மேற்குநாட்டினர். இப்படித் தமிழிலக்கிய வரலாற்றிலும் ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை. தமிழகத்தில் நிகழ்ந்த கருத்து மாற்றங்களின் வரலாற்றை முழுவதுமாக ஆராய்தல் வேண்டும், ஞானியே பல இடங்களில் ஆராய்ந்து தொடக்கப்புள்ளியிட்டும் இருக்கிறார்.

நாவல், கவிதை போன்ற இலக்கிய வகைகளை ஆராய்ந்த ஞானி, ஏனோ சிறுகதை என்ற முக்கியமான துறையை ஆராயால் விட்டுவிட்டார். சிறுகதைத் துறையில்தான் இந்திய இலக்கியத்தில், ஏன் உலக இலக்கியத்திலும் இடம் பெறக்கூடிய மிகச் சிறந்த படைப்புகள் தமிழில் உள்ளன என்பது பலரின் துணிபுமாகும். புதுமைப்பித்தனையும் லாசராவையும் ஞானி பாராட்டியிருக்கின்றார். அக்காலத்தில் மிகுதியாகப் போற்றப்பட்ட மெளனியைப் பற்றி அவர் அதிகமாகப் பேசியதில்லை. தமிழில் வெளிவரும் படைப்புகளை அப்போதைக் கப்போது வெளிப்படுத்திப் பாராட்டும் இயல்பு ஞானிக்கு இருந்தது. ஆனால் அவர் க.நா.சு. செய்தது போல வெளிப்படையாகத் தர மதிப்பீடு செய்வதில்லை. அவரது தேர்ந்தெடுத்தலின் வாயிலாகவே பெரும்பாலும் அப்படைப்பு தரமானது என்று நாம் கொள்ளவேண்டும்.

ஞானியின் நாவல் திறனாய்வில் சிறப்பானது அவரது பாத்திரப் படைப்பு ஆய்வுகள்தான். நாவலின் கதையை முழுமையாகத் தொகுத்துக் கொண்டு, அவற்றில் தாம் காணும் தனித்த ஆளுமை கொண்ட பாத்திரங்களை விளக்குவது ஞானியின் வழக்கம். “ஜே.ஜே.யிடம் தத்துவப் பார்வை இல்லை. தன்னை மேலும் கீறிக் கொண்டிருந்தால் பிரச்சினைகளின் ஆழத்திற்கு அவன் போயிருக்க முடியும். தான் கலைஞனாகவோ அல்லது கலைத்துறைச் சித்தாந்தியாகவோ இருப்பதன் பொய்ம்மை தெரிந்திருக்கும்” என்பது போலச் சிறப்பாக நாவலின் மையக்கருத்தை வெளிப்படுத்துகிறார். சிறந்த பாத்திரங்களைச் சித்தர்கள் என்கிறார். சான்றாக, “ஹென்றி ஒரு சித்தன்…இப்பாத்திரத்தின் வீச்சில் ஒரு நாவல் உருவாகியதன் மூலம் தற்காலத தமிழ் இலக்கியத்தில் ஒரு படைப்பு உன்னதமான தொன்மம் ஆகியுள்ளது” என்கிறார்.

சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்றவை வளர்ந்துவந்த வரலாற்று சமூகச் சூழலை மிக நன்றாக எடுத்துக்காட்டியிருக்கிறார் ஞானி. ஆனால் பக்தி இலக்கியத்தை அவர் மிகுதியாக ஆராயவில்லை. அதுவும் தமிழர் மெய்யியலில் தேவையான பங்களிப்பைச் செய்துள்ளது என்ற அளவில் அவர் பார்வை நின்றுவிடுகிறது. இது பற்றி விரிவாகப் பேச இது சந்தர்ப்பமில்லை. ஞானியின் அழகியல் பற்றி எழுதிய கட்டுரையில் சில குறிப்புகளைத் தந்திருக்கிறேன்.

வானம்பாடிக் கவிஞர்கள் பற்றிய ஞானியின் கருத்தை நான் பொருட் படுத்தக் கூடியதாக ஏற்கவில்லை. குறிப்பாக தமிழன்பனையும் சிற்பியையும் சிறந்த கவிஞர்கள் என்று காணும் அவரது கவிதை இரசனை குறையுடையதாகவே எனக்குப் படுகிறது. அக்கினி வீணைகளையும் புன்னகைக்கும் பூனைகளையும் அன்றும் இன்றும் என் மனம் சிறந்த கவிதைகளாக ஏற்கவில்லை. சிறந்த கவிதைகளுக்கான விதைகள் எழுத்து இயக்கத்தில் இருந்தன, அவற்றுக்கான சமூக-அரசியல் பின்புலம் வானம்பாடிகளிடமும் மார்க்சியர்களிடமும் இருந்தது என்று இன்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

ஆங்கிலத்தில் ரிடாரிக் என்றும் போயஸிஸ் என்றும் வகைப்படுத்து கிறார்கள். இப்படிப்பட்ட பிரிவு ஒன்றை ஞானியும் செய்கிறார். ஃப்ராய்டு மேல்மனம், ஆழ்மனம் என்றெல்லாம் மனத்தைப் பிரித்தார். ரிடாரிக் என்ற மேம்போக்கான அலங்காரக் கவிதைகளை மேல்மனத்தின் படைப்பு என்கிறார் ஞானி. வீரியமிக்க, நல்ல கவிதைகளை ஆழ்மனத்தோடு (“உள்மனத்தோடு”) தொடர்பு படுத்துகிறார். தம்மை அறியாமலே வானம்பாடிகளின் கவிதைகளை அலங்காரக் கவிதைகளில் சேர்த்தும் இருக்கிறார்.

வானம்பாடிக் கவிதைகள் மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க்கவிதைகள் பெருமளவு ரிடாரிக் (சொல்லலங்காரங்கள்) என்பதிலேயே சேர்கின்றன. அதனால் இன்றுவரைகூட பாரதிக்குப் பின் நல்ல கவிஞன் தோன்றவில்லை என்று கூறவேண்டிய நிலை உள்ளது. பாரதிதாசனிடம் இருந்த ஆற்றல்மிக்க தமிழுணர்வு போற்றக்கூடியது, பின்பற்ற வேண்டியது என்றாலும் அவரிடமும் ரிடாரிக்தான் மிகுதியாகச் செயல்பட்டது என்பதால்தான் இருவேறு கவிதைப் பரம்பரையே உருவாயிற்று. பாரதிதாசனின் தமிழுணர்வு நமக்கத் தேவை என்று வலியுறுத்த வருவதால் ஞானி பாரதிதாசனின் கவிதைகளைச் சரிவர மதிப்பிடவில்லை. கல்லிகையை ஞானி எழுதியபோது ஞானிக்கு கவிதை உணர்வு வரவே வராது என்று பிருமீள் ஒருமுறை குறிப்பிட்டார். தற்காலக் கவிதை பற்றி ஞானியின் குறிப்புகளைப் பார்க்கும்போது பிருமீளின் விமரிசனம் உண்மை என்றே தோன்றுகிறது.

முடிவாக…

ஞானியின் படைப்புகள் அனைத்திலும் அவரது விமரிசன நோக்கு பாலினுள் நெய்போல் விரவி நிற்கிறது. நாம் சிந்திக்க வேண்டும், தமிழ் மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பதற்கான தூண்டுகோலாகவே அவற்றை நான் காண்கிறேன். சிந்திக்க வைப்பதுதான் விமரிசனத்தின் தலையாய பணி.

இன்று தமிழ் பற்றி, தமிழகத்தின் எதிர்காலம் பற்றி, சுற்றுச் சூழல் பற்றி, உலக இருப்பு பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நம் முன்னர் உள்ள மிகப் பெரிய கேள்வி இன்றைய பெருந்தொழில்துறை தான். மனிதன் ஒரு நூற்றாண்டுக்கு முன்கூடத் திரும்பிச் செல்ல முடியாது. அந்த அளவுக்கு மின்சாரம், இயற்கை எரிபொருள்கள், வாழ்க்கை வசதிகள், நுகர்வுப் பொருள்கள் என்பன அவனை மாற்றியுள்ளன. இன்று மின் விளக்கோ விசிறியோ, கைப்பேசியோ இல்லாமல் எத்தனை பேரால் உயிர்வாழ முடியும்? இந்த நுகர்வுகள் யாவும் மேலும் பெருநுகர்வுகளுக்குக் கொண்டுசெல்பவை. உதாரணமாக, மின்சாரம் தடைப்பட்டால் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. அதற்கு இன்னொரு தொழில்நுட்பம் தேவையாகிறது. அதேபோல், அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தில் 2ஜி போய், 3ஜிவந்து, 4ஜி வந்து, இப்போது 5ஜி வரை வந்திருக்கிறது. இன்று சிறார்களுக்கும் கணினிவழி, செல்பேசிகள் வழி பாடம் கற்பிப்பதுவரை வந்திருக்கிறது. இவை முன்னேற்றங்கள்தானா, அல்லது பின்னடைவுகளா? இவற்றிலிருந்து வெளியேறி நாம் இயற்கையோடிசைந்த ஒரு வாழ்க்கையை அடைய முடியுமா?

இந்த நுகர்வு ஆசையின், அல்ல, நுகர்வுத்தேவையின் அடிப்படையில்தான் பெருந்தொழில்கள் தழைக்கின்றன. இவற்றின் அடிப்படையில்தான் பெருமுதலாளித்துவம் உருவாகிறது. மேலும் மேலும் இயற்கை அவர்களால் சுரண்டப்படுகிறது. உலகம் வெப்பமயமாகிறது. கடைசியில் மனித குலத்தின் எஞ்சுதல் (சர்வைவல்) என்பதே கேள்விக்குள்ளாகிறது. இடையில் எந்த வழியினை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம், கடைப்பிடிக்கப் போகிறோம் என்பதுதான் நம் முன்னர் உள்ள கேள்வி. ஞானி நம்மைச் சிந்திக்கச் சொல்கிறார், சிந்திப்போம் தோழர்களே, நமது எதிர்கால வாழ்க்கைக்காகச் சிந்திப்போம். மானிட இனத்தைப் பற்றிய அக்கறை கொண்டவர்கள் மாமனிதர்கள். அப்படிப்பட்ட மாமனிதர்களில் ஒருவராக ஞானியைக் காண்கிறேன்.


கோவை ஞானியும் அவரது பணிகளும்

முன்னுரைதமிழ் மரபின் இணையற்ற வாரிசு ஞானி

வாழையடி வாழை என வந்த தமிழ் ஞானியர் மரபில் தம்மையும் ஒருவராக இணைத்துக் கொண்டவர் திரு. கோவை ஞானி. அதனால்தான் தம் பெயரான பழனிச்சாமி என்பதை ஞானி என்று மாற்றிக் கொண்டார் போலும். பிரக்ஞை போன்ற சில இதழ்களில் ஞானதேசிகன் என்ற புனைபெயரிலும் எழுதியிருக்கிறார். ஆயினும் தம்மை ஒரு தமிழ் மாணவராகவே அவர் என்றும் கருதி வந்தார். அவரது சமகாலத்தில் அவரோடு பழகி வாழ இயன்றதற்காக நாம் பெருமைப் படுகிறோம். அவரது பன்முகப் பார்வை குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஏற்பாடு செய்திருக்கும் இக் கருத்தரங்கம் பெரும் சிறப்புடையதாகிறது. இதனை ஏற்பாடு செய்த பேராசிரியர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் என் வணக்கத்தையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞானியும் நானும்

ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் எனது நட்பு நீள்கிறது. ஆயினும் அவரைவிட ஒரு பதின்மூன்றாண்டுகளே இளையவன் என்று காணும் போது இன்னும் நீண்ட பரிச்சயம் இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்த்துறைக்கே நான் ‘லேட்’டாக வந்தவன். முதலில் அறிவியல் ஆசிரியனாகப் பணியைத் தொடங்கி, தமிழ் இலக்கியத்தையும் ஆங்கில இலக்கியத்தையும் தனிப்பட்ட முறையில் கற்று, தமிழ்த்துறையில் நான் காலடி எடுத்து வைக்கவே முப்பதாண்டுகள் சென்றுவிட்டன. அதன் பிறகு பிற மரபான தடங்களிலிருந்து மாறி, ஞானியினது தடத்திற்கு வர இன்னும் சில ஆண்டுகள் பிடித்தன. ஏற்கெனவே ஆங்கில இலக்கியப் பரிச்சயம் இருந்ததால், அமைப்பு மொழியியல் (சசூர் தொடங்கிவைத்த ஒன்று) எனக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தது. (அமைப்பியத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ள ஒன்றுமில்லை என்பதால்தான் வந்தவேகத்தில் (இருபதாண்டுகளில்) அது பின்னமைப்பியத்திற்கும் பின்நவீனத்துவத்திற்கும் வழிவிட்டது.)

ஆங்கிலப் படிப்பும் உதவுகிறது

பொதுவாக என்னை இதுகாறும் வழிநடத்தி வந்திருப்பவை ஆங்கில வாயிலாக நான் கற்ற கோட்பாடுகளே என்று கூறலாம். இப்போதும் கூட மரபான மார்க்சியத்தைவிட ஃப்ராங்க்ஃபர்ட் புலம் என்று அழைக்கப்படுகின்ற புதிய விமரிசனச் சிந்தனையே நமது சூழலில் மிகவும் ஏற்கத்தக்கது என்பது எனது கருத்து. அதில் அதார்னோ, ஹெர்பர்ட் மார்க்யூஸ், வால்டர் பெஞ்சமின், ஹேபர்மாஸ் போன்றோர் இருந்தனர். ஆனால் இந்தியச் சூழலில் அவர்கள் தத்துவமும் கருத்துகளும் உள்வாங்கிக் கொள்ளப்படவோ அதிகம் பேசப்படவோ இல்லை. பரிமாணம் போன்றதொரு பத்திரிகை தொடர்ந்து வந்திருக்குமாயின், ஒருவேளை அது நிகழ்ந்திருக்கலாம்.  தமிழில் இதற்கான தத்துவப் பயிற்சி மிகவும் குறைவு என்பது வருத்தத்தை அளிக்கிறது. இன்று தத்துவம் என்றால், “போனால் போகட்டும் போடா”, “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” என்ற சாதாரணச் சொலவடைகளாகத் தமிழுலகில் திரித்துவிட்டார்கள் என்பது இன்னும் வருத்தமளிக்கக்கூடியது

சமண சார்வாக ஆசீவக பெளத்தத் தத்துவங்களும் அதன்பின் அத்வைதம், விசேட அத்வைதம், துவைதம், சைவசித்தாந்தம் போன்ற தத்துவங்களும் பிறந்து வளர்ந்த நம் நாட்டில் ஏற்பட்டுள்ள தத்துவத்தின் வறுமை கொடியது. அதனால்தான் பலரால் மார்க்சியத் தத்துவத்தைக் கூட உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை போலும். இந்தச் சூழலில் பி.ஓ.எல். மட்டுமே அக்காலத்தில் படித்த ஞானி எப்படி இவ்வளவு ஆழமாகத் தத்துவத்தில் பயின்றார் என்பது பெருவியப்பு அளிக்கிறது. ஞானியைப் பின்பற்றுவோர் அல்லது பின்பற்ற நினைப்போர், அவரைப் போன்று பலவகைத் தத்துவங்களிலும் ஆழங்காற்பட்டால்தான் அவரைப் போன்ற சமநிலை நோக்கு எய்த முடியும்.    

எனது பரிச்சயம்

(1982 அல்லது 1983 ஆக இருக்கலாம்) இலக்கு அமைப்பு தனது திரைப்படம் பற்றிய கருத்தரங்கத்தைத் திருச்சியில் நடத்தியது. ‘சினி ஃபோரம்’ என்ற திரைப்பட நோக்குதல்/வாசித்தல் அமைப்பை நாங்கள் திருச்சியில் நடத்தி வந்ததால் இந்தக் கருத்தரங்கம் அங்கே நடைபெற்றது ஏற்புடைய ஒன்றுதான். அதற்கு ஞானி வந்திருந்தார். பின்னர் அடுத்த ஆண்டில் இன்றைய அரசியல் சமூக நிலையில் காந்தியின் ஏற்புடைமை பற்றி திருச்சி செயின்ட் பால்’ஸ் செமினரி ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது அங்கிருந்த அருட்தந்தை திரு. எக்ஸ். டி. செல்வராஜ், அமுதனடிகள் போன்றோருடன் சேர்ந்து அதைப் பேராசிரியர் திரு. ஆல்பர்ட் நடத்தினார். அதில் ராஜ் கெளதமன், ஞானி போன்றவர்கள் பங்குபெற்றனர். இந்த இரு நிகழ்ச்சிகளிலிருந்துதான் ஞானியுடனான எனது பரிச்சயம் ஆழம் பெற்றது எனலாம்.

1989இல் திருச்சி நாடக சங்கத்தின் சார்பாக மூன்று நாள் ‘பாதல் சர்க்கார் நாடக விழா’வினை நடத்தினோம். ஆறு அரங்க நிகழ்ச்சிகளையும் மிகக் காரசாரமான விவாதங்களையும் கொண்டிருந்தது அந்நிகழ்வு. அதில் ஞானி கலந்துகொண்டார். அங்கு அவர் தங்கியிருந்த மூன்று நாட்களில் அவரோடு எனது பரிச்சயம் இறுகியது. அப்போது தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் மிகுதியாகப் பேசப்பட்டுவந்த அமைப்பியம் பற்றி உரையாடினோம். அதன் வாயிலாகத்தான், அமைப்புமைய வாதமும் பின்னமைப்பு வாதமும் என்ற நூலை நான் எழுத, ஞானி நிகழ் வெளியீடாக அதனை 1990 தொடக்கத்தில் வெளியிட்டார். ஆயினும் அந்த நூலை ஏனோ வாசகர்கள் சரியாக ஏற்றுக் கொண்டார்களா என்பது எனது சந்தேகம். ஏனெனில், அமைப்பு வாதத்தை யும் பின்னமைப்பு வாதத்தையும் ஓரளவு விளக்கிய பிறகு, அதன் இறுதி யில் இவை பற்றிய ஒரு விவாதத்தை வைத்து, இவை நம் தமிழ்ச் சமூகத்திற்கு அதிகமாகப் பயன்படக்கூடியவை அல்ல என்ற கருத்தை நான் கூறியிருந்தேன். அதை யாரும் அச்சமயத்தில் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது.      

ஞானியின் ஓயாத இயக்கம்

கண்பார்வையை இழந்த போதிலும் சலியாது ஓயாது இயங்கி வந்தவர் ஞானி. அவரது படைப்புகளின் அளவைப் பார்க்கும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது. 39 ஆய்வுநூல்கள், 3 கவிதை நூல்கள், பல கட்டுரை நூல்கள், தொகுப்பு நூல்கள் என அவர் பணி மிகப் பெரியது. ஆனால் நல்ல வேளை, அவற்றின் எல்லை பரந்து  விரிந்த ஒன்றல்ல, குறுகியதுதான் என்பது நமக்கு ஆறுதல் தருகிறது. தாம் வாழ்க்கையில் ஆராய்ந்து கண்ட ஒரு சில சிந்தனைகளையே தம் நூல்கள் முழுவதும் திரும்பத் திரும்ப எடுத்துரைத்து வந்துள்ளார் ஞானி.

அப்படி ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, தமது வாழ்நாள் முழுவதும் அவர் ஆய்ந்து கண்ட உண்மைகளைத்தான் அவரது விமரிசன நோக்கு என்று இங்குப் பார்க்கிறோம். இன்றைய சிந்தனையாளன் பன்முக அறிவியல், தத்துவ அறிவு கொண்டவனாக இருக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் சமூக நுட்பங்களை அறியவும் தீர்வு காணவும் முடியும். இந்தப் பண்பு ஞானியிடம் இருந்தது. எனவே அவர் உண்மையில் ஒரு ஞானியாகவே இருந்தார். முக்கியமாக, பிறரிடம் காணாத ஒரு சொல்லாடல்-“நாம் திரட்டித் தொகுத்துக் கொள்ள வேண்டும்” “இங்கு தொகுத்துக் கொண்டு மேற்செல்வோம்” என்பது போன்ற வாசகங்களை அவர் நூல்களில் அடிக்கடி காண முடியும். என் பார்வையில், வேறு எவரும் இந்தத் தொடரை அடிக்கடி தங்கள் எழுத்தில் பயன்படுத்தியதே இல்லை.

கல்வியியல் நோக்கில் தொகுத்துக் கொள்ளுதல் என்பது படைப்பாற்றல் (creativity), மாணவர்கள் அடையவேண்டிய இறுதிச் சுயசிந்தனை நிலை அது என்பதைக் கல்வியாளர்கள் விளக்கியுள்ளனர்.  தர்க்க நோக்கில் உறுதி கொள்ளல், பகுத்தல் என்ற நிலைக்கு அடுத்து வருகின்ற சிந்தனை தொகுத்தல். (தீசிஸ், அனாலிசிஸ், சிந்தசிஸ்). அடுத்து ஒருங்கிணைந்த புதிய கோட்பாடு ஒன்று தோன்றுவதற்கான அடிப்படை அது. ஆகவே ஞானியின் விமரிசன நோக்கின் அடிப்படை “தொகுத்துக் கொள்ளுதல்” என்பதைக் காணமுடிகிறது.             

தமிழில் விமரிசகர்கள் மிகக் குறைவு. அதிலும் “தொகுத்துக் கொள்ளும்” சுயசிந்தனையாளர்கள் மிகமிகக் குறைவு. இவர்கள் மத்தியில் சிறப்பான இடத்தைப் பெறுபவர் ஞானி. அவரது விமரிசனப் போக்கினை நாம் மெய்யியல் விமரிசனம் என்ற பெயரால் அழைக்கலாம். தமிழின் சிந்தனைப் போக்கு ஆதிகாலத்திலிருந்து இவ்வாறாகத் தொகுத்துக் கொண்டு வளர்ந்ததே என்பதை ஞானி சுட்டிக் காட்டாத இடங்கள் குறைவு.

கருத்துச் சுதந்திரம்தான் விமரிசனத்தின் அடிப்படை

ஞானி கவிதை, கட்டுரைப் படைப்புகள், சிற்றிதழ்கள் நடத்துதல், விமரிசனம் எனச் சில பணிகளில் இயங்கி வந்தவராயினும், அவரது விமரிசனப் பணியே தலையாயதும், காலமுழுவதும் அவர் ஈடுபட்டதும், சிறப்பானதும் ஆகும். விமரிசனம் என்பது கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடு. சுதந்திரமாகச் சிந்திக்காதவனும், அதை வெளிப்படுத்த இயலாதவனும் விமரிசகர்கள் ஆக முடியாது. கருத்துச் சுதந்திரம் என்பதே பிறர் கருத்தை மறுப்பதற்கான, அல்லது எதிர்ப்பதற்கான சுதந்திரம்தான். இல்லையெனில் அது பிறர் கூறியதை வழிமொழிவதாக மட்டுமே ஆகும்.

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் கற்பிக்கப்படத் தொடங்கியதி லிருந்தே யார் மனத்தையும் புண்படுத்தலாகாது, குறைகாணலாகாது என்ற அரசியல் புகுந்துவிட்டது. இன்றுவரை இந்த மனப்பாங்கு நீடிக்கிறது. இதை அரசியல் என்று சொல்லக் காரணம், “விமரிசனம் செய்யப் போகிறாயா,  அப்படியானால் எவர் மனத்தையும் நீ புண்படுத்தலாகாது” என்ற எச்சரிக்கை தமிழில் திறனாய்வுத் துறையில் ஈடுபடுபவர்களுக்குத் தொடக்கத்திலேயே அளிக்கப்பட்டு விடுகிறது. சுதந்திரம் பெற்ற நாள் முதலாகவே இம்மாதிரி இந்தியாவில் ஏதோ ஒருவகையில் ‘கருத்தொடுக்குதல்’ என்பது செயல்பட்டு வருகிறது.

அதனால் சரியான கலை இலக்கிய நோக்கில் மதிப்பீடு செய்தலும் பிறர் மனத்தைப் புண்படுத்தல், slander எனக் கருதப்படுகிறது. slander என்பது பேச்சிலும் எழுத்திலும் நிகழும் அவதூறு அல்லது பழித்துரை ஆகும். பிறரைப் பழித்துரைப்பவர்கள், குறிப்பாக அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் என்று எழுத்தாளர்களையும் விமரிசகர்களையும் சமூகச் செயல்பாட்டாளர் களையும் கருதுகிறார்கள். எனவே அவர்கள்மீது ஆதிக்கவாதிகளின் தண்டனை பாய்கிறது. இன்றும் சிறந்த சமூக விமரிசகர்களை அரசாங்கம் காரணம் எதையும் கூறாமலே சிறையில் அடைப்பதையும் நாம் பார்க்கிறோம்.

இது மாதிரியான சூழ்நிலையில் தமிழுலகில் ஐம்பதாண்டுகளாக விமரிசகராக இயங்கி வந்துள்ளார் ஞானி. பரிமாணம் பத்திரிகை நடத்திய சமயத்தில் அரசாங்கத்தின் கண்காணிப்பு அவர்மீதும் எஸ்விஆர் மீதும் இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். பிறகு அவர்மீது அரசாங்கத்தின் தாக்குதல் பெரிதும் இல்லாமல் போனதற்கு அவரது எழுத்தில் காணப்படும் மென்மையும் நயத்தக்க நாகரிகமும்தான் தலையாய காரணம் என்று கருதுகிறேன். அத்துடன் வலதுசாரிச் சிந்தனையாளர்களுடனும், ஆன்மிக வாதிகளுடனும் துறவிகளுடனும் பண்புடன் பழகி, அவர்கள் கருத்துக ளையும் விவாதிக்கும் திறன் ஞானிக்கு இருந்தது. எவ்வாறாயினும், இன்றைய நிலையில் மனித மாண்பு வளம் பெற வேண்டுமானால், ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால், தனிமனிதர்களும் சுதந்திரமாக இயங்க வேண்டுமானால் கருத்துரிமை-பேச்சுரிமை-வெளிப்பாட்டுரிமை என்பது மிக அவசியம்.  

ஞானியின் விமரிசனப் போக்கு என்பதில் அவரது இலக்கிய விமரிசன நோக்கு மட்டுமின்றி, அவரது மார்க்சியப் போக்கு, மனித நேயப் போக்கு, தமிழ்தேசியப் போக்கு, சமூக விமரிசன நோக்கு ஆகியவை அடங்கியுள்ளன. இவை அனைத்திலும் காணப்படுவதுதான் மெய்யியல் விமரிசனம்.

மெய்யியல் என்றால் என்ன? ஞானியின் நோக்கில் ஐந்தாயிரம் ஆண்டு களாக இன்று வரை தொடர்கின்ற தமிழ்ப்படைப்புகளின், தமிழ்மரபின், தமிழ்ச் சிந்தனையின் உள்ளடக்கம்தான் மெய்யியல். சித்தர்கள் கவிதைகளின் அடிப்படையாக இருப்பதுதான் தமிழ் மெய்யியல். தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து இடையறாது ஊடுருவியிருக்கும் அறத்தின் மற்றொரு பெயர்தான் மெய்யியல்.

ஞானியின் மார்க்சிய நோக்கு       

தமிழில் மார்க்சிய விமரிசனம் என்பது உள்ளடக்க ஆய்வும் ஒப்பீடும் செய்வதாகவே இருந்தது. ஜீவா தொடங்கி தமிழகத்தின் எத்தனையோ மார்க்சியர்களை இதற்கு உள்ளடக்க ஆய்வு செய்தவர்களுக்கு உதாரணமாகக் கூறலாம். ஞானியின் இலக்கியப் பார்வையும் இதற்கு விதிவிலக்கில்லை. கைலாசபதி, கா. சிவத்தம்பி, நுஃமான் போன்ற ஈழத்து இலக்கியவாதிகள் ஒப்பீட்டுப் பார்வையினை வளர்த்தனர். எனினும் கலை இலக்கியப் பார்வை அதில் அமையவில்லை. ஒரு சிலர் முயற்சி செய்தனர். குறிப்பாக அலை போன்ற இதழ்களின் பங்களிப்பு இதில் உண்டு.

பிளேட்டோ, கலைஞர்களை ஆதரித்தால் ஒழுக்கக் கேடு வளர்ந்துவிடும், அதனால் அவர்களை நாடுகடத்த வேண்டும் என்று கூறியதுபோல, மார்க்சியவாதிகள் கலைப்படைப்பு உத்திகள் நோக்கில் இலக்கியத்தைப் பார்ப்பது, தூய அழகியல் பார்வைக்கு வழிவகுத்துவிடும், வர்க்க-போராட்ட நோக்கினைக் குலைத்துவிடும் என்று அஞ்சினர் போலும்.

என்னைப் பொறுத்தவரை, உள்ளடக்கம் ஒரு படைப்பின் உயிர். வடிவம் அதன் உடல். உயிர்தான் முக்கியமானது என்றாலும், சரியான உடல் அமையவில்லை என்றால் படைப்பு கெட்டுப்போகும். உடம்பார் அழியில் உயிரார் அழிவர்.  

அமைப்பிய மார்க்சியம் அல்தூஸர் போன்றவர்களால் மொழியப்பட்ட பிறகு, இளம் மார்க்ஸ்-முதிய மார்க்ஸ் என்ற பிளவு ஏற்பட்டது. இவர்களில் யார் சரி, எவரைப் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. கட்சிரீதியான மார்க்சியர்கள் இளம் மார்க்ஸை ஏற்பதில்லை. மூலதனம் நூல் தொடங்கி பொருளாதார அடித்தட்டுப் பார்வையை முன்வைக்கும் முதிய மார்க்ஸ்தான் அவர்களுக்குத் தேவை. அல்தூஸர் மார்க்சியத்தை மேலும் அறிவியல் ரீதியான ஒன்றாக மாற்ற முனைகிறார். மெய்யியலை மார்க்சியத்திலிருந்து அவர் வெளியேற்ற முயன்றார். ஆனால் மார்க்சியத்தை அடிப்படையில் ஒரு மெய்யில் என்றுதான் நாம் கொள்ளவேண்டும் என்பது ஞானியின் கருத்து.   

இளம் மார்க்ஸ் முன்வைத்த முக்கியமான கருத்து அந்நியமாதல் கோட்பாடு. பெரும்பான்மைக் கட்சிசார் மார்க்சியர்கள் மூத்த மார்க்ஸை மட்டுமே ஏற்றனர். அந்நியமாதல், ஃபெடிஷிசம், பொருளுறவாக்கல் போன்ற கருத்துகளை முதன்மைப் படுத்தியவர்கள் எஸ். என். நாகராஜன், எஸ்.வி. ஆர்., ஞானி ஆகியோர் மட்டுமே. இன்றும் தமிழர்கள் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்துச் சாமானியர்களும் அந்நியப்பட்டு, வாழ்க்கை இழந்து துயரப்படும் நிலையில் இருக்கும் நிலையில் பொதுவுடைமைச் சமூகத்தில் தான் மனிதர்கள் அந்நியமாதல் அற்று முழுமையடைய முடியும் என்கிறார் ஞானி. தமிழிலக்கியத்தில் அந்நியமாதலை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தமை ஞானியின் தனித்த விமரிசன நோக்கு.

அது மட்டுமின்றி, மரபுவழியிலான மார்க்சிய விமரிசனத்தில் வர்க்கப் போராட்டம் என்ற கருத்து மட்டும் ஏற்கப்பட்டதே ஒழிய, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கோ, தமிழ்த்தேசியத்திற்கோ உரிய இடம் அளிக்கப்படவே இல்லை. இவையெல்லாம் வர்க்கப் போராட்டத்தில் தீர்ந்துவிடக்கூடிய மிகச் சிறு பிரச்சினைகளாக அவர்கள் கண்ணில் பட்டன. இதனால்தான்

மார்க்சியத்தை மேற்கத்தியப் பாணிகளில் கற்பது சரியன்று என்றார் ஞானி.

இந்தவிதத்தில் எஸ். என். நாகராசனின் கீழை மார்க்சியம் என்ற கருத்தை அவர் ஆதரிக்கிறார். நமது மண்ணுக்கேற்ற மார்க்சியம் வேண்டும் என்னும்போது, மெய்யியல் என்ற கருத்தை முன்வைக்கிறார். உடைமைச் சமூகத்தில், மனிதன் எல்லாவற்றிலிருந்தும் அன்னியப்பட்டுவிடுகிறான். அதிலிருந்து மனிதன் விடுதலை பெற்று முழுநிறைவான வாழ்க்கை வாழ்வதை மார்க்ஸ் கனவு கண்டார். மனிதன் விடுதலை பெற்று முழுமையடைவதே மார்க்சிய மெய்யியல் என்றார்.

தமிழிலக்கியம் தொடக்கத்திலிருந்தே இதனைத்தான் கூறிவருகிறது என்பதைக் காட்டியுள்ளார் ஞானி. இன்று மார்க்சியத்தின் மனிதமைய நோக்கு நமக்குத் தேவையில்லை, அதற்கு மாறான இயற்கைமைய நோக்குதான் தேவைப் படுகிறது. ஞானியின் மெய்யியல் என்பது இயற்கைமைய நோக்கிற்கு இட்டுச் செல்லக் கூடியதாக உள்ளதால் அதைப் போற்றுகிறேன்.   

அமைப்பியம் பற்றி ஞானி

அமைப்பியம் மார்க்சிய ஆய்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்று ஞானி கருதினார். தமிழவனின் நூலை வைத்து அந்த மதிப்பீடு எழுந்தது. ஆனால் அந்த மதிப்பீடு தவறுதான். முன்பே சுட்டிக் காட்டியவாறு அல்தூஸர் போன்ற அமைப்பு மார்க்சியவாதிகள் மார்க்சியத்தை மேலும் கட்டுத்திட்டமாக்க முயற்சி செய்தனர். இவற்றை ஓரளவு ஞானி விவாதித்தாலும் அவற்றில் போதிய கவனம் செலுத்த வில்லை. அமைப்பியமும் பின்னமைப்பியமும் ஆராய்ச்சிக்கான கருவிகளே ஒழியப் படைப்பிலக்கியத்துக்கும் படைப்பியக்கத்துக்கும் உதவும் தன்மை கொண்டவை அன்று. பெரும்பாலும் கோட்பாடுகள் யாவுமே இப்படித்தான். எவரும் ஒரு கோட்பாட்டை வைத்துப் படைப்பாளன் ஆக முடியாது. அது காரிகை கற்றுக் கவிபாடுவதைப் போலத்தான்.

யதார்த்தவாதம், மார்க்சியம் போற்றும் இலக்கிய வடிவங்களில் முதன்மை யானது. யதார்த்த வாதத்தை ஒருபோதும் முறியடிக்க முடியாது என்பது மார்க்சியர் கருத்து. ஞானியின் கருத்தும் அதுதான். எல்லோராலும் எப்போதும் மார்க்குவிஸ் போலவோ, இடாலோ கால்வினோ போலவோ எழுதிக் கொண்டிருக்க முடியாது அல்லவா?

அமைப்பியம் நமக்குத் தந்த முக்கியப் பாடம், மனிதமைய வாதத்தை (ஹியூமனிசம்) மறுப்பதுதான். பலபேர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது போல ஹியூமனிசம் என்பது மனித நேயம் அல்ல. ஹியூமனிசம் அல்லது மனிதமைய வாதம் என்பது, மனிதன்தான் எல்லாவற்றுக்கும் மையம் என்று சிந்திக்கும் போக்கு. மனிதனுக்காகவே எல்லாம் படைக்கப்பட் டுள்ளன, அவற்றை மனிதன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கு பைபிளிலேயே தொடங்கிவிட்டது. மனிதனுக்காகத்தான் எல்லாம் என்று குரானும் கூறுகிறது. இம்மாதிரிச் சிந்தனையால்தான் இயற்கை மனிதனுக்காகவே படைக்கப்பட்டது, அதை அழிக்கலாம், வெற்றிகொள்ள வேண்டும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற சிந்தனைகள் ஏற்பட்டன. இது பெருமுதலாளித்துவத்துக்கு ஏற்ற சிந்தனை.

மனிதன் இயற்கையின் ஒரு சிறுதுளிதான், எல்லாப் பிராணிகளும் போலத்தான் அவனும் என்று சிந்திப்பதும், இயற்கையின் முதன்மையைப் போற்றுவதும்தான் எதிர்-மனிதமைய நோக்கு (ஆண்ட்டி-ஹியூமனிசம்). இதுவும் ஞானியின் மெய்யியலில் அடங்கக்கூடிய ஒன்றுதான். இதைத்தான் இன்றைய சூழலியல் திறனாய்வு அல்லது பசுமைத் திறனாய்வு என்பது வலியுறுத்துகிறது. ஞானி இதைப் பற்றிப் பேசவில்லை. தமிழ்ச் சூழலில் இன்று பசுமைத் திறனாய்வைச் சிறப்பாகச் செய்பவர் நிர்மல் செல்வமணி ஒருவர் மட்டுமே. (கோவை ஞானியின் விமரிசனச் சிந்தனை என இக் கட்டுரை தொடரும்)


குறுந்தொகையில் ஒரு பா

குக்கூ என்றது கோழி அதனெதிர்/ துட்கென்றதென் தூஉ நெஞ்சம்/ தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்/ வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

இது ஒரு குறுந்தொகைச் செய்யுள். மருதத்திணையில்  சேர்க்கப் பட்டுள்ளது. காரணம், சங்கச் செய்யுள்களை வகைப்படுத்தும்போது முதற்பொருளுக்கு முதலிடம் தரவேண்டும் என்ற தொல்காப்பியக் கருத்திற்கேற்ப, வைகறை என்ற சொல்லைப் பார்த்தவுடனே மருதத்திணை எனக் கூறிவிட்டனர். பிறகு அதற்கு வலுச்சேர்க்க, ‘காதலரைப் பிரிக்கப் போகின்ற’ என்ற தொடர் வந்தவுடனே அவன் பரத்தை மாட்டுத்தான் போகப்போகிறான், அதனால் தலைவி வருந்துகிறாள் என்ற யூகத்தையும் சேர்த்து விட்டனர். ஆனால் நாம் விடியலில் தலைவன் பரத்தை  இல்லத்திலிருந்து திரும்பிவருவதாகத் தான் கண்டிருக்கிறோமே தவிரப் பிரிந்து போவதைக் கண்ட தில்லை.

ஆகவே, இப்பாடல் இரவுமுழுவதும் கணவனுடன் சேர்ந்திருந்த காதலி, “ஐயோ, வைகறை வந்து பிரிக்கிறதே” என்று கவலைப் படுவதைத்தான் குறிக்கிறது. எனவே இதைக் குறிஞ்சியில் சேர்த்திருக்க வேண்டும். அல்லது பிரிவின் நிமித்தம் என்று கொண்டால் பாலையிலாவது சேர்க்கலாம். மருதம் பற்றிய பிரிவில் வரக்கூடியதன்று.

சங்கக் கவிதைகளையும் நாம் வேறு அர்த்தங்களில் வாசிக்க நிறைய இடமிருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான் இந்தச் சான்றினைக் கூறினேன். பொதுவாக, என் மாணவர்களுக்கு, சங்க இலக்கியத்தைப் படிக்கும்போது ஏற்கெனவே அதில் குறிப்பிட்டுள்ள திணை-துறை விளக்கங்களைத் தவிர்த்துவிட்டு, முடியுமானால் எந்த உரையாசிரியர் குறுக்கீடும் இன்றிப் படியுங்கள் என்று சொல்வது என் வழக்கம். நமது மனநிலைக்கும் அறிவுக்கும் ஏற்பப் பொருள்கோள் அமைகிறது.


மலையாளிகளின் துரோகங்கள்

இக்கட்டுரை பிறழ்-இதழிலிருந்து (அல்லது வாட்சப் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது).
எழுதியவர் பெயர்-சாம்ராஜ் 28-04-2020

இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான  கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத  நடிப்பும்,நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.) பெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா.
கண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார். “சாம் மோகன்லால்தான் இந்தியாவின் தலைசிறந்த நடிகர். இதை நான் வெளியே சொல்ல முடியாது. சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்வார்” என்று. பிரமாதமான நடிகர் பட்டாளம் அவர்களிடம் உண்டு. மோகன்லால், நெடுமுடி வேணு, கொடியேற்றம் கோபி, (இப்பொழுது இல்லை) ஜெகதி ஸ்ரீ குமார், திலகன், இன்னசெண்ட், மம்முட்டி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன்,(இப்பொழுது இல்லை) அடூர் பங்கஜம், பிலோமினா (இப்பொழுது இல்லை) கவியூர் பொன்னம்மா, முரளி,(இப்பொழுது இல்லை) சுகுமாரி, மாலா அரவிந்தன், கொச்சின் ஹனிபா,  சலீம் குமார், கே.பி.யே.சி லலிதா, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் , ஊர்வசி, வேணு நாகவள்ளி, ஜலஜா, சங்கராடி,(இப்பொழுது இல்லை) சீனிவாசன், ஜெயராம், கார்த்திகா, திக்குருச்சி, ஜனார்த்தனன், முகேஷ், சி.ஏ.பால் என சிறந்த நடிகர்கள் அவர்களிடம் உண்டு.
கரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு. சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். தேசாடனம் இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம். ஒருபாடு படங்கள். 80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம். துல்லிய மான middile cinema  உருவாகியிருந்தது. ஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், பிளஸ்ஸி போன்ற நல்லஇயக்குனர்களும், எம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.
மரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்கு பரிச்சயம். திலகனுடன் தொலைபேசியில் உரையாடு வதுண்டு. கோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன். லோகிதாசை ஒருமுறை சந்தித் திருக்கிறேன். அவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன். பழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு  நெருக்கம்.
20 வருட கால மலையாள சினிமாவை பார்ப்பவன் என்ற தகுதியில் சொல்கிறேன்.அதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்ததையும் சேர்த்துக் கொண்டால் 25 வருடம். (கறுப்பு வெள்ளை மலையாள சினிமாவை நான் இதில் சேர்க்கவில்லை.) கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவை அவதானித்தவன் என்ற இறுமாப்பில் சொல்கிறேன். முன் சொன்ன பத்தியில் இருக்கும் அத்தனை பேரும் கறைபட்டவர்கள் அல்லது கயமையானவர்களே.
இத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை. மாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள். மலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை, இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது. தமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.
வலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான். பொள்ளாச்சி கவுண்டராக உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார். பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு, மோகன்லால்  அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி “வேண்டாம் மோனே தினேஷா” என மாரில் ஏறி மிதிப்பார்.
பொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா? (கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்) தென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார். அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்களிடம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார்.இப்போது வயதாகி விட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.மற்றொரு ’தேவரை’ மலையாளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். 
உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷ நாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார். மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி kl வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள். நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம்  போதவில்லை.
கேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது. அங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள். அவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும் ”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள். (இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.) கேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா …..? சிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது.
கால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.) இதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு. தமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள். கேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள். திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு. இன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள் வாங்கவில்லை. கேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”. வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள். (ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.) இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது. தமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா அவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.
தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள். அவர்கள் கதாநாயகர்களாகநடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது. எம்.ஜி.ஆர்,நம்பியார்,பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன்(முதல் மரியாதை),  ரகுமான், கரண், வினித், ஜெயராம், அஜித்,பரத்,நரேன்,அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா மேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும். நடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை. தமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர். தொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு. எம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது.அவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
மலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது. இதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே. கமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே. மீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள். இவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும், கனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு. தமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை. பழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம்  படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி.
எனக்குத் தெரிந்து மலையாளப் படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான். 81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ)அதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார். அதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை. கமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகனாக விடைபெற்றார். அதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை. ஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த்,படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத் திரையில் தென்படுவதுண்டு. பெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான். பாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள்.
இளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார். இளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை. அவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள். பழசிராஜா படத்திற்கான மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.
அப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள். ராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என.
இந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை. பிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள். உதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள். பாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே. ரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்). அந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே. இதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.
பூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே. பாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர்.
பிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே. அவரும் முடிந்தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார். முடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது. சமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.
ராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை. மின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர  பிறமொழிக்காரர்களும், மலையாளிகளுமே. கஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிர மணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம்.
அடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட   திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”. இதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை. ஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது. சரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…?
ஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர். முடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.
சமீபத்தில் நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது. மம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார். முக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது. சொல்லாதது இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே. எத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.
அஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள். திரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார். இன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருப்பவர். எனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள். தீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.
இதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா. இவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது. வாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக். அவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.
சரி கேரளத்துக்குத் திரும்புவோம். சேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது. பாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில்.
  ”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது. ஏறக் குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது. சேர மன்னர் களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே. அந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’  நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.
இந்தப் பாண்டிகளின் தலைநகரில் தான் மலையாள் நடிக. நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர். மோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன். மம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது. ஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது. ஏ.வி.எம்,லும், பிரசாத்திலும் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலகலமாய் ஓணம் கொண்டாடுகிறது. தமிழர்களோடுதான் ’வாழ்கின்றனர்’. ஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார். ஒரு தமிழ் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார். அன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள் என்று.
தமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன. காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர “ பாவம் இந்தப் பாண்டிகள் என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள். கேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட  செய்ய முடியாது. திரையரங்கம் சூறையாடப்படும். ஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.
தமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம். தமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே. உங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள். எந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார். மூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள். வெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.
நல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு. கே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே. இன்றைக்கும் பேசப்படும் பாத்திரம்தானே அது. மணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம், ”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.
தமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு. அது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம். ஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர்’ விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில் ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும், ’சொப்பன சுந்தரிகளும்’ ’அடிமாடு’களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். மலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்பான்மை இங்குண்டு. அந்தப் பாவத்தில் பாதிதான் நமக்கு பங்கு. (மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள். நடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்). கேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக் கூடியவர்கள். வாதிடக்கூடியவர்கள். அதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.
கெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு. ”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.
1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது. (முழுமையான பட்டியல் வெகு நீளமானது)
1.   நாடோடிக் காற்று- மோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்
2.   நியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986
3.   யுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987
4.  இது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983
5.   சித்ரம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989
6.  நம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990
7.   முகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு –  மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987
8.   வந்தனம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991
9.  மிதுனம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
10. விஷ்ணு – மம்முட்டி –       – 1993
11.  கிலுக்கம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992
12. பிங்காமி – மோகன்லால் – சிபிமலயில் – 1997
13. மழவில் காவடி – ஜெயராம் – 1990
14. காவடியாட்டம் – ஜெயராம் – 1990
15. ஐட்டம் –மோகன்லால் – 1985
16. மணிசித்ரதாழ் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994
17. வெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008
18. நாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006
19. தாழ்வாரம் – பரதன் – 1987
20. அச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005
21. மிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000
22. காருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998
23. சேக்ஸ்பியர் M.A  இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008
24. பிளாக் – மம்முட்டி – 2004
25. கருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006
26. காழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004
27. தன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005
28. பளிங்கு – மம்முட்டி – பிளஸ்ஸி – 2006
29. கல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007
30. பிரம்மரம் – மோகன்லால் – பிளஸ்ஸி – 2009
31. பாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003
32. ஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999
33. நரன் – மோகன்லால் – 2005
34. தென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002
35. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு – 2001
36. ரச தந்திரம் – மோகன்லால், கோபி – சத்யன் அந்திக்காடு – 2005
37. ஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005
38. புலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002
39. மலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003
40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000
41. டிரீம்ஸ் – சுரேஷ் கோபி – 1998
42. மேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000
43. இன்னலே – சுரேஷ் கோபி – 1999
44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006
45. பெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001
46.ஏகேஜி – 2007
47. மேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998
48. பகல் பூரம் – முகேஷ் – 2000
49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992
50. யாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு – 2003
இந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும். மலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.எம் ஜி யார் குறித்த மலையாளிகளின் பெருமிதம் தனியே ஆராய்பட வேண்டியது. மோகன்லால் எம் ஜி யாரின் திவிர ரசிகராக வாமனபுர  பஸ் ரூட் என்ற படத்தில் நடித்தார் .தமிழுக்கு ஒருபொழுதும் வரமாட்டேன் என்றவர் மருதூர் கோபால ராமச்சந்தர் பாத்திரம் என்றவுடன் :இருவர்” ல் நடிக்க தமிழுக்கு வந்து விட்டார். M.G.R ன் விரிவாக்கம் அதுவே.. அவர் ராமசந்திரன் அல்ல ராமச்சந்தர். தன்னை தமிழ்படுத்திக் கொள்ளும் விதமாக சந்திரன். அப்பொழுது அவர் பூசிய தமிழ் அரிதாரம் 1987ல் மரிக்கும் வரை கலையவே இல்லை இன்னும்.1972ல் பெரியார் மலையாள  எதிர்ப்பு இயக்கம் அறிவித்த போது M.G.R அவரைச் சந்திக்கிறார். சந்திப்பின் விளைவு பெரியார் போராட்டத்தைக் கைவிடுகிறார் …….M.N.நம்பியாரின் முழுப்பெயர் நமக்கு யாருக்காவது தெரியுமா(மஞ்சேரி நாரயண நம்பியார்) ரகுவரன் இறந்தபொழுது தினத்தந்தி அவரை தமிழர் என்றே குறிப்பிட்டது. சூர்யா டீவி ரகுவரனின் பாரம்பரிய வீடு இருக்கும் பாலக்காடு காஞ்சரக்காட்டில் கேமிராவோடு காத்திருந்தது.
நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை. நம் வரலாற்றில் நாம் நிச்சயமாய் அடுத்த தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்தது இல்லை .மற்றவர்களே நுற்றாண்டுகளாய் நம்மை வஞ்சிக்கின்றனர். எல்லோர் கையிலும் நம் ரத்தம் படிந்திருக்கிறது.*சேகுவாரா தேசமே* நம்மை வஞ்சிக்கும் பொழுது சேட்டன்களின் தேசத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.  நாம்? நாம்தான் திராவிடர்கள் ஆச்சே! தமிழர்கள் அல்லவே.