கோவை ஞானியின் விமரிசனச் சிந்தனை

ஞானியின் சமூக விமரிசன நோக்கு
ஞானியின் சமூக விமரிசன நோக்கிற்கு அடிப்படை பெரியாரியம். பார்ப்பன எதிர்ப்பு. இந்தியாவில் புரையோடியிருக்கும் பார்ப்பனியம் சமூக வாழ்க்கைக்கு முற்றிலும் எதிரான ஒன்று. பொருளாதார ஏற்றத்தாழ்வு, உலகெங்கிலும் காணப்படுவதுதான். ஆனால் அந்த ஏற்றத்தாழ்வுக்கு சாதியை அடிப்படையாக்கி, மனிதர்களில் பெரும்பான்மையினர் படிக்கலாகாது, மேற்சாதிகளையும் ஆளும் வர்க்கத்தையும் சார்ந்து வாழும் பொருளாதார அடிமைகளாகவே அவர்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தை இன்றுவரை இந்தியாவில் மட்டுமே காணமுடியும். சாதியில் உயர்வுதாழ்வு, அதற்கு அடிப்படையாக விதிக் கொள்கையைப் பயன்படுத்துவது போன்ற அநீதியான கருத்தாக்கங்களால் மனிதனை ஒடுக்கி, அவனைச் சிந்திக்க விடாமல் செய்து ஆதிக்கம் செய்கிறது பார்ப்பனியம்.

“உலகமயமாதலோடு பார்பபனியம் ஒத்துப் போகிறது. அரசுத்துறை தொழில்துறை கலை இலக்கியம் ஊடகம் ஆகிய அனைத்தினுள்ளும் செயல்படுவது பார்ப்பனியம். இயற்கையை அழிப்பது பார்ப்பனியம். பெண்ணடிமைத் தனத்திற்கும் காரணம் பார்ப்பனியம். தமிழினம் ஒடுக்கப்படுவதற்கும் காரணம் பார்ப்பனியம். உச்சநீதிமன்றம் நாடாளுமன்றம் எல்லாவற்றிலும் பார்ப்பனியப் பாம்புகள். இடஒதுக்கீட்டை மறுப்பதும் பார்ப்பனியம் ….இந்தியா முழுவதும் பரவியிருக்கின்ற இந்துத்துவம் தான் தலித் மக்களை ஒடுக்குகிறது. பார்ப்பனியம் ஒழிக்கப்பட்டால்தான் தலித் மக்கள் விடுதலை பெறுவார்கள்…இந்தியாவில் பொருளியல் வகையில் ஆ்திக்கம் செய்பவர்களோடு பார்ப்பனரும் மதவாதிகளும் ஒத்துழைக்கிறார்கள்” என்று கடுமையாகக் கூறுகிறார் ஞானி. இட ஒதுக்கீட்டுக்காகப் பார்ப்பனர்களை எதிர்த்த நீதிக்கட்சியினர் பெரும் பணக்காரர்களாக இருந்தனர். தனியுடைமை, அரசு அதிகாரம் ஆகியவற்றின் காவலர்களாக இருந்தனர். அதன் பின் வந்த பெரியாரியம் பார்ப்பனியத்தை எதிர்த்தாலும், அது மெய்யியலை ஏற்கவில்லை. மார்க்சியத்தையும் பொதுவுடைமையையும் ஏற்கவில்லை. பெரியாருக்குத் தம் கொள்கையைச் சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு ஆகியவற்றில் அடக்குவது கூடாது என்ற எண்ணம் இருந்தது.அதனால் பெரியாரியமும் அதைப் பின்பற்றிய கட்சிகளும் பணத்தின்பின்னாலும் ஆதிக்கத்தின் பின்னாலும் ஓடினர்.

ஞானியின் பெண்ணிய நோக்கு
பெண்கள் வீட்டில் அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள், அவர்களுக்குத் தாங்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் இல்லை, அவர்களுக்கு விடுதலை வேண்டும் என்பன போன்ற கருத்துகள் பெரும்பாலும் அனைவரும் சொல்லக்கூடியவை. காலப்போக்கில் பெண்கள் கல்வியுரிமை, வாக்குரிமை, சமவேலை வாய்ப்பு, சொத்துரிமை என்பன போன்று சில உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் அவர்கள் விடுதலை பெற்றவர்கள் ஆகிவிடுவார்களா என்ற கேள்வியை ஞானி எழுப்புகிறார்.

ஞானியின் பெண்ணியப் பார்வை மார்க்சியத்திலிருந்து முகிழ்க்கிறது. உண்மையில் இருப்பது ஒரே ஆதிக்கம்தான். பணத்தின், பொருளின் ஆதிக்கம். இன்று ஆண் விடுதலை உள்ளவனாக இருக்கிறானா? முதலாளி பணத்துக்குச் சேவை செய்கிறான். ஆடவன் முதலாளிக்குச் சேவை செய்கிறான். ஆகவே ஆணும் அடிமையாகவே இருக்கிறான். இவன் எப்படிப் பெண்ணுக்கு உரிமை வழங்க முடியும்? ஆணாதிக்கம் என்பது ஆண் அடிமைப் பட்டிருப்பதன் பொய்முகந்தான்.

பெண்கள் படித்தால், சொத்துரிமை பெற்றால், எங்கும் இயங்குகின்ற உரிமையும் சம்பாதிக்கும் உரிமையும் பெற்றால் அவர்கள் சுதந்திரமான வர்கள் ஆகிவிடுவார்களா? பணத்துக்குச் சேவைசெய்யும் அதே முதலாளிக்குத்தான் அவர்களும் சேவைசெய்யப் போகிறார்கள். இது எப்படி விடுதலை ஆகும்?

எனவே தங்களுக்கான கல்வியை-ஆதிக்கத்துக்குத் துணைபோகாத கல்வியை எப்போது பெண்கள் வகுக்கிறார்களோ, எப்போது போர் ஆயுதங்களை ஒழிக்கிறார்களோ, எப்போது அன்பும் அமைதியும் நிரம்பிய உலகைப் பெண்கள் உருவாக்குகிறார்களோ அப்போதுதான் பெண்கள் விடுதலை பெறுவார்கள். இப்படிப்பட்ட பெண் விடுதலையில்தான் ஆணின் விடுதலையும் அடங்கியுள்ளது. ஒடுக்கப்பட்டோர் விடுதலையும், பெண்கள் விடுதலையும் இல்லாமல் மானிட விடுதலை சாத்தியமில்லை என்கிறார்

ஞானியின் தமிழ்த்தேசிய நோக்கு
தமிழ்த் தேசியத்திற்கான இடைஞ்சல்களை ஞானி அவ்வப்போது பட்டியலிட்டிருக்கிறார் என்றாலும் அது நாம் அடையமுடியக்கூடிய ஒரு இலக்கு என்பது போலத்தான் ஞானி கருதி வந்திருக்கிறார். தமிழ்த் தேசியத்தின் அடிப்படை தமிழ்மொழி மீதுள்ள பற்று, தமிழனுக்கு ஒரு தனி நாடு தேவை என்ற உணர்வு. உண்மையில் இந்தச் சமயத்தில் தமிழ்த் தேசியம் வளர்ந்திருக்க வேண்டும்.

“அண்மைக்காலத்தில் நேர்ந்த சில நெருக்கடிகள் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக வரலாற்றிலிருந்து வெளியேற்றக்கூடியனவாகத் தெரிகின்றன. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில், தமிழ் மக்களின் நிலம், காடுகள், கடல்வளம் முதலியவை அன்னியர்களிடம் ஒப்படைக்கப் படுகின்றன. ஆறுகளும் பிற நீர்நிலைகளும் நச்சுப் படுத்தப்படுகின்றன… முதலாளிகள் அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் மத்தியதர வர்க்கத்தினர் அனைவரும் நுகர்வு வெறிக்கு ஆளாகியுள்ளனர். அன்னியப் பொருட்களின் மீது மோகம் அதிகரிக்கிறது. தமிழ்மொழிக்கு மதிப்பில்லை. தமிழ் உணர்வு மதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் இயற்கை அழிந்த பிறகு தமிழ் மக்களுக்கு வாழ்வில்லை என்ற உண்மை இங்கு உறைக்கவில்லை” என்று எடுத்துக் காட்டுகின்றார் ஞானி.

ஆனால் நாம் மத்திய அரசினால் எந்தெந்த விதங்களில் ஒடுக்கப்படுகிறோம் என்பது இன்று சாதாரண மக்களுக்கும் தெரிகிறது. நம்மைக் கொள்ளை யடித்து இந்தியாவிலேயே மிகுந்த வரிப்பணத்தை நம்மிடமிருந்து எடுத்துச் செல்லும் மத்திய அரசு, நமக்குக் கொடுக்கப்பட வேண்டிய பணத்தைத் தருவதே இல்லை. பேரிடர்கள் நடந்தாலும் உதவி செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தை அழிக்கக்கூடிய, சுற்றுச்சூழலை அடியோடு பாதிக்கக்கூடிய திட்டங்கள்தான் இங்கு செயல்படுத்தப் படுகின்றன. இவற்றை எதிர்க்கக்கூடிய திராணியும் நம்மிடம் இல்லை. விவசாயிகளும் தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கில் அழிகின்றனர். இதெல்லாம் சாதாரண மக்களுக்கும் நன்கு தெரியும்படியாக இந்தப் பெருநோய்க் காலம் செய்திருக்கிறது. ஆனால் தமிழுணர்ச்சி எழுவதற்கு மாறாக சாதியுணர்ச்சி பொங்கி ஒடுக்கப்பட்ட சாதியினர் கொலைகளும் ஆணவக் கொலைகளும் நடந்து வருவதைத்தான் நாம் தினமும் செய்திகளாகக் காண்கிறோம்.

தமிழ்தேசியத்தின் முதல் எதிரி சாதி. சாதி இனக்குழுச் சமுதாயத்தின் எச்சம் போலவே தொடர்ந்து வருகிறது. அதைப் போலவே தனது குழுவின் பெருமையின்மேல், தனது மானத்தின் மேல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றை நீக்கிவிட்டு அந்த இடத்தில் தமிழ்ப் பெருமை என்பதைப் பொருத்தினால்தான் தமிழ்த் தேசியம் என்ற சிந்தனையை நாம் அடைய முடியும்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தெலுங்கர், மலையாளிகள், கன்னடர்களுக்குத் தனி மாநிலங்கள் கிடைத்தன. ஆனால் இன்றுவரை மற்ற மூன்று மாநிலத்தவர்களுக்குமான கூடுதல் மாநிலமாகவே தமிழ்நாடு இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பேசவேண்டிய நெருக்கடி இன்னும் அடர்த்தியாகத் தேவைப்படுகிறது என்று எடுத்துக் காட்டுகிறார் ஞானி. ஆனால் தமிழகத்தில் வாழும் பிறமொழியாளர்களை குணாவும் மணியரசனும் கூறுவது போல வெளியேற்றிவிட முடியுமா? இங்கு ஞானி சொல்லும் தீர்வு வேடிக்கையாக இருக்கிறது. அந்தப் பிறமொழியாளர்கள் தமிழகத்தைத் தங்கள் சொந்தத் தாயகமாக ஏற்க வைக்க வேண்டும் என்கிறார். தமிழகம் பிறமொழியாளர்களின் ஆதிக்க பூமியாக உள்ளதை இங்குள்ள மாணவர்கள், இளைஞர்கள் உணர்ந்தால் இதற்கு ஓரளவு தீர்வு எனலாம்.

ஆனால் தமிழர்களுக்கு மொழிப்பற்று என்பது உயிரில் கலந்த ஒன்றல்ல. இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் அவர்கள் அணிந்துகொள்ளும் மேல்துண்டு என்பதுபோலத் தமிழுணர்வை ஆக்கிவிட்டார்கள். அவ்வப்போது வெளியில் தமிழ் தமிழ் என்று கூக்குரலிட்டாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்திருக்கக் கூடிய ஒன்றாக அது இல்லாததால் செயலளவில் தமிழின் உயர்வு சாத்தியமின்றியே இருக்கிறது. தமிழ் தமிழ் என்று முழங்குவோர் அனைவரும் நடைமுறையென வரும்போது ஆங்கிலக் கல்விக்கே தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். தமிழ் உணர்வையும் அதன் பெருமைகளையும் வாயளவில் சொல்லாடி அதையும் தங்கள் பிழைப்பு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீய சக்திகளிட மிருந்து தமிழ் உணர்வை மீட்கின்ற வேலை மிகவும் முக்கியமானது என்கிறார் ஞானி. இந்தத் தீயசக்திகள் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, “தமிழைத் தங்கள் பணம் தேடும் புத்திக்குப் பயன்படுத்தும் படைப்பாளிகள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், பரிசு-பாராட்டுகளைத் தேடி தங்களைத் தாழ்த்திக் கொள்பவர்கள், கவியரங்கு, பட்டிமன்றம், கோவில் திருவிழா என்று தமிழை மலினப் படுத்துபவர்கள், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகள், தமிழாய்வு நிறுவனங்கள் என்று தமிழுக்கு எதிரான தீயசக்திகளைப் பலவற்றிலும் அடையாளம் காண்கிறார் ஞானி” (பஞ்சாங்கம்). ஆனால் அண்மைக் காலததில் தமிழர்கள் விழித்தெழுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஞானியின் இலக்கிய விமரிசன நோக்கு
ஞானியின் இலக்கிய விமரிசன நோக்கு சில சமயங்களில் வேடிக்கையாக உள்ளது. அவர் காலப்போக்கில் தமிழ் இலக்கியங்களில் ஏற்பட்டு வந்த மாற்றத்தையே திறனாய்வின் விளைவு என்று நோக்குகிறார். “தமிழிலக்கியப் பரப்பில் திறனாய்வுக்கென தனி நூல் இல்லை என்ற போதிலும் காலந்தோறும் இலக்கியத்தின் வடிவமும் உள்ளடக்கமும் தொடர்ந்து மாறி வந்தது என்பதை வைத்துப் பார்க்கும்போது திறனாய்வு இல்லாமல் இத்தகைய செயல்பாடுகள் நடந்திருக்க முடியாது என்பது தெரியும்” என்று அவர் கூறுகிறார். ஆனால் எல்லா மொழியிலும் காலந்தோறும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்புதான் என்பதால் இதை ஏற்கமுடியுமா என்று தெரிய வில்லை. காலந்தோறும் கருத்துநிலைகளில் ஏற்படும் மாற்றங்களை ஹிஸ்டரி ஆஃப் ஐடியாஸ் என்ற தனித்துறையாக ஆராய்கின்றனர் மேற்குநாட்டினர். இப்படித் தமிழிலக்கிய வரலாற்றிலும் ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை. தமிழகத்தில் நிகழ்ந்த கருத்து மாற்றங்களின் வரலாற்றை முழுவதுமாக ஆராய்தல் வேண்டும், ஞானியே பல இடங்களில் ஆராய்ந்து தொடக்கப்புள்ளியிட்டும் இருக்கிறார்.

நாவல், கவிதை போன்ற இலக்கிய வகைகளை ஆராய்ந்த ஞானி, ஏனோ சிறுகதை என்ற முக்கியமான துறையை ஆராயால் விட்டுவிட்டார். சிறுகதைத் துறையில்தான் இந்திய இலக்கியத்தில், ஏன் உலக இலக்கியத்திலும் இடம் பெறக்கூடிய மிகச் சிறந்த படைப்புகள் தமிழில் உள்ளன என்பது பலரின் துணிபுமாகும். புதுமைப்பித்தனையும் லாசராவையும் ஞானி பாராட்டியிருக்கின்றார். அக்காலத்தில் மிகுதியாகப் போற்றப்பட்ட மெளனியைப் பற்றி அவர் அதிகமாகப் பேசியதில்லை. தமிழில் வெளிவரும் படைப்புகளை அப்போதைக் கப்போது வெளிப்படுத்திப் பாராட்டும் இயல்பு ஞானிக்கு இருந்தது. ஆனால் அவர் க.நா.சு. செய்தது போல வெளிப்படையாகத் தர மதிப்பீடு செய்வதில்லை. அவரது தேர்ந்தெடுத்தலின் வாயிலாகவே பெரும்பாலும் அப்படைப்பு தரமானது என்று நாம் கொள்ளவேண்டும்.

ஞானியின் நாவல் திறனாய்வில் சிறப்பானது அவரது பாத்திரப் படைப்பு ஆய்வுகள்தான். நாவலின் கதையை முழுமையாகத் தொகுத்துக் கொண்டு, அவற்றில் தாம் காணும் தனித்த ஆளுமை கொண்ட பாத்திரங்களை விளக்குவது ஞானியின் வழக்கம். “ஜே.ஜே.யிடம் தத்துவப் பார்வை இல்லை. தன்னை மேலும் கீறிக் கொண்டிருந்தால் பிரச்சினைகளின் ஆழத்திற்கு அவன் போயிருக்க முடியும். தான் கலைஞனாகவோ அல்லது கலைத்துறைச் சித்தாந்தியாகவோ இருப்பதன் பொய்ம்மை தெரிந்திருக்கும்” என்பது போலச் சிறப்பாக நாவலின் மையக்கருத்தை வெளிப்படுத்துகிறார். சிறந்த பாத்திரங்களைச் சித்தர்கள் என்கிறார். சான்றாக, “ஹென்றி ஒரு சித்தன்…இப்பாத்திரத்தின் வீச்சில் ஒரு நாவல் உருவாகியதன் மூலம் தற்காலத தமிழ் இலக்கியத்தில் ஒரு படைப்பு உன்னதமான தொன்மம் ஆகியுள்ளது” என்கிறார்.

சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்றவை வளர்ந்துவந்த வரலாற்று சமூகச் சூழலை மிக நன்றாக எடுத்துக்காட்டியிருக்கிறார் ஞானி. ஆனால் பக்தி இலக்கியத்தை அவர் மிகுதியாக ஆராயவில்லை. அதுவும் தமிழர் மெய்யியலில் தேவையான பங்களிப்பைச் செய்துள்ளது என்ற அளவில் அவர் பார்வை நின்றுவிடுகிறது. இது பற்றி விரிவாகப் பேச இது சந்தர்ப்பமில்லை. ஞானியின் அழகியல் பற்றி எழுதிய கட்டுரையில் சில குறிப்புகளைத் தந்திருக்கிறேன்.

வானம்பாடிக் கவிஞர்கள் பற்றிய ஞானியின் கருத்தை நான் பொருட் படுத்தக் கூடியதாக ஏற்கவில்லை. குறிப்பாக தமிழன்பனையும் சிற்பியையும் சிறந்த கவிஞர்கள் என்று காணும் அவரது கவிதை இரசனை குறையுடையதாகவே எனக்குப் படுகிறது. அக்கினி வீணைகளையும் புன்னகைக்கும் பூனைகளையும் அன்றும் இன்றும் என் மனம் சிறந்த கவிதைகளாக ஏற்கவில்லை. சிறந்த கவிதைகளுக்கான விதைகள் எழுத்து இயக்கத்தில் இருந்தன, அவற்றுக்கான சமூக-அரசியல் பின்புலம் வானம்பாடிகளிடமும் மார்க்சியர்களிடமும் இருந்தது என்று இன்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

ஆங்கிலத்தில் ரிடாரிக் என்றும் போயஸிஸ் என்றும் வகைப்படுத்து கிறார்கள். இப்படிப்பட்ட பிரிவு ஒன்றை ஞானியும் செய்கிறார். ஃப்ராய்டு மேல்மனம், ஆழ்மனம் என்றெல்லாம் மனத்தைப் பிரித்தார். ரிடாரிக் என்ற மேம்போக்கான அலங்காரக் கவிதைகளை மேல்மனத்தின் படைப்பு என்கிறார் ஞானி. வீரியமிக்க, நல்ல கவிதைகளை ஆழ்மனத்தோடு (“உள்மனத்தோடு”) தொடர்பு படுத்துகிறார். தம்மை அறியாமலே வானம்பாடிகளின் கவிதைகளை அலங்காரக் கவிதைகளில் சேர்த்தும் இருக்கிறார்.

வானம்பாடிக் கவிதைகள் மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க்கவிதைகள் பெருமளவு ரிடாரிக் (சொல்லலங்காரங்கள்) என்பதிலேயே சேர்கின்றன. அதனால் இன்றுவரைகூட பாரதிக்குப் பின் நல்ல கவிஞன் தோன்றவில்லை என்று கூறவேண்டிய நிலை உள்ளது. பாரதிதாசனிடம் இருந்த ஆற்றல்மிக்க தமிழுணர்வு போற்றக்கூடியது, பின்பற்ற வேண்டியது என்றாலும் அவரிடமும் ரிடாரிக்தான் மிகுதியாகச் செயல்பட்டது என்பதால்தான் இருவேறு கவிதைப் பரம்பரையே உருவாயிற்று. பாரதிதாசனின் தமிழுணர்வு நமக்கத் தேவை என்று வலியுறுத்த வருவதால் ஞானி பாரதிதாசனின் கவிதைகளைச் சரிவர மதிப்பிடவில்லை. கல்லிகையை ஞானி எழுதியபோது ஞானிக்கு கவிதை உணர்வு வரவே வராது என்று பிருமீள் ஒருமுறை குறிப்பிட்டார். தற்காலக் கவிதை பற்றி ஞானியின் குறிப்புகளைப் பார்க்கும்போது பிருமீளின் விமரிசனம் உண்மை என்றே தோன்றுகிறது.

முடிவாக…

ஞானியின் படைப்புகள் அனைத்திலும் அவரது விமரிசன நோக்கு பாலினுள் நெய்போல் விரவி நிற்கிறது. நாம் சிந்திக்க வேண்டும், தமிழ் மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பதற்கான தூண்டுகோலாகவே அவற்றை நான் காண்கிறேன். சிந்திக்க வைப்பதுதான் விமரிசனத்தின் தலையாய பணி.

இன்று தமிழ் பற்றி, தமிழகத்தின் எதிர்காலம் பற்றி, சுற்றுச் சூழல் பற்றி, உலக இருப்பு பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நம் முன்னர் உள்ள மிகப் பெரிய கேள்வி இன்றைய பெருந்தொழில்துறை தான். மனிதன் ஒரு நூற்றாண்டுக்கு முன்கூடத் திரும்பிச் செல்ல முடியாது. அந்த அளவுக்கு மின்சாரம், இயற்கை எரிபொருள்கள், வாழ்க்கை வசதிகள், நுகர்வுப் பொருள்கள் என்பன அவனை மாற்றியுள்ளன. இன்று மின் விளக்கோ விசிறியோ, கைப்பேசியோ இல்லாமல் எத்தனை பேரால் உயிர்வாழ முடியும்? இந்த நுகர்வுகள் யாவும் மேலும் பெருநுகர்வுகளுக்குக் கொண்டுசெல்பவை. உதாரணமாக, மின்சாரம் தடைப்பட்டால் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. அதற்கு இன்னொரு தொழில்நுட்பம் தேவையாகிறது. அதேபோல், அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தில் 2ஜி போய், 3ஜிவந்து, 4ஜி வந்து, இப்போது 5ஜி வரை வந்திருக்கிறது. இன்று சிறார்களுக்கும் கணினிவழி, செல்பேசிகள் வழி பாடம் கற்பிப்பதுவரை வந்திருக்கிறது. இவை முன்னேற்றங்கள்தானா, அல்லது பின்னடைவுகளா? இவற்றிலிருந்து வெளியேறி நாம் இயற்கையோடிசைந்த ஒரு வாழ்க்கையை அடைய முடியுமா?

இந்த நுகர்வு ஆசையின், அல்ல, நுகர்வுத்தேவையின் அடிப்படையில்தான் பெருந்தொழில்கள் தழைக்கின்றன. இவற்றின் அடிப்படையில்தான் பெருமுதலாளித்துவம் உருவாகிறது. மேலும் மேலும் இயற்கை அவர்களால் சுரண்டப்படுகிறது. உலகம் வெப்பமயமாகிறது. கடைசியில் மனித குலத்தின் எஞ்சுதல் (சர்வைவல்) என்பதே கேள்விக்குள்ளாகிறது. இடையில் எந்த வழியினை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம், கடைப்பிடிக்கப் போகிறோம் என்பதுதான் நம் முன்னர் உள்ள கேள்வி. ஞானி நம்மைச் சிந்திக்கச் சொல்கிறார், சிந்திப்போம் தோழர்களே, நமது எதிர்கால வாழ்க்கைக்காகச் சிந்திப்போம். மானிட இனத்தைப் பற்றிய அக்கறை கொண்டவர்கள் மாமனிதர்கள். அப்படிப்பட்ட மாமனிதர்களில் ஒருவராக ஞானியைக் காண்கிறேன்.

சமூகம்