கோவை ஞானியும் அவரது பணிகளும்

முன்னுரைதமிழ் மரபின் இணையற்ற வாரிசு ஞானி

வாழையடி வாழை என வந்த தமிழ் ஞானியர் மரபில் தம்மையும் ஒருவராக இணைத்துக் கொண்டவர் திரு. கோவை ஞானி. அதனால்தான் தம் பெயரான பழனிச்சாமி என்பதை ஞானி என்று மாற்றிக் கொண்டார் போலும். பிரக்ஞை போன்ற சில இதழ்களில் ஞானதேசிகன் என்ற புனைபெயரிலும் எழுதியிருக்கிறார். ஆயினும் தம்மை ஒரு தமிழ் மாணவராகவே அவர் என்றும் கருதி வந்தார். அவரது சமகாலத்தில் அவரோடு பழகி வாழ இயன்றதற்காக நாம் பெருமைப் படுகிறோம். அவரது பன்முகப் பார்வை குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஏற்பாடு செய்திருக்கும் இக் கருத்தரங்கம் பெரும் சிறப்புடையதாகிறது. இதனை ஏற்பாடு செய்த பேராசிரியர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் என் வணக்கத்தையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞானியும் நானும்

ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் எனது நட்பு நீள்கிறது. ஆயினும் அவரைவிட ஒரு பதின்மூன்றாண்டுகளே இளையவன் என்று காணும் போது இன்னும் நீண்ட பரிச்சயம் இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்த்துறைக்கே நான் ‘லேட்’டாக வந்தவன். முதலில் அறிவியல் ஆசிரியனாகப் பணியைத் தொடங்கி, தமிழ் இலக்கியத்தையும் ஆங்கில இலக்கியத்தையும் தனிப்பட்ட முறையில் கற்று, தமிழ்த்துறையில் நான் காலடி எடுத்து வைக்கவே முப்பதாண்டுகள் சென்றுவிட்டன. அதன் பிறகு பிற மரபான தடங்களிலிருந்து மாறி, ஞானியினது தடத்திற்கு வர இன்னும் சில ஆண்டுகள் பிடித்தன. ஏற்கெனவே ஆங்கில இலக்கியப் பரிச்சயம் இருந்ததால், அமைப்பு மொழியியல் (சசூர் தொடங்கிவைத்த ஒன்று) எனக்கு நன்கு பரிச்சயமாகியிருந்தது. (அமைப்பியத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ள ஒன்றுமில்லை என்பதால்தான் வந்தவேகத்தில் (இருபதாண்டுகளில்) அது பின்னமைப்பியத்திற்கும் பின்நவீனத்துவத்திற்கும் வழிவிட்டது.)

ஆங்கிலப் படிப்பும் உதவுகிறது

பொதுவாக என்னை இதுகாறும் வழிநடத்தி வந்திருப்பவை ஆங்கில வாயிலாக நான் கற்ற கோட்பாடுகளே என்று கூறலாம். இப்போதும் கூட மரபான மார்க்சியத்தைவிட ஃப்ராங்க்ஃபர்ட் புலம் என்று அழைக்கப்படுகின்ற புதிய விமரிசனச் சிந்தனையே நமது சூழலில் மிகவும் ஏற்கத்தக்கது என்பது எனது கருத்து. அதில் அதார்னோ, ஹெர்பர்ட் மார்க்யூஸ், வால்டர் பெஞ்சமின், ஹேபர்மாஸ் போன்றோர் இருந்தனர். ஆனால் இந்தியச் சூழலில் அவர்கள் தத்துவமும் கருத்துகளும் உள்வாங்கிக் கொள்ளப்படவோ அதிகம் பேசப்படவோ இல்லை. பரிமாணம் போன்றதொரு பத்திரிகை தொடர்ந்து வந்திருக்குமாயின், ஒருவேளை அது நிகழ்ந்திருக்கலாம்.  தமிழில் இதற்கான தத்துவப் பயிற்சி மிகவும் குறைவு என்பது வருத்தத்தை அளிக்கிறது. இன்று தத்துவம் என்றால், “போனால் போகட்டும் போடா”, “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” என்ற சாதாரணச் சொலவடைகளாகத் தமிழுலகில் திரித்துவிட்டார்கள் என்பது இன்னும் வருத்தமளிக்கக்கூடியது

சமண சார்வாக ஆசீவக பெளத்தத் தத்துவங்களும் அதன்பின் அத்வைதம், விசேட அத்வைதம், துவைதம், சைவசித்தாந்தம் போன்ற தத்துவங்களும் பிறந்து வளர்ந்த நம் நாட்டில் ஏற்பட்டுள்ள தத்துவத்தின் வறுமை கொடியது. அதனால்தான் பலரால் மார்க்சியத் தத்துவத்தைக் கூட உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை போலும். இந்தச் சூழலில் பி.ஓ.எல். மட்டுமே அக்காலத்தில் படித்த ஞானி எப்படி இவ்வளவு ஆழமாகத் தத்துவத்தில் பயின்றார் என்பது பெருவியப்பு அளிக்கிறது. ஞானியைப் பின்பற்றுவோர் அல்லது பின்பற்ற நினைப்போர், அவரைப் போன்று பலவகைத் தத்துவங்களிலும் ஆழங்காற்பட்டால்தான் அவரைப் போன்ற சமநிலை நோக்கு எய்த முடியும்.    

எனது பரிச்சயம்

(1982 அல்லது 1983 ஆக இருக்கலாம்) இலக்கு அமைப்பு தனது திரைப்படம் பற்றிய கருத்தரங்கத்தைத் திருச்சியில் நடத்தியது. ‘சினி ஃபோரம்’ என்ற திரைப்பட நோக்குதல்/வாசித்தல் அமைப்பை நாங்கள் திருச்சியில் நடத்தி வந்ததால் இந்தக் கருத்தரங்கம் அங்கே நடைபெற்றது ஏற்புடைய ஒன்றுதான். அதற்கு ஞானி வந்திருந்தார். பின்னர் அடுத்த ஆண்டில் இன்றைய அரசியல் சமூக நிலையில் காந்தியின் ஏற்புடைமை பற்றி திருச்சி செயின்ட் பால்’ஸ் செமினரி ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது அங்கிருந்த அருட்தந்தை திரு. எக்ஸ். டி. செல்வராஜ், அமுதனடிகள் போன்றோருடன் சேர்ந்து அதைப் பேராசிரியர் திரு. ஆல்பர்ட் நடத்தினார். அதில் ராஜ் கெளதமன், ஞானி போன்றவர்கள் பங்குபெற்றனர். இந்த இரு நிகழ்ச்சிகளிலிருந்துதான் ஞானியுடனான எனது பரிச்சயம் ஆழம் பெற்றது எனலாம்.

1989இல் திருச்சி நாடக சங்கத்தின் சார்பாக மூன்று நாள் ‘பாதல் சர்க்கார் நாடக விழா’வினை நடத்தினோம். ஆறு அரங்க நிகழ்ச்சிகளையும் மிகக் காரசாரமான விவாதங்களையும் கொண்டிருந்தது அந்நிகழ்வு. அதில் ஞானி கலந்துகொண்டார். அங்கு அவர் தங்கியிருந்த மூன்று நாட்களில் அவரோடு எனது பரிச்சயம் இறுகியது. அப்போது தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் மிகுதியாகப் பேசப்பட்டுவந்த அமைப்பியம் பற்றி உரையாடினோம். அதன் வாயிலாகத்தான், அமைப்புமைய வாதமும் பின்னமைப்பு வாதமும் என்ற நூலை நான் எழுத, ஞானி நிகழ் வெளியீடாக அதனை 1990 தொடக்கத்தில் வெளியிட்டார். ஆயினும் அந்த நூலை ஏனோ வாசகர்கள் சரியாக ஏற்றுக் கொண்டார்களா என்பது எனது சந்தேகம். ஏனெனில், அமைப்பு வாதத்தை யும் பின்னமைப்பு வாதத்தையும் ஓரளவு விளக்கிய பிறகு, அதன் இறுதி யில் இவை பற்றிய ஒரு விவாதத்தை வைத்து, இவை நம் தமிழ்ச் சமூகத்திற்கு அதிகமாகப் பயன்படக்கூடியவை அல்ல என்ற கருத்தை நான் கூறியிருந்தேன். அதை யாரும் அச்சமயத்தில் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது.      

ஞானியின் ஓயாத இயக்கம்

கண்பார்வையை இழந்த போதிலும் சலியாது ஓயாது இயங்கி வந்தவர் ஞானி. அவரது படைப்புகளின் அளவைப் பார்க்கும்போது நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது. 39 ஆய்வுநூல்கள், 3 கவிதை நூல்கள், பல கட்டுரை நூல்கள், தொகுப்பு நூல்கள் என அவர் பணி மிகப் பெரியது. ஆனால் நல்ல வேளை, அவற்றின் எல்லை பரந்து  விரிந்த ஒன்றல்ல, குறுகியதுதான் என்பது நமக்கு ஆறுதல் தருகிறது. தாம் வாழ்க்கையில் ஆராய்ந்து கண்ட ஒரு சில சிந்தனைகளையே தம் நூல்கள் முழுவதும் திரும்பத் திரும்ப எடுத்துரைத்து வந்துள்ளார் ஞானி.

அப்படி ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக, தமது வாழ்நாள் முழுவதும் அவர் ஆய்ந்து கண்ட உண்மைகளைத்தான் அவரது விமரிசன நோக்கு என்று இங்குப் பார்க்கிறோம். இன்றைய சிந்தனையாளன் பன்முக அறிவியல், தத்துவ அறிவு கொண்டவனாக இருக்க வேண்டியிருக்கிறது. அப்போதுதான் சமூக நுட்பங்களை அறியவும் தீர்வு காணவும் முடியும். இந்தப் பண்பு ஞானியிடம் இருந்தது. எனவே அவர் உண்மையில் ஒரு ஞானியாகவே இருந்தார். முக்கியமாக, பிறரிடம் காணாத ஒரு சொல்லாடல்-“நாம் திரட்டித் தொகுத்துக் கொள்ள வேண்டும்” “இங்கு தொகுத்துக் கொண்டு மேற்செல்வோம்” என்பது போன்ற வாசகங்களை அவர் நூல்களில் அடிக்கடி காண முடியும். என் பார்வையில், வேறு எவரும் இந்தத் தொடரை அடிக்கடி தங்கள் எழுத்தில் பயன்படுத்தியதே இல்லை.

கல்வியியல் நோக்கில் தொகுத்துக் கொள்ளுதல் என்பது படைப்பாற்றல் (creativity), மாணவர்கள் அடையவேண்டிய இறுதிச் சுயசிந்தனை நிலை அது என்பதைக் கல்வியாளர்கள் விளக்கியுள்ளனர்.  தர்க்க நோக்கில் உறுதி கொள்ளல், பகுத்தல் என்ற நிலைக்கு அடுத்து வருகின்ற சிந்தனை தொகுத்தல். (தீசிஸ், அனாலிசிஸ், சிந்தசிஸ்). அடுத்து ஒருங்கிணைந்த புதிய கோட்பாடு ஒன்று தோன்றுவதற்கான அடிப்படை அது. ஆகவே ஞானியின் விமரிசன நோக்கின் அடிப்படை “தொகுத்துக் கொள்ளுதல்” என்பதைக் காணமுடிகிறது.             

தமிழில் விமரிசகர்கள் மிகக் குறைவு. அதிலும் “தொகுத்துக் கொள்ளும்” சுயசிந்தனையாளர்கள் மிகமிகக் குறைவு. இவர்கள் மத்தியில் சிறப்பான இடத்தைப் பெறுபவர் ஞானி. அவரது விமரிசனப் போக்கினை நாம் மெய்யியல் விமரிசனம் என்ற பெயரால் அழைக்கலாம். தமிழின் சிந்தனைப் போக்கு ஆதிகாலத்திலிருந்து இவ்வாறாகத் தொகுத்துக் கொண்டு வளர்ந்ததே என்பதை ஞானி சுட்டிக் காட்டாத இடங்கள் குறைவு.

கருத்துச் சுதந்திரம்தான் விமரிசனத்தின் அடிப்படை

ஞானி கவிதை, கட்டுரைப் படைப்புகள், சிற்றிதழ்கள் நடத்துதல், விமரிசனம் எனச் சில பணிகளில் இயங்கி வந்தவராயினும், அவரது விமரிசனப் பணியே தலையாயதும், காலமுழுவதும் அவர் ஈடுபட்டதும், சிறப்பானதும் ஆகும். விமரிசனம் என்பது கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடு. சுதந்திரமாகச் சிந்திக்காதவனும், அதை வெளிப்படுத்த இயலாதவனும் விமரிசகர்கள் ஆக முடியாது. கருத்துச் சுதந்திரம் என்பதே பிறர் கருத்தை மறுப்பதற்கான, அல்லது எதிர்ப்பதற்கான சுதந்திரம்தான். இல்லையெனில் அது பிறர் கூறியதை வழிமொழிவதாக மட்டுமே ஆகும்.

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் கற்பிக்கப்படத் தொடங்கியதி லிருந்தே யார் மனத்தையும் புண்படுத்தலாகாது, குறைகாணலாகாது என்ற அரசியல் புகுந்துவிட்டது. இன்றுவரை இந்த மனப்பாங்கு நீடிக்கிறது. இதை அரசியல் என்று சொல்லக் காரணம், “விமரிசனம் செய்யப் போகிறாயா,  அப்படியானால் எவர் மனத்தையும் நீ புண்படுத்தலாகாது” என்ற எச்சரிக்கை தமிழில் திறனாய்வுத் துறையில் ஈடுபடுபவர்களுக்குத் தொடக்கத்திலேயே அளிக்கப்பட்டு விடுகிறது. சுதந்திரம் பெற்ற நாள் முதலாகவே இம்மாதிரி இந்தியாவில் ஏதோ ஒருவகையில் ‘கருத்தொடுக்குதல்’ என்பது செயல்பட்டு வருகிறது.

அதனால் சரியான கலை இலக்கிய நோக்கில் மதிப்பீடு செய்தலும் பிறர் மனத்தைப் புண்படுத்தல், slander எனக் கருதப்படுகிறது. slander என்பது பேச்சிலும் எழுத்திலும் நிகழும் அவதூறு அல்லது பழித்துரை ஆகும். பிறரைப் பழித்துரைப்பவர்கள், குறிப்பாக அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் என்று எழுத்தாளர்களையும் விமரிசகர்களையும் சமூகச் செயல்பாட்டாளர் களையும் கருதுகிறார்கள். எனவே அவர்கள்மீது ஆதிக்கவாதிகளின் தண்டனை பாய்கிறது. இன்றும் சிறந்த சமூக விமரிசகர்களை அரசாங்கம் காரணம் எதையும் கூறாமலே சிறையில் அடைப்பதையும் நாம் பார்க்கிறோம்.

இது மாதிரியான சூழ்நிலையில் தமிழுலகில் ஐம்பதாண்டுகளாக விமரிசகராக இயங்கி வந்துள்ளார் ஞானி. பரிமாணம் பத்திரிகை நடத்திய சமயத்தில் அரசாங்கத்தின் கண்காணிப்பு அவர்மீதும் எஸ்விஆர் மீதும் இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். பிறகு அவர்மீது அரசாங்கத்தின் தாக்குதல் பெரிதும் இல்லாமல் போனதற்கு அவரது எழுத்தில் காணப்படும் மென்மையும் நயத்தக்க நாகரிகமும்தான் தலையாய காரணம் என்று கருதுகிறேன். அத்துடன் வலதுசாரிச் சிந்தனையாளர்களுடனும், ஆன்மிக வாதிகளுடனும் துறவிகளுடனும் பண்புடன் பழகி, அவர்கள் கருத்துக ளையும் விவாதிக்கும் திறன் ஞானிக்கு இருந்தது. எவ்வாறாயினும், இன்றைய நிலையில் மனித மாண்பு வளம் பெற வேண்டுமானால், ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால், தனிமனிதர்களும் சுதந்திரமாக இயங்க வேண்டுமானால் கருத்துரிமை-பேச்சுரிமை-வெளிப்பாட்டுரிமை என்பது மிக அவசியம்.  

ஞானியின் விமரிசனப் போக்கு என்பதில் அவரது இலக்கிய விமரிசன நோக்கு மட்டுமின்றி, அவரது மார்க்சியப் போக்கு, மனித நேயப் போக்கு, தமிழ்தேசியப் போக்கு, சமூக விமரிசன நோக்கு ஆகியவை அடங்கியுள்ளன. இவை அனைத்திலும் காணப்படுவதுதான் மெய்யியல் விமரிசனம்.

மெய்யியல் என்றால் என்ன? ஞானியின் நோக்கில் ஐந்தாயிரம் ஆண்டு களாக இன்று வரை தொடர்கின்ற தமிழ்ப்படைப்புகளின், தமிழ்மரபின், தமிழ்ச் சிந்தனையின் உள்ளடக்கம்தான் மெய்யியல். சித்தர்கள் கவிதைகளின் அடிப்படையாக இருப்பதுதான் தமிழ் மெய்யியல். தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து இடையறாது ஊடுருவியிருக்கும் அறத்தின் மற்றொரு பெயர்தான் மெய்யியல்.

ஞானியின் மார்க்சிய நோக்கு       

தமிழில் மார்க்சிய விமரிசனம் என்பது உள்ளடக்க ஆய்வும் ஒப்பீடும் செய்வதாகவே இருந்தது. ஜீவா தொடங்கி தமிழகத்தின் எத்தனையோ மார்க்சியர்களை இதற்கு உள்ளடக்க ஆய்வு செய்தவர்களுக்கு உதாரணமாகக் கூறலாம். ஞானியின் இலக்கியப் பார்வையும் இதற்கு விதிவிலக்கில்லை. கைலாசபதி, கா. சிவத்தம்பி, நுஃமான் போன்ற ஈழத்து இலக்கியவாதிகள் ஒப்பீட்டுப் பார்வையினை வளர்த்தனர். எனினும் கலை இலக்கியப் பார்வை அதில் அமையவில்லை. ஒரு சிலர் முயற்சி செய்தனர். குறிப்பாக அலை போன்ற இதழ்களின் பங்களிப்பு இதில் உண்டு.

பிளேட்டோ, கலைஞர்களை ஆதரித்தால் ஒழுக்கக் கேடு வளர்ந்துவிடும், அதனால் அவர்களை நாடுகடத்த வேண்டும் என்று கூறியதுபோல, மார்க்சியவாதிகள் கலைப்படைப்பு உத்திகள் நோக்கில் இலக்கியத்தைப் பார்ப்பது, தூய அழகியல் பார்வைக்கு வழிவகுத்துவிடும், வர்க்க-போராட்ட நோக்கினைக் குலைத்துவிடும் என்று அஞ்சினர் போலும்.

என்னைப் பொறுத்தவரை, உள்ளடக்கம் ஒரு படைப்பின் உயிர். வடிவம் அதன் உடல். உயிர்தான் முக்கியமானது என்றாலும், சரியான உடல் அமையவில்லை என்றால் படைப்பு கெட்டுப்போகும். உடம்பார் அழியில் உயிரார் அழிவர்.  

அமைப்பிய மார்க்சியம் அல்தூஸர் போன்றவர்களால் மொழியப்பட்ட பிறகு, இளம் மார்க்ஸ்-முதிய மார்க்ஸ் என்ற பிளவு ஏற்பட்டது. இவர்களில் யார் சரி, எவரைப் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. கட்சிரீதியான மார்க்சியர்கள் இளம் மார்க்ஸை ஏற்பதில்லை. மூலதனம் நூல் தொடங்கி பொருளாதார அடித்தட்டுப் பார்வையை முன்வைக்கும் முதிய மார்க்ஸ்தான் அவர்களுக்குத் தேவை. அல்தூஸர் மார்க்சியத்தை மேலும் அறிவியல் ரீதியான ஒன்றாக மாற்ற முனைகிறார். மெய்யியலை மார்க்சியத்திலிருந்து அவர் வெளியேற்ற முயன்றார். ஆனால் மார்க்சியத்தை அடிப்படையில் ஒரு மெய்யில் என்றுதான் நாம் கொள்ளவேண்டும் என்பது ஞானியின் கருத்து.   

இளம் மார்க்ஸ் முன்வைத்த முக்கியமான கருத்து அந்நியமாதல் கோட்பாடு. பெரும்பான்மைக் கட்சிசார் மார்க்சியர்கள் மூத்த மார்க்ஸை மட்டுமே ஏற்றனர். அந்நியமாதல், ஃபெடிஷிசம், பொருளுறவாக்கல் போன்ற கருத்துகளை முதன்மைப் படுத்தியவர்கள் எஸ். என். நாகராஜன், எஸ்.வி. ஆர்., ஞானி ஆகியோர் மட்டுமே. இன்றும் தமிழர்கள் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்துச் சாமானியர்களும் அந்நியப்பட்டு, வாழ்க்கை இழந்து துயரப்படும் நிலையில் இருக்கும் நிலையில் பொதுவுடைமைச் சமூகத்தில் தான் மனிதர்கள் அந்நியமாதல் அற்று முழுமையடைய முடியும் என்கிறார் ஞானி. தமிழிலக்கியத்தில் அந்நியமாதலை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தமை ஞானியின் தனித்த விமரிசன நோக்கு.

அது மட்டுமின்றி, மரபுவழியிலான மார்க்சிய விமரிசனத்தில் வர்க்கப் போராட்டம் என்ற கருத்து மட்டும் ஏற்கப்பட்டதே ஒழிய, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கோ, தமிழ்த்தேசியத்திற்கோ உரிய இடம் அளிக்கப்படவே இல்லை. இவையெல்லாம் வர்க்கப் போராட்டத்தில் தீர்ந்துவிடக்கூடிய மிகச் சிறு பிரச்சினைகளாக அவர்கள் கண்ணில் பட்டன. இதனால்தான்

மார்க்சியத்தை மேற்கத்தியப் பாணிகளில் கற்பது சரியன்று என்றார் ஞானி.

இந்தவிதத்தில் எஸ். என். நாகராசனின் கீழை மார்க்சியம் என்ற கருத்தை அவர் ஆதரிக்கிறார். நமது மண்ணுக்கேற்ற மார்க்சியம் வேண்டும் என்னும்போது, மெய்யியல் என்ற கருத்தை முன்வைக்கிறார். உடைமைச் சமூகத்தில், மனிதன் எல்லாவற்றிலிருந்தும் அன்னியப்பட்டுவிடுகிறான். அதிலிருந்து மனிதன் விடுதலை பெற்று முழுநிறைவான வாழ்க்கை வாழ்வதை மார்க்ஸ் கனவு கண்டார். மனிதன் விடுதலை பெற்று முழுமையடைவதே மார்க்சிய மெய்யியல் என்றார்.

தமிழிலக்கியம் தொடக்கத்திலிருந்தே இதனைத்தான் கூறிவருகிறது என்பதைக் காட்டியுள்ளார் ஞானி. இன்று மார்க்சியத்தின் மனிதமைய நோக்கு நமக்குத் தேவையில்லை, அதற்கு மாறான இயற்கைமைய நோக்குதான் தேவைப் படுகிறது. ஞானியின் மெய்யியல் என்பது இயற்கைமைய நோக்கிற்கு இட்டுச் செல்லக் கூடியதாக உள்ளதால் அதைப் போற்றுகிறேன்.   

அமைப்பியம் பற்றி ஞானி

அமைப்பியம் மார்க்சிய ஆய்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்று ஞானி கருதினார். தமிழவனின் நூலை வைத்து அந்த மதிப்பீடு எழுந்தது. ஆனால் அந்த மதிப்பீடு தவறுதான். முன்பே சுட்டிக் காட்டியவாறு அல்தூஸர் போன்ற அமைப்பு மார்க்சியவாதிகள் மார்க்சியத்தை மேலும் கட்டுத்திட்டமாக்க முயற்சி செய்தனர். இவற்றை ஓரளவு ஞானி விவாதித்தாலும் அவற்றில் போதிய கவனம் செலுத்த வில்லை. அமைப்பியமும் பின்னமைப்பியமும் ஆராய்ச்சிக்கான கருவிகளே ஒழியப் படைப்பிலக்கியத்துக்கும் படைப்பியக்கத்துக்கும் உதவும் தன்மை கொண்டவை அன்று. பெரும்பாலும் கோட்பாடுகள் யாவுமே இப்படித்தான். எவரும் ஒரு கோட்பாட்டை வைத்துப் படைப்பாளன் ஆக முடியாது. அது காரிகை கற்றுக் கவிபாடுவதைப் போலத்தான்.

யதார்த்தவாதம், மார்க்சியம் போற்றும் இலக்கிய வடிவங்களில் முதன்மை யானது. யதார்த்த வாதத்தை ஒருபோதும் முறியடிக்க முடியாது என்பது மார்க்சியர் கருத்து. ஞானியின் கருத்தும் அதுதான். எல்லோராலும் எப்போதும் மார்க்குவிஸ் போலவோ, இடாலோ கால்வினோ போலவோ எழுதிக் கொண்டிருக்க முடியாது அல்லவா?

அமைப்பியம் நமக்குத் தந்த முக்கியப் பாடம், மனிதமைய வாதத்தை (ஹியூமனிசம்) மறுப்பதுதான். பலபேர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது போல ஹியூமனிசம் என்பது மனித நேயம் அல்ல. ஹியூமனிசம் அல்லது மனிதமைய வாதம் என்பது, மனிதன்தான் எல்லாவற்றுக்கும் மையம் என்று சிந்திக்கும் போக்கு. மனிதனுக்காகவே எல்லாம் படைக்கப்பட் டுள்ளன, அவற்றை மனிதன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கு பைபிளிலேயே தொடங்கிவிட்டது. மனிதனுக்காகத்தான் எல்லாம் என்று குரானும் கூறுகிறது. இம்மாதிரிச் சிந்தனையால்தான் இயற்கை மனிதனுக்காகவே படைக்கப்பட்டது, அதை அழிக்கலாம், வெற்றிகொள்ள வேண்டும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற சிந்தனைகள் ஏற்பட்டன. இது பெருமுதலாளித்துவத்துக்கு ஏற்ற சிந்தனை.

மனிதன் இயற்கையின் ஒரு சிறுதுளிதான், எல்லாப் பிராணிகளும் போலத்தான் அவனும் என்று சிந்திப்பதும், இயற்கையின் முதன்மையைப் போற்றுவதும்தான் எதிர்-மனிதமைய நோக்கு (ஆண்ட்டி-ஹியூமனிசம்). இதுவும் ஞானியின் மெய்யியலில் அடங்கக்கூடிய ஒன்றுதான். இதைத்தான் இன்றைய சூழலியல் திறனாய்வு அல்லது பசுமைத் திறனாய்வு என்பது வலியுறுத்துகிறது. ஞானி இதைப் பற்றிப் பேசவில்லை. தமிழ்ச் சூழலில் இன்று பசுமைத் திறனாய்வைச் சிறப்பாகச் செய்பவர் நிர்மல் செல்வமணி ஒருவர் மட்டுமே. (கோவை ஞானியின் விமரிசனச் சிந்தனை என இக் கட்டுரை தொடரும்)

சமூகம்