ஆல்பர்ட் காம்யூ அல்ஜீரியாவில் பிறந்த ஃபிரெஞ்சு தத்துவஞானி. இருத்தலியக் கோட்பாட்டாளர். இருத்தலியம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இவரையும் ழான் பால் சார்த்தரையும் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும்.
1913இல் பிறந்தவர். 1960இல் மறைந்தார். 1957இல் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்நியன், காலிகுலா, வீழ்ச்சி என்பன இவரது நாவல்கள். தி மித் ஆஃப் சிசிஃபஸ், அந்நியன் போன்ற படைப்புகளில் இருத்தல் சார்ந்த அபத்தக் கோட்பாட்டினைத் திறம்பட முன்வைத்தவர். இக்கதை, காம்யூவின் நாவலான தி ஃபால் என்பதன் சுருக்கம்.
இதன் நாயகன் கிளமன்ஸ் என்பவன். கதையின் தொடக்கத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் மெக்சிகோ சிட்டி என்ற மதுஅருந்தகத்தில் ஓர் அறிமுகமில்லாத நபரிடம் ஒரு மதுபானத்தை எப்படி வருவிக்க வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான். ஏனெனில் அந்த நபருக்கு டச்சு மொழி தெரியவில்லை. பார் காரனோ டச்சு மொழியைத் தவிர வேறு மொழி எதையும் அறியாதவன். ஆக அவனுக்கு உதவ வேண்டி கிளமென்ஸ் முன்வருகிறான். பேச்சினூடாக, அப் புதியவனும் இவனைப் போலவே பாரிஸ்-காரன் என்பது தெரிகிறது.
கிளமென்ஸ், பாரிசில் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞன். அவன் அதிகமாக எடுத்துக் கொள்வது விதவைகள், அநாதைகள் வழக்குகளைத் தான். அதாவது வழக்காட வழியற்ற ஏழைகளுக்கு உதவுகிறான். மேலும், தான் எப்போதும் பிறருக்கு உதவுபவன்–தெருக்களில் புதியவர்களுக்கு வழிகாட்டுவான், பஸ்சில் பிறருக்குத் தனது இருக்கையை வழங்குவான், ஏழைகளுக்குப் பிச்சை அளிப்பான், குருடர்கள் வீதியைக் கடக்க உதவுவான் என்று சொல்லிக் கொள்கிறான். அதாவது “உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்று உலகைப் பார்த்துச் சொல்லும் ரகம். அதனால் தான் காட்டும் கருணையே தனக்கான பரிசாக விளங்குகின்ற அத்தகைய உயர்ந்த உச்ச நிலையை எய்திவிட்டவன்.
ஒரு நாள் இரவு. தன் இரவுத்தோழியுடன் காலம் கழித்துவிட்டு பான்ட் ராயல் வழியாகத் தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறான். அப்போது கருப்பு உடையணிந்த ஒரு பெண்மணி பாலத்திலிருந்து குதிக்கும் நிலையில் இருப்பதைக் காண்கிறான். ஒரு கணம் தயங்கி உதவிசெய்யலாமா என யோசிக்கிறான். பிறகு தன் வழியே செல்கிறான். ஆனால் சில கணங்கள் கழித்து ஓர் உடல் நீரில் விழும் சத்தம் கேட்கிறது. என்ன நடந்தது என்று புரிந்து ஒரு கணம் நிற்கிறான். ஆனால் எதுவும் செய்யவில்லை. கூக்குரலிடும் ஓசை பல முறை கேட்கிறது. பிறகு நீரோட்டத்தில் தேய்ந்து மறைகிறது. ஆனால் இவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தொடர்ந்து நிகழும் அமைதி எல்லையற்று நீடிக்கிறது. “நான் ஓட நினைத்தேன், ஆனால் அசையவும் முடியவில்லை…அதிக லேட்டாகி விட்டது… ரொம்ப தூரம் போய்விட்டது…” என்று சொல்லிக் கொள்கிறான். பிறகு மெதுவாக மழையில் நனைந்தவாறே போய்விட்டான்.
சுயநலமற்று பலமற்றவர்களுக்கும் அதிர்ஷ்டக் கட்டைகளுக்கும் தான் உதவுபவன் என்ற எண்ணம் கிளமென்ஸிடம் இருக்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தை அடியோடு புறக்கணித்து விடுகிறான். அவளுக்கு உதவியிருந்தால் தன் சொந்தப் பாதுகாப்பே கேள்வியாகி இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறான்.
பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்தச் சம்பவத்தை அவன் ஏறத்தாழத் தன் ஞாபகத்திலிருந்து அழித்துவிட்டான். மற்றொரு இனிய நாள். தன் கடமைகளைச் சிறப்பாக முடித்துவிட்டான். மேலும் நண்பர்களுடன் ஆளும் வர்க்கத்தின் கடின இதயம் பற்றியும் தலைவர்களின் போலித்தனம் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்தாயிற்று. தனக்குள் முழுமையின் ஒரு புதிய பெரிய பலம் பொங்கி எழுவதை உணர்கிறான். சுய திருப்தியோடு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு பான்ட் ராயல் அருகே திருப்தியாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கிறான். அந்தச் சமயத்தில் அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு பெருஞ்சிரிப்பு கேட்கிறது.
அது ஏதோ முன்பு தன் நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட ஒரு பிரமை என்று நினைக்கிறான். ஆனால் தொடர்ந்து அது நீரிலிருந்து எழுவதுபோலக் கேட்கிறது. அது அதிர்ச்சியூட்டுகிறது. ஏனெனில் பல ஆண்டுகள் முன்பு நீரில் அமிழ்ந்துபோன பெண்ணின் நினைவை அது தெளிவாகக் கொண்டு வருகிறது. தான் தன்னை ஒரு சுயநலமற்ற மனிதனாகப் பாராட்டிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்தச் சிரிப்பு எழுந்தது. அது இதயபூர்வமான, நட்புமிக்க, நல்ல சிரிப்பாகவும் இருக்கிறது. அது அவனுக்குள்ளிருந்தே எழும் சிரிப்பு என்பதை அது காட்டுகிறது. தான் ஊதிப் பெருக்கிக் கொண்ட தனது பிம்பத்திற்கும் உண்மையான சுயத்திற்குமான மோதல் தெளிவாகிறது. தனது போலித்தனம் வலியுடன் உணரத்தக்கதாக வெளித்தெரிகிறது.
மூன்றாவதாக ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஒரு சிக்னலில் அவன் தன் காரில் நிற்கும்போது விளக்கு பச்சையாக மாறிய பிறகும் முன்னால் வழியை மறித்திருக்கும் மோட்டார் சைக்கில்காரன் நகர மறுக்கிறான். வாகனத்தை நகர்த்தாதது மட்டுமல்லாமல் இவனை அடிப்பதுபோல மிரட்டவும் செய்கிறான். அவனை அடிப்பதற்காக கிளமென்ஸ் காரைவிட்டு இறங்கியபோது யாரோ ஒருவன், தன் கால்களுக்கிடையில் மோட்டார் சைக்கிலை வைத்திருக்கும் பரிதாபமான ஒருவனை அடிப்பது தவறு என்கிறான். ஆனால் திடீரென்று இவன் எதுவும் செய்வதற்கு முன்னர் அந்த மோட்டார் சைக்கில்காரன் இவனைத் தலையின் பக்கவாட்டில் அடித்துவிட்டு வேகமாகச் சென்று விடுகிறான். செயலற்று விழித்த கிளமென்ஸ், பிறக தான் என்ன செய்திருக்க வேண்டும் என்று யோசிக்கிறான். பொது இடத்தில் தான் அடிக்கப்பட்ட கேவலத்தை நினைத்து, வருத்தப்பட்டாலும், அதைப் பார்த்தவர்கள் அப்போதே மறந்துவிட்டுச் சென்றிருப்பார்கள், அதனால் தனது கெளரவத்திற்கு ஹானி எதுவும் வந்துவிடாது என்று நம்புகிறான்.
இந்த நிலையில் அவனுக்குத் தான் இதுவரை வெற்று கெளரவம், பிறரின் மதிப்பும் ஏற்பும், பிறர்மீதான அதிகாரமும் என்ற இவற்றிற்காகவே வாழ்ந்திருப்பது புலனாகிறது. இதனை உணர்ந்த பிறகு அவனால் முன்போல் எப்படி வாழ முடியும்?
சார்த்தர் இந்த நாவலை “மிகுந்த அழகியல் கொண்டது, ஆனால் மிகக் குறைந்த அளவே புரிந்துகொள்ளப்பட்ட நாவல்” என்று புகழ்ந்துள்ளார். கள்ளமற்ற தன்மை, இருத்தலின்மை, உண்மை ஆகியவை இந்த நாவலின் கருப்பொருள்களாக உள்ளன.