கெடுபவை காக்க

நீதி நூல்களைப் போலச் சிறப்பாக, குறுகிய வடிவத்தில் கருத்துகளைப் புலப்படுத்தும் தொகுப்பு இது. இத் தொகுப்பை உதவியது வாட்ஸப் குழு (அன்பாலயம்) ஒன்று. சில சந்திப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

பாராத பயிரும் கெடும்.
பாசத்தால் பிள்ளை கெடும்.

கேளாத கடனும் கெடும்.
கேட்கும்போ(து) உறவு கெடும்.

தேடாத செல்வம் கெடும்.
தெவிட்டினால் விருந்து கெடும்.

ஓதாத கல்வி கெடும்.
ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்.

சேராத உறவு கெடும்.
சிற்றின்பன் பெயரும் கெடும்.

நாடாத நட்பு கெடும்.
நயமில்லாச் சொல்லும் கெடும்.

கண்டிக்காப் பிள்ளை கெடும்.
கடன்பட்டால் வாழ்வு கெடும்.

பிரிவினால் இன்பம் கெடும்.
பணத்தினால் அமைதி கெடும்.

சின(ம்) மிகுந்தால் அறமும் கெடும்.
சிந்திக்காச் செயலும் கெடும்.

சோம்பினால் வளர்ச்சி கெடும்.
சுயமில்லா வேலை கெடும்.

மோகித்தால் முறைமை கெடும்.
முறையற்ற உறவும் கெடும்.

அச்சத்தால் வீரம் கெடும்.
அறியாமையால் முடிவு கெடும்.

உழுகாத நிலமும் கெடும்.
உழைக்காத உடலும் கெடும்.

இறைக்காத கிணறு கெடும்.
இயற்கையழிக்கும் நாடு கெடும்.

இல்லாளில்லா வம்சம் கெடும்.
இரக்கமில்லா மனிதம் கெடும்.

தோகையினால் துறவு கெடும்.
துணையில்லா வாழ்வு கெடும்.

ஓய்வில்லா முதுமை கெடும்.
ஒழுக்கமில்லாப் பெண்டிர் கெடும்.

அளவில்லா ஆசை கெடும்.
அச்சப்படும் கோழை கெடும்.

இலக்கில்லாப் பயணம் கெடும்.
இச்சையினால் உள்ளம் கெடும்.

உண்மையிலாக் காதல் கெடும்.
உணர்வில்லாத இனமும் கெடும்.

செல்வம்போனால் சிறப்பு கெடும்.
சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.

தூண்டாத திரியும் கெடும்.
தூற்றிப்பேசும் உரையும் கெடும்.

காய்க்காத மரம் கெடும்.
காடழிந்தால் மழையும் கெடும்.

குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.

வசிக்காத வீடு கெடும்.
வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

குளிக்காத மேனி கெடும்.
குளிர்ந்துபோனால் உணவு கெடும்.

பொய்யான அழகு கெடும்.
பொய்யுரைத்தால் புகழும் கெடும்.

துடிப்பில்லா இளமை கெடும்.
துவண்டிட்டால் வெற்றி கெடும்.

தூங்காத இரவு கெடும்.
தூங்கினால் பகலும் கெடும்.

கவனமில்லாச் செயலும் கெடும்.
கருத்தில்லா எழுத்தும் கெடும்.


தனது மகனின் ஆசிரியருக்கு லிங்கனின் கடிதம்

லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..

*அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்குத் தெரிவியுங்கள் .

*பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது கோழைத்தனம் எனப் புரியவையுங்கள். புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடிலா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

*வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும்,சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும் ,பசுமையான மலை யடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள். ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

*மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனைத் தயார்ப்படுத்துங்கள்

*அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என அறிவுறுத்துங்கள். எனினும் உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள். துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள். போலியான நடிப்பை கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள். அவனை கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்

*சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்…

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரஹாம் லிங்கன்.

தகவல்- பூ.கொ.சரவணன் – விகடன்.


ஆசிரியரும் மாணவனும்

ஆசிரியர்- சர்க்கரை என்ற சொல்லை வைத்து ஒரு வாக்கியம் சொல்.
மாணவன்- நான் காலையில் காப்பி குடித்தேன்.
ஆசிரியர்- நீ சொன்ன வாக்கியத்தில் சர்க்கரை வரவில்லையே?
மாணவன்- அதுதான் காப்பியில் கரைந்துவிட்டதே சார்.

ஆசிரியர்- இன்று நமது பாடத்தின் தலைப்பு ஒளிச்சேர்க்கை.
ஆசிரியர் (மீண்டும்)- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
மாணவன்- ஒளிச்சேர்க்கை என்பது இன்று நமது பாடத்தின் தலைப்பு சார்.

ஆசிரியர்- “ஜான் மாம்பழத்‍தைப் பறிக்க வருகிறான்”. மாணவர்களே, யாராவது மாம்பழம் என்று தொடங்கி இந்த வாக்கியத்தை மாற்றியமைத்துச் சொல்லுங்கள்.
மாணவன்- மாம்பழமே, ஜான் உன்னைப் பறிக்க வருகிறான்.

ஆசிரியர்- கொசுக்களை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கிறீர்கள்?
மாணவன்- நாங்கள் அழைப்பதில்லை சார், அவை தானாகவே வருகின்றன.

ஆங்கில ஆசிரியர்- What is the nation that people hate most?
மாணவன்- Exami-NATION, Sir.

ஆசிரியர்- நாம் நமது பள்ளியைச் சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?
மாணவன்- நாம் எல்லாரும் வீட்டிலேயே இருந்துவிடலாம் சார், பள்ளி சுத்தமாக இருக்கும்.

ஆசிரியர்- நமது நாடு ஒருகாலத்தில் ஊழலற்றதாக மாறும். இது என்ன காலம்?
மாணவன்- நடக்க-இயலாத எதிர்காலம் சார்.


பாஸிசம்

லாரன்ஸ் பிரிக் எனும் அரசியல் அறிஞர் பாஸிசம் என்றால் என்னவென்று பதிநான்கு கூறுகளாய்ப் பிரித்து நமக்கு விளக்குகிறார், அவை என்னவென்று பார்க்கலாம்.

1) அதீத தேசியவாதம்.
அதாவது நாடுதான் எல்லாமும் எனப் பேசுவது, நாடுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று பேசுவது, அது தேசப்பற்று என்பதை மிஞ்சி அடுத்தவர் மீதான வன்முறை என்று மாறிப்போவது.

2) மனித உரிமை மறுப்பு.
அதிகாரத்தில் இருப்பவர் தம்மைக் காத்துக் கொள்ள மனித உரிமையற்ற சூழலை உருவாக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, அதிகாரத்தில் இருப்பவர் எவரும் வன்முறையைக் கையில் எடுக்கலாம் என்பது போல.

3) பொது எதிரி என்கிற கற்பனையை உருவாக்குவது, அதாவது மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பாமல் இருக்க குற்றமே செய்யாத சம்பந்தமே இல்லாத ஒரு பிரிவினரை நாட்டுக்கே எதிரியென சித்தரிப்பது, அந்த எதிரி என்கிற ஒன்று ஒரு இனமாகவோ மதமாகவோ நாடாகவோ இருக்கலாம்.

4) ராணுவத்தின் அதிகாரம்.
அதாவது நாட்டின் பொருளாதாரம் பெருமளவு ராணுவத்திற்கே செலவழிக்கப்படும். அந்த ராணுவமும் வெளிநாட்டினருடன் போரிடுவதை விட உள்நாட்டு மக்களை கட்டுப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்குமே அதிகமாக பயன்படுத்தப்படும்.

5) ஆணாதிக்கம்.
அதிகாரத்திலிருப்பவர் அனைவரிடமும் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும். அதிகாரத்தில் பெண் அமர்த்தப்பட்டாலும் அவர் ஆணாதிக்கத்தைத் தூக்கிச் சுமப்பவர்களாகவே இருப்பார்.

6) ஊடகங்களில் அரசின் தலையீடு.
அரசிற்கு சாதகமாகவே ஊடகங்கள் செயல்படும் அல்லது செயல்படுத்தப்படும்.

7) தேசப் பாதுகாப்பு என்ற அச்சம்.
அதாவது தேசத்திற்கு பாதுகாப்பில்லை என்கிற ஒரு அச்சத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டேயிருப்பது. அதன் வழியே அரசு செய்யும் எல்லா செயல்களுக்கும் மக்களிடம் ஆதரவைத் திரட்டிக் கொள்ளுவது.

8) மதமும் அரசும் ஒன்றாக இருக்கும். அதாவது குறிப்பிட்ட மதத்தின் ஆதிக்கம் அரசில் அதிகமாக இருக்கும். அரசிலிருக்கும் அமைச்சர்கள் அதிகாரிகள் தம் பெரும்பான்மை மதத்தையே முன்னிருத்தி அரசியல் செய்வர். அரசின் குறைபாடுகள் எல்லாமும் மதம் என்கிற போர்வையால் மூடி மறைக்கப்படும்.

9) முதலாளிகள் பாதுகாக்கப்படுவர். அதாவது தொழிலதிபர்கள் முதலாளிகளின் சொகுசு வாழ்க்கைக்கு எந்த பாதிப்பையும் அரசு ஏற்படுத்தாது, அவர்களை முதற் கடமையாக பாதுகாக்கும். அவர்கள் மக்களைச் சுரண்ட அதிக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

10) உழைக்கும் சக்தி ஒடுக்கப்படும். அதாவது தொழிலாளர் நலன் நசுக்கப்படும். தொழிலாளர்கள் சங்கங்கள் அழிக்கப்படும். தொழிலாளர்கள் அரசியல் சக்தியாக உருவாவதை அரசு முறியடிக்கும்…

11) அறிவு மறுக்கப்படும்.
அதாவது அரசு விரும்பும் கல்வி மட்டுமே அனுமதிக்கப்படும், அதை எதிர்க்கும் அறிஞர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள், கலைகளும் ஒடுக்கப்படும்…

12) தண்டனைகள் மீதான ஆர்வம். அதாவது பாஸிஸ ஆட்சியில் காவல்துறைக்கு கட்டுமீறிய அதிகாரம் வழங்கப்படும். தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட முன்னுரிமைகள் வழங்கப்படும். நியாயமான கோரிக்கைகள் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படும்.

13) ஊழல்.
அதாவது முதலாளிகளுக்கு ஏதுவான வழிமுறைகள் தங்கு தடையின்றி திறந்துவிடப்படும். முதலாளிகளுக்கு ஆதரவானவர்களே அதிகாரங்களில் நியமிக்கப்படுவர்.

14) முறைகேடான தேர்தல்கள்.
அதாவது பாஸிசம் பரவும் நாடுகளில் நடக்கும் தேர்தல்களில் முறைகேடுகள் மிகுந்திருக்கும். மாற்றுக் கட்சித் தலைவர்கள் கொல்லப்படுவர் அல்லது சட்டம் வளைக்கப்படும் அல்லது வாக்கு எந்திரங்கள் திருடப்படும் குளறுபடியாகும், வாக்கு எண்ணிக்கை பொய்யாக சொல்லப்படும்.

இந்த 14 விஷயங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இந்த 14 விஷயங்களும் உங்களுக்கு பரிச்சயமானதாகத் தோன்றுகிறதா என யோசியுங்கள்.

பரிச்சயமானது போல் தோன்றினால் குறித்துக் கொள்ளுங்கள் உங்களையும் முசோலினி போன்ற ஒரு பாஸிஸ்டே ஆண்டு கொண்டிருக்கிறார் என்று.
ஏனென்றால் பாஸிசம் மக்களின் ஆதரவின்றி வளர்வதில்லை.


A True Story

A SOLDIER’S FATHER
From the notes of a Wing Commander

The helicopter appeared over the late morning horizon. We were to receive Mr Lachhman Singh Rathore who was visiting our Flight Unit to perform the last rites of his son, Flying Officer Vikram Singh.

Only the day before, I had sent the telegram, “Deeply regret to inform that your son Flying Officer Vikram Singh lost his life in a flying accident early this morning. Death was instantaneous.” It was the first time for me- to meet and manage the bereaved next of kin, in this case the Father of the brave officer.

While most of the desolate family members insist on seeing the body, many a time there isn’t a body to show! Flying Officer Vikram Singh’s remains were only a few kilos –scrapped from what was left in the cockpit. We had to weigh the wooden coffin with wood and earth.

The pilot brought the helicopter to a perfect touchdown. Soon Mr Lachhman Singh Rathor was helped down the ladder. A small and frail man he was, maybe of 80 years, clad in an immaculate dhoti.

As I approached him, he asked in a quiet and dignified whisper, “Are you Venki, the Flight Commander?” “Yes Sir.” “Vikram had spoken to me about you. I’d like to speak to you alone for a minute.”

We walked to the edge of the concrete apron. ‘I have lost a son, and you have lost a friend. I’m sure that you have taken great care in arranging the funeral. Please tell me when and where you want my presence and what you want me to do. I’ll be there for everything. Later, I would like to meet Vikram’s friends, see his room and, if it is permitted, visit his work place. I then would like to return home tomorrow morning.”

A commander couldn’t have given me clearer instructions.

The funeral, with full military honours, was concluded by late afternoon. After the final echoes of the ‘Last Post’ faded away, Lachhman Singh spent the evening talking to the Squadron Pilots. Vikram’s room mate took him to see Vikram’s room. Lachhman Singh desired to spend the night in his son’s room instead of the guest house we had reserved for him. Early next morning after a tour of the squadron area, my boss took him to his office.

A while later, the staff car took Lachhman Singh to the civil airfield two hours away.

As the car disappeared round the corner, I remarked to my Boss, “A brave man he is. Spoke to me like a General when he told me exactly what he expected from us during his stay here. I have never seen a more composed man on such an occasion. I admire him.”

“Yes, Mr Lachhman Singh Rathore is a warrior in his own way. He sired three sons and has laid to rest all three of them.

-His 1st son Captain Ghanshyam Singh of the Gurkha Rifles was killed in Ladakh in 1962 War.
His 2nd son, Major Bir Singh, died along the Ichogil Canal in 1965 in an ambush.
His youngest, the 3rd, Vikram Singh, who had the courage to join the Air Force, is also gone now, more to our country’s defence than All of us combined.”

Yes, he is indeed a brave Indian ; in fact HE is MORE INDIAN than anyone else – His sacrifice can never ever be repaid by the Country! He is almost a Martyr himself!

But our Great Nation does not know this Simple Giant — India only knows those Super Rich Cricketers need to be conferred BHARAT RATNA while a bunch of media personal or actors & actresses need to be conferred PADMA VIBHUSHANs and PADMASHREEs !

But what about Those who have SIMPLY LOST their EVERYTHING to the Nation & to its Citizens? Like this Father of Three Brave Soldiers!

(Note: A story to be included in the school syllabus! A brave father of brave sons. How the country could repay its debt to him? We do not know. Could we Print and circulate to all our MPs & JNU scholars?)


நல்ல நேரம்

புத்தாண்டு நல்ல பொழுதாக விடிந்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஏன் என்றால் நேற்று (31 டிசம்பர் 2019) மாலைதான் நான் ஆனந்தவிகடன் இதழுக்கான சிறந்த மொழிபெயர்ப் பாளராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன் என்ற தொலைபேசிச் செய்தி வந்தது.
இது எனது உழைப்புச் சார்ந்த விஷயம் என்றாலும் இப்படித் தேர்ந்தெடுக்கப்படுவது மிகுந்த அதிர்ஷ்டவசமானது என்றுதான் சொல்லவேண்டும். ஒரே பத்திரிகை, மூன்றாவது முறையாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பது அரிதல்லவா?
முதல்முறை 2011இல் ஆந்திரக் கவிஞர் வரவர ராவின் ‘சிறைப்பட்ட கற்பனை’ (Captive Imagination) நூல் மொழிபெயர்ப்புக்காக இவ்விருது கிட்டியது.
இரண்டாவது முறை 2016இல் இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு நூலுக்காக. அப்போதுதான் மிக ‘கிராண்ட்’ஆக விழாக் கொண்டாடும் முறையும் தொடங்கியது.
மூன்றாவது முறை இப்போது 2019இல் ‘நாகரிகங்களின் மோதல்’ நூலுக்காக.
விருதுவழங்குவிழா ஜனவரி 24 அன்று சென்னை வணிக வளாகத்தில் நடைபெற உள்ளது.
மகிழ்ச்சிதான். இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டும் (சொந்தமாகவும், பெயர்ப்பாகவும்) என்ற எண்ணத்தை உறுதியாகத் தோற்றுவிக்கிறது. வாழ்நாள் அதற்குத்தக உதவ வேண்டும்.


விளைவுவாதமா, கடமைவாதமா?

விளைவுவாதமா, கடமைவாதமா?

அண்மையில் ஆந்திராவில் ஒரு குற்றத்திற்காகச் சில குற்றவாளிகள் போலீசாரால் என்கவுண்டர் கொலை செய்யப்பட்டனர். கொன்ற போலீஸ்காரர்களுக்குப் பெரிய பாராட்டு கிடைத்தது. பொதுமக்களுடன் சேர்ந்து, ஆந்திர அமைச்சர்கள் முதல் தமிழக அமைச்சர்கள் வரை இந்த என்கவுண்டர் கொலையைப் பாராட்டினர். ஆனால் ஜனநாயக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இதை எதிர்த்தனர். இந்த நிகழ்ச்சி நமது மரபில் சில சிந்தனைகளைத் தூண்டுகிறது.

இந்தியச் சிந்தனை மரபில் நீதி-நியாயம் என்ற இரண்டு உள்ளன. உதாரணமாக, குற்றவாளிகளை போலீசார் தண்டிக்கின்றனர். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்தான், தகுந்த நீதி கிடைத்துவிட்டது என்று பலரும் அவர்களைப் பாராட்டுகின்றனர்.

ஆனால் கொல்லப்பட்டவர்களில் நிரபராதியும் இருந்திருக்கலாம், அது மட்டுமல்ல, அவர்களுக்குப் பின் அவர்கள் குடும்பம் என்ன ஆகும், மேலும் இத்தகைய தண்டனை குற்றங்கள் நிகழாமல் நிறுத்திவிடுமா, போலீஸ் நீதியைக் கையில் எடுக்கலாகுமா, குற்றவாளிகளின் பின்னணி வலுவானதாக இருந்தால் இப்படி நிகழுமா, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் (உதாரணமாக செம்மரம் கடத்தியதாக இருபது தமிழர்கள் கொல்லப்பட்டது) என்கவுண்டர் நியாயம் ஆகுமா போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இவை நியாயத்தின் பாற்பட்டவை.

நீதியைவிட நியாயம் முக்கியமானது என்பது என் கருத்து. இதற்காக நாம் பழைய இதிகாசமான பாரதக் கதையை நோக்கலாம் என்று நினைக்கிறேன். மகாபாரதத்தில் பகவத்கீதை முக்கியமான பகுதி. அதில் நடக்கும் உரையாடல் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

கதையின்படி, பாண்டவர்கள் நேர்மைமிக்க அரசக் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள். அவர்களின் தலைவன் யுதிஷ்டிரன் (அர்ஜுனனின் அண்ணன், அரியணைக்கு சட்டபூர்வ வாரிசு) ஒருபுறம். மறுபுறம், பாண்டவர்களின் பெரியப்பன் பிள்ளைகளான கெளரவர்கள். அவர்கள் தவறான முறையில் பாண்டவர்களுக்குரிய அரசைக் கைப்பற்றியவர்கள். இந்த இதிகாசப் போரில், இந்தியாவின் வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் உள்ள அரசக் குடும்பங்கள் பல ஏதேனும் ஒரு பக்கத்தில் சேர்ந்துள்ளன. அவற்றின் ஆடவர்களில் நல்ல உடல்திடம் கொண்ட இளைஞர்கள் பெரும்பாலோர் படைகளின் இருபுறமும் உள்ளனர். பாண்டவர் களின் பக்கத்தில் உள்ள மிகப் பெரிய வீரன் அர்ஜுனன். அர்ஜுனனின் தேர்ச்சாரதி கிருஷ்ணன். அவன் கடவுளின் அவதார வடிவமாக நோக்கப் படுகிறான்.
அர்ஜுனன்-கிருஷ்ணன் இடையில் நடக்கும் விவாதத்தின் வலிமை இதிகாசக் கதைக்கு வளம் சேர்க்கிறது. ஆனால் பல நூற்றாண்டுகளாக அது அதிக அளவு ஒழுக்கம் சார்ந்த, அரசியல் சிந்தனைகளையும் தூண்டியுள்ளது. அதனால்தான் இங்கு அதை நோக்குகிறோம். விவாதத்தின் உணர்ச்சிகரமான இயல்பு சாதாரண மக்களையும் வசப்படுத்துகிறது. மேலும் மத, தத்துவ விசாரங்களை யும் ஈர்த்துள்ளது.

அர்ஜுனனும் கிருஷ்ணனும் இரு பக்கமும் உள்ள சேனைகளை நோக்குகிறார்கள். போரில் ஈடுபடுவது தனக்கு அவசியம்தானா என்ற தீர்க்கமான சந்தேகத்தினை அர்ஜுனன் வெளியிடுகிறான். தங்கள் தரப்பு நியாயமானது என்பதிலோ, இது செய்யவேண்டியதொரு நேர்மையான போர் என்பதிலோ, தனது பக்கம் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதிலோ அவனுக்குச் சந்தேக மில்லை. ஆனால் போரில் மிகுந்த அளவு மரணம் நிகழும் என்பதை அவன் உணர்கிறான். தானே நிறைய எண்ணிக்கையிலான பேர்களைக் கொல்ல வேண்டி வரும் என்பதும் அவன் கவலை. மேலும் போரில் ஈடுபட்டு இறக்கப் போகின்ற பெரும்பாலானோர், (விசுவாசத்தினாலோ, நட்பினாலோ, வேறு காரணங்களாலோ) குறிப்பிட்ட ஒரு தரப்பைச் சேர உடன்பட்டு வந்தவர்கள் என்பதற்கு மேல் குறிப்பாகத் தீமை எதையும் செய்தவர்கள் அல்ல.

அர்ஜுனனின் கவலையில் ஒரு பகுதி நிகழப் போகின்ற படுகொலைகளால் ஏற்படப்போகும் பேரழிவிலிருந்து எழுகிறது. மற்றொரு பகுதி, அவனே செய்யப் போகின்ற கொலைகள் பற்றியதாக, தான் அன்பு செலுத்துகின்ற, தனக்கு நெருக்கமான பலரையும் கொல்லப் போவது பற்றியதாக இருப்பதால் ஏற்படுகிறது.

போரிடவும் கொலைசெய்யவும் தனக்கு விருப்பமில்லை என்று அர்ஜுனன் சொல்கிறான். கெளரவர்கள் பறித்துக் கொண்ட நாட்டை அவர்களே ஆளவிட்டுவிடலாம், போரின் தீமையைவிட இது குறைந்ததாகும் என்று சொல்கிறான். கிருஷ்ணன் இதற்கு எதிராகப் பேசுகிறான். அவனது எதிர்வினை விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்வதன் முதன்மை பற்றியதாக அமைகிறது. இந்திய மத, ஒழுக்க, தத்துவ விவாதங்களில் திரும்பத் திரும்பப் பேசப் படுகின்ற பிரச்சினை இது. பாண்டவர்களின் கட்சி சார்ந்த ஆதரவாளன் என்ற நிலையிலிருந்து கடவுளின் அவதாரம் என்ற நிலைக்கு (விசுவரூப தரிசனத்தின் வாயிலாக) மெதுவாக கிருஷ்ணன் மாறுகிறான். அதனால் கீதை இந்து இறையியல் சார்ந்த ஒரு பெரிய ஆவணமாக மாறிவிட்டிருக்கிறது.

என்ன வந்தாலும் சரி, அர்ஜுனன் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்கிறான் கிருஷ்ணன். போரிடும் கடமை அவனுக்கு இருக்கிறது. அதில் என்ன விளைவு ஏற்பட்டாலும் சரிதான். ஒரு பெரும் வீரன், படைத் தலைவன் என்ற முறையில் அவனை அவன் தரப்பினர் சார்ந்திருக்கிறார்கள். எனவே அவன் தன் கடமையில் தளரக்கூடாது. கிருஷ்ணனின் கடமை சார்ந்த, ஆனால் விளைவு சாராத, தத்துவம் பல நூற்றாண்டு களாக ஆழமான செல்வாக்குச் செலுத்தியிருக்கிறது.

இந்த விஷயத்தில் கடமை என்பது அர்ஜுனன் ஒரு பெரிய வன்முறைப் போரில் ஈடுபடுவது. நியாயமாக அதை அஹிம்சை போதகரான காந்தி ஆதரிக்த்திருக்கக்கூடாது. ஆனால் அவரும்கூட “விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கடமையைச் செய்” என்கின்ற கிருஷ்ணனின் வார்த்தைகளால் எழுச்சி கொண்டு கீதையை அடிக்கடி மேற்கோள் காட்டவும் செய்தார். இப்படிக் கிருஷ்ணனின் வாதங்களைப் பாராட்டுவது உலக முழுவதும் ஒரு நீடித்த நிகழ்வாக உள்ளது.
அர்ஜுனன் வாதங்கள் தவறா? ஒரு நேர்மையான, பயனை எதிர்பார்க்காத கடமையைச் செய்வது என்பது, தான் நேசிக்கும் மக்கள் உள்ளிட்ட பிறரைக் கொல்லக்கூடாது என்ற காரணத்தைவிட முக்கியமானதா? சண்டையிடாமல் மறுப்பது அர்ஜுனன் நோக்கிலிருந்து நிச்சயமாகச் சரியானது என்பது மட்டுமல்ல, கிருஷ்ணன் கவனம் செலுத்திய விஷயங்களைவிட அர்ஜுனன் போரிலிருந்து விலகுவதற்கு எதிரான வாதங்கள் பல இருந்தன.

குருட்சேத்திரப் போர் அன்றைய இந்திய மக்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கக் கூடியது. எனவே என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய பெரிய அளவு விவாதம் தேவை. என்ன வந்தாலும் கடமையைச் செய், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதே போன்ற எளிய விடை போதாது. இந்த வகையில் ஒரு மதநூல் என்ற வகையில் கீதை கிருஷ்ணனின் சார்பாகவே பேசுகிறது. ஆனால் அர்ஜுனன் கவலை முக்கியமானது. அர்ஜுனனின் ஆழ்ந்த சந்தேகங்களுக்கு நியாயம் இருக்கிறது. மகாபாரதம் பெருமளவு ஒரு துன்பியலாகத்தான் முடிகிறது. ‘நேர்மையான’ காரணத்துக்காகச் சண்டை யிட்டாலும் வெற்றியைத் தொடர்ந்து கவலையும் துன்பமும்தான் விளைகின்றன.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க அணுகுண்டுப் படைக்குத் தலைமை தாங்கிய ராபர்ட் ஓப்பன்ஹீமர், கிருஷ்ணனின் “பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்” என்ற வாதத்தினால்தான் கவரப் பட்டதாகச் சொல்கிறார். அணுகுண்டின் விளைவுகளைப் பார்த்த பிறகு, அவர் வருத்தப்பட்டிருக்கிறார். நீதியைவிட நியாயம் முக்கியமானது.

நமது ஒழுக்க, அரசியல் சிந்தனைகளில் உலக மக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியது முக்கியமானது என்பது அர்ஜுனனது நம்பிக்கை. உண்மையில் என்ன நடக்கிறது என்பதற்குக் கண்ணை மூடிக்கொண்டு, நடக்கப்போகின்ற விஷயங்களின் விளைவுகளை அறவே புறக்கணித்துவிட்டுத் தனது பயன்சாராத கடமையைச் செய்ய வேண்டும் என்பது கிருஷ்ணனின் போதனை.

மகாபாரதத்தில் கிருஷ்ணனின் தரப்பு நீதியின் பாற்பட்டது. அர்ஜுனனின் வாதங்கள் நியாயத்தின் பாற்பட்டவை. அர்ஜுனனின் வாதங்கள் மனித உயிர்களின் முக்கியத்துவம் பற்றியவை. தான் செய்யும் செயலின் விளைவுகள் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்கிறான் அர்ஜுனன். என்ன நிகழ்ந்தாலும் தான் செய்யும் செயல்களின் விளைவு களைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் ஒருவன் தன் கடமையைச் செய்யவேண்டும் என்கிறான் கிருஷ்ணன். அர்ஜுனனின் வாதங்களை விளைவுவாதம் அல்லது பயன்நோக்கு வாதம் என்று சொல்லலாம். கிருஷ்ணனுடைய கடமைவாதம் எனலாம். விளைவுவாதமா, கடமைவாதமா என்பதில் பகவத்கீதையில் கடமைவாதம் ஜெயித்தாலும் விளைவுவாதமே முக்கியம் என்பதை அனுபவம் காட்டுகிறது.


ஜனநாயகம் பற்றிய சில சொற்கள்

ஜனநாயகம் பற்றிய சில சொற்கள்—ஒரு குறிப்பு

சுதந்திரம், விடுதலை, தற்சார்பு நிலை, மக்களாட்சி, குடியரசு

நாம் 1947இல் சுதந்திரம் அடைந்தோம் அல்லது பெற்றோம் என்றுதான் பெரும்பாலும் யாவரும் எழுதுகிறார்கள். சுதந்திரம் என்ற வடமொழி சார்ந்த, ஆனால் தமிழில் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்ட சொல்லுக்கு, ஆங்கிலத்தில் ஏறத்தாழ ஒரே மாதிரியான மூன்று சொற்கள் உள்ளன. லிபர்ட்டி, ஃப்ரீடம், இண்டிபெண்டென்ஸ் என்பன அவை.

தமிழில் விடுதலை என்ற சொல்லையும் பயன்படுத்துகிறோம். அதன் பொருள் சுதந்திரம் என்பதிலிருந்து சற்றே வேறுபட்டது. உதாரணமாக இந்தியா சுதந்திரம் அடைந்தது, விடுதலை அடைந்தது என்ற பயன்பாடுகளில் வேற்றுமை இல்லை.
ஆனால் ஒருவர் சிறையிலிருந்து விடுதலை அடைந்தார் என்று சொல்வது போல சிறையிலிருந்து சுதந்திரம் பெற்றார் என எவரும் எழுதுவதில்லை.
ஆங்கிலப் பயன்பாட்டில் “இந்தியா அட்டெய்ன்ட் லிபர்ட்டி” என்று பெரும்பாலும் எழுதுவதில்லை.
“இந்தியா அட்டெய்ன்ட் ஃப்ரீடம்” என்பதிலோ
“இந்தியா காட் இன்டிபென்டென்ஸ்” என்பதிலோ தவறில்லை. இதற்கு இந்த மூன்று சொற்களுக்கும் உள்ள அர்த்த எல்லைகள்தான் காரணம்.
லிபர்ட்டி என்பது தானே இயல்பாக சுதந்திரமாக இருக்கும் நிலை. அது ஒருவர் கொடுத்து மற்றவர் பெறுவதல்ல என்று கருதுகிறேன். ஐரோப்பியர் வருகைக்கு முன் இந்தியா உட்படப் பல நாடுகள் அப்படித்தான் தாங்களே சுதந்திரமாக இருந்தன. அவர்கள் வந்துதான் அடிமைப் படுத்தினார்கள். மேலும் தாங்களே அந்த நாடுகளைக் கண்டுபிடித்ததாகவும் பெருமையடித்துக் கொண்டார்கள்.

லிபர்ட்டி என்ற சொல்லின் பயன்பாட்டைப் பாருங்கள். “ஐ ஆம் அட் லிபர்ட்டி டு டூ சம்திங்”. அது ஒரு இடம். ஐ ஆம் அட் ஹோம் என்பது போல ஐ ஆம் அட் லிபர்ட்டி. “நான் ஏதோ ஒன்றைச் செய்யும் (செய்வதற்குச்) சுதந்திரத்துடன் இருக்கிறேன்”. லிபர்ட்டி, எதைச் செய்வதற்கு என்பதோடு தொடர்புடையது.
ஃப்ரீடம் என்பது வேறு ஏதோ ஒன்றிலிருந்து பெறுகின்ற விடுபாடு அல்லது விடுதலை. குடிப் பழக்கத்திலிருந்து ஒருவர் விடுதலை அடையலாம், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு விடுதலை அடையலாம். அது எதிலிருந்து—என்பதோடு தொடர்புடையது. ஆனால் அதை நாமேதான் சிரமப்பட்டு அடைய வேண்டும். “அட்டெய்ன்” என்ற சொல் (சிரமப்பட்டு அடைவது) அதற்கேற்றதாக உள்ளது.

லிபர்ட்டி என்ற சொல்லின் வேர் லிப்ரே என்ற ஃபிரெஞ்சுச் சொல். ஆனால் அதற்கும் கட்டற்ற நிலை, விடுபட்டநிலை என்றுதான் அர்த்தம். அர்த்தங்கள் ஒன்றாக இருந்தாலும் பயன்பாடுகள் இவற்றுக்கு வேறாக உள்ளன.
இன்டிபென்டன்ஸ் என்பது ‘டிபன்டன்ஸ்’-க்கு எதிர்ச்சொல். ‘டிபன்டன்ஸ்’ என்பது ஒன்றைச் சார்ந்திருக்கும் தன்மை. இன்டிபன்டென்ஸ் என்றால் அதைச் சாராத நிலை. சுயசார்புநிலை. நாம் இப்போது பல நாடுகளை நமது வர்த்தகத்திற்குச் சார்ந்திருக்கிறோம். பொருளாதாரத்தில் நமக்குச் சார்பற்ற நிலை இல்லை. “வி ஆர் நாட் இன்டிபென்டண்ட் இன் இகனாமிக் ஃபீல்ட். வி ஆர் டிபென்டன்ட் ஆன் அமெரிக்கா”. இண்டிபெண்ட்ன்ஸை அடைய வேண்டும், பெற முடியாது. அது ஒரு சாதனை (அச்சீவ்மெண்ட்).

மேலும் ஃப்ரீடம் பொதுநிலை, இண்டிபெண்டன்ஸ் தனிநிலை. உதாரணமாக, ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்பிரஷன் என்றால் வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு, எழுத்துச் சுதந்திரம். ஆனால் இண்டிபெண்டன்ஸ் ஆஃப் எக்ஸ்பிரஷன் என்றால் ஒரு தனிநபரது எழுத்து அல்லது பேச்சுப்பாணி, நடை.

இந்தியா ‘லிபர்ட்டி’ அடையவில்லை. அயல்நாட்டார் வருவதற்கு முன் இந்தியா என்பதும் இல்லை. தனித்தனி நாடுகள்தான் இருந்தன. அந்த நாடுகள் லிபர்ட்டி நிலையில் இருந்தன. அடிமைப்பட்ட இந்தியா, இங்கிலாந்திடமிருந்து ‘ஃப்ரீடம்’ பெற்றது, அதனால் ‘இன்டிபென்டன்ஸ்’ (தற்சார்பு) அடைந்தது என்பது வரலாறு.
லிபர்ட்டி இயல்பான இருப்புநிலை, ஃப்ரீடம் பிறரிடமிருந்து பெறுவது, இண்டிபெண்டன்ஸ் தான் எய்தவேண்டியது. ஆனால் மூன்றுமே தமிழில் சுதந்திரம்தான்.
இன்று நம்மிடம் இந்த மூன்றுமே இல்லை. நாம் விரும்புவதைச் செய்யுமாறு ‘சுதந்திரமாக’ இல்லை. “வீ ஆர் நாட் அட் லிபர்ட்டி”. சமூகத்திலிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் பல அடிமைத்தனங்களிலிருந்து நாம் விடுதலை பெறவில்லை.
சிந்திப்பதற்கும் செயல்படுவதற்குமான சுதந்திரமும் (ஃப்ரீடம்) இன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் வெளிப்பாட்டுச் சுதந்திரம் (ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்பிரஷன்) பறிக்கப்படுகிறது.

நாம் யாரையும் சாராத நிலையிலும் (இண்டிபெண்டன்ட் ஆகவும்) இல்லை.
இரண்டைப் பெற்றோம், மூன்றையும் இன்று இழந்து நிற்கிறோம் என்பது உண்மை.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாம் 1952இல் “ரிபப்ளிக்” நிலை அடைந்தோம். ரிபப்ளிக் என்பதற்கு மக்களாட்சி—அதாவது ஜனநாயகம், குடியரசு என்ற இரு அர்த்தங்கள் உள்ளன. மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என்பது நம்மை நாமே ஆளுகின்ற தன்மை. அது பரந்துபட்ட பொருளுடையது. குடியரசு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களாட்சி நிறைவேற்றப் படுகின்ற தன்மை. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.
உதாரணமாக அருந்ததி ராய் “ப்ரோகன் ரிபப்ளிக்” என்று ஒரு நூல் எழுதினார். அவர் மக்களாட்சி நொறுங்கியது என்கிறாரா, குடியரசு நொறுங்கியது என்கிறாரா?
குடியரசு நொறுங்கியது என்றால் இந்தியா குடியரசு நாடாக இல்லாமல் போய்விட்டது என்று அர்த்தம். ஆனால் சுதந்திர நாடாக அது இருக்கலாம். உதாரணமாக பழங்கால அரசாட்சிகள் சுதந்திரமாகத்தான் இருந்தன, ஆனால் அவை குடியரசுகள் அல்ல.
மக்களாட்சி அல்லது ஜனநாயகம் நொறுங்கியது என்றால் மக்களை மக்களே ஆளும் தன்மை இல்லாமல் போய்விட்டது, அடிமைத்தனம் நிலவுகிறது என்று அர்த்தம். குடியரசு நொறுங்கியது என்றால் அதன் அடிப்படையான குடிமக்களாக இருக்கும் தன்மை (சிட்டிசன்ஷிப்) போய்விட்டது என்று பொருளாகும். இன்றைய இந்தியாவில் எது நொறுங்கியது, எது போய்விட்டது என்பதை நாம்தான் சிந்திக்க வேண்டும்.


From Rumi

What Is Poison ?
Rumi Replied With A Beautiful Answer : AnyThing Which Is More Than Our Necessity Is Poison. It May Be Power, Wealth, Hunger, Ego, Greed, Laziness, Love, Ambition, Hate, Or AnyThing.

What Is Fear ?
Non Acceptance Of Uncertainty. If We Accept That Uncertainty, It Becomes Adventure.

What Is Envy ?
Non Acceptance Of Good In Others. If We Accept That Good, It Becomes Inspiration.

What Is Anger ?
Non Acceptance Of Things Which Are Beyond Our Control. If We Accept, It Becomes Tolerance.

What Is Hatred ?
Non Acceptance Of Person As He Is. If We Accept A Person Unconditionally, It Becomes Love!


எண்ணுச் செய்யுள்

ஒன்று முதல் பத்துவரை

ஒன்றெனில் இவ்வண்டம், பிரபஞ்சம் உண்டு
இரண்டெனில் இருளும் அதில் உள்ள ஒளியும்
மூன்றெனில் மும்மலம் அது நீக்க வேண்டும்
நான்கெனில் நாற்புறம் சுற்றி நீ நோக்கு
ஐந்தெனில் ஐம்புலன் நாம் பெற்ற பேறு
ஆறெனில் நீர்மையும் நாம் போகும் வழியும்
ஏழெனில் எழுதலும் விழிப்புணர்வும் ஆகும்
எட்டெனில் எதையும் நினைத்தால் எட்டிடலாம்
ஒன்பதெனில் முழுமையும் புதுமையும் ஆகும்
பத்தெனில் உன்னை நீ பற்றிக் கொள்வாயே.

குறிப்பு:
1. அண்டம் = கோளவடிவம், பிரபஞ்சம் = நாம் வசிக்கும் இந்த அண்டப்பெருவெளி. சிலர் இதை மாயை என்பார்கள். அப்படியில்லை என்பதற்காகவே உண்டு என்ற சொல்.
2. முதலில் இருளை வைத்த காரணம், எங்கும் நீக்கமற நிறைந்தது இருள்தான். அதில் ஆங்காங்கு நட்சத்திரங்கள் முதலாக நாம் வைக்கும் விளக்குகள் வரை ஒளிப் புள்ளிகள் உள்ளன. ஓர் அறையில்கூட எங்கும் இருளே நிறைந்துள்ளது. விளக்கை ஏற்றினால் அந்த ஒளி இருளைச் சற்றே ஆங்காங்கு விலக்குகிறது.
3. மூன்று = மும்மலம், வழக்கமான ஆணவம், கன்மம், மாயைதான். ஆணவம் நீக்கப்பட வேண்டியது. யாருக்கும் ஆணவம் கூடாது. அது அழிவுக்கு வழி.
கன்மம், நல்லதோ, கெட்டதோ, நாம் செய்யும் செயலுக்குக் கிடைக்கும் பயன்.
மாயை என்பது திரிபுக் காட்சி–Illusion. ஒன்றை மற்றொன்றாகப் புரிந்துகொள்ளுதல்
4. நாற்புறமும் உற்றுநோக்க வேண்டும், அதனால் அறிவு வளரும் என்பது பொருள். நோக்குதல் என்றால் Observation. வெறுமனே பார்த்தல் அல்ல.
5. ஐம்புலனுக்கு அப்பால் ஒன்றுமில்லை. அனைத்து அறிவும் உணர்வும் அவற்றின் வழியே கிடைப்பது.
6. நீர்மை என்பது அன்பு, பரிவு, கருணை. ஆறு செல்வது போல நாம் நடக்கும் வழியுமாகும்.
7. ஏழு, எட்டு – அர்த்தம் தெளிவு.
8. ஒன்பது என்பது முழுமை. பழங்காலத்திலிருந்து ஒன்பதே முழுமை ‍பெற்ற நிலையாக, எண்ணாக இருந்தது. ஒன்பது = நவம், புதுமை என்பதும்.
9. பத்து = பற்று. பத்துப் பாத்திரம் என்பது போல. (மிச்சம் மீதிகள் பற்றிக் கொண்டுள்ள பாத்திரம்). யாரையும் ஒருவன் பற்ற வேண்டாம் (பற்றற்றானையும் கூட). உன்னை நீ பற்றிக் கொண்டால் போதும்.
இன்று பத்துவரை. இனி முடிந்தால் இச்செய்யுள் நூறுவரை செல்லும். அவ்வப்போது எழுதுவேன்.