எண்ணுச் செய்யுள்

ஒன்று முதல் பத்துவரை

ஒன்றெனில் இவ்வண்டம், பிரபஞ்சம் உண்டு
இரண்டெனில் இருளும் அதில் உள்ள ஒளியும்
மூன்றெனில் மும்மலம் அது நீக்க வேண்டும்
நான்கெனில் நாற்புறம் சுற்றி நீ நோக்கு
ஐந்தெனில் ஐம்புலன் நாம் பெற்ற பேறு
ஆறெனில் நீர்மையும் நாம் போகும் வழியும்
ஏழெனில் எழுதலும் விழிப்புணர்வும் ஆகும்
எட்டெனில் எதையும் நினைத்தால் எட்டிடலாம்
ஒன்பதெனில் முழுமையும் புதுமையும் ஆகும்
பத்தெனில் உன்னை நீ பற்றிக் கொள்வாயே.

குறிப்பு:
1. அண்டம் = கோளவடிவம், பிரபஞ்சம் = நாம் வசிக்கும் இந்த அண்டப்பெருவெளி. சிலர் இதை மாயை என்பார்கள். அப்படியில்லை என்பதற்காகவே உண்டு என்ற சொல்.
2. முதலில் இருளை வைத்த காரணம், எங்கும் நீக்கமற நிறைந்தது இருள்தான். அதில் ஆங்காங்கு நட்சத்திரங்கள் முதலாக நாம் வைக்கும் விளக்குகள் வரை ஒளிப் புள்ளிகள் உள்ளன. ஓர் அறையில்கூட எங்கும் இருளே நிறைந்துள்ளது. விளக்கை ஏற்றினால் அந்த ஒளி இருளைச் சற்றே ஆங்காங்கு விலக்குகிறது.
3. மூன்று = மும்மலம், வழக்கமான ஆணவம், கன்மம், மாயைதான். ஆணவம் நீக்கப்பட வேண்டியது. யாருக்கும் ஆணவம் கூடாது. அது அழிவுக்கு வழி.
கன்மம், நல்லதோ, கெட்டதோ, நாம் செய்யும் செயலுக்குக் கிடைக்கும் பயன்.
மாயை என்பது திரிபுக் காட்சி–Illusion. ஒன்றை மற்றொன்றாகப் புரிந்துகொள்ளுதல்
4. நாற்புறமும் உற்றுநோக்க வேண்டும், அதனால் அறிவு வளரும் என்பது பொருள். நோக்குதல் என்றால் Observation. வெறுமனே பார்த்தல் அல்ல.
5. ஐம்புலனுக்கு அப்பால் ஒன்றுமில்லை. அனைத்து அறிவும் உணர்வும் அவற்றின் வழியே கிடைப்பது.
6. நீர்மை என்பது அன்பு, பரிவு, கருணை. ஆறு செல்வது போல நாம் நடக்கும் வழியுமாகும்.
7. ஏழு, எட்டு – அர்த்தம் தெளிவு.
8. ஒன்பது என்பது முழுமை. பழங்காலத்திலிருந்து ஒன்பதே முழுமை ‍பெற்ற நிலையாக, எண்ணாக இருந்தது. ஒன்பது = நவம், புதுமை என்பதும்.
9. பத்து = பற்று. பத்துப் பாத்திரம் என்பது போல. (மிச்சம் மீதிகள் பற்றிக் கொண்டுள்ள பாத்திரம்). யாரையும் ஒருவன் பற்ற வேண்டாம் (பற்றற்றானையும் கூட). உன்னை நீ பற்றிக் கொண்டால் போதும்.
இன்று பத்துவரை. இனி முடிந்தால் இச்செய்யுள் நூறுவரை செல்லும். அவ்வப்போது எழுதுவேன்.

இலக்கியம்