Wife

My darling, my lover, my beautiful wife,
Marrying you messed up my life.

I see your face when I am dreaming,
That’s why I always wake up screaming.

Kind, intelligent, loving and hot;
This describes everything you are not.

I love your smile, your face and your eyes,
Damn, I’m good at telling lies!

My feelings for you, no words can tell,
Except for maybe ‘Go to hell.’

What inspired this amazing rhyme?
A bottle of Feni, little Salt n Lime !

–Joao Caitan, from Goa, written for a competition.


குளித்து மணல் கொண்ட கல்லா இளமை

இது புறநானூறு 243ஆம் பாட்டில் வரும் தொடர். அக்கவிதையை எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. “தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி” என்று பாடலில் வரும் தொடரினால் அவருக்கு இந்தப் பெயரை அளித்து விட்டிருக்கிறார்கள். பாட்டு இதோ:


இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவு வழி தழீஇ, தூங்குவழி தூங்கி,
மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறி, சீர்மிக
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்து துடுமெனப் பாய்ந்து
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே – யாண்டு உண்டு ‍ கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே!

இது கவிதை. இதன் பொருள்:

இனி நினைந்து – இப்போது நினைக்கும்போது,
இரக்கம் ஆகின்று – பச்சாத்தாபமாக உள்ளது
திணிமணல் செய்வுறு பாவைக்கு – மணலில் செய்த பெண் உருவத்துக்கு அல்லது பொம்மைக்கு
கொய்பூத் தைஇ – பூக்களால் அலங்காரம் செய்து
தண்கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து – குளிர்ந்த மடுவில் குளிக்கும் பெண்களோடு கைகோத்து விளையாடி
தழுவு வழி தழீஇ – தழுவும் நேரத்தில் தழுவி
தூங்குவழி தூங்கி – ஓய்வெடுக்கும் நேரத்தில் ஓய்வெடுத்து
மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு – கள்ளம் கபடறியாத இரகசியமற்ற கரவற்ற இளைஞர் கூட்டத்தில் கலந்து
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து – உயர்ந்த கிளைகளைக் கொண்ட மருத மரங்களைக் கொண்ட துறைக்குச் சென்று
நீர் நணிப் படிகோடு ஏறி – நீரை நோக்கித் தாழ்ந்த மரக்கிளைகளில் ஏறி
சீர்மிக – எல்லாரும் பாராட்டும் படியாக, கரையவர் மருள – கரைகளில் இருப்பவர் வியந்து பார்க்கும்படியாக, திரையகம் பிதிர – நீர்ப்பரப்பு அலையடித்துத் திவலைகளை உதிர்க்க,
நெடுநீர்க் குட்டத்து – ஆழமான நீரையுடைய மடுவில்
துடுமெனப் பாய்ந்து – தடாலென்று குதித்து
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை – மூழ்கி மண்ணெடுத்து வந்த அறியாப் பருவத்து இளமைக் காலம்
அளிதோ தானே யாண்டு உண்டுகொல்லோ – இப்போது அரியதாகிவிட்டதே, அது எங்கே சென்றது?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி – பூண் போட்ட கெட்டியான தடியை ஊன்றிக் கொண்டு
இரும் இடை மிடைந்த சில சொல் – இருமலுக்கு இடையே தடுமாறித் தடுமாறிப் பேசுகின்ற சொற்கள் சிலவற்றுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்ட
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – மிகவும் முதியவர்களாகிவிட்ட நமக்கு (அல்லது எங்களுக்கு).


பெருமூதாளரேம் ஆகிய எமக்கு இளமைப் பருவம் யாண்டு உண்டு கொல் என்று முடிக்கவும்.
(உரை, எனது சொந்த உரை)

எனது மட்டுமல்ல, என்னைப்போல எழுபதுகளில் (அல்லது அறுபது வயதுக்கு மேல்) இருப்பவர்கள் அவ்வப்போது இளமைப் பருவத்து நினைவுகளில் வாழ்வதுண்டு. அதற்கான புறநானூற்று எடுத்துக்காட்டு இந்தக் கவிதை. இப்போது 82 வயதாகும் ஆல்பர்ட் அண்ணாச்சி கேட்டுக் கொண்டதற்காக இந்தக் கவிதையை எடுத்தேன். அதன் பொருளையும் எழுதினேன்.


மகாபாரதம் பற்றி மேலும் சில…

மேலும் உனது கேள்விகளுக்கெல்லாம் பதில்களை இங்கே தொகுத்துத் தருகிறேன். இத்துடன் முடிக்கலாம் என்றும் தோன்றுகிறது.

க பூரணச்சந்திரன்: 1. சாந்தனு செய்தது, அவன் மனைவி கங்கை செய்தது எல்லாமே தவறுதான். ஓரவஞ்சனை.
2. ஒரு மனிதன் தன் செயல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறான், வெறும் சொற்களால் அல்ல என்பது உண்மை என்றால், மகாபாரதத்தின் அத்தனை கேரக்டர்களும் தவறு செய்தவர்கள், தீயவர்கள்தான். அதில் சந்தேகமேயில்லை.

3. தன் தம்பியின் சுயம்வரத்திற்கு பீஷ்மன் சென்றது தவறு. சென்றது மட்டுமல்ல, மூன்று பெண்களைத் தூக்கிக் கொண்டுவந்தது மிகமிகத் தவறு. அது அவனது பிரம்மச் சரியத்துக்கு ஏற்றதும் அல்ல. ஏன் விசித்திரவீரியன் செல்லவில்லை என்று தெரியவில்லை. சுயம்வரத்தில் பெண்தான் நாயகனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இங்கு பீஷ்மன் ஒரு பெண் தேவைப் பட்டதற்கு மூன்றுபேரை தூக்கிக் கொண்டுவருகிறான். இதுவே முரண்பாடுதான். (எந்த மூலிகை பயன்படும் என்று தெரியாமல் அனுமன் சஞ்சீவி மலையையே தூக்கி வந்தது போல இருக்கிறது இது). அம்‍பை ஏற்கெனவே ஒருவனை வரித்தவள் என்று தெரிந்து அவளை அவள் தந்தையின் இடத்திலேயே விட்டிருக்க வேண்டும். மற்றப் பெண்களை தூக்கி வந்தது காட்டு தர்பார். வல்லான் வகுத்ததே வாய்க்கால். ஆணாதிககத்தின் உச்சம்.
4. மகாபாரதக் கதை மாந்தர்க்கு குடும்ப வரைபடமே தேவை யில்லை. ஒருவனும் முறையாகப் பிறந்தவன் அல்ல. ஆனால் அதுதான் கதையின் தெய்விகத் தன்மையை காட்டுகிறது என்கிறார்கள். (எல்லாமே அற்புதச் செயல்கள் அல்லவா?)மேலும் குந்தியுடனும் மாத்ரியுடனும் உறவு வைப்பவர்கள் எல்லாமே தேவர்கள் அல்லவா? அவ்வளவு உயர்ந்தவர்கள் எல்லாரும். (அல்லது தேவர்கள் அத்தனை பேருமே அவ்வளவு இழிந்தவர்கள் என்றும் கொள்ளலாம். புராண தேவர்களுக்கு பெண்களைக் கூடி பிள்ளை தருவதை விட வேறு வேலை இருந்ததாகத் தெரியவில்லை).

தமிழர் ஒழுக்கம் இலட்சியப் படுத்தப் பட்டதுதான் (stylized). ஆனால் உலகியலுடன் நெருக்கமானது. மகாபாரதம் முற்றிலும் புனைவு. அதாவது உயர்ந்த மேன்மையான மனிதர்கள் முயன்றால் தமிழர்தம் இலட்சிய வாழ்வை அடையலாம். பாரதத்தில் போல எந்த மேன்மையான மனிதனும் சூரியனுடனும் யமனுடனும் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாது.

5. மகாபாரதம் ஒரு பங்காளிச் சண்டை என்பதற்கு மேல் வேறில்லை என்பது உண்மை.

6. கிருஷ்ணனைப் பற்றி நீ‍ கேட்கும் கேள்விகளைக் கேட்டால் அதெல்லாம் அவரவர் தலைவிதி என்று கூறிவிடுவாரகள். கர்ணன் குந்தி புத்திரன் என்பதை வெளிப்படுத்தியிருந்தால் மகா பாரதப் போரே நடந்திருக்காது. பாண்டவர்கள் கர்ணனிடம் தஞ்சமடைந் திருப்பார்கள். துரியோதனனுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். எல்லாம் சுபம். ஆனால் அப்படி நடக்கலாகாது என்பதற் காகத்தான் இந்தக் கதைத் திருப்பங்கள் வைக்கப் படுகின்றன.

கடைசியாக, பாரதத்தை நீ நல்ல விமரிசனக் கண்ணோட்டத்துடன் பார்த்திருக்கிறாய். இதில் கதையமைப்பில் உள்ள தவறுகளாக நீ சுட்டிக் காட்டுவன சரியானவை, ஏற்கத் தக்கவை. ஆனால் ஒரு புராணக் கதையில், ஒரு பக்கம் கடவுளர்களும், மறுபக்கம் மனிதர்களும் ஊடாடும் ஒரு கதையில், எப்படி நல்லது கெட்டது என்பதை தீர்மானிப்பது? கேரக்டர்களும் அப்படியே தீர்மானிக்கப்பட முடியாதவை. பாரதக் கதையில் எனக்கு முக்கியமாகப் படும் சில நீதிகள்.

பங்காளிச் சண்டை, குறிப்பாக மண்ணுக்காகச் சண்டை கூடாது. அது அனைத்தையும் அழித்து விடும்.

பெண்களை இழிவுபடுத்தக் கூடாது (பாஞ்சாலியை துரியோதனன் செய்ததைப் போல, அல்லது மூன்று பெண்களை பீஷ்மன் தூக்கி வந்தத‍ைப் போல…)இவை அனைத்துமே மோசமான எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன. பாஞ்சாலி சபதம் செய்ய வில்லை என்றால் பாரதப் போர் நடக்கக் காரணம் இல்லை. பாண்டவர்கள் எதுவும் வாங்காமல்கூடப் போயிருப்பார்கள். துகில் உரிக்கும்போதுதான் பீமன் துரியோததனைக் கொல்வதாகச் சபதம் செய்கிறான். அதேபோல அமபையும சிகண்டியாப் பிறந்து பீஷ்மனைக் கொல்கிறாள். பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பது இராமாயணத்தைவிட மகாபாரதத்தில் முனைப்பாக இருக்கிறது.

எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல பண்புகள், தீய பண்புகள் அனைத்துமே உள்ளன. உண்மையில் முற்றிலும் நல்லவன் என்றோ, தீயவன் என்றோ ஒருவனும் இல்லை. பலசமயம் நடத்தைப் பிறழ்வுகள்தான் உண்டு. இது இன்றைய உளவியல் நோக்கிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. எனவே எந்த மனிதனையும் அநாவசியமாக வெறுக்கவோ, அளவுக்கு அதிகமாக நேசிக்கவோ தேவையில்லை. எல்லா விஷயங்களிலும் ஒரு நடுநிலை தேவைப் படுகிறது.

இம்மாதிரிக் கருத்துகளைச் சொல்ல வந்ததாகத்தான் பாரதம் தோன்றியதாகப் படுகிறது. ஆனால் அந்தக்கால பிராமணர்களுக்கு இது போதியதாக இருந்திருக்காது. அதனால் எவனோ ஒருவன் தங்களுக்குச் சார்பாக, சாதியை வலியுறுத்த வேண்டி பகவத்கீதையை எழுதி இடையில் புகுத்திவிட்டான்.

கர்ணனை அவமானப் படுத்துமிடங்களிலும் ஏகலைவன் கதையிலும்…இப்படிப் பல இடங்களில் சாதி நிலைநிறுத்தத்தான் படுகிறது. அதில் சந்தேகமில்லை. மிக முக்கியமாக கவனத்தில் வராத சின்னச் சின்ன இடங்களில்கூட சாதித் தன்மை நோக்கப் படுகிறது. உதாரணமாக, குந்தி பாண்டவர்களுக்கு பதிலாக, ஒரு காட்டுச் சாதியினர் பிள்ளைகள் ஐவரையும் அவர்கள் தாயையும் அரக்கு மாளிகையில் படுக்க ஏற்பாடு செய்கிறாள். அவர்கள் கீழ்ச்சாதி என்பதால் திட்டமிட்டு எரிக்கப்படுகிறார்கள்.
பகவத் கீதை ஏற்கெனவே உள்ள சாதியமைப்பை இன்னும் அதிகமாக வலியுறுத்துகிறது. பிராமணர்கள், ஊழ்வினை, ஜாதிக்கொரு நீதி ஆகிய தங்கள் முக்கியமான கருத்துகளைக் கதையில் புகுத்தியும் ஆயிற்று. முடிந்தது மகாபாரதம்.

விவேக்: நன்றி மாமா.


மகாபாரதம் பற்றிய சிந்தனைகள்…

Vivek GK: ஆனால் ஏன் இந்த கண்ணோட்டத்தில் கீதை ஆராயப்படுவதில்லை…. இந்தியாவில் காந்தி, நேரு முதல் அப்துல் கலாம் வரை கீதையை புகழ்ந்திருக்கிறார்கள்…. மற்றும் western philosphers like Thoreau, Emerson, Herman Hesse to scientist Robert Oppenheimer… இவர்கள் அனைவரும் அதை புகழ்கிறார்கள்….
ஆனால் காந்தியை கொன்ற கோட்ஸேவும் கீதை தான் தன்னை influence செய்ததாக கூறுகிறான்… This is the reason I hate the concept of religious texts… The moral is twisted by people according to their desires…
என்னுடைய ஆதங்கம்… திருக்குறள் போன்ற அறம் போற்றும் தமிழ் text கீதை போன்ற sanskrit text overshadow செய்வது தான்…
ஒருவேளை கீதை மக்கள் self-identity செய்து கொள்ளும் வகையில், ஒரு grand romantic narrative கொடுப்பதால் (தர்மத்தின் பக்கம் தான் நின்று போர் செய்யும் தருவாயில் தன் சொந்தங்களே தனக்கு எதிராக நிற்பது) தான் popular ஆக‌ இருக்கிறதோ?…

க பூரணச்சந்திரன்: மக்கள் தர்மம் (நீதி) என்பது தர்மனின்/யுதிஷ்டிரனின் (பெயரையே பார்) பக்கமே இருப்பதாக மூளைச் சலவை செய்யப்படுகிறது என்பதுதான். மகாபாரதத்தில் நீதி எவர் பக்கமும் இல்லை. காரணம், மண்ணாசை என்று சொல்லப்படுகிறது. சாந்தனுவின் வம்சத்தில் மூத்தமகன் திருதராஷ்டிரன். அவனது மூத்தமகன் துரியோதனன். பழங்காலத்தில் மூத்த மகன்களே வாரிசுகள். அப்படியிருக்க பாண்டுவின் மகன்களுக்கு ஆட்சியுரிமை எங்கிருந்து வரும்? பாண்டு திருதராஷ்டிரன் சார்பாக ஆண்டுவந்தவன்தானே? இப்படி ஆரம்பத்திலிருந்தே கோளாறுகள். எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒருதலைப்பட்சமான முடிவுகள் திணிக்கப்படுகின்றன. அதனால்தான் புவிமன்னர்கள் யாவரும் சமமாகவே இரு பக்கமும் பிரிந்து நிற்கிறார்கள். உண்மையில் தர்மம் என்பது ஒன்றானால், அனைவருக்கும் அது தெரிந்தது தானே? கடைசிவரையிலும் பாண்டவர்களும் தவறுதானே செய்கிறார்கள்? (கிருஷ்ணனின் தூண்டுதலால் துரியோதனை இடைக்குக் கீழ் அடித்துக் கொல்லவில்லையா பீமன்? ஜெயிக்க வேறு வழி இல்லையே?) அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற பொய்சொல்லியே ஜெயிக்கிறான் தருமன். இதெல்லாம் தருமம்தானா? பிறகு அஸ்வத்தாமன் பழிவாங்க முனைந்து அனைத்துப் பாண்டவ வமிசத்தையும் கொல்கிறான். இறுதியில் பாண்டவர் ஐவர், பாஞ்சாலி, உத்தரை தவிர வேறு எவரும் மிச்சமில்லையாம். போர் என்றால் இப்படித்தான் இருக்கும் – இரண்டு பக்கமும் முற்றிலும் அழியும் என்றுதான் மகாபாரதம் காடடுகிறது.

மக்கள் பாண்டவர் பக்கம் ஐடெண்டிஃபை செய்துகொள்கிறார்கள் என்பது வாஸ்தவம். இன்று ஹீரோக்கள் பக்கம் அடையாளப்படுத்திக் கொள்வதுபோல. நான் பலமுறை யோசித்திருக்கிறேன். எல்லா சினிமாவிலும் வில்லனைக் கொல்லும் முன்பு அவன் அடியாட்கள் அனைவரையும் கதாநாயகன் கொல்லுவான். அது குற்றம் என்று யாரும் சொல்வதில்லை. ஏன் அவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு மனைவி மக்கள் இல்லையா? வில்லன் ஹீரோவின் தாய்/தந்தை/நெருங்கிய ஓர் உறவைக் கொன்றதற்காக இவன் நூறுபேரைக் கொல்வதாகக் காட்டுவார்கள், ஆனாலும் ஹீரோ செய்ததே சரியென்று நிறுவப்படும் (மூளைச் சலவை செய்யப்படும்). இது போலத்தான்…

(உண்மையாக/கற்பனையாக) போரிடும் எல்லாருக்கும் ஒரு கிருஷ்ணன் தேவைப்படுகிறான். அதனால் அவர்கள் எல்லாருக்குமே கீதை தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். போரிடுபவன் காந்தியாக இருந்தால் என்ன, கோட்ஸேவாக இருந்தால் என்ன? இருவருக்குமே தங்களை நியாயப்படுத்த கிருஷ்ணன் தேவைதானே?
தமிழில் (வடமொழியிலும்கூட) நியாயம்-நீதி என்று இரண்டு இருக்கின்றன. அர்ஜுனன் சொல்வது நியாயம். கிருஷ்ணன் சொல்வது வறட்டு நீதி. (இன்றைய கோர்ட்நீதி). நீதியை விட நியாயமே முக்கியமானது.


மகாபாரதச் சிந்தனைகள்-தொடர்கிறது

ஏன் மகாபாரதக் கதையைத் தவிர இத்தனை நூற்றாண்டுகளாகத் தெருக்கூத்துக் கலைஞர்கள் வேறு எ‍தையும் கையாளவில்லை என்பது மிகப் பெரிய ஆய்வினை வேண்டுவது. மழை வேண்டுவது, பாரதம் படிப்பது, அதைக் கூத்தாகப் போடுவது எல்லாம் ஒரு தொடர்போல நிகழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் அந்தக் கதைகளை ஒட்டி மக்கள் தங்கள் கற்பனையைச் செலுத்திக் கூத்துப் பாடல்களையும் வசனங்களையும் தாங்களாகவே உருவாக்கி வந்துள்ளனர். உதாரணமாக, நான் வல்லம் (ஆரணி) என்ற ஊரில் ஆசிரியனாக 1969-70இல் பணியாற்றினேன். அது வந்தவாசிக்கும், செய்யாறுக்கும், சேத்துப்பட்டுக்கும் இடையிலுள்ள ஓர் ஊர். இந்த மூன்று ஊர்களுமே பழங்காலத்தில் தெருக்கூத்தின் பயிற்றுமையங்களாகச் செயல்பட்ட ஊர்கள். என்னிடம் படித்த ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் தானாகவே பக்கத்துப் பக்கத்து ஊர்களில் பாடப்படும் கூத்துப் பாடல்களைப் பாடுவான், அவனாகவே இட்டுக் கட்டவும் செய்வான். எல்லாம் எங்கேயோ மாயமாக மறைந்துவிட்டது…காரணம் திரைப்படமா, அரசியலா, கூத்து மட்டுமே நடத்தி வாழ்க்கை நடத்த வசதியற்றுப் போனமையா, மாறிவந்த நவீனமயமாக்கலா, ஆபாசக் கலைகளா…என்னத்தைச் சொல்வது?

4. கேள்வி: தமிழில் இயல் இசை நாடகம் என்று முத்தமிழ் இருப்பதாக சொல்கிறார்கள்… ஆனால் அதில் நாடகங்கள் பற்றி குறைவாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்…. அதை பற்றிய awareness ஏ மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை…. எனக்கு தெரிந்த நாடகங்கள்…. சினிமா மற்றும் TV நாடகங்கள் தான்…

பதில் : எனக்குத் தெரிந்தவரை இன்று இயலைத் தவிர இசை, நாடகத் தமிழ்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பகுப்புக்கான நோக்கமும் தெரியவில்லை. உண்மையில் இவை மூன்றையும் தங்கள் மொழியில் கொண்ட ஏராளமான நாடுகள் உள்ளன. அங்கெல்லாம் இப்படி போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இல்லாத இசைப்பாடல்களா, இசையமைப்பாளர்களா, ஆபராக்கள் முதலிய இசைநாடகங்களா, பிற நாடகங்களா? அவர்கள் மூன்றிங்லீஷ் என்று போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. தங்கள் தங்கள் போக்கில் இயல்இசைநாடகம் மூன்றையுமே வளர்க்கிறார்கள். நாம் வாய்ப்பேச்சு வீரர்கள். தமிழ்இசை வளரும் வரை, தமிழில் நாடகங்கள் தனித்துறை என்று சொல்லுமளவுக்கு வளரும் வரை, இருப்பது முத்தமிழ் அல்ல, ஒரேஒரு இலக்கியத் தமிழ்தான். முத்தமிழ் என்பது அதுவரை பொய்.

5. கேள்வி: பகவத்கீதை பற்றி உங்கள் கருத்தென்ன?

க பூரணச்சந்திரன்: எந்த ஆய்விலும் பகவத்கீதை நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு மேல் மகாபாரதத்துக்குப் பின் வந்தது என்பதை நினைவில் வைக்க வேண்டும். ஏனெனில் மகாபாரத காலத்தில் நெகிழ்வாக இருந்த சாதிகள் பகவத்கீதை காலத்தில் முற்றிலும் இறுகிப் போயிருக்கலாம். எனவே பகவத் கீதை சாதிகளை வற்புறுத்தும் ஒரு நூலாகவே அமைந்துவிட்டது.

அது சாதியை வற்புறுத்துகிறது என்பது எனக்கு முக்கியமில்லை. அது அதன் இயல்பு. ஆனால் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கு நடக்கும் விவாதம் ஜாதி பற்றியதல்ல. கடமை பற்றியது. அர்ஜுனன் கேள்வி, முன்னால் இருக்கும் உறவினர் மட்டுமல்ல, அவர்களுடன் சேர்ந்த பல லட்சக்கணக்கான பேர்களையும் தருமத்தின் பெயரால் கொல்வது தகுமா என்பதுதான். கிருஷ்ணன் சொல்லும் பதில் இதற்கு ஏற்புடையதல்ல. அவன் சொல்வது, “எத்தனை பேரானால் என்ன, சொந்தமாக இருந்தால் என்ன, தருமம் (உன் சாதிக்கடமை யான கொல்லுதல்)தான் முக்கியம், ஆகவே கொல்” என்பது. பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களையும் தாண்டி அது என்ன தருமம், நீதி? தருமம் பற்றி எலலாருக்கும் இருப்பது ஒரு பார்வை தான். (நோஷன்). இது தருமமா, அது தருமமா என்றெல்லாம் ஆராய்ந்து எதையும் நிலைநிறுத்துவது அவ்வளவு எளிதல்ல. இன்னும் கேட்டால் எது உண்மை என்பது போலவே, ஆராய முடியாத முடிவற்ற ஒன்றாக இருப்பதுதான் எது தர்மம் (நீதி) என்பதும். (இங்கே தர்மம் என்ற வடசொல்லின் அர்த்தத்தை வைத்து (மதம்) பலபேர் குட்டை குழப்புகிறார்கள்.) நாம் பொதுவான எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற சமூகநீதியைப் பற்றித்தான் பேச இயலும். எல்லாருக்கும் உணவு தேவை. எனவே அதற்கு வழி செய்ய வேண்டும் என்பது சமூக நீதி.
கிருஷ்ணன் கூறும் நீதி, சிங்களர்கள் தமிழ் ஈழ மக்களைக் கொன்ற நீதிதான். அல்லது யூதர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று கருதி ஹிட்லர் செய்த நீதிதான்.
mass destruction எதற்கும் பின்னால் கிருஷ்ணனின் நீதிதான் இருக்கிறது.
அதைக் கேள்வி கேட்கும் அர்ஜுனனின் (பொதுமக்களின்) வாயைச் சாமர்த்தியமாக அடைப்பதுதான் பகவத்-கீதை.


மகாபாரதச் சிந்தனைகள்-‍ தொடர்கிறது

கேள்வி 2. ஆமாம் மாமா… இந்த கேள்வியை நான் பிராமண நண்பர் களிடமே கேட்டிருக்கிறேன்… அவர்கள் கூறுவது, வேதத்தில் எங்கும் பிறப்பு அடிப்படையில் சாதி பிரிவுகள் இல்லை என்பதுதான். பின் பிற்காலத்தில் எப்படி பிறப்பு அடிப்படையில் மாறியது…. தற்போதும் ஏன் தொடர்கிறது என்றெல்லாம் தெரியவில்லை…

நீங்கள் கூறியது போல எனக்கும் ராமாயணம் விட மகாபாரதம் பிடிக்கும் தான். மனித இயல்புகளின் சிக்கல்களை காட்டுவதால். என்னுடைய எதிர்ப்பு அதை (மற்றும் சனாதான தர்மம்) மட்டுமே நம் அடையாளமாக மாற்றுவதில் தான் உள்ளது…
உதாரணமாக ஏன் தெருக்கூத்து பாரதத்தை மட்டுமே நம்பி இருந்தது… ஏன் பிற நாடகங்களோ (ஆங்கிலத்தில் Shakespeare முதல் Bernard Shaw வரை இருப்பன போல), பிற இலக்கியங்களோ படைக்கப்படவில்லை?

பதில். வேதத்தில் பிறப்படிப்படையில் சாதி இல்லை என்பது சரி, ஆனாலும் அது ஒரு மூடநம்பிக்கைக் களஞ்சியம்தான். எனினும் சாதிக்கான வேர்கள் அதர்வத்தில் உள்ளன. மூலமின்றி ஒன்று பிறந்து விட்டது என்பது தர்க்கத்திற்கு ஒவ்வாது. சரி, சாதிதான் வேதத்தில் இல்லை என்கிறார்களே, பிறகு அதை விட்டுவிட வேண்டியதுதானே? ஏன் மனுதர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்? அதில்தான் சாதி பற்றி விரிவான சூத்திரம் வருகிறது.

சாதியின் வேரைத் தேடுவது சநாதனிகளுக்கு ஆபத்தானது, பிறகு இப்போதுள்ள அவர்களுக்கு வசதியான இந்த சாதிமுறையைக் கைவிட வேண்டி வரும். அதனால் அதில் பிடிவாதமாக ஈடுபட மறுக்கிறார்கள்.
தற்போது வரை சாதி தொடர்வதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இது பிரித்தாளும் சூழ்ச்சிதான். ஆங்கிலேயனாவது மொழி, இன, சாதி போன்ற இருக்கின்ற குழுக்கள் அடிப்படையில் பிரித்தாள்வதைத் தொடங்கினான். ஆரியர்கள் சாதி அடிப்படையிலும் தனிமனித அடிப்படையிலும் பிரித்தாள்வதைத் தொடங்கி விட்டார்கள்.

சாதிகளைப் பிரிக்கும்போதே நீ உயர்ந்தவன், அடுத்துள்ளவன் தாழ்ந்தவன் என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதுபோல, அமைப்புகள். சிலசாதிகள், சிலபேர் மட்டும் பூணூல் அணியலாம் போன்ற சலுகைகள் இத்யாதி. அதனால் ஒவ்வொரு சாதிக்குள்ளும் கூட உபசாதிகள் தோன்றி நான் பெரியவனா நீ பெரியவனா என்ற ஓயாத போராட்டம்.

முக்கியமாக தலைவிதி-முற்பிறப்பு என்ற இரண்டின் வாயிலாகவும் தனிமனிதர்களைப் பிரித்து விட்டார்கள். உதாரணமாக பக்கத்தில் ஒருவன் கஞ்சியில்லாமல் சாகிறான் என்றால் அவனுக்கு உதவுவதற்கு பதிலாக, அது அவன் தலையெழுத்து, நாம் நன்றாக இருப்போம் என்ற இந்திய மனநிலை. எவன் என்ன செய்தாலும் எங்கு பிறந்தாலும் எப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்தாலும் அது அவன் தலையெழுத்து என்று தலைமுழுகிவிடலாம்.

மனிதர்கள் எந்த அடிப்படையிலும் ஒன்‍று சேரவே முடியாத ஒரு கோட்பாடு இது. இது அரசுகளுக்கும் ஆள்வோருக்கும் எதிர்ப்புகளையும் கலகங்களையும் சமாளிக்க மிக உதவியாக இருந்ததால் அவர்கள் பிராமணர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால்தான் இந்தியாவில் புரட்சி வரவே வராது, வரமுடியாது என்று நான் சொல்வதுண்டு. அடுத்தவன் மேல் அபிமானமும் அன்பும், அதன் அடிப்படையில் ஒன்றுசேர்தலும் இருந்தால்தானே புரட்சி வரும்?
ஆனால் நான் முன்பே சொன்னதுபோல இராமாயணம் அளவுக்கு மகாபாரதம் பார்ப்பனர்களின் அடையாளமாக இல்லை. எல்லாச் சாதியினரின் அடையாளமுமாகப் பார்க்கப்பட்டது.
தெருக்கூத்து மகாபாரதத்தை மட்டுமே நம்பியிருந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றை இங்கே தொகுப்பது கடினம். ‍அதைப் படித்தால் மழைவரும் என்பன போன்றவை நம்பிக்கை அடிப்படையிலானவை. இன்னும் பல சமூகம் சார்ந்தவை. முக்கியமாகப் பிற சாதியினர் படிக்கலாகாது என்ற பார்ப்பனரின் கட்டுத்திட்டம். அப்படியானால் பிராமணன் மட்டும்தானே நாடகங்களை உருவாக்கவும் எழுதிவைக்கவும் முடியும்? இதுதான் இசையிலும் இப்போது நடக்கிறது.

இயல் மட்டும் தப்பிப் பிழைத்ததன் காரணம், தமிழிலக்கியம் ஆரம்பத்திலிருந்தே வேளாளர் கையில் ‍எடுக்கப்பட்டது, சமஸ்கிருதத்திற்கு எதிரானதாகக் கட்டமைக்கப் பட்டு விட்டது. இசையும் நாடகமும் இயலைவிடப் புரவலர் ஆதரவை வேண்டுபவை. இது ஓரளவு விடைதான். முடிந்தால் போகிற போக்கில் இதற்கான விடையையும் மேலும் தேடவேண்டும்.

மிக முக்கியமான ஒன்று, ஆரியர்கள் தங்களுக்கு எதிரானவற்றை ஒன்று தங்களிடம் ஏற்கெனவே உள்ளதாக உள்வாங்கிக் கொள்வார்கள், அல்லது அதற்கு ஒத்துவராத பனுவலாக இருந்தால் அழித்துவிடுவார்கள். அதனால் சாதியின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வு சிக்கலாகியது. முக்கியமாக சார்வாகம், நாத்திகம், ஆசீவகம் போன்ற எதிர் மதங்களுடைய நூல்கள் யாவும் அழிக்கப்பட்டன. பெளத்தம் கொஞ்சம் செல்வாக்குடன் இருந்ததால் இந்த விபத்திலி ருந்து தப்பியது.

நூல்களை அழிக்க முடியாதபோது ஆரியர்கள் ஆட்களையே அழித்துவிடுவார்கள். உதாரணமாக மன்னர்கள் ஆதரவுடன் சமணர்கள் அழிக்கப்பட்டது (தமிழகத்திலும் 8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டது) போன்றவை இத்தகையவை. ஆரம்பமுதலே ஆரியமும் சநாதனமும் ஆபத்தானவையாகத்தான் இருந்து வந்துள்ளன. இப்போதும் அப்படித்தான் நடக்கிறது.

தமிழ் இலக்கியத்திலும் மருத்துவத்திலும் பிற கலைகளிலும் முக்கியமானவை ஆரியர்களால் அழிக்கப்பட்டன. சித்தமருத்துவம் ஆயுர்வேதம் என்ற வடிவத்திற்குள் கொண்டுசெல்லப் பட்டது. கட்டடக்கலை, சிற்பக்கலை (தமிழகத்தில் ஊர் ஊருக்குக் கோயில்கள் இருந்தன, சிற்பங்கள் இருந்தன, யோசித்துப் பார், இவை பற்றிய நூல் எதுவும் தமிழில் கிடையாது.) நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, மூல நூல்கள் ஒன்று கூட இல்லாமல் அழிக்கப்பட்டன. இப்படி அவர்கள் அழித்ததை எதிர்ப்பதற்கு அறிஞர்களுக்கோ சாதாரண மக்களுக்கோ போதுமான அரசாங்க ஆதரவோ, பணமோ, செல்வாக்கோ எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அரசாங்கமே ‘அவாளுக்கு’ ஆதரவு…எங்கு பார்த்தாலும் அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள்…எல்லாக் கொடையும் பார்ப்பனருக்கே. ஒரு வேளாளனுக்கோ, மருத்துவனுக்கோ, பறையனுக்கோ, வைசியனுக்கோ கொடையளித்ததாக கல்வெட்டு இருக்கிறதா? அவர்கள் யாவரும் வாழப் போராடியாக ‍வேண்டும், அவர்களிடம் வரி பிடுங்கப் படும். ஆனால் இவர்களுக்கு ஊர்களும் நிலங்களும் இனாமாக அளிக்கப் படும், இவற்றுக்கு வரியும் கிடையாது (இறையிலி, வரியிலி நிலங்கள்). வேடிக்கை என்னவெனில், பின்வந்த நவாபுகள்கூட இதே இறையிலி நிலங்களைப் பார்ப்பனருக்கு அளிக்கும் முறையைப் பின்பற்றியிருக்கிறார்கள். படித்தவர்கள் ஆதரவு வேண்டுமல்லவா? தங்களை மட்டுமே படித்த சாதியாக, பிறரைப் படிப்பதற்குத் தகுதியில்லாதவர்களாகக் கட்டமைத்தது பார்ப்பனர்களின் பாரிய சூழ்ச்சிகளில் ஒன்று.


மகாபாரதம் – சில கேள்விகளும் பதில்களும்

கேள்வி 1 (கேட்பவர் விவேக்). தன்னுடைய காம இச்சைக்காக சாந்தனு தன மகனான பீஷ்மனை ப்ரஹ்மச்சரிய விரதம் மேற்கொள்ள செய்வது தவறில்லையா? Actually பீஷ்மனுக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்து குலத்தை தழைக்க செய்வது தானே ஒரு நல்ல தந்தைக்கு அழகு/ ஒழுக்கம் ?

பதில் (பூரணச்சந்திரன்). உன் முதல் கேள்வி மிகவும் ஏற்புடையது. இந்த நியாயமான கேள்விக்கு பதில் கிடையாது. சத்யவதி மாதிரி கீழ்ச்சாதிப் பெண்களை நினைத்தால் அந்தக்கால அரசர்கள் ஒரு நொடியில் தூக்கிச் சென்று அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ள முடியும். (இப்பொழுதே உ.பி.யில் அப்படித்தான் நடக்கிறது). இவனும் அப்படியே செய்திருக்கலாம். அப்படியிருக்கும்போது இது ரொம்ப மிகையாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இதற்காக ஒரு தேவதைக்கதை படைக்கப்படுகிறது.

அவள் சேதிநாட்டரசனின் மகள். மீன்வடிவ அப்சரஸ் ஒருத்தியை அவன் காதலித்ததால் மீன்நாற்றத்துடன் பிறந்து மச்சகந்தி எனப் பெயர் பெற்றவள். ஆனால் அவளுக்கு வியாசனை திருமணத்துக்குப் புறம்பான பந்தத்தில் கொடுத்த பராசர முனிவன் ஒரு யோசனை தூரம் அவள் உடலிலிருந்து நறுமணம் வீசுமாறு ‍செய்கிறான். அதனால் யோஜனகந்தி என்ற பெயர் பெறுகிறாள். பல காத தூரம் நறுமணம் வீசக்கூடிய உடலைப் பெற்ற ஒருத்தி சாதாரணப் பெண்ணாக இருக்கமுடியுமா? அதனால் அவள் (பின் வரப்போவதை அறியாமல்) “கண்டிஷன்” போடுகிறாள். (இங்குதான் காவியத்தின் அற்புதம் ஆரம்பிக்கிறது. a beautiful irony. எந்தப் பிள்ளைகளின் வம்சம் தழைப்பதற்காக பீஷ்மனை பிரம்மச்சாரியாக இருக்கச் சொல்கிறாளோ, அந்தப் பிள்ளைகள் அற்பாயுசில் மாண்டு போகிறார்கள். பீஷ்மனையும் பிரம்மச்சாரி ஆக்கிவிட்டதால் உதவாமல் போகிறான். திருமண உறவுக்கு முன் மற்றொருவனிடம் பெற்ற அவளது முதல்பிள்ளை வியாசன்தான் கெளரவ வம்சத்தை உருவாக்கவேண்டி வருகிறது.)
எப்படியிருப்பினும் சத்யவதி செய்ததும், சாந்தனு செய்ததும் தவறுகள்தான். ஆனால் அந்தத் தவறுகளில்தான் கதை தொடங்குகிறது. கதையின் தொடக்கத்தில் தவறுகளும், நம்பத்தகாத விஷயங்களும் இடம் பெறலாம் என்ற நோக்கில் இது ஏற்கப்படுகிறது.
இந்தத் தவறுகளின் விளைவுதான் (‍பெற்றவர்கள் செய்யும் தவறு பிள்ளைகளை பாதிக்கும் எனப் படுகிறது) வியாசனின் முதல் மகன் குருடனாகப் போவதும், இரண்டாவது மகன் தோல்நோய் (பாண்டு) பீடித்தவன் ஆவதும். மூன்றாவது மகன் அரச பரம்பரை அல்லாதவன் ஆவதும் (விதுரன்).

அந்தக் காலப் பழக்க வழக்கங்கள் பலவற்றை இது எடுத்துக் காட்டுகிறது. ஓர் அரசனுக்குப் பிள்ளை இல்‍லை என்றால் வேறு எவனிடமாவது அவன் பெண்டாட்டி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். அதாவது தாய்வழிச் சமூகமாக இருக்கிறது. ஆனால் அரச வம்சத்தைச் சேராதவர்கள் (விதுரன் போன்றோர்) அரசனாக முடியாது…

சுயம்வரத்தில் மணாளனைத் தேர்வு செய்வதும், பாஞ்சாலி ஐந்து பேரை மணப்பதும் தாய்வழிச் சமூக வழக்கங்கள்தான். ஆகவே பாரதம், தந்தை வழிச் சமூகம் முற்றிலும் உருவாகாத ஒரு காலத்தைக் காட்டுகிறது என்றுதான் தோன்றுகிறது. இதிலேயே உன் கேள்விக்கான பதிலும் அடங்கியிருக்கிறது. தாய்வழி கொண்ட அந்தக் காலத்தில் பெண்களுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது என்றால், சந்தனு தன் மனைவியை (எதிர்கால ராஜமாதாவை) எவ்வளவு ‍எச்சரிக்கையுடன் ‍தேர்ந்தெடுக்கவேண்டும்? அதுவும் ராஜவம்சத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே ஆளவேண்டும் என்பதால்? ஆகவே இரண்டாவது அதீத சக்தி பெற்ற ஓர் இளம் பெண் கிடைக்கிறாள் என்னும்போது முதல் மனைவி பெற்ற மகனை பலிகொடுத்துவிட்டான் சாந்தனு.

ஒரு வேடிக்கையை நீ கவனிக்கவேண்டும். இராமாயணத்தை உருவாக்கியவன் வால்மீகி என்ற வேடன். மகாபாரதத்தைத் தொகுத்தவன் வியாசன் என்ற மீனவப்பெண் வயிற்றில் பிறந்த கீழ்ச்சாதிக்காரன். ஆனால் இந்தச் சாதிகளெல்லாம் மட்டும் பார்ப்பனர்களுக்கு ஆகவே ஆகாது. இது எப்படி? இவ்வளவு அறிவாற்றல் கொண்டவர்களாகப் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனர்களால் தங்களுக்கென தங்கள் சாதியால் ஒரு இதிகாசத்தை உருவாக்க முடிந்ததா?


குறுந்தொகையில் ஒரு பா

குக்கூ என்றது கோழி அதனெதிர்/ துட்கென்றதென் தூஉ நெஞ்சம்/ தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்/ வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

இது ஒரு குறுந்தொகைச் செய்யுள். மருதத்திணையில்  சேர்க்கப் பட்டுள்ளது. காரணம், சங்கச் செய்யுள்களை வகைப்படுத்தும்போது முதற்பொருளுக்கு முதலிடம் தரவேண்டும் என்ற தொல்காப்பியக் கருத்திற்கேற்ப, வைகறை என்ற சொல்லைப் பார்த்தவுடனே மருதத்திணை எனக் கூறிவிட்டனர். பிறகு அதற்கு வலுச்சேர்க்க, ‘காதலரைப் பிரிக்கப் போகின்ற’ என்ற தொடர் வந்தவுடனே அவன் பரத்தை மாட்டுத்தான் போகப்போகிறான், அதனால் தலைவி வருந்துகிறாள் என்ற யூகத்தையும் சேர்த்து விட்டனர். ஆனால் நாம் விடியலில் தலைவன் பரத்தை  இல்லத்திலிருந்து திரும்பிவருவதாகத் தான் கண்டிருக்கிறோமே தவிரப் பிரிந்து போவதைக் கண்ட தில்லை.

ஆகவே, இப்பாடல் இரவுமுழுவதும் கணவனுடன் சேர்ந்திருந்த காதலி, “ஐயோ, வைகறை வந்து பிரிக்கிறதே” என்று கவலைப் படுவதைத்தான் குறிக்கிறது. எனவே இதைக் குறிஞ்சியில் சேர்த்திருக்க வேண்டும். அல்லது பிரிவின் நிமித்தம் என்று கொண்டால் பாலையிலாவது சேர்க்கலாம். மருதம் பற்றிய பிரிவில் வரக்கூடியதன்று.

சங்கக் கவிதைகளையும் நாம் வேறு அர்த்தங்களில் வாசிக்க நிறைய இடமிருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான் இந்தச் சான்றினைக் கூறினேன். பொதுவாக, என் மாணவர்களுக்கு, சங்க இலக்கியத்தைப் படிக்கும்போது ஏற்கெனவே அதில் குறிப்பிட்டுள்ள திணை-துறை விளக்கங்களைத் தவிர்த்துவிட்டு, முடியுமானால் எந்த உரையாசிரியர் குறுக்கீடும் இன்றிப் படியுங்கள் என்று சொல்வது என் வழக்கம். நமது மனநிலைக்கும் அறிவுக்கும் ஏற்பப் பொருள்கோள் அமைகிறது.


மாற்று யாப்பு

அருணகிரிநாதர் கந்தரனுபூதியின் முதல் செய்யுள் இது.

நெஞ்சக்கன கல்லுநெகிழ்ந் துருகத்

தஞ்சத்தருள் சண்முகனுக் கியல்சேர்

செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே

பஞ்சக்கர வானைபதம் பணிவாம்

ஒவ்வோரடியிலும் மூன்று சீர்கள் உள்ளன. ஆகவே இது வஞ்சித்துறை. ஆனால் இதையே

நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத்

தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்

செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே

பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்

இவ்வாறு பிரித்து நோக்கும்போது நான்கு சீர்கள் ஓரடியில் உள்ளன. இது கலிவிருத்தம் ஆகிறது.

அதே கந்தரனுபூதியின் இறுதிப் பாடலை நோக்குவோம்.  

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் அருள்வாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

சற்றும் சொற்பிரிப்புச் சிதைவின்றி இது அடிக்கு நான்கு சீர். கலிவிருத்தம்.  

உருவாயரு வாயுளதா யிலதாய்

மருவாய்மல ராய்மணியா யருள்வாய்

கருவாயுயி ராய்கதியாய் விதியாய்

குருவாய்வரு வாயருள் வாய்குகனே

என்று சீர்பிரித்தால் அடிக்கு மூன்று சீர். வஞ்சித்துறை.

கந்தரனுபூதி முழுவதுமே இப்படித்தான் அமைந்துள்ளது. இதில் எந்தவித யாப்பை நாம் கொள்ளப்போகிறோம் என்பது நமது மனத்தைப் பொறுத்தது. அருணகிரிநாதர் எவ்வகை யாப்பை மனத்திற்கொண்டு இயற்றினார் என்பதை நிச்சயிப்பது கடினம். ஏனெனில் முதற்பாவில் மும்மூன்று சீராகப் பிரிப்பது இயல்பாக அமைந்திருக்க, இறுதிப் பாவில் நந்நான்கு சீராகப் பிரிப்பது இயல்பாக உள்ளது.   இம்மாதிரியாக, பழங்கவிஞர்களின் ஒரே செய்யுளைப் பலவித யாப்புகளில் நோக்கலாம். பல தமிழ்ப் பாக்களை ஒருவகையாக அலகிட்டால் அறுசீர் யாப்பிலும், அவற்றையே வேறுவிதமாக அலகிட்டால் எண்சீர் யாப்பிலும் வருவதைக் காணலாம். இந்த ஜாலத்தை இருபதாம் நூற்றாண்டுக் கவிஞன் கண்ணதாசனின் பாக்களில் நாம் மிகுதியாகக் காண இயலும். பழங்காலத்தில் கம்பன் உள்ளிட்ட பல கவிஞர்களின் பாக்களில் இவ்விதத் தன்மையைக் காணலாம். ஆனால் அதை முதன்மையாக நோக்கமாகக் கொண்டு எவரும் எழுதவில்லை.


ஏரகத்துச் செட்டியார்

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை–மங்காத

சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்

ஏரகத்துச் செட்டியாரே.

இது ஒரு பழம்பாடல். மளிகைச் சரக்குகளின் பெயர்களை வைத்து, இந்த உடல் தேவையில்லை, நல்ல உள்ளம்தான் வேண்டும் என்று வேண்டும் பாடல் இது.

(ஏரகத்துச் செட்டியார்- முருகப் பெருமான், விளியாக அமைந்துள்ளது. வெங்காயம் = வெம்+காயம், வெம்மை மிக்க உடல். சுக்கானால்-சுக்குப் போல் இளைத்துவிட்டால். வெந்தயம்=வெந்த+அயம், அயச்செந்தூரம் போன்ற காயகல்ப மருந்துகள். வெம் + தவம் (வகரத்துக்கு பதில் யகரம் வந்தது என்றும் கொள்ளலாம், அப்படியானால் கடுமையான தவத்தால் ஆவதென்ன என்று பொருள்படும்) சீரகம் = சீர் + அகம், அகம் என்பது உள்ளம். பெரும் + காயம் = பெருமை மிக்க உடல். )