மகாபாரதம் – சில கேள்விகளும் பதில்களும்

கேள்வி 1 (கேட்பவர் விவேக்). தன்னுடைய காம இச்சைக்காக சாந்தனு தன மகனான பீஷ்மனை ப்ரஹ்மச்சரிய விரதம் மேற்கொள்ள செய்வது தவறில்லையா? Actually பீஷ்மனுக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்து குலத்தை தழைக்க செய்வது தானே ஒரு நல்ல தந்தைக்கு அழகு/ ஒழுக்கம் ?

பதில் (பூரணச்சந்திரன்). உன் முதல் கேள்வி மிகவும் ஏற்புடையது. இந்த நியாயமான கேள்விக்கு பதில் கிடையாது. சத்யவதி மாதிரி கீழ்ச்சாதிப் பெண்களை நினைத்தால் அந்தக்கால அரசர்கள் ஒரு நொடியில் தூக்கிச் சென்று அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ள முடியும். (இப்பொழுதே உ.பி.யில் அப்படித்தான் நடக்கிறது). இவனும் அப்படியே செய்திருக்கலாம். அப்படியிருக்கும்போது இது ரொம்ப மிகையாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இதற்காக ஒரு தேவதைக்கதை படைக்கப்படுகிறது.

அவள் சேதிநாட்டரசனின் மகள். மீன்வடிவ அப்சரஸ் ஒருத்தியை அவன் காதலித்ததால் மீன்நாற்றத்துடன் பிறந்து மச்சகந்தி எனப் பெயர் பெற்றவள். ஆனால் அவளுக்கு வியாசனை திருமணத்துக்குப் புறம்பான பந்தத்தில் கொடுத்த பராசர முனிவன் ஒரு யோசனை தூரம் அவள் உடலிலிருந்து நறுமணம் வீசுமாறு ‍செய்கிறான். அதனால் யோஜனகந்தி என்ற பெயர் பெறுகிறாள். பல காத தூரம் நறுமணம் வீசக்கூடிய உடலைப் பெற்ற ஒருத்தி சாதாரணப் பெண்ணாக இருக்கமுடியுமா? அதனால் அவள் (பின் வரப்போவதை அறியாமல்) “கண்டிஷன்” போடுகிறாள். (இங்குதான் காவியத்தின் அற்புதம் ஆரம்பிக்கிறது. a beautiful irony. எந்தப் பிள்ளைகளின் வம்சம் தழைப்பதற்காக பீஷ்மனை பிரம்மச்சாரியாக இருக்கச் சொல்கிறாளோ, அந்தப் பிள்ளைகள் அற்பாயுசில் மாண்டு போகிறார்கள். பீஷ்மனையும் பிரம்மச்சாரி ஆக்கிவிட்டதால் உதவாமல் போகிறான். திருமண உறவுக்கு முன் மற்றொருவனிடம் பெற்ற அவளது முதல்பிள்ளை வியாசன்தான் கெளரவ வம்சத்தை உருவாக்கவேண்டி வருகிறது.)
எப்படியிருப்பினும் சத்யவதி செய்ததும், சாந்தனு செய்ததும் தவறுகள்தான். ஆனால் அந்தத் தவறுகளில்தான் கதை தொடங்குகிறது. கதையின் தொடக்கத்தில் தவறுகளும், நம்பத்தகாத விஷயங்களும் இடம் பெறலாம் என்ற நோக்கில் இது ஏற்கப்படுகிறது.
இந்தத் தவறுகளின் விளைவுதான் (‍பெற்றவர்கள் செய்யும் தவறு பிள்ளைகளை பாதிக்கும் எனப் படுகிறது) வியாசனின் முதல் மகன் குருடனாகப் போவதும், இரண்டாவது மகன் தோல்நோய் (பாண்டு) பீடித்தவன் ஆவதும். மூன்றாவது மகன் அரச பரம்பரை அல்லாதவன் ஆவதும் (விதுரன்).

அந்தக் காலப் பழக்க வழக்கங்கள் பலவற்றை இது எடுத்துக் காட்டுகிறது. ஓர் அரசனுக்குப் பிள்ளை இல்‍லை என்றால் வேறு எவனிடமாவது அவன் பெண்டாட்டி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். அதாவது தாய்வழிச் சமூகமாக இருக்கிறது. ஆனால் அரச வம்சத்தைச் சேராதவர்கள் (விதுரன் போன்றோர்) அரசனாக முடியாது…

சுயம்வரத்தில் மணாளனைத் தேர்வு செய்வதும், பாஞ்சாலி ஐந்து பேரை மணப்பதும் தாய்வழிச் சமூக வழக்கங்கள்தான். ஆகவே பாரதம், தந்தை வழிச் சமூகம் முற்றிலும் உருவாகாத ஒரு காலத்தைக் காட்டுகிறது என்றுதான் தோன்றுகிறது. இதிலேயே உன் கேள்விக்கான பதிலும் அடங்கியிருக்கிறது. தாய்வழி கொண்ட அந்தக் காலத்தில் பெண்களுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது என்றால், சந்தனு தன் மனைவியை (எதிர்கால ராஜமாதாவை) எவ்வளவு ‍எச்சரிக்கையுடன் ‍தேர்ந்தெடுக்கவேண்டும்? அதுவும் ராஜவம்சத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே ஆளவேண்டும் என்பதால்? ஆகவே இரண்டாவது அதீத சக்தி பெற்ற ஓர் இளம் பெண் கிடைக்கிறாள் என்னும்போது முதல் மனைவி பெற்ற மகனை பலிகொடுத்துவிட்டான் சாந்தனு.

ஒரு வேடிக்கையை நீ கவனிக்கவேண்டும். இராமாயணத்தை உருவாக்கியவன் வால்மீகி என்ற வேடன். மகாபாரதத்தைத் தொகுத்தவன் வியாசன் என்ற மீனவப்பெண் வயிற்றில் பிறந்த கீழ்ச்சாதிக்காரன். ஆனால் இந்தச் சாதிகளெல்லாம் மட்டும் பார்ப்பனர்களுக்கு ஆகவே ஆகாது. இது எப்படி? இவ்வளவு அறிவாற்றல் கொண்டவர்களாகப் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனர்களால் தங்களுக்கென தங்கள் சாதியால் ஒரு இதிகாசத்தை உருவாக்க முடிந்ததா?

இலக்கியம்