கல்வி-கேள்விகள். கேள்வி 9

(9) மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்? கல்வி முறையினால் இன்றைய மாணவர்கள் படைப்புத் திறன் குன்றியவர்களாகவும், குழந்தைகளின் விளையாட்டு, சிந்தனை, மனித உறவுகள் என எதற்குமே அவகாசம் தராத வகையில் பளுவான பாடத்திட்டம் அவசியமா?

மனிதனின் ஒருங்கிசைந்த ஆளுமை வளர்ச்சியை உருவாக்குவதே கல்வி. முழுமையான மனிதனை உருவாக்குவதே கல்வி. தனது பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், நல்ல சமூக மனிதன் ஆகவும் கற்றுக் கொடுப்பது கல்வி. பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்து வாழ வழிசெய்வது கல்வி. அது இல்லாமற் போனதால்தான் இன்று போட்டித் தேர்வுகளில் தோல்வியுறுபவர்கள் தற்கொலை செய்துகொள்வதைக் காண்கிறோம்.

மொழியைக் கருவியாக நோக்குகின்ற பார்வை இப்போது பெருகிவிட்டது. அதனால் மொழிப்பாடங்கள் பயனற்றவை என்ற நோக்கு ஏற்பட்டுவிட்டது. உண்மையில் மொழியின் வாயிலாகவே மனிதன் சிந்திக்கக் கற்றுக் கொள்கிறான், பண்பாட்டை உணர்கிறான், அறநெறி அவனை அறியாமல் அவன் உள்ளத்தில் குடிகொள்கிறது. எனவே சிறு வயதில் மொழிப்பாடம் மிகவும் அவசியம். அதற்குக் கூடுதலான இடம் தரப்பட வேண்டும்.

வேலை ஒன்றை அடைவது, பணம் சம்பாதிப்பது – இதற்கு மட்டுமே கல்வி என்று நமது நோக்கம் குறுகிப் போனதால், ஆளுமையை வளர்ப்பது கல்வி என்பதை மறந்தோம். ஆளுமை சரியான முறையில் வளர, சிறுவயதிலிருந்தே தக்க விளையாட்டு அவசியம். (போட்டிகள் முக்கியமற்றவை). போட்டித் தேர்வுகளும் தேவையற்றவையே. நல்ல கல்வி முறை மனப்பாடத்தை ஊக்குவிக்காது, சிந்தனைத் திறனையும் படைப்பூக்கத்தையும் தூண்டுவதாக மட்டுமே இருக்கும்.
இன்றைய பார்வையாதிக்கத் தொடர்புமுறை, குழந்தைகளை எப்போதும் கைப் பேசி, இண்டர்நெட், கணினி என்று அலைபவர்களாக, அவற்றின் முன் மணிக் கணக்காக உட்காருபவர்களாக ஆக்கிவிட்டன. இதனால் மனித உறவு குன்றிப் போகிறது, சிதைந்து போகிறது. வணிக நோக்கு மட்டுமே வளர்கிறது. இன்றைய வணிகமுறை வாழ்க்கையில், உலகமயமாக்கலில், வளரும் நாடுகள் பொருளாதார ரீதியாக நசுங்குகின்றன. தேவையற்ற பொருள்கள் திணிக்கப் படுகின்றன. நமது பண்பாட்டிற்கேற்ப நாம் வாழ்ந்து வந்த முறையும் அதற்கு நாம் பயன்படுத்திய தொழில், பண்பாட்டு முறைகளும் அதற்கேற்ப இருந்த கல்விமுறையும் மாறிப் போயுள்ளன.


கல்வி-கேள்விகள். கேள்வி 8

(8) இப்போதையப் பாடத்திட்டம் நமது மரபு சார்ந்த பெருமைகளைத் தெரியப்படுத்தாமல் அந்நிய வரலாறுகளை அதிகம் வெளிச்சம் போடுவது ஏன்?
நாம் இன்னும் அடிமைகளாக இருப்பதுதான் காரணம். வாஸ்கோட காமா வந்து இந்தியாவைக் “கண்டுபிடித்தார்” என்றுதானே கற்பிக்கிறோம்? அப்படியானால் அதற்கு முன்பு இந்தியா இல்லையா? மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிந்துசமவெளிக் காலத்திலிருந்து இங்கு வாழ்ந்துவந்த நம் மக்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் கல்வியும் பெருமையும் கலாச்சாரமும் என்ன ஆயிற்று? அஜந்தா எல்லோராக்களும் ராஜராஜன் கோயில்களும் நமது கட்டடக்
கலையை உலகிற்கு அறிவிக்க வில்லையா?

சுருக்கமாகச் சொன்னால், முதலில் வடநாட்டினர் ஆங்கிலேயரின் பெருமையைத் தலையில் சுமப்பவர்களாக ஆனார்கள். இதற்கு நல்ல உதாரணம் ராஜாராம் மோகன் ராய். தெற்கிலுள்ள நாம் வடநாட்டினரின் பெருமையையும் சேர்த்துச் சுமப்பவர்களாக ஆக்கப்பட்டோம். ஆனால் சற்றே (இந்திய) மன்னர்களின் ஆட்சிப் படங்களைக் கூர்ந்து பாருங்கள். அசோகனின் பேரரசு, குப்தர் பேரரசு என்று எந்த வடநாட்டுப் பேரரசாவது தமிழ்நாட்டை உள்ளடக்கி இருக்கிறதா என்று? முதன்முதலில் தமிழ்நாட்டைத் தந்திரமாகக் கைப்பற்றியவரும் தென்னகம் என்ற கற்பனை ஒருமையின் பகுதியாக ஆக்கியவரும் தெலுங்கர்களே. பிறகு ஆங்கிலேயர்கள்.

1310ஆம் ஆண்டு மாலிக்காபூரின் படையெடுப்பு நிகழ்ந்ததிலிருந்து நாம் அடிமைப் பட்டுவிட்டோம். எழுநூறு ஆண்டுகள் அடிமை வாழ்வு நம்மை அடிமை மனப்பான்மையில் ஆழத் தள்ளிவிட்டது. இன்றும் உண்மையான ஜனநாயகம் நம்மிடையில் இல்லை, நிலப்பிரபுத்துவ மேன்மைகளே உள்ளன. வெகுமக்கள் அடிமைகளாகத்தான் வாழ்கிறார்கள். கல்விதான் இவர்களை உண்மையில் அடிமைத் தளையிலிருந்து மீட்டிருக்க வேண்டும்.

நம்மை அடிமைகளாக்கிய கிளைவ் பிரபு இப்படிச் செய்தார், மெக்காலே பிரபு இன்னதைச் செய்தார் என்று வரலாறு எழுதும் நாம், அக்பர் தீன் இலாஹி உருவாக்கினார், ஔரங்கசீப் செருப்புத் தைத்தார் என்று முஸ்லிம்களையும் பாராட்டும் நாம், நமது சொந்த மன்னர்களையே கரிகாலன் கல்லணை கட்டினான் இராசராசன் தஞ்சையில் பெருவுடையார் கோயிலை அமைத்தான் என்றெல்லாம் ஒருமையில் கேவலப்படுத்தி எழுதுகிறோம்.

நம் அரசியல் தலைவர்களை மலர் கிரீடம், வாள் தந்து போற்றுவதும், அரியணை ஏறிவிட்டார், கோட்டையைப் பிடித்துவிட்டார் என்பதும், நம் பணத்தில் கோடிக்கணக்காகச் சம்பாதிக்கும் நடிகர்கள் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதும், நீதிபதிகளையும் நீதி ‘அரசர்கள்’ என்பதும், மேடையில் ஏறிவிட்டால் எவனையும் இவனைப் போல உண்டா என்று புகழ்வதும் நம்மை அறியாமல் நமக்குள் குடி கொண்டுள்ள நிலவுடைமைக்கால அடிமை மனப்பான்மையைத்தான் காட்டுகின்றன.

உண்மையில் வரலாற்றுப்பாடம், படிநிலையில் அமைய வேண்டும். நமது வட்டார வரலாறு சிறுவயதிலும், தமிழக வரலாறு அடுத்த நிலையிலும், இந்திய வரலாறு அதற்கும் அடுத்த நிலையிலும், உலக வரலாறு, அந்நிய வரலாறுகள் இறுதி நிலையிலும் கற்பிக்கப்பட வேண்டும். (புவியியலும் அதுபோலத்தான். முதலில் நம் வட்டாரப் புவியியல், பிறகு தமிழகப் புவியியல், பிறகு அடுத்த மாநிலங்களின் புவியியல், இறுதியாக இந்திய, உலகப் புவியியல்.)

அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபடுங்கள். சங்க இலக்கியத்தையும் திருக்குறளையும்விட எந்த நூலும் உலக அறிவையும் நடத்தை முறையையும் புகட்டிவிடவில்லை. சங்க காலத்தில் இருந்த பெண் புலவர்களின் எண்ணிக்கையை அன்புகூர்ந்து அக்காலத்தில் பிறமொழிகளில் இருந்த பெண் புலவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள், கல்வியில் நாம் எவ்வளவு உயர்வு பெற்றிருந்தோம் என்பது தெரியும். “உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர்…” என்ற புறப்பாடலைப் படித்துப் பாருங்கள், எவ்விதப் பண்பாட்டில் நாம் வாழ்ந்தோம் என்பது தெரியும்.

நமது அடிமை மனப்பான்மையாலும் மூட நம்பிக்கையாலும் நமது பல்துறை நூல்களையும் தழலுக்கும் நீருக்கும் கொடுத்தோம். நமது பழங்காலப் பண்பாட்டையும் கலைகளையும் நோக்கும் எவரும் வியப்படையாமல் இருக்க மாட்டார்கள். அப்படியிருக்க, அடிமை நோக்குடன் பாடப்புத்தகங்களை உருவாக்குவது எதற்காக?


கல்வி-கேள்விகள். கேள்வி 7

(7) எல்லைகளற்ற கல்வி வெறும் பொருளீட்டும் கருவியாக, கடைச் சரக்காகக் குறுகிப் போனது எவ்விதம்?

“கல்வி கரையில, கற்பவர் நாள் சில”, “ஆர்ட் ஈஸ் லாங், லைஃப் ஈஸ் ஷார்ட்” என்று பல மொழிகளிலும் பழமொழிகள் உள்ளன. அதன் எல்லையற்ற தன்மையே அது ஏதோ ஒரு துறைக்கு மட்டும் உரியதல்ல என்பதைக் காட்டுகிறது. அதாவது இலக்கியக் கல்வி மட்டுமோ, வேதக் கல்வி மட்டுமோ, வணிகக் கல்வி மட்டுமோ கல்வி அல்ல. இன்று இப்படிக் குறுக்கி நோக்கும் பார்வை ஏற்பட்டுள்ளது. நன்கு விவசாயம் தெரிந்தவனின் பயிர்வளர்க்கும் கல்வியை (உண்மையில் அதுதான் நமக்கு உணவளிக்கிறது) எவரும் பாராட்டுவதில்லை, மாறாகப் படிக்காதவன் என்று ஏளனம் செய்கிறோம்.

அதாவது வெறும் எழுத்தறிவை, மனப்பாடத்தை மட்டுமே கல்வி என்று குறுக்கிவிட்டோம். ஒவ்வொரு தொழிலும் ஒரு துறைக் கல்விதான்.
சமையலைக் கலை என்று பாராட்டும் நாம் அக்கலையைக் கற்ற பெண்களைக் கற்றவர்களாக நோக்கியிருக்கிறோமா? அதற்கும் கேடரிங் டெக்னாலஜி படித்து தலையில் முழநீளம் தொப்பியை வைத்துக் கொண்டுவந்தால் வியப்பு ஏற்படும். கேட்ட தொகையைத் தருவோம். அதையே நம் ஊர் திருமணச் சமையல்காரர் வாசனையிலேயே அறிந்து “ஒரு பிடி உப்புப் போடு” என்று சொல்லும்போது அதைப் பாராட்டுவதில்லை. இந்தப் பார்வைதான் எல்லைகளற்ற கல்வியை வெறும் பொருளீட்டும் கருவியாக்கிவிட்டது. அர்த்தமின்றி நாலு எழுத்துகளைப் படித்துவிட்டு கோட்டும் சூட்டும் அணிந்து வருபவன் படித்தவன், அவனுக்கே உணவளிக்கும், தக்க பொருள்களை அளிக்கும் தொழிலாளி படிக்காதவன்.
அதிகார வர்க்கமும்- கலெக்டர், தாசில்தார், டிஐஜி… என வரும் அரசு அலுவலர்களும் வீணான பந்தா காட்டி, தாங்கள் மக்களின் சேவகர்கள் என்பதை மறந்து, இந்தப் பார்வையை ஆழமாக வேரூன்றச் செய்துவிட்டனர். தாசில்தார் பின்னால் போகும் ஒரு டவாலி காட்டும் பந்தா எவ்வளவு?

அடிப்படை எழுத்தறிவு யாவருக்கும் தேவைதான். அதுவே முழுத்தேவை அல்ல. ஓரளவு செய்தித்தாள் படிக்கும் அறிவு பெற்றதும் ஒரு பையன் “நான் பாத்திரம் செய்யும் கல்வியைக் கற்கிறேன்” என்றால் விடுவோமா? அதற்கு பதிலாக நீ பி.காம் படி, பி.எஸ்சி படி என்று வற்புறுத்துவோம். படித்துவிட்டு அவன் வேலையின்றித் திரிந்து சமூகத்துக்குப் பயனற்றவனாகவும் பிறகு எதிரியாகவும் கூட மாறலாம். மனநிலை சிதைந்து வாழ்க்கை கெடலாம். அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

கல்வி பரந்துபட்டது, தொழிற் கல்வியும் கல்விதான், எதைக் கற்றாலும், எத்தொழிலைச் செய்தாலும் வாழ்க்கையை நன்னெறியில் நடத்துவது ஒன்றே குறிக்கோள் என்பதை மறந்து விட்டோம். இளமையில் செருப்புத் தைத்த ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனார் என்றால் பாராட்டும் நாம், அந்தக் கதையைப் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரும் நாம், செருப்புச் செய்யும் தொழிலில் நம் பிள்ளைகளை இறக்கி விடுவோமா? அதற்கு சாதி, குலத்தொழில், தொழிலில் உயர்வுதாழ்வு நோக்குதல், என எத்தனையோ குறுக்கீடுகள். சக்கிலியன்தானே செருப்புத் தைக்கவேண்டும், நம் பையனா தைப்பது என்று சாதி பார்ப்போம்.
காந்தியின் அடிப்படைக் கல்வி, தாகூரின் கல்விமுறை, ராஜாஜியின் தொழிற் கல்வி எல்லாம் சிறந்தவையே. ஆனால் ஒரு தொழிலுக்கு ஒரு குலம்/சாதி என்று குலக்கல்வியாகச் சுருக்கிவிட்டதுதான் ராஜாஜிக்கு எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும் கழிவுகளை அகற்ற, சுமக்க ஒரு சாதி, கடைத்தெருவுக்கு ஒரு சாதி என்று சாதிகளை வகுத்தமை நம்மை எல்லைக்குட்படுத்திவிட்டது.

இவற்றை எல்லாம் மீறி சாதிவேறுபாடு நோக்காத ஒரு சமூகம் அமையும்போது தான் கல்வியின் உண்மையான பெருமையும் தரமும் நமக்குத் தெரியும். வெறும் மந்திரங்களை ஒப்புவிப்பதோ, பிஏ பிஎஸ்சி பிஇ எம்பிபிஎஸ் என்று பட்டம் வாங்குவதோ மட்டும் கல்வியல்ல என்பது புரியும். உண்மையில் இன்றுள்ள மருத்துவர்களையே கேட்டுப்பாருங்கள், அவர்களது பாட்டிகளுக்குத் தெரிந்த கைவைத்தியம் எத்தனையோ நோய்களை எளிதாகக் குணமாக்கியிருக்கிறது என்று அவர்களே சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிறுநோயை குணப்படுத்த அவர்களே ஆயிரக்கணக்கில் கட்டணம் வாங்குவார்கள்.
அப்படியானால் எங்கிருக்கிறது கல்வி என்று மனத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். சாதி வேறுபாடு பார்க்காதீர்கள். நம் குழந்தைகளுக்கு எந்தத் தொழிலில் ஆர்வம் இருக்கிறதோ அந்தக் கல்வியை அளிப்பது நமது கடமை. அதன் வழியாகத்தான் அவர்கள் தங்கள் ஆளுமைகளை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் முழுமையை அவர்கள் அடைய வேண்டும்.


கல்வி-கேள்விகள். கேள்வி 6

(6) நம் சமுதாயத்தில் இன்று கல்விக்குத் தவறான வகையில் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?

ஆம். ஒருவகையில்.
கீழ்த்தட்டு மக்களுக்குத் தேர்ந்தெடுத்தல் (சாய்ஸ்) என்பது இல்லை. மிகக் கீழ்த்தட்டு மக்களுக்குப் படிப்பு என்பதைவிட சிறுவயதில் வேலைக்குச் செல்வதே (ஓட்டல்களில் மேசை துடைப்பது, தட்டுக்கழுவுவது, கடைகளுக்கும் அலுவலகங்களுக்கும் டீ வாங்கி வருவது…, கிராமப் புறமாக இருந்தால் மாடுமேய்ப்பது, சுமை தூக்குவது…) முக்கியம். இந்த எண்ணிக்கையினர்தான் நமது சமூகத்தில் (ஏறத்தாழ 20 சதவீதம்) உள்ளனர். இவர்களைப் பற்றி நாம் (அரசு உள்பட) என்றும் கவலைப்பட்டதே இல்லை. அவர்கள் முடிந்தவரை, நாலாவதோ, ஐந்தாவதோ படித்துவிட்டு வேலையில் ஈடுபடுகிறார்கள். (இங்கு கேட்கப்படும் கேள்விகள்கூட நடுத்தர வர்க்கத்தினர் பார்வையில் உள்ளனவே தவிர, கீழ்த்தட்டு மக்களின் பார்வையில் அறவே இல்லை.) இன்னும் சிறார்-உழைப்பு (சைல்ட் லேபர்) நம் நாட்டில் நீக்கப்படவில்லை.
பெரும்பாலும் அரசினர் பள்ளிகளில் படிக்கும் பிற கீழ்த்தட்டு மக்களுடைய குழந்தைகள் கல்லூரிக்குச் செல்லும்போது எந்தப் படிப்பை கல்வி நிர்வாகத்தினர் தருகின்றார்களோ (அது பி.ஏ. பொருளாதாரமோ, இலக்கியமோ, பி.எஸ்சி. தாவரவியலோ எதுவாயினும்) அதைப் படித்தாக வேண்டும். இதையெல்லாம் தாண்டி இலட்சிய நோக்குடன் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்பது மிகக் குறைந்த சிலரால்தான் முடியலாம்.
மிகப் பெரிய பணக்காரர்கள் தங்கள் குழந்தைகளை சர்ச் பார்க் முதலிய எவ்விதப் பள்ளிகளிலும் படிக்கவைக்க முடியும். அவர்களுக்குக் கல்வி என்பது பொழுதுபோக்கு. தான் எதைப் படிக்கவேண்டும் என்பதைவிட அவர்களுக்கு அடுத்து தங்கள் வணிகத்தை அல்லது தொழிலை கவனித்துக் கொள்வதற்குத் தேவையான அடிப்படைக் கல்வியும் ஆங்கிலப் பேச்சும் தோரணையும் இருந்தால் போதுமானது.
நடுத்தர மக்களுக்குத்தான் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தால் வேலைகிடைக்கும் என்ற பெரிய கேள்வி முன்நிற்கிறது. அதற்குப் படிப்பு மட்டும் போதாது, ஆங்கிலப் பேச்சு நன்றாக வர வேண்டும், மேல்தட்டு மக்களுடைய தைரியமும் தோரணையும் வரவேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதற்காக எவ்வளவு செலவு செய்தாயினும் சிறந்த பள்ளி ஒன்றில் (வேலம்மாள் குழுமத்தின் பள்ளிகள் முதலியன) முதலிலேயே சேர்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
“தவறான முக்கியத்துவம்” தருபவர்கள் இவர்கள்தான்!
சான்றாக, 2000ங்களின் தொடக்கத்தில் கணினிப்படிப்பு முடித்தவுடன் மிக அதிக ஊதியம் கிடைக்கிறது என்ற நினைப்பில் எல்லாரும் தங்கள் பிள்ளைகளை அதில் சேர்த்தார்கள். அதற்குத் தக, பொறியியல் கல்லூரிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. சந்தர்ப்பவாத முதலாளிகளும் அரசியல்வாதிகளும் நிறையக் காசு பார்த்தார்கள். இப்போது கணினிப் பொறியியல் படித்தால் வேலை இல்லை என்றபோது அந்தக் கல்லூரிகள் மூடப்படுகின்றன. அதேபோல் ஒருசமயம் எம்.பி.ஏ. கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, இப்போது அது குறைந்துவிட்டது. இப்போது பி.காம் படிப்பு படித்தால் வாய்ப்பிருக்கிறது என்று எல்லாரும் அதன்பின் ஓடுகிறார்கள். ஆக, நடுத்தர வர்க்கத்தின் தவறான மனப்பாங்குதான் கல்வியின் அதீத முக்கியத்துவங்களையும் நிர்ணயிக்கிறது. ஆங்கிலவழிக் கல்விக்காகத் தாய்மொழி வழிக் கல்வியை அறவே ஒழித்தவர்களும் இவர்களே.
நடுத்தர வர்க்கத்தின் மனப்பான்மைதான் மாறவேண்டும். முதலில் எதைப் படித்தாலும் நாம் நமது சுய உழைப்பினாலும் தைரியத்தினாலும் முயற்சியாலும் வாழ்க்கை நடத்த முடியும் என்ற தைரியத்தைப் பிள்ளைகளுக்கு நமது நடுத்தர வர்க்கத்தினர் உருவாக்குவது இல்லை. இத்தனைக்கும் அயல்நாடுகளில் மனப்பாடமற்ற செயல்வழிக் கல்வி எவ்விதம் அளிக்கப் படுகிறது என்பதை அறிந்தவர்கள் அவர்கள்தான்.


கல்வி-கேள்விகள். கேள்வி 5

வருங்கால சந்ததியை உருவாக்கும் ஆசிரியப் பணி, தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்படாமல் பணமும், அரசியலும் விளையாட வேண்டியது அவசியம் தானா?

பணமும் அரசியலும் கல்வித் துறையில் விளையாடுவது தவறென்று எல்லாருக்குமேதான் தெரியும்.
எப்போது உலகமயமாக்கல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் கொள்கைகள் புகுந்தனவோ, அப்போதே கல்வியையும் ஒரு வியாபாரமாகக் கருதித் தனியார் முதலாளிகளிடம் விட்டாயிற்று. ரவுடிகள் கொள்ளைக்காரர்கள் எல்லாம் கல்வித் தந்தைகள், கல்வி மாமாக்கள் ஆனார்கள்.
அவர்கள் போட்ட முதலை எடுத்தாக வேண்டும். அதற்கு இரண்டு வழிகள்தான்.
ஒன்று மாணவர்களிடம் அதிகப் பணம் வாங்கிக் கொள்ளையடிக்கலாம். அதனால்தான் நர்சரி, எல்கேஜி வகுப்புகளுக்கும் ஒரு லட்சம் முதல் மூன்று நான்கு லட்ச ரூபாய் கூடத் தலைத்தொகை (கேபிடேஷன் ஃபீ) வசூலிக்க முடிகிறது. எல்லா வகுப்புகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணத்தை இஷ்டப்படி வகுத்து, அதிகப்படுத்திக் கொண்டே போகமுடிகிறது. இதை அரசாங்கம்தான் கேட்கவேண்டும். கேட்குமா?
இரண்டு, ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் வேலைக்கு வைக்காமல், மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப் என்றும் காண்டிராக்ட் அலுவலர்கள் என்றும் வேலைக்கு வைத்தால் பலவித இலாபங்கள்.
எல்லாரிடமும் வேலை தரும்போது குறிப்பிட்ட தொகை (பள்ளியாக இருந்தால் ஐந்து லட்சம் முதல், கல்லூரியாக இருந்தால் பத்து லட்சத்துக்கு மேல்) லஞ்சம் வாங்கிக் கொள்ளலாம். அதைத் திருப்பித் தரவேண்டியதில்லை.
அடுத்து, தற்காலிக அடிப்படையில் அல்லது ஒப்பந்த அடிப்படையில் வேலை தரப்பட்டிருப்பதால், அவர்கள் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு கேட்க முடியாது. ஸ்டிரைக் செய்யவும் முடியாது.
மூன்று, தனக்கு வேண்டியவர்களுக்கு வேலை அளிக்கலாம்.
நான்கு, வேலைக்கு நியமிக்கப் பட்டவர்கள் ஏதாவது முரண்டுபிடித்தால், உடனே வேலையைவிட்டு நீக்கிவிடலாம்.
மேலும் அவர்களை நிரந்தர அச்சத்தில் எப்போதும் வைத்திருக்க முடியும்.
தனியார் மயமாக்கல்தான் இதற்கு முக்கியக் காரணம். அரசாங்கத்தின் கொள்கையே மன்மோகன் சிங் காலமுதலாகத் தனியார் மயமாக்க லாகத் தானே இருக்கிறது?
கல்வித்துறை தனியார் மயம் ஆக்கப்படக் கூடாது என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது விதிகள் கடுமையாக வகுக்கப்பட்டு மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களிடம்தான் அரசாங்கம் தேர்தல் வரும்போது கைநீட்டும். இவற்றை நீக்க நீங்கள் வழிசொல்வீர்களா?


கல்வி-கேள்விகள். கேள்வி 4

(4) கல்வி என்று வரும்போது பெற்றோர் தம் குழந்தைகளின் மீது இத்தனை இரக்கமற்றவர்களாகவும், போட்டி மனப்பான்மையைத் தூண்டி, சுயநலத்தை வளர்ப்பவர்களாகவும் இருப்பது ஏன்?

வேலை வாய்ப்பின்மைதான் காரணம். நான் பள்ளியில் (1960களின் தொடக்கம்) படித்த காலத்தில் நம் நாட்டின் மக்கள் தொகை 40 கோடியாக இருந்தது. இப்போது 130 கோடியைத் தாண்டிவிட்டது. (ஒரே தலைமுறையில்!) அதற்குத் தக வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டிருக்கின்றனவா?
பொருளாதார ஒத்துழைப்பு-மேம்பாட்டு அமைப்பு இந்தியா குறித்த பொருளாதார சர்வேயை நடத்தியது. இந்திய இளைஞர்களில் 30 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் (சுமார் 12 கோடிப் பேர்) எந்த வேலையிலும் இல்லை, வேலைக்கான கல்வியும் பயிலவில்லை, எந்தத் தொழிற்பயிற்சியிலும் ஈடுபடவில்லை. மோசமான பொதுநல நிலை, அதிகரித்துவரும் சமமின்மை, புதிய திறன்களைத் தேடும் பொருளாதாரம், புதுப்புதுப் பொருள்கள் மீதான கனவுகளைக் கொண்ட நுகர்வோர் கலாச்சாரம், தடையில்லாத வன்முறைகள், லட்சக்கணக்கான போராட்டங்களைக் கொண்ட பாரம்பரிய சமூகம் ஆகியவை சேர்ந்து வேலைவாய்ப்புக்கு உலை வைக்கின்றன.
இன்று, இந்தியாவின் மக்கள்தொகையில் 42 விழுக்காடு இளைஞர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் இளைஞர்களின் வீக்கம் ஏற்படுவது நன்கு தெரிகிறது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரி வயது 29ஆக இருக்கும். இதன் மூலம் உலகின் இளமையான நாடாக இந்தியா உருவெடுக்கும். மேலும் மக்கள்தொகையில் 64 விழுக்காட்டினர் பணிபுரிவதற்கான வயது வரம்பிற்குள் இருப்பார்கள். இவர்கள் வேலைவாய்ப்புக்கு என்ன வழி?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒவ்வோர் ஆண்டும் 1 கோடி முதல் 1.2 கோடி வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும். ஆனால், 2012 முதல் 2016 வரை வெறும் 50 லட்சம் வேலைவாய்ப்புகளையே இந்தியா உருவாக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் 50 கோடிப் பேருக்கு பயிற்சியளிப்பதாகக் கூறி, மூன்றாண்டுகளின் இறுதியில் 2 கோடிப் பேருக்கு மட்டுமே பயிற்சியளிக்க முடியும் என்று பின்னர் கூறி அரசு இத்திட்டத்தைக் கைவிட்டது. இச்சமயத்தில் பெற்றோர் வேறு என்ன செய்ய முடியும்? தாங்கள் நினைக்கும் கல்வியில் தங்கள் மகன்/மகள் படித்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அப்படியும் மதவாதம், பாசிசம், குற்றங்கள், போர், போதை மருந்துகள், சமூக வலைத் தளங்கள் போன்றவற்றுக்கு நமது தலைமுறை மாணவர்கள் இரையாகிறார்கள். மாறி வரும் தொழிலாளர் சந்தைக்கு ஏற்பக் கல்வித் தரத்தையும், தொழிற்பயிற்சிகளையும் மாற்றியமைப்பது ஒன்றே வழி. மறுபடியும் தவறு அரசாங்கத்தின் பக்கமே.


கல்வி-கேள்விகள். கேள்வி 3

(3)   கடலென கற்றறிந்து தெளிதலின் இன்பம் எப்படி, எதனால் மாயமாயிற்று? அறிவும் வேட்கையும் இருந்தாலும் நல்ல கல்வி என்பது எல்லோருக்கும் எட்டாக் கனியாக இருப்பதாலா?

இதில் உள்ள இருபகுதிகளில் முதல் பகுதிக்கு விடை:
“கடலெனக் கற்றறிந்து தெளிதலின் இன்பம்” என்பதெல்லாம் வெகுமக்களுக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கும் வெற்று வார்த்தைகள். இவை படித்த ஒருசிலரின் பிதற்றல்கள். நிலவுடைமைக் காலத்தில்-விஜயநகர ஆட்சி வந்து நமது ஊராட்சி முறையை அழிக்கும்வரை-பெரும்பான்மை மக்கள் தங்கள் தங்கள் குலத்தொழில்களைச் சிறப்பாகச் செய்து ஓரளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர். பிழைப்புக்கு மேற்பட்ட ஒரு தேவையை (இதை ஆன்மிகநாட்டம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) அவர்கள் உணர்ந்தபோது கற்றோரின் உரைகளை, சொற்பொழிவுகளைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். அதனால்தான் வள்ளுவர் கல்விக்கு அடுத்தபடி கேள்வி என்ற அதிகாரத்தை வைக்கிறார். பெரும்பான்மை மக்களுக்குப் பழங்காலத்தில் “கேள்வி”தான் வழி.
எந்தக் காலத்திலும் கற்றறிந்து தெளியும் இன்பம்—இது பெரும்பாலும் இலக்கியக் கல்வியைத்தான் குறிக்கிறது—ஒரு சிலருக்கே உரியதாக இருந்தது. கல்வியில் உண்மையான நாட்டம் கொண்ட, இலட்சிய பூர்வமான சிலர், வயிற்றுப் பிழைப்பை மீறியும் இவ்வித முயற்சியில் ஈடுபட்டனர் என்பது உண்மை.

மிகப் பலருக்குக் கல்வி என்பது எந்தக் காலத்திலும் பிழைப்புக்கானதோர் வழி. அவ்வளவுதான். இன்றும் அப்படித்தான். அதனால்தான் இன்று மாணவர்களின் பெற்றோர்கள் தாங்கள் எந்தக் கல்வியினால் வேலை வாய்ப்பு கிடைக்குமோ அதைத் தேடி அலைகின்றனர், அதை அடையும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சிபிஎஸ்இ கல்விமுறை, பன்னாட்டுக் கல்விமுறை போன்றவற்றைக் கையாளும் பள்ளிகளில் இளம் வயதிலேயே நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சக்திக்குமீறியும் இலட்சக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளைச் சேர்க்கின்றனர்.
இதில் இரண்டாவது கேள்விக்கு விடை:
“அறிவும் வேட்கையும் இருந்தாலும் நல்ல கல்வி என்பது எல்லோருக்கும் எட்டாக் கனியாக இருப்பதாலா?“ என்பது நீங்களே தருகின்ற சுவையான விடைதான். ஆம். நல்ல கல்வி என்பது எல்லாருக்கும் எட்டாக் கனியாகத்தான் நம் நாட்டில் இருக்கிறது. ஆனால் நல்ல கல்விக்கான அறிவும் வேட்கையும் சிறு வயதில் நம் நாட்டிலோ (ஏன் எந்த நாட்டிலும்தான்) தூண்டப்படுகின்றனவா? இருபதாம் நூற்றாண்டில் உலகளாவிய பெருமுதலாளித்துவம் ஏற்படத் தொடங்கிவிட்ட பிறகு கல்வி என்பது முழுமையான ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. அந்த வியாபாரத்தில் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர் ஈடுபடுத்தும்போது அறிவும் வேட்கையும் எங்கிருந்து வருகின்றன? வர முடியும்? அறிவும் வேட்கையும் சிலபேருக்கு இயல்பாக இருக்கலாம். பொதுவாக அவை பிள்ளைகளுக்குப் பள்ளிகளில் தூண்டப்படத்தான் வேண்டும். மிகப் பெரும்பான்மையர்க்கு வாழ்க்கைப் பிழைப்புக்கான ஒருவழிதான் கல்வி.


கல்வி-கேள்விகள். கேள்வி 2

(2) கேள்வி கேட்காது சொன்னதைச் செய்யும் மனோபாவத்தை வளர்க்கும் மெக்காலே கல்வித் திட்டத்தை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் முற்றிலுமாக மாற்றாதது ஏன்?

இதற்கு நமது கல்வியாளர்களின் அடிமை மனோபாவம்தான் காரணம். மெக்காலே இவ்வாறு கூறினார்—”நம் அளவுபட்ட வருவாயில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகைக்கும் கல்வி தர முயற்சி செய்வது இயலாது என்று உணர்கிறேன். இப்போது நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் நமக்கும் நாம் ஆளுகின்ற மில்லியன் கணக்கான அவர்களுக்கும் இடையில் விளக்கமளிப்பவர்களாக இருக்கக்கூடிய ஒரு வகுப்பை உருவாக்க முயல வேண்டும். அவர்கள் இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியர்களாக, ஆனால் ரசனைகளில், கருத்துகளில், ஒழுக்கங்களில், அறிவில் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள்.”
எந்த ஒரு அடிமைப்பட்ட சமூகத்திலும் நடைமுறையில் உள்ள படித்த, சிறுபான்மைப் பகுதியினர் தங்கள், மற்றும் தங்கள் பண்பாட்டின் தகுதியின்மையை காலப்போக்கில் ஏற்றுக் கொள்வார்கள். தங்கள் பண்பாடும் நாகரிகமும் தங்களுக்கு அளித்த எல்லாவற்றையும் பிறர் கொள்ளையடிக்க விடுவார்கள். தங்களை ஆள்பவர்களின் (அரசியல் சுதந்திரம் அடைந்தாலும் தங்களை ஆண்டவர்களின்) நிலையற்ற மோஸ்தர்களுக்கும் சிந்தனைக்கும் ஆட்பட்டுத் தங்களைப் பணிவாக மறுவார்ப்புச் செய்துகொள்வார்கள். பிறகு தங்களைப் போலவே பெரும்பான்மையான பிறரையும் ஆக்க முயற்சி செய்வார்கள். அதனால்தான் சுதந்திரமடைந்து எழுபது ஆண்டாகியும் நாம் ஆங்கிலக் கல்வியிலிருந்து மாறவில்லை.  
மேற்கத்திய முன்மாதிரிகள் நம்மைப் பற்றி நாம் எவ்வித முடிவுகளைக் கொள்ள வைத்தது என்பதை எஸ். என். நாகராஜன் கூறுகிறார்.
1. உங்கள் கைத்தொழில்கள் பயனற்றவை
2. உங்கள் பயிர்களும் தாவரங்களும் பயனற்றவை
3. உங்கள் உணவு பயனற்றது
4. உங்கள் உழவுமுறையும் விவசாய நடைமுறைகளும் பயனற்றவை
5. உங்கள் வீடுகள் பயனற்றவை
6. உங்கள் கல்வி பயனற்றது
7. உங்கள் மதமும் ஒழுக்கமும் முற்றிலும் பயனற்றவை
8. உங்கள் கலாச்சாரம் பயனற்றது
9. உங்கள் மண் பயனற்றது
10. உங்கள் மருத்துவ ஒழுங்கமைப்பு பயனற்றது
11. உங்கள் காடுகள் பயனற்றவை
12.. உங்கள் நீர்ப்பாசனத் திட்டம் பயனற்றது
13. உங்கள் நிர்வாகம் பயனற்றது
14. இறுதியாக நீ ஒரு பயனற்ற மனிதன்
அறிவை இழிவு செய்யும், ஆன்மாவை அழிக்கும் இந்த அழிவுமுறையியல், துருக்கி, இந்தோனேசியா, ஃபிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற பலவகையான நாடுகளின் மக்களுக்கும் எல்லையற்றுத் திரும்பத் திரும்ப ஆங்கிலேயரால் கையாளப்பட்டது. இந் நாடுகள் அனைத்தும் மிக விரைவில் பலி நாடுகளாகவும், தோல்வியுற்ற நாகரிகங்களாகவும் ஆயின.
மனத்தளவில் தோற்றுபோன இந்திய அடிமைச் சமூகம்—அதாவது அக்காலப் படித்த முன்மாதிரிகள், இந்தியக் கல்வி முறையை மாற்ற முயலாததில் வியப்பில்லை. மரபு என்ற வகையில் அது அப்படியே தொடர்கிறது.
சிந்தனையைத் தூண்டும் விதமான கல்விமுறை அறவே இல்லாமல் போயிற்று. மனப்பாடக் கல்வியே கல்வி ஆயிற்று.


கல்வி-கேள்விகள். கேள்வி 1

(1)  அன்றைக்கு இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்காக உலகெங்குமிருந்து மாணவர்கள் வந்தனர். ஆனால் இன்றைக்கு நம் மாணவர்கள் நல்ல கல்வியைத் தேடி அயல் நாடுகளுக்குச் செல்கிறார்கள். இந்த நிலைமை ஏன்?

இக்கேள்விக்கு நான்கு தளங்களில் விடைதர வேண்டும்.
ஒன்று, பழங்காலத்தில் கல்வி மதம்சார்ந்ததாக இருந்தது. இந்தியாவில் இருந்த நலந்தா போன்ற பல்கலைக் கழகங்கள் பௌத்த மதத்தினால் உருவாக்கப் பட்டவை. பௌத்தக் கல்வியைத் தேடி வந்தவர்கள்தான் நலந்தா போன்ற நிலையங்களை அணுகினர். இந்தியாவில் வேறு மதங்கள் பல்கலைக் கழகங்களையோ கல்வி நிலையங்களையோ பெரிதாக உருவாக்கவில்லை. நாலந்தா போன்றவற்றிலும் எந்த அளவுக்கு மதச்சார்பற்ற துறைகளில் கல்வி அளிக்கப்பட்டது என்பது கேள்விக்குறி.

குருகுலக்கல்வி, பிராமண அடிப்படையில் இருந்தது. நலந்தாவைத் தேடி உலகத்தினர் வந்த காலத்திலேயே நம் கோடிக்கணக்கான கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பௌத்தம் அறிவுசார்ந்த மதமாக இருந்ததாலும், சாதி அடிப்படையைப் பார்க்காததாலும் அதில் மக்கள் சேர்ந்து படிக்க முடிந்தது. பௌத்தத்தில் சேராதவர்களில், அதாவது இந்துக்களில் பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி உண்டு, பிற சாதியினர்க்கு இல்லை–இதுதான் பழங்கால நிலை. இந்தியாவில் ஏதோ எல்லாருமே பல்கலைக் கழகங்களில் கற்றது போலவும், அயல்நாட்டவரும் தேடி வந்ததுபோலவும் பேசுவது அறியாமை.

இரண்டு, இன்று கல்வி அனைவர்க்கும் உரியது என்றாலும் நாம் தரமான கல்வியை அனைவர்க்கும் பொதுமைப் படுத்தவில்லை. இன்றும் எல்லா மாணவர்களும் அயல்நாடு செல்வதில்லை. வசதி உடையவர்கள் செல்கிறார்கள். வசதியற்றவர்கள், வசதியற்ற அரசுப்பள்ளிகளில்தான் சேர வேண்டியுள்ளது.

மூன்று, 2000ஆம் ஆண்டுக்குமுன் அயல்நாடு சென்று கல்வி கற்றவர்களை அதிகம் காண முடியாது. மிகப் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்விதக் கல்விகற்றனர்.
2000ஆம் ஆண்டுக்குப்பின் உலகமயமாக்கலின் காரணமாக அயல்நாடு சென்று பணிசெய்பவர்கள் அதிகமாயினர். அதற்குமுன் அண்ணாந்து பார்க்கப்பட்ட அயல்நாடு செல்லுதல் என்பது பரவலாக எளிதாயிற்று. அதனாலும் அயல்நாடு சென்று கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் கூடியுள்ளது. மேலும், உயர்கல்வி தவிரப் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வியில் இன்றும் தரத்தைத் தேடி உணர்வுபூர்வமாகக் கல்விக்காக அயல்நாடு செல்பவர்கள் குறைவு.

நான்கு, அயல்நாட்டுக் கல்விக்கும் நமது கல்விக்கும் இன்று வேறுபாடில்லை. நம் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தனித்தன்மை இழந்து மேற்கத்தியக் கல்வியின் சாரமற்ற போலியையே அளிக்கின்றன.
சான்றாக, ஏரோநாடிக்ஸ் என்பது உலகப் பொதுவான கல்வித்துறை. இதை நமது எம்ஐடியில் படிப்பதைவிட அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பது தரமானது என்பது வசதியுள்ளவர்களின் கருத்தாக உள்ளது.


ஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி

அண்மையில் மறைந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி ஊடகங்களில் ஏராளமான தகவல்கள் வந்துவிட்டன. அவர் விஞ்ஞானிகளில் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’. சென்ற நூற்றாண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்து பிரபலமான விஞ்ஞானி யார் என்ற கேள்விக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் என்பதே பொதுவான பதிலாக இருக்கும்.

ஹாக்கிங்கின் 21-வது இளவயதில் “உங்களுக்கு தீர்க்க முடியாத நரம்பியல் நோய் வந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் உங்களுக்கு மரணம் நிச்சயம்” என்று மருத்துவர்கள் கூறியதை சமநிலை மனதுடன் அவர் ஏற்றுக் கொண்டார். மருத்துவர்களின் கணிப்பைப் பொய்யாக்கி, பல்வேறு உடல் உபாதைகளை தீரத்துடன் எதிர்கொண்டு தனது மரணத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒத்தி வைத்து அதிலும் சாதனை புரிந்தவர் ஹாக்கிங். சக்கர நாற்காலியிலேயே முடங்க நேரிட்ட போதும் உடலா, மனமா என்ற கேள்வி எழுந்தபோது உடலை விட மனமே மேலானது என்ற தத்துவத்தின் சின்னமாக வாழ்ந்து காட்டிய அவர் 2018 மார்ச் 14 அன்று சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

அவரைப் பீடித்தது சாதாரண நோய் அல்ல. உடலின் தசைகளை இயங்கச் செய்யும் நரம்பு செல்களை படிப்படியாகச் செயலிழக்கச் செய்யும் அரியதொரு நோய். ஒரு புறம் ஹாக்கிங்கின் உடல் செயலிழந்து கொண்டிருந்தபோது அவரது சிந்தனையும் கற்பனையும் சிறகடித்துப் பறந்த காட்சியைக் கண்டு உலகம் அதிசயித்தது. இந்தப் பேரண்டம் தற்போது இருப்பதுபோல் ஏன் இருக்கிறது.. முன்னர் என்னவாக இருந்தது.. போன்ற கேள்விகள் அவரைக் குடைந்தன. அனைத்தையும் படைத்தது கடவுளே என்ற கோட்பாட்டினை அவர் ஏற்கவில்லை. பேரண்டத்தைத் தோற்றுவிக்க ஒரு கடவுள் தேவையில்லை என்று கூறும் பகுத்தறிவுவாதியாக அவர் இருந்தார். மிகச் சிறிய துகள் இயற்பியலான குவாண்டம் மெக்கானிக்ஸ், மிகப் பெரிய பொருள்களுக்கான வானியல் இரண்டிற்கும் உள்ள சிக்கலான தொடர்புச் சங்கிலிகளை ஆய்ந்து தனது நுண்ணறிவுத் தேடலை அவர் தொடர்ந்தார்.

கருந்துளைகள்
ஹீலியம், ஹைட்ரஜன் ஆகிய எரிபொருட்கள் எரிந்து நட்சத்திரங்களுக்கு ஒளியைத் தருகின்றன. ஒரு கட்டத்தில் எரிபொருள் தீர்ந்து நட்சத்திரங்கள் சிறியவையாக ஆகி கருந்துளைகளாக மாறுகின்றன. மிக மிக அடர்த்தியான அவற்றிலிருந்து ஒளி கூடத் தப்பிக்க முடியாது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் கருந்துளைகள் பற்றிய பல புதிர்களுக்கு ஹாக்கிங் விடைகள் கண்டுபிடித்தார். அவற்றிலிருந்து எந்தக் கதிர்வீச்சும் தப்பிக்க முடியாது என்பது சரியல்ல, அவை வெப்பத்தை மிக மெதுவான வேகத்தில் வெளியிடக் கூடியவை என்ற ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு அறிவியல் உலகிற்கு அவர் அளித்த மிகச் சிறந்த பங்களிப்பு எனலாம். பின்னர் அந்த வெப்பத்திற்கு “ஹாக்கிங் கதிர்வீச்சு” எனப் பெயரிடப்பட்டது.

பெரு வெடிப்புக் கோட்பாடு
ரோகர் பென்ரோஸ் என்ற மற்றொரு விஞ்ஞானியோடு இணைந்து பேரண்டம் தோன்றியதற்கான பெரு வெடிப்புக் கோட்பாட்டினை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்தான். பேரண்டம் ஒரு புள்ளியிலிருந்து தோன்றியது என்கிறது இக்கோட்பாடு. அதற்கு முன் காற்றோ, கிரகங்களோ, பால்வெளி மண்டலங்களோ கிடையாது. பேரண்டம் விரிந்து கொண்டே செல்கிறது என கணிதவியல் மூலமாக நிரூபித்த எட்வர்ட் ஹபிள் என்ற விஞ்ஞானி ஹாக்கிங்கின் பெரு வெடிப்புக் கோட்பாடு உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக அதை எடுத்துக் கொண்டார். பேரண்டம் விரிந்து கொண்டே செல்கிறது என்றால் அது ஒரு புள்ளியிலிருந்துதானே தொடங்கியிருக்க வேண்டும் என தர்க்கரீதியாக அவர் வாதிட்டார்.

வாழ்க்கையை ஹாக்கிங் உற்சாகமாக எடுத்துக் கொண்டார். பூமியின் தென்துருவச் சூழல் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அங்கு ஒரு முறை சென்றார். மேலேயிருந்து தடையின்றிக் கீழே விழும்போது கிடைக்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள அந்தப் பரிசோதனையை மேற்கொண்டார். ‘காலத்தின் சுருக்கமானதொரு வரலாறு’ என்ற அவரது முதல் புத்தகம் அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. 35 மொழிகளில் அது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அவரது பெயர் காலம் உறுதியாகக் கடந்து நிலைத்து நிற்கும்.