தீபாவளி

“நான் சிரித்தால் தீபாவளி” ஆம், பலபேருக்கு, அவர்கள் சிரிக்கின்ற–மகிழ்ச்சியோடிருக்கின்ற ஒரு நாள் எதுவாக இருப்பினும் அதுதான் தீபாவளி.

நான் தீபாவளியைக் கொண்டாடும் வழக்கமில்லை. உண்மையில் தீப-ஆவளி, அல்லது தீப வரிசை என்றால் இன்னும் சில நாட்கள் கழித்துவரப்போகும் கார்த்திகை தீபம்தான். கார்த்திகையைச் சங்ககாலத்திலிருந்தே கொண்டாடி வருகிறோம். இடையில் “நான்தான் தீப வரிசை” என்று எந்தக்காலத்தில் இந்த வடநாட்டு தீபாவளி புகுந்தது என்று தெரியவில்லை. அநேகமாக நாயக்கர் காலத்தில்தான் நிகழ்ந்திருக்கக்கூடும்.

நரகாசுரன் என்பதையும் நான் நம்புவதில்லை. நம் கண்ணெதிரே ஆயிரம் நரகாசுரர்கள் இருக்கும்போது கற்பனையில் ஒரு நரகாசுரன் எதற்கு? நரக அசுரன் என்றால் அப்புறம் சுவர்க்க அசுரன் ஒருவன் இருந்தானா?

இதை வடநாட்டவர்கள் தாண்டிராஸ் என்று ஐந்துநாள் கொண்டாடுகிறார்கள். என்ன என்ன கட்டுக்கதைகளோ அதன் பின்னால்.

என்னைப் பொறுத்தவரை வருடத்தில் ஒருநாள் நான்கரை ஐந்து மணிக்குள் குளித்துவிட்டு ஏழரை மணிக்கு போளி வ‍டை தோசை என்று சாப்பிடுவது நன்றாகத்தான் இருக்கிறது. இனிப்புகள் வாங்குவது பெரும்பாலும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்களுக்காக, நண்பர்கள் உறவினர்கள் வந்தால் தருவதற்காக.

என் சின்ன வயதில் எங்கப்பாவும் நாங்களும், அவர் இரு தம்பியர் குடும்பத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடிய பல தீபாவளி தினங்கள் ஞாபகம் இருக்கின்றன. அந்தக் கூடுகை, சிரிப்பு, மகிழ்ச்சி இருந்ததே, அதுதான் தீபாவளி. ஆனால் தீபாவளி என்றாலே பெரும்பாலும் மழையும் சேர்ந்தே ஞாபகம் வரும். நான் கொண்டாடிய மழையற்ற தீபாவளிகள் குறைவு. எல்லாரும் பட்டாசு வாங்கி வைத்துக் கொண்டு முழித்துக்கொண்டிருப்போம்.

ஹ்ம்…ம்…இதெல்லாம் பழைய காலம். நான் பெரியவனாகி சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு குடும்பத்தோடு, என் தம்பி தங்கையரோடு கொண்டாடிய தீபாவளிகள் மிகவும் குறைவு. காரணங்கள் பல.

தீபாவளி என்றாலே ஜாலி என்றுதான் அர்த்தம்! தீபாவளி கொண்டாடக்கூடாது என்று தமிழ்நண்பர்கள் பலர் சொல்கிறார்கள்…ஆனால் இந்தக் குதூகலம், சிரிப்பு, மகிழ்ச்சி, ஒன்று சேர்தல் இதற்காகக் கொண்டாடுங்கள் ஐயா…ஏன் நரகாசுரனை நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை ஒரு இந்துப் பண்டிகையாக தீபாளியை ஒரே ஓர் ஆண்டுகூடக் கொண்டாடியதில்லை. என் வீடும் அப்படித்தான். அது ஒரு மகிழ்ச்சித் திருநாள், அவ்வளவுதான். பிள்ளைகள் பட்டாசு வெடிக்க, மத்தாப்பு கொளுத்த, இல்லாதோர் புத்தாடை உடுத்த, ஆண்டில் ஒருநாளாவது பலபேர் இனிப்புகள் ருசிக்க…

திருச்சியில் இருந்தவரை தீபாவளிக்கு முன்னாட்களில் ஒரு நாள் சின்னக் கடைத் தெருவுக்குச் சென்று வருவோம். கூட்டம் தள்ளும். தப்பிப் பிழைத்துவருவது கடினம். (சென்னை ரங்கநாதன் தெரு அனுபவம் எனக்கு இல்லை.) ஒவ்வொன்றாக ஆண்டுகளும் அனுபவங்களும் கடந்து செல்கின்றன…

இப்போது 73 முடிந்துவிட்டது. இன்னும் எத்தனை தீபாவளிகளைப் பார்க்கப் போகிறேனோ நான்… மீண்டும் சொல்கிறேன், கட்டுக் கதைகளை, புராணங்களை விட்டு விடுங்கள்…”நாம் அனைவரும் சிரிக்கும் நாளே தீபாவளி!”


பூரணச்சந்திரன் அறக்கட்டளை – மூன்றாம் நாள் பயிலரங்கம்

முதலில் தமிழ்க் கவிதை பற்றிப் பேரா. இராமசாமியின் உரை சிறப்புற அமைந்தது.

பிறகு இன்றைக்குத் தேவையான எழுத்து என்ற குழு விவாதம் நடைபெற்றது. இதில் திரு. கிராமியன், பிஎச்இஎல் பொறியாளர் திரு. விவேக், திரு. விக்டர் ஆல்பர்ட் மூவரும் பிறரும் சிறந்த முறையில் பங்கேற்றனர்.

பிறகு சமகாலத் திரைப்படம் பற்றியும் அதை நோக்கும் விதம் பற்றியும் திரு. இராமசாமி சுவையாக எடுத்துரைத்தார். இடையில் மாணவர்கள் நேற்று எழுதிவந்த கவிதைகளையும் மதிப்பீடு செய்தார்.

மதிய உணவுக்குப் பின்னர் கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரிப் பேராசிரியர் ராமராஜ் மாணவர்களைத் திறம்பட நடிக்க வைத்துத் தம் நாடகத் திறனை வெளிப் படுத்தினார். அகஸ்ட் போவாலின் கருத்துகள் அடிப்படையில் (இன்விசிபிள் தியேட்டர்) அந்த நாடக ஆக்கம் அமைந்தது சிறப்பாகும்.

தேநீருக்குப் பிறகு நிறைவு விழா. முதல்வர் வர இயலாததால் தமிழ்த்துறைத் தலைவர் திரு. இராஜ்குமாரே மாணவர்களுக்குப் பரிமாற்ற முறையில் சான்றிதழ்களை வழங்கினார். திரு. சிவசெல்வன் நன்றிகூற மூன்றுநாள் படைப்பாக்க நிகழ்ச்சி நன்கு நடந்தேறியது.

மூன்று நாள் அமர்வுகளையும் சிறப்புற ஏற்பாடு செய்தவர் பேரா. சாம் கிதியோன். உணவு உட்பட, உட்காரும் இடங்கள், அறைகள் உட்பட கவனித்துக் கொண்டார். அவருக்குத் துணையாகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் உதவி செய்தனர். திரு. சாம் கிதியோனுக்கும் அவருக்குத் துணையாக அமைந்த பேராசிரியர்களுக்கும் தனிப்பட நமது நன்றிகள் உரியன.


பூரணச்சந்திரன் அறக்கட்டளை – இரண்டாம் நாள் பயிலரங்கம்

முதல் அமர்வில் முதல் உரையாகப் பேரா. பூரணச்சந்திரனின் “உரைநடைப் புனைவின் அடிப்படைகள்” என்பது அமைந்தது.

பின்னர் இலக்கியத்தில் உள்ள நுண்அரசியலைப் பற்றி, குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களும் பெண்களும் எவ்விதம் படைக்கப்படுகின்றனர் என்பது பற்றிப் பேராசிரியர் காசி. மாரியப்பன் நகைச்சுவை படப் பேசினார்.

அடுத்து காலையில் தமிழ் நாவலைப் பற்றியும் மாலையில் தமிழ்ச் சிறுகதை பற்றியும் திரு. இராமசாமி பேசினார். இடையில் மாணவர்களின் சில படைப்புகளை வாசித்துக் கருத்துரை அளித்தார்.

நேற்று மாணவர்களுக்குத் தந்த பணி சிறுகதை எழுதுவது. அதைச் சிலர் செய்திருந்தனர். ஆனால் சிறுகதை வடிவம் பொதுவாக மாணவர்களுக்குச் சிக்கல் தருவதாகவே அமைந்திருந்தது. பலரும் ஐம்பதாண்டு நிகழ்ச்சிகளை, வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்களை எல்லாம் சிறுகதை என எழுதினர்.

அவற்றைப் பூரணச்சந்திரன் விமரிசனம் செய்து எப்படி எழுத வேண்டும் என எடுத்துரைத்தார். திரு. இராமசாமி, ஐந்து தலைப்புகளை அளித்து அவற்றை மறுநாள் கவிதையாக்கி வருமாறு மாணவர்களுக்கு வேலையளித்தார்.


பூரணச்சந்திரன் அறக்கட்டளை-முதல் நாள் பயிலரங்கம்

29-09-2022 முதல்நாள் நிகழ்ச்சிகள்

இந்த அறக்கட்டளைப் பயிலரங்க நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியிலிருந்து பதினைந்து மாணவ-மாணவியரும், பிற கல்லூரிகளிலிருந்து பதினேழு மாணவ-மாணவியரும் என முப்பத்திரண்டு பேர் பங்கேற்றனர்.

நிகழ்வைத் தொடங்கிவைத்த கல்லூரி முதல்வர் தமிழ்த்துறையின் நிகழ்ச்சிகளுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வதாகக் கூறினார். அறக்கட்டளை அமைப்பாளர் க. பூரணச்சந்திரன் மூன்றுநாட்களிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டினார்.

திரைப்படங்கள் திரையிடப்பட இருப்பதால் தேவையான ஏற்பாடுகளை பேராசிரியர் சாம் கிதியோன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

நேரமின்மையால் கலை இயக்கங்கள் என்ற தலைப்பில் திரு. பூரணச்சந்திரன் பேச இருந்த பேச்சு கைவிடப்பட்டது. தொடர்ந்து கலைப்பட இயக்குநரான திரு. அம்ஷன் குமார் திரைப்படத்தின் அம்சங்களை விளக்க வேண்டி முதலில் மூன்று குறும்படங்களைத் திரையிட்டார். அவற்றில் Glass என்ற திரைப்படம் சிறப்பாகக் கண்ணாடி தயாரிக்கும் முறையை விளக்கியது. மாணவர்கள் எல்லாத் திரைப்படங்களையும் கூர்ந்து கவனித்தனர்.

வாழையிலை போட்டு வழக்கமான குழம்பு-ரசம்-பொறியல்கள்-தயிர் முதலியவற்றுடன் மதிய உணவு மிகச் சிறப்பாக மூன்று நாட்களுக்கும் கல்லூரி கேண்டீனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு மிக உவப்பாக உணவு அமைந்தது.

முதல்நாள் மதிய உணவு உண்ட பிறகு, அம்ஷன்குமார் தானே தயாரித்து இயக்கிய ஒருத்தி என்ற கதைப்படத்தினைத் திரையிட்டார். இது எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் கிடை என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. இருந்தாலும் படத்திற்கேற்பத் தேவையான மாறுதல்களை அம்ஷன் குமார் செய்து சிறப்பாக ஆக்கியிருந்தார். மாணவர்கள் திரைப்படத்தைப் பார்த்தபின் அது பற்றி விவாதித்தனர். அவர்களுடைய கேள்விகளுக்கும் விமரிசனங்களுக்கும் அம்ஷன்குமார் விடையளித்தார். அத்துடன் பொதுவாகத் திரைப்படத் தயாரிப்பு பற்றியும் ஓர் அறிமுக உரை நிகழ்த்தினார். ஏறத்தாழ 5.30 மணி அளவில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. பிறகு மறுநாள் மாணவர்கள் ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு வரவேண்டும் என்ற வீட்டுவேலை அளிக்கப்பட்டது. மாணவமாணவிகள் தங்கள் இருப்பிடங்களுக்குக் கலைந்து சென்றனர்.