கல்வி-கேள்விகள். கேள்வி 5

வருங்கால சந்ததியை உருவாக்கும் ஆசிரியப் பணி, தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்படாமல் பணமும், அரசியலும் விளையாட வேண்டியது அவசியம் தானா?

பணமும் அரசியலும் கல்வித் துறையில் விளையாடுவது தவறென்று எல்லாருக்குமேதான் தெரியும்.
எப்போது உலகமயமாக்கல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் கொள்கைகள் புகுந்தனவோ, அப்போதே கல்வியையும் ஒரு வியாபாரமாகக் கருதித் தனியார் முதலாளிகளிடம் விட்டாயிற்று. ரவுடிகள் கொள்ளைக்காரர்கள் எல்லாம் கல்வித் தந்தைகள், கல்வி மாமாக்கள் ஆனார்கள்.
அவர்கள் போட்ட முதலை எடுத்தாக வேண்டும். அதற்கு இரண்டு வழிகள்தான்.
ஒன்று மாணவர்களிடம் அதிகப் பணம் வாங்கிக் கொள்ளையடிக்கலாம். அதனால்தான் நர்சரி, எல்கேஜி வகுப்புகளுக்கும் ஒரு லட்சம் முதல் மூன்று நான்கு லட்ச ரூபாய் கூடத் தலைத்தொகை (கேபிடேஷன் ஃபீ) வசூலிக்க முடிகிறது. எல்லா வகுப்புகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணத்தை இஷ்டப்படி வகுத்து, அதிகப்படுத்திக் கொண்டே போகமுடிகிறது. இதை அரசாங்கம்தான் கேட்கவேண்டும். கேட்குமா?
இரண்டு, ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் வேலைக்கு வைக்காமல், மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப் என்றும் காண்டிராக்ட் அலுவலர்கள் என்றும் வேலைக்கு வைத்தால் பலவித இலாபங்கள்.
எல்லாரிடமும் வேலை தரும்போது குறிப்பிட்ட தொகை (பள்ளியாக இருந்தால் ஐந்து லட்சம் முதல், கல்லூரியாக இருந்தால் பத்து லட்சத்துக்கு மேல்) லஞ்சம் வாங்கிக் கொள்ளலாம். அதைத் திருப்பித் தரவேண்டியதில்லை.
அடுத்து, தற்காலிக அடிப்படையில் அல்லது ஒப்பந்த அடிப்படையில் வேலை தரப்பட்டிருப்பதால், அவர்கள் ஆண்டுதோறும் ஊதிய உயர்வு கேட்க முடியாது. ஸ்டிரைக் செய்யவும் முடியாது.
மூன்று, தனக்கு வேண்டியவர்களுக்கு வேலை அளிக்கலாம்.
நான்கு, வேலைக்கு நியமிக்கப் பட்டவர்கள் ஏதாவது முரண்டுபிடித்தால், உடனே வேலையைவிட்டு நீக்கிவிடலாம்.
மேலும் அவர்களை நிரந்தர அச்சத்தில் எப்போதும் வைத்திருக்க முடியும்.
தனியார் மயமாக்கல்தான் இதற்கு முக்கியக் காரணம். அரசாங்கத்தின் கொள்கையே மன்மோகன் சிங் காலமுதலாகத் தனியார் மயமாக்க லாகத் தானே இருக்கிறது?
கல்வித்துறை தனியார் மயம் ஆக்கப்படக் கூடாது என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது விதிகள் கடுமையாக வகுக்கப்பட்டு மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அவர்களிடம்தான் அரசாங்கம் தேர்தல் வரும்போது கைநீட்டும். இவற்றை நீக்க நீங்கள் வழிசொல்வீர்களா?


கல்வி-கேள்விகள். கேள்வி 4

(4) கல்வி என்று வரும்போது பெற்றோர் தம் குழந்தைகளின் மீது இத்தனை இரக்கமற்றவர்களாகவும், போட்டி மனப்பான்மையைத் தூண்டி, சுயநலத்தை வளர்ப்பவர்களாகவும் இருப்பது ஏன்?

வேலை வாய்ப்பின்மைதான் காரணம். நான் பள்ளியில் (1960களின் தொடக்கம்) படித்த காலத்தில் நம் நாட்டின் மக்கள் தொகை 40 கோடியாக இருந்தது. இப்போது 130 கோடியைத் தாண்டிவிட்டது. (ஒரே தலைமுறையில்!) அதற்குத் தக வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டிருக்கின்றனவா?
பொருளாதார ஒத்துழைப்பு-மேம்பாட்டு அமைப்பு இந்தியா குறித்த பொருளாதார சர்வேயை நடத்தியது. இந்திய இளைஞர்களில் 30 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் (சுமார் 12 கோடிப் பேர்) எந்த வேலையிலும் இல்லை, வேலைக்கான கல்வியும் பயிலவில்லை, எந்தத் தொழிற்பயிற்சியிலும் ஈடுபடவில்லை. மோசமான பொதுநல நிலை, அதிகரித்துவரும் சமமின்மை, புதிய திறன்களைத் தேடும் பொருளாதாரம், புதுப்புதுப் பொருள்கள் மீதான கனவுகளைக் கொண்ட நுகர்வோர் கலாச்சாரம், தடையில்லாத வன்முறைகள், லட்சக்கணக்கான போராட்டங்களைக் கொண்ட பாரம்பரிய சமூகம் ஆகியவை சேர்ந்து வேலைவாய்ப்புக்கு உலை வைக்கின்றன.
இன்று, இந்தியாவின் மக்கள்தொகையில் 42 விழுக்காடு இளைஞர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் இளைஞர்களின் வீக்கம் ஏற்படுவது நன்கு தெரிகிறது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரி வயது 29ஆக இருக்கும். இதன் மூலம் உலகின் இளமையான நாடாக இந்தியா உருவெடுக்கும். மேலும் மக்கள்தொகையில் 64 விழுக்காட்டினர் பணிபுரிவதற்கான வயது வரம்பிற்குள் இருப்பார்கள். இவர்கள் வேலைவாய்ப்புக்கு என்ன வழி?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒவ்வோர் ஆண்டும் 1 கோடி முதல் 1.2 கோடி வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும். ஆனால், 2012 முதல் 2016 வரை வெறும் 50 லட்சம் வேலைவாய்ப்புகளையே இந்தியா உருவாக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குள் 50 கோடிப் பேருக்கு பயிற்சியளிப்பதாகக் கூறி, மூன்றாண்டுகளின் இறுதியில் 2 கோடிப் பேருக்கு மட்டுமே பயிற்சியளிக்க முடியும் என்று பின்னர் கூறி அரசு இத்திட்டத்தைக் கைவிட்டது. இச்சமயத்தில் பெற்றோர் வேறு என்ன செய்ய முடியும்? தாங்கள் நினைக்கும் கல்வியில் தங்கள் மகன்/மகள் படித்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
அப்படியும் மதவாதம், பாசிசம், குற்றங்கள், போர், போதை மருந்துகள், சமூக வலைத் தளங்கள் போன்றவற்றுக்கு நமது தலைமுறை மாணவர்கள் இரையாகிறார்கள். மாறி வரும் தொழிலாளர் சந்தைக்கு ஏற்பக் கல்வித் தரத்தையும், தொழிற்பயிற்சிகளையும் மாற்றியமைப்பது ஒன்றே வழி. மறுபடியும் தவறு அரசாங்கத்தின் பக்கமே.


கல்வி-கேள்விகள். கேள்வி 3

(3)   கடலென கற்றறிந்து தெளிதலின் இன்பம் எப்படி, எதனால் மாயமாயிற்று? அறிவும் வேட்கையும் இருந்தாலும் நல்ல கல்வி என்பது எல்லோருக்கும் எட்டாக் கனியாக இருப்பதாலா?

இதில் உள்ள இருபகுதிகளில் முதல் பகுதிக்கு விடை:
“கடலெனக் கற்றறிந்து தெளிதலின் இன்பம்” என்பதெல்லாம் வெகுமக்களுக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கும் வெற்று வார்த்தைகள். இவை படித்த ஒருசிலரின் பிதற்றல்கள். நிலவுடைமைக் காலத்தில்-விஜயநகர ஆட்சி வந்து நமது ஊராட்சி முறையை அழிக்கும்வரை-பெரும்பான்மை மக்கள் தங்கள் தங்கள் குலத்தொழில்களைச் சிறப்பாகச் செய்து ஓரளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர். பிழைப்புக்கு மேற்பட்ட ஒரு தேவையை (இதை ஆன்மிகநாட்டம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) அவர்கள் உணர்ந்தபோது கற்றோரின் உரைகளை, சொற்பொழிவுகளைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். அதனால்தான் வள்ளுவர் கல்விக்கு அடுத்தபடி கேள்வி என்ற அதிகாரத்தை வைக்கிறார். பெரும்பான்மை மக்களுக்குப் பழங்காலத்தில் “கேள்வி”தான் வழி.
எந்தக் காலத்திலும் கற்றறிந்து தெளியும் இன்பம்—இது பெரும்பாலும் இலக்கியக் கல்வியைத்தான் குறிக்கிறது—ஒரு சிலருக்கே உரியதாக இருந்தது. கல்வியில் உண்மையான நாட்டம் கொண்ட, இலட்சிய பூர்வமான சிலர், வயிற்றுப் பிழைப்பை மீறியும் இவ்வித முயற்சியில் ஈடுபட்டனர் என்பது உண்மை.

மிகப் பலருக்குக் கல்வி என்பது எந்தக் காலத்திலும் பிழைப்புக்கானதோர் வழி. அவ்வளவுதான். இன்றும் அப்படித்தான். அதனால்தான் இன்று மாணவர்களின் பெற்றோர்கள் தாங்கள் எந்தக் கல்வியினால் வேலை வாய்ப்பு கிடைக்குமோ அதைத் தேடி அலைகின்றனர், அதை அடையும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். சிபிஎஸ்இ கல்விமுறை, பன்னாட்டுக் கல்விமுறை போன்றவற்றைக் கையாளும் பள்ளிகளில் இளம் வயதிலேயே நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சக்திக்குமீறியும் இலட்சக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளைச் சேர்க்கின்றனர்.
இதில் இரண்டாவது கேள்விக்கு விடை:
“அறிவும் வேட்கையும் இருந்தாலும் நல்ல கல்வி என்பது எல்லோருக்கும் எட்டாக் கனியாக இருப்பதாலா?“ என்பது நீங்களே தருகின்ற சுவையான விடைதான். ஆம். நல்ல கல்வி என்பது எல்லாருக்கும் எட்டாக் கனியாகத்தான் நம் நாட்டில் இருக்கிறது. ஆனால் நல்ல கல்விக்கான அறிவும் வேட்கையும் சிறு வயதில் நம் நாட்டிலோ (ஏன் எந்த நாட்டிலும்தான்) தூண்டப்படுகின்றனவா? இருபதாம் நூற்றாண்டில் உலகளாவிய பெருமுதலாளித்துவம் ஏற்படத் தொடங்கிவிட்ட பிறகு கல்வி என்பது முழுமையான ஒரு வியாபாரம் ஆகிவிட்டது. அந்த வியாபாரத்தில் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர் ஈடுபடுத்தும்போது அறிவும் வேட்கையும் எங்கிருந்து வருகின்றன? வர முடியும்? அறிவும் வேட்கையும் சிலபேருக்கு இயல்பாக இருக்கலாம். பொதுவாக அவை பிள்ளைகளுக்குப் பள்ளிகளில் தூண்டப்படத்தான் வேண்டும். மிகப் பெரும்பான்மையர்க்கு வாழ்க்கைப் பிழைப்புக்கான ஒருவழிதான் கல்வி.


கல்வி-கேள்விகள். கேள்வி 2

(2) கேள்வி கேட்காது சொன்னதைச் செய்யும் மனோபாவத்தை வளர்க்கும் மெக்காலே கல்வித் திட்டத்தை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் முற்றிலுமாக மாற்றாதது ஏன்?

இதற்கு நமது கல்வியாளர்களின் அடிமை மனோபாவம்தான் காரணம். மெக்காலே இவ்வாறு கூறினார்—”நம் அளவுபட்ட வருவாயில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகைக்கும் கல்வி தர முயற்சி செய்வது இயலாது என்று உணர்கிறேன். இப்போது நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் நமக்கும் நாம் ஆளுகின்ற மில்லியன் கணக்கான அவர்களுக்கும் இடையில் விளக்கமளிப்பவர்களாக இருக்கக்கூடிய ஒரு வகுப்பை உருவாக்க முயல வேண்டும். அவர்கள் இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியர்களாக, ஆனால் ரசனைகளில், கருத்துகளில், ஒழுக்கங்களில், அறிவில் ஆங்கிலேயர்களாக இருப்பார்கள்.”
எந்த ஒரு அடிமைப்பட்ட சமூகத்திலும் நடைமுறையில் உள்ள படித்த, சிறுபான்மைப் பகுதியினர் தங்கள், மற்றும் தங்கள் பண்பாட்டின் தகுதியின்மையை காலப்போக்கில் ஏற்றுக் கொள்வார்கள். தங்கள் பண்பாடும் நாகரிகமும் தங்களுக்கு அளித்த எல்லாவற்றையும் பிறர் கொள்ளையடிக்க விடுவார்கள். தங்களை ஆள்பவர்களின் (அரசியல் சுதந்திரம் அடைந்தாலும் தங்களை ஆண்டவர்களின்) நிலையற்ற மோஸ்தர்களுக்கும் சிந்தனைக்கும் ஆட்பட்டுத் தங்களைப் பணிவாக மறுவார்ப்புச் செய்துகொள்வார்கள். பிறகு தங்களைப் போலவே பெரும்பான்மையான பிறரையும் ஆக்க முயற்சி செய்வார்கள். அதனால்தான் சுதந்திரமடைந்து எழுபது ஆண்டாகியும் நாம் ஆங்கிலக் கல்வியிலிருந்து மாறவில்லை.  
மேற்கத்திய முன்மாதிரிகள் நம்மைப் பற்றி நாம் எவ்வித முடிவுகளைக் கொள்ள வைத்தது என்பதை எஸ். என். நாகராஜன் கூறுகிறார்.
1. உங்கள் கைத்தொழில்கள் பயனற்றவை
2. உங்கள் பயிர்களும் தாவரங்களும் பயனற்றவை
3. உங்கள் உணவு பயனற்றது
4. உங்கள் உழவுமுறையும் விவசாய நடைமுறைகளும் பயனற்றவை
5. உங்கள் வீடுகள் பயனற்றவை
6. உங்கள் கல்வி பயனற்றது
7. உங்கள் மதமும் ஒழுக்கமும் முற்றிலும் பயனற்றவை
8. உங்கள் கலாச்சாரம் பயனற்றது
9. உங்கள் மண் பயனற்றது
10. உங்கள் மருத்துவ ஒழுங்கமைப்பு பயனற்றது
11. உங்கள் காடுகள் பயனற்றவை
12.. உங்கள் நீர்ப்பாசனத் திட்டம் பயனற்றது
13. உங்கள் நிர்வாகம் பயனற்றது
14. இறுதியாக நீ ஒரு பயனற்ற மனிதன்
அறிவை இழிவு செய்யும், ஆன்மாவை அழிக்கும் இந்த அழிவுமுறையியல், துருக்கி, இந்தோனேசியா, ஃபிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற பலவகையான நாடுகளின் மக்களுக்கும் எல்லையற்றுத் திரும்பத் திரும்ப ஆங்கிலேயரால் கையாளப்பட்டது. இந் நாடுகள் அனைத்தும் மிக விரைவில் பலி நாடுகளாகவும், தோல்வியுற்ற நாகரிகங்களாகவும் ஆயின.
மனத்தளவில் தோற்றுபோன இந்திய அடிமைச் சமூகம்—அதாவது அக்காலப் படித்த முன்மாதிரிகள், இந்தியக் கல்வி முறையை மாற்ற முயலாததில் வியப்பில்லை. மரபு என்ற வகையில் அது அப்படியே தொடர்கிறது.
சிந்தனையைத் தூண்டும் விதமான கல்விமுறை அறவே இல்லாமல் போயிற்று. மனப்பாடக் கல்வியே கல்வி ஆயிற்று.


கல்வி-கேள்விகள். கேள்வி 1

(1)  அன்றைக்கு இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்காக உலகெங்குமிருந்து மாணவர்கள் வந்தனர். ஆனால் இன்றைக்கு நம் மாணவர்கள் நல்ல கல்வியைத் தேடி அயல் நாடுகளுக்குச் செல்கிறார்கள். இந்த நிலைமை ஏன்?

இக்கேள்விக்கு நான்கு தளங்களில் விடைதர வேண்டும்.
ஒன்று, பழங்காலத்தில் கல்வி மதம்சார்ந்ததாக இருந்தது. இந்தியாவில் இருந்த நலந்தா போன்ற பல்கலைக் கழகங்கள் பௌத்த மதத்தினால் உருவாக்கப் பட்டவை. பௌத்தக் கல்வியைத் தேடி வந்தவர்கள்தான் நலந்தா போன்ற நிலையங்களை அணுகினர். இந்தியாவில் வேறு மதங்கள் பல்கலைக் கழகங்களையோ கல்வி நிலையங்களையோ பெரிதாக உருவாக்கவில்லை. நாலந்தா போன்றவற்றிலும் எந்த அளவுக்கு மதச்சார்பற்ற துறைகளில் கல்வி அளிக்கப்பட்டது என்பது கேள்விக்குறி.

குருகுலக்கல்வி, பிராமண அடிப்படையில் இருந்தது. நலந்தாவைத் தேடி உலகத்தினர் வந்த காலத்திலேயே நம் கோடிக்கணக்கான கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பௌத்தம் அறிவுசார்ந்த மதமாக இருந்ததாலும், சாதி அடிப்படையைப் பார்க்காததாலும் அதில் மக்கள் சேர்ந்து படிக்க முடிந்தது. பௌத்தத்தில் சேராதவர்களில், அதாவது இந்துக்களில் பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி உண்டு, பிற சாதியினர்க்கு இல்லை–இதுதான் பழங்கால நிலை. இந்தியாவில் ஏதோ எல்லாருமே பல்கலைக் கழகங்களில் கற்றது போலவும், அயல்நாட்டவரும் தேடி வந்ததுபோலவும் பேசுவது அறியாமை.

இரண்டு, இன்று கல்வி அனைவர்க்கும் உரியது என்றாலும் நாம் தரமான கல்வியை அனைவர்க்கும் பொதுமைப் படுத்தவில்லை. இன்றும் எல்லா மாணவர்களும் அயல்நாடு செல்வதில்லை. வசதி உடையவர்கள் செல்கிறார்கள். வசதியற்றவர்கள், வசதியற்ற அரசுப்பள்ளிகளில்தான் சேர வேண்டியுள்ளது.

மூன்று, 2000ஆம் ஆண்டுக்குமுன் அயல்நாடு சென்று கல்வி கற்றவர்களை அதிகம் காண முடியாது. மிகப் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்விதக் கல்விகற்றனர்.
2000ஆம் ஆண்டுக்குப்பின் உலகமயமாக்கலின் காரணமாக அயல்நாடு சென்று பணிசெய்பவர்கள் அதிகமாயினர். அதற்குமுன் அண்ணாந்து பார்க்கப்பட்ட அயல்நாடு செல்லுதல் என்பது பரவலாக எளிதாயிற்று. அதனாலும் அயல்நாடு சென்று கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் கூடியுள்ளது. மேலும், உயர்கல்வி தவிரப் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வியில் இன்றும் தரத்தைத் தேடி உணர்வுபூர்வமாகக் கல்விக்காக அயல்நாடு செல்பவர்கள் குறைவு.

நான்கு, அயல்நாட்டுக் கல்விக்கும் நமது கல்விக்கும் இன்று வேறுபாடில்லை. நம் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தனித்தன்மை இழந்து மேற்கத்தியக் கல்வியின் சாரமற்ற போலியையே அளிக்கின்றன.
சான்றாக, ஏரோநாடிக்ஸ் என்பது உலகப் பொதுவான கல்வித்துறை. இதை நமது எம்ஐடியில் படிப்பதைவிட அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பது தரமானது என்பது வசதியுள்ளவர்களின் கருத்தாக உள்ளது.


ஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி

அண்மையில் மறைந்த விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் பற்றி ஊடகங்களில் ஏராளமான தகவல்கள் வந்துவிட்டன. அவர் விஞ்ஞானிகளில் ஒரு ‘சூப்பர் ஸ்டார்’. சென்ற நூற்றாண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்து பிரபலமான விஞ்ஞானி யார் என்ற கேள்விக்கு ஸ்டீஃபன் ஹாக்கிங் என்பதே பொதுவான பதிலாக இருக்கும்.

ஹாக்கிங்கின் 21-வது இளவயதில் “உங்களுக்கு தீர்க்க முடியாத நரம்பியல் நோய் வந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் உங்களுக்கு மரணம் நிச்சயம்” என்று மருத்துவர்கள் கூறியதை சமநிலை மனதுடன் அவர் ஏற்றுக் கொண்டார். மருத்துவர்களின் கணிப்பைப் பொய்யாக்கி, பல்வேறு உடல் உபாதைகளை தீரத்துடன் எதிர்கொண்டு தனது மரணத்தை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒத்தி வைத்து அதிலும் சாதனை புரிந்தவர் ஹாக்கிங். சக்கர நாற்காலியிலேயே முடங்க நேரிட்ட போதும் உடலா, மனமா என்ற கேள்வி எழுந்தபோது உடலை விட மனமே மேலானது என்ற தத்துவத்தின் சின்னமாக வாழ்ந்து காட்டிய அவர் 2018 மார்ச் 14 அன்று சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

அவரைப் பீடித்தது சாதாரண நோய் அல்ல. உடலின் தசைகளை இயங்கச் செய்யும் நரம்பு செல்களை படிப்படியாகச் செயலிழக்கச் செய்யும் அரியதொரு நோய். ஒரு புறம் ஹாக்கிங்கின் உடல் செயலிழந்து கொண்டிருந்தபோது அவரது சிந்தனையும் கற்பனையும் சிறகடித்துப் பறந்த காட்சியைக் கண்டு உலகம் அதிசயித்தது. இந்தப் பேரண்டம் தற்போது இருப்பதுபோல் ஏன் இருக்கிறது.. முன்னர் என்னவாக இருந்தது.. போன்ற கேள்விகள் அவரைக் குடைந்தன. அனைத்தையும் படைத்தது கடவுளே என்ற கோட்பாட்டினை அவர் ஏற்கவில்லை. பேரண்டத்தைத் தோற்றுவிக்க ஒரு கடவுள் தேவையில்லை என்று கூறும் பகுத்தறிவுவாதியாக அவர் இருந்தார். மிகச் சிறிய துகள் இயற்பியலான குவாண்டம் மெக்கானிக்ஸ், மிகப் பெரிய பொருள்களுக்கான வானியல் இரண்டிற்கும் உள்ள சிக்கலான தொடர்புச் சங்கிலிகளை ஆய்ந்து தனது நுண்ணறிவுத் தேடலை அவர் தொடர்ந்தார்.

கருந்துளைகள்
ஹீலியம், ஹைட்ரஜன் ஆகிய எரிபொருட்கள் எரிந்து நட்சத்திரங்களுக்கு ஒளியைத் தருகின்றன. ஒரு கட்டத்தில் எரிபொருள் தீர்ந்து நட்சத்திரங்கள் சிறியவையாக ஆகி கருந்துளைகளாக மாறுகின்றன. மிக மிக அடர்த்தியான அவற்றிலிருந்து ஒளி கூடத் தப்பிக்க முடியாது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் கருந்துளைகள் பற்றிய பல புதிர்களுக்கு ஹாக்கிங் விடைகள் கண்டுபிடித்தார். அவற்றிலிருந்து எந்தக் கதிர்வீச்சும் தப்பிக்க முடியாது என்பது சரியல்ல, அவை வெப்பத்தை மிக மெதுவான வேகத்தில் வெளியிடக் கூடியவை என்ற ஹாக்கிங்கின் கண்டுபிடிப்பு அறிவியல் உலகிற்கு அவர் அளித்த மிகச் சிறந்த பங்களிப்பு எனலாம். பின்னர் அந்த வெப்பத்திற்கு “ஹாக்கிங் கதிர்வீச்சு” எனப் பெயரிடப்பட்டது.

பெரு வெடிப்புக் கோட்பாடு
ரோகர் பென்ரோஸ் என்ற மற்றொரு விஞ்ஞானியோடு இணைந்து பேரண்டம் தோன்றியதற்கான பெரு வெடிப்புக் கோட்பாட்டினை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்தான். பேரண்டம் ஒரு புள்ளியிலிருந்து தோன்றியது என்கிறது இக்கோட்பாடு. அதற்கு முன் காற்றோ, கிரகங்களோ, பால்வெளி மண்டலங்களோ கிடையாது. பேரண்டம் விரிந்து கொண்டே செல்கிறது என கணிதவியல் மூலமாக நிரூபித்த எட்வர்ட் ஹபிள் என்ற விஞ்ஞானி ஹாக்கிங்கின் பெரு வெடிப்புக் கோட்பாடு உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக அதை எடுத்துக் கொண்டார். பேரண்டம் விரிந்து கொண்டே செல்கிறது என்றால் அது ஒரு புள்ளியிலிருந்துதானே தொடங்கியிருக்க வேண்டும் என தர்க்கரீதியாக அவர் வாதிட்டார்.

வாழ்க்கையை ஹாக்கிங் உற்சாகமாக எடுத்துக் கொண்டார். பூமியின் தென்துருவச் சூழல் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அங்கு ஒரு முறை சென்றார். மேலேயிருந்து தடையின்றிக் கீழே விழும்போது கிடைக்கும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள அந்தப் பரிசோதனையை மேற்கொண்டார். ‘காலத்தின் சுருக்கமானதொரு வரலாறு’ என்ற அவரது முதல் புத்தகம் அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. 35 மொழிகளில் அது மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. அவரது பெயர் காலம் உறுதியாகக் கடந்து நிலைத்து நிற்கும்.


மாற்று-நெகிழி

பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட போதிலும் நுகர்வோர் சந்தையில் பிளாஸ்டிக் பைகளின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கவே செய்கிறது. ஒவ்வொரு நாளிலும் நச்சுத்தன்மையுள்ள 40000 டன்கள் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. சுற்றுச்சூழலுக்கிசைந்த ஒரு பொருளை பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகத் தயாரிக்க வேண்டும் என அஷ்வத் ஹெக்டே என்ற மங்களூரைச் சேர்ந்த முதலீட்டாளர் முயற்சி எடுத்துக் கொண்டார்.

நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு அஷ்வத் ஒரு பசுமைத் தொழில்நுட்ப மாற்றினைக் கண்டுபிடித்தார். அவரும் அவரோடு சேர்ந்த 11 அறிவியலாளர்கள், சூழலியலாளர்களும் இந்தப் பொருளை உற்பத்தி செய்வதற்காக என்விகிரீன் பயோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் 100 சதம் இயற்கையான, மக்கக்கூடிய, பைகளை உற்பத்தி செய்யத் தொடங்கியிருக்கிறது. பார்ப்பதற்கு அவை பிளாஸ்டிக் பைகளைப் போன்றே இருக்கின்றன.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத இந்தப் பைகள் உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்குகளிலிருந்து கிடைக்கும் இயற்கையான மாவுப்பொருள், தாவர எண்ணெயிலிருந்து கிடைக்கும் பொருட்கள், காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. 180 நாட்களில் இந்தப் பைகள் மக்கிவிடும். தண்ணீரில் முக்கினால் ஒரு நாளில் கரைந்துவிடும். நாம் வழக்கமாக கடைகளுக்கு எடுத்துச் செல்லும் பைகள் எவ்வளவு எடையைத் தாங்குமோ அவ்வளவு எடையை இந்தப் பைகளும் தாங்கும். 8-லிருந்து 10 கிலோகிராம் வரை தாங்கக் கூடிய பெரிய பைகளும் உண்டு. இவற்றை உட்கொள்ளும் விலங்குகளுக்கு பிளாஸ்டிக் பைகளைப் போல் இவை தீங்கு செய்வதில்லை.

“என்விகிரீன் ( EG) பைகள் 100 சதம் இயற்கையானவை, உட்கொள்ளத்தக்கவை, மறுசுழற்சி செய்யப்படக்கூடியவை. தொடர்ந்து நாம் பயன்படுத்தினால் ஒரு கட்டத்தில் பிளாஸ்டிக்கையே நம் நாட்டிலிருந்து ஒழித்துவிடலாம்” என்கிறார் ஹெக்டே.

ஒரு பசுமைப் பையின் விலை பிளாஸ்டிக் பையின் விலையைவிட அதிகம்தான். ஆனால் ஒரு துணிப்பையின் விலையைவிடக் குறைவானது என்கிறார் அஷ்வத்தின் குழுவில் உள்ள ஓர் உறுப்பினர். “பசுமைப் பைகளில் ஒரு சதம் கூட பிளாஸ்டிக்கோ வேறு வேதியியல் பொருட்களோ கிடையாது. பைகளில் அச்சிடப் பயன்படுத்தும் பெயிண்ட் கூட பசுமைப் பொருட்களால் ஆனது” என்கிறது என்விகிரீன் நிறுவனம். கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம், பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியலுக்கான சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட், தொழில் ஆராய்ச்சிக்கான ஸ்ரீராம் இன்ஸ்டிட்யூட் ஆகிய நிறுவனங்கள் பல சோதனைகளை நடத்தி இயற்கைப் பைகளில் சிறிதளவு கூட பிளாஸ்டிக் இல்லை என்பதை உறுதி செய்திருக்கின்றன.

கடைகளுக்கு எடுத்துச் செல்லும் பைகள் போக, குப்பை போடும் பைகள், எண்ணெய் அடங்கிய சிறு பைகள் (sachets)), குப்பைத் தொட்டிகள், பிலிம் பாக்கெட்டுகள், மேலங்கிகள், உறைகளுக்கான கவர்கள், சலவைப் பைகள் போன்ற பல்வேறு பொருட்களையும் என்விகிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. விவசாயிகளிடமிருந்து காய்கறிக் கழிவுகளை நல்ல விலை கொடுத்து வாங்கி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கவும் நிறுவனம் உதவுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படூம் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் சுற்றுச்சூலுக்கும் இடையே ஒரு சமநிலையை உருவாக்கவும் என்விகிரீன் நிறுவனம் எடுத்துவரும் முயற்சிகளை வரவேற்போம்.. வாழ்த்துவோம் !


மேனிலையாக்கத் தமிழர்கள்

தமிழர்கள் உயர்ந்த நிலை பெறும்போது தங்களைத் தமிழர்களாகக் காட்டிக் கொள்வதில்லை, வேறு மாநிலத்தவர்களாகக் காட்டிக் கொள்வது அடிக்கடி நடக்கும் விஷயம். ஏ.கே. இராமாநுஜன், ஆர்.கே. நாராயணன் போன்றவர்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தமிழகத்தில் அவர்களின் தந்தை/தாய்/பெற்றோர் இருவரும் பிறந்திருப்பர், அல்லது தாங்களே பிறந்திருக்கலாம், இருப்பினும் புகழ்வரும்போது அவர்கள் கர்நாடக மாநிலத்தவர் ஆகிவிடுகின்றனர். இவர்களின் முன்னோடி மாஸ்தி வேங்கடேச ஐயங்காரும் அப்படியே. சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் அப்படியே. சர்வபள்ளி திருத்தணிக்கு மிக அருகிலுள்ள சிற்றூர். ஆனால் இப்போதெல்லாம் அவரை ஆந்திரர் என்றே அடையாளப் படுத்துகிறார்கள்.
இந்த வரிசையில் அண்மையில் என் மருமகனும் சேர்ந்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. திரு. டாக்டர் அருண் (அருணாசலம்) எம்.டி., ஐ.ஏ.எஸ்., என் தங்கை மகன். அவர் தந்தை சோளிங்கர் அருகில் ஆயல் கிராமத்தில் பிறந்தவர். தாய் ஆர்க்காடு. மைசூரில் தந்தை இரயில்வே வேலையிலிருந்த காலத்தில் பிறந்ததனால் அவர் மைசூர்க்காரர் ஆகிவிட்டார். ஐஏஎஸ் முடித்து இப்போது மிசோரம் பகுதியில் ஒரு கலெக்டராக இருக்கும் நிலையில் அவர் சிறந்த நற்பணிகள் ஆற்றிவருகிறார். அவரது சேவை மனப்பான்மை மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது. ஆனால் தன்னைப் பற்றி பேட்டி எடுத்த ஆங்கிலப் பத்திரிகையில் அவர் மைசூர்ப்பகுதியைச் சேர்ந்தவராக (கன்னடராக)த் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார் என்பது வருத்தத்தை தருகிறது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்தது போல தமிழ்நாட்டு அறிவுஜீவிகளையும் அடுத்த மாநிலத்துக்கே தருகின்ற தமிழகத்தின் அவப்பேற்றினை என்ன சொல்ல?


தண்ணீர், தண்ணீர் !

மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக நீர்வளர்ச்சி அறிக்கை நம்மை மிகவும் அழுத்திக்கொண்டிருக்கும் தண்ணீர் நெருக்கடிக்கு விடைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது. நீடித்த வளர்ச்சிக்கான 2030 செயல்திட்டத்திற்கான கொள்கைகளும் நோக்கங்களும் மேற்கண்ட அறிக்கையோடு பொருந்தி வருகின்றன. தண்ணீர் நெருக்கடியை போகிற போக்கில் சமாளித்துவிட முடியாது என்பதும் தெளிவாகியிருக்கிறது. நீடித்த உணவு தானிய உற்பத்தி, குடிநீர் விநியோகத்தையும் பொது சுகாதாரத்தையும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, தண்ணீர் சம்பந்தமான விபத்துகள் நேரும் அபாயத்தைக் குறைப்பது, பருவநிலை மாற்றம் விளைவிக்கும் மாற்றங்களுக்கு நம்மைத் தகவமைத்துக் கொள்வது போன்ற துறைகளில் பெரும் நம்பிக்கை தரும் இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் நிச்சயம் உண்டு.

2050-க்குள் ஏற்படப் போகும் உலக மக்கள் தொகை வளர்ச்சியில் பாதிக்கும் மேற்பட்ட வளர்ச்சி ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும்தான் இருக்கப்போகிறது. எனவே, நீர் நெருக்கடியை அதிகம் சந்திக்கப் போகிறவர்கள் வளரும் நாடுகளில் உள்ள மக்களே. இந்திய நகரங்களில் உள்ள நீர்நிலைகள் மிக அதிகமாக மாசுபட்டிருப்பதால், கடும் நீர் பற்றாக்குறையைச் சந்திக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது. வளரும் நாடுகளில் தொழிற்சாலைகள் மற்றும் நகராட்சிகளின் கழிவுநீரில் 80 சதம் எவ்வித சுத்திகரிப்பும் இல்லாமல்தான் வெளியேறுகிறது. மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளில் ஏறத்தாழ பாதிக்கும் மேற்பட்டவை மாசடைந்தவை என இந்திய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிடுகிறது. நாட்டில் மாநிலங்களுக்கிடையே ஓடும் 40 ஆறுகளில் 16 ஆறுகள் முற்றிலும் மாசுபட்டுப் போனதற்கு சாக்கடைக் கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவுகளுமே காரணம் என வாரியம் கண்டறிந்திருக்கிறது.

பயிர் செய்தலின் தேவைக்கு ஏற்ப உழவின் வகை / உழவு முறை மாறுபடும். ஆழமான உழவு, அடிமண் உழவு மற்றும் வருடாந்திர உழவு போன்றவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பு உழவு (conservation tillage) எனப்படுகிறது. அதோடு, பல்வகைப் பயிர்களைப் பயிரிடுதல், பருப்புவகைகளை அதிகமாகப் பயிரிடுதல், உயிரியல் முறைகள் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்ற சுற்றுச்சூழலுக்கிசைந்த இயற்கையோடு ஒட்டிய வேளாண் முறைகளை மேலும் மேலும் பயன்பாட்டிற்குக் கொணர வேண்டியது இங்கே அவசியமாகிறது.

கழிவுநீரைச் சுத்திகரிக்க ஈரநிலங்களை (wetlands) உருவாக்குவது செலவைக் குறைக்க உதவும். பயிரிட நிலம், ஆற்றல் தயாரிப்பு போன்ற கூடுதல் நன்மைகளும் இதனால் கிடைக்கும். உலகின் பல பகுதிகளில் இம்மாதிரி வழிமுறைகள் புழக்கத்தில் இருக்கின்றன. இயற்கையான அல்லது உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் கழிவுகளை மக்கச் செய்கின்றன அல்லது செயல்பட விடாமல் தடுக்கின்றன.

நீர்ப்பிடிப்பு மேலாண்மை (watershed management) தண்ணீர் நெருக்கடியைத் தீர்க்க உதவும் மிக முக்கியமான இயற்கையோடு ஒட்டிய தீர்வு. விண்ணிலிருந்து மண்ணில் விழும் ஒவ்வொரு துளி நீரையும் நீர்நிலைகளிலும் நிலத்தடியிலும் சேமிப்பதுதான் நீர்ப்பிடிப்பு மேலாண்மை. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, வேலைவாய்ப்பை உருவாக்க, உயிரியல் பன்மையைப் பாதுகாக்க, பருவநிலை மாற்றங்களைத் தாக்குப் பிடிக்க என வேறு கூடுதல் நன்மைகளையும் அதன் மூலம் பெறலாம்.

ஒரு மாநகரம் வளர்ச்சி பெறும்போது வரும் சவால்களைச் சந்திப்பதில் இயற்கை எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது என்பதற்கு உதாரணமாக சென்னையை எடுத்துக் கொள்ளலாம். முன்பெல்லாம் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யும்போது ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆறுகள், வடிகால் அமைப்புகள் எல்லாம் நிலத்தடி நீரைப் புதுப்பித்துக் கொண்டு கூடுதல் நீரை கடலுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க உதவும். ஆனால் மாநகர வளர்ச்சி என்ற பெயரில் பல ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களும் தொழிற்சாலைகளும் எழுப்பப்பட்டுவிட்டன. கூடுதல் நீரை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்த கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்ற நீர்நிலைகள் இன்று திறந்தவெளி சாக்கடைகளாக மாறிவிட்டன. கூடுதல் மழைநீரை உறிஞ்சிப் பாதுகாத்துக் கொண்டிருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம் இன்று அந்தப் பணியைச் செய்ய முடியாததாக ஆகிவிட்டது.

இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை நோக்கி நாம் செல்வோமானால் நீர் மேலாண்மையை மேம்படுத்த முடியும், நீர்ப்பாதுகாப்பையும் பெற முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.