வெள்ளை ஆதிக்கம்

இன்று பலரும் காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் போன்ற சொற்களை அர்த்தமின்றி கையாளுகிறார்கள். மாணவர்களோ, ஏதோ பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள், காந்தி வந்தார், சுதந்திரம் வாங்கித் தந்தார் என்பது போலப் படித்துவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால் உண்மையில் வெள்ளையர்கள் தங்கள் ஆதிக்கத்துக்குக் கையாண்ட முறைகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை நாம் இன்று தக்க நூல்கள் வழியாக மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. சான்றாக, ஈ. போலேர் (E. Boelaert) என்பவர் தமது நூலான La situation demographique des Nikundo-Mungo என்பதில், முன்னாள் பெல்ஜியக் காங்கோ பிரதேசத்தில் சுவாபா என்ற மாநிலத்தில் மக்களினங்கள் வெள்ளையர் நுழைவால் அழிந்துபோன நிலையை எடுத்துக்காட்டுகிறார். நவீன நாகரிகத்தின் நுழைப்பு, அந்த இனத்தின் உடல்சார்ந்த, ஒழுக்கவியல் சீரழிவுக்குக் காரணமாகியது. அவர்களுக்குள் பரிச்சயமே அற்ற கர்ப்பத்தடுப்பு, கருக்கலைப்பு, பாலியல் நோய்கள், மத நம்பிக்கைகளிலும் நடைமுறைகளிலும் தளர்ச்சி போன்றவை நிகழ்ந்தன. இவற்றின் விளைவாக, அந்த இனத்தின் இளைஞர்கள் தங்கள் பாரம்பரியமான பொதுக்குடி அமைப்பிலிருந்து வேரறுக்கப்பட்டனர், அதனால், அவர்களின் குடும்பங்கள், வழக்காறுகள், மரபுகள், தனிப்பட்ட உறவுகள் ஆகியவை சீர்குலைந்து போயின. மேற்கண்ட நூலாசிரியர் கூறுகின்றவாறு, அவருடைய புலனாய்வுகளின் போது (1950), திருமணமான நூறு பெண்களுக்கு முப்பது குழந்தைகள் வீதமே இருந்தன. நான்கில் மூன்று குடும்பங்களுக்குக் குழந்தைகள் இல்லை. இவர்களில் பாதிப் பெண்கள் மலட்டுத்தனம் கொண்டவர்களாக இருந்தார்கள். பின்னர் 1970 அளவில் அந்த இனமே முற்றிலும் அழிந்துபோயிற்று. தங்கள் பொருளாதார மேம்பாட்டுக்காக இம்மாதிரி வெள்ளையர்கள் அழித்து ஒழித்த இனங்கள் ஆயிரக்கணக்கானவை. ஒருகாலத்தில் இப்படி நேரடியாக மனிதர்களை அழித்தவர்கள் இன்று பொருளாதாரத்தால் தாக்கிச் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லா ஆத்திகவாதிகளுக்கும் ஒரு கேள்வி: ஆமாம், கடவுள் என்பவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?


வேண்டாம் இது

ஒரு காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வோக்ஸ்டேடு சட்டம் என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. மதுவைத் தடைசெய்யும் சட்டம் அது. ஆகவே மது விற்பனை தடைசெய்யப்பட்டு, மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால் குளிர்நாடாகையினாலும், அங்கு மது அருந்துவது பலகாலமாகப் பழகிவிட்ட ஒன்றானபடியினாலும் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவேயில்லை. கள்ளச்சாராயம் பெருகி, அரசாங்கத்துக்குக் கிடைக்கவேண்டிய வரி கிடைக்காமல் போயிற்று. ஊழல் பெருகிறது. இறுதியில் அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.
இந்தியாவிலும் இதே கதிதான். 1970க்குப் பின் எத்தனைமுறை தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கும் மது ஏற்பும் மாறிமாறிக் கொண்டுவரப்பட்டுள்ளன? இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் கொள்கைதான் என்ன? ஒருபுறம் எங்கு பார்த்தாலும் அரசாங்கமே “குடி குடியைக் கெடுக்கும்”, “மது அருந்துவது உடலுக்குத் தீங்கு பயக்கும்” என்று விளம்பரம் செய்கிறது. மறுபுறம் அதுவே மதுக்கடைகளை ஏராளமாகத் திறந்து மது விற்பனையும் செய்கிறது. அப்படியானால் குடியைக் கெடுப்பதும், மக்கள் உடலுக்குத் தீங்கு பயப்பதும்தான் அரசாங்கத்தின் கொள்கையா? ஒன்று, மதுக்கடைகளை மூடுங்கள். அல்லது போலியான விளம்பரத்தையாவது நிறுத்துங்கள். அண்மையில் மத்திய மதுவிலக்கு அமைச்சர்வேறு, மதுக்கடைகளுக்கு ஆதரவாக, அவற்றை மூடக்கூடாது என்று பேசியிருக்கிறார். ஒன்றில் உறுதியாக இருக்கலாமே?


இனியவை என்றும்

நேற்றுக் காலை திரைப்படங்களுக்கும் பாடல்களுக்கும் இசையமைத்த திரு. எம். எஸ். விஸ்வநாதன் மறைந்துவிட்டார். உண்மையில் அவர் ஒரு மாமேதைதான். ஏறத்தாழ 1953 முதலாக இசையமைத்தவர். சிறு வயது முதலாகவே பெயர் அறியாமலே நான் அவருடைய இரசிகன் என்றாலும் அவர் இசையமைத்து உணர்வு பூர்வமாக நான் இரசித்த சிறப்பான பாடல் (காலத்தால் அது எவ்வளவு பழமையானது என்பது தெரிய வந்தது பின்னால்தான்) ‘கூவாமல் கூவும் கோகிலம்’ என்பதாக இருக்கலாம் (1954). பிறகு அவர் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் மனத்தைக் கொள்ளை கொண்டவை. ‘நினைக்கத தெரிந்த மனமே’ முதலான சோக கீதங்கள், ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’… என எத்தனை எத்தனையோ. அவருக்கு பெரிய கௌரவங்கள் ஒன்றும் தேடிவரவில்லை என்றாலும் எத்தனை எத்தனையோ பாடல்கள் வழியாக எத்தனை எத்தனையோ இரசிகர்கள் மனங்களில் அவர் வாழ்ந்துகொண்டிருப்பார். என்றும் கேட்க இனியவை அவருடைய இசையமைப்புகள். குறிப்பாக, மலைக்கோட்டை திரு. வி. ராமமூர்த்தியுடன் இணைந்து அவர் இசையமைத்த பாடல்கள் இனியவை, என்றும் இனியவை.


எளிய உண்மைகள்

நாம் புத்தகங்களில் படிக்கும் சில மெய்ம்மைகள் விசித்திரமாக இருக்கின்றன. சான்றுக்கு இரண்டு மட்டும் இன்றைக்கு.
1. நமது வயிற்றில் ஹைடிரோகுளோரிக் அமிலம் இருக்கிறது என்று தெரியும். உணவுப்பொருள்களைச் செரிக்க இது பயன்படுகிறது. உணவுப்பொருள் எதுவும் வயிற்றில் இல்லை என்றால் வயிற்றில் புண்ணை (அல்சர்) உண்டாக்கிவிடுகிறது. வயிற்றிலுள்ள இந்த அமிலம் ஐந்தாறு நாட்களில் ஒரு ஷேவிங் பிளேடையே ஜீரணித்துவிடும் சக்தி படைத்தது என்கிறார்கள். (அதற்காக, உணவுப்பண்டங்கள் விலை ஏறிக்கிடக்கும் இந்த நாட்களில் பிளேடே தேவலாம் என்று தின்னத் தொடங்கிவிடாதீர்கள்!)
2. ஒருவர் சாப்பாடு எதுவும் இல்லாமல் 25 முதல் 30 நாள்வரை கூட இருக்கலாம். ஆனால் தூக்கமின்றிப் பதினொரு நாள்தான் உயிர்வாழ முடியும். (ஆனால் தூக்கமற்றவர்களின் அருகில் சென்று எவரும் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள், அப்புறம் நீங்கள் பதினொரு நாள் அல்ல, ஓரிரு நாள்தான் உயிர்வாழ முடியும்!)


சடங்குகள்

வேதகாலத்திற்குப் பிறகு பலரும் சமயச் சடங்குகளை எதிர்த்ததால் வேதச் சடங்குகள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன, ஆனால் இன்றுவரை அவை தொடரவே செய்கின்றன. சான்றாக, ஹைடிரஜன் குண்டு பரவுவதைத் தடுக்க 1957இல் இந்திய பிராமணர் குழு ஒன்று மிகப்பெரிய யாகம் ஒன்று செய்தது.

பிறகு, 1970இல், இந்திரா காந்தியை எதிர்த்த அன்றைய அரசியல்வாதிகள், அவர் இறப்பதற்கென யாகம் வளர்த்த ஒரு புரோகிதனை ஏற்பாடு செய்தனர். ஆனால் வேடிக்கை, இந்திராகாந்தியைக் கொல்ல ஏற்பாடு செய்யப்பட்ட புரோகிதனே யாகம் செய்துகொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்துபோனான்.

கேள்வி: அவனது கர்மவினை, அப்படித்தானே?

பதில்: நவீன இந்துமத நோக்கிலிருந்து பார்த்தால், ஒருவேளை, ஆமாம். ஆனால் இந்திய-பிராமணக் காலப்பகுதியில் இந்தியர்கள் கர்மம் (கர்மவினை) என்ற கருத்தைக் கண்டுபிடித்திருக்கவில்லை. உண்மையில் அவர்கள் அப்போது இந்துக்களாகவே இல்லை. ஏதோ தங்களுக்கென சில புனித நூல்கள்-வேதங்கள், பிறகு வேதக்கடவுளர்களை அழைக்க மிக விரிவான சடங்குகள் கொண்ட அமைப்பு இவற்றைத்தான் வைத்திருந்தார்கள்.
(கீழைத்தத்துவம் என்ற நூலில், இந்தியத் தத்துவம் என்ற பகுதியிலிருந்து)
இன்றும் விடாமல் யாகங்கள் செய்கிறார்கள். எதற்கு, யார் என்று உங்களுக்கே தெரியும்.


பண்பாட்டுப் பெருமிதம்

சீனப்பேரரசர் சி’என் லங்கிற்கு பிரிட்டனின் மூன்றாம் ஜியார்ஜ் அரசன் வணிக அனுமதி வேண்டி ஒரு தூதுக்குழு அனுப்பியிருந்தான். அதற்கு அவர் 1793இல் தனது தூதர் மூலமாக இங்கிலாந்தின் அரசனுக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதில் அவர் ‘பணிவுடன்’ தெரிவிக்கிறார்:
“அரசனே, நீ பல கடல்களுக்கப்பால் வாழுகிறாய். இருப்பினும் உனது தாழ்மையான ஆசையால் தூண்டப்பட்டு, எங்கள் நாகரிகத்தின் சிறப்புகளில் பங்கு கொள்ள விரும்பி, உன் ஞாபகச்சின்னங்களை ஏந்திய ஒரு தூதுக் குழுவினரை அனுப்பி யிருக்கிறாய். எங்கள் நாகரிகத்தைப் பெறவேண்டிய ஒரு பேராவலை எங்கள் தெய்விக வமிசத்தின்மீது உனக்குள்ள மரியாதை தூண்டியிருக்கிறது என்று நீ உறுதி கூறினாலும், எங்கள் சடங்குகளும் சட்டவிதிகளும் உனக்குரியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன ஆதலின் உனது தூதுக்குழுவினர் எங்கள் நாகரிகத்தின் அடிப்படைக் கூறுகளைப் பெறமுடிந்தாலும், எங்கள் நடத்தை முறைகளையும் வழக்காறுகளையும் உன் அந்நிய மண்ணுக்கு மாற்றித் தர முடியாது.
எங்கள் நாகரிகத்தின் கம்பீரமான மேன்மை வானுலகின்கீழுள்ள எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது, எல்லா தேசங்களின் அரசர்களும் அவர்களுடைய விலைமதிப்பற்ற பரிசுகளை நிலத்தின் வழியாகவும் நீரின் வழியாகவும் அனுப்புகிறார்கள். நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம் என்பதை உன் தூதுவரே நேராகப் பார்த்து அறிந்துகொள்வார். விசித்திரமான, வினைத்திறம் மிக்க பொருள்கள்மீது நான் மதிப்பு வைக்கவில்லை, எனவே உன் நாட்டின் உற்பத்தி யாளர்களால் எனக்குப் பயனில்லை”.
இதை நாம் கம்பீரம் என்பதா? தன் நாட்டின்மீதுள்ள, பண்பாட்டின் மீதான பற்று என்பதா? எவ்விதம் நாம் நோக்கினாலும், பிரிட்டன் புகையிலையைச் சீனாவில் இறக்குமதி செய்ததும், அதை விரைவில் தன் வணிகத்திற்கும் ஆட்சிக்கும் உட்படுத்தியதும் வரலாற்று மெய்ம்மைகள். ஆனால் இதுபோன்றதொரு பதிலை எந்த இந்திய அல்லது இந்தியப்பகுதிகளில் உள்ள ஆட்சியாளர்களாவது பிரிட்டனுக்குச் சொன்னது உண்டா?


கற்க கசடற

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத் தக
என்பது வள்ளுவர் அறிவுரை. மிக ஆழமான பொருள் இக்குறளில் அடங்கியிருக் கிறது. கற்க/ கசடறக் கற்க/ கற்பவை கற்க/ கற்றபின் அதற்குத் தக நிற்க என இதைக் கொண்டு கூட்டவேண்டும்.

கற்பது ஆரம்பநிலை. எனவே யாராக இருப்பினும் அவர்கள் கற்பதைத் தூண்டவேண்டும். ஆகவே “கற்க” என்றார்.
அடுத்தநிலை, பிழையின்றிக் கற்பது. பிழையோடு கற்றால் பயனில்லை. எந்தத் துறையாயினும் (கணிதம், அறிவியல், சமூகம், இலக்கியம்…) நாம் முன்னோர் எழுதியவற்றைத்தான் முதலில் கற்கிறோம். பிறகுதான் நம் சிந்தனை வருகிறது. எனவே கற்பனவற்றைப் பிழையறக் கற்க வேண்டும். கசடு என்பது பிழை என்பதை மட்டும் குறிப்பதல்ல, இன்னும் ஆழமான பொருளுடையது. “கசடறக் கற்க”.

அடுத்த நிலை “கற்பவை கற்க”. உலகில் எழுதப்பட்ட எல்லாவற்றையும் ஒருவன் கற்பது இயலாது. எழுதப்பட்ட அனைத்தும் கற்கத் தகுதி உள்ளனவும் அல்ல. எனவே கற்க வேண்டியநூ ல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும்.

கடைசியாகக், கற்கவேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்றபின், அதற்கு ஏற்ப நடக்கவேண்டும். இல்லாவிட்டால் வெறும் ஏட்டுப்படிப்புதான். அதனால் தனக்கும் பயனிலை, உலகிற்கும் பயனில்லை.

பாரதியார் கூறியபடி, திருக்குறள் உலகினுக்கு அளிக்கப் பெற்ற செல்வமாக இருக்கட்டும். தமிழர்கள் அதை ஒருபோதும் மறக்கலாகாது.


விதி என்றால் என்ன?

விதி என்பது ஏதோ மேலிருந்து நமக்கு அளிக்கப்படுவது, அல்லது கடவுளால் தலையில் எழுதப்படுவது என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் பணக்காரனாக இருந்தால், அது அவன் தலைவிதி, நான் ஏழையாக இருந்தால் இது என் விதி என்கிறார்கள்.

ஆனால் நொந்தவர்கள் புலம்புவதற்குத்தான் விதி என்பது பயன்படுகிறதே ஒழிய, நிம்மதியாக இருப்பவர்களோ வசதியாக இருப்பவர்களோ அதைப் பயன்படுத்துவதில்லை. எவனும் “நான் வசதியாக இருப்பது என் விதி” என்று சொல்வதில்லை.

விதி என்றால் என்ன என்று அர்த்தப்படுத்தப் பலகாலமாக முயற்சி செய்தும் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது நம் “விதி” போலும்! ஒருவேளை இப்படி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

விதி என்றால் சட்டம். “நீ என்ன செய்கிறாயோ அதற்குத் தகுந்த பலனை அடைகிறாய்” என்பது விதி. இதைத்தான் இயற்பியலில் நியூட்டனின் மூன்றாம் விதியும் சொல்கிறது. ஒவ்வொரு செயலுக்கும், எப்போதும் சமமான எதிர்விளைவு இருக்கிறது என்கிறது. “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று நம் முன்னோர் சொன்னார்கள்.
இதுதான் ‘விதி’ போலும். ஓரளவு -ஓரளவுதான்! -தனிமனிதர்களுக்குப் பொருந்துகின்ற இவ்விதி, பெரும் மனிதக்குழுக்களுக்கு, நாடுகளுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை.


எல்லாமே கொள்ளைதான்

“எல்லாமே வயித்துக்குத் தாண்டா” என்று பாடினான் ஒரு சினிமாப்  பாட்டுக்காரன். இன்று எல்லாமே நாங்கள் கொள்ளையடிப்பதற்குத்தான் என்கிறார்கள் வியாபாரிகள். கணினி மென்பொருள்கள் பரவியபோது தாங்களாகவே வைரசுகளையும், ட்ராஜன்களையும், வோம்களையும் உருவாக்கினார்கள். பிறகு அதற்கு ஆண்டிவைரஸ், ஆண்டிமால்வேர் என்று சொல்லிப் பணம் குவித்தார்கள். நோய்களை உருவாக்கினார்கள். பிறகு அவற்றுக்கு மருந்துகளை உருவாக்கி விற்கிறோம் என்று சொல்லிக் கொள்ளையடித்தார்கள்.

நம் ஊர் வியாரிகளும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல. அரிசி சாப்பிட்டால் நீரிழிவு, கோதுமை மாவில் கலப்படம், மைதாமாவில் வேதிப்பொருள் என்று இன்றுவரை எல்லா இணைய தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பிரச்சாரம். மாற்று? கிராமப்புறங்களில் சாப்பிடுவதுபோல கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, சிறுதானியங்கள், பருப்புவகைகள் சாப்பிடுங்கள் என்றார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் சிறு தானிய மோகம். ஆனால் விலைதான் உச்சாணிக்கொம்பில். தினை 120 ரூபாய் கிலோ, கேழ்வரகு 100 ரூபாய் கிலோ, சாமை 110 ரூபாய் கிலோ, எல்லாம் பாலிஷ் செய்யப்பட்டவை (அரிசி போலத்தான்) பருப்புகள் எதுவும் 100ரூபாய்க்குக் குறைவில்லை. ஆனால் அரிசியே 50 ரூபாய்க்குக் கிடைக்கிறது. எந்த கிராமத்தானும் மலைவாழ்குடியினனும் கேழ்வரகை, தினையைக் கிலோ 100 ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிட முடியும்?


இயற்கையின் விந்தை

இயற்கையின் அனுபவங்கள் எல்லாம் முன்னரே இருந்தாலும், இன்று புதிதாகத் தோன்றுகின்றனவே அது எப்படி? இலட்சக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து காதலுணர்வு தொடர்ச்சியாக இருந்தாலும் இன்று புதிதாகக் காதலிப்பவன் தான்தான் அதை முதலில் செய்வது போன்ற உணர்வும் அனுபவமும் பெறுகின்றானே அது எப்படி? எவ்வளவு வியப்பான செய்தி இது! இதைத்தான் மாயத் தோற்றம் (இல்யூஷன்) என்றனர் போலும் முன்னோர்.