பூனையும் புலியும்

அடைத்துவைக்கப்பட்ட பூனையும் ஒரு புலியாக மாறிவிடும் என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. எப்போதுமே ஆட்சியாளர்கள் கவனத்தில் வைக்கவேண்டிய பொன்மொழி இது. பாவம், அவர்கள்தான் பூனைகளைப் புலி களாக்குகிறார்கள், பிறகு வருத்தப்படுகிறார்கள்.


நாலடியார்

நாலடியார் என்னும் நீதிநூலைச் சமண முனிவர் பலர் இயற்றினர் போலும்.
அவற்றில் கிடைத்த பாடல்கள் நானூற்றைப் பதுமனார் என்பவர் தொகுத்து வைத்தாராம்.
இதன் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கிறார்கள்.
திருக்குறளோடு ஒப்பிட இயலாத நூலாக இருப்பினும், அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்ற பிரிவு இதில் இருக்குமாறு தொகுக்கவே பலசமயங்களில் குறளோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளனர். கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 401 பாட்டுகளைக் கொண்டுள்ளது. குறள்போலன்றி, கடவுள் என்ற சொல்லையே இது ஆள்கிறது.
“நான் எண்ணிய காரியம் முடிவதற்குக் கடவுளைத் தொழுகிறேன்” என்கிறார் இயற்றியவர். இவை யாவுமே குறள் மரபுக்கு மாறானவை. மேலும், திருக்குறள் பொருட்பால் என்பதில் செல்வத்தைப் போற்றுகிறதே ஒழிய இழித்துக்கூறவில்லை. நாலடியாரோ செல்வம் நிலையாதது என்பதில்தான் (முதல் அதிகாரம்-செல்வ நிலையாமை) தொடங்குகிறது. சமண முனிவர்கள் இயற்றியதாலோ என்னவோ நிலையாமைதான் நாலடியாரின் மையக்கரு. (செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை…).
ஆனால் இலக்கியச் சிறப்பு-அதாவது கருத்துணர்த்தல் சிறப்பு இந்நூலில் நன்கு அமைந்துள்ளது. சான்றாகக் கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே, நிலம் என்பதை அளக்கும் மையமாக வைக்கிறார் ஆசிரியர். கடவுள் கால்கள் நிலத்தில் தோயா இயல்பு கொண்டவன். ஆகவே நாங்கள் எங்கள் தலையை நிலத்தில் படியவைத்து அவனைப் போற்றுகிறோம் என்ற முரண் சிறப்பாக உள்ளது.
மேலும் நோக்குவோம்.


கலப்பு

தமிழில் மாதப் பெயர்கள் பாதி சமஸ்கிருத அல்லது பிராகிருதத் திரிபுகளாகவும் பாதி தமிழ்ப்பெயர்களாகவும் உள்ளன. சைத்ர, வைசாக என்று தொடங்கி பால்குன வரை செல்வன வடநாட்டு மாதப் பெயர்கள். சித்திரை, வைகாசி எனத் தொடங்கி பங்குனி வரை தமிழ்மாதப் பெயர்கள் செல்கின்றன. சித்திரை என்பது சைத்ர என்பதன் திரிபு, வைசாக என்பது வைகாசி ஆயிற்று, பால்குன என்பது பங்குனி ஆயிற்று, ஆஷாட என்பது ஆடி ஆயிற்று என்பவற்றை ஒப்புக் கொள்ள முடியும். ஆனால் ஆனி, தை, மாசி போன்ற பெயர்கள் தூயதமிழ்ப் பெயர்களாக உள்ளன. மேலும் வடமொழியிலிருந்து ஏற்கப்பட்ட பெயர்களும் நன்கு தமிழ்வடிவப் படுத்தப்பட்டுள்ளன. பூர்வபாத்ரபத என்பது புரட்டாசி என அழகான தமிழ் வடிவம் கொண்டிருக்கிறது. ஸ்ராவண என்பது ஆவணி என அழகான தமிழ்ப் பெயராகக் காட்சியளிக்கிறது.மிருகசீரிஷ என்ற பெயர் மிக அழகாக மார்கழி ஆகியிருக்கிறது.
எவ்விதம் ஒருமொழி பிற மொழிகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துவைத்திருந்தனர். இப்போதோ தலைகீழாக நடக்கிறது. எவ்வித மரபுமின்றி மனம்போன போக்கில் மொழியைக் கையாளுகிறார்கள். ஈச்வர என்ற வடசொல் அழகாக ஈசுவரன் என்றே தமிழில் எழுதப்பட்டு, சொல்லப்பட்டு வந்தபோதிலும் இன்று வேண்டுமென்றே தமிழ் மரபுக்கு மாறாக ஈஷ்வர் என்று எழுதுகின்ற, பேசுகின்ற திமிரைக் காண்கிறோம்.


குடியைக் கெடுக்கும்

குடி தீயதென்று முன்பே ஒருமுறை சுட்டிக்காட்டினோம். இப்போது அதற்காக ஒருவர் தியாகி ஆகவேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்கிறது. அரசாங்கமே தீய செயல்களுக்கு ஆதரவாக இருப்பதும், அதை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதும் மிக மோசமான நடவடிக்கைகள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காவல் துறையும் இவ்விஷயத்தில் எந்திரத்தனமாக நடந்துகொண்டிருக்கிறது. குடியை எதிர்ப்பவர்களைத் துன்புறுத்துவது அதன் பணி என்றால், ஆதரிப்பது தான் அதன் வேலை என்று ஆகிறதல்லவா? அதனால் எந்திரத்தனமாக நடக்காமல் நன்மை தீமைகளைச் சீர்து£க்கிப் பார்த்து நடந்தால் நல்லது. நல்லனவற்றை வலியுறுத்தும் ஒவ்வொரு செயலுக்கும் ஒருவர் உயிரைத் தரவேண்டுமா?


இருமையல்ல, ஒருமை

சாதாரண நிலையில்தான் இருமை இருக்கிறது. மிகத் தீவிர எல்லையில் இருமை மறைந்து ஒருமை நேர்ந்துவிடுகிறது. சான்றாக, யார் உண்மையான ஆன்மிக வாதியோ அவன்தான் உண்மையான நாத்திகவாதி என்கிறார் டெரிடா. ஏனெனில் ஆத்திகன், நாத்திகன் இருவருக்குமே கடவுள் என்ற ஒன்று இல்லை என்பதில் சந்தேகமே கிடையாது என்கிறார் அவர்.


கனவு கண்டால் போதுமா?

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த டாக்டர் அப்துல் கலாம் நேற்று காலமாகிவிட்டார். அவருடைய இழப்பு தமிழ்நாட்டுக்குப் பெரிய வருத்தத்தை அளிக்கிறது. குடியரசுத் தலைவர் பதவியில் அவர் இருந்தபோது இரண்டாம் முறையும் அநேகமாகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சிகள் காரணமாக அவ்வாறு அவர் தேர்வுசெய்யப்படவில்லை.
மிகச் சிறந்த பண்புகள் வாய்ந்த, தம் வாழ்க்கையைச் சமூகத்திற்கே அர்ப்பணித்த பொதுநலத்தொண்டர் அவர். திருமணமும் செய்துகொள்ளாதவர். தமிழகத்தில் பொதுத்தொண்டில் ஈடுபடுவோர் கடைசிக் காலத்தில் அதை வெறுத்துத் தமிழ்நூல்களிலோ, அறிவுரைகளிலோ இறங்கிவிடுவது வழக்கம். அதுபோலத்தான் கலாமும் தம் இறுதிக்காலத்தில் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் அறிவுரை புகட்டுவதில் ஈடுபட்டுக் “கனவு காணுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
கனவு காணுதல் தவறல்ல, ஆனால் அது ஒரு பாதிதான். மற்றொரு பாதி நமது சூழல் எப்படி அதற்குக் கைகொடுக்கிறது என்பதில் இருக்கிறது. இதை அறியாதவரா கலாம்? ஆனால் அறிவுஜீவிகள் பலரும்கூட, சூழலின் பாதிப்பினை உணர்வதில்லை, மறுக்கவே செய்கிறார்கள். கனவு கண்டால் நிறைவேறி விடும் என்று சொல்வதற்கு அவருடைய தனிப்பட்ட சிந்தனையோ, சமூகவியல் பார்வையின்மையோ வாழ்க்கை அனுபவங்களோ எதுவும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இது போன்றவற்றைச் சொல்வதற்குத்தான் “365 நாளில் வெற்றி பெறுவது எப்படி?” போன்ற அமெரிக்கத் தனமான நூல்கள் இருக்கின்றனவே?


மதமான பேய்

திருக்குறள் அரிய நூல் என்கிறோம். அத்தகைய குறளே புறச்சமயத்தைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டது எனக்கருதித் “தீக்குறளைச் சென்று ஓதோம்” என்று பாடினார் கவியரசி ஆண்டாள். திருப்பள்ளியெழுச்சி பாடிய விப்ரநாராயணர், சமணர் சாக்கியர் போன்றோர் தலைகளை “அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மா நகருளானே” என்று பாடினார். பெரும் பக்தர்களாக மட்டுமன்றிக் கவி வல்லவர்களாகவும் இருந்தவர்களே இப்படி என்றால் அக்காலச் சாதாரண மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?
இன்றைய நமது தோழர்களோ என்றால், இத்தனையையும் உண்மையில் செய்துகாட்டியே தீருவேன் என்கிறார்கள். மக்கள் எப்போது நல்ல மனநிலை பெற்று நிம்மதியாக வாழுவது?


குறளில் சில விசித்திரங்கள்

திருக்குறள் மிக உயர்ந்த நூல் என்பதில் நமக்குத் தனிப் பெருமை. இருப்பது நியாயம்தானே? இங்கே அதன் பெருமைகளை நான் பேச வரவில்லை. சில விசித்திரங்களை எடுத்துக்காட்டுவது மட்டுமே நோக்கம்.
கடவுள் என்ற சொல்லைத் திருவள்ளுவர் எங்குமே கையாளவில்லை. ஆனால் முதல் அதிகாரத்துக்குக் கடவுள் வாழ்த்து என்று யார் எப்போது பெயர் வைத்தார்கள், எப்படி அது நிலைபெற்றது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
எல்லா நூலாசிரியர்களும் தாங்களே கடவுளை வாழ்த்துவதுதான் மரபு. அறநூல்களுக்குப் பிற்பட்ட காலத்திலிருந்து இதுதான் தமிழில் காணப்படும் வழக்கு. ஆனால் திருவள்ளுவர், தாம் கடவுளை வாழ்த்தவில்லை, மற்றவர்களைத்தான் வாழ்த்துமாறு சொல்லுகிறார். இது ஒரு வேடிக்கை அல்லவா?
அறத்துப்பால், பொருட்பால்களை நேரடியாகத் தமது அறிவுரை முறையில் அளித்த திருவள்ளுவர், ஏன் காமத்துப்பாலில் அத்தகைய முறையினைக் கையாளவில்லை? ஏன் சங்க அக இலக்கிய மரபின்படி நாடகப்பாங்காக அமைத்திருக்கிறார்? இதுவும் ஒரு விசித்திரமே.


கேள்விப்பட்டவை

நீங்கள் சமையல் எரிவாயு பயன்படுத்துபவரா? அப்படியானால், ‘காஸ்’ தீர்ந்துபோய் வேறொரு சிலிண்டர் வேண்டுமென்று கேட்கத் தொலைபேசியில் ‘புக்’ செய்யும்போது தப்பித் தவறிக்கூடய பூச்சியம் (0) எண்ணை அழுத்திவிடாதீர்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கு மானியம் (subsidy) வேண்டாம் என்று நீங்கள் கூறிவிட்டதாகத் தீர்மானித்து, பணம் தருவதை நிறுத்திவிடுவார்கள். பிறகு மறுபடியும் பெறுவது கடினம்.
நம் நாட்டில் சளிபிடித்தால் (பிடிக்காவிட்டாலும் கூடத்தான்) கண்ட இடத்தில் துப்புவதும் சளியைச் சிந்துவதும் எல்லாம் நம் மனிதர்கள் செய்பவை. தூய்மையான இந்தியாவுக்கு முன்னால் நல்ல சுகாதாரப் பழக்கங்களை நம்மவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். உதாரணமாக, சளியைச் சிந்தினால் உங்களுக்குத்தான் முதல் அபாயம். அதனால் ஏற்படும் அழுத்தத்தினால் சளி, சைனஸ்களுக்குள் செல்கிறது. அதனால் வைரஸோ பாக்டீரியாவோ உள்ளே பரவி மேலும் நிலைமை மோசமாகிறது. வெளியிலோ தொற்று பரவுகிறது.


அளப்புகள்

இந்தியாவைப் போன்றதொரு மோசமான நாட்டில் ஏன் பிறந்தோம் என்று பலசமயங்களில் பெரும் மனச்சோர்வு ஏற்படுகிறது. 1947இல் விடுதலை கிடைத்தது. 2047 வந்தாலும் நம் நாடு முன்னேறப்போவதில்லை. பாதி இந்தியாவை வெளிநாட்டினரிடம் விற்றாகிவிட்டது. மீதி இந்தியாவை அரசியல்வாதிகள், முதலாளிகள், இருப்பவர்கள் பங்குபோட்டுக்கொண்டார்கள். எல்லாவற்றுக்கும் வரி வாங்குவார்கள், ஆனால் எதுவும் செய்ய மாட்டார்கள். சாலை வரி வாங்குவார்கள், நல்ல சாலை எங்கும் இல்லை. கல்வி வரி வாங்குவார்கள், கூடவே நாம் கல்விக் கொள்ளையர்களுக்கும் அழ வேண்டும். தண்ணீர் வரி வாங்குவார்கள், ஆனால் அரசாங்கமே தண்ணீரை விற்பார்கள். எதையும் மக்களுக்குச் செய்வது அரசாங்கத்தின் கடமை கிடையாது. மக்கள் வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகமாம். மற்றபடி எந்தக் கேள்வியையும் கேட்கக்கூடாது.
ஐந்தாண்டுகளில் பெரும் பொருளாதாரச் சரிவு காத்திருக்கிறது. பத்தாண்டுகளில் தண்ணீரே இல்லாமல் போய் கும்பல்கும்பலாய்ச் சாகப்போகிறார்கள். இதுதான் இந்தியா!