ஒரு காலத்தில் ஆரோக்கியமான மூன்று பிள்ளைகளைக் கொண்ட விவசாயி ஒருவன் இருந்தான். முதல் இரண்டு மகன்களும் காளைகளைப் போன்ற வலிமையும், குறி தவறாமல் எய்வதற்குக் கழுகினைப் போன்ற கூரிய பார்வையும் கொண்டவர்கள். மூன்றாவது மகனோ, சற்றே ஒல்லியான தோற்றத்துடன், சிந்தனையாளன் போலக் காட்சியளித்தான்.
தானே தன் பண்ணைநிலத்தை யாருக்குக் கொடுப்பது என்று முடிவு செய்வதைவிட, அவர்கள் தாங்களே தங்கள் எதிர்காலத்தைத் தேடட்டும் என்று முதிய விவசாயி நினைத்தான்.
ஆகவே அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். வழியில் பாதைக்கருகில் ஓர் எறும்புப் புற்று உயரமாக இருந்தது. சலிப்புற்ற இரண்டாவது மகன் அதை உதைக் கச் சென்றான். அதிலிருந்து பயந்தோடும் எறும்புகளைப் பார்த்து மகிழ்ச்சியடையலாம் என்று நினைத்தான்.
“உதைக்காதே” என்றான் மூன்றாமவன். “அவைகளுக்கும் பாதுகாப்பாக வாழ உரிமை இருக்கிறது.”
கொஞ்சம் கழித்து அவர்கள் தெளிந்த நீரைக்கொண்ட ஓர் ஏரியை அடைந்தார்கள். தங்கள் மூட்டைகளைப் பிரிக்க உட்கார்ந்தார்கள். சில வாத்துகள் ஏரியில் இறங்கி நீந்தின.
“இவற்றில் ஒன்று நம் உணவுக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்” என்று முணுமுணுத்தவாறு தன் வில்லைத் தேடினான் மூத்தமகன்.
“நகராதே!” வாத்துகள் அதிர்ந்து, ஏரியிலிருந்து பறந்தோடி விடுமாறு உரக்கக் கத்தி னான் இளைய மகன். “பலநாட்களுக்குத் தேவையான உணவு நம்மிடம் இருக்கிறதே!”
ஒரு முதிய காட்டின் விளிம்பை அவர்கள் அடைந்தபோது எழுத்து மறையும் நேரம். இரவுநேரத்தில் தங்கள் கூடுகளுக்குத் தேனீக்கள் திரும்பிய சத்தம் அமைதியைக் குலைத்தது.
“ஆஹா, என் ரொட்டிக்குக் கொஞ்சம் தேன் இருந்தால் போதுமே”….ஓசையைத் தொடர்ந்து அவன் சென்றான். உள்ளீடற்ற ஒரு மரத்தின் அருகில் சென்ற போது அதன் பட்டைமீது தேன் சொட்டிக்கொண்டிருந்தது.
மற்ற இருவரும் அவனைத் தொடர்ந்து சென்றார்கள். நடுமகன் சொன்னான், மரத்தை நாம் எரித்தால், எழும் புகையில் தேனீக்களை விரட்டிவிடலாம்.
“அப்புறம் காடு முழுவதையும் உசுப்பிவிடுவதா?” என்றான் இளையவன். “தேனீக்களை அவற்றின் வீட்டில் விடுங்கள்.”
மற்ற இரண்டு சகோதரர்களும் எரிச்சலடைந்தார்கள். இவனை விட்டுவிட்டு வந்திருந் தால் நன்றாக இருக்குமே!
களைத்தவாறு நடந்து, இருண்ட காட்டின் மத்தியில், பாழடைந்த ஒரு குடிசையை அடைந்தார்கள் அவர்கள். மூத்தவன் கதவைத் தட்டினான். நரைத்த முதியவர் ஒருவர் அவர்களை உள்ளே அனுமதித்தார்.
“எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று ஓர் இனிய குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், ஓர் அழகிய இளம்பெண்.
“எங்கள் அதிர்ஷ்டத்தை நாடிப் புறப்பட்டிருக்கிறோம்” என்று விடையிறுத்தான் மூத்தவன்.
“இதயத்தில் துணிச்சலும் கண்களில் கூர்மையும் இருந்தால் அதை நீங்கள் அடைந்து விட்டதாகவே வைத்துக் கொள்ளலாம்” என்றார் முதியவர்.
“இரண்டுமே எங்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்று பெருமையடித்துக் கொண்டான் இரண்டாமவன்.
“அப்படியானால்,” தொடர்ந்தார் முதியவர், “உங்களில் யார் இந்தக் கற்பலகையைப் பார்த்து முயற்சி செய்யத் தயார்?”
மூத்தவன் தைரியமாக எழுந்து கற்பலகையிலிருந்த செய்தியைப் படித்தான். “காட்டில் இருக்கும் முத்துகளைக் கண்டுபிடிக்கவேண்டும். சூரியன் மறையும்போது ஒரு முத்து கூட விடுபட்டிருக்கக்கூடாது. இல்லையென்றால் நீ கல்லாகிவிட நேரும்.”
கிழவரைப் பார்த்து மூத்தவன் கேட்டான்: “எத்தனை முத்துகள் விடுபட்டிருக்கின்றன?”
“ஆயிரம்.”
விடியலில் அவன் புறப்பட்டான். இலைகளும் கொடிகளும் மூடியிருந்த காட்டின் தரையைப் பார்த்து ஏறத்தாழப் புலம்பிவிட்டான்.
குன்றுகளின் பின்னால் சூரியன் மறைவதற்குள் பத்து முத்துகளை மட்டுமே பொறுக்கமுடிந்தது. குந்திய நிலையிலேயே சிலையாகிவிட்டான்.
இரண்டாம் சகோதரன் மறுநாள் காலையில் போனான். சூரியாஸ்தமனத்திற்கு முன் இருபது முத்துகளை மட்டுமே சேகரித்தான். அவனும் சிலையாகிவிட்டான்.
மூன்றாமவனின் முறை வந்தது. புறப்பட்டவுடன் அவன் காதில் ஒரு சன்னமான குரல் கேட்டது. “சஞ்சலப்படாதே.”
திகைத்துப்போய் காலடியைப் பார்த்தான். பாதை முழுவதும் எறும்புகளின் கூட்டம். மெல்லிய குரல் ஒன்று சொல்லியது: “நான்தான் நீ காப்பாற்றிய எறும்புக்கூட்டத்தின் அரசன். நாங்கள் உன்னைக் காப்பாற்றுவோம்.”
சூரியன் மறையும் நேரத்தில் அவன் ஆயிரம் முத்துகளைக் கொண்ட இரண்டு பெரிய பைகளுடன் வீட்டுக்குத் திரும்பிவந்தான்.
இரண்டாவது பணிக்கு அவனை முதியவர் அனுப்பினார். ஒரு பெண்ணின் மோதிரம். ஓர் ஆழமான கருத்த ஏரியில் விழுந்துவிட்ட அதைத் தேடி எடுக்கவேண்டும். சற்றேறக் குறைய அழுதேவிட்டான் இளைஞன்.
“பயப்படாதே” என்று ஒரு வாத்தின் ஒலி கேட்டது. “நீ ஏன் கூட்டத்தைக் காப்பாற் றினாய். உன்னை நாங்கள் காப்பாற்றுவோம்” என்றது தாய் வாத்து.
சூரியாஸ்தமன நேரத்தில் கையில் பொன் மோதிரத்தோடு திரும்பினான் இளைஞன்.
மூன்றாவது ஒரு பணிக்கு அவன் மீண்டும் அனுப்பப் பட்டான். ஒரு உயர்ந்த மாளிகையின் மேல்மாடிக்குச் செல்லவேண்டும். சென்றான். அங்கே மூன்று பட்டாடை அணிந்த பெண்கள்-அச்சாக ஒரே மாதிரி இருந்தார்கள்-உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்திதான் இளவரசி. தன் இளவரசனுக்காகக் காத்திருப்பவள்.
“ஐயோ” விசனித்தான் இளைஞன். “எப்படி நான் இவர்களில் என் இளவரசியைக் கண்டுபிடிப்பேன்?”
கவலைப் படாதே என விர்ரென்று ஒரு குரல் கேட்டது. அது இராணித் தேனியின் குரல். அது ஒவ்வொரு பெண்ணாக முகர்ந்துகொண்டே சென்றது. மூன்றாவது பெண் ணின் உதட்டில் போய் அமர்ந்தது.
அந்த அழகிய இளவரசிக்கு ஒரு தகுதியான கணவன் கிடைத்தான் என்று காட்டின் ஜந்துக்கள் யாவும் குதூகலித்தன.
-ஜெர்மானிய நாட்டுப்புறக் கதை.
மொழிபெயர்த்த_சிறுகதை
விருந்தாளி
மொழிபெயர்ப்புக் கதை
விருந்தாளி (ஆல்பர்ட் காம்யூ)
[ஆல்பர்ட் காம்யூ ஃப்ரெஞ்சு மொழியின் சிறந்த எழுத்தாளர். இருத்தலியத் தத்துவ ஞானி. அல்ஜீரியாவில் ஃப்ரெஞ்சுக் காலனியாதிக்கத்தில் பிறந்தவர். நாடகாசிரியர், இதழியலாளர், சிறுகதையாளர், விமரிசகர்.
‘விருந்தாளி’ காம்யூவின் மிகச் சிறந்த சிறுகதையாகக் கருதப்படுகிறது. 1957இல் ஒரு சிறுகதைத்தொகுதியில் வெளியானது. அரசாங்கத்துக்குத் தான் செய்ய வேண்டிய கடமைக்கும் நீதிசார்ந்த நட்புக்கும் இடையிலான மோதலை இக்கதை காட்டுகிறது. காலனியாதிக்கம், அந்நியமாதல், நீதிக்கும் சுதந்திரத்திற்குமிடையிலான முரண்பாடு ஆகியவற்றில் காம்யூவின் ஆர்வத்தை இக்கதை காட்டுகிறது.]
””
அந்த ஆசிரியன், பள்ளிக் கட்டிடத்தை நோக்கி இரண்டுபேர் ஏறிவருவதைக் கண்டான். ஒருவன் குதிரைமேல், மற்றவன் நடந்து. ஒரு மலைச்சரிவில் அந்தப் பள்ளிக் கட்டிடம் இருந்தது. அதற்கு முன்னிருந்த செங்குத்தான மேட்டை அவர்கள் இன்னும் ஏறவில்லை. அந்த உயர்ந்த, ஆளரவமற்ற மேட்டுநிலத்தின் கற்களினு£டாக, பனி அதிகம் விழுவதனால் மெதுவாக முன்னேறினார்கள். சற்றைக்கொருமுறை குதிரையின் கால் இடறியது. அவர்கள் பேச்சு இன்னும் காதுக்கு எட்டவில்லை. ஆனால் குதிரையின் மூச்சு பனியில் புகைபோல வந்தது. இந்தச் சரிவுமேல் ஏறிவர இன்னும் அரைமணிநேரம் போல் ஆகும் என்று கணித்தான் ஆசிரியன். கடுங்குளிர். ஸ்வெட்டர் போட்டுக்கொண்டுவரப் பள்ளிக்குள் சென்றான்.
யாருமற்ற, பனி உறைந்த வகுப்பறையைக் கடந்தான். கரும்பலகையில் நான்கு வித வண்ணங்களில் வரையப் பட்டிருந்த ஃப்ரான்சின் நான்கு முக்கிய ஆறுகள் தங்கள் முகத்துவாரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன. எட்டு மாதக் கடும் வறட்சிக்குப் பின்னர், மழையின் இடையீடின்றியே, திடீரென அக்டோபர் மத்தியில் பனிவிழ ஆரம்பித்துவிட்டது. அதனால் அந்த மேட்டுநிலத்தின் பலவேறு பக்கங்களிலிருந்தும் வந்து படித்துக் கொண்டி ருந்த இருபது பையன்களும் நின்று விட்டார்கள். வெப்பநிலை கொஞ்சம் சீரடைந்தால் திரும்பி வருவார்கள். அந்த வகுப்பறையை அடுத்திருந்த ஒரே அறைதான் தாருவின் வசிப்பிடம். அதை மட்டுமே அவன் இப்போது வெப்பப்படுத்தி வந்தான். வகுப்பறை ஜன்னல்களைப் போலவே அதன் ஒரே ஜன்னலும் தெற்குப் பார்த்ததுதான். அந்த ஜன்னலின் வெளிப்புறமாகப் பள்ளிக்குச் சில கிலோமீட்டர் து£ரத்தில் மேட்டுநிலம் தெற்கு நோக்கிச் சரிந்தது. நல்ல வெப்பநிலையில் பாலைவனத்தை நோக்கி விரிந்த இடைவெளியினு£டே ஊதாநிற மலைகள் நன்றாகத் தெரியும்.
கொஞ்சம் கதகதப்பூட்டிக்கொண்டு தாரு அந்த இரு மனிதர்களையும் பார்த்த ஜன்னலுக்குத் திரும்பினான். இப்போது அவர்கள் இருவரும் கண்ணுக்குப் புலப்படவில்லை. சரிவில் ஏறத்தொடங்கியிருப்பார்கள். இரவுமுதல் பனிவிழுவது சற்றே குறைந்திருந்ததால் அவ்வளவு இருட்டாக இல்லை. காலைப்பொழுது அழுக்கேறிய மங்கிய பிரகாசத்தோடு விடிந்தது. மேகக்கரை விலகியும் வானம் பிரகாசம் கொள்ளவில்லை. பகல் இரண்டு மணியாகியும் இப்போதுதான் விடிந்ததுபோலிருந்தது. ஆனால் சென்ற மூன்று நாட்களைவிட இப்போது பரவாயில்லை. அப்போது கனத்த பனிமழை. அடர்ந்த இருளினூடே சிறு சுழற்காற்று வகுப்பறையின் கதவுகளை தடதடத்துக் கொண்டிருந்தது. எப்போதாவது கொட்டகைக்குப் போய் கோழிக்குஞ்சுகளுக்கு இரைபோடுவது, அல்லது கணப்புக்குக் கரிகொண்டு வருவது தவிர, தாரு தன் அறையிலேயே பொழுதைக் கடத்தினான். நல்ல வேளையாக, வடக்கில் அருகிலிருந்த கிராமமாகிய தாஜித்திலிருந்து வந்த லாரி இந்தப் பனிமழைக்கு இரண்டு நாட்கள் முன்னமே அவனது தேவைகளைக் கொண்டுவந்திருந்தது. அது மீண்டும் இன்னும் நாற்பத்தெட்டு மணிநேரத்தில் திரும்பும்.
அது இல்லாவிட்டாலும், ஒரு முற்றுகையைச் சமாளிக்கும் அளவுக்கு அவனிடம் உணவு இருநதது. பஞ்சத்தில் அடிபட்ட குடுமபத்தினரின் பிள்ளைகளுக்குத் தருவதற்காக நிர்வாகத்தினர் விட்டிருந்த கோதுமை மூட்டைகளால் அந்தச் சிறிய அறை அடைந்திருந்தது. பெரும்பாலும் எல்லாக் குடும்பத்தினருமே இந்த வறட்சியில் பாதிப்புக்குள்ளாகி யிருந்தனர். யாவரும் ஏழைகள். தினந்தோறும் அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களுக்கான பங்கீட்டை தாரு தருவான். இந்தப் பனிமழையால் அவர்கள் அதைப் பெறமுடியவில்லை. ஒருவேளை சில பிள்ளைகளின் தகப்பன்களோ, அண்ணன்களோ இன்றுமாலைகூடத் தங்கள் பங்கீடுகளைப் பெறுவதற்கு வரலாம். அடுத்த அறுவடை வரை எப்படியாவது இந்த இருப்பை வைத்துத்தான் தாக்குப் பிடிக்க வேண்டும். பிரான்சிலிருந்து இப்போது கோதுமை மூட்டைகள் கப்பலில் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. மிக மோசமான பருவநிலையைத் தாண்டியாயிற்று. ஆனால் இந்தப் பஞ்சத்தை நினைவிலிருந்து அழிப்பது கஷ்டமாயிருக்கும். சதை ஒட்டிய எலும்புகளோடு மக்கள் பிசாசுகள் போல வெயிலில் கூட்டம் கூட்டமாக அலைந்தனர். நாளுக்கு நாள் அந்த மேட்டுநிலம் எரிந்துபோன கரிக்கட்டி ஆயிற்று. பூமி கொஞ்சம் கொஞ்சமாக வெடிப்பு விட்டுப் பிளந்தது. எரிதலினால், காலடியில் கற்கள் பொடிப்பொடியாகிப் புழுதியாயின. கொடும் பஞ்சம். ஆயிரக் கணக்கான ஆடுமாடுகள் இறந்துபோயின. இங்குமங்குமாக மனிதர்களும்தான்.
யாரும் அறியாமலே. இந்தக் கொடும் வறுமைக்கு முரணாக, இவன் மட்டும் ஒரு மடாதிபதிபோல, தனது பள்ளிக் கட்டிட வீட்டில் வாழ்ந்தான். வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள்- குறுகிய படுக்கை-பெயிண்ட் அடிக்காத அலமாரிகள்-அவனுக்கு ஒரு கிணறு, வாராந்திர உணவு, நீர்த்தேவையின் நிறைவு-தன்னை ஒரு பிரபுபோல அவன் உணர்ந்தான். இப்போது திடீரென்று, மழையின் முன்வரவின்றி, இந்தப் பனிமழை. இப்படித்தான் இந்தப் பிரதேசம். எந்த உதவியும் செய்ய விரும்பாத இந்த மனிதர்களைப் போலவே கொடியதாக இருந்தது. ஆனால் தாரு இங்கே பிறந்தவன்; வேறு எங்குச் சென்றாலும் தன்னை அந்நியனாகவே உணர்ந்தான்.
பள்ளியின் முன்னிருந்த மொட்டை மாடிமீது அடியெடுத்துச் சென்றான். அந்த இருவரும் இப்போது மேட்டில் பாதி ஏறிவிட்டிருந்தனர். குதிரை மேல் வருபவன் பால்தூச்சி என்று தெரிந்தது. தாருவுக்கு நெடுநாளாகத் தெரிந்த முன்னாள் இராணுவ வீரன் அவன். பால்தூச்சி பிடித்திருந்த கயிற்றின் முனையில், இரு கைகளும் கட்டப்பட்டு, தலைகுனிந்து, அராபியன் ஒருவன் வந்தான். பால்தூச்சி தாருவைப் பார்த்து சந்தோஷமாகக் கையை ஆட்டினான். தாரு அராபியனின் தோற்றத்தில் மூழ்கியிருந்ததால் அதை கவனிக்கவில்லை. அராபியன், மங்கிப்போன நீல நிற ஜெலாபா அணிந்திருந்தான். அவன் கால்களில் வெறும் குளியலறைச் செருப்புகள். பதப்படாத கம்பளியாலான சாக்ஸ் அணிந்திருந்தான். தலையில் ஷேஷே எனப்படும குறுகிய நீண்ட குல்லாய். அராபியனுக்கு அடிபடாமலிருப்பதற்காக, பால்தூச்சி குதிரையின் கடிவாளத்தைத் தளரவிட்டு நடத்தினான். அது மெதுவாக ஊர்ந்து முன்னேறியது.
கூப்பிடுதூரம் வந்ததும், “எல் ஆமூரிலிருந்து (அல்ஜீரியாவில் ஒரு நகரம்) மூன்று கிலோமீட்டர் வர ஒரு மணிநேரம்” என்று பால்தூச்சி கத்தினான். தாரு பதில் சொல்லவில்லை. அவர்கள் வருவதைப் பார்த்தபடியே இருந்தான். அராபியன் ஒருமுறை கூடத் தலையை உயர்த்தவில்லை. மாடியருகே வந்ததும், “இருவரும் கயிற்றை விட்டுவிடாமல் வந்து வெப்பப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றான் தாரு. பால்தூச்சி குதிரையிலிருந்து கஷ்டப்பட்டு இறங்கினான். முள்போன்ற மீசைக்கடியிலிருந்து ஆசிரியனைப் பார்த்துச் சிரித்தான். சிறிய கருத்த கண்களும், வெயிலில் பழுப்பேறிய நெற்றியில் அவை ஆழமாகப் பதிந்திருந்த விதமும், சுருக்கங்கள் சூழ இருந்த அவன் உதடுகளும் அவனை மிகுந்த கவனமுள்ளவனாகவும் உழைப்பாளியாகவும் காட்டின. தாரு கடிவாளத்தைப் பிடித்துக் குதிரையைக் கொட்டடியில் கொண்டு விட்டான். பள்ளிக்கூட அறையில் காத்திருந்த இருவரிடமும் திரும்பிவந்தான். தன் அறைக்கு அவர்களை இட்டுச்சென்றான். “வகுப்பறையில் கணப்பு ஏற்றுகிறேன். அங்கு இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கும்” என்றான்.
மீண்டும் தன் அறைக்கு அவன் திரும்பியபோது பால்தூச்சி படுக்கையில் படுத்துவிட் டிருந்தான். அராபியனைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டிருந்தான். அராபியன் ஸ்டவ் பக்கத்தில் சப்பணமிட்டு உட்கார்ந்திருந் தான். கைகள் மட்டும் கட்டியபடியே இருந்தன. ஷேஷே, தலையில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்க, ஜன்னலுக்காகப் பார்த்தபடி இருந்தான். நீக்ரோக்களை நினைவூட்டும் அவனது தடித்த, பெரிய, மிருதுவான உதடுகளைத்தான் தாரு முதலில் கவனித்தான். அவனது மூக்கு நேராகவும், கண்கள் ஜுரவேகத்திலிருப்பது போலவும், கருத்தும் இருந்தன. ஷேஷேவுக்கு வெளியே தெரிந்த நெற்றி, பிடிவாத குணத்தை வெளிப்படுத்தியது. கால மாறுதல்களால் உரமேறிய அவன் தோல், குளிரால் நிறமிழந்திருந்தது. முகத்தில் நிதானமற்ற, எதற்கும் அஞ்சாத தீவிரமாகப் போராடுகின்ற களை இருந்தது. “பக்கத்து அறைக்குப் போ” என்றான் ஆசிரியன். “கொஞ்சம் மசாலா டீ தருகிறேன்”. “ரொம்ப நன்றி” என்றான் பால்தூச்சி. “அப்பா! என்ன வேலை! சீக்கிரம் ஓய்வு பெற்றால் நன்றாக இருக்கும்.” அராபிய மொழியில் “நீயும் வா” என்றான். அராபியன் மெதுவாக எழுந்து கட்டப்பட்ட இருகைகளையும் முன்னால் பிடித்தபடி வகுப்பறைக்குள் சென்றான்.
டீயோடு, தாரு ஒரு நாற்காலியையும் கொண்டுவந்தான். ஆனால் பால்து£ச்சி ஏற்கெனவே தானாக ஒரு டெஸ்க் எதிரில் உட்கார்ந்திருந்தான். டெஸ்குக்கும் ஜன்ன லுக்கும் இடையில் ஆசிரியன் நிற்கும் மேடையில் ஸ்டவ் எதிரில் அராபியன் உட்கார்ந் திருந்தான். தாரு டீ டம்ளரை அராபியனிடம் நீட்டியபோது, பால்து£ச்சி அவன் கட்டுண்ட கைகளை நோக்கித் தயங்கினான். “அவன் கைகளை அவிழ்க்கலாமே.” “செய்யலாம், கட்டியது பிரயாணத்திற்காகத்தான்.” இதற்குள் டீ டம்ளரைத் தரையில் வைத்து விட்டு, தாரு கட்டை அவிழ்க்க மண்டியிட்டிருந்தான். எதுவும் சொல்லாமல் அராபியன் ஜுரம் நிரம்பிய கண்களால் அவனைப் பார்த்தான். கைகள் சுதந்திரமடைந்ததும், வீங்கிய மணிக்கட்டுகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்தான். பிறகு டீ கிளாஸை எடுத்து வேகமாக உறிஞ்சிக் குடிக்கலானான்.
“நல்லது, இப்போது எங்கே பயணம்?” என்றான் தாரு.
பால்தூச்சி டீயிலிருந்து தன் மீசையை உயர்த்தினான்.
“உன்னிடந்தான் தம்பி” என்றான்.
“விசித்திரமான மாணவர்கள்! இரவை இங்கேதான் கழிக்க உத்தேசமா?”
“இல்லை, நான் எல் ஆமூருக்குத் திரும்புகிறேன். நீ இவனை டிங்க்வீட்டில் சேர்த்துவிடு. போலீஸ் தலைமையகத்தில் தேடப்படுபவன் இவன்” என்று கூறியவாறே பால்தூச்சி தாருவை நட்பார்ந்த புன்னகையோடு நோக்கினான்.
“இது என்ன கதை? என்னை ஏன் இதில் இழுக்கிறாய்?” என்றான் தாரு.
“இல்லை தம்பி, அதுதான் கட்டளை”
“கட்டளையா? நான் ஒன்றும்….” தாரு தயங்கினான். அந்த வயதானவனை ஏன் புண்படுத்த வேண்டுமென்று நினைத்துச் சொன்னான், “அதாவது அது என் வேலை அல்ல என்றேன்”
“என்ன, இப்படிப் பேசுகிறாய்? போர்க்காலமென்றால் ஜனங்கள் எல்லா வேலையையும்தான் செய்ய வேண்டும்”
“அப்படியானால், போர் அறிவிப்பு வரட்டும், காத்திருக்கிறேன்”
பால்தூச்சி மறுப்பதுபோல் தலையை ஆட்டினான், பிறகு சொன்னான், “சரி, ஆனால் ஆணை இப்போதே இருக்கிறது. அது உன்னையும் கட்டுப்படுத்தும். விஷயம் கொந்தளிப்பாக உள்ளது. கலகம் வெடிக்கப் போகிறதென்ற பேச்சு பரவலாக இருக்கிறது. நாமும் ஒருவகையில் அதில் சிக்கியிருக்கிறோம்”
தாரு இன்னும் பிடிவாதமாகவே இருந்தான்.
“கேள் தம்பி! உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. கொஞ்சம் புரிந்துகொள். ஒரு துறை முழுவதையும் கண்காணிக்க எல் ஆமூரில் நாங்கள் பத்துப் பன்னிரண்டு பேர்தான் இருக்கிறோம். எனவே நான் உடனே திரும்பி விரைய வேண்டும். இவனை அங்கே வைத்திருக்க இயலாது. ஊரே கொந்தளிக்கிறது. இவனை விடுவிக்க வேண்டும் என்றார்கள். நீ நாளைப் பொழுதிற்குள் இவனை டிங்க்விட்டிற்கு அழைத்துப்போய்விடு. உன்னைப் போல வலுவான இளைஞனுக்கு இருபது கிலோமீட்டர் ஒரு தூரமில்லை. அதற்குப் பின் எல்லாம் முடிந்துவிடும். நீ, உன் மாணவர்கள், உன் சொகுசான வாழ்க்கை, இதற்குத் திரும்பிவிடலாம்”
சுவருக்குப்பின் குதிரை கனைப்பதும் தரையை உதைத்துக்கொண்டிருப்பதும் கேட்டன. தாரு ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். சொல்லிவைத்தாற்போலக், காலநிலை தெளிவுபட்டுக்கொண்டிருந்தது. பனிபடர்ந்த மேட்டுநிலத்தின்மேல் ஒளி பரவி வந்தது. எல்லாப் பனியும் உருகிய பின், சூரியன் தன் ஆட்சியை மீண்டும் மேற்கொள்வான். கல்பரவிய அந்நிலத்தை எரிப்பான். இன்னும் பலநாட்களுக்கு, மனிதனின் தொடர் பற்றுப்போன அந்தத் தனிமைப் பெருவெளியில் தன் வறண்ட ஒளியை மாறாத ஆகாயம் வீசிக்கொண்டிருக்கும்.
“அப்படி என்ன செய்துவிட்டான் அவன்?” பால்தூச்சியிடம் திரும்பியவாறே கேட்டான். அவன் வாயைத் திறக்குமுன்பே தொடர்ந்தான், “பிரெஞ்சுமொழி பேசுவானா?”
“ஒரு வார்த்தை கூடத் தெரியாது. நாங்கள் இவனை ஒருமாதமாகத் தேடிவந்தோம். ஆனால் அவர்கள் மறைத்துவைத்திருந்தார்கள். தன் சிற்றப்பன் மகனைக் கொன்று விட்டான் இவன்”
“நமக்கு எதிரியா?”
“இருக்கச் சாத்தியமில்லை. என்றாலும் உறுதியாகச் சொல்லமுடியாது.”
“ஏன் கொன்றான்?”
“குடும்பச் சண்டை என்று நினைக்கிறேன். ஒருவன் அடுத்தவனுக்கு தானியம் தரவேண் டும் என்று தோன்றுகிறது. தெளிவாக இல்லை. சுருக்கமாகச் சொன்னால் ஆட்டு ரோமம் வெட்டும் கத்தியால் அவனை-ஒரு ஆட்டைப் போலவே-கசக்! வெட்டி விட்டான்”
பால்தூச்சி தன் கழுத்தில் விரலைக் குறுக்கே வைத்து அறுப்பதுபோன்ற பாவனை காட்டினான். அராபியனின் கவனம் இவன் மேல் திரும்பி ஒருவிதக் கவலையுடன் இவனைப் பார்த்தான். தாருவுக்கு அவன்மேல் திடீரெனக் கோபம் உண்டாயிற்று. எல்லா மனிதர்களின் மேலும், அவர்களின் அழுகிநாறும் வெறுப்பின்மேலும், ஓயாத அவர்கள் போராட்டத்தின்மேலும், அவர்கள் இரத்தவெறியின்மேலும். ஸ்டவ்மீது வைத்த கெட்டில் ஓசையிட்டது. பால்தூச்சிக்கு இன்னும் கொஞ்சம் டீ கொடுத்தான். மீண்டும் அராபியனுக்கும். அவன் பேராவலோடு இரண்டாம் தரமும் குடித்தான். அவனது உயர்த்திய கைகளின்வழி அவன் ஜெலாபா விரிந்து திறந்தது. ஆசிரியன் அவனது ஒல்லியான சதைப்பிடிப்புள்ள மார்பை நோக்கினான்.
“நன்றி தம்பி, நான் இதோ கிளம்பிவிட்டேன்” என்றான் பால்தூச்சி. தன் ஜேபி யிலிருந்த கயிற்றை எடுத்துக்கொண்டு அராபியனை நோக்கிப்போனான்.
“என்ன சொல்கிறாய்?” தாரு வறட்சியாகக் கேட்டான். மனந்தளராது பால்து£ச்சி கயிற்றைக் காட்டினான்.
“கட்ட வேண்டாம்”
அந்த வயதான இராணுவவீரன் தயங்கினான். “உன் இஷ்டம். சரி, உன்னிடம் ஆயுதம் ஏதாவது தற்காப்புக்கு இருக்கிறதா?”
“என் வேட்டைத் துப்பாக்கி இருக்கிறது”
“எங்கே?”
“டிரங்குப் பெட்டியில்”
“அதைப் படுக்கையில் உன்னோடு வைத்துக்கொள்”
“ஏன்? என்னிடம் பயப்பட ஒன்றுமில்லை”
“உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது, தம்பி! கலவரம் உண்டானால் யாருக்குமே பாதுகாப்பில்லை. நாம் எல்லாரும் ஒரே நிலையில்தான் இருக்கிறோம்”
“நான் என்னைக் காத்துக்கொள்வேன். கலகக்காரர்கள் வருவதைக் காண எனக்கு அவகாசம் இருக்கிறது”
பால்தூச்சி சிரிக்க ஆரம்பித்தான். அவன் மீசை அவன் வெண்பற்களை மூடியது. “அவகாசம் இருக்கிறதா, சரி சரி. அதைத்தான் நானும் சொல்லவந்தேன். உன் மண்டையின் மூலையில் கொஞ்சம் கோளாறுதான். அதனால்தான் உன்னை நேசிக்கிறேன். என் மகனும் இப்படித்தான் இருந்தான்”
அதேசமயம் தனது ரிவால்வரை எடுத்து மேஜைமீது வைத்தான். “வைத்துக்கொள். எனக்கு எல் ஆமூர் போய்ச்சேர இரண்டு ஆயுதங்கள் தேவையில்லை” என்றான்.
மேஜையின் கருப்புப் பின்னணியில் அந்த ரிவால்வர் பளபளத்தது. அந்த இராணுவத் தான் தன்னைப் பார்க்கத்திரும்பியதும், தாருவுக்குத் தோல்மணமும், குதிரைச் சதை நாற்றமும் கலந்துவீசின.
“பால்தூச்சி, இதெல்லாம்-நீ கொண்டுவந்த ஆள் உட்பட-எனக்குக் குமட்டுகிறது. நான் அவனைக் கொண்டுபோய் விடமாட்டேன். சண்டைபோட என்றால் நான் தயார் தான். ஆனால் இந்த வேலை வேண்டாம்”
அந்த வயதான இராணுவத்தான் இவன் முன்னால் வந்து கடுமையாக இவனைப் பார்த்தான்.
“நீ ஒரு முட்டாள்” கடுமையாகச் சொன்னான். “எனக்கும்தான் பிடிக்கவில்லை. பல ஆண்டுகள் மனிதனைக் கட்டிப் பழகிவிட்டாலும, ஒருவனைக் கயிற்றால் கட்டுவது பழக்கமாகாதுதான். இன்னும் கேட்டால், அவ்வாறு கட்ட வெட்கப்படுகிறேன். ஆம், வெட்கம்தான். ஆனால் இவர்களை இவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிட முடியாது”
“நான் இவனைப் போலீசில் ஒப்படைக்கமாட்டேன்” என்றான் தாரு மறுபடியும்.
“இது கட்டளை தம்பி, மறுபடியும் சொல்கிறேன்”
“சரி! அவர்களிடம் போய் நான் சொன்னதைத் திருப்பிச் சொல்லு. இவனை நான் ஒப்படைக்க மாட்டேன்”
பால்தூச்சி சிந்திக்க முயற்சி செய்தது வெளிப்படையாகவே தெரிந்தது. அராபியனை யும் பிறகு தாருவையும் பார்த்தான். கடைசியாக முடிவுசெய்தான்.
“நான் அவர்களிடம் எதுவும் சொல்லமாட்டேன். என்னை நீ கைவிடுவதானால் அப்படியே செய். உன்னைக் குற்றம் சொல்ல மாட்டேன். இந்தக் குற்றவாளியை ஒப்படைக்க வேண்டும் என்று எனக்குக் கட்டளை இருக்கிறது. நான் அதை நிறைவேற்றுவேன். இப்போது எனக்காக நீ இந்தத் தாளில் எழுதிக் கையெழுத்திடு”
“தேவையில்லை. நீ இவனை என்னிடம் விட்டுச் சென்றாய் என்பதை நான் யாரிடமும் மறுக்கமாட்டேன்”
“நீசத்தனமாக நடந்துகொள்ளாதே. நீ உண்மையைத்தான் சொல்வாய் என்று எனக்குத் தெரியும். இந்தப் பக்கத்தைச் சேர்ந்தவன் நீ, அதற்கும் மேல், மனிதன். ஆனாலும் நீ கையெழுத்திடவேண்டும். அதுதான் சட்டம்”
தாரு டிராயரைத் திறந்தான். சதுரவடிவிலிருந்த ஊதாநிற மைப்புட்டியை எடுத்தான். பிள்ளைகளுக்குக் கையெழுத்துக் கற்றுக்கொடுப்பதற்கான மாதிரியை எழுதுவதற்காக வைத்திருந்த சார்ஜண்ட் மேஜர் என்று பொறிக்கப்பட்ட பேனாவையும் அதன் தாங்கி யையும் எடுத்தான். கையெழுத்திட்டான். இராணுவத்தான் அதை பத்திரமாக மடித்துத் தன் பைக்குள் போட்டுக்கொண்டான். பிறகு கதவை நோக்கி நகர்ந்தான்.
“கொஞ்சம் இரு. வருகிறேன்”
“வேண்டாம்” என்றான் பால்தூச்சி. “பணிவாக நடந்துகொண்டு பயனில்லை. என்னை அவமதித்துவிட்டாய் நீ”
தன் இடத்திலேயே அசையாமல் உட்கார்ந்திருந்த அராபியனைப் பார்த்தான், பால்தூச்சி. மோப்பம் பிடிப்பதுபோல் மூச்சுவிட்டான். திரும்பிக் கதவைநோக்கி நடந் தான். “தம்பி வருகிறேன், வந்தனம்” என்றான். கதவு அவனுக்குப் பின் அறைந்து மூடியது. பனியால் அவன் நடை சற்றே தள்ளாடியது. கோழிக்குஞ்சுகள் பயத்தில் இறக்கை அடித்துப் பறந்தன. ஒருநொடிக்குள் அவன் ஜன்னலின் வெளிப்புறம் குதிரையின் கடி வாளத்தைப் பிடித்து இழுத்துச் செல்வது தெரிந்தது. அந்தச் சிறிய மேட்டை நோக்கி, நேராக, திரும்பாமல் சென்றான். அவன் குதிரையும் கண்ணிலிருந்து மறைந்தது.
தன்னையே அசையாமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த கைதியிடம் சென்றான் தாரு. அவனிடம் அராபிய மொழியில் “பொறு” என்று சொல்லிவிட்டு, படுக்கையறை நோக் கிச் சென்றான். அதேசமயத்தில் ஏதோ நினைப்பு வந்து, மேஜைக்கு வந்தான். ரிவால் வரை எடுத்து தன் ஜேபியில் போட்டுக்கொண்டான். திருமபிப்பார்க்காமல் தன் அறைக்குப் போனான்.
கொஞ்ச நேரம், வானத்தில் இருள் கவிவதைப் பார்த்தவாறே, சந்தடியற்ற மோனத்தைக் கேட்டவாறே படுக்கையில் கிடந்தான். போருக்குப்பின் வந்த சில நாட்களில் இவனை மிகவும் துன்பப்படுத்தியது இந்த அமைதிதான். உயர்மேட்டு நிலத் தையும் பாலைவனத்தையும் பிரிக்கும் சிறு குன்றுகளின் அடிப்பாகத்திலிருந்த ஒரு சிறு நகரத்தில்தான் அவன் வேலை கேட்டான். அங்கே வடக்கில், பச்சையும் கருப்புமான பாறைச்சுவர்கள், தெற்கில் இளஞ்சிவப்பும் மஞ்சளானவையுமான பாறைகள். என்றும் ஓயாக் கோடைகாலத்தின் அறிகுறிகள் அவை. ஆனால் அவன் வடக்கில் இந்த மேட்டுப்பிரதேசத்தில் வேலைக்கு நியமிக்கப்பட்டான். கற்கள் மட்டுமே குடியிருந்த இந்த மேட்டுநில சாம்ராஜ்யத்தின் வெறுமையும் தனிமையும் முதலில் அவனை மிகவும் கஷ்டப்படுத்தின. சிலசமயங்களில் இங்கே உழப்பட்டிருக்கும் நிலம், மனித நடமாட்டத் தைக் காட்டும். அவ்வாறு உழுதது, கட்டடம்கட்டத் தேவையான ஒருவகைக் கற்களைத் தோண்டி எடுப்பதற்கே. இங்கு விவசாயமே, கற்களை விளையச் செய்வதற்குத்தான். இவ்வாறு உழுவதனால் ஆங்காங்கு குழிகளில் நிரம்பும் மென்மையான மண், கிராமங்களின் தோட்டத்திற்கெனச் சுரண்டிச் செல்லப்படும். முக்கால்வாசிப் பிரதேசத்தை வெறும் பாறை கவ்வியிருந்தது. நகரங்கள் திடீரென எழுந்தன, வளம் பெற்றன. பிறகு மறைந்தன. மனிதர்கள் வந்தார்கள். ஒருவரையருவர் நேசித்தார்கள். அல்லது கசப் போடு சண்டையிட்டார்கள். பிறகு செத்துப்போனார்கள். இப்படித்தான் அங்கு வாழ்க்கை. இந்தப் பாலைவனத்தில் யார் ஒருவனும், அவன் விருந்தினனும் முக்கிய மில்லை. இருந்தாலும், தாருவுக்குத் தெரியும், அவர்கள் யாரும் வாழந்திருக்கவே இயலாது.
அவன் எழுந்தபோது, வகுப்பறையிலிருந்து எந்தச் சத்தமுமில்லை. அந்த அராபியன் தப்பி ஓடியிருப்பான். எவ்விதத் தீர்மானமும் எடுக்கத் தேவையின்றித் தான் இருக்கலாம் என்னும் நினைப்பில், தனக்குள் எழுந்த கலப்பற்ற சந்தோஷத்தை உணர்ந்து அவன் வியப்படைந்தான். ஆனால் அந்தக் கைதி அங்கேயேதான் இருந்தான். ஸ்டவ்வுக்கும் மேஜைக்கும் இடையில் நீட்டிப்படுத்துக் கூரையை வெறித்த வாறு இருந்தான். அவனது தடித்த உதடுகள் கவனத்தை ஈர்த்தன. “வா” என்றான் தாரு. அராபியன் எழுந்து அவனைத் தொடர்ந்தான். படுக்கையறையின் ஜன்னல்கீழிருந்த மேஜைக்கு அருகில் ஒரு நாற்காலியைக் காட்டினான். தாருவைத் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்க்காமலே அராபியன் உட்கார்ந்தான்.
“பசிக்கிறதா?”
“ஆம்” என்றான் கைதி.
இருவருக்கு மேஜை அமைத்தான் தாரு. கொஞ்சம் மாவும் எண்ணெயும் எடுத்து அடுப்பில் கேக் செய்ய உருவமைத்தான். பாட்டிலில் அடைக்கப்பட்ட வாயுவால் எரிந்த சிறிய ஸ்டவ்வைப் பற்றவைத்தான். கேக் தயாராகிக் கொண்டிருந்தபோதே கொட்டகைக்குப்போய்ப் பாலடை, முட்டை, குளிர்பதனப் பால், முதலியவற்றைக் கொண்டுவந்தான். கேக் வெந்துமுடிந்ததும் ஜன்னல்விளிம்பில் அதைக் குளிரவைத் தான். பாலில் சிறிது தண்ணீர் சேர்த்தான். முட்டையை அடித்து ஆம்லெட் போட்டான். முன்பின் நகர்கையில் வலது ஜேபியிலிருந்த ரிவால்வர் உறுத்தியது. கையிலிருந்த பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, வகுப்பறைக்குச் சென்று ரிவால்வரை மேஜை டிராயருக்குள் வைத்தான். அறைக்குத் திரும்பியபோது இருள் கவியத் தொடங் கியிருந்தது. விளக்கைப் போட்டு அராபியனுக்குப் பரிமாறினான். “சாப்பிடு” என்றான். கேக் துண்டை எடுத்து வாயருகே கொண்டுபோன அந்த அராபியன் நிறுத்தினான். “நீ?” என்றான்.
“உனக்குப் பின்னால்” என்றவன், “சரி, உன்னோடுதான் சாப்பிடுகிறேன்” என்றான். அவனது தடித்த உதடு சற்றே திறந்தது. கொஞ்சம் தயங்கினான். பிறகு தீர்மானத்துக்கு வந்தவன்போல் சாப்பிடத் தொடங்கினான்.
சாப்பாடு முடிந்ததும அராபியன் ஆசிரியனைப் பார்த்தான். “நீதான் நீதிபதியா?” என்றான்.
“இல்லை. உன்னைச் சும்மா நாளை வரை வைத்திருக்க உத்தேசம்”
“நீ ஏன் என்னுடன் சாப்பிட்டாய்?”
“எனக்குப் பசித்தது”
அராபியன் அமைதியானான். தாரு வெளியே போனான். கொட்டகையிலிருந்து ஒரு மடக்குக் கட்டிலைக் கொண்டுவந்து மேஜைக்கும் ஸ்டவ்வுக்கும் மத்தியில் தன் படுக் கைக்குச் செங்குத்தாகப் போட்டான். மூலையில் பேப்பர் வைக்கும் அலமாரிபோல் பயன்படுத்திவந்த சூட்கேஸ் ஒன்றிலிருந்து இரண்டு போர்வைகளை எடுத்துக் கட்டில் மேல் விரித்தான். பிறகு, தான் செய்ய ஒன்றுமில்லை என்று உணர்ந்தவனாக, கட்டில் மேல் உட்கார்ந்தான். வேறு எதுவும் செய்வதோ எதற்கும் தயாராவதோ தேவை யில்லை. இந்த அராபியனை மட்டும் கவனிக்கவேண்டும். அவன் முகம் கோபத்தில் கொந்தளிப்பதுபோல் கற்பனை செய்துகொண்டே அராபியனைக் கூர்ந்து பார்த்தான். ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை. அந்தக் கரிய மின்னும் கண்களையும் விலங்கு வாயையும் தவிர வேறெதையும் காணமுடியவில்லை.
“நீ ஏன் அவனைக் கொன்றாய்?” தனக்கே ஆச்சரியமூட்டிய ஒரு கோபத்தொனியில் கேட்டான்.
அராபியன் தலையைத் திருப்பிக் கொண்டான். “அவன் தப்பி ஓடினான். நான் துரத்தினேன்”
தாருவை நேருக்கு நேர் பார்த்தான். அவன் கண்களில் துயரம் நிரம்பிய கேள்வி நின்றது. “என்னை அவர்கள் என்ன செய்வார்கள்?”
“பயப்படுகிறாயா?”
அராபியன் உடல் விறைத்தது. கண்களை மீண்டும் வெளித் திருப்பினான்.
“வருத்தப்படுகிறாயா?”
வாயைச் சற்றே பிளந்தவாறே இவனை வெறித்தான் அராபியன். புரியவில்லை என்று தோன்றியது. தாருவின் சஞ்சலம் அதிகரித்தது. அவனது பெரிய உருவம் இரு படுக்கை களுக்கும் இடையில் ஆப்புப் போல் உட்கார்ந்திருந்தது. அதைப் பற்றிய சஞ்சலமும் அசிங்கமும் அவனுள் எழுந்தன.
“அங்கே படு” என்றான் பொறுமையற்ற குரலில். “அதுதான் உன் படுக்கை”
அராபியன் அசையவில்லை. கத்தினான். “எனக்கு பதில் சொல்”. ஆசிரியன் அவனைப் பார்த்தான்.
“நாளை அந்த இராணுவக்காரன் வருவானா?”
“தெரியாது”
“நீ எங்களுடன் வருவாயா?”
“தெரியாது. ஏன்?”
கைதி, எழுந்து ஜன்னல் பக்கம் காலை நீட்டி விரிப்பின் மீது படுத்தான். மின் விளக்கிலிருந்து வந்த வெளிச்சம் நேராக அவன் கண்ணைக் குத்தியது. கண்ணிமைப்பதைக் கொஞ்சம் நிறுத்தி, “நீயும் எங்களோடு வா” என்றான்.
நடுநிசி வந்தும் தாரு தூங்கவில்லை. எல்லா உடைகளையும் கழற்றிவிட்டு படுக்கைக்குப் போய்ப்படுத்தான். எப்போதும் நிர்வாணமாகத்தான் தூங்குவான். ஆனால் தன்மேல் ஒன்றுமேயில்லை என்ற நினைப்பு வந்து யோசிக்க ஆரம்பித்தான். பாதுகாப்பற்ற நிலையிலிருப்பதாகத் தோன்றி உடை அணியும் எண்ணம் தோன்றியது. தோளைக் குலுக்கிக் கொண்டான். அவன் ஒன்றும் குழந்தையில்லை. சண்டை என்று வந்தால் அவன் தன் எதிரியை இரண்டாக முறித்தே போட்டுவிட முடியும். மல்லாந்து படுத்தே அசையாமல், விளக்கு வெளிச்சத்திற்கு நேரே உறங்கும் அவனைப் பார்த்தான். விளைக்கு அணைந்தபோது திடீரென்று இருட்டு சூழ்ந்துகொண்டதுபோல இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நட்சத்திரங்களற்று மந்தமாய்ச் சயனித்திருந்த ஆகாயத்திலிருந்து ஜன்னல் வழியே இரவு மீண்டும் உயிர்பெற்று வந்தது. தன் கால் புறம் அவன் இருக்குமாறு படுத்தான். இன்னும் அந்த அராபியன் அசையாமல்தான் இருந்தான். ஆனால் அவன் கண்கள் திறந்திருந்தன. பள்ளியைச் சுற்றி லேசான காற்று சுழன்றுகொண்டிருந்தது. ஒருவேளை அது மேகங்களைத் துரத்திவிடலாம். சூரியன் மீண்டும் தோன்றலாம்.
இரவு செல்லச் செல்லக் காற்று அதிகரித்தது. கோழிகள் சிறகுகளை அடித்துக் கொண்டன. பிறகு அமைதி. அராபியன் தாருவுக்குத் தன் முதுகைக் காட்டித் திரும்பிப் படுத்தான். அவன் முனகுவதுபோல் கேட்டது. தாரு தன் விருந்தாளியின் மூசசு ஒலியை உன்னிப்பாகக் கவனித்தான். அது கனத்துக் கொண்டே சென்று பிறகு சீராகியது. அந்த மூச்சு அவன் வெகுசமீபத்தில் இருப்பதுபோல உணர்ந்து து£ங்க முடியாமல் ஏதேதோ நினைத்தவாறு இருந்தான். ஒரு வருடமாக அவன் இந்த அறையில் தனித்துத் தூங்கிவந்தான். அராபியனின் இருப்பு அவனைத் தவிப்புக்குள் ளாக்கியது. மேலும் இந்தச் சூழ்நிலையில், அவன ஏற்றுக்கொள்ள மறுத்துவந்த ஒரு சகோதரத்துவ நிலையை அவன்மேல் சுமத்தியதனாலும் அவனை அது நிலைகுலையச் செய்தது. இருந்தாலும் இதுபற்றி அவன் நன்கு அறிந்தே இருந்தான். சிப்பாய்களோ கைதிகளோ யாராயினும் ஒரே அறையைப் பகிர்ந்துகொள்ளும் மனிதர்கள், அவர்கள் உடைகளைக் களையும்போதே தங்கள் கவசத்தையும் கழற்றிவிட்டது போன்ற ஒரு விசித்திரமான நேசத்தை வார்த்துக்கொண்டார்கள். அவர்களது வேற்றுமைகளுக்கு மேல், பழைய காலத்துக் கனவும் கதைப்புமான சமுதாயத்திலிருப்பதுபோன்ற ஒரு சகோதர பாசம் கொண்டார்கள். தாரு தன்னைத்தானே கடிந்துகொண்டான். இவ்விதச் சிந்தனைகளில் அவன் ஈடுபட விரும்பவில்லை. அவன் தூங்கியாக வேண்டியிருந்தது.
கொஞ்ச நேரம் கழித்து அராபியன் மெதுவாக அசைந்தான். அப்போதும் ஆசிரியன் உறங்கவில்லைதான். கைதி இன்னொருமுறை அசைந்ததும் அவன் எச்சரிக்கையினால் இறுக்கம் கொண்டான். தூக்கத்தில் நடப்பவன் போலத் தன் கைகளை மெல்ல ஊன்றி அராபியன் மெல்ல எழுந்தான். படுக்கையில் நேரே உட்கார்ந்து தாருவின் பக்கம் தன் தலையைக் கொஞ்சமும் திருப்பாமல், உன்னிப்பாகக் காதுகொடுத்துக் கேட்பவன் போல் அசையாதிருந்தான். தாருவும் அசையவில்லை. அவனது மேஜை டிராயருக்குள்தான் ரிவால்வர் இன்னும் இருக்கிறது என்பது திடீரென்று நினைவுக்கு வந்தது. உடனே செயல்பட்டுவிடுவது நல்லது. எனினும் அவன் அசையாமலே கைதி யை கவனித்தான். அவன் முன்போலவே பூனைபோன்ற அசைவுடன் காலைத் தரையி லு£ன்றி, அசையாமலிருந்த பிறகு மெதுவாக எழுந்து நின்றான். மிக இயல்பாகவும், அதேசமயம் சந்தடியற்ற முறையிலும் நடக்கத் தொடங்கியதைப் பார்த்த தாரு அவனைக் கூப்பிட இருந்தான். அராபியன் கொட்டகைக்குச் செல்லும் வழியை நோக்கி நேராக அறைக்கோடிக்கு நடந்தான். எச்சரிக்கையோடு தாழைத் திறந்துவிட்டு, தனக்குப் பின், கதவை முழுதும் மூடாதவாறு சற்றே தள்ளிவிட்டு வெளியே சென்றான்.
தாரு அசையவில்லை. ஓடிப்போகிறான் போலும் என்று நினைத்தான். நல்லதுதான். இருப்பினும் கூர்ந்து கவனித்தான். கோழிகள் சிறகடிக்கவில்லை. விருந்தினன் மேட்டு நிலத்தின்மீது இருக்கவேண்டும். தண்ணீர்ச் சத்தம் லேசாகக் கேட்டது. அந்த அராபியன் மீண்டும் கதவு நிலைக்கு வந்து நிற்கும்வரை, அது என்னவென்று அவனுக்குப் புரியாதிருந்தது. கதவை ஜாக்கிரதையாகச் சாத்திவிட்டு சந்தடி இன்றி மீண்டும் வந்து படுத்துக்கொண்டான். அதன்பின் தாரு புரண்டுபடுத்துத் தூங்கிப் போனான். எனினும் உறக்கத்தின் ஆழத்தில், பள்ளியைச் சுற்றித் தெளிவான காலடி ஓசைகள் கேட்பதுபோல அவன் உணர்ந்தான். கனவுதான், ஆகவேதான் என்று தனக்குத்தானே திருமபத்திரும்பக் கூறித் தூங்கிக்கொண்டே இருந்தான்.
அவன் விழித்தபோது, வானம் நிர்மலமாக இருந்தது. சரியாகப் பொருந்தாத ஜன்னல் கதவுகளின் இடுக்கு வழியே குளிர்ந்த து£ய்மையான காற்று வீசியது. அந்த அராபியன், வாயைப் பிளந்தவாறு, இறுக்கம் சிறிதுமற்று, போர்வைக்குக்கீழ் உடம்பைக் குறுக்கி ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். ஆனால் தாரு அவனை உலுக்கியபோது அவன் தூக்கிவாரிப்போட்டு எழுந்து, யங்கரமான பார்வையோடு தாருவை ஒருபோதும் பார்த்திராதவன் போல விழித்த விழிப்பில் தாரு பின்வாங்கினான். “பயப்படாதே, நான்தான், சாப்பிடலாம்” என்றான். அராபியன் தலையசைத்து ஆமோதித்தான். இப்போது அவன் முகத்தில் அமைதி திரும்பிவிட்டது. எனினும் கண்களில் அமைதி யற்ற வெறித்த பார்வை இருந்தது.
காப்பி ரெடி ஆயிற்று. இருவரும் கேக் துணடுகளைக் கட்டிலில் உட்கார்ந்து மென்றவாறே காப்பி குடித்தார்கள். தாரு அராபியனைக் கொட்டகைக்குக் கீழ் அழைத்துச் சென்று தான் குளிக்குமிடத்தைக் காட்டினான். திரும்பிச்சென்று கட்டிலின் மேல் போர்வையை மடித்துவைத்தான். படுக்கையைத் தனக்கேற்ற வகையில் அமைத்தான். அறையை ஒழுங்குசெய்தான். பிறகு வகுப்பறையினுள் நுழைந்து மாடிக் குச் சென்றான். நீல வானத்தில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது. மென்மையான பளீரென்ற பிரகாசம் யாருமற்ற அந்த மேட்டு நிலத்தைச் சூழ்ந்திருந்தது. மேட்டுநில ஓரத்தில் பனி பொட்டுப்பொட்டாக உருகியிருந்தது. கற்கள் மறையுமாறிருந்தன. மேட்டு நில ஓரத்தில் மண்டியிட்டு பாலைவனப் பாழ்வெளியை நோக்கினான். பால்
தூச்சியை நினைத்துக்கொண்டான். அவனோடு தொடர்பு வைத்திருக்க அவசியமில்லாததுபோல் அனுப்பிவிட்டதால் அவனைப் புண்படுத்திவிட்டிருந்தான். அந்த இராணுவத்தானின் விடைபெறுகை இப்போதும் மனத்தில் உறுத்தியது. ஏனென்று தெரியாமலே ஒரு விசித்திர வெறுமையையும் பலவீனத்தையும் உணர்ந்தான்.
பள்ளிக்கட்டிடத்தின் அப்புறமிருந்து கைதி இருமினான். தாரு தன்னை அறியாமலே அதைக் கூர்ந்து கேட்டான். பிறகு சினமுற்று ஒரு கூழாங்கல்லை எறிந்தான். பனியில் விழுமுன் அது உய்யென்று காற்றில் ஒலியெழுப்பிச் சென்றது. கைதியின் மடத்தனமான குற்றம் இவனை எரிச்சலில் ஆழ்த்தியது. அவனை ஒப்படைத்துவிடுவது, இவனுடைய கௌரவத்திற்குக் குந்தகமானது. அதைப்பற்றி நினைப்பதே இவனை அவமானத்தில் குன்றச்செய்தது. தன்னிடம் இந்த அராபியனை அனுப்பிவைத்த தன் சொந்த ஜனங்களையும், ஒரு கொலைசெய்யுமளவு துணிச்சல்கொண்டு ஆனால் தப்பி ஓடத் திராணியற்றுப்போன அராபியனையும் ஒரேசமயத்தில் தாரு சபித்தான். எழுந்து மாடிமீது வட்டமாக நடந்தான். காத்திருந்தான். பிறகு பள்ளிக்குச் சென்றான்.
கொட்டகையில் சிமெண்ட் தரைமீது குனிந்தவாறு அராபியன் இரு விரல்களால் தன் பல்லைத் துலக்கிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்து தாரு “வா” என்றான். கைதிக்கு முன்னால் அறைக்குத் திரும்பிச் சென்றான். ஸ்வெட்டர்மீது வேட்டைக்குரிய கோட்டை மாட்டிக்கொண்டு, ஷ¨க்களை அணிந்தான். அராபியன் வந்து ஷே-ஷேவை அணிந்து செருப்புப் போடும்வரை காத்திருந்தான். பிறகு இருவரும் வகுப்ப றைக்குச் செல்ல, ஆசிரியன் வழியைக் காட்டி “நட” என்றான். அராபியன் பணிய மறுத்தான். “நானும் வருகிறேன்” என்றான் இவன். அவன் வெளியேறினான். தாரு அறைக்குள் சென்று, ரஸ்க் துண்டுகள், பேரீச்சைகளைப் பொட்டலம் கட்டிக்கொண் டான். வகுப்பறையில் தன் மேஜைக்கு வரும்போது சற்றுத் தயங்கினான். பின் வாசல் கதவைத் தாழிட்டுப் பூட்டினான். “அதுதான் வழி” என்றான். கிழக்குநோக்கிக் கைதி பின்தொடர நடந்தான். பள்ளியிலிருந்து கொஞ்சது£ரம் செல்வதற்குள் லேசான சத்தம் பின்னால் கேட்க, திரும்பிப்போய் வீட்டின் சுற்றுமுற்றும் பார்த்தான். ஒருவருமில்லை. அராபியன் எதுவும் புரியாமல் இவனை நோக்கி விழித்தான். “வா போகலாம்” என்றான் தாரு.
ஒருமணி நேரம் இருவரும் நடந்தனர். ஊசிவடிவமான சுண்ணாம்புக்கல் பாறையின் கீழ் ஓய்வெடுத்தனர். பனிக்கட்டிகள் மிக வேகமாக உருகின. சூரிய கிரணங்கள் உருகிய நீர்க்குட்டைகளை வேகமாக உறிஞ்சி, மேட்டுநிலத்தைச் சுத்தப்படுத்தின. ஆவியான நீர் காற்று போலவே அதிர்ந்து சுழன்றது. மீண்டும் நடக்க முனைந்தபோது தரை காலடி யில் சில்லென்று இருந்தது. அவ்வப்போது எங்கேயாவது ஒரு பறவை அவர்கள் முன்னால் சந்தோஷக் குரலில் ஆகாயத்தைப் பிளந்தது. வானக்கூரைக் கீழ் இப்போது பெருமளவு மஞ்சள் நிறத்துக்கு மாறிவிட்ட அந்தப் பரந்த நிலம் தாருவுக்குப் பெருங் களிப்பை அளித்தது. தெற்கு நோக்கி இறங்கி இன்னும் ஒருமணி நேரம் நடந்தார்கள். நொறுங்கும் கற்களால் ஆன ஒரு தட்டையான மேட்டை அடைந்தார்கள். அங்கிருந்து பீடபூமி சரிந்து கீழே இறங்கியது. கிழக்கில் ஒரு தாழ்வெளி-அடிதல் சில உருண்டை மரங்கள் தென்பட்டன. தெற்கில், எங்கும் சிதறிய பாறைத்துண்டுகள் ஒரு பாழ்வெளித் தோற்றத்தைத் தந்தன.
தாரு இரண்டு பக்கங்களையும் பார்வையால் அலசினான். ஒருவரும் கண்ணில் படவில்லை. தன்னை நோக்கி வெறித்தவாறிருந்த அராபியனிடம் திரும்பினான். தன் கையிலிருந்த பொட்டலத்தை அவனிடம் தந்தான். “இதில் பேரீச்சை, ரொட்டி, சர்க்கரை இருக்கிறது. இரண்டு நாளுக்குத் தாங்கும். இந்தா, இதில் ஆயிரம் பிராங்க் இருக்கிறது.”
இரண்டையும் வாங்கிக்கொண்டு, இருகைகளையும் மார்பின் அருகே வைத்தவாறு, அவற்றை என்ன செய்வது என்று தெரியாதவன்போல் நின்றான் அராபியன்.
“அதோ பார்” என்று கிழக்குப் புறத்தைக் காட்டினான், தாரு. “அதுதான் டிங்க்விட் போகும் வழி. இங்கிருந்து இரண்டுமணி நேர நடை. அங்கே நிர்வாகமும் போலீசும் இருக்கிறார்கள். உனக்காகக் காத்துக்கொண்டு.”
பொட்டலத்தை மார்பருகே வைத்த நிலை மாறாமலே அராபியன் கிழக்குநோக்கிப் பார்த்தான். அவனது முழங்கையைப் பிடித்து அவனைத் தள்ளுபவன்போல் தெற்கு நோக்கித் திருப்பினான் தாரு. இவர்கள் நின்றிருந்த திட்டின் கீழிருந்து ஒரு மங்கிய பாதை தெரிந்தது. “மேட்டுநிலத்தின் குறுக்கே செல்லும் பாதைதான் அது. ஒருநாள் நடையில் நீ புல்வெளியையும் அங்கே மாடுமேய்க்கும் நாடோடிகளையும் அடைந்துவிடலாம். அவர்களது சட்டப்படி அவர்கள் உன்னை ஏற்றுக்கொண்டு தங்க வசதி செய்வார்கள் உனக்கு.”
அராபியன் இப்போது தாருவைப் பார்க்கத் திரும்பினான். அவன் கண்ணில் ஒருவித பீதி. “இதோ பார்” என்றான்.
தாரு, தலையை மறுப்பதுபோல் ஆட்டினான். “பேசாதே. நான் போகவேண்டும்.” பள்ளியிருந்த திசையை நோக்கி இரண்டு எட்டு வைத்தான். பிறகு தயக்கத்துடன் திரும்பி அசையாதிருந்த அராபியனைப் பார்த்தான். மீண்டும் நடக்கத் தொடங்கினான். சில நிமிடங்கள் கழிந்தபின், அந்தக் குளிர்ந்த தரையில் அவனுடைய காலடி ஓசைதவிர வேறு எதுவும் அவனுக்குக் கேட்கவில்லை. தலையையும் திருப்பவில்லை. எனினும் கொஞ்சநேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தான். அந்த அராபியன், இப்போது கைகளைக் கீழே தொங்கப்போட்டு, ஆசிரியனையே பார்த்தவாறு திட்டையின் ஓரத்தி லேயே நின்றிருந்தான். இவன் நெஞ்சுக்குள் ஏதோ கனப்பதுபோல் இருந்தது. ஆனால் பொறுமையின்றி, வசவுவார்த்தைகளைப் பேசிக்கொண்டே, கையை அவனுக்கு நிச்சயமற்று வீசிக்காட்டிவிட்டு நடக்கத் தொடங்கினான். கொஞ்சது£ரம் போய்விட் டான். பிறகு பார்த்தான். இப்போது அக்குன்றின்மீது எவரும் இல்லை.
தாரு தயங்கினான். சூரியன் நன்றாக உயர்ந்துவிட்டிருந்தது. தலைக்கு மேல் சுள்ளென்று அடித்தது. முதலில் சற்றே உறுதியின்றியும் பிறகு சற்றே உறுதியுடனும் திரும்பிச் சென்றான் ஆசிரியன். முன்னிருந்த குன்றின் அடியை அடைந்தபோது வியர் வையில் குளித்திருந்தான். விறுவிறு என்று ஏறி உச்சியில் மூச்சற்று நின்றான். நீலவானப் பின்னணிக்குக் கூர்மையான முன்புலமாகத் தெற்கில் பாறை நிலங்கள் நின்றன. அங்கு ஒன்றுமில்லை. ஆனால் கிழக்கிலிருந்து சமவெளிப்பக்கம் ஆவிப்புகை போல ஓர் ஆள் செல்லும் வெப்ப அலை எழுந்துகொண்டிருந்தது. அந்த அராபியன் சிறையின் பாதையில் மெதுவாக நடப்பதை கனத்த இதயத்துடன் தாரு கண்டான்.
சிலமணி நேரம் கழித்து, தன் வகுப்பறையில் ஜன்னல்முன் ஆசிரியன் அம்மேட்டு நிலத்தைச் சூரியன் தன் தெள்ளிய ஒளியால் நீராட்டுவதைப் பார்ததவாறு நின்றான். அவ் வகுப்பறையின் கரும்பலகையில் சுற்றி வளைந்து செல்லும் பிரெஞ்சு நாட்டு ஆறுகளினு£டே சற்றுமுன் அவன் படித்துப்பார்த்த கிறுக்கல் இன்னும் தெரிந்தது. “எங்கள் சகோதரனைக் காட்டிக் கொடுத்துவிட்டாய், அதற்காகப் பழிவாங்கப்படப் போகிறாய்.” அந்த வானத்தையும் மேட்டுநிலத்தையும் அதற்கப்பால் கடல்வரை பரவி நீண்டிருந்த கண்ணுக்குப் புலப்படாத பரந்த வெளியையும் கூர்ந்து நோக்கியவாறு இருந்தான் தாரு. தான் மிகவும் நேசித்த அந்தப் பரந்த நிலப்பரப்பில் தன்னந்தனியாக நின்றான் அவன்.
வெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை
(ஹெமிங்வே சென்ற நூற்றாண்டின் முக்கியச் சிறுகதையாசிரியர்களில் ஒருவர், அமெரிக்கர். அவருடைய சிறந்த கதைகளில் ஒன்று. “வெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள்”. கதையில் ஆசிரியர் குறுக்கீடு அறவே இல்லை. உரையாடலிலேயே செல்லும் கதை. கடுமையான நாடக நோக்குநிலையில் சொல்லப்படுகிறது.)
*****
ஈப்ரோ (ஸ்பெயின் நாட்டு நதி) சமவெளியின் அப்-புறம் இருந்த குன்றுகள் நீண்டும் வெள்ளையாகவும் இருந்தன. இந்தப்புறம் நிழலோ மரங்களோ இல்லை. இரயில் நிலையம் இரு தண்டவாளங்களுக்கிடையில் வெயிலில் கிடந்தது. இரயில் நிலையத்தின் பக்கத்தில் அண்மையில் அக்கட்டிடத்தின் வெப்பமிக்க நிழல், மது அருந்துமிடம் (பார்). ஈக்களைத் தடுக்க ஒரு திரை, மூங்கில் மணிகளை நூலில் கோத்து நெய்தது, அதன் திறந்த வாயிலில் தொங்கியது. அந்த அமெரிக்கனும் அவனுடனிருந்த பெண்ணும், கட்டிடத்திற்கு வெளியே நிழலில் ஒரு மேஜையின் முன் உட்கார்ந்திருந்தார்கள். மிகவும் வெக்கையாக இருந்தது. பார்சிலோனாவிலிருந்து வரும் இரயில் இன்னும் நாற்பது நிமிடங்களில் வரும். அது இந்த நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று மாட்ரிடுக்குச் செல்லும். (மாட்ரிட்-ஸ்பெயின் நாட்டின் தலை நகரம்.)
“என்ன குடிக்கலாம்?” அந்தப் பெண் கேட்டாள். தலையிலிருந்து தொப்பியைக் கழற்றி மேஜை மீது வைத்தாள்.
“ரொம்ப வெக்கையாக இருக்கிறது” என்றான் அந்த ஆள்.
“பியர் குடிக்கலாம்”.
“டாஸ் செர்விசாஸ்” என்றான் அந்த மனிதன், திரைச்சீலைக் குள்ளாக.
“பெரிசா?” வாயில் அருகிலிருந்து ஒரு பெண்மணி கேட்டாள்.
“ஆமாம். இரண்டு பெரிசு”.
அந்தப் பெண்மணி பியர் நிரம்பிய இரண்டு கண்ணாடி டம்ளர்களையும் இரண்டு கம்பளி அட்டைகளையும் கொண்டுவந்தாள். அட்டைகளை மேஜைமேல் வைத்து, பியர் டம்ளர்களையும் வைத்து அந்த மனிதனையும் பெண்ணையும் நோக்கினாள். பெண், குன்றுகளின் வரிசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். வெயிலில் அவை வெள்ளையாக இருந்தன, ஆனால் நிலப்பரப்பு பழுப்பாகவும் உலர்ந்தும் காணப்பட்டது.
“அவை வெள்ளை யானைகளைப் போலக் காட்சியளிக்கின்றன” என்றாள்.
“நான் பார்த்ததில்லை” என்று பியர் குடித்தவாறே அந்த ஆள் சொன்னான்.
“ஆமாம். பார்த்திருக்க முடியாது.”
“ஒருவேளை பார்த்திருக்கலாம்” என்றான் அவன். “நான் பார்த்திருக்க முடியாது என்று நீ சொல்வதால் எதுவும் நிரூபணமாக வில்லை.”
அந்தப் பெண் மூங்கில் மணித் திரையைப் பார்த்தாள். “அதற்கு மேல் ஏதோ தீட்டியிருக்கிறார்கள். அதில் என்ன எழுதியிருக் கிறது?”
“ஆனிஸ் டெல் டோரோ. அது ஒரு பானம்.”
“அதைப் பருகிப் பார்க்கலாமா?”
அந்த மனிதன் திரையினூடாக, “இந்தா” என்றான். அந்தப் பெண்மணி பாரிலிருந்து வெளியே வந்தாள். “நான்கு ரியால்கள்” என்றாள். (ரியால்-ஸ்பானிஷ் பணம்)
“எங்களுக்கு ரெண்டு அனிஸ் டெல் டோரோ வேண்டும்.”
“சேர்க்கத் தண்ணி வேண்டுமா?”
“எனக்குத் தெரியாது” என்றாள் பெண். “தண்ணீருடன் சேர்த்துப் பருகினால் நன்றாக இருக்குமா?”
“சரியாத்தான் இருக்கும்.”
“அவைகளோடு சேர்க்கத் தண்ணி வேணுமா?” என்றாள் பெண்மணி.
“ஆமாம், தண்ணிதான்.”
“ருசி அதிமதுரம் போல இருக்கிறது” என்று சொல்லி டம்ளரைக் கீழே வைத்தாள் பெண்.
“எல்லாமே அப்படித்தான்.”
“ஆமாம்” என்றாள் பெண். “எல்லாமே அதிமதுரம் போலத்தான் ருசிக்கிறது. குறிப்பாக இதுவரை-ஆப்சிந்தி போல-நீ காத்திருந்த விஷயங்கள்.” (ஆப்சிந்தி-சோம்பு இட்ட ஒருவகை மது)
“வேண்டாம், விடு.”
“நீதான் ஆரம்பித்தாய்” என்றாள் அந்தப் பெண். “வேடிக்கையாக இருந்தது. நன்றாகப் பொழுதுபோயிற்று.”
“சரி, முயற்சி பண்ணி நன்றாகப் பொழுது போக்கலாம்.”
“ஆல்ரைட். நான் முயற்சி பண்ணிக்கொண்டுதான் இருந்தேன். அந்த மலைகள் வெள்ளை யானைகளைப் போல இருக்கிறது என்றேன். அது நன்றாக இல்லையா?”
“நல்ல புத்திசாலிதான்.”
“இந்தப் புதிய மதுவை ருசிபார்க்கலாம் என்று சொன்னேன். அவ்வளவுதான் செய்ய முடியும் இல்லையா? பொருள்களைப் பார்ப்பதும், புதிய பானங்களை ருசி பார்ப்பதும்?”
“அப்படித்தான் என்று நினைக்கிறேன்.”
பெண், குன்றுகளைப் பார்த்தாள்.
“ரொம்ப அழகான மலைகள்” என்றாள். “அவை வெள்ளை யானைகளைப் போல இல்லை. நான் மரங்களினூடாகத் தெரிந்த அவற்றின் நிறத்தைச் சொன்னேன்.”
“இன்னொரு பாட்டில் அருந்தலாமா?”
“ஆல்ரைட்.”
வெப்பமான காற்று மூங்கில்மணித் திரையை மேஜைமேல் வீசியது.
“பியர் ரொம்ப நன்றாக, குளிர்ச்சியாக இருக்கிறது.”
“ஆமாம், லவ்லி”, என்றாள் அவள்.
“அது ரொம்ப ரொம்ப எளிய ஆபரேஷன், ஜிக்” என்றான் அந்த மனிதன். “அது ஆபரேஷனே இல்லை. சிம்பிள்.”
மேஜையின் கால்கள் இருந்த தரையைப் பெண் நோக்கினாள்.
“நீ அதைப் பொருட்படுத்த மாட்டாய், ஜிக். அது ஒன்றுமே இல்லை. சும்மா காற்றை உள்ளே விடத்தான்.”
பெண் எதுவும் பேசவில்லை.
“நான் உன்னோடு வந்து, நேரம் பூராவும் உன்னோடே இருக்கிறேன். அவர்கள் சும்மா காற்றை உள்ளே விடுகிறார்கள், எல்லாம் ரொம்ப இயற்கையானதுதான்.”
“அப்ப, அதற்குப் பிறகு என்ன செய்யலாம்?”
“அதற்குப் பிறகு நன்றாக இருப்போம். முன்னால் இருந்த மாதிரியே.”
“எப்படி அப்படி நினைக்கிறாய்?”
“அதுதான் நமக்குத் தொல்லை தருகிற ஒரே விஷயம். அது ஒன்றுதான் நமக்குச் சந்தோஷமில்லாமல் செய்துவிட்டது.”
மணித்திரையை அவள் பார்த்தாள், கையை நீட்டி இரண்டு மூங்கில் மணி இழைகளைக் கையில் எடுத்தாள்.
“அப்புறம் நாம் சரியாக, சந்தோஷமாக இருப்போம் என்கிறாய்?”
“அப்படித்தான் இருப்போம். எனக்குத் தெரியும். நீ பயப்படத் தேவையில்லை. அதைச் செய்துகொண்ட பலபேரை எனக்குத் தெரியும்.”
“எனக்கும் தெரியும். அப்புறம் அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள்.”
“சரி”, என்றான் அவன். “நீ வேண்டாம் என்றால் வேண்டாம். உனக்கு விருப்பமில்லாமல் அதைச் செய்துகொள்ள வேண்டாம். ஆனால் அது ரொம்ப சிம்பிள்.”
“நிஜமாகவே செய்துகொள்ள வேண்டும் என்கிறாய்?”
“அதுதான் செய்யவேண்டிய மிகச்சிறந்த விஷயம். ஆனால் உனக்கு நிஜமாகவே விருப்பமில்லை என்றால் வேண்டாம்.”
“நான் செய்துகொண்டால், உனக்கு மகிழ்ச்சி, முன்னால் இருந்ததுபோலவே எல்லாம் இருக்கும், நீ என்னை விரும்புவாய்?”
“இப்ப உன்னை விரும்புகிறேன். அது உனக்கே தெரியும்.”
“தெரியும். ஆனால் செய்துகொண்டபிறகு, விஷயங்கள் வெள்ளை யானைபோல இருக்கின்றன என்று சொன்னால் எல்லாம் நன்றாக இருக்கும்; நீ அதை விரும்புவாய்?”
“விரும்புவேன். இப்போதும் விரும்புகிறேன், ஆனால் அதைப் பற்றி நினைக்க முடியவில்லை. எனக்குக் கவலை நேர்கிறபோது எப்படி ஆகிறேன் என்று உனக்குத் தெரியும்.”
“நான் செய்துகொண்டால், கவலையே உனக்கு வராது?”
“நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை, ஏனென்றால் அது ரொம்ப சிம்பிள்.”
“அப்படியானால் செய்துகொள்கிறேன். என்னைப் பற்றி நான் கவலைப்படவில்லை.”
“என்ன சொல்கிறாய்?”
“நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை.”
“நான் உன்னைப் பற்றிக் கவலைப்படுகிறேன்.”
“ஆமாம். ஆனால் நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. நான் அதைச் செய்துகொள்கிறேன், அப்புறம் எல்லாம் நன்றாக இருக்கும்.”
“இப்படி நீ நினைத்தால், செய்துகொள்ள வேண்டாம்.”
பெண் எழுந்து நின்றாள், நிலையத்தின் கோடியை நோக்கி நடந்தாள். குறுக்கே, அப்-புறம், தானிய வயல்கள். ஈப்ரோ நதிக்கரையில் மரங்கள். தூரத்தில், நதிக்கு அப்பால், மலைகள். வயலின் குறுக்கே மேகத்தின் நிழல் ஒன்று கடந்துசென்றது. மரங்களினூடே அவள் நதியைப் பார்த்தாள்.
“நமக்கு இவை எல்லாம் கிடைக்கும்” என்றாள். “நம்மிடம் எல்லாம் இருக்கும், ஒவ்வொரு நாளும் நாம் அவற்றைச் சாத்தியமற்றதாக்குவோம்.”
“என்ன சொன்னாய்?”
“நம்மிடம் எல்லாம் இருக்கும் என்றேன்.”
“நாம் எல்லாவற்றையும் பெறலாம்.”
“இல்லை, முடியாது.”
“முழு உலகத்தையும் அடையலாம்.”
“இல்லை, நம்மால் முடியாது.”
“எங்கு வேண்டுமானாலும் போகலாம்.”
“இல்லை, முடியாது, இனிமேல அவை நம்முடையதல்ல.”
“நம்முடையதுதான்.”
“இல்லை. ஒருமுறை வெளியே எடுத்துவிட்டால், உன்னால் அதைத் திரும்பப் பெறமுடியாது.”
“ஆனால் யாரும் எடுத்துக்கொண்டு போய்விடவில்லை.”
“பொறுத்திருந்து பார்ப்போம்.”
“நிழலுக்கு வா” என்றான் அவன். “இப்படி நீ ஃபீல் பண்ணக்கூடாது.”
“நான் எப்படியும் உணரவில்லை” என்றாள் அவள். “எனக்குத் தெரியும்.”
“நீ விரும்பாத ஒன்றை நீ செய்வதை நான் விரும்பவில்லை-”
“அது எனக்கு நல்லதும் இல்லை” என்றாள். “எனக்குத் தெரியும். நாம் இன்னொரு பியர் சாப்பிடலாமா?”
“சரி. ஆனால் நீ தெரிந்துகொள்ள வேண்டும்-”
“தெரியும் என்றாள். நாம் பேசுவதை நிறுத்திவிடக் கூடாதா?”
மேஜையில் உட்கார்ந்தார்கள், அவள் சமவெளியின் வறண்ட பக்கம் உள்ள குன்றுகளைப் பார்த்தாள். அந்த மனிதன் அவளையும் மேஜையையும் பார்த்தான்.
“நீ தெரிந்துகொள்ள வேண்டும். நீ விரும்பவில்லை என்றால் அதைச் செய்துகொள்ளுமாறு நான் சொல்லவில்லை. முழுசாகவே நாம் அதைக் கடப்போம், அது உனக்கு அவ்வளவு பெரிய விஷயம் என்றால்.”
“அது உனக்கு ஒன்றும் இல்லையா? நாம் நன்றாகவே இருப்போம்.”
“ஏன் இல்லாமல்? ஆனால் உன்னைத் தவிர வேறு யாரும் எனக்குத் தேவையில்லை. அது ரொம்பவும் சிம்பிள் என்று எனக்குத் தெரியும்.”
“ஆமாம், அது ரொம்ப சிம்பிள் என்று உனக்குத் தெரியும்.”
“நீ அப்படித்தான் சொல்வாய், ஆனால் எனக்கு மெய்யாகவே தெரியும்.”
“எனக்காக இப்போது ஒன்று செய்வாயா?”
“நான் உனக்காக எதுவும் செய்வேன்.”
“தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து தயவுசெய்து பேச்சை நிறுத்துவாயா?”
அவன் எதுவும் சொல்லவில்லை. நிலையத்தின் சுவர்மீது சாத்தியிருந்த பைகளைப் பார்த்தான். இதுவரை அவர்கள் இரவுகளைக் கழித்த எல்லா ஹோட்டல்களின் லேபில்களும் அவற்றின்மீது இருந்தன.
“நீ அதைச் செய்ய நான் விரும்பவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.”
“நான் கூச்சலிடுவேன்” என்றாள் அவள்.
அந்தப் பெண்மணி திரையின் வழியாக இரண்டு பியர் டம்ளர்களுடன் வந்தாள். அவற்றை ஈரமாக இருந்த கம்பளிஅட்டைகள்மீது வைத்தாள். “இரயில் இன்னும் அஞ்சே நிமிஷத்தில் வந்துவிடும்” என்றாள்.
“என்ன சொன்னாள்?” என்று பெண் கேட்டாள்.
“இரயில் இன்னும் ஐந்து நிமிடத்தில் வருகிறது.”
அந்தப் பெண்மணிக்கு நன்றிசொல்லும் விதமாகப் பெண் அவளைநோக்கி சந்தோஷமாகப் புன்னகைத்தாள்.
“நிலையத்தின் அந்தப்பக்கம் நான் பைகளை எடுத்துக்கொண்டு போகிறேன்” என்றான் அவன்.
“சரி. வைத்துவிட்டு வா. பிறகு பியரைக் குடிப்போம்.”
கனமான அந்த இரண்டு பைகளையும் அவன் எடுத்துக்கொண்டு நிலையத்தைச் சுற்றித் தண்டவாளத்தின் அப்-புறம் நடந்தான். தண்டவாளத்திலிருந்து நோக்கிய போது இரயில் இன்னும் தென்படவில்லை.
திரும்பி வந்து மதுக்கடை அறையின் குறுக்கே நடந்தான். அங்கே இரயிலுக்கான பயணிகள் மதுஅருந்திக்கொண்டிருந்தார்கள். பாரில் ஒரு ஆனிஸ் குடித்துவிட்டு, ஜனங்களைப் பார்த்தான். அவர்கள் இரயிலுக்காக வெகுநேரமாகவே காத்திருந்தார்கள். மணித்திரையின் வழியாக வெளியே வந்தான். அவள் மேஜையில் உட்கார்ந்து அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள்.
“இப்போது பரவாயில்லையா?” என்று கேட்டான்.
“நன்றாக இருக்கிறது. என்னிடம் ஒன்றும் குறை இல்லை. நன்றாகவே இருக்கிறது” என்றாள் அவள்.
சிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)
சிறுவர் கதை – சிறிய சிவப்பு இறகு
குழந்தைகளே! நம் நாட்டில் வழங்கிவருகின்ற பொன்முட்டை யிட்ட வாத்து கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு பொன் முட்டை இட்டு வந்ததாம். அதை வைத்திருந்த பெண்மணி, அதை ஒரேயடியாக அறுத்துவிட்டால் எல்லா முட்டைகளும் கிடைக்குமே என்று எண்ணி அதைக் கொன்று விட்டாளாம். “பேராசை பெருநஷ்டம்” என்பது அதன் நீதி.
இதேபோன்ற கதை ஒன்று அமெரிக்க இந்தியர்கள் (செவ்விந்தியர்கள்) மத்தியில் வழங்கி வருகிறது. இதோ அதைப் படித்துப் பாருங்கள்.
ஒருசமயம் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்தான். அவர்கள் மிக ஏழைகள். அடிக்கடி பசியால் வாடினர். அந்த ஆடவன் அவ்வப்போது காட்டுக்குச் சென்றான், ஆனால் அவனுக்கு நன்றாக வேட்டையாடத் தெரியாது. அதனால் சில சமயங்களில் ஒரு சிறிய பறவை-இப்படி ஏதாவது மட்டுமே அவனுக்குக் கிடைக்கும்.
ஒருநாள் அவன் காட்டுக்குச் சென்றான். அது அவனுக்கு மோசமான நாள். ஒரு சிறிய பறவையும்கூட அன்று கிடைக்கவில்லை. களைத்துச் சோகமாக இருந்த அவன், ஓய்வெடுக்க ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்தான். ஒரு பறவையின் இனிமையான பாடலை அப்போது கேட்டான்.
மேல்நோக்கிப் பார்த்தான். சிவப்புநிற இறகுகளைக் கொண்ட ஒரு சிறிய பறவை இருந்தது. “நீ ஏழையாகவும் பசியோடும் இருப் பதைப் பார்க்கிறேன். உனக்கு உதவி செய்கிறேன். என் இறகு ஒன்றை உனக்குத் தருகிறேன். அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று சமையல் செய். நல்ல விருந்து உனக்குக் கிடைக்கும். நாளைக்கு மறுபடியும் வா. இன்னொரு இறகைத் தருகிறேன்.”
பறவைக்கு நன்றி கூறி, வீட்டுக்குச் சென்றான். ஒரு பானையில் இறகை வைத்து, எல்லாவற்றையும் தன் மனைவிக்குச் சொன் னான்.
“முட்டாளே, இறகு எப்படி உணவாக மாறும்? நீ அந்தப் பறவை யைப் பிடித்துக் கொல்லவேண்டும். பிறகு அதைச் சமைத்து உண்ணலாம்” என்றாள் அவள்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை. பானையைப் பார்த்தால் அதில் நிறைய உணவு இருந்தது.
தினமும் அவன் காட்டுக்குச் சென்றான். தினமும் அந்தப் பறவை தன் இறகு ஒன்றை அவனுக்குத் தந்தது. அது அவனுக்கும் அவன் மனைவிக்கும் போதுமான உணவை அளித்தது.
ஆனால் அவன் மனைவி பேராசை பிடித்தவள். ஒவ்வொரு நாளும் அவள் கணவனிடம், “நமக்கு ஒரு சிறிய இறகு மட்டும் போதாது. பறவை நமக்கு வேண்டும். அப்புறம் 2, 3, 4 எத்தனை இறகை வேண்டுமானாலும் நாம் சமைக்கலாம், நமக்கு விருப்ப மான அளவு போதிய உணவு கிடைக்கும்” என்று சொல்லி வந்தாள்.
“ஆனால் அந்தப் பறவை என் நண்பன். நான் அதைக் கொல்ல மாட்டேன்”.
ஒருநாள் அவன் மனைவி காட்டுக்குள் கணவனைப் பின் தொடர்ந்து சென்றாள். அவளை அவன் பார்க்கவில்லை. பறவையின் இனிய பாட்டை அவள் கேட்டாள். அதன்மீது குறி பார்த்துக் கல்லை எறிந்தாள். அது மரத்திலிருந்து விழுந்து இறந்து போயிற்று.
கணவன் மிகவும் வருத்தப்பட்டான். ஆனால் மனைவி, “இப்போது தினமும் நமக்கு வேண்டிய உணவு கிடைக்கும்” என்றாள்.
வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டில் அவன் மனைவி ஒரு சிவப்பு இறகைப் பிடுங்கி வெந்நீரில் இட்டாள். சமைத்தாள். ஆனால் இறகு இறகாகவே இருந்தது.
அன்றுமுதல் அவர்கள் எப்போதும் பசியாகவே இருக்கலானார்கள்.
நாங்கள் சிலர் எங்கள் நண்பன்
நாங்கள் சிலர் எங்கள் நண்பன் கோல்பையை
மிரட்டிக்கொண்டிருந்தோம்
(டொனால்டு பார்த்தெல்மே எழுதிய இந்தச் சிறுகதை, 2000ஆம் ஆண்டில் என்னால் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகையில் வெளி யாயிற்று. பிறகு 2001இல் காலச்சுவடு வெளியிட்ட ‘மஞ்சள் பூக்கள்’ என்னும் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதியில் இது இடம்பெற்றது.)
அவன் நடந்துகொண்ட முறை காரணமாக, எங்கள் நண்பன் கோல்பையை நாங்கள் சிலபேர் ரொம்ப நாளாகவே மிரட்டிக் கொண்டிருந்தோம். இப்போது அவன் ரொம்பவும் மீறிப் போய் விட்டான். ஆகவே நாங்கள் அவனைத் தூக்கில் போடுவது என்று தீர்மானித்தோம். ரொம்பவும் மீறிப் போய்விட்ட காரணத்துக் காகவே தான் தூக்கிலிடப்படுவதற்கு உட்படவேண்டும் என்ற அவசியமில்லை என்றான் கோல்பை. (தான் ரொம்பவும் மீறிப் போய்விட்டதை அவன் மறுக்கவில்லை.) “ரொம்பவும் மீறிப் போவது என்பது எல்லோரும் சிலசமயம் செய்யக்கூடியதுதான்” என்றான். நாங்கள் இந்த வாதத்திற்கு அதிக கவனம் அளிக்க வில்லை. “தூக்கிலிடப்படும்போது என்ன விதமான இசையை நீ விரும்புகிறாய்” என்று அவனைக் கேட்டோம். அதைப்பற்றிச் சிந் திப்பதாகச் சொன்னான் அவன். ஆனால் முடிவு செய்துகூற சற்றே அவகாசம் தேவை என்றான். “நாங்கள் சீக்கிரமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் எங்கள் நண்பன் ஹவர்ட், ஓர் இசைக்குழு நடத்துநன். அவன் ஆட்களைப் பிடிக்கவேண்டும், அந்தக் குறிப்பிட்ட இசையை வாசிக்கப் பயிற்சி தரவேண்டும். இதற்கெல்லாம் நாளாகுமே” என்றேன் நான். “ஐவ்ஸினுடைய நான்காவது சிம்ஃபனி இசை எனக்கு மிகவும் பிடித்தது” என்றான் கோல்பை. ஹவர்ட், இதை ஓர் உத்திப்போடும் உத்தி என்று வருணித்தான். ஏன் என்றால், எங்கள் எல்லோருக்குமே ஐவ்ஸ், கிட்டத்தட்ட நிகழ்த்தமுடியாத இசை என்பது தெரியும். அதற்குப் பலவார ஒத்திகை தேவை. மேலும், இசைக்குழு, கோரஸ் இவற்றிலுள்ள ஆட்களின் எண்ணிக்கை மிகுதியால், எங்கள் பட் ஜெட்டுக்குள் அடங்காது. “பொறுப்புள்ளவனாகச் சொல்லு” என்றான் ஹவர்ட். இன்னும் கட்டுக்குள் அடங்கக் கூடியதாக யோசித்துச் சொல்கிறேன் என்றான் கோல்பை.
அழைப்பிதழின் வார்த்தைகள் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டி ருந்தான் ஹ்யூ. ஏதாவதொரு அழைப்பிதழ் அதிகாரிகள் கையில் சிக்கிவிட்டால் என்னாவது? கோல்பையைத் தூக்கிலிடுவது சட்ட விரோதமானது என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இந்தத் திட்டம் பற்றி அதிகாரிகள் முன்கூட்டியே அறிந்துவிட்டால், அவர்கள் வந்து தலையிட்டு எங்கள் நிகழ்ச்சியை நிச்சயம் குழப்பி விடுவார்கள். “கோல்பையைத் தூக்கிலிடுவது கிட்டத்தட்ட சட்டத்துக்குப் புறம்பானதே என்றாலும், அவன் எங்களுடைய நண்பன். பல முக்கியமான அர்த்தங்களில் எங்களுக்கே சொந்தமானவன். மேலும் அவன் எங்களை ரொம்பவும் மீறிச் சென்றுவிட்டான் என்பதனால் எங்களுக்கு அவனைத் தூக்கிலிட முழு அளவு அறவியல் உரிமை உண்டு” என்று சொன்னேன் நான். அழைப்பிதழைப் பெறுபவர்கள், தாங்கள் என்ன நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறோம் என்பதை உறுதியாக உணர இயலாதவாறு அதனை வடிவமைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவுசெய் தோம். இதனை, “திரு. கோல்பை வில்லியம்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி” என்று குறிப்பிடுவதெனத் தீர்மானித்தோம். கேட்லாக் புத்தகத்தைப் பார்த்து, அச்சிட அழகான எழுத்தமைப் பைத் தேர்ந்தெடுத்தோம். கிரீம் கலரில் நேர்த்தியான தாளை முடிவு செய்தோம். நன்றாக அச்சிட்டுத் தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மேக்னஸ், நிகழ்ச்சியில் அருந்துவதற்கு பானங்கள் தரப்படுமா என்று கேட்டான். “பானங்கள் நல்லதுதான், ஆனால் செலவைப் பற்றித்தான் கவலையாக இருக்கிறது” என்றான் கோல்பை. செலவு ஒரு பொருட்டேயில்லை என்று நாங்கள் அவனுக்கு அன்போடு உணர்த்தினோம். நாங்கள் எல்லாரும் அவனுடைய அன்பான நண்பர்கள்; “நெருங்கிய நண்பர்கள் ஒன்றுசேரும்போது இப்படிச் சற்றே ஆடம்பரமாகக் கொண்டாடா விட்டால் இந்த உலகத்தில் வேறென்ன இருக்கிறது” என்றோம். “நிகழ்ச்சிக்கு முன்பு நானும் கொஞ்சம் பானம் அருந்தலாமா” என்று கோல்பை கேட்டான். “நிச்சயமாக” என்றோம்.
தூக்குமேடைதான் அடுத்த பிரச்சினை. எங்கள் யாருக்கும் தூக்குப்போடும் தள அமைப்புப் பற்றிய விஷயம் ஒன்றும் தெரி யாது. எனினும் கட்டிடக் கலைஞனான தோமாஸ், தான் பழைய நூல்களைப் பார்த்து ‘பிளான்’ வரைந்து தருவதாகச் சொன்னான். தண்டனைக் குட்பட்டவன் நிற்கும் பலகைக் கதவு – டிராப் டோர் – சரியாக இயங்க வேண்டியதுதான் முக்கியம் என்று தான் கருதுவ தாக அவன் சொன்னான். அதைச் செய்வதற்கான பொருள்கள், உழைப்புக் கூலி எல்லாம் சேர்த்து நானூறு டாலர்களுக்கு மேல் செலவாகாது என்று தெரிவித்தான். “அவ்வளவு செலவா, கடவுளே” என்றான் ஹவர்ட். “என்ன, ரோஸ்வுட் மரத்திலா செய்யப்போகி றாய்?” என்று தோமாஸைக் கேட்டான் அவன். “இல்லை, நல்ல வகையான பைன் மரம்தான்” என்றான் தோமாஸ். “பெயிண்ட் அடிக்காத பைன் பலகை நேர்த்தியின்றித் தெரியாதா” என்றான் விக்டர். வால்நட் கலரில் எளிதாக வண்ணம் அடித்துவிடலாம் என்றான் தோமாஸ்.
எல்லாம் சிறப்பாகச் செய்யப்பட வேண்டியவைதான் என்றா லும், நான் சொன்னேன்: “பானங்கள், அழைப்பிதழ்கள், இசைக்குழு இவற்றின் செலவுகளுக்கெல்லாம் மேலாக, தூக்குமேடைக்காகத் தனியே நானூறு டாலர் செலவழிப்பது சற்றே அதிகமில்லையா? ஆகவே தூக்கிலிட, ஓர் இயற்கையான மரத்தையே, ஓர் அழகான ஓக் மரம்-இந்த மாதிரி-பயன்படுத்தினால் என்ன?” என்றேன். “தூக்கிலிடப்போவது ஜூன் மாதம் ஆகையால், எல்லா மரங்களுமே பச்சைப் பசேலென்று இருக்கும்-அது ஓர் இயற்கையான உணர்வையும் உண்டாக்கும். மேலும் மேற்கு நாடுகளில் மரங்களில் தூக்கிலிடுவதுதான் பாரம்பரியம்” என்றும் சொன்னேன். ஏற்கெனவே கையிலிருந்த கடித உறைகளின் மேல் தூக்குமேடை அமைப்புகளை வரைய ஆரம்பித்துவிட்டிருந்த தோமாஸ், “திறந்த வெளித் தூக்கிலிடல் என்பது எப்போதுமே மழையின் தாக்குதலுக்கு உட்பட்டது, அதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்” என்றான். திறந்த வெளி நிகழ்ச்சியே நல்லது என ஆதரித்த விக்டர், ஏதாவதொரு நதிக்கரையில் அதை வைத்துக் கொண்டால் நல்லது என்றான். குறிப்பாக, “நகரத்திலிருந்து சற்றே தூரத்தில் இதனை நிகழ்த்தும்போது, விருந்தினர்கள், இசைக் குழுவினர் இவர்களையெல்லாம் நகரத்திலிருந்து நிகழ்விடத்திற்கு அழைத்துவந்து, மீண்டும் திருப்பி அழைத்துச் செல்லும் பிரச்சினை இருக்கிறது” என்றும் குறிப்பிட்டான்.
இந்தக் கணத்தில் நாங்கள் யாவரும், வாடகைக்குக் கார்/லாரி ஏற்பாட்டு ஏஜென்சி நடத்திவரும் ஹாரியை நோக்கினோம். இதற் குத் தேவையான லிமோசின் வேன்களை ஏற்பாடு செய்யமுடியு மென்று தெரிவித்த ஹாரி, ஆனால் டிரைவர்களுக்குத்தான் பணம் தரவேண்டியிருக்கும் என்றான். டிரைவர்கள் கோல்பைக்கு நண்பர் கள் அல்ல. ஆகவே பானக் கடைக்காரர்கள், இசைக்குழுவினர் போலவே அவர்களுக்கும் காசு தரவேண்டும். பெரும்பாலும் சவச் சடங்குகளுக்குப் பயன்படுத்துவதற்காகவே தன்னிடம் ஏறத்தாழ பத்து லிமோசின்கள் இருப்பதாகவும், இன்னும் தேவைப்பட்டால் நண்பர்களிடமிருந்து ஒரு டஜன் வேன்களை இரவல் வாங்கிக் கொள்ளமுடியும் என்றும் அவன் தெரிவித்தான். மேலும் வெளிப் புற நிகழ்ச்சி என்பதால், இதற்காக ஒரு டெண்ட் அல்லது பந்தல் அமைப்பது நலம் என்றும், அதை முக்கியஸ்தர்களுக்கும் இசைக் குழுவுக்குமாவது பயன்படுத்தலாம் என்றும் நிகழ்ச்சியின்போது மழை வந்துவிட்டால் இருண்ட மனநிலை ஏற்பட்டுவிடும் என்றும் சொன்னான். தூக்குமரம் அல்லது மேடை இவற்றைப் பொறுத்த அளவில், இதில் தனக்குச் சம்பந்தமில்லை என்றும், இந்த இரண் டில் எது வேண்டும் என்பது தூக்கிலிடப்படப் போகும் கோல்பை யின் தீர்மானத்துக்கே விடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தான். “எல்லாருமே சிலசமயம் ரொம்பவும் மீறிப் போகிறார்கள். இதில் நீங்கள் மட்டும் ரொம்பவும் கடுமையாக இப்போது நடந்துகொள்வ தாகத் தோன்றவில்லையா” என்று கேட்டான் கோல்பை. “இதெல்லாம் முன்பே பேசியாயிற்று. நீ இப்போது தீர்மானிக்க வேண்டியது சாவு மேடையா, மரமா என்பதுதான்” என்றான் ஹவர்ட். துப்பாக்கி சுடும் குழுவினரை ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டான் கோல்பை. “இல்லை, கூடாது”-இது ஹவர்ட். சுடும் குழுவினரை ஏற்பாடு செய்வது, கோல்பைக்குத் தான் எனும் அகம்பாவத்தை உண்டாக்கும் நிகழ்ச்சியாகிவிடும். கண்ணைக் கட்டுவது, பிறகு கடைசி சிகரெட்- இப்படி, கோல்பை ஏற்கெனவே வேண்டிய தொல்லைக்குள் இருக்கிறான். ஆகவே மீண்டும் யாரையும் அவன் தனக்காக நாடகமாட வைத்து தானும் நாடகமாடத் தேவை யில்லை என்றான். “சாரி, இந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை, மரமே போதும் எனக்கு” என்று சொல்லிவிட்டான் கோல்பை. தோமாஸ் வெறுப்போடு தான் இதுவரை வரைந்து வைத்திருந்த சவமேடை அமைப்புப் படங்களைத் தூக்கி யெறிந்தான்.
தூக்குத் தண்டனையை நிறைவேற்றப் போகும் ஆள் யார் என்பது பற்றி இறுதியாகச் சர்ச்சை நடந்தது. “தூக்குப்போடும் ஆள் வேறு நமக்கு வேண்டுமா” என்று கேட்டான் பால். “ஏனெனில், நாம் ஒரு மரத்தை உபயோகிக்கப் போகிறோம். ஆகவே நாமே ஒரு முடிச்சின் உயரத்தை ‘அட்ஜஸ்ட்’ செய்து விடலாம். கோல்பை, ஏதாவது நாற்காலி அல்லது ஸ்டூல் போன்ற ஒன்றின் மேலிருந்து குதித்தால் போதும்” என்றான். மேலும் தொடர்ந்தான், பால். “இப்போதெல்லாம் தூக்கிலிடுவதை நிகழ்த்தும் எந்த ஃப்ரீ லான்ஸ் ஆசாமியும் கிடைப்பானா என்பது சந்தேகமே. நாம் தூக்கிலிடும் முதன்மைத் தண்டனையை முற்றிலுமாக, தற்காலிகமாக ஒழித் துக் கட்டிவிட்டோம். ஆகவே தூக்கு ஆளை இங்கிலாந்திலிருந்தோ, ஸ்பெயினிலிருந்தோ, தென்அமெரிக்காவிலிருந்தோ விமானத்தில் வரவழைக்க வேண்டியிருக்கும். அப்படி வரவழைத்தாலும், நாம் முன்கூட்டியே அந்த ஆள் ஒரு நிஜமான, தொழில்ரீதியான தூக்கிலிடுபவனா, இல்லை அமெச்சூரா என்பதை எப்படிக் கண்டு பிடிக்கமுடியும்? அமெச்சூராக இருந்து, பணத்திற்கு ஆசைப்பட்டு வந்து, எல்லார் முன்னாலும் நிகழ்ச்சியைக் கெடுத்து, நம்மை அவமானப்படுத்திவிட்டால் என்ன செய்வது? கோல்பை ஏதாவதொன்றின் மீதிருந்து குதிக்க வேண்டியிருந்தாலும், அவன் குதிக்கக் கூடாது என்றோம் நாங்கள் எல்லோரும். அது கொள்கை மாற்றம் ஆகிவிடும். எங்கள் அழகான மரத்தின்கீழே ஏதோ ஒரு சமையலறை நாற்காலி இருப்பது சூழ்நிலைக்குப் பொருந்துமா? எங்களில் மிக நவீனக் கண்ணோட்டம் உடையவனும், புதுமை புகுத்த அஞ்சாதவனுமான தோமாஸ், பத்தடி விட்டமுள்ள ஒரு ரப்பர் பந்தின்மீது கோல்பை ஏறி நிற்கலாமென்று சொன்னான். குதிப்பதற்குப் போதுமானதாக இது இருக்குமென்றும் குதித்தபிறகு சட்டென்று கோல்பையின் மனம் மாறிவிட்டாலும் பந்து உருண் டோடிவிடும் என்றும் அவன் சொன்னான். முறையான ஒரு தூக்குக் காரனைப் பயன்படுத்தாமையால், நாம் கோல்பையின்மீதே இந்த நிகழ்ச்சிக்கான பொறுப்பைப் பெருமளவு சுமத்துகிறோம். கோல்பை இதை மிகச் செம்மையாகச் செய்துமுடிப்பான். தன் நண்பர்களைக் கடைசி நிமிடத்தில் அவமானத்திற் குள்ளாக்கிவிட மாட்டான் என்று தான் நினைப்பதாகவும் அவன் சொன்னான். “எனினும் இம்மாதிரிச் சந்தர்ப்பங்களில், மனிதன் சற்றே மனம் தளர்வது இயற்கைதான். எளிதாக வடிவமைக்கப்படக் கூடிய அந்தப் பத்தடி விட்டப் பந்து, மிக உற்சாகமான, பிரமாதமான நிகழ்ச்சியை கோல்பை தரக் காரணமாக அமையும்” என்றான் அவன்.
மிக உற்சாகமான என்பதற்கு அவன் பயன்படுத்திய ‘ஒயர்’ என்ற வார்த்தை, இதுவரை பேசாமலே இருந்த ஹேங்க்கை இந்த உலகத்திற்கு இழுத்துவந்தது. “கயிற்றுக்குப் பதிலாகக் கம்பியை உபயோகிப்பது இன்னும் தேர்ச்சியானதாகவும், கோல்பைக்கு நன்மை செய்வதாகவும் அமையுமல்லவா?” என்று அவன் கேட்டான். இதைக் கேட்டதும் கோல்பையின் முகம் மாறிவிட்டது. இதற்கு அவனைக் குற்றம் சொல்ல முடியாது. ஏன் எனில், கயிற்றில் தொங்குவதைவிடக் கம்பியில் தூக்கிலிடப்படுவது நல்ல ரசனைக்குச் சற்றும் ஒவ்வாத விஷயம். அதைப் பற்றிச் சிந்திக்கும் போதே ஒரு மனவேறுபாட்டினை ஏற்படுத்திவிடுகிறது. எதன்மீதிருந்து கோல்பை குதிக்கப்போகிறான் என்னும் பெரிய பிரச்சினையையே தோமாஸின் ரப்பர் பந்து பற்றிய சிந்தனை வாயிலாகத் தீர்த்து முடிவு செய்துவிட்டபோது, பொறுப்பற்று உட்கார்ந்துகொண்டிருந்த ஹேங்க் இப்படிக் கம்பியைப் பற்றிப் பேசுவது வெறுப்புக்குரியது என்று நினைத்தேன் நான். ஆகவே வேகவேகமாக, “கம்பியைப் பயன்படுத்துவது இயலாத வேலை” என்றேன். ஏனெனில் அது மரத்தைத் துன்பப்படுத்தும். கோல்பையின் முழு பளுவும் தாங்கும்போது கட்டப்பட்டுள்ள கிளையினுள் ளே கம்பி அறுத்துப் பதியும். சுற்றுச்சூழல் பற்றிய மரியாதை பெருகிவரும் இந்நாட்களில், இப்படிச் செய்வது நல்லதா? இப்படி நான் சொன்னவுடனேயே, கோல்பை என்மீது நன்றி நிரம்பியதொரு பார்வையைப் படரவிட்டான். அத்துடன் கூட்டம் முடிந்தது.
நிகழ்ச்சிக்குரிய நாளில் எல்லாம் சிறப்பாக நடந்தேறின. (இறுதியாகக் கோல்பை தேர்ந்தெடுத்த இசை, ஒரு ‘ஸ்டாண்டர்ட்’ விஷயம்தான். ‘எல்கர்’. அதை ஹவர்ட்டும் அவன் இளைஞர் களும் மிக நன்றாக வாசித்தார்கள்.) மழைகிழை வந்துவிடவில்லை. பலபேர் கூடியிருந்து ரசித்தார்கள். எல்லாருக்கும் வேண்டுமான அளவு ‘ஸ்காட்ச்’ பானமும் கிடைத்தது. மரங்களடர்ந்த நாட்டுப்புறப் பின்னணிக்கு ஏற்ப, அந்தப் பத்தடிப் பந்து பசுமையான வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. இந்த முழு நிகழ்ச்சியிலும் என் மனம் மறக்கமுடியாத விஷயங்கள் இரண்டு.
ஒன்று நான் ‘ஒயர் வேண்டாம்’ என்று சொன்னபோது கோல்பை பார்த்த நன்றிப்பார்வை.
மற்றது, யாரும் அதற்குப் பிறகு மீண்டும் ரொம்பவும் மீறிப்போனதில்லை என்பது.
கூண்டுப் பறவை- சிறுகதை
(கீழ்வரும் கதை நோபல் பரிசு பெற்ற வங்க எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரால் (1861-1941) எழுதப்பட்டது. கல்வி என்பது என்ன எனக் கேள்வி எழுப்புகிறது இக்கதை.)
ஒரு காலத்தில் ஒரு சிறிய பறவை இருந்தது. அதற்கு நாகரிக நடத்தைமுறைகள் தெரியாது, அது புத்தகங்களும் படித்ததில்லை.
“இந்தப் பறவை ஒன்றுக்கும் லாயக்கில்லை, அது தோட்டத்திலுள்ள பழங்களைத் தின்பதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை” என்றான் அரசன். தன் அமைச்சரைக் கூப்பிட்டு, “அதற்குக் கொஞ்சம் கல்வி அளியுங்கள்” என்றான்.
கல்வி அளிக்கும் பொறுப்பு அரசனின் மைத்துனனுக்குச் சென்றது. அவன் பல பண்டிதர்களை அழைத்து அந்தப் பறவை ஏன் சற்றும் கல்வி இல்லாமல் இருக்கிறது என்று கண்டறியச் சொன்னான்.
அவர்கள், பறவையின் கூடு வெறும் வைக்கோலினால் ஆகியிருப்பதால்தான் அவ்வாறு நேர்ந்தது என்று முடிவு செய்தார்கள். ஆகவே முதலில் செய்ய வேண்டிய வேலை தேர்ந்தெடுத்த பொருள்களால் ஒரு கூண்டு செய்வதுதான் என்றார்கள்.
அரசன் அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்து அனுப்பிவைத்தான்.
பொன்னாலான ஒரு அழகிய கூண்டினைச் செய்யப் பொற்கொல்லனை வருவித்தான். அந்தக் கூண்டினைக் காண வெகுதொலைவிலிருந்து எல்லாம் மக்கள் வந்தார்கள்.
சிலர், “கல்வியின் தரம் மிக உயர்ந்துவிட்டது!” என்றார்கள். இன்னும் சிலர் “கல்வியே இல்லாவிட்டாலும் இப்படிப்பட்ட உயர்ந்த கூண்டில் அந்தப் பறவை வசிக்கிறது. எவ்வளவு அதிர்ஷ்டம் அதற்கு!” என்றார்கள்.
பொற்கொல்லனும் பரிசுகளைப் பெற்றுச் சென்றான்.
அரசனின் மைத்துனன், பாடப்புத்தகங்கள் எழுதுவோரை வரவழைத்தான். அவர்கள் இருக்கும் நூல்களுக்குப் படிகள் எடுத்தார்கள், படிகளுக்குப் படிகள் எடுத்தார்கள். கொஞ்சநாளில் புத்தகங்கள் மலைபோல் குவிந்துவிட்டன. பார்த்தவர்கள், “சபாஷ், இதல்லவோ கல்வி!” என்றார்கள்.
பாடப்புத்தகங்கள் எழுதியவர்களும் உயர்ந்த பரிசுகள் பெற்று வீடு திரும்பி னார்கள்.
தொடர்ந்து கூண்டினை மிக நன்றாகப் பராமரிக்கவேண்டிப் பல ஆட்களை அமர்த்தினான் அரசனின் மைத்துனன்.
சிலபேர், “கூண்டை நன்றாகத்தான் கவனிக்கிறார்கள். ஆனால் உள்ளே இருக்கும் பறவையை ஒருவரும் கவனிப்பதில்லையே!” என்று விமரிசனம் செய்தார்கள். அரசன் காதில் இந்தச் சொற்கள் விழுந்ததும் மைத்துனனை அழைத்தான்.
“வணக்கத்திற்குரிய அரசே, தெரிந்தவர்கள்-பொற்கொல்லர்கள், ஆசிரியர்கள், பாடப் புத்தகம் எழுதியவர்கள்,நிர்வாகிகள்-முதலியோரிடம்தான் உண்மையை அறியமுடியும். இந்த விமரிசகர்கள் வேலையற்றவர்கள்,இப்படித்தான் கூச்சல்போடுவார்கள்” என்றான் மைத்துனன்.
இந்தச் சமாதானம் அரசனை அமைதிப்படுத்தியது. அவன் மைத்துனனுக்கும் ஒரு தங்க நெக்லஸ் பரிசாக அளித்தான்.
ஒருநாள், பறவைக்கு அளிக்கப்படும் கல்வி எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்று தானே நேரில் காணவிரும்பினான் அரசன். அவையினருடன் பறவையின் கல்வி மையத்துக்கு வந்தான். தொழிலாளர்கள்,வேலையாட்கள், பாடப்புத்தகக் காரர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லாரும் அவரவர் இடத்தில் இருந்தார்கள்.
முற்றிலும் திருப்தியடைந்தவனாக, அரசன் தன் யானைமீது ஏறப்போனான். அப்போது அருகில் ஒளிந்திருந்த விமரிசகன் ஒருவன், “அரசே, பறவையைப் பார்த்தீர்களா?” என்று கூச்சலிட்டான்.
அரசனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. “ஆமாம், மறந்தேவிட்டேன்” என்றான். “நாம் பறவையைப் போய்ப் பார்ப்போம்,வாருங்கள்” என்றான்.
யாவரும் பாடம் நடத்தும் செயலை அவனுக்கு நிகழ்த்திக் காட்டினார்கள். அது மிகவும் பெரிதாக இருந்தது. பறவை கண்ணுக்குத் தென்படவே இல்லை. பறவைக்குப் பாடம் சொல்ல இவ்வளவு அரிய முயற்சிகள் நடக்கின்றனவே என்று அரசன் திருப்தி யடைந்தான்.
பறவைக் கூண்டுக்குள் உணவோ நீரோ இல்லை. அதற்கு பதிலாகப் புத்தகங்களிலிருந்து கிழிக்கப்பட்ட தாள்கள் பேனாவினால் உள்ளே செலுத்தப்பட்டன.
பறவை இப்போதெல்லாம் பாடுவதே இல்லை, அதற்கு மூச்சுவிடவும் இட மில்லை.
தாங்கள் சரியான காரியங்களைத்தான் செய்வதாக அதன் பாதுகாவலர்கள் நினைத்தார்கள்.
நாளுக்கு நாள் பறவை மிகவும் இளைத்துப்போயிற்று. அதனால் குதிக்கவோ ஆடவோ சற்றும் இயலவில்லை. இருந்தாலும் பழக்கத்தின் காரணமாக, காலைச் சூரிய ஒளியைக் கண்டபோது சிலமுறை அது தன் சிறகுகளை அடித்துக்கொள்ள முயன்றது.
சிலசமயங்களில் தன் பலவீனமான அலகினால் தங்கக்கூண்டின் கம்பிகளைக் கொத்த முயன்றது. “எவ்வளவு மோசமான நடத்தை!” என்று காவலாளிகள் கத்தினார்கள்.
ஒரு கொல்லனை வருவித்துப் பறவையைச் சங்கிலியால் கட்ட முடிவு செய் தார்கள். அதன் இறக்கைகளும் வெட்டப்பட்டன. “இந்த நாட்டில் பறவைகள் முட்டாள்கள் மட்டுமல்ல, அவற்றிற்கு நன்றியும் இல்லை” என்றார்கள்.
ஒருநாள் பறவை செத்துப்போயிற்று. அது இறந்த சமயம் ஒருவருக்கும் தெரியாது. இந்தச் செய்தி பரவியது. அதை உறுதிப்படுத்திக் கொள்ள மைத்துனனை அரசன் வருவித்தான்.
“அரசே, பறவையின் கல்வி இப்போது பூர்த்தியாகிவிட்டது” என்றான் மைத்துனன்.
அரசன் கேட்டான், அது இப்போதெல்லாம் குதிப்பதில்லையா?
“அது பறக்கிறதா?”
“இல்லை அரசே.”
“அது பாடுகிறதா?”
“இல்லை அரசே.”
“அப்படியானால், பறவையைக் கொண்டுவா, நான் பார்க்கவேண்டும்.”
பறவையை அரசன் சுரண்டிப் பார்த்தான். பறவையிடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை. அதன் வயிற்றில் அடைக்கப்பட்டிருந்த தாள்கள் மட்டுமே சரசரத்தன.
சுயநல அரக்கன் (சிறுகதை)
ஆஸ்கார் ஒயில்டு – தமிழில் க.பூரணச்சந்திரன்
(சிறந்த கூர்மதியாளர். ஆஸ்கார் ஒயில்டு, டப்ளின் நகரில் 1854இல் பிறந்தார். நாவல்கள், கட்டுரைகள் முதலியன தவிர Importance of being Earnest போன்ற நாடகங்களை எழுதினார். சிறுவர்களுக்காக Happy Prince போன்ற சிறுகதைகளையும் எழுதினார். அவர் எழுதிய ஒரு சிறுகதை)
ஒவ்வொரு நாள் மாலையிலும், பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது சிறுவர்கள் அந்த அரக்கனின் தோட்டத்திற்குச் சென்று விளையாடுவது வழக்கம்.
மென்மையான பசும்புல் தரைகொண்ட பெரிய அழகான தோட்டம். ஆங்காங்கு புற்களின் மத்தியில் நட்சத்திரங்கள் போல் சிறிய பூக்கள். பன்னிரண்டு பீச் மரங்கள். வசந்த காலத்தில் இளஞ்சிவப்பிலும் முத்துநிறத்திலும் பூக்கும். இலையுதிர்காலத்தில் பழங்கள் நிறைந்திருக்கும். மரங்களில் பறவைகள் அமர்ந்து பாடுவது இனிமையாக இருக்கும். பிள்ளைகள் தங்கள் விளையாட்டையும் நிறுத்திவிட்டு அந்தப் பாட்டுகளைக் கேட்பார்கள். “ஆஹா, எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது” என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.
ஒருநாள் அரக்கன் திரும்பிவந்தான். தனது நண்பனான கார்னிஷ் ராட்சஸ னைப் பார்க்கச் சென்றிருந்தான் அவன். அப்படியே ஏழாண்டுகள் அவனுடன் தங்கி விட்டான். ஏழாண்டுகளில் அவன் சொல்லவேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டான். அவனது உரையாடுவது மிகக்குறைவு. தனது மாளிகைக்குத் திரும்பவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. வந்தபோது தனது தோட்டத்தில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
“என்ன செய்கிறீர்கள் இங்கே?” என்று சீறும் குரலில் கத்தினான். பிள்ளைகள் ஓடிப்போய்விட்டார்கள்.
“என் தோட்டம் எனக்கு மட்டும்தான்” என்றான் அரக்கன். “எல்லோருக்கும் இது புரியும். இதில் என்னைத் தவிர வேறு எவரும் விளையாட அனுமதிக்கமாட் டேன்” என்றான். அதைச் சுற்றி ஒரு உயர்ந்த சுவரை எழுப்பினான். ஒரு அறிவிப்புப் பலகையை அதில் தொங்கவிட்டான்.
அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்
மிகவும் சுயநலம்பிடித்த அரக்கன்தான் அவன்.
பிள்ளைகளுக்கு இப்போது விளையாட வேறு இடம் இல்லை. தெருக்களில் விளையாட முயற்சி செய்தார்கள். ஆனால் அவை புழுதியாகவும் கூர்கற்களோடும் இருந்தன. அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. தங்கள் பாடங்கள் முடிந்தபிறகு அந்தச் சுவரைச் சுற்றிச்சுற்றி வந்தார்கள். உள்ளேயிருக்கும் அழகான தோட்டத்தை நினைத்து ஏங்கினார்கள். “எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம்” என்று தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்.
வசந்தம் வந்தது. நாடு முழுவதும் சிறிய மலர்களும் சிறிய பறவைகளும் தென் பட்டன. சுயநல அரக்கனின் தோட்டத்தில் மட்டும் இன்னும் பனிக்காலமாகவே இருந்தது. சிறுவர்கள் இல்லாததால் அதில் பறவைகள் சென்று பாட அக்கறைகொள்ளவில்லை. மரங்களும் பூக்க மறந்துவிட்டன. ஒருமுறை ஓர் அழகான பூ, புற்களுக்கு மத்தியிலிருந்து தலையை நீட்டியது. அறிவிப்புப் பலகையை அது பார்த்ததும் பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டு மீண்டும் தரைக்குள் தூங்கப்போய்விட்டது. கடுங்குளிரும் உறைபனியும் மட்டுமே அங்கு சந்தோஷமாக இருந்தன. “வசந்தம் இந்தத் தோட்டத்தை மறந்து போய்விட்டது. எனவே இங்கே வருஷமுழுவதும் நாம் இன்பமாக இருக்கலாம்” என்றன அவை. உறைபனி தன் பரந்த வெண்மையான போர்வையால் புற்களை மூடியது. கடுங்குளிர் எல்லா மரங்களையும் வெள்ளி நிறமாக்கியது. பிறகு அவை வாடைக்காற்றைத் தங்களோடிருக்குமாறு அழைத்தன. அதுவும் வந்தது. அது கம்பள மேலாடையை அணிந்திருந்தது. தோட்டத்தில் நாள் முழுவதும் சுற்றிக் கூச்சலிட்டது. புகைபோக்கிகளைக் கவிழ்த்தது. “மிகவும் சந்தோஷமான இடம்”. “நாம் ஆலங்கட்டி மழையையும் ஒரு சுற்று வந்துபோகச் சொல்லலாம்” என்றது. பனிக்கட்டி மழையும் வந்தது. தினசரி மாளிகையின் கூரையில் மூன்று மணிநேரம் அடிஅடி என்று அடித்தது. பெரும்பாலான பலகைகள் பெயர்ந்தே விட்டன. பிறகு அது தோட்டத்தில் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக சுற்றிச்சுற்றி ஓடியது. சாம்பல் நிற உடையை அணிந்திருந்தது அது. அதன்மூச்சே பனிக்கட்டிபோல் இருந்தது.
தன் ஜன்னலருகே அமர்ந்து குளிர்ந்த வெண்ணிறத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுயநல அரக்கன், “ஏன் வசந்தம் வர இவ்வளவு காலதாமதம் ஆகிறது என்று புரியவில்லையே” என்று சொல்லிக்கொண்டான். “அன்றாடத் தட்பவெப்ப நிலையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்.”
ஆனால் வசந்தமும் வரவில்லை, கோடையும் வரவில்லை. இலையுதிர் காலம் எல்லாத் தோட்டங்களுக்கும் பொன்னிறக் கனிகளைக் கொடுத்துச் சென்றது, ஆனால் இந்தத் தோட்டத்தில் ஒன்றுமில்லை. “ரொம்பவும் சுயநலக்காரன்” என்று அது சொல்லியது. அதனால் எப்போதுமே அங்கு பனிக்காலமாக இருந்தது. வாடைக்காற்றும் ஆலங்கட்டி மழையும் வெண்பனியும் உறைபனியும் மரங்களினூடே சந்தோஷ தாண்டவம் புரிந்தன.
ஒருநாள் காலை. அரக்கன் தன் படுக்கையில் கண்விழித்துப் படுத்திருந்தான். ஓர் இனிய இசை கேட்டது. அரசனின் சங்கீதக் குழுவினர் அந்த வழியாகச் செல்கிறார்கள் என்று நினைத்தான். கடைசியில், அவன் ஜன்னலுக்கருகில் பாடிய சிறு லின்னட் பறவைதான் அது. ஆனால் அவன் தன் தோட்டத்தில் பறவைகளின் பாடலையே கேட்டுப் பலகாலம் ஆனதால் அவனுக்கு உலகிலேயே மிகச் சிறந்த இசை அதுதான் என்று தோன்றியது. உடனே ஆலங்கட்டி மழை அங்கு நடனமிடுவதை நிறுத்தியது. வாடைக்காற்று ஓலமிடுவதை நிறுத்தியது. திறந்த ஜன்னலின் வழியே ஒரு இனிய வாசம் வந்தது. “கடைசியாக வசந்தம் வந்துவிட்டது” என்று நினைக்கிறேன் என்றான். படுக்கையிலிருந்து துள்ளியெழுந்து வெளியே நோக்கினான்.
அவன் கண்ணுக்குத் தென்பட்டது என்ன?
மிக ஆச்சரியமான ஒரு காட்சி. சுவரிலிருந்த ஒரு சிறிய ஓட்டையின் வழியாகச் சிறார்கள் உள்ளே வந்துவிட்டார்கள். மரக்கிளைகளின் மீது அவர் கள் உட்கார்ந்திருந்தார்கள். காணமுடிந்த ஒவ்வொரு மரத்தின் கிளையிலும் ஒரு குழந்தை. மரங்களுக்குத் திரும்பக் குழந்தைகள் வந்தது பெரும் சந்தோஷம். அவை தங்களைப் பூக்களால் அலங்கரித்துக் கொண்டன. தங்கள் கிளைகளைக் குழந்தைகளின் தலைகளைச் சுற்றி மென்மையாக வீசின. மகிழ்ச்சியோடு பறவைகள் சுற்றிப்பறந்து கூச்சலிட்டன. புற்களின் இடையே இருந்து சிறுபூக்கள் சிரித்தன. மிக அழகான காட்சி, ஆனால் ஒரு மூலையில் மட்டும் இன்னும் பனிக்காலமாகவே இருந்தது. தோட்டத்தின் தொலைதூர மூலை அது. அங்கே ஒரு சிறுபையன் நின்றிருந்தான். மிகச்சிறியவனாக இருந்ததால் மரத்தின்மீது அவனால் ஏறமுடியவில்லை. அழுதுகொண்டே அதைச் சுற்றிச்சுற்றி வந்தான். பாவம், அந்த மரத்தில் மட்டும் வெண்பனியும் உறைபனியும் தங்கியிருந்தன. வாடைக்காற்று அதைச் சுற்றி வீசி ஓலமிட்டது. “சின்னப் பையா, ஏறு” என்றது மரம். தன்னால் இயன்ற அளவு கிளைகளைத் தாழ்த்தியது. ஆனால் பையன் மிகச் சின்னவன்.
அதைப் பார்த்து அரக்கனின் உள்ளம் நெகிழ்ந்தது. “எவ்வளவு சுயநலத்தோடு இருந்துவிட்டேன்” என்றான். “ஏன் இங்கே வசந்தம் வரவில்லை என்று இப்போது புரிகிறது. அந்தப் பையனை மரத்தில் அமர்த்துவேன். சுவரை இடித்துத் தள்ளுவேன். இந்தத் தோட்டம் என்றைக்கும் என்றைக்குமாகப் பிள்ளைகளின் விளையாட்டுக் களமாக இருக்கும்.” தான் செய்ததற்கு உண்மையிலேயே மனம் வருந்தினான் அவன்.
கீழே இறங்கிவந்து மிக மெதுவாகக் கதவைத் திறந்து தோட்டத்திற்குள் சென்றான். ஆனால் அவனைப் பார்த்ததும் சிறுவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். மீண்டும் தோட்டத்தில் வாடைக்காலம்தான். அந்தச் சின்னஞ் சிறுவன் மட்டுமே ஓடவில்லை. அவன் கண்களில் நீர்நிறைந்து பார்வையை மறைத்திருந்தது. மெதுவாக அவன் பின்னால் சென்ற அரக்கன் கையில் மென்மையாக அவனைத் தூக்கி ஒரு கிளையில் அமரவைத்தான். மரம் உடனே பூத்துக்குலுங்கியது. பறவைகள் அதில் அமர்ந்து பாடின. சிறுவன் தன் இருகைகளையும் அரக்கனின் கழுத்தைச்சுற்றி வீசிக் கட்டிக்கொண்டு முத்தமிட்டான். அரக்கன் முன்போல் இல்லாததைக் கண்ட பிற சிறார்களும் திரும்ப ஓடிவந்தார்கள். அவர்களுடன் வசந்தமும் வந்தது. “சின்னப் பசங் களே, இனிமேல் இது உங்கள் தோட்டம்” என்றான் அரக்கன். பெரிய கடப்பாறை எடுத்துச் சுவரை இடித்துத் தள்ளினான். பகல் பன்னிரண்டு மணிக்கும், மக்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லும்போது, மிக அழகான தோட்டத்தில் அரக்கன் சிறுவர் களோடு விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே சென்றார்கள்.
நாள் முழுவதும் சிறுவர்கள் விளையாடினார்கள். இருட்டும் நேரத்தில் அரக்கனிடம் விடைசொல்லிக்கொண்டுபோகச் சிறுவர்கள் வந்தார்கள்.
“உங்கள் சின்னஞ்சிறு தோழன் எங்கே? நான் மரத்தில் ஏற்றி உட்கார வைத்தேனே, அவன்” தன்னை முத்தமிட்டதால் அந்தச் சிறுவனை அரக்கனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
“எங்களுக்குத் தெரியாது” என்றார்கள் அவர்கள். “அவன் போய்விட்டிருப்பான்.”
“நாளைக்கு நிச்சயமாக அவனை வரச் சொன்னேன் என்று சொல்லுங்கள்” என்றான் அரக்கன். ஆனால் பிள்ளைகளுக்கு அவன் எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை. அவனை இதற்குமுன்னால் பார்த்ததும் கிடையாது. அரக்கனுக்கு வருத்தமாக இருந்தது.
ஒவ்வொரு மாலையும், பள்ளிக்கூடம் விட்டபிறகு, பிள்ளைகள் வந்து அரக்கனோடு விளையாடினார்கள். ஆனால் அரக்கன் நேசித்த அந்தச் சின்னஞ்சிறு வன் வரவேயில்லை. எல்லாச் சிறுவர்களுடனும் அரக்கன் மிக அன்பாக இருந்தான். என்றாலும் தன் முதல் தோழனுக்காக அவன் ஏங்கினான். அவனைப்பற்றி அடிக்கடி பேசினான். “அவனைப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று கூறிவந்தான்.
ஆண்டுகள் சென்றன. அரக்கனுக்குத் தள்ளாமல் போய்விட்டது. வலிமை குறைந்துவிட்டது. சுற்றிவிளையாட முடியவில்லை. பெரிய சாய்வுநாற்காலியில் அமர்ந்து சிறார்கள் தோட்டத்தில் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பான். தனது தோட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டான். “என்னைச்சுற்றி அழகான பூக்கள் பல இருக்கின்றன. ஆனால் சிறுவர்கள்தான் மிக அழகான பூக்கள்.”
ஒரு பனிக்காலத்தில் காலை எழுந்து உடை உடுத்திக்கொண்டிருந்தபோது ஜன்னனலின் வழியே பார்த்தான். இப்போது அவனுக்குப் பனிக்காலம் என்றால் வெறுப்பு இல்லை. வசந்தம் ஓய்வெடுக்கும் காலம் அது, அவ்வளவுதான். பூக்களும் ஓய்வெடுக்கின்றன.
திடீரெனக் கண்களைத் தேய்த்துக்கொண்டு பார்த்தான், மறுபடி பார்த்தான். மிக ஆச்சரியகரமான காட்சிதான் அது. தூரத்து மூலையில் தோட்டத்தில் ஒரு மரம் மட்டும் பூத்துக்குலுங்கியது. அதன் கிளைகள் பொன்னிறம். வெண்நிறப் பழங்கள் அவற்றிலிருந்து தொங்கின. அவன் நேசித்த சின்னஞ்சிறுவன் அதன்கீழ் நின்றுகொண்டிருந்தான்.
பெரும் சந்தோஷம் கவிய, அரக்கன் படிகளில் இறங்கி தோட்டத்திற்குள் புல்தரையில் விரைந்து ஓடினான். சிறுவன் அருகில் சென்றான். மிகநெருக்கத்தில் வந்ததும் அவன் முகம் கோபத்தில் சிவந்தது. “உன்னை காயப்படுத்தும் துணிச்சல் யாருக்கு வந்தது?” குழந்தையின் இரண்டு கைகளிலும் ஆணிகள் குத்திய காயங்கள். அதேபோல் இரு பாதங்களிலும்.
“உன்னை காயப்படுத்தும் துணிச்சல் யாருக்கு வந்தது?” கத்தினான் அரக்கன். “சொல். என் பெரிய வாளை எடுத்துச் சென்று அவனைக் கொன்றுபோடுகிறேன்.”
“இல்லை” என்றான் குழந்தை. “இவை அன்பின் காயங்கள்.”
“யார் நீ?” என்றான் அரக்கன். ஒரு விசித்திரமான பயம் அவனுக்குள் ஏற்பட்டது. குழந்தையின் முன்னால் மண்டியிட்டான்.
சிறுவன் அரக்கனைப் பார்த்து முறுவல் செய்தான். “ஒருசமயம் உன் தோட்டத்தில் என்னை விளையாட அனுமதித்தாய் நீ. இப்போது என்னுடன் என் தோட்டத்திற்கு- விண்ணுலகிற்கு நீ வா” என்றான்.
மாலையில் சிறுவர்கள் விளையாடத் தோட்டத்திற்குள் ஓடிவந்தபோது, அரக்க னின் உடல் அந்த மரத்தடியில் வெண்ணிறப் பூக்களின் போர்வையில் கிடப்பதைப் பார்த்தார்கள்.