வரலாற்றில் பனுவல்கள்

வரலாற்றில் பனுவல்கள் –
வாசித்தலை நிர்ணயித்தலும்
வாசிப்புப் பனுவல்களை நிர்ணயித்தலும்

இக்கட்டுரை, டோனி பென்னட் என்னும் அறிஞரின் இதே தலைப்புக் கொண்ட கட்டுரையினைத் தழுவியது. பின்னமைப்புவாத மார்க்சியர் குழுவைச் சேர்ந்தவர் டோனி பென்னட். இவரது ‘உருவவாதமும் மார்க்சியமும்’ என்ற நூல் 1979இல் வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டுரை 1994இல் என்னால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.
(பனுவல் என்ற சொல்லைக் கடினமாக உணர்பவர்கள், அச் சொல் இங்குப் பெரும்பாலும்நூல் என்பதைக் குறிக்கிறது என்பதை மனத்திற் கொண்டால் இலகுவாக இருக்கும்.)
1
அண்மைக்காலத்தில் டெரிடாவின் பணியே பின்னமைப்புவாதமாகப் பெருமளவு கருதப்பட்டு வருகிறது. பொதுநிலையில், மாறா இயக்கமும் நெகிழ்ச்சியும் கொண்ட தகர்ப்பமைப்பின் தந்திரவுத்திகளோடு பின்னமைப்புவாதம் சமன் படுத்தப்படுகிறது. இந்த நோக்கிலிருந்து விலகாமலே, ஒரு பின்னமைப்புவாத மார்க்சியத்தை நோக்கிச் செல்வது இந்தக் கட்டுரையின் அக்கறையாகும்.
பின்னமைப்புவாத மார்க்சியம் என்றால், ‘அமைப்புமையவாதத்திற்குப் பின் வருகின்ற மார்க்சியம்’ என்று அர்த்தப்படும். தன்மீது வைக்கப்படும் பின்னமைப்புவாத விமரிசனங்களுக்கு மார்க்சியம் எதிர்வினை புரிகின்றபோது, தனது கோட்பாட்டு இலக்குகளுக்கு மறுவடிவம் தருவதில் அவ்விமரிசனங்களைக் கணக்கில் கொள்வது என்றும் அர்த்தமாகும்.
இதுவரை மார்க்சியத்தின் அடிப்படைக் கருதுகோள்கள், கோட்பாட்டுச் செயல் முறைகள் பலவற்றையும் விமரிசனத்துக்குள்ளாக்குவதாக மட்டுமே பின்னமைப்பு வாதம் நோக்கப்பட்டது. இதனால் மார்க்சியத்திற்கு எதிரான தத்துவச் சிக்கலான போக்குகளின் கூட்டுக்கணம் என்றும் அது நோக்கப்பட்டது. இக்கருத்து ஓரளவுக்குச் சரியானது என்றாலும் இருவகைகளில் தவறாக வழிகாட்டுவதும் ஆகிறது.
மீமெய்ம்மையியலை (மெடஃபிஸிக்ஸை) எதிர்த்தல், சாராம்சவாதத்தை (எசன்ஷியலிசத்தை) எதிர்த்தல் என்னும் இரண்டிலும் மார்க்சியமும் பின்னமைப்புவாதமும் ஒன்றுபடுகின்றன. இப்போக்கு தகர்ப்பமைப்புக்கும் (டிகன்ஸ்ட்ரக்ஷனுக்கும்) உரியதுதான். இந்த எதிர்ப்புகளுக்கு மாற்றிமாற்றிச் சக்தி அளித்தவையும், அவற்றிலிருந்து சக்தி பெற்றவையும் மார்க்சியப் போக்குகளே. பின்னமைப்புவாதப் போக்குகள், இப்போது கோட்பாட்டளவில் பெரிதும் மாற்றம்பெற்ற புதிய மார்க்சிய வடிவங்களை உண்டாக்கியிருக்கின்றன. இவற்றிற்கும் இவற்றின் முன்னோடிகளான பழைய மார்க்சிய வடிவங்களுக்கும் அவ்வளவாகத் தொடர்பில்லை.
இது நமக்கு எவ்விதச் சங்கடத்தையும் அளிக்கத்தேவையில்லை. ஒரு கொள்கை, மேலும் மேலும் பரிசீலனைக்கு உட்படுவதனால்தான், தான் வாழ்வதற்கான தேவை யை நிறுவிக்கொள்கிறது, அல்லது வரலாற்றுச் சக்தியாக உருவெடுக்கிறது. செவ்வியல் மார்க்சியச் சூத்திரங்களைப் பின்னமைப்புவாதத்தினால் மாறிவிட்ட மார்க்சிய வடிவச் சூத்திரங்களோடு ஒப்பிட்டு, அவை எவ்வளவுதூரம் ஒத்துள்ளன, மாறுபட்டுள்ளன என்றெல்லாம் காண்பது, தேவையின்றிப் பின்னதைத் தடைப்படுத்துவதாகும். அரசியல் சூழல்களுக்கேற்ப, கருத்துருவங்கள், கொள்கைகள் பல விதங்களில் மாறுபடு கின்றன. ஒரு கோட்பாட்டமைப்பு, தன்னளவில், தனக்கெனத் தூவப்படும் வளர்ச்சி விதைகளால் அன்றி, வேறு வகைகளால் வளரக்கூடாது எனத் தடைசெய்வது, வரலாற்றுத்தன்மையற்ற பார்வையாகும். கோட்பாட்டுப் புதுமையாக்கங்களை இப்ப டிப்பட்ட பிற்போக்குப் பார்வைகளால் சோதித்துப்பார்ப்பது தவறு. மாற்றங்கள் உற்பவிக்கக்கூடிய புதிய களங்கள், செயல்வகைகள் என்ன என்னும் கேள்விகளால் அவற்றைச் சோதிப்பதே ஏற்புடையது.
இம்மாதிரிக் கணிப்புகளால், பின்னமைப்புவாதம்-மார்க்சியம் இவற்றுக்கிடையிலான அடிப்படையான முரண்பாட்டுப் பின்னல்களைக் கட்டமைப்பது தவறான போக்கு மட்டுமல்ல, பலன் தராததும் ஆகும். இதற்கு அர்த்தம், மார்க்சியம் தகர்ப்பமைப்பை முழுதாக விழுங்கி ஏப்பம் விட்டுவிடவேண்டும் என்பதல்ல. சிலசமயங்களில் பின்னமைப்புவாதம் மார்க்சியத்தை எதிர்மறைப் போக்குகளால் எதிர்கொள்கிறது என்றாலும், நேர்முகச் சாத்தியங்களாலும் சந்திக்கிறது. ஆகவே பின்னமைப்புவாதத்தின் பல்வேறு நற்கூறுகளைப் புடைத்து எடுப்பதன் மூலம் மார்க்சியம் தனது பிரச்சினைகளுக்கும் நோக்கங்களுக்கும் மறுவடிவு தரமுடியும். இதைச் செய்துதான் தனது நற்சான்றுகளைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் மார்க்சியத்திற்கு இல்லை. எனினும், இன்று வேற்றுருப் பெற்றுள்ள அரசியல் செயல்பாட்டுக் களங்களின் உறவு, அவற்றில் குறுக்கிட விரும்பும் தந்திர உத்திகள் ஆகியவை பற்றி, இதுவரை மார்க்சியம் கருதி வந்துள்ளனவற்றை மறுசிந்தனைக்கு உட்படுத்துவது உடனடித் தேவையாகும்.
நாம் பின்னமைப்புவாதத்தை ஒரேஒரு போக்காகவே கொண்டு, பின்னமைப்பு வாத மார்க்சியத்தோடு அதன் உறவுகளைப் பெருமளவு அதற்குள்ள வீரியமிக்க, நேர்முகமான கூறுகளில் மட்டுமே ஒப்பிட்டுப் பார்க்கலாம். எனினும், மார்க்சியத்திற்கு எதிரான தத்துவப் பிரச்சினைகளைத் தருவதாகக் கூறப்படுகின்ற பின்னமைப்புவாதக் கூறுகளை முதலில் கவனிப்போம்.
இப்பிரச்சினைகள் பற்றி டெரி ஈகிள்டன் கூறுவது இது: “மொழியின் மொண்ணையான மீளாக்கக் கொள்கையின் வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்ற, உண்மை, யதார்த்தம், அர்த்தம், அறிவு போன்றவற்றின் செவ்வியல் கருத்துகள்மீது டெரிடாவின் படைப்புகளும் பிறரது படைப்புகளும் மிகத் தீவிரமான அவநம்பிக்கையை அளித்துள்ளன.”
பலசமயங்களில் மார்க்சியத்திற்கு ஒரு சவாலாக உணரப்பட்ட பின்னமைப்பு வாதம், எல்லா வகையான எந்திரத்தனமான சிந்தனை அமைப்புகளையும் சந்தேகத்துக்குள்ளாக்குகிறது. அறிவுக்கொள்கைகள், அர்த்தம் பற்றிய மெய்யியல் கோட்பாடுகள், வரலாற்றின் இறுதிப்பயன், வரலாற்றுவாதக் கோட்பாடுகள் முதலியன மார்க்சிய இயக்க அமைப்புகள்,
இவை யாவும் நமக்கு ஒரு அதிகாரத்தை, ஒரு நன்னடத்தை நிச்சயத்தை, அளவீட்டுக் கோல்களை அளிப்பதன் வாயிலாக, நிகழ்காலத்தில் நம்முடைய சிந்தனை, செயல்பாடு ஆகியவை சரியே எனவும்,
இடக்கட்டுப்பாடு, எல்லை, குழப்பம் ஆகியவற்றுக்குட்பட்ட நமது கணக்கீடுகளால் மட்டுமே உருவாகிய ஏதோ சில அளவைத் தொகுதிகளால்தான் இவை உருவானவை என்பதை மறந்து, பிரச்சினைகளை அலசுகின்றோம் எனவும்
பாதுகாப்பை அளிக்கின்றன. இவற்றை யெல்லாம் பின்னமைப்புவாதம் சந்தேகத்துக் குள்ளாக்குகிறது. இதுதான் இது ஒரு பிரச்சினை என்பதற்குக் காரணம்.
பாரம்பரியமாகவே மார்க்சியம், பொருளியல், விஞ்ஞானத்துவம், வரலாற்றியல் சார்ந்த கருத்தாக்கங்கள் முதலியவற்றின் அடிப்படையில், தனக்குத் தேவையான நியாயவாதங்களைக் கொண்டுள்ளது. பின்னமைபபுவாத விமரிசனங்களை ஏற்பது, மேற்கண்ட எல்லாவிதக் கருத்தாக்கங்களையும் விமரிசனபூர்வமாக மறுபரிசீலனை செய்யவேண்டுவதில் மார்க்சியவாதிகளைக் கொண்டு நிறுத்தும்.
ஆனால் இது ஒரு பிரச்சினை ஆகலாமா? கடந்த இரு பத்தாண்டுக் காலமாக மார்க்சியத்திற்குள்ளாகவே உருவாகி வந்துள்ள கோட்பாட்டு வளர்ச்சிகள் யாவும் குறிப்பாக இந்த திசையில் தானே அதைத் தள்ளிவந்துள்ளன? ஒரு சிரேஷ்டமான, உத்தரவாதம் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை, அறுதியான நிச்சயங்களோ உண்மைகளோ இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை என்னும் கருத்துகளால் மார்க்சியம் தற்காப்புக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட வேண்டும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. காரணம், பத்தொன்பதாம் நு£ற்றாண்டைச் சேர்ந்த இறையியல்கள், வரலாற்றுத் தத்துவங்கள், அறிவியல் சித்தாந்தங்கள் போன்றவற்றிலிருந்து இப்படிப்பட்ட எச்சங்களை நீக்க வேண்டும் என்று மார்க்சியர்களே சமீப காலத்தில் பெருமுயற்சி செய்துள்ளனர். வேறு காரணங்களின்றித் தானாகவே நிகழ்கின்ற சுய விமரிசனச் செயல்முறை என்று இம்முயற்சியைக் கூறமுடியாது. மேற்கூறிய மாதிரியான சாராம்சவாதப் போக்குகள், அவற்றின் அரசியல் விளைவுகளுக்காகத் தான் எதிர்க்கப்படுகின்றன. இரண்டாவது அகிலத்தின் விஞ்ஞான வாதத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட மௌனம், மூன்றாவது அகிலத்தின் அரசியல் தந்திரங்களுக்கு அடிப்படையாக அமைந்த வர்க்கசாராம்ச வாதம் போன்றவை இதற்கு உதாரணங்கள்.
இம்மாதிரி சாராம்சவாதப் போக்குகள், அரசியலில் பயன்படாமல் போனபிறகு, இவற்றின் சரியான எதிர்வினை, மார்க்சியர்களை மகோன்னத உத்திரவாதங்கள் எவையும் இல்லை என்ற கண்டுபிடிப்புக்கே இட்டுச் செல்லும் என்றால், இட்டுச்செல்லட்டுமே?
இதனால் மார்க்சியம் யதார்த்தத்தோடுள்ள தனது உறவை ஒரு அறிவுசார் உறவாக நிலைநிறுத்திக்கொள்ள முடியாது. அதன் சுயசொல்லாடல்தன்மையை ஏற்றுக் கொண்டாக வேண்டும், மொழி எழுத்து இவற்றின் விளைவுகளுக்கு மார்க்சியம் கட்டுப்பட்டது என்றாகும். என்றால், அப்படியேதான் ஆகட்டுமே? எப்படி வேறு விதமாக முடியும்? ஆயினும் இனியாவது, தகர்ப்பமைப்பு ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் மேற்கண்ட மார்க்சிய ஒப்புதல் எழவேண்டும்.
மார்க்சியத்தின் உருவகங்களே கருத்தாக்கங்கள்போல வேடமிடடு நிற்கின்றன என்றோ அலங்காரச் சொற்கட்டுமானங்கள் மீதுதான் மார்க்சியம் நிற்கிறது என்றோ தகர்ப்புச் செய்வது சரிதான், ஆனால் அதனால் பயனில்லை. இப்போதுள்ள உருவக, அலங்கார, அணியியல் சார்ந்த பழமையான மார்க்சியக் கோட்பாடு அரசியல் விளை வுகளில் தோல்வியையே உண்டாக்கியிருக்கிறது; வேறுவகையான மாற்றுக்கருவி மூலமாக இதனைச் சரிசெய்துவிடலாம் என்று நிரூபிப்பதுதான் இன்று உதவக் கூடியது. இது விவாதத்திற்கான பிரச்சினை இல்லை என்றால், தகர்ப்பமைப்பு, தன்னை ஒரு வரலாற்றியல் குருட்டுச் சந்தில் அடைத்துப் பூட்டிக்கொள்ள வேண்டியது தான். அதற்குமேல் அதனால் ஒன்றும் செய்ய இயலாது.
அதீதத்துவம் (யாவற்றையும் கடந்த நிலை, டிரான்ஸ்சென்டன்ஸ்) என்பதை இடையறாது மறுப்பதன்மூலம், தகர்ப்பமைப்பு இந்த வரலாற்றியல் சந்துக்குள் அதீதத் துவத்திற்கான ஆசையை எப்போதும உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கிறது. அதீதத்துவமே மனித நிலைமைகளின் மீதான ஆறுதலும், அரசியல் மௌனத்திற்கான ஆக்கக்குறிப்புமாக இருப்பதனால், இந்த சாராம்சவாதத்தின் மீதான விமரிசனம், அதனை இழந்துவிட்டதற்கான இரங்கலாகவும் மாறிவிடக்கூடும்.
இதையே இன்னொருவிதமாகப் பின்வருமாறு விவாதிக்கலாம். நுண்மொழி (மெடா-லேங்வேஜ்) என்று ஏதும் இல்லை என்று சொல்லுவது, தகர்ப்பமைப்பின் மிக முக்கியமான விமரிசன விளைவுகளில் ஒன்று. இது உண்மையன்று. நுண்மொழி என்பது, தனக்குள் பிற மொழிகளை/சொல்லாடல்களைப் பகுப்பாய்வுப் பொருளாகக் கொண்டிருப்பது என்றால், இந்த உலகமே அவற்றால்தான் நிரம்பியிருக்கிறது. அப்படியானால், இந்தக் கூற்றின் தகுதிதான் என்ன? ஒரு நுண்-நுண்மொழி இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்.
அதாவது, தனக்குள், பிறமொழிகளை, சொல்லாடல்களை, பனுவல்களை நிச்சயிக்கக் கூடிய வழிகள் யாவற்றிற்கும் மேலான, அதீதமான, ஊர்ஜிதத்தை நிச்சயிக்கக்கூடிய ஒரு மொழி இல்லை.
அதாவது, தனக்குள்ளேயே எழுத்து அல்லது மொழியினது சுவடுகளை அகற்றக்கூடிய மொழி எதுவும் இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்.
சரி, கடவுள் செத்துப்போனார், தனது சொந்தச் சொல்லாடல் தன்மையின் தடைகளைமீறிச் செல்லக்கூடிய முழுமையானதொரு அறிவுத் துறை எதுவும் இல்லை. இதற்கிடையில் நுண்மொழிகளுக்கிடையிலான போராட்டம், தனது ஆதிக்கத்துக்குள் மற்றச் சொல்லாடல்கள் யாவற்றையும் அடக்கக்கூடியது எது என்று கண்டறியும் போராட்டம் தொடர்கிறது. இப்படிப்பட்ட போராட்டங்களுக்குக் களமாக, சாட்சியமாக மார்க்சியம் இருக்கிறது. தனது மெய்ம்மையை உருவமைக்கக்கூடிய சொல்லாடலைப் பெறுவதோ, அந்த மெய்யானதற்குள் மற்றப் பனுவல்களையும் சொல்லாடல்களையும் சிறைப்படுத்துவதோ இன்று மார்க்சியத்திற்கு முக்கியமானவை அல்ல. மாறாக, பிரக்ஞையைத் தனக்குள் அடக்குவதிலும்,
வரலாற்றுக்கர்த்தாக்களை அமைப்புக்குள் கொண்டுவருவதிலும்,
திறனுள்ளவையான பனுவல்களை, கட்டுமானங்களை, சட்டகங்களைப் பெற்று,
அவை போட்டிக்குவரும் பிற யாவற்றுக்கும் மேலான தகுதியுடையவை
என்று நிரூபிப்பதுதான் மார்க்சியத்திற்கு இன்று தேவையானது.
ஆனால் இப்படிப்பட்ட செயல்முறையினை, முழுமையாக, அறிவுபூர்வமாக, ஒழுக்கவியல் சார்ந்தோ வரலாற்றுப் பூர்வமாகவோ நியாயப்படுத்தும் காரணி எதுவும் இன்று இல்லை. மொழி, அர்த்தவியல், சித்தாந்தம் என்ற நூலில் மைக்கேல் பெஷு ஒரு கதை சொல்கிறார்:
மூஞ்ச்ஹாசன் பிரபு என்று ஒருவன். குதிரையில் ஏறிச் செல்லும்போது ஒரு புதை சேற்றுக்குழிக்குள் விழுந்துவிடுகிறான். தனது ஒரு கையினால் தன் தலைமுடியைப் பிடித்துத் தானே தன்னைத் து£க்கித் தரையில் விட்டுக் கொள்வதோடு, இன்னொரு கையால் குதிரையையும் மேலே இழுத்துவிடுகிறான்.
ஒரு சித்தாந்திற்குள் தன்னிலை என்னும் இடத்திற்குள் பிணைக்கப்பட்டுள்ள தனி மனிதன், தனக்கு நேர்வனவற்றுக்குத் தானே காரணம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு மாய விளைவுக்கு ஆளாகிறான்
என்ற கருத்தைச் சொல்லவே இந்தக் கதையை அவர் பயன்படுத்துகிறார்.
சோஷலிசம், அறிவுஆராய்ச்சியியல், ஒழுக்கவியல் சார்பு என்னும் புதைசேற்றுக் குழிக்குள் இருந்து ஒருவன், தனக்குத்தானே காரணம் ஆகவும், நியாயப்படுத்துவ தாகவும் உள்ள ஓர் அரசியல் ஆசை வாயிலாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆசை, சமூக சக்திகள், சமூக உறவுகள் என்பனவற்றின் சிக்கலான சேர்க்கையினால் அவற்றிற்குள் உண்டாக்கப்பட்டது. இந்த ஆசை, அரசியல், கோட்பாட்டுச் செயல்முறைகள் அடைய வேண்டிய இறுதிகளை நிர்ணயிப்பதற்காக உதவும் அடிப்படைகளைத் (இவை எப்போதுமே விவாதிக்கப்படக் கூடியவை, மறுக்கப்படக்கூடியவை என்றாலும்) தருவதாகவும் இருக்கவேண்டும்.
இது போதாது என்றால், அதீதத்துவத்திற்கான ஆசையாகவும் இல்லாமல், அதேசமயம் அந்த அதீதத்திற்கான ஆசை என்றும் நிறைவேறமுடியாதது என்று மறுப்பதாகவும் இருக்கக் கூடிய அடித்தளம் வேறு எதுவாக இருக்கமுடியும் என்பது இங்குக் கேள்வி.
2
மார்க்சியம், சொல்லாடல் கொள்கை, பனுவல்பகுப்பாய்வு
மேற்கண்ட பொதுவான பிரச்சினைகளின் சூழலில், மார்க்சியக் கட்டமைப்புக்குள்
பனுவல்கள், பகுப்பாய்வுக்கான பொருள்களாக வடிவமைக்கப்படக் கூடியவை தானா,
அப்படி வடிவமைக்கப்படத்தான் வேண்டுமா
என்னும் பிரச்சினைகள் பற்றி இங்கே சிந்திப்போம்.
“தனது சொந்தச் சொல்லாடல் தன்மையின் விளைவுகளை ஏற்றுக்கொள்வது மார்க் சியம்” என்னும் விஷயத்தில் அதன் பிரச்சினைகளுக்குப் பிற எல்லோரையும்விட ஆழமாக மறு வடிவம்தர முயன்ற எர்னஸ்டோ லாக்லாவின் படைப்பை முன்வைத்து இதனை விவாதிக்கலாம். லாக்லா இதனைச் செய்திருக்கும் முறை, தொடர்ந்து நேர்வகையிலும் அரசியல் ரீதியாகவும் அமைந்திருக்கிறது.
இதே போன்றதொரு நிலையில், கிறிஸ்டபர் நாரிஸ், மார்க்சியம் ஓர் இலக்கியப் பனுவலை விஞ்ஞான அறிவுக்குப் பொருளாக வரையறுக்கும் முயற்சியை, எதிர்மறையாக மதித்ததன் வாயிலாக, மார்க்சியத்திற்கு ஓர் எதிர்மறையான சவாலாகத் தகர்ப்பமைப்பு எப்படி அமைகிறது என்பதை மட்டுமே பார்க்கிறார். லாக்லா, இதே சவாலை, மார்க்சியத்தின் அரசியல் செயல்களததினை விரிவுபடுத்தக்கூடியதொரு வழியாக மாற்றிவிடுகிறார்.
பனுவல்கள் வடிவமைக்கப்படக் கூடியவைதானா, வடிவமைக்கப்படத்தான் வேண்டுமா என்ற வினாக்களிலுள்ள ‘தான்’ இயலாமையைக் குறிப்பதெனச் சிலர் கருதலாம். மார்க்சியம் எப்போதுமே பனுவல் நிகழ்வுகளை ஆய்வுசெய்வதில்தான் அக்கறை கொண்டுள்ளது, கொண்டிருக்கவும் முடியும் என்பது இதற்கு நேரான பதில். மார்க்சியம் அக்கறை கொண்டுள்ள பனுவல்களும், அவற்றால் எழும் அரசியல் பிரச்சினைகளும் தன்னோடு எப்படி உறவுகொள்கின்றன, கொள்ளவேண்டும் என்பது பற்றி மார்க்சியம் கொள்ளும் அக்கறைகளையே இங்கு நாம் ஆராயவேண்டும். மார்க்சியம் உண்மையில் பனுவல் நிகழ்வுகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது, வேறெதையும் பற்றியல்ல என்று விவாதிப்பதன் வாயிலாக லாக்லா இந்தப் பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை மிகப் பெரிதாக்கிவிடுகிறார்.
லாக்லாவின் கருத்துப்படி, இப்போது நடைமுறையிலுள்ள பொருளாதார சமூக உறவுகள் ஆகியவை அடங்கியுள்ள சொல்லாடல்கள், மார்க்சியத்தின் முதன்மையான ஆய்வுப்பொருளாக உள்ளன. இவை தங்கள் இருப்பிற்குரிய நிபந்தனைகளாகப் பனுவல்களையே பெருமளவு நம்பியுள்ளன.
அதேசமயம், மார்க்சியம் தான் ஆராயும் பனுவல்நிகழ்வுகளோடு தனக்குள்ள உறவினை வழக்கமாக வெளிப்படுத்தும் வழியினைக் கண்டனம் செய்கிறார் லாக்லா. தனது விஞ்ஞானபூர்வச் சூத்திரங்களில் மார்க்சியம், தனக்கும் யதார்த்தத்திற்கும் உள்ள உறவினைப் பளிங்குபோன்றதென்றே திரும்பத்திரும்பச் சொல்லிவருவதன் வாயிலாக, தனது சொல்லாடல் தன்மையையும் பனுவல்தன்மையையும் எப்போதுமே மறுத்தே வந்திருக்கிறது. அப்பனுவல்களை, பொருளாதாரம், சமூகம், வரலாறு போன்ற தானறிந்த வடிவங்கள், மெய்ம்மையின் தோற்றவடிவங்கள் என்று கருதிவந்ததில், தான் ஒரு சரியான அறிவை உண்டாக்கியிருப்பதாகவும் நம்பச் செய்துள்ளது. அதாவது ஓர் உள்நோக்கம் கொண்ட, நம்பகமான அறிவைத் தனக்குள் நிறைவுபெறும் பனுவல் களின் ஊடாக உண்டாக்கிவிடுகிறது.
இப்படித் தனது சொந்தச் சொல்லாடல் தன்மையை மறைக்க முயல்வதற்கு பதிலாக, சொல்லாடற் குறுக்கீடுகள் கொண்ட தொகுதியாகத் தன்னை மார்க்சியம் கருதிக் கொள்ளவேண்டும் என்று லாக்லா கூறுகிறார்.
இந்தக் குறுக்கீடுகள், எந்தவித முன்மூலத்தோற்றச் சொந்தமும் கொண்டாடு வதற்கு பதிலாக, தங்கள் தகுதியைத் தங்கள் விளைவுகள் வாயிலாகத்தான் நிரூபிக்க வேண்டும். நடப்பிலிருக்கும் சொல்லாடல் அடுக்குகள் வாயிலாகத்தான் தன்னிலை அடையாளங்கள் உருவமைக்கப்படுகின்றன. அவற்றின்மூலம் அரசியல் கூட்டு அல்லது பிரிதலுக்கான வடிவங்கள் உருவமைக்கப் படுகின்றன. அதனால் இச்சொல்லாடல் களின் அடுக்கை, மேற்கண்ட குறுக்கீடுகள் இடைமறிக்கவும், பிணைப்பறுக்கவும், தகர்க்கவும் முனையவேண்டும் என்று லாக்லா வாதிடுகிறார்.
இப்படித் தகர்ப்புச் செய்வதால், புதிய சொல்லாடல் இணைவுகளை உற்பத்தி செய்யலாம். அவை புதிய தன்னிலைகளை, புதிய அரசியல் கூட்டுகளை உருவாக்கும். இதறகும் மேலாக, சாத்தியமாகக்கூடிய வரலாற்றுடைப்புக் கணங்களை உருவாக்கக் கூடிய முரண்பாட்டு உறவுகளைச் சொல்லாடல் ரீதியாக அமைக்கவும் முடியலாம். சொல்லாடற் செயல்களின் இருப்புநிலைகள், பெருமளவு பனுவல்களால் ஆனவையே என்பதனால், மார்க்சியம் (முழுமையாக இல்லாவிட்டாலும்) பெருமளவு பனுவல் செயல்பாடுகளுடைய தொகுதியாகத் தன்னைக் கருதிக்கொள்ளவேண்டும் என்பது தான் இதன் அர்த்தம்.
இந்தப் பனுவல் செயல்பாட்டுத் தொகுதி, மற்றப் பனுவல் செயல்பாடுகளுக்கிடையிலான உறவுகளை மீள்இணைப்புச் செய்யவேண்டும். இந்த மீள்இணைப்புச் செயல்கள், ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்ப நெருக்கடியில் சோசலிசத்திற்குச் சிறந்த துணையாக உதவக் கூடிய சிந்ததாந்த இடைமறிப்பு அமைவுகள், அரசியல் சேர்க்கைப் பாணிகள் ஆகிய வற்றை உற்பத்தி செய்வதாக அமைந்திருக்கவேண்டும்.
இறுதியாக, சமூகம்-சொல்லாடல் இரண்டும் ஒன்றே என்பதில் நமக்கு நிச்சய மில்லா விட்டாலும், மார்க்சியம், தான் ஈடுபடக்கூடிய பனுவல்செயல்களோடு தனது உறவுகளைக் கொள்ளும் விதம், ஆழமான அர்த்தங்கள் நிரம்பிய கோட்பாட்டுப் பிரச்சினை மட்டுமல்ல, பரந்த செயல்விளைவுடைய அரசியல் பாதிப்புகளை ஏற்படுத் தக் கூடிய ஒன்றும் ஆகும் என்று சொல்வதில் லாக்லாவுடன் நாம் ஒன்றுபடலாம். தகர்ப்பமைப்பின் விமரிசனங்களுக்கு எதிராக, பிரதிகள் வெறுமனே அறிதற்சாத்தியப் பொருள்கள் என்ற பார்வையை மார்க்சியம் தற்காப்புக்கெனக் கொண்டுவராதிருக்க வேண்டும். இப்படிச் செய்ய முனையும் கருவிகளின் எல்லையை மதிப்பிடவும், அவற்றின் விளைவாக எழும் எதிர்மறை விளைவுகளைப் பற்றிக் கருத்துரைக்க வேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.
“பனுவல்கள் அறிதற்சாத்தியப் பொருள்கள் மட்டுமே என்றால், அதீத, வர லாற்று வெளிக்கு அப்பாலான இடத்தில் மட்டுமே அவை அறிதற்சாத்தியப் பொருள் களாக வடிவமைக்கப்படமுடியும். எனவே அவை மார்க்சியத்திற்குள் கணிக்கப் படவோ, உருப்படுத்தப்படவோ முடியாது”. இப்படி ஒரு கணிப்பு. பனுவல்நிகழ்வு களைப் பற்றியதும், பனுவல்நிகழ்வுகள்-மார்க்சியம் உறவு பற்றியதுமான மேற்கணிப்பு, கோட்பாட்டு ரீதியாகவோ அரசியல் செயல்பாட்டு ரீதியாகவோ பயன்படக்கூடியதல்ல. கோட்பாட்டு ரீதியாக இப்படிக் கருதுவது, மார்க்சிய இலக்கியக் கொள்கையின் தக்க செயற்களங்கள் என்று நாம் கருதுவனவற்றைச் சூத்திரப்படுத்துதல், வளர்ச்சி ஆகிய வற்றைப் போதிய அளவு நிகழாமல் தடுக்கும்.
இலக்கியம் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒழுங்கமைவுகள், கலாச்சார அடிப்படை கொண்டவை. ஆகவே நாம் ஆராயவேண்டியவற்றின் ஒரு பகுதியாக அவற்றின் செயல்பாடுகளும் விளைவுகளும் அமையும். எனவே இலக்கியம் என்று வகுக்கப்படும் பனுவல்கள், பிற கருத்தியல் நிகழ்வுகள், இன்னும் பரந்த சமூக அரசியல் செயல் முறைகள் உறவுகள் இவற்றுக்கிடையிலான ஊடாட்டங்களை விளக்கும் பொருள் முதல்வாதக் கொள்கையின் வளர்ச்சி என்பதுதான் மார்க்சிய இலக்கியக் கொள்கை யின் தக்கதொரு அக்கறையாக இருக்க முடியும். இது பரவலாக எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பார்வைதான். மார்க்சிய மரபுக்குள் வளர்ச்சி பெற்றுள்ள பெரும்பாலான பணிகளுக்குப் பின்னாலுள்ள சாராம்சவாத திசைப்படுத்தலை இதன் துணையோடு கேள்விக்குள்ளாக்கலாம். அதாவது,
“இலக்கியப் பனுவல்கள், பிற கருத்தியல் நிகழ்வுகள், பரந்த சமூக அரசியல் செயல் முறைகள் இவற்றுக்கிடையிலான உறவுகள் போன்றவற்றை இவை தோன்றிய கால உற்பத்திநிலைமைகளோடு இணைத்துப் பார்ப்பதன் வாயிலாக மட்டுமே நிச்சயிக்க முடியும், எல்லாக் காலத்திற்குமானவையாக வரையறுக்க முடியும்”
என்ற யூகத்தின் அடிப்படையில் மார்க்சிய இலக்கியக் கொள்கை போதிய அளவு வளர்ச்சி பெற இயலாது. இதற்கு மாறாகப் பனுவல்களின் தோற்றக்கால உறவுகள், அவற்றின் பின்வரும் நிர்ணயங்களின் செயல்பாடு வாயிலாக மாற்றமடையக்கூடும் வழிகளைக் கணக்கில்கொண்டால்தான் வரலாற்றில் பனுவல்களின் உண்மையான, மாறிவரக் கூடிய செயல்பாடு புரிந்துகொள்ளப்பட முடியும். இம்மாதிரி நிர்ணயிப்பு கள் நிறுவனம் சார்ந்தவையாகவோ, சொல்லாடல் சார்ந்தவையாகவோ இருக்கலாம். இவை தோற்றக்கால உறவுகள்மீது பின்னோக்கிச் செயல்பட்டு விலக்குகின்றன, மாற்றுகின்றன. அல்லது பனுவல்களின் உற்பத்தித் தோற்ற நிலைமைகள் குறிப்பனவற்றை அதிநிர்ணயம் செய்துவிடுகின்றன.
மார்க்சியம், தான் அறிந்ததாகச் சொல்கின்ற மெய்ம்மையின் தோற்ற வடிவங்கள் எனக்கருதி, தான் ஈடுபடுகின்ற இலக்கியப் பனுவல்களுக்கும் தனக்கு முள்ள உறவினை, அறிவியல்பூர்வமாக்கலின் வாயிலாக வெளிப்படும் தோற்றம்சார் மெய்விளக்கமுறையினை (மெடஃபிசிக் ஆஃப் ஆரிஜின்) இப்பார்வை கேள்விக் குட்படுத்துகிறது. மார்க்சியம், விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதன்மூலம் இலக்கியப் பனுவல்களை அவற்றின் தவறான புரிந்துகொள்ளல்களின் வரலாற்றிலிருந்து காப்பாற்றுகிறது. வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் கோட்பாடுகளைப் பயன்படுத் துவது வாயிலாக, முதன்முறையாக, புறிலைப்பட்ட, வரலாற்று அர்த்தத்தை வெளிப் படுத்துவது என்ற உரிமைகொண்டாடலே மார்க்சிய அணுகுமுறைகளின் சிறப்பான சொல்லாடல் நடவடிக்கையாகும். இதன் முதன்மையான விளைவு, மார்க்சிய விமரிசனத்தின் செயலு£க்கமுள்ள குறுக்கீட்டுத்தன்மையை மூடிமறைத்ததும், தனக்கும் மற்றவர்களுக்கும் அதன் நிர்ப்பந்தமான கருத்தியல் பண்பை மறைத்ததும்தான்.
மார்க்சியத்தில் ஒரு பனுவலை அதன் தோற்ற நிலைமைகளுக்குத் திருப்புவது, அந்தப் பிரதியின் அறிவை அடையக்கூடிய முக்கிய நடவடிக்கையாகச் சொல்லப்படு கிறது. உண்மையில் மார்க்சிய விமரிசனத்தைப் பிறவற்றிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் ஒரு பொருள்கோள் உத்தியாகவே இது செயல்பட்டுள்ளது. இவ்வுத்தியின் வாயிலாக, மார்க்சிய விமரிசனம், ஒரு பனுவலுக்கும் அதன் கடந்த கால வரலாற் றிற்கும் ஆன உறவுகளை மறுபடைப்புச் செய்வதில் நிகழ்காலத்தில் வைத்துப் பனுவ லின் முக்கியத்துவம், அர்த்தம், செயல்பாடு ஆகியவற்றைச் சீரமைப்புச் செய்ய முனைகிறது. ஆகவே, லாக்லா மார்க்சிய விமரிசனம் இயங்கவேண்டிய முறை பற்றிச் சொல்வது போலவேதான், ஒரு குறுக்கீட்டுச் சொல்லாடலாகத்தான் அது செயல்பட்டு வந்துள்ளது.
பூர்ஷ்வா விமரிசனத்தின் விளைவாக உருவமைக்கப்பட்ட பனுவலின் கருத் துருவ உற்பத்தியில் குறுக்கீடு செய்வதன் வாயிலாகவும், வாசிப்புச் செயல்முறைகள் சீரமைப்புச் செய்யப்படுகின்ற, உயிரூட்டப்படுகின்ற பனுவல்களுக்கிடையிலான கருத்து ருவ, கலாச்சாரச் சுட்டலை ஒழுங்கமைக்க இடையறாது முனைந்து வந்துள்ளது. வாசிப்பின் சொல்லாடல் நிர்ணயிப்புகளையும் மீளழுங்குபடுத்தும் து£ண்டுகோலை யும் வாசிப்புகளை உற்பத்திசெய்வதற்கான முயற்சியை உண்டாக்க வேண்டியே நடைமுறையில் பணியாற்றிவந்துள்ளது. ஆனால் கொள்கையளவிலோ, பனுவல்கள் தமக்குள்ளாகவே ஒரு நம்பகமான ஏற்புடைய அறிவை உற்பத்தி செய்வதாகச் சொல்கிறது.
மார்க்சியத்திற்கும் அது ஈடுபடும் பனுவல்களுக்கும் இடையிலான உறவினை விஞ்ஞானமயப்படுத்துதல், அதன்மீதேயான அதன் சொந்தச் செயல்பாட்டின் இயற்கையைக் கோட்பாட்டளவில் இம்மாதிரித் தவறாகக் கூறுதல், இரண்டு விளைவுகளை உருவாக்கியுள்ளது.
முதல் விளைவு:
கோட்பாட்டுத் தளத்தில் பனுவல்கள் வரலாற்றில் செயல்படுவது ஒரேஒரு முறை மட்டுமே என்று கருதி ஆராய்வது. விஞ்ஞானச் செயல்முறை மூலம் ஒரு முறை ஒரு பனுவல் அதன் தோற்றமூல நிலைமைகளோடு இணைக்கப்பட்டுவிட்ட பிறகு, அப் பனுவலின் தோற்றக்கால முதல் அதன் புறநிலைப்பட்ட வரலாற்று அர்த்தத்தை வெளிப்படுத்திய காலம்வரை, வரலாற்றில் அதன் தொடர்ந்த செயல்பாடு, முக்கிய மற்றதாகக் கொள்ளப்படுகிறது.
எனவே பனுவலின் தொடர் செயல்பாட்டுப் பகுப்பாய்வுகள் மார்க்சியத்தில் இல்லை. ஒருவேளை இருப்பினும், மிக அபூர்வம். ஆயினும் பனுவலின்மீது இடையில் ஏற்பட்ட எத்தனையோ நிர்ணயிப்புகள், இயற்கை வளர்ச்சிகள், அந்தப் பனுவலின் தற்காலச் செயல்பாட்டினை மாற்றி, வேற்றுருக் கொடுப்பதில் பெரும்பங்கேற்றுள்ளன என்பது தெளிவு. எனவே அதன் தற்கால வாசிப்பு அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். பனுவல்களின் தோற்றமூல நிலைமைகளோடுள்ள உறவைவிட, இதுவே முக்கியமானது.
இரண்டாவது விளைவு:
இந்நோக்கினால், இந்தப் பனுவல்களை அரசியல்ரீதியாகக் கையாளக்கூடிய எல்லை குறுக்கப்படுகிறது. இதனால், பனுவலை அதன் உற்பத்தி நிலைமைகளோடு ஒருங்கு வைத்துப் பார்ப்பதால் உண்டான அறிவுப் பயன்மட்டும் கிடைக்குமே அனறி வேறு பயன் இல்லை.
இம்மாதிரிச் சிந்தனைகளால், மார்க்சிய இலக்கியக் கொள்கையின் சரியான நோக்குப் பொருள், பனுவல்கள் பற்றிய ஆய்வு அல்ல, வாசிப்புத் தீர்மானங்களைப் பற்றிய ஆய்வே என்று கூறலாம்.
வாசிப்புப்பயிற்சியை ஒழுங்கமைத்து உயிரூட்டுகின்ற, சொல்லாடல் சார்ந்த, ஊடுபிர தித்துவ (இண்டர்டெக்ஸ்சுவல்) நிர்ணயிப்புகளின் தொகுதியை வாசிப்பு நிர்மாணம் எனலாம். இந்த நிர்ணயிப்புகள், பனுவல்களையும் வாசகர்களையும் குறித்த உறவு களில் இணைக்கும்போதே
வாசகர்களைச் சில வகைமாதிரியான தன்னிலைகளாகவும்,
பனுவல்களைக் குறித்தவிதங்களில் மட்டுமே வாசிக்கப்படும் வாசிப்புப் பொருள்களா கவும்
உருவமைக்கின்றன. இம்மாதிரி வாசிப்பு நிர்மாணங்கள் இன்றிப் பனுவல்களுக்கு எவ்விதச் சுதந்திர இருப்பும் இல்லை; இருக்கவும் முடியாது.
வாசிப்பு நிர்மாணத்தை அன்றிச் சுதந்திரமான வேறொரு தனித்த வெளியோ, அதற்கு முன்போ பின்போ ஏதும் பனுவலுக்கு இல்லை என்பது இதன் அர்த்தம்.
மாறிவரும் வாசிப்பு நிர்மாணங்கள் மூலமாகத்தான் பனுவல்களின் வரலாற்று வாழ்க்கையின் மாறிவரும் ஒத்திசைவுகள் அமைகின்றன. இவற்றினு£டாகத்தான் பனு வல்கள் வாசிப்புப் பொருள்களாக உருவமைக்கப்படுகின்றன.
பனுவல்கள், சில தனித்த விதங்களில் வாசிப்பிற்காகத் து£ண்டப்பட்டனவாக, எப்போ தும் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டனவாக இருக்கின்றன.
வாசகர்களும் சில குறித்த விதங்களில் வாசிப்பிற்காகத் து£ண்டப்பட்டவர்களாக, எப்போதும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டவர்கள் ஆகின்றனர்.
வெவ்வேறு வாசிப்பு நிர்மாணங்களைச் சார்ந்துள்ள குறித்த வழிகளில் அல்லாமல், பனுவல்களுக்கோ வாசகர்களுக்கோ இவற்றிலிருந்து பிரிந்த தனித்தனியான நடை முறைப் பயனுள்ள அடையாளங்கள் தருவது இயலாது.
மார்க்சிய விமரிசனத்தில் இதனுடைய விளைவு என, கோட்பாட்டுக்கும் விமரிசனத் திற்கும் உள்ள வித்தியாசமாக, நாம் கொள்வது இதுதான்:
பனுவல் நிகழ்வுகளுக்கேற்பப் பிறக்கும் அர்த்தங்கள் சம்பந்தப்பட்ட செயல்முறைகளில் பயன்படுகின்ற நிர்ணயிப்புகளை ஆராய்வதுதான் கொள்கையின் அக்கறை. விமரிசனத்தின் அக்கறையோ, இம்மாதிரிப் பனுவல் நிகழ்வுகளில் குறுக்கிட்டு, அவற்றின் அர்த்தத்தை பாதிக்கின்ற சக்தியுள்ள நிர்ணயிப்புகளை மாற்றியமைத்தல் மூலமாக, இவை வேறு அர்த்தங்கள் பெறவைப்பது ஆகும். அதாவது, விமரிசனம், சமூகத்தில் நிலவும் ஆதிக்க வாசிப்பு நிர்மாணங்களிலிருந்து பனுவல்களை மீட்டு, புதிய வாசிப்புகளில் பொருத்த வேண்டும்.
பனுவல்களின் பன்முகத்தன்மைக்கு இங்கு அழுத்தம் தரப்படுகிறது. பனுவல்க ளின் புறநிலைப்பட்ட வரலாற்று அர்த்தத்தின் மறுமதிப்பீடுகளை, பனுவல் நிகழ்வு களை விஞ்ஞான பூர்வ அணுகல் வாயிலாக ஒரேஒரு நடவடிக்கைக்குப் பயன் படுத்துவது மட்டும் அல்ல. அவற்றைப் பலவிதங்களில் இயக்கி, பலவித வாசிப்பு நிர்மாணங்களுக்குள் அவற்றைக் கொண்டுவந்து, பலவிதமான வாசகர்களுக்குப் பலவிதப் பனுவல்களை உருவாக்குவதுதான் விமரிசனத்தின் அக்கறை.
இது, பலவிதமாக மாறிவரும், மாறக்கூடிய, அரசியல் நோக்கங்களின் கணக்கீடுகளுக்கு (விஞ்ஞானச் சூத்திரப்படுத்தல்கள் விளைவிக்கின்ற நிலைத்த கணக்கீடுகளை விட) உதவும்.
3
பனுவல்கள், வாசகர்கள், சூழல்கள்
மேற்கண்ட தர்க்கத்தை வினவக்கூடிய இரண்டு முக்கியத் தடைகளை நாம் எதிர்பார்க்கலாம்.
முதல் தடை: இது ஒரு ‘புனர்-காண்டிய வாதம்’தான். இதன்படி, பனுவல் ஓர்அர்த்தப் படுத்திக்கொள்ளமுடியாத, அறியமுடியாத பொருளாகக் கருதப்படுகிறது.
விடை: இக்கருத்து சரியாகாது: இம்மாதிரிப் புனர்காண்டியத்துடன் நாம் தொடர்பு கொள்ளவும் தேவையில்லை. லாக்லாவைப் பின்பற்றி இங்கே நாம் கொள்ளக்கூடிய அணுகுமுறை, பனுவல் நிகழ்வுகளை முழுமையாக வரலாற்றுப்படுத்தல் மூலமாக மேற்கூறும் புனர்காண்டியச் சிக்கலை இல்லாமற் செய்வதும, அதன் சாராம்சத் தன்மையை இடம்பெயரச் செய்வதுமாகும். பனுவல்கள் இங்கே சற்றும் சமரசமற்ற பொருள்முதல்வாத நோக்கில்தான் அணுகப்படுகின்றன. இப் பொருள்முதல் நோக்கு, ‘தன்னளவிலான பனுவல்’ என்ற கருத்தினை உருவாக்கி, அதை அறியஇயலும் பொருளாகவோ, அறியமுடியாப் பொருளாகவோ உருவமைப்பதற்கு இடம்தராது.
இரண்டாவது தடை: இதில் பனுவல்கள் சூழல்களாகக் கருதப்படுகின்றன.
விடை: இதில் பெருமளவு உண்மை உண்டு. அதேசமயம், சூழல் என்பதைச் சற்றே வேறுமாதிரியாக நினைத்துப் பார்க்கலாம். பனுவலும் சூழலும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை, தனித்தனியானவை என்று நாம் கருதவேண்டியதில்லை. பெரும் பான்மை வாசிப்புச் செயல்முறைகளில், சூழல் சமூகம் சார்ந்த ஒன்று.
அதாவது, சூழல் என்பது, சொல்லாடலுக்கு, பனுவலுக்கு வெளியிலுள்ள நிர்ணயிப்பு களின் தொகுதி. பனுவலை வாசிக்கத் தேவையான, புறத்திலுள்ள பின்னணிகளா கவோ, வாசிப்பு நிபந்தனைகளாகவோ இவை தொடர்புறுத்தப்படுகின்றன.
இதற்கு முரண்நிலையில், சொல்லாடல் மற்றும் ஊடுபிரதித்துவ நிர்ணயங்களின் தொகுதியாகச் சூழலைச் சிந்திக்கின்ற முயற்சியே வாசிப்பு நிர்மாணம் என்பது. வாசிப்பு நிர்மாணங்கள் வெறுமனே வெளியிலிருந்து உள்நோக்கிப் பனுவலின்மீது செயல்படுவன அல்ல; உள்ளிருந்து வெளிநோக்கி, வரலாற்றுரீதியாகப் பருப்பொரு ளான வடிவங்களில் ‘வாசிக்க-ஒரு-பனுவலாக’ அது கிடைக்கின்றபோதே உருப் பெறுகிறது.
வாசிப்புப் பற்றிய பிற அணுகுமுறைகளில், பனுவல்-வாசகர் உறவுகள் அர்த்தப்படுத்தப்படும் வழிகளை ஒப்பிட்டும் முரண்படுத்தியும் இக்கருத்தாக்கத்தையும அதன் உட்கோள்களையும் இன்னும் நன்றாக விளக்கமுடியும். வாசிப்புப் பற்றிய பிற அணுகுமுறைகள் இரண்டு வகைப்படுகின்றன.
1. முதல் அணுகுமுறை, ஒரு பனுவலின் வடிவ அமைப்பு உத்திகளைப் பகுத் தாராய்வது பற்றியது. வடிவ அமைப்புகள் வாயிலாகவே அந்தப் பனுவல் வாசித்தலுக்கான தனது நிலைகளை அமைத்துக்கொள்கிறது. இதன்மூலமாகத், தனக் குரிய, வெளியே சொல்லப்படாத, வகைமாதிரியான அல்லது முன்னுரிமை வாசகர் களுக்கான தனது நுகர்வினை ஒழுங்கமைத்துக்கொள்கிறது. வாசகர்களுக்குரிய அடைமொழிகள் மாறினாலும், அணுகுமுறை, தான் அர்த்தம் உண்டாக்கும் தன்மைக்கு முன்நிபந்தனையாக இவ்வாசகர்களை அமைக்கிறது என்பதுதான்.
இம்மாதிரிச் சிந்தனைகள், கவனிக்கத்தக்க முக்கியத்துவம் கொண்டவை என்பது உறுதி. எனினும, இச்சிந்தனைமுறைக்கு அடிப்படையாக உள்ள உட்கோள்,
“பனுவலுக்குள் நிகழும் செயற்பாடுகளினால் மட்டுமே வாசிப்பு நிச்சயிக்கப்படுகிறது; பல்வேறு அனுபவங்கள்கொண்ட விரிந்துபரந்த வாசகர்களின் வாசிப்புப்பயிற்சியை வடிவமைக்கின்ற, பனுவலுக்கு வெளியேயுள்ள செயற்பாடுகளுக்கும் பனுவலுககும் சம்பந்தமில்லை.” இது சிக்கலுக்குரியது.
அம்பர்ட்டோ ஈக்கோ சொல்கிறார்: “எந்தப் பனுவலும் மற்றப் பனுவல்களின் வாசக அனுபவம் இன்றித் தனித்து வாசிக்கப்படுவதில்லை.” இக்கூற்று உண்மையெனில், வாசிப்பு,
முதலில் ஒரு பனுவலின் நிலையான குறித்த குணங்களைப் பகுத்தராய்வது, அதன்பிறகு ஊடுபிரதித்துவ நிர்ணயங்களை ஆராயவது
என்று செய்யமுடியாதது ஆகும். ஏனெனில்
பனுவலின் நிலையான குணங்கள் எவ்வாறு உருவாகின்றன, விளக்கப்படுகின்றன என்பதையே ஊடுபிரதித்துவ நிர்ணயங்கள்தான் உணர்த்த வல்லவை.
பனுவல் பகுப்பாய்வு, இம்மாதிரி ஊடுபிரதித்துவ நிர்ணயிப்புகள், வாசித்தற்குரிய பனுவலாக ஒன்றைக் குறித்த வடிவமைப்பில் எப்படி உள்ளுக்குள்ளே ஒழுங்க மைக்கின்றன என்பதில்தான் கவனம் செலுத்தவேண்டும்.
பனுவல்களின் வாசிப்புப் பயிற்சியை இலக்கியவகைமைச் சிந்தனைகள் மாற்றி விடும் முறை பற்றி நாம் ஓரளவு அறிவோம். இம்மாதிரி இலக்கிய வகைமை எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் கலாச்சார ரீதியாக நிர்ணயிக்கப்படுபவை. எனவே மாறக்கூடியவை என்பது தெளிவு. இவை, ஒரு வாசகரை, ஒரு குறித்த பாணியின் பனுவலோடு தொடர்புகொள்ள முதலிலேயே து£ண்டிவிடுகின்றன என்பதும் தெளி வானதே. இங்கே கலாச்சார ரீதியாக, வாசக முற்சாய்வுகளை எப்படி வடிவமைக்க முடியும் என்பது தெளிவாக இல்லை.
வேறொரு உதாரணத்தைப் பார்ப்போம்: ஜான் ஃப்ரோ சொல்கிறார்: “மெய்யா னவை, குறியீட்டுப்பாங்கானவை என்னும் வரலாற்றுப் பகுப்புக்குள்தான் பனுவல் இயங்குகிறது. இந்தக் குறித்த வரலாற்றுப் பகிர்வை நிறுவுகின்ற ஒரு சட்டகத்தின் இயங்குமுறையில்தான இலக்கிய வெளி உருவாகிறது.”
இம்மாதிரிச் சட்டகங்களே பனுவலின் உட்புறம் எது, வெளிப்புறம் எது என்பவற் றையும், அவற்றுக்கிடையிலான உறவுகளையும் ஒழுங்கமைக்கின்றன. ஏற்கெனவே உருவாகியுள்ள இலக்கிய வெளியில் இயங்குகின்ற பனுவல்களைப் பொறுத்தவரை இச்சட்டகங்கள், அவற்றைக் கொண்டிருக்கும் புனைவுவெளியின் எல்லைகளை அடக்குபவையாகவும், அந்தப் பனுவல்கள் அமைந்துள்ள யதார்த்த வெளியின் அடிப் படைகளை விலக்குபவையாகவும் உற்பத்திசெய்கின்றன.
இம்மாதிரிச் சட்டகங்கள் கலாச்சாரத்தைச் சார்ந்து இயங்குபவை என்பதால், ஜான் ஃப்ரோ வாதிடுகிறார்: “ஒரு படைப்பை ஏற்பதன் சூழல்களில் ஏற்படும் மாற்றங்கள், இச்சட்டகங்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளை மாற்றுவதன்மூலமாகப் படைப்பிற் குள் அமைப்பு மாற்றங்களாக ஆகின்றன.”
சுருங்கச்சொன்னால், பனுவலுக்கு அப்பாலுள்ளவை, பனுவலுக்கு உள்ளிருப்பன வற்றை பாதித்து, அவற்றை மறுசீரமைப்பதைத் தடுக்கும் மாதிரியாக, பனுவலுக்கு, வெளி, உள் இவற்றிடையே வரையறுக்கப்பட்ட தீர்க்கமான எல்லை ஏதுமில்லை. பனுவலுக்கு ‘உள்’ என்பது, குறித்த உறவுகளின் ஊடுபிரதித்துவ உறவுத்தொகுதியின் விளைவுதான்.
2. வாசிப்புப் பற்றிய இரண்டாவது அணுகுமுறை, சமூகப் படிநிலைகள் பற்றியே அதிக கவனம் செலுத்தியுள்ளது. உதாரணமாக, வாசிப்புப் பயிற்சிகளை ஒழுங்கமைப் பதில் வர்க்க உறவுகள், பால்-இன உறவுகள் போன்றவை வகிக்கும் பங்கு பற்றி. இந்த உறவுகளைப் பனுவலுக்குப் புறம்பான, புறத்திலுள்ள ஏற்புச் சூழல்களாகக் கணிப்பதுதான் இந்த அணுகுமுறையின் முக்கியமான சிக்கல். இம்மாதிரிப் பனுவலுககுப் புறத்திலுள்ள நிர்ணயிப்புகளை வாசிப்புச் செயல்முறையோடு இணைப் பதற்கான எவ்விதமான செயல்திட்டமும் இவற்றில் இல்லை. சமீபகாலத்தில் ஒரு சமூக அமைப்பின் கருத்துருவத் தளத்தை உள்ளடக்கியுள்ள சொல்லாடல்கள் உற்பத்தி செய்யும் வாயப்புகளின் அமைப்பினால் மறைமுகமாகவும் விளக்கம்பெறுவனவாகவும் மட்டுமே வாசிப்பில் சமூகப்படித்தரநிலைகள் இயங்குகின்றன என்று ஆலோசனை கூறி, மேற்கூறிய சிக்கலைத் தீர்க்க முன்வருகின்றன.
தனிமனிதர்கள் கருத்துருவச் சொல்லாடல்களுக்கு,ள் வெளிப்படுத்தப்படுவதும், செருகப்படுவதும் சமூகப்படிநிலையால் நிர்ணயமாகிறது என்றால், வாசிக்கும் தன்னி லைகளாக அந்த மனிதர்களை, அவர்களது செயல்களை ஒருங்கமைப்பதும் வடிவமைப்பதும் இந்தச் சொல்லாடல்களுடைய பண்புகளேயாம். இம்மாதிரிச் சொல் லாடல் நிர்ணயிப்புகள் அரூபப் பொதுமையின்மீது செயல்படுகின்றன என்றே கருதப்படுகின்றன.
வாசிப்பு நிர்ணயம் என்னும் கருத்தாக்கம், மேற்கருத்துகளையெல்லாம் விரட்டியடிக்க ஏற்பட்டதன்று. மாறாக, இந்தப் பொதுமைச் சொல்லாடல் நிர்ணயிப்புகளின் திறன், வாசிப்புச்செயல்முறையின்மீது குறிப்பாகவும், நெருக்கமாகவும் நிகழும் சொல்லாடல் களுக்கிடையிலான உறவு, ஊடுபிரதித்துவ உறவுகளின் இயக்கத்தினுள் கட்டுப்படுத்தப் படுகிறது என்று காட்டுவதால், மேற்கருத்துகளை இன்னும் செம்மைசெய்வதேநோக்கம்.
வாசிப்புப் பிரதியின் உள்நிர்ணயிப்புகள் வேறுசில வெளிநிர்ணயிப்புகளின் வாயிலாக, இயக்கத்தினால் அதிநிர்ணயம் செய்யப்படுகின்றன. இந்த வெளிநிர்ணயிப்பு கள், சம்பந்தப்பட்ட பனுவலிலிருந்து மட்டுமே வருவிக்கப்பட முடியாதவை. அதே சமயம், பனுவலுக்கு வெளியிலுள்ள சமூகச் சூழலுக்கு மடடுமேயும் கொண்டுசெல்லப் பட முடியாதவை. இதை உணர்ந்து, வாசிப்புப் பற்றிய மேற்கண்ட இருவித அணுகு முறைகளுக்கிடையேயும் ஒரு நடுவழியை உண்டாக்கும் முயற்சியே வாசிப்பு நிர்மாணம் என்ற கருத்தாக்கம்.
இது பனுவல்கள்மீதும் வாசகர்கள்மீதும் செயல்படுகின்ற, பனுவலுக்கும் சூழலுக் கும் இடையேயுள்ள உறவுகளை இடையீடு செய்கின்ற, இரண்டையும் இணைக்கின்ற, இவை பயனுள்ள முறையில் பின்னிச் செயல்படும் அமைவுகளை அளிக்கின்ற சில நிர்ணயிப்புகளை அடையாளம் காணும் முயற்சி.
மரபுவழி வந்த கருத்தாக்கங்கள், பனுவல்கள்-வாசகர்கள்-சூழல்கள் ஆகியவை பிரிக்கக்கூடிய தனிக் கூறுகள், இவை ஒன்றுக்கொன்று நிலையான உறவுகளில் பிணிக்கப்பட்டவை என்றன. மரபுவழிவந்த பனுவல்கள், வாசகர்கள், சூழல்கள் ஆகியவை பற்றிய கருத்தாக்கத்தைக் கேள்விக்குட்படுத்துவது வாசிப்பு நிர்மாணம் என்ற நோக்கு.
மரபுவழிவந்த கருத்தாக்கங்கள் சொல்வதற்கு மாறாக, இதில் சொல்லாடல் போன்று ஒழுங்காக உருவமைக்கப்பட்ட உறவுத் தொகுதிகளுக்குள் பனுவல்கள்-வாசகர்கள்-சூழல்கள் என்பவை மாறும் உறுப்புத் தொடர்கள். வெவ்வேறு வாசிப்பு நிர்மாணங்கள், தமக்குள்ள வாசகர்களையும் சூழல்களையும் மட்டுமன்றித் தாமே தமக்குள்ள பனுவல்களையும் உருவாக்கிக் கொள்கின்றன.
ஒரு நேர்காணலின்போது பியர் மாஷரி கேட்டார்: “நிலையான பனுவல்களை, ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள முழுமையான பனுவல்களைக், கொண்டது இலக்கியம் என்ற கொள்கை கைவிடப்பட்டால், இலக்கியப்படிப்பு எவ்விதத் தோற்றமளிக்கும்?”
நல்லது. நிச்சயம் மிகவும் வேறானதாகத்தான் அது தோன்றும். அம்மாதிரிப் படிப்பு, வெறுமனே தங்களுக்குள்ளே நிறைவுபெற்றுள்ள சாராம்சப் பொருள்களாகப் பிரச்சினைகளைப் பார்க்காது. மாறாக, வரலாற்று இயக்கமுள்ள, கலாச்சார ஏற்புக் கொள்வனவாக அவற்றின் இருப்பை மாற்றியமைத்து வெவ்வேறு வாசிப்பு நிர்மாணங்களின் வாசிப்புப் பொருள்களாக அவற்றை உருவமைக்கும்.
இம்மாதிரிப் பார்வைகள் வெறுமனே பனுவல்களைத் தமக்குள்ளே நிறைவு பெற்ற உள்பொருள்களாகப் பார்க்கவில்லை; மாறாக, இவை வரலாற்றில் இயக்க முள்ள கலாச்சார ஏற்புப் பனுவல்களாக அவற்றின் இருப்பை மாற்றியமைத்து வெவ் வேறு வாசிப்பு இயக்கமுள்ள கலாச்சார, நிர்மாணங்களின் வாசிப்புப் பொருள்களாக அவற்றை உருவமைக்கின்றன.
வெவ்வேறு வாசிப்பு நிர்மாணங்கள் உருவாக்கியுள்ள வெவ்வேறு வாசிப்புப் பாணிகளின் வரலாறும், வாசிப்பின் பகுதியாக அமையும் வாசிப்புடனான வெவ் வேறு சமூக கருத்தியல் உறவுகளும் ஆய்வாளனுக்கும் பனுவலுக்கும் இடையிலான பகுப்பாய்வுப் பரிமாற்றத்தைச் சிக்கலாக்கிவிடும் அல்லது குழப்பிவிடும் என்று நினைத்து, வெவ்வேறு வாசிப்பு நிர்மாணங்களால் உற்பத்திசெய்யப்பட்ட பனுவல்களை முதலிலும், பின்னரே அவற்றின் வாசிப்புகளையும் வாசிப்பதாக இது அர்த்தப்படாது. மாறாக, வாசிப்புகளின் ஒளியில் பனுவல்களை ஆராய்தலும், பனுவல்களின் ஒளியில் வாசிப்புகளை ஆராய்தலுமாக இது நிகழும்.
நமது சொந்த வாசிப்பு நிர்மாணத்தில் நமக்குத் தரப்பட்டுள்ளதாகத் தோன்று கின்ற, ஆனால், வெவ்வேறு வாசிப்பு நிர்மாணங்களால் வெவ்வேறாகத் தோற்றமளிக் கின்ற பனுவல்களைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதால்தான் பனுவல் நிகழ்வுகளுக்கும் சமூக அரசியல் செயல்முறைகளுக்கும் இடையிலுள்ள உறவுகள் பகுத்தாய்தலின் வாயிலாகப் போதிய அளவு கொள்கைப்படுத்தப்பட இயலும். இந்தப் பகுப்பாய்வின் பயன், பனுவல்நிகழ்வுகளின் அர்த்தங்களையோ விளைவுகளையோ வெளிச்சமிடு வதாக அமையாது. அந்தப் பனுவல்கள் அமைத்துத் தந்துள்ள முழு அர்த்த எல்லை களுக்குள் விளைவுகளுக்குள்ளும் உள்ளாக அவற்றை இயங்கச் செய்து, ஒத்திசைத்து மீட்டுவதாக அமையும்.
மேற்கண்ட யாவும், பனுவல்நிகழ்வுகளின் புறநிலையான, பௌதிக இருப்பி னைக் குறிப்பன அல்ல, வலியுறுத்துபவை. பனுவல்கள் பௌதிக நிகழ்வுகள். குறித்த நிறுவன நிலைமைகளுக்குள் நிகழ்கின்ற சமூக, பௌதிக நிகழ்வுகளாகவே உள்ளன என்பதால்தான் பனுவல்களின் சமூக, கருத்துருவ வெளிப்பாடுகளைச் சொல்லாடல்கள் வாயிலாகச் சீரமைக்கமுடிகிறது.
மறுதலையாக, குறித்த வீச்செல்லை கொண்ட அர்த்தங்கள், விளைவுகளின் தோற்ற மூலமாக ஒரு பனுவலை நிலைப்படுத்துவது, எப்படியோ, எங்கோ பனுவல்நிகழ்வு களின் பௌதிகத் தன்மைக்குப் பின்னால், ஓர் இலட்சியப் பனுவல், தன்னளவிலான பனுவல் இருக்கிறது என்ற நம்பிக்கை கொண்ட இலட்சியவாத உருவமைப்புகள் என்னும் ஒரேவழி வாயிலாகத்தான் இயலும்.
இந்த இலட்சியவாதச் சொற்கட்டினை நம்புவதாயிருந்தால், இந்த இலட்சியப் பனுவலை வெளிப்படுத்துவதுதான், அதைச் சென்றடைவதுதான் பகுப்பாய்வின் நோக்கம். இப்பகுப்பாய்வு, முதன்முதலாக ஓர் அர்த்தத்தை வெளிப்படுத்துவதாக, அல்லது ஓர் இலட்சிய அர்த்தப்படிநிலையை வெளிப்படுத்த அவாவுவதாக அமையும்.
இக்காரணங்களால், ‘என்றும் அறியமுடியாப் பொருள்’ என ஒரு பனுவல் உறுதி செய்யப்படும் என்னும் புனர்-காண்ட்டிய வாதத்திற்கு இந்த விவாதங்கள் கொண்டுசெல்லும் என்று நாம் பயப்படத் தேவையில்லை. ஏதோ ஒரு பனுவல், எங்கேயோ இருக்கிறது, ஆனால் அதை நாம் முற்றிலும் அறியமுடியாது என்று வாதிடுவது நோக்கமல்ல. பனுவலைப் பத்திரமாகக் கொண்டுசேர்க்கவேண்டிய இந்த ‘எங்கேயோ’ என்ற இடம் உண்மையில் எங்குமே இல்லை; பனுவல் செயல்படுவதின் மெய்யான வரலாற்றோடு இசைந்த, மாறுகின்ற, வாசிப்பு நிர்மாணங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவே பனுவல் பற்றிய அறிவை உற்பத்திசெய்ய முனைவது ஒரு பயனற்ற வேலை (சிஸிபஸின் வேலை) என்பது நம் கருத்து.
4
பனுவல்களின் கடந்த காலத்தை எதிர்கால நிர்ணயிப்புச் செய்தல் வாயிலாக நிகழ்காலத்தில் பனுவல்களைப் பொருத்துதல்
ஆழ்ந்து நோக்கினால், ‘தன்னளவிலான பனுவல்’ என்னும் கருத்தாக்கமே, இலட்சியவாதத்தின்மீது ஊன்றி நிற்கிறது. இக்கருத்தாக்கம் ஒரு செயற்கைதான். தன்னளவிலான பனுவல் என அமைப்புப் பெறுவது ஓர் ஊடு பிரதித்துவ, கருத்து ருவ, கலாச்சாரப் பின்னணியை உட்கொண்ட செயல். இது மாறிவரும் செயற்கை. பல்வேறு விமரிசனச் சிந்தனைகளுக்கு இடையே, பனுவல் பற்றிய கருத்தாக்கத்தை உருவாக்கும் வழிகளும் மாறுபடுகின்றன. இவை வாசிப்புச் செயல்முறையைக் குறித்த விதங்களில் ஒழுங்கமைக்கப் பயன்படவேண்டும். ஆனால் வாசிப்புச் செயல்களுக் கிடையே மத்தியஸ்தம் செய்வதற்கான வழிகளை அவை தருவது இயலாது. எனவே தன்னளவிலான பனுவல் என்பதன் அடிப்படையில் பார்க்கும்போது, இது ஒரு பனுவலை மூடியிருக்கின்ற, வெவ்வேறு வாசிப்பு நிர்மாணங்களில் உருவாகிவந்த, சொல்லாடல் படிவங்களை உரித்தெடுத்துவிட்டு, குறைக்கமுடியாத, உரிக்கமுடியாத, ஒரு மையத்திற்குத் தடையற்ற அனுமதி பெறமுடியும் என்று நினைப்பதனால், இதன்மீது என்னென்ன சொல்லப்பட முடியும், எவை முடியாது என்பனவற்றின் எல் லைகளைக் கண்டறிய முயல்வதே ஒரு தத்துவார்த்தத் தேடலாகிவிடுகிறது. இத் தேடலின்மீது ஒரு பகுப்பாய்வை நிறுவிவிடலாம் என்று கருதுகின்ற கிட்டப்பார்வை நோக்கு, ஒரு பனுவல் ‘இன்று வாசிக்கக்கூடிய பொருளாகக்’ கிடைக்கச்செய்வதற்கான வடிவங்களை நிர்ணயிப்பதில், வரலாற்றைப் புறக்கணித்துவிடுகிறது. ஆகவே எதிரி லுள்ள பனுவலின் தோற்றத்தரவினை நிர்ணயிக்கக்கூடிய பௌதிக, கருத்தியல், சமூகக்கூட்டிற்குள் தன்னை மறைத்துக்கொள்கிறது.
ஆயினும், இதற்குப் பனுவல்நிகழ்வுகளைப் பொறுத்து ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட, இனி உற்பத்திசெய்யப்பட இருக்கின்ற எல்லா வாசிப்புகளையும சம மதிப்பில் கொள்ளவேண்டும் என்று அர்த்தமில்லை. அவற்றிற்கிடையிலான வேறுபாடு களை அறிவார்த்தத் தேடலால் தீர்க்கமுடியாது. ஒரு குறித்த வாசிப்பைத் தன்னள விலான பனுவல் என்பதுடன் தொடர்புபடுத்தி, அதற்கு முதன்மை தரமுடியாது. இவ்வாறு செய்வதால் பிற எல்லாவித வாசிப்புகளையும் இதைவிட மதிப்பில் குன்றும் படி செய்யவும் முடியாது. நிகழ்காலத்தில், இன்றைக்கான விளைவுகளை ஏற்படுத்து கின்ற அரசியல் கணக்கீடுகள் வாயிலாக மட்டுமே வாசிப்புகளை மதிப்பிட முடியும்.
இப்பார்வையில், வாசிப்புகளுக்கிடையில் தீர்ப்புக்கூறும் வழிகளாகவோ, அவற்றுக்கு மேல்முறையீடு செய்யும் வழிமுறைகளாகவோ, சொல்லாடற் களத்தின் புறத்தி லுள்ள சரிபார்க்கும் அடையாளங்களாகவோ பனுவல்களைக் கையாளுதல் இயலாது. சமூகத்தில் நிகழ்த்திக் காட்டப்படுகின்ற அர்த்தங்களுக்கான போராட்டத்தின் வாயிலா கச் செயல்படுகின்ற விளையாட்டு முறைகளுக்குள் நகர்த்தும்காய்களாகத் தான் இங்கு பனுவல்கள் இருக்கின்றன.
வாசிப்புச் செயல்முறைகளை ஒழுங்கமைப்பதில் பலவித திறனாய்வுப் போக்குகள் முன்வைக்கக்கூடிய பல்வேறு மதிப்பீடுகள்-மாற்றுமதிப்பீடுகளில் வரலாற்றுக்கும் பனுவல்களுக்குமான தொடர்புகளை மாற்றி எழுதுவதன் வாயிலாக, ‘தன்னளவிலான தன்மை’யை விட்டுவிடுவதாகிய விலை கொடுத்தே பனுவல்கள் அர்த்தமுள்ளவை ஆகின்றன.
பனுவல்நிகழ்வுகளுக்கு அர்த்தம் காணும் இந்தப் போராட்டத்தினு£டேதான் தன்னளவிலான பனுவல் என்னும் கருத்தாக்கமும் தோன்றுகிறது என்பதும், வாசிப்பின் ஒரு குறித்த கருத்துருவத்தை மிகுதியாகச் சொந்தம் கொண்டாடும் பொதுக் கருவியாக அது தோற்றம்கொள்கிறது என்பதும் ஒரு முரண்உண்மையாகும்.
ஒரு புதிய வாசிப்பு,
தனக்கென ஒரு ஸ்தானத்தை உண்டாக்கிக்கொள்ளவும்,
தன்னளவிலான பனுவல் என்பதை உற்பத்திசெய்வதில் இப்போதுள்ள கலாச்சார சக்திகளாக ஏற்கெனவே உள்ள வாசிப்புகளை இடம்பெயரச் செய்யவும்,
முனைகிறது.
மற்ற வாசிப்புகள் போதாமைக்குட்படும் சமயங்களில் தொடர்புள்ள நம்பகமான அளவுகோல்களை உற்பத்தி செய்வதன் வாயிலாகவும் அது புதிய வாசிப்புகள் வளரவும் வழிசெய்கிறது.
இக்காரணத்தினால், தன்னளவிலான பனுவல் என்ற கருத்து எப்போதுமே ஒரு முரண்உண்மையாகிறது. அரசியல் தீவிரமும் குறுக்கீட்டுத் தன்மையும் கொண்ட விமரி சனச் செயல்திட்டங்கள் பனுவல்களை இயக்கவேண்டும் என்று முனையும்போதே, உள்ளுறையாகப் பனுவலின் இயங்குதன்மையை ஏற்றுக்கொள்வதனாலேயே, தன்னள விலான பனுவல் உற்பத்தியாகிறது.
இந்த நகர்வுகள் ஒவ்வொன்றும் எப்போதுமே ஓர் இறுதிநகர்வாகத்தான் கருதப்படு கின்றன. இறுதியாகப் பனுவல் ஒன்றின் உள்ளார்ந்த தன்மையை அறிகின்ற நிலைப் படுத்தும் திட்டங்களின் ஒருபகுதியாகத்தான் பனுவலின் நகர்வு அமைகிறது என்ப தால், சொல்லாடல்களின் ஊடாகவே தன்னளவிலான பனுவல் என்னும் கருத்து உருவாக நிறையவழிகள் இருக்கின்றன.
ஆசிரியர் என்ற வகைமை இந்தவிதத்திலேயே செயல்படுவதாக பார்த் நினைக் கிறார். ஒரு பனுவலுக்கு ஓர் ஆசிரியரைத் தருவது, அந்தப் பனுவலுக்கு ஓர் எல்லை வகுப்பதாகும். அதற்கு இறுதியாக ஒரு குறிப்பீட்டை அளித்து அந்த எழுத்தை இயக்கமறச் செய்துவிடுவதாகும் என்கிறார் பார்த்.
என்னவிதமான கருவிகள் பயன்படுத்தப் பட்டாலும், தன்னளவிலான பனுவல் என்பது சொல்லாடல்களிலேயே உற்பத்தியாவதற்கான இறுதித்தேவை, வேண்டிய முன்நிபந்தனை, ஓர் ஒருங்கிணைந்த தன்னிலை சொல்லாடற் களத்தில் உற்பத்தியா வதில்தான் இருக்கிறது. (இத் தன்னிலையினால்தான் பனுவல், தற்காலிகமாகவேனும், ஒரு சார்பாகவேனும் அறியப்படவேண்டும்.)
மேற்கண்ட கூற்று, எல்லாவித விமரிசனங்களுக்கும் உண்மையாகையால், மார்க் சிய விமரிசனத்திற்கும் பொருந்துவதே. அதனதன் உற்பத்தித்தோற்ற நிலைமைச் சூழலில் வைத்துக்காண்பதன் மூலமாகவே ஒரு பனுவலின் புறநிலைப்பட்ட, வரலாற்று அர்த்தம் புரிந்துகொள்ளப்படமுடியும் என்ற உரிமைக்கூற்றில்தான் மார்க்சியப் பொருள்கோளின் தனித்தன்மை வாய்ந்த தொடக்க நடவடிக்கை இருக்கிறது என்பது முன்னரே சுட்டிக்காட்டப்பட்டது.
இம்மழுங்கற்கருத்து சுட்டிக்காட்டுவதைவிடவும், பனுவல் நகர்வுகள் இயலக் கூடிய வழிகள், அவற்றின் விளைவுகள் மிகச் சிக்கலானவை. பிரதிகளின் தோற்ற நிலைகளின் ஒளியில் செய்யப்பட்ட விவரமான பகுப்பாய்வுகள் மார்க்சிய மரபிலேயும் அபூர்வம்தான். அவை அவ்வளவில் மட்டும் நிற்பதும் இல்லை. மேலும் இம்மாதிரி விசாரங்கள் இறுதியாகத்தான் கருதப்பட வேண்டியவை என்பதிலும் அர்த்தம் உண்டு.
இம்மாதிரி விஷயங்களில் லூகாச்தான் ஒரு நிதர்சன உதாரணம் என்பதால் சான்றுக்கு லு£காச்சை நோக்குவோம்: ஒரு பனுவலுக்கும் அதன்காலச் சமூக, கருத்துருவநிலைமைகளுக்கும் அவர் எப்படி உறவுகளை அனுமானிக்கிறார் என்பது அந்தப் பனுவலின் முன்னுள்ள, பின்னுள்ள பனுவல்களோடு அதன் உறவு,
அவற்றின் காலங்களின் சமூக கருத்துருவ நிலைமைகள்,
இப்பனுவலுக்கு முந்திய பனுவல்களின் யதார்த்த மரபுகளை அமைக்கின்ற அல்லது பின்வரும் பிரதிகளுக்கான நெறிமுறைகளை அமைக்கின்ற வழிகள்
வாயிலாகவே தெளிவாகின்றன. சுருங்கச் சொன்னால், ஒரு பனுவலின் புறநிலையான வரலாற்று அர்த்தம் என்பது, அதன் உற்பத்திநிலைமைகளுக்குத் தொடர்புறுத்துவதால் அல்ல, மார்க்சியம் தான் அறிவதாகச் சொல்லுகின்ற, ஆனால் அதன் விளைவுகளான இறுதித்தீர்ப்புகளை எதிர்நோக்கு யூகம் செய்யமட்டுமே முடிகின்ற ஒரு வரலாற்றின் மேனிலைப்பனுவலில் வைத்துத்தான் அறியமுடியும். (உண்மையில் இறுதித்தீர்ப்புகளை வரலாற்று நிகழ்வுகள் முடிவுக்குவந்த பின்னால்தான் வழங்கஇயலும்).
ஆகவே ஒரு காலத்தின் அர்த்தமும், அதன் பனுவல்களின் அர்த்தமும், அதிலிருந்து நாம் எவ்வளவுக்கெவ்வளவு தொலைவில் இருக்கிறோமோ அந்த அளவுக்குத் தெளி வாகும் என லூகாச் தொடர்ந்து வலியுறுத்தினார்.
அவ்வக் காலங்களிலேயே பார்வைக் கோணங்கள் இறுகிவிடுகின்றன என்பதால் அல்ல அது. வரலாற்று வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலையும் நமக்கு நன்கு தெரிந்துகொண்டே வரும்போது வரலாற்றுக்குப் பிந்திய ஒருங்கிணைந்த தன்னிலை யான மனிதனுக்கு நாம் சற்றே நெருங்கிவருகிறோம். இந்த மனிதனுக்குத்தான் வரலாறாகிய பனுவலின் முழு அர்த்தமும் அதிலுள்ள ஒவ்வொரு பனுவலின் அர்த்தமும் மிகத் தெளிவாகப் பளிங்குபோல் தெரியும். லூகாச்சின் கருத்தில்,
ஒரு பனுவல் தானே நிறுவப்படுகின்ற விதங்களும்,
அவற்றின் புறநிலையான வரலாற்று அர்த்தம் அறியப்படும் விதமும்,
எதிர்காலம் அந்தப் பனுவலின்மேலும் அதன் வரலாற்றின்மேலும் செலுத்துகின்ற நிர்ணயத்தின் வாயிலாகவே நிகழ்கின்றன.
இந்த அணுகுமுறையின் இலட்சியவாத நோக்கு வெளிப்படை. இம்மாதிரி விமரிசனம் நிறுவக்கூடிய தன்னளவிலான பனுவல் என்பது, வரலாறு முழுமை பெற்றபிறகே தனக்குள்ளாகவே முழுமையையும், போதிய உறவுகளையும் கொள்ளும். வரலாற்றின் இறுதியில் மட்டுமே தன்னளவில் நிறைவினை அடைகின்ற, சமூக மற்றும் பௌதிக உருவினை அடைகின்ற இலட்சியப் பனுவல் அது. இந்த முழுநிறைவினை அடையாதவரை, அது ஒரு நிழல்பிரசன்னமாகவே உள்ளது. அதன் வாசிப்பில் உண் மையான வரலாற் றைக் கட்டுப்படுத்துகின்ற சமூக, பௌதிக, கருத்துருவ உறவுகளின் பின்னால் இளைப்பாற வைக்கப்படுகின்ற ஓர் இலட்சியவடிவம் ஆகிறது.
தன்னளவில் நிறைவுள்ளதாக ஒரு வடிவம் பெறும்போதுதான், அது பளிங்கு போலாக முடியும். இது ஓர் இலட்சியப் பனுவல் மட்டுமல்ல, கருத்தியல்சார் பனுவலும்கூட.
இம்மாதிரிப் பார்வையினால் ஆதரிக்கப்படுகின்ற, உருவமைக்கப்படுகின்ற விமரிசனத் திட்டங்கள், வரலாற்றின் இலட்சியவாத நோக்கை மறுவுற்பத்தி செய்வதற்கான முன்னுரிமைக் களமாகி, இலக்கியப் பனுவல்களை உருவமைப்புச் செய்வதில் முடிகின்றன.
அல்தூசர் சொல்கிறார்: “வரலாற்றின் சித்தாந்தக் கருத்தாக்கம், புது அறிவுகளை அடைவதற்கான காரியார்த்த உண்மையாக இயங்குவதைவிட்டு, ‘தன்னையே வரலாற் றின் ஒரே உண்மையாக, அதைப் பற்றிய இறுதியான, நிச்சயமான, முழுமையான உண்மையாக’ முன்னிறுத்திக்கொள்கிறது. சுருங்கச்சொன்னால், தனக்குள் மூடுண்ட ஓர் அமைப்பாகிவிடுகிறது, வளராது போகிறது. காரணம், அந்தச் சொல்லின் அறிவியல்பூர்வ அர்த்தத்தில் எந்தப் பொருளும் இல்லை; மெய்ம்மைக் கண்ணாடியில் அது தன் பிம்பத்தையே பார்த்துக்கொள்கிறது.”
இக்கூற்று லூகாச்சின் விமரிசனத்தை மிகச் சரியாக விளக்கிவிடுகிறது. அன்றியும் ஒரு வரலாற்றுமயமாக்கப்பட்ட மனிதநேய அழகியலை விரிவுபடுத்துவதற்காகப் பனுவல்களை வியாச்சியங்களாக உருவமைக்கும் மார்க்சிய விமரிசன மரபு முழுவதையுமே விளக்கிவிடுகிறது. இத்தகைய அழகியல், பனுவல்களின் மெய்யான வரலாற்று வாழ்க்கைகளில் தான் வரையறுக்கும் ஆதாரக்கருத்தின் பிரதிபலிப்பையே காண முடியும்.
அதாவது, “மனிதன் தன்னை உருவாக்கிக்கொள்ளும் யதார்த்தச் செயல்முறையின் பிரதிபலிப்பே பனுவல்கள். அந்தச் செயல்முறையின் இறுதியில் காத்திருக்கும் முன் விதிக்கப்பட்டுள்ள பொருள்கோள் சக்கரப்பற்களில் அவை பதிந்து சுழலும்போது, உடனே அவை தம்மை விளக்கிக்கொள்ளும்” என்பது தனது வரையறுக்கும் ஆதாரக் கருத்து. இதன் பிரதிபலிப்பையே அந்த அழகியல் காணமுடியும்.
அப்படியானால், இப்படிப்பட்ட அணுகுமுறையில், எப்படிப்பட்ட வியப்புகளும் இருக்கமுடியாதென்பதையோ, அதன் வெளிப்படையான கருத்துருவ குணத்தையோ நாம் கண்டனம் செய்யவில்லை. எவ்விதங்களில் தனிமனிதர்கள் வரலாற்றில் தன்னி லைகளாக உற்பத்தியாகி, இயக்கப்படும் நிலைமைகள் நேர்கின்றன என்பதை ஆராய் வதே அதன் அக்கறையாக இருப்பதனால், ஒரு வரலாற்றுச் சக்தியாக இருக்க விழை யும் எவ்விதத் திறனாய்வுச் செயல்முறையும் கருத்துருவப்பூர்வமானதாகவே இருக்க முடியும். ஆனால் இங்கே பிரச்சினைப்படுத்தவேண்டிய முக்கியமான விஷயம், கருத்துருவம் கொளளும் வடிவம், அது உற்பத்திசெய்யும் தன்னிலையின் வடிவம் ஆகியவையே.
ஆதிக்கக் கருத்துருவச் சொல்லாடல்கள் கட்டமைத்திருக்கும் தன்னிலையின் அடையாளங்கள், அரசியல் ஒத்துழைப்பு வடிவங்கள் ஆகியவற்றைக் குறுக்கீடு, துண் டிப்பு, சிதைப்புச் செய்யக்கூடிய மாதிரியான-இவற்றிலிருந்து வேறுபட்ட கருத்துருவச் சொல்லாடல்களை உருவாக்கக்கூடியதான; சொல்லாடல் குறுக்கீடுகளின் அல்லது தலையீடுகளின் தொகுதியாகவே மார்க்சியத்தைப் பார்க்கவேண்டும் என்று முன்னரே லாக்லாவை ஒட்டி இங்குக் கூறப்பட்டது.
மார்க்சிய விமரிசனம், இம்மாதிரிப் போராட்டங்களுக்கு ஆதரவு தரவேண்டும். இலக்கியம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பனுவல்களைக் கருத்துருவ இணைப் பமைப்புகளிலிருந்து வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதே இந்த அணுகுமுறை தரக்கூடிய குறிப்பான வழி.
இப்போதுள்ள அமைவில், பனுவல்கள் பூர்ஷ்வா வாசிப்பு நிர்மாணங்களால் உள்ளெழுதப்பட்டுள்ளன. தம் கருத்துருவச் சொற்படுத்தல்களை வேறுவகையாக உள்ளெழுத்துச் செய்துள்ளன. எனவே அவற்றை,
ஊடுபிரதித்துவ, சிததாந்த கலாச்சாரச் சுட்டல் அமைவுகள் வாயிலாக,
வாசிப்பு நிர்மாணங்கள் வாயிலாக,
அவற்றில் இவை பனுவல்களாக, வாசிப்புப் பொருள்களாக உருவமைக்கப்பட்டுள்ள அமைப்புகளை மாற்றியமைப்பதன் வாயிலாக
அவற்றை வேறுவித அர்த்தப்படுமாறு செய்யவேண்டும். மார்க்சிய விமரிசனங்கள் நடைமுறையில் பெரும்பாலும் இப்படித்தான் செயல்பட்டுவந்துள்ளன என்று முன்பே சொல்லப்பட்டது.
எனினும் விஞ்ஞானச் சூத்திரப்படுத்தல்கள் வாயிலாக, தன்வாயிலாக உற்பத்தி செய்யப்படும் புறநிலையான வரலாற்று அர்த்தத்தினைப் பற்றிய அறிவுடன் பனுவலை ஒத்துப்போகச் செயல்பட்டதன் விளைவாக, மார்க்சியம், இலக்கியப் பனுவல்கள் தொடர்பான ஒரே ஒரு நகர்வை மட்டுமே அனுமதிக்க முடிந்ததால், தன் செயல்பாட்டைத் தனக்கே தவறாக மார்க்சிய விமரிசனம் கூறிக்கொண்டது.
மறுபடியும் லூகாச்சின் உதாரணத்துக்கே வருவோம். லூகாச்சை மட்டுமே உதாரணத்திற்கு எடுக்க இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று, அவரது விமரிசனம், ஒரு கறாரான செயல்திட்டத்தினால் தூண்டப்பட்டு அமைந்தது. முற்போக்கு பூர்ஷ்வாப் பகுதியினருக்கும், உழைப்பாளருக்கும் ஓர் இணைப்பு உருவாக்குவதற்கான அடிப்படையில் அமைந்தது அவரது செயல்திட்டம். இரண்டாவது, மேல் எடுத்துக் காட்டப்பட்ட இலட்சியவாதக் கோட்பாடுகள் அடிப் படையில்தான் அவரது செயல்முறை அமைந்திருந்தது. அவற்றின் வாயிலாகவே அவர் வரலாற்றில் பனுவல்களைப் பொருத்த முயன்றார். இலக்கியப் பனுவல்கள் பற்றிய தம் ஆய்வுகள் மூலமாக அவர் நெய்யமுயன்ற வெளியீட்டமைவு பின்வருமாறு:
மனிதனின் வரலாற்றுச் சுயபடைப்பாக்கச் செயல்முறைகளின் (இவை இன்னும் முடிவுக்கு வரவில்லை) பிரதிபலிப்பே இலக்கியப் பனுவல்கள்.
வரலாற்றுப் பூர்வமாக மனித சுயபிரக்ஞையின் (ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின்) மிக நல்ல வடிவம் பெற்றுள்ளவையே இந்தச் சுயபடைப்பாக்கச் செயல்முறையினைப் போதிய அளவு பிரதிபலிப்பவை ஆகின்றன.
இம்மாதிரி வரலாற்றுச் சுயபிரக்ஞை வடிவங்களுக்கான ஆதரிப்புத் துணைகள், முற்போக்குச் சமூகவர்க்கத்தின் உலகப் பார்வைகள் வாயிலாகக் கிடைக்கின்றன. (முற்போக்குச் சமூகவர்க்கம் என்பது நேற்றைய பூர்ஷ்வாக்களும் இன்றைய உழைப்பாளர்களும்).
ஆகவே அவை ஒருகாலத்தில் உயர்த்திப்பிடித்த மனிதநேய மதிப்புகளை ஆதரிப்பதற் காக பூர்ஷ்வா வர்க்கத்தின் முற்போக்குப் பிரிவு, இன்று உழைக்கும் வர்க்கத்தை ஆதரிக்க வேண்டும்.
இவ்விதமாக, லூகாச்சின் விமரிசனம், ஓர் அரசியல் கூட்டு உருவாக்கும் முயற்சியா கிறது. குறிப்பாக, இக்கூட்டு, பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வர்க்க ரீதியாக அல்லாமல், கலாச்சார வழியிலேயே இணையக்கூடியதாக உருவெடுத்தது. வர்க்கப் போராட்டத்தின் சாராம்சவாதக் கருத்தாக்கம் ஒன்றை மறுசூத்திரப்படுத்துவதாக அது அமைந்தது. (குறிப்பாக, வர்க்கப் போராட்டம், தனிமுரண்பாடொன்றை மையமாக வைத்துச் சொல்லப்படுவதாயிற்று.)
உழைக்கும் வர்க்கம்-பூர்ஷ்வா என்ற முரண்பாடு, இதேபோன்ற சாராம்சவாதச் சொற் களில், வடிக்கப்பட்ட கலாச்சாரப் போராட்டமாகவும் ஆக்கப்பட்டது.
பகுத்தறிவு-பகுத்தறிவின்மை,
சோஷலிசம்-காட்டுமிராண்டித்தனம்,
மனிதநேயம்-மனிதநேயமின்மை
என்னும் கலாச்சார முரண்பாடுகளின் வி¬ளாக ஏற்படும் போராட்டத்தில், பூர்ஷ்வாக் களுக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்குமான போராட்டம் ஒரு தற்செயலான உள் ளிணைவாகவே கருதப்பட்டது.
சுருங்கச் சொன்னால், லூகாச் வரலாற்றோடு பனுவல்களை இணைத்தவிதம், அவற்றில் சிறிதுகாலத்தில் வெளிப்படக்கூடிய, வரலாற்று அர்த்தத்தின் அண்மையில் நிகழவிருக்கும் இயல்திட்டத்திற்கும் அவற்றைப் பொருத்திப் பார்ப்பதன் வாயிலாக, அவற்றை வரலாற்றில் பொருத்திய விதம், சோஷலிசத்திற்கு, பூர்ஷ்வா மனிதநேய மதிப்புகளை முன்வைக்கக்கூடிய ஒரு வழியாகவே இருந்தது.
ஆனால் இதற்கு ஒரு விலையும் தரவேண்டிவந்தது. வரலாற்றில் தனிமனிதப் படுத்தும், மனிதனை அழிக்கும் சக்திகளுக்கு இடையிலான அடிப்படையான போராட் டத்தில், ஏற்கெனவே உள்ள தற்செயலான வடிவமாகவே உழைப்பாளர்க்கும் பூர்ஷ் வாக்களுக்கும் இடையிலான போராட்டத்தை ஆக்கியதுதான் அந்த விலை. இப்படிப் பட்ட விளக்கம் தருகின்ற அமைவுக்கு நகர்த்தப்படுவதன் வாயிலாக, பனுவல்கள் இயக்கப்பட்டால், பிறகு அவை நகர்த்தப்படக்கூடிய வேறிடமும் இல்லை.
அதே சமயம், அவை முன்பிருந்த ஒழுங்கமைவிற்கும், அது முன்மொழியக்கூடிய பனுவல்களின் நிர்ணயத்திற்குமிடையே ஒரு பிளவாக/இடைவெளியாக/முறிவாக அமைகின்றன. இம்மாதிரி ஒழுங்கமைவின் எல்லைகளுக்குள் அடைபட்ட ஒரு விமரி சனம் செய்யக்கூடியது, தனது செயல்பாட்டின் நிபந்தனையாக அது வைக்கக்கூடிய வரலாற்றுக்குப் பிந்திய ஒருங்கிணைந்த தன்னிலையின் தீர்ப்புகளுக்கான எதிர்பார்ப்பு களை முழுமை செய்வது மட்டுமே.
இம்மாதிரி விமரிசனத்தை வைத்து இன்று அதிகமாக ஒன்றும் செய்துவிட முடியாது. அது சொல்கின்ற முன்மொழிவுகள், வரலாற்றில் பிரதிகளைப் பொருத்து வதற்கான வழிகளுக்கு அப்பால் அதன் மொழிதல்கள், அர்த்தத்தின் படிநிலைக் கோட்பாடு ஒன்றில் நிலைத்துள்ளன.
அந்தப் படிநிலைக் கோட்பாட்டின் அரசியல் கணக்குகள் ஏற்கெனவே கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றன. சோஷலிசத்திற்கான போராட்டத்திற்காக, ஒருங்கிணைக்கப்படாத, மற்றவிதப் போராட்டங்கள் யாவும், உழைக்கும் வர்க்கம்-பூர்ஷ்வா என்னும் துருவஇணைகளைச்சுற்றிக் குழுவாக அமையவேண்டும் என்பது விஷயமல்ல. மாறாக, அவற்றின் வெற்றிமிக்க வெளிப்பாடுகள் ஒரு காரியார்த்த ஒருமைப்பாட்டுக்குள் அவற்றின் சார்புநிலை கொண்ட தன்னாட்சியை ஏற்றுக்கொள்வதைப் பொறுத்திருக் கிறது. பெண்கள், கருப்பர்கள் இவர்களின் தனித்த ஆர்வங்கள் காரணமாக-இவை வழக்கமான வர்க்க முரண்பாடுகளுக்குள் அடக்கப்பட முடியாதவை ஆதலின், இலக்கியப் பனுவல்களுக்கு ஒரு புறநிலை அர்த்தத்தைத் தருகின்ற அரசியல் மதிப்பு என்பது இதனால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
ஆதிக்கக் கருத்துருவத் தன்னிலை அடையாளங்களின் போராட்டப் போட்டிக்ளுக்கான இராஜதந்திரக் களங்களாக அப்படிப்பட்ட பனுவல்கள் கருதப்பட்டால் (அப்படிக் கருதப்படவேண்டும் என்றே நாம் கருதுகிறோம்) இதனை நாம் அறிந்துகொள்வது நலம்.
இப்படியே அவை, ஒன்றில் மட்டுமன்று, பல்வேறு போராட்டங்களுக்குள் சிக்கியிருக் கின்றன. ஆகவே நமக்குள் அவை வேறுவிதமாக நகர்த்தப்பட்டு வலம்வரவேண்டும். அதன்பிறகுதான் காரியார்த்தமாக, வாசிப்பின் வெவ்வேறு சமூக, கருத்துருவ உறவுக ளுக்குள்ளாக நகர்த்தப்படவேண்டும்.
ஒரேவித விஞ்ஞான பூர்வ அர்த்த நிலைப்பாட்டில் அவை ஒரேமுறை நகர்த்தப்படு வதைவிட, வரலாற்றின் இறுதியில், தன்னை நிலைநிறுத்திக்கொள்ளக்கூடிய, தான் அறிந்துகொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த தன்னிலையின் தீர்ப்பினைத் தன்னளவிலான பனுவல் சந்திக்குமா என்பது தெரியவில்லை. இதேபோன்ற தன்மை கொண்ட பல்வேறு பிரச்சினைகளை நாம் உடனடியாகத் தீர்க்கவேண்டியிருப்பதால், அவற்றிற்காகப் போராடவேண்டியிருப்பதால், இப்பிரச்சினையை எதிர்காலத் தீர்ப்பிற்கு விட்டு விடலாம் என்றே தோன்றுகிறது.
 

 

 

 

 
,


ஆகாசம் நீலநிறம்

ஆகாசம் நீலநிறம்

(இந்தக் கட்டுரை, கவிஞர் விக்ரமாதித்தனின் ‘ஆகாசம் நீலநிறம்’ என்ற கவிதைத் தொகுதியை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துமுகமாக, 1983ஆம் ஆண்டு யுரேகா என்ற சிற்றிதழில் எழுதப்பட்டது.)

மல்லார்மே என்ற ஃபிரெஞ்சுக் கவிஞரின் நண்பர் ஒருவர், அவர் எந்த அனுபவத்தைக் கொண்டு எழுதுகிறார் என்று கேட்டாராம். கவிதை எழுதுவதற்கு அனுபவம் முக்கியமில்லை, வார்த்தைகள்தான் முக்கியம் என்று மல்லார்மே கூறினாராம். யேட்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞர்கூட, ‘தரிசனம்’ என்ற ஒரு தத்துவ நு£லைத் தாம் உருவாக்கியதுகூட, அந்த நூல் தனக்கு கவிதை எழுதுவதற்குப் படிமங்களைத் தருவதற்கே என்றார் என ஒரு கதை உண்டு. ஒரு கவிஞன், ஒரு தத்துவத்தையோ ஒரு கொள்கையையோ எழுதவேண்டுமென்ற நிர்ப்பந்தம் கிடையாது. அவனுக்கு அடிப்படை சுயநிர்ப்பந்தம்தான். அவன் தன்இச்சைப்படி எதைப் பற்றியானாலும் எப்படிவேண்டுமானாலும் எழுதவேண்டும் என்ற கருத்துப்பட ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்கக் கவிஞர் கூறியிருக்கிறார். ஒரு படைப்பு நமக்கு இன்பத்தைத் தருவது, அது ஒரு சன்மார்க்கக்கருத்தைக் கூறுவது என்பதாலோ அல்லது ஒரு அரசியல் கொள்கையை வற்புறுத்துவது என்பதாலோ அல்ல.

எந்தப் படைப்பும் தன் கட்டமைப்பின் சிறப்பினால், நடை உயர்வினால், அதை எழுதிய ஆசிரியரின் பிரத்தியேகப் பார்வையால், நமக்கு ஒரு கலை இன்பத்தைத் தருகிறது. இந்த அடிப்படைகளுக்குஅரசியல், தத்துவம், எந்த விஷயமும் பயன்படுத்தப்படலாம். இன்னும் தெளிவாகக் கூறினால், கவிதைப் படைப்புக்கென இவை இங்குவந்து சேர்ந்திருக்கின்றனவே அன்றி, இவற்றிற்காகக் கவிதை பயன்படுத்தப்படுவதில்லை. தாஸ்தாயேவ்ஸ்கி ஒரு நூலில் கூறியதுபோல, “வாழ்க்கையின் எந்த அவமானத்தையும்விட வாழ்க்கைதான் முக்கியம்”.

விக்கிரமாதித்தன் தன் கவிதைகளில் தன் அனுபவத்தை கலைவடிவமாக மாற்றியிருக்கிறார். அந்த அனுபவங்கள் கசப்பாக இருக்கலாம் என்பது வேறு. இந்த அடிப்படையில் நோக்கும்போது விக்ரமாதித்தன் என்ற கவிஞரின் கருத்தியல்கள் அல்லது கொள்கைகள் யாவை என்பது பற்றிய கேள்விகள் இலக்கிய விமரிசனத்திற்குப் பொருத்தமற்றவைதான். ஆனால் தமது வாழ்க்கைப் பார்வைகள் அல்லது தன்மைகள் அனைத்தும் ஒருசேர விகற்பமின்றி இணையுமாறு சில உத்தமமான கவிதைகளை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவர் வாழ்க்கையின் கசப்பு அவர் கவிதையில் எவ்வளவு இன்பமாக நாம் சுவைக்குமாறு ஒலிக்கிறது என்பதற்கு ஓர் உதாரணத்தை நாம் பார்க்கலாம்.
கற்றுக் கொண்டு விட்ட தமிழ்
கவிதை எழுத மட்டும் உதவும்
இம்மாதிரி வரிகளால்தான் விக்ரமாதித்தன் என்ற ஒரு மனிதரைப் பற்றி நாம் யோசிக்க முடிகிறது. அவர் வாழ்க்கையின் பார்வையில் தத்துவ, அரசியல், மதச்சார்பான கொள்கைகள் எல்லாம் பின்தள்ளப்பட்டு, ஒரு கவிஞரின் பார்வை – தன்னளவில் வாழ்க்கையை நுட்பமாக, ஆழமாக, விரிவாகப் பார்த்தவிதம் நமக்கு ஒரு சிறந்த கலையின்பத்தைத் தருகிறது. இங்குதான் அவர் கவிதை வெற்றி பெறுகிறது. இதுவும் காலம் காலமாக ஒலிக்கும் குரல்தான். இதற்கு ஒத்த குரலை மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இராமச்சந்திரக் கவிராயரிடமும் கேட்கலாம். ஆயினும் கவிஞனிடம் அந்தந்தக் காலத்துக்கேற்ற தன்மைகளும் ஒலிக்கவே வேண்டும்.

‘எப்பவுமே ரசனை கெட்ட மனிதர்கள்’  ‘திசை முடிவுக்குத் தெரிவதெல்லாம் ஆகாசம் நீலநிறம்’  என்றெல்லாம் வருணிக்கும்போது அதனைக் காண்கிறோம்.

சிதைவுகள் என்ற கவிதையில் கவிஞரின் நுண்ணிய மென்மையான மன இயல்பு வெளிப்படுகிறது.

லௌகீக வாழ்க்கை நெருக்கடியில்
மனசின் பாஷையை
யார் புரிந்துகொள்ளப் போகிறார்கள்

நண்பா, இனிமேல் எந்த சூரிய சந்திரன்
என்னைப் பூக்க வைக்கும்?
எனக்கில்லை
என் சந்ததிக்கேனும்
தப்பித்தல் அல்லாமல்
விடுதலை எப்போது பூக்கும்?

நிலை என்ற கவிதையில் இப்படிச் சொல்கிறார்:
மலையேறும் வாழ்க்கையில்
மகா உன்னதம் தேடி என்ன லாபம்?

மொழியைக் கையாள்வதிலும் கவிஞர் சம்பிரதாயங்களை- இது சரி, இது தவறு என்ற வரையறைகளை உடைத்தெறிந்துவிட்டு அனுபவத்தினுடைய அடிநிலையான மூர்க்கத்தன்மையுடன் வெளிக்காட்டிவிடுகிறார்.

வாழ்க்கை
தேவடியாளின் வக்கிரத்துடன்
இருத்திவைத்திருக்கிறது
மிக உதாசீன பாவத்துடன் (கேஷுவலாக) எழுதப்பட்ட இந்தத் தொடர், பொருளில்லார்க்கு வாழ்க்கை வசீகரமாக இருப்பதில்லை என்ற தரிசனத்தையும் உட்கொண் டிருக்கிறது.

புதுக்கடன் கேட்கும்போது
பழைய கடனை ஞாபகப் படுத்துவான்
பெட்டிக்கடைக் கருப்பையா
இந்தக் கவிதையிலும் ஒரு கசப்புத் தெறிக்கிறது. கடனில்லாமல் வாழமுடியாது என்ற நிலை வந்தபின் கடனுக்குமேல் கடன் கேட்காமல் மனிதன் என்னதான் செய்ய முடியும்?

கவிதையின் உருவ அமைப்பைத்தான் அதன் கட்டுக்கோப்பு என்கிறோம். ஒரு கவிதையின் பகுதிகள் எவ்வாறு இணைகின்றன, அவற்றின் ஆரம்பம், நடு, இறுதி இவைகளிடையே நிகழும் இயக்கம் எவ்வாறு செல்கிறது என்பது கட்டமைப்பு. இந்தப் புற அமைப்பின்பின்னால் கவிஞர் மனத்தின் நுடபமான இயக்கத்தை நாம் காணலாம். தட்சணாமூர்த்தியாக, ஏகாதசி, ஸ்வயம்புகள் என்ற கவிதைகளில், கவிதை கடைசியிலிருந்து தொடர்ந்து தலைப்புடன் முடிந்து ஒரு மண்டலமிட்டுக் கிடக்கும் பாம்புபோல் (பழங்காலச் சித்திரக்கவிதைபோல்) தோற்றமளிக்கிறது. ஆகாசம் நீலநிறம் என்ற கவிதையில், திசைகள் அனைத்தும் உள்பரவி, பலபடியாகத் தொடர்ந்து, கடைசிப்பகுதியில் அவை சுவடு தெரியாமல் மறைந்துவிடுவதைப் பார்க்கலாம். இந்தக் கட்டுக்கோப்பே கவிதையில் சொல்லப்படும் அனுபவத்தின் வீச்சையும் ஆழத்தையும் பலதளங்களுக்குக் கொண்டுசெல்கிறது.

பார்வை என்ற கவிதையில் சிகரெட் நுனி, முக்கால் சிகரெட் என்ற படிமங்களில் நுட்பமான அமைப்பின்மூலம் பார்வை என்ற அனுபவத்தை மறைமுகமாகக் காட்டுகிறார் கவிஞர். இதைப்போலவே கடல் என்ற குறுங்காவியக் கட்டத்தில் வேலை இல்லாதவன் என்ற தொடங்கும் கவிதை, அதன் கடைசி அடியான ‘ஓயாத காற்று’ என்ற சொற்றொடர் மூலம் உச்சகட்டத்தை அடைந்துவிடுகிறது. கண்ணாடியில் தெரியும் கவிதை என்ற மூன்று அடிக் கவிதையில் கண்ணாடி என்ற சொல் மூன்றுமுறை திரும்பிவருவதில் அடிக்கு அடி அதன் அர்த்தம் திசைதிரும்பி ஒரு முழுமை அடைகிறது. ‘இருட்டுக்கு நட்சத்திரங்கள் நிறைய’ என்று தொடங்கும் கவிதையின் கட்டுக்கோப்பைப் பார்க்கும்போது கவிதை முடியாமல் இருப்பது அதற்கு அர்த்தமில்லை என்று தோன்றவைக்கக்கூடும். ஆனால் ஈடுபாட்டுடன் வாசிப்பவர் களுக்கு அதன் அர்த்தம் வயப்படும்.
விக்ரமாதித்தன் கவிதைகளில் யாப்பில்லை என்றாலும் நுட்பமான ஓசை இருககிறது. சான்றாக
சிதைவும் சீரழிவும் கலைஞனுக் கில்லை

எனக்கில்லை
என் சந்ததிக்கேனும்
விடுதலை எப்போது பூக்கும்

வொத்தையடிப் பாதையிலே
வொரு சுவடும் மிச்சமில்லை

என்ற கவிதைகளின் ஒலியமைப்பைக் காணலாம்.

சாதாரணமாக மொழி நமது அன்றாட வாழ்க்கை அவசியங்களுக்கும் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் பயன்படும் அளவுக்கு அனுபவத்தின் நுணுக்கத்தையும் ஆழத்தையும் பிறருடன் பகிர்ந்துகொள்ள உடன்படுவதில்லை. இது கவிஞனுக்கும் ஒரு பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இதற்காகவே கவிஞர்கள் வெவ்வேறு ஆளுமைகள் கொண்ட, வெவ்வேறு தன்மைகள் கொண்ட வட்டார வழக்குகள் போன்றவற்றையும் ஆளுகிறார்கள். மொழியைக் கடந்துசெல்வதையும் மொழியை வைத்துக்கொண்டுதான் செய்யவேண்டியிருக்கிறது. கவிஞன் தனது மொழியை மொழி மூலமாகவே படைக்கின்ற அனுபவம் வெற்றிபெறுகையில் அப்படிப்பட்ட அனுபவமில்லாதவர் களுக்கு அது ஒரு பிரமிப்பையும் விளைவிக்கலாம். ஆனால் வெற்றி பெற்றவையில்கூட அனுபவத்தின் எல்லையும் ஆழமும் முழுமையாக வெளிப்படுகின்றனவா என்பது ஐயத்திற்குரியது.

கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன் போன்றவர்களின் மொழி வட்டாரப் பேச்சுத் தமிழின் வேகத்தினால் வகை செய்யப்பட்டு வெளியீடு பெற்றவை. அடிப்படைகள்கூட, காலப்போக்கில் வெவ்வேறுவிதமாக மொழி பார்க்கப்படுவதால் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துவிடுகின்றன. உருவமும் உள்ளடக்கமும் வேறுபிரிக்கமுடியாமல் பிணைந்துபோகையில் சம்பிரதாயமான பார்வைகளிலும் ஒரு கலைப்பூர்வமான விளைவு ஏற்படுகிறது. ஆகவே, உருவத்தையும் உள்ளடக்கத்தையும் வெவ்வேறாகப்பிரித்து விக்ரமாதித்தன் கவிதைகள் பொருளாதார நெருக்கடியில் மனிதன் உறும் அவஸ்தைகளைச் சித்திரிக்கின்றன என்று பொருளை மட்டும் பாராட்டுவதில் அர்த்தம் இல்லை.

விக்கிரமாதித்தன் கவிதையின் மொழி திருநெல்வேலித் தமிழ். அதிலும் திருநெல்வேலிப் பிள்ளைமார் தமிழ் என்று சொல்லலாம். இந்தப் பிள்ளைமார் தமிழ் என்ற பேச்சுத் தமிழில் இடம்பெறும் தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் கவிதையின் கட்டுக்கோப்புடன் முரணில்லாமல் இயைந்து கவிதைகளுக்கு ஒரு வேகத்தைக் கொடுத்து விடுகிறது. இதற்கு நூற்றுக்கணக்கான சொற்களை உதாரணம் காட்டலாம். மேலும் கவிஞருடைய பிரக்ஞையை மீறி, அவர் பாரம்பரியத்தின் இயல்பான சில மதச்சார்பான சொற்களுடன் அவை இயைந்து புதுப்புது அர்த்தங்களை உருவாக்கிவிடுகின்றன.

ஒவ்வொரு கலைஞனும் கடவுளுக்குப் போட்டியாகப் படைப்புத் தொழிலைச் செய்கிறான் என்று சொல்கிறார்கள். கடவுள் படைத்த உலகிற்கு, வாழ்விற்கு, திட்டவட்டமாக, தீர்மானமாக, இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை என்று அர்த்தம் கூறமுடியாது. அது போலத்தான் படைப்பும்.


பண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்

பண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்

(தமிழ்ப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை 27-02-1988, 28-02-1988 நாட்களில் நடத்திய தமிழ்நாவல்களில் உளவியல் சித்திரிப்பு பற்றிய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை இது.)

முன்னுரை
தமிழ் நாவல் வரலாற்றில், 1965-70 காலப்பகுதியை ஓர் எல்லையாகக் கொண்டு அதற்கு முந்தைய நாவல்கள், அதை ஒடடிய, அதற்குப் பிந்திய நாவல்கள் என இரண்டாகப் பகுத்துக்கொள்ளலாம். முந்தைய நாவல்களில் குடும்பம் என்னும் அமைப்பின் சிதைவுதான் முக்கியப் பொருளாக ஆளப்பட்டுள்ளது. இச்சிதைவு, பணத்தினால் நேரிடுகிறது. கமலாம்பாள் சரித்திரம் முதலாக, தி. ஜானகிராமன், ஆர். ஷண்முகசுந்தரம், க.நா. சுப்பிரமணியம் முதலியோர் நாவல்கள் வரை வணிக மதிப்பீடுகளால், பணத்தினால், குடும்ப நிறுவன உடைவு என்பதே பொருள். இதற்குச் சான்றாகப் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நாவல், அவ்வளவாகப் புகழ்பெறாத ஒரு நாவல் இவற்றில் பாத்திரச் சித்திரிப்புகளைக் காணலாம்.

பொய்த்தேவு
க.நா. சுப்பிரமணியத்தின் ‘பொய்த்தேவு’ நாவலில், சோமு முதலியாரின் பாத்திரப் படைப்பு குடும்பச் சிதைவினைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இப் பாத்திரப்படைப்பு, சம்பிரதாயமான விவரணை முறையிலோ, உரையாடல்கள் முறையிலோ அமையவில்லை. இரண்டு ஊர்களுக்கிடையிலான இழுநிலையான உறவு வழி சோமு பாத்திரம் உருவாகிறது. சோமு பிறந்த ஊர் சாத்தனூர். பழையகாலப் பாரம்பரிய மதிப்புகளின், குடும்ப உறவு முறையின் குறியீடு. சோமு தன்னைச் சாத்தனூர் மேட்டுத் தெருவிலிருந்து துண்டித்துக்கொள்ளவே விரும்புகிறார். தன் மனைவி பாப்பாத்தி மறைந்ததும், சாத்தனூருக்கும் தனக்கும் உறவு அற்றுப்போய் விட்டதாகக் கருதுகிறார். கும்பகோணம் என்பது வணிக கலாச்சாரத்தின் குறியீடு. ரங்காச்சாரி, பாலாம்மாள் போன்ற கும்பகோணவாசிகள், வணிகமனோபாவக் குறியீடுகள். தன்னைக் கும்பகோணவாசி என்று முதலியார் கருதிக்கொண்டாலும், சோமுவின் மகன், “நடராஜன் அவன் செய்த ஒவ்வொரு காரியத்திலும அவரை மீண்டும் மீண்டும் சாத்தனூர் மேட்டுத் தெருவில் கொண்டுபோய் நிறுத்திக்கொண்டி ருந்தான்.” இச்சமயத்தில்தான் சோமுவின் உள்ளத்தில் சாத்தனூர் கோயில் மணியோசை எழுகிறது. சோமு முதலியார் தனது பொய்த் தெய்வங்களை உதறிவிட்டு, கும்பகோண வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று ஜெயில் செல்கிறார். பிறகு சோமுப் பண்டாரமாகி, வேறொரு சாத்தனூர்ச் சாலையில் செத்துக்கிடக்கிறார்.

மனிதன், தன் பழைய கலாச்சாரப் பாரம்பரியத்திலிருந்து விடுபட முடியாது, நவீன வணிகமயமாதலின் பொய்ம்மைகளில் நிறைவெய்த முடியாது என்பது நாவலின் செய்தி. குடும்ப உறவுகள் அனைத்தும் பணத்தின்முன் பலியாவது இந்த நாவலில் சிறப்பாக வெளியிடப்படுகிறது. சான்றாக ஓரிடம். சோமு முதலியாரின் மகன் நடராசன் மனத்தில் ஒரே கவலைதான் இருந்தது. தன் நண்பனிடம், “ஏண்டா, இந்தக் கிழம் எத்தனை நாளடா இருந்துகொண்டு என்னை வதைக்கும்?” என்கிறான். தன் தந்தையின் வைப்புகளான பாலாம்பாள், கமலாம்பாளுடன் அவனும் தொடர்பு வைத்திருக்கிறான். இதில் அவன் கூச்சமோ அருவருப்போ சற்றும் அடையவில்லை.

அறுவடை
ஆர். ஷண்முகசுந்தரத்தின் அறுவடை நாவலில் ஒரு பெண்ணின் காதல்தான் விஷயம். காதலிலும் பணம் என்னும் பொய்த்தேவு குறுக்கிடுகிறது. தேவானையின் காதலன் சுப்ரமணியத்தின் பாட்டனுக்கே விலை பேசப்படுகிறாள் தேவானை. அவளு டைய காதலன் சுப்ரமணியமோ, அவளைத் தன் தாத்தாவின் சம்பிரதாயமான மனைவியாகவும் தனக்கு வைப்பாகவும் இருக்கச் சொல்கிறான். “இதுக்குமுன்னே (என் தாத்தா) படிதாண்டாப் பத்தினிகளைத்தான் கூட்டிகிட்டு வந்து வச்சிருந்தாரா? எல்லாந் தேவடியாள்கள்தானே?” என்று அநாயசமாக பதிலுரைக்கிறான். பணத்தின் ஆகாயமளாவிய ஆகிருதியின்முன் பெண்மை, கற்பு, குடும்பம் என்னும் பாரம்பரியக் கருத்தாக்கங்கள் இற்று விழுகின்றன என்பதுதான் இங்குச் செய்தி. ஆனால் தேவானை தற்கொலை செய்துகொள்கிறாள்.

போராட்டத்தின் அடிப்படை
1965க்கு முற்பட்ட நாவல்களில் குடும்பச் சிதைவினை எடுத்துக்காட்ட மேற்கண்ட சான்றுகள் போதுமானவை. இம்மாதிரி நாவல்களில் ஒரு பெரிய கலாச்சாரத்தினுள் உள்ள சிறுசிறு பண்பாட்டுக்குழுக்கள் சார்பாகவே தனிமனிதன் இயங்குகிறான். உபகுழுக்கள் மோதலே இங்குக் காணப்படும் பண்பாட்டுச் சிக்கல். நாவலின் முக்கியக் கதாபாத்திரம் சார்ந்திருக்கும் சிறுகுழு உலாகாயதமான மதிப்புச் சாராததாக இருக்க, இவர்களுடன் போராடுபவர்கள் உலோகாயத மதிப்புகளை மட்டுமே முன்¬வ்ப்பவர்களாக உள்ளதனால் இப்போராட்டம் நிகழ்கிறது. இப்போராட்டத்தை நன்மை தீமைக்கான போராட்டமாக எளிமைப்படுத்தியும் உள்ளனர். போராட்டம் என்னும் அம்சம் வெளிப்படையாக முக்கியத்துவம் பெறுவதனால் இந்த நாவல்களில் ஒரு முழுமையான கதையமைப்ப அவசியமானதாகிறது. இம்மாதிரி நாவல்களில் காணப்படும் இரு முக்கிய அம்சங்கள் கவனிக்கத்தக்கன.

1. தனிமனிதன் இந்த நாவல்களில் பாரம்பரியமான இலட்சிய மதிப்புகளை ஆதரிக்கும் குழுவினைச் சார்ந்திருக்கிறான். இக்குழுவில் இவன் தன்னை ஒத்திசைத்துக்கொள்வ தால், இவனது அந்நியமாதல் தவிர்க்கப்படுகிறது. எனவே அந்நியமாதல் என்னும் பிரச்சினை நாவல்களில் எழுப்பப்படவில்லை.

2. இந்த நாவல்களில் யதார்த்த நிலையில் வணிக மதிப்புகளே வெற்றி பெறுவதாகச் சித்திரிக்கப்பட்டாலும், தலைமை மாந்தர்கள் தியாகம், துறவு, மரணம் போன்றவற்றில் நிறைவெய்து கிறார்கள். அதாவது தனிமனிதனுக்கென இலட்சியங்கள் உள்ளன, தங்கள் இலட்சியத்திற்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைக்கின்றனர்.

இலட்சியத்தில் வெற்றி கிடைக்கிறது. வாழ்க்கை தோற்றாலும், படிக்கும் வாசகர் இவற்றால் அதிகமாகத் தொல்லைக்குள்ளாக்கப்படுவதில்லை. எனவே இவற்றைத் தன்னிறைவு தரும் நாவல்கள் எனலாம். ஏனெனில் ஒரு காவிய அமைதி இவற்றால் கிடைக்கிறது. அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் நம்பிக்கை அளிக்கப்படுகிறது. சான்றாக, சி. சு. செல்லப்பா, பொய்த்தேவு பற்றிக் குறிப்பிடுவது, “சோமுப்பண்டாரமாக அவர் சாலையில் அறுபதுவயது சமயத்தில் செத்துக்கிடந்தது சோகமான முடிவு இல்லை.” இவ்வாறு கூறிவிட்டு அரிஸ்டாடிலின் ‘கெதார்சிஸ்’ கோட்பாடு பற்றியும் செல்லப்பா குறிப்பிடுகிறார். இத்தகைய இலட்சியச் சித்திரிப்புகளைக் கண்டுதான் ரால்ஃப் பாக்ஸ் போன்றோர நாவல்களைத் ‘தற்கால உரைநடைக் காவியம்’ என்று வருணித்தனர் போலும்.

1965க்குப்பின்
1965க்குப் பின் நகர்மயப்படுத்தல், நவீனமயப்படுத்தல் ஆகியன காரணமாகக் குடும்ப வாழ்க்கை மட்டுமல்ல, தனிமனித வாழ்க்கையும் சிதைந்து போயிற்று. அதனால் நாவலின் பிரச்சினைகள் வேறாக ரூபமெடுத்தன. கூட்டுக்குடும்பங்களை நகர்ப்புறங்களில் காண்பது அரிதாகிவிட்டது. 1965க்கு முந்திய நாவல்களில் கூட்டுக் குடும்ப அமைப்பையே காணலாம். (இது தமிழ்த் திரைப்படங்களுக்கும் பொருந்தும்.) பின்னர் வந்த நாவல்களில் பெருமபாலான வற்றில் நகர்ப்புற மனிதனின் தனிமனித ஆளுமைச் சிதைவு சித்திரிக்கப் படலாயிற்று. இதற்கு விதிவிலக்கு, இக்காலப் பகுதியிலும் கிராப்புற மக்களைச் சித்திரித்த நாவல்கள் மட்டுமே. சான்றாக நீல. பத்மநாபனின் தலைமுறைகள், நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் போன்றவை.

நேற்றிருந்தோம்
எனினும் நகர்ப்புற மக்கள் அனவைரும் பழைய நிலவுடைமை மதிப்பீடுகளிலிருந்து முற்றாக விடுபட்டுவிட்டனர் என்று கூற இயலாது. இதனைக் கிருத்திகாவின் நேற்றிருந்தோம் நாவல் காட்டுகிறது. நாவலின் தலைப்பே நாம் நேற்றைய மதிப்பீடுக ளில் வாழ்ந்துகொண்டிருப்பதைக் காட்டுகிறது. இன்று நாம் இல்லை, ஏனெனில் இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான புதிய மதிப்புகளையும் அளவுகோல்களையும் நாம் உருவாக்கிக் கொள்ளவில்லை. நேற்றைய மதிப்புகள் இன்றைய வாழ்க்கைக்குப் பழைய சட்டை போல் பொருந்தாமல் போகின்றன.
இந்த நாவலில், வெளிநாட்டிலிருந்து விட்டு வந்த பத்மேஷ்-உளவியல் டாக்டர்-வாஸவேச்வரம் நகரின் இன்றைய வாழ்க்கை அலங்கோலங்களைக் காண்கிறான். இந்த மாதிரி அலங்கோலங்களுக்குக் காரணம், நாம் நேற்றிருந்த மதிப்புகளைக் கைவிட்டதுதான் என்ற முடிவுக்கு வருகிறான்.

தலைமுறைகள்
மேற்குநாட்டு அடிப்படையிலான நகரிய வாழ்வுக்கு நாம் ஆட்பட்ட போதிலும், கிராமப்புறங்கள் மாறிவிடவில்லை. நிலவுடைமைச் சமூக மதிப்புகளே அங்கு ஆதிக்கம் செய்கின்றன என்னும் முரண்நிலையை நீல. பத்மநாபனின் தலைமுறைகள் மிக நன்றாக எடுத்துக்காட்டுகிறது. இதற்குமுன் வேறு எந்தத் தமிழ்நாவலிலும் ஒரு சமூகம் இவ்வளவு நெருக்கமாக, நுணுக்கமாக, தலைமுறை தலைமுறையாக ஆராயப்பட்ட தில்லை. இதனால் பழைய நாவல் அமைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அமைப்பை இந்த நாவல் கொண்டிருக்கிறது. வணிக மதிப்புகள் மோதல்-குடும்பச் சிதைவு என்னும் பழைய கருபபொருள் இந்த நாவலிலும் இல்லாமல் போகவில்லை. கூனங்காணிப் பாட்டாவின் வீழ்ச்சி மூலம் குடும்பச் சிதைவு, நிலவுடைமைக் கட்டுமான அமைப்பின் சிதற்ல் ஆகியவை சித்திரிக்கப்படுகின்றன. எனினும் இந்த நாவலில் இது முக்கியமில்லை. கூனங்காணிப் பாட்டா ஒரு துணைப்பாத்திரமே. இதனையும் தாண்டி மனிதமன ஆழங்களைக் காண அழைக்கிறது இந்நாவல். திரவி, செவந்தப் பெருமாள் ஆகியோரின் பாத்திரப் படைப்புகள் இதனை உறுதிசெய்யும்.

திரவியின் கவலையெல்லாம் அவனது அக்கா நாகுவின் வாழ்வைப் பற்றித்தான். நாகு, காலங்காலமாக இந்தியாவில் உள்ள அடிமைப் பெண்களின் வகைமாதிரி. இவள் போன்றோர், தங்கள்மீது சுமத்தப்பட்ட சமூக நிர்ப்பந்தங்களை எதிர்ப்பதில்லை. திரவியிடம் அந்நியமாதல் பிரச்சினையும் உண்டு. தனது சமூகத்திடமிருந்து, அதன் மதிப்புகளிலிருந்து அவன் அந்நியப்பட்டவன். எனினும் குடும்பப் பற்றும் பாசமும் முற்றிலும் அவனை அந்நியமாக்கவில்லை. படிக்கும் பருவத்திலேயே அவனது மதிப்பு கள் சமூகத்துடன் ஒத்துச் செல்லவில்லை. உண்ணாமலை ஆச்சியிடம் ஏழூர்ச் செட்டிமார் தங்கள் குடும்பப் பெண்களை ராஜாவுக்குக் கலியாணம் செய்து வைக்காமல் அழித்த கதையைக் கேட்டு, “ஆனானப்பட்ட மகாராஜாவை சாம்சாமுன்னு கல்யாணம் செய்யாமே தங்கம்மையும் தாயம்மையும் ஏன் மண்ணோடு மண்ணாகணும்?” என்று அவன் இளமனம் கேள்விகேட்கிறது. பொய்யான இறுகிப்போன மதிப்புகளில் கட்டுண்டு, தன் மக்களை பலிவாங்கும் சமூகத்திடம் அவனுக்கு மதிப்பேற்படவில்லை. நாகுவின் நிலை பற்றியும் இவ்வாறே அவன் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கிறான். ஆ£ல் உண்ணாமலை ஆச்சியோ, அவன் தாய்தந்தையரோ இவ்வாறு சிந்திப்பதில்லை. எல்லவற்றையும் விதி என்று ஏற்றுக்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் சடங்குகள் மிக முக்கியமானவை. அவற்றின் அர்த்தங்கள் முக்கியமானவை அல்ல. உண்ணாமலை ஆசசிக்கு ஆசாரங்களில் இம்மியளவுகூடப் பிசகுவதில் இஷ்டம் கிடையாது. பணத்துட்டுன்னு சொல்லி காலங்காலமாக அனுஷ்டித்துவரும் பழக்க வழக்கங்களை பலிகொடுப்பது ஆச்சிக்குச் சம்மதமில்லை.

உண்ணாமலை ஆச்சியின் அண்ணன் கூனங்காணிப் பாட்டாவும் பழைய கட்டுப்பாடுகளுக்கு முற்றிலும் ஆட்பட்ட சமூகப் பிரதிநிதிதான். “வீடே தீப்பிடிச்சு எரிஞ்சாலும் அங்கே கிடந்து நீறிச் சாம்பலாவாளே தவிர, தாலியறுத்த செட்டிச்சி ஸாப்பை விட்டு வெளியில் வரமாட்டாள். வரக்கூடாது.”

அவரது குடும்பம் சிதறி, யாவரும் அவரைக் கைவிட்டபோதும், விதிக்கொள்கையை நியாய்ப்படுத்துகிறார். “நாம சின்னப்புள்ளையா இருக்கப்பட்ட சமயம் அனுபவிசசுத் தீத்த பாசத்தைத்தான் நம்ப புள்ளைகளுக்கு நாம் திருப்பிக் கொடுத்தோம்…..அதோட கணக்கு தீந்தாசசு.”
இவ்வாறு இறுகிப்போன சமுதாயத்தில் போராடும் புதிய மனிதன் திரவி. தன் அக்கா குற்றவாளி அல்ல என்று ஊருக்கு ருஜுப்படுத்திவிட வேண்டும் என்ற வைராக்கியத்தின் தீப்பிழம்புகள் திரவியின் மனத்தினுள் கிளர்ந்தெழுந்து அவனைச் சுட்டெரித்துக்கொண்டே இருந்தன.

சாலத்தின் சடங்கும், திருமணமும், உண்ணாம¬ல் அக்காவின் பிள்ளை பிறப்பு, காது குத்தல் சடங்குகளும் மாமூல சம்பிரதாயச் சடங்குகளில் அவனை வெறுப்புக்கொள்ள வைக்கின்றன. அறிவியல் பூர்வமான சிந்தனை இருப்பதால் தான் நாகுவை மருத்துவச் சோதனை செய்து, சமூகத்திற்கு அவள் குறையற்றவள் என்று நிரூபிக்கிறான். ஆனாலும் செவந்தப்பெருமாள், தன் தோல்வியை-யதார்த்தத்தைச் சந்திக்கத் தயாராக இல்லை. யதார்த்தத்தைச் சந்திக்க இயலாத சமுதாயம், தன் தோல்வியைத் தந்திரங்களில் மறைக்கிறது. எனவே செவந்தப் பெருமாளால், நாகுவை மறுமணம் செய்ய இருந்த குற்றாலத்தின் மரணம் நேர்கிறது. செவந்தப் பெருமாள் இந்தப் போலித்தனமான சமூகத்தின்-அதன் முரண்பாடுகள், வெற்று மதிப்பீடுகள், கள்ளத்தனங்கள், சூழ்ச்சிகள், குரூரங்கள் ஆகியவற்றின் குறியீடு. குத்தாலம், பழங்காலப் பாங்கான பலன் பாரா அன்பு, தைரியம் இவற்றின் குறியீடு. தைரியமும் அன்பும் பலியிடப்படுகின்றன; நல்லவர்கள் இச் சமூகத்தைவிட்டு விரட்டப்படுகிறார்கள். ஆனால் தீயவருக்கும் வாழ்வில்லை. பைத்தியக்காரனாக வேடந்தரித்த-அல்லது ஆகிவிட்ட-செவ்ந்தப்பெருமாளும் போலீஸ் ஜீப்பில் கொண்டு செல்லப்படுகிறான். இது எவரது வெற்றி? தேங்கிக் குட்டையாகக் கிடக்கும் தனது சமூகத்தைவிட்டு திரவி தற்காலிகமாக வெளியேறினான் என்றால், இது நன்மையின் வெற்றிதான். ஆனால் சமூகத்தில் நன்மைதான் வெற்றியடைகிறதா? வரலாறு இதனை நிரூபிக்குமா? செவந்தப் பெருமாள் போன்ற காரணமற்றுத் தீங்கு செய்யும் மனிதர்கள் ஏன் இருக்கிறார்கள்? வெறும் குடும்பச்சிதைவு என்பதன்றி, இத்தகைய ஆழமான கேள்விகள் இந் நாவலில் கேட்கப்படுகின்றன.

அபிதா
தலைமுறைகளின் தூலமான புறவுலகுக்கு மாறாக, அகவுலகைச் சித்திரிக்கும் லா.ச.ரா.வின் அபிதா நாவலிலும் தனிமனித, சமூக மோதலைக் காணலாம். அடிமன ஆழத்தின் பிம்பங்கள் உணர்ச்சிச் சுழிப்புகளாக அவரது எழுத்தில் வெளிப்படுகின்றன. லா.ச.ரா.வில் தூல உலகின் சித்திரிப்புக் குறைவு. எனினும் அபிதாவில் தேவையான அளவுக்கு நன்றாகவே வந்திருக்கிறது. அம்பி, பணத்துக்காகத் தான் மணந்த சாவித்திரியுடன் ஓயாது நிழற்போரிடுவதாக நினைக்கிறான். சலிப்பை மறுக்கப் பூர்வீகம் திரும்ப, அங்குக் காதலி சக்கு வடிவில், அவள் அபிதா. மனித சாத்தியங்கள் பற்றிய ஆழமான எண்ணம் எழவைக்கிறார் லா.ச.ரா. நமது பாரம்பரிய மதிப்புகளின்படி, அம்பி-அபிதா உறவு நிகழ இயலாதது. எனவே மனமுறிவும் இரண்டுபட்ட ஆளுமையும், அம்பிக்கு இயல்பாகின்றன. கன்னிக்குளம் காட்சி, அம்பியின் ஆசைக்குக் கற்பனை வடிகால் தருகிறது. காதல் சாத்தியமற்ற சமூகத்தில், கற்பனை வடிகால்கள்தான் மிகவும் தேவைப்படுகின்றன. நமது திரைப்படங்களின் கனவுமயமாக்கல், இந்த விஷயத்தையே நம்பியுள்ளது. நமது பண்பாடு நிழல்போல் நம்மைக் கவிந்துள்ளது என்று கரடிமலையைக் குறியீடாக வைத்துச் சொல்கிறார் லா.ச.ரா. கரடிமலை, ஆன்மிகத்தின், பழம்பண்பாட்டின் குறியீடு. ஆனால் அங்குதான் சக்கு உயிர்விட்டாள். அபிதாவும் அதன் படிகளில்தான் இறக்கிறாள். அவள் மூத்த அம்பிக்கு மட்டுமல்ல, இளைய அம்பிப்பயலுக்கும் கிட்டாது போகிறாள். அம்பிப்பயலின் வாகனம்-மோட்டார் சைக்கில்-நவீன நாகரிகத்தின் குறியீடு. பற்றி எரிகிறது.

இக்கதையில் வரும் அம்பியும் அந்நியமானவன் அல்ல. கரடிமலை அவனுக்கு ஒரு நெருக்க உணர்வைத் தருகிறது. அம்பி-அபிதா உறவுக்குப் புறச்சமூகம் தடையாக உணரப்படவில்லை. ஆனால் சமூக மதிப்புகள் ஒழுக்கமாக, மனச்சாட்சியாக, சூபர் ஈகோவாக, ஆன்மிகமாக அடிமனத்தில் உறைந்துபோயிருக்கின்றன. அபிதாவைச் சக்குவின் வடிவில் கண்டதும், அவனது இட் உணர்வு தலைதூக்குகிறது. சூபர்ஈகோ வுக்கும் இட் உணர்வுக்கும் ஏற்படும் போராட்டமே அவனது ஸ்கிஸாய்டு நிலைக்குக் காரணம். எனினும், இறுதியில் ஒரு தூய்மையாதல் அவனிடம் நிகழ்கிறது. சப்ளிமேஷன் என்பதற்கும் மேலேபோய், ஒரு தெய்விகக் காட்சி, தாய்மைக் காட்சி அவனுககுச் சித்திக்கிறது.
“யாருக்குமே, ஏதோ ஒருசமயம், இதுபோல் தரிசனம் நேரத்தான் நேர்கிறது. மடிப்பு விரிந்தாற்போன்று இதயம் திடீரென்று அகன்று அதனுள் எரியும் விளக்கு தெரிகிறது.” என்று சிந்திக்கிறான். இதற்கு ஒருவகையில் அவனுககு அபிதாவின் வீட்டில், விருந்தோம்பல் பண்பாட்டின் ஒரு சடங்காக அளிக்கப்பட்ட எண்ணெய்க் குளியல் காரணமாகிறது.

எண்ணெய்க்குளியல் என்னும் சடங்கு-தூய்மையாதல்-தெய்விகக்காட்சி (ரிச்சுவல் சப்ளிமேஷன், விஷன்) என்று தொடர்புபடுத்திக் காணும்போது லா.ச.ரா.வின் பார்வை புலனாகிறது. “சம்பிரதாயமான சடங்குகளும் உதவலாம். ஆன்மிகத்தின் உறைவில்தான் மனிதனின் இருபபுக்கு அர்த்தம் காண முடியும்”. அம்பிக்கு வெளிப்படையான காதல் நிறைவைத் தராமல் கனவுநிறைவைத் தருதல், அவரது ஒழுக்கச் சார்பையும், உடன்பாட்டு மதிப்புகளை வலியுறுத் தலையும் காட்டுகிறது.

தலைமுறைகள், அபிதா போன்றவை, எழுபதுகளில் வந்த நாவல்களாயினும், உடன்பாடடு மதிப்புகளையே முன்வைக்கின்றன. இவ்விதத் தில் இவை அதற்கு முந்திய நாவல்களுடன் ஒத்துச் செல்கின்றன. பழைய நாவல்கள் உடன்பாட்டு மதிப்புகளை உண்டுபண்ணுவதைத் தமது பணியாகக் கொண்டவை. இதற்குத் தி. ஜானகிராமனின் நாவல்களும் விலக்கல்ல. அவரது அம்மா வந்தாள், மரப்பசு போன்றவை எதிர்மறை மதிப்புகளை முன்வைப்பவையாகச் சிலரால் விமர்சிக்கப்பட்டுள்ளன. நாவலி£சியரின் கோணத்தில் அவ்வாறு அல்ல. மரப்பசு நாவலில், அம்மணி ஒரு மரப்பசுவாகவே (போலியானவள், சமூகத்தில் பயனற்றவள்) இருக்கிறாள்.

எழுபதுகளில் தமிழ்நாவலில் முக்கியத் திசைதிருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வெளிவந்த நாவல்களில் சமூக மதிப்புகள், உடன்பாடானவை-எதிர்மறையானவை என்னும மதிப்பீடும், அவற்றில் நாவலாசிரியனின் கோணப்படி, உடன்பாடானவற்றை வலியுறுத்துதலும் இருந்தது. ஆனால், அணுயுக-விண்வெளி-கம்ப்யூட்டர் யுகத்தில், நகர்ப்புறம் நாகரிகமயம் ஆதலிலும், மேற்குமயமாதலிலும் சிக்கி, குடுமப உறவுகளிலிருந்து மனிதன் அந்நியப்பட்டு விடுகிறான். அவனுக்கு எவை உடன்பாடான மதிப்புகள்-எவை எதிர்மறை யானவை என்று தெளிவடைவதே இயலாததாகிவிடுகிறது. மதிப்புகள், பண்பாட்டின் அடிப்படை அம்சங்கள், பண்பாட்டிலிருந்து அந்நியப்பட்டுவிட்ட மனிதனுக்கு, மதிப்புகளும் இல்லை. இத்தகைய மனிதனை எழுபதுகளின் சில நாவல்கள் மிக உக்கிரமாகச் சித்திரித்துள்ளன. இவற்றில் வரும் மனிதனுக்கு மதிப்புகள் அவனது கலாச்சாரத்தினால் வருவதல்ல ஆகலின், அவனுக்கு ஓயாது கேள்விகள் தோன்றுகின்றன. இந்த நாவல்கள் இவனைப் பற்றிச் சித்திரிக்கும் போது இவன் பக்கம் சாயாமல், சார்பற்ற நிலைப்பாடு கொள்கின்றன. ஆதவன், ஜி. நாகராஜன், சா. கந்தசாமி போன்றோரின் சில நாவல்களை இத்தகைய சித்திரிப்பிற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

என்பெயர் ராமசேஷன்
ஆதவனின் இரு நாவல்கள், உளவியல் நாவல்கள் என்னும் தன்மைகள் கொண்டவை. அதவனின் பாத்திரங்கள் தங்கள் ஒவ்வொரு செயலையும் ஓயாது அலசி ஆராய்ந்து கொள்கிறார்கள். ஆனால் புறநிலை யதார்த்தங்களால் தாக்கப்பட்டு சிதறுகிறார்கள். ஆதவனின் இரண்டாவது நாவல், என்பெயர் ராமசேஷனில், இதுவரை தமிழ்நாவல்களில் தொடப்படாத அளவுக்கு, தன்னிலைச் சிக்கல் (ஐடெண்டிடி க்ரைசிஸ்) பிரச்சினை ஆராயப்படுகிறது. பொறியியல் படிக்கும் ராம சேஷனுக்குத் தனது சாராம்சம் தெரியவில்லை. தது தாய், தந்தை, அத்தை ஆகியோர் மீதுள்ள வெறுப்பின் காரணமாக, தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாக, தனது இயல்பான பிம்பத்தை அணிய மறுக்கிறான். வேறு பிம்பம்-தனக்குரியது எது என்று அவனால் நிச்சயிக்கமுடியாததால் தேடி அலைகிறான். தனக்குப் பரிச்சயமான பெண்களுடன் உடன்று தன் பிம்பத்தை நிச்சயிக்க முயலுவதில் அவனுக்குத் தோல்விதான் நேர்கிறது. அவர்களுடன் ஒத்துப்போய் அவர்கள் மனத்துக்குப் பிடித்தமான வேஷங்களையே இவன் அணிய நேர்கிறது. ஒருத்தி, அவனை அல்சேஷன் நாயாக உணரச் செய்கிறாள். இன்னொருத்தியின் நேசத்திற்காக ஓர் இண்டலெக்சுவல் பிம்பம் அணிந்தும், அவளது மெலிந்த உடலைப் பார்த்தவுடன் அவன் காதல் பறந்துவிடுகிறது. தன்னைவிட மூத்தபெண்மணியான பங்கஜம் மாமியுடனான உறவுதான் அவனுக்கு ஓரளவு நிறைவளிக்கிறது. இது ஈடிபஸ் சிக்கலின் வெளிப்பாடு. ஆயினும் அங்கும் அவனுக்கு உண்மையாக இருக்க முடியவில்லை. இதனாலெல்லாம் அவனுக்கு ஒரு காஸனோவா பிம்பம் ஏற்பட்டதுதான் மிச்சம். இறுதியில் அவன் ஏற்க மறுத்த பிம்பம் அவனுக்குத் தானாக வந்து பொருந்துகிறது. தன் தங்கையை அவள் காதலனுடன் ஒருநாள் சினிமாவில் கண்டதும், சநாதன மதிப்புகள் உள்ள குடும்பத் தலைவனாகத்தான் அவன் காட்சியளிக்கிறான்.

மனிதனின் இயல்பான ஆளுமை உள்ளிருந்து விகசிக்கும் ஒன்றே அன்றி, வெளிப்புறத் தோற்றங்களுக்கேற்ப வேஷம் போட்டுக் கொள்வதல்ல என்னும் தெளிவுதான் இந்த நாவலின் செய்தி.

காகித மலர்கள்
என்பெயர் ராமசேஷனைவிடக் கட்டமைப்பில் சிறந்த நாவல், காகித மலர்கள். தன்னிலைச் சிக்கல் இதிலும் விவாதிக்கப்படும் ஓர் அம்சம். வேஷமணிதல், அந்நியமாதல் போன்ற பிரச்சினைகளோடு, சமுதாயத்தின் இருமை நிலை மிக விரிவாக இதில் அலசப்படுகிறது. நிகழ்ச்சிகள் குறைவு. பாத்திரங்களின் மனஅலசல்கள் வாயிலாகவே நாவல் நடக்கிறது.
நகர்ப்புறச் சமுதாயம் முழுவதுமே இன்று போலியான வாழ்வுக்குப் பழகிவிட்டது. அதன் இலட்சியப் பண்பாட்டு அம்சங்களாக அது வெளிப்படுத்து வதற்கும் அது கடைப்பிடிப்பதற்கும் முற்றிலும் சம்பந்தமேயில்லை. மதுவிலக் குப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் மேலும் மேலும் கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும். கள்ளச்சாராயமும் அன்றாட வாழ்க்கை அம்சங்கள். தன்னிறைவான அன்பான குடும்பம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் விபசாரத் திற்கெனத் தனிப்பகுதிகளே உள்ளன. நேர்மை வியந்து பேசப்படுகிறது. ஆனால் ஊழலும் லஞ்சமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள். இவ்வித ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளிலிருந்து விலகிவாழ முயல்பவன்-லட்சிய விதிகளைக் கடைப்பிடிப்பவன்-பிழைக்கத் தெரியாதவனாகவும், ஒத்துப்போகாதவனாகவும், தோல்வியடைந்தவனாகவும் முத்திரை குத்தப்படுகிறான்.

காகித மலர்கள், இந்த வேஷப்பூச்சை தீவிரமாக விமரிசனம் செய்கிறது. டைம்ஸ் பத்திரிகை நரசிம்மனும் விடுதலை பெற்ற பெண்மணியாகத் தன்னை அடையாளம் காணும் பாக்கியம் பசுபதியும் இளைஞர் சமூகத்தைத் திறனாய்கிறார்கள். “படிப்புக்கு மதிப்பில்லாத ஒரு சூழ்நிலையில், சாதாரணப் பொதுஅறிவுகூட இல்லாதவர்கள் பெரும் பதவிகளில் அமர்ந்திருக்கும் ஓர் அமைப்பில் இக்குழந்தைகள் வளருகின்றன. வீட்டில் பணம் மறுக்கப்பட்டால், கொள்ளையடிக்கப் போகவும் தயங் காத மனநிலை அவர்களிடம் வளர்ந்து வருகிறது.” என்கிறார் நரசிம்மன். தொடர்ந்து சொல்கிறார். “சமூகத்தில் கண்கூடாக மதிப்பும் கௌரவமும் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கும் நியதிகள், வாழ்க்கை சித்தாந்தங்கள் ஆகியவற்றிலிருந்து மாறுபட்ட நியதிகளையும் சித்தாந்தங்களையும் நாம் நம்முடைய குழந்தைகள்மேல் மட்டும் திணிக்க முடியுமா? அதை அவர்கள் ஏற்பார்களா?”
இக்கால இளைஞர் சமுதாயம் இருளடைந்திருப்பதைப் பற்றி இருவருமே கவலைப் படுகிறார்கள். இந்த நிலையில் சோகத்தினால் பாதிக்கப் பட்டவர்களாய், அவர்கள் அப்போது ‘இன்னும் சில பெக்குகள் விஸ்கி யருந்தினார்கள்.’

மூத்த தலைமுறையினரின் அக்கறை போலியானது, பொறுப்பற்றது என்று தனது கேலியான தோரணை மூலம் உணர்த்துவதோடன்றி, இவர்கள் வாய்கிழியப் பேசும் இலட்சியங்களை இவர்களே கடைப்பிடிக்கத் தயாராக இல்லை என்ற முரண்நிலையைக் காட்டுகிறார். சமூகத்தின் இருமை நிலையை ஆதவன் சாடுவதற்கு இது ஒரு சான்று.

செல்லப்பா என்ற இளைஞனின் தன்னிலைச் சிக்கல், இக்கதையின் முதற்பகுதியில் பிரதானமாகிறது. ஆனால் அவன் ‘ஞானம்’ பெற்றுவிடுகிறான். ஒரு அணில், சுதந்திரத்தின் குறியீடாக வருகிறது. “ஏராளமான அறிவுமூட்டையை ஒரு தோளிலும், இன்னொரு தோளில் சட்ட திட்டங்களையும் சடங்குகளையும் சுமந்துகொண்டு எதிலும் நிச்சயமோ ஆறுதலோ இல்லாமல் சங்கடப்படும் மனிதனைவிட மூன்று நான்கு விஷயங்களை மட்டும் தெரிந்துகொண்டு அவற்றில் தெளிவுடனும் நிச்சயத்துடனும் இருக்கும் அணில்கள் எவ்வளவோ மேல னவை. எவ்வளவு குழப்பமில்லாத சுலபமான வாழ்க்கை அவற்றி னுடையது?”

இவனைப் போன்று தன்னிலைச் சிக்கலால் பாதிக்கப்படாமல், சர்வநிச்சயத்துடன் செயலில் இறங்கும் இவனது தம்பி பத்ரி, ஒரு கிரிமின லாகிறான். இவனைப் போன்றே தன்னிலைச் சிக்கலால் பாதிக்கப்பட்ட விசுவம்-இவனது விஞ்ஞானி அண்ணன்-தனது மனைவியின் பிரசவ சந்தர்ப்பத்தில் ‘ஞானம்’ பெறுகிறான்.

இந்த நாவல் முழுதும் தன்முனைப்புப் போராட்டங்கள், அதற்கான திட்டமிடல்கள், வேஷங்கள், தாய் தந்தை போன்றவரிடமும் நெருக்கமாக, இயல்பாக இருக்கமுடியாத நிலை. ஒவ்வொருவருக்கும் ஏற்ப வேஷம் அணிய வேண்டிய நிலை. இருபத்திநாலு மணிநேரமும் வேஷம் அணிந்தணிந்து சிலருக்குச் சுயம் என்பதே இல்லாமலும் ஆகிவிடுகிறது. இன்றைய சமூகத்தில் நன்கு பிழைக்கத் தெரிந்தவர்களாக, வெற்றி பெற்றவர்களாக அத்தகையோர்தான் பாராட்டுப் பெறுகிறார்கள்.

இந்த நாவலில் வரும் அத்தனைபேரும் அந்நியப்பட்டவர்கள். இந்த அந்நியமாதல்தான் தன்னிலைச் சிக்கலுக்கு ஊற்றுக்கண். முக்கியமாக இவர்கள் கலாச்சார ரீதியாக அந்நியப்பட்டவர்கள். மேற்கத்திய மதிப்புகளை மேற்பூச்சாகக் கொண்டு வாழும் பாக்கியம், ஓரிரவை ஒரு அமைச்சனுடன் கழிக்கவேண்டி வந்தபோது தனது ஆழ்மனத்தில் தான் மரபு மதிப்புகளுக்கே ஆட்பட்டிருப்பதை உணர்ந்துகொள்கிறாள். அவளுடைய மனப்போராட்டத்தில் அவள் வாழ்வு முடிகிறது.
பிழைப்புக்காக, சுயதிருபதிக்காக, என்று எல்லாவற்றிற்கும் வேஷ மணிந்து தீரவேண்டிய இந்த உலகில் நிஜமான மனிதப்பண்புகளே அற்றுப் போகின்றன; இதுவே மேற்கத்திய நாகரிகம் நமக்கு அளித்த கொடை என்று ஆதவன் முடிவு கூறுவதுபோல் தோன்றுகிறது. ஆதவனின் நகர்ப்புற நாவல்களுக்கு மாறாக, வண்ணநிலவனின் நாவல்கள் இயங்குகின்றன.

ரெயினீஸ் ஐயர் தெரு
வண்ணநிலவன் கிராமப்புற மக்களை அன்புருவான தோற்றத்தில் படைககிறார். அவர்கள் இயற்கையோடு இசைந்திருப்பவர்கள்; வேஷமற்ற வர்கள்; ஞாபகங்களில் வாழ்பவர்கள்; சின்னச் சின்ன விஷயங்களில் ஆனந்தமடைபவர்கள். ஆனால் அங்கும் அடக்குமுறை, தண்டனை, தடைகள். அவரவர் தனித்தனி உலகில் வாழ்கிறார்கள். சந்தோஷம் தொலைந்துபோய் விட்டது. வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெருவில் வரும் பிலோ மிக்கு ”மலைமீது சாயங்காலப் பொழுதில் தன்னந்தனியாக ஏறிப்போகிற அந்தகாரம் மனசில் இருந்தது.” ஒரு மலையளவு சுதந்திரம் தனக்கு வேண்டும் என்று அவள் நினைக்கிறாள்.

நாளை மற்றுமொரு நாளே
ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே இன்றை நகர்ப்புறக் குப்பங்களில் வசிக்கும் மனித வாழ்வை வெளிப்படுத்துகிறது. ஒருவிதத்தில் இந்த நாவலின் முக்கியப் பாத்திரமான கந்தன், தமிழகத்தின் சமூக மனிதன். தமிழகத்தில் மட்டுமல்ல, ‘மூன்றாம் உலக நாடுகளின் மாதிரி மனிதன் இவன்’ என்கிறார் கவுதமன். ஜி. நாகராஜன் இவனுக்கென்று எந்த மதிப்புகளையும் தருவதில்லை. ஏனெனில் இவனுக்கு நேற்றும இல்லை, அதனால் கலாச்சாரம் பண்பாடு அவற்றின் மதிப்புகள் எவையும் இல்லை,

நேற்று இல்லாததால் நாளையும் இவனுக்கு இல்லை. இவனுக்கு இன்று மட்டும்தான் உண்டு. நாளை இன்றுபோல மற்றுமொரு நாள். அவ்வளவு தான். நேற்று இல்லாத இவன், தமிழகத்தில் கலாச்சார ரீதியாக அந்நியப்பட்ட மனிதர்களில் ஒருவன். கீழ்நிலைப் பிரஜை. கல்வியறிவு கிடையாது. சிந்தனை, அப்போதைய நடை முறைக்கேற்றது. சுதந்திரம், லட்சியம், முன்னேற்றம் என்று உயரத்திலிருப்பவர்கள் கூறும் சொற்கள் யாவும் இவனுக்குப் பொருளற்றவை. பெண்களை சப்ளை செய்வது, அடாவடித்தனம், இவனது பிழைப்பு.

இந்த நாவலின் நிகழ்ச்சிகள், கந்தனின் ஒரு நாளைய நிகழ்ச்சிகள். இந்த நாவல், ஒரு கனவின் விழிப்பில் தொடங்கி மற்றொரு கனவின் விழிப்பில் முடிகிறது. எழுந்ததும் முதலில் செய்யும் காரியம் குடி. குடிக்காகவே தன் மனைவியிடம் பொய்சொல்கிறான். வள்ளி லாட்ஜில், பெண் தேடிய நபரை ஏமாற்றிப் பணம் பறிக்கிறான். “எதிராளி ஆயுதம் வச்சில்லாட்டியும், முடிஞ்சா அவன் அசந்திருக்கப்பப் பின்னுக்கிருந்துதான் தாக்கணும்.” என்று தன் தோழனுக்கு உபதேசிக்கிறான். அவன் அப்படித்தான் இருக்கமுடியும், ஆயினும் தமிழ்வீரத்தின், தமிழ்ப்பண்பாட்டின், புறநானூற்றின் பிள்ளைதான் இவன். அவன் கண்ட உலகம் பின்னுக்கிருந்து தாக்கும் உலகம் மட்டுமே.
இதுதான் தமிழ் லட்சியப் பண்பாட்டிற்கும் யதார்த்தப் பண்பாட்டிற்கும் உள்ள முரண். இந்த முரண் தான் கந்தன் போன்றோரை விளைவித்துள்ளது. எனினும் மனிதாபிமானத்தின் வேர் இவனிடம் அற்றுப்போகவில்லை. மீனா விடம் அவனுக்கிருந்த அன்பே அவளுக்கு ஒரு மறுவாழ்வைத் தேடவைக்கிறது. பக்கத்து வீட்டு ஜீவாவுக்கு, சாராயக் கடைக்காரனுக்கு, தன் நண்பனுக்கு உதவி செய்கிறான். இறுதியில் மனிதாபிமானம் காரணமாகவே அவன் செய்யாத குற்றத்திற்காகச் சிறைப்படவும் நேர்கிறது. கந்தன் செயலில் இன்பம் காண்பவன். அன்பு, மனிதாபிமானம் காரணமாக அவன் அந்நியப்பட்டவன் போல் மேற் பார்வைக்குத் தெரிவதில்லை. அவனது அந்நியப்பட்ட நிலை அவன் பலமுறை ஒரு நாளில் நாடிச் செல்லும் சாராயக்குடிச் செயலால் உணர்த்தப்படுகிறது.

கந்தன் அந்நியமானவன், ஆனால் அதை உணராதவன். ஆதவனின் பாத்திரங்கள் அந்நியமான உணர்வை முற்றிலுமாகப் பெற்றவர்கள். அவர்களது படிப்பு அவ்வுணர்வு பற்றிய சிந்தனையை அவர்களுக்கு அளித்துள்ளது. மக்கள் கும்பலில் ஒருவனான, மேட்டுக்குடி மக்களாலும் படித்தவர்களாலும் எள்ளப் படுபவனான கந்தனுக்கும் மனமுறிவுகள் ஏமாற்றங்கள் ஏக்கங்கள் உண்டு. அவனது மனமுறிவுகளும், ஏக்கங்களும் அவனது கனவுகளில் வெளிப்படுகின்றன. அவனது ஓடிப்போன மகன் சந்திரனைக் கனவில் காண் கிறான்; முதல் கனவு அவனது தாய்மை ஏக்கத்தையும், இறுதிக்கனவு குழந்தை ஏக்கத்தையும் குறிப்பாக உணர்த்துகின்றன. கீழ்நிலை உலக மக்களில் ஒருவனாயினும், அவன் தன்மீது சுமத்தப்படும் எதையும் கேள்வியின்றி ஏற்பவனல்ல. தனது தேர்வுகளுக்குப் பொறுப்பேற்கும் ஓர் எக்சிஸ்டென்ஷியல் மனிதன் கந்தன். அதனால்தான் அவனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அவனுடைய எண்ணவோட்டம் இவ்வாறு செல்கிறது. “எல்லாரும் அவனைவிட்டு எங்கோ சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் எங்குச் செல்லவேண்டும் எப்படிச் செல்லவேண்டும் என்பது தெரிந்திருந்தது. அவனுக்கு மட்டும் தெரியவில்லை…….அவனுக்கும் அவளுக்கும் இருந்ததெல்லாம் இன்று மட்டும்தான். நாளைகூடப் பிடிபடவில்லை.”

இந்த நாவலில் கந்தனின் பின்னோக்கில் எத்தனையோ மனிதர்கள். இவர்களின் சின்னச்சின்ன உள்ளச் சித்திரிப்புகளில் நாகராஜன் காட்டும் வெளிச்சம் மிகுதி. கந்தனிடம் சிணுங்கிக்கொண்டே வரும் ராக்காயி, அவளை மோகனா என்று பெயரிட்டுக் கூப்பிடச் சொல்கிறாள். ராக்காயி என்னும் பெயர் அவள் தொழில் தேவைகளுக்கு உதவாது. அப்பெயரின் தொனிகள் அவளைத் தேடிவருவோரை விரட்டவும்கூடும். மோகனா என்னும் பெயர் இதற்கு எதிர்மறைப் பயனை அளிக்க வல்லது.

பணம் என்பதே ஒரு மானங்கெட்ட விஷயம் என்று அவனுககு போதிக்கும் தரகு அந்தோணி சொல்கிறார்: “(ஆதாம் ஏவாள் கதையில்) தோல்வி யாருக்கு? கடவுளுக்கா? சாத்தானுக்கா? கடவுளுக்குத்தான். இது எங்க மதத்தில் ஒரு முக்கியமான பாடம்னு நெனைக்கிறேன்.”

அதனால்தான் பங்களா, காரோடு பிரபலமான பணக்காரராக வாழ்க்கை நடத்த அவரால் முடிகிறது. ஆனால், இன்றைய திரைப்படங்களைப் பார்த்து விட்டு, அதே போலக் கனவுமயக் காதலில் ஈடுபடும் பரமேஸ்வரன் என்னும் நாவித இளைஞனோ, குரூரமாகப் போலீசாலும், பணபலத்தாலும் தாக்கப்பட்டு, “வயிற்றுவலி தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாக” அறிவிக்கப்படுகிறான். இந்த உலகம், தரகு அந்தோணிகள், சோலைப் பிள்ளைகள் போன்ற சேடிஸ்டுகளின் கையில்தான் உள்ளது. கந்தன் போன்ற நன்னம்பிக்கை உடையவர்களுக்கும் இவ்வுலகம் இல்லை, பரமேஸ்வரன் போன்ற கனவுக் காரர்களுக்கும் கிடையாது. இந்த இருத்தலியல் முரண் தான் இந்த நாவலின் பிரதானக் கேள்வி. இந்தச் சமுதாயம் முழுவதும் நிறைந்திருக்கும் வணிகச் செயல்பாடுகள், இளைஞர்களைத் தந்திரமாக வலைவிரித்துச சிக்கவைத்துப் பிடித்து நசுக்குவ¬த் நுணுக்கமாக எடுத்துக்காட்டுகிறது இந்த நாவல்.

சா. கந்தசாமியின் மூன்று நாவல்கள்
சா. கந்தசாமியின் சமீபத்திய நாவல்களின் பாத்திரங்களும் கந்தனைப் போன்றவர்களே. ‘அவன் ஆனது’, ‘தொலைந்து போனவர்கள்’, ‘சூரிய வம்சம்’ ஆகியவற்றில் இந்தக் கலாச்சாரத்தினின்றும் தொலைந்து போனவர்களைக் கந்தசாமி நன்கு சித்திரிக்கிறார். இந்த நாவல்களில் வரும் பாத்திரங்களும், எந்தவித மதிப்புகளும் அற்றவர்கள். அதனால் நாளை அற்றவர்கள். இவர்க ளுடைய பால்ய உலகம், கிராமப் புறங்களில் இருந்தது. அப்போது இவர்களுக்கு மதிப்புகளும் இருந்தன; வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமும் இருந்தது. இபோது அந்தப் பழைய வாழ்க்கையும் பால்யமும் தொலைந்துபோய்விட்டன. இவர்களுக்கு மனைவிகளும் தொலைந்து போகிறார்கள். உறவுகளும் அற்றுப் போகின்றன.

ஜி. நாகராஜனின் நடையாவது உணர்ச்சியுள்ள, தொனியுள்ள நடை. எனவே சில சமூக விமரிசனங்களை முன்வைக்கிறது. சா. கந்தசாமி இந்த நாவல்களில் கையாள்வது தொனியற்ற வெறும் விவரணை நடை. சா. கந்தசாமியின் பாத்திரங்களும் இளமையில் அனுபவித்த சில தாக்குதல்களே அவர்கள் இப்படித் தொலைந்துபோவதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. ஆக இங்கும் அடக்குமுறை, சேடிஸம். இவர்களுடைய நிகழ்காலம் வெறுமையாக இருக்கிறது. சா. கந்தசாமியின் நாவல்களும் அடிப்படையான இருத்தல் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. தாமோதரன் போன்றோரை, க்ந்தன் போன்றோரை, இந்த உலகம் ஏன் உருவாக்குகிறது அல்லது உற்பத்தி செய்கிறது?

வெவ்வேறு சூழல்கள், வெவ்வேறு உலகங்கள், வெவ்வேறு மனிதர்க ளைப் பற்றிச் சித்திரித்தாலும், ஆதவன், ஜி. நாகராஜன், வண்ணநிலவன், சா. கந்தசாமி போன்றோர் எழுப்பும் கேள்விகள் ஒரே தன்மையானவைதான். என் மனித வாழ்க்கை இவ்வளவு அன்பற்று, அர்த்தமற்றுப் போய்விட்டது? வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே இல்லையா? வெறும் ஒத்துப்போதல்கள், போலித்தனங்கள், வணிகச் சிரிப்புகள், நாகரிக அடக்குமுறைகள், ஒடுக்குதல்கள்தான் வாழ்க்கையா?

இந்தக் கேள்விகளை ஆழமாக எழுப்பி, இவற்றிற்கு நம்மையே விடைதேட விட்டுவிடுவதுதான் இந்த நவீன நாவலாசிரியர்களின் பணி. முன்பில்லாத வகையில் அந்நியமாதல் என்பது இவர்களால் பொருளாக ஆளப்படுகிறது. 1965க்கு முன்வரைந்த நாவலாசிரியர்கள் போல இவர்கள் காவிய அமைதியோடு நாவலைப் படைப்பதில்லை. அதாவது வாழ்க்கையின் ஓரத்தில் நின்று பார்க்கச் சொல்லிக் கைப்பிடிகள் தருவதில்லை. மாறாக அதிலேயே பிடித்துத் தள்ளிவிட்டு, தத்தளிக்க வைத்து, இடர்ப்படுத்தி விடுகிறார்கள். லா.ச. ராமமிருதம், தி. ஜானகிராமன் மாதிரி உடன்பாட்டு மதிப்புகளை இவர்கள் முன்வைப்பதும் இல்லை. இன்று மதிப்புகள் முற்றிலுமாக மாறிக்கொண்டிருக்கும் நேரம். ஆகவே இவர்கள் பழைய மதிப்புகளை நியாயப் படுத்துவதில்லை. நியாயம் கற்பித்தல், தப்பித்தலின் வெளிப்பாடு. சிந்திக்கும் தொல்லையைத் தந்து வாசகனை உலுக்கி, ஓர் ஆளுமை மாற்றத்தினை ஏற்படுத்தி, புதிய பண்பாட்டின் அடித்தளங்களைத் தேடமுயல்கிறார்கள் இவர்கள். மாற்றம் என்பது காப்பியடிப்பதல்ல. உள்ளத்தின் ஆழததில் இருந்து வெளிப்பட வேண்டும்.

மேற்கூறிய நாவலாசிரியர்களின் உளவியல் சித்திரிப்பு சரியாக அமைந்த போதிலும், சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையோ கலாச்சாரத்தின் சிறுசிறு தோற்றங்களையோதான் இவர்கள் பார்வைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தின முழுக் கலாச்சாரத்தையும் ஒருநோக்கில் வைத்துச சித்திரிக்கும் நாவல் இதுவரை எழவில்லை. தமிழகத்தின் சமூகப்பண்பு முற்றிலுமாக, முழுதுமாக இன்னும் நாவல்களில் வெளிப் படவில்லை. அதனால்தான் இன்னும் உலகத்தரத்தில் சிறந்த நாவல் என்று இன்னும் தமிழில் உருவாகவில்லை.

முடிவுரை
ஒரு சமூகத்தின் பொதுவான நம்பிக்கைகளில், சடங்குகளில், கற்பனைகளில் இலக்கியங்களும் கலைகளும் தோற்றம் பெறுகின்றன. அவை அச்சமுகம் உருவாக்கிய லோகாயத-ஆன்மிக மதிப்புகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளன. இவை அனைத்தையும் பண்பாடு என்னும் சொல் குறிக்கிறது.

மனிதன் சிறுகுழுக்களாகவே வாழஇயலுமாதலின் ஒரே கலாச்சாரத்தில் பல்வேறு சிறு பண்பாட்டுக் குழுக்கள் (சப்-கல்ச்சர்ஸ்) இயங்குகின்றன. இவற் றிற்குள் ஏற்படும் மோதல்களைப் பண்பாட்டுச் சிக்கல்கள் எனலாம். அல்லது தனிமனித அளவில், ஒரு தனிமனிதனுக்கும், அச்சமூகத்தின் மதிப்புகளுக்கும் பொருந்தாமற் போய் பண்பாட்டுச் சிக்கல் ஏற்படலாம். இவையிரண்டையும் எளிமைப்படுத்தி, ஒருவகையில், பண்பாட்டுச் சிக்கல்கள் என்பன ஒரு கலாச்சாரத்தினுள், யதார்த்தத்தின் பண்பாட்டிற்கும் இலட்சியத்தின் பண்பாட் டிற்கும் ஏற்படும் மோதல்கள் என்று குறிக்கலாம் என மலினோஸ்கி சொல்கிறார். இதற்கு டோப்ரியன் தீவினர் பண்பாட்டிலிருந்து எடுத்துக்காட்டும் தருகிறார். ஒரு சமூகம், தனது சமய நூல்களில் கொண்டுள்ள மதிப்புகள், தான் மதிப்பதாகக் காட்டிக்கொள்ளும் மதிப்புகள் ஆகியவற்றின் தொகுப்பினை இலட்சியப் பண்பாடு எனலாம். அது நடை முறையில் பின்பற்றும் மதிப்புகளை யதார்த்தப் பண்பாடு எனலாம். இவ்விரண்டிற்கும் எப்போதும் மோதல் நிகழ்ந்தவாறே உள்ளது.

கடந்த சில நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பல்வேறு சமூக பொருளாதார மாற்றங்கள், பழையகால முதல் தொடர்ந்துவந்து, சிறுசிறு மாற்றங்களுக்கு மட்டுமே உட்பட்டு வந்த பழைய பண்பாட்டுக் குழுக்களின் தனித்தன்மைகளை அழித்துவிட்டன. புதிய பண்£ட்டுக்குழுக்கள் பல தோன்றி வளர்ந்துள்ளன. இவை வணிக மதிப்பீடுகளால் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படைத்தன்மை மனிதனின் அன்பை வளர்ப்பதாக இல்லை. ஆனால், வளராமற்போன மனித அன்பு என்ற கரு, கலைகள் வளர்வதற்கு இன்று அடிநிலமாக உள்ளது. ஒவ்வொரு சிறந்த கலைஞனும், வாழ்வைப் பற்றிய ஆழமான அர்த்தங்கள், அடி வேர்கள் ஆகியவற்றில் பிடிப்பு வைத்திருப்பதால், பெருகிவரும் தனித்தன்மை யற்ற, பொத்தாம்பொதுவான, மானிட இயல்புகளை அழிக்கின்ற, மந்தைத் தனத் தை வளர்க்கின்ற வணிக ரீதியான கலாச்சாரத்தினால் தவிர்க்கவியலாமல் தனிமைக்குள்ளாகிறான். அன்பு அற்றுப்போன உலகின் பொருளியல் மதிப்பீடுகள் அவனை உறுத்துகின்றன, தொல்லை செய்கின்றன, திணறவைக்கின்றன.

மானிட உறவுகள் சிறுசிறு பொருளாதார நிர்ப்பந்தங்களுக்கும் அற்றுப் போவதால் கலைஞன் தாக்குண்டு சித்திரவதைக்குள்ளாகிறான். தன்னைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில், இதுபற்றித் தன் கருத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தனது அனுபவங்களினின்றும் பிறந்த முரண் நிலைகளை வெளிப்படுத்துகிறான். இதுதான் இன்றைய கலைப்படைப்பு. நாவல் என்ற கலைச்சாதனம் தனிமனிதனுக்கும் அவனது சமூகத்திற்கும் உள்ள முரண் பாட்டில் பிறந்தது என்று குறிப்பிடுவதன் அர்த்தம் இதுதான். இதனை வேறுவகையில், மனிதனின் முழுமையைத் தேடும் உந்துதலுக்கும், அவனது அந்நியப்பட்ட நிலைக்குமான முரண்பாட்டில் நாவல் பிறக்கிறது என்று ஜார்ஜ் லு£காச் குறிப்பிடுகின்றார்.

நாவலாசிரியன், தனது பாத்திரப் படைப்புகளின் உளவியல் சித்திரிப்புகள் வழியாகவே பண்பாட்டுச் சிக்கல்களை வெளிப்படுத்துகிறான். ஒரு நாவலாசிரியன் எத்தகைய பாத்திரங்களை உருவாக்கியிருக்கிறான் என்பது முக்கியமல்ல. எந்த வாழ்க்கை வட்டத்தைச் சித்திரிக்கிறான் என்பதும் முக்கிய மல்ல. பிரச்சினையின் தீவிரத்துக்கேற்ப எவ்வளவு ஆழமாகச் சென்று அதனைச் சித்திரிக்கிறான் என்பதுதான் முக்கியம். ஒரு கலாச்சாரத்தின் இலட்சியப் பண்பாடு, அதன் போதனைகள், நூல்கள், சமயப்பிரச்சாரங்கள், சடங்குகள் வழி மனிதனின் நனவிலி மனத்தில் (Unconscious) புதைந்து கிடக்கின்றன. அதேசமயம், அதன் நடைமுறைகள், அது தரும் மரியாதைகள் கவுரவங்கள் முதலியன அவனைது பிரக்ஞையில் (Conscious mind) சதாகாலம் இருக்கின்றன. இதனால் ஒருவன் நனவு மனத்திற்கும் நனவிலிக்கும் உள்ள போராட்டமாகவும் பண்பாட்டுச் சிக்கல்கள் வெளிப்படுகின்றன. உளவியல் நாவலாசிரியர்கள் இதனை நன்கு பயன்படுத்துகின்றனர். ஆகவே உளவியல் சித்திரிப்பு என்பது வெறும் உத்தியல்ல. நாவலின் நோக்கமும் அதுதான், நாவலே அதுதான்.


பின்நவீனத்துவக் கோட்பாடுகள்

பின்நவீனத்துவக் கோட்பாடுகள்

புதிய தத்துவம் எல்லாவற்றையும் சந்தேகத்திற்கு ஆளாக்குகிறது….எல்லாம் சிதைந்து துண்டுதுண்டாகக் கிடக்கின்றன, எல்லாச் சீரமைவும் போய்விட்டது….எல்லாம் வாங்குதலும் அதன் உறவுகளும்…. (ஆங்கிலக் கவிஞர் ஜான் டன், உலகின் ஆண்டு விழா என்ற கவிதையில், 1611)

பின்நவீனத்துவக் கோட்பாடுகள் எனக் குறிக்கப்படுபவை எவை? சுருக்கமாகப் பிரெஞ்சு அறிஞர்களான லியோடார்ட், ழான் போத்ரி யார் ஆகியோருடைய பிரதிகளில் கூறப்பட்ட கருத்துகளோடு, ழாக் லக்கான், மிஷல் பூக்கோ, ரோலான் பார்த், டெரிடா போன்ற பின்னமைப்புவாதிகளுடைய பிரதிகளின் பல்வேறு வாசிப்புக் கருத்துகளும் இணைந்தவை அவை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். தங்களை இம்மாதிரி ஒரு லேபிலுக்குள்ளாக அடைப் பதை அவ்வறிஞர்கள் விரும்ப மாட்டார்கள். இருப்பினும் வேறு வழியில்லை.

பின்நவீனத்துவம் என்ற சொல்லை முதன்முதலில் கையாண்ட வர் அர்னால்ட் டாயின் பீ என்னும் வரலாற்றறிஞர். என்றாலும் 1979இல் லியோடார்டின் ‘பின்நவீனத்துவ நிலைமை’ (Postmodern Condition) என்னும் நூலில் அவர் வெளியிட்ட கருத்துகளோடு தான் இச்சொல் பற்றிய விவாதம் முனைப்பாகத் தொடங்கியது. பின் முதலாளித்துவ அல்லது மிக முற்றிய முதலாளித்துவ நாடுகளில் வசிப்போர், குறைந்தபட்சமாக 1960களின் மத்தியிலிருந்தேனும் பின்நவீனத்துவ வாழ்க்கைக்கு ஆட்பட்டுவிட்டார்கள் என்றார் அவர். முக்கியமாக அந்நூலில் அவர் அறிவியலின் தகுதி பற்றி இருந்த இரண்டு தொன்மங்களை உடைத்தார்.

அவர் உடைத்த தொன்மங்களில் ஒன்று, விடுதலை பற்றியது. இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஹாலோகாஸ்ட், சோவியத் குலாக்குகள், ஆஷ்விச், அணுகுண்டுகள் போடப்பட்டமை போன்ற எந்த அழிவு நிகழ்வோடும் அறிவியலும் அறிவியலாளருமே முதன்மையாகச் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது விடுதலை பற்றிய தொன்மத்தை உடைத்தது. (இப்போது நாம் இதனுடன், வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள்மீது அமெரிக்கா படையெடுத்த நிகழ்வுகளையும் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையையும் சேர்த்துக்கொள்ளலாம்.)

இன்னொன்று “அறிவியல் உண்மையைக் கூறுவது” என்னும் தொன்மம். ஃபெயரபெண்ட், தாமஸ் கூன் போன்ற அறிவியல் தத்துவவாதிகளாலேயே இந்த பிம்பம் உடைக்கப்பட்டது.
இம்மாதிரிக் கலாச்சார அமைப்பை மிகச் சரியாக விவரித்தவர் மார்க்சியத் திறனாய்வாளரான பிரடெரிக் ஜேம்சன். ஆழமற்ற மேம்போக்கான மேற்பரப்புகளை மட்டுமே பிடித்துக்கொண்டு அவற்றையே அலங்கரித்துக்கொண்டு வரலாற்றையும் காலத்தை யும் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் வாழும் ஒரு சமூகத்தின் நிலையைப் பின்நவீன நிலை என்றுதான் வருணிக்கமுடியும். ஆழமற்ற பிம்பங்களே ஆட்சிசெய்யும் கலாச்சாரம். அதனால் அங்கதக் குறிப்பு முரண்கள், ஒட்டுவேலைகள், மேம்போக்கான அழகுபடுத் ல்கள் மட்டுமே இசைந்த ஒரு கலாச்சாரம். பிளவுமன ஆளுமைகளால் மக்களை உருவமைக்கவே உருவாக்கப்படும் ஒரு கலாச்சாரம். இருந்தாலும் எல்லாவற்றையும ஏதோ விதத்தில் சரியாக்கிவிடலாம் என்னும் உடோபியத் தன்மையும் கொண்ட கலாச்சாரம். இதுதான் பின்நவீனத்துவக் கலாச்சாரம். இப்படிப்பட்ட கலாச்சாரத்தில் என்னவிதமான கலை வடிவங்கள் தோன்றும்? அவைதான் பின்நவீனத்துவக் கலைகள்.

எந்த வடிவத்தில் எப்படிச் சொல்லப்பட்டாலும் பின்நவீன நிலை என்பது நவீனத்துவ நிலைப்பாட்டின் ஒழுங்கமைவுகள் சிதைந்த நிலையைத்தான் காட்டுகிறது. பொதுமைப் பண்புகள் என எவை யும் கிடையாது. மனிதனைச் சிதைத்துவிட்ட பெருமுதலாளித்து வத்தில் மானிடத் தன்னிலை, சமூகம், அரசு, பயன்மதிப்பு, வர்க்கம், ஜாதி முதலிய எதற்குமே மரியாதை கிடையாது. யாவும் அழிந்துவிடுகின்றன. பாராலஜி (paralogy) எனப்படும் அளக்கமுடி யாதவற்றைப் பற்றிய புதிய கலாச்சாரம்தான் உண்டு. எனவே பின்நவீனத்துவம் என்பது வாழும் உலகங்களின் பன்முகப்பட்ட தன்மையைக் குறிக்கிறது. பௌமன் என்பாருடைய கருத்துப்படி பின்நவீனத்துவத்தின் முக்கியத் தன்மைகள், பலவேறுபட்ட தன்மை (வெரைட்டி), தற்செயல் எதிர்வுகள் (காண்டின்ஜன்சி), இருமனப்போக்கு (ஆம்பிவேலன்ஸ்) ஆகியவை. கலாச்சாரங்க ளின் பன்முகத் தன்மை, சமூக மரபுகளின் பன்முகத்தன்மை, கருத்தியல்களின் பன்முகத்தன்மை, வாழுலகுகளின் பன்முகத்தன் மை ஆகிய யாவுமே கடைசியாக மொழிவிளையாட்டுகளே. இப்படிப்பட்ட பின்நவீனத்துவ நிலை இந்தியாவில் நிலவுகின்றதா? நிலவவில்லை என்றால்
பின்நவீனத்துவப் படைப்புகள் எப்படி முகிழ்க்கமுடியும்?

ஒருவேளை பின்நவீனத்துவநிலை நம் நாட்டில் நிலவவில்லை என்று வைத்துக் கொண்டாலும், நமது நாட்டில் முதலாளித்துவம் சிதையவில்லை என்றாலும், பின்நவீனத்துவ நிலைக்கான குணாதிசயங்கள் பல வந்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக வர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் நிஜமற்ற யதார்த்தத்திற்கு மக்கள் நாற்பதாண்டுகளாகப் பழகிவிட்டார்கள். பிம்பங்களை வழிபட்டு, பிம்பங்களுக்காகத் தற்கொலை செய்து, பிம்பங்களுக்காகப் போராடி, பிம்பங்களுக்காகவே ஓட்டுப்போட்டு நிஜத்தில் எந்த மகிழ்ச்சியையும் காணாமல் அவற்றையும் கனவுகள் அல்லது பிம்பங்கள் வாயிலாகவே அடைந்து மறைந்துபோகும் நம்நாட்டு மக்கள், உலகின் பிற மக்களை விடப் பின்நவீனத்துவப் படைப்புகளுக்கு ஏற்ற களமாகத்தான் அமைந் திருக்கிறார்கள்.

பாகுல்ஸ்கி, எம். வாடர்ஸ், எல். குரூக் ஆகிய சமூகவிய லாளர்கள், சமூகச் சமமின்மைகள், பொருட்களின் உற்பத்தியை விட அவற்றின் நுகர்வினால் அதிகம் வடிவமைக்கப்படும் நிலை யில், வர்க்க/இன பேதங்கள் சமன்படுத்தப்பட்டு, அவை துணடு துண்டாக்கப் படுகின்றன என்று சொல்கிறாக்ள். எனவே பொருட் கள், தமது பயன்மதிப்பை இழந்துவிட்டன. அவற்றிற்கு அவற்றின் குறியியல் (பிம்ப அடையாள) மதிப்பு மட்டுமே இருக்கிறது. அதுவும் சமமற்ற ஒரு சமூகத்தை எப்படி உற்பத்தி செய்யலாம் என்ற அள விலேயே அவை இயங்குகின்றன. எனவே சமூக, இன/வர்க்க எல்லைக்கோடுகள் தெளிவற்றவை ஆகிவிட்டன. எனவே வர்க்கசமூகங்கள் உடைபட்டுக் கொண்டிருக்கும் நாட்களில் நாம் வாழ்கிறோம். நன்கு வளர்ந்த அமெரிக்கா போன்ற சமூகங்களில் வர்க்க எல்லைக்கோடுகள் என்பவை காணப் படுவதே இல்லையாம்!

பொருளாதார வேறுபாட்டுக்கருவிகள் இருபதாம் நூற்றாண்டில் அர்த்தமற்றுப் போய்விட்டன. மத்தியதர வர்க்கம் வரை பரவிச் செல்லும் செல்வம், தொழில்களின் பெருக்கம், வேலைத் திறனுக்கான சான்றுகள், வேலைகளைத் தரப்படுத்துதல், பெரும்வணிகப் பிரிவுகள் உருவாதல், உலக மயமாக்கம், வாழ்க்கை மதிப்பிற்காகவும் அந்தஸ்திற்காகவும் மேலும்மேலும் நுகர்பொருட்களை உருவாக்குதல் போன்றவை வர்க்க சமூகத்திற்கு எதிரான ஒரு நுகர்வுச் சமுதாயத்தை உருவாக்கிவிட்டன.

மரபுசார்ந்த இலக்கியம் அனுபவ யதார்த்தத்தைப் பிரதிபலிப்பது அல்லது எடுத்துரைப்பது என்று சொன்னாலும், அது யதார்த் தத்தை எடுத்துரைக்கமுடியாமல் தடுமாறுகிறது என்கிறார்கள் பின்நவீனத்துவவாதிகள். அறிவுக்கும் அறிவியலுக்குமான தொடர்பு என்பது முற்றிலும் உடையும்போது உலகம் பைத்தியக்கார விடுதி யாகிவிடும். மொழி விளையாட்டுகள் என்பவை வெறுமனே ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் பயன்படும்போது அதிகாரம் முழுமையாட்சி பெற்று தான் விரும்புவது கிடைப்பதற்கு அலைகிறது. பெருந்தடியைக் கையிலெடுப்போர் இடுவது சட்ட மாகி விடுகிறது.

பின்நவீனத்துவ இலக்கியம் என்பது நவீனத்துவ இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் தொடர்ச்சியைக் கைவிட்டதாகவும் நோக்கப் படுகிறது. நவீனத்துவ இலக்கியம், ஒரு முன்னணிப்படை இலக்கியம், சோதனை விருப்ப இலக்கியம். அது முற்றிலும் ஒரு செவ்விய வடிவத்தை வலியுறுத்துகிறது. நவீனத்துவ காலத்தில் தான் வடிவச் சோதனைகள் மிகுதியாகச் செய்யப்பட்டன. தமிழில் புதுமைப்பித்தன் காலத்தில் நவீனத்துவம் ஆரம்பமாகி, எழுத்து பத்திரிகையில் ஏறத்தாழ முழுமை பெற்று, தொடர்ந்தது. பின்நவீனத்துவமோ எதிர்வடிவம் (ஆண்டி-பார்ம்) என்பதை வலியுறுத்துகிறது. அதாவது வடிவ இணைப்புகளை மறுப்பது, திறந்த வடிவத்தைக் கையாள்வது போன்றவற்றை ஆதரிக்கிறது.

நவீனத்துவ இலக்கியத்திற்குக் குறித்த நோக்கம் உண்டு. அந்நோக்கத்தை நிறைவேற்று தல், இலக்கியத்தின் ஈடேற்றமாகக் கணிக்கப்படுகிறது. பின்நவீனத்துவ இலக்கியத்தில் குறித்த நோக்கம் என்பது கிடையாது. அதற்கு பதிலாக ஆட்டம் (ப்ளே) என்பது முக்கியமாகிறது.

நவீனத்துவ இலக்கியத்தில் சரியான வடிவமைப்பு (டிசைன்) என்பதும் முக்கியம். பின்நவீனத்துவ இலக்கியத்திலோ டிசைன் என்பதைவிடத், தற்செயல் ஆக்கத்திற்கு முக்கியத்துவம் தரப் படுகிறது.
நவீனத்துவவாதிகளின் நோக்கம் ஒரு முழுமையான கலைப் படைப்பு அல்லது கலைப் பொருளை உருவாக்குவது. பின்நவீ னத்துவவாதிகளின் நோக்கம் ஒரு கலைப்படைப்பினை உரு வாக்கி முடிப்பது என்பதைவிட, அதனை இயற்றும் அல்லது செய்கின்ற முறை எவ்வாறென ஆழ்ந்து சிந்திப்பது எனலாம். இதனாலேயே பின்நவீனத்துவப் படைப்புகளின் முக்கிய இயல்பாகச் சுயஆழ்வு (self-reflexivity) என்பது அமைகிறது.

நவீனத்துவ இலக்கியத்தில் படைப்பு என்பதும், ஒருங்கிணைத்தல் என்பதும், தொகுத்தல் என்பதும் முக்கியமானவை. பின்நவீனத் துவப் படைப்புகளில் தகர்த்தல் என்பதும், எதிர்நிலைப்பாடும் முக்கியமானவை.

நவீனத்துவம் இருப்பை வலியுறுத்துகிறது (ஆசிரியனின் இருப்பு, பொருளின் இருப்பு, சம்பவ இருப்பு, சுயத்தின் இருப்பு, கலைக் கருவிகளின் இருப்பு….எனப்பல இருப்புகள்). பின்நவீனத்துவம் இன்மையை (ஆப்சென்ஸ்) வலியுறுத்துகிறது.

நிச்சயமான ஒரு அல்லது பல அர்த்தங்களை நவீனத்துவம் முக்கியமாகக் கருதுகிறது (டிடர்மினசி). பின்நவீனத்துவம் நிச்சய மற்ற தன்மையையே முககியமாகக் கருதுகிறது.
ஜான் பார்த், பின்நவீனத்துவ இலக்கியத்தைத் திருப்தி செய்யும் இலக்கியம் என்கிறார். சார்லஸ் நியூமன் பணவீக்கப் பொருளாதாரத்தின் இலக்கியம் என்றார். லியோடார்டுக்குப் பின்நவீனத்துவ நிலை என்பது சமகாலத் தகவல் தொடர்புவீக்க நிலையில் அறிவின் பொதுநிலை. இஹாப் ஹாசனுக்குப் பின்நவீனத்துவ நிலை என்பது மனித குலத்தை ஆன்மிக இணைப்புச் செய்யும் பாதையில் முதல்கட்டம். இப்படிப் பல பார்வைகள்.
லவ் ஜாய் ஒரு முறை சொன்னார்-”ரொமாண்டிசிசம் என்பது ஒன்றல்ல, பல ரொமாண்டிசிசங்கள் இருக்கின்றன”. அதேபோல நாம் சொல்லலாம்-பின்நவீனத்துவம் என்பது ஒன்றல்ல, பல பின்நவீனத்துவங்கள் உள்ளன.
பின்நவீனத்துவத்தை இனம் காணக்கூடிய பல தன்மைகள் உள்ளன. முதலாவதாக, அவற்றுள் வருவது நிச்சயிக்க இயலாத் தன்மை (இண்டிடர்மினசி). எதுவுமே நிச்சயம் இல்லை, நாம் எதைப்பற்றியும் உறுதியோடிருக்க முடியாது. பழஞ் செவ்விலக்கியங்கள் காட்டும் உறுதிப்பாடும், சமயங்களின் உறுதிப்பாடும் நமக்கு இல்லை என்றாகி விட்டது. யாரும் எதைப்பற்றியும் உறுதியாக எதையும் சொல்லமுடியாது. இவ் உறுதியற்ற தன்மை நமது பிளவுபடு நிலையால் ஏற்பட்டது. கடவுளின் மறைவோடு உலகம் துண்டுதுண்டாகிவிட்டது. சமூகம் பிளவுபட்டுவிட்டது. குடும்பம் துண்டுதுண்டாகிவிட்டது. இவ்வாறு பிளவுபடுவதையே நாம் தினந்தோறும் கண்டுகொண்டிருக்கிறோம். பின்நவீனத்துவத் தில் இப்பிளவுபடுநிலை வடிவங்களைச் சிதைத்தலாக முடிகிறது. மோன்டாஜ், கொலாஜ், கிஷ், நையாண்டி, எதிர்பாரா வகைகளில் இலக்கிய வகைகளைக் கலத்தல் ஆகியவை நிகழ்கின்றன. பின்நவீனத்துவக் கலாச்சாரம் என்பது ஒரு வெகுஜனக் கலாச்சாரம். ஆகையால் எல்லா விதிகளும் உடைக்கப்படுகின்றன. எல்லாச் சாத்திரங்களும் மீறப்படுகின்றன. இதற்கு முதல் நல்ல எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது, மோனா லிசாவின் ஓவியத் தில் ஒரு வெள்ளாட்டை வரைந்து சேர்த்த டியூ சாம்ப் என்பவ ருடைய ஓவியம். கலை இழிவுக்குள்ளாக்கப்பட்டு கேளிக்கை யாக்கப்படுகிறது. வெறும் நுகர்வுக் கலாச்சாரம் நிலவுமிடத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

தமிழ்க் கலாச்சாரத்தில் இதற்கு நல்ல உதாரணம் சொல்லவேண்டுமானால், சென்னைச் சேரிப்புறங்களின் கானாப் பாடல்களையும், திரைப்படத்தில் பிரவுதேவாவின் நடனங்களையும் சொல்லலாம். பின்நவீனத்துவத்தின் கேளிக்கைக் கோட்பாடு (கார்னிவல் தியரி) எல்லையற்று இலக்கிய வடிவங்கள் கலப்புறுவதற்கும், ஊடகங்கள் கலப்பதற்கும், அழகியல் சிந்தனையும் கருத்தியல்சார் கலையும் கலப்பதற்கும் உதவுகிறது. திரைப்படமும் இலக்கியமும், முன்னணிக் கலையும் வெகுஜனக் கலையும், துன்பியலும் இன்பியலும், உயர்ந்ததும் தாழ்ந்ததும், உள்மனப் பேச்சும் ஜால யதார்த்தமும் என எவை எவையெல்லாமோ கலப்புறுகின்றன. எல்லாம் குப்பையாக ஒன்றாக்கப்படுகின்றன. எல்லாம் கடைசியில் நமது கண்ணெதிரேயுள்ள சமுதாயம் போலவே இருக்கிறது.

எந்தக் கோட்பாட்டையும் சுருக்கி, அதன் அடிப்படைப் பண்புகளை மட்டுமே சொல்லுதல் என்பது எளிமைப்படுத்தலும் குறைப்படுத்த லுமாகும் என்றாலும், விமரிசகர்களின் கருத்துகளை வசதிக்காக இங்கே மேற்கொள்ளலாம். டேவிட் லாட்ஜ் முதன்மையாக ஐந்து எடுத்துரை உத்திகளைப் பின்நவீனப் பிரதிகளுக்குரியதாக எடுத்துக் காட்டுகிறார்.
முரண்படுத்தல் (காண்ட்ரடிக்ஷன்),
வரிசைப்படுத்தல் (பெர்ம்யூடேஷன்),
தொடர்ச்சியறுத்தல் (டிஸ்கண்டின்யுடி),
குறித்த நோக்கமின்மை (ரேண்டம்னஸ்),
குறைச்சுற்று (ஷார்ட் சர்க்யூட்)
என்பன அவை. இவற்றோடு நாம் மிகையளவு (எக்சஸ்) என்ற ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவையனைத்தும் பழங்கால முதலே ஆளப்படும் இலக்கியக் கருவிகள்தான் என்றாலும் இவற்றை ஆங்காங்கு இலக்கிய ஒருமைப்பாட்டுக்கெனக் கையாளும் தன்மை பின்நவீனத்துத்திற்கு மாறுபட்டது. இவையனைத்தையும் பெரும்பாலும் கையாண்டு, அதேசமயம் பொருள் நிர்ணயத்தையும் மறுத்துச் செல்லும் போக்குடையவை பின்நவீனத்துவ இலக்கியங்கள் என்று சொல்லலாம்.

புரியாமல் எழுதுவது பின்நவீனத்துவ எழுத்து என்று சில சம காலப் படைப்பாளிகள் நினைக்கின்றனர். புரியாமல் எழுதுவது நவீனத்துவத் தன்மையே அன்றிப் பின்நவீனத்துவத் தன்மை அன்று. ஹெல்லரின் கேட்ச் 22, தாமஸ் பிஞ்ச்சனின் வீ போன்ற எந்தப் பின்நவீனத்துவப் பிரதியும் புரியாமல் இல்லை. ஆனால் சென்ற நூற்றாண்டின் முற்பாதிக்குள் ஜாய்ஸ் எழுதிய யுலிசிஸ், ஃபினிகன்ஸ் வேக் போன்ற நவீனத்துவ நாவல்கள் புரியாமைக்குப் பேர்போனவை. கோட்பாட்டுப் பரிச்சயமற்ற சில தமிழ் எழுத் தாளர்கள் இவ்வாறு புரியாமல் எழுதுவதே பின்நவீனத்துவம் என்று கருதுவது வருந்தத் தக்கது. பொருள் கொள்வதில் பன்முகத்தன்மை என்பது வேறு, புரியாமல் எழுதவேண்டும் என்றே எழுதிச் சிரமப்படுத்துதல் வேறு.
முரண்படுத்தல், வரிசைப்படுத்தல், தொடர்ச்சியுறுத்தல் போன்ற சொற்களின் பொருள் பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். குறித்த நோக்கமின்மை என்பது அதிகாரங்களை அல்லது அத்தியாயங்களை எந்த ஒரு குறித்த நோக்கத்திலும் அமைக் காமையும், அதுபோன்ற பிற செயல்களும் ஆகும்.

உதாரணமாக, கனடா நாட்டைச் சேர்ந்த பி.எஸ். ஜான்சன் என்னும் நாவலாசிரியரின் தனித்தாள் நாவல்கள் எனப்படுபவை, தனித் தனித் தாள்களாக இணைக்கப்பட்டிருக்கும். நாம் அவற்றை எந்த வரிசையிலும் முறைமாற்றி அமைத்துப் படித்துக்கொள்ளலாம். இதுபோல நிகழ்ச்சிகளும் வரிசைப் பாடின்றி அமைக்கப்படலாம். தமிழில் சங்க இலக்கியங்களான குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, பரிபாடல் போன்றவற்றின் பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளமையும் இன்று நோக்கமற்ற ஒன்றாகத்தான் தோற்ற மளிக்கிறது. திருக்குறட் பாக்கள் ஒவ்வொரு அதிகாரத்திலும் அநேகமாகக் குறித்த நோக்கமற்று, வரிசையற்றுத்தான் உள்ளன. காமத்துப்பாலில் பல அதிகாரங்ளே நோக்கமற்ற வரிசையில் உள்ளன. அநேகமாக நந்திக்கலம்பகம் போன்ற பலதுறைகள் பயின்றுவரும் நூல்களிலும் அவற்றை நாம் வெவ்வேறு வகையில் முறைமாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

குறைச்சுற்று என்று லாட்ஜ் பெயரிட்டிருப்பது எழுத்தாளரும் நூலினுள் தம்மைப் பாத்திரங்களுக்கிடையே செயல்படுபவராக நுழைத்துக் கொள்வது. இதனைப் பழங்காலக் காப்பிய நூல்கள் பலவற்றிலும் பார்த்திருக்கிறோம். சிலப்பதிகாரத்திலும் இளங்கோ வடிகள் தம்மை ஒரு பாத்திரமாக நுழைத்துக்கொள்வதைப் பார்க்கிறோம். சமகால மன்னர்களின் வரலாற்று

நிகழ்வுகளையும் அவர் கதைப்போக்கில் சேர்த்துக் கொள்கிறார்.
மிகையளவு என்பது பிரதிக்குள் வாசகன் தொகுத்துப்பகுத்துப் பார்த்துச் சம்பவங்களை அல்லது கூறுகளைத் தனக்குள் வாங்க முடியாத வகையில் மிகுதியான தகவல்களை அளிப்பது. இப் பண்பையும் மகாபாரதம் இராமாயணம் போன்ற பெருங்காப்பி யங்களில் நாம் காண்கிறோம். இக்காலததிலும் ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் போன்ற நாவல்களிலும் பிரேம் பிரேதா எழுதிய பிரதிகளிலும் காணமுடியும். இப்படிப்பட்ட இக்காலப் பிரதிகளைப் பின்நவீனத்துவப் பிரதிகள் என்பதில் தடையில்லை.

முரண்படுத்தல், வரிசைப்படுத்தல் என்னும் இலக்கியக் கருவி களைப் பழங்கால முதலே, சங்ககாலப் புலவர்கள் முதலாக இன்றையக் கவிஞர்கள் வரை பல்வேறு நிலைகளில் கையாண் டுள்ளனர். உடோபியத் தன்மைகளைக் கம்பர் வருணனைகளில் மட்டுமின்றிப் பிற புலவர்கள் படைப்புகளிலும் கண்டிருக்கிறோம். உடோபியத் தன்மை மட்டுமே பின்நவீனத்துவத் தன்மையன்று. அதற்கு எதிரான டிஸ்டோபியா என்பதும் பின்நவீனத்துவத் தன்மையே. இதனை நாம் கலிங்கத்துப் பரணி போன்ற பழங் காலப் படைப்புகளில் காணலாம். குறிப்பாகப் பேயுலகு ஒன்றை மிக நகைச்சுவையாகச் சித்திரப்படுத்துவதில் கலிங்கத்துப்பரணி பிற தமிழ்நூல்களிலிருந்து முதன்மையாக வேறுபட்டுள்ளது.

தொடர்ச்சியறு எழுத்துகள் அல்லது நேர்க்கோட்டு முறையில் படைக்கப்படாத பிரதிகள் பல தமிழில் இன்று வந்துகொண்டிருக்கின்றன. அவை யாவும் பின்நவீனத்துவப் படைப்புகள் என்று சொல்லத் தக்கவை அல்ல. நேர்க்கோட்டு முறையில் அமையாப் படைப்புகள் யாவும் பின்நவீனத்துவம் சார்ந்தவையாக இருக்கத் தேவையில்லை. நவீனத்துவப் படைப்புகள் பல தொடர்ச்சியறு எழுத்துமுறையில் எழுதப்பட்டவை. உதாரணத்திற்கு டி.எஸ். எலியட்டின் ‘பாழ்நிலம்’ கவிதையையே கூறலாம். அல்லது ஜாய்ஸின் ‘யுலிசிஸ்’ நாவலைக் கூறலாம்.

‘ஒரு நூற்றாண்டுத் தனிமை’ (One Hundred Years of Solitude) நாவலின் என்னும் லத்தீன் அமெரிக்க நாவலின் பாதிப்பில் தமிழவன் எழுதிய முதலிரு நாவல்களும் ஜால யதார்த்தம் என்பதற்கு உதாரணங்களாக உள்ளன. ‘ஜே.கே. எழுதிய மர்ம நாவல்’ என்பதில் பின்நவீனத்துவக் கூறுகள் பல உள்ளன. எழுத்தைப் பற்றிய எழுத்து என்ற முறையில் அது பின்நவீனத்துவப் பிரதி என்று கூறலாம். பின்நவீனத்துவப் படைப்புகளில் எம்.ஜி. சுரேஷ் எழுதிய சில பிரதிகளும், ஜீ. முருகனின் நாவல்களும் அடங்கக்கூடியவை. குறிப்பாக எம்.ஜி. சுரேஷ் எத்தனை வகையான பின்நவீனத்துவப் படைப்புகள் சொல்லப்படுகின்றனவோ அவற்றிற்கெல்லாம் உதா ரணமாக ஒவ்வொன்று எழுதியே தீரவேண்டுமென்று எழுதுவது போலத் தோன்றுகிறது. சுயத்திற்குள் ஆழ்தல், எழுத்தைப் பற்றிய எழுத்து, ஒரே கதைக்கு இரண்டு மூன்று முடிவுகளை அளித்தல் போன்ற சில பண்புகள் அவரிடம் காணப்பட்டாலும், இன்று பின்நவீனத்துவப் பிரதிகளுக்கு மிக அடிப்படையாக நோக்கப்படும் குறிப்புமுரண் (ஐரனி), நையாண்டி (பேரடி), பாஸ்டிஷ் போன்ற வை அவரது படைப்புகளில் மிகுதியாக இல்லை. இவையின்றிப் பார்க்கும்போது அவரது நாவல்கள் வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட துபபறியும் கதைகளாகத் தோற்றமளிக்கின்றன.

இன்றைக்குத் தமிழிலக்கிய உலகினை நோக்கும்போது அதிகமாகப் பின்நவீனத்துவப் பிரதிகள் வந்துள்ளதாகத் தெரியவில்லை. காரணம் வெளிப்படை. பலர் பின்நவீனத்துவப் பிரதிகள் என்ப வற்றை ஜாலயதார்த்தப் படைப்புகளாகவோ, புரியாமல் எழுதுகின்ற எழுத்துகளாகவோ சுருக்கிவிடுகின்றனர். இவர்களுக்குத் தத்துவரீதியான புரிந்து கொள்ளல், பிறமொழிகளில் உள்ள இப்படி யான படைப்புகளை ஆழ்ந்து படித்தல் ஆகிய இரண்டும் தேவை. இரண்டுமற்ற ஒரு தான்தோன்றித்தன நிலையைத்தான் தமிழ் உலகில் காண்கிறோம். கோட்பாடுகளை அறிந்து படைக்க முடியுமா என்ற கேள்வி இங்கு எழலாம். கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு எழுதுதல் என்பது தேவை யில்லைதான். ஆனால் அப்படிப்பட்டவர்கள் பின்நவீனத்துவம் போன்ற லேபில்களுக் காகக் கவலைப்படக்கூடாது. தங்கள் படைப்புகள் ஒரு தனிவிதம், சோதனைப் பிரதிகள் என்ற மாதிரியாக விட்டுவிடலாம். அவற்றுக்குத் தக்க கோட்பாடுகளை விமரிசகர்கள் வகுத்துக்கொள்வார்கள்.

பின்நவீனத்துவக் கருவிகள் எல்லாவற்றையும் ஒருவர் ஒரே நாவலில் அல்லது படைப்பில் கையாண்டுவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் குறைந்தபட்சமாக, தற்சிந்தனையுள் ஆழ்தல், சுயபிரக்ஞையோடு படைத்தல், அளந்தறிய அல்லது அர்த்தம் நிர்ணயம் செய்ய இயலாத் தன்மை, மையமழிந்த தன்மை, முழுமை-நிச்சயம் போன்ற பண்புகளை விலக்குதல், பலபிரதித்துவ உறவு போன்றவற்றை எப்பிரதிகள் கொண் டுள்ளனவோ அவற்றை நாம் பின்நவீனத்துவப் பிரதிகளாக ஏற்கலாம். தாமதம், இடையீடு, காலவயப்பட்ட தன்மை, இடப்பெயர்ச்சி போன்ற தன்மைகளோடு வாசகனையும் எழுத் தாளன் அர்த்த உருவாக்கத்திற்கு அடிப்படையானவனாகக் கொள் ளும் நிலை ஏற்படும்போது கட்டாயம் இவை பின்நவீனத்துவப் பிரதிகள் என்ற முத்திரையினைத் தரலாம்.

எழுத்தைவிட இன்று ஊடகப் பரப்புகளிலேயே பின்நவீனத்துவப் பண்புகள் நிறைந்துள்ளன. வெகுஜனக் கலாச்சாரத்திற்குரிய மேலோட்டமான பண்புகளை இவை முற்றிலும் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். ஆனால் இவை அதிகார வர்க்கத்திற்குத் துணை செய்வனவாகவே உள்ளன. இவற்றை எவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ள முடியும், எத்தனை நாளுக்கு இவை நிலை நிற்கும் என்பது தெரியவில்லை. இம்மாதிரிப் பிரதிகளை ஏற்றுக்கொண்டால், அதிகாரத்திற்கு நாம் துணைபோகும் நிலை யோடு, கலை என்பதற்கு அடிப்படைப் பண்புகளாக நாம் வைத்திருக்கும் அனைத்தையும் மறுபரி சீலனை செய்யவேண்டி வரலாம்.

—–


தமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு

தமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு

தமிழ் இலக்கிய மாணவர்களிடம் கடந்த சில ஆண்டுகளுக்குள் இலக்கியம் பற்றிய பழமையான பார்வை மாறியிருக்கிறது. பழைய கால இலக்கிய நோக்கு, இலக்கண அடிப்படையிலான நோக்கு ஆகியவை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலி ருந்தே கொஞ்சம் கொஞ்சமாக மாறிவந்துள்ளன. பழங்காலத்தில், இந்திய மொழிகளில், நூல்களை உருவாக்கியவர்கள் ஞானிகள் என்ற கருத்து இருந்தது. ஆகவே ‘முனைவன் கண்ட முதல் நூலை’ விமரிசிக்கக்கூடாது என்னும் கருத்தும் நிலவியது.

ஒரே நூலுக்கு வெவ்வேறு அர்த்தங்களை-வெவ்வேறு வாசிப்பு களை உரையாசிரியர்கள் கொண்டபோதும், அது இயல்பெனக் கருதவில்லை. இன்னொரு உரையாசிரியரின் உரையைத் ‘தவறான புரிந்து கொள்ளல்’ என்று ஓர் உரையாசிரியர் கருது வாரே ஒழிய மூலநூலாசிரியன்மீது குறைகாண மாட்டார்.

பழங்காலத்தில் நமது இலக்கியங்கள் யாவுமே உதாரணங்களோடு இனிமையாக அறிவுறுத்துபவை ((teach and delight) என்றும் அறம்பொருள் இன்பம் வீடு அடைய அவை பயன்படவேண்டும் என்றும் கருதப்பட்டது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் முதலாக, அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட ஆத்திசூடிகள் வரை அறநூல்கள் என்றும் ஒழுக்க நூல்கள் என்றும் சொல்கிறோம். ஆங்கிலத்திலும் ‘டைடாக்டிக்’ (didactic) என ஒரு பிரிவு நூல்கள் உண்டு. ஆனால் அவர்களுடைய வரையறை சற்றே வித்தியாசமானது. அற வொழுக்கத்தை வலியுறுத்தும் நூல்களே அன்றி, சமய, தத்துவ நூல்களையும் இச்சொல் குறிக்கும். அதனால் ஆங்கில இலக்கிய வரலாற்றில் மத்திய கால இலக்கியம் முழுவதுமே அற நூல் களைக் கொண்டது எனக்குறிப்பர். சமய, தத்துவ நூல்களையும் ‘டைடாக்டிக்’ என்னும் சொல் குறிப்பதாகக் கொண்டால், நமது அற இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களே அன்றி, சைவ வைணவ இலக்கியங்கள், சைவசித்தாந்த நூல்கள், பிற சமயத் தைச் சேர்ந்த சமய நூல்களேஅன்றி, போதனை நூல்கள், சமய விவாதங்கள் போன்றவை யாவும் அடங்கும்.

இலக்கியத்தின் பணி இனிமையாக அறிவுறுத்தல் என்னும் கருத்து தமிழ் மனத்தில் ஆழப் பதிந்திருக்கிறது. ஆகவே மாணவர் கள் பழங்கால இலக்கியங்கள் இக்கால நாவல்கள், சிறுகதைகள் எல்லாவற்றிலும் (அறநோக்கில், அல்லது சமூக நோக்கில், அல்லது தனிமனித முன்னேற்றத்திற்கு உதவுவது என்ற நோக்கில்-இப்படிப் பல வகையான நோக்குகளில் எல்லாம்) ஆசிரியர் என்ன கூறியிருக்கிறார் என்று பார்ப்பதையே இலக்கியத் திறனாய்வு என்று கொண்டுவிடுகின்றனர். இலக்கியத்தை அறநோக்கில் அல்லது ஒழுக்கநோக்கில் மட்டுமே பார்க்க வேண்டும் என்னும் பார்வை தற்காலத்தில் மாறியிருக்கிறது. இருப்பினும் இலக்கியம் ஏதேனும் சமூகக் கருத்துகளைக் கண்டிப்பாக வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் வாசகர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

பழங்கால இந்தியமொழிகளில்-தமிழ் உள்பட, மூலநூலாசிரிய னைக் குறைகூறும் போக்குதான் இ,ல்லையே தவிர, இரசனை முறைத் திறனாய்வு என்பது நன்றாகவே வளர்ந்திருந்தது. சமஸ்கிருதத்தில் காணப்படும் இலக்கியக் கோட்பாடுகள்-ரஸம், பாவம், அலங்காரம், த்வனி, ரீதி, ஒளசித்தியம், வக்ரோக்தி போன்றவை இதனைத் தெளிவுபடுத்தும். பொதுவாகப் பழங்கால இலக்கியக் கொள்கையை ‘சஹ்ருதயக் கொள்கை’ எனச் சுருக்கமாகச்சொல்லலாம். சஹ்ருதயத்தன்மை என்பது ஒத்து ணர்வு. ஒருபொருளோடு நாம் முழு அளவில் ஐக்கியமாகி, அதன் இருப்பிலும் அனுபவத்திலும் பங்குகொள்ளும் தன்மை. இது பரிவுணர்வு (Sympathy) என்பதோடு எதிர்நிலையில் வைத்து நோக்கப்படுகிறது. ஒரு நாடகத்தில் அல்லது திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் மனநிலையையும் நாம் உணர்ந்துகொள்ளும் தன்மையைப் பரிவுணர்வு என்போம்.

இலக்கியத் துறையில் எந்த ஒரு கொள்கையும் வானிலிருந்து திடீரென்று தோன்றி விடுவதில்லை. எல்லாக் கொள்கைகளுக்கும் முன்னோடிகள் உண்டு. மேற்கு நாடுகளில் இலக்கிய விமரிசன வளர்ச்சியும் கொள்கை வளர்ச்சியும் படிப்படியாக இவற்றை உள்வாங்கி வளர்ந்து வந்துள்ளன. அதனால் அவை சரியான முறையில் செறிவாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஆங்கில அறிவைப் புறக்கணிக்கின்ற தமிழ்இலக்கிய மாணவர்கள் (எழுத்தாளர்களும்கூட) தமிழில் மட்டுமே எழுதப் படுகின்ற கொள்கை அல்லது செயல்முறை விமரிசன நூல்களைப் பயிலும்போது அரைகுறையான புரிந்துகொள்ளலோடு அல்லது சில விஷயங்களில் தவறான புரிந்துகொள்ளலோடு விமரிசனத் தில் ஈடுபட்டுவிடும் அபாயம் இருக்கிறது. மேலும் தேர்வு நோக்கில் ‘பாயிண்டு பாயிண்டாக’ப் படிக்கின்ற மாணவர்கள், “இலக்கியத் திறனாய்வில் எட்டுவகைகள் இருக்கின்றன – அவை யாவன” என்று என்பதுபோல அரைகுறையான, மேம்போக்கான அல்லது தவறான பகுப்புகளில் ஈடுபட்டு மனப்பாடம் செய்யத் தொடங்கிவிடுகின்றனர் என்பது வருந்தத்தக்கது. இம்மாதிரிக் குறைகள் எற்பட முக்கியக் காரணம் அல்லவாறு எளிமைப்படுத்திப் பாடத்திட்டம் வகுக்கும் அல்லது வினாக்கள் கேட்கும் பேராசிரியர்களே. அடிப்படையான கருத்துகளைப் புரிந்துகொள்ளும் நோக்கமின்றி இம்மாதிரி மேலோட்டமான தன்மைகளில் கவனம் செலுத்துவது எந்தத் துறையிலுமே ஆபத்தானது.

ஆனால் நல்லவேளையாக இந்த நிலை மாறிவருகிறது. மேலும் 1990கள் முதலாகத் தமிழின் படைப்புப் போக்கும் பெரிதும் மாறிவந்துள்ளது. அண்மைக்காலத்தில் படைப்புலகங்கள், இலக் கியத் தடங்கள், விமரிசனப் பார்வைகள், என்றெல்லாம் எழுத்தா ளர்களைப் பற்றி தனித்தனியே நூல்கள் வெளிவருவது ஆரோக்கியமான ஒரு நிலை. இதற்குமேல் இலக்கியச் சிற்றிதழ் கள் இப்போது இணைய இதழ்களாகவும் இயங்குகின்றன, அல்லது வெளியிட்டு வருகின்றன. பெரும்பத்திரிகைகளே இலக்கிய இணைப்புகளை வெளியிட்டுவந்த காலம் போய், இலக்கியப் பத்திரிகைகளையே இப்போது தனியாக நடத்தத் தொடங்கி விட்டன. சற்றே மந்தமான ஒரு காலப்பகுதிக்குப் பின்னர் இப்போது அதிக அளவில் இலக்கியச் சிற்றிதழ்கள் வெளி வருகின்றன. இவையாவும் அண்மைக்காலத்தில் தமிழிலக்கிய மாணவர்களின் பார்வை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியிருக் கின்றன. ஆனால் ஒரு எச்சரிக்கை-இவற்றில் வெளிவருவன மனப்பதிவு சார்ந்த விமரிசனங்களாகவே இருக்கின்றன. ஒரு திறனாய்வாளன் ஒருநூலைப் பற்றியோ அல்லது சமூகச் சூழல்கள்-நிகழ்வுகள் பற்றியோ சொல்லுகின்ற விஷயங்கள் பெருமளவு அவனது விமரிசன அணுகுமுறையைப் பொறுத் துள்ளன. இம்மாதிரி அணுகுமுறைகளால் ஓர் இலக்கிய மாணவன் அறிந்தோ அறியாமலோ ஈர்க்கப்பட்டுவிடும் நிலை சர்வசாதாரணம்.

இலக்கிய விமரிசனம் அல்லது திறனாய்வு என்பது மரபாக ஓர் இலக்கியப் படைப்பின் அல்லது படைப்புகளின் பகுப்பாய்வு, விளக்கம், மதிப்பிடல் என்பதாகக் கருதப்பட்டு வருகிறது. குறைகாண்பது நிச்சயமாக விமரிசனம் அல்ல. ஒரு கல்விச் செயல்பாடு என்னும் முறையில் இலக்கியத்திறனாய்வு என்பது ஒரு பிரதியில் என்ன நிகழ்கிறது என்பது பற்றிய உணர்வை வெளிக்காட்டுகிறது.

ஓர் இலக்கியப் பிரதியைப் பற்றிப் பரந்த நோக்கில் பார்க்க வேண்டுமானாலும், அந்தப் பிரதி எதைப் பற்றியது, எந்தப்படியான அனுபவம் அதில் சொல்லப்படுகிறது, எந்த வகையான உணர்ச்சி அல்லது பிரச்சினை அதில் வருணிக்கப்படுகிறது என்பவற்றை யெல்லாம் நோக்கியாக வேண்டும்.

பிறகு அந்தப் பிரதி எப்படி இலக்கிய விஷயத்திற்கு உயிர்கொடுத் திருக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். இப்படி ஆராயும் போதே அப்பிரதி பற்றிய நமது பார்வை இன்னும் ஆழமாகிறது.

பிரதி பற்றிய நுணுக்கமான பார்வையைக் குவிக்கும்போதே ஆசிரியர் என்னென்ன கூறுகளில் எந்தவிதமான தேர்வுகளைக் கையாண்டுள்ளார்-உதாரணமாக, எந்தவிதமான சம்பவங்கள் தரப் படுகின்றன, எவ்விதமான வார்த்தைகள் கையாளப்படுகின்றன, இவையெல்லர்ம் பிரதியின் மையப்பிரச்சினை என்பதை நாம் உணர்வதற்கு எவ்விதம் அரண் செய்வதாக இருக்கின்றன என்பனவற்றையெல்லாம் நாம் ஆராயவேண்டும். ஒரு பிரதி குறிப்பிட்ட வகையில் எப்படி வளர்கிறது என்று நாம் சொல்ல ஆரம்பிக்கும்போதே அது சாதாரணச் ‘சுருக்கம்’ என்ற நிலையைத் தாண்டத் தொடங்குகிறது.

ஒரு பிரதி எதைப்பற்றியது என்பதைச் சரியாகக் கண்டுபிடிக்க வழி உண்டா? நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தத் தன்மை இலக்கியப் படிப்பைக் கடினமாகவும் அதேசமயம் ஆர்வமூட்டுவதாகவும் ஆக்குகிறது. எந்த இலக்கியப்பிரதியும் எண்ணற்ற பார்வைகள், விவாதங்கள் இவற்றின் களம். சாதாரண மாக மாணவர்கள் இலக்கியம் பயிலத் தொடங்கும்போது, எம்.ஏ. படிப்புக்கான திட்டக்கட்டுரை, அல்லது எம்.பில் படிப்புக்கான ஆய்வுக்கட்டுரை இவற்றை உருவாக்க ஆசிரியர்கள் சில திட்ட வட்டமான வரையறைகளைத் தருகின்றனர். இப்படிப் புரிந்து கொள்ளலாம் என ஒரு வழிகாட்டியாக இருக்கின்றனர். ஆனாலும் இது ஒரு குறிப்பிட்ட மனிதருடைய பார்வைதான். இன்னொரு வாசகர் அதே இலக்கியப் பிரதியைப் பற்றி வேறுவிதமான பார்வைகளைக் கொள்ளக்கூடும். வேறு விதமான ஆய்வுமுறை களைக் கையாண்டு வேறுவித முடிவுகளுக்கு வரக்கூடும்.

அதனால் இலக்கியத் திறனாய்வு என்பதே ஒரு அகவயமான சமாச்சாரம் என்று தோன்றலாம். அப்படியில்லை. ஒரு வாசகன் ஒரு நூலைப் படிக்கும்போது தனது சமூக கலாச்சாரச் சூழல் களாலும் கட்டுப்படுத்தப்படுகிறான். ஆகவே ஒரு குறிப்பிட்ட அளவு பொதுநோக்கு என்பது சமூக கலாச்சார அடிப்படை யிலேயே வந்துவிடுகிறது.

இலக்கியத்தை ஓர் ஆவணமாகவும் பயன்படுத்த இயலும். பல பேருக்கு அதுதான் இயலக்கூடிய எளிய பணியாகவும் இருக்கிறது. பிரதி என்று சொல்லும் போதே ஓரளவு ஆவணநோக்கும் அங்கே வந்துவிடுகிறது. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்த்து இரசிப்பது தான் கடினம். அதற்கான வழித்தடத்தைப் பயன்படுத்தி ஆராய்வது கடினம். ஒருவர் இலக்கியம் என்ன சொல்கிறது என்று காண முற்படும்போது அதனை ஆவணமாகவே பயன்படுத்துகிறார். இது உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டு செய்யும் ஆராய்ச்சி. இம் மாதிரிப் பார்வையில் தவறு ஏதுமில்லை என்றாலும் இலக்கியக் கலையின் முதற்பயனை இந்த நோக்கு புறக்கணித்து விடுகிறது.

அப்படியானால், விமரிசனத்திற்கு அடிப்படை வழித்தடங்கள்தான் என்ன? விமரிசனம் என்பது ஒரு வாசகனின் எதிர்வினையில் தொடங்குவதால், ஒரு பதிவுநவிற்சி (அதாவது ஒரு படைப்பி னைப் பற்றிய மனப்பதிவுகளை (impressions) நவிலுதல்) விமரிசனத்தை எவரும் எளிதாகவே எழுதிவிடலாம். அதாவது, ஒரு கவிதையைப் பற்றி, அது எவ்வளவு நன்றாக உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது, அது வாசித்த நபரிடம் என்ன உணர்ச்சி விளைவை உண்டாக்கியிருக்கிறது (எப்படி அவரை பாதித்தது), அவரது வாழ்க்கை அனுபவத்தோடு அது எப்படி ஒட்டியிருக்கிறது என்பதை யெல்லாம் எழுதுவதுதான் பதிவுநவிற்சி விமரிசனம் (Impressionistic Criticism).

கவிதை தமக்கு என்ன உணர்ச்சி விளைவை உண்டாக்கி யது-எப்படி பாதித்தது என்பதை மட்டுமே இரசனைக்கான அளவு கோலாகக் கொண்டு இரசிகமணி டி.கே.சி. போன்றவர்கள் செய்துவந்தனர். இம்மாதிரி செய்வதில் பெருந்தவறுகள் ஏற்பட்டு விடக்கூடும். இதற்கு நல்லஉதாரணம், டி.கே.சி.யின் கம்ப ராமாயணப் பதிப்பு. தமக்கு ஒருவித ‘பாவத்தை’-உணர்ச்சி விளைவைத் தரக்கூடிய சற்றேறக் குறைய ஆயிரம் பாடல்களை மட்டும் தொகுத்து அவை மட்டுமே கம்பர் எழுதியவை, பிற யாவும் இடைச்செருகல்கள் அல்லது பிற்சேர்க்கைகள் என்று தவறாகக் கருதிப் பதிப்பித்துவிட்டார் அவர்.

1949 வாக்கில் விம்சட்டும் பியர்ட்ஸ்லியும் சேர்ந்து எழுதிய கட்டுரை ஒன்றில் இலக்கியத்தை நாம் தவறாக அணுகுகின்ற சில வழிமுறைகளை எடுத்துக்காட்டுகின்றனர். இவற்றை அவர் கள் ‘போலி நியாயங்கள்’ என்கின்றனர். இம்மாதிரித் தவறுகளில் ஒன்று உள்நோக்கப் போலிநியாயம் (Intentional Fallacy). ஆசிரியனின் உள்நோக்கம் என்ன என்பதை யூகித்து அதன் வழியாக ஒரு பிரதியை விளக்க முற்படுவது இது. அதேபோல் இலக்கியப்பிரதி வாசகன்மீது ஏற்படுத்தும் விளைவை அடிப்படையாக வைத்து அதனை மதிப்பிடுவது உணர்ச்சி விளைவுப் போலிநியாயம் (Affective fallacy). டி.கே.சி. செய்தது இம்மாதிரியான தவறுதான்.

திறனாய்வு இம்மாதிரி மனப்பதிவுகளைவிட, படைப்பினை நன்றாகப் பகுப்பாய்வு செய்வதாக அமையவேண்டும். அடிப்படை யில் விமரிசனம் என்பது படைப்பின் மையக் கருப்பொருள்களை அறிவது முதலாகத் தொடங்கி, அக்கருப்பொருள்களை எப்படி உருவாக்கி வளர்த்து ஒரு பிரதி முன்வைக்கிறது என்பதை விரிவாக அலசுவது என்றுசொல்லலாம். இதனை அலசல் விமரிசனம் (Analytical criticism) என சி.சு. செல்லப்பா குறிப்பிட்டார். இம்மாதிரி விமரிசனத்தை வளர்க்கவேண்டும் என்பதற்காக ‘எழுத்து’ பத்திரிகையையும் அவர் நடத்தியது நாமறிந்த விஷயம்.

இன்றும் இலக்கியம் சிறந்ததொரு அனுபவத்தை (profound experience) அளிக்கவேண்டும் எனக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். இரசனை நோக்குடன் வாழ்க்கை அனுபவங்களையும் இலக்கியத் தில் பொருத்திப் பார்க்கும்போது சற்றே வித்தியாசமானதொரு இரசனைமுறைத் திறனாய்வு தோன்றுகிறது. இம்மாதிரித் திறனாய்வைக் க.நா. சுப்ரமணியம், வெங்கட் சாமிநாதன் போன்ற வர்கள் செய்துள்ளனர்.

ஆங்கில இலக்கிய விமரிசனப் பிதாமகர்களான எஃப்.ஆர். லீவிஸ் (F.R. Leavis) முதலியோர் செய்த திறனாய்வு இன்னும் சற்றே வித்தியாசமானது. லீவிஸ் இரசனை-அனுபவ அணுகுமுறையைக் கையாண்டபோதிலும், ஆழமான வாசிப்பையும் வலியுறுத்தினார். புறச்சான்றுகளை ஏற்காமல் கவிதையின் அல்லது படைப்பின் சொற்களை மட்டுமே ஆழ்ந்து நோக்கவேண்டும் என்பது அவரது முடிவு. இலக்கியப் படைப்பின் மையமாக ஓர் உயர் ஒழுக்க நெறி (high moral seriousness) காணப்பட வேண்டும் என்றும் அவர் கருதி னார். ஒர சிறந்த படைப்பு, வாழ்க்கை அனுபவங்களின் சிக்கலான அறவியல்புகளை ஒளியூட்டிக்காட்டுகிறது. இங்கு அறம் என்னும் சொல் மனிதனுக்கு விதிக்கப்படும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைக் குறிப்பதன்று. மனிதன் தனது சூழலில் பிறருடன் கொள்ளக்கூடிய தொடர்புகள் – உறவுகளின் கடப்பாட்டுத்தன்மை, பொறுப்புகள், உணர்வுகள் ஆகியவற்றை இச்சொல் குறிக்கிறது.

இம்மாதிரி அளவுகோல்களை வைத்து ஆங்கிலத்தின் தலைசிறந்த நாவலாசிரியர்களான ஜேன் ஆஸ்டின், ஜார்ஜ் எலியட், கான்ராட், ஹென்றி ஜேம்ஸ், டி.எச். லாரன்ஸ் ஆகியோரை The Great Tradition என்ற தம் நூலில் லீவிஸ் நிறுவியிருக்கிறார்.
ஓர் இலக்கியப் பிரதியை விவாதப்படுத்தி ஆராயும்போதே விரைந்து வாழ்க்கை அனுபவத்துடன்அதன் செய்தியைப் பொருத்திப் பார்க்கச் சென்று விடுவது பிரிட்டிஷ் ஆங்கில இலக்கிய விமரிசனத்தின் பொதுத்தன்மை என்று சொல்லலாம். இதனைப் பன்மை அணுகுமுறை (Pluralistic approach) என்று சொல் வது வழக்கம். ஓர் இலக்கியப் படைப்பினைத் திறந்த மனத்தோடு அணுகி, குறித்த எவ்விதக் கருத்தியல் நிலைப்பாடும் எடுக்காமல் எந்த நோக்கிலிருந்தும் விமர்சிக்கும் முறை இது. ஆனால் மார்க்சிய, அமைப்புவாதத் திறனாய்வாளர்களால் இந்த நோக்கு பொதுப்புத்தி அணுகுமுறை (Common sense approach) என்றும் தாராளவாத மனிதநேய அணுகுமுறை (Liberal humanist approach) என்றும் கேலிசெய்யப்பட்டது.

ஆங்கிலவழிப்பட்ட மரபுத்திறனாய்வு, வடிவம், கற்பனை போன்ற வை பற்றிய கோட்பாடுகளை விரிவாக ஆராய்வது. உதாரணமாக, ஆங்கிலக்கவிஞர் கோல்ரிட்ஜ், தமது பயக்ராபியா லிடரேரியா என்னும் நூலில் கற்பனையையும் (Imagination) புனைவையும் (Fancy-இதனை வெறுங்கற்பனை என்பார் மு.வ.) பிரித்துக் காட்டு கிறார். புனைவு என்பது எளிய, தீவிரமற்ற கவிதை சார்ந்தது. தீவிரமான எந்தக் கவிதையும் கற்பனையையே அடித்தளமாகக் கொள்ளும். ஒழுங்கற்ற தாறுமாறான அனுபவக் கூறுகளிலும் ஒழுங்கைக்காணும் இயல்பு கற்பனைக்குண்டு. கோல்ரிட்ஜ், வேர்ட்ஸ்வொர்த், கீட்ஸ் போன்ற ஆங்கிலக் கவிஞர்களும் நம் நாட்டில் தாகூர், பாரதி போன்றவர்களும் மனத்துக்குள்ளிருக்கும் ஒழுங்கினை-முழுமையைக், கற்பனையாற்றல் வாயிலாகத் தேடி யவர்களே. எனினும் இத்தேடல் அடிக்கடி இயலாமையிற் கொண்டுவிடுகிறது. இதனால் ரொமாண்டிக் கவிதைகளில் ஒழுங்கின் இலட்சியத்திற்கும், கற்பனையின் தோல்விக்குமிடை யில் ஓர் இழுவிசை இருந்துகொண்டேஇருப்பதைக் காணலாம்.

உதாரணமாக பாரதி, “நல்லதோர் வீணை செய்தே அதை நலங் கெடப் புழுதியில் எறிவதுண்டோ” எனக் கேட்கும்போது அவரது சாதனையின் தோல்விக்கும் இலட்சியத்தின் எதிர்பார்ப்பிற்கு மான போராட்டத்தை முன்வைத்தேபாடுகிறார்.

வடிவம்-உள்ளடக்கம் இரண்டிற்குமிடையில் காணப்படும் முரண் பாட்டினை நாம் அறிவோம். இலக்கியம் ஓர் உயிரி போன்றது என்று கருதும் கொள்கைப்படி (Organic theory) எப்படி ஓர் உயிரியின் வடிவமும் ஆளுமையும் பணிகளும் தனித்தனி திசைகளில் இயங்காமல் ஒருமைப்பாட்டோடு இயங்குகின்றனவோ, அதே போன்றதொரு பிரிக்கமுடியாத ஒருமையோடுதான் இலக்கியத் தின் கூறுகள் இயங்குகின்றன. ஆகவே வடிவத்தையும் பொருளை யும் தனித்தனியே கூறுபோட்டு ஆராய்வதில் பயனில்லை.

ஒருவிதத்தில் உள்ளடக்கம் என்பது ஒரு மாயை. எந்த இலக்கி யத்தையும் பொழிப்புரைத்தாலோ சாராம்சப்படுத்தினாலோ அது இலக்கியமாகவே இருப்பதில்லை. சான்றாக, கம்பராமாயணத் தையே வாசிக்கும்பொழுதுதான் அது இலக்கியம். அதன் சாராம் சம், பொழிப்புரை, சுருக்கம் எதுவுமே கம்பராமாயணத்தின் தன் மைகளைக் கொண்டிராது. தான் சொல்லும் முறையினால்தானே அது இலக்கியமாக இருக்கிறது? எந்த நூலையும் சாராம்சப்படுத்த இயலும். அப்படி சாராம்சப்படுத்துவது, திறனாய்வுக்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமையலாம். ஏனெனில் இந்த சாராம்சத்தை வேறொரு இலக்கியவடிவில் தராமல் இந்த வடிவத்தில் படைப்பாளி ஏன் தந்திருக்கிறார் என்று ஆராய்வதே ஆரம்பத்தில் ஒரு நல்ல நோக்காக அமையும்.

என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதற்கும் அது எப்படிச் சொல்லப் பட்டுள்ளது என்பதற்குமான தொடர்பினை நோக்குவது செயல் முறைத் திறனாய்வு, விமரிசன ரீதியான இரசனை என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இதன் அறிவியல்ரீதியான பொதுமைப்பட்ட செயல்பாடு, வடிவவியல் திறனாய்வு (Formalistic criticism). இது அழ கியல் திறனாய்வு (Aesthetic criticism) என்றும் சொல்லப்படும். அமெ ரிக்காவில் புதுத்திறனாய்வு என்னும் பெயரிலும், ரஷ்யாவில் உருவவாதம் என்ற பெயரிலும் இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளர்ச்சியடைந்தது. பின்னால் அமைப்புவாதம், பின்னமைப்புவாதம் போன்ற போக்குகள் வளர்ச்சிடைய அழகியல் திறனாய்வே அடிப்படை. எந்தப் பயனும் கருதாமல் இலக்கி யத்தைத் தனித்துறையாக நோக்கவேண்டும் என்பதும், அதன் அழகியல் தன்மைகளை மட்டுமே ஆராய வேண்டும் என்பதும் வடிவவியல் நோக்கு. எனவே இது (பிரிட்டிஷ்காரர்களின் பன்மை அணுகுமுறைக்கு மாறான) ஒற்றை அணுகுமுறை (Monistic approach) என்றும் சொல்லப்படுகிறது. மிகநுணுக்கமான படிப்பை, ஆழ்ந்த வாசிப்பை இது வலியுறுத்துகிறது. இப்படி ஆழ்ந்து ஆராய்ந்து தனிப்படைப்புகளின் திறனை வெளிப்படுத்துவது அமெரிக்கப் புதுத்திறனாய்வின் நோக்காக அமைந்தது. ரஷ்ய வடிவவாதமோ இலக்கியங்களுக்கெல்லாம் பொதுவாக அமைந்தி ருக்கும் இலக்கியத் தன்மையைக் காணவேண்டும் என்று கருதியது.

ரஷ்ய வடிவவியலாளர்கள் 1917 புரட்சியின்போது வாழ்ந்த ஒரு இலக்கியக் குழுவினர். இலக்கிய மொழிநடை பற்றி மொழியியல் ரீதியாகச் சிந்திப்பதிலிருந்து அவர்கள் இயக்கம் உருவாகியது. நடை, யாப்பு, ஒலியமைப்பு போன்றவை பற்றி அவர்கள் கூறிய கருத்துகள் மிகுந்த தொழில்நுட்பச் சிக்கலுடையவை. அவற்றை இங்கு விவாதிக்க இயலாது. ஆயினும் பொதுவாக அவர்கள் கூறிய சில கருத்துகளை இங்குக் காணலாம்.

இலக்கியமொழி என்பது ஒரு தனித்தவகையான மொழி என்பது அவர்கள் கருத்து. இலக்கியம் இந்த உலகத்தைப் பற்றிய ஒரு சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதைவிட, அது நாம் காணும் உலகை நமக்கு விசித்திரப்படுத்துகிறது அல்லது பரிச்சயநீக்கம் (Defamiliarization) செய்கிறது என்றார் ரஷ்ய உருவவியலாளர் விக்டர் ஷ்க்ளாவ்ஸ்கி. பரிச்சயநீக்கம் என்பது நாம் காணாத ஒரு புதுத் தன்மையில் நமது அனுபவங்களை மொழிவாயிலாக மாற்றித் தருவதாகும். ஆகவே வாசகன் இலக்கியத்தில் காண்பது நடப்புத்தன்மையை அல்லது யதார்த்தத்தை அல்ல. படைப்பு மொழியின் விசித்திரத்தையே அவன் காண்கிறான். ஆகவே இலக்கியம் என்பது சுய பிரக்ஞையுள்ள ஓர் ஊடகம். இப்படிப் பரிச்சயநீக்கம் செய்வதற்கு முக்கியமாக முன்னணிப்படுத்தல் (Foregrounding) என்னும் செயல் உதவுகிறது. அதாவது இலக்கியத் தில் செயல்படும் பலகூறுகளில் ஒன்றை முன்னணிப்படுத்தி அல்லது முக்கியப்படுத்திக் காட்டுதல். ரஷ்ய வடிவவியலாளர்கள் உருவாக்கிய முக்கியமான கருத்து, ஓர் இலக்கியப் பிரதி என்பது ஒரு மொழிக்கட்டுமானம் (Linguistic Construct) தவிர வேறொன்று மில்லை என்பது.

நவீன இலக்கிய விமரிசனம் முழுவதுமே இவர்களது பார்வையிலிருந்துதான் உருவாகிறது என்று சொல்வதில் தவறொன்றுமில்லை. எனினும் உள்ளடக்கத்தைப் பற்றி அறவே கவலைப்படாத இவர்களது தன்மை மார்க்சியக் குழுவினரால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டது. இதனால் ஸ்டாலின் காலத்து ரஷ்யாவிலிருந்து இவர்கள் பலவேறு நாடுகளுக்குப் பெயர்ந்தனர். ஆயினும் அவர்களது தத்துவ அடிப்படை சிறப்பானது. காரணம், இலக்கியத்தின் செம்மையான வடிவத்தை, அதன் அயன்மைத் தன்மை போன்றவற்றை நோக்குவது என்பதே இறுதியில் அப் பிரதியின் கருத்தியல் பற்றிய ஆய்வாக மாறிவிடுகிறது. அப்படி மாறும்போது அது அமைப்பிய விமரிசனம், பெண்ணிய விமரிசனம், தகர்ப்பமைப்பு (Deconstruction), நவவரலாற்றியம் (Neo Historicism) எனப்பல பெயர்கள் பெறுகிறது.

அமெரிக்கப் புதுவிமரிசனம் இதிலிருந்து முற்றிலும் வேறான தொரு பாதையில் சென்றது. தனிப்பிரதிகளை ஆய்வுசெய்து அவற்றில் காணப்படும் உத்திகளைத் தனிமைப்படுத்துவதாக அவர்களதுமுறை அமைந்தது. 1940 முதல் 1960 வ்ரை அது பல்கலைக் கழகங்களை ஆட்சிசெய்தது என்றே கூறலாம். கிளெந்த் புறூக்ஸ், ஆர்.பி. பிளாக்மர், ஆலன்டேட், ஜான் குரோ ரேன்சம் முதலானோர் இவ்வியக்கத்தின் தலைமக்கள். பிரதியை ஆராய்வது பற்றி ஐ.ஏ. ரிச்சட்ஸ் கூறிய கருத்துகளையும், இலக்கியம் பற்றி டி.எஸ். எலியட் கருத்துகளையும் உள்வாங்கி, இவ்வியக்கம் வளர்ந்தது. எந்த இலக்கியப் பிரதியையும் ஒரு தனித்த, தன்னிச்சையான அமைப்பாகக் கருதி ஆராய வேண்டும் என்பது இவ்வணுகுமுறை.
புதுத்திறனாய்வாளர்கள் சிக்கலான தன்னுணர்ச்சிக்கவிதைகளை எடுத்து விமரிசன ஆய்வு செய்தனர். கீட்ஸ், ஜான் டன் போன்றோர் எழுதிய கவிதைகளை அவர்கள் ஆய்வு செய்த முறை வியப்பூட்டும். கவிதைப் பிரதியிலுள்ள சொற்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர, ஆசிரியனின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள், ஆசிரியனின் நோக்கம், வரலாற்றுச்சூழல் போன்ற விஷயங்களுக்குச் செல்லவேகூடாது என்பது இவர்களது கருத்து. கவிதையை ஆராயும்போது முன் யூகங்கள், பதிவுகள் ஆகியவற்றை அறவே விட்டுவிட்டுக் கவிதையில் மட்டுமே கவனம்செலுத்தவேண்டும்.

இது ஒரு பொதுமை நோக்காகத்தான் பார்வைக்குத் தென்படுகி றது. ஆனால் உண்மையில் புதுத்திறனாய்வாளர்கள் பொதுமை நோக்காளர்களாக இல்லை என்பது வேடிக்கையானது. அவர்கள் தாங்கள் விரும்பக்கூடிய இலக்கிய குணங்களைக் கொண்ட இலக்கியப் படைப்புகளை மட்டுமே விமரிசனத்திற்குத் தேர்ந்தெ டுத்தார்கள். ஜான் டன் போன்ற மீமெய்யியல் கவிஞர்களின் அறிவார்த்தச் சிக்கல் தன்மையையும் ரொமாண்டிக் கவிஞர்களின் உணர்ச்சிச் சிக்கல்தன்மையையும் அவர்கள் பாராட்டினார்கள். இலக்கியத்தில் அவர்கள் பாராட்டிய குணங்களாக முரண்தன்மை, குறிப்புமுரண், பல்பொருள் தன்மை, இழுவிசை போன்ற பலவற்றைச் சொல்ல லாம்.

இக்குணங்களின் எதிர்முனைகள் தமக்குள் கொள்ளும் சமனப் படுத்தலில் கவிதையின் தனித்தன்மை இருப்பதாகக் கருதி னார்கள். ஒருவகையில் அவர்கள் கூறுவதைத் தொகுத்து, “இலக்கியம் என்பது வாழ்க்கையின் முரண்பாடுகளைச் சிக்கலான முறையில் உணர்த்துவது, ஆனால் அது ஒன்றுக்கொன்று இசைவமைதியற்ற முரண்கூறுகளைச் சமனப்படுத்துகிறது” என நாம் வரையறுக்கலாம். இலக்கியத்தின் சிக்கலான, முரண்பா டான, குழப்பமான தன்மைகளை அவர்கள் ஆதரித்தனர். அதேசமயம் இறுதியாக அதில் ஓர் ஒழுங்கும் இசைவமைதியும் சீர்மையும் பொருளும் உண்டு எனவும் கருதினர்.

இதற்குப் பிறகு தோன்றிய அமெரிக்கத்திறனாய்வு புதுத்திறனாய் வுக்கு எதிராக மாறியது. முக்கியமாக இலக்கியஆசிரியன் ஒரு படைப்பை ஒழுங்குபடுத்தி அமைக்கமுடியும் என்னும் கருத்து கடும் எதிர்ப்புக்குள் ளாயிற்று.

இக்கட்டுரையில் இலக்கியப் படைப்பு, பிரதி (text) என்றே பலமுறையும் ஆளப்பட்டுள்ளது. ஆகவே இச்சொல் பற்றி ஒரு சில வார்த்தைகள். அண்மைக்கால இலக்கியத் திறனாய்வில் ‘இலக்கியப் படைப்பு’ ‘நூல்’ போன்ற சொற்களைப் புறக்கணித்து, பிரதி (பனுவல்) என்னும் சொல்லையே ஆள்கின்றனர். சசூரின் மொழியியல் கருத்துகளும், ரஷ்ய வடிவவியலாளர் கருத்துகளும் தோன்றியபோதே பிரதி என்ற சொல் திறனாய்வில் புகுந்துவிட் டது. காரணம், ‘படைப்பு’ என்னும் சொல், பல முன்சிந்தனைகளைத் தன்னுள் அடக்கியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆசிரியனின் நோக்கு, ஆசிரியக்கட்டுப்பாடு, அவனது நோக்கிலான அழகியல் முழுமை போன்ற பல கருத்துக்கள் இச்சொல்லில் தொக்கி நிற்கின்றன. நவீன இலக்கியக் கொள்கை ஆசிரியனைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வாசகனுடைய நோக்கில் என்ன நிகழ்கி றது என்பதே முக்கியம்.

இரண்டாவதாக, இலக்கியம் என்பதைப் பிற பிரதிகளிலிருந்து வேறுபடுத்தி, முன்னுரிமைப்படுத்தி, அதற்குத் தனித்தன்மை இருப்பதுபோலக் காட்டுகிறது ‘படைப்பு’ என்னும் சொல். ஆனால் இக்கால நோக்கில் பிரதி என்பது பலவகையான எழுத்து அல்லது உருக்களையும் குறிக்கிறது. திரைப்படம், நிழற்படங்கள், ஆவணங்கள், பதிவுகள், விளம்பரங்கள்…எல்லாமே பிரதிகள்தான். நாம் ‘வாசிக்கக்கூடிய’ எதுவும் பிரதியாகிறது. உலகமே ஒரு பிரதிதான். ஆகவே நாம் எந்தப்பொருளுக்கும் பிரதித்துவத் தை(Textuality)-அதாவது ‘வாசிக்கும் தன்மையை’ வலியுறுத்த முடி யும். நாம் ‘ஊடுபிரதித்துவம்’ (Intertextuality) என்பதை வலியுறுத் தும்போது பிரதி என்னும் கருத்து இன்னும் கூடுதல் பரிமாணத் தைப் பெறுகிறது.

இலக்கியம் தன்னளவில் நிறைவுபெற்ற, ஒரு தனித்தன்மை வாய்ந்த பொருள் என்பதை இன்னும் பலரால் ஏற்க முடிவ தில்லை. ஆகவே இக்கருத்து அழகியல் சார்ந்த அணுகுமுறை எனக் கருதப்பட்டதோடு, பிற அணுகுமுறை சார்ந்தவர்களால் எதிர்க்கவும் பட்டது. இலக்கியத்தை ஆவணமாகப் பார்த்தவர்கள், “இலக்கியம் சமுதாயத்திற்காகவே” என்னும் கருத்தை முன்வைத் தனர். இப்படி ஏற்பட்ட மோதல்தான் “கலை கலைக்காகவே” “கலை வாழ்க்கைக்காகவே” என்று வருணிக்கப்படுகிறது. ஒரு பொருளைச் செம்மையாக, அழகாகச் செய்வதே அதை நன்கு பயன்படுத்தத் தானே? ஆகவே இவ்விருநோக்குகளுக்கும் இடையே பெரிய முரண் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.

தகவலியல் நோக்கில் மார்ஷல் மெக்லூகன் இதை அழகாக ஒரு தொடரில் வெளிப்படுத்தியிருக்கிறார்: Medium is the Message. அதாவது வடிவம் வேறு பொருள் வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். வடிவத்தை மாற்றும்போது, அதன் செய்தியும்-அதாவது உள்ளடக் கமும் மாறிப்போகிறது.

ஒரு ஆசிரியன் அல்லது படைப்பாளி, ஏதேனும் ஆழமான விஷயங்களை-அனுபவங்களை வெளிப்படுத்தவேண்டும் என்ற நோக்கினை அண்மைக்கால இலக்கிய விமரிசனம் புறக்கணிக் கிறது. அமைப்புவாதம் வந்த பிறகு ஒரு பிரதிக்கு ஆசிரியரே மூல காரணம் என்ற நோக்கும் மாறிவிட்டது. (இதைச் சில விமரிசகர்கள் “ஆசிரியனின் மரணம்” என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இப்போது விமரிசனம், Critique என்பதாக மாறிவிட்டது. Critique என்பது, ஓர் இலக்கியப் பிரதி என்ன உணர்த்துகிறது என்னும் பகுப்பாய்வு மட்டுமல்ல, அப்பிரதியை உருவாக்க உதவிய அரசியல், சமூக, உளவியல் காரணங்கள் யாவை எனவும் ஆராய்வதாகும். அது மட்டுமல்ல, சில பிரதிகள் மட்டும் ஏன் விமரிசனத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, பிரதிக ளில் விமரிசனம் தான் விரும்பும் அர்த்தத்தினை எப்படிக் கண்டுபிடிக்க முனைகிறது என்பனவற்றையும் இது ஆராய்கிறது. இவையெல் லாம் சிக்கலான பிரச்சினைகள்.

நவீன இலக்கிய விமரிசனம் பலவகைகளில் பழைய விமரிசன முறைகளிலிருந்து மாறியிருக்கிறது. இதுவரை ஆசிரியர் என்ன கூறுகிறார் எனக் காண்பதே விமரிசனத்தின் முக்கியப் பார்வை யாக இருந்தது. (மாணவர்களுக்குத் தேர்வில்கூட, இக்கவிதையில் ஆசிரியர் என்ன கூறுகிறார் என்தே வழக்கமான கேள்வி). அழகியல் திறனாய்வு, புதுத்திறனாய்வு முறைகள் வந்தபோது, இந்த கவனம் பிரதியின்மீது குவிக்கப்பட்டது. (அதாவது இந்த நூல் என்ன சொல்கிறது, எதை உணர்த்துகிறது, எந்த உத்திகளைக் கையாள்கிறது, இதுபோல). ஆனால் நவீன விமரிசன முறைகள் வாசகன் எப்படிப் பிரதியில் தனது கருத்தைக் காண்கிறான் என்பதைப் பற்றியதாக அமைகிறது. அது மட்டுமல்ல, பிரதியின் அர்த்தமுண்டாக்கும் வழிகள் யாவும் கேள்விக்குள்ளாக்கப் படுகின் றன.

தமிழில் இன்னும் இப்போக்கு வேர்பிடிக்கவில்லை. எனினும் ஒருசிலரேனும் பிரதிகளில் காணப்படும் நிச்சயமின்மைகளையும் முரண்பாடுகளையும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலேசென்று விமரிசனத்தின் முரண்பாடுக ளையும் நிச்சயமின்மைகளையும் ஆராய்கிறார்கள். இதற்குத் திறனாய்வுக் கொள்கைகளின் வளர்ச்சி உதவுகிறது.

தமிழில் மிகவும் வேர்பிடித்த நோக்கு என மார்க்சிய விமரிசனத் தைச் சொல்லலாம். சாதாரணமாக, ஒரு விமரிசகன் ஒரு பிரதியைப் பற்றி என்ன கூறுகிறான் என்பது அவன் என்ன அடிப்படை எண்ணங்களோடு பிரதிக்குள் நுழைகிறான் என்பதைப் பொறுத்திருக்கிறது. பல சமயங்களில் இந்த அடிப்படைகள், வெளிப்படச் சொல்லப் படாதவையாகவும், உறுதிப்பாடற்றவை யாகவும்கூட இருக்கின்றன. ஆனால் மார்க்சிய நிலைப்பாடு மிகவும் தெளிவானது. மார்க்சியத் தத்துவ அடிப்படையில் – மார்க் சிய வரலாற்று நோக்கில் பிரதி ஆராயப்படவேண்டும். வர்க்கப ்போராட்டம் என்னும் அடிப்படையை ஏற்கவேண்டும். நூலுக்கும் நூல் எழுந்த சமுதாயத்தின பொருளாதார அமைப்புக்குமான தொடர்பு நன்கு விளக்கப்படவேண்டும்.

அடிப்படைகள் இப்படித் தெளிவாக இருந்தாலும், எந்தநூலும் மார்க்சியத் திறனாய்வாளர்களிடையே ஒரேமாதிரி விமரிசன எதிர்வினையை உருவாக்கவில்லை. மார்க்சியம் என்ற அரசியல் செயல்முறை இன்று அழிந்துவிட்டதாக முதலாளித்துவநாடுகள் பிரச்சாரம் செய்தாலும் மார்க்சிய இலக்கியவிமரிசனம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு பண்படாத மார்க்சிய விமரிசகன், இலக்கியம் சார்ந்த கலைகள் அனைத்தையுமே புறக்கணிக்கக்கூடும். நடுத்தரவர்க்க எழுத்தாளர்கள், நடுத்தரவர்க்கத்தின் பிரச்சினைகளையும் மனோ பாவங்களையும் வெளிப்படுத்தும் இந்த எழுத்துகள் சமூகத்திற்கு என்ன பயன் விளைவிக்கும் என்று கருதக்கூடும். ஆயினும் இப்படிப்பட்ட விமரிசனங்கள் 1930களுக்குப் பின்னர் வெளிப் படுத்தப் பட்டதில்லை. உண்மையில் மார்க்சிய விமரிசகர்களுக்குக் கலையின் மீது அளவற்ற மரியாதை இருப்பதைக் கண்டிருக்கி றோம். எழுத்தாளன் விலகிநின்று தன் சமூகத்தை நோக்கி, அதில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துணர்த்தக் கலையைப் பயன்படுத்த மார்க்சியம் வ்ழியமைத்துத் தந்திருக்கிறது.

பெரும்பாலும் பழங்கால மார்க்சியத்திறனாய்வுகள், வரலாற்றுச் சான்றுகள் வாயிலாக இலக்கியம் எழுந்த காலத்தை மீட்டுரு வாக்கி, அக்கால இலக்கியம் எந்த அளவுக்கு அந்தச் சமூக யதார்த்தத்தின் புரிந்துகொள்ளலாகவும், வெளிப்பாடாகவும் அமைந் திருக்கிறது என்பதைக் காண்பதாக அமைந்தன. மார்க்சியத்திற்கு மிகப்பிடித்தமான கொள்கையாக யதார்த்தவாதமும் பிடித்த இலக்கிய வகையாக நாவலும இருந்துவந்துள்ளன. ஜார்ஜ் லூகாச் முதல் கைலாசபதி வரை இந்த மனப்பாங்கினைக் காண இயலும். ஏனெனில் நாவல் சமூகத்தின் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கவல்லது என்பது கருத்து. ரேமண்ட் வில்லியம்ஸின் டிக்கன்ஸ் முதல் லாரன்ஸ் வரை ஆங்கில நாவல் (1970) என்னும் படைப்பு இம்மாதிரியான விமரிசனங்களில் குறிப்பிடத் தக்கது.

மார்க்சிய விமரிசனத்தின் உடனடி அக்கறை லோகாயதமான பொருளியல் நிலை என்றாலும், சமூகத்தில் கலையின் பணி பற்றியும் பிரதிகளின் கருத்தியல் பற்றியும் மார்க்சியர்கள் காட்டிய அக்கறை பிரதானமானது. அமைப்பியம் வந்த பிறகு அது இந்தக் கேள்விகளை இன்னும் ஆழமாக எழுப்பியது. மரபுசார்ந்த மார்க்சிய இலக்கிய விமரிசனம், பிரதிகளின் முழுமை, அழகியல் சீர்மை இவற்றை வலியுறுத்தியே வந்தது. அமைப்பியம் வந்தபிறகு பிரதியின் செயற்கைத்தன்மை, கட்டமைக்கப்பட்ட தன்மை என்பது வலியுறுத்தப்பட்டது. ஒரு பிரதியின் இயல்பு, பணி பற்றிய கேள்விகளை அமைப்பியம் எழுப்பியதால் அண்மைக்கால மார்க்சியம் அவற்றை ஜீரணித்துக்கொண்டு முன்னேற வேண்டியதாயிற்று.

லூயி அல்தூசரும் பியர் மாஷரியும் மிகமுக்கியமான இருபதாம் நூற்றாண்டு மார்க்சிய அமைப்பிய விமரிசகர்கள். மாஷரி, ஒரு பிரதியிலுள்ள இடைவெளிகளைக் கண்டு, அவற்றின் வாயிலாக வாசகனிடமிருந்தும், தனக்குத் தானேயும் பிரதி என்னென்ன வற்றை மறைக்க முயலுகிறது என்பதைக் கண்டறியவேண்டும் என்று வலியுறுத்தினார். அல்தூசர், பிரதிகளை முழுமையற்றவை, அவற்றின் கருத்துருவங்கள் முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்வதால் சுய முரண்பாடுள்ளவை என்று காண்கிறார்.

கருத்தியல் என்பது “நமது சிந்தனைகளைக் கட்டமைக்கும்-நாம் உலகைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் பயன்படுத்தும் – நம்பிக் கைகள், சிந்தனைமுறைகள், கருத்துகள் ஆகியவற்றைக் குறிக்கும் ஒருசொல்” எனலாம். ஓர் அரசியல்/பொருளாதார ஒழுங்கமைவின் நம்பிக்கைகள் மற்றும் சிந்தனைகளின் கட்டமைவு என்றும் சொல்லலாம். மார்க்சிய நோக்கின்படி எந்த ஒரு காலத்திலும், மனிதனுடைய புரிந்துகொள்ளல்-அவனது அறிவு என்பது அவன் காலத்துக் கருத்தியலால் கட்டமைக்கப்படுகிறது. உதாரணமாக இடைக்காலத்தில் சமயநம்பிக்கைகள், விதிக்கொள்கை, மறுபிறப்பு போன்ற கொள்கைகள் அடங்கிய கருத்துருவம் மேலோங்கியிருந் ததால் அவற்றின் வழியே நமது முன்னோர்களின் சிந்தனை கட்டமைக்கப்பட்டது. இன்றைக்கு இந்திய மக்களின் சிந்தனை அமெரிக்க வழிப்பட்ட முதலாளித்துவ, வணிகச் சிந்தனையாக மாறியிருக்கிறது. பொருளாதாரம் அடிக்கட்டுமானம் என்றும் கருத்தியல் மேற்கட்டுமானம் என்றும் பகுப்பது மார்க்சிய வழக்கம். அதாவது நாம் எந்தப் பொருளாதாரச் சூழலில் எந்த வர்க்கத்தில் பிறந்திருக்கிறோமோ அதன் ஒரு சிக்கலான வெளிப்பாடாகவே நமது சிந்தனைகள், நம்பிக்கைகள், மதிப்புகள் ஆகியவை அமைகின்றன என்பது கருத்து.

ஆனால் சமூகத்தில் பொதுவாக நிலவும் கருத்தியல், அதாவது ஆதிக்கக் கருத்தியல் சமூக நிலைமைகளை வெளிப்படுத்துவதாக அமையாமல், உண்மையான உறவுகளையும் ஆதிக்கத் தன்மைக ளையும் மறைக்கவே பயன்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், கருத்தியல் ஆதிக்க வகுப்பினருக்குச் சாதகமாக இயங்குகிறது. ஆதிக்க வகுப்பினருக்குச் சார்பானவற்றையே எண்ணும் எண்ண மாக ஒடுக்கப்பட்டவர்களை ஆக்குகிறது. இருக்கும் சமூக உறவுகள் நல்லவை, நேர்மையானவை, பாகுபாடற்றவை என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதனை எதிர்த்துப் போராடாமல் இருக்க ஏழை எளியவர்களை மூளைச்சலவை செய்கிறது. இதன் வாயிலாக ஒடுக்கப்பட்டவர்களின் ஒத்துழைப் புடனே அவர்களை ஆதிக்கத் திற்கு அடிமையாக்குகிறது.

அல்தூசர், கருத்துருவம் என்பது நமது சிந்தனைகளைக் கட்ட மைக்கும் சிந்தனைத் தொகுப்பு மட்டுமன்று, நமது பொதுப் புத்தியே அதுதான் என்கிறார். நாம் மொழியைக் கற்கும் இளங் குழந்தை நிலையிலேயே ‘சப்ஜெக்ட்’ (இச்சொல்லுக்கு ஒரு செயலைச் செய்யும் கர்த்தா, எழுவாய், குடிமகன், அடிமை எனப் பலபொருள்கள் உண்டு – அனைத்தையும் குறிப்பதாகவே அமைப் பிய விமரிசனம் இச்சொல்லை ஆள்கிறது.) ஆக்கப்பட்டு விடுகி றோம். கருத்தியல்தான் மொழி. அதுதான் நம்மை உருவாக்கி, நாம் தனித்த அடையாளம் கொண்ட மனிதர்கள் என நம்மை உணரவைக்கிறது. ஒருவகையில் சொன்னால் நாம் நமது கருத்தி யலைத் தேர்ந்தெடுப்பதில்லை. நமது கருத்தியல்தான் நம்மைத் தேர்ந்தெடுக்கிறது. (நமது பொருளாதார நிலையையோ, சமுதாயத் தையோ, பேசும் மொழியையோ தேர்ந்தெடுக்கும் உரிமை பிறப்பதற்கு முன் நமக்கு வழங்கப்படவில்லையே). மேலும் கருத்தியல் ஒரு சிந்தனைக்கட்டாக மட்டும் நிற்பதில்லை. அரசுக் கருவிகள் எனப்படும் சமூக நிறுவனங்கள், (குடும்பம், பள்ளி, சமூக அமைப்புகள், சட்டம்…) வாயிலாக அதற்கு ஒரு பருமையான இருப்பும் இருக்கிறது. மனித சப்ஜெக்டை (அடிமைக் குடிமகனாகிய தனிமனித கர்த்தாவை) உருவாக்குவதில் எல்லாச் சமூக நிறுவனங்களுக்கும் பங்கிருக்கிறது.

இலக்கியங்களில் கூறப்படும் சமூக நிறுவனங்களை ஆய்வதற்கு அல்தூசரின் கருத்துக்கள் மிகவும் உதவும். உதாரணமாக ஒரு நாவலில் திருமணம் என்னும் சமூக நிறுவனம் எப்படிச் சொல்லப்படுகிறது என ஆராயலாம். கலாச்சாரப் படிப்புக்கும் ஆய்வுக்கும் அல்தூசரின் கொடை மிகப்பெரியது.
பிரதிகளின் கருத்துருவம் முரண்பாடுகளுக்கும் இடர்ப்பாடுகளுக் கும் இடையில் சிக்கிக் கொள்வதால் ஆசிரியன் என்ற கருத்தை வைத்து அவற்றைத் தீர்க்கமுடியாது என்று சொல்கிறார் அல்தூசர். பூர்ஷ்வா கலாச்சாரத்தில் அடங்கியுள்ள முரண்பாடுகள், பிரச்சினைகள் இவற்றை நன்கு ஆராயந்து பார்ப்பதன் வாயிலாக, பிரதிகளில் காணப்படும் கருத்தியல் மதிப்புகள் எவ்விதம் முழுமையற்றவை, அல்லது போதாதவை, அல்லது சுயசிதைப்புச் செய்யக்கூடியவை என்பதையெல்லாம் உணரமுடியும். இலக்கியத் தை எதிர்மறையாகப் பார்க்கும் நோக்கு இது என்று தோன்றினா லும, இலக்கியத்தையும் வரலாற்றையும் துருவிநோக்கி, பிரதிக் கும் வெளியுலகிற்குமான தொடர்பை நிறுவவதில் மிகப் பயனுள்ளதாக இருக்கிறது.

இம்மாதிரித் திறனாய்வின் முக்கியப் பயன், இலக்கியப் பிரதிகள் வாழ்க்கையைப் பற்றியும் மனித இயல்பைப் பற்றியும் காலத்திற்கு அப்பாற்பட்ட என்றும் மாறா உண்மைகளை உணர்த்துபவை என்னும் எண்ணத்தைத் தகர்க்கிறது. ஒரு பிரதி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எப்படி உரியதாகிறது என்றும், அக்கால மனிதர்கள் எப்படித் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை உணர்ந்துகொண்டார் கள் என்றும் காட்டுகிறது மார்க்சிய விமரிசனம்.

நேரிய மார்க்சிய ஈடுபாடுள்ள டெரி ஈகிள்டன், ஃபிரடெரிக் ஜேம்சன் போன்றவர்களின் விமரிசனங்கள் எப்போதும் ஒரு தீவிர அரசியல் மாற்றத்தைக் குறித்தே இயங்குகின்றன.

அதேசமயம், மார்க்சியர் அல்லாத பலர் இலக்கியப் பிரதிகளையும் சமூகத்தில் அவற்றின் பணியினையும் மறுவாசிப்பு செய்து மறுபரிசீலனைக்குட்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். இம்மாதிரிச் செய்யும்போது ஏறத்தாழப் பெண்ணியத்தின் நோக்கங்க்ளை ஒத்த நோக்கம் கொண்டதாக மார்க்சியப் பார்வை இயங்குகிறது. அமைப்பியவாதிகளும் தகர்ப்பமைப்புக்காரர்களும் சமூக, அரசி யல் பிரச்சினைகளில் ஈடுபட மறுக்கின்ற அதேசமயம், நவமார்க்சி யர்கள், பெண்ணிய வாதிகள், நவவரலாற்றியலாளர் ஆகியோர் ஓர் இலக்கியப் பிரதியில் உணர்த்தப்படும் ஒழுங்குணர்ச்சியின் விளைவாக ஏற்படும் அரசியல் பிரச்சினை களை எழுப்புகிறார்கள். மேலும் சமூகத்தைப் பொறுத்துத் தனிமனிதர்களின் நிலையை ஆராய்கிறார்கள்.
இதுவரை பார்த்தவற்றிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் திறனாய்வுப்போக்கு அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிந்திருப் பதாகத் தெரிகிறது. ஒன்று, பிரதிகளை வரலாற்றிலிருந்து விலக்கி, தனியே நிறுத்திப்பார்க்கவேண்டும் என்ற ஆய்வு. வடிவவியல் ஆய்வுகள் யாவும் இந்த நிலைப்பாட்டை எடுக்கின் றன. இன்னொன்று, இலக்கியப் பிரதிகளை வரலாற்றுப் பின்புலத் திலே வைத்தே பார்க்கவேண்டும் என்ற ஆய்வு. இதைத்தான் மார்க்சியர்கள், நவவரலாற்றியலாளர்கள் யாவரும் பின்பற்றுகின் றனர்.

1943இல் டில்யார்டு என்னும் விமரிசகர், The Elizabethan World Picture என்னும் நூலில் இராணி எலிசபெத் காலத்தில் இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்ட உலகத்தைப் பற்றிய ஆய்வில் ஈடுபடுகிறார். அதில் அக்காலஉலகின் மனித நிறுவனங்களை மட்டுமல்லாமல். இயற்கை நிகழ்வுகளையும் ஒரு பிரபஞ்ச உலகஒழுங்கு நிர்வ கிக்கிறது என்னும் முடிவுக்கு வருகிறார். டில்யார்டு எங்கெல்லாம் பிரபஞ்ச ஒழுங்கினைக் கண்டாரோ அங்கெல்லாம் ஒழுங்கின்மை யைக் காணக்கூடியவர்கள்தான் நவவரலாற்றியலாளர்கள். பெண் கள், குழந்தைகள், குடியுரிமை அற்றவர்கள், வாக்குரிமை அற்ற வர்கள், ஏழைகள் போன்றவர்களின் கருத்துலகைப் பற்றி டில்யார்டின் நூல் எதுவுமே சொல்லவில்லை. ஒரு சில பெருமக் களுக்கே உரியதாகவே டில்யார்டு காட்டும் ஒழுங்கு அமைந் திருந்தது. அதைச் சுற்றிப் பிற மனிதர் இருக்குமிடங்களெல்லாம் ஒழுங்கின்மையே சூழ்ந்திருந்தது. ஆக, நவவரலாற்றியம் இலக்கி யத்தையும் வரலாற்றையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தி, ஒருசீர்மைத்தான உலகப் பார்வையைச் சீர்மையற்ற, விவாதக் களமாகப் பார்க்கிறது.

நவவரலாற்றியம் என்றால் என்ன? இந்தச் சொல் அமெரிக்கத் திறனாய்வாளர் ஸ்டீபன் கிரீன்பிளாட் என்பவரால் உருவாக்கப் பட்டது. 1980களின் தொடக்க்ததிலிருந்தே அமெரிக்கத் திறனாய் வாளர்கள் சிலர் இலக்கியப் படைப்புகளை அவற்றின் வரலாற்று, அரசியல் சூழல்களில் வைத்துப் பார்த்து, அவற்றை மறுபரிசீ லனை செய்ய வேண்டுமென்ற ஆவல் கொண்டார்கள். இதனைத்தான் நவவரலாற்றியம் என்று குறிப்பிட்டார் கிரீன்பிளாட்.

பிரிட்டிஷ் மார்க்சிய விமரிசகரான ரேமண்ட் வில்லியம்ஸ், இதனைப் போன்றதொரு அணுகுமுறையைப் பெருமளவு உருவாக்கினார். அதற்கு அவர் கலாச்சாரப் பொருள்முதல் வாதம் எனப் பெயர்கொடுத்தார். ஒரு பிரதிக்குள் அமையும் சொல்லாடல்கள் எப்படித் தங்களுக்குள் முரண்பட்ட கருத்தியல் நிலைப்பாடு களை உணர்த்துகின்றன என்று ஆராய்வது இது. வரலாற்றிலும் கொள்கை முறையிலும் அரசியல் முறையிலும் இலக்கியப் பிரதிகளைப் பொருத்திப் பார்த்து, அவற்றின் உட்குறிப்புகள் என்ன என்று ஆராய்வது, கலாச்சார உற்பத்திக்கான நிறுவனங்களோடு இலக்கியப் பிரதிக்கான உறவு என்ன என்று ஆராய்வது ஆகியவற்றை ஆராய்வது இம்முறை என்று சொல்லலாம். கலாச்சாரப் பொருள்முதல் வாதம் மார்க்சியக் கோட்பாட்டை அடிப்படையில் நம்புகிறது. இதேபோன்ற வரலாற்று அணுகு முறையை நவவரலாற்றியம் பின்பற்றினாலும் மார்க்சியப் பார்வையை அது கொள்வதில்லை. இதுதான் வேறுபாடு. மேலும் இந்த அணுகுமுறை ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு என்ற நிலைப் பாட்டை வெளிப்படையாகக் கொள்கிறது. நவவரலாற்றியம் ஆதிக்க எதிர்ப்பு என்பதைவிட, பிரதிகள் எப்படி அந்தந்தக் காலத்திற்கேற்ற பழமைத்தனமான கருத்தியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தன என்பதை முதன்மைப்படுத்துகிறது.

நாம் செய்யும் வரலாற்று இடைவெளிகள் பற்றிய ஆய்வு அகவயப்பட்டது, புறவயப்பட்டதல்ல, அது இக்கால நிகழ்வுகள் அடிப்படையில் பழங்கால வரலாற்றில் நாம் கொள்ளும் ஆர்வத் தினால் கட்டியெழுப்பப்படுகிறது என்பது நவவரலாற்றியத்தின் அடிப்படை நிலைப்பாடு. டெரிடாவின் தகர்ப்பமைப்பு தத்துவ அருவப்படுத்தலுக்கு இட்டுச் செல்கிறது என்று கவலைப்பட்டவர் களுக்கு நவவரலாற்றியம் ஒரு திறப்பாக அமைந்தது. நவ வரலாற்றியர்களில் பிரதானமானவரான ஃபூக்கோ, மேற்குச் சமூகத்தில் சுயம் பற்றிய கருத்து எப்படிக் காலப்போக்கில் பரிணமித்து உருவாகி வந்திருக்கிறது என்பதை முக்கியமாக ஆராய்கிறார். மேற்குறிப்பிட்ட தாராளமனிதநேயவாதிகள் எப்போ துமே சுயத்தை நம்பக்கூடிய முழுமையான பருமையான யதார்த்தமாகவே பார்த்தனர். ஆனால் மனநோய், தண்டனை, பாலியல் தன்மை பற்றிய தமது நூல்களில் ஃபூக்கோ அறிவின் சிறப்பான பரப்புகளில் அல்லது சொல்லாடல் களங்களுக்குள் சுயம் எப்படிப் பலியாடாகியிருக்கிறது என்பதைக் கண்டிருக்கிறார். அதாவது வரலாற்றை மறுவாசிப்புச் செய்து, சுயத்தைப் பற்றிய ஓர் உறுதியற்ற எண்ணத்தையும், சமூகத்தில் நிலவும் ஆதிக்க உறவுகள் பற்றிய தொந்தரவு படுத்தும் நிலைப்பாட்டையும், உருவாக்கியிருக்கிறார் எனலாம்.

இதுவரை வரலாறு, ஒரு வசதியான, மனித இனம் முன்னேறு கிறது என்னும்அடிப்படை எண்ணம் கொண்ட, மனித சுயங்கள் வரலாற்றில் தன்னிச்சையாக ஈடுபடுகின்றன என்னும் நிலைப் பாடு கொண்ட சொற்கோவைகளை உருவாக்கின. ஃபூக்கோவின் வாசிப்பு இவை யாவற்றையும் மறுக்கிறது.

ஆகவே நவவரலாற்றியர்களுக்கு வரலாறு என்பது தேதிகள் குறித்த, போர்கள், சம்பவங்கள் குறித்த விஷயம் அல்ல. அரசியல் ஆதிக்கம், கருத்தியல், அவற்றை உடைத்தல் போன்றவை பற்றிய ஒன்று. பாதல் சர்க்காரின் மீதி சரித்திரம் என்னும் நாடகநூலில் இந்த நிலைப்பாடு தெளிவாக விளக்கப்படுவதைக் காணலாம்.

மேலே சொல்லாடல், சொற்கோவை என்னும் சொற்கள் ஆளப்பட்டன. ஓர் எடுத்துரைப்பில் (Narrative-அதாவது கதை, நாவல், சிறுகதை, கட்டுரை போன்ற எதுவும்) சொற்கோவை அல்லது சொல்லாடல் என்பது அதில் ஆளப்பட்டுள்ள மொழி யமைதி, இழைவமைதி ஆகியவற்றைக் குறிக்கிறது. அதாவது ஒரு பிரதி எப்படி எழுதப்பட்டுள்ளது என்ற முறையை-அதன் உள்ளடக்கத்தை அல்ல-இச்சொல் குறிக்கிறது.) ஆனால் அடிப் படையில் சொல்லாடல் என்பது மொழி எப்படி ஒழுங்குபடுத்தப் படுகிறது வகைபாடு செய்கிறது என்பதைப் பற்றியது. ஆகவே ஃபூக்கோ தனித்தனித் துறைகளில் (மருத்துவம், பொறியியல், உளவியல் போன்றவை) மொழி செயல்படும் விதத்தை இச் சொல் வாயிலாகக் குறிக்கிறார். உதாரணமாக, மருத்துவம், உளமருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் மனித சப்ஜெக்டைக் கட்டுப்படுத்தும் விதமான அவர்களை பயமுறுத்தி ஆதிக்கத்திற்கு அடங்கச் செய்யக்கூடிய சொற்கோவைகள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகக் கையாளப்படுகின்றன. அதாவது, சமூக நிறுவனங்களுக்கேற்ற வகையில் மொழி குறிப்பிட்ட சில வகைகளில் மனிதர்களை இயங்கச் செய்யப் பயன் படுத்தப்படுகிறது.

ஆனால் சொற்கோவை அல்லது சொல்லாடல் என்பது ஆதிக்கக்களத்தில் ஆதிக்க வாதிகளுக்குச் சார்பாக மட்டுமே இயங்குகிறது என்று சொல்லமுடியாது. ஆதிக்கத்திற்கு எதிரான சொல்லாடலும் உண்டு. சுருக்கமாகச் சொன்னால் சொல்லாடல் என்பது இருப்பதை அப்படியே ஒப்புக்கொள்வதாக இருக்க முடியாது. வெளிப்படையாக ஆதிக்கம் சார்பான சொல்லாடலிலும் அதற்கெதிரான கருத்தியலை உடைய சொல்லாடல் உட் பொதிந்திருக்கிறது.

உதாரணமாக, ஷேக்ஸ்பியரின் சூறாவளி நாடகத்தில், பிராஸ்பரோ என்பவன் ஒரு தீவுக்குத் தலைவன்போலவே இருந்துவருகிறான். அவனுக்கு உதவி செய்ய எத்தனையோ ஆவிகள். காலிபன் என்பவனை அடக்கத் தனது மந்திர மொழியைப் பயன்படுத்துகிறான். காலிபனுக்குத் தனது மொழியைப் பேசக்கற்றுக் கொடுப்பவனும் அவன்தான். ஆனால் பேசக் கற்ற காலிபன் பிராஸ்பரோவைத் திட்ட மட்டுமே அதைப் பயன்படுத்துகிறான். ஆகவே பிராஸ்பரோ பயன்படுத்தும் காலனி யாதிக்க மொழியிலேயே அவனை எதிர்க்கும் அம்சமும், தனக்கு எதிரான மற்றது என்பதைப் பற்றிய அச்சமும் பொதிந்திருப்பதைக் காண்கிறோம்.
காலனியச் சொற்கோவைக் கொள்கை என்பது காலனியத்திலும் காலனியாதிக்கத்திலும் ஆளப்படும் சொல்லாடல் பற்றிய ஆய்வு. காலனியாதிக்கத்தின் சொல்லாடல் எவ்வாறு காலனியாதிக்கம் செய்வோருடைய அரசியல் பொருளியல் நிலைப்பாடுகளை மறைக்கிறது என்பதை நன்கு ஆராய்ந்துள்ளனர். காலனிய மொழியிலும் மேற்குறிப்பிட்ட அதே ஈரடித் தன்மை இருக்கிறது. ஏனெனில் அடிமைப்படுத்துவதும், அடிமையானோர் ஏற்றுக்கொள் வதும் ஒரே சொல்லாடலே.

பிற்காலனியவாதம், காலனியாதிக்கத்தினால் அடிமைப்பட்ட நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார, கலாச்சார, மாற்றங்களையும், அவற்றை எப்படி அம்மக்கள் எதிர்கொண் டார்கள் என்பதையும் பற்றியது. பிற்காலனியம் என்பதிலுள்ள பின் என்னும ஒட்டு, காலனியாதிக்கம் முடிவடைந்ததற்குப் பின்னால் என்று பொருள்படாது. மாறாக, காலனியாதிக்கம் தொடங்கிய பின்னால் என்று பொருள்படும். பல கலாச்சார விஷயங்கள் பற்றிப் பிற்காலனியக் கொள்கை கவலைப்படுகிறது. உதாரண மாக, அடிமை நாட்டு மொழிகள் மீது ஆதிக்கமொழிகளின் தாக்கம், தத்துவம் வரலாறு போன்றவற்றின் மீது ஐரோப்பிய/அமெரிக்கப் பெருஞ்சொல்லாடல்களின் ஆதிக்கம், காலனியக் கல்வி முறை யின் விளைவுகள், மேற்கத்திய அறிவுக்கும் ஆதிக்கத்திற்குமுள்ள தொடர்பு-இன்ன பிற. சுருக்கமாகச் சொன்னால், காலனியடிமை களான மக்களின் எதிர்வினைகள் பற்றிய ஆய்வு இது. ஆங்கில அடிமைகளான-மோகிகளான தமிழ் மக்களின்மீது தமிழ்க்கல்வி, தமிழ்ப்பள்ளிகள்கூட வேண்டாம் என்று சொல்லும் தமிழ்ச் சமுதாயத்தின்மீது எவ்வளவு தீவிரமாகக் காலனியம் இன்னும் ஆதிக்கம் செலுத்திவருகிறது என்பது பலகோணங்களில் ஆழமாக ஆராயப்படவேண்டிய ஒன்று.

“மற்றது” (The Other) என்னும் சொல் பின்னமைப்பியத்தில் விரிவும் ஆழமும் கொண்டது. தான் மறுக்கின்ற, தனக்குப் பிடிக்காத, தனக்கு எதிரான, தான் கண்டு பயப்படுகின்ற, தான் விலக்குகின்ற, தனக்கு நிழலாகத் தோற்றமளிக்கின்ற, தான் புரிந்துகொள்ள இயலாத…இதுபோன்ற எதுவும் “மற்றது” எனலாம். உதாரணமாக இனவாதம், கருப்பர்களைத் தங்களுக்கு அச்சம் தருபவர்களாகவும் அந்நியர்களாகவும் -அதாவது மற்றதாகப் பார்க்கிறது. இந்துத்துவ மும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் ஒருவர்க்கொருவரைத் தங்களை அச்சுறுத்துபவர்களாக-அதாவது “மற்றவர்க”ளாகப் பார்க் கின்றனர். ஆண்கள் பெண்களை “மற்றது” எனக்கருதுவதால்தான் அடிமைப்படுத்த முனைகின்றனர்.
இங்கெல்லாம் மொழி இருமை எதிர்வு முறையில், அதாவது கருப்பர்-வெள்ளையர், ஆண்-பெண், இந்து-முஸ்லிம், என்று செயல்படுவதைக் காணலாம். சொல்லாடல்தான் நம்மைக் கட்டுப்படுத்திப் பிரிக்கிறது, நம்மை இந்த உலகை ஆளவைக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறார். நாம் யாவரும் சொல்லாடல் களங்களாகவும் கருவிகளாகவும் அமைந்துவிடுகிறோம்.

1990களில் பின்னமைப்புவாதம், நவவரலாற்றியம் பற்றிய அக்கறை தமிழ்ச்சூழலில் சிற்றிலக்கிய உலகிலும் தலித்தியம் பெண்ணியம் போன்றவற்றைப் பேசியோர் இடையிலும் பிரதானமாயிற்று. பின்னமைப்பு என்பதோடு தகர்ப்பமைப்பு சிறிது குழப்பிக் கொள்ளவும் பட்டது. எனினும் தமிழ்ச் சூழலில் டெரிடாவை விட, லக்கானைவிட, ஃபூக்கோவும் லியோடார்டும், அதிகம் பேசப்பட்டுள்ளனர். ஓரளவு பூத்ரியேவின் கருத்துகளும் தகவற்சாதனத் துறையில் வைத்துப் பேசப்பட்டுள்ளன. பிற அமைப்பிய-பின்னமைப்பிய-நவவரலாற்றியர்கள் கருத்துகளைப் பற்றி எவரும் அதிக அக்கறைகாட்ட வில்லை.
இன்று இந்த நிலையில் தமிழ் விமரிசனம் வ்ந்து நிற்கிறது. தமிழ்த்துறைகள் இம்மாதிரிக் கொள்கைகளின் வரவில் அதிக ஆர்வம் காட்டவில்லை. சிற்றிதழ்களும் இப்போது ஆர்வம் குறைந்துள்ளன போல் தோன்றுகிறது. சமூகநோக்குச் சார்ந்த கொள்கைகள், மார்க்சியம் ஆகியவற்றில் தமிழ்த்துறையினருக்கும் மாணவருக்கும் ஆர்வம் ஏற்படுமாறு செய்ததில் வானமாம லைக்கும் அவர் உடனிருந்த குழுவினருக்கும் பங்குண்டு. பிறகு கைலாசபதி, சிவத்தம்பி போன்றோரின் தாக்கமும் ஏற்பட்டது. இந்த வரன்முறையான மார்க்சிய-சமூகவியல் பார்வையைத் தாண்டி நமது பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழிலக்கியம் பயிலும் ஒரு சில மாணவர்கள் இப்போது தலித்தியம், பெண்ணியம், பிற்காலனியம் போன்ற கொள்கை களிலும் ஆர்வம் காட்டிப் பயின்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்க்கல்வியுலகில் பல விமரிசனவகைகள் கொஞ்சம்கூடப் புகவேயில்லை. உதாரணமாக, நிகழ்விய-இருத்தலிய விமரிசனங் கள், வாசக எதிர்வினை விமரிசனங்கள் போன்றவை. சிலவகை விமரிசனங்கள் ஏற்படுமுன்னரே விபரீதமாக அவற்றுக்கு எதிரான கருத்துகள் பரப்பப்பட்டு விடுகின்றன. சான்றாக, உளப்பகுப்பாய்வு- குறிப்பாக ஃப்ராய்டிய, நவஃப்ராய்டிய விமரிசனங்கள். சிலவகை விமரிசனங்கள் மிகவிளிம்பில் இருக்கின்ற்ன. சான்று, மரபுசார்ந்த விமரிசனங்களில் தொன்ம விமரிசனமும், அண்மைக் கால விமரிசனங்களில் பிற்காலனிய விமரிசனமும்.

அரசியல் நிலைப்பாடு கொள்வோரில் தலித்தியம் பெரும்பாலும் பழைய மார்க்சிய நிலைப்பாடுகளையும் சில சமயங்களில் நவ வரலாற்றிய நிலைப்பாடுகளையும் எடுத்துள்ளது. பெண்ணிய அணுகுமுறை இம்மாதிரிக் கருத்துகளைப் பயன்படுத்திக்கொண்டு சரிவர வளரவில்லை. இனி எத்திசையில் தமிழ் விமரிசனம் செல்லும் என்பது இதுவரை வந்த கொள்கைகளை எவ்வளவு ஆர்வமாக மாணவர்கள் கற்கிறார்கள் என்பதையும், அவற்றை அவர்கள் பயன்படுத்தும் முறையையும் பொறுத்தது.

புதிய கொள்கைகள், அணுகுமுறைகளின் வரவையும் பொறுத்தது. பொதுவாகப் பல மாணவர்கள், இம்மாதிரிக் கொள்கைகளில் பயன்படுத்துகின்ற கலைச்சொற்களையும், மேற்கு நாட்டுத் தத்து வக் கருத்துகளையும் பார்த்து மருட்சியடைகின்றனர். இம்மருட்சி தேவையற்றது. பயிற்சி இவற்றிற்குப் பண்படுத்தும்.

மேற்குநாடுகளில் சுற்றுச்சூழல் அடிப்படையிலான விமரிசனம் வளர்ந்துவருகிறது. ஓரினப் பாலுறவு அடிப்படையிலான (கே, லெஸ்பியன்) விமரிசனங்களும் வளர்ந்துள்ளன. இவை இன்னும் தமிழில் வரவில்லை. இதற்குத் தமிழின் மரபுசார்ந்த மனப் பான்மை பெரிதும் காரணம். கருப்பின விமரிசனமும் ஆய்வும் அமெரிக்காவில் நன்கு வளர்ந்துள்ளன. நம் நாட்டு தலித் மக்கள் தங்களுக்கு ஒத்த இவ்வணுகுமுறையைப் பயன்படுத்திக்கொள்வது சிறப்பாக அமையும்.
—————–

 


வானம்பாடிகளும் சமூகக் கவிதைகளும்

வானம்பாடிகளும் சமூகக் கவிதைகளும்

(1984ஆம் ஆண்டு இலக்கு அமைப்பு நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை இது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்னால். ஒரு வரலாற்றுப் பதிவு என்னும் முறையில் மட்டும் இது வெளியிடப்படவில்லை, இக்கட்டுரையில் சொல்லப்படும் விஷயங்கள் இன்றைக்கும் தேவையானவை என்றே நினைக்கிறேன். -க. பூரணச்சந்திரன்)

ஒரு பரந்த பார்வையில் எல்லாக் கவிதைகளுமே சமூகக் கவிதைகள்தான். கவிதை என்பது கவிஞனின் புறச்சூழலில் நிகழும் யதார்த்த நிகழ்வுகளின் தீவிர உணர்வினால் ஏற்படும் அனுபவ வெளிப்பாடு. இவ்வனுபவ வெளிப்பாட்டைக் கவிஞர்கள் இரண்டு எதிர்முனைகளில் நின்று செய்கின்றனர். சூழலின் உணர்வில் தமக்குள் சுருங்கி தம் இயலாமையை வெளியிடுவது ஒருமுனை. சூழலை மாற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதுவது மற்றொரு முனை. இரண்டாவது வகைக் கவிதையே இங்கு சமூகக் கவிதைகள் என்று வரையறுத்துக் கொள்கிறேன். சமூகப் பொறுப்புள்ள கவிதைகளுக்கு நல்ல உதாரணம் பாரதியின் கவிதைகள். அவை வாழ்க்கையின் வெளியேயிருந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்காமல் அன்றைய தேவைக்கு வேகமாகச் செயலில் இறங்கிவிடுகின்ற ஒரு மிஷனரியைப் போல இயங்குகின்றன. அதுபோல இன்றைய சமூகக் கவிதையும் கவிஞனின் உள்ளத்துக்குள் உட்கார்ந்திருக்கும் உலகின் நிகழ்ச்சிகளை அனுபவமாக்கிக்கொண்டு இயங்க வேண்டியிருக்கிறது. இந்த அடிப்படையில் எழுத்துக் காலத்திலிருந்து தமிழ்க்கவிதை செயல்பட்டு வருவதைக் காணலாம்.

இன்றைக்குத் தமிழ்ப்புதுக்கவிதை வணிகப்பொருளாகச் சீரழிந்து போயிருக்கிறது. புதுக்கவிதை மட்டுமல்ல, அதற்கு முன்னரே தமிழில் அறிமுகமான நாவல், சிறுகதை இவையும் மக்களின் அன்றாடப் பசிக்குத் தீனி போடும் இரையாகத்தான் மாறியுள்ளன. இது 1980 அளவிலான நிலை.

1971-75 காலப்பகுதி, எழுபதுகளின் முற்பகுதி-தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றின் முக்கியமான மாற்றக்காலப் பகுதி. எழுபதுகள்வரை, புதுக்கவிதை தமிழ்நாட்டில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான ஓர் உயர்குழுவுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. 1971-75 காலப்பகுதிதான் புதுக்கவிதையைப் பரவலான பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்றது. எழுத்து பத்திரிகை புதுக்கவிதையை அறிமுகப்படுத்தி வளர்த்தபோது, அதன் தளம், சோதனை-வடிவச்செம்மை ஆகிய கால்களில் நின்றது. சோதனை முயற்சிகள் செய்யப்படும்போதே ஒரு பொருள் வணிகச் சந்தைப் பொருள் ஆவதில்லை. சந்தையில் இடம்பெறும் வாய்ப்பு தீர்மானிக்கப்பட்ட பின்னரே உற்பத்தி பெரிதளவு நடைபெறும். ஆகவே எழுத்துக் காலத்தில் புதுக்கவிதை புனிதப் பொருளாக இருந்ததென்றால் அதற்குக் காரணம், கவிஞர்களின் நேர்மை மட்டுமல்ல, அறிமுகப்படுத்தப்படும் புதுப்பண்டம் அது என்பதுதான். எதிர் முகாம்களில் இருந்தோர் அதை முதலில் ‘வெஜிடபிள் பிரியாணி’, ‘கோவேறு கழுதை’ என்றெல்லாம் ஏளனம் செய்து, பின்னர் அவை நசிவுக் கவிதைகள், வக்கிரங்கள் என்றெல்லாம் பழித்து, பிறகு இவ் வடிவத்தை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

எழுத்துக் காலப் புதுக்கவிதைகள் இவ்வளவு எதிர்ப்புக்குள்ளான தற்குக் காரணம் அவை தமிழ்க்கலாச்சார மரபோடு ஒட்டியவை அல்ல என்பதுதான். உலகப்போர்களில் சீரழிந்த மேற்கு நாகரிகத்தின் வீழ்ச்சியையும் மனமுறிவையும் மேற்குநாட்டுப் புதுக்கவிதைகள் கொண்டிருந்தன. இதே உணர்ச்சிகளை அப்படியே இங்கு பிரதிபலித்தன தமிழ்ப்புதுக்கவிதைகள். ஆனால் இவற்றின் உள்ளடக்கம் மட்டும் தமிழ்க்கலாச்சாரச் சீரழிவினைப் பிரதிபலிப்பதாக இருந்தது. சமூகவியல் ரீதியாகப் பார்த்தால், எழுத்துக் கவிதைகள், பெரும்பாலும் பிராமணர் குழு சார்ந்த மேலை மயமாதலின் வெளிப்பாடு. காலரீதியாகப் பார்த்தால், இவை வாழ்க்கையின் அனுபவத் தாக்கங்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிறைப்படுத்தியவை.

தொழில்நுட்ப யுகத்தைத் தாண்டி, மின்னணு பௌதிக யுகத்தின் இறங்கிவிட்ட போதிலும், மனிதனின் வாழ்க்கைப் பிரச்சினைகள் ஒன்றும் மட்டுப்படவில்லை. இன்றைய ஆன்மிக வாழ்வுகூடப் பன்னாட்டு அரசியல் பொருளாதார சமூக நிர்ப்பந்தங்களால் நிர்ணயிக்கப்படுகின்ற சூழ்நிலையில் எழுத்துக்கவிஞர்கள் பலரும் சமகால சமூகப் பிரச்சினைகளை மறந்து என்றைக்கும் உள்ளதான உள்முக உணர்வுகளைக் கவிதை செய்வது என்ற நிலையில் நின்றார்கள். இது அவர்கள் கவிதைக்கு ஒரு ஒற்றைப் பரிமாணத்தை அளித்தது. பிச்சமூர்த்தியின் ‘கிளிக்கூண்’டோ, நகுலனின் ‘கொல்லிப்பாவை’ யோ, வைத்தீஸ்வரனின் ‘ஞானக்கருமை’யோ, சுந்தர ராமசாமியின் ‘என் சிலையை உடை’, ‘நகத்தை வெட்டியெறி’ என்ற கவிதைகளோ, இவையெல்லாம் அகவுலகின் அறிவார்ந்த தளக் கவிதைகள். நாம் வரையறுத்துக்கொண்ட பொருளில் சமூகக் கவிதைகளல்ல.

அகவுலகென்ற ஒற்றைப் பரிமாணத்தில் கவிதை இயங்குவது ஒன்றும் தவறோ தாழ்ச்சியோ அல்ல. சமூகத்தில் இயங்கும் சக்திகளையும் நிகழ்ச்சிகளையும் கணக்கில்கொண்டு எழுதப்பட்டிருந்தால் அவற்றின் வீச்சு இன்னும் விரிந்திருக்கும். எழுத்து கவிதைகளின் மிகமுக்கியப் பணி, பாரதிதாசன் காலத்தி லிருந்து தொடர்ந்த தமிழ்க்கவிதையின் தேக்கத்தை உடைத்தது தான். தமிழ்நாட்டில் இந்த நூற்றாண்டு தொடங்கி பிராமணர்- அல்லாதார் போராட்டம் கூர்மைப்பட்டுப்போனது. பிராமணர் இயக்கம் எதுவாக இருப்பினும் அதற்கு வேளாளர் மரபுசார்ந்த, தமிழ்க்கலாச்சார மரபு சார்ந்த இயக்கம் ஒன்று எதிர்விளைவாகத் தோன்றியே தீரும் தேவை ஏற்பட்டது. பாரதிதாசன் திராவிடக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கவிதைகளைப் பாடினார். பாரதிதாசன் குழுவினர் – வாணிதாசன், முடியரசன், சுரதா போன் றோர் தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவம் கொண்டு கவிதை புனைந்துவந்தனர். பாரதிதாசன் காலத்திலிருந்தே பொதுவுடைமைக் கருத்து சார்ந்த மரபுக்கவிதைகளும் பாடல்களும் தோன்றின. இவை, ஜீவா, தொ.மு.சி. ரகுநாதன், கே.சி.எஸ். அருணாசலம் போன்றோரால் இயற்றப்பட்டவை. இவற்றையெல்லாம் நிராகரித்து எழுந்ததே எழுத்து சார்ந்த புதுக்கவிதைகள்.

பாரதியிடம் சமூகப்பொறுப்பும் எளிய முறையில் புனைவியல் குணத்தோடு மக்களிடம் சென்று சேரும் முறையில் கவிதை செய்ததும் காணப்பட்டன. அவரிடம் கலைத்தன்மையும் இருந்தது. இந்திய-தமிழ்க்கலாச்சார மரபுகளின் இணைப்பும் இருந்தது. பாரதிக்குப் பின் எழுத்து மரபினர், அவருடைய கலைப்பண்பையும் தேசியத்தையும் வேதாந்தக் கருத்தையும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் சமூகப்பொறுப்பை, எளிமையை, மக்களுக்குக் கொண்டு செல்லும் தன்மையை கைநழுவ விட்டனர். புதுக்கவிதை பிராமணர் இயக்கமாக இருந்ததும், அதன் எளிமையற்ற போக்கும், எழுத்து சார்ந்த கவிதைகள் பல புரியாமை கொண்டிருந்ததும், சமூகச் சார்பற்ற போக்கும், எழுத்துக்கு எதிரான புதுக்கவிதை மரபு ஒன்று உருவாக வேண்டிய சமூக நிர்ப்பந்தத்தை அளித்தன. இதனால் 1971 காலப்பகுதியில் வானம்பாடிகளின் தோற்றம் நிகழ்கிறது.

வானம்பாடி கவிதையில் சமூகப் பொறுப்பை வலியுறுத்திய இயக்கம். இது கோவையிலிருந்த பல்வேறு இலக்கியக்குழுக்கள் இணைந்து உருவானது. இதில் இரு தனித்த போக்குகள் இணைந்தன. ஒன்று, பாரதிதாசன் வழிவந்த பிராமணர் எதிர்ப்பியக்கம் சார்ந்த, தமிழ்ப்பண்பாட்டு மரபுசார்ந்த தமிழாசிரியர் கள் குழு. மற்றொன்று கவிதையில் மார்க்சியப் பார்வையை வலியுறுத்தும் இடது சாரிச் சிந்தனையாளர்கள் குழு. இவை இரண்டும் வானம்பாடிகள் இயக்கத்தில் இணைந்தாலும், ஆரம்பமுதலே கருத்து முரண்பாடுகள் இருந்துவந்தே உள்ளன. பாரதிதாசன் மரபுவழி வந்த தமிழாசிரியர்கள், பழைய மரபு வடிவம் புளித்துப் போய்ப் புதுக்கவிதைக்கு வந்தவர்கள். பொதுவான வலதுசாரிக் குணமும் மார்க்சியத் தத்துவங்களைக் கற்பதில் அக்கறையின்மையும் கொண்டவர்கள். திராவிட மரபு சார்ந்த சாதி எதிர்ப்பு, தேய்ந்த நாத்திகம், தமிழ்ப்பற்று, பட்டிமன்ற-கவியரங்கப் பாணி சொல் அலங்கார நேர்த்திகள் இவற்றை உடையவர்கள். இடதுசாரிச் சார்பினரோ, கவிஞர்கள் என்பதைவிட முதன்மையாகச் சிந்தனையாளர்கள். இவர்களும் அதுவரை இருந்த பொதுவுடைமைசார் கவிதைகளின் போதாமையை உணர்ந்தே இவ்வியக்கத்தில் பங்குகொண்டனர். இந்த இரு மரபினர்க்குமான தத்துவப் போராட்டமே பின்னர் 1975 அளவில் வானம்பாடிகள் இயக்கத்தை விரிசலுக்குள்ளாக்கியது.

புதுக்கவிதையின் சோதனைப் போக்கு வடிந்து, ஏற்புப்போக்கு உருவானதற்கு வானம்பாடிகள் ஒரு பிரதான காரணம். இந்திய பிராமணர் 19ஆம் நூற்றாண்டு முதலே மேலைமயமாதலுக்கு ஆட்பட்டவர்களாக இருந்தனர். பிறசாதியினர்-குறிப்பாக பிராமணர்க்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் இப்பிராமணர்களைப் பார்த்துத் தாமும் உயர்நிலைக் கலாச்சார மரபுகளை ஏற்கும் சமஸ்கிருதமயமாக்கலை மேற்கொண்டனர். இந்தப் பொதுச் சமூக நிகழ்வு, தமிழ்நாட்டின் சிறுபத்திரிகைச் சூழலிலும் வெளிப்பட்டது. எழுத்து பிராமணர்களின், மேலைமயமாதலின் வெளிப்பாடு என்றால், வானம்பாடி இதழ் பிராமணமயமாதலின் வெளிப்பாடு. வானம்பாடிக்ள் இயக்கம் அன்றைய ஒரு முக்கியச் சமூகத் தேவையை நிறைவேற்றியது. அதுவரை தமிழில இடதுசாரிச் சிந்தனையாளர்களுக்கெனத் தனிக் கவிதை ஏடு இல்லை. புதிய தலைமுறை போன்றவை அறிவார்ந்த கட்டுரைத் தளத்தில் இயங்கின. தாமரை போன்றவை வெறும் இயக்கப் பாடல்களைக் கவிதை என்ற பெயரில் வெளியிட்டன. இச்சமயத்தில் இடதுசாரிக் குரலுக்கு ஒரு உணர்வுத் தளமாக அமைந்தது வானம்பாடி இதழ். பாரதியிடமிருந்து இவர்கள், எழுத்து கவிஞர்கள் விட்டுவிட்ட சமூகப் பொறுப்பையும் புனைவியல் குணத்தையும் எளிமையையும் பெற்றனர்.

இக்கவிதை இயக்கம் சரியான திசையில் சென்றிருந்தால், அவர்களே சொல்வதுபோல, பாப்லோ நெரூடாக்களை உருவாக்கியிருக்கமுடியும். அவ்வா றின்றி, இந்தக் கவிதைகளின் வீழ்ச்சிக்கு, அன்றைய சீரழிந்த வெகுஜனக் கலாச்சாரத்தினின்றும் அவர்கள் பெற்ற சில இயல்புகளே காரணம். வானம்பாடிகளின் ஆரோக்கியமான பாதிப்புகளாகப் பின்வரு வனவற்றைச் சொல்லலாம்:

1. புதுக்கவிதைக்குப் பரவலான களம் ஏற்படுத்தியது.

2. புதுக்கவிதைகயின் பாடுபொருளை விரிவாக்கியதும் சமூகச் சார்பு தந்ததும்.

3. தமிழ் மண்ணிற்கே உரிய சித்தாந்த மரபுசார்ந்த மகிழ்நோக்கை இடதுசாரி மரபுக்கேற்ப மாற்றித் தந்தது.

4. தமிழ் மரபுசார்ந்த ஜனநாயகத் தன்மை, கிராமியத் தன்மை, லோகாயதத் தன்மை, தமிழ்தேசிய எழுச்சி இவற்றிற்குச் சார்பாகக் கவிதையில் நின்றது.

இவற்றிற்காகவே இவர்களை ஒரு தனி இயக்கமாக ஏற்க முடியும். இவர்கள் கவிதைகளின் பொது இயல்புகளாக, தன்னம் பிக்கை மிக்க வெளிப்பாடு, சாதி மத மறுப்பு, மனிதாபிமானம், சமகாலச் சிக்கல்களையும் சீர்கேடுகளையும் வெளிப்படுத்துதல், அனைத்துலகப் பார்வை, வரலாற்றுணர்வோடு வாழ்வில் நம்பிக்கையூட்டல் என்பவற்றைக் கூறலாம்.

இவர்களுடைய எதிர்மறைத் தன்மைகளும் பாதிப்புகளும்தான் விரிவானவை. பொதுவாக இவர்களின் குறைகள் அனைத்தையும் கவிதைநோக்கில் தெளிவின்மை, தத்துவ அடிப்படையின்மை என்ற இரண்டில் அடக்கிவிடலாம்.

1. கவிதை நோக்கில் தெளிவின்மை

வானம்பாடிகளில் கவிஞர்கள், தமிழக்கவிதைப் பாரம்பரியத்தின் மோசமான அம்சங்களை ஏற்றிருந்தவர்கள். தமிழ்க்கவிதை மரபில், வெறும் சொல் நேர்த்தி, சொல் ஜாலம் இவற்றையே கவிதை என்ற கொண்டாடும் பழக்கம் உண்டு. கவிதையில் சுவைபடச் சொல்லல், நயம்பட உரைத்தல் என்பது பழம்புலவர்கள் ஏற்றது. செய்நேர்த்தித் திறனையே கவிதை என்று கொண்டு சிற்றிலக்கியக் காலம் முதல் இன்றைய கவியரங்கக் கவிதைகள்வரை புனைவது உண்டு. இவர்களிடம வெறும் உத்திச் சேர்க்கைகள், அலங்கார வார்த்தைப் பந்தல்கள் கவிதை என்று இழிவது ஒருபுறம்; மற்றொரு புறம், சர்வ கொள்கைச் சமரசமும் கலாதரிசனமில்லாததால் கவிதையாகும். தன்னம்பிக்கை கொண்ட¢வெளிப்பாடு, மகிழ்நோக்கு கொண்ட வானம்பாடிகள் இதை வெளிப்படுத்திய முறை வெறும் சொல்லடுக்குகள்தான்.

பூமி உருண்டையைப் புரட்டக்கூடிய நெம்புகோல் கவிதை பாடுவோம்-

வானத்தைக் கீறி வைகறைகள் பறித்தெடுப்போம்-

மோனக் குரலுக்குள் முழங்கும் இடிவிதைப்போம்-

சூரியனைக் கண்களால் சுட்டெரிப்போம்-

நமது சிறகசைப்பில் ஞால நரம்பதிரும்-

என்பன இவர்களின் வீறாப்பு வசனங்களில் சில.

பாரதிதாசன் பாரம்பரியக் கவிஞர்களே அன்றி, ஆரம்பமுதலே முற்போக்காளர்களாக இருந்துவரும் கவிஞர்களும் இதேபோல ஆர்ப்பாட்டச் சொல்லடுக்குகளைத்தான் உபயம் செய்கின்றனர். உதாரணமாக-

எமது இதயச் சிவப்பு மைக்கூட்டை / உணர்ச்சி எழுதுகோல் தொடும்போதெல்லாம் / உதயரேகை போல் / சிவப்பாய்ச் சூடாய்க் / கவிதைவரிகள் புறப்படுகின்றன. (இன்குலாப், விடுதலை ராகம்) எம்

இதயத்தை உணர்ச்சி தொடும்போதெல்லாம் கவிதை பிறக்கிறது என்று சுற்றிவளைக்காமலே சொல்லலாம். இதில் கலைப்போர்வை இல்லை. நேர்மை இருக்கும். இவர் இதயத்தைச் சிவப்பு மைக்கூடாக்கி, உணர்ச்சியை எழுதுகோலாக்கி, வரிகளை உதயரேகையாக்கி, அதற்கு சிவப்பு சூடு என்றெல்லாம் அடைமொழி தரும்போது இதில் போலியுணர்ச்சிதான் மிஞ்சுகிறது. இதேபோல,

எமது அமுத தாரைகளால் / கூரைக் குடில்களின் / மண் குடங்களை / இளைய வேனிலின் / கனவுக் கிண்ணங்கள் ஆக்குவோம் / களைத்துக் கறுத்த சேரிப்புறங்களுக்காக / எமது புல்லாங்குழல்களில் / கீதாஞ்சலிகள் புனைந்துகொடுப்போம்…. (சிற்பி, நாங்கள்)

என்பதுபோன்று வரும் படிம அடுக்குகள் திகட்டுவது ஒருபுறமிருக்க, கவிதை என்ற பெயரில் பாமர மக்களை அணுகுகின்றன. கௌரவம் பெறுகின்றன. ஆனால் இவை செய்வதெல்லாம் மொழியை அலங்காரக் குப்பையாக்குவதே.

ஒரு சமூகப் பொறுப்புள்ள கவிதை வாழ்வின் அவலத்தை, மானிடக் கேவலங்களை, சமூகக் கொடுமைகளை, மக்கள் ஒடுக்கப்படுவதை, சுரண்டப்படுவதை வெளிப்படுத்தவேண்டும். அதேசமயம், அது கவிஞனின் வாழ்க்கை அனுபவமாகவும் இருக்கவேண்டும். இரவல் அனுபவங்களும், இரவல் கோஷங்களும் ஒருநாளும் கவிதையாக முடியாது.

அடக்குமுறை என்பது எங்கும் நடைபெறுவது. ஆனால் ‘அடக்குமுறையே ஒழிக’ என்று கத்துவது கவிதையல்ல. கவிஞனின் வாழ்வில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் அனுபவமானதைத்தான் அவன் கவிதையாக்க வேண்டும். சான்றாக, பாப்லோ நெரூடாவின் கவிதை ஒன்று: (சோஷலிசக் கவிதைகள் மொழிபெயர்ப்புத் தொகுப்பிலிருந்து, தலைப்பு-சர்வாதிகாரிகள்),

இரும்புக் காட்டில்/ அந்த வாசனை/ இன்னும் இருக்கிறது

என்று தொடங்குகிறது. அந்த வாசனை, ‘ரத்தமும் நிணமும் கலந்து குழம்பி வாந்தியெடுக்க வைக்கும் வாசனை.’ தென்னை மரங்களிடையே உடைந்த எலும்பு களால் நிரம்பிய சவக்குழிகளைக் கவிதை காட்டுகிறது. ‘இரும்புக்காடு’ என்பது கவனிக்கவேண்டிய பிரயோகமாக முதல் அடியிலேயே அமைய, ‘அந்த வாசனை’ என்பது எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. அடுத்த காட்சியில் நாசூக்கான ஓசைகள், அடிக்கடி கையுறை அணிந்த கனவான்களின் சிரிப்புகள். இவர்களால் நசுக்கப் பட்டவர்களோ, ஓயாது செடிகள் சொரிகின்ற விதைகள் போல அழுகிறார்கள். அவர்கள் அழுவது கண்ணுக்குத் தெரிவதில்லை. இவ்வாறு தேவையற்ற ஒரு சொல்லுமின்றி வளரும் கவிதை இப்படி முடிகிறது; “வெறுப்பு வளர்கிறது. சதுபபுநில அசிங்கமான தண்ணீர் போல ஈரமான மூக்கோடு ஓசை எழுப்பாத நனைந்த மிருக முகத்துடன்”.

இந்த விவரணத்தில் புனைவியல் தன்மையில்லை, யதார்த்தம்தான் இருக்கிறது. கனவுச் சார்பான படிமங்கள் இன்றி, உள்ளத்தில் பீறி எழும் வெறுப்பைத் தொற்ற வைக்கின்றன வரிகள். தொனிப் பொருளோடு, ‘ஈரமான மூக்கோடு ஓசை எழுப்பாத நனைந்த மிருக முகம்’ உள்ளதாக வெறுப்பு வளர்வது சொல்லப்படுகிறது. இக்கவிதையில் கோஷங்களோ உதவாத படிமங்களோ இல்லை. நெரூடா, அவர் சூழலில் பாதிக்கப்பட்ட அனுபவம் இது என்பதை இவ்வரிகளே உணர்த்துகின்றன.

ஆனால் தமிழக முற்போக்குக் கவிஞர்களும் வானம்பாடிகளும் வெறும் சொல்லடுக்குகளைக் கவிதையாக்குகின்றனர்.

நாங்கள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கைவைக்க முடியாது

என்பதுபோல நாங்கள்-நீங்கள் போட்டு எழுதுவது,

ஏ ஏகாதிபத்திய வேசியே! / நீ இன்று விதைத்ததை / நாளை நீயே அறுவடை செய்வாய் /

என்பதுபோல விளித்தலும் மிரட்டலும், அல்லது

வரங்களே சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக (அப்துல் ரகுமான்)

(இதில் ‘கள்’ பிரயோகம் மிக எரிச்சலூட்டும் ஒன்று)

எங்கள்மீது சாம்பலைத் தூவாதீர்கள் நாங்கள் நெருப்புக் கோழிகள் (கங்கை கொண்டான்)

என்பதுபோல முரண்படத் தொடுப்பது அல்லது

ஒரு தலைவன் பிறக்காத / நாளும் ஒரு நாளா / 365 தலைவர் இல்லாத / நாடும் ஒரு நாடா / (பாலா)

என்று கிண்டல் செய்வது; இன்னும்

இரவில் வாங்கினோம், இன்னும் விடியவே இல்லை

என்று புதிர் போடுவது இப்படிச் சமூகச் சார்புக் கவிதைகளைக் குறிப்பிட்ட சில வாய்பாடுகளில் அடங்குமாறு செய்துவிட்டனர். இவையும் இன்று வணிகத் தலங்களாகிவிட்டன. இதற்காக, வானம்பாடிகளிடம் நல்ல கவிதைகளே உருவாகவில்லை என்பதல்ல. அவை வெகு அபூர்வம். புவியரசின் ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ மாதிரி, சிற்பியின் ‘ஞானபுரத்தின் கண்கள் திறக்குமா’ மாதிரி, ரவீந்திரனின் ‘அடிமைகள்’ மாதிரி. அபூர்வம். மேற்சொன்ன ஃபார்முலாக்கள் படிமச் சேர்க்கைகள் இன்றி சுய அனுபவத்தை இயல்பாகத் தரும்போது கவிதையாகின்றன.

வானம்பாடிகளின் மிகமோசமான கொடை, ஓர் இன்ப நிறைவு தரும் கனவுப் பாணியைக் கவிதையில் கொண்டுவந்ததுதான். ஒரு பெண்ணின் சோகத் தைக்கூடக் கனவுமயப்படுத்தித்தான் இவர்களால் சொல்லமுடிகிறது.

அந்த மகரயாழின் அந்தரங்கத்திலே / தவங்கிடந்த ராகங்கள் / விரல்களின் நிராகரிப்பால் / சாபங்களின் / சந்தாத் தொகையாகி விட்டன (தமிழன்பன்)

இவர்கள் கவிதைகளின் தலைப்புகளிலேயே இந்தக் கனவுப்பாணிச் சொற்சேர்க்கைகளைக் காணலாம்.

சில நைலான் கனவுகள் எரிகின்றன, பசி தேவதைகள், ஒரு விஸ்வரூபத்தின் விழிப்புக்காக, துவாங்காத புயல்களின் பிரார்த்தனைகள், நித்திய வசந்த பூமியை நோக்கி, அப்போது இந்தப் புழுதிகள் பிரளயங்களாகும், சிகரங்கள் பொடியாகும் – இதுபோல கனவு மயக்கங்களிலேயே திருப்தியடை யும் இவர்கள் புரட்சி ஒன்று வந்தால் சந்திக்க இருக்கமாட்டார்கள். கனவின் தன்மையே Substitute Gratificationதானே?

ஆனால் கவிதை நிச்சயம் கனவல்ல. பழகிப்போன தடத்திலே சென்று ஒரு பார்வையும் அனுபவமும் அற்றுவிட்ட மனிதனுக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்து விழிக்க வைப்பது கவிதையின் முதல் பணி. கவிஞன் கொணரும் சொற்சேர்க்கைகள் ஒரு புதுமையை, பழக்கங்களிலிருந்து அந்நியத்தன்மையைக் கொண்டுவர வேண்டும். அதிர்ச்சியூட்ட வேண்டும். இவை மொழியின் சாத்தியப்பாட்டை விரிவாக்குவது மட்டுமல்ல, மொழியின் தளைகளிலேயே அனுபவத்தைக் குறுக்கிக் கொண்டு கிடக்கும் பொது மனிதனின் அனுபவ விரிவையும் ஏற்படுத்துகின்றன. ஒரு சில கணங்களிலேனும் மொழித் தளையை மீறி அனுபவத்தை நேர்முகமாக தரிசிக்க உதவுகின்றன. வானம்பாடிக் கவிதைகள் இந்த எல்லைக்குள் செல்லவே இல்லை. டி.எஸ். எலியட் ஒரு கட்டுரையில், “கீட்ஸ் ஈஸ் ஆல்சோ எ போயட்” என்று தொடங்குவதுபோல, “வானம்பாடிகளும் கவிஞர்களே” என்று ரொம்பவும் வேண்டாவெறுப்பாக (ரிலக்டண்ட்-ஆக) ஏற்கவேண்டி யிருக்கிறது.

வானம்பாடிகளிடம் கனவுத்தன்மை ஒரு தமிழ்த்தனத்தோடு செயல்படுவதை இவர்களுடைய அகம்-புறம் பாணிக் கவிதைத் தொகுப்புகளில் காணலாம். காமராசன், மீரா, மேத்தா, தமிழன்பன், சிற்பி முதலியோர் அகநானூறு-புறநானூறு போலக் காதல் புலம்பலுக்கு ஒரு கவிதைத் தொகுதி, சமூக விமரிசனத்துக்கு ஒரு கவிதைத் தொகுதி என்று புத்தகம் போட்டு வருகின்றனர். இவர்களுக்கு வாரிசுகளும் நிறைய. பாப்ரியா, சூர்ய காந்தன் என்று.

2. தத்துவ அடிப்படையின்மை

சமூகப் பொறுப்பேற்றுக் கவிதைகள் படைக்கும் எந்தக் கவிஞனுக்கும் தத்துவ அடிப்படை மிகத் தேவை. இதை வானம்பாடிகளில் கவிஞர் எனப் பெயர்பெற்றோர் உணர்ந்தனரா என்று தெரியவில்லை. மாறாக, ஞானி, ஜீவ ஒளி போன்றோர் இவர்களது கவிதைகளை விமரிசனம் செய்தபோது, “போடா விமர்சகா உன் நமத்துப்போன தீக்குச்சிகளைத் தூக்கிக்கொண்டு” என்றும் “கவிதையே வாழ்க்கையின் விமரிசனமாக இருக்கும்போது அதற்கொரு விமர்சனம் தேவையா?” என்றும் பழிக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்க்கை அனுபவங்கள் கவிதையாகின்றன என்றால் முரண்பட்ட அனுபவங்கள் ஏற்படும்போது என்ன செய்வது? இங்குதான் வாழ்க்கை நோக்கு உதவி செய்கிறது.

தத்துவ அடிப்படை என்னும்போது வெறும் மார்க்சிய அல்லது காந்திய அல்லது ஃப்ராய்டிய அடிப்படைகளை இங்குப் பேசவில்லை. வாழ்வின் அனுபவங்களைத் தனக்குள் ஒருமைப்பாட்டுக்குக் கொண்டுவரும் ஓர் அமைவு (சிஸ்டம்) கவிஞனுக்குள் வேண்டும். இந்த அமைவை உருவாக்கிக் கொள்ளும் பணிக்குத்தான் கவிஞனுக்குத் தத்துவ அடிப்படை தேவை. இல்லாவிட்டால் சந்தர்ப்பவாத சமரசக் கவிதைகள்தான் மிஞ்சும். உதாரணமாக, ‘ரோடுரோலரின் பவனி’ எழுதிய சக்திக் கனலே எப்படி ‘அனலைப் புனலாய் மாற்றுகிறேன்’ என்று முரண்பட முடிகிறது? முரண்பாடு என்பது நெறிப்பட்ட வளர்ச்சியின் விளைவு என்றானால் பரவாயில்லை. இன்றைக்கு ஒன்றும் நாளைக்கு ஒன்றும் பேசுவது கவிஞனுக்கு இயல்பாகல் ஆகாது.

சரியான தத்துவச் சார்பின்மைதான் கலை இலக்கியம் தன்னளவிலேயே விடுதலை உண்டாக்குவது, சமூக மாற்றத்தைச் சாதிப்பது என்ற மயக்க உணர்வை இவர்களுக்கு ஏற்படுத்தி கோஷங்களில் சரணடைய வைக்கிறது. “இனியொரு புனித வரி தருக; / என் பூமியில் / எழுந்தது புரட்சி என வரைக” என்று கவிதையின் வழியே புரட்சியைக் கொண்டுவரும் மயக்கத்தை ஊட்டுகிறது. கவிதை மானிட விடுதலையை உண்டாக்காது. ஆனால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள, எதிர்கொள்ள உதவும். ஆக இன்றைய வாழ்க்கையின் சோகங்களை சகித்துக்கொள்ள வைத்திருக்கும் அலித்தன்மையை விமரிசனம் செய்வதுதான் கவிதையின் பணியாகும்.

வாழ்க்கை விமரிசனம் செய்வது கவிதை என்றால் அதில் யதார்த்தம் வேண்டாமா? வானம்பாடிகள் எவ்வளவு தூரம் யதார்த்தக் கவிதை எழுதியிருக்கிறார்கள்? அல்லது இன்குலாப், தணிகைச் செல்வன், பரிணாமன் என்று ஒரு முற்போக்குக் கவிஞர் குழாம் இருக்கிறதே, அவர்கள் எவ்வளவு யதார்த்தக் கவிதைகள் எழுதியுள்னர்? காலங்காலமாக மிகைக் கற்பனைகளின் உறைவிடமாக இருந்துவரும் தமிழ்க்கவிதைகளில் யதார்த்தத்தைக் கொண்டுவர ரொம்பச் சிரமப்பட வேண்டும். யதார்த்தச் சித்திரிப்பில் உரைநடை-கவிதை முரண்பாடு ஒருபுறம் இருக்க, விமர்சகர்களும் இதில் ஏமாந்துவிடுகின்றனர். நாவல், சிறுகதைகளில் சோஷலிச யதார்த்தம், விமரிசன யதார்த்தம் தேடி முற்போக்கு முத்திரை குத்தித் தரமதிப்பீடு செய்யும் சமூக விமரிசகர்கள்கூட கவிதைப்பக்கம் வந்தவுடன் நிலைகுலைந்து, கவிதை வரிகளில் சிவப்பு, அக்னி, உதயம், விடியல், புரட்சி, வசந்தம் என்ற சொற்களைக் கண்டு முற்போக்குக் கவிதை என்று சான்றிதழ் கொடுத்துவிடுகின்றனர். யதார்த்தத்தைக் கவிதையில் கொண்டுவந்து ஓரளவு சாதனை நிகழ்த்தியவர்கள் என்றால் முற்போக்குக் கவிஞர்கள் எல்லாரையும்விட, சி.மணி, ஞானக்கூத்தன், தருமு சிவராமு, கலாப்ரியா போன்றோரைத்தான் சொல்ல வேண்டும். ஒரு சில கவிதைகளில் ஆத்மாநாம், நாரணோ ஜெயராமன் போன்றோரும் கூட.

இனி இவர்களிடம் உள்ள பிரச்சாரம் பற்றி. ஒருபுறம் சமூகக் கவிதைகள் என்றாலே வெளிப்படையான பிரச்சாரமும் கோஷமும் இருக்கவேண்டும் எனச் சிலர் நினைக்கின்றனர். “அடங்கிய குரலில்தான் எழுதவேண்டும் என்பது என்ன நியதி?” என்று கேட்பார்கள். மறுபுறம், சிலர் “கவிதைக்கும் பிரச்சாரத் துக்கும் ரொம்ப தூரம்” என்பார்கள்.

எல்லா இலக்கியங்களுமே அடிப்படையில் பிரச்சாரம் செய்பவைதான். ஒரு அர்த்தமுள்ள தளத்தில்-கவிஞன் தன்னிச்சையாக, தன் மனம் உணர்ந்து ஏற்றுக்கொண்டதை வலுவாக பாஷையின்மூலம் வெளிப்படுத்தும் போது அது வெறும் பிரச்சாரம் என்ற நிலையைத் தாண்டி இலக்கியமாகிறது. தான் மனப்பூர்வமாக ஏற்காததை-convince ஆகாததைச் சொல்லும்போதோ, மனம் உணர்ந்ததை மொழியில் வெளிப்படுத்த முடியாமல் பலவீனப்படும்போதோ தான் கவிதை வெறும் பிரச்சாரம், கோஷம் என்ற நிலை எழுகிறது. சான்றாக,

நாங்கள் ஞானசூரியன்கள் / சூரிய தீபங்கள் செந்தாமரைகள் / ஒத்த சமத்துவங் கள் மாக்சிம் கார்க்கிகள் / இந்திய மாநிலம் பயனுற வாழ்வதற்கே / சிறகடிக்கும் ஒளிப்பறவைகள் (அக்னிபுத்திரன்)

இது வெறும் வார்த்தைப் பந்தல். வெறும் கோஷம். இப்படிச் சிலர் வார்த்தைப் பந்தல் அடுக்குவதை விமர்சித்தால் “உங்கள் கலை ஆளும் வர்க்க ஆயுதம், சோஷலிசப் போஸ்டர் எழுதுவது ஒன்றும் கேவலமான காரியமில்லை” என்பார்கள். இவர்களால் தான் வெறும் பிரகடனங்களே முற்போக்குக் கவிதை என்றாகிப போனது. வானம்பாடிகளின் சமகாலத்தில் வெளிவந்த சுந்தர ராமசாமியின் பிரகடனம் ஒன்று (சவால்) இவர்களைப் போல் ஆர்ப்பாட்டமில்லாமல், ஆனால் ஆழ்ந்த கவிதையாகிறது.

நோவெடுத்துச் சிரம இறங்கும் வேளை / துடைகள் பிணைத்துக்கட்டக் / கயிறுண்டு உன் கையில் எனத் தொடங்கும் இக்கவிதை, ஓய்ந்தேன் என மகிழாதே, உறக்கமல்ல தியானம், பின்வாங்கல் அல்ல, பதுங்கல் என வளர்ந்து, எனது கொடி பறக்கிறது அடிவானத்துக்கு அப்பால் என்ற முழக்கத்தோடுதான் முடிகிறது. இந்தப் பிரகடனம் கவிதை யாகிறது.

கோஷங்களும் பிரகடனங்களும் கவிதையாகாது என்றல்ல, அவை அகத்தின் சாரத்தைப் புறத்துடன் இணைக்கவேண்டும். அவ்வளவுதான். வெறும் கருத்துகளிலிருந்து எழும்போதுதான் கோஷம் தன்னை அசிங்கமாக்கிக் கொள்கிறது. வானம்பாடிகள் முற்போக்குக் கவிஞர்கள். இவர்களின் பிரச்சாரங்களோ, கோஷங்களோ கவிதையாகாமல் போனால் போகட்டும், குறைந்தபட்சம் ஓர் இடதுசாரி கோஷம் என்ற அளவிலாவது வெற்றி பெற வேண்டுமா இல்லையா? அதற்கும் அனுபவபூர்வமான commitment வேண்டும்.

இனி இவர்களுடைய பாடுபொருள்கள் பற்றி. முற்போக்குக் கவிஞன் என்றாலே விபசாரிக்கு அனுதாபப் பட்டு ஒரு கவிதை, தொழிற்கூடப் பாட்டாளிகளைப் பற்றிச் சில, காந்தியை, மார்க்சை விளித்துச் சில, அரசியல்வாதிகளைக் கிண்டல், நையாண்டி செய்யும் கவிதைகள் சில, வரதட்சி ணைக் கொடுமை பற்றி ஒன்று-என்று இப்படி எழுதினால் போதும். ஏன் இவர்கள் மத்தியதர வாழ்க்கையின் சிறுமைகள், மேன்மைகள் பற்றியெல்லாம் கவிதை செய்வதில்லை? பாட்டாளிகள் என்றால் தொழிற்சாலைகளில்தானா? இந்தியாவில் மிகப் பெரும்பான்மை யான விவசாயிகள் பற்றி சரியாகக் கவிதை உண்டா? பெண்கள் வாழ்க்கையில் நொடிக்கு நொடி அனுபவிக்கும் எந்த விஷயம் இங்கே கவிதையாகியிருக்கிறது?

“ஈயாய்க் கண்கள் பல மொய்க்க, என்னை உணர்ந்தேன் தெருமலமாய்” என்று பாலகுமாரன் தற்செயலாக ஒரு கவிதையில் எழுதியதுபோல ஒரு மாறுபட்ட வீச்சைக் காட்டும் வானம்பாடிக் கவிதைகள் எத்தனை?

நாரணோ ஜெயராமன், சாக்கடையோரத்தில் / சிசுக்கள் நிலாக்கண்டு சிரித்து / மல்லாந்து கிடக்கும் / என வருணித்தமாதிரியான தரிசனங்கள் எத்தனை தேறும்? பாடுபொருளும் தலைப்பும்கூடப் பஞ்சம். ஒருவர் ‘என்னைக் கம்யூனிஸ்டு ஆக்கினீர்கள்’ என்று கவிதை பண்ணினால், இன்னொருவர் ‘என்னை சோஷலிஸ்டு ஆக்கினீர்கள்’ என்று கவிதை பண்ணுவார். ஒருவர் “ராஜத்தின் தந்தைக்கு ராஜம் ஒரு பிரியதர்சினிதானே” என்றால் இன்னொருவர், “பிச்சம்மாவிற்குப் பிள்ளையாய்ப் பிறந்தவன் பிரியதர்சினியின் மகனாக முடியுமா” என்பார்.

இதேகாலத்தில்-எழுபதுகளில்-செயல்பட்ட ஈழத்துக் கவிஞர்கள் சிலரைப் பற்றி.

ஈழத்துக் கவிதைகள் பெருமளவு சமூகப் பொறுப்புள்ளவைதான். அவை பிரச்சாரங்களாக வெளிப்படும் அதேசமயம் கவிதைகளாகவும் மலர்கின்றன. இன ஒடுக்குமுறையின் மத்தியில் பெரும்கோஷங்களாக வெளிப்பட வேண்டிய நியாயமுள்ள ஈழத்துக் கவிஞர்களின் குரல் ரொம்பவும் அடங்கிய தொனியில் வெளிப்படுவதைக் காண்கிறோம். தமிழகத்திலோ, ஈழம் போல எதுவும் பற்றியெரியாவிட்டாலும் வறட்டு ஆர்ப்பாட்ட கோஷங்கள்.

ஈழத்துக் கவிதைகள் இவ்வாறு அடங்கிய குரல் கவிதைகளாக இருக்கக் காரணம், அவர்கள் புறநிகழ்ச்சிகளை வருணிக்கும் பாங்கில் தங்கள் அனுபவத்தை அவற்றில் இணைக்கிறார்கள். ஒருசில சொற்களில், அல்லது சொற் களுக்கிடையிலான மௌனங்களில். ஈழத்திலும் மேமன்கவி போன்ற ஒருசில வணிக ஆர்ப்பாட்டக் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் மிகக் குறைவு. அறுபதின் தொடக்கமுதல் அறியப்பட்ட கவிஞர் முருகையன். மார்க்சிஸ்டாக இருப்பினும் ஆர்ப்பாட்டத் தொனிக்கு மாறாக அறிவுப்பாங்கையே அவர் கவிதைகள் கொண்டுள்ளன. இதேபோல்தான் நுஃமானும். தமிழகத்தில் எழுத்து குழு, வானம்பாடி குழு என்று சொல்வது போல அங்கு குழுப்பாணி கிடையாது. அவர்களிடம் துலக்கமான தனித்தன்மை உண்டு. காரணம், அங்கு தமிழகம் போல வணிக இதழ்கள் பெருமளவு இல்லை. வணிகக் கலாச்சாரம் இங்குப் போல அங்கு வேரூன்றவில்லை என்பதாக இருக்கலாம். இரண்டாவது, தமிழகத்தில் ஆதிமுதல் இருந்துவரும் பிராமணர்-அல்லாதார், ஆரியர்-திராவிடர் அங்கு இல்லை. மூன்றாவது, தமிழகத்தி லிருப்பதுபோல மார்க்சியச் சார்பு-மார்க்சிய எதிர்ப்பு என்பது அங்கு ஒரு போராட்டமாகவில்லை என்று கூறலாம். எஸ். பொன்னுத்துரை, மு. தளையசிங்கம் போன்றோர்கூட மார்க்சியத்தை முற்றாக நிராகரிக்கவில்லை. மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு கடந்துசெல்லும் நிலை பற்றியே பேசினார்கள். இங்கோ, வறட்டு மார்க்சியச் சார்பு போல, வறட்டு மார்க்சிய எதிர்ப்பு என்பது ஓர் அடிப்படை குணமாகவே பல எழுத்தாளர்களிடம் ஊறிக்கிடக்கிறது. இதனால் ஈழத்துக் கவிஞர்கள் புறநிலை யதார்த்தம் என்பதை ஏற்று தத்தம் தனித்தமைகளை வடிக்கின்றார்கள். இவர்களில் மஹாகவி, சண்முகம் சிவலிங்கம், தா. இராமலிங்கம் போன்றோர் முக்கியமாகக் குறிக்க வேண்டியவர்கள். யாழ்ப்பாணம் பேச்சுத்தொனியை இவர்கள் இயல்பா கவே கவிதையில் கொண்டுவந்துள்ளனர். இங்கு ஞானக்கூத்தன் போல, வானம்பாடிகளும் மேடைப்பேச்சுப் பாணியைக் கவிதையில் கொண்டுவர முற்சி செய்துள்ளனர். ஆனால் அது சரியாக வரவில்லை.

ஈழத்துக் கவிஞர்கள் நாட்டுப்பாடல் வடிவத்தையும் கவிதையாக்கத்திற்குப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக மஹாகவியின் மீனவர் பாடல், சண்முகம் சிவலிங்கத்தின் ஆக்காண்டி போன்றவை (இரண்டும் க்ரியா வெளியிட்ட ஈழத்துப் பதினொரு கவிஞர்கள் தொகுப்பில் உள்ளன). வைத்ததுவோ அஞ்சு முட்டை / பொரித்ததுவோ நாலு குஞ்சு / நாலு குஞ்சும் போர்புரிய / நடந்துவிட்டார் என்ன செய்வேன்? ஆககாண்டியின் குரலா இது? ஆக்காண்டி, இயல்பான குறியீடாகப் பரிணமித்துப் பல்வேறு அர்த்த தளங்களுக்கு உயர்வதை இக்கவிதையில் காணலாம். தா. இராமலிங்கத்தின் கவிதைகளில் பேச்சுத்தொனி மிகச் செறிவாக வருகிறது. சான்றாக ‘சீவியம்’. இவருடைய சொற்சேர்க்கைகள் அபூர்வமானவை. சான்றாக, “மணிக்கூட்டு வாழ்க்கைகாரர் என் சொல்லுக் கேட்கமாட்டார்”. “பிறர் ஆசார முட்டையிலே மயிர்பிடிக்கும் மேற்சாதி நான்”. சி. மணி போல தனது வரிகளூடே இலக்கிய வரிகளை இயல்பாக இணைக்கிறார்.

என் காதலர் மடியினிற் கிடந்தழுதேன் / நீடியி சிறையினில் பட்ட துனபம் / ஈடுசெய் இன்பம் தந்துவிட்டார் /

இன்னும் எழுபதுகளின் பிற்பகுதியில் உருவான சிவசேகரம், சேரன் போன்றோர் சங்கப்பாடலின் உருவ இயல்பையும் தொனியையும் தங்கள் கவிதைகளில் கொண்டுவருகின்றனர். புறக்காட்சி வருணனையும் ஆழ்ந்த உள்ளுணர்வும் சேர்ந்து இயங்கும் ஒரு Unification of sensibility-தமிழ்க்கவிதைகளில் கிடைக்க அரிதானது-இவர்களிடம் இயல்பாகக் காணக் கிடைக்கிறது. (சான்று, சேரனின் ‘இரண்டாவது சூரியோதயம்’). இன்றைக்குத் தமிழில் பிரம்மராஜன் போன்றோரிடம் ஒரு அறிவாதாரமான துருவுதலை நாடும் இருண்மைத் தன்மை காணப்பட, முற்போக்கு எழுத்தாளரிடம் வெறும் கோஷங்களாகக் கவிதை இருக்க, இவ்விரண்டு எல்லைகளிலும் செல்லாமல் தெளிவோடு கூடிய யதார்த்தச் சித்திரிப்பு ஈழத்துக் கவிஞர்களிடம் தான் காணப்படுகிறது. இதுவரை தமிழில சமூகச் சார்புள்ள புதுக்கவிதைகள் தரமுள்ளவையாக உருப்பெறவில்லை. இனிவரும் தமிழ்க்கவிதை ஈழத்துக்கவிதைகளின் மேற்கண்ட இயல்புகளைச் செரித்துக் கொண்டால் மிக நல்லது. புதுக்கவிதையின் ஒரு கட்டம் முடிந்துவிட்டது. இன்னொரு கட்டம் இனித்தான் துவங்க வேண்டும். —–


தமிழின் திணைக்கோட்பாடு

தமிழின் திணைக்கோட்பாடு

(புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தின் சங்கஇலக்கியக் கருத்தரங்கிற்கெனப் படிக்கப்பட்ட கட்டுரை-2009)

திணை-துறை பற்றிப் பேசாமல் சங்க இலக்கியம் பற்றிப் பேச இயலாது என்பது பொதுவாக நிலவும் கருத்து. தொல்காப்பியம் சங்க இலக்கியத்திற்குப் பிற்பட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால், தமக்கு முந்திய இலக்கியங்களைப் பார்த்துத் தொல்காப்பியர் வகுத்த நெறியே திணைக்கோட்பாடு, அதைச் சங்க இலக்கியங்களும் பின்பற்றுகின்றன என்று சொல்ல வேண்டும். சில அறிஞர்களின் கருத்துப்படி சங்க இலக்கியங்கள் முந்தியவை, அவற்றிற்குப் பிற்பட்டதே தொல்காப்பியம். இதனை ஏற்றுக் கொண்டால், சங்க இலக்கியம் என்னும் இலக்கியத் தொகுதியின் அடிப்படையே திணைக்கோட்பாடு என்றாகும்.

தொல்காப்பிய அடிப்படையில் நோக்கினால் திணைக்கோட்பாடு என்பது ஒரு எடுத்துரைப்பியல் அல்லது கதைசொல்லலியல் (narratology). திணை எதுவாயினும் யார் கூற்று நிகழ்த்தவேண்டும், எந்த எந்தச் சூழல்களில் நிகழ்த்தவேண்டும் என வரையறுக்கின்ற ஒரு முயற்சியாகவே தொல்காப்பியத்தைக் காணஇயலும். குறிப் பாக களவியல், கற்பியல், பொருளியல் ஆகியவற்றின் உள்ளடக் கம் இதுவாகவே உள்ளது. ஆனால் இவ்வாறு தொல்காப்பியர் வரையறுத்த இந்த எடுத்துரைப்பியலைச் சங்க இலக்கியங்களைப் பிற்காலத்துத் தொகுப்புகளாக உருவாக்கித் திணை துறை வகுத்தோர் முழுதுமாகப் பின்பற்றவில்லை. அகநூல்களில் ஓரளவு பின்பற்றுகின்றனர், புறநூல்களில் பெரும்பாலும் பின்பற்றவில்லை என்பது இன்னும் சற்றே துல்லியமான கூற்றாக அமையும்.

அண்மையில் நான் படித்த ஒரு கட்டுரையில் திணைக் கோட் பாடு காதாசப்தசதியிலிருந்தும், பிராகிருதச் செல் வாக்கிலிருந்தும், ஏன், வடமொழியிலிருந்தும்கூட வந்திருக்கலாம் என்ற ஹேஷ் யங்கள் சொல்லப்பட்டிருந்தன. இந்த ஹேஷ்யங்களுக்கு அவசிய மே இல்லை என்பதை எளிதாக நிரூபிக்கலாம். திணை என்பதை இலக்கியக் கோட்பாடாக மட்டுமே கண்டதால் இந்த மயக்கம் நேர்ந்தது. திணை, தமிழ்மொழிக்கேயுரிய தனிக்கோட்பாடு. உயர் திணை, அல் திணை என்ற அமைப்பும் அவ்விரண்டின் சார்பாகவே பால் பகுக்கப்படுவதும் தமிழுக்கே உரிய தனிஅமைப்பு். உயர்திணை-அல்திணை என்பதிலுள்ள அதே திணைபற்றிய கருத்துதான் அகத்திணை, புறத்திணை என்பதிலும் அடிப்படை யாக உள்ளது. இதனை நோக்கியே திணை என்பதற்கு ஒழுக்கம் என்றும் பொருள் சொல்லப்பட்டது.

சங்க இலக்கிய வாசிப்பு திணைக்கோட்பாட்டினை நாம் இரு விதமாகக் காண வாய்ப்பளிக்கிறது. ஒன்றைக் கவிதையியல் நோக்கு என்றும் இன்னொன்றை வாழ்க்கையியல் நோக்கு என்றும் சொல்லலாம்.
திணை-துறை அமைப்புகள் யாவும் எவ்வாறு கவிதை எழுதுவது என்பதற்காக உருவானவை என்பது முதல்நோக்கு. மொழியின் எழுத்து-சொல்-தொடர் அமைப்புகளை எழுத்ததி காரம், சொல்லதிகாரம் பேசுவதுபோலவே, மொழியினால் விளை யும் கவிதையை எந்த அடிப்படைகளில் படைப்பது எனச் சொல்வது பொருளதிகாரம். அதனால்தான் இல்லது இனியது நல்லது எனப் புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கம் என்று அகத்திணைக்கு வரையறை கூறினார் போலும் இறையனார் களவியல் உரையாசிரியர். இறையனார் களவியல் படைப்புக் கதையில் வரும் பாண்டியனும் எழுத்தும் சொல்லும் கற்பது பொருள் அடிப்படையிலான கவிதை படைப்பதற்காகவே அன்றோ என்று கேட்கிறான். இங்குப் பொருள் என்பது இலக்கியப் பொருளையே குறிக்கிறது.

பொருளதிகாரத்தின் முதல் ஐந்து இயல்களும் கவிதையின் உள்ளடக்கத்தினைப் பற்றி விரித்துரைக்க, அதன் வடிவக்கூறு களைப்பற்றிப் பின்னர் உள்ள நான்கு இயல்களும் கூறுகின்றன என்பது இங்கு கருதத்தக்கது. ஆகவே பொருளதிகாரமே கவிதை யின் வடிவம்-உள்ளடக்கம் பற்றிய நூல்தானே தவிர, வாழ்க கையைப் பற்றியதன்று. சங்க இலக்கியம் உதிரிப் பாக்களாகவே பெருமளவு எழுதப்பட்டதால் அதனைப் பிற்காலத்தில் தொகுத் தோர் தம் சம காலத்தினர்க்கும் பின் வந்தோர்க்கும் வழங்கிய குறிப்புகளே சங்கப் பாக்களுக்குரிய திணை துறைக் குறிப்புகள் என்பதை முன்னமே ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்.

இந்த நோக்கினின்றும் பெறப்படும் கிளைநோக்கு (corollary) பின்வருமாறு அமையும். சங்க இலக்கியத்தைத் தொகுத்தோரோ அல்லது அவர்களுக்குப் பின் வந்தோரோ வழங்கிய குறிப்புரை களே திணை-துறைக்குறிப்புகள் ஆதலின் இன்று நாம் அவற்றைப் பொருட்படுத்தத் தேவையில்லை. பொருத்தமாக இருப்பின் ஏற்றுக் கொண்டாலும் தவறில்லை. விட்டு விட்டு நாமாகவே இவை போன்ற குறிப்புகளை உருவாக்கிக் கொண்டாலும் தவறில்லை. ஏனெனில் சங்கப்பாக்களில் திணை-துறைக் குறிப்புகள் போன்ற வற்றை இன்றைய புதுக்கவிதைகளைப் படிக்கும்போதும் உருவாக்கிக் கொள்ளவே முனைகிறோம். ஒரு கவிதையின் குரல் அல்லது பேசுவோர்; கேட்போர்; எந்தச் சூழலில் அக்குரல் ஒலிக் கிறது என்பவற்றை மனத்திற் கொண்டே அது பற்றி நாம் பேச இயலும். சங்கக் கவிதைகளுக்கு மேற்கண்ட தகவல்களை (நமது கற்பனைக்கு அவற்றை விடாமல்)த் தந்து உதவுபவையே அவற்றின் திணை துறைக் குறிப்புகள். எனவே அவை நமது கற்பனையைச் சிறைப்படுத்துவனவாக/தடையாக உள்ளன.

வாழ்க்கையியல் நோக்கு என்பதும் பழங்காலமுதலே இருந்து வருவதுதான். 1900களின் தொடக்கத்தில் சங்கப்பாக்களை அறிமு கம் செய்ய முனைந்த பாலசுந்தரனார்(இளவழகனார்) பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை, பண்டைத் தமிழர் பொருளியல் வாழ்க்கை என்ற தலைப்புகளில்தான் நூல்கள் எழுதினார். அதற்கு முன்னரே சங்க இலக்கியங்கள் அனைத்தும் வெளியான காலத்தை ஒட்டி வி. கனகசபை The Tamils 1800 Years Ago என்று தமிழரின் வாழ்க்கை பற்றிய நூல்களாகவே சங்க இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். இன்றும் பெரும்பான்மைத் தமிழாசிரியர்கள் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பண்டைத் தமிழரின் நாகரிக வாழ்க்கையைப் பேசுபவை என்றும் அவற்றால் தமிழர் பண்பாடு வெளிப்படுகிறது என்றும் சங்க காலம் ஒரு பொற்காலம் என்றும் நம்புகின்றனர்.

எவ்வாறாயினும் தமிழ் ஒரு தனித்த இயற்கை சார்ந்த பழைய இலக்கியக் கொள்கையைக் கொண்டுள்ளது என்பதில் ஐயமில் லை. பழங்கால மொழிகளை நோக்குவோர் ஒவ்வொரு மொழி யிலும் நிறங்களை ஒவ்வொரு விதமாக (எண்ணிக்கையில் மட்டுமன்று, பெயரிலும், இயல்பிலும்) பகுத்திருப்பதை அறிவார் கள். அவ்விதமே திணைகளைப் பகுத்தது ஒரு குறியியற்செய்கை என்பதில் ஐயமில்லை. அகத்திணைகளும் புறத்திணைகளும் (இதற்குப் புறம் இது என்றாற்போல சுட்டிக்காட்டப்பட்டாலும்) ஒரே மாதிரியாகக் குறிப்படுத்தப் படவில்லை. சான்றாக, அகப் பாடல்களில் கூற்றுதான் உண்டு. துறை கிடையாது. புறப் பாடல் களில் துறைதான் உண்டு. கூற்று கிடையாது. (இதையறியாத புலியூர் கேசிகன் போன்றோர் சங்கப்பாக்களுக்கும் துறை வகுத்துள்ளனர்). இதற்கு அவற்றின் இயல்பே காரணம். மேலும் அகத்திணையில் அவ்வளவாக ஏற்கப்படாமல் புறக்கணிக்கப்படும் இரு திணைகளின் எதிர்வுகளே புறத்தில் பெருமையும் முதன் மையும் பெறுகின்றன. அகத்திணையில் கைக்கிளை, பெருந் திணை என்பவற்றிற்கு மரியாதை இல்லை. கைக்கிளைக்குப் புறம் பாடாண். பெருந்திணைக்குப் புறம் காஞ்சி. இவை புறத்தில் மிகப்பெரும் இடத்தைப் பெற்றிருப்பதைக் காண இயலும்.

எனவே அகத்திணைகளுக்கு இருமை எதிர்வாக (binary opposite) புறத்திணைகளை நிறுத்தத் தொல்காப்பியர் முனைந்த முயற்சி அவ்வளவாக வெற்றி பெறவில்லை. அதற்கு உரையாசிரியர்கள் அளித்த விளக்கங்களும் தர்க்கமுறையில் அமையவில்லை. திணைகளைப் பகுக்கும்போது அவற்றில் முதற்பொருள் – கருப் பொருள் – உரிப்பொருள் எனக் காணவேண்டும் என்பதும் தொல்காப்பிய மரபே.

இன்னொரு விவாதமும் இதில் உண்டு. திணைப்பெயர் நிலத்தால் வந்ததா, தாவரம் அல்லது பூவால் வந்ததா என்பது. நிலத்திற்குப் பெயரிட்டுவிட்டு, பின் ஒரு பூவை அல்லது தாவரத்தைத் தேர்ந்தெடுத்து அந்த நிலப்பெயரை அதற்கு வைத்தார்கள் என்பது ஏற்கமுடியாத வாதம். தாவரம்/பூவின் பெயர் > நிலப்பெயர் > திணைப் பெயர் என்பதே தர்க்கரீதியானது.

முதல்/ கரு/ உரி என்ற இம்மூன்றனுள் உரிப்பொருளே சிறப்பானது. ஏனெனில் முதற்பொருள் பயின்றுவராத, கருப் பொருள் காணப்படாத பாக்களைக் கூட காணலாம். ஆனால் உரிப் பொருளற்ற கவிதை ஒன்றையும் காண இயலாது. உரிப்பொருள் மானிட வாழ்க்கைஅனுபவமே ஆதலின் சங்க இலக்கியமே மனிதமையவாத (humanist) அடிப்படையில் அமைந்தது என்பதில் ஐயமில்லை. எனவே சங்கப்பாக்களை

உரிப்பொருள் மட்டும் பெற்ற பாக்கள்,

உரிப்பொருள் + [முதற்பொருள்] + [கருப்பொருள்] பெற்ற பாக்கள்

என்றுதான் பகுக்க முடியும். ஆனால் சங்க இலக்கிய அகப் பாக்களைப் பகுத்தோர் வேறு முறையைக் கையாள்கிறார்கள். திணை-துறைப் பகுப்பு செய்யும்போது

1. முதற்பொருள் பாடலில் இருப்பின் அதன் அடிப்படையில் திணை-துறை வகுத்தல்

2. முதற்பொருள் இல்லாவிட்டால் கருப்பொருள் அடிப்படையில் திணை-துறை வகுத்தல்

3. முதல்-கரு இரண்டுமே இல்லாவிட்டால் உரிப்பொருள் அடிப்படையில் திணை-துறை வகுத்தல் என்ற

கோட்பாட்டைப் பின்பற்றி யிருக்கிறார்கள். இதனால் ஒரே உரிப்பொருளைக் கொண்ட பாடல், (உதாரணமாக வரைவுகடாதல், இரவுக்குறியில் கூடல் போன்றவை) குறிஞ்சி, மருதம், நெய்தல் போன்ற பல திணைகளில் இடம்பெற நேர்கிறது. மாறாக, உரிப் பொருள் என்ற ஒரே அடிப்படையில் பகுத்திருப்பின் இன்று நாம் பல பாக்க ளுக்குச் சொல்லும் திணை-துறைகள் வேறாக அமையும். இம்மாதிரி ஒரு தொகுப்பை உருவாக்குவதும் இன்றைய தேவை களில் ஒன்று.

ஆங்கிலத்தில் பல்வேறு அடிப்படைகளாலான பல்வேறு தொகை நூல்கள் (anthologies) வெளிவந்திருப்பதுபோலப் பல்வேறு முறைகளில் தொகுக்கப்பட்ட தொகுப்புகள் வெளிவருவதில் தவறில்லை. பழங்காலத்திலேயே பக்தியிலக்கியத்தில்-குறிப்பாக தேவாரத்தில், இருவகைத் தொகுப்பு முறைகள் (பண்முறை, தலமுறை) இருந்ததை நாம் அறிவோம். அவ்வாறே சங்க இலக்கியத்திற்கும் உரிப்பொருள் அடிப்படையிலான தொகுப்பு ஒன்று இருந்தால் என்ன?
பொதுநோக்கில் முதற்பொருள் என்பது நிலம்-காலம் என்ற இரண்டினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதால், அது இயற்கைச் சார்பினை முன்னிறுத்துகிறது. கருப்பொருள் என்பது விலங்கு, புள் போன்ற இயற்கைப் பொருட்களும், யாழ், பறை போன்ற செயற்கைப் பொருட்களும் கலந்திருப்பதால் அது இயற் கையும் செயற்கையும் கலந்த ஒன்றாக உள்ளது. உரிப்பொருள் குறித்தசூழலில் தோன்றும் மானிட உணர்ச்சிகள் என்பதால் செயற்கை ஆகிறது.

முதற்பொருள் – இயற்கை சார்ந்தது

கருப்பொருள் – இயற்கை + செயற்கை

உரிப்பொருள் – செயற்கை

என அமைவது இயற்கையிலிருந்து கலாச்சாரத்திற்கு (செயற் கைச் சூழலுக்கு) Nature > Nurture என்ற இயக்கத்தைக் காட்டுவதாக அமைகிறது.

குறிப்பாக சங்கஇலக்கியத் துறை/கூற்றுகளில் நிலைப் படுத்தப் பட்ட எதிர்வினைகள் சார்ந்த கூற்றுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. சான்றாக, தலைவன் பரத்தையிடம் சென்று பின் தலைவியிடம் திரும்புகிறான். இங்கு தலைவிக்குத் தரப்படும் நிலைப்பட்ட எதிர்வினைகள் இரண்டு மட்டுமே.

1.வாயில் மறுத்தல்
2.வாயில் நேர்தல்.

வாயில் நேர்ந்தால் மீண்டும் இரண்டே இரண்டு எதிர்வினைகள் மட்டுமே.

1.ஊடலின்றி ஏற்றுக்கொள்ளல்
2.கொஞ்சம் ஊடியபின் தலைவனை ஏற்றல்.

இப்படி சங்க இலக்கியத் துறைகள்/கூற்றுகளைப் பெருமளவு Stock or Conditioned responses என்பதாகவே காணலாம். மேற்கூறியவற் றால் முதல்-கரு-உரி என்னும் திணைப்பொருட்களில் இயற்கை யும் கலாச்சாரமும் (Nature and Culture) ஒன்றாகச் சங்கமிக்கின்றன என்பதைக் காணலாம். அதாவது இயற்கையும் கலாச்சாரமும் திணை என்பதில் ஒன்றிணைகின்றன.

திணையின் முதற்பொருள் என்பது வாழிடம் சார்ந்த சூழல். பழங்காலத்தில் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என நானிலமாகக் குறிப்படுத்தினர். பின்னர் இப்பிரிவுகள் போதாமை யால் பாலை என்ற ஐந்தாம் நிலம் சேர்க்கப்பட்டது.

இவை இவ்வாறு குறிப்படுத்தப்பட்டதன் பின்னுள்ள மரபே நாம் இங்கு ஆராய வேண்டியது. குறிஞ்சி என்பதே தமிழின் ஆதித்திணை. காரணம், உழவுதோன்றா இயற்கை நிலையை எடுத்துக் காட்டுவது அது. பாரியைக் கபிலர் மூவேந்தர்க்கும் எதிர் நிறுத்திப் போற்றும பாடலிலும் பறம்பின் இந்த ஆதிநிலை போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடவர் குறவராக/ வேடுவராக இருந்தால் குடும்பம் என்ற அமைப்பு ஒரு தாய்வழி அமைப்பாகவே இருந்திருக்க இயலும். மக்கள் பெருகியும் பிற வாழ்க்கை முறைகளைத் தேடியும் முல்லை நிலத்திற்கு வந்த பிறகு மாடுமேய்க்கும் வாழ்க்கை உருவாயிற்று. மாடுமேய்க்கும் வாழ்க்கை பெண்களுக்குப் பாதுகாப்பையும் அடிமைத்தனத்தையும் ஒருங்கே உருவாக்கிற்று. மாடுகளை ஒருவர் அதிகம் சேர்த்துக் கொண்டவுடன் அவரது ‘மாடு’ (செல்வம்) பெருகியதாகக் கருதப்பட்டது. மாடுகளைப் போற்றும் நிலையான வாழ்க்கை முறை தந்தைவழிச் சமூகத்திற்கு ஆதாரமாகியது. தாய்வழிச் சமூகத்தில் கற்பு என்ற சொல் பொருளற்றது. செல்வமும் நிலையான குடியிருப்பும் அமையும் தந்தைவழிச் சமூக அமைப்பில்தான் கற்பு என்ற கொள்கை உருவாக முடியும். எனவே முல்லை நிலத்தில்தான் பெண்ணுக்குக் கற்பு என்பது முதல்முதலாக வலியுறுத்தப்பட்டது. அதற்கு அடையாளமாக (பெண்மை/ தூய்மை/ மணம்) முல்லை மலர் உருவாயிற்று. முல்லை என்பதற்குக் கற்பு என்ற சிறப்புப் பொருள் உருவான வரலாறு இதுதான்.

ஐ-தலைமையைக் குறிக்கும் சொல். தலைமை காரணமாக ஏற்படும் வியப்பையும் குறிக்கும் வேர்ச்சொல் என்பது அனைவருக்கும் தெரியும். இடைக்குலப் பெண்கள்தான் ஐயை (கற்பில் சிறந்தவள், தலைமை சான்றவள், வியப்புக்குரியவள்) எனப் பெயர் பூண்டனர். ஐயை என்ற பெண்பாற்சொல்லின் ஆண் பாற் சொல் ஐயன் என்பது. மரியாதை விகுதி சேரும்போது ஐயர் என்றாகிறது. எனவே ஐயன், ஐயர் என்பவை முதலில் முல்லை நிலம் சார்பாகத் தோன்றிய சொற்களே. கற்புக்கு அடையாளம் கரணம் (திருமணச் சடங்கு) எனக் கருதப்பட்டதன் விளைவாக முதன்முதலில் முல்லை நிலத்து ஐயர்கள்தான் கரணம் யாத்தனர் (திருமணச் சடங்குகளை வரையறுத்தனர்).

இலக்கியப் போக்கில் குறிஞ்சி முல்லை என்னும் வாழ்க்கை முறைகள், தலைவன் தலைவி உடனிருப்பு (களவு) சார்ந்தவை. முல்லையில் பிரிவு கூறப்பட்டாலும் அப்பிரிவு தற்காலிகப் பிரிவேயாகும். உண்மையில் முல்லையின் உரிப்பொருள் இருத்தலே. இருத்தல்-ஆற்றியிருத்தல். தலைவி தலைவனைப் பிரிந்தாலும் ஆற்றி (ஆறுதலோடு) இருத்தல்; இல்லறக் கடமைகளை ஆற்றியிருத்தல் என்பதற்கு அடிப்படை பிரிவின்மை என்பதே. தன் தலைவி கூடலை விரும்பி விரைந்து தேரைச் செலுத்தச் சொல்லும் தலைவர்களை முல்லைத் திணையில் காணலாம்.

மருதம் நெய்தல் என்ற திணைகள் இன்னும் பின்னால் ஏற்பட்டவை. இவை முதன்மையாகப் பிரிவு சார்ந்தவை. மருதம் உள்ளத்தளவிலான பிரிதலையும் நெய்தல் உடலளவிலான ஆறுத லற்ற பிரிதலையும் குறிப்பவை. எனவே ஊடலும் புலம்பலும் இவற்றின் உரிப்பொருள்கள் ஆகின்றன. இவ்வாறு உடனுறை தலையும், பிரிவையும் (பிற்காலத்தில் இவற்றுக்கு இணையாகக் களவு கற்பு என்ற சொற்கள் ஆளப்படுகின்றன) பிரித்துக்காட்டும் திணையாக இறுதியாகச் சேர்க்கப்பட்ட பாலைத்திணையை நடுவு நிலைத் திணையாக வைத்தார் தொல்காப்பியர்.

குறிஞ்சி – உடனிருப்பு – உள்ளம், உடல் சேர்ந்திருத்தல்

முல்லை – உடனிருப்பு – முதன்மையாக, உள்ளம் சேர்ந்திருத்தல்

பாலை – உடனுறைவு, பிரிவு இரண்டும்

மருதம் – பிரிவு – முதன்மையாக, உள்ளம் பிரிந்திருத்தல்

நெய்தல் – பிரிவு – உள்ளம், உடல் பிரிந்திருத்தல்

முன்னிரண்டையும் பின்னிரண்டையும் பிரிக்கும் பிரிவுத்திணை பாலை. குறிஞ்சி, முல்லை, பாலை ஆகியவற்றில் பெரும்பொழு தும் சிறுபொழுதும் சங்கப்பாக்களில் ஒத்துச்செல்வதுபோலப் பிற இரண்டிற்கும் (மருதம், நெய்தல்) ஒத்துச்செல்வதில்லை.

குறிஞ்சியும் முல்லையும் உடனுறைவு சார்ந்தவை என்பதற் குக் காரணங்கள் உண்டு. காட்டுப்பகுதி என்பதால் வேட்டைக்குச் சென்ற தலைவனும், மேய்த்தல் தொழில் என்பதால் முல்லை நிலத் தலைவனும் இரவானதும் வீட்டுக்குத் திரும்பிவிடுதல் இயல்பு. இவை சிறுபொழுது சார்ந்தவை.

‘நாகரிகம்’ அடைதலே மருதநிலம்-ஆற்றங்கரை சார்தல், உழவுத் தொழில் புரிதல் என வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின் றன. ஆனால் அதிகமான ஓய்வினை அளித்துப் பரத்தையர் சார்ந்த வாழ்க்கை முறையை உருவாக்குவது மருதநில நாகரிகம்தான். பரத்தையர் சார்ந்த வாழ்க்கை முறை பெண்ண டிமைத் தனத்தை உள்ளீடாக உடையது. வீட்டுப்பெண்களான தலைவியரும், வெளிப்பெண்களான பரத்தையரும் ஆணின் ஆதிக்கத்திற்கு உள்ளாக்கப்படும் திணை அது. இது தற்செயலான ஒன்றல்ல. விவசாயத்திற்காக வீட்டிலும் வெளியிலும் உள்ள நிலத்தை (படப்பை, நாடு) அடிமைப்படுத்துவதன் எதிர் நிலையே அது. எனவே முதன்முதலில் நிலம் சார்ந்த சுரண்டலும் (நிலப்பிரபுத்துவமும்), பெண்களைச் சுரண்டலும் (பெண்ணடிமைத் தனமும்) உருவானதைத்தான் நமது வரலாற்றாசிரியர்கள் ‘நாகரிகம்’ அடைதல் என்கிறார்கள்.

குடபுலவியனார் பாடலில் நீர் மேலாண்மை எவ்வாறு செய்யப் பட வேண்டும் என வலியுறுத்தப்படுவது இங்கு நோக்கத்தக்கது. பழைய குறிஞ்சி, முல்லைப் புல உணவுகள் மாறி, “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே…” என்றெல்லாம் சொல்லி,

“நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர்அம்ம இவண் தட்டோரே,
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே”

என நீர்த்தேக்கங்களை உருவாக்கச் சொல்வது இங்கு நோக்கத்தக்கது (புறம். 18)

நெய்தல் என்பதன் பொருள் இரண்டிழைளை நீவி ஆடை யமைத்தல் என்பது. எனவே இருவித நாகரிகங்களின் கலப்புத் திணையான அதற்கு அப்பெயர் பொருத்தமாகத் தோன்றுகிறது.

மருதத்திணை உருவானபோதே வேந்தர் நாகரிகம் (வேந்தன் = அரசன், மருத நிலத் தலைவன்) பெருநில மன்னர் நாகரிகம் உருவாகிவிட்டது. எனவே சங்க இலக்கியத்தில் மூன்றடுக்குச் சமூக அமைப்பொன்றைக் காண்கிறோம்.

நிலத்தலைவர்கள் > இனக்குழு/நில மக்கள் > அடிமைகள், இழிதொழிலாளர்

என்பது அந்த அமைப்பு. இவர்களுக்கெல்லாம் மேலாக, உருவான வர்கள் மூவேந்தர்கள். நெய்தல் திணையில்தான் சங்க இலக்கியத் தில் தேரில் வரும் நிலத்தலைவர்களும், இனக்குழு (இனமக்கள்) சார்ந்த பெண்களும் (தலைவியரும்) மிகுதியாகக் கலப்பதைக் காணமுடிகிறது. இந்த அந்தஸ்து வேறுபாட்டால் உண்டாகும் அவநம்பிக்கையே புலம்பல் என்ற அதன் உரிப்பொருளுக்குக் காரணமாகிறது. தலைவனைத் தலைவியோ தோழியோ அளவுக் கும் மீறி இரந்து நிற்பதையும் நெய்தல் பாக்களில்தான் காண முடியும்.

தாய் உடன்று அலைக்கும் காலையும்
அன்னாய் என்னும் குழவிபோல
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்
நின் வரைப்பினள் என் தோழி. (குறு. 397)

போன்ற பாடல்கள் இதனை உணர்த்தும்.

இம்மை மாறி மறுமையாயினும்
நீயாகியர் எம் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே. (குறு.49)

“அடுத்தபிறவியிலும் உன் மனத்துக்குப் பிடித்தவள் நானாகவே இருக்கவேண்டும்” என்ற கருத்து இதில் வெளிப்படுகிறது.

திணை என்ற கோட்பாடே எல்லாச் சமூக நிறுவனங்களுக்கும் அடிப்படையாக அமைவது. ஏனெனில் எல்லாக் கருப்பொருள்க ளுக்கும் இடம் அதுதான். கருப்பொருள்களில் தெய்வம், திரு மணம் உட்பட எல்லாச் சமூக நிறுவனங்களும் அடங்கும். பொருளாதாரம், அரசியல், குடும்பம், மொழித்தொடர்பு ஆகிய அனைத்துச் சமூக நிறுவனங்களுமே திணை என்பதில் அடங்கும். மேலும் ஒழுக்கம் வாழ்க்கை முறை என்பதும் அதில் அடங்கும். திணை அகம், புறம் என இருவகைப்படும் என்றாலும், முதற்பொருள்-கருப் பொருள்-உரிப்பொருள் என அனைத்தும் அகம் சார்ந்தே பகுக்கப்படுவதால், அகத்திணையே (குடும்பமே) அக்காலச் சமூக அமைப்பில் முதன்மை பெற்றிருந்தது என அறியலாம். சங்க இலக்கியத்தில் புறப்பாடல்களைவிட மிக அதிக எண்ணிக்கையில் அகப்பாக்கள் காணப்படுவதும் இதனை வலி யுறுத்துகிறது.

இவையாவும் சங்ககாலத்திற்கு முன்பே வழக்கில் வந்துவிட் டவை. பிறகு குறிப்படுத்தப் பட்டவை. சங்ககாலத்தில் திணை என்பது வாழ்விடம், வாழ்க்கை முறை என்ற அர்த்தங்களை இழந்து எப்படிக் கலைகளை-குறிப்பாகக் கவிதையை உருவாக்கு வது என்னும் கோட்பாடாகத் தொல்காப்பியரால் ஆக்கப்பட்டு விட்டது. தொல்காப்பியர் கூறும் தொடர்பு கொள்ளல் முறைகளையே நாம் கவிதை அமைப்பதற்கான நெறிமுறைகள் என்று கருதமுடியும். கவிதை அமையும் நிலம், களம், வரைவுச் சட்டகம், சூழல் அனைத்துமாகத் திணையே விளங்குவதால் திணையே சங்கக்கவிதையின் அடிப்படைத் தத்துவமாகக் கருத இயலும்.

நால்வகைப் பாக்களுக்கும் நான்கு அடிப்படைத் திணைக ளுக்கும் தொடர்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. குறிஞ்சித் திணையில் மந்திரச் சடங்குகள் நிகழ்த்தல், வேலனின் வெறியாட் டம் போன்றவற்றைக் காண்கிறோம். மந்திரச் சடங்குகள் நிகழ்த்தும்போது சூத்திரயாப்பு அல்லது மந்திரயாப்பு தேவைப்படு கிறது. ஒரேசொல்/ தொடர் திரும்பத்திரும்ப வருதல், ஒரே மாதிரி யாப்பு அல்லது சந்தம் பயன்படுத்தப் பெறுதல், நினைவுகூரத்தக்க வகையில் அமையும் ஒலிநயம், அழைத்துச் செய்தி கூறல் என்பவை சூத்திரயாப்பின் அடிப்படைகள். சூத்திர யாப்பிற்கு இன்னொரு பெயர்தான் அகவல். குறிஞ்சி நிலத்தின் இயற்கை யோடு இயைந்த தன்மை சடங்குகளிலும் வெளிப்படுகிறது. கவிதை அக்காலத்தில் சடங்கின் ஒரு பகுதியாகவோ அதுவே மந்திரமாகவும் சடங்காகவுமோ அமைந்திருந்தது. எனவே அக்காலக் கவிதைகளில் நாம் சமூக நோக்கு, செயல்படுதன்மை, திரும்பத்திரும்பக்கூறல், ஒன்றிணைத்தல், உருமாற்றுதல் ஆகிய தன்மைகளைக் காணலாம். (இத்தன்மைகளைக் கொண்ட கவிதை யாற்றலை வேண்டியே பாரதியாரும் “மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்” என்றார்). அகவுநர்-வேந்தருடைய வெற்றியைக் கூவி உணர்த்துவோர் எனச் சிலர் கருதுகின்றனர். இது பிற்காலப் பொருளாகலாம். இம்மாதிரி மந்திர/சூத்திரத் தன்மை கொண்ட கவிதைகளைப் பாடிய அகவன் மகளைத் தோழி வேண்டுவதாக வரும் சங்கப் பாடல் இது. அகவன் மகள் தெய்வச் சடங்கிற்கென தெய்வத்தைக் கூவியழைக்கும் மகள் என்பதே ஆதிப் பொருள்.

அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்

இப்பெண்மணி அகவன் மகள் (அகவல்-யாப்பு, கூவுதல், அழைத் தல்) என அழைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். “அகவன் மகளே, பாடுக பாட்டே”. இந்த அகவலின் சொற்களே நெடிலில் முடி கின்றன. நெடில் ஒலி அழைப்பதற்கு மிக ஏற்றது. திரும்பக்கூறல் உத்தியையும் இப்பாடல் மிக நயமாகக் கையாளுகிறது. தொழுது வேண்டுதல் என்பதற்கு இப்படிப்பட்ட அகவல் வடிவம் தேவைப் படுகிறது. எனவே குறிஞ்சிக்குரிய யாப்பு அகவல் எனப்பட்டது.

முல்லைத்திணை-கற்பு, வெண்மை, தூய்மை சார்ந்தது. எனவே வெண்பா வடிவம் இயல்பாகவே முல்லைக்குப் பொருந்துகிறது.

மருதம் கலப்புக்குரிய, ஓய்வுக்குரிய திணை ஆதலான் பலவித உறுப்புகளும் பொருந்திவரும் நீளமான இசைப்பாடலாகிய கலிப்பாவைத் (இன்றைய சாஸ்திரீய சங்கீதத்தை ஒத்த இசைத் தன்மை உடையது) தனக்குரியதாகக் கொள்கிறது.

நெய்தல், வஞ்சிப் பாவைக் கொண்டது. வஞ்சி, படகு என்பதையும் குறிக்கும். இன்றும் கேரளத்தில் நெய்தல் சார்ந்த படகுப் பாட்டுகள் வஞ்சிப்பாட்டுகள் என்றே அழைக்கப்படுவது நோக்கத் தக்கது.
இதுவரை பார்த்தவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

1. குறிஞ்சி-வேட்டைச் சமூகம், சுரண்டல் உருவாகா நிலை
இயற்கைக் காதல், பெருமளவு தாய்வழிச் சமூகம்.
வெட்சி-வேட்டைச்சமூகம், சிறிய தலைவர்கள், ஆநிரை கவர்தல்

2.முல்லை-ஆடுமாடுகள் சொந்தமாதல், தனியுடைமையின் தொடக்கம்
மேய்த்தல் சமூகம், தந்தைவழிச் சமூகமாதல், கற்புக் கோட்பாடு
வஞ்சி-சிறிய தலைவர்கள், நேருக்கு நேர் போரிடல்

3. மருதம்-பெருமளவில் நிலத்தைச் சொந்தமாக்குதல், இயற்கை யழிவு, சுரண்டல்
நிலவுடைமைச் சமூகம், பெண்ணுடைமைச் சமூகம், ஆண்கள் நெறிதவறுதல்
நொச்சி-அரணமைத்துக் காத்தல், பெரும் அரசர்கள் தோற்றம்

4. நெய்தல்-இயற்கைக்குத் திரும்புதல், சுரண்டலற்றநிலை
கலப்புக்காதல், சிரமம்/துன்பம்/இரங்கல்/புலம்பல், நிச்சயமற்ற பிரிவு
காஞ்சி-நிலையாமை/நிலையின்மை, புலவர்கள் பேரரசை விட்டு சிறிய புரவலர்களை அணுகுதல்

5. பாலை-களவுசெய்யும் சமூகம், மனிதனை மனிதன் அழித்தல்
தற்காலிகப் பிரிவு, வெம்மை, பிரிவும் பிரிவின்மையும்
வாகை-பெருவேந்தர் குறுநில மன்னர்களை வெற்றிகொண்ட தன்மை, இரக்கம்

எனத் தமிழ்இலக்கிய மரபு உருவாக்கப்பட்டது. இதில் பாலைத் திணை பற்றி இன்னும் சிறிது நோக்கலாம்.
பழங்காலத்தில் இயல்பான சமூக வாழ்க்கைக்குக் கட்டுப் படாத-அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாத மக்கள் சிலர் இருந்திருக்க இயலும். ஆங்கில இலக்கிய அடிப்படையில் பார்த்தால் அவர்களை outlaws என்று வருணிக்கலாம். மத்திய கால ஆங்கில இலக்கியத்தில் காணப்படும் ராபின்ஹூட் போன்றவர்கள் சட்டத்திற்குப் புறம்பான இத்தகையோரே. அது போல சங்ககாலத் தில் வாழ்ந்த சட்டத்திற்குப் புறம்பான மக்கள் பாலை நிலங் களில் தங்கள் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்க இயலும். எனவே பாலைநிலத்தினரை அக்காலச் சட்டதிட்டங்க ளுக்குப் புறம்பான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்று கருதலாம். இவர்களைக் குற்றமரபினர் – Criminal Tribes என்று ஆங்கிலேயர் கருதிப் பகுத்ததும் இந்தத் தன்மைக்கு ஆதரவாக அமைகிறது.

இதுவரை அகத்திணைகளில் அன்பின் ஐந்திணை பற்றி மட்டுமே பார்த்தோம். கைக்கிளை பெருந்திணை இரண்டும் முறையே சமூகத்தில் குறிப்பிட்ட பருவத்தில் ஆண்களிடையே பெரும்பான்மை நிகழும் உள்ள நிகழ்வையும், சமூகத்தில் பெருமளவு நிகழும் திருமண முறையையும் (சமூகநிகழ்வையும்) குறிக்கின்றன. இரண்டுமே பெரும்பான்மையில் நிகழ்வன ஆயி னும் சங்க இலக்கியத்தில் எடுத்துக்காட்டும் இலட்சியபூர்வமான வாழ்க்கை முறைக்குத் தொடர்பற்றவை. பெருந்திணை பற்றி அறிஞர் வ.சுப. மாணிக்கம் “எல்லை மீறிய உணர்ச்சிப் பெருக்கினை எடுத்துக்காட்டும் திணை” என்பார். சங்க இலக்கியங் களில் அகத்திணைக்கு ஒருவிதமாகவும், புறத்திணைக்கு இன்னொரு விதமாகவும் திணை முதலியன வகுக்கப்பட்டதால் வ.சுப. மாணிக்கனார் கருத்து புறத்திணைக்குப் பொருந்துவதாக இல்லை. உதாரணமாக, கண்ணகியை விட்டு பேகன் பிரிந்திருந்த போது அரிசில் கிழார் போன்ற புலவர்பெருமக்கள் பாடிய பாடல்கள் குறுங்கலி, தாபதவாகை போன்ற துறைகளில் பெருந்திணையில் (புறத்தில்) வைக்கப்பட்டுள்ளன. பெருந்திணை பிற்காலத்தில் புறத்திணையாகக் கருதப்பட்டதால் ஏற்பட்ட நிலை இது.

புறத்திணைகள் காட்டும் சமூகநிலை அகத்திணைகள் காட்டும் சமூகத்தோடு ஒப்பவைத்து நோக்க அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. களவு-கற்பு என அகத்திணைக்குள் திட்டவட்டமான ஒழுக்கம், அதன் சமூக வெளிப்பாடான கரணம் என்பவை போலப் புறத்திணைக்கென ஒழுக்க அடிப்படை ஏதுமில்லை. வெட்சி ஆநிரை கவர்தல் என்று மட்டும் சொல்லப்படுகிறதே தவிர, எந்தச் சூழலில், எந்த ஒழுக்க அடிப்படை கொண்ட ஆணை அடிப்படையில் என்ன முறைப்படி அது செய்யப்பட வேண்டும் என்ற வரையறை எதுவும் தொல்காப்பியத்திலும் சொல்லப்பட வில்லை. சங்க இலக்கியத்திலும் தெளிவாக இல்லை. மேலும் தொல்காப்பிய நூற்பாக்கள் பெருமளவு போர் நிகழ்வுகளையே (போர்க்களத்தில் காணப்படும் சில அபூர்வமான சம்பவங்கள் அல்லது நிலைகள்) துறைகளாக வருணிக்க, சங்கப் பாக்களுள் பெருமளவு அவ்வாறில்லை.

புறநானூற்றில் பல்வேறு செய்திகள் கலந்து வருகின்றன. பதிற்றுப்பத்தில் போர்வருணனை-பகைப்புலத்தை அழித்தல் – அவ் வாறு அழித்தலின் வாயிலாகப் பெற்ற செல்வத்தைப் புலவர்க ளுக்கு அளித்தல்-யாகத்திற்குச் செலவிடல் ஆகிய செய்திகளே திரும்பத்திரும்ப வருகின்றன.
தனது நாட்டைப் பகைவர் தாக்காமல் தற்காத்துப் பகைவர் நாட்டை அழித்துக் கொள்ளை கொள்வதை அகத்தில் மருதத்திணையுடன் மட்டுமே ஒப்பிட முடியும்.

நெட்டிமையார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடும் பொழுது,

அறனோ மற்றிது விறல்மாண் குடுமி
இன்னாவாக பிறர்மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே

எனப்பாடுவது நோக்கத்தக்கது.

சிலப்பதிகாரக் கானல்வரி “கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி” என்று வெளிப்படையாகவே இதனைச் சொல்லிவிடுகிறது. காவிரியின் தலைவன் கங்கையைப் புணர லாம். ஆனால் காவிரி நெறிபிறழக்கூடாது; பிறருக்கு உரிமையும் ஆகக்கூடாது. பூம்புகார் போன்ற நகர மக்களும் போரினால் பாதிக்கப்படாமல் “பதியெழு அறியாப் பழங்குடி மூதூர் மக்கள்”ஆக வாழ்ந்த நிலை நாட்டுடைமை-தன்சொத்துடைமை ஆகியவற்றை அரசர்கள் போற்றியதைக் காட்டுகிறது. அதேபோல் தன் கொழுநன் – பதி தவிரப் பிறர் அறியாக் குலமகளிர் போலப் பிறபதி அறியா- பதியெழு அறியா மக்களாக இருத்தல் என்ற கற்புநிலை போற்றப் படுகிறது. இப்படி புறத்திணையில் போர்ச்செய்திகளில் எந்த ஒழுக்க அடிப்படையும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீரம் தவிர, பிற புறப்பாடல்களை வகைப்படுத்தினால், அவை கடவுளைப் போற்றுதல், மன்னரை (குறுநில மன்னரை)ப் போற்று தல் (கையறு நிலை உட்பட), மகட் பாற்காஞ்சி போன்ற சில தலைப்புகளில் அமையும். குறிப்பாக மகட்பாற் காஞ்சித் துறை பெண்ணின் காரணமாகப் பெருமன்னர்க்கும் சிறு தலைவர்களுக் கும் போர் ஏற்படுவதையும் அப்போர்களில் சிறுதலைவர்களின் அழிவுநேரிடுவதையும் வருணிக்கிறது.

இப்படித்தான் இனக்குழு மக்களும் அவர்களது சிறு தலைவர்களும் வாழ்ந்த தமிழகம், மூவேந்தர் வயப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய தமிழகத்தில் தோற்றுப்போகும் எளிய நிலத் தலைவர்களை அல்லது மக்களை ஆறுதல் படுத்த வேண்டி,

“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலக்தது இயற்கை”

என்று சமூக நிகழ்வை இருத்தலியப் படுத்துவதையும், “கான்யாற்றில் அடித்துச் செல்லும் புணை போல வாழ்க்கை செல்கிறது. எனவே பெருமன்னரும் – சிறு தலைவர்களும் ஒன்று தான், யாதும் ஊர் யாவரும் கேளிர்” என விதியை நம்பவைப்பதும், “இன்னாதம்ம இல்வுலக்ம் இனிய காண்க இதன் இயல் புணர்ந்தோரே” எனத் துன்பத்தை இயற்கை நிகழ்வு இயல்பு என ஆக்குவதையும் காணமுடிகிறது.

இத்தகைய நோக்கிற்கு சமண பௌத்த மதங்களின் ஆதிக்கம் ஓரளவு காரணமாகலாம் என்றா லும் இனக்குழுச் சமூகத்திலிருந்து மூவேந்தர்களால் ஆளப்படும் பெருநாட்டு நாகரிகத்திற்கு மக்கள் மாறிக்கொண்டிருந்ததே அடிப்படைக் காரணம் எனத் தோன்றுகிறது,

எவ்வாறாயினும் சங்கப்பாடல்களை இன்னும் ஆழமாக நோக்கி னால் பலவிதத் தொடர்புகள், புதியதாக கிடைக்கக்கூடும். சமூக வியல், சமூக உளவியல், மானிடவியல் நோக்குகளில் ஆராயும் போது திணை அமைப்புப் பற்றி புதிய செய்திகள் புலப்படலாம்.

—–

 


திறனாய்வும் பொதுப்புத்தியும்–முதல் பகுதி

திறனாய்வும் பொதுப்புத்தியும்–முதல் பகுதி

[Critical Practice என்னும் தலைப்பில் கேதரின் பெல்சி எழுதிய நூலின் முதல் இயல் Criticism and Common Sense. அதன் தமிழாக்கம் இந்தக் கட்டுரை. பழைய வகைத் திறனாய்வு முறை பற்றியும் அது அமைப்பிய-பின்னமைப்பிய முறைகளுக்கு எவ்வாறு மாறியது என்பது பற்றியும் இதில் விரித்துரைக்கிறார் பெல்சி. இது அதன் முதல் பகுதி. இதில் ஐசர் வரையிலுள்ள கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் அமைப்பு வாதத்துக்கு மாறிய விதம் பற்றிக் காணலாம்.]

டேவிட் லாட்ஜ் எழுதிய Changing Places என்ற நாவலில் ஓர் உரையாடல். ஃபிலிப் ஸ்வேலோ என்பவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். அவர் அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவர்களுக்கு நாவல் எழுதும் பயிற்சி தருவதற்காக வந்திருக்கிறார். வில்லி ஸ்மித் என்ற மாணவன் ஆர்வத்தோடு அவரை அணுகுகின்றான்:

“சார், நகரத்தின் ஒதுக்குப்புறப் பகுதியில்வாழும் ஒரு கருப்புச் சிறுவனைப் பற்றி நான் ஒரு நாவல் எழுதவேண்டும்”.
“அது கொஞ்சம் கஷ்டமான வேலையாயிற்றே” பேராசிரியர் தயங்குகிறார். “அதாவது நீயே ஒரு…………….”(நீக்ரோவாக இருக்க வேண்டுமே என்று சொல்லவருகிறார்). நீக்ரோ என்ற சொல்லுக் குப் பதிலாகக் கருப்பன் என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று அவருக்குத்தெரியும். ஆனால் இன பேதத்தைக் குறிக்கும் ‘கருப்பன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தவும் அவர் மனம் தயங்குகிறது. தொடர்கிறார்: “……..நீயே அப்படிப்பட்ட அனுப வம் பெற்றிருந் தாலொழிய”.
மாணவன் சொல்கிறான்: “ஆமாம், ஆமாம். நாவல் ஒரு சுயசரிதை போலத்தானே”
பேராசிரியருக்குத் தூக்கிவாரிப்போடுகிறது. “சுயசரிதம் போலவா? அப்படியா?”
“நிச்சயமாகச் சொல்வேன் சார்” மாணவனின் புண்பட்ட குரல் ஒலிக்கிறது.

மேற்கண்ட உரையாடலில் பண்பாட்டு வித்தியாசத்தால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தடை ஏற்பட்டதோ என்னவோ, ஆசிரியரும் மாணவனும் ஒரு விஷயத்தில் ஒன்று படுகிறார்கள். அதாவது நாவல் என்பது வாழ்க்கையைப் பற்றியது. நாவல் வாழ்க்கை அனுப வத்திலிருந்து உண்டாகிறது; அதனால்தான் அதற்கு நம்பகத்தன்மை ஏற்படுகிறது என்பதுஇவர் களுடைய கருத்து. வேறுவார்த்தைகளில் சொன்னால், அவர்கள் இருவருமே இலக்கியம் பற்றிய ‘பொதுப்புத்திப் பார்வை’ (Common sense view) கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இலக்கியம் பற்றிய பொதுப்புத்திப் பார்வை என்றால் என்ன? ‘வெளியீட்டு யதார்த்தவாத (Expressive Reastic) அடிப்படையிலான வாசிப்புப்பயிற்சி’ என்பதுதான் அதன் பொருள்.
வெளியீட்டு யதார்த்தவாதம் என்பதைச் சுருக்கமாக யதார்த்த வாதம் அல்லது நடப்பியம் என்று சொல்லலாம்.

பொதுப்புத்திப் பார்வை என்னசொல்கிறது? நாம் போற்றுகின்ற இலக்கியப்பிரதிகள் சிறப்பான கவனம்செலுத்திப் படிக்கவேண் டியவை; ஏனெனில் அவை தாம்எழுதப்பட்ட காலத்தைப் பற்றியோ, பொதுவான உலக இயல்பைப் பற்றியோ, மனித இயல்பைப் பற்றியோ, சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றன; அவை ஆசிரியனின் ஆழ்ந்த உளவியல் பார்வைகளையும் அனுபவங்களையும் வெளியிடுகின்றன.

மேலும், எல்லோருக்கும் வெளிப்படையாகத்தெரிந்த வாசிப்பு முறை, இலக்கியங்களை இயல்பாக அணுகும்முறை இவற் றையே பொதுப்புத்திப் பார்வை சிபாரிசு செய்கிறது. இலக்கியம் என்பது உணர்வு பூர்வமாகக் கருத்தூன்றிச் செய்யப்பட்ட, திட்டமிட்ட நோக்குடைய ஒரு பயிற்சி என்பதையோ, ஆராய்ந்து முடிவுசெய்யப்பட்ட, ஆழ்ந்த கருத்தியல் அடிப்படையிலானது அது என்பதையோ பொதுப்புத்திப் பார்வை ஏற்பதில்லை. இதனால் திறனாய்வுப்பயிற்சி என்பது, ஒரு மரியாதைக்குரிய-ஆனால் மையத்தை அணுகாத செயற்பாடாகவும், கல்லூரியிலோ பள்ளி களிலோ படிக்கும் மாணவர்கள்மட்டுமே ஈடுபடக்கூடியதாகவும் கருதப்படுகிறது. ஆழ்ந்த படிப்புக்கும் திறனாய்வுக்கும் தொடர் பில்லை எனக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்முறையிலான விமரிசனம், நாம் அனைவரும் படிக்கும்போது எதை மேலோட்டமாக உணர்கிறோமோ அதை மட்டுமே வெளிப்படுத்து வதாகிறது.

மோசமாகச் செய்யப்படும்போது, இந்த வகைத் திறனாய்வு, வாசகரைத் தவறான பாதையில் தள்ளுகிறது; அவர்களது வாசிப்பு முறையில் குறுக்கிடுகிறது; இலக்கியத்தில் ஏதேதோ தத்துவங்கள் இருப்பதுபோன்ற கற்பிதங்களை வாசகர் மனத்தில் உண்டாக்கி அவர்களைக் குழப்புகிறது; அதனால் “தாம் ஏதோ அதிகமாக அறிந்துகொண்டவர்கள்” என்பதுபோன்ற மனநிலை கொண்டவர் களாக வாசகர்களை ஆக்குகிறது; அதனால் இலக்கியப் பிரதியி லிருந்து ஆழமாக உணரக்கூடிய மெய்ம்மைகளை அவர்களை உணரவிடாமல் செய்வதோடு, பிரதியுடன் நேரடியான, இயல்பான தொடர்பை அறுத்துவிடுகிறது.

ஃபிரான்சிலும் ஐரோப்பாவிலும் தொடங்கி, அமெரிக்காவிலும் தொடர்ந்திருக்கும் பணிகள், மேற்கண்ட பொதுப்புத்தியின் தற் பாவனையான கற்பிதங்களின் அடிப்படைகளை அசைத்துவிட்டி ருக்கின்றன. கற்பிதங்களை மட்டுமல்ல, அவற்றை நாம் கொள் ளக் காரணமாக இருக்கின்ற பொதுப்புத்தியின் மேலாதிக்கம் பற்றியும் ஐயத்தைக் கிளப்பிவிட்டுள்ளன. காலங்காலமாக உறுதிப்படுத்தத் தேவையற்றவை, அடிப்படையானவை, யாவருக் கும் தெரிந்தவை, இயல்பானவை, காலங்கடந்த அறிவினால் அறியப்பெற்றவை என்று எவற்றையெல்லாம் நினைத்திருந் தோமோ, அவையெல்லாம் இன்று சந்தேகத்திற்கிடமானவை ஆகிவிட்டன. இந்தப்பணிகள் யாவும் ‘அமைப்புவாத’ (Structuralist) என்ற அடைமொழியால் அழைக்கப்படுகின்றன. இன்னும் தெளிவா கச் சொன்னால் இவற்றை ‘சசூருக்குப் பிற்பட்ட’ என்ற அடை மொழி சேர்த்தும் சொல்லவேண்டும். ஏனெனில் சசூர் (Ferdinand de Sassure) என்பவருடைய மொழியியல் கொள்கைகளைப் பின்பற் றும் பார்வை இது. “பொதுப்புத்தி என்பதே கருத்தியல் ரீதியானது (Ideological), மேலோட்டமான பார்வைக்குப் புலப்படாத அடிப்படை யில் அமைந்தது” என்று சசூர் சொல்கிறார்.

இந்தப் பொதுப்புத்திப் பார்வை, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துடன் ஒத்துச் செல்லும் வண்ணம் உருப்பெறுவது. வேறுசொற்களில் சொன்னால், எது ‘இயல்பானது’ ‘நன்கு புலப்படுவது’ என்றெல்லாம் நினைக்கி றோமோ, அது அவ்வாறல்ல; அதாவது, ‘இயல்பான’ ‘நன்கு புலப்படுகிற’ என்று சொல்லப்படும் கருத்துகளெல்லாம் ‘இயல் பாகத்’ தாமே உண்டானவை அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினால், குறிப்பிட்ட மக்கள் குழுவினால் உண்டாக்கப் படுபவை. சமூகத்தில் உள்ள ஆதிக்க உறுப்பினர்கள் பேசுவது, எழுதுவது, பழக்கப்படுத்துவது, கல்வியளிப்பது போன்ற செயல்க ளால் இந்த ‘இயல்பான’ எண்ணங்களை உருவாக்குகிறார்கள்.

இதுவரை சொல்லியவற்றிலிருந்து, வாசிப்புப் பயிற்சி தொடர் பாக இதுவரை பொதுப் புத்தி சொல்லிக்கொடுத்த முறைகள் உகந்தவையா என்ற ஐயப்பாடு எழுகிறது. சசூருக்குப் பிந்திய மொழியியல் ஆய்வுகள், யதார்த்தம் என்ற கொள்கையை ஆட்டம் காணச் செய்துவிட்டன. குறிப்பாக, ரோலண் பார்த் (Roland Barthes), “ஆசிரியனின் மரணம்” பற்றிப் பேசுகிறார். ழாக் லக்கான் (Jacques Lacan), லூயி அல்தூசர் (Louis Althusser), ழாக் டெரிடா (Jacques Derrida) போன்றவர்கள், சுயம் (Self)தான்-அதாவது தனிப்பட்டமனம்தான் சொல்லின் அர்த்தத்தை உணர்வதற்கும், செயல்களைச் செய்வ தற்கும் அடிப்படையானது என்ற பொதுவான எண்ணம் அல்லது பொதுப்புத்தி யூகம், ஐயத்திற்கிடமானது என்று தக்க ஆதாரங்களு டன் நிறுவியுள்ளனர். இந்த நிலையில், ஓர் இலக்கியப் பிரதி, ஒரு கருத்தை (அல்லது சில கருத்துகளை)ச் சொல்கிறது, அது ஒரு வாசகனால் உணரப்படுகிறது; அந்த வாசகனின் உள் அனுப வங்கள்தான் அந்த இலக்கியப் பிரதியின் ஒரே ஒரு பொருளை (அதாவது சரியான அர்த்தத்தை)க் காண்பவை என்ற சிந்தனைகள் அடிபட்டுப்போகின்றன. ஏனெனில் ஒரு பிரதி என்ற வடிவமே பல யூகங்களாலும் சொல்லாடல்களாலும் (discourses) ஆக்கப்பட்டது.

முன்னரே கருத்தியல் (ideology) என்ற சொல் பொதுப்புத்தி யோடு இணைத்து இங்கு வழங்கப்பட்டது. கருத்தியல் என்றால் “கோட்பாடுகளின் தொகுப்பு” அல்லது “முரண்பாடற்ற நம்பிக்கை களின் தொகுப்பு” என்பது அல்தூசர் கொடுத்துள்ள அர்த்தம்: அது எவரோ சிலர் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு விருப்பப்பொருள் அன்று; தன்னுணர்வு கொண்ட மனிதர்கள் செயற்கையாக உருவாக்குவதுமன்று (இதற்கு உதாரணம்-பழமைவாதக் கருத்தி யல்). இவ்வுலகத்தில் நம் அனுபவங்கள் ஏற்படுத்தும் வாழ்நிலை தருகின்ற ஒன்று அது. நாம் கேள்விகேட்காது ஏற்பது. அல்தூசர் பயன்படுத்தும் அர்த்தத்தில் கருத்தியலுடன் அரசியல், பொருளா தார வழிமுறைகளும் சேர்ந்து சமூக அமைவு (system) என்பதை உருவாக்குகின்றன. சமூக அமைவு என்ற இந்தக் கருத்து சமூக உறவுகளை நாம் இன்னும் ஆழமாக ஆராயப் பயன்படும். (சமூகம் என்ற சொல் இவ்விதம் பயன்படுவதில்லை. ஏனெனில் அது ஒரு துருவத்தில் ஒரேமாதிரி தன்மை கொண்ட சமச்சீரான ஒரு மானிடத் தொகுதியையும், எதிர் துருவத்தில் தன்னியல்பான தனிமனிதர்கள் உறுதியாக இணைப்புப்பெறாத ஓர் அமைப்பையும் குறிக்கிறது. ஏற்கெனவே உள்ள சமுதாயம் பற்றியுள்ள கற்பிதங் களை அப்படியே ஏற்பதாகவும் அமைகின்றது).

எந்தவொரு கூற்றிலும் கருத்தியல் புதைந்துள்ளது. ‘கூற்று’ அல்லது ‘சொல்லாடல்’ என்பது மொழிப் பயன்பாட்டின் ஒரு செயற்பரப்பு: ஒரு குறிப்பிட்டவகையில் கொள்ளும் சில பொது யூகங்கள் கொண்டது. இந்த யூகங்கள் அந்தச் சொல்லாடலுக்குத் தனித்தன்மையளிக்கும் வடிவங்களில் பொதிந்துள்ளன. உதாரண மாக, நவீனஇயற்பியலின் சொல்லாடல்கள், பொதுப்புத்திச் சொல் லாடல்களிலிருந்து நிச்சயமாக வேறுபட்டவை. ஏனெனில் இரண் டின் உட்குறிப்புகளும் ஒன்றுக்கொன்று சிலஇடங்களில் மாறு படுபவை. கருத்தியல் என்பது தானாக இயங்கும் ஒரு தனிக்கூறு அல்ல. நீரின்மேல் பனிக்கட்டிகள் மிதப்பது போல எண்ணங்களின் மேற்பரப்பில் கருத்தியல்கள் மிதப்பதில்லை. கருத்தியல் என்பது சிந்திப்பதில் – பேசுவதில் – அனுபவம் கொள்வதில் – காணும் ஒரு போக்கு. சொல்லாடல், கருத்தியல் போன்ற சொற்களின் பொருள் கள் தொடர்ந்து நாம் மேலே படித்துக்கொண்டே செல்லும்போது தெளிவுபெறும்.

சிலசமயங்களில் நமக்குஅறிமுகமில்லாத சொல்லாடல்கள் மூலமாகப் புதிய கொள்கைகள் சொல்லப்படும்போது அவை நமக்குப் புரிவதில்லை-அல்லது அவை நமது கவனத்தை ஈர்க்க வேண்டுமளவுக்குக் கனம்பெற்றவை என நாம் கருதுவதில்லை – என்றஅபாயம் பொதுப்புத்திப் பார்வையினால் ஏற்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால் பொதுப்புத்தியின் கடைசிப் புகலி டமே, தன் மொழிக்கு எட்டாத அல்லது ஒத்துவராத எந்தக் கூற்றையும் ‘பயனற்றது’ என ஒதுக்குவதுதான். கொள்கை பூர்வ மான எதிர்ப்புகளைச் சந்திக்காமல் மிக எளிதாகத் தப்பிக்கும் வழி இது. மேலும் “அவன் அப்படித்தான்” என்ற மாதிரி ஒத்துழைப்பு வாசகங்களைத் தனக்கு வேண்டியவரிடமிருந்து பெறுவதற்குரிய வழியுமாகும். ஆனால் இப்படிப் புறக்கணித்தலில் எந்தப் ‘பரந்தமனப்பான்மையுடன் கூடிய மனிதாபிமானம்’, ‘திறந்த மனம்’ போன்றவையெல்லாம் தன்னிடம் இருப்பதாகப் பொதுப்புத்தி பெருமை யடித்துக் கொள்கிறதோ, அவை உண்மையில் இல்லா மல் போய்விடுவதைக் காண்கிறோம்.

ஆம், தெளிவற்ற மொழி ஒரு வேளை இருக்கக்கூடும். ஆனால் எவ்விதமான சொல்லாடலும் கருத்தியல் இன்றி வெளிப்படுவதில்லை என்று உணரும்போது, எந்த மொழியமைப் பும் கொள்கைப் பின்னணியின்றி நடுநிலைமையுடன் இருப்ப தில்லை என்று அறியும்போது, “சொற்கள் புதியவை” என்பதால் ஓரு சொல்லாடலை ஒதுக்கும் மனப்பான்மையை நாம் வர வேற்கமுடியாது. மொழியில் புதுமைகள்செய்தலை நாம் எதிர்க் கிறோம் என்றால், அறியவேண்டியது யாவற்றையும் நாம் அறிந்து முடித்துவிட்டோம் என்றுதான் பொருள். இந்தக் கட்டுரையில் புதிய கொள்கைகளை பொதுப்புத்தி என்னும் நோயின் வயப் படாமல் எவ்வளவு எளிய முறையில் முடியுமோ அவ்வளவு எளிய முறையில் நாம் காணமுயலுவோம்.

வழக்கிலிருக்கின்ற எளியசொற்களின் வாயிலாகவே நமக்குச் சற்றும் அறிமுகமில்லாத முற்றிலும் ஒரு புதியகொள்கையை அறிந்து கொள்வது என்பது ஒருவிதத்தில் முரண் கூற்று (paradox). (ஏனெனில் விளக்குதல் என்பது அறிமுகமற்ற தன்மையைக் குறைத்தல் ஆகும்: அறிமுகமற்ற தன்மையைக் குறைத்தல் என்பது ஏற்கெனவே அறிந்த வார்த்தைகளால் மட்டுமே பேச முயலுதல்). இது சசூருக்குப் பிந்திய கோட்பாட்டாளர்கள் கருத்து நிலைப்பாட்டின் புரட்சிகரமான தன்மையைச் சாரமற்றதாக்கி விடும். எனினும் அந்த முக்கியமான கொள்கைகளைப் பின்னர் ஆழ்ந்துகற்க உதவுவது இந்நூலின் நோக்கம் என்பதால் இங்கு எளிமைப்படுத்தல் ஒரு பயனுடையசெயலாக அமைகிறது. அதே சமயம், எளிமைப்படுத்தலுக்காக, சசூரின் பின்னோர் பயன் படுத்திய சொல்லாக்கங்களை எங்கெங்குத் தேவையோ அங்கெல் லாம் பயன்படுத்தாமல் விடப்போவதில்லை. மேலும் இந்தநூலில் சசூருக்குப் பிந்தியோர்தம் விமரிசனக் கொள்கையை மட்டும் கூறாமல், அது செயல்படும் முறையையும் விளக்குவதுதான் நோக்கம். எனவே ஒரு புதிய திறனாய்வுச் செயல்முறைக்குக் கொள்கை எவ்வளவு தூரம் உதவுமோ அவ்வளவு தூரம் விளக்கப்படும். மேலும் இங்கு சசூருக்குமுந்தியவர் கொள்கைகள் எவ்விதங்களில் தனித்தன்மைகள் பெற்றவை என வேறுபாடுக ளால் விளக்கிக் காட்டுவதை விட அவற்றின் ஒற்றுமைகளே அதிகம் கவனிக்கப்படும்.

கோட்பாடு இன்றிச் செயல்முறை இல்லை. வெளிச்சமிட்டு வரையறுத்துச் சொல்லப்படா விட்டாலும் பொதுப்புத்திக்குப் பின் னாலும் ஒரு கோட்பாட்டு அடிப்படை உண்டு. நாம் பொதுப்புத்தி என்பதின் சில எடுகோள்களை (propositions) ஆராய்ந்து பார்ப்பது மிக முக்கியமாகும். அத்துடன் இந்தக்கட்டுரையின் பிற்பகுதியில் பொதுப்புத்தி ஏற்றுக்கொள்ளும் விமரிசனக் கற்பிதங்களிலுள்ள முரண்பாடுகள் எடுத்துக்காட்டப்படும். முககியமாகப் பொதுப்புத்தி, தான் ஏற்றுக்கொள்ளும் அனுபவவாத, இலட்சியவாத நிலைப்பாட் டை விட்டு வெளிவரமறுக்கும் தன்மையும், அதனால் அது இன்றைக்குத் தேவையான ஆதாரமான, மெய்யான விமரிசனச் செயல்முறை ஒன்றைத் தரவியலாமல் ஆகிவிட்ட தன்மையும் நிலைநாட்டப்படும்.

அனுபவவாத, இலட்சியவாத விளக்கத்தினடிப்படையிலான மனிதமைய வாதத்தைப் (humanism) பொதுப்புத்தி ஆதரிக்கிறது. மனிதனே சொல்லின் அர்த்தத்திற்கும் செயலுக்கும் வரலாற் றிற்கும் மூலாதாரம் என்று பொதுப்புத்தி கூறுகிறது. இதுதான் மனிதமைய வாதக் கோட்பாடு ஆகும். நம்கோட்பாடுகளையும் அறிவையும் நாம் நம் அனுபவத்தினால் அடைகின்றோம் எனப் பொதுப்புத்தி கருதுகிறது. இது அனுபவவாதத்தின் (Empiricism) அடிப்படை. இவ்வாறு அனுபவம் பிறக்கக் காரணமான சாரமாக இருப்பது மனித மனம். இது மனிதனுக்கு மனிதன் வித்தியாசப் படுவது, மனம், புலன் நுகர்வுக்குட்பட்ட மனித இயற்கையைக் கடந்தது; என்றும் நிலைத்திருப்பது என்று பழமைவாதிகள் கருதுகின்றனர். இத்தகைய மனத்தினால், அல்லது அதன் ஆராய்ச்சியால், எண்ணத்தால் விளைவது அனுபவம். இது இலட்சிய வாதம் (Idealism). எனவேதான் பொதுப்புத்தி, அனுபவவாத இலட்சியவாத அடிப்படைகளை முற்கோள்களாகக் கொண்டது என்கிறோம்.

இந்த முற்கோள்களே யதார்த்தவாதம் என்ற கொள்கையை அடிப்படையாகக்கொண்ட வாசிப்புப்பயிற்சியை முன்வைக்கின்றன. இந்த முற்கோள்கள் யாவும் சசூருக்குப் பிந்தியோரின் மொழி யியல் ஆராய்ச்சிகளால் மறுக்கப்படுகின்றன. யதார்த்த வாதத்தின் படி, “அரிய பேறு பெற்ற மானிடன் ஒருவன் தான்பெற்ற உள்ளொளியை மொழியின் மூலமாகத் தன் அனுபவத்தின் யதார்த்தம் பிரதிபலிக்குமாறு வெளிப்படுத்துவதுதான் இலக்கியம், அதைப் பிறர் உண்மையென உணர்வார்கள்”. இக்கருத்தை நன்கு விளக்கமாகக் காண்போம்.

யதார்த்தவாதம் (நடப்பியம்)
இருபதாம்நூற்றாண்டையும் அதற்கு முந்தியநூற்றாண்டின் பிற் பகுதியையும்-அதாவது தொழில்சார் முதலாளித்துவக் காலத்தைச் சார்ந்தது யதார்த்தவாதம் அல்லது நடப்பியம் (Realism) என்ற கொள்கை. இக்காலப்பகுதியில் தொழில்துறை முதலாளித்துவம் (Industrial Capitalism) தோன்றியது ஒரு தற்செயலான நிகழ்ச்சியன்று. ஒரு நிலைப்பாடு மாறி, மற்றொரு புதிய நிலைப்பாடு தோன்றி வரும்போதோ, பழையநிலைப்பாடு கடும் தாக்குதலுக்குள்ளாகி யிருக்கும்போதோ தான் பொதுப்புத்தி சொல்லும் கருத்துகள் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு பெருமளவு ஏற்கப்பட்டுள்ளனவோ, அவ்வளவுக் கவ்வளவு அவற் றின் அடிப்படைக்கருத்துகள் உள்ளுறைவனவாக உள்ளன. (வெளிப்பார்வைக்குத் தோற்றமளிப்பதில்லை).

கலை என்பது பிறிதுபோலச் செய்தல் (mimesis) அல்லது யதார்த்தத்தை நகலெடுத்தல் என்பது அரிஸ்டாடிலின் கொள்கை. மறுமலர்ச்சிக் காலத்தினும், பின்னும் குறிப்பாகப் 18ஆம் நூற்றாண்டிலும் இது செல்வாக்குடன் விளங்கியது. இதேசமயம் கற்பனாவாதிகள்(Romanticists) “ஆற்றல்மிக்க உணர்வுகளின் வெளிப் பாடுதான் கவிதை; அதன்மூலம் அதீதஉணர்வுநிலை பெற்றவர்கள் தங்கள் உட்காட்சிகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகி றார்கள்” என நம்பினர். மேற்கண்ட இருகோட்பாடுகளின் ஒன்றிக் கலந்த வடிவமே யதார்த்தவாதம் ஆகும். 19ஆம் நூற்றாண்டின் மத்திக்குள் ஓவியத்தைத் தவிர பிற கலைகளில் நடப்பியம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையாகிவிட்டது. ஓவியத்திற்கு மட்டும் ஜான் ரஸ்கின் வந்துதான் இக்கருத்தாக்கத்தைத் தர வேண்டியிருந்தது. 1840களில் ரஸ்கின் தமது ‘நவீன ஓவியர்கள்’ நூலில் இயற்கை நிலக்காட்சிகளுக்கு (Landscape paintings)-குறிப்பாக டர்னரின் இயற்கை நிலக்காட்சி ஓவியங்களுக்கு விளக்கம்கூற முன்வந்தபோது, இலக்கியத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த யதார்த்தவாதத்தை ஓவியத்திற்கும் பயன்படுத்தினார். ஓவியர், கவிஞர் என்ற சொற்களை வேற்றுமையின்றிப் பயன்படுத்துவதாக அவர் சொல்கிறார். எனவே ரஸ்கினின் தெளிவான நிலைப் பாட்டை இங்கு உதாரணமாகக் கொண்டு காணலாம்.

இயற்கைநிலக்காட்சி வரையும் ஓவியர்களுக்கு எப்போதும் இரண்டு தனித்தனியான, பெரிய இலட்சியங்கள் உள்ளன என்று ரஸ்கின் சொல்கிறார். முதலாவது, இயற்கையான பொருள்களை மூலத்துக்குச் சற்றும் மாறுபடாமல் பார்ப்போரின் மனத்திற்கு உருவாக்கிக் காட்டும் தன்மை. இரண்டாவது, கலைஞர்கள் பார்வையாளரின் கவனத்திற்கு உகந்த பொருட்களின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பி, அவை தங்கள்மனத்தில் என்ன பிரதிபலிப்பு களை உண்டாக்கின என்று அறிவித்தல், அதாவது கலைஞர்கள் தாம் கண்ட பொருள்களை வடிவமாற்றம் இன்றி வரைந்து காட்டு வதோடு அவர்களது உள்ள உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டும். ரஸ்கின் பார்வையில் இரண்டாவது இலட்சியமே முக்கியமானது. ஏனெனில் அது பார்வையாளருக்கு மகிழ்ச்சியூட்டு வதுடன் அவரை மேம்படுத்தும் பணியையும் ஏற்கிறது. பார்வையாளர் தாம் ஒரு புதியகாட்சியைக் கண்ட திருப்தியுடன் மட்டும் நிற்பதில்லை. அவருக்கு ஒரு புதிய ஆற்றல் வாய்ந்த மனத்துடன் தொடர்புகொண்ட திருப்தியும், சற்று நேரம் ஆழ்ந்த உணர்வுகளோடும் அனுபவங்களோடும் ஒன்றும்படி தம் மனத்தை யே விவேகப்படுத்திக்கொண்ட அனுபவமும் கிடைக்கின்றன.

ஆனால் இந்தப் பணியில் ஒரு சிரமம் உள்ளது. பொருட்களை உள்ளது போலவே வரைந்து காட்டுதல் எவருக்கும் மகிழ்ச்சி யூட்டுகிறது. ஆனால் அதன் கருத்து எத்தனைபேருக்குப் புரியும் என்பது கேள்விக்குறி. கலைப்படைப்பை உருவாக்கிய உயர்ந்த மேம்பட்ட உள்ளங்களோடு எவருக்கு் ஒத்துணர்வு (empathy, சஹ்ரு தயத்தன்மை) கொள்ளமுடிகிறதோ அவர்களுக்கு மட்டுமே கிடைக் கும் வரம் இது. மேலும் ஒத்துணர்வு கொள்வோரும் முழு அளவில் கலைஞருடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வர் என்று சொல்லமுடியாது. இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக ரஸ்கின் தமது விமரிசனத்தைக் “கலை இயற்கைக்கு உண்மையாக இருக்கிறதா” என்ற கேள்வியை ஆராய மட்டுமே பயன்படுத்து கிறார். மேற்குறிப்பிட்ட இரண்டு இலட்சியங்களான
உண்மையான பிரதிபிம்பம் அமைத்தல்

அனுபவ வெளியீடு
ஆகியவற்றில் முதலாவது இலட்சியத்தை அடைந்துவிட்டு, இரண்டாவதை அடையாமல் இருக்கமுடியும். ஆனால் இரண் டாவது இலட்சியத்தை முதல் இலட்சியத்தினை நிறைவேற் றாமல் அடையமுடியாது. ஒன்றைப் பிரதிசெய்தலில் திட்பநுட்பம் அடைதல் என்பது எல்லாக் கலைகளின் அடிப்படையுமாகும். போலச்செய்தலில் ஏற்படும் குறையால் உண்டாகும் கருத்துப பிறழ்ச்சிக்குக் கழுவாயே கிடையாது. ஒரு கலைஞன், நிஜத்தை அப்படியே உருவாக்கிக் காட்டும் திறன்பெறாமல், நேர்த்தியாக வோ, பெருங்கற்பனை யாற்றல் வெளிப்பாடாகவோ, தனிப்புதுமை வாய்ந்ததாகவோ தன் படைப்பை ஆக்கமுடியாது. ஆனால் கலை ஞனின் மெய்ம்மைத்தன்மையும் கருத்துணர்த்தும் தன்மையும் வெவ்வேறானவை அல்ல: ஒன்றேதான் என்கிறார் ரஸ்கின். நிஜத்தை வெளியிடும் அதேசமயத்தில் தன்னை பாதித்த அனுபவங்களையும் அவன் சேர்த்தே வெளியிடுகிறான்.

கலைஞன் தான் காணும் புற உலகினை அப்படியே மீண்டும் நிஜத்தன்மை மாறாமல் கலையாகக் கொண்டுவரும் செயலில் எந்தச் சிக்கலையும் ரஸ்கின் காணாதது ஒருபுறம் இருக்கட்டும்; நாம் காணும் புற உலகு எந்தச் சிக்கலுமின்றி நமக்குப் புரியும் தன்மை கொண்டதா என்பது அடிப்படையான கேள்வி. அதே போலப் பார்வையாளரின் மனமும், ஆற்றல்வாய்ந்த கலை ஞனின் மனமும் அவ்வளவு எளிதில் சரிக்குச் சரியாக ஒன்றிவிடக் கூடியவையா? ரஸ்கின் முதலிலேயே இதுபற்றித் தம்கருத்தைச் சொல்லிவிடுகிறார்: “இயற்கையின் உண்மைகள் யாவரும் காணும்படியாக, அவற்றை மீண்டும் படைக்கும்படியாகக் காத்துக்கிடக்கின்றன. ஆனால் யாரோ சிலரின்-உயர்ந்த தனித் தன்மை வாய்ந்த சிலரின்-உள்ளங்கள் மட்டுமே அவற்றின் ஆழ்தன்மைகளை முற்றிலும் உணர்ந்து மற்றவர்களைவிட மேம்பட்ட நிலையில் படைக்கும் ஆற்றல் பெற்றுள்ளன”. இவ்வாறு மற்றவர்களைவிட மேம்பட்டு வித்தியாசப்பட்டுப் படைக்கப்பட்ட அந்தக் கலைப்படைப்பு திட்பநுட்பம் வாய்ந்தது தான். ஆனால் ரஸ்கின் இதே கோட்டில் இன்னும் மேற்செல்ல வில்லை-அதாவது
வெவ்வேறு திறன் வாய்ந்தவர்கள் மெய்ம்மைக்குப் பிறழ்வின் றியே ஒன்றிற்கு மேற்பட்ட பல வித்தியாசமான படைப்புகளை உருவாக்கக்கூடும்
என்பதையும்,
அவற்றையும் பலரும் பலவிதமான முறைகளில் மெய்ம்மைக்குப் பிறழ்வின்றி உணர்தல் கூடும்
என்பதையும் அவர் கவனிக்கவில்லை. இங்கே ரஸ்கின் தாம் செல்லும் பாதையின் அபாயத்தை உணர்ந்து ‘மெய்ம்மைகளைப் படைத்துக் காட்டுதல் என்பது வெறும் சிந்தனைகளைப் படைத் தல் அல்ல’ என்று கூறித் தப்பித்துக்கொள்கிறார்.

ரஸ்கினுக்குப்பின் ஏறத்தாழ ஒருநூற்றாண்டு கழித்து யதார்த்த வாதம் கொள்கையடிப் படையிலான பலமான தாக்குதலுக்கு ஆட்பட்டுத் திணறிவிட்டது. இவ்வாறு தாக்குதல் தொடுத்தவர்கள் பலர். அமெரிக்காவில் அதிகம் தெரியாதிருந்த ரஷ்ய உருவவிய லாளர்கள் (Russian Formalists); சிலருக்குமட்டுமே அப்போதைய நிலையில் தெரிந்திருந்த குறியியலாளர்கள் (Symbolists); புதுவிமரி சனவாதிகள்; நார்த்ராப் ஃபிரை-(இவர்கள் அனைவரும் ஆங்கில, அமெரிக்கக் கலாச்சாரச் சூழலில் நன்கு அறியப்பட்டவர்கள்) ஆக இவர்கள் அனைவருமே வெளியீட்டு யதார்த்தத்தை எதிர்த்த வர்கள்.

1964இல் வெளியிடப்பட்ட பார்பாரா ஹார்டியின் ‘விவாதங்கள்’ என்னும் நூலில், விமரிசனத்தில் உருவம் என்பதன் இடத்தைப் பற்றி விவாதிக்கும்போது யதார்த்தவாதம் புதியசொற்களில் -ஆனால் சமாதானப்படுத்தும் பாங்கில் முன்வைக்கப்படுகிறது. “எந்த நாவலாசிரியராக இருப்பினும், எக்காலத்தில் எழுதினும் அவர் ஒருகதைக்கு உருவம் அளிக்கிறார்; தம் ஒழுக்கவியல், ஆன்மவியல் கோட்பாடுகளுக்கு உருவம் அளிக்கிறார்; தாம் வாழ்க்கையில் அனுபவித்த குறிப்பிட்ட உணர்வுகள், மக்கள், இடங்கள், சமூகம் ஆகியவற்றால் எழுந்த பாதிப்புகளுக்கு உருவம் அளிக்கிறார்”.

காலம், இடம் இவற்றிற்கு அப்பாற்பட்டு மேற்கூறியவையே நாவலாசிரியரின் செயற்பாடுகள் என்கிறது அந்நூல். இச்செயற் பாடுகளே ஒரு கருத்தியல் சார்பானதாக இருக்கக்கூடும் என்பதோ, இவையனைத்தும் அதனால் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றின் வெளிப்பாடுகள் என்பதோ, சிறு அளவிலும்கூட அதில் சுட்டிக் காட்டப்படவில்லை. கருத்தியல் என்பது வேறிடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால் அங்கும் எளிமைப்படுத்தல் அல்லது திரித்துக்கூறுதல் – மெய்ம்மை யிலிருந்து மாறுபடுதல்; அல்லது ஒரு தனிமனிதனின் குருட்டுத்தனம், தவறு அல்லது கனவுகாணல் இவற்றின் விளைவாக எழுந்து வாழ்க்கையிலிருந்து கலைக்கு மாற்றப்பட்ட கருத்துத் தொகுப்பு ஆகியனவே கருத்தியல் என்பதன் அர்த்தமாகச் சொல்லப்படுகிறது. டீஃபோ (Daniel Defoe), தாமஸ் ஹார்டி (Thomas Hardy), (சில இடங்களில்) லாரன்ஸ் (D.H. Lawrence) ஆகியோரின் படைப்புகளை இப்படிப்பட்ட திரித்துக்கூறல்கள் (கருத்தியல்கள்) பாழடிக்கின்றன என்கிறார் பார்பாரா ஹார்டி.

எவ்வளவுதான் மாசற்றதாக தோற்றமளிப்பினும் மேலே எடுத்துக்காட்டப்பட்ட மேற்கோள் சில குறிப்பிட்ட யூகங்களின் மேல் கட்டப்பட்டதுதான். கதை என்ற ஒன்று அடிப்படையில் இருக்கவேண்டும்; கதாசிரியன் மனத்திலுள்ள பார்வைகள், அனுபவங்கள், இவை அனைத்தும் நாவலைப் படைப்பதற்கு முன்னரே தனித்தனியாக உள்ளன; அவை ஒன்றிணைக்கப் படுகின்றன; அவை நாவலில் வெளிப்படுகின்றன-ஆகிய யூகங் கள். இதனால் உண்டாகும் வடிவத்திற்கு ஒரு கதை, ஒழுக்கக்கரு, தர்க்கமுறையில் அனுபவங்களின் பிரதிபலிப்பு ஆகியன தேவை. ஒருவகையில் இவை மூன்றையும் தனித்தனியே பகுத்துப் பார்த்தல் செயற்கையாகத் தோன்றுகிறது. ஏனெனில் மெய்ம்மை சார்ந்த வடிவம், ஒழுக்கச்சார்பு, நாவலாசிரியனின் வாழ்க்கை மதிப்புகள் இவற்றைக் கதையே உள்ளடக்கியிருக்கிறது. பார்பாரா ஹார்டி போற்றும் அல்லது தூற்றும் கோட்பாடுகள், அவர் பயன்படுத்தும் சொற்களிலேயே வெளிப்படுகின்றன. வளம், நேர்மை, உடனே பொருள்புரிதல் ஆகியவை, திட்டமிட்டு இயற்றல், நேர்மையின்மை, கருத்தியல் ஆகியவற்றுடன் முரணிய நிலையில் வைத்துப் பாராட்டப்படுகின்றன. நாம் ஒரு நாவலை மதிப்பிடத் தேவையான வழிமுறை அறிவுறுத்தப் படுகிறது.

“கதை சொல்லலால் (narration) உண்டாகும் இழுவிசை (narration) என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்மானித்தால் டால்ஸ் டாயை விட, டிரோல்லாப்பைப் (Anthony Trollope) போற்ற வேண்டும். கருப்பொருள் வெளிப்படும் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் லாரன்ஸைவிட கஸின்ஸ் (James Gold Cousins) மேலானவர் எனலாம். மெய்ம்மைசார் வடிவத்தை நோக்கினால் இவர்கள் யாரையுமே பாராட்டமுடியாது” என்கிறார் பார்பாரா ஹார்டி.

மேற்குறிப்பிட்ட இரு விமரிசகர்கள்-ரஸ்கின், பார்பாரா ஹார்டி இவர்களுக்கிடையே உள்ள காலம் வேறுபட்டாலும், யதார்த்த வாதத்தை முற்கோளாக ஏற்றுக்கொண்டுள்ளனர். வெளிப்படை யாக இக்கொள்கை ஏற்கப்பட்டு அதற்கான சமாதானம் சொல்லப் படவில்லை.

எஃப்.ஆர். லீவிஸின் (F.R.Leavis) எழுத்துகளில் இக்கொள்கை வெளிப்படையாகச் சொல்லப்பட வேயில்லை. லீவிஸ் கொள்கை என்பதையே வெறுத்தார்: அவருடைய கருத்துப்படி ஒரு விமரி சகனின் கடமை, பிரதியில் சொல்லப்பட்ட பருப்பொருளான அனுபவங்களை இன்னும் நுண்ணிய குறிப்புநிலையில் அனுபவிக் கும் பாங்கை மேம்படுத்தலாகும். ஒரு விமரிசகன் தன் அனுபவ ரசனையைக் கெடுத்துக்கொள்ளக்கூடிய அபாயம் இருப்பதனால், அவன் அநாவசியமான கொள்கைக்குழப்பங்களில் சிக்கிக்கொள்ளக் கூடாது. ஆனால் லீவிஸின் எழுத்துகளே கொள்கையின்றிச் செயல்முறையில்லை என்பதை விளக்குவனவாக உள்ளன. உதாரணமாக ‘ஹென்றி ஜேம்ஸம் விமரிசனத்தின் கடமையும்’ என்ற கட்டுரையில், லீவிஸ், ஜேம்ஸிடம் மிகவும் பாராட்டுபவை அனைத்தும் யதார்த்தவாத யூகங்களின் அடிப்படை மேல் எழுப்பப் பட்டவையாகும். அவர் மிகஉயர்வாக மதிக்கின்ற நாவல்கள் யாவும் நாம் வாழ்கின்ற தனிமனித உணர்வுநிலை மையங்க ளாலான உலகினை உயிர்க் களையோடு திண்மைப்படுத்திக் காட்டும் பண்புக்காகப் போற்றப்படுகின்றன. இப்பண்பு, ஜேம்ஸின் சொந்த உணர்வுநிலையிலிருந்தும், அவருக்கு உயிரான அனுபவங் களிலிருந்தும் பெறப்படுகிறது. அவருடைய நாவல்களில் சொல் லபபடும் மதிப்புகள், வாழ்க்கையின் முழு அனுபவத்தையும் அடையவேண்டும் என்ற ஜேம்ஸின் எல்லைமீறிய ஈடுபாட்டை யும் அம்முழு அனுபவத்தையும் அடையாது விட்டுவிடக் கூடாதே என்ற அவரது தவிப்பையும் வெளியிடுகின்றன.

ஜேம்ஸின் படைப்புகளில் காணப்படுவது ‘இனிவரக்கூடிய ஆன்மிக நாகரிகம்’ என்ற கோட்பாடு. அவருடைய இலக்கியத் தோல்விகள், தமது உணர்வுநிலையின் ஆழ்மையத்தை வளப் படுத்தாது விட்டதால் ஏற்பட்டவை. “ஜேம்ஸ், தாம் பெருமளவு நாவலாசிரியராகவே வாழ்ந்து, மனிதராக வாழாமல்போனதற்குரிய தண்டனை அது”. ஜேம்ஸின் இலக்கியக் குறைகளெல்லாம் அவருடைய ஆளுமையின் போதாமை என்று இனம்காணும் அளவுக்கு ஆசிரியரும், அவருடைய இலக்கியப் பிரதியும் பின்னிப் பிணைந்தவர்கள் என்ற கருத்து வெளிப்படுகிறது.

பொதுவாகவே லீவிஸின் விமரிசனத்தில், மீண்டும் மீண்டும் இலக்கியப் பிரதியிலிருந்து ஆசிரியனை நோக்கி நழுவியோடுதல் காணப்படுகிறது. அவர் தமது நோக்குகளை வெளிப்படுத்தும் முறைகளிலும் இப்பண்பு நிறையக் காணப்படுகிறது-இதற்குச் சில சான்றுகளைப் பார்ப்போம். இந்த மேற்கோள்களில் இலக்கிய ஆய்வு முற்றிலும் மறைந்துவிட்டதையும், இலக்கியம், தனிப்பட்ட ஆசிரியரின் மனப்பண்புகளை வெளிப்படுத்தும் என்ற பொதுப் புத்தியிலிருந்து பெறப்பட்ட யூகம் வெளிப்படுவதையும் காண்கி றோம்:
டி.எச். லாரன்ஸ் பற்றி:
“லாரன்சின் படைப்புகளில் ஆழமான உணர்வொழுங்கின்மை ஏதுமில்லை; அல்லது விடாப்பிடியான முக்கிய இசைவின்மை ஏதுமில்லை. அவருடைய விவேகம், அவருடைய முழு மனத் திற்கும் பணியாளாக நிற்கிறது”
“அவர் கலைஞராக, விமரிசகராக, விளக்கவுரையாளராக- எப்படி யிருக்கும்போதும் அவருடைய விவேகம் அவருடைய உள் முரண்பாடுகளால் குலைந்துபோவதோ முடமாகிப்போவதோ இல்லை”.
ஸ்விஃப்ட் பற்றி:
“அவர் பலவழிகளில் உணர்வின்மை கொண்டிருந்தார்- தொலை விலுணர்தல் என்பதற்கு நேர் எதிரானதன்மை அவரது சிறப்பம்சம். அவரது உணர்ச்சிகள் தீவிரத்தன்மை யற்றவை. அவருக்கு உள் நோக்கு கிடையாது, ஆழமான அனுபவங்களால் அவர் நம்மை ஈர்க்கவில்லை”
‘உயர்ந்த மரபு’ (The Great Tradition) வழிவந்த நாவலாசிரியர்கள் பற்றி:
“அவர்கள் எல்லோரிடமும் அனுபவமும், வாழ்க்கையின்முன்னர் போற்றத்தக்க வெளிப்படைத் தன்மையும், குறிப்பிடத்தக்க அளவு ஒழுக்கத்தின் தீவிரமும் இருந்தன”.
இருபதாம நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுத்தாளர்க ளின் பார்வை, செயல்முறைகள் இவற்றிலும், மதிப்புரை செய்பவர்களாலும், ஆங்கிலத்துறைகளிலும் (யதார்த்தவாதத்திற்கு எதிரான பார்வைகள் அக்கொள்கைக்கு அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த போதும்கூட) யதார்த்தவாத அடிப்படை கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலைபெற்றுவிட்டன. இன்றும்கூட இலக்கியம் என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றே கொள்ளப் படுகிறது. ஐரிஸ் மர்டாக்கின் (Iris Murdoch) சொற்களில் சொன் னால், “மோசமான கலை என்பது உலகைப் பற்றிப் பொய் சொல்லும். இதற்கு மாறாக, நல்லகலை, ஏதோஒரு முக்கியமான நன்மை கருதி உண்மை யுரைப்பதாகவும், நிஜத்தைப் பிரதிபலிப்ப தாகவும் ஏற்கப்படுகிறது.”

யாவற்றிற்கும் மேலாக, சமூக உறவுகளாலான இவ்வுலகை நம்பகத்தன்மையுடன் விளக்குவதற்காகவும், தன்னை அறிய அவாவுகின்ற தனிமனிதனின் (பொதுமைசான்ற) உள்அனுபவங்க ளைத் தருவதற்காகவுமே நாவலானது வரவேற்கப்படுகின்றது. நாடகமும் அவ்வாறே நம்பகத்தன்மை பெற்றிருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது: சான்றாக, Measure for Measure, All’s well that ends well, The Changeling ஆகிய நாடகங்களை வைத்து அடிக்கடி கேட்கப்படும் கேள்வி: எலிசபெத்கால ஆண்களுக்கு இருட்டில் ஒரு பெண்ணுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் வித்தியாசமே தெரியவில்லையா? அப்படியானால், ஒன்று, எலிசபெத் காலத்திய ஆண்கள் மிக விசித்திரமானவர்களாக இருந்திருக்கவேண்டும்; அல்லது ஷேக்ஸ்பியரும் மில்டனும் இவ்வாறு நம்பமுடியாத செய்திகளை நமக்குத் தந்திருக்கக் கூடாது என்பதே இந்தக் கேள்வியின் உட்பொருள்.

கலையின் வெளியீட்டுத்தன்மையும் இவ்வாறே இயல்பானது என்று ஏற்றுக் கொள்ளப் படுகிறது. “இந்த நூலாசிரியர் என்ன சொல்லவருகிறார், இவர் இந்தப்பகுதியில் உணர்த்துவது யாது” போன்ற கேள்விகள் சாதாரணமாக வினவப்படுபவை. ஆசிரியரின் கருத்துகளோ, சமுதாயத்தில் அவரது அனுபவங்களோ- எதுவாயி ருப்பினும் அவை படைப்பிற்கு முன்னரே யிருப்பவை. அவற்றை வெளியிடுவதுதான் இலக்கியப்பிரதியின் கடமை என நம்பப்படு கிறது. ஆசிரியரின் கருத்துகள், அவரது உள்ளநிலை, அவரது சமூகவரலாறு, அவரது குடும்பத்தின்பாதிப்பு, சூழல் பாதிப்பு, சமூக பாதிப்பு ஆகியவற்றைச் சொல்வதுதான் இலக்கியப் பிரதியைப் புரிந்து கொள்வது என்றாகிறது. இலக்கியத்தைப் பற்றி எளிதாக ஒரு புத்தகம் எழுத வழி. அதன் ஆசிரியரைப்பற்றி எழுதுவதுதான். அவரது நூல்களைக் காலவரிசைப்படி சொல்லி, அவருடைய திறன் எப்படி காலக்கிரமத்தில் வளர்ச்சி பெற்றது, அவருடைய உள்நோக்குகள் எவ்வாறு செவ்வியமுறையில் எடுத்துரைக்கப் பட்டுள்ளன என்று விவரிப்பதுதான். ஆங்கிலத்துறையில் இவ் வாறு தான் கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

ரஸ்கினுக்கு, போலச்செய்தலும் வெளியீட்டுத்தன்மையும் ஒன்றுதான். ஒரு பக்கம், லீவிஸ§க்கு எழுத்தாளனைப் பெரு மதிப்புக்குரியவனாக ஆக்குவது, அவனுடைய உணர்வும் அனுப வமும்தான். மற்றொரு புறம் லூகாச்சுக்கோ (George Lukacs) மக்கள் படும் துயருக்கு அவன் பரிவுணர்ச்சி கொள்வது, உண்மைநாட்டம், மெய்ம்மையை ஈடுபாட்டுடன் தேடுதல் ஆகியவைதான் ஒரு எழுத்தாளனைச் சிறந்தவனாக்குகின்றன.

ஆனால் யதார்த்தவாத நிலைப்பாடு, பல சவால்களுக்கு உட்பட்டு வருகிறது. முக்கியமாக, ஓர் ஆசிரியரிடம் வெளியீட் டுக்கு முந்தியிருப்பதான எண்ணம் அல்லது அனுபவத்தை எவ்வாறு நுழைந்துகாண முடியும்? இவை என்ன வடிவம் கொண்டவை? மொழிக்கு வெளியிலும் எண்ணங்கள் இருக்கின் றனவா? கடிதம் அல்லது நாட்குறிப்பு போன்ற சொல்லாடல் ஒன் றில் சொல்லப்பட்ட ஏதோ ஒரு சிந்தனை, நாவல்போன்ற வடிவங்களில் வேறுவார்த்தைகளில் சொல்லப்படும்போது வேறாக மாறிவிடுகிறதா? அல்லது அதேதானா? மேலும் நடப்பியம் என் பதன் அர்த்தம்தான் என்ன? எந்த அர்த்தத்தில் ஒரு புனைகதை, உண்மைத்தன்மை பெற்றதாகிறது? அந்த நிஜத்தன்மைக்குச் சான்று என்ன? ஓர் இலக்கியப்பிரதிக்கும் புறவுலகிற்கும் உள்ள தொடர்பு எத்தகையது? ஏற்கெனவே உள்ள மரபுவழியான முறைகளிலிருந்து தப்பித்துச் சுதந்திரமாக நாம் எவ்வளவு தூரம் இந்தஉலகைப் புதிதாக அறிய அல்லது உணர முடியும்? வரலாற் றில் சமூகத்தால்-மொழியால்-எவ்வளவு தூரம் அனுபவம் தடை பட்டுள்ளது?

இந்த இயலின் இனிவரும் பகுதிகளில் இருபதாம் நூற்றாண் டில் யதார்த்தவாதத்திற்குச் சவாலாக அமைந்த சில முக்கியமான கொள்கைகளைக் காணலாம். யதார்த்தவாதத்திற்கு மாற்றுத்தேடு வதில் அவைகிளப்பியுள்ள சில சிக்கல்களையும் காணலாம். இந்தப் புதிய கொள்கைகளால் நமக்கு இலக்கியப்பிரதியை அணுகும் புதியவழிமுறைகள் உருவாயின, ஆனால் ஒரு சிறந்த ஆழமான விமரிசனச் செயல்முறைக்கான அடிப்படைகளை இவை உருவாக்கவில்லை.

புதுத் திறனாய்வு
1940களிலும் 50களிலும் அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர் களான ஜான்குரோ ரேன்சம், கிளெந்த் புறூக்ஸ், விம்சட் போன் றோர் செய்த விமரிசனப்பணி, யதார்த்தக் கொள்கையின்மீது கடுந்தாக்குதல் விளைவித்தது. இவர்களது நிலைப்பாடு உருவாக ஐ.ஏ.ரிச்சட்ஸ், டி.எஸ். எலியட் போன்றோரது எழுத்துகள் பெருமளவு காரணமாக இருந்தன. 1946இல் வெளியான உள்நோக்கப் போலிவாதம் (Intentional fallacy)-விம்சட்டும் மன்றோ பியர்ட்ஸ்லியும் சேர்ந்து எழுதிய கட்டுரை), “இலக்கிய ஆசிரியனது உள்நோக்கங்களைத் (intentions) தேடுவதற்கும் இலக்கிய விமரிசனத்திற்கும் சம்பந்தமில்லை” எனக்கூறி யதார்த்தவாதத்திற்கு ஒரு பலத்த அடி கொடுத்தது. அக்கட்டு ரையே ஓர் அறிக்கை போன்றிருந்தது. அதனால் புதுத் திறனாய்வாளர்களின் கொள்கையறிவிப்பு என்ற அந்தஸ்தையும் பெற்றது. அதில் விம்சட்டும் பியர்ட்ஸ்லியும் ஆசிரியரின் உள்நோக்கத்தைத் தேடுவது ஒரு கற்பனாவாத நடைமுறை என்று நிறுவியிருந்தனர். கவிதை ஓர் உயர்ந்த உள்ளத்திலிருந்துமட்டுமே வெளிப்படும் என்பது உள்நோக்கப் போலிவாதத்தின் நிலைப்பாடு. ஆனால் ஆசிரியரின் உள்நோக்கங்கள் நமக்குக் கிடைப்பதுமில்லை; அவை நமக்கு வேண்டியதுமில்லை. ஆசிரியரின் எண்ணங்களை இலக்கியப்பிரதிக்கு வெளியில் எங்கும் -வரலாற்றிலும், வாழ்க்கைவரலாற்றிலும் தேடக்கூடாது. ஆசிரியரின்உள்நோக்கங்கள் நமக்குத் தானாகக் கிடைக்கும்பொழுதும்-சான்றாக, ஆசிரியரே அது பற்றித் தமது கருத்தைத் தெரிவித்திருந்தாலும், உண்மை என அதை ஏற்றுகொள்ளத் தேவையுமில்லை. உள்நோக்கங்கள் விமரிசகர்களாலோ, வாசகராலோ கற்பித்துக் கொள்ளப்பட்டுள்ள இடங்களில் நிச்சயம் தவறான வழியில் செல்லும் வாய்ப்புள்ளது. மேலும் இலக்கிய வெளியீட்டிற்கான பண்புகளாகச் சொல்லப்படும் நம்பகத்தன்மை, நேர்மை, இயல்பான தன்மை, இவையும், இவைபோன்ற பிறவும் உள்நோக்கம் காணலுடன் தொடர்புகொண்டவை. இவற்றிற்கும் உண்மையான, தெளிவான விமரிசனப் பண்புகளாகிய முழுமை, ஒழுங்கு, ஒருமைப்பாடு, முழுவளர்ச்சியுறுதல், நுட்பம் ஆகியவற்றிற்கும் எத்தொடர்பும் இல்லை. முழுமை, ஒருமைப்பாடு, நுட்பம் போன்றவை இலககியப் பிரதியின் பண்புகள்; ஆசிரியனின் பண்புகளல்ல.

1970கள்வரை இதுபற்றிநிகழ்ந்த விவாதங்கள், டேவிட் நியூட்டன்-டி மொலினா எழுதிய ‘இலக்கிய உள்நோக்கம் பற்றி’ என்ற நூலில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.

வெளியீட்டுக் கொள்கை, விம்சட்-பியர்ட்ஸ்லியின் தாக்குதலுக்குப்பின் மீளவேஇல்லை. அதற்குமாறாக புதுத் திறனாய்வாளர்கள் பிரதியிலுள்ள சொற்களையே ஆராய வலியுறுத்தினர். இது ஒரு புது மரபாகவே உருவாயிற்று. பிரதிக்குமுன்னர் நிகழ்ந்தவற்றைத் தேடுதலும், ஆசிரியனின் மனத்திலிருந்து அனுபவச் சான்றுகளைத் தேடுதலும் அபூர்வமாயின. அவ்வாறு தேடப்பட்டபோதும் ஏற்ற காப் புரையுடனே செய்யப்பட்டன. இன்று இலக்கியப்பிரதிச் சான்றுடன், ஆசிரியர் தமது மனத்தில் என்ன எண்ணியிருக்கலாம் என்று தேடும்போக்கு மட்டும் மாறாமல் ஒரு அடங்கிய உள்நோக்க வாதமாக எஞ்சியிருக்கிறது. உள்ளடங்கிய ஓர் உள்நோக்க வாதத்தை விம்சட்டும் பியர்ட்ஸ்லியும் ஆதரித்தனர் என்றே தோன்றுகிறது: ஒரு கவிஞர் தம்பணியில் வெற்றிபெற்றுவிட்டபோது அவருடைய கவிதையே அவர் என்ன செய்யமுயன்றார் என்பதைக் காட்டிவிடுகிறது. இவ்வகையில், ஒரு கவிதை, கவிஞரின் உள்நோக்கங்களைக் கண்டுபிடிக்கும் ஒரு எளியவழியாகவே அமைந்து விடுகிறது. எந்தெந்தக் கவிதைகள் உள்நோக்கங்களை அறிய வெற்றிகரமாகப் பயன்படும் என்று தெரியாவிட்டாலும், இலக்கியப் பிரதிக்கு அப்பாற்பட்டு சுயத்தின் நிழற்பகுதிக்குள் வாழ்நதிருக்கும் சில எண்ணங்களின் வெளியீடுதான் இலக்கியப்பிரதி என்ற இலட்சியவாத யூகத்தை முழுமையாக எதிர்கொள்ளாமலே, புதுத்திறனாய்வை ஏற்கவும், உள்நோக்க வாதத்தை மறுக்கவும் இயல்வதாயிற்று.

உள்நோக்கப் போலிவாதம் கட்டுரைக்குமுன், பிரதியைவிட ஆசிரியனது மேலாண்மையே மதிக்கப்பெற்றது; வெளியீட்டைவிட அதன் அர்த்தம் முககியத்துவம் பெற்றது. இவை ஒரு பிரதிக்கு ஒரே அர்த்தமும் ஒரே வாசிப்புமுறையும்தான் உண்டு என்ற எல்லைக்குள் நிறுத்திவிடுகின்றன. முதன்முதலாக விம்சட்-பியர்ட்ஸ்லியின் கட்டுரையில்தான் இந்தப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயன்றதற்கான சான்று கிடைக்கிறது. விம்சட்டும் பியர்ட்ஸ்லியும் தங்கள் சொந்த நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைக்காவிட்டாலும், ஆசிரியரிடமிருந்து இலக்கியப்பிரதியை வேறுபடுத்திக்காட்டுவதனை நன்கு செய்தனர்.

“ஒரு படைப்பு அதன் ஆசிரியனுக்கோ விமரிசகனுக்கோ உரியதன்று. அது பிறக்கும்போதே தன் தொப்புள்கொடியை ஆசிரியனிடமிருந்து அறுத்துக் கொண்டுதான் பிறக்கிறது. எனவே அவனது உள்நோக்கங்கள், கட்டுகள் யாவற்றையும் மீறிச் சென்றுவிடுகிறது. படைப்பு மக்களுக்குச் சொந்தமானது. மனிதர்களின் விந்தையான பொதுச் சொத்தாகிய மொழியில் அது உள்ளது. அது மனிதனைப் பற்றியதாக உள்ளது. உளவியலிலோ மொழியியலிலோ கூறப்படும் கருத்துகள் எப்படி ஆய்வுக்கு உரியனவோ அது போலவே படைப்புகளும் துருவி ஆராய்தலுக்கு உட்படுவனவே ஆகும்” என்பது அவர்கள் கூற்று.

மொழி பொதுச் சொத்தானால், பிரதியும் பொதுச் சொத்தே ஆகும் என்ற இந்தக் கருத்து, வெளியீட்டுக்கொள்கையிலிருந்து விமரிசனம் விடுபட்டுவிட்டதைக் காட்டுகிறது. என்றாலும், கவிதையிலடங்கிய வார்த்தைகளுக்கும் சொற்படிமங்களுக்கும் அவை அடங்கிய மொழிக்கும் என்ன தொடர்பு என்பதற்குக் கொள்கையுருக்கொடுப்பதில் புதுத்திறனாய்வாளர்கள் எவரும் முழுவெற்றிபெறவில்லை. இக்காரணத்தால், அவர்கள் நிலைப்பாட்டிலிருந்த உள்ஆற்றல்,அவர்களது திறனாய்வில் செயல்வடிவம் பெறவில்லை. உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் வித்தியாசமில்லை, இலக்கியப் பிரதிகள் உணர்ச்சிகளால் பொதியப்பட்ட எண்ணங்கள் என்றோ, படிமங்களால் அலங்கரிக்கப்பட்ட அர்த்தங்கள் என்றோ காணக்கூடாது என்று புதுத் திறனாய்வ ளர்கள் விடாமல் வலியுறுத்திவந்துள்ளனர். ‘பொழிப்புரைத்தலின் ஏற்பின்மை’ (Heresy of Paraphrase) என்ற நூலில் கிளெந்த் புறூக்ஸ், W.M. அர்பன் என்பவரின் கருத்தினை எடுத்துக் காட்டுகிறார்: “ஒரு கலைஞன் முதலில் தான் கூறவருவதை உள்ளுணர்ந்து, பின் அதை வெளியிடத்தக்க ஊடகத்தைத் தேடுவதில்லை. அதற்குமாறாக, தன் மொழியினுள்ளிருந்தும் அதன் வழியாகவும் தான்கூறவரும் பொருளைப் பெறுகிறான்” (அதாவது ஒரு படைப்பாளி சொல்லவருவது, சொல்லும் நிகழ்முறை யின்போதுதான் உருப்பெறுகிறது). இந்தஇடத்தில் புறூக்ஸ், “மொழி தான் ஒரு குறிப்பிட்ட முறையில் அர்த்தம் வெளிப்படும் வாய்ப்பை அளிக்கிறது” என்ற தரிசனத்தை வெளிப்படுத்துகிறார். அவர் சார்ந்திருந்த புதுத்திறனாய்வின் தனிப்பாணி வாசிப்புமுறையின் ஆழம் காண்பது. இதைத் தவிரப் பிற யாவற்றையும் ஒதுக்கிவிடுதல் என்ற நிலைப்பாட்டை அவர் மேற்கொள்ளாதிருந்தால், “இலக்கியப்பிரதியில் அமைகின்ற சொல்லாடல் (discourse) தான் வாசகனின் அனுபவத்தை உருவாக்குகிறது” என்று சொல்லியிருப்பார்.

இம்மாதிரிச் சிந்தனை புதுத்திறனாய்வாளர்களின் உணர்வில் இருக்கவேசெய்தது. இதே கட்டுரையில் புறூக்ஸ் மற்றொருசெய்தியையும் சொல்கிறார்: “கவிதை என்பது முன் நிகழ்ந்த ஓர் அனுபவத்தின் தொடர்ச்சியாக வார்த்தைகளுக்கு உருக்கொடுத்தல் அல்ல. கவிதை, அது உண்மையான கவிதையாக இருக்கும் பட்சத்தில், நிஜத்தின் நிழலுருவாகும்….அது தானே அனுபவமாக இலங்குகிறது. அனுபவம் ஒன்றைப் பற்றிய வாசகமாகவோ அன்றி அனுபவத்திலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட நுண்கருத்தாகவோ இருப்பதில்லை”. இந்த அடிப்படையில்தான் புதுத்திறனாய்வாளர்கள் பிரதியின் உருவப்பண்புகளின்மேல் ஆழ்ந்த விரிவான கவனம்தேவை என வேண்டினர். ஒரு புறநிலைப்பட்ட, வெளிப்படையான துருவியாய்தலின் விளைவாக வெளியீட்டுக்கொள்கையில் பிரதியை வடிவமைக்கும் மனங்களை இணைத்த கண்ணுக்குப் புலப்படாத இழை இப்போது புலப்பட்டது, வெளிக்கொணரப்பட்டது.

அர்த்தம் பற்றிய சிக்கல்தான் புதுத்திறனாய்வின் கொள்கையில் காணப்பட்ட முக்கிய இடர்ப்பாடு. வெளியீட்டுக்கொள்கைப்படி பிரதிக்கென வரையறுக்கப்பட்ட ஒரேஅர்த்தம்தான் உண்டு. எவ்வளவு சிக்கலானதாக இருப்பினும் இந்த அர்த்தத்தை வரையறுக்க உரிமை பெற்றவர் அதன் ஆசிரியர்தான். ஆசிரியர் பிரதிக்குள்ளாகப் பொதிந்துவைப்பதுதான் பொருள் என்பது. அண்மைக்காலத்திய விமரிசகர்கள் பிரதியின் அர்த்தத்திற்கான உத்தரவாதமாக ஆசிரியரின் உள்நோக்கத்தை ஏற்க மறுத்துவிட்டபிறகு பிரதியின் ஒற்றை அர்த்தத்திற்குப் பொறுப்பாளி வாசகன்தான் என்று சொல்லிவிட்டனர். புதுத்திறனாய்வாளர்களோ இந்த இரு எல்லைகளையும் ஒதுக்கிவிட்டனர். அர்த்தம் என்பது எழுதப்பட்ட குறித்த பக்கத்தில்தான் உள்ளது என்ற திருப்திதராத கொள்கையை மேற்கொண்டனர்.

“நாம் இப்போது விசாரணை செய்வது, மூலத்தைப் பற்றியுமன்று; அல்லது விளைவுகளைப் பற்றியுமன்று. ஓர் அர்த்தமுள்ள வடிவம் பெற்றுள்ளது என்று நாம் கருதும் படைப்பை மட்டும்தான். ஒரு கவிதை தானே வெளியிடுகின்ற, ஒழுக்க மதிப்புகளோடு கூடிய அர்த்தத்தை ஆசிரியரின் உள்ளப் பண்புகளோடோ அன்றி வாசகரின் மனத்தில் அக்கவிதை உண்டாக்கிய விளைவுகளோடோ சேர்த்துக்குழப்பக்கூடாது” என்கிறார் விம்சட். மொழிவடிவம் பெறுவதற்கு முன்னரே மக்கள்மனத்தில் ஏதோ புறக் குறியீட்டு அலகுகளில் அர்த்தங்கள் மிதந்துகொண்டிருப்பதாக வலியுறுத்திவந்த இலட்சியவாதக்கொள்கையை மேற்கண்ட விம்சட்டின் கூற்று முற்றிலும் புறக்கணித்து விடுகிறது. ஆனாலும் ஒரு பிரதிக்கு ஒரு அர்த்தம்தான் இருப்பதாக நம்புவதும், அந்த அர்த்தத்தைத் தேடித்தேடி அலைவதும் ஆகிய செயல்கள், கடைசியில் ஓர் இலக்கியப் பிரதியின் அர்த்தமானது காலங்கடந்ததும், உலகப்பொதுமை வாய்ந்ததும், நிலைத்து நிற்பதுமாகும் என்ற மாயையை உருவாக்கிவிடுகின்றன; “பண்பாடுகள், நாகரிகங்கள் மாறியிருக்கின்றன. தொடர்ந்து மாறிக்கொண்டே யிருக்கும். ஆனால் கவிதை மட்டும் நிலைத்து நின்று தன்னை விளக்கிக்கொண்டிருக்கும்”.

புதுத்திறனாய்வாளர்கள் வரலாற்றைப்பற்றிக் கவலைப்படாதவர்கள், அல்லது வரலாற்றை விரும்பாதவர்கள் என்று எப்போதும் ஒரு விமரிசனம் உண்டு. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு நன்குஆராயாமல் எழுந்த ஒன்று. மரபுவழிகளை நன்கறிந்தவர்கள், பண்டிதர்கள் என்று சொல்லுமளவுக்கு அவர்களது தனித்தனிக்கட்டுரைகள் போதியஅளவு வரலாற்றாய்வைப் பெற்றே இருக்கின்றன. இந்தப் பிரச்சினை ஆழமான அடிப்படையான ஒன்று. அர்த்தமானது ஒரு குறிப்பிட்ட மொழிக்குள்தான் கட்டுப்பட்டிருக்கிறது என்றும், ஒரு குறிப்பிட்ட சொல்லாடலில் தான் உருவாவது என்றும், அதனால் ஒரு பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட வார்த்தைகளுக்கெனத் தனி அர்த்த ஜீவிதம் இல்லை என்றும் அறியாத சிக்கல் அது. வரலாற்றுவழி இலக்கிய அணுகுமுறை இந்தப்பிரச்சினையைப் புரிந்துகொண்டு ஒழுங்கானமுறையில் ஆனால், குறுகியவழியில் அணுகியுள்ளது. அதன்படி இழந்த சுவர்க்கம் (Paradise Lost-மில்டனின் காவியம்) என்பது அது எழுதப்பட்ட காலத்தில் அதை முதன்முதலாகப் படித்தவர்களுக்கு என்ன அர்த்தம் கொடுத்ததோ, அதுதான். வெளியீட்டுக்கொள்கை, இழந்த சுவர்க்கம் என்பது மில்டன் மனத்தில் எது இருந்ததோ அதுதான் என்று சாதிக்கிறது. ஆனால் புதுத்திறனாய்வோ, தன் தர்க்கத்தின் அடிப்படை யிலேயே, இழந்த சுவர்க்கம் என்பது தனித்த நிலையில் அந்தப் பிரதி என்ன சொல்கிறதோ அதுதான் என்றும் எழுதப்பட்டது முதல் இன்றுவரை என்னென்ன விதமாக உணரப்பட்டுள்ளதோ அவை எல்லாமும்தான் என்றும் இரண்டுவகையாகச் சொல்லிவிட்டு, இந்த முரண்பாட்டை மறைக்குமுகமாகக் “கவிதை என்பது ஒரு பருப்-பொதுப் பொருள்” (அதாவது பருமைப்பண்பும் பொதுமைப்பண்பும் ஒருங்கே கொண்டது) என்கிறது. அதாவது கவிதை என்பது எங்கும் என்றைக்கும் அர்த்தம்தரக்கூடிய நிஜத்தின் தனிமனிதச்சான்று என்கிறது.

இந்த நிலைப்பாடு, ‘பிரதி என்பது பொதுச்சொத்து’ என்பதன்மூலம் நெருங்கிவந்த எல்லைகளை விட்டுவிலகிச் சென்றுவிடுமாறு செய்கிறது. மொழியால்தான் அர்த்தம் உண்டாகிறது என்பதை ஒத்துக்கொண்டால், மொழியும் மாறுதலுக்கு உட்பட்டது என்பது உண்மையானால், பிரதியின் அர்த்தம் எவ்வாறு மாறாமல் இருக்கக்கூடும்? அர்த்தமாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், பிரதிக்கு ஒரே அர்த்தம்தான் உண்டு என்று நிலைநாட்டுவதற்காகவும் புதுத்திறனாய்வாளர்கள் ஒருவித மழுப்பலான அனுபவவாதத்திற்கும், இலட்சிய வாதத்திற்கும் பலியாகிவிடுகிறார்கள். “வார்த்தைகள், பருப்பொருட்களுக்கோ அனுபவங்களுக்கோதான் அடையாளமாக நிற்கின்றன. அதனால் இவை நிகழ்ச்சிசார்உலகு, மானிடத்தின் இன்றியமையா இயல்புகள் ஆகியவற்றிலிருந்து தாம் என்றும் வாழும் இயல்பினைப் பெறுகின்றன” என்று இந்தப் புதிய வாதம் உரைக்கிறது. “வரலாற்று நிகழ்ச்சிகள் இன்று நடப்பனபோல்தான் முற்காலத்திலும் நடைபெற் றுள்ளன. அதாவது வரலாறு மீண்டும்மீண்டும் நிகழக்கூடியது”. அதனால் இப்போது இருபதாம் நூற்றாண்டில் நாம் அனுபவிக்கின்ற தனித்த அனுபவங்கள்கூடப் பொதுமைப்படுத்தப்பட்டு, இவை முன்னரும் நிகழ்ந்தவை அல்லது பின்னரும் நிகழக்கூடியவை என மாறாத இயற்கை ஆணையாக உருப்படுத்தப்படுகின்றன.

“வரலாற்றுக்குச் செலுத்தப்படுகின்ற நல்வணக்கங்கள் யாவும், ஒரு வார்த்தைக்குத் தரப்படும் விளக்கங்கள் எவையாயினும் இறுதியில் பருப்பொருளையே அவாவி நிற்பன” என்னும் உண்மையையும், அவற்றிற்குத் துணையான “பழைய ஆவணங்கள் யாவுமே ஆழ்ந்து திட்டமிட்டுப் பயிலும்போது புதிய ஆவணங்களாகிவிடுகின்றன” என்னும் உண்மையையும் மறந்துவிட முடியாது. ஷேக்ஸ்பியரின் பதிப்பாசிரியர்களில் புகழ்மிக்கஒருவர், “நான் ஷேக்ஸ்பியரின் ஹென்றி யைப் பற்றி எல்லா விமரிசகர்கள் மூலமாக அறிந்து கொண்டதை விடவும் வேவல் எழுதிய ‘ஆலன்பையின் வாழ்க்கை’ என்ற நூலின் மூலம் மிகுதியாக அறிந்துகொண்டேன்” என்கிறார். ஹென்றியின் வீரத்தைப் பற்றியோ அல்லது போப், டிரைடன் போன்றோரது குறிப்புமுரண் பற்றியோ அறிந்துகொள்ள நாம் வரலாற்றுச்செய்திகளையும் மொழியியல் அகராதிகளையும் நாட வேண்டியுள்ளது. அதேசமயம், நாம் நம்முடைய அனுபவங்களையும் நவீன உலகத்தையும் கூடவே நாடித்தான் தீர வேண்டும். வீரம், குறிப்பு முரண் என்பவற்றின் அர்த்தங்களை நாம் கண்ட பொருள்களிருந்தும் அனுபவங்களிலிருந்தும்தான அறிந்தாகவேண்டும்”.

ஆகவே புதுத்திறனாய்வுக் கொள்கையின் பலவீனம், ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள்ளாகவே-அதாவது இலக்கியப் பிரதிக்குள் ளாகவே-அந்தக் குறிப்பிட்ட பக்கத்திற்குள்ளாகவே அர்த்தத்தைத் தேடுவதில்தான் உள்ளது. நிஜத்தில் பிரதிகளை நாம் அர்த்தம் காணக்கூடிய சந்தர்ப்பங்கள் எப்போதும் பலவாகவே இருக்கின்றன. ஏனெனில் தனிச்சொல்லானால் அதற்குரிய சந்தர்ப்ம் ஒன்று மட்டுமாக இருக்கலாம், ஆனால் குறிப்பிட்ட சொல்லாடல் என்பதற்கான சந்தர்ப்பங்கள் பலவேறாக இருப்பதில் வியப்பில்லை. அர்த்தம் கொள்வதற்கான வாய்ப்பளிப்பதே மொழிதான். ஆனால் மொழி ஒருபோதும் நிலையாயிருந்ததில்லை. அது மாறிக்கொண்டே யிருப்பதனால் நாம்பிரதியில் காணக்கூடியது, பல அர்த்தம் காணக்கூடிய வாயப்புகளின் ஒரு வீச்சுதான். சுருங்கச்சொன்னால், பிரதிகள் பன்முகப்பட்டவை; பல விளக்கங்களுக்கு இடமளிக்கக்கூடியவை; அர்த்தங்கள் என்பவை மாறாது நிலைத்திருக்கக்கூடியவை அல்ல; வாசிப்புச் செயல்முறையின்போதே வெளிப்படக்கூடியவை. விமரிசனம் என்பது, நமக்குச் சாத்தியமாகக்கூடிய படிப்புமுறைகளின் வீச்சைப்பற்றி கவனம் செலுத்துவது.

புதுத்திறனாய்வாளர்களுக்கும் இலக்கியம் என்பது உண்மையைப்பற்றி கவனம்செலுத்துவதுதான். ஆனால் அந்த உண்மையானது, சிக்கலான ஒன்றாகவும், புதிர்கள் நிறைந்ததாகவும், அன்றாட உண்மைகளைக்காட்டிலும் மறைவடக்கமானதாகவும் உள்ளது. அது மிகச் செறிவான, பன்முகஅர்த்தங்களால் மயக்கம் நிறைந்த உண்மை. மாறாத அனுபவங்களில் கனிந்த உண்மை. இப்படிப்பட்ட உண்மையைத்தான் கவிதையானது ஒரு சொற்படிமமாக, மொழிக்குள் கொண்டுவந்து அடக்கி, நாம் சிந்திப்பதற்காக நம்முன் வைக்கிறது. தன்னில் நிறைவுபெற்ற முழுமையாகிய அந்தக்கவிதை, தனக்குள் ஓர் அறிவொழுங்கைக் கொண்டுள்ளது. இவ்வறிவொழுங்கு வாசகனைத் தனித்த ஒரு தத்துவத்திற்கு இட்டுச்செல்கிறது. இவ்வுலகின் அன்றாட மாற்றங்களுக்கு அப்பால் உயர்ந்துசென்று கவிதைகள் வாழ்ந்து பொருள்விளக்க மளிக்கின்றன. புதுவிமரிசனத் தன்மை வாய்த்த வாசகர்கள், தனிமையில் வாழ்க்கையனுபவங்களின் முரண்பாடுகளை யெல்லாம் சிந்தித்து அச்சிந்தனை மூலம் தெளிவினைப் பெறுகிறார்கள்.

புதுத்திறனாய்வு இவ்வாறு ஒரு முரண்பட்ட இயக்கமாகிறது. ஒருபுறம், வெளியீட்டுக் கொள்கையின் மேலாண்மையிலிருந்து விடுபடமுயல்கிறது, மறுபுறம் இந்த விடுதலையின் பயனை அடைய முடியாவண்ணம் அது தொடர்பு கொண்டுள்ள அனுபவவாதமும் அத்துடன் இணைந்து செல்லும் இலட்சியவாதமும் தடுக்கின்றன. இதனால், ஒரு போதிய கொள்கைச் சட்டகத்திற்குள் தன் அறிதல்களை வைக்கமுடியாமல்-கொள்கையடிப்படை இல்லாததாகப் புதுத்திறனாய்வு ஆகிவிட்டது. உருவத்தைப்பற்றிய புறநிலைப்பட்ட முழுபகுப்பாய்வு முக்கியம் என்று வலியுறுத்திய அது, மொழிக்கும் அர்த்தத்திற்கும்உள்ள உறவுகளை ஆராய்ந்து, அதற்கான கொள்கை உய்த்துணர்வுகளைப் பின்பற்றிச்செல்லாமல் விட்டுவிட்டது. கவிதை தவிர மற்ற எல்லாவிதச் சொல்லாடல்களிலிருந்தும் மேலும் மேலும் இலக்கிய விமரிசனத்தைத் தனிமைப்படுத்தி விட்டது. இதன்விளைவாக, அது கொஞ்சம் கொஞ்சமாக சூழ்ச்சித்திறனும் மலட்டுத் தன்மையும் உடையதாகி, வெறும் சிக்கல்களையும் மயக்கங்களையும் கவிதைகளில் தேடத்தொடங்கியது. இதனால், 1961இல் ரெனி வெல்லக், “நாம் புதுத்திறனாய்வின் இலட்சியங்கள்மீது பரிவுகொண்டிருந்தபோதிலும் அது, வளர்ச்சிகுன்றி, எந்திரத்தனமான போலச்செய்தலில் சிக்கிக்கொண்டு விட்டது. இப்போது ஒரு மாற்றத்திற்கான சமயம் வந்துவிட்டது” என்று கூறினார்.

நார்த்ராப் ஃப்ரை
ஒரு கள்ளங்கபடமற்ற வாசிப்பு இயலும் எனப் புதுத்திறனாய்வு நினைக்கிறது. அதாவது ஓர் அச்சிட்ட பக்கத்தில் காணப்படும் வார்த்தைகளுடன் பிறரது அனுபவக் குறுக்கீடின்றி நேரடியான எதிர்கொள்ளல் நிகழ்வதை எதிர்பார்க்கிறது. அதாவது ஒருபிரதிக்கும் மற்றொரு பிரதிக்கும் இடையிலுள்ள தொடர்புக்கூறுகளைப் புறக்கணித்துவிடுகிறது. நாம் இப்போது படிக்கின்ற பிரதிக்கும், ஏற்கெனவே படித்த பிரதிகளுக்கும் இடையே காணப்படும் ஒற்றுமைகள், வேற்றுமைகள் இவற்றைஅறிந்து, அதன்மூலமாகத்தான் ஒரு கதையை அறிகிறோம்; அல்லது இந்தக் கவிதை ஒரு தன்னுணர்ச்சிக்கவிதை, ஓரு காப்பியம் என்றெல்லாம் கூறுபோட்டு நாம் அவற்றிடம் எதிர்பார்க்கும் பண்புகளை முன்வைத்துப் பிற விவரங்களை அறியமுடிகிறது. புதுத்திறனாய்வின் மேற்கண்ட, மையமான சில கருத்துகளுக்கு எதிராகத்தான் நார்த்ராப் ஃபிரையின் அமைப்பியம் தோன்றியது. இலக்கியப்பிரதியின் சாரத்தை மட்டுமே உண்ணும் புல்லுருவி விமரிசனத்தை விடவும் மேம்பட்ட ஓர் இலக்கிய விமரிசனம் வேண்டும்; இலக்கியம், விமரிசனச் செய்கைகள் இவை திட்டமாக, ஒழுங்காக அடங்கக்கூடிய ஒரு திட்டவட்டமான கொள்கைச் சட்டகம் வேண்டும் என்று இவர் கருதினார்.

தற்போதிருக்கும் விமரிசனம், திட்டவட்டமான அமைப்பின்றி உள்ளது. அது நெகிழ்வுத் தன்மை வாய்ந்ததாகவும், உள்ளுணர்வை நம்புவதாகவும் உள்ளது. எனவே இறுதியாக ஒரு மேட்டுக்குடித்தன்ம் வாய்ந்ததாகவும், ஒரு மாயையான ‘நல்ல ரசனை’யை நம்பவைத்து ஏய்க்கும் தன்மைகொண்ட உணர்வுத்தன்மைச் சடங்கை வலியுறுத்துவதாகவும் அது ஆகிவிடுகிறது என்று நார்த்ராப் ஃப்ரை கூறுகிறார். இப்படிப்பட்ட கோட்பாடற்ற புதிர்ச்சமய அணுகுமுறையைவிட, “ஒரு புத்திசாலியான பத்தொன்பதுவயது இளைஞனுக்கும் அடிப்படை நியதிகளை விளக்கக் கூடியவாறு அமைந்த ஒழுங்கான திட்டஅமைதி கொண்ட துறையாக வேண்டும் விமரிசனம்” என்கிறார். இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு நம்மிடம் விடையில்லாததையும், இலக்கியப் பிரதி என்பதற்கு ஒரே சொல் இல்லாததையும், செய்யுளுக்கும் உரைநடைக்கும் இடையிலான வித்தியாசங்களில் கொள்கையடியான பகுப்பாய்வு இல்லாததையும், உரைநடை வடிவங் களைப் பகுப்பதில் சரியான வழி யில்லாததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ‘விமரிசனத்தின் கூறுபாடு’ (Anatomy of Criticism) என்ற நூலில், ஒரு விமரிசகனுக்குத் தேவையானசெயல்முறைகள், குறியீடுகள், புராணக்கட்டமைவுகள், இலக்கிய வகைகள், இவற்றைப் பகுத்துக்காணும் திட்டமும், இலக்கியஆசிரியர்களுக்கிடையிலும், குறுகலாகப் பிரிக்கப்பட்ட வரலாற்றுக் காலங்களுக் கிடையிலும் மரபான எல்லைகளைத் தாண்டிவந்து வித்தியாசங்களும் ஒப்புமைகளும் காண இயலுவதற்கான கருவிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

விமரிசனத்தின்கூறுபாடு போன்ற நூலொன்றை உருவாக்குவது எளிதில் நிறைவேற்ற முடியாத ஒரு பணி. ஆயினும் ஃப்ரையின் பரந்த படிப்பு, அவரது சொல்லோட்டம், கூர்த்த அறிவு, ஆகியவற்றால் அந்நூல் சிறப்பான வெற்றியடைகிறது. விமரிசனத்தின் கூறுபாடு ஒரு தகுதி பெற்ற, படிப்போர் மனத்தைக் கட்டுகளினின்றும் விடுவிக்கக்கூடிய நூல். அவ்வாறிருக்கும் நிலையில், புதுத்திறனாய்வாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு ஃப்ரையினால் தீர்வு வழங்க முடியவில்லை என்று குறைகூறுவது பொருத்தமற்றதாகவே உள்ளது.

வெளித்தோற்றத்தில் நார்த்ராப் ஃப்ரையின் நிலைப்பாடு, புதுத்திறனாய்வாளர்களின் நிலைப்பாட்டிற்கு எதிரானதாகவே காணப்படுகிறது. அவர்களது விமரிசனம் எங்கெல்லாம் நெகிழ்வு வாய்ந்ததாகவும் விளக்கமாகவும் உள்ளதோ, அங்கெல்லாம் ஃப்ரை ஆணித்தரமாகவும் செறிவுடனும் இயங்குகிறார். அவர்கள் எங்கு அரிஸ்டாடிலிய நிலைப்பாடு எடுக்கிறார்களோ அங்கு அவர் நவபிளேட்டோனிய நிலைப்பாடு எடுக்கிறார். ஒரு ‘பித்தளைஉலகைப்’ போலச் செய்வதைவிட, இலக்கியத்தை ஒரு பொன்னுலகத்தை உருவாக்கும் வாய்ப்புக் கொண்டதாகக் காட்டுகிறார். இலக்கியம் என்பது பருமையான, தொடர்புபடுத்தப்படாத அனுபவங்களை அடைவதற்கான ஒருவழிமுறையன்று, இலக்கியம், தன்னியலான கலாச்சாரப்பகுதியின் ஒருகூறாகும். தன்னியலான கலாச்சாரப்பகுதி என்பது “ஒரு சமூகத்திலும் அதன் மரபுகளிலும் உள்ள கற்ப னைத்திறன் வாய்ந்த சிந்தனைகளின் மொத்தவடிவம்”.

வர்ணனைத் திட்பம் வேண்டும் என்ற கட்டுத்திட்டமான இலட்சியத்துடன் ஒரு படைப்பு எழுதப்பட்டிருந்தாலே அது இலக்கியமன்று எனக் கூறுமளவிற்கு ஃப்ரை யதார்த்த நாட்டத்தைக் குறைகூறுகிறார். இலக்கியம் என்பதே புனைவு என்றுகூறும் இவர், போப்பின் ‘மனிதன்பற்றிய கருத்துரை’ (An Essay on Man) யை, அல்லது வேர்ட்ஸ்வொர்த், கிப்பன் படைப்புகளை யெல்லாம் அவற்றின் கருத்துகளுக்காக அன்றி, இலக்கிய நடைக்காகவே படிக்கிறோம் என்கிறார். இலக்கியப் பிரதிகளுக்கு அர்த்தம் உண்டு என்பதை அவர் மறுக்கவில்லை. எனினும் “அந்த அர்த்தங்கள் முடிவாக உள்நோக்கி இயங்குபவை. இலக்கியம் என்பது வடிவத்தைப் பொறுத்தது. அது எவ்விதக் கருத்தையும் உணர்த்தும் கருவியில்லை. உலகினைவிவரிக்கும் எந்தஉரையும் இலக்கியமன்று”.

“செய்திகள், உண்மைகள் பற்றிய வினாக்கள் யாவும் முதன்மையான இலக்கியக் குறிக்கோளான சொற்கள் என்பதிலிருந்து, வேறு நல்ல காரணமின்றி ஒரு கட்டமைப்பை அவற்றிற்காகவே உருவாக்குதல் என்பதற்குக் கீழ்ப்படுத்துகின்றன. அடையாளங்களுடைய குறிமதிப்புகள் யாவும் அவை கலைக்கூறுகளின் ஒழுங்கான கட்டமைப்பு என்ற மதிப்பிற்குக் கீழ்ப்படுத்தப்படுகின்றன. எங்கெல்லாம் தன்னியலான சொந்தக் கட்டமைப்புகள் இருக்கின்றனவோ அவற்றைத் தான் இலக்கியம் என்கிறோம். இவ்வாறான தன்னியலான சொற்கட்டமைப்பு எங்கு உருவாக வில்லையோ அங்கு வேறு பொருள்களை மனிதமனம் புரிந்துகொள்ள மொழியும் சொற்களும் கருவிகளாக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம்.”

“யதார்த்தம் என்பதற்கான அளவை மரபுவழிப்பட்டதுதான். அது உள்ளடக்கத்தைவிட வடிவத்தின் அமைப்பு நமக்குப் பழக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது.”

எழுத்தாளனின் நோக்கமும் முழுக்கமுழுக்க வடிவம் பற்றியதுதான். வேறு காரணம் எதற்காகவும் அன்றி, வார்த்தைகளால் ஆன ஒரு கட்டமைப்பை உருவாக்குவதுதான் என்று ஃப்ரை கூறுவது, வெளியீட்டுக் கொள்கையை ஆதரிப்பதுபோல் உள்ளது. ‘லிசிடஸ்’ என்ற கவி தையைப் பற்றிய கட்டுரையில் ஃப்ரை, பின்வருமாறு கூறுகிறார்: “இந்தக்கவிதை மிகுந்தஅளவு நாணயமானது. ஏனெனில் கையறுநிலைப் பாடல்களின் கட்டமைப்பு, குறியீட்டுத்தன்மை இவற்றில் பேரார்வம் கொண்டிருந்தவர் மில்டன். தமது இளமை முதலாகவே அவர் தம் கண்ணில்படும் எந்தச் சாவாக இருப்பினும் – அது பல்கலைக்கழகக் காவற்பணியாளராயினும், அல்லது இருமலால் இறந்துபோன இளங்குழந்தை யாயினும் அவர்களுக்குக் கையறுநிலை எழுதிப் பயிற்சி செய்திருந்தார்”.

எனினும் ஃப்ரையின் உருவவியல் (Formalism) முற்றமுழுக்கத் தூய்மையானதன்று. தாம் கையாளும் செயல்முறையை அவர் மூலப்படிவ விமரிசனம் (Archetypal Criticism) என்கிறார். மூலப்படிவங்கள் அல்லது மூலமுன்மாதிரிகள் என்பவை, ஒரு பிரதியையும் இன்னொரு பிரதி யையும் இணைத்து, நாம் புரிந்துகொள்ளும் தன்மைக்கு ஆதாரமாக இருக்கின்ற, திரும்பத்திரும்ப வரும் படிமங்கள் அல்லது குறியீடுகள் ஆகும். இலக்கியங்களில் திரும்பத் திரும்ப வரும் கருப்பொருளை அடிக்கருத்து (motif) என்கிறோம். இலக்கியங்களில் இடம் பெறும் ‘பயணத்தேடல்’ என்ற அடிக்கருத்தின் அர்த்தமோ, அன்றி ‘வசந்தகாலத்தில் மீண்டும் தோன்றுதல்’ என்ற தொன்மத்தின் அர்த்தமோ நமக்கு முக்கியமில்லை. இந்தச்சடங்கு, இவற்றின் வடிவ வார்ப்புகள், காலத்தாலும் இடத்தாலும் பிரிக்கப்பட்ட சமூகங்களிலும், மிகப் பழங் காலத்திலிருந்து பிரதிக்குப்பின் பிரதி என்று வழங்கிவந்துள்ளன. ஒரு மூலப்படிவத் திறனாய்வாளன், ஒரு தொன்மத்தின் வரலாற்று மூலத்தைப்பற்றிக் கவலைப் படுவதில்லை யாயினும், அம்மூலத்தைத் தன் பேரார்வத்தின் காரணமாகக் கண்டுபிடிக்கவே செய்கிறான். மூலஉருக்கள் திரும்பத்திரும்ப இலக்கியங்களில் வருவதற்கு அவை உண்மையாக இருந்தது காரணமல்ல, வாசகரின் கவனத்தை ஈர்த்துப் பிடிப்பதற்குஅவை உலகளாவிய சிறந்த வழியாக அமைகின்றன என்பதுதான் காரணம். மனித இனத்தில் என்றைக்குமுள்ள விருப்பங்கள், கவலைகள் போன்றவற்றையும், மனிதனின் இச்சைகளையும் அந்தஇச்சைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் ஏற்படும் தடைகளையும் அவை காட்டுகின்றன.

ஆகவே ஃப்ரையின் உருவவியல்வாதத்திற்குக்கீழ், இலக்கியம் உலகைப் போலி செய்வதாக அன்றி, மனிதனின் முழுமையான கனவுகளைப் போலிசெய்வதாகப் பார்க்கும் மானிடவியல் – பண்பாடுதழுவிய கொள்கை காணப்படுகிறது. நாகரிகம்என்பது மானிடச் சார்பான வடிவங்களை-சிற்பங்கள், பூந்தோட்டங்கள், சமூகம் ஆகியவற்றை – இயற்கையிலிருந்து உருவாக்கும் செயல்முறை என்று ஃப்ரை கூறுகிறார். இந்த நாகரிகம், மனித ஈடுபாட்டின் இலட்சியம், இச்சையின் காரணமாகப் பிறப்பது. இலக்கியமும் இந்த இலட்சியத்தை உள்ளடக்கியிருக்கிறது, வெளிக்காட்டவும் செய்கிறது. தன்னுள் மறைந்திருக்கின்ற பொருளை விளக்குகின்ற முறையில் படிக்கும்போது அது இயற்கைகடந்து செல்வதாக மட்டுமன்றி, அதனை உள்ளடக்கிக் கொள்வ தாகவும் அமைந்து இன்னும் பணி புரிகிறது.

“பால்வழிக்கு அப்பாலுள்ள பிரபஞ்சத்திற்கும் சென்று தனது நகரங்களை நிர்மாணிக்கின்ற ஒரு அனந்த மனிதனின் மனத்திற்குள் இயற்கை இப்போது உள்ளது. அது நிஜமன்று. ஆனால் இது எல்லையற்ற, என்றுமுள்ள, அருள் வெளிப்பாடான மானிட இச்சையின் பேருரு வம் அல்லது கற்பனை எல்லை”. இவ்வாறு இலக்கியம் தனது சுதந்திரமான பிரபஞ்சத்தைத் தானே நிர்மாணித்துக்கொள்கிறது. இப்பிரபஞ்சத்தில் காணப்படும் உயிரினம், ஆற்றல் வாய்ந்த இலக்கியவடிவங்களின் பெருந்தொகுதிதான்.

ஃப்ரையைப் போற்றுகின்ற விமரிசகர்கள் பலர். அவருடைய வகைப்பாடுகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு மானிட இனம், அதன் பண்பாடு பற்றிய அவரது கருத்துகளையெல்லாம் புறக்கணித்துள்ளனர். இவ்வாறுசெய்வது அவரது கொள்கையின் உருவாக்கப்பகுதிகள் பலவற்றைப் புறக்கணிப்பதாகும். எந்தஒரு மூலப்படிவக் கொள்கையும் வகைப்பாட்டுத் திட்டமும் இதுபோன்ற சில யூகங்களின்மேல்தான் (அந்த யூகங்கள் அல்லது அடிப்படைகள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமல் இருப்பினும்) எழுப்பப்பட முடியும். மூலப்படிமங்கள் திரும்பத் திரும்ப இலக்கியங்களில் இடம்பெறக்காரணம், மனிதஇயற்கை மாறாததாக இருப்பதுதான் என்கிறார் ஃப்ரை. மனிதஇயற்கை மாறாதது என்றால், உடலியல் தேவைகள் மாறாதவை என்பது மட்டும் பொருளன்று; ஒழுங்கற்றதிலிருந்து (Chaos-குழப்பத்திலிருந்து) ஒழுங்கைக்(Cosmos) கண்டு பிடித்து உருவாக்கும் வேகம், நாகரிக ஆக்கங்களின்மேல் ஆர்வம், இவற்றிலும் மனித இயற்கை மாறாததுதான். இந்த ஒழுங்கும், அதன்கூறுகளும்(னீஷீபீமீs-தொன்ம, கனவுப் பாங்கான, போலி செய்கின்ற, முரண்கூர்மையுள்ள ஆகிய கூறுகள்)-இவை ஒழுங்கான சுற்றுகளில் மீண்டும் மீண்டும் வருகின்றன. இவற்றின் அடிப்படையான கட்டமைவுகளை இச்சை, கவலை என்ற இருமையின் தன்னியலான உள்ளடக்கம் என்பதில் அடக்கிவிடலாம்.

ஆகவே, ஃப்ரை, புதுத்திறனாய்வாளர்களின் நிலைப்பாட்டிற்குஎதிரான நிலையிலிருந்து தொடங்குவதாகத் தோன்றினாலும், இறுதியாக அவர்களுடையதை ஒத்த ஒரு நிலைப்பாட்டையே சென்றடைகிறார் என்பது வியப்பானதோர் முரண்பாடு. இவரது நிலைப்பாட்டில், இலக்கியம் என்பது வரலாறு, கருத்தியல் யாவற்றுக்கும் அப்பால், என்றும் சாராம்சத்தில் மாறாத, ஒரே மாதிரியான மானிட இயற்கையின் காலங்கடந்த ஈடுபாடுகளுக்கு வடிவம் தருவதாகிறது. ஓர் இலக்கியப்பிரதி பலகாலங்களுக்கு முன்னும், இன்றும் ஒரேமாதிரியான அர்த்தத்தைத் தருவது என்னும் புதுத்திறனாய்வாளரின் கருத்தைத்தான் இவர் சற்றே வேறுபட்ட வார்த்தைகளில் சொல்கிறார். அவர்களைவிட இன்னும் ஒருபடி மேலே சென்று, பொருளாதார வெற்றியையும் சமூக ஒருங்கிணைப்பையும் ஒன்றாகப் பார்க்கும் பூர்ஷ்வாச் சிந்தனையை இயல்பானது, உயர்ந்தது என்று பாராட்டுகிறார்.

“இல்லஇன்பியல் (Domestic Comedy) என்ற இலக்கிய வடிவம், சாராம்சத்தில் சிண்டரெல்லா (Cinderella) என்ற மூலப்படிவத்தின்மேல் கட்டப்பட்டது. பமேலாவின் கற்பு பாராட்டப்படும் சமூகமும், அதைப் படிக்கும் வாசகர்சமூகமும், சிண்டரெல்லா விரும்பும் சமூகமும் ஒன்றே – திருமணப்பட்டாடைகளும் வங்கியின் சலவை நோட்டுகளும் சலசலக்கும் ஒன்றுதான் அது”.
எனவே ஃப்ரையின் கோட்பாடு, புதுத்திறனாய்வாளர்களின் கோட்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாயில்லை என்பதும், அவர்களிடமுள்ள பலவீனங்கள் சில இவரிடமும் உள்ளன என்பதும் வியப்பளிக்கவில்லை. இவருடைய உருவவியல், இலக்கியப் படைப்புகளின் மொழிமீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. விமரிசனக் கூறுபாடு நூலின் யாப்பியல் திறனாய்வு இயலில் போலச் சில இடங்களில், இலக்கியப் பிரதியின் வார்த்தைகளில்தான் வாசகனின் ஈடுபாடு இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். ஆனால் பொதுநிலையில், சொற்கள் என்பன பொருள்களுக்கோ, எண்ணங்களுக்கோ குறிகள்(அடையாளங்கள்)தான். சிந்தனைகளின் உலகைப் போலிசெய்யும் ஓர் இரண்டாந்தரமான ஒழுங்கமைப்பே அவை. இதனால் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகளை-வெவ்வேறு பண்பாட்டுத் தளங்களிலுள்ள மொழிகளின் மொழிபெயர்ப்புப் பிரச்சினைகளைக்கூட-அவர் பெரிதும் மதிக்கவில்லை. “ஒரு பாலினீசிய, அல்லது இராக் கோய் மனத்தில் என்ன நிகழ்கிறது என்பதைக்கூட நாம்ஒரு பொறுமையான, பரிவுணர்ச்சியுடன் கூடிய வாசிப்பின்மூலம் அறிந்து கொள்ளலாம்”. அதாவது சிந்தனைகள், மொழியின் துணையின்றியே நிகழ்வன என்றும், சொற்களில் வெளிப்படுவதற்கு முன்னரே அர்த்தம் இருக்கிறது என்றும் அவர் நம்புகிறார்.

“சிந்தனைஎன்பது, கண்டறியஇயலாத, நழுவிச்செல்கின்ற ஓர் உளவியல்-உடலியல்செய்கை. உணர்ச்சிகளின் வலைப்பின்னல்களில் அது தடுக்கிவிழுகிறது; பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகளில் சிக்குகிறது; தானாக எழும் உள்நோக்கு, ஒளிவீச்சுகள் கிடக்கச் செய்கிறது; தப்பெண்ணங்களை நியாயப்படுத்துகிறது; கலவர உணர்ச்சி, மந்தத்தன்மை இவற்றிலெல்லாம் சிக்கித் தடுமாறி, தொடர்புபடுத்த முடியாத, எடுத்துரைக்க இயலாத, உள்ளுணர்வை அடைகிறது. இப்படிப்பட்ட சிந்தனையைப் போலச்செய்கின்றவைதான் அர்த்தத்துடன்கூடிய எல்லாச் சொற்கட்டமைப்புகளும் ஆகும். தத்துவம் என்பது சிந்திக்கும் செயல்முறையின் போலச்செய்தல் அல்ல, சிந்திக்கும் செயல்முறையேதான் என நினைத்துக்கொள்ளும் எவரும் அதிகமாகச் சிந்தித்தவர்கள் அல்ல என்று சொல்லிவிடலாம்”.

இங்கு தனிமனிதச் சிந்தனைஅனுபவம், சிந்தனையின் இயல்பை அறியப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் மொழி என்பது சிந்தனையின் நகல் அல்ல, அதன் இன்றியமையாக் கூறு. அர்த்தத்தை உண்டாக்கும் தனிமனித அனுபவங்கள் எவ்வளவுதான் கலவரமூட்டுபவையாகவும், தடுமாறவைப்பனவாகவும் இருந்தாலும், நம்முடைய உள்ளுணர்வுகளை எடுத்துரைக்கும் அனுபவங்கள்-அர்த்தம் உண்டாக்கல் என்ற செயற்பாடு-மொழிக்குள்தான் நிகழ்ந்தாகவேண்டும். சிந்தனை எவ்வாறு செயற்படுகிறது என்பதை ஒரு எழுதப்பட்ட பிரதி எடுத்துக்கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்நாம் சிந்தனையின் இயல்பை ஆராயும் ஆராய்ச்சியை ‘சிந்தனை எவ்வாறு நிகழ்கிறது’ என்ற கேள்வியோடு மட்டும் நிறுத்திக்கொள்ளத் தேவையில்லை. அனுபவத்திற்கு ஃப்ரை விடுக்கும் மேல்முறையீடும், “சொற்களால் எடுத்துரைக்கமுடியாத உள்ளுணர்வில்” சிந்தனை முடிவதாக அவர்கருதுவதும் (புதுத்திறனாய்வாளர்கள்போன்றே)அவரும் பழைய வெளி யீட்டியல்-இலட்சியவாத எல்லைக்குள் சிக்கிக்கொண்டவர் என்பதையே காட்டுகின்றன. எவ்வளவுதான் அறிவியல்பூர்வமானது, முறைப் பட்டது என்று கூறினாலும், அவரது கொள்கையும் புதுத்திறனாய்வாளர்கள் கொள்கையைப் போன்றே விளக்கவியலாததாகவே அமைகிறது.

அர்த்தமானது சொற்களில் காலங்கடந்து நிலைகொண்டுள்ளது என்று ஃப்ரை சொல்கிறார். அது வெவ்வேறு காலகட்டங்களிலும் இடங்களிலும் வாழும் வாசகர்களுக்குக் கிடைக்கிறது. ஏனெனில், தமது சொந்த விருப்பங்கள், கவலைகள் போன்றவற்றின் எதிரொலிகளையே அவர்கள் இலக்கியங்களில் காண்கிறார்கள். ஆனால் ‘என்றும் மாறாத மானிட இயல்பு’ என்று சொல்லப் படுவதற்குக் காட்டப்படும் ஒரேசான்று, அவ்வாறு மனித இயல்பை மாறாததாக வைத்து எழுதியுள்ள இலக்கியங்களின் தொகுதி மட்டுமே. இச்சைக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு, மொழிக்கும் அர்த்தத்திற்கும் உள்ள தொடர்பு இதுவரை ஆராயப்படவேயில்லை.

அதேசமயம், ஃப்ரையின் கொள்கை தனக்குள் முரண்படுவதாகவும் இருக்கிறது. அவருடைய மாணவர்களே லிசிடஸில் உள்ள மூல வுருக்களான அடோனிஸ், ஆர்ஃபியஸ், தாவர வாழ்க்கைத் தொன்மத்தின் இறக்கும்கடவுள் – ஆகியோரைத் தஙகள் உள்ளுணர்வினால் கண்டுகொள்ள முடியவில்லை என்பதே சான்று. அவருடைய அனுபவமே இதனை உணர்த்தியிருக்கும். யேட்சின் ‘லீடா’, எலியட்டின் ‘நைட்டிங்கேல்களுக்கிடையே ஸ்வீனி’ போன்ற கவிதைகளிலுள்ள செவ்விலக்கியப் புனைவு மேற்கோள்கள் யாவும் “தக்கமுறையில் கற்பிக்கப்பட்ட வாசகர்களுக்கே திரண்டதோர் விளைவைத் தரமுடியும்” என்று ஃப்ரை தாமே ஒப்புக்கொள்கிறார். இங்கே புதுத்திறனாய்வாளர்களுக்கு ஏற்பட்டதுபோலவே, ஃப்ரைக்கும், “அர்த்தமானது மரபுசார்ந்தது, உள்ளுணர்வால் அறியப்படுவதைவிட நமது நெருக்கமான தொடர்பினால் அறியப்படுவது” என்ற கணநேர விழிப்பு ஏற்படுகிறது. பிற பிரதிகளுடன் வாசகனுடைய தொடர்பு இன்னொரு பிரதியைப் புரிந்துகொள்ள உதவும் என்ற ஒப்புதல், பிரதி பொதுச்சொத்து என்ற புதுத்திறனாய்வாளர்களின் கோட்பாட்டோடு ஒத்தது. ஆனால் இது அவரது கொள்கைவிளக்க உரைக்கிடையிலும், அதைச் சுற்றியுள்ள கருத்துகளுக்கிடையிலும் புதைந்துபோகிறது. இலக்கியத்தைப் பற்றிய பொதுப்புத்தி அணுகுமுறையின் போதாமைகளை உணர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு மேலெழுந்த வளர்ச்சியாகத்தான் ஆங்கில-அமெரிக்க விமரிசனக்கொள்கை மரபு தோன்றுகிறது. ஆனால் பொதுப்புத்தியாளர்கள் அனுபவ-இலட்சிய வாதச் சட்டகத்துக்குள்ளிருந்து முன்வைக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாமல் திகைக்கிறது.

இவ்வாறே, ஃப்ரை தமது நூலில் அர்த்தத்தின் பன்மைத்தன்மை என்பதை வலியுறுத்துவதும் மேற்கூறிய காரணங்களால் அடிபட்டுப் போகிறது. ஆசிரியன்தான் மூலஅர்த்தத்திற்கான உத்தரவாதம் என்பதை அவர் வேகமாகப் புறக்கணிக்கும் பகுதி இங்கு எடுத்துக்காட்டப்பட முழுத்தகுதி உடையது:

“விமரிசனம் என்பது விஞ்ஞானமாக இருப்பின் அதுமுழுதும் புரியத்தக்கதாக இருக்க வேண்டும். இந்த விஞ்ஞானபூர்வவிமரிசனத்திற்கு மூலகாரணமாக இலங்குகின்ற சொல்லாடல்களாலான இலக்கியமோ, புதுப்புது விமரிசனக் கண்டுபிடிப்புகளுக்கு வற்றாத சுரங்கமாக இருக்கிறது. அவ்வாறாயின், இப்படிப்பட்ட விமரிசன வளர்ச்சிக்குக் குந்தகம் விளைக்கின்ற பாங்கில், இலக்கியத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு விதியைத் தேடுதல் தவறாகும். கவிஞன் எதைக் கவிதைக்குள் பொதிந்து வைத்திருப்பதாகக் கருதப்படுகிறதோ, அதை வெளிக்கொணர்வதுதான் விமரிசகன் வேலையாகும். இந்த அளவுடன் விமரிசகன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வாய்பாட்டுச் சிந்தனை, பொறுப்பற்ற படிப்பறிவின்மை விளைவித்துள்ள குறைபாடாகும்.”

எந்த ஒழுங்குமுறைப்பட்ட விமரிசனமும் அற்றநிலையில், இக்குறைபாடு இன்னும் வளர வாய்ப்பேற்படுகிறது. இந்தக் கொள்கை ‘முதிர்ச்சிபெறா இயல்திட்டவாதம்’ (Premature Teleology) எனப்படுகிறது. (‘ஒரு நிகழ்ச்சி ஏன் இவ்வடிவில் இருக்கிறது’ என்றால், ‘நமக்கு மேற்பட்ட இறைசக்தி அதனை இவ்வாறு படைத்துள்ளது’ என்று சொல்வது முதிர்ச்சிபெறா இயல்திட்ட வாதம் என்பதில் அடங்கும்). அதாவது விமரிசகனுக்கென ஒரு கோட்பாட்டுச்சட்டகம் தேவையில்லை; அவனது மூலவுருவான லிட்டில் ஜாக் ஹார்னரைப்போல, விமரிசகனும், கவிதையில் கவிஞனால் பொதிந்துவைக்கப்பட்டுள்ள அழகுகள், நயங்கள், விளைவுகள் இவற்றைப் பொறுமையாக ஆராய்ந்து ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து, ‘இதோ பார்’ என்று முன்வைக்கும் வேலையைத்தான்செய்யவேண்டும்.

ஆக, ஃப்ரை, புதுத்திறனாய்வாளர்களுக்கும் ஒரு படி மேலே சென்று, உள்ளார்ந்த உள்நோக்கம் என்பதைத் தேடுவதையும் கண்டிக்கிறார். இவ்வாறு, ஆசிரியனின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட்டு, இலக்கியத்தினின்றும் வேறுபட்டு, அறிந்து செய்யப்படுகின்ற, ஒழுங்கு முறைப்பட்ட ஒரு விமரிசனத்திற்குக் கிடைக்கும் ஓர் இலக்கியப்பிரதி, நிச்சயம் பலபொருள் கொண்ட தாகவும், பன்முகப்பட்ட வாசிப்புகளுக்கு இடமளிப்பதாகவுமே அமையும். இலக்கியப் பிரதியின் பலபொருள் தன்மைக்குச் சான்றாகப் பல விமரிசனக்கொள்கைகள் தோன்றியுள்ள நிலையை ஃப்ரை சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு விமரிசனக் கொள்கையும் பிரதியில் ஒவ்வொரு அம்சத்தை மட்டுமே வலியுறுத்துகின்றது. ஒவ்வொன்றும் தனித்தனியான அர்த்தமுக்கியத்துவம் தரும் சட்டங்களைத் தருகிறது. ஒரே ஒரு சட்டத்தை மட்டும் தேர்ந்தெடுப்பது, பிரதியின் சாத்தியங்களைத் தேவையற்றும் மனம்போன போக்கிலும் தடைப்படுத்துவதாகும். ஓர் இலக்கியப் பிரதியினுள் உட்பொதிந்துள்ள அர்த்தங்கள் அனைத்தையும் இலக்கிய விமரிசனம் வெளிப்படுத்திவிட முடியாது. விளக்கவுரைகள் என்பன, ஒரு குறிப்பிட்ட காலத்து அல்லது இடத்து வாசகர்களுக்குப் புரியக்கூடிய விதத்தில் மட்டுமே-அவற்றின் தேவைமதிப்பு கருதி-சில அர்த்தங்களை மட்டுமே வெளிப்படுத்தும் நோக்கில் எழுதப்படுபவை.

ஃப்ரை கூறும் இந்தவளமான பன்முகத்தன்மை, இறுதியில் நோக்குநிலை முரண்பாடுகள் கல்வி முன்னேற்றத்தைத் தடைசெய்கின்றன என்று வாதிடும் ஓர் அழுத்தப்பட்ட பன்மைவாதத்தில் முடக்கப்படுகிறது என்பது ஏமாற்றமளிக்கிறது. ஃப்ரை போன்ற ஓர் அறிவார்ந்த விமரிசகர், ஒரே ஒரு அர்த்தம்தான் இறுதியில் வளப்படுத்தக்கூடியது எனவாதிடுவது மிகவிசித்திரமானது. இறுதியாக அவர், ஒரு பிரதியின் பன்முகப்பட்ட அர்த்தங்கள் யாவும் தமக்குள் முரணாகச் செயல்படுவதில்லை, மாறாக அவை ஒன்றையன்று நிறைவுசெய்யக்கூடியவை, பிர
தியினை ஓர்அர்த்த முழுமை என நாம் புரிந்துகொள்ள ஒவ்வொரு அர்த்தமும் உதவிசெய்கின்றது என்கிறார். ஓர் ஓவியத்தின் அருகே நின்றும், அல்லது தொலைவில் நின்றும் நாம் அதன் பலவேறு கூறுகளை காணமுடிவதுபோல, தனித்தனி விமரிசனச் செயல்முறைகளும் ஒரு பிரதியின் திரளான, முழுஅர்த்தத்தைப் புரிந்துகொள்ளவே உதவிசெய்கின்றன. எனவே ஃப்ரையின் நோக்கம் எந்த ஒரு விமரிசனச் செயல்முறையையும் ஏற்காமல் விடுவதல்ல, பல்வேறு விமரிசனச் செயல்முறைகளுக்கிடையிலான தடைச்சுவர்களை அகற்றுவதுதான் எனலாம்.

ஆனால் யதார்த்தவாதத்தினை மட்டும் ஃப்ரை புறக்கணிப்பது, மேற்சொன்ன நிலைப்பாட்டிற்கு முரணாகவும், அதை அர்த்தமற்ற தாக்குவதாகவும் உள்ளது. விமரிசனத்தின் கூறுபாடு நூலில்சொல்லப்படும் பல கருத்துகளுக்கும் யதார்த்தவாதம் மாறுபடுவதாயின் அதுவும் பன்னோக்குள்ளதாகவே அமையும்; ஆகவே ஃப்ரையின் நிலைப்பாட்டிற்கு ஒத்ததாகவே அமையும். இலக்கியத்தின் சமூகப்பணி பற்றிய ஃப்ரையின் நோக்கு மாத்யூ ஆர்னால்டிடம் இருந்து பெறப்பட்டது. சமூகமும், விமரிசனக்கொள்கைகள் போலவே, பல புதிர்களால், குறிப்பாக வர்க்க முரண்களால் நிரம்பியுள்ளது. தாராளவாதக் (Liberalist) கல்வியின் ஒரு பகுதி என்ற முறையில் விமரிசனமும், இன்றுள்ள உலகத்தைக் கடந்துசென்று, வரலாற்றின் அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட ஒரு வர்க்கபேதமற்ற சுதந்திரமான சமுதாயத்தைச் சிந்தித்துப் பார்க்க உதவக்கூடும்.

இப்படிப்பட்ட தன்னியலான, தனிமைப்படுத்தப்பட்ட விமரிசனம், நிஜமாக அன்றி, கற்பனையில் வர்க்கபேதத்தைக் களைந்துவிடுவதாகச் செயல்படும். இவையே அனுபவவாத, இலட்சிய வாதக் கூட்டிலிருந்து உருப்பெற்ற ஃப்ரையின் தாராளவாதத்தின் இறுதிப்பயன்களாகும்.

மனிதமனம் சமூகஅமைவிலிருந்து உருவானது. இச்சமூக அமைவினின்றும் தனிமைப்படுத்தப்பட்ட மனம், வரலாற்றுப்போக்கினை எந்தவித அர்த்தமுள்ள வழியிலும் பாதிக்கமுடியாமல் திணறவே செய்யும். மாத்யூ ஆர்னால்டைப் போலன்றி, கல்வியின் சக்தியில் ஃப்ரை மிக அதிக நம்பிக்கை வைத்தவரல்ல. ஆகவே அறிவுச்சுதந்திரம் என்பதை ஓர் உன்னத மதிப்பாகக்காட்டும் அவர் தமது வாதங்களினாலேயே கைவிடப்படுகிறார்.

எந்த ஒரு கொள்கை நிலைப்பாடும் தனிமையில் இருத்தல் இயலாது. இலக்கிய விமரிசனத்துக்கான எந்த ஒரு கோட்பாட்டுச் சட்டகமும், விமரிசனத்தையும் கடந்து கருத்தியலுக்குள் செல்லும் உட்குறிப்புகளைத் தம்முள் பெற்றே உள்ளன. இலக்கியத்தைப் பற்றி நாம் கொள்ளும் கற்பிதங்கள், மொழியைப் பற்றிய கற்பிதங்களையும், அர்த்தத்தைப் பற்றிய கற்பிதங்களையும் அடியாகக் கொண்டுள்ளன. இவை யாவும் மனித சமுதாயத்தைப் பற்றிய கற்பிதங்களை அடியாகக் கொண்டுள்ளன. இலக்கியத்தின் சுதந்திரமான தனியுலகம், விமரிசனத்தின் தன்னுரிமைபோன்ற யாவும் பொய்த்தோற்றங்களே.

வாசகரின் சக்தி
நடப்பியத்துக்கு எதிராக எழுந்த அண்மைக்காலச் சவால்களில் நம் கவனத்தைப் பெருமளவு கவரக்கூடியது, இலக்கியப்பிரதி தொடர்பாக வாசகரின் பங்கினை வலியுறுத்தியதுதான். ஓரளவு புதிய கருத்தாக இருந்த காரணத்தாலும் (வாசகசக்தி 1960களில்தான் ஒரு குறிப்பிடத் தக்க நிகழ்வாகத் தொடங்கியது) புதுத்திறனாய்வைப்போல உடனடியாக வாசிப்புச் செயல்முறை பற்றிய விமரிசன ஈடுபாட்டினை வரையறுத்துவிட முடியாது. அதனுடைய சிக்கலான தன்மை காரணமாகவும், அதில் அடங்கியுள்ள அணுகுமுறைகளின் வீச்சு, நுணுக்கங்கள் யாவற்றையும் ஒரு சிறு பகுதியில் அடக்கிக்கூறிவிடுதல் மிகக்கடினம். இருப்பினும் வாசகரின்மீது அண்மையில் ஏற்பட்டுள்ள அக்கறையின் பலம் – பலவீனங்களைத் தெரிந்துகொள்வது, மேலும் நாம் இத்திசையில் பயணம்செய்ய உதவுவதாகும்.

மிகச் சிறப்பாகச் செய்யப்படும்போது வாசகவிமரிசனம், மிக விடுதலையளிப்பதாகவும் அர்த்தங்களின் பன்மைகாணலில் வாசகரின் பங்கேற்பை வலியுறுத்தி, ஆசிரியரின் கொடுங்கோன்மையினைப் புறக்கணிப்பதாகவும் அமையும். மோசமாகச் செய்யப்படும்போது, ஆசிரியருக்குப் பதிலாக, சிறந்த பயிற்சிபெற்ற, மாதிரிவடிவ வாசகர் ஒருவரை ஆதிக்க உருவாக முன்னிறுத்தி, அவ்வாசகரின் வாசிப்பைத் தனித்த ஒருமையான, காலங்கடந்த, அதீதமான, தவறாகாத ஓர் அர்த்தத்திற்கு உத்தரவாதம் ஆக்கிவிடுகிறது. நிஜத்தில், பல வாசகக் கொள்கையாளர்கள், இந்த இரு எல்லைகளுக்குமிடையே ஊசலாடுகிறார்கள். இவ்விதச் செயல்முறையின்போது பலவிதக் கொள்கைப் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது.

வால்டர் ஜே. ஸ்லேடாவ் எழுதிய ‘வாசகர்மேல் மதிப்புவைத்து’ (1970) என்ற நூல் இப்பிரச்சினைகள் பலவற்றை எடுத்துக்காட்டுகிறது. பிரதிகள் வரலாற்றினூடாகப் பொருள்பெறுவதில்லை; ஒவ்வொரு வாசகரும் எந்த முறையில் வாசிக்கிறார் என்பதைப் பிரதிகள் நிர்ணயிப்பதில்லை என்பன ஸ்லேடாவின் முக்கியக்கண்டுபிடிப்புகள். பிரதிகளின் வடிவம் சார்ந்த பண்புகள், வாசகர்களிடம் ஒரே மாதிரியான விளக்கங்களையோ எதிர்வினைகளையோ ஏற்படுத்துவதில்லை. பதிலாக, நடைமுறையில் வாசகர்களுக்கு அதிகமான அர்த்தங்களை உருவாக்கிக்கொள்ள வாய்ப்பளிக்கின்றன. துரதிருஷ்டவசமாக, ஸ்லேடாவ், இந்த அர்த்த வாய்ப்புகளை ஆய்வுப்பாங்கான, கருத்தியல் வேறுபாடுகளில் தேடுவதைவிட, ஒவ்வொரு தனி மனிதரின் தனியியல்புகள், பயிற்சி, மனநிலை, வாழ்க்கைமதிப்புகள், அனுபவம், சார்புநிலைகள் அல்லது படிப்பதற்கான நோக்கங்கள் போன்ற அனுபவவாத-இலட்சியவாத நிலைப்பாடுகளில் தேடுகிறார். மேற்கண்ட காரணங்களால் பெரும்பாலான வாசகர்கள் ஒரு நல்ல வாசிப்பு முறைக்கு வந்துசேர்ந்து விடுகிறார்கள் என்ற எண்ணத்திற்கு நழுவிச்செல்கிறார். மிகத் தெளிவாகவே ‘பொருந்தாதது’ எனத் தெரியும் வாசிப்புமுறைகளை ஒதுக்குவதன் மூலம் அவர்கள் இப்பழக்கத்தை அடைகிறார்கள். ஒத்துணர்வு (empathy), பரிவுணர்வு (sympathy) ஆகியவற்றின் வாயிலாக, இறுதியாகப் பிரதியில் உள்ளுறையாக இருக்கும் ஆசிரியரின் உள்நோக்கம், பிரதியின் மனித இருப்பு ஆகியவற்றை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.

வெயின்பூத் (Wayne Booth) என்பார் எழுதிய ‘நாவலின் யாப்பு’ (Prosody of the Novel) என்னும் நூலில்தான் முதன்முதலாக உள்ளுறை ஆசிரியர் என்ற கருத்து இடம்பெறுகிறது. வெளிப்படையான ஆசிரியரின் உள்நோக்கங்களைக் கண்டுபிடிக்கும் செய்கைக்கு எதிரான வாதங்களுக்குச் சற்றே சலுகையளிக்கும் முறையில் இந்தக் கருத்து உருவாயிற்று. கதைகூறல் தன்மை கொண்ட உரைநடைகளின் ஆய்வுக்கு இதுமிகவும் பயன்படும் கருத்தாகும். நாவலில்வரும் உள்ளுறைப் பேசுவோனை இது பெயர்சுட்டிக் காட்டுகிறது. நாவலின் முழுக்கதையையும் சொல்பவன், பிற நாவல்களில் வரும் உள்ளுறையாசிரியர்களினின்றும் வேறானவன். அண்மைக்காலப் பிரெஞ்சுத்திறனாய்வில் உள்ளார்ந்த எடுத்துரைப்போன் (Inherent Narrator) என்றகருத்து இடம்பெறுகிறது. இவன் நாவலின் கதை முழுவதையும் எடுத்துரைப்பவன். இவனுக்கு விளக்கக் கூற்றுரைப்போன் என்றும் பெயருண்டு. இவனுக்கும் விளக்கக்கூற்றால் உரைக்கப்படுபவனுக்கும் (Subject of the enoncee) வேறுபாடு உண்டு. இவர்கள் இருவருமே கதாபாத்திரங்களேயாவர்.

ஒரு நூல் முன்வைக்கும் விளக்கக்கூற்றை உரைப்பவனே(ளே) எடுத்துரைப்பவன்(ள்) (Narrator) ஆவான்(ள்)…அவனோ அவளோதான் மற்றவர்கள்முன் சில வருணனைகளை-கதையின் கால அமைப்புப்படி இவை முன்னாலேயே நிகழ்ந்திருப்பினும்-முன்வைக்கிறார்கள். இந்தப் பாத்திரத்தின் அல்லது அந்தப் பாத்திரத்தின் கண்கள் மூலமாகவோ, அல்லது தங்கள் கண்கள் மூலமாகவோ நாம் கதை நிகழ்ச்சிகளைக் காணவைப்பவர்கள் இவர்கள்தான் என்று தோடரோவ் கூறுகிறார்.

மேற்கண்ட செய்திகள் இரு மெய்ம்மைகளைக் காட்டுகின்றன. ஒன்று பாத்திரப்படைப்பு பற்றியது. மற்றது எடுத்துரைப் போன்-கவனிப்போன் இருமைநிலை பற்றியது. நாவலில் ‘நான்’ என்று சொல்பவன், சொல்லாடலின் ‘நான்’ அல்ல. சொல்லாடலின் ‘நான்’தான் முன்பு உள்ளார்ந்த எடுத்துரைப்போன் எனப்பட்டவன். இவன் வெறும் கதாபாத்திரம்தான். ஆனால் நாவலில் இன்னும் ஒரு ‘நான்’ உள்ளது. அது பெரும்பாலும் கண்ணுக்குப் புலப்படாதது. அது எடுத்துரைப்பவனின் சொல்லாடல்வழி நாம் அறிந்துகொள்ளும் ‘கவிதை ஆளுமையுடையவன்’ (Poetic Personality). உருவவியல் ஆய்வில் இவ்வித்தியாசங்கள் மிகப் பயன்படுகின்றன. ஸ்லேடாவின் கூற்றுப்படி, உள்ளுறை யாசிரியன் என்பவன் இப்படிப்பட்டதொரு வடிவவியல் கோட்பாடல்ல. தனது பண்புகள் பிரதியின் மதிப்புக்குக் காரணமாக இருக்கின்ற ஒரு அனுபவபூர்வ ஆசிரியனின்றும் ’உள்ளுறையாசிரியனை’ எளிதில் பிரித்தறியமுடியாது. மேலும் ஸ்லேடாவ், ஜார்ஜ் எலியட்டின் மெய்யார்வம், தாக்கரேயின் ஆரவாரத்தன்மை, டிரெய்ஸரின் அருவருப்பான நேர்மை என்றெல்லாம் எடுத்துக்காட்டும் பண்புகள், அவருடைய நிலைப்பாட்டிற்கும் வெளியீட்டுக்கொள்கை நிலைப்பாட்டிற்கும் வேறுபாடில்லை என்பதை உணர்த்துகிறது. நல்ல வாசகர்கள்-விமரிசகர்கள் என்போரின் செயல்களாகப் ‘படைப்புக்குக் கீழ்ப்படிதல்’ ‘தம் எதிர்வினைகளை நேரிடையாகவும் கட்டுக்குள் அடங்கியதாகவும் பார்த்துக்கொள்ளல்’ போன்ற விவரணைகளிலிருந்து இது இன்னும் தெளிவாகிறது. வாசகருக்கும் ஆசிரியருக்கும் ஒருமைப்பாட்டினைக் காட்டாத வாசிப்புகள் தக்கமுறையில் ‘கீழ்ப்படியாத வாசிப்புகள்’ என்று காட்டப்படுகின்றன. இவை பிறழ்வுகள் ஆகும்.

‘திறந்த பிரதி’களை ஸ்லேடாவ் பாராட்டுகிறார். இவை ‘தகர்க்கின்ற’ ‘தொல்லை தருகின்ற’ படைப்புகள். ஒழுங்கான ஒருங்கிசைவுகொண்ட படைப்புகள் அல்ல. இப்பாராட்டு, வாசகரை முரண்பாடுகளுக்குள் தள்ளுகிறது. மேலும் மரபைச் சவால்விடக்கூடிய சாத்தியப்பாட்டிற்கு மிக நெருங்கிவருகிறது. என்றாலும், இறுதியில் அவர் “பிரதிகள் என்பவை ஆசிரியர் அடிப்படையிலான பேச்சுகள்” என்ற வழக்கமான நோக்கில் மதிப்புத் தருதல், தம்முள் உள்ளுறை ஆசிரியன்பற்றி நிகழும் போராட்டங்களை, முடிவுக்குவர இயலாத் தன்மைகளைவெளிப்படுத்தல் போன்றவை பழைய யதார்த்தவாத நிலைப்பாடுகளே.

இதனால், ஸ்லேடாவ், தமது நிலைப்பாட்டின் வாயிலாகக் கிடைக்கக்கூடிய தீவிர சாத்தியப்பாடுகளின் நன்மைகளையும் அடையமுடியாமல் தமது மனத்தடையால் நிறுத்தப்பட்டுவிடுகிறார். இதற்கு, பெரும்பாலானவாசகர்களுடைய படிப்புமுறை, உணர்ச்சி-எதிர்வினை போன்றவை ஏற்கெனவேதெரிந்தவை, இயல்பானவை, எனவே புறக்கணிக்கமுடியாதவை என அவர் கொண்டிருக்கும் சார்பெண்ணம் ஒருகாரணமாகும். பிறவகையான வாசிப்புகள் பொருத்தமற்றவை, ஆழ்ந்து ஒருநிலைப்படுத்தப்பட்டவை, என அவர் கருதுகிறார். எனவே அவரது கொள்கைப்படி, ஒரு பிரதி என்பது இரண்டு நனவுநிலைகளை இணைக்கும் கண்ணுக்குப் புலப்படாஇழையாகப் பயன்படுகிறது. இதவும் பொதுப்புத்தியின் தொடர்பியல் மாதிரியாகும். வாசகரின் அர்த்தக்கண்டுபிடிப்பு என்பது இந்தக் கண்ணுக்குப் புலப்படாத இழையின்மீது நடந்துசென்று, தவிர்க்கவியலாமல் ஆசிரியரை அடைந்தே தீருவதாகும்.

கற்பிதங்கள், எதிர்பார்ப்புகள் இவற்றின் பங்கு பற்றிய கோட்பாடு எதுவும் ஸ்லேடாவின் நூலில் காணப்படவில்லை. படைப்பில் நாம் எதிர்பார்ப்பது ‘மனித இருப்பு’தான் என்றால் அதனை இங்கு நிறையவே காணலாம். ஆனால் இத்துடன் மட்டும் நாம் தேடலை நிறுத்திக்கொள்வது, குதிரை மாதிரி நாமும் கண்ணுககுப் பட்டை போட்டுக்கொணடுபடிப்பதற்கு ஒப்பாகும்.

ஆங்கில அமெரிக்க வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான வாசகக்கொள்கையாளர் ஸ்டேனலி ஃபிஷ் ஆவார். 1967இல் அவருடைய படைப்பான ‘பாவத்தால் வியப்பெய்தி’ (Surprised by sin) வெளிவந்தபோது, அதில் காணப்பட்ட ‘இழந்த சொர்க்கத்தில் வாசகன்’ (Reader in the Paradise Lost) என்ற கட்டுரை பெருமளவு கிளர்ச்சியைத் தூண்டியது. இப்படைப்பைத் தொடர்ந்து, 1972இல் ‘தம்மைத்தாமே விழுங்கும் கலைத்துறை வேலைப்பாடுகள்’ (இதற்கு ‘17ஆம் நூற்றாண்டு இலக்கிய அனுபவம்’ என மறுதலைப்பிடப்பட்டிருந்தது) வெளிவந்தது. ஃபிஷ்ஷின் நிலைப்பாட்டில் வாசகரின் அனுபவத்துக்கு முதன்மை தருதல் முக்கியமானது.

படிப்பு என்பது ஒரு செயலும்(Act) செயல்முறையும் (Process) ஆகும். வாசகர் மனத்தில் நிகழும் நிகழ்வுகளே அர்த்தங்கள் (Meanings are events); ஒரு பிரதியைப் பற்றி நாம் கேட்கக் கூடிய முக்கியக்கேள்வி அது என்ன செய்தது என்பதே. கால ஒழுங்கில் வார்த்தைகளின் பின் வார்த்தைகளாக வந்துகொண்டே யிருக்கும்போது, அவற்றிற்குத் தக்க எதிர்வினை தனக்குள் என்ன உருவாகிக்கொண்டே வருகிறது என்று அலசுவதுதான் ‘விமரிசகனின் ஏற்புடைய செயலாகும்’.

ஃபிஷ் மொழியை ஒதுக்கிவிடவில்லை. அவர் பிரதியை ஒரு சொல்லாடல் என்றமுறையிலேயே மதிப்பிடுகிறார். மேலும் ஸ்லேடாவைப்போலவே ஊடறுக்கும்பிரதி (Disruptive text) என்பதில்தான் ஈடுபாடு காட்டுகிறார். ஊடறுக்கும் பிரதி என்பது ஒருபிரதி தான் உண்டாக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட பிரதி ஆகும். இப்படிப்பட்ட பிரதியானது, வாசகர், தனது பிரச்சினைகள், இடர்ப்பாடுகள், வினாக்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளவைக்கிறது. இவை எளிய, மனஅமைதியைத் தருகின்ற, ஒத்திசைவுடைய பிரதியாக உடனடியாகத் தீர்மானிக்கமுடியாதவை. இப்படிப்பட்டவற்றை இயங்கியல் பிரதி(Dialectical text) என்கிறார் அவர். யாப்பியல் பிரதி(Prosodic text) தனது வாசகர்களைத் திருப்திப்படுத்தக்கூடியது. இயங்கியல், ஊடறுக்கும் பிரதிகள் இதற்கு எதிரானவை.

ஓர் இயங்கியல் முன்வைப்பு என்பது அமைதியைக் குலைக்கக்கூடியது, ஏனெனில் அது தன் வாசகர்கள் எதையெதையெல்லாம் நம்புகிறார்களோ, எவற்றால் வாழ்கிறார்களோ, அவற்றையெல்லாம் கடுமையான ஆய்வுக்குட்படுத்தத் தூண்டுகிறது. ஒரு சிறப்பான அர்த்தத்தில் அது நீதிபோதிப்பது எனலாம்; அது உண்மையை அப்படியே பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால் தன்னை வாசிப்பவர்கள் தாமே உண்மையைக் கண்டறிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் இந்தக் கண்டறிதலுக்கு வாசகர்கள் தங்கள் கருத்துகள், ஒழுக்க மதிப்புகள் இவற்றை மட்டுமல்ல, தங்கள் சுயகௌரவத்தையும் இழந்தாகவேண்டும். ஏனெனில் ஓர் இயங்கியல் அனுபவம் என்பது முழுமாற்றம் (வெறும் மனமாற்றம் அல்ல) என்பதையும் மனங்கள் ஒன்றிற்கொன்று மாற்றிக்கொள்ளப்படுதல் என்பதையும் விளைவாகக் கொண்டுள்ளது.

இங்கு ஃபிஷ், இலக்கியத்தை உண்மை (அந்த உண்மை வாசகரால் கண்டு பிடிக்கப்படுவது என்றாலும்) என்பதுடனேயே இன்னும் இணைத்துப் பார்க்கிறார். அவர் இலக்கியப்பிரதிக்குத் தரும் மாதிரி (model) வெளியீட்டுப்பாங்கான தன்று. ஆசிரியர் கருத்தை வாதிப்பவர் என்ற முறையில் பிரதியின் சொல்லாடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஆனால் வாசகர்கள் அர்த்தங்களை உருவாக்குவதில் தாங்களும் பங்குவகிக்கிறார்கள். எனவே இவரது கொள்கை, உண்மையிலேயே ஒரு புதிய விமரிசனச் செயல்பாட்டிற்கு உதவக்கூடிய அடிப்படையை அமைக்கிறது எனலாம்.

ஆயினும், வாசகர்களின் பன்மைத்தன்மை என்பது அர்த்தங்களின் பன்மையையும் உண்டாக்கக்கூடியது என்பதை அறியாதது இவரது பலவீனமாகும். ஃபிஷ்ஷின் வாசகன் ஒரு தனிமனிதன், பாதுகாப்பற்றவன். ஒரு நன்கறிந்த வாசகன்; ஆனால் அருவமானவனோ அன்றி உண்மையில் உயிர்வாழ்பவனோ அல்ல. தன்னை அறிவுநிலைக்கு நன்கு தயார்செய்துகொள்ளத் தன்சக்திக்குட்பட்ட அத்தனை காரியங் களையும் செய்யத்தயங்காத ஓர் உண்மை வாசகன் (‘நான்’). ஃபிஷ் ‘வாசகத்தகுதி’ என்ற கருத்தை இங்கு முன்வைக்கிறார். இங்கு சாம்ஸ்கியின் மாற்றிலக்கணம் கருதத்தக்கது. அவர் கூறும் மொழியியல் ‘தகுதி’, நாம் முன்னரே எதிர்கொண்டிராத வாக்கிய அமைப்புகளையும் நாம் உருவாக்கி வெளிப்படுத்தமுடியும் என்கிறது. உள்ளார்ந்த இலக்கண வடிவங்களை உருவாக்கும் மனத்திறன் அது. மாற்றிலக்கணத்தில் மொழித்தகுதி என்பது மொழியின் விதிகளின் ஒழுங்கமைப்பை அறிவதாகும். தகுதியை வரையறுக்கும் விதிகள், மொழியின் உள்ளார்ந்த கட்டமைப்புகளை வெளிப்படுத்தவல்லவை. புதைநிலையில் (deep structure-ஒரு வாக்கியத்திற்குள்ளாக இருக்கும் பொருளடிப்படையிலான முக்கிய உறவுகளின் தொகுதி) எல்லா மொழிகளுக்கும் பொதுவான ஒரு இலக்கணம்-எல்லா மனிதர்களும் பொதுவாக உணரக்கூடிய உள்ளார்ந்த ஒழுங்கமைப்பு என்பது மாற்றிலக்கணத்தின் அடிப்படையாகும். ஆனால் ஃபிஷ் கூறும் இலக்கியத்தகுதி, மாற்றிலக்கணம்கூறும் மொழித்தகுதி போன்றதன்று. ஏனெனில் இது மொழியின் புறநிலையிலேயே செயல்படுகிறது.

குறிப்பிட்ட இலக்கியப் பிரதிகள் பெற்றிருக்கும் இலக்கிய மரபுகளை உள்வயப்படுத்திக்கொள்ளப் படிப்புமுறை அனுமதித்துள்ளது. அப் படிப்புமுறையினால் பெற்ற அனுபவங்களை ஃபிஷ்ஷின் இலக்கியத் தகுதி சார்ந்துள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இலக்கியத் தகுதி என்பது கற்றலினால் உண்டானது. எனவே வரலாற்றைக் கடந்து செல்லும் பண்பு பெறாதது. வெவ்வேறு காலங்களில் வாழும் வெவ்வேறு வாசகர்கள், வெவ்வேறுவிதமான தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை ஃபிஷ் உணர்ந்ததால், ஒரு விளக்கத்தைத் தருகிறார்: “மில்டனின் விஷயந்தெரிந்த வாசகன் ஒருவன், விட்மனின் விஷயந் தெரிந்த வாசகனாக இருக்க இயலாது”. அப்படியானால் எவ்வித வாசிப்புமுறை சிறந்தது? ஒரு குறிப்பிட்ட எழுத்தாளனின் சமகாலத்தவர் வாசித்தமுறைதான் சரியானது என்பதும் அவர் கருத்து. இன்னும் சொல்லப்போனால், இழந்தசுவர்க்கம் அல்லது புல்லின் இதழ்களை வாசிக்கும்போது, பொதுப்பண்புகள் அற்ற, சமகாலத்திற்குரிய எதிர்வினைகளையும், இக்கால அனுபவங்களையும் இணைக்காது வடிகட்டுவதற்கான முயற்சியே சரியான வாசிப்பு அனுபவத்தை அளிக்கும் என்று அவர் கருதுகிறார். அனுபவமே கருத்தியல் ரீதியிலும் சுற்றிவளைத்தும் உருவானது என்பதைப் புரிந்துகொண்டதற்கான அறிகுறி இவரிடமும் இல்லை. தனித்த இலக்கியப் பிரதிகள் தனித்த இலக்கிய அனுபவங்களை உண்டாக்குகின்றன என்பது இவரது நம்பிக்கை. ஆகவே அனுபவத்திற்கும், மொழிக்கும் கருத்தியலுக்கும் வரலாற்றிற்கும் உள்ள தொடர்புகளை விளக்க இவராலும் முடியவில்லை. இதனால் இவரது விமரிசனமும் புதுத்திறனாய்வின் ஒரு திரிந்த, செயற்கையான வடிவமாக மாறிவிடுகிறது. மேலும் அவரது செயல்முறை இலக்கியவரலாற்றிற்குச் சலுகை தருவதாகிறது; இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் ஒரு வாசகனைப் புதிதாகக்கொண்டுவந்து இணைக்கிறது. இந்த வடிவத்திலான வாசகசக்தி என்பது மானிடப் பொதுமைவாதத்தின் ஓர் வடிவமாக மாறிவிடுகிறது. ஆசிரியரின் உட்கருத்தைத் தள்ளிவிட்டு, அதற்கு பதிலாக, வாசகரின் உள்ளுணர்வை மேலாண்மைக்குப் பயன்படுத்துகிறது.

ஜெர்மன் ஏற்புக்கொள்கை (Reception Aesthetics, ஏற்பழகியல்) இதற்கு மாறாகக் கொள்கைவிளக்கம், வரலாறு ஆகியவற்றிற்கு இன்னும் நாகரிகம் சான்ற (அல்லது உலகியல் சார்ந்த) ஒரு மனப்பாங்கைக் கைக்கொள்கிறது. ஜாஸ் (Hans Robert Jauss) சொல்வதுபோல, “ஓர் இலக்கியப் படைப்பென்பது தானாக நிலைநிற்கும் பொருளும் அல்ல; அது ஒரு காலப்பகுதியில் ஒரே ஒரு முகத்தைமட்டும் எல்லா வாசகர்களுக்கும் காட்டுவதுமில்லை. தன் காலங்கடந்த தனியுரையை என்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நினைவுச்சின்னம் அல்ல இலக்கியம்”. இலக்கியப் பிரதிகளின் ஏற்புவரலாறு என்பது நாம் எவ்வாறு வரலாற்று எதிர்பார்ப்புகளைக் கொண்டு வாசகப் பிரதிகளுக்கிடையிலான வாசிப்புமுறை வேறுபாடுகளை விளக்குகிறோம் என்பதாகும். இலக்கிய வரலாற்றுச் சூழலடிப்படையில், ஒரு படைப்பின் பொருள்கோள் வேறுபாடுகளை, கடந்தகால நிகழ்கால வேறுபாடுகளைக் காணும் செயல்முறையாகும். இதன்மூலம் அது, “இலக்கியம் என்பது காலங்கடந்தும் நிற்கிறது, அதற்கு அனைவரும் ஒப்பும் பொதுப்பொருள் உண்டு, அதை ஒருமுறை கண்டுபிடித்து விட்டால் போதுமானது, அந்தப் பொருளை எந்த விளக்கவுரையாசிரியனும் எப்போதும் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்ற மொழியியல் அடிப்படையிலான-அதீத தத்துவ விதிகளை மறுக்கிறது. இவை நடைமுறைசாராத் தன்மை கொண்டவை, இலட்சியமாக்குபவை (platonize). சான்றாக, மெய்ம்மைத் தன்மை என்பது எல்லாக் காலங்களிலுமே இலக்கியப் பெருமையை நிர்ணயிக்கின்ற ஓர் அளவுகோலாக இருந்ததில்லை. இது மனிதமையக் கோட்பாடு தோன்றிய காலத்தையொட்டிப் பின்பற்றப்படும் ஓர் அளவுகோல்.போலிசெய்தல் கொள்கை வலுவிழந்துபோன காலத்தில், வரலாற்றை நிர்ணயிப்பதாகக் கருதப்பட்ட கொள்கை இது.

இருப்பினும், ஜாஸ் இலக்கியவரலாற்றின்மீது கவனம்செலுத்துகிறார். ஏனெனில் இலக்கிய வரலாறு, நமக்குப் புதிய, சவால் விடுகின்ற விஷயங்கள் அத்தனையையும் நமக்குப் பழக்கப்பட்ட, எளிய, முயற்சியற்ற விஷயங்களாக மாற்றிவிடுகிறது. தற்போதைய ஏற்பழகியல் கொள்கையின் வலுவான ஆதரவாளர் ஐஸர் (Johanne Wolfgang Iser). வாசிப்புச் செயல்முறையின் கொள்கைவிளக்கத்துக்கு நாம்இனி ஐஸரை நாடலாம். ஒரு தனித்த வாசிப்புநிலைக்கென வாசகரை மேலாண்மையுள்ளவராக ஆக்குவதிலுள்ளபிரச்சினைகளை ஐஸர் நன்கறிவார். அனுபவ வாதிகளான வாசகர்கள்-இவர்களது எதிர்வினைகளை நாம் பட்டியலிட்டுவிடலாம்-இவர்கள் விளக்கவுரைக்கான சாத்தியங்களில் ஒருவகை இடர்ப்பாடுகளை உருவாக்குபவர்கள். மாறாக, இலட்சிய வாசகர்களோ அன்றி ஆசிரியரின் சமகாலத்தில் வாழ்ந்த வாசகர்களோ, நாம் தற்காலிகமாக ஏற்கும் வாசகர்களும் இன்னொருவிதமான குறைகளை உருவாக்குகிறார்கள். எனவே அவர் ‘உட்குறிப்பேற்ற வாசகன்’ (Implied Reader) ஒருவர் தேவை என்கிறார். இவ்வித வாசகர், ஓர் இலக்கியப் பிரதி தனது விளைவுகளை உண்டாக்குவதற்குத் தேவையான அனைத்து இயல்புகளையும் கொண்டவர். அவரது முற்சார்புகள், அனுபவவாத, வெளிப்புற மெய்ம்மையால் அளிக்கப்பட்டவை அல்ல; பிரதியினால் மட்டுமே அளிக்கப்பெற்றவை. இப்படிப்பட்ட வாசகரை அமைத்துக்கொண்ட பிறகு, அவர் தமதுஅர்த்தத்தை எப்படி உருவாக்குகிறார் என்னும் செயல்முறை விளக்கம் தொடர்கிறது. ஆனால் இந்த அர்த்தங்கள், பலவிதமான தொலைவுத் தோற்றங்களை இலக்கியத்தில் அண்மைப்படுத்திக் காட்டுவதன் விளைவாக எழும் நிலைமைகளால், முழுதுமாக நிர்ணயிக்கப்படுவதில்லை. அதேசமயம் இவ்வர்த்தங்கள் முழுதுமாக அகவயப்பட்டவையும் அல்ல. ஏனெனில் பிரதியின் வடிவகுணாதிசயங்களும் வாசகனின் ஏற்பை நிர்ணயிக்கின்றன. எனவே வாசிப்புகள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவையும் அல்ல, முழு அளவில் மனம்போன போக்கானவையும் அல்ல.

மொழிக்கும் அனுபவத்திற்குமான தொடர்பினைப் பற்றி ஐஸரின் கொள்கையும் கருதுவதில்லை என்பது இதன் குறைபாடு. கற்பனைப் பதிவுகளை உருவாக்குவதில் அடிப்படையான கூறுகள் மனப்படிமங்கள் என்றும், மனப்படிமங்களைத் தூண்டுவதே பிரதியிலுள்ள சொற்களின் வேலை என்றும் ஐஸர் வாதிடுகிறார். இவ்வாறாக, ஒருபிரதியானது, வாசகரின் மனத்திற்குள் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவரது தனியனுபவத்தின் ஒரு பகுதியாக மாற்றப்படுகிறது. வாசிப்பு என்பது தற்காலிகமாகப் பழக்கமற்ற ஓர் அனுபவத்தைப் புதிதாக அறியும், அல்லது குறிப்பிட்ட காலத்திற்குத் தனது வாழ்க்கைமுறையிலிருந்து வேறுவித வாழ்க்கையை வாழும் ஒரு கல்விச்செயல்முறையாகும். ஆகவே இவரது கொள்கைமாதிரி, நாம் ஏற்கெனவே அறிந்த தொடர்புக்கோட்பாட்டு மாதிரியே ஆகும். வெளியீட்டுக்கொள்கையிலும், தனித்தவகைமாதிரியான வாசகக் கோட்பாட்டிலும் இலட்சிய வாசகர்கள் முன்வைக்கப்படுகின்றனர். அவர்களை நீக்கிவிட்டு, அவ்விடத்தில் ஓர் உள்ளார்ந்த ஆசிரியரையும், உள்ளுறையான வாசகரையும்அறிமுகப்படுத்தி, தமது தொடர்புமாதிரி (Communication model) எவ்வளவு தூரம் இடம் தருகிறதோ, அந்த அளவிற்கு ஒரு புதிய பகுப்பாய்வில் ஐஸர் ஈடுபட்டுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த வாசகர்கள்-தாராளவாதிகள், பல தரப்பட்டவர்கள், யாவரும் வாசிக்கக்கூடிய வாசிப்புமுறைக் கொள்கைகளின் ஓர் அற்புதமானநூலாக ஐஸரின் ‘வாசிப்புச்செயல்’ (Act of Reading) என்பது விளங்குகிறது. ஆனால் ஐஸரின் நூலும் நமக்கு வெகுபழக்கமான, மரபுசார்ந்த, எடுத்துக்காட்டான, வாசிப்புமுறைகளையே காட்டுகிறது. இங்கு நமக்குக் கிடைக்கின்ற, குறிப்பிட்ட சில கொள்கைகளின் தேர்ந்தெடுத்த பகுதிகளைக் கொண்டு, நாம் பார்த்த கொள்கைப் பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் தாண்டி, புதியவாசிப்பு முறைகளை உருவாக்கவேண்டும். இதற்கு பொதுப்புத்தியின் எடுகோள்களைக் கைவிட்டு, ஒருபுதிய கொள்கைச் சட்டகத்தை உருவாக்கவேண்டும். யதார்த்தவாதத்தின்மீது நடந்த தாக்குதல்களாக இந்த இயலில் நாம் குறிப்பிட்ட கொள்கைகள் எதுவும் அத்தகைய புதிய சட்டகத்தை உருவாக்கவில்லை. ஆனால் சசூருக்குப் பிந்திய மொழியியல், பொதுப்புத்திசார்ந்த கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவதால், அத்தகையதொரு நிஜமான தீவிர விமரிசனச் செயல்பாடு உருவாவதற்கு வழிவகுத்துள்ளது. (தொடரும்)


திருக்குறளில் பொருள் மயக்கம்

எந்த ஒரு கருத்தையும் தெளிவாகவும் தேற்றமாகவும் கூறுபவர் வள்ளுவர். எதையும் நறுக்குத் தெறித்தாற்போன்று சொல்லுபவர் அவர்.
-முனைவர் ச. அகத்தியலிங்கம், வான் தொடும் வள்ளுவம்.

இருபதாம் நூற்றாண்டின் திறனாய்வு வரலாற்றைப் பார்த்தால், அதன் முற்பகுதியில் ஆசிரியன்/படைப்பாளி செல்வாக்குப் பெற்றி ருந்தான்; அதன் பிறகு பிரதி செல்வாக்குப் பெற்றது; பிற்பகுதியில் ஆசிரியனின் மரணம் நிகழ்ந்து, பிரதிகள் பன்முக வாசிப் புக்குட்படுத்தப்பட்ட சமயத்தில், வாசகன் செல்வாக்குப் பெற்றான் என்பதைக் காண்கிறோம். இன்று பன்முகவாசிப்பு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழும் நமக்குப் பொருள்மயக்கம் என்பது ஒரு புதுமையான தலைப்பு அல்ல.

பொருள்மயக்கம் என்பது ஏதோ மயக்கமான நிலைக்கு வாசகனை ஆட்படுத்துவது அல்ல. அதாவது இருண்மை அல்ல. ஒரு பிரதிக்குப் பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன என்ற நிலையே பொருள்மயக்கம். சங்கப்பாக்களுக்காயினும் சரி, திருக்குறளுக்காயினும் சரி, தொல்காப்பியத்திற்காயினும் சரி, நமது உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட அர்த்தங்க ளைக் கூறுவதை அனுபவத்திற் கண்டிருக்கிறோம். இன்றைய நிலைப்பாட்டிற்கும் அவர்களுடைய நிலைப்பாட்டிற்கும் உள்ள வேற்றுமை ஒன்றுதான். மாறுபட்ட அர்த்தங்கள் ஒரு கவிதைக்கு உண்டு என்பதை எக்காலத்திலும் எவரும் மறுக்கவில்லை. ஆனால் பழங்காலத்தில் ஒரு கவிதைக்கு ஒரே ஓர் அர்த்தம்தான் உண்மையானதாக/சரியானதாக இருக்கச் சாத்தியம் உண்டு என்றும், அது தம்முடைய அர்த்தமே என்றும் பிற உரையாசிரியர்கள் பிழையாகப் பொருள் கொண்டனர் என்றும் வாதிடுவது வழக்கம். இன்றைய கவிதையியலில் நாம் அவ்வாறு கூறுவதில்லை. ஒரு கவிதையில் நாம் காணும் எல்லாவித அர்த்தச் சாத்தியப்பாடுகளும் உள்ளன, (அவற்றிற்குமேலும் உள்ளன), அவை எல்லாமும் தகுதியுடையனவே என்கிறோம். மேலும் ஏன் அப்படிப்பட்ட மாறுபட்ட அர்த்தங்கள் தோன்று கின்றன என்பதை ஆராய்கிறோம். பலவேறு அர்த்தங்களில் ஒன்றிற்கே முன்னுரிமை தந்து அதனை மட்டுமே சரியானது என்று சொல்வது நமது கருத்தியல் நிலைப்பாட்டை அடியாகக் கொண்டதே ஒழிய ஆசிரியனுடைய அல்லது பிரதியினுடைய நிலைப்பாடு அன்று என்றும் கொள்கிறோம்.

இலக்கியத்தில் பொருள்மயக்கத்தைப் பற்றி முதன்முதலில் பேசியவர், ஆங்கிலக் கவிஞரும் விமரிசகருமான வில்லியம் எம்சன் என்பவராவர். இவர் ஐ. ஏ. ரிச்சட்ஸின் மாணவர். Seven Types of Ambiguity, Some versions of the Pastoral போன்ற திறனாய்வு நூல்களை எழுதியிருக்கிறார். ஏழுவகைப் பொருள்மயக்கம் என்ற அவர்தம் நூலில் ஷேக்ஸ்பியரின் கவிதைகள், நாடகப்பகுதிகள் ஆகியவற்றை உதாரணமாகக் கையாண்டு, பொருள்மயக்கத்தை ஏழுவகைகளாகப் பகுத்து நோக்கியுள்ளார். இக்காலத்தில் நாம் ஏழு வகைகளாகத்தான் பகுக்கவேண்டும் என்பதில்லை. எம்சன் இலக்கிய ரீதியாகவே ஆய்வுசெய்தார். மொழியியலின்படி நாம் பகுத்து நோக்கினால் இன்னும் பல வகைகளைக் காண இயலும். (தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட ஆய்வுமுறைகள் கால்கொள்ள வில்லை என்பது வருத்தத்திற்குரியது.) பத்து அல்லது பன்னி ரண்டு வகைகளைக்கூடக் காண்பது இயலும். சான்றாக, சொல்அடிப்படையிலான பொருள்மயக்கம் (Lexical Ambiguity), தொடர்அடிப்படையிலான பொருள்மயக்கம் (Syntactic Ambiguity), பொருண்மை அடிப்படையிலான பொருள்மயக்கம் (Semantic Ambiguity) என அடிப்படையில் மூன்றாக அமைத்து, அவற்றுள் உட்பிரிவுகளாக இன்னும் பகுத்து நோக்க வாய்ப்பு உண்டு. என்றாலும், எம்சனின் கருத்துகளை மட்டுமே அறிமுகப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

எம்சன் புதுவிமரிசகர்கள் என்போர்க்கு முன்னோடி. அக்கால முறைப்படி இலக்கியப் பொருள் என்பது ஆசிரியன் மனத்தி லிருந்து தோன்றுவது என்றே காண்கிறார். ஆனால் அதேசமயம், புதுவிமரிசகர்களின் முறைப்படி இலக்கியத்தை நுணுகிஆழ்ந்து வாசித்தல் என்ற முறையைத்தான் கையாண்டிருக்கிறார். அவருடைய ஏழுவகைகளுக்கும் திருக்குறள் எவ்வாறு பொருந்தி வருகிறது என்பதைக் காணலாம்.

இங்கு எம்சனின் கருத்துகளை விளக்கத் திருக்குறட்பாக்களைச் சான்றாக எடுத்துக்கொண்டதற்கு ஒரு நோக்கம் உண்டு. திருக்குறளின் இலக்கியத்தன்மை பற்றிப் பல்வேறு சமயங்களில் கேள்வியெழுப்பப் பட்டுள்ளது. திருமணம் செல்வக்கேசவராயர், கமில் சுவலபில், க.நா. சுப்பிரமணியம் போன்ற சிலர் என் ஞாபகத்திற்கு வருகிறார்கள். உட்பொருள் சிறப்பானது என்ற முறையில் மட்டுமே திருக்குறள் பல சமயங் களில் ஆராயப்பட்டது. அதன் இலக்கியத்தன்மை பற்றிச் சரிவரப்பேசப் படவில்லை. மொழிபெயர்ப்பிலும் இதேநிலைதான். பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பினும், மொழிபெயர்ப்பில் கருத்துகளே முன்னிற்பதால், இதில் என்ன சிறப்பிருக்கிறது என்று பிறமொழியினர் கேட்பதை நானே கண்டிருக்கிறேன். இந்தநிலை ஓரளவு தவிர்க்கமுடியாதது என்றாலும், பொருள்மயக்கத்தை அடிப்படை யாகக் கொண்ட ஆய்வுகள் திருக்குறளின் இலக்கியத்தன்மை பற்றி நாம் விரும்பும் கருத்துகளை முன் வைக்கவும் பயன்படும்.

எம்சன் பகுத்துக்காட்டிய ஏழுவகை அர்த்தமயக்கங்களில் முதல்வகைப் பொருள் மயக்கம் உருவகம். ஒரே மாதிரி இருப்பதாகக் கருதப்படுகின்ற, ஆனால் வெவ்வேறு பண்புகள் கொண்ட இருபொருட்கள் ஒன்றிற் கொன்று பதிலீடாகப் பயன்படுத்தப்படும்போது நிகழ்வது. இதனை ஆங்கிலக் கவிஞர்கள் பயன்படுத்திய metaphysical conceit என்பதற்கு ஒப்பாகச் சொல்லலாம். (The first type of ambiguity is the metaphor, that is, when two things are said to be alike which have different properties.)
இதற்கு முதல் திருக்குறளையே ஓர் உதாரணமாகக் காணலாம்.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்பது முதற்குறள். இங்கு அகரம் என்பது ஆதிபகவனுக்கு உருவகமாக நிற்கிறது. அகரத்தின் பண்புகள் வேறு, இறைவனின் பண்புகள்வேறு என்பது வெளிப்படை. எந்தவிதத்திலும் இரண்டும் ஒப்புமை உடையன அல்ல. இவ்வாறு வேறுபட்ட பொருட்களை ஒப்புமைப்படுத்துவதைத்தான் metaphysical conceit என்று ஆங்கி லத்தில் கூறுவர். இக்குறளுக்குப் பொருளெழுதிய அனைவரும் அகரம் என்பதற்கும் இறைவனுக்குமான ஒப்புமைகளைத் தேடி யுள்ளனர். அகரம் எல்லா எழுத்துகளிலும் நிறைந்திருப்பதுபோல, இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான். அல்லது அகரம் எல்லா எழுத்துகளும் பிறக்க ஆதாரமாக இருப்பதுபோல, இறைவன் உயிர்களுக்கு ஆதாரமாக இருக்கிறான். அல்லது அகரத்திலிருந்து பிற எழுத்துகள் தோன்றுவதுபோல இறை வனிலிருந்து உயிர்கள் அனைத்தும் தோன்றுகின்றன என்றெல்லாம் பொருளுரைத்துள்ளனர். இவ்வாறு எழுதுபவர்க ளுடைய மனப்போக்குகளையும் மதங்களையும் கருத்தியல் சார்புகளையும் இந்த அர்த்தங்கள் காட்டுகின்றன. வாசகநோக்குத் திறனாய்வில், எந்த ஒரு அர்த்தத்தையும் ஒவ்வாதது என்று நாம் குறைகூறுவதில்லை. அல்லது ஆசிரியரின் கருத்தை ஒற்றைப் படையாகச் சுருக்குவதும் இல்லை. எல்லா வகையான வாசிப்புக ளையும் ஏற்றுக்கொள்கிறோம். (நமதுநோக்கில் சிலவகை வாசிப்பு களுக்கு முன்னுரிமை தருவது (preferred reading) தவிர்க்க வியலாதது).

இங்கு ஏற்கெனவே மூன்று அர்த்தங்கள் இக்குறளுக்குத் தரப்பட்டுவிட்டன. இன்னும் ஓர் அர்த்தத்தை இங்குக் குறிப்பிட்டு மேற்செல்லலாம். அகரத்திலிருந்து பிற எழுத்துகள் பிறக்கின்றன, அல்லது அகரம் பிற எழுத்துகளுக்கு ஆதாரமாக நிற்கிறது என்பதெல்லாம் பழங்காலக்கற்பனை என அறிவியலார் கொள்வர். உலகிலுள்ள பலமொழிகளில் அகரம்தான் எண்கணக்கில் (அரிச்சுவடியில்) முதல்எழுத்து. அதாவது வரிசை முறையில் முதலில் நிற்பது. அதுபோல இறைவன் அல்லது பகவன் என்பவனும் மக்கள் வரிசையில் முதலில் நிற்கக்கூடியவன் என்று கொள்ளலாம். திருவள்ளுவர் சமணர், பௌத்தர் என்று சொல்லக் கூடியவர்கள் உள்ளனர். சமணர்களுக்கு ஆதி தீர்த்தங்கரர் போல, பௌத்தர்களுக்கு புத்தர் போல மக்கட்கூட்டத்தில் முதலாவதாக நிற்பவரை-நாம் பின்பற்றி நிற்க வேண்டியவரை இறைவன் என்று சொல்லலாம். இப்படிச் சொல்லும்போது இன்னொரு நன்மையும் இருக்கிறது. இறைவன் என்ற கருத்தை வைத்து, நாம் இறைவனை ஏற்றுக்கொள் ளாதவர்களைப் புறந்தள்ள வேண்டியதில்லை. திருவள்ளுவர் ஆத்திகர்தான் என்று கொண்டாடவேண்டிய அவசியமுமில்லை. இப்பொருள்மயக்கம் ஏற்பட உருவக நிலையே காரணம் என்பது எம்சன் கருத்து. ஆனால் ஆதிபகவன் என்ற தொடருக்கு வெவ்வேறு பொருள் கொள்பவர்களும் உள்ளனர். நான் இப்போது கூறிய அர்த்தத்திற்கு ஆதி என்ற சொல்லும், முதல என்ற சொல்லும் முக்கியமாகக் கருத்தினை வழங்குகின்றன. எந்த வகையில் ஆதி என்ற கேள்வி எழுப்பப்பட்டு, அதற்கு விடை காணும் நிலையிலேயே (வரிசைமுறை) இந்த அர்த்தம் அமைந்தது.

திருவள்ளுவர் மேம்பட்ட மனிதரைத்தான் இறைவன் என்று கூறுகிறார் என்பதற்கு வேறு ஆதாரங்களும் காட்டலாம். திருவள்ளுவர் கடவுள் என்ற சொல்லை எங்கும் பயன் படுத்தவில்லை. இயவுள் அல்லது கடவுள் என்ற சொல்லுக்குக் கடந்தும் உள்ளும் இருப்பவன் என்ற அர்த்தத்தைவிடக் கடவுகின்றவன், இயக்குகின்றவன் (அதனால்தான் இயவுள் என்ற சொல்லும் வந்தது) என்ற பொருள் பொருந்தக்கூடும். இந்த மனோதீத (transcendental) கருத்தைப் பயன்படுத்த வள்ளுவர் விரும்ப வில்லை என்று ஆதாரத்துடனே சொல்லலாம். தெய்வம் என்ற கருத்து வேறு. உலகத்தில் வாழ்வாங்கு வாழ்பவனை வள்ளுவர் தெய்வம் என்பார்.)

மேலும் தேவைப்படின் இதற்கு ஆதாரமாக இன்னொரு திருக்குறளையும் எடுத்துக்காட்டலாம். ‘மலர்மிசை ஏகினான் மாணடிசேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்’ என்பது அக்குறள். இங்கும் மலர்மிசை ஏகினான் என்பதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் கூறப்படுகின்றன. இது புத்தரை அல்லது ஆதிதீர்த்தங்கரரைக் குறிக்கும் என்பதற்குச் சான்றுகள் காட்டமுடியும். புத்தர் மலர்மிசை ஏகியவர் என்பதற்குச் சான்று:
போதிசத்துவர் குழந்தையாகத் திருவவதாரம் செய்தபோது அநாகாமிக பிரமதேவர்கள் நால்வரும் அக்குழந்தையைப் பொன் வலையிலே ஏந்தினார்கள். சதுர்மகாராஜிகதேவர்கள் நால்வரும் அவர்களிடமிருந்து அக்குழந்தையை ஏற்று அமைச்சரிடத்தில் கொடுத்தார்கள்.அப்போது குழந்தையாகிய போதிசத்துவர் தரையில் இறங்கினார். அவர் அடிவைத்த இடத்தில் தாமரைமலர்கள் தோன்றி அவர்பாதத்தைத் தாங்கின. அக்குழந்தை அந்தப் பூக்களின்மேலே ஏழு அடி நடந்தது.
-மயிலை சீனி. வேங்கடசாமி, புத்தரின் வரலாறு, 8.

எம்சன் கூறும் அடுத்தவகைப்பொருள்மயக்கம், அதாவது இரண்டாவதுவகைப் பொருள் மயக்கம் என்பது, இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட அர்த்தங்கள் ஒரே வார்த்தை அல்லது தொடரால் சொல்லப்படும் நிலை. இதனை எம்சன் இரண்டு உருவகங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தும் தன்மை என்கிறார். (Two or more meanings are resolved into one. Empson characterizes this as using two different metaphors at once.) இதற்குப் பின்வரும் திருக்குறளை உதாரணமாகக் காணலாம்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543)
வரன்முறையாக நூற்கும் என்பதை நூலுக்கும் என்றே பொருள்கொண்டு வந்துள்ளனர். நூலுக்கும் அறத்துக்கும் என எண்ணும்மையாக வைத்துநோக்கியுள்ளனர். நூற்றல் என்பதை வினைச்சொல்லாகவும், நூற்கும் என்பதைப் பெயரெச்சமாகவும் காணலாம். அந்தணர் நூற்கின்றனர். எதை? அறத்தை. அதாவது நமக்குச் சொல்லப்படும் ‘அறம்’ என்பது அந்தணர் நூற்றது அல்லது உருவாக்கியது. (நூலாக-ஆடையின் நூல், படிக்கும் நூல் என்னும் இரண்டு அர்த்தங்களிலும்-உருவாக்குவதைத்தான் நூற்றல் என்கி றோம்). அந்தணர் நூற்ற அறத்திற்கும் ஆதியாக (முன்னால், அடிப்படையாக) நிற்பது, பயன்படுவது-மன்னவன் கோல். (கொல் என்பதன் முதனிலை நீண்ட தொழிற்பெயர் கோல். எனவே கோல் என்பது கொலைக் கருவி என்று பொருள்படும். கோறல்- கொல்லுதல், ‘கள்வனைக் கோறல் கொடுங்கோலன்று’ என்பது சிலப்பதிகாரம்).

ஆகவே அந்தணர் நூற்கின்றார்கள்; மன்னவர்களுடைய ‘கோலுக்கு’ உடன்பாடாக. அதாவது ஆதிக்கத்திலுள்ளவர்க ளுக்கேற்ப அறத்தை அமைத்துத் தருகிறார்கள். இதுதான் பழங்கால (Feudal) அறம். இங்கு நூற்றல், கோல் என்ற இரண்டுமே உருவகங்களாக நிற்கின்றன. எனவே எம்சனுடைய இரண்டாவது வகைக்கேற்றதாக அமைகிறது இக்குறள்.
எம்சன் கூறும் மூன்றாவது வகைப் பொருள்மயக்கம் என்பது, சூழலால் ஒன்றிணைக்கப்படுகின்ற இரண்டு கருத்துகள் ஒரே வார்த்தையில் சொல்லப்படும் தன்மை. (Two ideas that are connected through context can be given in one word simultaneously.) இது ஒருவகையில் சொல்லடிப்படையிலான பொருள்மயக்கம்தான்.
எண்பொருளவாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு. (424)
என்ற திருக்குறளை இதற்கு உதாரணமாகக் காணலாம். சூழ லினால் தோன்றும் இரண்டுகருத்துகள் ஒரேவார்த்தையில் சொல்லப்படவேண்டும் என்பது எம்சன் இங்குக் கூறும் அடிப்படை. எந்த இலக்கியத்திலும் இம்மாதிரிப் பொருள் மயக்கங்கள்தான் அதிகமாகக் காணப்படும் என்பதுதெளிவு.

எண்பொருளவாக-என்று வள்ளுவர் கூறுவதில் அடிப்படையி லே இரண்டுவித அர்த்தங்கள் இருப்பதை உரையாசிரியர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். எண், ‘எள்’ என்ற வேர்ச்சொல் லிலிருந்து பிறக்கிறது. ‘எண்’ என்ற இன்னொரு வேர்ச்சொல் லிருந்து பிறப்பதாகவும் கொள்ளலாம். முதல் அடிப்படையில் பார்த்தால் எளியபொருளவாகத் (தான்) எல்லோருக்கும் செல்லு மாறு சொல்லி, பிறர் கூறியவற்றில் நுண்பொருள் காணக்கூடியது அறிவு என்று வள்ளுவர் கூறுவதாகப் பொருள்படும். எண்பொருள் என்பதற்கு எளியபொருள் என்று இங்கே கொள்கிறோம்.
இன்னொரு அடிப்படையில் பார்த்தால், எண்ணக்கூடிய (நினைத்துப்பார்த்து மகிழக் கூடிய, திரும்பத் திரும்ப எண்ணிப் பார்க்கக்கூடிய) அரியபொருளைப் பிறர்க்குச் செல்லுமாறு சொல்லி, பிறர்கூறியதிலும் அவ்வாறே அரியபொருளைக் காணக் கூடியது அறிவு என்று சொல்லலாம். இந்த இரண்டு அர்த்தங்க ளுமே பெரும்பாலும் அனைவர்க்கும் உடன்பாடானவையாகத்தான் தோன்றும்.
எம்சன் கூறுகின்ற நான்காம்வகைப் பொருள்மயக்கத்திற்குச் செல்வோம். ஒருபிரதிக்கு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கலாம். அவை ஆசிரியர் மனத்தின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்துமாறு அமைந்திருக்கும். (Two or more meanings that do not agree but combine to make clear a complicated state of mind in the author.) இதற்கு உதாரணமாக
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தானிடை.
என்ற குறளைக் காணலாம். இத்திருக்குறளில் அறத்தாறு இது என வேண்டா என்ற ஒரு முழுவாக்கியமும், சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை என்ற குறை வாக்கியமும் அமைந்துள்ளன. இந்தமாதிரி வாக்கிய அமைப்பு திருவள்ளுவர் சிந்தனையின் சிக்கலான அமைப்பைக் காட்டுகிறது. “அறத்தின்வழி இது தான் என்று சொல்லவேண்டாம்” என முத்தாய்ப்பாக ஒரு கருத்தைச் சொல்ல முற்படுகிறார். இரண்டாவது வாக்கியத்தில் இதற்கு உதாரணம் தரவேண்டும். ஆனால் தாம்கூறவந்த உதாரணத்தில் அவருக்கே ஐயம் தோன்றி விடுகிறது. உதாரணம், அவர் அன்றாடம்காணும் காட்சி ஒன்றுதான். ஒருவன் பல்லக்கில் அமர்ந்து செல்கிறான். பல்லக்கைச் சிலர் தூக்கிச்செல்கின்றனர். உதாரணம் சரியா என்ற ஐயம் தோன்றியதனால் அந்த வாக்கியத்தைமுடிக்காமல் குறைவாக்கியமாக விட்டுவிடுகிறார். இடை என்றால் ‘இடையில்’ என்றுதானே அர்த்தம்? “பொறுத்தவனுக்கும் ஊர்ந்தவனுக்கும் இடையில்” என ஒரு ‘தொடராக’ (phrase), வினைச்சொல் இன்றிக் குறைவாக்கியமாக இது நிற்கிறது. முடிக்கவில்லை. எம்சனின் நோக்குப்படி, முடிக்காமைக்கு ஆசிரியரின் மனத்திலுள்ள சிக்கல்தான் காரணம் எனக்கூறலாம்.

வேறொரு சமாதானமும் கூறலாம். இடை என்பதைப் பெயர்ச்சொல்லாக, வித்தியாசம் என்ற அர்த்தம் கொண்டதாக எடுத்துக்கொண்டால், “அறத்தாறு இது எனவேண்டா” என்ற தொடரிலுள்ள இது என்ற சுட்டு பின்வருகின்ற “பொறுத்தானுக்கும் ஊர்ந்தானுக்கும் உள்ள வித்தியாசம்” என்பதைக் குறிக்கிறது எனலாம். இது என்பது இங்கு ஆதாரமான சொல். அதற்கு ‘இன்னது’ எனப் பழைய உரையாசிரியர்கள் பொருள்கொண்டு, “அறத்தின் வழி இன்னதுதான் என்று மயங்கவேண்டாம், பல்லக்கில் அமர்ந்து செல்பவ னுக்கும் தூக்கிச் செல்பவனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் தெரியவில்லையா?” என்று கேட்கிறார்கள். ஆனால் இது என்பது வித்தியாசத்தைத்தான் குறிக்கிறது என்று கொண்டால், “அறத்தாறு இந்த வித்தியாசத்தால் புலப்படுகிறது என்று மயங்காதே” என்ற (நவீன) பொருள் கொள் ளத்தோன்றும்.
ஆனால் இவையிரண்டையும் ஒரேசமயத்தில் யோசித்தத னால்தான் ‘இடை’ (வித்தியாசம், இடையில்) எனப் பெயர்ச் சொல்லாகவும், இடைச்சொல்லாகவும் பயன்படுமாறு திருவள் ளுவர் அமைத்துவிட்டார் என்று தோன்றுகிறது.

சிலசமயங்களில் ஆசிரியர் எழுதும்போதே தனது சிந்த னையைக் கண்டுபிடிக்கலாம். அவ்வாறிருக்கும்போது ஆசிரியர் கூறும் இருகூற்றுகளுக்கிடையில் ஓர் உவமை அல்லது உருவகம் பொதுவாக அமையும். (When the author discovers his idea in the act of writing. Empson describes a simile that lies halfway between two statements made by the author.) இது எம்சன் கூறும் ஐந்தாவது வகைப் பொருள்மயக்கம். இதற்கும் திருக்குறளில் ஆதாரமிருக்கிறதா என்றுகாண்போம். ஏனெனில் நீண்ட கவிதைப் படைப்புகளில் ஆசிரியர் தமது கருத்துகளைத் தாம் கண்டு பிடித்துக்கொண்டே செல்லவும் அதற்கான உவமை உருவ கங்களைப் பெய்யவும் வாய்ப்புண்டு. திருக்குறள்போன்ற ஒன்றே முக்காலடிச் செய்யுளில் தனது சிந்தனையை ஆசிரியர் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை. முன்னரே சிந்தித்துத் தெளிந்த தைத்தான் கூறமுடியும். என்றாலும் ஏதேனும் சான்று கிடைக்கிறதா என்று நோக்குவோம்.
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக் கொண்டன்னதுடைத்து. (1052)
என்பதை ஒருசார் காணலாம். ‘நோக்கினாள்’ என்பதை வினைமுற்றாகத்தான் முதலில் கொள்ளவேண்டும் என்ற நோக்கினை விட்டுவிடுவோம். ‘நோக்கினாள்’ – நோக்கத்தைக் கொண்டவள், அல்லது நோக்கத்தக்க அழகுடையவள் என்றும் பொருள்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்டவள் நோக்குதல் சாமானியமான விஷயமாக இல்லை. அல்லது அப்படிப் பட்டவளை நோக்குவதும் சாமானியமான விஷயமாக இல்லை. இதற்கு என்ன உவமையைப் பயன்படுத்துவது? “அணங்குகொல் ஆய்மயில்கொல்லோ” என்ற குறளிலும் அணங்கைப் பெண்ணிற்கு (அணங்கு என்பது பழங்காலத்தில் தாக்கிவருத்துகின்ற ஒரு தெய்வப்பெண், அல்லது இக்காலக் கற்பனையில் மோகினிப் பேய்-அதனால்தான் இக்காலத் திரைப்படப் பாடல்களில் பெண்ணைக் காதல்பேய் என்றும் பிசாசு என்றும் வருணிக்கின்றனர்) உருவகமாக்கினார். இங்கு அதற்கும் ஒருபடி மேலே செல்லவேண்டும் என்று கருதித், ‘தாக்கு’ என்ற அடையையும், ‘அந்த அணங்கு சேனையைக் கொண்டுவந்தாற் போல’ என்ற உவமையையும் கையாள்கிறார். அணங்கு தனியாக வந்தாலே ஆபத்து. இங்கோ ஒரு சேனையையும் கொண்டு வருகிறாள் அந்த மோகினி. தானே தாக்கவல்ல அணங்கு ஒரு தானையையும் கொண்டுவந்தது போலும் என்று முடிக்கிறார். (இதற்கு மேலும் தானைக் கொண்டது என்பதற்குப் பலவேறு அர்த்தங்கள் உரைக்கமுடியும்; நீங்களே முயன்று பார்த்துக் கொள்ளலாம்.) இங்கு தாக்கு என்ற அடை, அணங்கு என்ற சொல், அவ்வணங்கு தானையைக் கொண்டுவருதலாகிய செயல்உவமை ஆகிய அனைத்தும் போகிறபோக்கில் – ஆசிரியர் சொல்லத் தொடங்கி விட்டுத் தம் சிந்தனையைக் கண்டுபிடித்துக்கொண்டே செல்லும் பாங்கில் அமைந்துள்ளன.

ஆசிரியர் கூறும் கூற்று அர்த்தப்படுத்த முடியாததாக அமைந்து, அப்போது வாசகர் தாமே ஒரு கூற்றை உருவாக்கிக் கொள்ள நிர்ப்பந்தப்படுத்தப்படும் நிலை. அப்போது அது பெரும்பாலும் ஆசிரியர் கருத்துக்கு மாறுபட்டுத்தான் காணப்படும். (When a state ment says nothing and the reader is forced to invent a statement of their own, most likely in conflict with that of the author.) இது எம்சன் கூறும் ஆறாவது வகைப் பொருள்மயக்கம். திருக் குறளில் இதற்கு நிறைய உதாரணங்களைக் காணமுடியும். சான்றாக ஒன்று.
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு. (520)
பொதுவாகக் ‘கோடுதல்’ என்றால் சாய்தல், வளைதல், வஞ்சகம் செய்தல், மாறுபடுதல் என்றெல்லாம் அர்த்தம் உண்டு. கோடாமையை ஓர் அணி என்றே வள்ளுவர் கூறுவார். (‘ஒருபால் கோடாமை சான்றோர்க்கணி’). ஆனால் இங்கு “வினைசெய்வான் கோடாமையை (நல்ல பண்பை) உலகம் கொள்ளாது” என்றால் என்ன பொருள்? “அப்படிப்பட்டவனை மன்னவன் நாடுக” என்றால் என்ன அர்த்தம்? இப்படி யெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன. எனவே ஆசிரியர் கூற்று, தானே நேராக அர்த்தப்படுவதாக அமையவில்லை. இம்மாதிரிச் சமயங்களில் உரையாசிரியர்கள் ‘புகுந்து விளையாடுவதைக்’ காணலாம்.

“வினைசெய்வான் கோடாது ஒழிய, உலகம் கோடாது. ஆதலால் அரசன் அவன் செயலை நாடோறும் நாடுக” என்பது பரிமேலழகர் உரை. “கோடாமை, உலகம் கோடாது” என்பதற்குக் “கோடாமையை ஒழிய உலகம் கோடாது” என்று எதிர்மறைப் பொருள் எப்படி எடுக்கமுடியும்?
காளிங்கர், இன்னும் விரிவாக, “வினைசெய்வான் கோடாமை யால் ஒழிய, உலகு கோடாது, எனவே மன்னன் அவன் செயலை நாடுக” என்கிறார். எனவே இங்கெல்லாம் திருவள்ளுவரின் கருத்துக்கு மாறாக உரையாசிரியர்கள் உரைக்கிறார்கள், அல்லது அவரது சிந்தனைக்குமாறாக இவை அமைகின்றன என்று எம்சன் நோக்கவேண்டும் என்பார். அதைவிட, பிரதியில் இருக்கும் சொற்களுக்கு அப்பால் சென்று தாங்கள் விரும்பும் சொற்களை, தொடர்களை இணைத்துப் பொருள் கூறுகிறார்கள் என்பது பொருத்தமாகஅமையும். மேலும் “வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு” என்ற தொடருக்கும், “மன்னன் நாடோறும் நாடுக” என்ற தொடருக்கும் என்ன இணைப்பு இருக்கிறது என்பதும் தெரியவில்லை.

ஆசிரியரின் மனத்தில் – சிந்தனையிலுள்ள பிளவை வெளிப் படுத்தும்விதமாக இரண்டு எதிரான சொற்கள் சூழலில் நிற்கும் நிலை (Two words that within context are opposites that expose a fundamental division in the author’s mind) என்பது எம்சன் கூறும் இறுதிப் பொருள்மயக்க இயல்பு. இதற்கும் திருக்குறளில் நிறைய உதாரணங்களைக் காணமுடியும். சான்றாக,
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்.
முன்பே ‘அறத்தாறிதுவென வேண்டா’ என்ற குறளின் உரையில் கூறியதுபோல, மீண்டும் ஆசிரியருக்கு (வள்ளுவருக்கு) ஓர் ஐயப்பாடு இருந்துகொண்டே இருக்கிறது. இத்திருக்குறளிலும் அது வெளிப்படுகிறது. இரண்டு எதிரான தொடர்களாக இங்கே அவ்வியநெஞ்சத்தான் ஆக்கம் – செவ்வியான் கேடு என்பவை அமைகின்றன. இதனை அறத்தின் தீர்ப்பு என்று கொள்வதா, அல்லது “ஆருயிர் முறை வழிப்படூஉம்” என்று எடுத்துக்கொண்டு அமைதியடையவதா? இப்படிப்பட்ட ஒரு பிளவுச்சிந்தனை திருவள்ளுவருக்கு இருக்கிறது. எனவே முடிவுகூற இயலாமல் “நினைக்கப்படும்” என்று சொல்லிவிட்டார். எம்சன் கூறியதுபோல இருமை முரண் மட்டுமல்ல, “நினைக்கப்படும்” என்ற முடிவுத் தொடரும் திருவள்ளுவரின் தர்மசங்கடத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஏனென்றால் நன்மைசெய்தோர்க்கு நன்மைதான் ஏற்படுகிறது என்று எவராலும் சொல்லமுடியாது. நன்மை தீமை என்பன சமூக வாழ்க்கைக்கென ஏற்படுத்தப்பட்ட கற்பனைகள். உண்மையில் இயற்கையில் நன்மை தீமை என்பன உண்டா என்பது கேள்விக்குரியது. இயற்கையில் ஒட்டுமொத்தமான பேரழிவு ஏற்படும்போது அழிந்தவர்களில் எத்தனைவித மதத்தவர்கள், எத்தனைவிதக் கோட்பாட்டாளர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள்? அவர்கள் அனைவரும் ஒன்றாக அழிவது அறத்தின் பாற்பட்டதா? சமூகவியல் நோக் கிலும். தனிமனிதநோக்கில் அறம் வேறு; மக்கள்திரள் என்று நோக்கும்போது அந்தஅறம் காணாமற ்போய்விடுகிறது. அதனால்தான் தனிமனிதனைக் கொலை செய்வதற்கு தண்டனை கொடுக்கும் சட்டம், ஒட்டுமொத்த மக்கள்திரளைக் கொல்வதற்கு வீரப்பதக்கம் தருகிறது. அதனால்தான் அறத்துப்பாலில், தனிமனித நோக்கில் கொல்லாதே என்றுகூறும் வள்ளுவர்கூட, பொருட்பா லில், மனிதக் கூட்டத்திற்கான நோக்கில், “பைங்கூழ் களைகட்டதனோடு நேர்” என்கிறார் போலும்.

“நினைக்கப்-படும்” என்று இத்தொடரை இரண்டு சொற்களாகப் பிரித்து, ‘படும்’ என்பதற்கு அழியும், என்று பொருள் சொல்வார் உண்டு. ஆனால் அங்கும் யார் நினைக்க, அவ்வியான் ஆக்கம் ‘படும்’, செவ்வியான் கேடு ‘படும்’ என்று தெளிவாகவில்லை.
இதுவரை எம்சன் கூறிய ஏழுவகைப் பொருள்மயக்கங்க ளையும் ஒருசார் எளிமைப்படுத்திப் பார்த்தோம். ஏழாவது பொருள்மயக்கத்தைக் கூறவரும் நிலையில் எம்சன் எல்லாக் கூற்றுகளுக்குமே பொருள்மயக்கம் உண்டு, எனவே பொருள் மயக்கம் எல்லா இலக்கியங்களுக்கும் தலையாய இயல்பு என்று வாதிடுகின்றார். பலசமயங்களில் ஆசிரியன் கருத்துக்கு மாறாகவே மொழி தன்னிச்சையாக இயங்கி, மாறுபட்ட அர்த்தங் களை உருவாக்கிவிடுகிறது. ஏனெனில் மொழி நமக்குக் கட்டுப்பட்டது அன்று. நாம்தான் மொழிக்குக் கட்டுப்பட்டி ருக்கிறோம். அதனால் பல சமயங்களில் விபரீத அர்த்தங்களும் உருவாகக்கூடும்.

எனது நூல்களில் குறுந்தொகையில் பொருள்மயக்கம் பற்றி மிகுதியாகப் பேசியிருக்கிறேன். குறுந்தொகைக் கடவுள் வாழ்த் துப்பாட்டில், “சேவலங் கொடியோன் காப்ப, ஏம வைகல் எய்தின்றால் உலகே” என வருகிறது. கொடியவன் காப்பதால் உலகம் பாதுகாப்பான ஆட்சியை அடையவில்லை என்ற கருத்தும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட விபரீதப் பொருள்மயக்கங்களையும் இலக்கியங்களில் காணலாம். திருக் குறளில் கூட, “வறியார்க்கொன்று ஈவதே ஈகை” அதாவது வறியவர்களைக் கொன்று (இல்லாமற் செய்து) ஈவதே ஈகை என்ற அர்த்தம் வருகிறது. தவறில்லை, ஏனென்றால் வறியவர்களுக்கு ஈவதில் மேல்-கீழ் என்ற வேறுபாடு இருக்கிறது. வறியவர்கள் இல்லாதநிலையில் ஈவதுதான் உண்மையான ஈகையாக இருக்கமுடியும், பயனை எதிர் நோக்காததாக இருக்க முடியும் (என்று சமாதானம் சொல்லலாம்).

இம்மாதிரி உதாரணங்களில் மொழி எழுதுபவனின் கையையும் மீறிச் செயல்படுவதைக் காணமுடியும். சமகாலச் சிந்தனை முறையை மொழியில் அமைப்பது என்ற கட்டுப்பாட்டிற்குள் மட்டுமல்ல, காலப்போக்கிலும் நாம்தான் மொழிக்குக் கட்டுப் பட்டிருக்கிறோம். மனிதனுக்கு முன்னும் மொழி இருந்தது. பின்னும் மொழி இருக்கப்போகிறது. காலநீரோட்டமாகிய மொழிக்கு நடுவில் மனிதன் பிறக்கிறான், வாழ்கிறான், இறக் கிறான். எனவே “நான் மொழியைக் காப்பாற்றிவிட்டேன்”, அல்லது “மொழிக்குத் தொண்டுசெய்தேன்” என்று கூறுபவர்களைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. மொழி நம்மைக் காப்பாற்றுகிறது, மொழி நமக்குத் தொண்டுசெய்கிறது என்று சொல்வது (தமிழாசிரியர்களுக்கு மட்டுமல்ல, எவருக்குமே) பொருந்தும். நமது கட்டுப்பாட்டையும் மீறி மொழி இயங்குகிறது, அதனால் பல்வேறுவித அர்த்தங்கள் எப்போதும்- பேச்சிலும் எழுத்திலும்- விளைகின்றன. எத்தனை பேர், “நான்பேசியதை அவன் புரிந்து கொள்ளவில்லை”, “தவறாகப் புரிந்துகொண்டான்”, “வேறுஅர்த்தம் எடுத்துக்கொண்டான்” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம்? இன்னொருவர் நமது கூற்றைத் தவறாகப் புரிந்துகொள்கிறார் என்பது தொடர்புச்செய்கைத் தோல்வி (Communication failure) என்பது மொழியை நமது கருவியாகப் பார்க்கும் செயல். வாசற்படியில் நாம் இடித்துக்கொண்டு, அது இடித்தது என்று சொல்வதுபோல்தான். இதுவும் ஒரு தலைகீழாக்கல்தான். மாறாக, மொழியின் இயல்பே பல்வேறு அர்த்தங்களை உருவாக்குவதா கத்தான் இருக்கிறது; நமக்குப்பிடித்த அர்த்தத்தைத்தான் நாம் எடுத்துக் கொள்கிறோம் என்றால், “நாம் மொழியின் கருவியாக இருக்கிறோம்” என்று பொருள். இதுதான் நாம் வரலாற்றில் காண்பது.


ஊன்றல்களும் சறுக்கல்களும்

oondralgalum-sarukkalgalum1பழந்தமிழ் இலக்கியங்களான சங்கச்செய்யுட்களில் பத்துப்பாட்டு என்னும் தலைப்பில் பத்து நீண்ட பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் அயல் நாட்டினர் குறுந்தொகை நற்றிணை போன்றவற்றின் செய்யுட்களை மொழி பெயர்ப்பதில் காட்டிய ஆர்வத்தைப் பத்துப் பாட்டுச் செய்யுட்களை மொழி பெயர்ப்பதில் காட்டவில்லை. இதற்கு அகக்காரணங்களும் இருக்கலாம், புறக்காரணங்களும் இருக்கக்கூடும், புறக்காரணம் என்பது பாட்டின் நீளம், தனது இயலாமை போன்றவற்றை ஆசிரியன் கருதுவதாகும். அகக்காரணம் என்பது நூலின் இலக்கியத் தன்மை குறித்த கருத்துகளாகும். இலக்கியாசிரியர் பலர், பத்துப்பாட்டின் நீண்ட பாக்களை விடக் குறுந்தொகை, நற்றிணை போன்ற தொகைநூல்களின் சிறுபாக்களே சுவை நிறைந்தவை என்று கருதுகின்றனர்.

oondralgalum-sarukkalgalum2எட்டுத்தொகையில் பரிபாடல்கள்தான் நீளமானவை. அவையும் குறைவாகவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்புத் திறன் வாய்த்திருந்த ஏ.கே. ராமானுஜன் போன்ற மொழிபெயர்ப்பாளர்களும் ஏனோ பத்துப் பாட்டில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை (The Poems of Love and War என்னும் அவர் நூலில் திருமுருகாற்றுப்படையிலிருந்து மட்டுமே சில பகுதிகள் மொழிபெயர்த்துச் சேர்க்கப்பட்டுள்ளன). ராமானுஜன்கூட, பத்துப்பாட்டின் பிற பகுதிகளை விட்டு திருமுருகாற்றுப் படையின் பகுதிகளைத் தேர்ந்தெடுத்ததற்கு அதன் இலக்கியச் சிறப்பு மட்டுமே காரணமன்று. முருகன் குறித்த அதன் பொருண்மையும் இன்னொரு காரணம்.

தமிழறிஞர்கள், குறிப்பாகச் சைவசித்தாந்த மரபில்வந்த தமிழறிஞர்கள்தான் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்பில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இவர்களுள் ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை, ஜே.எம். சோமசுந்தரம்பிள்ளை போன்றோர் அடங்குவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.வி. செல்லையாவும் இப்பட்டியலில் சேர்வார். ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை பத்துப்பாட்டில் ஐந்தினை மட்டுமே மொழிபெயர்த்தார். ஜே.வி.செல்லையா, பத்துப்பாட்டுகளையுமே The Ten Tamil Idylls என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இன்று கிடைக்கும் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்புகளில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது யாழ்ப்பாணம் ஜே.வி. செல்லையாவின் மொழி பெயர்ப்பைத்தான். எளிய நடையும், தக்க நிகரன்களை (பொருத்தமான சொற்களை)க் கையாளலும், தொடரமைப்பு சிதையாமல் ஆற்றொழுக்காக மொழிபெயர்த்துச் செல்லுதலும், ஆங்கிலத்தின் எளியகவிதை (blank verse) யாப்பினைத் திறம்படக் கையாளலும் அவரது சிறப்புகள். செல்லையாவின் மொழிபெயர்ப்பு எளியதாகவும், கவிநலம் கொண்டதாகவும் அமைந்திருப்பது அதன் முக்கியச் சிறப்பு. சங்க இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் ராமானுஜனுக்கு நல்ல முன்னோடி என்னும் சிறப்பினைப் பத்துப்பாட்டு மொழிபெயர்ப்பைக் கொண்டு செல்லையாவுக்குத் தரலாம்.

செல்லையா மிகக் கடினமான வார்த்தைகளையோ தொடரமைப்புகளையோ தேடுவதில்லை. அது மட்டுமல்ல, சிறுசிறு வாக்கியங்களாக மூலப்பகுதியைப் பிரித்துக்கொண்டு தமது மொழிபெயர்ப்பை அமைக்கிறார். சான்றாக, இங்கு பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையின் மொழிபெயர்ப்பை நோக்கலாம். அதில், அரசியின் மாளிகைக்குக் கதவுகளை எவ்விதம் அமைக்கிறார்கள் என்பதை விளக்கவரும் பகுதிகளை எவ்விதம் மொழிபெயர்க்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

பருஇரும்பு பிணித்துச்

                They make huge folding doors with bolts secure,

            And rivet them with massive, strong iron bands.

செவ்வரக்குரீஇத்

                They paint these doors with bright red lac.

துணைமாண் கதவம் பொருத்தி இணைமாண்டு

நாளடு பெயரிய கோளமை விழுமரத்துப்

                They cross/ The door-posts tall with beams that bear the name/ Of a star.

போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்

தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்

                Upon it water lillies fresh/ Are carved, and joined with these on either

            side /    Are female elephants.

கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து

                This is the work/ Of men well skilled who could make gapless joints.

ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை

                The posts are smeared with ghee and mustard white.

இப்படிப் பிரித்து மொழிபெயர்ப்பது பலசமயங்களில் மூலத்தைவிட நீளமாகச் செல்வதாகவும், கவிச்சுவையின்றியும் தோன்றினாலும், முக்கியமான இடங்களில் உயிரோட்டத்துடன் அமைந்து கவிதையைக் காப்பாற்றுகிறது என்று சொல்லலாம்.

தக்க சொற்களை மொழிபெயர்ப்பில் கையாளுவது மிகமுக்கியம். நைடா போன்ற இலக்கண, மொழிபெயர்ப்பு அறிஞர்கள் நிகர்மையைக் குறித்தே மிகவும் கவலைப் பட்டனர். (மூலமொழியின் ஒரு சொல்லுக்குத் தகுந்த சரியான இலக்கு மொழிச் சொல்லை அமைப்பது நிகர்மை-ஈக்வலன்ஸ் எனப்படும்.) செல்லையா தக்க நிகரன்களைத் தேடிக் கையாள்வது சிறப்பாக இருக்கிறது. சான்றாக, மதலைப்பள்ளி என்ற சொல்லை cornice என மொழிபெயர்ப்பதைக் காட்டலாம்.

யாவற்றினும் மேலாக, blank verse அமைப்பை மிக நன்றாகக் கையாண் டிருக்கிறார் செல்லையா. இவையெல்லாம் மொழிபெயர்ப்பில் ஊன்றியவர்கள் மட்டுமே செய்யத்தக்கவை. பாராட்டுக்குரியவை.

ஆனால், சிக்கலற்ற மொழிபெயர்ப்பு என்று எதுவும் கிடையாது. கவிதையை மொழிபெயர்க்க இயலாது என்றும் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். கவிதையின் பொருள் ஏறத்தாழ இலக்குமொழியில் விளங்கித்தோன்றுமாறு மொழிபெயர்க்கலாமே தவிர, அப்படியே அதன் வடிவத்தைச் செய்துதர இயலாது. பொதுவாக நீண்ட கவிதையை மொழிபெயர்க்கும்போது எதிர்கொள்ளவேண்டிய நான்குவிதச் சிக்கல்களை இங்கு நெடுநல்வாடை கவிதைப்பகுதியை வைத்து எடுத்துக்காட்டலாம்.

oondralgalum4-710x1024பத்துப்பாட்டின் மொழிபெயர்ப்பில் முதல் சிக்கலாகத் தோன்றுவது பாட்டின் அமைப்பு. பழங்காலத் தமிழ்ப் புலவர்கள், ஓரிரு வாக்கியங்களைப் பல அடிகளாக அமைப்பது வழக்கம். இதற்குத் தமிழின் எச்ச அமைப்பு நன்கு துணைபுரிகிறது. சான்றாக, பத்துப்பாட்டில் சிறுபாட்டாகிய முல்லைப்பாட்டு, 103 அடிகளைக் கொண்டிருந்தாலும், ஒரே ஒரு வாக்கியத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. மொழிபெயர்க்கும்போது ஓரடிக்கு ஓரடி என நேராகச் செய்ய முடியாது. அர்த்த அலகுகளுக்கேற்ப-எச்சத்தொடர் களுக்கேற்பத்தான் மொழிபெயர்க்கமுடியும். எப்படி அர்த்த அலகுகளாகப் பிரிப்பது, எப்படி எச்சத் தொடர்களை மொழிபெயர்ப்பது என்பதுதான் பத்துப்பாட்டின் மொழிபெயர்ப்பில் முதல் சிக்கலாக உணரப்படக்கூடும்.

நெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்டிருக்கிறது, ஆனால் இரண்டே இரண்டு வாக்கியங்களைக் கொண்டிருக்கிறது.

பத்துப்பாட்டுச்செய்யுட்களின் அமைப்பு தன்னிச்சையானதல்ல. அதாவது அவற்றின் அமைப்பு, பொருளுக்கேற்ப நன்கு சிந்தித்துக் கவிஞர்களால் அமைக்கப் பட்டதாகும். நெடுநல்வாடையிலும் அப்படியே. கூதிர் நின்றற்றாற் போதே என முதல்வாக்கியத்தையும், பாசறைத் தொழில் இன்னே முடிகதில் அம்ம என இரண்டாவது வாக்கியத்தையும் கொண்டு இதனை இரு பகுதிகளாக நக்கீரர் பிரித்துவிடுகிறார். முதல் வாக்கியம் முழுவதும் நெடிய வாடையின் இயல்புகளை எடுத்துரைப்பது. பனிக்கால நிகழ்வுகளையெல்லாம் வருணிப்பதாக, ‘வையகம் பனிப்ப வலனேர்பு’ என்ற தொடங்கி, ‘கூதிர் நின்றன்றாற் போதே’ என்று முடிவது முதல் வாக்கியம் (முதல் 72 அடிகள், 72ஆம் அடியின் மூன்றாம் சீர்வரை). இதன் எழுவாயும் பயனிலையும் சேர்ந்தே உள்ளன. ‘போது கூதிர் நின்றற்றால்’ என்று கூட்டவேண்டும். பிற யாவும் இவ்வாக்கியத்திற்கு இணைப்பாக வரும் அடைகள்.

இன்னொரு வாக்கியம், 72ஆம் அடியின் நான்காம் சீராகிய ‘மாதிரம்’ என்பது தொடங்கி, இறுதியடியின் ‘பாசறைத் தொழிலே’ என முடிகிறது. இவ்வாக்கியத்தின் எழுவாய் தனியாகவும், பயனிலை தனியாகவும் பிரிந்து நிற்கின்றன. ‘பாசறைத் தொழிலே’ (அடி 188) – ‘இன்னே முடிகதில் அம்ம’ (அடி 165) எனக் கொண்டுகூட்ட வேண்டும். இரண்டாவது வாக்கியம் முழுவதும் நல்வாடை-என்பதற்கான காரணத்தை முன் வைக்கிறது.

இன்னும் தெளிவாகச் சொன்னால், முதல் வாக்கியம் கூதிர்காலப் பின்னணியைத் தருகிறது (முதல், கருப் பொருள்கள்). இரண்டாவது வாக்கியம் தலைவி தலைவனின் செயல்களைச் சொல்கிறது (உரிப்பொருள்). இந்த அமைப்பைச் சிதைக்காமல் மொழிபெயர்ப்பது இயலாது என்பது மொழிபெயர்ப்பின் முதற்குறை.

பொதுவாக, தமிழில் எச்சங்கள் அமையுமிடங்களில் வாக்கியங்களைப் பிரித்து, ஆங்கில மொழிபெயர்ப்பை உருவாக்குவதுதான் எவரும் எளிதில் இங்கு செய்யக் கூடியது. எச்சப்பகுதிகளைத் தனிவாக்கியங்களாகவோ, relative clause என்னும் தொடர்களாகவோ அமைக்கலாம். நெடுநல்வாடையில் முதல் வாக்கியத்தில் பன்னிரண்டு எச்சப்பகுதிகளும், இரண்டாவது வாக்கியத்தில் பதினான்கு எச்சப்பகுதிகளும் உள்ளன. அவையும் நீண்டு அமைவதால் அவற்றையும் நேராக மொழிபெயர்ப்பது கடினமாக உள்ளது. எனவே இன்னும் சிறு சிறு தொடர்களாகப் பிரித்துக்கொள்கிறார் செல்லையா. அவரது நெடுநல்வாடை ஆங்கில மொழிபெயர்ப்பில் 92 வாக்கியங்கள் உள்ளன.

இரண்டாவது சிக்கல், பாட்டின் கூற்று அல்லது நோக்குநிலை பற்றியது. ஒரு பாட்டு-குறிப்பாக நெடும்பாட்டு, எந்த நோக்குநிலையில் சொல்லப்படுகிறது என்ற நினைவு முக்கியமாக மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கவேண்டும். ‘‘வானம் மழை பொழிய, போது கூதிர் நின்றது; புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு இன்னா அரும்படர் தீர விறல்தந்து வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழில் இன்னே முடிக’‘ என்பது பாட்டின் செய்தி. (அதாவது, கடுமையாக மழைபொழிந்ததால், எங்கும் குளிர் மிகுந்து நின்றது. அதனால், போருக்குச் சென்றிருக்கும் பாண்டிய அரசனின் மனைவி துக்கத்துடன் இருக்கிறாள். அவளுடைய துயரம் தீரும்படியாக, வேந்தன் பல அரசர்களோடு முனைந்து செய்கின்ற பாசறைத் தொழிலாகிய போர், நல்லபடியாக முடிவதாக என்பது நெடுநல்வாடையின் செய்தி.)

இதனை யார் கூறுவதாகக் கொள்ளலாம்? யாவற்றையும் நோக்குகின்ற ஒரு அந்நியன் (an omnipotent voyeur) கூறுவதாகவே கொள்ளஇயலும். அவன் எங்கும் குளிர்காலம் பரவிக்கிடப்பதையும் காண்கிறான், வேந்தன் பாசறையில் உறங்காமல் தொழிற்படுவதையும் காண்கிறான், அரசி அரண்மனையில் தன் கட்டிலுக்கு மேல் தீட்டப்பட்டுள்ள உரோகிணி நட்சத்திரத்தை நோக்கியவண்ணம் பெருமூச்செறிந்தவாறு இருப்பதையும் அவளைச் செவிலியர் தேற்றுவதையும் காண்கிறான். அவன் நோக்கிலேயே பாட்டு சொல்லப்படுகிறது. ஆனால் ஜே.வி. செல்லையா, நோக்குநிலையைப் பற்றிக் கவலைப் படவில்லை. பாட்டைக் கிடந்தவாறே மொழிபெயர்த்துச் செல்கிறார்.

                புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு

                இன்னா அரும்படர் தீர விறல்தந்து

                இன்னே முடிகதில் அம்ம

என்ற சொற்களை மட்டும் ஒரு செவிலியின் வேண்டுகோளாகக் கூறிவிடுகிறார்.

             Her maid prays: “Mother, grant him victory great,

            And end the war, and thus remove the thoughts

            That greatly pain the loving, lonely wife.”

என்று அமைக்கிறார். உண்மையில் இது செவிலி வேண்டுவது அல்ல. பார்வை யாளனாகிய கவிசொல்லியின் கூற்றுதான். செவிலிகள் வேண்டுகின்ற செய்தி, கவிக்கூற்றாக முன்னாலேயே சொல்லப்பட்டுவிடுகிறது.

                நரைவிராவுற்ற நறுமென் கூந்தல்

                செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்

                குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி

                இன்னே வருகுவர் இன்துணையோர் என

                உகத்தவை மொழியவும் ஒல்லாள்

என வரும் பகுதியைக் காண்க.

மூன்றாவது சிக்கல், பாட்டின் முக்கிய உள்ளுறை அர்த்தங்கள் காணாமற் போய்விடுவது. இது ஆசிரியரின் குறையல்ல. பொதுவாக மொழிபெயர்ப்பினால் ஏற்படுவது. இதில் மொழிபெயர்ப்பாளரின் பங்கேற்பு ஓரளவுதான் இருக்கிறது.

சான்றாக, நெடுநல்வாடையில் பெருமழைபொழிவது நின்று, சிறுதூறல்கள் மட்டும் காணப்படும் நிலையும், அத்துடன் குளிர் நிலவுவதும் வருணிக்கப்படுகின்றன. இந்தப் புறவருணனை, பாட்டின் அக அமைப்போடு தொடர்புடையது. தலைவன் பெரிய (முக்கியமான) போரினை முடித்துவிட்டான், இப்போது இறுதியாகச் சில சில்லறைச் சண்டைகள் மட்டுமே இருந்துகொண்டிருக்கின்றன, அவற்றின் விளைவான குளிர் (வெறுப்பு) நிலவுகிறது என்பது கருத்து. வாடைக்காற்றும், சிறுதூறலும் நிற்கும்போது, போரும் முடிந்துவிடும், தலைவன் தலைவி இணைவும் ஏற்படும். யாவும் ஒருங்கிசைவில் (harmony) முடியும் என்பது பாட்டின் கருத்து.

அதேசமயம், புதல்கள் (புதர்கள்-சிறுசெடிகள்) மலர்ந்திருப்பது போன்ற இயற்கையின் சிறுசெயல்கள் இடையறாமல் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. பெரும் அளவில் எங்கும் நிகழும் இயற்கையின் சிறுசிறு பணிகள் என்றும் தடைப்படாமல் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்பதன் அடையாளம் இது. இம்மாதிரி விஷயங்களை ஆசிரியர் தமது குறிப்பில் எடுத்துரைக்கவேண்டும். ஏ.கே. ராமானுஜன் சங்கப் பாக்களில் கவனிக்கவேண்டிய சில அடிப்படை விஷயங்களைத் தமது நூலின் பின்னுரையில் குறிப்பிடுகிறார். அதுபோல ஜே.வி. செல்லையாவும் செய்திருக்கலாம். ஆனால் அவர் தமது முன்னுரையில் அடிப்படையான பின்னணிச் செய்திகளையும் உள்ளடக்கத்தையும் மட்டுமே எழுதிச் செல்கிறார், பொருள்கோள் பற்றி அல்ல.

நான்காவது, சிறிய கவிதைகளை மொழிபெயர்க்கும்போதும் உண்டாகக்கூடிய சில்லறைக் குறைகளின் தொகுதி எனலாம்.

சில இடங்களில் தேவைக்கும் மிகுதியாக விரித்துரைத்தல்,

சில இடங்களில் குன்றக்கூறல்,

சில இடங்களில் தவறான மொழிபெயர்ப்புகள்,

சில இடங்களில் போதாத மொழிபெயர்ப்பு

-இவை எந்த மொழிபெயர்ப்பாளருக்கும் ஏற்படக்கூடிய சறுக்கல்கள். இவை செல்லை யாவிடமும் உள்ளன. குறிப்பாக ஒரே சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் வருமிடங்களில் தவறான அர்த்தத்தைக் கொள்ளுதல் போன்ற குறைகள் எவர்க்கும் நேரும். ஆனால் கவித்துவம் இவற்றையெல்லாம் ஓரளவு ஈடு செய்துவிடவல்லது.

தவறான மொழிபெயர்ப்புக்கு ஓர் உதாரணத்தைக் காண்போம்.

                தசநான்கெய்திய பணைமருள் நோன்றாள்

                இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்

                பொருதொழி நாகம் ஒழியெயிறு அருகெறிந்து

                சீருஞ்செம்மையும் ஒப்ப வல்லோன்

                கூருளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு

என்ற பகுதியை ஆசிரியர் மொழிபெயர்க்கும்போது,

             There is a forty years’ old rounded bed

            Constructed with smooth-chiselled tusks that once

            Belonged to tuskers huge with mighty legs

            Resembling drums and shapely foreheads grey,

            Renowned in war, which were in battle killed.

எனச் செய்கிறார். மேலே எடுத்துக்காட்டப்பட்ட செய்யுட்பகுதிக்கு, ‘‘சிறந்தஅழகையும், புள்ளிகள் நிறைந்த நெற்றியையும், தனது கால்களை முரசென்று நினைத்துப் பிறர் மருளும் தன்மையையும் கொண்ட, நாற்பதாண்டு நிரம்பிய யானை போரில் ஈடுபட்டுத் தனது கொம்புகளை இழந்தபோது, அக்கொம்புகளைக் கொண்டு கட்டிலின் பக்கங்களை இணைத்தனர்’‘ என்பது பொருள். ஆனால் ஆசிரியர், நாற்பதாண்டு பழமையான, வட்டமான கட்டில் என்று மொழி பெயர்த்துவிடுகிறார்.

ஓர் ஆசிரியர் தமது யூகங்களை எவ்வளவுதூரம் மொழிபெயர்ப்பில் பயன்படுத்த இயலும்? அர்த்தப்பெயர்ப்புக்கு இடைஞ்சல் செய்யாத அளவிற்குப் பயன்படுத்தலாம். அது சுதந்திரமான மொழிபெயர்ப்பு என்பதிலிருந்து தழுவல் என்ற அளவுக்குச் செல்லக் கூடாது என்பதை ஆசிரியர் மனத்திற்கொண்டால் சரி.

நான் பார்த்தவரை இம்மாதிரிச் செயல்கள் எந்த மொழிபெயர்ப்பிலும் குறைவற உள்ளன. சான்றாக, ‘புலம்பெயர் புலம்பொடு கலங்கி’ என மூலத்தில் வருகிறது.‘Distressed, These lonely-feel in leaving wonted fields’என்பது எங்கே பாட்டில் நேராக இருக்கிறது? அரசன் புலம் பெயர்வதால், அரசி புலம்பினாள் என்பதற்கு அவளது தனிமை காரணம் என்பது ஆசிரியரின் உட்கோள். ‘மாடமோங்கிய மல்லல் மூதூர்’ என்பதற்கு, ‘ÔIn an ancient town that’s rich in mansions high ‘ என்பது பெயர்ப்பு. ancient town என்பது ஆசிரியரின் சேர்க்கைதான். எந்த மொழிபெயர்ப்பிலும் விடுபட முடியாத ஒரு குறை இது என நினைக்கிறேன்.

இன்னொரு விஷயம், ஒரு சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கும்போது பெயர்ப்பாளர் எதைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது. இரண்டு சிறு சான்றுகளைக் காணலாம்.

மூலப்பிரதியில் ‘கொடுங்கோற்கோவலர்’ என்று ஒரு தொடர். கொடும்- என்பதற்கு கொடிய, வளைந்த என இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ‘வளைந்த தடியை உடைய கோவலர்கள்’ (இடையர்கள்) எனப்பொருள் கொள்வது சிறப்பாக அமையும். ஆனால் ஆசிரியர், ‘herdsmen (who) wield their cruel wands ‘ என மொழிபெயர்க்கிறார்.

இதேபோல, ‘பைங்காற்கொக்கு’ என்ற தொடர் வருகிறது. பை(ம்)-(பச்சை) என்ற அடைக்குத் தமிழில் பசுமையான(green) என்ற அர்த்தமும், இளமையான, முதிராத, பக்குவம் பெறாத என்ற அர்த்தங்களும் உள்ளன. பச்சைக்குழந்தை என்பதை யாரும் green child எனப் பெயர்ப்பதில்லை. எனவே பைங்காற்கொக்கு என்பதற்கு முதிராத, இளம் கால்களையுடைய கொக்கு என்றும் பொருள் கொள்வது சிறப்பு, பச்சைநிறக் கால்களை உடைய கொக்கு என்றும் பொருள்கொள்ளலாம். செங்காற்புறவு என்பதற்கு வேறுவிதப் பொருள் சொல்லமுடியாது. சிவந்த கால்களை உடைய புறா என்றுதான் கூறமுடியும். செங்காற் புறா என்று பின்னர் வருவதை நினைத்தோ என்னவோ, ஆசிரியர் பைங்காற்கொக்கு என்பதற்கும் பச்சைநிறமான கால்களை உடைய கொக்கு என்று மொழிபெயர்க்கிறார்.

                மேலே அவரது மொழிபெயர்ப்புத்தன்மையை எடுத்துக்காட்டிய பகுதியிலும்,

                ஐயவி யப்பிய நெய்யணி நெடுநிலை

என்ற அடி,

                The posts are smeared with ghee and mustard white.

என்றாகிறது. நெய் என்றால் ஆநெய் (ghee), oil (இன்றைய பேச்சுமொழியில் எண்ணெய்) என்ற இரு அர்த்தங்களும் உண்டு. இங்கு oil என்ற மொழிபெயர்ப்புதான் பொருத்த மானது.

போதா(த) மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு குறை. உதாரணமாக, நெடுநல்வாடையின் முக்கியப்பொருள் வாடைக்காற்று. ‘கடியவீசிக் குன்று குளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்’ என்ற தொடர், ‘The midnight chill is like the cold on hills’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்பில் வாடைக்காற்று பற்றிய குறிப்பே இல்லை. பொதுவாக நள்ளிரவுப்பனி என்று குறிப்பிடப்பட்டு விடுகிறது. இம்மாதிரிப் பெயர்ப்புகளைப் போதா மொழிபெயர்ப்பு எனலாம்.

இதுவன்றிச் சரியில்லாத மொழிபெயர்ப்பு என்பதும் உண்டு. சான்றாக,

                மாதிரம், விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்

                இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்

                பொருதிறஞ்சாரா அரைநாள் அமயத்து

என்ற பகுதி,

            The broad sun travelling in its western course

            Its widespread rays diffuses everywhere,

            And shadows cast by two poles planted straight

            Do not incline at noon tide either way.

என்று பெயர்க்கப்படுகிறது. இந்த நெடுநல்வாடைப் பகுதியில் equinox என்பதைக் கண்டறியும் முறை சொல்லப்படுகிறது. (ஈக்வினாக்ஸ் என்பது, இரவும் பகலும் மிகச் சரியாக, சமமான நேரத்தைக் கொண்ட நாள்). மொழிபெயர்ப்பு, When the shadows do not incline என்று இருக்கவேண்டும். அப்படிப்பட்ட நாளை நூலறிபுலவர்கள் கண்டறி கிறார்கள். ஆனால் இங்கு அந்நிகழ்ச்சி ஏதோ தினசரி நடப்பதுபோலக் கூறப்படுகிறது.

செல்லையா மொழிபெயர்த்த பத்துப்பாட்டு தொகுதியிலுள்ள நெடுநல்வாடையின் மொழிபெயர்ப்பினை ஆராய்ந்து ஓரளவு அதன் நிறைகுறைகளை இக்கட்டுரை கூறி யுள்ளது. சறுக்கல்கள் சில இருந்தாலும் பொதுநோக்கில் செல்லையாவின் மொழி பெயர்ப்பு வாசிக்கத்தக்க, இடறாத, பெரும்பாலும் சலிப்பூட்டாத மொழிபெயர்ப்பாக அமைந்திருக்கிறது. அவ்வளவாகச் சறுக்கல்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எனவே தமிழின் நல்ல மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் என்று அவர் தமது பெயரை ஊன்றிக்கொள்கிறார். ஊன்றல் என்ற சொல் இங்கு பொருத்தமற்றதாகச் சிலருக்குத் தோன்றக்கூடும். சமாளித்தல் என்பது இச்சொல்லுக்குரிய பலபொருள்களில் ஒன்று. மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே ஏதோ ஒருவிதத்தில் மொழிபெயர்ப்பாளன் தன் ஆக்கத் திறனை வைத்துச் சமாளிக்கும் செயலாகத்தானே இருக்கிறது?