லக்கானும் உளப்பகுப்பாய்வும்

லக்கானும் உளப்பகுப்பாய்வும்

ழாக் லக்கான்(1901-81) சார்த்தருக்குப் பின்பு ஃப்ரான்ஸில் மிகப் போற்றப்பட்ட சிந்தனையாளர், மிகப் பலரைத் தமது செல்வாக் குக்கு உட்படுத்தியவர். உளப்பகுப்பாய்வு மருத்துவர். பகுப்பாளர்களுக்குப் பயிற்சி தந்தவர். இருபதாண்டுகள் இடைவிடாது கருத்தரங்குகள் நடத்தியவர். ஃப்ராய்டிய எழுத்துகளுக்கு தீவிர திரும்புதலைச் செய்தவர். அவரது முக்கியச்சிந்தனைகள்  Ecrits: a selection, Feminine Sexuality, The Four fundamental concepts of Psychoanalysis, The Seminars of Jacques Lacan போன்ற நூல்களில் காணப்படுகின்றன.

1953ஆம் ஆண்டு, ஃப்ரான்ஸ் நாட்டின் முதன்மை பெற்ற மார்க்சியத் தத்துவ அறிஞர் லூயி அல்தூசர், ‘எகோல் நார்மல்’ என்னும் புகழ்பெற்ற நிறுவனத்தில் வந்து தமது கருத்தரங்குகளை நடத்துமாறு ழாக் லக்கானை அழைத்தார். அப்போதுதான் உளப் பகுப்பாய்வுடன் மார்க்சியத்தின் கலந்துரையாடல் ஆரம்பமாயிற்று எனலாம். அந்தக் காலத்தில் மிக அதிகமான பல்துறைச் செயல்பாடுகள் நடைபெற்றிருக்கவேண்டும். ஏனெனில் அதற்கு ஓராண்டு கழித்து, அல்தூசர், ‘ஃப்ராய்டும் லக்கானும்’ என்ற நூலை வெளியிட் டார்.

மார்க்ஸும் ஃப்ராய்டும் புதிய அறிவியல்களைக் கண்டவர் கள் என்று அவர் கூறினார். புதிய அறிவுப் பொருட்களை உருவாக் கிய அவர்கள், சமூகத்தைப் பற்றி அறிவதற்குப் புதிய வழிகளைக் கண்டறிந்த அவர்கள், தங்கள் கலாச்சார பளுவினால் அழுத்தத் திற்கும் ஆளானவர்கள். தமது காலத்திய இயக்கவியல், உயிரி யல், உளவியல் ஆகியவற்றிலிருந்து கடன்வாங்கிய கருத்துக ளைப் பெற்றே தமது கருத்தாக்கங்களை உருவாக்கியதாக ஃப்ராய்டு கூறினார். மார்க்ஸும், ஹெகல் தன்னிலை பற்றிக் கூறியவற்றைப் பயன்படுத்தியே தமது கொள்கைகளைக் கண்ட றிந்ததாக நினைத்தார்.

ஆனால் அல்தூசர் சிந்தித்தது வேறுமாதிரி. ஹெகலிய முழுமைத் தன்னிலை பற்றிக் கருத்தில் கொள்ளாமலே தாம் மார்க்சியத்தை மறு சிந்தனைக்கு உட்படுத்தியதுபோலவே லக்கானும் ஒரு முழுமைபெற்ற அல்லது ஒருங்கிசைந்த ‘சுயம்’ அல்ல்து ‘தான்’ என்பதன் சட்டகத்தை ஏற்காமலே உளப்பகுப்பாய்வை ஆராய்ந்து மறுசிந்தனைக்குள்ளாக்கினார் என்று அல்தூசர் எழுதுகிறார்.

1968ஆம் ஆண்டு ஃப்ரான்ஸில் மாணவர் எழுச்சி ஏற்பட்டது. விடுதலைபெற்ற தனி மனித உறவுகளிலிருந்துதான் விடுதலை பெற்ற அரசியல் ஒன்று எழும் என்று அவர்கள் கருதினார்கள். ஆகவே இருத்தலியத்தையும் மார்க்சியத்தையும் சமரசப்படுத்தும் கோட்பாடாக அவர்கள் நினைத்த லக்கானிய உளப்பகுப்பாய்வில் அவர்களது ஆர்வம் சென்றது. இருத்தலியத்தில் அவர்கள் கவனம் சென்றமைக்கு, ‘தாங்கள் தேர்ந்தெடுக்கும்’ பிரச்சினைகளில் தங்கள் ‘தனிப்பொறுப்பினை’ ஏற்றுச் சிந்தித்து வழிகாணலாம் என்ற எண் ணம் காரணமாயிருக்கலாம்

ஆனால், சுயம் பற்றிய கோட்பாடு என்ற அளவில் இருத்தலியம், கார்ட்டீசியச் சட்டகத்திற்குள் அடங் கிய ஒன்றுதான். மனிதன் அறிவார்த்தமான, உளப்பூர்வமாகச் செயலாற்றக்கூடிய செயலாளி மனிதன் என்றும், தனது செயல் களுக்கான அடிப்படைகளை அவன் அறியவல்லவன் என்றும் கார்ட்டீசியக் கொள்கை நினைக்கிறது. தனிநபர் சுதந்திரம், அறிவு பூர்வமான தேர்ந்தெடுப்பு என்னும் அடிப்படைகளைக் கொண்ட தத்துவத்தில் ஊன்றியது இருத்தலியம்.

மே 1968 நிகழ்ச்சிகளின்போது மக்களது கவனம் பெருமளவு சுய வெளிப்பாடு, ஆசை, பாலியல்தன்மை ஆகிய பிரச்சினைகளில் சென்றது. சமூகத்தினாலும் மொழியினாலும் கட்டமைக்கப்பட்டது தான் ‘சுயம்’ என்பது லக்கானுடைய கொள்கை. சமூகமும் தனி மனிதனும் பற்றிப் புதிய நோக்கில் சிந்திப்பதற்கான வழியை அது உருவாக்கித் தந்தது. லக்கானுக்குச் சுயம் வேறு, சமூகம் வேறு அன்று. மொழியை ஏற்றுக்கொள்ளும்போது மனிதர்கள் சமூகத்தின் ஒரு பகுதியாகிறார்கள். நம்மைத் தன்னிலைகளாக உருவமைப் பது மொழிதான். ஆகவே மனிதன் வேறு, சமூகம் வேறு என்று பிரித்துப்பார்க்கத் தேவையில்லை. சமூகம் தனிமனிதனுள் குடி கொள்கிறது.

லக்கானின் எழுத்தைப் புரிந்துகொள்வது கடினம். பெரும் முயற்சி மேற்கொள்பவர்கள் தான் லக்கானைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் முயற்சிசெய்தால் தக்க பயனுண்டு. மொழி பற்றிய கருத் துகளை மிகவும் கடினமான, பலதளப் பிரதிகளின் தொடர்புடைய மொழியில் படைத்திருக்கிறார் லக்கான். அவரது நடை வாசக னைத் தடைப்படுத்தி மெதுவாக்குவது. அவரது எழுத்து எவரையும் நம்பச் செய்வதற்கானதல்ல. சிலேடை, சொல்விளையாட்டுகள், குறியீடுகள், குறிகள் ஆகிய பலவற்றைப் பயன்படுத்துகிறார் லக்கான். உளப்பகுப்பாய்வினை எளிமைப்படுத்தக்கூடாது என நினைக்கிறார். தினசரி பாஷை சுமத்துகின்ற சாதாரணத் தன்மை யைத் தலைகீழாக்கவேண்டும் என்று கருதுகிறார்.

லக்கானின் மிகப்பெரும்சாதனை நிகழ்வியலையும் அமைப்பியத் தையும் ஒன்றிணைத்ததுதான். ஆரம்பகாலத்தில் ஃப்ரெஞ்சு நிகழ்வு வாதத்தால் கவரப்பட்டவர் அவர். ஹெகல், ஹைடெக்கர் சிந்த னைகளால் கவரப்பட்டவர். உரை வியாக்கியானங்களின் ஒழுங்க மைவு பற்றிப்பேச அமைப்புவாதம் அவருக்கு உதவிற்று. நிகழ்வியத்திற்கும் அமைப்புவாதத்திற்கும் இடையில் ஊடாடு கின்ற அவரது படைப்புகள் ரசமானவை. நிகழ்வியம், ஒரு சுதந் திரமான தன்னிலையை, சுயத்தை வலியுறுத்துகிறது. அமைப்பிய மோ மொழியின் நிர்ணயத்தன்மையை வலியுறுத்துகிறது. லக்கான் அமைப்புவாதத்தைப் பயன்படுத்துகிறார், ஆனால் ஒரு போதும் தன்னிலையை விடுவதில்லை.

லக்கான், மேற்கத்திய உரைவியாக்கியான மரபைச் சேர்ந்தவர். சமூக நிகழ்வுகள் யாவும் அர்த்தமுடையவை என்னும் கொள்கை யுடையது அந்த மரபு. மரபுவழி உளவியலாளர்கள் சொல்வது போல, சமூக அறிவியல்கள், சமூக நிகழ்வுகளை விளக்கக்கூடாது என்னும் கொள்கையும் உடையது. சமூகநிகழ்வுகளைப் புரிந்து கொள்ளவேண்டும். உளப் பகுப்பாய்வு என்பதும் ஒரு வியாக்கி யான முறைதான். உரைவியாக்கியானம் செய்யும்போது நாம் நமது சொந்தக் கருத்துகளையும் அதில் புகுத்துகிறோம் என்பதை லக்கான் அறியாதவர் அல்ல.

அவரது ஆய்வுப்பட்ட ஏடு, ‘பேரனாய்டு உளச்சிக்கல்களும், ஆளுமையுடன் அவற்றின் தொடர்பும்’ என்பது. இதனை வெளியிட்ட போது, சசூரின் மொழிபற்றிய கருத்துகள் வெளிப்பட்டிருக்க வில்லை. அச்சமயம் அவர் ஓர் உளவியல் மருத்துவராக இருந் தாரே அன்றி, உளப்பகுப்பாய்வாளராக இல்லை. அந்த நூலில் ஆர்வத்தைத் தூண்டும் அம்சம், அவர் ஃப்ராய்டை மறுக்கும் முறையும், மனச்செயல்பாடுகளை உடற்செயல்பாடுகளாகக் குறைப்பதை எதிர்க்கும் முறையும்தான் என்கிறார்கள்.

லக்கானின் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், அவர் முழுமூச்சாக உயிரியல் சார்புக்கு எதிர் நிலைப்பாடு எடுப்பதுதான். 1930களில் பைத்தியம் என்பது உடலியல் காரணங்களால் ஏற்படுவது என்ற எண்ணம் வேரூன்றியிருந்தது. உடல்சார் காரணங்களால் மன நோய்களை விளக்கமுடியாது என்கிறார் லக்கான். உளநோய் என்பது ஒரு சொல்லாடல். விளக்கி வியாக்கியானம் செய்ய வேண்டிய ஒரு முயற்சி அது. காரணரீதியான விளக்கத்தைவிட, அதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆளுமை என்பது மனத்தை மட்டுமல்ல, முழுமனிதனையும் சார்ந்தது. தன்வரலாற்றிலிருந்து ஒரு மனிதனின் உளவியலைப் பிரிக்கமுடியாது.

உளப்பகுப்பாய்வாளர் ஆனபோது ஃப்ராய்டுமீது அவர் சில விமரிசனங்களை வரைந்தார். ஃப்ராய்டும் உடலியல் சார்ந்த பல யூகங்களைத் தமது கொள்கையில் வைத்திருந்தார் என்பது அவற்றில் முக்கியமானது. மனிதத் தன்னிலையால் விளக்கப்படும் ஓர் அறிவியல்தான் உயிரியல். அதுவும் மொழியினால் சிதறடிக்கப்படுவதே. மொழிக்கு முன்னால் உடல் என்ற ஒன்று கிடையாது. உடலியல்-உடற்கூறியல் தொடர்பான விளக் கங்களிலிருந்து கவனத்தைக் குறியீட்டின்மீது (symbolic) செலுத்தி, உடற்கூறான பாகங்கள் மீது கலாச்சாரம் எவ்வாறு தன் அர்த்தங்களைச் சுமத்துகிறது என்று காட்டினால் லக்கான்.

நடத்தைவழி உளவியலாரை அன்றி, அமெரிக்க சுயம்-சார் உளவியலாளர்களான எரிக் ஃப்ராம், கேரன் ஹார்னி போன்றோரையும் லக்கான் மறுக்கிறார். மனிதன் தன்னைச் சூழலுக்குத் தக அமைத்துக்கொள்வது பற்றி இவர்களும் பேசுகிறார்கள். ஃப்ராய்டியக் கோட்பாடுகளை நீர்த்துப்போகச்செய்து, நனவிலி, குழந்தைமைப் பாலியல் பற்றிய ஃப்ராய்டியக் கருத்துகளை இனிப்பாக்கித் தந்தவர்கள் அவர்கள் என்று குற்றம் சாட்டுகி றார் லக்கான். ‘சமூகத்தின் பங்கின்றிச் சுயமுன்னேற்றம் இயலும்’ என்பது ‘ஈகோ-உளவி யலாளர்’ கருத்து.

லக்கான், ஃப்ராய்டின் முக்கியக் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அவற்றோடு விளையாடி, புதிய கருத்தமைவுகளை ஏற்படுத்துகிறார். ஃப்ராய்டியக் கருத்துகளின் நுட்பமான மறுசீரமைப்பை வழங்குகிறார். பொதுமைப்படுத்தலைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அவர் பேசும் பொதுமைப்படுத்தல், இயற்கை அறிவியல்களின் பொதுமைப்படுத்தல் அல்ல. தர்க்கத்திலும் கணக்கிலும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார். கவிதையையும் அவற்றில் இணைக்கிறார். அவரது மொழிக்கோட்பாடு, ஃப்ராய்டியத்திற்கு அவரைத் திரும்பவிடக்கூடிய தல்ல. பிரதிகளுக்கு முற்றுமுழுதான ஈரடித்தன்மையற்ற ஓர் அர்த்தம் கிடையாது என்பதே காரணம். அவரது கோட்பாட்டின்படி, உளப்பகுப்பாய்வாளர்கள், நனவிலியோடு நேரடித் தொடர்புகொண்டுவிடவேண்டும். இதற்கு அவர்கள் நனவிலியின் மொழியில் பயிற்சி பெற்றி ருக்க வேண்டும். நனவிலிமொழி என்பது கவிதை, சிலேடை, உள்ளார்ந்த சந்தங்கள், போன் றவைதான். வார்த்தை விளையாட்டுகளில் காரணத்தொடர்புகள் மறைகின்றன. பிற  சேர்க்கைகள் வெளியாகின்றன.

மேலோட்டமான பார்வையில் லக்கான்

அமைப்பு மானிடவியல், மொழியியல் என்பவற்றின் கண்டுபிடிப்புகளால் உருவானது லக்கா னியக் கொள்கை. ‘நனவிலி என்பது மொழிபோலக் கட்டமைப்புடையது’ என்பது அவர் கூற்று. உலகு பற்றிய, பிறர் பற்றிய, சுயம் பற்றிய அறிவுகள் யாவுமே மொழியினால்தான் உரு வாகின்றன. ஒரு தனித்த மனிதனாகத் தன்னை உணர்ந்து பார்ப்பதற்கு மொழியின் துணை வேண்டும்.

நீ – நான் என்னும் இரட்டை நிலையில் உருவாகும் மொழித்தன்மைதான் ஒருவனது தன்னிலையை வடிவமைக்கிறது. அதேசமயம், மொழி என்பது ஒரு சமூகத்தினுடையதாகவும், கலாச்சாரத்தினுடையதாகவும் இருக்கிறது. தடைகள், சட்டங்கள் கொண்டதாகவும் இருக்கிறது. சற்றும் அறியாமலே குழந்தை மொழியினால் உருவாக்கப்படுகிறது. மொழியின் சுவடுகள் அதன்மீது அழியாமல் பதிக்கப்படுகின்றன.

‘இன்பக்கோட்பாட்டிற்கு அப்பால்’ (Beyond the Pleasure Principle) என்னும் நூலில், ஃப்ராய்டு, ஒரு குழந்தையின் விளையாட்டை விவரிக்கிறார். அந்தக் குழந்தை ஒரு பஞ்சுச்சுருணையை வைத்திருக்கிறது. அதில் ஒரு நூல் கட்டியிருக்கிறது. நூலின் முனையைப் பற்றி இழுத்து,  தன் கட்டிலின் விளிம்பிற்கு அப்பால் அது சென்றுவிழுமாறு எறிந்து அந்தக்குழந்தை விளையாடு கிறது. அது உச்சரிக்கும் ஒலிகளை ஃப்ராய்டு  (அவை ஓ, ஆ என்று மட்டுமே காதில் விழுகின் றன)  ‘ஃபோர்ட்’-(போய்விட்டது), டா-(அதோ) என்று மாற்றி மொழிபெயர்க்கிறார்.  ‘ஃபோர்ட்’ என்பது குழந்தை பஞ்சை எறியும்போது அது விளிம்புக்கு அப்பால் சென்று மறைந்து போவ தைக் குறிக்கிறது. பிறகு அதை முன்னுக்கு இழுத்து, கண்ணுக்கு அது தென்படும்போது,  ‘டா’ (அதோ) என்கிறது. அந்தக் குழந்தையின் தாய் அதைத் தனியேவிட்டு வேலைக்குச் செல்பவர். அவரது தென்படுதலையும் மறைதலையும் எதிர்ப்பின்றிக் குழந்தை தாங்கிக்கொள்ளும் முறை யாக ஃப்ராய்டு இந்த விளையாட்டை விவரிக்கிறார். லக்கானோ, இது மொழியின் பிறப்பை உணர்த்துகிறது, யதார்த்தத்திலிருந்து மொழி விலகித் தன்னிச்சையாக இருப்பதைக் காட்டுவது என்கிறார். மேலும் நாம் வாழ்ந்து பெற்ற அனுபவங்களிலிருந்து எப்படி மொழி நம்மை அந்நியப்படுத்துகிறது என்பதையும் இது விளக்குகிறது என்கிறார்.

‘நான்’ என்பதைக் குழந்தை உச்சரிக்கும்போது அது கண்ணாடி நிலையில் இருப்பதாக லக்கான் சொல்கிறார். அந்நியப்படுதலுக்கும் தன்னிலைக்குமான உறவை வரையறுப்பது என்ப தால் திரும்பத்திரும்பக் கண்ணாடிநிலையைப் பற்றி லக்கான் பேசுகிறார். கண்ணாடி நிலை என்பது குழந்தை தன்னைக் கண்ணாடியில் காணும் நிலை. இது ஏறத்தாழ 6 மாதங்களிலி ருந்து 18 மாதங்களுக்குள் ஏதோ ஒரு சமயத்தில் நிகழ்கிறது. முதலில் குழந்தை தன்னை எடுத்துவைத்துக்கொண்டிருக்கும் நபரையும் சேர்த்துத் ‘தான்’ எனப் பிழைபட உணர்கிறது. பிறகு கண்ணாடியில் தோன்றும் தனது பிம்பத்தைத் ‘தான்’ எனக் காண்கிறது. பிறகுதான் அதுவேறு, தான் வேறு என்று வித்தியாசப்படுத்தி உணர்கிறது.

லெவி ஸ்டிராஸ் போலவே லக்கானும் குழந்தையை மனிதனாக்குவது ஈடிபஸ்நிலையே என்கி றார். இயற்கைப் பதிவுகளிலிருந்து கலாச்சாரப் பதிவுகளுக்கு மாறும் நிலை அது. ஆகவே மொழி, விதிகள், நிறுவனங்கள் முதலியன உட்புகுகின்றன. முதன்முதலில் குழந்தை வெறு மனே தாயின் அன்பையும் அரவணைப்பையும் விரும்புகிறது என்பது மட்டுமல்ல, தாய்க்கு ஏற்பட்டிருக்கும் குறை என உணரும் லிங்கத்தையும் அவாவுகிறது. தானும் அப்படியே மாற முயல்கிறது. இவ்வாறிருக்கும் சமயத்தில் குழந்தை தன்னிலையாக உருப்பெறவில்லை. அதுவும் ஒரு இன்மைதான், குறைதான்.

இரண்டாவது கட்டத்தில் தந்தையின் குறுக்கீடு ஏற்படுகிறது. தந்தை, குழந்தையை அதன் விருப்பப் பொருளிடமிருந்து (தாயிடமிருந்து) பிரிக்கிறான். தாயையும் அவளது குறிக்கான குறி யிலிருந்து (குழந்தையிடமிருந்து) பிரிக்கிறான். தந்தையின் சட்டத்திற்குக் குழந்தை ஆட்பட வேண்டிவருகிறது.

மூன்றாவது கட்டம், குழந்தை தன்னைத் தந்தையுடன் ஐக்கியப்படுத்தி உணருமிடம். தாயின் ஆசைக்கான வடிவமாக ‘லிங்கத்தை’ மீண்டும் தந்தை வடிவமைக்கிறான். குழந்தை தாயின் இணைப்பாக இருப்பதில்லை. குழந்தைக்கு இது ஓரு குறியீட்டுக் குறிநீக்கமாகிறது (symbolic castration). ஏனெனில் அதன் தாயிடமிருந்து அதனைப் பிரிக்கிறான் அல்லவா? இந்த நிகழ்வை எந்தக் குழந்தையும் சமூகவயப்படுதலுக்கான விலையாகக் கொடுத்தே தீரவேண்டும்.

ஈடிபஸ் சிக்கல் என்பது லக்கானைப் பொறுத்தவரை, மரபு உளவியலாளர் கருதுவதுபோல, ஒரு நிலை அல்ல. குழந்தை ‘தன்னை உணர்ந்து’, உலகம், பிறர் என்னும் கருத்தாக்கங்களுடன் வேறுபடுத்திப் பார்க்கும் கணம்தான் அது. ஈடிபஸ் சிக்கலிலிருந்து குழந்தை வெளிவந்தால் தான் தனது பெயரைப் பெற்று, குடும்பத்தில் ஓர் இடத்தையும் பெற்று, தன் சுயத்திற்கான குறியையும் தன்னிலைத் தன்மையையும் அடையமுடியும். கலாச்சாரம், மொழி, நாகரிகம், இவற்றை அடைந்து சமூகத்தில் பங்கேற்க முடியும்.

மொழி இருந்தால்தான் நனவிலி உருவாகமுடியும். நனவிலியை உருவாக்கி இடம்தருவதே மொழிதான். பிரக்ஞைபூர்வமான சொல்லாடலைப் போன்றே, பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட நிலையும் (நனவிலியும்) உருவாக்கும் அமைவுகள் யாவும் சொல்வது ஒன்றாகவும், உணர்த்து வது ஒன்றாகவும் இருக்கின்றன.

கனவுகளும் இப்படிப்பட்டவைதான். கனவுபோன்ற நனவிலி அமைப்புகள் யாவும், மொழியினால்தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதாவது, உருவகம், சினையெச்சம் (ஆகுபெயர்) இவற்றினால் உருவமைக்கப்படுகின்றன. முதல்பிரதி ஒன்று அழிக்கப்பட்டு, அதன் மீதே இரண்டாவது பிரதியொன்றை உருவமைத்தாற்போல நனவுச் சொல்லாடல் அமைகிறது. இரண்டாவது பிரதியின் இடைவெளிகளூடே பார்க்கும்போது முதல்பிரதியின் சில தோற்றங் கள் தெரிகின்றன. இதுபோலத்தான் நனவுச்செயல்பாடுகளிலிருந்து நனவிலிச் செயல்பாடு களை ஓரளவு அறியமுடிகிறது.

உருவகமாகச் சிந்திப்பது மனிதனின் இயல்பு. ஆகவே சொற்கள் தங்கள் பருமையான அர்த்தத்திற்குப் பதிலாக, வேறு அர்த்தங்களைக் குறிப்பனவாகிவிடுகின்றன. வேறொன்றைச் சொல்வ தனால், இன்னொன்று ‘குறிக்கப்படும்’ நிலை, மொழியின் சுதந்திரத்தைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே லக்கான் குறிப்பானின் சுதந்திரத்தை வலியுறுத்துகிறார். உருவகத்தையும் ஆகுபெயரை யும் அவர் செறிவுறுத்தலுடனும் (Condensation) பெயர்ச்சியுடனும் (Displacement) இணைத்து நோக்குகிறார். நனவிலியின் செயல்கள் யாவும் இந்த அணிக்கூறுகளைத் தணிக்கையிலிருந்து தப்பிக்கப் பயன்படுத்துகின்றன.

‘தான்’ (ego) என்பதைச் ‘சுயத்’துடன் (self) ஒன்றுபடுத்திப் பார்க்கும் பொதுவான மாயையையும் லக்கான் தமது படைப்புகளில் கடிந்துரைக்கிறார். ‘நான் சிந்திக்கிறேன், ஆகவே நான் இருக்கி றேன்’ என்பதற்கு பதிலாக, லக்கான், ‘நான் இல்லாதவிடத்துச் சிந்திக்கிறேன், நான் சிந்திக்காதவிடத்தில் நான் இருக்கிறேன்’ (I think where I am not, I am where I do not think ) அல்லது, ‘நான் எங்கே இருக்கிறேன் என்று சொல்லமுடியாதோ அங்கே சிந்திக்கிறேன்’ (I think where I cannot say I am) என்கிறார்.

சுயமும் மொழியும்

மொழியின் செயல்பாட்டைப் பற்றிப் பேசாமல் லக்கானின் கொள்கைகளைப் பற்றிப் பேச முடியாது. அவரது மொழிக்கொள்கை, தன்னிலைத்தன்மையுடன் (subjectivity) தொடர்புடையது. மொழியின்றி மானிடத் தன்னிலை இருக்க இயலாது. ஆனால் தன்னிலையை மொழியாகக் குறுக்கிவிடவும் முடியாது. இந்த வட்டச்சுற்று உறவில் மொழிக்கே முதன்மை.

இயற்கையுலகிலி ருந்து மனிதனை வேறுபடுத்துவது பேச்சுதான். மொழியின்றிச் சுதந்திரமான தன்னிலை எங்கு மில்லை. சசூர், நாம் எப்படியேனும் மொழிக்கு வெளியில் நிற்கமுடியும் என்று நம்பினார். லக்கான், ‘நாம் அனைவரும் மொழிக்குள் மூழ்கிக் கிடக்கிறோம், அதிலிருந்து வெளிவர நம் மால் இயலாது’ என்கிறார். மேனிலைமொழி/நுண்மொழி (Metalanguage) என்று எதுவும் கிடை யாது. நாம் நம்மை மொழிவழியாகத்தான் முன்வைத்தாகவேண்டும். பிறருடன் நமக்குள்ள ஒரே தொடர்பு மொழிதான். லக்கானின் கோட்பாட்டின்படி, உளவியல் நோயாளி (psychotic) என்பவன், மொழி இன்னதென்று அறியாதவன்.

சசூர், குறிப்பான்களுக்கும், குறிப்பீடுகளுக்குமான உறவு திடமானது, முன்னறியக்கூடியது என்று நம்பினார். அவ்வாறு நிலைப்படுத்தினால்தான் மொழிக்குறிகள் உருவாகும் என்றும் நம்பினார். ஆனால், சொல்லாடலின் வாயிலாகத்தான் அர்த்தமே உருவாகிறது என்பவர் லக்கான். ஒரு குறிப்பீட்டுச் சங்கிலித் தொடரில், தொடர்ந்த இடப்பெயர்ச்சிகளின் வாயிலாகத் தான் அர்த்தம் உருவாகிறது. ஒவ்வொரு குறிப்பீடும், தொடரில் குறிப்பானாக மாறுகிறது (com-mutability of the signified). பிரதிநிதித்துவம் அல்லது மீளாக்கம் (representation) என்பதற்ற மொழியின்நிலை காரணமாக, குறிப்பீடு எப்போதும் தற்காலிகமானதாகவே அமைகிறது.

ஒரு குறிப்பான், இன்னொரு குறிப்பானையே எப்போதும் குறிக்கிறது. எந்த ஒரு சொல்லும், உருவகத் தன்மையிலிருந்து விடுபட்டதல்ல. உருவகத்தன்மை என்பது, ஒரு குறிப்பானுக்குப் பதிலாக இன்னொரு குறிப்பானை இடுவது. ஆகவே தொடரில், குறிப்பான்கள் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு நழுவிச்செல்கின்றன(glissment-slippage). எந்தக் குறிப்பானும் பின்னோக்குவதில் குறிப்பீட்டைப் பெறுவதினால், நிறைவடைவதில்லை. ஒரு வார்த்தை, பிற வார்த்தைகளி
னாலேயே வரையறை பெறுகிறது. ஒவ்வொரு வார்த்தையும் வாக்கிய முடிவில்தான் அர்த்தம் பெறுகிறது. அதேசமயம், எந்த வாக்கியத்தையும் எப்போதும் கூட்டலாம். எப்போதுமே ஒரு வாக்கியத்தைச் சேர்க்கமுடியும்.

ஆழ்மனஒடுக்கத்தில்(repression), ஒரு குறிப்பான் இன்னொரு குறிப்பானுக்கு பதிலியாக வருகி றது. அப்போது பழைய குறிப்பான் நனவிலிக்குத் தள்ளப்படுகிறது. ஒரு ஆயுட்காலம் முழுவ தும் ஒரு தனிமனிதன் பல குறிப்பீட்டுத் தொடர்களை உருவமைக்கிறான். ஒரு பழைய குறிப்பானுக்குப் பதிலாகப் புதியதொன்றை இட்டுக்கொண்டே செல்கிறான். ஆகவே நனவிலிக்கும் நமது பயன்பாட்டுக்குறிப்பான்களுக்குமான தூரம் விரிந்துகொண்டே செல்கிறது.

ஒரு குறிப்பிட்ட அர்த்தம் மட்டுமே கிடையாதென்பதற்கு லக்கான் ஒரு கதை சொல்கிறார்.
ஒரு ஸ்டேஷனில் ரயில் வருகிறது. ஒரு பையனும் ஒரு பெண்ணும் எதிரெதிர் (இடவலமான) இருக்கைகளில் அமர்ந்திருக்கிறார்கள். பிளாட்பாரத்தில் வண்டி நின்றதும், ‘எதிரே பார், பெண்கள் இடத்திற்கு நேராக வண்டி நிற்கிறது’ என்கிறான் பையன். ‘முட்டாளே, நம் எதிரில் இருப்பது ஆடவர் இடம்தான்’ என்கிறாள் பெண்.

இங்கே பையனும் பெண்ணும் எதிரெதிராக அமர்ந்திருப்பதனால் ஒவ்வொரு பகுதியை மட்டு மே பார்க்கமுடிகிறது. குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்குமான போதாமைக்கு இது சான்று. அதிலும் இங்கே பையன் ‘பெண்கள் பகுதி’யையும், பெண் ‘ஆடவர் பகுதி’யையும் மட்டுமே பார்க்கின்றனர். (தனது பாலுக்கான பகுதியைப் பார்க்கமுடியவில்லை என்பது உட்குறிப்பு). ‘நாமெல்லாம் பெட்டியின் ஒரு புறத்திலோ மறுபுறத்திலோ மட்டுமே உட்கார இயலுகிறது, அந்தந்த இருக்கைகள் அளிக்கும் குருட்டுத் தன்மைக்கு ஆட்பட்டிருக்கிறோம், தொடர்வண்டியில் (குறிப்பீட்டுத் தொடரில்) இருப்பதற்கு வேறு வழியில்லை’ என்கிறார்போலும் லக்கான்.

சுயமும் அடையாளமும்

கண்ணாடியில் காணும் குழந்தை என்பதை உருவகமாகவே வைக்கிறார் லக்கான். நாம் நம் மைப் பிரதிபலிப்புத் தளத்தில் பார்க்கும்போது காண்பது பிம்பம் மட்டுமே. நாம் என்னவாக இருக்கிறோம் என்ற உண்மையை அறியமுடியாது. இவ்வாறு தொடர்பிம்பங்கள் இருக்கும் போது ‘பிரதிபலித்தலின் எல்லையற்ற தன்மையை’ உணர்கிறோம்.
அடையாளம் காண்பதின் இயங்கியல் என்பது ஒரு முக்கியமான கொள்கை. நாம் யாரென்ற தன்மையைப்

பிறர் வாயிலாகவே அறியமுடிகிறது என்பது இது. ஆனால் நாம் நிலையான, மாறாத பிம்பம் ஒன்றைப் பெறுவதில்லை. பிறருடன் நமக்குள்ள உறவினை வரையறுக்க முயன்றுகொண்டே இருக்கிறோம். ஆனால் தவறான புரிந்துகோளுக்கான வாய்ப்பும் இருந்து கொண்டே இருக்கிறது. எப்போதுமே ஒரு இடைவெளி உருவாகிக்கொண்டே இருக்கிறது. மற்றது/மற்றவர் (The Other) என்பதன் எதிர்வினையின் நிச்சயத்தன்மையை நாம் உணரமுடியாது. ஏனெனில் கண்ணாடி பிம்பம் என்பது இடவல மாற்றத்துக்குரியது.

ஒரு தனித்த சுயம் என்பது இல்லை என்பதை லக்கான் தொடர்ந்து வலியுறுத்துகிறார். நமக்கு நிலையான இயல்புகள் இல்லை என்பதையும் வலியுறுத்துகிறார். சார்த்தர் தமது ‘இருப்பும் இன்மையும்’ நூலில் வற்புறுத்தும் கருத்தும் இதுதான்.

சார்த்தரின் கோட்பாட்டுப்படி, ஒரு பிரக்ஞை தன்னைத்தானே உணரமுடியாது. ‘நான் இப்படித்தான், என் இயல்புகள் இவை தான்’ என்று வரையறுக்கும்போதே நம்மை ஒரு பொருள் ஆக்கிக்கொள்கிறோம். அப்பொருளின் இயல்பைக் கடந்த காலத்திலிருந்து எடுத்துரைக்கிறோம். இப்படிப்பட்ட நிலையான நிறுவப்பட்ட பண்புகளின் தொகுதியல்ல நாம் என்கிறார் சார்த்தர். அதேசமயம், அதற்கு எதிர் எல்லைக்குச் சென்று நம்மை ஓர் ‘இன்மை’யாகவும் காணமுடியாது.

லக்கானும் நமது எந்தக் குணமும் நாம் அல்ல என்கிறார். தன்னை முன்னிறுத்திக்கொள்வதில் தான் ‘தன்னிலை’ என்பது உருவாகிறது. ஆனால் இது முழுமையானதல்ல. காரணம், எந்த முன்னிறுத்தலும் நம்மை முழுமையாக அடைத்துவிட முடியாது. என்னை முழுவதுமாக வரையறுத்துவிடவும் முடியாது. அதேசமயம் நான் எல்லா வரையறைகளிலிருந்தும் தப்பித்துவிடவும் முடியாது. என்னை நானே தேடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். எனது தேடலின் பொருளும் நான்தான். எவரையுமே எந்த வரையறைக்குள்ளும் பிடித்து வைப்பது என்பது இயலாது. எந்த வருணனையும் மற்றதை முழுமையாகப் பிடித்துவிடுவதில்லை. மேலும் ஒருவர் தன்னை மற்றவர்கள் எப்படிக் காண்கிறார்கள் என்று நினைக்கிறாரோ அப்படித்தான் உணரமுடியும்.

இங்கே ஓர் அச்சுறுத்தல் இருக்கிறது. பயம் இருக்கிறது. காரணம், ‘மற்றது’ எப்படி அறிந்து கொள்கிறது என்பதில்தான் ஒருவருடைய அடையாளம் இருக்கிறது. ஹெகலும் இதையேதான் சொன்னார்: ‘பிரக்ஞை, பிறருடைய அறிதல் என்பதன்றித் தன்னைப் புரிந்துகொள்ளமுடி யாது’. இம்மாதிரிப் புரிந்துகோளை எதிர்பார்க்கும்போது நாம் பிறரை ஒரு பொருளாக்குகி றோம், கண்ணாடி ஆக்குகிறோம். இம்மாதிரிச் செய்வதில் ஓர் ஆதிக்கம் (aggression) இருக்கிறது. ‘நான் எனது சுதந்திரத்தை வலியுறுத்தியாக வேண்டும்’ எனப் பிறர்பேசுவதைக் கேட்டிருக் கிறோம் அல்லவா?

அவ்வாறானால் ஒருவரையருவர் புரிந்துகொள்ள வழியில்லையா? லக்கான் இல்லை என்று தான் சொல்கிறார். ஒருவரையருவர் புரிந்துகொள்ளும் தன்மை என்பது முழுமை யாக அடைய இயலாதது. காரணம், பிறரது பிரக்ஞைக்குள் முழுமையாக நாம்  புகஇயலாது. மேலும் குறிப்பான்களின் ஈரடித்தன்மையாலும் இது இயலுவதில்லை. சொல்வதற்கும் அர்த்தத்திற்கும் இடையில் ஒரு பெரும் இடைவெளி இருக்கிறது. சார்த்தர் இதேபோலத்தான் சொல்கி றார்: ‘நாம் இன்னொருவருடைய அன்பை வேண்டும்போதே அன்பைப் பொருளாக்கிவிடுகிறோம்’. ஒருவர் தன்னிலையாக இருக்கும்போது, அடுத்தவர் பொருளாகிவிடுகிறார். இது லக்கான் சொல்வது. ஆகவே தன்னிலையும் பிறரும் ஒருங்குசேர இயலாவண்ணம் பிரிக்கப் பட்டுள்ளனர். நமக்கு முழுமை தேவைப்படுகிறது. ஒருமைத்தன்மை, எல்லாம் கிடைக்கின்ற வளம், இவற்றின்மீது நமக்கு தீராக்காதல் இருக்கிறது. ஆனால் அது இயலாதது.

ஃப்ராய்டும் லக்கானும்

ஃப்ராய்டின் தொடக்கச் சிந்தனையில், தான் என்பது யதார்த்தக்கோட்பாடுடன் சம்பந்தப்பட் டது. நனவிலி, இன்பக்கோட்பாட்டுடன் சம்பந்தப்பட்டது. ஆனால் ஃப்ராய்டு பிறகு இதைச் சற்றே மாற்றினார். தந்தை தாயின் பிம்பங்களால், ஒன்றுதலால்தான் தன்னிலை உருவாகிறது என்றார். ஆனால் தான் என்பது கற்பனையானது என ஃப்ராய்டு கருதுவதில்லை. லக்கான் இவ்வாறு கருதுகிறார். ஒன்றுதல், நம்மை நிலைப்படுத்துகின்ற அதேசமயம், நம்மை நம்மிலி ருந்து பிரித்து வேறுஇடத்திற்குக் கொண்டுசென்றுவிடுகிறது. தனிமனித உந்துதல்களிலிருந்து, அவற்றின் நிறைவேற்றத்திலிருந்து தமது கோட்பாட்டைத் தொடங்குகிறார் ஃப்ராய்டு. லக்கானோ தன்னிலை என்பதே பிறரது இடையீட்டிலிருந்துதான் உருவாகிறது என்கிறார்.

ஃப்ராய்டு ஒருங்கிணைந்த தான் என்பதில் நம்பிக்கை வைத்தவர். லக்கானைப் பொறுத்தவரை சுயம் பிளவுபட்டது. ஃப்ராய்டுக்கு நனவிலி என்பது ஓர் அச்சுறுத்தும் அமைப்பு. லக்கானுக்கு நனவிலி என்பது மெய்யானது (real);  தற்பூர்வமானது(authentic). எனினும் நனவிலியை-அதாவது மெய்ம்மையை நாம் அறியமுடியாது. ஏனெனில் நனவிலிக்கும் நமக்கும் இடையில் ‘தான்’ குறுக்கிடுகிறது. தன்னை முற்றிலும் முன்நிறுத்தி நனவிலியைத் திரையிட்டுவிடுகிறது. தன்னையும் மறைத்துக்கொள்கிறது. சுயம் சுயத்தை அறியமுடியும் என்பது இயலாதது. அல்லது சுயம் சுயத்தைப் பிரதிபலிக்கமுடியும் என்பதும் இயலாதது.
ஃப்ராய்டைப் பொறுத்தவரை நனவிலி என்பது ஒரு தனித்த பிரதேசம். அது நமது ஆளுமைக்கு முந்தியது. லக்கானைப் பொறுத்தவரை தனித்த நனவிலி என்பதில்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும், நமது ஒவ்வொரு சொல்லிலும் நனவிலி இருக்கிறது. ஆனால் அதை நாம் பிடிக்க முயன்றால் நழுவிவிடுகிறது. (யூரிடைஸ் என்னும் கிரேக்கப் புராணப் பாத்திரத்தை இங்கு லக்கான் உவமையாக்குகிறார்).

ஃப்ராய்டியக் கொள்கைகளில் முதன்மைச் செயல்முறை, இரண்டாம்நிலைச் செயல்முறை என்பவை முக்கியமானவை. முதன்மைச் செயல்முறை, நனவிலியுடன், அறிவுசாராச் சிந்தனையு டன் தொடர்புடையது. இரண்டாம்நிலைச் செயல்முறை தர்க்கரீதியான சிந்தனையுடன் தொடர்புடையது. ஒரு பொருளின் நிறைவு நமக்கு மறுக்கப்படும்போது, நாம் வாழ்க்கையிலிருந்து தப்பித்து நமது மனமுறிவைக் கனவுபிம்பங்களின் உருவாக்கத்தில் மறைத்துக் கொள்கிறோம். ஆயினும் கொஞ்சநேரத்திற்குப் பிறகு இதில் யதார்த்தக் கோட்பாட்டின் தலையீடு நிகழ்கிறது. காரணம், நாம் புறவுலகில் வாழ்ந்தாக வேண்டும். எனினும் மனிதனின் அறிவுபூர்வத் தன்மை என்பது மிகவும் நொறுங்கக்கூடிய பொருளாக உள்ளது. அதனை நனவிலி அவ்வப் போது போட்டு உடைத்துக்கொண்டே இருக்கிறது. லக்கான் முதன்மைச் செயல்முறைக்கும் துணைமைச் செயல்முறைக்கும் வேறுபாடில்லை என்கிறார்.

முதன்மைச் செயல்முறையின் பணியைக் கனவுகளில் நன்கு காணமுடியும் என்றார் ஃப்ராய்டு. ‘கனவுகள், நனவிலிக்கு இட்ட ராஜபாட்டைகள்’ என்றார் அவர். லக்கானோ, கனவு என்பது ஒரு பனுவல் அல்லது பிரதி என்கிறார். கனவில் செறிவாக்கமும், பெயர்ச்சியும் நிகழ்கின்றன என்பார் ஃப்ராய்டு. செறிவாக்கலில் ஒரு குறிப்பான்மீது இன்னொரு குறிப்பான் சுமத்தப்படு வது நிகழ்கிறது, ஆகவே அது உருவகத்தன்மை கொண்டது என்றார் லக்கான். அதேபோலத் தணிக்கையைத் தவிர்க்கக் கையாளப்படும் பெயர்ச்சி, சினையெச்ச/ஆகுபெயர்த்தன்மை உடையது.

ஃப்ராய்டு, கலாச்சாரத்திற்கும் இயற்கைக்குமான உறவைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இறுதியில் கலாச்சாரமே மனித இயற்கையை வெல்லுகிறது என்றும் கருதினார். லக்கான் மனித இயற்கை இருக்கிறது என்பதையே மறுப்பவர். இயற்கை என்பது மெய்ம்மையானது. ஆனால் மனிதனின் பிடிக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் அது எப்போதுமே மொழியால் குறுக்கிடப்படுவது.

ஃப்ராய்டியப் படைப்புகளைப் படிக்கும்போது இயற்கை-கலாச்சார முரண்பாட்டின் துன்பியலில் நாம் ஈடுபடுகிறோம். லக்கான் சுட்டிக்காட்டுவது, நம்மிடமுள்ள தீர்க்கமுடியாத முழுமையின்மை, களையமுடியாத குறை.

ஈடிபஸ் சிக்கல் பற்றியும் இருவரும் வேறுபடுகின்றனர். ஃப்ராய்டியக் கோட்பாட்டின்படி, முதலில் வாய்சார் பாலியல். பிறகு குதம்சார் பாலியல், பிறகு குறிசார் பாலியல். ஈடிபஸ் நிலையில் ஒரு பையன், தனது தாயைத் தனக்கே முழுமையாக வேண்டுகிறான். ஆனால் குறியிழப்பு பயத்திற்கு ஆளாகிறான். தந்தையின் பயமுறுத்தும் குறுக்கீடு நிகழ்கிறது. பிறகு சிக்கல் தீர்வுக்குள்ளாகி, வாழ்க்கை அமைகிறது.

லக்கான் ஈடிபஸ் சிக்கலை அப்படியே நேர்ப்பொருளில் கொள்ளவில்லை. ஃப்ராய்டிய ஈடிபஸ் சிக்கலில், தந்தை உண்மையான தந்தைதான். ஆனால் லக்கான் பயன்படுத்துவது, தந்தையின் ஆதிக்கம்/பெயர் (Name of the father). இது மொழியின் பதிவில் நிகழ்கிறது. தந்தையின் ஆதிக்கம் என்பதுதான் சட்டம்.

ஃப்ராய்டின் வாய்நிலை, குதநிலை, குறிநிலை ஆகியவற்றை லக்கான் மறுக்கவில்லை. ஆனால் இவை தன்னிலைக்கான தொடர்புகளினூடே உருவாகிறது என்கிறார் லக்கான். ஃப்ராய்டு உண்மையில் அந்தந்த நிலைகள் இருப்பதாகக் குறிக்கிறார். லக்கான் எல்லாவற்றையும் குறியியல் எல்லைக்குள் கொண்டுவந்தே பார்க்கிறார். ஃப்ராய்டின் கோட்பாட்டில் ஆண்குறி என் பது முக்கியக் கருத்து. ஆனால் அதை உடல்சார்ந்த ஒன்றாகப் பார்க்காமல் அதிகாரம் சார்ந்த ஒன்றாகப் பார்க்கிறார். அதனால்தான் ‘லிங்கம்’ (Phallus) என்று குறிப்பிடுகிறார்.

லிங்கத்தில் சமத்தன்மைதான் உண்டு. சமநிலையின்மை இல்லை. எனவே லிங்கம் (அதிகாரம்) ஆணிடமோ பெண்ணிடமோ எவரிடமும் இருக்கலாம். லிங்கம் என்பது உடல்உறுப்பல்ல. அது அதி காரத்திற்கான குறியீடு. நாம் முழுமை கருதி வைத்திருக்கும் ஆசைகளே விழைவாக்கங்களாகவும் (fantasy), கனவுகளாகவும் உருப்பெறுகின்றன. நாமே லிங்கமாக இருந்தாலோ அல்லது மற்றவர்களின் லிங்கத்தை அடைந்தாலோ முழுமை பெறுவோம் என நம்புகிறோம். ‘மற்றது’ டன் ஒரு முழுமையான இணைப்பு ஏற்படுத்துவதற்குரிய குறிப்பான் லிங்கம். ஆகவே லிங்கம் என்பது எல்லையற்ற வளத்தைக் குறிக்கிறது. நாம் அடைந்திராத முழுமையைக் குறிக்கிறது.

ஃப்ராய்டைப் பொறுத்தவரை அறிவார்த்தமான சொல்லாடல்/உரை என்பது இயலும். அதில் சிலசமயங்களில் நனவிலிச் சக்திகள் இடையீடு செய்கின்றன. லக்கானுக்குச் சொல்லாடல் என்பதே நனவிலிதான். மொழியும் ஆசையும் தொடர்புடையன. லக்கானியக் கருத்தின்படி, ஆசை என்பது முழுமைக்கான ஒரு பிரயத்தனம். அது பாலியல் ஆசையை மட்டும் குறிப்ப தல்ல. நாம் ஆகவேண்டுமென்று விரும்பும் விழைவுக்குப் பெயர்தான் ஆசை.

ஃப்ராய்டு உந்துதல்களையும் இயல்பூக்கங்களையும் பற்றிப் பேசும்போது, லக்கான் ஆசை பற்றிப் பேசுகிறார். ஆசை என்னும் கருத்தை அவர் ஹெகல் பற்றி கோயேல் என்பவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளிலிருந்து பெற்றதாகக் கூறுகிறார். கோயேல், சுயபிரக்ஞையின் வளர்ச்சி பற்றிப் பேசுகிறார். உடலியல்/உயிரியல் சுயத்திலிருந்துதான் சுயபிரக்ஞை உருவாகிறது என்று ஹெகல் கூறினார். உடல்சார்ந்த-அங்ககமான குறை என்பதின்றி பிரக்ஞை வளரமுடியாது. எந்தக்குறையும் (உதாரணமாக, ‘எனக்குப் பசிக்கிறது’) ஓர் உயிர்ப்பொருள் என்ற முறையில் நமக்கு என்ன தேவை என்பதைச் சுட்டிக்காட்டி, நமக்கு நம்மை உணர்த்துகிறது. மேலும் குறித்த ஒரு பொருளை நாடுவதன் வாயிலாகவே ஆசை வளர இயலும். நாம் ஒரு பொருளை நாடாமல், பிறருடைய ஆசையை விரும்பும்போது மனிதராகிறோம். ஆசை என்பது இயங்கு வது. நிலையாக இருப்பதன்று. தொடர்ந்து ஓர் ஆசை மறுக்கப்படலாம். ஆனால் அது இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஹெகலும் லக்கானும்

லக்கான் தமது ஆசைக்கோட்பாட்டை ஹெகலிடமிருந்து பெற்றார் என்றோம். ஒரு பொருளை ஆழ்ந்து சிந்திப்பவன் அதிலே மூழ்கிவிடுகிறான். தன்னை மறந்துபோகிறான். அந்தப் பொரு ளைப் பற்றியே பேசுகிறான். தன்னைப் பற்றிப் பேசுவதில்லை. அதாவது அவனுடைய பேச்சில் ‘நான்’ இருப்பதில்லை. இம்மாதிரி பிறநினைவற்ற, செயலற்ற சிந்தனையைத் தவிர, வேறு ஏதாவதொன்று நிகழ்ந்தால்தான் நான் அங்கே வரும். இந்த ‘வேறு ஏதாவது ஒன்று’ என்பதுதான் ‘ஆசை’ என்கிறார் ஹெகல்.

ஆசை என்பது பொத்தாம்பொதுவான ஒரு சொல் அல்ல. எந்த ஆசையும் மனிதனுக்குள் அவனது ஆசையாகத்தான் உருப்பெறவேண்டும். அந்த ஆசையை வெளிப்படுத்த அவன் நான் என்ற சொல்லைப் பயன்படுத்தியாகவேண்டும்.

ஆசை மனிதனை அமைதியிழக்கச் செய்கிறது. அவனைச் செயலுக்குத் தூண்டுகிறது. செயல் ஆசையைத் திருப்திசெய்கிறது, ஆனால் எதிர்மறையாக்கம் வாயிலாகத்தான். அதாவது ஆசைப்படும்பொருளை உருவமாற்றுவதன்மூலம் அல்லது இல்லாமல் செய்வதன்மூலம்தான் ஆசை பூர்த்தியாக முடியும் (உதாரணம், உணவு).

எல்லாச் செயல்களுமே எதிர்மறையாக்குவதுதான். வேறொரு புறமெய்ம்மையைத் தனக்குள் வாங்கிக்கொள்வதான் வாயிலாகத் தனது மெய்ம்மையைக் காப்பாற்றிக்கொள்கிறது இந்த உயிரி. வேறு வகையில் சொன்னால், ஆசைப்படும் ‘நான்’ என்பது ஒரு காலியிடம் -அது எதிர்மறைச் செயல் ஒன்றின் வாயிலாக, தான் விரும்பும் தானல்லாததை அழித்து, மாற்றி, விழுங்கிவிடும் ஒரு வெற்றிடம்.

ஆகவே ஆசை என்பது ஒரு வெற்றிடத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இன்மை ஒன்றின் இருப்பு அது. ஆசைப்படும் பொருளிலிருந்து வேறுபட்டது அது. ஆசை என்பது இன்னொரு ஆசைப் படும் உயிரியை நோக்கி, இன்னொரு வெற்றிடத்தைநோக்கித் திருப்பப்படும்போது மானிட ஆசையாகிறது. இன்னொன்றின் ஆசையை விரும்பும்போதுதான் இந்த உயிரி தன்னிலை ஆகிறது. அதாவது இன்னொருவரின் விருப்பத்தை, ஆசையை நாம் விரும்பும்போது, அதாவது அவர்களின் அங்கீகாரம் நமக்குக் கிடைக்கும்போதுதான் நம்மை மனிதராக உணர்கிறோம். ஆகவே ஆசைகள் எல்லாமே சில மதிப்புகளுக்கான ஆசைதான். இன்னொருவரின் ஆசைக்கு நாம் ஆசைப்படுவதே அவர்களுடைய அங்கீகாரத்திற்கு, ஏற்பிற்கான ஆசைதான்.

இவ்வாறு பல ஆசைகள் ஏற்படும்போது, மானிடத் தன்னிலைகளுக்குள் போட்டி, சண்டை உருவாகிறது. ஆனால் இவர்களில் எவரும் அழிந்துபோக முடியாது. ஆகவே ஒரு தன்னிலை இன்னொரு தன்னிலைக்கு விட்டுக்கொடுக்கவேண்டி வருகிறது. அதாவது ஒரு தன்னிலை தன்னை அடிமையாகவும் இன்னொரு தன்னிலையை ஆண்டானாகவும் ஏற்றுக்கொள்கிறது.

ஓர் இயங்கியல் அல்லது எதிர்மறைச் செயலின் விளைவான சுதந்திரம் என்பது உண்மையில் ஓர் ஆக்கமுறுதலேயாகும். உள்ளது ஒன்றை மறுத்து இன்னொரு உள்ளதை அந்த இடத்தில் வைப்பதல்ல எதிர்மறுத்தல் என்பது. இனி வரப்போகும் ஒன்றிற்காக உள்ளதைத் துறத்தல் தான் அது.

சுருங்கச்சொன்னால், மனிதன் சுயஅடையாளமும் அல்ல, எதிர்மறையும் அல்ல, ஒரு முழுமையாக உருப்பெறப்போகிறவன் (synthesis). தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுதலிலும் மேனிலைப்படுத்திக்கொள்ளுதலிலும் (sublimation) தன்னை அவன் வென்றுகொள்கிறான்.

கல்வி என்பதும் இப்படியான செயலே. எல்லாக்கல்வியும் தொடர்ச்சியான சுயமறுப்புகளே. இந்தச் சுயமறுப்புகளின் வாயிலாகத்தான் – ஒடுக்குதல்களால்தான் – எந்தக்குழந்தையும் பயிற்சி பெற்ற முழு/சிக்கலான மனிதனாக/மனுஷியாக உருப்பெற முடிகிறது. கல்வியடைவதை நிறுத்திவிடும்போது வளராமல் சிறுத்துப்போகிறோம்.

தனித்தன்மையும் பொதுத்தன்மையும்

தனித்தன்மை என்பது தனிமனித கர்த்தாவின்(Agent) செயல். ஒவ்வொரு மனிதனும், தான் மனிதனாக இருப்பதனால், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அதே தனித்தன்மைகளுக்காக மற்றவர்கள் தன்னை மதிக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான். இந்த அங்கீகாரம்தான் பொதுத்தன்மை-மனித இருப்பின் சமூகக்கூறு. தனி மனிதத்தன்மையின் பொது அங்கீகாரத்தில்தான் தனிமனிதத்தன்மை உருவாகி வளர்கிறது.

தனிமனிதத்தன்மை என்பது தனித்தன்மை-பொதுத்தன்மை ஆகியவற்றின் இணைவு. தனித்தன்மை ஒரு முடிவுநிலை(thesis) என்றால், பொதுத்தன்மை அதற்கு எதிர்முடிவுநிலை (anti-thesis). தனிமனிதத்தன்மை என்பது இரண்டின் இணைவுநிலை(synthesis). முழுமைநோக்கி இயங்கும் இயங்கியல்நிலை. ஹெகல் இதைத்தான் சொல்கிறார். ஹெகலின் கூற்றுப்படி வரலாறு என்பது ஒரு சமூகமாக, ஓர் அரசாக, வளர்ச்சிபெறும்-அப்போது அதில் ஒவ்வொருவரும் தமது தனித்தன்மைக்கென மதிக்கப்பெறுவர். ஆயினும் ஆண்டான்-அடிமை என்ற எதிர்நிலை களைக் கடக்கும்போதுதான் இந்த இணைவு ஏற்படும்.
தனித்தன்மை-பொதுத்தன்மை என்பவற்றின் இணைவென்பது ஆண்டான்-அடிமை இவர்களின் இணைவும்தான்.

ஆனால் ஆண்டானாகின்ற தன்னிலை, மற்ற தன்னிலைக்கு அங்கீகாரம் தரமுடியாதுபோவதால் ஒரு நிலைக்கு வந்துவிடுகிறது. ஆண்டானுடைய ஆசைகளை நிறைவேற்ற, அடிமை தனது ஆசைகளை அடக்கிக்கொள்ளவேண்டி வருகிறது. (உதாரணமாக, ஒரு பெரிய மாளிகையில் சமைக்கின்ற ஒருவன், அந்த உணவைத் தான் சாப்பிட முடியாத நிலை).

ஆகவே தனது ஆசைகளை மறுப்பதன் வாயிலாக, ஒடுக்குவதன் வாயிலாக, அடிமையாக இருக்கின்ற தன்னிலை வேலையில் ஈடுபடுகிறது. வேலையில் ஈடுபடுவதால் தன்னை மாற்றியமைத்துக்கொள்கிறது. இயற்கையையும் மாற்றியமைக்கிறது. இப்படி மாற்றிக்கொள்வ தன் வாயிலாக இயற்கையிலிருந்து தன் அடிமைத்தனத்தை விடுவித்துக்கொள்கிறது. அதனால் தனது ஆண்டானின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டுகொள்கிறது. ஆகவே அடிமைகளுக்குச் சுதந்திரம் இயலுகிறது. ஆனால் நிலையாக இருக்கும் ஆண்டானுக்கோ சுதந்திரம் சாத்தியமில்லை. ஆகவே வரலாற்றில் இறுதியாக ஆண்டான் அழிந்துபோகிறான். சுதந்திரமும் வெற்றியும் அடிமைக்கு மட்டுமே. இது ஹெகல் சொல்லும் கதை.

சுருங்கச் சொன்னால், தனது அடையாளத்துக்கான போராட்டம், மனிதனை ஆண்டானாகவோ அடிமையாகவோ ஆக்குகிறது. ஆனால் ஆண்டானாக இருப்பதோ அடிமையாக இருப் பதோ எதிர்காலத்தில் மாறக்கூடியது. அது ஏதோ விதிக்கப்பட்ட, அல்லது உள்ளார்ந்த ஒன் றல்ல. மனிதன் ஆண்டானாகவோ அடிமையாகவோ பிறப்பதில்லை, தனது தேர்ந்தெடுப்பான செயல்மூலம் தன்னை அவ்வாறு ஆக்கிக் கொள்கிறான். (இங்கே திருவள்ளுவரின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்ற திருக்குறள் நினைவுக்கு வருகிறது). ஆண்டான்/அடிமை இருமைநிலை என்பது வரலாற்றுத் தத்துவத்தின் உள்தூண்டும் கோட்பாடு.

ஆகவே எல்லா வரலாறும் அடிமைகள் அடிமைத்தனத்தை எதிர் மறுப்பதே ஆகிறது. கடைசியாக, ஆண்டான் என்ற முடிபும், அடிமை என்ற எதிர்முடிபும் இயங்கியல்ரீதியாக முடிவுக்கு வருகின்றன. இந்தக் கருத்தை லக்கான் ஹெகலிடமிருந்து எடுத்துக்கொள்கிறார்.

அடையாளமும் எதிர்மறுத்தலும்

அடையாளத்தின் காரணமாகத்தான் ஒவ்வொரு மானிடத் தன்னிலையும் மற்றவர்க்கு மாறு பட்டு தனித்த அடையாளம் கொண்டதாக இருக்கமுடிகிறது. ஆனால் எதிர்மறுத்தல் இருப்பதனால்தான் ஒரு தன்னிலை தன்னையே மறுத்து இன்னொன்றாக வளர்ச்சியடையவோ, ஏன், எதிர்மாறானதாகவோகூட ஆகமுடிகிறது. அடையாளமும் எதிர்மறுத்தலும் ஏதோ தனியாக இருப்பவையல்ல. அவை ஒரே அம்சத்தின் இருபக்கங்கள். மானிடர்கள் எப்போதும் ‘கொடுக்கப்பட்டதை’ மறுத்துக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்மறுத்தல் என்பது இருக்கும் அடையா ளத்தை மறுப்பதுதான். ‘கொடுக்கப்பட்ட’ மெய்ம்மையை மறுப்பதன்வாயிலாகவோ அவர்கள் தன்னிச்சையானவர்களாகவும், மனிதர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே எதிர்மறுத்தல் என் பதே மானிடவிடுதலைதான்.

ஆசைமீது ஆசை

இந்த ஹெகலியக் கருத்துகளை லக்கான் எப்படிப் பயன்படுத்துகிறார் என்று காண்போம். எல்லோருக்கும் நிறைவுசெய்யவேண்டிய பௌதீகமான தேவைகள் உள்ளன. வாய்நிலையில் உள்ள குழந்தைக்குத் தாயின் மார்பு வேண்டும். அது தனது தேவையை நிறைவுசெய்யத் தாயை வேண்டுகிறது (அழுகிறது). ஆக, தேவை, தேவைக்கான முறையீடாக (demand) மாறுகி றது. அதேசமயம் வெறும் பால் மட்டும் அதற்குப்போதாது. தாயின் அன்பு, அரவணைப்பு, அறிந்தேற்பு (recognition), பாராட்டு வேண்டும்.

தேவைகள் உடல்சார்ந்தவை. ஆனால் தேவைக்கான வெளிப்பாடு என்பது உடல்சார்மொழியினால் இடையீடுபடுகிறது(mediated). தேவை வெளிப்பாடு என்பது எப்போதுமே குறித்த ஒன்றை நோக்கியதுதான். ஆசை என்பது, தேவை வெளியீட்டினால் குறிக்கப்படாமல் அதற்கு அப்பால் வெளியில் நிற்பது. குழந்தை அழுகிறது. தாய் இனிப்பு தருகிறாள். ஆனால் அதன் தேவை நிறைவேற்றம் கருதி, அந்த இனிப்பு வழங்கப்பட்டதா அல்லது அன்பினால் வழங்கப் பட்டதா என்பதைக் குழந்தை அறியமுடிவதில்லை. இம்மாதிரி எல்லா எதிர்வினைகளுமே ஈரடித்தன்மை கொண்டவையாகவே உள்ளன என்கிறார் லக்கான். இந்த ஈரடித்தன்மை காரணமாக மீண்டும் ஒரு தேவைக்கேட்பு எழுகிறது. இப்படியே தொடர்ந்து எல்லையற்றுச் செல்கிறது.

தேவை, தேவைக்கேட்பு, ஆசை இவை மூன்றிற்குமான தொடர்பென்ன? குழந்தை அழுவதற்குக் காரணம் பசியாக இருக்கலாம் (உடல்சார் தேவை). இந்த உடல்சார் தேவையை அப்படியே வெளியிடமுடிவதில்லை. அழுகை என்ற குறியீட்டுச் செயல் மூலமாகத்தான் வெளியிட வேண்டிவருகிறது. ஆகவே அதிலும் ஒரு பிளவு இருக்கிறது. தேவைக்கும் ஆசைக்குமான பிளவு அங்கே உருவாகிறது.

ஒருவகையில் தேவைக்குரல்(demand) என்பது தனக்குள்ளாகவே அர்த்தம் கொண்டதல்ல. மற்றதன் எதிர்வினையாலும் அது உருவமைக்கப்படுகிறது. நமது தேவைக்குரல் குறித்த ஒன்றிற்காக எழுவதாக இருப்பினும் பிறரது எதிர்வினை பற்றிய நிச்சயம் நமக்கில்லை. அன்பை எப்படி அளிப்பது?

மனிதர்கள் தொடர்ந்து இடைவிடாது தேவைக்கேட்பினை எழுப்பிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அவர்களே அதை உணராமலும் இருக்கலாம். தேவைக் கேட்பு என்பது தேவையை வெளிப்படுத்தும் முறைதான். ஆனால் அது மறைமுகமானது, கோணலானது. ஆசை என் பதோ எப்போதுமே மற்றதற்கான ஆசைதான். தேவை என்பது தற்காலிகமாகத் தேவைக் கேட்பினால் அழிக்கப்பட்டாலும், ஆசையின் மறுபக்கத்திலிருந்து மீண்டும் எழுகிறது. பலசமயம் ஒரு பொருள் நமக்கே, நமக்கு மட்டுமே வேண்டுமென விரும்புகிறோம். ஆனால் அப்படிப்பட்ட பொருள் ஏதுமில்லை. தேவைக் கேட்பு ஒரு எதிர்வினையை உருவமைக்கிறது. ஆனால் அந்த எதிர்வினை போதுமானதாக ஒருபோதும் அமைவதில்லை. பிறர் நம்மை நமது தனித் தன்மைக்கெனவே விரும்புகிறார்களா என்பது நிச்சயமில்லை.

தேவை நிறைவின்மை அல்லது குறை என்பதிலிருந்துதான் ஆசை எழுகிறது. (இந்தக் குறை எப்போதும் பூர்த்திசெய்யப்படமுடியாதது, நிறைவுபடுத்தஇயலாதது. ஒரு தேவைக்கேட்பிலிருந்து இன்னொரு தேவைக்கேட்பிற்கு தள்ளிக்கொண்டேயிருக்கிறது.)

இழப்பின்/இன்மையின் உணர்வு (sense of loss)

இழப்பின் உணர்வு என்பதுதான் குறை(lack). பழங்காலக் காவியக் கதைபோல, லக்கானின் கோட்பாடும் பிறப்பிலிருந்து தொடங்குகிறது. ஆனால் பிறந்தபின் குழந்தையின் உடல்பிராந்தி யப் பகுப்புணர்வு ஏற்படுகிறது (territorialisation of the body). பிறகு கண்ணாடி நிலை. பிறகு மொழி வசப்படுதல். பிறகு ஈடிபஸ் நிலை. இந்தக் கதையின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு குறை அல்லது இன்மை காரணமாகவே உணரப்படுகிறது.

பிறக்கும்போது ஏற்படுவது முதல் இழப்பு. இது கருப்பையில் ஆண்/பெண் என்ற பால்வேறுபாடு தொடங்கும்போதே ஏற்பட்டுவிடுவதாக லக்கான் கூறுகிறார். ஆயினும் தொப்புள்கொடி துண்டிக்கப்படும்வரை இந்த இழப்பு உணரப்படுவதில்லை. இந்தக் குறை பாலியல் சார்ந்தது. ஓர் ஆணாகவும் பெண்ணாகவும் ஒருங்கே இருக்கமுடியாமையில்-முழுமை பெறாமையில்- ஏற்படும் இழப்பு இது. ஆதியில் ஆண்-பெண் இணைந்த முழுமை என்னும் கற்பனை நிலை இருந்ததாக லக்கான் நினைக்கிறார். இந்த முழுமைக்கென மனிதர்-ஆண்கள், பெண்களை நாடியும், பெண்கள் ஆண்களை நாடியும் ஏங்குகின்றனர். ஏனெனில் தன்னளவில் முழுமை யோ நிறைவோ இல்லை. இந்தக்குறை, முழுமை-ஈருடல் ஓருடலாக ஆகும்நிலை-நோக்கி மனி தனைத் தள்ளிக்கொண்டே இருக்கிறது.

பிறப்பிற்குப் பின், ஆனால் பேச்சை அடைவதற்கு முன், மொழிவசப்படும்முன், இன்னொரு குறை நேர்கிறது. ஈடிபஸ்நிலைக்கு முந்திய உடல்பிராந்தியப் பகுப்புநிலை என்று இதனைச் சொல்லலாம். பிறந்த குழந்தை சில நாட்கள் (சில மாதங்கள்)வரை தன்னையும் தன் சூழலை யும் பிரித்துப்பார்ப்பதில்லை. பிறகு கொஞ்சம்கொஞ்சமாகத் தனது உடலின் பிராந்தியங்களை பகுத்துணர்கிறது. லிபிடோ அல்லது வாழ்சக்தி சில உடற்பகுதிகள் மூலமே வெளிப்படவேண் டும் என்ற பகுப்பு புலனாகிறது. இந்த உடற்பகுப்பில் துணைபுரிவது தாய்தான். இந்த இந்த உடற்பகுதி இன்ன வேலைக்காக மட்டும் என்று வரையறைப்படுத்துபவள் அவள்தான். இவ்வாறு உடலெங்கும் பாயும் ‘ஒருங்கிசையா வாழ்சக்தி’, இப்போது வரையறைப்படுத்தப்பட்டு
அது பாயும் வாய்க்கால்கள் நிறுவப்படுகின்றன. ஆகவே வாழ்சக்தி உந்தல்களாக(drives) உருவெடுக்கிறது.

ஒவ்வொரு உடற்பகுதி சார்ந்தும் உந்தல்கள் வரையறைப்பட்டிருப்பதால், அவை இசைவுபெற்றவை. இவை செயற்கையாக ஒவ்வொரு உடற்பகுதியுடன் தொடர்புபடுத்தப்படுவதால் உந்தல்கள், ஆதிவாழ்சக்தியின் மறைமுகவெளிப்பாடுகளாகவே அமையவியலும். தனது வாழ்சக்தியுடன் நேரடித் தொடர்பற்று, குறுக்கீடற்ற தொடர்பற்றுப்போவதே இரண்டாவது குறையாகும்.

‘கற்பனையானது’ என்ற தொடரின்மூலம் லக்கான் குழந்தை ஒன்றுபடுதல்/இருமைநிலை என்ற நிலையை அடைவதை எடுத்துக்காட்டுகிறார். ஒரு தன்னிலையை மொழிவயமாக்கலுக்கும் ஈடிபஸ்நிலைக்கும் இட்டுச்செல்வது குறியீட்டுநிலை(symbolic). இதற்குமுந்திய கட்டம்தான் கற்பனைநிலை. குறியீட்டுநிலைக்குள் புகுந்தபின்னும் கற்பனைநிலை தொடர்கிறது. வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து இருக்கிறது. கற்பனை நிலையை நன்கு எடுத்துக்காட்டுவது கண்ணாடி நிலை.

6 முதல் 18 மாதங்களுக்குள்ளாக குழந்தைக்குத் தான்-மற்றது என்னும் பகுப்புணர்வு நேர்கி றது. தன்னையே மற்றதாக உணர்கிறது முதலில். கண்ணாடியில் தன்னைக் குழந்தை முதன் முதலில் பார்ப்பதால் இது ஏற்படுவதாக உருவகப்படுத்துகிறார் லக்கான். குழந்தை தன்னிடம் உணராத முழுமையினைத் தனது பிம்பத்தில் காண்கிறது. அது தனது பிம்பம் என்பதை உணர்கிறது. ஆனால் இந்த உணர்வு ஒரு தவறான புரிதலுணர்வு(misrecognition). இது குழந்தையை அந்நியப்படுத்துகின்ற கணம். காரணம், ஒரு வெளிபிம்பத்தின் வாயிலாகத் தன்னை வரையறைப்படுத்திக்கொள்வது என்பதே தன்னிலிருந்து தான் அந்நியப்படுதல்தான். ஆகவே அந்த பிம்பத்தைப் பற்றி எதிரும் புதிருமான உறவுகளைக் குழந்தை கொள்கிறது. கண்ணாடியில் தோன்றும் அந்த பிம்பத்தைக் குழந்தை நேசிக்கிறது. அதேசமயம், அது தனக்கு அந்நியமாகவே இருப்பதால், வெறுக்கவும் செய்கிறது. இந்த எதிரெதிர் உணர்வுகளுக்கிடையிலான தீவிர அலைவுகளில்தான் தன்னிலை உருவாகிறது.

குறியீட்டு ஒழுங்கைத் தன்னிலை அடையும்போது, அதன் உடல்தேவைகள் குறித்தலுக்கான குறுகிய வலைப்பின்னலுக்குள் மாட்டித் தத்தளித்து வெளிப்பட நேர்கிறது. இதன் காரணமாக அவை, பிறகு திருப்திப்படுத்த இயலாத தன்மையை அடைகின்றன. தேவைகளின் மறைமுக மான வெளிப்பாடுகளாகவே உந்தல்கள் அமைகின்றன. ஆனால் மொழி அவற்றின் உறவைத் துணடித்துவிடுகிறது.

ஃப்ராய்டின் வா/போ (fort/da) விளையாட்டைக் குழந்தை ஒரு குறிப்புத்தொடர்(signifying chain) உருவாக்குவதாகக் கண்டு, குழந்தை மொழிக்குள் புகுந்த நிலை அது எனக் காண்கிறார் லக் கான். தனது தாய் தன்னைவிட்டுப் பிரிந்த கசப்பைக் குறைக்கக் குழந்தை அந்த விளையாட் டில் ஈடுபட்டதாக ஃப்ராய்டு சொல்கிறார். லக்கானோ அந்த விளையாட்டு ஏற்படுத்தும் சுய அந்நியப்படுதலை வலியுறுத்துகிறார். குழந்தை விளையாடப் பயன்படுத்திய பஞ்சுச்சுருளை லக்கான் சிறு-மற்றது (la petit-a) என்கிறார். இழந்த பொருள் என்பதற்கான பதிலீடு அது.

உதாரணமாகக் குழந்தை தாயின் மார்பை முதலில் இழக்கிறது. (இழந்த பொருள்). பிறகு தாயின் பார்வை, குரல் ஆகியவற்றையும் இழக்கநேர்கிறது. இவற்றைச் சுயமாகவே குழந்தை கண்டு வந்ததால், தனது சுயஇழப்பாகவே இவற்றை உணர்கிறது. அதற்கு ஈடுசெய்யச் ‘சிறு-மற்றது’களைக் குழந்தை தேடுகிறது.
வா/போ விளையாட்டை ஃப்ராய்டு பார்த்ததுபோலவே உருவகமாகவே லக்கானும் கண்டார். ஆனால் இது தனது உந்துதல்களை மொழியினால் அடக்குவதான நிலை என்றார். இப்படித் தனது உந்துதல்களுக்கும், தனக்குமான வேறுபடுதலை/பிளவினை (rupture) தன்னிலை இருப் பின் கரைந்தழிதல்(aphanisis) என்கிறார். இதற்குப் பின் தன்னிலை, தனது உந்துதல்களினின்று நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டுவிட்டது மட்டுமல்ல, இனிமேல் தனது ஆசைகளையும் அடையாளத்தையும் நிர்ணயிக்கப்போகும் ஒரு குறியீட்டு ஒழுங்கின் வசப்பட்டுவிட்டதுஅது.

ஆசையின் தோற்றநிலை, நனவிலியின் தோற்றம், குறியீட்டு ஒழுங்கினுள் தன்னிலையின் எழுச்சி ஆகிய மூன்றும் நெருங்கிய தொடர்புடைய நிகழ்வுகள். தன்னிலையின் பிடிக்கு அகப் படாத இலட்சிய பிம்பங்களைநோக்கி ஆசை செலுத்தப்படுகிறது. மற்றவர்கள் தன்னிலையினை நிறைவுபடுத்தச் சக்தியுள்ளவர்கள் என்று நம்பினால்தான் தன்னிலை பிறரை நேசிக்க முடியும். ஆகவே ஆசை என்பது நார்சிஸ நோக்கு(தன்நேசிப்புக்) கொண்டதே. பொருளை/பிறரை நேசிப்பது என்பது தான் இழந்த பொருளை இடைவிடாது தேடுவதே.

ஈடிபஸ்நிலையையும் மொழியின் பேரத்தால் ஏற்படுவதாகவே லக்கான் நினைக்கிறார். மொழி நிலைக்குள் தந்தை-தாய்-அம்மான் என்றெல்லாம் வேறுபடுத்திய பிறகே தகாப்புணர்ச்சி விலக்கு ஏற்படுகிறது. தந்தையைக் குறிப்பதாகிய ஆதிக்கக் குறிப்பானை (தந்தையின் ஸ்தானம்/ பெயர்) எனக்குறிக்கிறார் லக்கான். இது தன்னிலையின் வரலாற்றில் மிகமுக்கியமான ஒன்று. குறியீட்டுப் பரப்பு விரிவிலும் மிக முக்கியமான ஒன்று.

ஆகவே ஃப்ராய்டு தருகின்ற பாலியல் விளக்கங்களுக்கு முற்றிலும் மாறான ஒன்றை லக்கான் அளிக்கிறார். ஃப்ராய்டு ஆண்குறி என்பதற்கு அளித்த முக்கியத்துவத்தினை லக்கான் ‘லிங்கம்’ என்ற குறிப்பானுக்கு மாற்றுகிறார். குறை அல்லது இன்மை என்பதற்கு எதிரான எல்லா மதிப்புகளையும் லிங்கம் என்பது குறிக்கிறது. இது உடல்சார்ந்த ஒன்றல்ல. உரைசார்ந்த ஒன்று.

ஆயினும் லிங்கம் என்பதில் உடல்சார்ந்த ஒன்றைக் குறிக்கும் ஈரடிநிலை இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஒருநிலையில், தன்னிலை உருவாகிவரும்போது அதன் பல்வேறுநிலைகளில் அது இழிந்துவிட்ட-இனி கண்டு அடையமுடியாத-பிரிந்துபோய்விட்ட பல்வேறு பொருட்களின் குறிப்பானாக லிங்கம் அமைகிறது.

அதாவது குறியீட்டுத்தளத்தில் புகுவதற்கென-அர்த்தப்படுத்தலை அடைவதற்கெனத் தன்னிலை துறந்துவிட்ட உடல்சார் மெய்ம்மை அல்லது தேவைகளின் குறிப்பான்தான் லிங்கம். மறுதலையாக, ஓர் ஆணாதிக்க சமுதாயத்தில் ஆண்தன்னிலை அடையக்கூடிய கலாச்சார உரிமைகள், நேர்முக மதிப்புகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவகமாகவும், பெண்தன்னிலையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவற்றின் அடையாளமாகவும் லிங்கம் இருக்கிறது. ஆகவே கலாச்சாரத்துக்குள் புகும்போது தன்னிலை இழந்தவற்றின் தொகுப்பாகவும் அதே கலாச்சாரத்தால் அடையப்பட இருக்கின்றனவற்றின் தொகுப்பாகவும் அமைகிறது.

தனது அடையாளத்தைத் தன்னிலை காணும் சொல்லாடலே மற்றதன் சொல்லாடல்(discourse of the Other) தான். இது தன்னிலைக்கு அப்பாற்பட்டு அதன் வரலாறு முழுவதையும் கொண்டு இயங்குவது. இந்த ஒழுங்கமைவுக்குள் பாலியல் வேறுபடுத்தலுக்கு மிகுந்த இடமிருக்கிறது. நமது கலாச்சாரத்தின் லிங்கமைய நடைமுறைகளுக்கு இது காரணமாவதை நம்மால் உணர முடிகிறது.

லக்கான் கூறுவனவற்றுள், தன்னிலை என்பது தனித்து உருவாவதல்ல-அது தொடர்பினால்-பிறருடைய இடையீட்டினால் உருவாவது என்பது முக்கியமானது. ‘நான்’ என்பதை உணர முடிவதே,’ நீ’, ‘மற்றது’ என்பதிலிருந்து வித்தியாசப்படுத்தித்தான். அதாவது தன்னிலை என்பது சாராம்சமானதல்ல. அது உறவுகளின் தொடர்ச்சி அல்லது சங்கிலிகளின் கூட்டுதான். தனி மனிதனுக்கு முன்னரே அமைந்து, அவனது/அவளது கலாச்சார அடையாளத்தை வரையறுப்ப தாகிய ஒரு குறிப்பீட்டு ஒழுங்கமைவு இன்றித் தன்னிலை என்பது இயலாதது. ஆகவே தன்னிலையை உருவாக்கும் செயலாவதும் இருக்கும் ஒழுங்கமைப்பை நிலைநிறுத்துவதும் சொல்லா டல்தான்.

லக்கான் கற்பனைநிலை, குறியீட்டு நிலை, மெய்யானநிலை என்பவற்றால் என்ன விஷயங்களைச் சொல்லுகிறார் என்பதைத் தொகுத்துக்கூறலாம்.

கற்பனைநிலை என்பது மொழிக்கு முந்திய நிலை. பார்வைத் தர்க்கமே இதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. குறியீட்டு நிலைக்கு முந்தியநிலை இது. இது நிகழும் கட்டத்தினைக் கண்ணாடிநிலை என்று குறிக்கிறார் லக்கான். இந்தக் கட்டத்தில் தான் என்னும் உணர்வு குழந்தைக்கு ஏற்படாததால், தனது வடிவத்தைப் பிறவடிவங்களிலிருந்து பகுத்துப் பார்க்கும் உணர்வு இல்லை. அடித்த குழந்தை தானே அடிபட்டதாகச் சொல்வதையும், இன்னொரு குழந்தை அழுவதைப் பார்த்துத் தானே அழுவதையும் இந்நிலையில் காணலாம்.

கற்பனை நிலை ஈடிபஸ்நிலைக்கு முந்தியது. மற்றது என்பதைக் கண்ணாடிமூலம் உணரத் தொடங்கும் நிலை இது. மற்றவர் எனத் தான் உணர்பவரோடு தான் இணையஅவாவும் நிலை இது. குழந்தை, மற்றவர்களுடைய பிம்பங்களோடு தன் பிம்பத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்கி றது. இம்மாதிரிப் பல தவறான புரிதல்களிலிருந்தே ‘தான்’ என்பது தோன்றுவதால், அதற்கு இப்போது ஒருங்கிசைந்த சுயமான ஆளுமை என்பதில்லை. ஒரு பிளவுபட்ட’ தானைக்’ குழந்தையிடம் சந்திக்கிறோம்.

தாய் எதனை விரும்புகிறாளோ, அதுவே தானாக ஆகும் ஆசைதான் குழந்தையின் முதல் ஆசையின் தோற்றம் என்று லக்கான் குறிக்கிறார். குழந்தை தானே லிங்கமாக மாறி, அவளது குறையைத் தீர்த்து நிறைவு செய்ய விழைகிறது. இச்சமயத்தில் தாய்க்கும் குழந்தைக்குமான உறவு ஒருங்கிணைந்ததாகவும், சிலசமயங்களில் தவிர்ந்ததாகவும், உடனடித்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. பின்னால் தாய் ஆசைப்படும் பொருளாகத் தான் இருக்க விழையும் ஆசை, குழந்தையைத் தந்தையுடன் ஒன்ற வைக்கிறது.

சமூகத்தன்மையற்ற, இருமைநிலையும் ஒருங்கிசைவும் கொண்ட குழந்தை-தாய் உறவில் விரிசல் ஏற்பட்டு, குறியீட்டு உலகம் புகுகிறது. இப்போது மூன்றாவது பதமாகத் தந்தை புகுகிறான். அவனது கட்டளையையும் பெயரையும் (ஆதிக்கத்தையும்)ஏற்றுக் குழந்தை குறியீட்டுலகில் நுழைகிறது. குறியீட்டுலகில், பொருள்களுக்கும், அவற்றைக் குறிக்கும் சொற்களுக்கும் நேருக்கு நேரான தொடர்பு என்பதில்லை. குறியீடு என்பதே எல்லையற்ற திறந்த அர்த்த ஒழுங்கினை எழுப்பிவிடுவதுதான். குறியீட்டு அர்த்தநிலை என்பது சமூகவயப்பட்டநிலை, நார்சிஸ நிலை அல்ல. ஈடிபஸ்நிலை குழந்தையைக் குறியீட்டு ஒழுங்கிற்குள் புகச்செய்கிறது. மொழியின் சட்டங்களும் சமூகச் சட்டங்களும் குழந்தைக்குள் புகுந்து இடம்பெற்றுவிடுகின்றன. தந்தையின் பெயரையும் அவனது ‘இல்லை’ என்ற மறுப்பையும் ஏற்கும்போது இவ்விதம் நிகழ்கிறது. மொழிக்கு முந்திய உடலுணர்வு என்பது இல்லை. ஆகவே ஈடிபஸ்நிலையையும் மொழிவாயிலாகவே லக்கான் விவரிக்கிறார்.

உடலியல் என்பது மொழிமூலமாகவே தன்னிலையால் அறி யப்படுகிறது. உடல் மட்டுமல்ல, எந்த ஒரு அனுபவமுமே குறியீடுகளால் இடையீடுபட்டுத்தான் குழந்தைக்கு வருகிறது. அது சமூகமரபுகளின்படி விளக்கவும்படுகிறது.

லிபிடோ ஆராய்ச்சி, மொழியியல் வகைமைகள் இவற்றிற்கிடையில் இடைத்தொடர்புபடுத்த வந்ததே குறியீட்டொழுங்கு (Symbolic order) என்னும் கருத்து. இரண்டையும் ஒரு பொதுவான கருத்துச் சட்ட கத்திற்குள் பேசவழிசெய்வது அது. ஈடிபஸ்நிலையில் சிக்கும் குழந்தை தந்தையின் பெயரைக் கண்டறிகிறது. மொழிவசப்படுதல் என்பது மனத்திலிருந்து அந்நியப்படுதல். ஆனால் இதற்கு ஒரே ஒரு மாற்றுதான் உண்டு-பழையபடியே மொழியற்ற, தான்-மற்றது வேறுபாடற்ற, ஒரு நிலைக்குப் பின்னோக்கித் தன்னிலை திரும்பவேண்டும். ஆனால் இது இயலாதது. தனது பெயரையும் தந்தையின் பெயரையும் அறிதல், கருத்தாக்க உலகில் தன்னிலைக்குத் தலை கீழான மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

மொழி தன்னிலையை நிர்ணயப்படுத்தும் செயல் இது. ஃப்ராய்டிய நனவிலி இங்கே புனராக்கம் பெறுகிறது. ‘நனவிலி என்பது மற்றதன் சொல் லாடலே’. இது, மொழியை நனவுநிலையோடும் சிந்தனையோடும் மட்டுமே தொடர்புபடுத்திப் பார்ப்பவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.
குறித்தல் வாயிலாகப் பாலியல் சார்ந்த தன்னிலை உருவாகிறது என்று சொல்லிய லக்கானின் கருத்து, பெண்ணியவாதிகளிடம் பெரும் ஆர்வத்தினைத் தூண்டியது.

குறித்தல் என்பது அர்த்த உற்பத்தியையும், அதேசமயம், தன்னிலைகள் உருவாக்கப்பட்டு சமூக உறவுகளுக்குள் வைக்கப்படும் தன்மையையும் ஒருங்கே குறிக்கும். ஃப்ராய்டு உடலியல் சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பதனால், பெண்ணுக்கு அவரது கொள்கைகளில் விடிவில்லை. ஆனால் லக்கானின் கோட்பாட்டின்படி, பெண்களுக்கு விமோசனம் உண்டு என்றாகிறது. ஆண்குறியின் நிர்ணயத் தன்மைக்கு மாறாக, லிங்கம் என்ற குறிப்பானை வைத்ததனால், லக்கானின் கொள்கையும் நிர்ணயத்தன்மை வாய்ந்ததே என்று சிலர் கூறுவர். இதற்குக் காரணம், லெவி ஸ்டிராஸின் தகாப்புணர்ச்சி விலக்கு என்ற கருத்தினை லக்கான் முற்றிலுமாகச் சார்ந்திருப்பதே ஆகும். ஆகவே தந்தையின் சட்டம் என்ற கருத்தினை லக்கான் வலியுறுத்துகிறார்.

மெய்யானநிலை (Reality stage) என்பது அடுத்தது. நாம் என்றைக்குமே அறியமுடியாத யதார்த்தமே மெய்ந் நிலை எனப்படுகிறது. மொழிக்கு அப்பாலிருப்பது அது. ஆனால் நம்மால் அறியமுடியாவிட் டாலும், அது இருப்பதை யூகிக்கிறோம். தானாக, உடனடியாக, உணரமுடியாதது இது. ஆனா லும் மற்றநிலைகளின் குறுக்கீட்டினால் உணரமுடிவது என்பது இதனைச் சிக்கலாக்குகிறது. குறியீட்டாக்கத்தினை முற்றுமுழுதாக எதிர்த்து உட்படாத எதுவோ அதுதான் மெய்ந்நிலை. ஆயினும் ஃபிரடெரிக் ஜேம்சன் சொல்கிறார்-‘லக்கானிய மெய்ந்நிலையைக் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் பிரமாதமல்ல-அது வரலாறுதான்’.

இறுதியாக லக்கான்மீது வைக்கப்படும் சில குற்றச்சாட்டுகளைக் கவனிப்போம்:

எல்லாவற்றையும் அறிவுமயப்படுத்தியே அணுகுகிறார் அவர்; உணர்ச்சிகளுக்கு உரிய இடமளிப்ப தில்லை; இது ஒரு குற்றச்சாட்டு. லக்கானைப் பொறுத்தவரை, உணர்ச்சி என்பதும் ஒரு குறிப்பான்தான். அது ஏதோ ஓர் அர்த்தத்தைத் தருகிறது-ஆனால் அந்த அர்த்தம் என்ன என்பது அறியமுடிவதல்ல.

அவரது தத்துவங்களை ஆய்வுக்கு உட்படுத்திச் சோதிக்கமுடிவதில்லை, காரணம் இவற்றிற்கான மருத்துவ முடிவுகள் கிடைப்பதில்லை என்பது இன்னொரு குற்றச்சாட்டு. அவர் மருத்துவ நடைமுறைக்காக அன்றிப் பல்கலைக்கழக ஆய்வுகளுக்காகவே கொள்கையை உண்டாக்கினார் என்கிறார்கள் இவர்கள். ஆனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு உண்டு. அவரைப் பின்பற்றும் குழந்தை உளவியலாளர்கள் ஃப்ரான்ஷுவா டோல்டோ, மாட் மன்னோனி போன்றவர்களின் உதாரணங்களை ஆய்வுசெய்தால் அவரது கொள்கைகளின் மருத்துவப் பயன்பாடு தெரியவரும்.

இன்னும் ஒரு முக்கியக் குற்றச்சாட்டு, அவரது கோட்பாடு, ஃப்ராய்டின் லிங்கமையவாதத்தை இன்னும் அழுத்திக்கூறுகிறது என்பது. லூசி இரிகரி என்னும் பெண்ணியவாதி, லிங்கமைய வாதம் என்பதே ஆண்வழிச் சமூகத்தினால் உண்டான நிலையே தவிர, பொதுவான உள்ள வளர்ச்சியைக் குறிப்பதாகுமா என்று கேட்கிறார். ‘ஏன் லிங்கம் மட்டுமே அர்த்தத்தின் நிலைப்பாடாக இருக்கவேண்டும்? ஏன் (ஆண்குறிப்பொறாமை போலப்) பெண்குறிப்பொறாமை என் பது இருக்கக்கூடாது?’ என்று வினவுகிறார். லக்கானுடைய லிங்கமையவாதம் என்றைக்கும் பொதுவான சட்டமா, ஆண்வழிச் சமூகத்திற்கு மட்டும் உரியதா என்னும் கேள்வியும் எழுகி றது.

லக்கானின் கொள்கையில் சில குறிப்பான்கள், பிற குறிப்பான்களைவிட முக்கியத்துவம் பெறுகின்றன. லிங்கம், தந்தையின் பெயர், சட்டம் போன்றவை. மனித மனத்தை உருவாக்குவ தில் இவை மட்டும் ஏன் பெரும்பங்கு வகிக்கவேண்டும் என்பதற்கு லக்கான் போதிய விளக்கம் தந்ததாகத் தெரியவில்லை. ஆகவே இங்கு பெண்ணியவாதிகளின் விமரிசனம், லக்கான் கூறும் யதார்த்தத்தை மறுப்பதல்ல, அது என்றைக்குமானதா என்ற கேள்வியை எழுப்புவது தான்.

கடைசியாக, லக்கானின் தத்துவக் கருத்துமுதல்வாத நிலைப்பாடு. ‘பொருட்களின் உலகினைக் கட்டமைப்பது சொற்களின் உலகுதான்’ என்பது அவரது அடிப்படை நிலைப்பாடு. சமூகத்தை விட மொழிக்கு முக்கியத்துவம் தருவது இது. உலகினைப் பற்றிய பிரக்ஞையை வடிவமைப்ப தில் மொழிக்கு நிச்சயமான, குறுக்கிடுகின்ற தன்மை இருப்பினும், சமூக ஒழுங்கும் ஓரளவு மொழியைக் கட்டமைக்கவே செய்கிறது என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும்.

லக்கானும் இலக்கியமும்

லக்கானின் கோட்பாடுகளை இலக்கியத்திலும் திரைப்படப் பிரதிகளிலும் பயன்படுத்தல் கொஞ்சம்கொஞ்சமாக மிகுதியாகிவருகிறது. லிங்கமயக் குறிப்பான் (Phallisized Signifier) என்பதைக் குறியியல் விமரிசனத்திலும், பெண்ணிய விமரிசனத்திலும் பயன்படுத்தியுள்ளனர் (ஜூலியா கிறிஸ்தவா, ஜானதன் கல்லர், கேலப், மிட்சல் போன்றோர்). பார்வைநோக்கு(gaze) என்பதையும் தைப்பு (suture) என்பதையும் திரைப்பட ஆய்வுகளில் பயன்படுத்தியுள்ளனர் (மூல்வே, பெர்ஜர் போன்றோர்).

உருவம்(figure),  உடல்(Body) என்னும் கருத்தாக்கத்தை பால் டி மான், தெரிதா, ஹார்ட்மன், ஸ்பீவக் ஆகியோர் தகர்ப்பமைப்புவிமரிசனத்தில் பயன்படுத்தி யுள்ளனர். மாற்றுதல் (transference) என்னும் கருத்தை சோஷனா ஃபெல்மன் உருவவியல் விமரிசனத்தில் பயன்படுத்தியுள்ளார். ஆகவே எல்லாவித விமரிசனப் பார்வைகளிலும் லக்கானின் பங்களிப்பு இருக்கிறது என்று சொல்வது மிகையாகாது.

ஃப்ராய்டியக் கோட்பாட்டுக்கு இடமளித்ததைவிட இலக்கியம் லக்கானுக்கு மிக அதிகமாகவே இடமளித்திருக்கிறது. லக்கானே தனது முதன்மைகளை மாற்றியமைத்தவர்தான். அவர் ஃப்ராய் டிய ஒளியில் இலக்கியமாகப் பார்க்கவில்லை. மாறாக, ஃப்ராய்டையே இலக்கியமாகப் படித்தார். ஃப்ரடெரிக் ஜேம்சன் போன்ற மார்க்சியத் திறனாய்வாளர்களும்கூட கருத்தியல் அடிப்படையிலான விமரிசனத்திற்கு லக்கானை மிகவும் பயன்படுத்துகின்றனர். மற்றது, குறியீட்டொழுங்கு போன்ற கருத்துகளை ஜேம்சன் மிகுதியாகப் பயன்படுத்துகிறார்.

சில பெண்ணியவாதிகள், லக்கானுடையது ஆண்மையச் சிந்தனை என்று சொல்கின்றனர். (மிச்சல் மாந்த்ரியே, லூசி இரிகரி). ஆனால் ”புழக்கத்திலுள்ள சமூக மதிப்புகளைச் சொல்லாடலுக்கு உட்படுத்துவதுதான் அவற்றை மறு அமைப்புச் செய்வதற்கான முதற்படி” என்று பக்தின் சொல்வதுபோல, ஆண்மையச் சமூகச் செயற்பாடுகளைத் தமது சொல்லாடலுக்குள்-முக்கிய விஷயங்களாகக் கொண்டுவந்தவர் லக்கான். இதனை ஹெலன் சிக்ஸ்யூ போன்ற பெண்ணிய எழுத்தாளர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.

நாம் எவற்றையெல்லாம் சாதாரணமானவை என்று ஒதுக்குகின்றோமோ, அவற்றைத்தான் வாசிக்கவேண்டும் என்று லக்கான் வலியுறுத்துகிறார். (ஃப்ராய்டு அசாதாரண நடத்தைகளை வாசித்தார்). சாதாரணத் தன்மைகளை எப்படி மறுமதிப்பீடு செய்வது, மறு அமைப்புச் செய் வது, மறுபடி எழுதுவது என்பவையே அவரது முதன்மையான அக்கறைகள்.

இலக்கியத்தை எப்படி ஆய்வுசெய்யவேண்டும் என்பதற்கு லக்கானே சில உதாரணங்கள் தந்திருக்கிறார். (ஆய்வு என்று நாம் எடுத்துக்கொள்கிறோமே அல்லாமல் வேறில்லை, லக்கானைப் பொறுத்தவரை எல்லாமே இலக்கியம்தான்). குறிப்பான்கள், ஒரு தன்னிலையை இன்னொரு குறிப்பானுக்குச் சார்புபடுத்தக்கூடியவை. ஆகவே இன்னொரு குறிப்பானுக்கு இட்டுச் செல் லும் பாதைகள் அவை. இதனை ‘மேடம் பவாரி’ கதையை வைத்து விளக்கலாம்.

எம்மா பவாரி கதையின் முதன்மைப் பாத்திரம். அவள் கணவன் சார்லஸ் நெடுஞ்சாலைத் துறையின் உயர்பதவியை அடையவேண்டும் என்பது அவனுடைய தாயின் விருப்பம். ஒவ் வொருவரும் தமக்குரிய சூழல்வட்டத்திற்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். சார்லசுக்கு அவனது பூர்ஷ்வா வாழ்க்கை வட்டம். எம்மாவுக்குச் சமயப் புத்தகங்கள், கதைப்புத்தகங்கள், பூக்கள் முதலியவற்றின்மீது ஆசை. ஆயினும் இந்த வட்டங்கள் (குறிப்பான் தொகுதிகள்) உண்மையில் வட்டங்களே அல்ல, பாதைகளாகத்தான் இருக்கின்றன. மனப்பாங்குகள்தான் வேறு படுகின்றன. சார்லஸ் தனது வீட்டுக்குள் சாப்பாட்டு மேசைமுன் முழங்கைகளை ஊன்றி அமர்ந்திருப்பது மிகவும் பாதுகாப்பானது, அதைத்தவிர வாழ்க்கை வேறில்லை என்பவன்.

எம்மா உலகம் சுற்ற ஆசைப்படுபவள். அவள் நெடுஞ்சாலையை-அதில் பயணம் செய்வதைத் (Phallic signifier) தேர்ந்தெடுக்கிறாள். இந்த நெடுஞ்சாலைதான்-குறிப்பான்தான்-அவளை ஒரு வட்டத்துக்குள் அடைத்திருக்கிறது என்பதை அவள் உணர்வதில்லை. லியோனை நேசிக்கும் அவள் அவனது வண்டியில் ஏறி உட்கார்ந்து, ‘வண்டி போய்க்கொண்டே இருக்கட்டும்’ என்று கட்டளையிடுகிறாள். ‘இந்த மனிதர்களுக்கு வெறுமனே இடம்பெயர்ந்துகொண்டே இருப்பதில் என்ன ஆசையோ (mania)’ என்கிறான் வண்டியோட்டி. அவள் இருக்கும் பூர்ஷ்வா சமூகத்தின் அமைப்பு, எல்லாவற்றையும் நுகர்வுக்காகத் தனக்குள்அடக்கும் ஆசை கொண்டது. அதற்காக, அந்த வாழ்க்கை வட்டத்திற்காக சகல பாதைகளும் திறந்தே இருக்கவேண்டும். அப்போதுதான் பொருட்கள் வந்துகுவியமுடியும்.அவற்றில் போக்குவரத்து நடந்துகொண்டே இருக்கவேண்டும்.

சார்லசுக்கு ஆசைகள் இல்லை. எம்மா அவனுக்கு முற்றிலும் மாறுபட்டவள். அவள் ஆசையின் வடிவமேயாக இருக்கிறாள். தனது வட்டத்தைவிட்டு ஆசையென்னும் நெடுஞ் சாலையில் பயணம் செய்ய ஆசை. அவளது நாய் தனக்குள்ள வட்டத்தைவிட்டு எளிதாக வெளியே சென்று சுற்றிவரமுடிகிறது. ஆனால் எம்மா வட்டத்தோடு போராடவேண்டி வருகி றது. ஆயினும் மற்றதன் வடிவமைப்பான ஆசை பற்றிய பிறகதைகளைப் போலவே எம்மா வட்டத்தைவிட்டு வெளியேற நினைத்தாலும் அவள் தேர்ந்தெடுக்கும் நேர்க்கோடே வட்டமாக அவளைச் சிறைப்படுத்துகிறது.

குறிப்பீட்டுச் செயல் மனிதர்களைச் சுற்றி எப்போதுமே கற்பனை வட்டங்களை உருவாக்கியவண்ணம் இருக்கிறது. இந்த வட்டத்தை-ஆண்மைய வட்டத்தை உடைக்க முற்படும் அவளே இறுதியில் மறைந்துபோக நேர்கிறது.

இது போலவே களவாடிய கடிதம் என்ற எட்கர் ஆலன்போவின் கதையையும் லக்கான் வாசிக்கிறார். ஒரு மேலோட்டமான பார்வையில் எளிய துப்பறியும் கதையாகக் காட்சியளிக்கக்கூடியது இது. ஆழ் நிலையில் உள்ளடக்கம் சொல்லப்படாத கடிதம், இன்மையாகவும், பெண்மையின் குறியீடாகவும் நிற்கிறதுஎன்று விளக்குகிறார் லக்கான்.

வட்டம் என்ற சொல்லாடலை மையப்படுத்தித்தான் மனிதத் தன்னிலை எங்கும் வரையறுக்கப்படுகிறது. லக்கா னைப் பொறுத்தவரை உளப்பகுப்பாய்வு என்பதும் இலக்கியம் என்பதும் ஆண்மைய நோக்கிலான தன்னிலையை மையப்படுத்தும் நோக்கினை உடைப்பதற்கான மறுபெயர்கள். நாமெல்லோரும் உருவகத்திலிருக்கிறோம். அதிலிருந்து வெளியே உயிரோடு தப்பமுடியாது என்கிறார் லக்கான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Structural Identity in Old Tamil Narratives

Structural Identity in Old Tamil Narratives

The nature of composition of an epic consists of synthesising or joining a number of myths, legends, stories and poems existing previously, and a reservoir of earlier available knowledge transmitted orally or through recorded material. But the epic poet subordinates most of this material to his epic purpose. His purpose is to transmit the inherited material along with his own creation. But he leaves a number of clues about the materials he has used, pointing backwards to earlier ages. This is what we call as the identity of a narrative. At the same time it has also its own embellishments and additions which we may consider as diversity. No epic is different in structure from the above said procedure.

Old Tamil culture is constructed mostly through the materials available from the Cankam Classics , Tirukkural and the singular epic Cilappatikaram. Among these poems, we can call Cilappatikaram the founding narrative, which is ontologically the first epic in Tamil. It has served as a reference point for subsequent epics produced in Tamil. The cultural authority, and the disseminative power of this epic narrative work have remained unshaken for centuries.

The role of Cilappatikaram in producing the history of the Tamils by establishing them as a cultural community and giving them a group identity has been great. The creation of a nation involves the positing of a history, the past – with a pride. The story of Cilappatikaram addresses its group of readers in such a way as to pull them into the Tamil community. What is transmitted through literary means of remembrances of things past in Cilappatikaram is appa- rently embedded in the collective consciousness of the people of Tamilnadu. Jonathan Culler calls such narratives as foundational narratives. He says: “for foundational narratives it should be crucial that the story exist independently of the narrative presentation.” (Narrative: a seminar, 1994: Sahitya Akademi, p.9) This is true of Cilappathikaram, which has various versions of its story in folk tales, folk ballads, and other forms of narratives found in Jaffna, Tamilnadu, Kerala and Malaysia.

Not only Cilappathikaram, but all the five great epics (Aimperum Kappiams) in Tamil are taken for analysis here. These are the ‘old Tamil narratives’ referred to in the title. These five epics were singled out and made into a group in the olden days because they belong to the ideology of Jainism and Buddhism and they stand against Vedic tradition. This itself is a point of identity among these. Among these, Cilappatikaram is not totally a-vedic, and hence its popularity.

Among the five epics, Cilappatikaram, Manimekalai and Civaka Cintamani are men’s texts, whereas the other two are women’s texts, according to their point of view. Cilappathikaram tries to fashion a noble woman who is virtuous to her husband even when he errs, but who fights for his cause even after his death. Civaka Cintamani portrays its hero as a perfect male, who subdues a number of women through his prowess and skills. The main theme of the story seems to be this: “Be subservient to women, you will get ruined; make them subservient to you, you will get name and fame”.

Manimekalai’s story is set in a different vein, though it follows the story thread of Cilappatikaram in a linear way. The daughter of Madhavi, Kovalan’s concubine, Manimekalai becomes a Buddhist nun. She serves the society with her Akshaya Patram by giving food to the poor and disabled, and preaches Buddhist doctrines till her death. Though we can take the epic Manimekalai glorifies the daughter of a courtesan, we can take it to mean if she wants to lead a virtuous life, the only way is to become a nun. This is a kind of sexist bias prevalent from old days till now. Thus the independence of womanhood is established beyond doubt against Cathanar’s own objective.

The stories of the other two kavyas are somewhat radical, revolting against male chauvinism; that might be the reason why they were forgotten and lost. The story of Kuntalakesi is that of a woman who kills her husband (when he wants to deceive her into death) and becomes a Buddhist nun. The story of Valayapati is the story of a woman who challenges her husband to give her due place as his wife and succeeds in her vow. She is enticed by a man to having sex, and is abandoned by him eventually saying that she was after all a prostitute. She challenges him saying that she will establish her identity as his wife one day and that too, through his own son.

The story of Cilappatikaram points towards the earlier independent existence of many legends and stories, whereas many folk songs and other materials are also woven ino the texture of the epic.
The story begins at the beginning in Pukar, the river port at the mouth of the Kaveri. It reaches the plains in Madurai. Then the shadow of the story continues in the third book of Vanchi on the hills, as if the epic is progressing upstream and uphill on a structural antithesis.

The themes in the epic develop from one position to an opposite position. The state of ideal lovers Kovalan and Kannaki breaks down when Kovalan, leaving Kannaki at home, becomes engrossed with a dancer, Madhavi. As Kovalan thinks that he has found an ideal life with her, that also breaks down on the sands of the sea shore beach (where nothing could grow). Disenchanted, Kovalan returns to his uncomplaining wife.This brings a complete swing of the pendulum for Kovalan.

Three events which are mentioned in Cankam literature, which have no inter connection among them, have formed the basis of the story of Cilappatikaram, we can guess. The first event is the story of Kannaki in Purananuru. Kannaki is the wife of Pegan, a chieftain. This is akin to the first movement of Cilappatikaram story-the story of Pukar Kandam.
In the second movement of the epic, the couple matures to ideal wife and husband through a long journey together upstream through fields (from Neytal to Mullai land). In the cowherdess Madari’s humble home, it looks as if Kovalan was Krishna himself (the name Kovalan itself is a variant of Gopala – Lord Krishna) -the man-divine in rustic disguise, and Kannaki, the little Radha (or Nappinnai in Tamil), in the house of Yasodha (Madari). This reference is made by the author Ilanko Adikal himself, and the celebration of Aychiyar Kuravai (Dance and Songs in praise of Lord Krishna) reinforces this idea.

Kovalan’s punishment and his vindication after death bring to our memory the episode told in Narrinai that a woman who ate a mango fruit which came away in a stream from the Chieftain Nannan’s garden, was punished with death and afterwards she took vengence on him.

Kannaki disfigures herself by tearing away her left breast and orders Agni, the Fire element, to burn Madurai. In Narrinai we come across a similar incident. A woman. who was abandoned by her man, tears away her left breast in grief.

What follows in the third book of Vanchi is the process of mythification in which the events of the first two books become shrouded in a legend and then into a myth, leading to the deification of Kannaki as the Goddess of Virtuousness. This virtuous wife has become the cause of a national expedition by the Cera king Cenkuttuvan to the Himalayas. This politicization of the legend of a virtuous individual may seem antithetical to the very principles for which Kannaki sacrificed her own life. It is like a nation waging an imperial crusade to spread the virtuous principles of a Faith.

This subplot might have been introduced in the epic as an after thought. This mythification contains the reminiscences of the conflicts of early ages (presumably in the Indus valley and after) when Dravidian kings were continually required to fight against the incoming foreigners (Aryans), and were attempting to hold the line of control as far north as possible. That they were obviously marking the limits of their sway on the peaks of the Himalayas is remembered in the epic.

The Cera King Cenkuttuvan when proclaiming his expedition, in fact, recalls previous such attempts by Dravidian kings leaving their marks on the Himalayas. He also remembers his own earlier conquests while taking his mother to bathe in the Ganga when he had to fight his way against several thousand Aryan soldiers.
In the present expedition, the poet compares this battle to the three other such battles-this is also a mark of identity: the war that lasted eighteen years between Devas and Asuras, eighteen months between Rama and Ravana, eighteen days between Kauravas and Pandavas. This battle of Cenkuttuvan lasts only eighteen nazhigais (one nazhigai being 48 minutes).

Apparently memories of many heroic struggles have coalesced into three or four major battles, that are preserved in the Indian epics. In fact, these conflicts may have been historical, as well as racial or cultural struggles for superiority. The racial and cultural struggle is obvious in Cilappathikaram as in Ramayana or some other Puranas.
Apart from the elements told above, everything else is the author’s own contribution-his diversity from the older narratives. Before Ilanko Adigal, the only narratives found in Tamil were Pattuppattu and Paripatal. They were not fictional narratives. It was Ilanko Adigal’s ingenuity to form a story from a few elements he acquired from Cankam literature and give the Tamils a national identity.

A kind of structural analogy can be found among the five epics, as shown below:
The structure of Cilappathikaram can be presented like this:
Kovalan (Lover/Husband)

Kannaki

Pandya King (Offender)

A similar structure can be found in Manimekalai:

Udayakumaran (Lover/Husband in previous birth)

Manimekalai

Chola Queen (Offender)

A similar structure can be found in Civaka Cinthamani too:

Women (Lovers, Symbolic of various qualities, wives)

Civakan

Kattiyankaran (Offender)

Besides this common structure, the three protagonists have divine powers or powers bequeathed to them by divine beings.They gain a victory over the offenders and gain superiority. This makes them Men’s Texts, as pointed out before.

The structure of the stories of the twin epics which were lost, Kuntalakesi and Valayapati is somewhat different. (Women’s Texts).

Kuntalakesi-(Challenge to her life)-

kills her husband-

becomes a nun and preaches Buddhist doctrines-

(a superior position attained).

Valayapati-(Challenge to the wife’s life/honour)-

challenges her husband-

wins over him-

(a superior position attained).

Cilappatikaram is different from the other epics in that it presents multiple points of view, and focalizers like Kavunthi and Madala Marayon. For example, in Kanal Vari itself, Kovalan’s point of view is presented in his songs, and Madhavi’s point of view is presented in her songs. In the first two cantos, Kavunti acts as a representative voice to Ilanko Adikal, but in the third canto, Madala Marayon gains superiority. Yagnas and other rituals are performed according to his directions.

In all other epics the stories are presented only through the omniscient point of view. We can guess that Manimekalai could have been written against the indoctrination of Cilappathikaram. Religious conflicts were in vogue largely at that period. In Cilappatikaram, Kavunti explicates the virtue of giving protection to others when she introduces Madari. Catanar, the author of Manimekalai, in an episode (Kathai 5) tells that Jains did not give protection to a girl who was given by Sudhamati’s father. At the same time he creates a character Aaputhran who even gives away his life for the sake of others. Cilappatikaram portrays the effects of Uzh or destiny, and says that no body can challenge it. But Manimekalai presents the view that even downtrodden women can win over Uzh. Kuntalakesi and Valayapati are also of a similar view (‘You can shape your own destini’).

.


மையக்கருத்தாய்வு

மையக்கருத்தாய்வு

நவீன இலக்கிய வகைகளைத் தமிழில் ஆராயத்தொடங்கிய காலமுதலாக ‘தீம்’ (theme) என்னும் ஆங்கிலச்சொல் தமிழில் ‘மையக்கருத்து’, ‘கருப்பொருள்’ என்றெல்லாம் ஆளப்பட்டு வந்துள்ளது. தொல்காப்பியம், சங்கஇலக்கியம் உள்ளிட்ட தமிழ் மரபில், ஒரு படைப்பின் பின்னணியாக அமையக்கூடிய (காலம்-இடம் தவிர்த்த, ஒரு குறிப்பிட்ட நிலச்சூழலில் காணப்படக்கூடிய) எல்லாப் பொருள்களையும் குறிக்கக் கூடியதாகக் கருப்பொருள் என்ற சொல் பழங்கால முதலாகப் பயன்பட்டுவருகிறது. ஆனால் ஒரு சிறுகதையின் ‘கருப்பொருள்’ (அல்லது மையக் கருத்து) என்பது உண்மையில் (சங்ககாலக் கலைச்சொல்லாட்சியில்) அதன் ‘உரிப்பொருளே’ ஆகும்.

முதன்முதலாகத் ‘தீம்’ என்னும் ஆங்கிலச் சொல்லைத் தமிழில் பெயர்த்து வழங்கியவர்கள் ‘உரிப்பொருள்’ என்றே மொழிபெயர்த்திருந்தால் மரபும் கெடாமல், பொருளும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் ‘கருப்பொருள்’ என்று மொழிபெயர்த்துக் குழப்பத்திற்கு ஆளாக்கி விட்டதனால், அச்சொல்லைப் பலர் ‘மையக்கருத்து’ என்றே ஆளத்தொடங்கினார்கள்.
போதாதகுறைக்கு ஒப்பிலக்கியக் கொள்கைகள் பற்றி நூல் எழுதிய வை. சச்சிதானந்தன், ‘தீம்’ என்பதைப் புதிதாக ‘அடிக்கருத்து’ என மொழி பெயர்த்து மேலும் குழப்பத்திற்கு ஆளாக்கினார். (உண்மையில் motif என்ற சொல்லே அடிக்கருத்து என மொழிபெயர்க்கப்பட உரியது). எனவே ‘மையக்கருத்து’ என்ற சொல்லையே theme என்பதைக் குறிக்கவும், ‘அடிக்கருத்து’ என்பதை motif என்பதைக் குறிக்கவும், ‘மையக் கருத்தாய்வு’ என்பதை தீமடாலஜி (thematology) என்பதைக்குறிக்கவும் பயன்படுத்தலாம்.

மையக்கருத்து, இலக்கியப் பொருளுக்குத் தொடர்புடையது. ‘சப்ஜெக்ட்’ என்னும் சொல்லுக்கு இலக்கியப் பொருள் என்ற சொல்லைவிட, என் பார்வையில், ‘உரிப்பொருள்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது தமிழுக்கு ஏற்றதாக அமையும். அமெரிக்க ஒப்பியலாளர் ஹாரி லெவின் என்பவர்தான் முதன்முதலாக தீமடாலஜி அல்லது தீமேடிக்ஸ் என்னும் சொல்லை உருவாக்கினார். (இன்னும் இச்சொல் ஆங்கிலத்தின் அதிகாரபூர்வ அகராதியான ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் இடம்பெறவில்லை என்கிறார்கள்). இலக்கியப்பொருளும் மையக்கருத்தும் வேறுவேறு என்றாலும் ஒரேமாதிரியான அர்த்தத்தில் பல திறனாய்வாளர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இலக்கியத் திறனாய்வுத் துறையும் தெளிவாகக் கலைச்சொற்களைப் பயன்படுத்தும் விதத்தில் அறிவியல் துறைகள் போன்றதே என்பதால் இந்த இயலின் தொடக்கத்திலேயே கலைச் சொற்களை வரையறுக்க நேர்ந்தது. ஆங்கிலத்தில் துல்லியமாகக் கலைச் சொற்களை ஆக்கிப் பயன் படுத்துவது வழக்கம். Comparative Literature என்ற சொல்மீது நடந்த விவாதங்களை நினைத்துப் பார்க்கவும். தமிழில் துல்லியமாகக் கலைச்சொற்களைக் கையாளும் வழக்கம் இதுவரை வரவில்லை.

மோடிஃப் அல்லது அடிக்கருத்து என்பது கலைப் படைப்புகளில் திரும்பத் திரும்ப இடம்பெறும் கூறு எதையும் குறிக்கும். அது ஒரு சம்பவமாகவோ, இலக்கியக் கருவியாகவோ, ஒரு வாய்பாட்டு நிகழ்வாகவோ இருக்கலாம். உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி இருவரும், புகாரிலிருந்து மதுரைக்கு ஒரு நெடிய பயணத்தை மேற்கொள்கிறார்கள். பிறகு கண்ணகி மட்டும் மதுரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைக்குப் பயணம் செய்கிறாள். இது போலவே இராமாயணக் காப்பியத்தில் இராமன்-சீதை-இலக்குவன் ஒரு நெடும் பயணத்தை மேற் கொள்கின்றனர். மகாபாரதத்திலும் காடுகளில் பயணம் மேற்கொண்டு பாண்டவர்கள் சுற்றித் திரிகின்றனர். சீவக சிந்தாமணியில் சீவகன் அரசுரிமைப் போரில் ஈடுபடு முன்னர் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறான். ஆகவே காவியக் கதைகளில் ‘பயணம் செய்தல்’ என்பது ஒரு அடிக்கருத்து (மோடிஃப்) என்கிறோம்.

நாட்டுப்புறக் கதைகளில் அருவருப்பான (தவளை, பாம்பு போன்ற) ஜந்து ஒன்று திடீரென அழகான அரசியாக மாறுவது ஒரு மோடிஃப், அதாவது அடிக் கருத்து. ரொமாண்டிக் கவிதைகளில் இழந்துவிட்ட கடந்த காலத்தை (‘பொற்காலத்தை’) நினைத்துப் புலம்புவது ஒரு அடிக்கருத்தாக உள்ளது. இதுபோன்று நிறைய உதாரணங்கள் தரலாம்.

மையக்கருத்து என்பதும் திரும்பத்திரும்ப வரக்கூடியதுதான் என்றாலும் அது ஒரு படைப்பின் உரிப்பொருளோடு (சப்ஜக்ட்-டுடன்) தொடர்புடையது. மோடிஃப், மையக்கருத்துடன் தொடர்பு கொண்டிருக்கவேண்டிய தேவையில்லை. மேலும் மையக்கருத்து (தீம்) என்பது, ஒரு படைப்பின் ஆதிமுதல் அந்தம் வரை உள்ள அனைத்துக் கூறுகளோடும் இன்றியமையாத, உள்ளார்ந்த, உறவு டையது. அடிக்கருத்துகளின் (மோடிஃப்-கள்) பின்னுள்ள தர்க்கத்தை அடிப்படையாகவைத்து மையக்கருத்து (தீம்) எழுகிறது. உதாரணமாகப் பழைய திரைப்படம் ஒன்றினைக் காண்போம். ‘பாசமலர்’ என்ற திரைப்படத்தின் மையக்கருத்து, அதாவது ‘தீம்’, அண்ணன்-தங்கையின் அதீத பாசம். ஆனால் அதில் ஓர் ஏழை திடீரென (உழைப்பினால்!) பணக்காரனாதல், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாட்டினால் எழும் மோதல், மாமியார் வீட்டில் பெண்ணுக்கு நிகழும் கொடுமை போன்ற பல ‘மோடிஃப்’-கள், அதாவது அடிக்கருத்துகள் இருக்கின்றன.

இலக்கியப் பொருளை ஆராய முனையும் ஆராய்ச்சியாளர்களுக்குச் சொற்கள் முக்கியமானவை. உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் சிலம்பு என்றசொல் எத்தனை முறை வந்துள்ளது என்று ஓர் ஆராய்ச்சியாளர் எண்ணத் தேவையில்லை. ஆனால் அச்சொல் காப்பியம் முழுதும் எப்படிப் பயன்படுகிறது என்பதைக் கண்டறிந்துதான் கருத்தைத் தீர்மானிக்கவேண்டும். (சிலம்பு என்பதற்கு மலை, ஒலித்தல், காலில் அணியும் ஆபரணம் எனப் பல அர்த்தங்கள் உண்டு; ‘எந்தச் சிலம்பு’ என்ற வ. சுப. மாணிக்கத்தின் ஆய்வையும் காண்க.)

இலக்கியத்தின் உரிப்பொருள் என்பது படைப்பின் மூலப் பொருள். உதாரணமாக, எவ்வித அறக்கருத்தையும் முதன்மைப்படுத்தாமல், இயற்கை இறந்த நிகழ்வுகளையும் இணைக்காமல், கண்ணகி கதையை வெறுமனே சொன்னால் எப்படியிருக்கும்? (அதுதான் சிலப்பதிகாரத்தின் மூலப்பொருள் அல்லது ‘உரிப்பொருள்’). ஆகவே இலக்கிய உரிப்பொருள், இலக்கியமாக உருப்பெற அத்துடன் மையக்கருத்து இணையவேண்டும். இளங்கோவடிகள் அப்படி முன்வைக்கும் மையக்கருத்து, ‘ஒரு மானிடப்பெண், தன் உயர்பண்பின் வாயிலாக தெய்வ நிலை எய்தல்’ என்பது.

இப்போது -அமைப்பிய, பின்நவீனத்துவ காலத்தில், இலக்கியப் படைப்பையே பிரதி (பனுவல்) என்று சொல்கின்ற வழக்கம் உருவாகிவிட்டது. ஆனால் இதற்கு முன்புவரை (1950கள் வரை), இலக்கிய உரிப்பொருளையே ‘பிரதி’ என்பர்; அழகியல் கூறுகளோடு அது இணைந்து கலையுருப் பெறும்பொழுது அதைப் ‘படைப்பு’ என்பர். புது விமரிசனக் காலம் வரையில், ‘பிரதி’ என்பது மெய்ம்மைகளைப் பதிவுசெய்வது. வரலாற்றுத் தன்மையுடையது. வாழ்க்கையைப் பதிவு செய்வது. எனவே ஒரு ஆவணமாகும் தன்மை யுடையது. ஆனால் ‘படைப்பு’ என்பது பலவேறு வரலாற்றுச் சூழல்களில் அர்த்தபூர்வமாக உயிர்வாழும் ஓர் நினைவுச் சின்னம். ஒரு பிரதியின் உரிப்பொருளோடு மையக்கருத்தை இணைத்து நேர்த்தி செய்யும்போது படைப்பாக உருப்பெறுகிறது.
மையக்கருத்து என்பதை ஒரு கூற்று என்றும் சொல்லலாம். ஓர் இலக்கியப் படைப்பு முன்வைக்கும் வாதக்கருத்து அது. ஆனால் கூற்று அல்லது வாதம் என்ற சொல்லை விட மையக்கருத்து என்பது இன்னும் பருமையானது, படைப்பின் அமைப்பு தொடர்பானது அது. அடிக்கருத்து என்பது அந்த சந்தர்ப்பத்திற்கும் இடத்திற்கும் ஏற்றது, கூற்று அல்லது வாதம் என்பது உலகளாவிய ஒன்று.
இதுவரை நாம் கண்ட கலைச்சொற்களை நிதானித்துக்கொண்டு மேற்செல்வோம்.

தீம் – மையக்கருத்து
மோடிஃப் – அடிக்கருத்து
தீமடாலஜி – மையக்கருத்தாய்வு
சப்ஜெக்ட், சப்ஜெக்ட் மேட்டர் – (இலக்கிய) உரிப்பொருள்
சிச்சுவேஷன் – (ஒரு குறிப்பிட்ட சமயத்தில் கதைமாந்தர் இருக்கும்) சூழ்நிலை/ கதைச்சந்தர்ப்பம்

(மோடிஃப் என்ற சொல்லுக்கு அடிக்கருத்து என்பதைத் தவிர, வேறு சிறந்த சொற்கள் எவையேனும் கிடைப்பின் அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். முடிந்தால் இக்கட்டுரையைப் படிப்ப வர்கள் அதற்கு உதவிசெய்யலாம். அச்சொல், மோடிவ், மோடிவேஷன் போன்ற சொற்களோடு தொடர்புடையது என்பதையும் நினைவில் கொள்வது நல்லது.)

மையக்கருத்தாய்வினை வளர்த்தவர்களுள் பெல்ஜியத்தைச் சேர்ந்த ரேமண்ட் ட்ரூஸோன், ஃபிரான்ஸின் எலிசபெத் ஃபிரான்செல், அமெரிக்கர்களான ஹாரி லெவின், உல்ரிச் வெய்ஸ்டீன் ஆகியோர் முக்கியமானவர்கள். ஐரோப்பிய இலக் கியத்தில் புரோமீதியஸ் என்னும் மையப்பொருளை ஆய்வுசெய்தவர் ட்ரூஸோன்.

உள்ளடக்க ஆய்வுடன் மையக்கருத்தாய்வு தொடர்புடையது ஆகலின் தமிழ் நாட்டில் மையக்கருத்தாய்வு நிறையவே நடைபெற்றுள்ளது. அமெரிக்கப் புதுத்திறனாய் வாளர்கள் வடிவத்தில் மட்டுமே கவனம்செலுத்தியதால் போதிய அளவு அங்கு மையக் கருத்தாய்வு நடைபெறவில்லை என்னும் கருத்து உண்டு. பொருள் தொடர்பான ஆய்வு, வடிவம் தொடர்பான ஆய்வு என்று சொல்வதற்குமாறாக, வெல்லக்-வாரன் இருவரும், அகஅணுகுமுறை, புறஅணுகுமுறை என்னும் சொற்களைப் பயன்படுத்தினர். சிலசமயங்களில் வடிவமே கருத்தினைப் புலப்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. சான்றாக, வளர்ச்சிநாவல் (பில்டுங்ஸ்ரோமன்) என்பதில் கதைத் தலைவன்/தலைவியின் சிறுபருவத்திலிருந்து குறிப்பிட்ட வயதுவரையிலான வளர்ச்சியும் மாற்றங்களும் காட்டப்படுகின்றன.

கிரேக்க-ரோமானிய வார்த்தையான ‘தீமா’ என்பதிலிருந்துதான் ‘தீம்’ என்ற சொல் உருவாயிற்று. அது உரிப்பொருள் (அல்லது வாதப்பொருள்) என்பதைக் குறிக்கப் பயன்பட்டது. மையக்கருத்தாய்வு என்பதில் உரிப்பொருளாய்வும், மையக் கருத்து, அடிக்கருத்து போன்றவற்றைத் தர்க்கரீதியாக ஆராயும் எந்த முயற்சியும், முறையும் அடங்கும். சான்றாக, ‘பாரிஸ§க்குப்போ’ (ஜெயகாந்தன்), ‘மோகமுள்’ (தி. ஜானகிராமன்) போன்ற நாவல்களில் இசை பற்றிய குறிப்புகள் அடிக்கருத்துகளாக இடம்பெறுகின்றன.

கதைப் பொருளுக்கும் கதாபாத்திர உருவாக்கத்திற்கும் நிறையத் தொடர்பு உண்டு. கதையின் சம்பவங்கள் கதாபாத்திரங்களின் குணச்சித்திரத்தை அமைக்கின்றன. அந்தக் கதாபாத்திரங்கள் ஈடுபடும் செயல்கள் கதைச் சம்பவங்களாக, கதைப் பொருளாக மாறுகின்றன. ஆனால் கதாபாத்திரங்களை எப்படிப் படைக்கவேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. மார்க்சிய அணுகுமுறை கொண்டவர்கள் சமுதாயநடைமுறைக்கு ஒத்த யதார்த்தமான, அல்லது வகைமாதிரியான கதைமாந்தர்களைப் படைக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால் அமெரிக்கத் திறனாய்வாளர்கள், வகைமாதிரிப் படைப்பாக்கத்தைத் தவிர்க்கவேண்டும், ஒரு கதா பாத்திரத்தின் தனித்தன்மைகளுக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என்கிறார்கள்.

சில சமயங்களில் சில பாத்திரங்கள் தங்கள் பண்பினால் முக்கியத்துவம் பெற்றுக் காலங்காலமாக வாழ்பவர்களாகி விடுகிறார்கள். உதாரணமாக ‘டான் குவிக்ஸோட்’ என்னும் பாத்திரம் ஐரோப்பியக் கதையுலகில் புகழ்பெற்ற ஒன்று. தமிழிலக்கியத்தில் கண்ணகி அப்படிப்பட்ட வாழ்வுபெற்ற பாத்திரம். புராணக்கதைகளும், இதிகாசங்களும் எண்ணற்ற கதாபாத்திர வார்ப்புகளை நமக்கு அளித்துக்கொண்டே இருக்கின்றன. ஐரோப்பாவில் டான்ஜுவான், ஃபாஸ்டஸ் போன்ற பாத்திரப் படைப்புகள் திரும்பத்திரும்பக் கையாளப்படுபவை. இந்தியாவில் இராமன், கிருஷ் ணன், பாஞ்சாலி, சீதை போன்றவர்கள் உதாரணங்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், பல்வேறுமொழிகளில், பல்வேறுவிதங்களில் இவர்கள் மறு அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.
புராணங்களை மறுபார்வைக்கு உட்படுத்தியும் மையக்கருத்துகளை உருவாக்கலாம். சான்றாக, பாரதியார் பாஞ்சாலி சபதத்தைப் படைக்கும்போது, மகாபாரதக் கதையின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு, அதனை ஒருபுறம் தேசப்பற்றினையும், மறுபுறம் சக்திவழிபாட்டினையும் உணர்த்தும் கதையாக்குகிறார். புரோமீதியஸ் என்னும் பாத்திரக்கருத்து கிறித்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்து அண்மைக்காலம் வரை பல மறுவடிவங்கள் பெற்றுள்ளது. இதுபோலவே இந்திய மொழிகளில் திரௌபதியும் பாண்டவரும் கிருஷ்ணனும் பலவித வடிவங்கள் பெற்றுள்ளனர். பைரப்பாவின் கன்னட நாவல் ‘பருவம்’ என்பதில் வரும் கதாபாத்திரங்கள் யாவரும் பாரதக் கதை மாந்தர்களின் மறுவடிவங்கள்.

கற்பனைப் பயணம் என்பது இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் இடம்பெறும் ஒரு கருத்தாகிறது. வெறும் கற்பனையிலிருந்து, அங்கதம் வரை பலவகை இலக்கிய வடிவங்கள் பயணத்தை அடிப்படையாகக்கொண்டு தோன்றியுள்ளன. ‘உடோபியக்’ கதை என்பது இவ்வகை இலக்கிய வடிவங்களில் ஒன்று. கற்பனையான, ஒரு ஏற்றத்தாழ்வற்ற உலகினை உருவாக்கிக் காட்டுதல் இதன் குறிக்கோள். மு.வரதராசனார் எழுதிய கி.பி.2000 இப்படிப்பட்ட படைப்பு. பலவேறு வகையான அறிவியல் புதினங்கள் உருவாகவும் கற்பனைப் பயணம் என்ற அடிக்கருத்து வழி வகுத்துள்ளது. சுஜாதாவின் சில நாவல்கள் (சொர்க்கத்தீவு போன்றவை) இம்மாதிரி அமைந்துள்ளன.

சிலசமயங்களில் உண்மையாக வாழ்ந்தவர்களும் புராணப்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் அவ்வாறு புராணப்படுத்தப்பட்டவர்களில் காந்தியும் நேருவும் மிக முக்கியமானவர்கள். ஐரோப்பாவில் ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளையும் புராணப்படுத்தும் தன்மை காணப்படுகிறது. இவர்களின் தொல்வடிவமாக அமைபவர் ஜூலியஸ் சீஸர். இவ்வாறு படைப்பதற்குப் (மிதோபோயியா) ‘புராணப் படுத்தல்’ என்றுபெயர். ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யுலிசஸ்’ நாவல் இப்படிப்பட்டதே. இதில் புராணக்கதாபாத்திரமான யுலிசஸ், இன்றைய வடிவம் பெறும்போது, அவன் (கதையில், லெபால்டு புளூம் என்னும் முதன்மைப்பாத்திரம்)ஜாய்ஸின் ஆளுமையின் மறு வடிவமாகவும் அமைந்துவிடுகிறான்.

ஓர் ஆசிரியரின் மையக்கருத்துகளை ஆழமாக ஆராய்வது, அவரது சொந்த ஆளுமைகளை வெளிப்படுத்தவும் உதவக்கூடும். உதாரணமாக, மார்லோ என்ற கவிஞர்-நாடகாசிரியரின் (ஷேக்ஸ்பியர் காலத்தில் வாழ்ந்தவர்) நாடகங்களை ஆராய்ந்தபோது அதில் ‘இகாரஸ்’ என்ற படிமம் திரும்பத்திரும்ப இடம்பெறுவதை ஹாரி லெவின் கண்டார். (கிரேக்க புராணத்தில் இறக்கைகளைக் கட்டிக்கொண்டு பறந்து மிகஉயரச் சென்று சூரியனால் இறக்கைகள் தீய்ந்து விழுந்து இறந்தவன் இகாரஸ். இராமாயணக் கதையின் அனுமனும் இவ்வாறே சூரியனைநோக்கிப் பறந்தவன்தான்; ஆனால் சூரியனுக்குத்தான் அவனால் ஆபத்து). இகாரஸ் படிமம், மார்லோவின் பேராவல்மிக்க, முனைப்பான, ஆளுமையைக் குறிப்பதென அவர் காட்டியிருக்கிறார். இம்மாதிரி, படைப்பின் வாயிலாகப் படைப்பாளியின் மனநிலையை அறிவதற்கும் மையக் கருத்தாய்வு பயன்படுகிறது.

இன்னொரு உதாரணம்: டி.எஸ்.எலியட், ‘ஆல்ஃபிரட் ஜே.புரூஃப்ராக்கின் காதற்பாட்டு’ (The Love song of Alfred Prufrock) என்னும் கவிதை இயற்றியிருக்கிறார். இதனை ஆராய்ந்த திறனாய்வாளர்கள், எலியட்டின் மனப் போராட்டத்தினை இக்கவிதை வெளிப்படுத்துவதாகக் காட்டியுள்ளனர். இதேபோல ‘யுலிசஸ்’ நாவலின் கதைத்தலைவனான புளூம் என்பவனை ஐரோப்பாவின் பிரபலத் தொன்மமான டான் ஜுவானுடன் தொடர்புபடுத்திக் காட்டுகிறார் இப்புதினத்தை ஆராய்ந்த ஹாரி லெவின். இம்மாதிரிப் பலவேறு கதாபாத்திரத் ‘தீம்’ களை புராணக்கதைப் பொருள்களோடு ஒப்பிடும்போது படைப்பிற்கும், படைப்பாளியின் மனநிலை மீதும் புதிய வெளிச்சங்கள் கிடைக்கின்றன.

தமிழில் ஓர் உதாரணத்தைக் காண்போம்: கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ என்னும் சரித்திரக்கதையின் நாயகி, சிவகாமி. அவள் நாகநந்தி என்னும் புத்தபிக்ஷுவின் சதியால் புலிகேசியின் அரண்மனைக்கு அடிமையாகக் கொண்டுசெல்லப்படுகிறாள். ஆனால் நரசிம்ம வர்ம பல்லவன் (கதைப்படி அவளது காதலன்) படைகொண்டுவந்து, புலிகேசியை வென்று தன்னை மீட்டாலொழிய அச்சிறையிலிருந்து வெளிவர மறுக்கிறாள். இராமாயணக்கதையில் சீதை இராவண னால் கொண்டு செல்லப்பட்டதையும், இராமன் வந்து மீட்கும் வரை அவள் சிறையிருந்ததையும் இது நமது கவனத்துக்குக் கொண்டுவருகிறது. ஆனால் சிவகாமியின் ‘அக்கினிப்பரீட்சை’ வேறுவிதமாக அமைகிறது.

சிவகாமியின் சபதம் நாவலில் வரும் சிவகாமி-நரசிம்மவர்மன் காதல், பிறகு ‘கலங்கரை விளக்கம்’ என்னும் திரைப்படத்தில் வேறுவிதமாகக் கையாளப்பட்டிருக்கிறது. மையக்கருத்து களையும் அடிக்கருத்துகளையும் பலவேறு ஒத்த புதினங்களிலும் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் நாடகங்களிலும் வைத்து ஆராய்வது புதுப்புது உண்மைகளை அளிக்க வல்லது.

உரிப்பொருள் (சப்ஜெக்ட்) என்பது வெறும் மூலப்பொருள், அதனை ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகைக்குப் பொருத்தி, அழகியல்கூறுகளோடு அமைக்கும் போதுதான் படைப்பு உருவாகிறது என்ற பார்வையைக் கொண்ட விமரிசகர்களைக் (குரோச்சே முதல் புதுத் திறனாய்வாளர்கள் வரை) குற்றம் சொல்கிறார், வெய்ஸ்டீன். இப்படிப்பட்ட பார்வையினால்தான் மையக்கருத்தாய்வு என்பது புறக்கணிக்கப்பட்ட துறை ஆயிற்று. தற்காலத்தில்தான் இத்துறை அறிவியல் பூர்வமாக ஆராயப்பட லாயிற்று (ட்ரூஸோன், ஃபிரென்சல், ஹாரி லெவின் போன்றோரால்). இவர்களின் முதற்கடமை, கலைச்சொற்களில்காணப்பட்ட குழப்பத்தை நீக்குவதாக அமைந்தது.

இலக்கிய உரிப்பொருளுக்கும் மையக்கருத்துக்கும் வித்தியாசம் என்ன? இலக்கிய விஷயம் (உள்ளடக்கம், அதாவது உரிப்பொருள்), அர்த்தம், வடிவம் ஆகியவற்றைப் பிரித்தவர் கெதே. வடிவம் என்பது கவிஞனின் அழகுணர்ச்சியால் உருவாவது. கெதே உரிப்பொருளை ஆராய விரும்பவில்லை. உள்ளர்த்தம், உள்ளடக்கம், வடிவம் ஆகியவற்றின் ஒன்றிணைப்பினால் உருவாவது இலக்கியம் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை.

ஆனால் உரிப்பொருள், அர்த்தம், வடிவம் என மூவகையாகப்பிரித்துநோக்கத் தேவை தேவையிருக்கிறது. உள்ளடக்கம் (காண்டெண்ட்) என்பதற்கும் உரிப்பொருள் (subject/stoff) என்பதற்கும் பெரிய வேறுபாடில்லை. அதேபோல வடிவம் (ஃபார்ம்) என்பதற்கும் உரு (shape) என்பதற்கும் வேறுபாடில்லை. வெய்ஸ்டீனைப் பொறுத்தவரை வடிவம் என்பது நடை, அமைப்பு இரண்டையும்குறிக்கும். ஆனால் நடை என்பது ஒரு தனிமனிதரின் ஆளுமையைப் பொறுத்த ஒன்றாக நோக்கப்படுவதால் அதை இங்கே விவாதிக்கவேண்டிய அவசியமில்லை. புறஅமைப்பிற்கு இணையான உள்தொடர்புதான் வடிவம். புறவடிவம் என்பதைக் கதை (fabula) என்றும், கதைப்பின்னல் (plot) என்றும் சொல்கிறோம். மையக்கருத்துகளும் அடிக்கருத்துகளும் உள்ளடக்கம் சார்ந்த கூறுகளே தவிர அர்த்தம் சார்ந்த கூறுகள் அல்ல.

ஒரு படைப்பினுடைய பிரச்சினை அல்லது சிந்தனை சார்ந்த கூறுகளைக் குறிப்பது, அர்த்தம் (gehalt). அது, அதன் நீதிக்கருத்து (moral) அல்லது ஒழுக்கக்கூறு என்ன என்பதைக் காட்டுகிறது. இப்படிப்பட்ட ஆய்வு தொடங்கும்போது உரிப் பொருள் என்ன என்பது முக்கியமில்லாமல் போகிறது. பிரச்சினைசார்ந்த கருத்தின் (problem – geschichte) வாகனமாக மையக் கருத்தாய்வு அமைகிறது என்று ஹாரி லெவின் கூறுகிறார். ஏனென்றால், மையக்கருத்து என் பது சிந்தனை முன்னேறி நடப்பதற்கு உதவும் பாதை (avenue) என்று கூறும் லெவின், அது குறியீடுகளைப் போலப் பலபொருள் கொண்டது என்கிறார்.

உள்ளடக்கம் வேறு, அர்த்தம் வேறு. இரண்டிற்குமான வேறுபாடுகள் வெளிப்படையானவை. படிமம்-குறியீடு, அடிக்கருத்து-பிரச்சினை போன்ற இருமை களை அடுத்தடுத்து வைத்துப் பார்ப்பதன்வாயிலாக இதனை உணரலாம்.

உள்ளடக்கத்தில் பலவகைகள் உண்டு. முதலில் உரிப்பொருள் (subject). இதைத் தவிர, மையக்கருத்து (theme), அடிக்கருத்து (motif), சூழ்நிலை (situation), படிமம், தனிப்பண்பு (trait), குறிப்பொருள் (டோபாஸ்-topos) போன்றவை உள்ளன. அடிக்கருத்து, சூழ்நிலை ஆகிய வற்றைவிட உரிப்பொருள், கருத்து, குறிப்பொருள் ஆகியவை ஒரு ஒப்பியலாளனுக்கு முக்கியமானவை என்கிறார் வெய்ஸ்டீன். ஏனென்றால் அடிக்கருத்து, சூழ்நிலை போன்றவை பரந்தவை, உலகளாவியவை, மூலப்படிவத்தோடு தொடர்புடையவை. படிமம், தனிப்பண்பு ஆகிய வற்றின் பரப்பெல்லை குறைவு. திரும்பத்திரும்பவரும் கருத்துத்தொடர் (leit motif) என்பதோ உள்ளடக்கத்தோடு தொடர்புடையது, அடிக்கருத்திலிருந்து வேறுபட்ட ஒரு அமைப்புக் கருவி அது.

அமெரிக்க ஒப்பியலாளர்கள், அவ்வளவாக சமீபகாலம்வரை பொருளாய்வில் அதிக அக்கறை காட்டவில்லை. இதற்கு நல்ல உதாரணம், வெல்லக்-வாரனின் இலக்கியக்கொள்கை நூல். அவர்கள் கருத்தாய்வுக்கென ஒரு அத்தியாயமும் ஒதுக்கவில்லை. இலக்கியத்தை, அகநிலை-புறநிலை அணுகுமுறைகள் வாயிலாகத் திறனாய்வதில் அக்கறை காட்டுகிறார்கள். அவர்கள் நோக்கில் புறநிலை அணுகுமுறைகள் என்பது இலக்கியத்திற்கு வெளியேயுள்ளதுறைகள் வாயிலாக இலக்கியத்தை அணுகுவது; அகநிலை அணுகுமுறை என்பது இலக்கியத்திற்கேயான தனித்தகூறுகள் வாயிலாக அணுகுவது. ஆனால் கருத்தாய்வு இவையிரண்டிற்கும் மத்தியில் இருப்பது. எனவே இதனை அமெரிக்கத் திறனாய்வாளர்கள் ஒதுக்கியே வந்திருக்கிறார்கள். ஹாரி லெவின்தான் முதன்முதலாக இதற்கு முக்கியத்துவம் கொடுத்தவர். ஃபிரெஞ்சு ஒப்பியலாளர்கள் மட்டுமே இலக்கியப்பொருளாய்வில் அக்கறை காட்டினர்.

இலக்கியக் (கச்சாப்)பொருள் (rhostoff), உரிப்பொருள் (stoff) இரண்டிற்கும் வேறுபாடு காணமுனைகிறார் வெய்ஸ்டீன். முந்தையது, இலக்கியத்திற்குச் சம்பந்தமில்லாமல் அதற்கு வெளியே இருப்பது. படைப்புச்செயலின் போதுதான் அது படைப்புக்குத் தொடர்புடையதாகிறது. இயற்கையோ வாழ்க்கையோ படைப்பாளனுக்கு அளிக்கும் எந்தப் பொருளாகவும்-அதாவது அனுபவமாகவும் அது இருக்கலாம். ஆனால் உரிப்பொருள் என்பது தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு கதைவடிவம். கதைப்பின்னல். அது இலக்கியப்படைப்புக்கு அடிப்படையாக அமைவது.

உரிப்பொருள் என்பது அடிக்கருத்துகள் பலசேர்ந்த ஒரு தனியாளுமை. உதாரணமாக, டான் ஜுவான் என்னும் இலக்கிய விஷயத்தை எடுத்துக்கொண்டால், அதில் பெண்களை வசப்படுத்துதல் என்னும் அடிக்கருத்து திரும்பத்திரும்ப வந்துகொண்டே யிருப்பதைக்காணலாம். ஆனால் மையக்கருத்து என்பது இதனைமீறியது. அது டான்ஜுவான் கதையில் சமயச்சார்பான அடிநாதத்தைக் கொண்டு வருவதாக அமைகிறது. எனவே ஒரு படைப்பின் அடிக்கருத்துகளை ஆராய்வதின் வாயிலாக அதன் உரிப்பொருளைப்பற்றிய முடிவுக்கு நாம் வரமுடியும். உரிப்பொருள் என்பதற்கு பதிலாகக் கதைப்பொருள் என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என்கிறார் வெய்ஸ்டீன்.

ஒருவழியாகக் கலைச்சொற்கள் குழப்பத்தைத் தாண்டியபிறகு, எலிசபெத் ஃபிரென்சல், ட்ரூஸோன் ஆகியோர் உதவியுடன் வெய்ஸ்டீன் அடிக்கருத்து-மையக் கருத்து இவற்றிற்கிடையிலானதொடர்பை ஆராயமுற்படுகிறார். மையக்கருத்தின் ஒருசிறிய அலகுதான் அடிக்கருத்து. அது உள்ளடக்கம், சூழ்நிலை ஆகியவற்றை ஒட்டிய ஒன்றாக இருந்தாலும், தன்னளவில் ஒரு கதைப்பின்னலையோ, கதைஅடிச்சரட்டி னையோ கொண்டதல்ல. கதாபாத்திரங்கள் தனித்தன்மை பெறும் முன்னதாக ஏற்படுகின்ற ஒரு மனப்பான்மையையோ, தற்சார்பற்ற அமைவை உள்ளடக்கிய சூழலையோ அல்லது கருத்தாக்கத்தையோ அடிக்கருத்து குறிக்கிறது. முன்பே அடிக்கருத்திற்குச் சில உதாரணங்களைப் பார்த்தோம். மேலும் உதாரணம் வேண்டுமெனில், இரு பெண்களால் காதலிக்கப்படும் ஆண்அல்லது இரு ஆண்களால் காதலிக்கப்படும் ஒரு பெண் (முக்கோணக்காதல்) என்பது ஒரு முக்கிய அடிக்கருத்து. இரு நண்பர்களுக்கிடையிலான சச்சரவு, தந்தை-மகனுக்கிடையிலான பூசல், அல்லது காதலனால்/கணவனால் கைவிடப்பட்ட பெண் போன்றவை உலக இலக்கியங்களில் நாம் அடிக்கடி காணும் அடிக்கருத்துகள்.

அடிக்கருத்துகள் என்பன இலக்கியச் சூழ்நிலைகளுக்கும், மையக்கருத்துகள் கதாபாத்திரங்களுக்கும் தொடர்புள்ளவை. ஒரேமாதிரியான அடிக்கருத்துகள், சூழ்நிலைகள் இவற்றின் இணைப்பு ஃபார்முலாக் கதைகளை உருவாக்குகின்றன. இத்தகைய ஃபார்முலாக்கதைகளை திரைப் படக்கதைகள், காதல் வீரக்கதைகள்(ரொமான்ஸ்), பேய்க்கதைகள், தேவதைக்கதைகள், கட்டுக்கதைகள், துப்பறியும்கதைகள், நாட்டுப்புறக்கதைகள், பழங்கதைகள் போன்ற வற்றில் அதிகம் காணலாம். ஏனென்றால், உலகில் காணப்படும் அடிக்கருத்துகள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவை. ஆனால் மையக்கருத்துகள் எண்ணிக்கையோ மிகமிக அதிகம். வெவ்வேறு வகைகளில் அடிக்கருத்துகளை இணைப்பதன் வாயிலாகப் புதுப்புது மையக்கருத்துகளை உருவாக்கலாம். மேலும், காலம்-வெளி இவற்றால் ஏற்படும் எல்லையற்ற மாறுதல்களையும் சேர்த்துக்கொண்டால், அடிக் கருத்துகளின் எண்ணிக்கை சூழ்நிலைகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்ப தைக்காணலாம்.

சூழ்நிலைச் சூழல்களின் எண்ணிக்கை குறைவுதான். மொத்தமே 36 நாடகச்சூழ லமைவுகள் இருப்பதாக ஜார்ஜஸ் போல்டி என்னும் விமரிசகர் கண்டறிந்துள்ளார். கெதே அடிக்கருத்துகளின் உலகளாவிய தன்மையை வலியுறுத்தினாலும், அவை கால – இட நிலைமைகளால் கட்டுப்படுத்தப்பட்டவைதான். சான்றாக, மாளிகை-குடிசை என முரண்படுத்திப் புதுக்கவிதைகளை அமைத்தல், புதினங்களை அமைத்தல் போன் றவை காணப்படுகிறது. ஆனால் இதற்கும் ஆப்பிரிக்க பிக்மிகளின் வாழ்க்கைக்கும் அல்லது து£ந்திரப்பிரதேச எஸ்கிமோக்களின் வாழ்க்கைக்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது. அடிக்கருத்துகளுக்கும் மையக்கருத்துகளுக்கும் மெய்ம்மையான தொடர்புகளும் கலாச்சார ஒருமையும் முக்கியம் என ட்ரூஸோன் கூறுவது பொருந்தும்.

அடிக்கருத்துகளைவிட மையக்கருத்துகளின் ஆட்சியெல்லை குறைவு. இன்னும் குறிப்பாக வரலாறு சார்ந்த படைப்புகளைக் (சரித்திரக்கதைகளுக்கு மட்டுமல்ல, யதார்த்த நாவல்களுக்கும்) கால-இடச் சார்பு பெரிதும் கட்டுப்படுத்துகிறது. எனவே கால-இடச் சார்புகொண்ட படைப்புகளை உருவாக்குபவர்களுக்கு விழிப்புணர்ச்சி மிகவும் தேவை. அவற்றின் கதாபாத்திரங்கள் உலகளாவிய பொதுத்தன்மை பெறும் போதுதான் இம்மாதிரி நாவல்களுக்குப் பரந்த தன்மை உருவாகிறது. கிரேக்க அவல நாடகங்களின் பிரபலம் இதனால்தான் ஏற்படுகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் பொதுத்தன்மையும் இப்படி உருவாவதே. இவற்றோடு ஒப்பிடும்போது சீவகன் கதை, சிலப்பதிகாரக் கண்ணகி அல்லது மாதவி பாத்திரங்கள் போன்றவை குறைந்த அளவிலான பொதுத்தன்மையே அடையமுடியும். மேற்கு உலகிலும், செயிண்ட் ஜோன், நெப்போலியன் போன்ற கதாபாத்திரங்களை அடிப் படையாகக் கொண்ட படைப்புகளுக்கு கிரேக்க நாடகங்கள் அல்லது ஷேக்ஸ்பியரின் அவல நாடகங்களுக்கு இருப்பது போன்ற அளவு பிரபலமும் பொதுத்தன்மையும் கிடையாது. ஷேக்ஸ்பியர் நாடகப் பாத்திரங்களிலேயே லியர் அரசன் அல்லது மேக்பத் பாத்திரத்திற்கு இருக்கும் பொதுத்தன்மை மூன்றாம் ரிச்சர்டு போன்ற பாத்திரங் களுக்குக் கிடையாது. இதற்கு ஒரு காரணமாக, மூன்றாம் ரிச்சர்டு போன்றவர்கள் வரலாற்றுப் பாத்திரங்களாக இருப்பதனைச் சுட்டிக்காட்டலாம்.

அடிக்கருத்து அல்லது தனிப்பண்பு காரணமாக ஏற்படும் வகைமாதிரிக் கதைமாந்தர் பற்றி ட்ரூஸோன் குறிப்பிடுகிறார். வகைமாதிரிகள் தனித்தன்மை பெறுவ தில்லை. அவர்கள் அடிக்கருத்துக்கும் மையக்கருத்துக்கும் இடையில் நிற்பவர்கள். ஒருவகையில், உருவாக்கநிலையில் இருக்கும் குணச்சித்திரங்கள் என்று அவர்களைக் குறிப்பிடலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட மையக்கருத்திற்கேற்ற வகைகள் என்று நோக்கலாம். அவர்கள் உலகப் பொதுவானவர்கள் என்பதால் ஒப்பிடுவதற்கு ஏற்றவர்கள். இரண்டு வகை மையக்கருத்துகளைக் கதைமாந்தர் வாயிலாகப் பெற லாம்.

1. கதாநாயக மையக்கருத்து: சில கதைகளில் கதாநாயகர்கள் வலுவானவர்களாக அமையும்போது கதையின் விஷயத்தை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். சான்றாக, நா.பார்த்தசாரதியின் மணிபல்லவம் என்னும் காதல்-வீரக்கதையில் கதாநாயகனின் குணச்சித்திரத்தில் ஏற்படும் மாற்றமே கதையின் விஷயத்தைத் தீர்மானிக்கிறது (அல்லது கதையின் விஷயமாக அமைகிறது).
மேற்குலகில் புரோமிதியஸ், ஃபாஸ்ட் போன்ற நாயகர்கள் தங்கள் வலுவான குணச்சித்திரங்களால் கதைச்சம்பவங்கள் அமையக் காரணம் ஆகுபவர்கள்.

2. சூழலமைவு மையக்கருத்து: பல்வேறு கதாபாத்திர உருக்களின் இடைவினைகளின் விளைவாக ஏற்படும் கதைப்போக்கு இவ்வகையில் அமையும். உதாரணமாக, மகாபாரதக்கதையில் பலவேறு கதாபாத்திரங்களின் ஊடாட்டங்களால்தான் கதைப் போக்கு உருவாகிறது. இராமாயணமும் இவ்வாறே. சான்றாகச் சொன்னால், இராமாயணக் கதைப்போக்கு இராமனால் உருவாகவே யில்லை. கைகேயி, சூர்ப்பணகை போன்றவர்களே கதைத்திருப்பங்களைத் தீர்மானிப்பவர்கள். காலப்போக்கில் கதாபாத்திரங்கள் தங்கள் ஆரம்ப இயல்புக்கு மாறான வளர்ச்சியையும் பெறுகிறார்கள் என்று வெய்ஸ்டீன் கூறுகிறார். பலவேறு இராமாயணக்கதைகளில் காணப்படும் இராமனின் குணச்சித்திரங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தால் இது உண்மையெனப் புலனாகும். சிலசமயங்களில் தீயபாத்திரங்களாக ஆரம்பத்தில் கருதப்பட்டவர்களும் நேர்முகமான அம்சங்களைக் காலப்போக்கில் பெறலாம். ரொமாண்டிக் காலப்பகுதியில் சாத்தானும் ஃபாஸ்டஸும் புரட்சிக்காரர்கள் என்ற மறுவடிவத்தைப் பெற்றனர். இதேபோலப் பகுத்தறிவு இயக்கத்தின் காரணமாக, இராவணன் குணச்சித்திரம் மறுபரிசீலனைக் குள்ளாகியது. இராவணகாவியம் இதற்கு ஒரு சான்று. இம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் மையக்கருத்து, அடிக்கருத்தின் ஆதிக்கத்துக்குள்ளாகிவிடுகிறது.

சூழலமைவு மையக்கருத்துகள், குறிப்பிட்ட சமூகச் சூழல்களில், சமூகக் கட்டமைவுகளில் ஏற்படும் மோதல்களைப் பிரதிபலிக்கின்றன. வரலாற்று மையக்கருத்துகள் யாவும் இப்படிப்பட்டவையே என்பது ட்ரூஸோனின் கருத்து. ஆனால் சில சமயங்களில் கவிஞனின் கற்பனை வளத்தினால் வரலாறும் மாறுபட்டுப்போகலாம்-உதாரணத்திற்கு ஷேக்ஸ்பியரின் ஆண்டனியும் கிளியோபாத்ராவும் நாடகம். சிலசமயங்களில் ஒரே அடிக்கருத்து திரும்பத் திரும்ப மாறுதலின்றிக் கையாளப் படுவதால் ஏற்படும் தெவிட்டல்நிலையையும் ஒப்பியலாளர்கள் சந்திக்க வாய்ப்புண்டு. தமிழ்த்திரைப்படங்களில் மாமியாரை எதிர்க்கும் மருமகன் என்ற அடிக்கருத்து தியாகராஜ பாகவதர் காலமுதல் ரஜனிகாந்த் காலம்வரை பல அவதாரங்கள் எடுத்துவிட்டது.

சில மையக்கருத்துகளுக்கும் சில இலக்கியவகைகளுக்கும் இன்றியமையாத் தொடர்பு காணப்படுகிறது என்றும் ஒப்பியலாளர்கள் கருதுகிறார்கள். தமிழில் இதற்குச் சான்றாக அற இலக்கியங்களைச் சொல்லலாம்.

அடிக்கருத்து என்பதைக்குறிக்கும் மோடிஃப் என்ற சொல் moviere என்ற சொல்லிலிருந்து உருவாகியது. ஏதோஒன்றை இயக்குவது என்ற அர்த்தத்தினை ஆரம்பத்தில் இச்சொல் கொண்டிருந்தது. இசையில் காலம் சார்ந்த ஒரு நேர்க்கோட்டு இயக்கம் உண்டு. ஆனால் உருவக்கலைகளில் (ஓவியம், சிற்பம் போன்றவற்றில்) இயக்கம் என்பதை உருவகப்பொருளிலேயே நோக்கமுடியும். அவற்றில் திரும்பத் திரும்பக் காணப்படும் பாணிகள் (patterns) அல்லது வடிவக் கூறுகளைக் குறிக்க இச்சொல் பயன்பட்டது. இதனால் இலக்கியத்திலும் மோடிஃப் அல்லது அடிக்கருத்து என்பது திரும்பத்திரும்ப இடம்பெறும் சில கதைக்கூறுகள் போன்றவற்றைக் குறிக்கப் பயன்படலாயிற்று. உள்ளடக்கக்கூறுகளிலும், அமைப்பு அம்சங்களிலும் காணப்படும் ஒரேமாதிரித் தன்மையுள்ள சூழ்நிலைகளைக் குறிப்பிட அடிக்கருத்து என்ற சொல் பயன்படுகிறது. ஆயினும் உள்ளடக்கம் சார்ந்த பாணிகளே முதன்மை பெறுகின்றன.

சூழ்நிலை என்பது பற்றியும் பார்க்கவேண்டியது அவசியம். வெய்ஸ்டீன், ஒரு குறித்த செயல் அல்லது போராட்டம் என்பதற்கு அடிப்படையாக அமையும் அல்லது அவற்றில் காணப்படும் பலவகைப்பட்ட சிந்தனைகள் அல்லது உணர்வுகள் என்பதாக இதை வரையறுக்கிறார். உதாரணமாக, ஒரு நாடகத்தின் ஒருங்கிணைவு என்பது, மாறிமாறி வரும் அதன் பலவேறு செயல்கள், சூழ்நிலைகள் இவற்றின் தொடர்ச்சியால் ஏற்படுவது. இவை ஒன்றினால் ஒன்று உருவாகின்றன. ஒருகுறிப்பிட்ட சூழ்நிலைப் பாணியில், அடிக்கருத்துகள், தங்களுக்கு முன், பின் என்னும் நிலைகளை உருவாக்கு கின்றன.

சூழ்நிலைகள் எப்போதும் ஓர் இழுவிசையை உருவாக்கக்கூடியவை, எனவே அவற்றிற்கு ஒரு தீர்வு வேண்டும். மையக்கருத்துக்கும் அடிக்கருத்துக்கும் இடையில் ஒரு வகைமாதிரி இணைப்பாக அமைவது போலவே அடிக்கருத்துக்கும் கதைச்செயலுக்கும் இடையில் ஒரு இணைப்பாகச் சூழ்நிலை அமைகிறது என்கிறார் வெய்ஸ்டீன். சூழ்நிலை என்பது உள்ளடக்கத்தைவிட இலக்கியவகையின் அமைப்புக்கு நெருங்கிய தொடர்புடையது. ஆனால் மையக்கருத்தாய்வுக்கு நேரடியாக இது தொடர்புபடுவதில்லை.

தனிப்பண்பு (trait-zug), படிமம், குறிப்பொருள் (topos) ஆகியவற்றை இறுதியாக நோக்கலாம். தனிப்பண்பு என்பது ஒரு நிகழ்வுக்குத் தரக்கூடிய அடைமொழி. சிலசமயங்களில் அடிக்கருத்து அளவுக்கு உயரக்கூடிய தன்மை படைத்தது. படிமமும் மையக்கருத்தாய்வுக்கு அவ்வளவு முக்கியமானதல்ல. என்றாலும், சில சமயங்களில் படிமங்கள் கருத்துத் தொடர்களாகப் (றீமீவீt னீஷீtவீயீ) பயன்படக்கூடியவை. ஸ்பர்ஜன், ஷேக்ஸ்பியரின் படிமத்தன்மை பற்றிய தமது ஆய்வில் படிமங்கள் கருத்துத் தொடர்களாகப் பயன்படுவதை எடுத்துக்காட்டியிருக்கிறார். லெய்ட்மோடிஃப் என்ப தைக் ‘குறித்த சொற்றொடர் அதேபோல (மாற்றமின்றி)த் திரும்பத்திரும்ப வருதல்’ என வரையறுக்கலாம். திரும்பத்திரும்பவரும் சொற்றொடர்கள் மேற்சுட்டாகப் (allusion) பயன்படலாம். சிலசமயங்களில் சிறுமாறுதல்களோடு இவை இடம்பெறலாம். பொதுவாக மக்கள் மத்தியில் நிலவும் கருத்து (commonplace) எனப் பொருள்படுவது டோபாஸ் என்னும்சொல். எனவே உடனடி ஒப்பீட்டுக்கு உதவக்கூடிய ஒன்று.

எஸ்.எஸ்.பிராவர், ஐந்து வகையான ஒப்பீட்டு ஆய்வுகளைக் குறிப்பிடுகிறார். ஐந்து வகைகள் என அவர் பிரித்தாலும், இவ்வகைகள் திட்டவட்டமாக, ஒன்றை ஒன்று விலக்குவனவாக இல்லை. அவர் கூறும் ஆய்வுமுறைகள் பின்வருமாறு:

1. அ. இயற்கைநிகழ்வுகளை இலக்கியத்தில் வருணித்தல், அவற்றிற்கு மனிதனின் எதிர்வினைகள் போன்றவை. இவை பல்வேறு மொழிகளில், பல்வேறு காலங்களில் அமையும்போது ஒப்பிடுவது சிறப்பு. சான்றாக, மலை, கடல், காடு, நிலநடுக்கம், கடற்கொந்தளிப்பு போன்றவற்றின் வருணனைகள்.

ஆ. மனித இருப்பின் புறமெய்ம்மைகள்-கனவுகள், மரணம், பிறப்பு முதலியன.
இ. இடையறாது தொடரும் மனித நடத்தைமுறைகள், அல்லது மனிதப்பிரச்சினைகள்-சான்றாகத், தோற்றத்திற்கும் நடப்பிற்குமுள்ள போராட்டம், விதியின் வலிமை, உண்மைக் காதலுக்கு ஏற்படும் சோதனைகள் போன்றவை.

2. இலக்கியத்திலும் நாட்டுப்புற வழக்கிலும் உள்ள திரும்பத்திரும்பவரும் சூழ்நிலை கள்-உதாரணமாக, நாட்டுப்புறக்கதைகளில் திரும்பத்திரும்ப இடம்பெறும் மூன்று விருப்பங்கள், மூன்று கடமைகள், மூன்று வரங்கள் போன்றவை. (ஸ்டித் தாம்சன், Motif Index of Folk Literature என்ற படைப்பில் நாட்டார் வழக்காற்றிலும், நாட்டுப்புறக் கதைகளிலும் திரும்பத்திரும்பவரும் அடிக்கருத்துகள், சூழ்நிலைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளார்).

3. அ. வெவ்வேறான எழுத்தாளர்கள் திரும்பத்திரும்பவரும் சூழ்நிலைகளைக் கையாளும் விதம்: முக்கோணக்காதல், தந்தைக்கும் தனயனுக்கும் இடையிலான பூசல், விடியற்காலையில் பிரியும் காதலர்கள்(இங்கே சூழ்நிலை, செயலுக்கு இடமளிக்கிறது).

ஆ. ஒரே வரலாற்று நிகழ்வுகளை இலக்கியத்தில் பிரதிபலித்தல். (சுதந்திரப்போராட்டம், பாகிஸ்தான் பிரிவினை, அவசரநிலைப் பிரகடனம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் முதலியன).

4. வகைமாதிரிகளை இலக்கியத்தில் மீளாக்கம் செய்யும்முறை. (தொழிற்குழுக்கள், சமூக/சாதி வகுப்பினர், வாழ்க்கைமீதும் சமூகத்தின்மீதும் குறிப்பிட்ட மனநிலையினைப் பிரதிபலிக்கும் கதைமாந்தர்-பயணி, விவசாயி, புரட்சிக்காரன், தீவிரவாதி, குற்றவாளி, சமூகத்தோடு ஒட்டிச் செல்லாதவன் போன்றோர்.

5. புராணங்களிலிருந்தும், பழங்கதைகளிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் எடுக்கப்பட்ட கதை மாந்தர்கள்-புரோமீதியஸ், கர்ணன், நெப்போலியன், காந்தி, ஹாம்லட் போன்ற வர்கள்.

ஐந்தாவதாகச் சொல்லப்பட்ட வகையினரை ஒப்பீட்டுக்குப் பரிந்துரைக்கிறார் ட்ரூஸ்ஸோன்.
ஆனால் பிராவர் விரும்புவது நான்காவது வகையினரைத்தான். இம்மாதிரி ஒப்பாய்வுகள் மூன்றுவித வழிகளை உருவாக்கும் என்று அவர் கூறுகிறார்.

1. அடிக்கருத்துகள், மையக்கருத்துகள் இவற்றின் ஆய்வு ஒரு எழுத்தாளர் எவ்வகையைச் சேர்ந்தவர், அவரது தேர்வுப்பொருள் என்ன, அதனை அவர் எப்படி இலக்கியம் ஆக்குகிறார் என்பனவற்றை அறிய வழிசெய்கிறது.

2. மையக்கருத்து தொடர்பான ஆய்வுகள் வெவ்வேறு சமூகங்கள், காலங்கள் இவற்றின் ஆன்மாவையும் தனித்திறன்களையும் கண்டறிய உதவி செய்கின்றன. மேலும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மையக்கருத்துகள் எவ்விதம் பிரசித்தி பெற்றிருந்தன என்பதையும் அவை தெரிவிக்கின்றன. சிந்தனைகளின் வரலாற்றுக்கு இத்தகைய ஆய்வு மிகவும்பங்களிப்புச் செய்யும் என்று பிராவர் நம்புகிறார்.

3. இலக்கிய நடை பற்றிய ஆய்விலிருந்தும், இலக்கிய வகைகள் பற்றிய ஆய்விலிருந்தும் மையக்கருத்தாய்வுகள் பிரிக்கப்பட்டு விடக்கூடாது. புதினமும் பெருநகரமும் பற்றிய தமது ஆய்வில் வால்கர் கிளாட்ஸ் இப்படிப்பட்ட ஆய்வினைச் செய்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ‘நகரம்’ என்ற மையக்கருத்து எப்படிப் பல எழுத்தாளர்களை ஈர்த்துள்ளது என்று அவர் காட்டியிருக்கிறார். நவீனகாலப் பெரு நகரங்களின் பன்முகத்தன்மை, குழப்பம், பலகுரல் தன்மை ஆகியன ஒருவாறு நாவல் வடிவத்திலும் தொடர்புபட்டுள்ளதாக அவர் காட்டியிருக்கிறார். இந்தியச் சூழலில் அனிதா தேசாய், முல்க்ராஜ் ஆனந்த், குஷ்வந்த் சிங், கி. ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி போன்ற நாவலாசிரியர்களில் இத்தகைய கருத்துகளைப் பொருத்திப் பார்க்கலாம்.

இலக்கியப் படைப்புகளில் காணப்படும் செவ்வியக்காலப் புராணிகங்கள், நவீனக் கட்டுக்கதைகள் போன்றவற்றை ஆராய்கிறார் பிராவர். திரும்பத்திரும்பவரும் உருக்கள், உருப்படுத்தல்கள் ஆகியவற்றை ஆராய்தல், ஒரே கதாபாத்திரத்தின் பலவேறு உருமாற்றங்களையும், சில மாறாத பிரச்சினைகளையும், சில அடிப்படைப் பிரச்சினைகளையும் எப்படிச் சித்திரிக்கின்றன கதைகள் என்பதைக் காட்டவல்லது. மனித இயல்புக்கு அடிப்படையான ஏதோ ஒன்று, இடையறாது எப்போதும் அது மாற்றப்படுவது, ஆனால் புராணிக மாறுவேடத்தின் கீழ் அது எப்படியோ இடையறாது காப்பாற்றப்பட்டுப் பின்னர் அடுத்த தலைமுறைக்குச் செலுத்தப்படுவது -அதனைக் கண்டறிய உதவும் என்கிறார் ட்ரூஸோன். இதற்கு புரோமீதியஸ் பற்றிய அவரது ஆய்வே சான்று. சோஃபோகிளிஸ் முதலாக சார்த்தர் வரை கிரேக்க நாயகர்களின் பங்கு பற்றிய கேட் ஹாம்பர்கரின் ஆய்வும் குறிப்பிடத்தக்கது. இலக்கிய அமைப்புகளைக் கணக்கில் கொள்ளாமல், இலக்கிய உருக்களின் உருமாற்றங்களை மட்டும் அவர் ஆராய்கிறார். ‘நவீன நாவலில் புராணம்’ என்ற ஜான் ஒயிட்டின் படைப்பும் குறிப்பிடத்தக்கது. நாவல்களில் புராணிகங்களைக் கையாண்டு மறுபடைப்புச் செய்வதில் பின்வரும் வகைகளை அவர் காட்டுகிறார்.

அ. ஒரு செவ்வியப் புராணிகத்தை திரும்பச் சொல்வது
ஆ. நவீன உலகத்தோடு சம்பந்தப்பட்ட கதைமாந்தர் மத்தியில் புராணக்கதைகளை அவ்வப்போது செருகுதல்
இ. நவீன உலகத்தில் படைப்பும் கதைமாந்தரும் அமைந்திருந்தாலும், பழங்காலப் புராணங்களைப்போன்ற அமைப்புப் பாணியும் சுட்டும் உடையவை.
ஈ. கதை முழுவதிலும் ஊடுருவாமல், அதன் ஒரு பகுதியில் மட்டும் ஒரு புராண அடிக்கருத்தைக் கொண்ட கதைகள். இவ்வகையில் பல்வேறு மொழிகளிலிருக்கும் பலவேறு இராமாயணங்கள், பாரதியாரின் பாஞ்சாலி சபதம், ஜெயகாந்தனின் சுந்தர காண்டம், கல்கியின் அலை ஓசை போன்றவற்றை முறையே இந்நான்கிற்கும் உதாரணமாகக் கொள்ளலாம்.
முன்னுருப்படுத்தல் (prefiguration) என்பது பற்றி பிராவர் அடுத்து ஆராய்கிறார். ஒயிட் அதன் பயனை நன்கு ஆய்ந்து தெரிவித்துள்ளார். முன்னுருப்படுத்தல் என்பது அசலான அர்த்தத்தில் பைபிளின் புதிய ஏற்பாட்டில் வரும் நிகழ்வுகளையும் கதைமாந்தர்களையும் குறிக்கிறது. பைபிளில் ஆபிரகாம் தன் மகளைப் பலிகொடுத்தல், சிலுவைப்பாட்டின் முன்னுருப்படுத்தலாக அமைகிறது. இதில் ஒரு தீர்க்கதரிசனம் இருக்கிறது. நவீன கதைகளுக்கு இதனைப் பயன்படுத்தும்போது தீர்க்கதரிசனம் என்பது இல்லாமற்போகிறது. இலக்கியத்திறனாய்வில் இதற்கு வேறு அர்த்தம். புராணங்கள், பழங்கதைகளின் அடிக்கருத்துகளையும், அதுபோன்ற நவீன அடிக் கருத்துகளையும் ஒப்பிடுதல் என்பதாக இது அமைகிறது. ஹோமரின் ஒடிசியையும், ஜாய்சின் யுலிஸசையும் இவ்வகையில் ஒப்பிடலாம். ஆனால் ஜாய்ஸ எவ்வகையில் இந்தப் புராணக்கதையைக் கையாளுகிறார் என்பதே முக்கியமானது.

சமயச் சார்பற்றவகையில் விளைந்த முன்னுருப்படுத்தல் என்னும் சொல்லின் அர்த்த தள அடிப்பரப்பு மிகுதி. சில குறிப்பிட்ட தவறான புரிதல்களைத் தவிர்க்கும் வகையில் குறியீட்டுத் தொடர்புகளை ஆராய்ச்சிப் பரப்பை விரிவுபடுத்த முன்னுருப் படுத்தல் என்ற சொல் உதவுகிறது. பழங்கதைகளிலிருந்தும் புராணங்களிலிருந்தும் இவ்வகை அடிக்கருத்துகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்கிறார் வெய்ஸ்டீன். பாரதியாரின் பாஞ்சாலிசபதத்தில் எப்படிக் கண்ணன், பாஞ்சாலி ஆகியோரின் முன்னுருப்படுத்தல்கள் அமைகின்றன என்பதை நாம் ஆராயலாம். நவீன கதையா சிரியர்களின் விளக்கங்களையும், புராணக்கதைப் பாத்திரங்களைத் தலைகீழாக்கலையும் (யுலிசஸ், ஆண்டிகனி, ஃபாஸ்ட், டான் ஜுவான், பாஞ்சாலி, சீதை, அகல்யை போன்றவர்கள்) செய்வதோடு நெருங்கியதொடர்புடையது, எதிர்வகைமாதிரிகளை உருவாக்குவதாகும். ‘வெர்தரின் துயரங்கள்’ என்ற கெதேயின் புதினத்திலிருந்து ஓர் உதாரணம். வெர்தரின் காதலிமீது ஒரு தலைமுறை வாசகர்கள் தீராத காதல் கொண்டிருந்தார்கள். ஏனெனில், சாமுவேல் ரிச்சட்ஸனாலும் அவர் பின்வந்தோராலும் படைக்கப்பட்ட பெண்மாதிரிகளுக்கு எதிர்மாதிரியாக அவள் இருந்தாள்.

இதுபோலப் புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் இராமாயண எதிர்ப் பாத்திரமான இராவணன் கதைத்தலைவனாக மாறிவிடுகிறான். இருபதாம் நூற்றாண் டின் கவிதையாயினும் நாவல்களாயினும் புராண அடிப்படையில் சரிவர ஆராயப்பட வில்லை. நமது எழுத்தாளர்களின் புராணிகங்கள், பஞ்சதந்திரம், இதோபதேசம், இராமாயணம், மகாபாரதம், ஆகியவற்றிலிருந்தும், சிலப்பதிகாரத்திலிருந்தும் சங்கக் கவிதைகளிலிருந்தும் பெறப்படுகின்றன. பிரக்ஞைபூர்வமாகவும், பிரக்ஞையின்றியும் இக்கதைகளிலிருந்து தொன்மப் படிமங்கள், கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், மையக் கருத்துகள், அடிக்கருத்துகள் ஆகியவை எடுத்துக் கையாளப்பட்டுள்ளன.

பிற எல்லா இலக்கிய ஆய்வுகளையும் போன்றே, மையக்கருத்து, சூழ்நிலை, அடிக்கருத்து போன்றவை பற்றிய ஆய்வும், ஒருபுறம் தனிப்படைப்பு மாற்றங்களையும், மறுபுறம் பரந்த அளவிலான தொடர்புகளையும் பற்றிய அக்கறையோடு இயங்க வேண்டும் என்கிறார் பிராவர். பெரும் எழுத்தாளர்கள் பல்வேறு வகைகளில் வகைமாதிரிகள், மையக் கருத்துகள், அடிக்கருத்துகள், சூழ்நிலைகள், தொன்மங்கள் இவற்றை இணைத்தும் பிரித்தும் கையாளவல்லவர்கள். இவற்றின் குறியீடுகளையும் குறியீட்டு ஒழுங்கமைவுகளையும்பற்றி ஒப்பியலாய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஓர் ஒப்பியலாளனின் பிற செயல்களைப் போலவே மையக்கருத்துகளையும், அடிக்கருத்துகளையும் ஆராய்வது, தனது இலக்கிய வரலாறு, திறனாய்வு என்னும் அந்தஸ்தினை இழக்காமலேயே சிந்தனை வரலாறாக உருப்பெற இயலும். இந்தியச் சூழலில் இப்படிப்பட்ட ஆய்வுகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. இத்தனைக் கும் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியாவில் சாகித்திய அகாதெமி போன்ற தேசிய அமைப்புகளால் ஏற்கப்பட்டுள்ளன. இவற்றின் இலக்கிய வளம், எத்தனையோ வகையிலான மையக்கருத்து, அடிக்கருத்து ஆய்வுகளுக்கு இடமளிக்கவல்லது.


தமிழில் ஒப்பிலக்கியம்

தமிழில் ஒப்பிலக்கியம்

ஓர் இலக்கியத்துடன் காலம், வகை, உள்ளடக்கம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒருவழியில் தொடர்புடைய வேறு மொழியிலுள்ள இலக்கியத்தைக் குறிப்பிட்ட ஒப்பிலக்கியக் கோட்பாட்டின் வழி் செய்யப்படும் ஆராய்ச்சியே ஒப்பிலக்கியம். ‘ஒப்பிலக்கியம்’ என்பத னால் அது ஏதோ ஓர் இலக்கியம் என்று நினைக்கலாகாது. தாக்கக் கோட்பாடு, வகைமைக் கோட்பாடு, மையக்கருத்துக் கோட்பாடு போன்ற பலவற்றின் அடிப்படையில் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆராயலாம். இலக்கியத்தைப் பிற நுண்கலைகளுடன் அல்லது பிறதுறைகளுடன் ஒப்பிட்டு ஆராய்கின்ற ஆய்வுகளும் ஒப்பிலக்கியம் என்றே சொல்லப்படும்.

“ஒப்பிலக்கியம் என்பது ஒருபுறம், தனது இலக்கியத்தோடு தனது நாட்டின் எல்லைக்கு அப்பாலுள்ள இன்னொரு இலக்கி யத்தை ஒப்பிட்டு ஆராய்தல் என்பதோடு, இலக்கியத்திற்கும், சிற்பம், கட்டிடக்கலை, இசை போன்ற கலைகள், அரசியல், பொருளாதாரம், சமூகவியல் மாதிரியான சமூக அறிவியல்கள், தத்துவம், வரலாறு, இவை போலுள்ள பிற அறிவுத்துறை களுக்குமான உறவுகளைக் கண்டு ஆராய்வதுமாகும். சுருக்கமாகச் சொன்னால், ஓர் இலக்கியத்தை இன்னொரு இலக்கியத்தோடு ஒப்பிடுவதும், இலக்கியத்தை மனித அனுபவத்தின் பிற துறை களோடு ஒப்பிடுவதும் ஆகும்.”

என்று ரிமாக் ஒப்பிலக்கியத்திற்கான வரையறையைச் சொல்லு கிறார்.

ஒப்பிடுவதன் நோக்கம், ஒன்றின் உயர்வையோ இன் னொன்றின் தாழ்வையோ சொல்வதற்காக அல்ல. மாறாக, இலக் கியத்தின் பொதுத் தன்மைகளையும் முழுமையையும் அறிவதே ஒப்பிலக்கியத்தின் இலட்சியம். ஏதேனுமொரு புறவயமான முறை யின் வாயிலாக எல்லா வித்தியாசங்களையும் மாறுபாடுகளை யும் கடந்துசென்று, இலக்கியத்தின் பொதுத்தன்மையைக் காண் பது தான் ஒப்பிலக்கியத்தின் நோக்கம்.

இன்றைக்கும் ஒப்பிலக்கியம் என்பது ஏதோ இரண்டு இலக்கி யங்களை ஒப்பிடுவது என்று நினைக்கும் கல்வித்துறை ஆய் வாளர்கள் உள்ளனர். இதுபற்றி பேராசிரியர் மருதநாயகத்தின் எச்சரிக்கை இங்கே குறிப்பிடத்தகும்.

“இரண்டு நூல்கள் ஆங்கில மொழியில் இருக்குமானால் அவை யிரண்டும் இருவேறு பண்பாடுகளைச் சேர்ந்தவையாக இருந்தால் அவற்றை ஒப்பிடுதல் ஒப்பிலக்கியமாகும் என்பர். ஒரு நூலை எழுதியவர் இங்கிலாந்தைச் சார்ந்தவராகவும், மற்றதை எழுதி யவர் அமெரிக்காவையோ வேறு ஆங்கில மொழியைப் படைப் பிலக்கியத்தில் கையாளுகின்ற நாட்டையோ சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். பாரதி, பாரதிதாசன் ஆகியோருடைய கவிதை களை ஒப்பிடுவது திறனாய்வுத் துறையில் அடங்கும்; ஆனால் ஒப்பிலக்கியம் ஆகாது. அவர்களது நூல்கள் சார்ந்த தமிழ் இலக் கியம் ஒரே பண்பாட்டின் விளைவாகும். பாரதியையோ, பாரதிதாச னையோ ஈழத்தமிழ்க் கவிஞர் ஒருவரோடு ஒப்பிடுதல் ஒப்பிலக் கியமாக ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வேற்றுமையைப் புறக்கணித் தால் ஒப்பிலக்கியத்தின் தனித்தன்மை கெட்டுவிடும்.”

இங்கு இன்னொரு தெளிவும் தேவை. ஏறத்தாழ சமகாலத்தைச் சேர்ந்த பாரதியார், பாரதிதாசன் ஆகியோரை ஒப்பிடுவது ஒப்பிலக் கியமாகாது. ஆனால் கபிலரையும் பாரதியாரையும் ஒப்பிடுவது ஒப்பிலக்கியம் ஆகுமா? இருவருமே தமிழ்ப்பண்பாட்டைச் சேர்ந்த வர்கள் என்று புறந்தள்ளுவதை விட, வெவ்வேறு காலப் பண்பாடு களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களை ஒப்பிடுவது ஒப்பி லக்கியம் என்று கொள்ளலாம் என்று சிலர் சொல்கின்றனர். ஆனாலும் ஒப்பிடக்கூடிய பண்பாட்டுக்கூறுகள் வெவ்வேறாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

ஒப்பிலக்கியம் தனிப்பட்ட ஒரு ஆய்வு முறை என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவது சரியாகாது. ஒப்பிலக்கியம் ஓர் அவியல் ஆய்வுக்களம். எந்த முறையையும் எந்த நெறியையும் எடுத்துத் தன் நோக்கத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளவல்லது என்று தான் கூறமுடியும்.

ஒப்பிலக்கியத்தின் சாத்தியக்கூறுகளை ஜி.யு. போப் சுட்டிக் காட்டியிருக்கிறார். Tamil Heroic Poems என்று அவர் தம் நூலுக்குக் கொடுத்த தலைப்பே கைலாசபதியின் ஒப்பியலாய்வுக்கு முன்னோடியாக அமைந்தது. பிறகு எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பவர் ஹோமரின் கதைப்பாடல்கள், புறப் பாடல்களோடு ஒப்புமை உடையன என்று சுட்டிக்காட்டினார். 1927இல் என்.கே. சித்தாந்தா என்பவர், Heroic Age of India என்னும் தமது நூலில், தமிழ்ப் புறப்பாடல்கள் வீரயுகப்பாடல்களைச் சேர்ந்தவை என்று சொல்லியிருக்கிறார். இக்கருத்தை வையாபுரிப்பிள்ளையும் தமது காவிய காலம் நூலில் ஏற்றுப் பாராட்டியிருக்கிறார்.

இவையெல்லாம் ஒப்பிலக்கியத்திற்கான சாத்தியப்பாடு பற்றிய குறிப்புகள். தமிழில் ஒப்பிலக்கியத்துக்கு ஒரு சிறிய பாரம்பரியம் இருக்கிறது.

ஒப்பிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நல்ல பணியாற்றிய திறனாய்வாளர்கள் சிலர் தமிழில் உள்ளனர். முதன்முதலில் இதைத் தொடங்கிவைத்தவர் வ.வே.சு. ஐயர். அவர் தமது A Study of Kamban’s Ramayana என்ற நூலில் உலக மகா காவிய கர்த்தாக்கள் அனைவருடனும் கம்பரை ஒப்பிட்டு கம்பர் அவர்களையெல்லாம் விஞ்சும் உலகமகாகவி என்பதை நிறுவியுள்ளார். வ.வே.சு. ஐயருக்குப் பின் பலநாட்டுக் கவிதைக் கொள்கைகளையும் ஒப்பிடும் வகையில் அறிமுகப்படுத்தியவர் ரா.ஸ்ரீ. தேசிகன். சிலகாலத்துக்குப் பிறகு இத்துறையில் முயற்சிசெய்தவர் தொ.மு.சி. ரகுநாதன். அவர் ‘பாரதியும் ஷெல்லியும்’ என்ற நூலை ஆக்கித் தந்தார்.

இதற்குப் பிறகு பெரும்பாலும் ஒப்பிலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள் தமிழ்ப் பேராசிரியர்களே. தனிநாயகம் அடிகள், சங்க இலக்கியத்தை கிரேக்க இலக்கியத்துடன் பலசமயங்களில் ஒப்பிட்டு நோக்கி யிருக்கிறார். தமிழின் இயற்கைநெறிக் கவிதை, கிரேக்க, இலத்தீன்மொழிக் கவிதைகளுடன் நெருங்கிய உறவுகொண்டிருப்பதை அவர் விளக்கியுள்ளார்.

அவருக்குப் பின் இத்துறையில் முயன்றவர் வை. சச்சிதானந்தன். The Impact of Western Thought on Bharati என்ற ஆய்வுநூல் பரந்த கவனத்தைப் பெற்றது. மேற்கத்திய ரொமாண்டிக் கவிஞர்களும் டென்னிசன், வால்ட் விட்மன் போன்றவர்களும் பாரதியிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை விரிவாக இந்த நூல் ஆராய்ந்தது. பின்னர் அவர் Whitman and Bharati – A Comparative study என்ற நூலையும் ஆக்கினார். வேதாந்த இறையியல், உலக சகோதரத்துவம் ஆகிய நிலைகளில் இருவரையும் ஒப்பிடுகிறது அந்நூல்.

இச்சமயத்தில் ஒப்பிலக்கிய ஆய்வுக்கு உந்துசக்தியாக க. கைலாசபதியின் Tamil Heroic Poetry என்ற நூல் வெளிவந்தது. அவரே ஒப்பிலக்கியக் கொள்கைகளைத் தமிழில் விளக்குகின்ற ‘ஒப்பியல் இலக்கியம்’ என்ற நூலை எழுதினார். ‘அடியும் முடியும்’ என்னும் நூலிலும் ஒப்பிலக்கியம் பற்றிய இரு கட்டுரைகள் உள்ளன. மேலும் பாரதியை தாகூருடன் ஒப்பிட்டு ‘இருமகாகவிகள்’ என்ற நூலையும் ஆக்கினார். இந்த நூலில் பாரதி, தாகூர் இருவருடைய பின்னணிகளும் ஒப்பிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில் இருவரும் மலர்ந்தமைக்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன. வாழ்க்கை வரலாற்று நிலையிலான ஒப்பியல் நூல் இது. ‘பாரதியும் மேல்நாட்டுக் கவிஞர்களும்’ என்ற நூலையும் இவர் ஆக்கியுள்ளார்.
கா. சிவத்தம்பி, கிரேக்க நாடகங்களையும் தமிழ் நாடகங்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்துள்ளார்.

மார்க்சிய ஆய்வாளரான பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், கம்பனையும் மில்டனையும் விரிவாக ஒப்பிட்டுக் ‘கம்பனும் மில்டனும்’ என்ற நூலைப் படைத்தார். (பிறகு கம்பனும் மில்டனும்-ஒரு புதிய பார்வை). இந்நூல் மிகச்சிறந்த ஒப்பிலக்கிய நூலாகக் கருதப்படும் பெருமை வாய்ந்தது. கம்பராமாயணத்தையும் மில்டனின் துறக்க நீக்கத்தையும் (பேரடைஸ் லாஸ்ட்) விரிவாக ஆராயும் நூல் இது. இரு கவிஞர்களுக்கிடையிலும் காணப் படும் காவியக் கட்டுக்கோப்பு, பழைய காவியங்களின் செல்வாக்கு ஆகியவற்றை முதலில் சுட்டிக்காட்டுகிறார். பிறகு இலட்சிய நோக்கு, நிகழ்ச்சிப்போக்கு, திருப்புமையம், சிக்கல் அவிழ்ப்பு போன்ற தலைப்புகளில் இவ்விரு காப்பியங் களும் இணைந்து செல்லும் முறையை அழகாக விளக்கியுள்ளார். இந்நூலில் கதைமாந்தர்களின் ஒப்பீடு மிகச் சுவையானது. கைகேயியைக் கடவுளோடு (ஆதாமையும் ஏவாளையும் படைத்த திருத்தந்தை) ஒப்பிடுவதும், தசரதனோடு சாம்சனை ஒப்பிடுவதும், புதுமையல்லாமல் வேறு என்ன? இராவணனைச் சாத்தானோடு ஒப்புநோக்குவது எதிர்பார்க்கக் கூடியதே. சிலப்பதிகாரம் பற்றிய ஒப்பியல் ஆய்வுகளிலும் இவர் ஈடுபட்டார்.

பேராசிரியர் கோ. சுந்தரமூர்த்தி வடமொழி இலக்கியக் கொள்கை களையும் தொல்காப்பியக் கொள்கைகளையும் ஒப்பிட்டு ஒரு அருமையான நூல் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெ. திருஞான சம்பந்தம் என்பவரும் வடமொழி இலக்கியக் கொள்கைகளையும் தமிழ் இலக்கியக் கொள்கைகளையும் ஒப்பிட்டுள்ளார்.

கதிர். மகாதேவன், ஒப்பியல் நோக்கில் சங்ககாலக் கவிஞர்களையும், கிரேக்கக் கவிஞர்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். ‘தமிழர் வீரப்பண்பாடு’, ‘ஒப்பிலக்கிய நோக்கில் சங்ககாலம்’, ‘தொன்மம்’ ஆகியவை இவரது நூல்கள்.

தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் ஆய்வுமாணவரான க. செல்லப்பன், ‘ஒப்பியல் தமிழ்’, ‘எங்கெங்கு காணினும் சக்தி’, ‘ஒப்பிலக்கியம்-கொள்கைகளும் செயல்முறைகளும்’, ‘இலக்கியத்தில் பழம்புதுமையும் புதுப்பழமையும்’, ‘விடுதலைச் சிட்டும் புரட்சிக்குயிலும்’ ஆகிய பத்து நூல்களை எழுதியவர். Shakespeare and Ilango as Tragedians என்ற ஒப்பீட்டு நூலை எழுதினார். ‘ஒப்பிலக்கிய நோக்கில் ஷேக்ஸ்பியரும் இளங்கோவும்’ எனத் தமிழில் அது வெளிவந்தது. பல ஒப்பியல் கட்டுரைகளையும் அவ்வப்போது வழங்கியுள்ளார். தொன்மவியல் ஆய்வு பற்றியும் எழுதியுள்ளார். இவருடைய ஒப்பீட்டுக்கு ஒரு சிறுசான்று:

“வேதநாயகம் பிள்ளையின் புதினத்தில் செழிக்கும் தமிழ் உணர்வை தேசிய உணர்வின் முன்னோடியாகக் கருதவேண்டும். இதைத்தவிர, தலைவி ஆணுடையில் அரசுப்பொறுப்பை ஏற்கும்போதும் ஆனந்தமடத்தின் சாயலைக் காணலாம்….ஷேக்ஸ்பியரின் கதாநாயகிகள் போல் ஆனந்தமடத்தின் இறுதியிலும் ஞானம் பேசப்படுகிறது. ஆனந்தமடத்திலும், பிரதாப முதலியார் சரித்திரத்திலும் பாசிடிவிசம், என்லைட்டன்மெண்ட் ஃபிலாச
பியின் தாக்கம் தெரிந்தாலும் பிரதாப முதலியார் சரித்திரம் அவற்றை ஓரளவு கடந்து இந்தியக் கலாச்சாரத்தை வலியுறுத்துவதுபோல் தெரிகிறது.”

இன்றைய கல்வித்துறைசார் ஒப்பியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர்களாக எஸ். இராமகிருஷ்ணன், வை. சச்சிதானந்தன் போன்ற முந்திய தலை முறையினருடன், க. செல்லப்பன், ப. மருதநாயகம், சிற்பி பாலசுப்பிரமணியம், பா. ஆனந்தகுமார் போன்ற இந்தத் தலைமுறையினரையும் கூறலாம்.

சிற்பி பாலசுப்பிரமணியன், கவிஞர். வானம்பாடி இயக்கத்தில் 1970இல் ஈடுபட்டவர்களில் ஒருவர். ‘வானம்பாடி’ என்னும் ‘விலையிலாக் கவி மடலை’யும், ‘அன்னம்விடு தூது’ என்னும் பத்திரிகையையும் ஆசிரியராக இருந்து நடத்தினார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். கவிதை நூல்களன்றி, மொழி பெயர்ப்புகளும் இலக்கியத் திறனாய்வு நூல்களும் எழுதியுள்ளார். லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய ‘அக்னி சாட்சி’ என்னும் மலையாள நாவலின் மொழி பெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர். மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து ‘ஒரு கிராமத்து நதி’ என்னும் தமது கவிதைநூலுக்காகச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றார். ‘இலக்கியச் சிந்தனை’ என்ற விமரிசன நூலை எழுதினார், பாரதி-வள்ளத்தோள் கவிதைகளை ஒப்பீடு செய்து (A comparative study of Bharati and Vallathol) முனைவர் பட்டம் பெற்றவர். அவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘சிற்பியின் கட்டுரைகள்’ என்ற நூலாக வெளிவந்துள்ளன. சிற்பியைப் போலவே மலையாள-தமிழ்க் கவிதை ஒப்பீட்டில் ஈடுபட்ட இன்னொருவர் சாமுவேல்தாசன்.
பாலா, ‘பாரதியும் கீட்சும்’ என்னும் தமது சிறுநூலில் இருவரையும் ஒப்பிட்டுள்ளார். பாரதி முதலில் தெய்வத்தைக் காண்கிறார், அதில் அழகைக் காண்கிறார் என்றும் கீட்ஸ், முதலில் அழகைக் காண்கிறார், பிறகு அதில் தெய்வத்தைக் காண்கிறார் என்றும் விளக்குவது சுவையானது.

ப. மருதநாயகம், ‘கிழக்கும் மேற்கும்’, ‘திறனாய்வாளர் தெ.பொ.மீ.’ ‘மேலை நோக்கில் தமிழ்க்கவிதை’ போன்ற பத்து நூல்களைத் தமிழில் வரைந்தவர். பல பல்கலைக்கழகங்களோடு தொடர்புடைய ஆராய்ச்சியாளர். ‘கிழக்கும் மேற்கும்’ நூலில் தொல்காப்பியர், பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர், டி.எஸ். எலியட் ஆகியவர்களின் படைப்புகளை ஒப்பியல் நோக்கில் ஆராய்ந்துள்ளார். அ. அ. மணவாளனும் ஒப்பியல் துறையில் ஈடுபட்டுச் சில நூல்களைப் படைத்துள்ளார். அரிஸ்டாடிலின் கவிதையியலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் இவர்.

ஜி. ஜான் சாமுவேல், ஆசியவியல் நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றியவர். ‘இலக்கிய ஒப்பாய்வுக் களங்கள்’, ‘இலக்கியத் திறனாய்வு முதற்பகுதி’, ‘திறனாய்வுச் சிந்தனைகள்’, ‘ஷெல்லியின் கவிதைக்கலை’, ‘ஷெல்லியும் பாரதியும்-ஒரு புதிய பார்வை’ போன்ற பல நூல்களை எழுதி யுள்ளார். ஒப்பாய்வுக் களங்கள் என்ற நூல் ஒப்பிலக்கியக் கோட்பாடுகளை முதலில் தெளிவுபடுத்தி, பிறகு தமிழின் முக்கியமான காலகட்டங்களில்-வீரயுகம், அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், தற்கால ரொமாண்டிக் கவிதை இலக்கியம் போன்றவற்றின் இலக்கியங்களை எவ்வாறு ஒப்பிடலாம் என்பதை விளக்குகிறது.

பா. ஆனந்தகுமார், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர். மலையாளம், தெலுங்கு மொழிகளில் பட்டயப்படிப்புப் படித்தவர். ‘இந்திய ஒப்பிலக்கியம்’, ‘பாரதி-ஆசான்-அப்பாராவ் கவிதைகளில் புனைவியல்’, ‘தெலுங்கு இலக்கிய வரலாறு’ போன்ற நூல்களின் ஆசிரியர். இவருடைய இந்திய ஒப்பிலக்கியம் என்னும் நூலில், ஒரு சில தமிழ் இலக்கியாசிரியர்களை வேறுசில இலக்கியாசிரியர்களோடு ஒப்பிடும் சிறுசிறு கட்டுரைகள் அடங்கியிருக் கின்றன. இந்நூலின் முன்னுரையில் கா. சிவத்தம்பி, தமிழிலக்கியத்தின் அழகியல் என்பது தனியான ஒன்றா, அல்லது இந்திய அழகியல் கோட்பாட்டினுள் வரக்கூடியதா என்ற கேள்வியை எழுப்புகிறார். நமது இலக்கிய விமரிசனச் சிந்தனைகள் இத்துறையில் அதிகம் செல்லவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களை டி. பி. சித்தலிங்கையா, டி. எஸ். சதாசிவம், மு. கு. ஜகந்நாதராஜா போன்றோர் ஒப்பிட்டுள்ளனர். பெ.சு. மணி எழுதிய ‘சங்ககால ஒளவையாரும் உலகப் பெண்பாற்புலவர்களும்’ என்ற நூலும் நோக்கத்தக்கது. இராம. குருநாதன் ‘சங்கப்பாட்டும் சப்பானியக் கவிதையும்’ என்ற நூலை எழுதி யுள்ளார். ஆ. ரா. இந்திரா என்பவர் மெய்ப்பாட்டு அடிப்படையில் கம்பரையும், ஹோமரையும் ஒப்பிட்டுள்ளார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஆதவன் போன்ற இக்காலப் படைப் பாளர்களையும் பிறமொழியினருடன் ஒப்பிட்டுச் சில ஆய்வுகள் வந்துள்ளன.

பொதுவாக, ஒப்பிலக்கிய ஆய்வுகள் ஆழமான திறனாய்வுகளாக மலரக் கூடிய வாய்ப்பு இல்லை. காரணங்கள் சில உண்டு.
ஒப்பிலக்கிய ஆய்வுக்குக் கொள்கை பலம் கிடையாது. அதாவது, ஒப்பிலக்கியத்துக்கெனத் தனிக்கொள்கை என்பது இல்லை. இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், ரொமாண்டிசிசம், புதுத்திறனாய்வு, அமைப்பியம், பின்னமைப்பியம், பின்-நவீனத்துவம் போன்றவை தனித்தனி உலகப் பார்வையையும் அது சார்ந்த இலக்கியப் பார்வையையும் கொண்டிருக்கின்றன. அப்படிப் பட்ட தனித்த கோட்பாடு எதுவும் ஒப்பிலக்கியத்திற்கு இல்லை.

இரண்டாவது, ஒப்பிலக்கியம் மொழிபெயர்ப்புகளை நம்பி உள்ளடக்கத்தை மட்டுமே ஒப்பிடுகிறது. வெறும் உள்ளடக்க ஆய்வு திறனாய்வு ஆகாது. ஒப்பிலக்கிய ஆய்வில் உள்ள முக்கியக் குறைபாடு இது. உருவத்தை ஒப்பிட வேண்டுமானால், அல்லது உள்ளடக்கம்-உருவம் இரண்டையும் சமஅளவில் உள்ள அங்ககக் கட்டாக நோக்கி ஆராய வேண்டுமானால், இருமொழியிலும் சமஅளவு புலமை பெற்றவராக இருக்கவேண்டும். ஆனால பொதுவாக ஒப்பிலக்கிய ஆய்வுகள் மொழிபெயர்ப்புகளை நம்பியே செய்யப்படுகின்றன. எனவே அவை திறனாய்வாக மலர்தல் மிக அரிது.

மூன்று, உருவம் பற்றிய ஆய்வு மிக அரிதாக இடம் பெற்ற போதிலும், அது உத்திகள்-உவமை-உருவகம்-நோக்குநிலை என்று பட்டியலிடும் போக்காக அமைந்து விடுகிறது. முழுமை நோக்கு முயற்சிகள், உருவத்துடன் உள்ளடக்கத் தைப் பொருத்திப் பார்க்கும் முயற்சிகள் குறைவு.

நான்கு, ஒப்பிடப்படும் நூல்களின் இலக்கியத் தரம் பற்றி நாம் ஏதும் அறிந்துகொள்ள முடிவதில்லை. எல்லா நூல்களும் மிகச் சிறந்த இலக்கிய நூல்களாகக் கருதியே ஆராயப்படுகின்றன.
அடுத்து, இந்நூல்களை இவற்றிற்குரிய இடத்தில் இலக்கிய வரலாற்றில் பொருத்திப்பார்க்கும் முயற்சிகள் பெரும்பாலும் இல்லை.

ஆறு, மொழிபெயர்ப்புகளை நம்பும்போதும் அது மூலநூலிலிருந்து நேராகச் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு என்றால் குறையில்லை. ஆனால் நாம் ஆங்கில வழியாக வரும் மொழிபெயர்ப்புகளை மட்டுமே நம்பியிருக்கிறோம். உதாரணமாக, மராட்டி மொழிப் படைப்பு ஒன்றுக்கும் தமிழ்ப் படைப்பு ஒன்றிற்கும் ஒப்பீடு செய்ய வேண்டுமானாலும் நாம் மராட்டி கற்றுக்கொண்டு அதைச் செய்வதில்லை. மாறாக, மராட்டிப் படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை நம்பி ஆய்வில் ஈடுபட்டு விடுகிறோம்.

ஏழாவது, ஒப்பிலக்கியம், இலக்கியத்தின் பொதுமை என்ற அளவில் கருத்துக் கொண்டு தனித்தன்மைகளை மறுத்துவிடுகிறது. கம்பராமாயணத்துக்கும் வால்மீகி ராமாயணத்துக்கும் கதையில் பெருமளவு ஒப்புமைகளும் உண்டு. கம்பர் தனியே வகுத்துக்கொண்ட நிகழ்ச்சிகளும் உண்டு. ஆனால் கம்பரின் தனித் தன்மைகள், வெறும் நிகழ்ச்சிகள் அளவில் மட்டுமா இருக்கின்றன? அமைப்பு, நடை, மொழித்திறன், கற்பனை என எத்தனையோ வடிவக்கூறுகளில் அல்லவா இருக்கிறது? இரண்டையும் ஒப்பிட வேண்டுமானால், ஒப்பிலக்கியத்தில் இரண் டின் யாப்புகளையும், சொல்லும் முறையையும், கற்பனை நயத்தையும் ஒப்பிட வழியுண்டா?
திறனாய்வுகளிலும் இதே குறைபாடு உண்டு. க.நா.சு. போன்றோரின் மொழிபெயர்ப்புகள் பல நேரடியாகச் செய்யப்பட்டவை அல்ல. அதேபோல, உலகக் கவிதைகளையும் அவற்றின் போக்குகளையும் அறிமுகப்படுத்த முனைந்த பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புகளும் ஆங்கில வாயிலாகவே செய்யப்பட்டவை. புதுப்புது இலக்கிய இயக்கங்களை அறிமுகப்படுத்த முனைந்தோரின் நிலைமையும் இதுவே. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.

தனித்த விளக்கமுறை ஆய்வுகள், இலக்கியத் தகவோ, வரலாற்று ரீதியான இடமோ அறுதியிடப்படாதபோது பயனற்றுப் போகும். இக்குறைகள் தமிழ் ஆய்வுகளில் களையப்பட வேண்டும். ஒப்பிலக்கியம் பற்றிய பாடநூல்களையும் சிலர் எழுதினர். அவை யாவும் குறையுடையவைகளே. எவ்வகையிலும் சிறப்பானவை அல்ல. இவற்றைப் படித்து ஒப்பிலக்கிய ஆய்வு செய்யத் தெரிந்து கொண்டவர்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

மேலும் ஒப்பியல் திறனாய்வு, தனித்தனி இலக்கிய கர்த்தாக்களை ஒப்பிடுவது என்ற நிலையிலிருந்து உயர்ந்து, ஒரு குறிப்பிட்ட இலக்கிய இயக்கத்தை அல்லது சூழலை இன்னொரு இலக்கிய இயக்கத்துடன் அல்லது சூழலுடன் ஒப்பிடுவது என்ற நிலைக்கு உயரவேண்டும். உதாரணமாக, தமிழின் புனைவியல் அல்லது கற்பனாவாத இலக்கியத்தை வங்காளிமொழியின் கற்பனாவாத இயக்கத்துடன் ஒப்பிடவேண்டும். இம்மாதிரி ஆய்வுகள்தான் உண்மையான பயனை நல்கும். இத்தகைய ஆய்வுகள் இன்னும் தமிழில் தோன்ற வில்லை.

ஒப்பிலக்கியம் என்ற துறை குறைபாடுடையது என்றாலும் இன்றைய தேவையாகவும் இருக்கிறது. காலதேச வரையறைகளை மீறி, பண்பாடுகளின் ஊடாகக் காணப்படும் பொதுமைகளையும் தனித்துவங்களையும் காணப் பயன் படுவது ஒப்பிலக்கியமே ஆகும். கலையின் உலகப் பொதுமையை வலியுறுத்திக் குறுகிய மனப்பான்மையினைக் களையக் கூடியதும் ஒப்பிலக்கியமே.


எண்பதுகளில் கவிதை

எண்பதுகளில் கவிதை – சில எண்ணங்கள்

(இந்தக் கட்டுரை, 1990 ஆகஸ்டுமாத ‘மேலும்’ இதழில் வெளி வந்தது. எவ்வித மாற்றமும் இன்றி இங்கே வெளியிடப் படுகின்றது. ஒரு வரலாற்றுப் பதிவு.)

1
இரக்கமற்ற நூற்றாண்டாகப் போனது இது. ஆக்சிஜன் குடித்து வியாழனையும் சனியையும் தேடும் அசுரக் கழுகுகள். மூடிய குளிர்சாதனச் சிறைகளுக்குள் உயிரியல் அடிப்படைக் கூறுக ளையே பண்புமாற்றம் செய்யும் ஜால வித்தைகள் ஒரு புறம்; தோலின் நிறம் கறுப்பு என்பதற்காக மானிட விட்டில்கள் மாயும் சோகம். லட்சக்கணக்கில் சோறும் இல்லாமல் எலும்புக்கூடாக மண்ணில் புதையும் அவலம் மறுபுறம். பெட்ரோலைவிட மலிவாகிப் போயின மனித உயிர்கள். மனிதர்களிடையே அன்பு அற்றுப்போனது. பிளேட்டோ, தொல்காப்பியர் காலத்திலிருந்து மனிதர்கள்மேல் செய்யப்பட்டு வந்த அத்தனை கணிப்புகளும் அர்த்தமற்று வீழ்ந்துபோயின. சோற்றுக்கும் கனவுக்குமாகவே மனிதர்கள் இருநது போகிறார்கள். வல்லரசுகளின் வாணிகப் போட்டிகளுக்கிடையே நாடுகளே மிதிபட்டு நசுங்கி அலறுகின்றன. இந்த நிதர்சனங்களினூடே நீட்சே இந்த நூற்றாண்டின் தொடக்க ஆண்டில் சொன்னதுபோலக் “கடவுள் செத்துப்போனார்”.

இன்று இந்த நிலையில் எதை எழுதுவது கவிதையென்று? கடவுளே அற்றுப்போன உலகில் கவிதைக்கு என்ன மதிப்பு? கவிதை செத்துக்கொண்டிருக்கிறது என்று ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் பல குரல்கள் கேட் கின்றன. என்றாலும் விடாமல் கவிதை சிலரிடம் ஜீவிக்கிறது. கொஞ்சம் ஈரம் நெஞ்சில் இருக்கும்வரை கவிதை சாகாது என்று ஒரு நம்பிக்கை. ஆனால் கவிதையின் தோற்றம் குணம் மாறிவிட்டன. இன்று எதைச் சொல்வது கவிதை? கூடஙகுளங்கள் எதிர்கால நச்சு ராட்சஸக் குடைகளாக உருப்பெறுவதையா? சாராயமும் திரைப் படமும் மனிதர்களை ஆட்சிசெய்வதையா? தொலைக்காட்சி விளம்பரங்கள் மனித மதிப்புளை மலினப்படுத்திவிட்டதையா? அடிப்படைத் தேவைகளுக்கு மனிதர்கள் பரிதவிக்க, நீர்மூழ்கி களும் குண்டுவீசிகளும் நாட்டு வருமானத்தை ஏப்பமிடுவதையா? இதையெல்லாம் சகித்துக்கொண்டு கும்பலென ஒருபுறமும் ஏதும் செய்யக் கையற்று அந்நியமாகிப் புலம்பி மறுபுறமும் மனிதர்கள் வாழ்வதையா?

இதற்கிடையிலும், இன்னும், சுரணையற்றுப் போய் தமிழினத் தின் பொற்காலத்தையும் வாள்விழிகள் நீள்விழிகள் என வரலாற்றுப் பாவியங்களையும் எழுதிக் குவித்துப் பழங்காலத்தில் சஞ்சரிக்கும் ஃபாஸில் பிராணிகள் பிழைப்பு நடத்தாமலில்லை. உளுத்துப்போன சங்கதிகளை உருவேற்றும் இவைகளைக் கவிதை என இங்கே கொள்ளவில்லை. அதேபோல ஆதிக்கத் தலைவர்களை அண்டிக் கும்பிட்டு வாழ்த்துப்பாடிப் பிச்சையேந்திப் பிழைக்கும் சொல் அலங்காரங்களையும் முற்றிலுமாக நாம் மறுக்கிறோம். இவற்றையெல்லாம் புறந்தள்ளிப் பார்த்தால் கவிதை எங்கே? ஒருவேளை கவிதை செத்துக்கொண்டுதான் இருக்கிறதோ என்ற அவநம்பிக்கை எழாமலில்லை.

2
எப்படியிருப்பினும் பத்தாண்டுக்கு ஒருமுறை கவிதையின் முகம் மாறித்தான் போகிறது. சோனிக்குழந்தை என்றாலும் உயிருள்ளவரை மாற்றம் என்பதுதானே இயற்கை? நாற்பதுகளில் கிடைத்த பாரதிதாசனின் கவிதை ஒருவித பாசிடிவிசத்தோடு கூடிய சோகைபிடித்த ரொமாண்டிசிசக் கவிதையா கக் காட்சியளித்தது. ஐம்பதுகளில் இந்த பாசிடிவிசக் குணமும் அற்றுப்போய், பாரதிதாசன் பாரம்பரியத்தில் வெறும் நீர்த்துப்போன ரொமாண்டிக் குணங்க ளோடு, அர்த்தமற்ற பழமைவாதமும் சேர்ந்துகொண்டது. அறுபதுகளில் எழுத்து பத்திரிகை வாயிலாகச் சோதனை முயற்சிகள், அன்றைய, அதற்கு முந்திய ஆங்கிலக் கவிதைகளிலிருந்து பெறப்பட்ட உத்வேகத்தோடு தோன்றின. இதுதான் தமிழில் புதுக்கவிதையின் தோற்றம். (இனிமேல் புது என்ற சொல்லுக்கு அவசியமில்லை.) எழுபதுகளில் நவீனத்துவத்திற்கு மார்க்சியப் பழமைவாதத் தளங்களில் தோன்றிய எதிர்ப்புகள் வானம்பாடிக் கவிதைகளில் சென்று முடிந்தன. எனினும் ஒரு புதிய வகை அரசியல் கவிதைக்கான தேவை ஆழமாக உணரப்பட்டது. இனி, எண்பதுகளில் கவிதை என்ன ஆகியிருக்கிறது என்று காண்பது நோக்கம். இப்படி ஒவ்வொரு வாக்கியத்தில் மதிப்பிட்டுக் கூறுவது ஒருவகையில் மிக எளிமைப்படுத்துவது என்றாலும் நிலைமையைச் சரியான ஒரு பின்னணியில் வைத்துப் பார்க்க உதவும்.

3
எழுபதுகளின் இறுதிவரை, தமிழில் புதுக்கவிதை என்று இன்றும் அறியப் படும் இலக்கிய வகைக்கு நிறைய தற்காப்புகள் எழுதுவது தேவைப்பட்டது. எண்பதுகளில் தெரியும் ஒரு பெரிய மாற்றம், இன்று அவ்வாறான ‘அபாலஜி’கள் எழுதுவது அவசியமில்லையாகிவிட்டது என்பது. காலம் மாறிவிட்டது. யாப்பற்ற கவிதை பழகிப்போன ஒன்றாகிவிட்டது. எழுபதுகளில் சிறுபத்திரிகைகள் பெருகி வந்ததைப்போல, எண்பதுகளில் இல்லை. என்றாலும், சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தே இருக்கின்றன.

வெறும் அலங்காரங்களைப் பயன்படுத்தும் வியாபாரக் கவிதைகள், வணிக இதழ்களைத் தேடிச்சென்றுவிட்டன. இதற்கு முன்னரே பழைய கவிஞர்களின் காதுடைக்கும் சந்(தை)த நயங்கள், பழஞ்சொற்களைக் கையாளும் பாணிகளும் மார்க்கெட்டில் மதிப்பிழந்துபோய்விட்டன. எழுபதுகளில்போல, எழுதப்பட்டும் வறட்டு கோஷங்களும் வணிக இதழ்களை நாடிச்சென்றுவிட்டன. எண்பதுகளில், சிறுபத்திரிகைகளில், பெரும்பாலும் காணக்கிடைப்பன, முற்போக்கோ, பிற்போக்கோ, கவிதை என்னும் உணர்வுக்கேற்ப, கருத்தியலுக் கேற்ப எழுதப்பட்டவையே. இது தமிழ்க்கவிதைக்கு ஒரு பயனுள்ள போக்குதான்.

4
ஒரு புதிய கவிதை படைப்பாகிக் கொண்டிருக்கிறதா? இன்றைய உலகின் தேவைகளை மனதிற்கொண்டு, இன்றுளள பிரச்சினைகள்-குழப்பங்களை எதிர்கொள்ளும் ஒரு நவீன பிரக்ஞையை வளர்த்துக்கொண்டு, இவற்றைத் தாங்கக் கூடிய ஒரு சரியான சொற்கோவையையும் உருவாக்கிக்கொண்டு, இன்றைய தமிழ்க்கவிதை ஒருவாறாக உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சோனிக்குழந்தையாகத்தான் இருக்கிறது. பாரதிக்குப் பின் இன்றுவரை சந்தேகமின்றி ஒரு பெருங்கவிஞன் தோன்றவில்லை. எனினும் எண்பதுகளில்கூட, தமிழில் சில முக்கியக் கவிஞர்களும், சில கவிஞர்களும் உருவாகித்தான் இருக்கிறார்கள். தமிழில் கவிதை தேங்கிப்போய்விடவில்லை.

இன்றைய கவிதை மனிதனின் சிக்கல்கள் முடிச்சுகள் சுருக்கங்கள் நரைதிரைகள் ஆகிய எல்லாவற்றையும் காட்டித்தான் ஆகவேண்டும். தப்பிக்க முடியாது. இப்படிப்பட்ட கவிதை தமிழில் உருவாவதற்கான சாத்தியங்களை அறுபது எழுபதுகளில் அளித்த முக்கியக் கவிஞர்கள் பிருமீள் (தருமு சிவராமு), பசுவய்யா, ஞானக்கூத்தன், நகுலன் போன்றோர். இன்று புதுக்கவிதையில் இவர் கள் பழந்தலைமுறையினர். எனினும் தமிழில் இப்படிப்பட்ட கவிதையும் முற்றி லும் உருவாகிவிட்டது என்று திடத்தோடு சொல்லமுடியவில்லை. காரணம், தமிழில் உருவாகும் நவீனத்துவக் கவிதைகளும்கூட மத்தியதர வர்க்கத்துக் கையறுநிலைகள்தான். பெரும்பாலும் அவற்றில் காணப்படும் வாழ்க்கை ஒரு கைப்பிடியளவுதான். இன்னும் தமிழில் தலித் கவிதையோ, அரசியல் கவிதையோ தோன்றவேயில்லை. பரந்த மானிட அடிப்படையிலான கவிதை தமிழில் மிகக் குறைவு. நாவல் சிறுகதை போன்றவற்றின் அனுபவங்களோடு வைத்துப் பார்க்கும்போது கவிதையின் வறுமை பளிச்சென்று தெரிகிறது.
என்றாலும் அறநெறி சார்ந்த ஒரு பிரக்ஞை, இந்திய கிராமங்களில் வசிக்கும் நிஜ மனிதர்களை ஒளிவுமறைவின்றிக் காட்டுதல், தொழில்நுட்பத் தேர்ச்சி, உயர்ந்த தரத்தை நோக்கிய தேடல், பாஷை நுட்பம் ஆகியவற்றைப் பலவேறு நிலைகளிலும் வெளிப்படுத்தும் முக்கியக் கவிஞர்களாக கலாப்ரியா, ஆத்மாநாம், பிரம்மராஜன் போன்றோரையும், ழ, மீட்சி போன்ற கவிதைச் சிற்றிதழ்களில் எழுதிய இன்னும் பலரையும் குறிப்பிடலாம்.

கலாப்ரியாவும் ஆத்மாநாமும் எழுபதுகளின் இறுதியிலேயே வெளிப் பட்டுத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள். என்றாலும் அவர்களின் முக்கியப் படைப்புகள் வெளியான காலத்தை நோக்கி அவர்களை எண்பதுகளின் கவிஞர்களாகக் கொள்வதில் தப்பில்லை. எண்பதுகளில் தன்னை வெளிப்படுத்தி நிலைநிறுத்திக்கொண்ட ஒரு முக்கியக் கவிஞர் பிரம்மராஜன். இன்னும் கல்யாண்ஜி, தேவதச்சன், ஆனந்த், தேவதேவன், பாதசாரி, ஜெயபாஸ்கரன், விக்கிரமாதித்யன், சத்யன், சுகுமாரன், சீனிவாசன், பழமலய், பிரேதா – இப்படிப் பலபெயர்கள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் இவர்களை இப்போதைக்குச் சிறு கவிஞர்கள் என்றே கருதத்தகும். இனி இவர்களைப் பற்றி ஒருசில மேலோட்டமான பார்வைகள். இந்த மதிப்பீடுகளில் இலங்கைக் கவிஞர்கள் சேர்க்கப்படவில்லை.

5
முதலில் ஆத்மாநாம்.

எழுபதுகளின் இறுதியில் வெளிப்பட்ட இந்தக் கவிஞர், ‘ழ’ என்னும் கவிதை இதழின் ஆசிரியரும்கூட. எண்பதுகளின் முதற்பாதியின் இறுதிக்குள் இவர் மறைந்தது தமிழுக்கு ஒரு பெரிய இழப்பு. ‘ழ’ வின் ஒன்பதாம் இதழ் முதலாக எண்பதுகளிலேயே வெளியானதால், இவரை எண்பதுகளின் கவிஞராகவே காணலாம். கொஞ்சம் விடுபட்ட ‘கன்பெஷனல்’ (confessional) கவிதைகள் அவருடையவை. ‘விடுபட்ட’ என்பது அழகியல் தொலைவைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். அவர் கவிதைகளில் அவரது ஆளுமையின் இறுவேறு பகுதிகளின் ஒளிமிக்க பகுதியின் வெளிப்பாடு மட்டுமே காணக்கிடக்கிறது. இருளின் பகுதி (அவரது தற்கொலை போன்ற சிலசெயல்களில் மட்டுமே வெளிப்பட்டது.) கவிஞனாக இருப்பதற்குரிய அர்ப்பணிப்பு, வார்த்தைப் பிரயோகங்களின் சரியான தேர்வு, தொழில்நுட்பத் தேர்ச்சி, மிகையுணர்ச்சியை அறவே புறக்கணித்த பாங்கு ஆகியவை இவர் கவிதைகளின் சிறப்பம்சங்கள். இவரது கவிதைகளில் அறிவுத்துறைகளின் தாக்கத்தைப் பெரிதும் காணமுடியா விட்டாலும், உள்தர்க்கமும் ஒழுங்கும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இவரது கவிதைகளின் முக்கியப் பொருள் மனித சுதந்திரம். இந்தத் தன்மைகள் யாவும் அவரை ஒரு நவீனத்துவப் பாரம்பரியக் கவிஞராக ஆக்கின. ஆனால் செயற்கையான உத்திகளைக் கையாளல் அவரிடம் சிறு அளவும் இல்லை.

எந்தக் குறிப்பிட்ட திசையையும்
பின்பற்றாது
வண்ணாத்திப் பூச்சிகள்
வாழ்க்கை நடத்துகின்றன…..

இதுபோன்ற வரிகள் அவரது சுதந்திர ஆர்வத்தை வெளிக்காட்டுகின்றன. அவரது கவிதைகளையும் நமக்கு இனங்காட்டுகின்றன. வண்ணாத்திப் பூச்சியின் வழி அதற்கே தெரிந்த ஒன்றாயினும், ஒழுங்கற்றதல்ல. அதேபோலத்தான் ஆத்மா நாமின் எழுத்தும் நிச்சயமான ஒரு மையம் கொண்டதுதான்.

நான் ஒரு வரியை
இயல்பாய்க் கொண்டு செல்கிறேன்
அது நிச்சயமானதொரு திசையைத்
தேர்வு செய்கிறது. (ழ-27)

ஒப்புக்கொள்ளும் தன்மை இருப்பதால், இவரது கவிதைகள் ஒருவித ரொமாண்டிக் தன்மையோடு, ஆனால் ஆரோக்கியமான ரொமாண்டிக் தன்மை யோடு கூடியிருக்கின்றன. அத்துடன், ஒரு அதீதமான எளிமை நம்முடன் இரண்டறக் கலந்து ஈர்க்கின்ற நேசத்தை உண்டாக்கும். சுய அனுபவ வெளிப்பாடு இந்தக் கவிதை இயல்புகள், சில்வியா பிளாத்துடன் இவரை ஒப்பிட வைக்கின்றன. (இவரது வாழ்க்கையும்தான்.) ஆனால் பிளாத்தின் கவிதைகளில் சாவு பற்றிக் காணப்படும் பிரேமை (சாவதும் ஒரு கலை) ஆச்சரியகரமாக இவரது கவிதைகளில் இல்லை. ஆத்மாநாமின் கவிதைகள் எடுத்துரைப் பதெல்லாம் வாழ்க்கையின்மேல் ஓர் இடையறா நேசம்தான்.

அற்புத மரங்களின் அணைப்பில்
நான் ஒரு காற்றாடி
வேப்ப மரக்கிளைகளின் இடையே
நான் ஒரு சூரிய ரேகை
பப்பாளிச் செடிகளின் நடுவே
நான் ஒரு இனிமை
சடைசடையாய்த் தொங்கும் கொடிகளில்
நான் ஒரு நட்சத்திரம் (அமைதிப் படுகையில்)

இக்கவிதை இவரது வாழ்வின் நம்பிக்கை தொனியையும் அதேசமயம் ஒரு கனவுத் தன்மையான ரொமாண்டிக் குணத்தையும் காட்டுகின்றது. மனிதனை அப்படியே ஏற்றுக்கொள்ளும், மனிதனின் குற்றங்களையும் நேசபாவத்தோடு நோக்கும் கவிதை அவருடையது.

நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்றே சும்மா இருங்கள் (சும்மாவுக்காக ஒரு கவிதை)

வெள்ளைத் தாளிலும்
நமக்குத் தெரியாமல்
சில கோடுகள்
குறுக்கிலும் நெடுக்கிலும் இருக்கும் (காகிதத்தில் ஒரு கோடு)

மனிதநேயமற்று அதீதமாகத் தேடும் அறிவின் அனர்த்தத்தையும் மனித இயல்பையும் இவை சொல்கின்றன. ஆத்மாநாமிடம் அவரை ஒரு பெருங்கவிஞராகக் கருதக்கூடிய கற்பனை வளமும், ஒழுங்கும், மனிதநேயமும், எளிமையும் இருந்தன. சுமார் நூறு கவிதை அளவிலான படைப்புகளோடு அவரது படைப் பியக்கம் நின்றுவிட்டது.

6
கிராமத்தானுடைய எளிமை போன்றதொரு எளிமை ஆத்மாநாமின் கவிதையில் இருப்பினும், உள்ளடக்கத்தில் அது நகர்சார் மத்தியதர வாழ்க்கையே. உண்மையான கிராமியம் தழுவிய கவிதை கிடைப்பது கலாப்ரியாவின் வாயிலாகத்தான். கிராமத்தின் அடிப்படைக் குணங்கள்-அதன் மண்-அதன் சடங்குகள்-அதன் பாலியல், வன்முறைகள் உட்பட வெளிப்படும் கவிதை. இழந்துவிட்ட அந்த வாழ்க்கைக்கான ஏக்கச்சிந்தனை, அந்த வாழ்க்கையைப் பாழ் படுத்திவிட்ட நகர நாகரிகம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான வெறுப்பு ஆகி யவையும், இந்த அவலங்களுக்கிடையிலும் கிராமங்களில் காணப்படும் சின்னச் சின்ன சந்தோஷங்கள் தொடரும் வாழ்க்கை மீதான நம்பிக்கை ஆகியவை இவரது கவிதையின் அடிப்படைக் குணங்கள். ‘எட்டயபுரம்’, ‘சுயம்வரம்’ ஆகிய இரு தொகுப்புகளும் இத்தன்மைகளை நன்றாகவே வெளிப்படுத்துகின்றன. கிராமத்தில் நகர வாழ்க்கையின் குறுக்கீடு (கற்பழிப்பு) இவரது மையச் சிந்தனை எனலாம். (இந்த நகரவாழ்க்கையின் குறுக்கீடுகளற்ற ஒரிஜினலான மானிடப் பாத்திரங்கள் பழமலையின் கிராமியக் கவிதைகளில் நிறையக் காணக்கிடக்கின் றனர்.)

கலாப்ரியாவின் கவிதை காட்சிகள் நிரம்பியது. ஆனால் செயற்கையான காட்சிப்படுத்தல்கள், படிமப்படுத்தல்கள் அற்றது. ஒரு லத்தீன் அமெரிக்கத் தன்மை இவர் கவிதைகளில் விரவியிருக்கிறது. (அதே போன்றதொரு மூன்றாம் உலக வாழ்க்கை-போர்க்குணம் நீங்கலாக.) நேரடியான கவிதை இருப்பினும், படிம, உருவகக் குறியீட்டு இடையீடில்லாத நிர்வாண கவித்வம் வேண்டிக் கலாப் ரியா தியானிக்கிறார். இந்த தியானம், அவர் கவிதைகளில் சுயம்வரம் தொகுதியிலும எட்டயபுரம் கவிதைநூலிலும் இடம்பெறுகிறது. வெவ்வேறு வடிவத்தில் அறுபதுகளில் அமெரிக்காவிலும் இப்படி ஓர் இயக்கம் தோன்றியது. நிர்வாணக் கவிதை இயக்கம். ரீத்கே, ரெக்ஸ்ராத், ஜின்ஸ்பெர்க் முதலியோர் ஒன்று சேர்ந்து ஒரு நூலே வெளியிட்டனர். (Naked Poetry – Recent American Poetry in open form) இதன் பாதிப்பாகவே கலாப்ரியா படிம குறியீட்டு இடையீடுகளற்ற கவிதை கேட்பதாகக் கொள்ளலாம். இங்கு திறந்த வடிவம் என்பது முக்கியமானது. நவீனத்துவக் கவிதைகளிலேயே பல திறந்த வடிவக் கவிதைகளே. பிந்திய நவீனத்துவக் கவிதையிலும் இதுவே இயல்பு. கலாப்ரியாவின் மனத்தில் எஸ்ரா பவுண்ட், எலியட் மாதிரியான நவீனத்துவக் கவிதையைக் கடந்து செல்லும் ஆசை இருக்கிறது.

7
எழுபதுகளின் இறுதியில் எழுதத்தொடங்கி, விரைந்த வளர்ச்சி பெற்ற-இன்று தவிர்க்க முடியாத கவிஞர் பிரம்மராஜன். எண்பதுகளின் தொடக்கத்தில் அவரது முதல் கவிதைத் தொகுதி ‘அறிந்த நிரந்தரம்’ வெளிவந்தது. பிறகு அவர் மீட்சி இதழ் ஆசிரியர் ஆனார். நிறையக் கவிதைகளையும், கவிதை பற்றித் தனது மதிப்பீடுகளையும், ஐரோப்பியக் கவிஞர்களின் கோட்பாடுகளையும் தொடர்ந்து வெளியிட்டார். இப்போது ‘வலி உணரும் மனிதர்கள்’, ‘ஞாபகச் சிற்பம்’ என இன்னும் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.

‘அறிந்த நிரந்தரம்’ தொகுதிக் கவிதைகள் எல்லாமே படிமக் கவிதைகள்தான். அக்கவிதைகளில் தொடர்பின் இழை உண்டு. வலி உணரும் மனிதர்கள் அடுத்த சோதனைப் படியாகவும், ஞாபகச் சிற்பம் அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன. ஞாபகச் சிற்பம் தொகுதியில் அவர் முழுமையாக பின் நவீனத்துவப் பாணிக் கவிதைகளில் எந்தவித மையமுமற்ற, தொடர்ச்சி இழை யற்ற பல கவிதைகளை வரைந்துள்ளார்.

பிரம்மராஜனின் ஈடுபாடுகள் பரந்துபட்டவை. அவரது கவிதைகளை இரசிக்க, ஆங்கில இலக்கியப் பின்னணி, சங்கீதம் பற்றிய அடிப்படைகள், அறிவியல் துறைகளின் அடிப்படைகள் போன்ற பலவும் ஒன்றிணைந்தால்தான் முடியும். அவரது கவிதையைக் கடினமாக்கும் தன்மைகள் பல. பிரம்மராஜன் கவிதைகள் புரியவில்லை என்று ஓயாமல் சொல்பவர்களும், அவற்றில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று சொல்பவர்களும் சிறுபத்திரிகை வாசகர்களில் உண்டு. அவரது மேற்கோள்கள், தொடர்புறுத்தல்கள் (அல்யூஷன்ஸ்), புதிய காட்சிப் படிமங்கள் (“காலம் எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது”), ஒரு புலனுணர்வு மற்றொரு புலனுணர்வாக மாற்றப்படுதல் (சைனீஸ்தனிஸ்- “காகம்,  உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக் கேட்காமல்” என்பது போல), புதிய முரண்கள் (“இரவெனும் கருப்புச் சூரியன்”) சங்கீதத்திலிருந்து இடையறாது ஆளப்படும் கருத்துகளும் சொற்களும் – முழு அளவில் புதியதொரு பார்வை.

முதல் டாடாயிசக் கண்காட்சி காட்டியது
சிறுநீர் சேகரத் தொட்டி
உன் தேசமே அப்படி உனக்கு
(ஆத்மாநாமுக்கு, வலி உணரும் மனிதர்கள்)

என்பதுபோன்ற சமூகச் சாடல்கள்-இவை போன்றவை பிரம்மராஜனின் கவிதைக்கு மிகுந்த வலுக்கூட்டுகின்றன. எலியட் பாணி கொலாஜ் தன்மையுள்ள கவிதைகளைப் படித்தவர்களுக்கு பிரம்மராஜனின் சொல்லும் பாணி அதிர்ச்சி யூட்டாது. தமிழுக்கு இந்தப் பாணி முற்றிலும் புதியதாகையால், பலருக்குப் புரிவ தில்லை. மேலும் இத்தகைய கவிதைகள் புரிந்துகொள்ளப் பலமுறை ஆழ்ந்த வாசிப்பையும் காலம் செலவிடலையும் வேண்டுபவை. எனவே அவசரமாக நோக்கிவிட்டு வாசகர்கள் பிரம்மராஜனை நெருங்கமுடியாது. பிரம்மராஜனின் வலுவே, பன்முக மனநிலைகள், குழப்பம், வேகம், கொந்தளிப்பு போன்றவற்றைச் சித்திரிக்கும் படிம ஆற்றல்தான்.

பிரம்மராஜனின் மூன்று கவிதைத் தொகுதிகளும், நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவப் பாணிக்கு அவர் மாறிச்செல்வதை எடுத்துக்காட்டுகின்றன. பிரம்மராஜனின் சமூக அக்கறைத் தளம் ஓரளவு நிசிம் எசகியேலையும், சோதனை முயற்சிகள் மெஹ்ரோத்ராவையும் நினைவூட்டுகின்றன.

8
பிரம்மராஜனின் கவிதைகளில் குறைகளில்லை என்று சொல்லமுடியாது. தாங்கிவரும் மொழியிலும் படிமங்களிலுமே மனத்தை நிறுத்தி அப்பாற்செல்லாமல் தடுத்துவிடும் கவிதை அவருடையது. ஓர் அர்த்த மையத்தை வைத்தே சிந்தித்துப் பழகிய தமிழ் மனத்துக்கு அவரது கவிதைகள் பரியாமல் போவதில் வியப்பில்லை. இவ்விதக் கவிதைகளுக்கு எவரும் உரையெழுதிப் பொருள் விளக்கும் (பழமலை வேண்டுவதுபோல) வாய்ப்பும் குறைவு. (‘பிரம்மராஜனின் கவிதைகளும் நரிகளும்’, பழமலை, மீட்சி-31). இப்படிப் பொருள் உணர்த்தவேண்டுவதே இந்தக் கவிதைகளின் தன்மையை மாறாகப் புரிந்துகொள்வதாகும். அல்லது நாகார்ஜுனன் செய்வதுபோல அன்வயப்படுத்திக் காட்டுவதாலும் (இதைக் கட்டவிழ்த்தல் அல்லது உடைப்பு, டிகன்ஸ்ட்ரக்ஷன் என்று நாகார்ஜுனன் சொன்னாலும் அவர் செய்வது அன்வயப் படுத்தல்தான்) மிகுந்த பயன் விளையாது.

9
இங்குக் கவிதையின் மொழி பற்றிக் கொஞ்சம். கவிதை ஆன்மாவின் குரல் என்றாலும், அல்லது வெறும் மொழி விளையாட்டு என்றாலும் அது நிகழ்காலத்தின் தகிக்கும் நிதர்சனங்களைவிட்டு இறந்த காலத்தின் இருட்குகைகளுக்குள் சென்று பதுங்கிக்கொள்ள முடியாது. அல்லது எதிர்காலம் ஒளிமயம் என்று கிளிஜோசியம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இன்றைய பிரச்சினைகள்தான் கவிதைக்குக் களம் என்றால் காலங்காலமாக ஆதிக்கவாதிகளைச் சோற்றுக்காகவும், கடவுளை உலகவாழ்வெனும் மாயப்பிணிக்கு மருந்துக்காகவும் பாடிய பழைய பாஷையைத் தூக்கி எறியத்தான் வேண்டும். “நவீன அறிவுக் களங்களை நாடும்போது நம் பழைய மொழி தத்தளிக்கிறது, உடைகிறது, நொறுங்குகிறது, என்னை விட்டுவிடு என்று கெஞ்சுகிறது” என்கிறார் டி. எஸ். எலியட். இது எந்த பாஷைக்கும் நேர்வதுதான். ஆகவே கவிஞன் தனது மொழியைத் தானே உருவாக்குகிறான். எனவே கவிதை புரிய வில்லை என்று ஒதுக்கிவிடக்கூடாது. என்றாலும், தமிழ்போன்ற, பலவித கலை அறிவியல் இயக்கங்களுக்கு ஆட்படாத மொழியில் கவிஞன் தானாகச் சற்று இறங்கி வந்து (பெரிய சமரசங்கள் செய்துகொள்ளாமல்) வாசகரைச் சேர்வதில் தவறில்லை என்பது என் கருத்து. பிரம்மராஜனின் கவிதைகளை ஊன்றிப் படிக்கும்போதும், சிலசமயம் படிமங்களின் அயர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது. இதற்கு அவரது ஆங்கில பாதிப்பினால் விளைந்த நடையும் ஒரு காரணம். அவருடைய சுய அனுபவத்துக்கு மட்டுமே உட்பட்ட தனித்த படிமங்கள் மற்றொரு காரணம். அவரது கவிதைகளின சிறப்பை ஒப்புக் கொள்ளும் அதேசமயம், அவரது கவிதைகள் சில மோசமான ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் போன்று தோற்றம் அளிப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இக்குறை நகுலன் ஆத்மாநாம் போன்றவர்களிடம் அறவே இல்லை. தமிழின் தனித்த ‘இடியம்’ பிரம்மராஜனுக்குச் சற்று பிடிபடவில்லையோ என்று தோன்றுகிறது.

10
நுண்மைக் கவிதை (அப்ஸ்டிராக்ட் பொயட்ரி) தான் என்றாலும் சாதாரண வார்த்தைகளில் அசாதாரண அனுபவங்களைப் பிடித்து நிறுத்தும் ஆற்றல் நகுலனுக்குக் கைவந்திருக்கிறது. பழங்கவிஞரான இவரை இங்கு விரிவாகப் பேசவேண்டிய அவசியமில்லை. ‘மூன்று’, ‘ஐந்து’, ‘கோட்ஸ்டாண்டு கவிதைகள்’ போன்றவை எண்பதுகளில் வெளிவந்த இவரது தொகுதிகள். செறிவும் அனுபவமும் இணைவது அபூர்வம்.

இருப்பதற்கென்றுதான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்

ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை

போன்ற கவிதைகள் பன்முறை மேற்கோள் காட்டப்பட்டுப் பாராட்டப்பட்டவை.
விக்ரமாதித்தன் இந்தப் பத்துகளில் வெளிப்பட்ட கவிஞர். அவரது கவிதைகளில் எளிமை இருப்பினும், அது மிக மேலோட்டமானது. தொனிப்பொருள்கள் அற்று வெறும் கமெண்ட் அளவில் நிற்கிற கவிதை. மேலும் அவரது சமூக உணர்வற்ற வெளிப்பாடு பல கவிதைகளில் எரிச்சலைத் தருகிறது.

சுகுமாரனின் கோடைகாலக் குறிப்புகள் குறிப்பிடக்கூடிய தொகுதி. வாழ்ககை மிகக் கசப்பான ஒன்றாகத்தான் இருக்கிறது. சுயவெளிப்பாட்டுடன் இயங்க இயலாத உலகம். எல்லா மாயத்தோற்றங்ககளையும் தோலுரித்துப் பார்ப்பதன்வழி வாழ்க்கையின் நியதியை உணரத்து£ண்டும் கவிதைகள் இவை. மிகச் சிறப்பான நவீன படிமங்கள் கவிதைகளில் இயங்குகின்றன.
பாதசாரியின் பார்வையிலும் உலகம் பிடிப்பற்றதாகவே இருக்கிறது. சாவின் மேல் ஓர் அதீத கவனம் வெளிப்படுகிறது. கல்யாண்ஜி கவிதைகளிலோ நேர்மாறாக, உலகம் சகிக்கக்கூடிய சிறுசறு அற்புதக் காட்சிகளாகக் கருக்கொள்கிறது. மிக எளிய ஆத்மார்த்தமான தொனி இவருடையது. தமிழ்க்கவிதையில் காலம்-வெளி பற்றிய பிரக்ஞை, ஆனந்த்-தேவதச்சன் கவிதைகளில் உண்டு. (அடுத்ததாக பிரம்மராஜன்). தேவதேவனின் கவிதைகள் ஒரு சமூக அக்கறையைக் காட்டினாலும் (குறிப்பாகச் சுற்றுச்சூழல், மரங்கள்) மிக நேரடியாகவும், வெறும் வசனம் என்று சொல்லத் தக்க அளவிலும் ஆழமற்று நின்றுவிடுகின்றன. (சான்று, நிகழ் 10இல் ‘ஒரு மரத்தைக் கூடக் காணமுடியவில்லை’; கனவு 5இன் நீண்ட கவிதை ‘அகழி’).

11
எண்பதுகளின் இறுதிவாக்கில் வெளிப்பட்ட இரு கவிஞர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் பழமலை; மற்றொருவர்(கள்?) பிரேதா (பிரேம்). பழமலையின் சனங்களின் கதை, கிராமப்புற மனிதர்களை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, சம்பாஷணைகளும் வர்ணனைகளும் இசைந்து சுகமாக வந்துவிழுவது நல்ல அனுபவம் என்றாலும், பல கவிதைகள் வசனமாகி நிற்கின்றன. மிகையுணர்ச்சி இல்லாமல் இப்படிப்பட்ட பழம்நினைவுக் காட்சிகளை வரைவது கடினம். இந்த வித்தை பழமலைக்கு நன்கு வந்திருக்கிறது. இத்தொகுதிக்குப்பின் அவர் எழுதி வரும் கவிதைகளும் நிமிர்ந்து நிற்கக்கூடிய கவிஞர் ஒருவர் உருவாகியிருக்கிறார் என்ற தெம்பை அளிக்கின்றன.

இதற்கு நேர்மாறானது பிரேமின் கவிதை. ‘கிரணம்’ முதல் இதழில் அவர் கவிதை வெளிப்பட்டபோது முற்றிலும் புதிதாக இருந்தது. அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருந்தது. ஆனால் ‘கிரணம்’ பின் இதழ்களின் அக்கவிதையின் தொடர்ச்சி வெளிவந்த பின், ஒரே விஷயம் திரும்பத்திரும்ப அனுபவச் செழுமையின்றி பன்னிப்பன்னிப் பேசப்படுவதாக ஆகிவிட்டது. இன்றைய வணிகச் சமூகம் எப்படி தனிமனித ஆளுமையைச் சிதைக்கிறது என்பதை இக்கவிதை நன்றாகவே முதல் இதழில் வெளிப் படுத்தியது. பிளவுபட்ட சுயம்தான் கருப்பொருள். ஆனால் வெறும் அதிர்ச்சி மதிப்பு கள், எதிர்ப்புத்தன்மை அல்லது கலகக்குரல் இருந்தால் மட்டுமே கவிதை உருவாகிவிட முடியாது. இவரிடம் காணப்படும் இத்தகைய அதிர்ச்சித் தளமும் நவீனத்துவக் கவிதைக்குச் சான்று. இன்னும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், இவரது வெளிப்பாடுகளை.

12
எண்பதுகளில் பெண் கவிஞர்கள் சிலர் புதிதாக உருவாகியிருக்கிறார்கள். இலங்கைப் பெண் கவிஞர்களின் தனித் தொகுதியே (‘சொல்லாத சேதிகள்’) வெளிவந்திருக்கிறது. பெண்மையின் தனித்த அனுபவங்களைப் பேசும் கவிதையாக சுகந்தி சுப்பிரமணியன் கவிதை உருக்கொண்டுள்ளது என்றாலும் ஆழமில்லை.
மொழிபெயர்ப்புக் கவிதை முயற்சிகள் எழுபதுகளைவிட இப்பத்தாண்டுகளில் மிகுதி எனலாம். மக்கள் கலாச்சாரக் கழகத்தின் சோசலிசக் கவிதைகள், ஓர் அவசர நிலைக்கால இரவு போன்றவை, பிரம்மராஜனின் உலகக் கவிதை போன்ற முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. இன்னும் பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளும் (டி. எஸ். எலியட்டின் பாழ்நிலம் போன்றவை) கவனிக்கப்பட வேண்டியவை.

பிரம்மராஜன், எஸ்ரா பவுண்ட், டி. எஸ். எலியட் பற்றி நூல்கள் வெளியிட்டார். ஆத்மாநாம் கவிதைகளையும் தொகுத்து வெளியிட்டார். இவை போன்றவற்றில் காணப்படும் கவிதைக் கொள்கைகள் முக்கியமாகப் பயிலப்பட வேண்டியவை.

13
இந்தக் கவிதைகளின் பொது இயல்புகள் சில.
எண்பதுகளில் தமிழ்க்கவிதை நவீனத்துவக் கட்டத்திலிருந்து பின்நவீனத்துவக் கட்டத்திற்குச் செல்லத் தொடங்கியுள்ளது என்று தோன்றுகிறது. எண்பதுகளுக்கு முன், தமிழ்க்கவிதை உலகில் சில ஆங்கில மாதிரிகள் மட்டுமே அறிமுகமாகியிருந்தன. இப்போதோ உலக இலக்கியத்தின் முக்கியப் பகுதிகளின் (குறிப்பாக, சீன, ரஷ்ய, லத்தீன் அமெரிக்க, ஐரோப்பியக்) கவிதை மாதிரிகளும் அறிமுகமாகியுள்ளன. பல உலகக் கவிஞர்களின் கவிதைக் கோட்பாடுகளும் அறிமுகமாகியுள்ளன. உலகக் கவிதைகளின் பகுதியாகவே இன்று தமிழ்க்கவிதை உணரப்படுகிறது. எழுபதுகளின் கவிஞர்களிடம் அனுபவ வெளிப்பாடே கவிதை, சமூக முழக்கம் செறிவோடும் நுட்பத் தோடும் புதிய வழிகளல் உருப்பெறுவதே கவிதை என்பன போன்ற கொள்கைகள் இருந்தன. இவை மாறிவருகின்றன. தேர்ந்த தொழில்நுட்பம், வார்த்தையில் தேர்ச்சி நுட்பம், சமூக யதார்த்தத்தை வெளிப்படுத்தல் போன்றவை நவீனத்துவக் கவிதையின் இயல்புகள். இக்கவிதைகளில் ஓர் ஆசிரியனின் அறிவுச் சட்டகம் இணைப்புச் சங்கிலி யாக நிற்கும். உள்தர்க்கம், கூர்மையான படிமங்கள், ஒழுங்கு ஆகியவை நவீனத்துவக் கவிதைகளில் உண்டு. சருங்கச் சொன்னால் ஒரு மையம் உண்டு.

பின்நவீனத்துவக் கவிதைகளில் மையம் இருப்பதில்லை. பல குரல்களும், பல ‘பெர்சோனா’க்களும் ஒரே கவிதையில் வெளிப்படலாம். ஒரே நிறுவப்பட்ட அர்த்தம் என்பதற்கில்லை. அவரவர் வாசிப்புப் பழக்கத்திற்கும் அனுபவக் களத்திற்கும் ஏற்றாற் போல அர்த்தம் வெவ்வேறாகலாம்.
சில பின்நவீனத்துவவாதிகளிடம் பாப் கலாச்சாரத்தை ஏற்கும் தன்மையும், நவீன தொழில்நுட்பத்தை ஏற்றலும் உண்டு. ஆனால் தமிழ்க்கவிஞர்கள் அப்படி இல்லை. இதேபோல ஒரு குறித்த பிரதேசக் கலாச்சாரத்தோடு இணைத்துக்கொண்டு அதில் தன்னை வைத்துப் பார்க்கும் மரபும் சிலரிடம் உண்டு.
பின்நவீனத்துவக் கவிதையில் கவிதை என்பது ஒரு கட்டமைப்பு, ஒரு பிரதி என்றே பார்க்கப்படுகிறது. ஒரே கவிதையில் ஒன்றுக்கொன்று முரணான உணர்வுகளும் தர்க்கங்களும் தூண்டப்படலாம். அவை இயைபாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. கவிதை என்பது பல்வேறு படிமங்கள் அடுத்து வைக்கப்பட்டுள்ள அமைப்பு. அவ்வளவுதான். அவற்றுக்குள் தொடர்புச் சங்கிலிகள் இருக்கலாம், இல்லா மலும் போகலாம்.

“நவீன கவிதைகளில் வெளிப்பொருளைக் குறித்தல் என்பது இல்லவே இல்லை” என்கிறார் ஆக்டேவியா பாஸ். அதாவது கவிதை, வேறெதையும் குறிக்கவில்லை, தன்னையே குறித்துக்கொள்கிறது. அர்த்தம், வார்த்தைகளில் உண்டாவ தல்ல; வார்த்தைகளுக்கிடையில் உள்ள இடைவெளிகளில் தோன்றுவது. மொழிக்கும் அனுபவத்திற்கும் பெரும் இடைவெளி இருப்பதால் செத்துப்போன, பழகிப்போன பாஷையின் உடைபாடுகளிலிருந்து வேறொரு புதிய பாஷையைத் தோற்றுவிப்பது அவசியமாகிறது. இதைத்தான் கவிஞன் செய்ய முற்படுகிறான்.

மொழியின் கூறுகள் யாவும் தன்னிச்சையானவை. எனவே அவற்றிற்கும் யதார்த்தத்திற்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. இவ்விதப் புதிய கவிதை, எழுத்துப்பிரதிக்கு வெளியே ஒரு சமூகம், கலாச்சாரம், வரலாறு போன்றவற்றைச் சார்வதற்கு பதிலாகத் தன்னையே மையப்படுத்தித், தன்மேலேயே சாரும் கவிதை. எதெல்லாம் கவிதை இல்லையோ, எலை இல்லையோ, அற்றயும், விளம்பரங்கள், ஸ்லோகங்கள் போனறவற்றையும்கூட இக்கவிதை தன் உணர்த்தலுக்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக் கொள்கிறது. வழக்கமான அலங்காரப்படுத்தல், படிமமாக்கல், சந்தம் ஆகியவற்றைப் புறக்கணிக்கிறது. இதைத்தான் எதிர்க்கவிதை என்று பிரம்மராஜன் குறிப்பிடுகிறாற்போல் தோன்றுகிறது. கவிதைச் செயல்முறை, அதன் விளைவைவிடப் பிரதானமாகிறது. ஓர் அர்த்தத்தைத் தேடும் நிலையே அர்த்தமற்றதாகவும், இதுவே மனித வாழ்க்கையின் அர்த்தமின்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது.

முழுவதும் பின்நவீனத்துவக்கூறுகளை ஏற்றதாகத் தமிழ்க்கவிதை இன்னும் மாறவில்லை. முற்றிலும் மையமிழந்த புதிய மாதிரிக் கவிதையை பிரம்மராஜனின் ஞாபகச் சிற்பம் தொகுதியில்தான் காணமுடிகிறது. அவருடையதும் சமூகச் சார்புடைய கவிதையே. என்றாலும் அந்நியப்பட்ட தன்மை மிகுதி. நம் சமகாலக் கவிதை, வெகுஜனக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதை மறுத்தால் தீவிரக் கவிஞன், சமுதாயத்திலிருந்து அந்நியப்பட்டே ஆகவேண்டும். (பாட்டெழுதுவோர், இதற்கு மாறாக ஆளும் கலாச்சாரத்துடன் ஒன்றிவிடுகிறார்கள்.) எந்த நல்ல எழுத்தாள னும் இன்று தன் வேர்களுக்குத் திரும்பவியலாது. ஆகவே இன்றைய கவிதைகள் கையாளும் கருப்பொருள்கள் ஒரே ஒரு பொதுநிலையில் அடங்கும். ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் செயற்படுதலுக்கும் தனது எழுதுதலுக்கும் இடையிலான இழுவிசையைத் தன் கலைக்கு மூலப்பொருளாக ஒவ்வொரு கவிஞனும் பயன்படுத்துதல் என்ற நிலை. நவீனத்துவக் கலைஞர்கள் வரலாற்றை மறுப்பவர்கள். அது அவர்களுக்கு மீட்கப்பட வேண்டியது. ஆனால் பின்நவீனத்துவக் கவிஞர்கள் வரலாற்றை மதிப்பவர்கள். வரலாறு ஒருவகையில் அர்த்தமற்றது. ஏனெனில் அதுதான் இன்றைய நெருக்கடிக்கும் அவநம்பிக்கைக்கும் மனிதனை ஆளாக்கி யிருக்கிறது. காலனிய எச்சம்தான் வரலாறு. அது களையப்படவேண்டியது.
இருப்பினும் பின்நவீனத்துவக் கவிஞர்கள் சிலர் உலகில் நம்பிக்கை எஞ்சியிருப் பதாகவே காண்கின்றனர். அரசியல் பிரக்ஞையை உயர்த்துவதன் மூலம் இது நடக்கலாம். ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் எற்பட்ட மாற்றங்களைக் கண்டும் இந்த நம்பிக்கை மாறவில்லை. இலங்கைக் கவிதை இந்தத் திசையில்தான் செல்லுகிறது. இலங்கைக் கவிஞர்களும் நவீனத்துவ நடையைக் கையாள்பவரே ஆயினும், அவற்றைத் திறந்த அமைப்புடனோ பின்னமாகிச் சிதைவில் நிறையவோ விடுவதில்லை. சில குறிபபிட்ட படிமங்கள் அல்லது பார்வைக் கோணங்கள் வாயிலாகத் தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்திவிடுகின்றன. இதனால் பிரம்மராஜன் போன்றோரது தமிழ்க்கவிதையைக் காட்டிலும் இலங்கைக் கவிதை நமக்கு நெருங்கிய தாகத் தோன்றுகிறது. அந்த மாதிரியைச் சிலர் பின்பற்றவும் தொடங்கியுள்ளனர். இதேபோல் முடியதொரு, ஆனால் நவீனத்துவ அமைப்பில்தான் இன்று பெரும் பாலான மொழிபெயர்ப்புக் கவிதைகளும் கிடைக்கின்றன.

தமிழ்க்கவிதை நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவத்திற்கான பயணத்தில் புகுந்திருக்கிறது. இந்த இயக்கம் தமிழுக்கு எந்த அளவு நன்மை பயக்கும்? மாற்றங்கள் தவிர்க்கமுடியாத உலகு இது. விரும்பாமற்போனாலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. எனினும் மாற்றங்கள் பற்றிப் பலகருத்துகள் நிலவுவது இயற்கை. இன்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பாணி மாறாத செய்யுளாக்கங்கள், வெறும் அழகுறுத்தல்கள், இவையே பெருமளவு கவிதையென பவனிவரும் தமிழில் பின்நவீனத்துவக் கவிதை எந்த அளவு ஏற்றுக்கொள்ளப்படும்?

இன்று “வாழ்க்கை என்பது முடியப்படாது தொங்கும் முனைகளைக் கொண்டது” என்றார் நிசிம் எசகியேல். இத்தகைய வாழ்வில், அர்த்தம் அல்லது உணர்ச்சி அல்லது இணைப்பிழைகள் என ஏதுமின்றி, வெறும் பிரதிமேல் கவனம் செலுத்தும் கவிதை பிறப்பதே இயல்பு.

ஆனால் எல்லாவற்றையும் கட்டழித்தாலும் சார்வதற்கு ஏதேனும் ஒன்று இருந்தே தீரவேண்டும். நவீனத்துவக் கவிதை-ஏதேனும் ஒரு மையத்தைக் கொண்டு நிற்பது-தன் இருப்புக்குக் கடவுள், கலாச்சாரம், அறவியல் பிரக்ஞை என ஏதோ ஒன்றை நம்பியிருப்பதே நம்பிக்கையூட்டுவது என்று பலர் கருதலாம். மேலும் நவீனத் துவக் கவிதையை ஏற்பதே இன்று தமிழில் உடனடியாக நிகழவேண்டியது. பல்கலைக் கழகங்களில் இன்று நல்ல கவிதை பெரும்பாலும் உட்புகவில்லை. அதறகுள் மையமற்ற கவிதைகள் பலரை பயமுறுத்தலாம். இன்று ஒரு நல்ல தொகுப்பு வரவேண்டியதற்கான உடனடித் தேவை இருக்கிறது. ஆனால் தரவித்தியாசமற்ற தொகுப்புகள் அந்தத் தொகுப்பின் தேவையையே தோற்கடித்துவிடும். அதில் தவறாகச் சேர்க்கப்பட்ட நல்ல கவிதைகளின் மதிப்பையும் அழித்துவிடும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிடம் இத்தகைய ஆக்கப்பணிகளை எதிர்பார்க்கும் காலம் இன்னும் வரவில்லை. இவ்வகையில் க்ரியா வெளியிட்ட பதினொரு ஈழக் கவிஞர்கள் தொகுப்பு கவனத்தில் வைக்கவேண்டியது.


மலையின் பாடல்

மலையின் பாடல்

குறிஞ்சிப்பாட்டு, பத்துப்பாட்டு என்னும் சங்க இலக்கியத் தொகுப்பில்-பத்து நூல்களில்-ஒன்று. இப் பாட்டின் திணை குறிஞ்சி. கூற்று, தோழி அறத்தொடு நிற்றல் என்று குறிப்புகள் விளக்குகின்றன.

தனியொரு திணை அல்லது துறையை விளக்குமாறு இவ்வளவு நீண்ட பாட்டு வேறெந்தத் திணை அல்லது துறைக்கும் எழுதப்படவில்லை. குறிஞ்சித் திணை குறித்த பாக்களிலேயே மிகவும் பெரியது என்பதால் பெருங்குறிஞ்சி என்று பெயரிட்டனர் இதற்கு.

இன்னொரு சிறப்பு, குறிஞ்சித்திணை பாடுவதில் மிக வல்லவராகக் கருதப்படுகின்ற கபிலர் இதனை எழுதியிருக்கிறார் என்பது. சங்கத் தொகை நூல்களில் மிகுதியான பாக்களைப் பாடியவர் கபிலர். (மொத்தம் 234 பாக்கள்). அவற்றில் மிகுதியானவை குறிஞ்சித்திணை சார்ந்தவை.

அகப்பாடல்களாக இருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் வரலாற்றுக் குறிப்புகள், பல் வேறு இடங்கள், நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் போன்றவை இடம்பெறவே செய்யும். அப்படிப்பட்ட குறிப்புகள் ஏதும்இன்றி, முழு அகப்பாடலாகவே விளங்குவது இதன் மூன்றாவது சிறப்பு,

‘ஆரிய அரன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது குறிஞ்சிப்பாட்டு’ என்று இதன் திணைதுறைக் குறிப்புகள் சொல்கின்றன. இது நான்காவது சிறப்பு.

ஆனால் இக்குறிப்பிற்கு வேறு ஆதாரம் எதுவும் இல்லை. இக்குறிப்புகள் போன்றவை பிற்காலத்தில் சங்கப்பாக்களைத் தொகுக்கும்போது சேர்க்கப்பட்டவை என்பது அறிஞர் கருத்து. சில தமிழறிஞர்கள் குறுந்தொகையில் பாட்டு இயற்றியுள்ள யாழ்ப் பிரமதத்தன் என்பவன் இந்த ஆரிய அரசன் பிரகத்தனே என்று குறிப்பிடுகின்றனர். பிரகத்தன் (பிரஹஸ்தன்) என்ற பெயர் எப்படி பிரமதத்தன் என்று மாறும்? மேலும் யாழ் என்ற அடைமொழி சேருவதற்குக் காரணம் என்ன? இவற்றைச் சரிவர அவர்கள் விளக்கவில்லை. எனவே ஆரியஅரசன் ஒருவனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது என்ற குறிப்பையே நாம் ஆதாரமற்றது என்று சந்தேகப்படவேண்டியவர்களாக இருக்கிறோம்.

‘தமிழ் அறிவித்தல்’ என்பதற்குத் தமிழ்ப் பண்பாட்டினை அறிவித்தல் என்று பொருள் கொள்ளவேண்டும் என்கின்றனர் அறிஞர்கள். இங்கே தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. குறிஞ்சிப்பாட்டில் விளக்கப்படுவது களவுக்காதல். அது கற்பில் (திருமணத்தில்) முடியவேண்டும் என்பதற்காகத் தோழி செய்யும் செயல், அறத்தொடு நிற்பது. இது ஒன்றுதான் தமிழ்ப்பண்பாடா, அல்லது தமிழ்ப்பண்பாட்டின் மிகமுக்கியமான அம்சமா என்னும் கேள்வி எழுகிறது. இதற்குப் பின்னர் வருவோம். முதலில் இப்பாட்டு என்ன சொல்கிறது என்றுகாண்போம்.

சிலகாலமாக ஒரு பெண் (தலைவி) தன் உடல் இளைத்து வருத்தத்தோடு இருக்கிறாள். இதனைக் கண்ட அவளுடைய வளர்ப்புத்தாய் அவளுடைய தோழியிடம் அதற்கான காரணத்தைக் கேட்கிறாள். அப்போது தோழி அவளுக்குச் சொல்வது போல இந்தப் பாட்டு அமைந்துள்ளது.

பழங்காலத்தில் அன்னையாயினும் தோழியாயினும் முதலில் அவர்களை வாழ்த்திப் பிறகு செய்தியைக் கூறத் தொடங்குவது ஒரு மரபு. அதன்படி இப்பாடலும் செவிலித்தாயை வாழ்த்தித் தொடங்குகிறது.

“அன்னையே, நீ வாழ்க. நான் கூறுகின்றவற்றை விரும்பிக் கேட்பாயாக. ஒளி பொருந்திய நெற்றியையும் வளர்ந்த மென்மையான கூந்தலையும் கொண்ட என் தோழியின் மேனியில் ஏற்பட்ட வேறுபாட்டினையும் கையிலிருந்து வளையல்கள் கழல்வதால் ஏற்பட்ட மெலிவையும் நோக்கி, அவள் கடுமையான நோய்க்கு ஆட்பட்டிருக்கிறாள் என்று கருதி, நீ என்ன செய்யலாம் என ஆராயத் தொடங்கினாய்.
அவளுடைய நோய்க்கான காரணத்தை இவ்வூரின் கட்டுவிச்சி, வேலன் போன்றோரிடம் அறிய முற்பட்டாய். இது தெய்வத்தால் ஏற்பட்ட நோயாகும் என அவர்கள் கூற, நீ பாடியும், அர்ச்சனை செய்தும், வணங்கித் தொழுதும், மலர் தூவியும் நறுமணப் புகை காட்டியும் வேறுபட்ட பல உருவங்களை உடைய கடவுளுக்கு வழிபாடு செய்தாய். ஆனால் அவளுடைய நோய் குறையாமலிருக்கவே துன்பப்படுகின்றாய்.
அதற்குரிய காரணம் எனக்கும் முதலில் தெரியாது. அவளை நான் நெருக்கிக் கேட்கவே அவள் நடந்த உண்மைகளைக் கூறினாள். அவற்றைக் கூறுகிறேன், கேட்பாயாக.

“முத்து, மணி, பொன் ஆகியவற்றால் செய்த ஆபரணங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றைச் சீர்செய்து கொள்ளலாம். ஆனால் நற்பண்பும், பெருமையும், ஒழுக்கமும் சிறிதளவு குன்றினாலும், அதனால் ஏற்பட்டுவிட்ட பழியைத்துடைத்து, இழந்த புகழை மீண்டும் நிலைநாட்டுதல் தொன்மையான  நூல்கள் பல கற்ற பெரியோர்க்கும் அரியதாகும்.

“என் தந்தையின் கட்டுக்காவலை நீங்கி, நானும் தலைவனும் ஆராய்ந்து ஏற்றுக் கொண்ட திருமணம் இது என்று தாய் முதலியோர்க்கு நாம் கூறுவதில் பழி ஏதேனும் உண்டோ? அவ்வாறு செய்வதுதான் ஒழுக்கம் கெடாமல் காப்பதாகும். நாம் கூறியபின்னர் நம் தாய் தந்தையர் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மறு பிறப்பிலாவது நாங்கள் இணைவோம்” என்று சொல்லித் தலைவி செயலற்று வருந்தினாள்.

போர்செய்ய முனைந்த இருபெரு வேந்தர்களுக்கு இடையில் இருவரையும் சமாதானம் செய்ய முனைந்த அறிஞர்களைப்போல நானும் உனக்கும் இவளுக்கும் இடையே அகப்பட்டு அஞ்சி வருந்துகிறேன். நன்மை, குடிச்சிறப்பு, குணம், உதவி முதலியவற்றை ஆராய்ந்து ஒப்பிட்டு நோக்காமல் நாங்களாகத் துணிந்து ஏற் றுக்கொண்ட இத்திருமணம் நிகழ்ந்த விதத்தை நீ நன்கு புரிந்துகொள்ளும் வண்ணம் சொல்கிறேன். என்மீது கோபம் கொள்ளவேண்டாம்.

“நீ எங்களைத் தினைப் புனம் காக்க அனுப்பினாய். ஆகவே நாங்கள் பரண் மேலிருந்து கிளி முதலியவற்றை ஓட்டிக்கொண்டிருந்தோம். பின்னர் அருவியில் மிக ஆசையோடு நீராடச் சென்றோம். நாங்கள் விரும்பிய பாடல்களைப் பாடினோம். செங்காந்தள் முதலிய பல மலர்களைப் பறித்து அகன்ற பாறையிலே குவித்துவிட்டு, மலைப்பக்கத்துப் புனத்தில் கிளியையும் ஓட்டிக் கொண்டிருந்தோம். தழையாடையை உடுத்திக்கொண்டு, பலவகை மலர்களையும் கூந்தலில் அணிந்துகொண்டு அசோக மரத்தின் நிழலில் தங்கியிருந்தோம்.

அப்போது ஓர் அழகிய ஆடவன் வந்தான். எண்ணெயும் மயிர்ச்சாந்தும் (ஒருவகை வாசனைப் பொருள்) பூசி, விரலால் உலர்த்தியிருந்தான். அகிற்புகை ஊட்டிய, வண்டுகள் மொய்க்கின்ற தலைமயிரில் பலவகை மலர்களை அணிந்திருந்தான். பிச்சி மலரால் செய்த ஒற்றை வடத்தைத் தலையில் அணிந்திருந்தான். ஒருகாதில் அசோகந்தளிரைச் செருகியிருந் தான். மார்பில் அணிந்த பூமாலை ஆபரணத்தோடு விளங்கியது. கையில் அழகிய வில் ஒன்றினை ஏந்தி, அம்புகளைத் தெரிந்து, இடையிலே கச்சையைக் கட்டி, காலில் வீரக்கழல் அணிந்து தோற்றம் அளித்தான். அவனுடன் வந்த நாய்கள் குரைத்துக் கொண்டு எங்களை வளைத்தன. நாங்கள் அவற்றிற்கு அஞ்சி, நடுங்கி, வேறிடத்திற்கு விரைந்து ஓடினோம். அப்போது நாங்கள் பயப்படுவதற்கு அவன் அஞ்சி, எங்கள் அருகில்வந்து, இனிய சொற்களைக் கூறினான். எங்களைப் புகழ்ந்து, “இளம் பெண்களே, ஒரு யானை என்னை விட்டு ஓடிவந்தது. அதனை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கேட்டான்.

நாங்கள் பதில் உரைக்கவில்லை. அதனால் அவன் கலக்கமடைந்து, “என்னை விட்டு வந்த விலங்கினைப் பற்றிக் கூறாவிட்டாலும், என்னுடன் பேசவேனும் கூடாதா?” என்று கூறிப், பூங்கொம்பு ஒன்றினை எடுத்து, எங்களை பயமுறுத்திய நாய்களைக் குரைக்காமல் இருக்கச் செய்தான்.

அப்போது வேடன் ஒருவனால் விரட்டப்பட்ட ஒரு யானை, மதம்கொண்டு, மரங்களை முறித்துக்கொண்டு, எங்களை நோக்கி வந்தது. நாங்கள் எங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் புகலிடம் இன்மையால், நாணத்தையும் விட்டு, அந்த அழகனை நெருங்கி அவன்அருகில் மயில்களைப்போல் நடுங்கிக்கொண்டு நின்றோம். அவன் உடனே ஓர் அம்பினை எடுத்து அக்களிற்றின் முகத்திலே ஆழமாகப் பதியும்படி எய்தான். அந்த யானை அங்கிருந்து ஓடி விட்டது.

அப்போதும் அச்சம் தீராமல் நாங்கள் நடுங்கிக்கொண்டே இருந்ததால் தலைவன் எங்கள் அருகில் வந்தான். தலைவியை நோக்கி ‘அஞ்சாதே’ என்று கூறி அவள் நெற்றியைத் தடவினான். இம்மாதிரிச் சந்திப்புகள் நீளவேண்டும் என்று நினைப்பதுபோல என்னைப் பார்த்துச் சிரித்தான்.

பெண்களுக்கு இயல்பான நாணமும் அச்சமும் தலைவிக்குத் தோன்றியதால், அவனிடத்திலிருந்து அவள் விலகமுயன்றாள். அவன் விடாமல் அவளை அணைத்துத் தழுவி னான். பிறகு தலைவியை நோக்கி, “விருந்தினர்களுக்கு அளித்து எஞ்சிய உணவை நீ எனக்கு அளிக்க, நான் அதை உண்பதாக அமையக்கூடிய இல்லறம் சிறந்தது” என்று கூறினான். மலையில் உள்ள முருகக் கடவுளை வாழ்த்தி, உன்னைப் பிரியமாட்டேன் என்று கூறி, எங்களைத் தெளிவிக்கச் சூளுரைத்து, அருவி நீரைக் குடித்தான். அதனால் இவள் அவனுடன் நெஞ்சு நெருங்கினாள். இவ்வாறு நிகழ்ந்த ‘களிறுதரு புணர்ச்சி’ நிறைவடைய, அன்றைய பகல் முழுதும் அவர்கள் சோலையில் கழித்தனர்.

“சூரியன் மறைந்தான். மான்கூட்டங்கள் மரங்களின் அடியில் கூடின. கன்றுகளை நினைத்துப் பசுக்கள் மன்றங்களில் புகுந்தன. அன்றில் பறவைகள் அழைத்தன. பாம்புகள் இரைதேடுவதற்காகத் தங்கள் மணிகளை உமிழ்ந்தன. கோவலர் ஆம்பற் பண்ணை இசைத் தனர். ஆம்பல் மொட்டுகள் மலர்ந்தன. மகளிர் விளக்குகள் ஏற்றினர். அந்தணர் மாலைக் கடன் செய்தனர். வேடர் பரண்களின்மீது நெருப்பினை ஏற்றினர். மேகங்கள் மலையைச் சூழ்ந்தன. காட்டில் விலங்குகள் முழங்கின. பறவைகள் கூடுகளில் ஒலித்தன. மாலைக்காலம் நெருங்கியது.

இன்னும் சிறிதுநேரத்தில் இருட்டிவிடும் என்றுகருதி, இவளை நோக்கி, “உன் கையை உன் சுற்றத்தார் பிடித்துத் தர, நாட்டிலுள்ளோர் அனைவரும் அறியுமாறு வெளிப்படையாகத் திருமணத்தினைப் பிறகு செய்துகொள்வோம். சில நாட்கள் வருந்துவதை நீக்குவாயாக” என்று அன்புடைய சொற்களைக் கூறி, எங்களோடு உடன்வந்து, நம் ஊர் நீர்த்துறை அருகில் எங்களை விட்டுவிட்டுச் சென்றான். அன்று முதல் தினந்தோறும் இரவுப்போதில் முதல்நாள் கொண்ட விருப்பத்தைப் போன்ற விருப்பத்துடனே வந்து செல்கின்றான். அவ்வாறு வரும்போதில், ஊர்க் காவலர்கள் திரிந்தாலும், நாய்கள் குரைத்தாலும், நீ விழித்துக் கொண் டாலும், நிலவு எரித்தாலும் இவளைக் காணாமலே போகநேரிடும். நாங்கள் செய்த அடை யாளம் தவறிப்போனாலும் அதற்காக எங்களிடம் கோபிக்கமாட்டான். அவன் இளைஞன். தனக்குரிய செல்வத்தையும் நற்குணங்களையும் பெற்றவன்.

தன்னை நாடிவரும்போதெல்லாம் அவனுக்கு நிகழக்கூடிய துன்பங்களை எண்ணி இவள் வருந்துகிறாள். அவன் வரும் வழியில் புலியும், சிங்கமும், கரடி யும், காட்டுப்பன்றியும், யானையும், இடியும், பாம்பும், முதலைகளும், கொடிகள் படர்ந்துள்ள பாறைகளும், பிசாசுகளும், மலைப்பாம்பும் துன்பம் தரக்கூடுமே என்று ஒவ்வொரு நாளும் கலங்கிக் கண்ணீர் சிந்துகின்றாள். வலையில் அகப்பட்ட மயில் போல அழகு குலைந்து கலங்கி நிற்கிறாள்” என்று தோழி செவிலித்தாய்க்கு எடுத்துரைத்தாள்.

ஒரு சிறுகதைபோல அமைந்திருக்கும் இந்த மலையின் பாட்டு (குறிஞ்சி என்றால் மலை என்று பொருள்), அபூர்வமான அழகுடையது என்பதில் ஐயமில்லை. குறிஞ்சி என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரக்கூடிய அபூர்வமான பூவையும் குறிக்கிறது. தமிழில் சொல்லப்படுகின்ற இந்தத் தலைவன் தலைவி காதலும், குறிஞ்சிப்பூக்களின் இணைவு போல-மிக உயர்ந்த மலையிலே பூக்கின்ற மிக அபூர்வமான மலர்களின் சந்திப்புப்போன்றது என்ற பொருள் புலப்படுகிறது. ஏனெனில் இக்காதல் இயல்பாக நடைபெறுகிறது, செயற்கையான சடங்குகள் இல்லை, வரதட்சிணை இல்லை. வியாபாரம் இல்லை.

ஆனால் இயற்கை-செயற்கை முரண் இதில் இல்லாமலும் இல்லை. எந்த விலங் கினத்திலும்-மனிதர்கள் உட்பட-புணர்ச்சி இயற்கை. அதற்கான சடங்குகள், திருமணம், போன்றவை செயற்கை. குறிஞ்சிப்பாட்டு, இயற்கையைப் போற்றினாலும், செயற்கையை வலியுறுத்துகின்ற பாட்டுதான்.

இந்திய மொழிகளில் தமிழ் ஒரு தனிநிலையில் இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு ஒப்பப் பழங்காலத்திலிருந்து நடக்கின்ற ஒரே மொழி என்பதனால், சமஸ்கிருதத்தின் பல கூறுகள் நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. திராவிட மரபு என்பதன் பல கூறுகள் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்றன. ஆனால் அதேசமயம் இந்த இணை நிலையோடு, ஒரு முரண் நிலையும் ஆதியிலிருந்தே காணப்படுகிறது. அநேகமாகத் தமிழின் பழங்காலப் பிரதிகள் எல்லாமே இந்த இணைநிலை-முரண்நிலை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவே அமைந் துள்ளன.

இங்கு இதைக்கூறக் காரணம், குறிஞ்சிப்பாட்டு ஆரியஅரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்கு-அதாவது தமிழ்ப்பண்பாட்டின் தனிச்சிறப்பை உணர்த்துவதற்கு-இயற்றப்பட்டது என்ற கூற்றுதான்.
“எட்டுவகை மணங்கள் ஆரிய மரபில் கூறப்படுகின்றன. பிரமம், பிரஜாபத்யம், ஆர்ஷம், தெய்வம், காந்தர்வம், ஆசுரம், ராக்ஷஸம், பைசாசம் என்பன அவை.

பிரமம் என்பது, வேதம் ஓதினவனாகவும் நல்லொழுக்கம் உள்ளவனாகவும் இருக் கின்ற பிரமசாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை நு£தன வஸ்திரத்தால் அலங்கரித்து கன்னிகையையும் அவ்வாறே  நூதன வஸ்திர பூஷண அலங்காரம் செய்வித்து அவனுக்கு அவளை தானம் செய்வது.

பிரஜாபத்யம் என்பது ஒரு பிரமசாரியை அழைத்துப் பூசித்துத் தன் பெண்ணை தானம் செய்யும்போது நீங்கள் இருவருமாய் தருமங்களைச் செய்யுங்கள் என்று கொடுப்பது. பெண்ணின் தந்தைக்குக் கேட்கும் பணத்தைக் கொடுத்துப் பெண்ணுக்குப் பூஷணங்களைப் போட்டுப் பெண்ணை வாங்கி விவாகம் செய்வது.

ஆர்ஷமாவது தான் செய்யவேண்டிய யாகாதி கர்மத்துக்காக வரனிடத்து ஒரு ரிஷபம், ஒரு பசு, அல்லது இரண்டு ரிஷபம், இரண்டு பசு இவற்றை வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்து கொடுப்பது.

தெய்வமாவது தனக்குப் புரோகிதனாக இருப்பவனுக்குத் தன் பெண்ணை அலங்கரித்துக் கொடுப்பது.

காந்தர்வமாவது ஸ்திரீயும் புருஷனும் ஒருவருக்கொருவர் புணர்ச்சி ஆசையால் மனம் ஒத்துச் சேர்வது.

ஆசுரமாவது விரும்பாத பெண்ணை வலியப்புணர்தல்.

ராக்ஷஸமாவது ஒருவன் தன் பலத்தினால் கன்னிகை அழும்போது அவள் வீட்டி னின்றும் அவள் பந்துக்களை அடித்தும் கொன்றும் வலிமையால் கொண்டுபோதல்,

பைசாசமாவது ஒரு கன்னிகை து£ங்கும்போதும் குடியினால் வெறித்திருக்கும்போதும் பித்துக்கொண்டவளாய் இருக்கும்போதும் அவளுடன் புணர்வதாம் என்று மனு கூறுகிறார்.

மேற்கண்டவற்றில் பிரஜாபத்திய மணமே சிறந்ததாய் இப் பரதகண்டத்துள் யாவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது”.

(இந்த மேற்கோள் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி  நூலிலிருந்து தரப்பட்டது.)

பிரகத்தன் என்னும் வடநாட்டுஅரசன் கபிலரை “எங்கள் எட்டுவகை ஆரியத் திருமணத்தைவிட உங்கள் தமிழ்மணம் உயர்ந்ததோ” என்று கேட்க, கபிலர் குறிஞ்சிப்பாட்டினைப் பாடினார் ஆகலாம். அதாவது தமிழ்த்திருமண முறை, மனம் ஒத்து ஆணும் பெண்ணும் புணர்தல் என்னும் அளவில் காந்தர்வத்தை ஒத்தது, ஆனால், அதன்பின் அறத்தொடு நின்று கற்பில்நிலை பெற்று இல்லறம் செய்தல் என்னும் அளவில் அதைவிடச் சிறப்பானது என்று கபிலர் பிரகத்தனுக்கு உணர்த்த முனைகிறார், அதனால் தமிழ்ப்பண்பாடு உணர்த்தப்படுகிறது என்பது கருத்து. அதாவது, உங்கள் ஆரிய கந்தருவ முறையில் ஒழுக்கம் (மணம்புரிந்துகொள்ளுதல்) என்பது இல்லை, தமிழில் உண்டு என்று காட்டுவது நோக்கம். இங்கு சமஸ்கிருதப் பண்பாடு, தமிழ்ப்பண்பாடு இவற்றிற்கான இணை-முரண் கருத்துகளைக் காணலாம்.

இனி இப்பாட்டின் அமைப்பைப் பற்றிச் சில செய்திகள்.
இப்பாட்டின் 135ஆம் அடியில்-தலைவன் வருகை ‘ஆகாண் விடையின் அணிபெற வந்து’ என வருணிக்கப்படுகிறது. அதாவது தன்னுடன் போரிடக்கூடிய பிற வலிய எருது களையெல்லாம் போரிட்டு விரட்டிவிட்டுத் தனக்கேற்ற பசுவைத் தேர்ந்தெடுக்க வரும் ஒரு வலிய எருதினைப் போல வருகின்றான் தலைவன். இது தொடக்கம்.

பின்னர், 235ஆம் அடியில் ‘துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து உண் துறை நிறுத்துப் பெயர்ந்தனன்’ என்று முடிகிறது. புணர்ச்சிமுடிந்த பிறகு, தன்னுடைய துணையைப் புணர்ந்த காளையைப் போலப் பெருமிதத்தோடு எங்கள் சிறுகுடிவரை வந்து விட்டுச் சென்றான் என்பது முடிவு.

இப்படி, இந்தப் பாட்டு ‘ஒரு காளை பசுவைத் தேடி அடைவது’ என்ற படிமத்தை வலுவாக முன் வைக்கிறது. இடையிலுள்ள 100 அடிகளில்தான் ‘களிறுதருபுணர்ச்சி’ நிகழ்கிறது. தலைவன் உறுதி கூறல் இடம்பெறுகிறது.

இன்னொரு வகையிலும் குறிஞ்சிப்பாட்டின் அமைப்புமுறை சிறப்பானது. தமிழில் உள்ள இடப்பெயர் முறையை-அதாவது,
நான்-நாம்/நாங்கள் (தன்மை)
நீ (முன்னிலை)
அவன்/இவள் (படர்க்கை)
என்னும் கூற்றுமுறையை இது நன்கு பயன்படுத்துகிறது.

தொடங்கும்போது தோழி செவிலியை ‘நீ’ என்று விளித்து அவள் கவலையை விவரிக்கிறாள். பின்னர் ‘நான்’ என்று தொடங்கித் தனது நிலைப்பாட்டினைச் சொல்கிறாள். பிறகு ‘நாங்கள்’ என்று (தன்னையும் தலைவியையும் இணைத்து) தொடங்கிச் செய்த செயல்களை விவரிக்கிறாள். பிறகு ‘அவன்’ என்று தொடங்கித் தலைவனின் வருகை, அவனுடன் ஏற்பட்ட தொடர்பு ஆகியவற்றைப் பேசுகிறாள். பின்னர் இறுதியாக ‘இவள்’ என்று தொடங்கித் தலைவியின் ஆற்றாமையைக் கூறி முடிக்கிறாள். இந்த அமைப்பை விரிவாகப் பார்ப்போம்.

1. செவிலியை நீ என விளித்து இடம் பெறும் அடிகள் இவை.
அன்னாய் வாழி, வேண்டு அன்னை,
என் தோழி மேனி, விறல்இழை நெகிழ்த்த வீவரும் கடுநோய்
அலவுற்று, எய்யா மையலை நீயும் வருந்துதி

(நான் சொல்லப்போகும் செய்தியைக் கேட்டு) சினவாது ஈமோ

2. நான் எனத் தொடங்கித் தனது செயல்களைக் கூறும் அடிகள்.
அரும்படர் யான் கடவலின், கலங்கிக் கையற்று, ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்…..
இருபேரச்சமொடு யானும் ஆற்றலேன்…..
எண்ணாது எமியேம் துணிந்த ஏமம் சால் அருவினை
செப்பல் ஆன்றிசின்

3. நாங்கள் என்று தொடங்கித் தங்கள் செயல்களைக் கூறும் பகுதி.
படுபுள் ஓப்பி, எல்பட வருதியர்” எனநீ விடுத்தலின்
உருப்பவிர் அமையத்து, அவ்வெள்ளருவித் தண்டாதாடி, தண்ணிழல் இருந்தனமாக

4. இதற்குப் பிறகு அவன் வரும் பகுதி.
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர, இடும்பைகூர் மனத்தேம் மருண்டுபுலம் படர
அணிபெற வந்து, மெல்லிய இனிய மேவரக் கிளந்து, ஐம்பால் ஆய்கவின் ஏத்தி,
இளையீர் இறந்த கெடுதியும் உடையேன் என்றனன்.

(பதில்) சொல்லேம் ஆதலின், கலங்கி, சொல்லலும் பழியோ மெல்லியலீர் என
(நாய்களின்) கடுங்குரல் அவித்து, சொல்லற்பாணி நின்றனனாக,
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர, விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி நடுங்க,
பகழி வாங்கிக் கடுவிசை, அண்ணல் யானை மணிமுகத்து அழுத்தலின்
(அது) அயர்ந்து புறங்கொடுத்த பின்னர்
கைபிணிவிடேம் நடுங்க
“நின் அணிநலம் நுகர்கு” என
மாசறு சுடர்நுதல் நீவி நீடுநினைந்து என்முகம் நோக்கி நக்கனன்.
குன்றுகெழு நாடன், பிரியவும் விடான், ஆகம் அடைய முயங்கலின்,
உள்ளத்தன்மை உள்ளினன் கொண்டு
“விருந்துண் டெஞ்சிய மிச்சில்
பெருந்தகை நின்னொடு உண்டலும் புரைவது”
என்றாங்கு, வாய்மையின் தேற்றி அந்தீந் தெண்ணீர் குடித்தலின்
அருவிடர்அமைந்த களிருதரு புணர்ச்சி பூமலிசோலை அப்பகல் கழிப்பி
மாலை துன்னுதல் காணு£உ, நாடறி நன்மணம் அயர்கம்
என ஈரநன்மொழி தீரக்கூறி உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன்.

….அதற்கொண்டு இரவரன் மாலையனே, இன்துயில் என்றும் பெறாஅன்
பெயரினும் முனியல் உறாஅன்.

…..இளமையின் இகந்தன்றும் இலனே
வளமையின் தன்னிலை தீர்ந்தன்றும் இலனே

5. இறுதியாக இவள் என்று தலைவியின் செயல்களைக் கூறும் பகுதி.
ஆனாச் சிறுமையள், இவளும் தேம்பும்….
மாயவரவின் இயல்பு நினைஇத்
ஈரிய கலுழும் இவள் பெருமதர் மழைக்கண்…..
விழுமம் பல, குழுமலை விடர்அகம் உடைய என ஆகத்து அரிப்பனி உறைப்ப
வலைப்படு மஞ்ஞையின் நலஞ்செலச் சாஅய் நினைத்தொறும் கலுழுமால் இவளே.

நான்-நீ-நாங்கள்-அவன்/இவள் என்னும் இக்கண்ணியில் பலவீனமானது ‘நாங்கள்’ என்னும் தலைப்பில் வருபவைதான். பிற யாவும் ஒருமையாக இருக்க, இது மட்டும் இடையில் பன்மையில் பொருந்தாமல் நிற்கிறது. அதுபோலவே பாட்டிலும் ‘நாங்கள்’ என்று தொடங்கித் தோழியும் தலைவியும் நீர்விளையாடல், பூக்களைப் பறித்தல், தம் இயல்புப்படிப் பாடிக் கொண்டிருத்தல் போன்ற பகுதிகள்தான் பலவீனமானவை. தேவையற்ற வருணனைகளைக் கொண்டவை. அவற்றில் பெரும் பகுதியை நீக்கினாலும்-குறிப்பாக 99 மலர்களைப் பற்றிய பட்டியல் இங்கே இடம் பெறுகிறது-எவ்வகையிலும் பாட்டு சிதையாது.

மலர்களைப் பற்றிய இந்தக் குறிப்பு நமது மலர்க்கலாச்சாரத்தை உணர்த்துவது என்று இதற்குப் பலபேர் சமாதானம் கூறினாலும், திரைப்படத்தில் வரும் பாடற்காட்சிபோல கதையை நிறுத்திவைத்து விட்டுப் புறம்போவதாகத்தான் இது அமைந்திருக்கிறது.

99 பூக்களின் பெயர்களை அடுக்கிச் செல்வது, கபிலரின் சொல்வன்மையையும், இயற்கையறிவையும் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை. நமக்குத் தெரிந்த பூக்களின் பெயர்களைச் சொல்லச்சொன்னால் இருபதுவரையில்கூடத் தேறுமா என்பது சந்தேகமே. ஆனால் அவ்வாறு அடுக்கிச் செல்வதன் இலக்கியத்தன்மை என்ன, அது எடுத் துரைப்பினை எவ்விதம் பாதிக்கிறது என்ற கேள்வி வேறு.
‘நாங்கள்’ என்று வரும் பகுதி வேறொருவகையிலும் இப்பாட்டிற்கு எதிராகச் செயல்படுகிறது. அது பின்னர் விளக்கப்படும்.

இதன் மிகச் சிறப்பான பகுதி ‘அவன்’ என்ற படர்க்கைப்பகுதி. சிறப்பான உவமைகளும் உள்ளுறை உவமையும், வருணனைகளும் இதில்தான் அமைந்திருக் கின்றன. ‘இவள்’ என்னும் பகுதி தொடக்கத்தில் ஒருபகுதியும் இறுதியில் ஒரு பகுதியுமாக அமைந்து தொடர்ச்சியைத் தருகிறது. தொடக்கப்பகுதி அறச் சிந்தனையையும், இறுதிப்பகுதி மிகுதியான உணர்ச்சியையும் கொண்டது.

அறச் சிந்தனைக்கு அடிப்படை எப்போதுமே பயவுணர்ச்சிதான். பொதுவாகவே ஆடவன் பெண்ணைக் கைவிட்டுவிடுவானோ என்ற பயவுணர்ச்சிதான் கரணம் (திருமண முறை) என்பதை வலியுறுத்தக் காரணமாக அமைந்தது. இங்கும் தலைவியின் அறச்சிந்தனைக்கு ஆதாரமாக அமைகிறது.

இப்பாட்டில் 18 வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. அவையும் தங்கள் கனத்திற்கேற்றவாறு இடம் பெற்றுள்ளன என்பது சிறப்பு.

இவள் எனத் தலைவியின் கூற்றாக 3 வாக்கியங்கள் உள்ளன.

அவன் எனத் தலைவனின் செயல்களைக் கூறும் வாக்கியங்கள் 7.

நாங்கள் என இருவர் செயல்களையும் கூறும் வாக்கியங்கள் 2.

நீ எனச் செவிலியை வேண்டுவது 4.

நான் எனத் தன்னிலை வெளிப்பாடாக அமைவது 2.

நடந்த நிகழ்ச்சி என்ற முறையில் தலைவனைப் பற்றி விரிவாகக் கூறவேண்டியது அவசியம் ஆகலின் 7 வாக்கியங்கள் தலைவனுக்கே தரப்படுகின்றன. அடுத்து ஆகவேண்டிய திருமணத்தை நிகழ்த்தவேண்டியவள் செவிலி ஆகலின் அவளுக்கு 4 வாக்கியங்கள். அவை சிறுசிறு தொடர்களாக அமைந்தவை. தலைவியின் நிலைப்பாட்டைக் கூறுவது முக்கியமா தலின் அவளுக்கு 3 வாக்கியங்கள். கடைசியாகத் தன் நிலை வெளிப்பாட்டிற்குச் சாதுரியமாக 2 வாக்கியங்கள் என எடுத்துக் கொள்கிறாள் தோழி என இப்பாட்டு அமைகிறது.

ஒரே ஓரிடத்தில் இடப்பெயர் வழு ஏற்படுகிறது. எல்லா இடங்களிலும் இப்பாட்டில் தலைவன் ‘அவன்’ என்றே (ஒருமையில்) குறிப்பிடப்படுகிறான். ஆனால் இறுதியில் தலைவி புலம்புமிடத்தில் மட்டும், ” ‘அவர்’ குழுமலை விடரகம் விழுமம் உடையது” என்று கவலைப்படுகிறாளாம். திடீரென அவன் எப்படி அவர் ஆனான்? இது தவறி ஏற்பட்டதா, வேண்டுமென்றே (தமிழ்ப்பண்பாட்டிற்கேற்ப) அமைக்கப் பட்டதா என்னும் கேள்வி எழுகிறது.

தமிழ்ப்பண்பாட்டினை அறிவிப்பது என்னும் தகுதிக்கேற்ப இதில் வரும் இரண்டு இடங்கள் குறிப்பிடத் தக்கவை. அவை பெரியவர்களின் கூற்றாக அல்லது அறிவுறுத்தலாக அல்லாமல் இரண்டு இளைஞர்களின்-தலைவி, தலைவன்-மனத்திலிருந்து வருவது நோக்கத் தக்கது. அதாவது அவர்களின் மனங்கள் இத்தகைய சிந்தனைக்கு அக்காலத்திலேயே நிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது முக்கிய மானது. இப்படிப்பட்ட நிலைப்படுத்தலைத்தான் ஒழுக்கம், பண்பாடு என்று தமிழில் ஆதிகாலம் முதல் கூறிவருகின்றனர்.

தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்கும்போது,
“முத்து, மணி, பொன் ஆகியவற்றால் செய்த ஆபரணங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றைச் சீர்செய்து கொள்ளலாம். ஆனால் நற்பண்பும், பெருமையும், ஒழுக்கமும் சிறிதளவு குன்றினாலும், அதனால் ஏற்பட்டுவிட்ட பழியைத்துடைத்து, இழந்த புகழை மீண்டும் நிலைநாட்டுதல் தொன்மையான  நூல்கள் பல கற்ற பெரியோர்க்கும் அரியதாகும்.

“என் தந்தையின் கட்டுக்காவலை நீங்கி, நானும் தலைவனும் ஆராய்ந்து ஏற்றுக் கொண்ட திருமணம் இது என்று தாய் முதலியோர்க்கு நாம் கூறுவதில் பழி ஏதேனும் உண்டோ? அவ்வாறு செய்வதுதான் ஒழுக்கம் கெடாமல் காப்பதாகும். நாம் கூறியபின்னர் நம் தாய் தந்தையர் இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மறு பிறப்பிலாவது நாங்கள் இணைவோம்” (13-24)

என்று கூறுகிறாள். இங்கும் இயற்கைக்கும் செயற்கைக்குமான போராட்டத்தைக் காண்கிறோம். அதாவது இயல்பான காதலுணர்ச்சிக்கும் தந்தை தாய் திருமணத்திற்கு என்ன சொல்வார்களோ என்ற பயவுணர்ச்சிக்குமான முரண்பாடு இங்கு வெளிப்படுகிறது.

அதுபோலவே தலைவனும், அறநெறியிலிருந்து தவறாதவனாகவே காட்டப் படுகிறான்.
(தலைவியின்)உள்ளத் தன்மையை தன்மனத்திற்கொண்டு

“விருந்தினர்களுக்கு அளித்துஎஞ்சிய உணவை நீ எனக்கு அளிக்க, நான் அதை உண்பதாக அமையக்கூடிய இல்லறம் சிறந்தது” என்று கூறினான். மலையில் உள்ள முருகக் கடவுளை வாழ்த்தி, உன்னைப் பிரியமாட்டேன் என்று கூறி, எங்களைத் தெளிவிக்கச் சூளுரைத்து, அருவி நீரைக் குடித்தான்.” (200-211)

என்று வரும் பகுதியை கவனிக்கவும்.

பொதுவாக, இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, ஆனால் அக்காலத்தில் வட மொழி வழக்கு எனக் கருதப்பட்ட மரபில், தாரைவார்த்து (அதாவது நீரைப் பிறர் கையில் ஊற்றி) அளித்தல் அல்லது உறுதிகூறுதல் உண்டு. இன்றும் புரோகிதர்கள் நீரை நம் கையில் ஊற்றி நம்மைத்தான் குடிக்கச் செய்கிறார்கள். தமிழ்மரபில் அதுபோல அன்றி, உறுதிகூறும் தலைவன் தானே தண்ணீரை அருந்துகிறான்.

பூக்களை வருணிக்கும் பகுதியில் திணைமயக்கம் ஏற்பட்டிருப்பதாகப் பலர் கூறுவார்கள். அவ்வாறல்ல. கபிலர் நன்றாக உணர்ந்தே இதனைப் பயன்படுத்தி யிருக்கிறார். தொல்காப்பியத்தில் ‘பூவும் புள்ளும் எவ்விடத்தும் மயங்கும்’ என்ற  நூற்பா உள்ளது. இவையிரண்டிற்கும் ஏன் இந்த விலக்கு அளிக்கப்பட்டது?
பூவை எவரும் சூடிக்கொண்டு எந்த நிலத்திற்கும் செல்லலாம். புள்ளுக்கு-அதாவது பறவைக்கு எங்கு செல்லவும் பாஸ்போர்ட், விசா தேவையில்லை. எங்கும் இடம்பெயரும். எனவே நெய்தலுக்கே உரிய அன்றிற் பறவையையும் தாழையின் மலரையும் குறிஞ்சியில் இணைக்கக் கபிலர் தயங்கவில்லை. 99 பூக்களின் பெயரைச் சொல்லும் கபிலர், அவற்றில் சூட இயலாத பூக்களின் பெயர்களையும் ஏன் இணைத்தார் (உதாரணமாக வாழைப்பூ) என்ற கேள்வியும் எழுகிறது. தலைவன் தலைவி சந்திப்புக்குப் பிறகு பூக்களின் பட்டியல் இடம் பெற்றிருந்தால், இந்த விலக்கம் அவர்களின் புணர்ச்சிக்கான தயாரிப்பாக இடம் பெறுகிறது என்று விளக்கலாம் (திரைப்படங்களில் காதலன் காதலி முத்தமிடும் அல்லது புண ரும் காட்சி வரும்போது காமிரா இடம்பெயர்ந்து பூக்களையோ, வானத்தையோ காட்டுவது போல). ஆனால் இப்பட்டியல் தலைவன் தலைவி சந்திப்புக்கு முன்னால் வருகிறது.

இப்பாட்டைப் படிக்கும்போது இதில் தொடைகள்-எதுகை, மோனை, இயைபு ஆகியவை கையாளப்பட்டுள்ள முறை பிரமிப்பை உண்டாக்குகிறது. உதாரணமாக,

நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்
புட்பிறர் அறியவும் புலம்புவந் தலைப்பவும்
உட்கரந்து உறையும் உய்யா அரும்படர்
செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின்

இப்பகுதியில் மோனை எவ்வளவு செறிவாகச் செயல்படுகிறது என்பதை வாய்விட்டுப் படிப்போர் உணரலாம். எதுகை, மோனை ஆகிய தொடைகள், பொருட்பிணைப் பினை உண்டாக்கக்கூடியவை. அதிலும் குறிப்பாக முதற்சீர், மூன்றாம் சீரின் தொடைகள் இசைவது (ஒரூஉ) மிகச்செறிவான பிணையை உருவாக்கக் கூடியது.

பொதுவாக உயர்ந்த குடிப்பிறந்த தலைவன் தலைவியரே அகப்பாக்களில் இடம்பெற வேண்டுமென்பது தொல்காப்பியர் கருத்தாக இருந்தாலும், சங்க அகப்பாக்கள் பெரும் பாலும் அப்படிக் காட்டவில்லை. ஆனால் குறிஞ்சிப்பாட்டின் தலைவன் தலைவி உயர்ந்த குடியைச் சேர்ந்தவர்கள் என்பது தீர்மானமாக வலியுறுத்தப்படுகிறது.

நெற்கொள் நெடுவெதிர்க் கணந்த யானை/முத்தார் மருப்பின் இறங்குகை கடுப்பத்/

துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குரல்/

எனவரும் பகுதியில் ‘மலைமூங்கிலுக்கு அண்ணாந்து துதிக்கையை உயர்த்தும் யானை’ என்ற படிமம் தலைவனைக் குறிக்கிறது. இதனால் தலைவியின் உயர்ந்த குலம் குறிக்கப்படுகிறது என்று உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ‘நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி’ என வரும் தலைவியின் கூற்றும் இதனை உறுதிப் படுத்துகிறது.

தலைவனும் உயர்ந்த குடியிற் பிறந்தவனாகவே கூறப்படுகிறான்.

பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை/ முழுமுதற் கொக்கின் தீங்கனி உதிர்ந்தெனப்/
புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவின்/ நெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேறல்/
நீர்செத் தயின்ற தோகை வியலு£ர்ச்/ சாறுகொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி/
அரிக்கூட் டின்னியம் கறங்க ஆடுமகள்/ கயிறு£ர் பாணியின் தளரும் சாரல்/

எனவரும் பகுதிக்கு உள்ளுறை கூறும் உரையாசிரியர்கள், பாறை நெடுஞ்சுனை என்பது தலைவனின் தொன்மையான குடியைக் குறிப்பதாகவும், மாங்கனியும் பலவும் இணைந்து விளைந்த தேறல் தலைவனாகவும், அதனை அறியாது பருகிய மயில் என்பதைத் தலைவியாகவும் கொள்கின்றனர்.
ஆனால் தலைவனின் குடி எப்படியிருப்பினும் அவன் நடந்துகொள்ளும் முறை இயற்கைப்புணர்ச்சி என்ற கோட்பாட்டுக்கு உரியதாக இல்லை. ஏனெனில் இயற்கைப் புணர்ச்சி என்பது எந்த ஒரு முன்னேற்பாடோ திட்டமோ இல்லாமல், ‘அடுப்பாரும் கொடுப் பாரும் இன்றி’, தற்செயலாகத் தலைவி-தலைவன் ஆகியோர் சந்தித்துக் காதல் கொள்வது என்று நமது இலக்கியங்கள் வருணிக்கின்றன. இங்கு நிலைமை வேறு என்பதை இப்பாட்டு காட்டுகிறது.

முன்பே ‘ஆகாண் விடைபோல’ அவன் வந்தான் என்ற பகுதி காட்டப்பட்டது. அதாவது பசுவைப் பார்க்கவரும் எருதுபோல-பெண்பார்க்கும் நோக்கத்தோடுதான் வருகிறான், தலைவன். திட்டமிட்டு இவளைப் பெற வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடனேதான் வருகிறான். அதனால்தான் ஒரு வேட்டைநாய்ப் படையுடன் வருகிறான். அதைக் கண்டு அஞ்சி நடுங்கும் பெண்களிடம் வந்து ‘நான் ஒரு விலங்கைத் தவறவிட்டுவிட்டேன், பார்த்தீர்களா’ என்று வினவுகிறான். அவர்கள் பதிலுரைக்கவில்லை.
பெண்கள் பதிலுரைக்காத நிலையில் சாதாரணமாக (எந்தத் திட்டமும் அற்ற) ஓர் ஆடவன் என்றால், அவன் அகன்று போயிருப்பான். ஆனால் இவன் அங்கேயே நிற்கிறான். ‘நான் தவறவிட்ட விலங்கைப்பற்றிச் சொல்லவில்லை என்றாலும் என்னோடு உரையாடுவதும் கூடாதா பெண்களே’ என்று வினவுகின்றான். பிறகு அவர்கள் பதில்சொல்வதை எதிர்பார்த்துக் காத்திருக்கவும் செய்கிறான் (‘சொல்லற் பாணி நின்றனன் ஆக’). இப்படி அடுத்தடுத்துச் சந்தர்ப்பங்களை வலிய உருவாக்கிக் கொள்பவனாகத்தான் இத்தலைவன் இருக்கிறான்.

பிறகு தானாகவே அவனுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் வாய்க்கிறது. யானைக்கு அஞ்சிய பெண்கள் தானாகவே ஓடிவந்து அவனை அணைத்துக் கொள்கிறார்கள். யானை சென்ற பிறகும் அவர்களின் நடுக்கம் தீரவில்லை. அப்போது அவன் தலைவியிடம் ‘நான் உன் நலத்தை நுகர்வேன்’ என்று கூறுபவன், தோழியின் முகத்தைப்பார்த்து நகைக்கிறான். இதற்கு என்ன பொருள்? ஏன் தோழியின் முகத்தைப்பார்த்து நகைக்கவேண்டும்? (இவளை கவனித்து விட்டுப் பிறகு உன்னையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அர்த்தமா? அல்லது எங்களுக்கு இடைஞ்சலின்றி விலகியிரு என்று அர்த்தமா? அல்லது இந்த நிகழ்ச்சியை எவருக்கும் சொல்லிவிடாதே என்ற அர்த்தமா? அல்லது இதுபோன்ற சந்திப்புகள் இன்னும் நிறைய ஏற்படும், உதவிசெய் என்ற அர்த்தமா?)

இவ்வாறு கேள்விகளை எழுப்புவது பழந்தமிழ் அறிஞர்களுக்குக் கொஞ்சம் தொந்தரவளிப்பதாக இருக்கலாம். ஆனால், தோழி நடந்த நிகழ்ச்சிகளைக் கூறும் போது தலைவன் தங்களைநோக்கி (பன்மையில்) விளித்துவருவதாகவே-இருவரையும் நோக்கிப் பேசுவதாகவே-கூறுகிறாள். உதாரணமாக, “எம் ஐம்பால் ஆய்கவின் ஏத்தி” “அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி (இன்றைய தொப்புள் கலாச்சாரம்!) மடமதர் மழைக்கண் இளையீர்” போன்ற பகுதிகளைக் காணலாம்: “எங்கள் அழகினைப் புகழ்ந்து” என்றால், யாருடைய அழகினை ஏத்துகிறான் தலைவன்? தலைவியின் அழகையா, தோழியின் அழகையா, அல்லது இருவரின் அழகையுமா?

தமிழ் அகப்பாடல்களின் மிக இடைஞ்சலான பகுதி, தலைவியோடு தன்னை ஒன்று படுத்திக்கொண்டு தோழி ‘நான்’ அல்லது ‘நாங்கள்’ என்று கூறுமிடங்கள். முன்பே கூறியபடி, தலைவியும் தோழியும் நீராடுதல், பறவை ஓப்புதல், பூக்களைப் பறித்துச் சூடுதல் இம்மாதிரி இடங்களில் ‘நாங்கள்’ என்ற தன்மைப்பன்மை எந்த இடைஞ்சலும் விளைவிக்கவில்லை.

ஆனால் “இருவேம் ஆய்ந்த மன்றல் இது” வென அல்லது “நாம் அறிவுறாலிற் பழியும் உண்டோ” என்பது போன்ற இடங்களில் இடிக்கிறது. உண்மையில் இது தலைவி ஆய்ந்து கொண்ட மணமாகத்தான் இருக்கமுடியும். அதில் தோழிக்குப் பக்கத்திலிருந்து உதவுவதைத் தவிர வேறு என்ன இடம்? ‘இரண்டுபேரும் ஆய்ந்து கொண்ட மணம்’ என்றால் தலைவன் தோழியையும் மனைவிபோல ஏற்றுக் கொள்கிறான் என்று அர்த்தமா? எந்த நிலைவரை ஒரு தோழி தலைவியுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும்?

இப்படிப்பொருள் கொள்வதற்குச் சங்ககால மரபும் துணைசெய்வதாகத்தான் இருக்கிறது. சங்ககாலத்தில்தான் தலைவன் திருமணமானபின் எந்தப் பெண்ணையும் பரத்தை என்ற பெயரில் வைத்துக்கொள்ள முடியுமே? (அதற்கு மருதத்திணை என்ற ஒன்றைத் தனியாகவே ஒதுக்கியிருக்கிறார்கள்.) அப்படிப்பட்டபெண்களில் தோழியும் ஒருத்தியா? அப்படியானால், தோழி ஏன் பரத்தையிடம் சென்றுவரும் தலைவனுக்கு வாயில் நேர்தல் அல்லது வாயில் மறுத்தல் போன்ற பணிகளில் ஈடுபடவேண்டும்? இது போன்ற கேள்விகள் எழுகின்றன.

தலைவனுக்கு இப்பாட்டில் பயன்படுத்தப்படும் உருவகச்சொற்கள் இரண்டு மட்டுமே-விடை, ஏறு ஆகியவை. இவையிரண்டும் (விடைத்தல், ஏறுதல்) புணர்ச்சி பற்றிய குறிப்புள்ள சொற்கள். (எனவே அவன் பல பெண்களை நாடக்கூடிய-புணர்ச்சி நாட்டம் மட்டுமே உடைய ஒருவனாகத்தான் தென்படுகிறான். பசுக்களைத் தேர்ந்தெடுக்க வரும் விடைபோல வந்தான் என்ற குறிப்பும் அதைத்தான் உறுதி செய்கிறது.) ஆனால் எத்தனை பெண்களை ‘வைத்திருப்’ பவனும் இல்லறத்திற்கென மனையாளாக ஒருத்தியைத்தான் கொள்ளமுடியும். அந்த நிலையில்தான் தலைவிக்குத் தலைவன் உறுதி கூறுகிறான் என்று தோன்றுகிறது. புணர்ச்சி நிகழ்ந்து விட்ட நிலையில் உன்னைக் கைவிடமாட்டேன் என்று சொல்லி எவனுமே (அயோக்கியனும் கூட) பெண்ணைத் தேற்றவேண்டியிருக்கிறது. இவனும் ‘அறம் புணையாகத்’ தேற்று கிறான்.

மீண்டும் ‘நாங்கள்’ என்ற பன்மைச் சொல்லின் இடைஞ்சல் பற்றி. ஒரு யானை தலைவி-தோழி இருவரையும் நோக்கி வருகிறது. பயப்படுகிறார்கள் இருவரும்.
“நாணுமறந்து/ விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச்/ சூருறுமஞ்ஞையின் நடுங்க”

இது சரி. ஆனால் யானை வந்து அம்புபட்டுச் சென்றபிறகும் தலைவியும் தோழியும்-இருவருமே-தலைவனை விடாமல் அணைத்துக் கொண்டிருப்பது ஏன்?

(யானை)புள்ளி வரிநுதல் சிதைய, நில்லாது, அயர்ந்து புறங்கொடுத்த பின்னர்
நெடுவேள்/ அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்பத்/ திணிநிலைக் கடம்பின்
திரளரை வளைஇய/ துணையறை மாலையின் கைபிணி விடேஎம்
தலைவனுக்கேற்ற காமத்தன்மை கொண்ட தலைவி, தோழிதான் இவர்கள்!

தலைவன், தலைவியின் நெற்றியை நீவி, தோழியைப் பார்த்துச் சிரிக்கிறான். பிறகு என்ன நிகழ்கிறது?
“நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர/ ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ/ ஆகம் அடைய முயங்கலின்” (தலைவன் இவர்களைப் பிரியவிடாமல் அணைத்துக்கொள்கிறானாம்)

எல்லா இடங்களிலும் நான், நீ, நாம், நாங்கள், அவன், இவள் என்று இடப் பெயர்களைப் பயன்படுத்தும் குறிஞ்சிப்பாட்டு, முக்கியமான இந்த இடத்தில் இடப் பெயர்களைத் தவிர்த்துவிடுகிறது. நாணும் உட்கும் (யாரை) அடைகிறது? (யாரை) ஒய்யெனப் பிரியவும் விடான்? (யாரை) ஆகம் அடைய முயங்கலின்? ஏன் இந்த இடங்களில் இடப்பெயர்களே இல்லை? இங்கே கேள்வி எழுப்பப்பட்ட மூன்று இடங்களிலும் யாரை என்பது தலைவியை மட்டும் குறிக்கிறதா, இருவரையுமா என்பதுதான் ஐயம். ஏனெனில் இதற்குமுன்அடிவரை இருவரையும் குறிப்பதாகவே-‘யாம்’ ‘எம்’ என்றே சொற்கள் தோழியால் பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆக, எப்படிப்பட்ட தமிழ்ப்பண்பாட்டை உணர்த்துவதாக அமைகிறது குறிஞ்சிப் பாட்டு? இப்பாட்டு பழங்குடிமக்கள் கையாண்ட மணமுறையின் எச்சத்தை உணர்த்துகிறது என்பது உண்மை. எவ்வாறு பழங்குடிமக்களிடம் உடலுறவில் எவ்வித மனத்தடையும் தயக்கமும் இல்லையோ அதுபோலவே இங்கும் தலைவி, தோழி, தலைவன் எவரிடமும் இல்லை. அந்தவகையில் உண்மையாகவே இது இயற்கைப் புணர்ச்சிதான்!

அக்காலத்தில் தலைவன் தலைவி புணர்ச்சிக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இருந்ததாகவும் தெரியவில்லை. தலைவன் எத்தனை பெண்களை விரட்டும் ‘விடை’ யாக இருக்கிறான் என்பதும் தெரியவில்லை. இப்பாட்டுக்குச் செயற்கையான களங்கத்தைத் தருபவை, தலைவி முதலில் நிகழ்த்தும் அறவுரைப் புலம்பலும், தலைவன் அறம் புணையாகத் தேற்றுவதும்தான். அதனால்தான் முன்பே அவர்கள் அவ்வாறு பேசுமாறு நிலைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், நிர்ப்பந்தப்படுத்தப் பட்டிருக்கி றார்கள் என்று சொல்லப்பட்டது. இங்கு தொல்காப்பியர் கூறும் ‘கரணமும்’ இல்லை.

ஆனால் செயற்கையாக, இவற்றைத் திணித்திருக்கிறார் கபிலர். கடைசிப் பகுதியிலும் தலைவன் திருமணம் செய்துகொள்வானா என்பது பற்றித் தலைவி கவலைப்படவில்லை. மாறாக, அவனுக்கு வரும் வழியில் எதுவும் இடையூறு நேர்ந்து விடக்கூடாதே என்றுதான் கவலைப்படுகிறாள். இதனைத்தான் தமிழ்ப்பண்பாடு என்று கபிலர் ஓர் ஆரியஅரசனுக்கு உணர்த்தியிருப்பாரா?

கபிலர் என்பதே வடமொழிச் சொல்லாகவும், அவர் பார்ப்பனர் என்பது பிற பாடல்கள் வாயிலாக அறியப்படுவதாகவும் இருப்பதால் ஒரு பார்ப்பனக் குறும்போடு இப்படியான பழங்குடித்தன்மையும் பாலியல் பன்மையும் கொண்டதுதான் தமிழ்ப் பண்பாடு என்று ‘அறிவுறுத்துவதாகப்’ படைத்திருப்பாரா? அல்லது பின்வந்த பார்ப்பனர்கள் வேண்டுமென்றே இப்படிப்பட்ட குறிப்பை உருவாக்கியிருப்பார்களா? (‘மலையின் பாடல்’ என்பது இப்பாட்டின் பழங்குடிப்பண்பிற்கு ஒத்த தன்மைக்குப் பொருத்தமான தலைப்பாகவே அமைகிறது.) அல்லது “உங்கள் ஆரியப்பண்பாட்டின் எட்டுவகை மணங்களுமே மிகவும் செயற்கையாக அமைந்திருக்கின்றன, எங்கள் தமிழ்ப்பண்பாட்டில் இப்படிப்பட்ட செயற்கைத் தன்மை இல்லை” என்று இதன் வழியாகக் கூறியிருப்பாரோ? இந்த யூகங்கள் யாவும் திணைதுறைக் குறிப்புடன் இருக்கின்ற ‘ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழுணர்த்துவதற்காகப் பாடியது’ என்பதற்கான எதிர்வினை மட்டுமே. அக்குறிப்பிற்கே ஆதாரம் இல்லை என்றால், இந்த எதிர்வினைகளும் அவசியமற்றவையே.


சிலப்பதிகாரத்தில் உருவகமும் சினையெச்சமும்

சிலப்பதிகாரத்தில் உருவகமும் சினையெச்சமும்

இக்கட்டுரை, 2012இல் புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவ னம் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் படிக்கப்பட்டது.)

சிலப்பதிகாரம் ஓர் அருமையான புனைகதை. உள் நுழைந்து காணும் தோறும் அதன் கட்டமைப்பு வியப்பை அளிக்கிறது. புனைகதை என்பதைவிடக் கடவுள் உருவாக்கக் கதை என்று அதைச் சொல்வது பொருந்தும். இன்னொருவகையில் அது ஒரு முற்றுருவகம். அதன் முதல் பகுதி புகார், மதுரைக் காண்டங்கள். இரண்டாவது பகுதி வஞ்சிக் காண்டம். முதல்பகுதி கண்ணகியை தெய்வமாக்குகிறது என்றால் இரண்டாவது பகுதி தமிழர்களை வடவர்களினும் விஞ்சிய வீரர்களாக்குகிறது. ஒரு புனைகதை என்ற முறையில் அது ஒரு சினையெச்சமாகவும் இருக்கிறது.

இந்த இரண்டுமே பழங்காலத்திலிருந்து தமிழகத்தில் நிலவும் கனவுகள். குறிப்பாக, எல்லாத்துறைகளிலும் சமஸ்கிருதம் ஆதிக் கம் பெற்று, வடக்கின் கலாச்சாரம் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்ட நிலையில் பழமைக்கானதோர் ஏக்கம் தமிழர் மனத்தில் எப்போதும் இருந்து வந்துள்ளது. அதன் வெளிப்பாடுகளாகவே தமிழ் முதன்மை, தமிழர் முதன்மை இலக்கியங்கள் அமைகின் றன. இவற்றில் மிக முதலாவது சிலப்பதிகாரம். தமிழ்த் தேசியம் பேசிய முதற்காப்பியம் அது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வடக்கிற்கு ஓலை அனுப்புவதாகச் சொல்லும்போது செங்குட்டு வனிடம் “தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற் புலி…” இலச் சினைகளைப் பொறித்தனுப்பச் சொல்கிறான் அமைச்சன். செங்குட் டுவன் இங்கே தமிழகத்தின் சார்பாக நிற்கிறானே அல்லாமல், சேரனாக அல்ல. அதனால்தான் கனகவிசயர் தலைமீது கல்லேற் றியது பற்றிச் சோழனும் பாண்டியனும் விமரிசனம் செய்யும் போதும் அவனுக்குக் கோபம் வருகிறது. “மொத்தத் தமிழர்கள் சார்பாகவும் நான் வடக்கு மன்னர்களைத் தோற்கடிக்க, என்னைக் குறை சொல்கிறார்களே இவர்கள்” என்ற கோபம்.

சேரன் படையெடுப்போ, இமயமலையில் சோழன் புலி பொறித் ததோ, பாண்டியன் கயல் எழுதியதோ நிகழ்ந்தவை அல்ல. தமிழ்மன ஏக்கத்தின் உருவகங்கள் அவை.
இன்னொரு பார்வையிலும், சிலப்பதிகாரம் இரண்டு பகுதிக ளாக அமைந்துள்ளது. அதில் அமைந்துள்ள பாடல்கள்-குறிப்பாக, வரிப்பாடல்கள் நான்கும் தனி. பிற எடுத்துரைப்புப் பகுதிகள் (கதை சொல்லும் பகுதிகள்) தனி. ஒன்றிற்கொன்று மிக அனுசர ணையாக இவை அமைந்து காப்பியச் சுவையை மிகுதிப்படுத்துகின்றன. பொருளை மிக மேம்படச் செய்கின்றன. உண்மையில் இத்தகைய அமைப்பு இந்தியாவின் பிற காப்பியங்கள் எதிலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பிற வரிப்பாடல்களும் (உதாரணமாக காப்பியத்தின் இறுதியில் வாழ்த்துக்காதையில் வருவன போன்றும் துன்பமாலையில் இருப் பன போன்றும்) இருப்பினும், மையமான நான்கு வரிப்பாடல்கள் தான் சிலப்பதிகாரத்தின் அடிப்படை இருப்பைக் கட்டமைப்பவை. கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை ஆகியவைதான் அவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. இவை ஒரே சமயத்தில் உருவகங்களாகவும் சினையெச்சங்களாக வும் அமைந்து காப்பியப் பொருளை விரிவுபடுத்துகின்றன.
உருவகங்கள் சினையெச்சங்கள் என்ற சொற்கள் சிலருக்கு வியப்பேற்படுத்தக்கூடும். உருவகம் என்றால் என்ன என்பது தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்ததுதான். சினையெச்சம் என்றால் என்ன? சினையாகுபெயர் என்பதைத்தான் சினையெச்சம் என்கிறோம். ஏன் என்பது சிறிதுநேரத்தில் விளங்கக்கூடும்.

இந்த இரு சொற்களும் விரிந்த பொருளில் இங்கு ஆளப்படு கின்றன. இந்திய இலக்கணக்காரர்கள் – தமிழகத்தின் தொல்காப்பி யர் உட்பட-உவமையைத் தலையாய அணியாகக் கொண்டு உருவகத்தை அதன் மாற்றாகவோ குறுக்கமாகவோ கண்டதால் கொள்கை விரிவு ஏற்படாமல் போய்விட்டது. உருவகம்தான் அடிப்படை அணி. பேச்சிலும் எழுத்திலும் உருவகங்கள் பயின்று வரும் அளவுக்கு உவமைகள் வருவதே இல்லை.

உருவகம் என்பது ஒன்றிற்கு பதிலாக இன்னொன்றை பதிலீடு செய்யும் செயல். இது பெயர்ச்சொற்களில் மட்டும்தான் வரவேண் டும் என்ற அவசியம் இல்லை. வினைச்சொற்களிலும் மிகுதியாக உருவகம் இடம்பெறுகிறது. சம்பவங்களிலும் இடம் பெறுகிறது. உருவகம் என்ற சொல், பெயர் என்ற ஈற்றுச் சொல்லைப் பெறா மல் இருந்து விட்டதால் வினைக்கும் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. சிந்தனை குறித்த தமிழ்ச் சொற்கள் அனைத் தும் வினை யுருவகங்கள் தான். நாம் ஒரு பிரச்சினையை ‘நோக்குகிறோம்’, அதை ‘அலசுகிறோம்’, தீர்வை ‘அடைகிறோம்’ – இங்கே குறித்த வினைச் சொற்கள் அனைத்தும் வினை உருவகங்கள். யாரும் பிரச்சினையைக் கண்ணால் பார்ப்பதில்லை, சோப்புப்போட்டு அலசுவதில்லை, பஸ்ஸில் ஏறி அடைவதில்லை. தங்களுக்கென்று உள்ள நேர்ப்பொருள் மாறி அவை பதிலீடாக அமைந்திருக்கின்றன.

சினையெச்சத்தை ஆங்கிலத்தில் Synochdochy என்பார்கள். ஆகு பெயரை Metonymy என்பார்கள். தமிழில் சினையாகுபெயரைவிட இடவாகுபெயர் மிகுதி. இவை இரண்டையும் குறிக்குமுகமாக, மெடானிமி என்ற சொல்லுக்கு இணையாக இங்கு சினையெச்சம் என்ற சொல் ஆளப்படுகிறது. சினையாகுபெயர் என்பதில் உள்ள சினைதான் சொல்லின் தலைப் பகுதி. பொருள் எஞ்சி நிற்பதால் எச்சம்.

உருவகம் என்ற சொல் போலவே பெயருக்கும் வினைக்கும் நிகழ்வுகளுக்கும் பொதுவாக ஒரே சொல் இருந்திருந்தால் இந்தச் சொல்லை உருவாக்கவேண்டிய அவசியம் இராது. ஏனென்றால் வினையாக வரும்போதும் ஒரு கதையின் பகுதியாக வரும் போதும் அது ஆகுபெயர் அல்லது சினையாகுபெயர் என்றால் பொருந்துவதில்லை. எனவே சினையெச்சம் என்ற சொல் இங்கு ஆளப்படுகிறது.
உருவகம் பதிலீடு. சினையெச்சம் தொடர்ச்சி, சேர்க்கை, முழு மைப் படுத்தல். உதாரணமாக, கவிதை ஒன்றைச் சொல்லுவதற்கு பதிலாக வேறொன்றைச் சொல்கிறது. அதனால் அதில் உருவகத் தன்மை மிகுதியாக இருக்கிறது. உரைநடையில் ஒருபகுதியைச் சொல்கிறோம், முழுமையை நம் மனம் தானாகத் தேடிச்செல் கிறது, ஆக்கிக்கொள்கிறது. ஆகவே அதில் சினையெச்சத்தன்மை மிகுதியாக இருக்கிறது.

இனி மீண்டும் சிலப்பதிகாரக் கட்டமைப்புக்கு வருவோம். சிலப்பதிகாரத்தில் இணை அமைப்பு சிறப்பான இடம் பெறுகிறது. இரு கடிதங்கள், இரு கனவுகள் போன்ற இணையான அமைப்புக ளிலிருந்து இது தெளிவாகிறது. இதைவிட முதன்மையானது, வரிப்பாடல்களின் அமைப்பு. நான்கு வரிப்பாடல்களும் ஒரேசமயத் தில் உருவகமாகவும் சினையெச்சமாகவும் அமைந்து வெவ்வேறு அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன.

சான்றாகக் கானல்வரி: கானல்வரியைப் படிப்பவர்கள் அதன் ஆற்று வரி ஒருவிதமாகவும் பின் தொடர்ந்து வருகின்ற சார்த்து வரி, முகமில்வரி போன்றவை இன்னொரு விதமாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். உண்மையில் இவை இருவேறு திணைகளின் வெளிப்பாடுகள். சிலப்பதிகார வரிப்பாடல்கள் திணைகளின் அடிப்படையில் அமைந்துள்ளன என்பது அரிச்சுவடி. கானல்வரிதான் இவற்றில் சிறப்புப் பெற்றது. ஏனென்றால் மருதம், நெய்தல் ஆகிய இரண்டு திணைகளை உள்ளடக்கியதாக அது அமைந்துள்ளது. பிற வெளிப்படையானவை. வேட்டுவ வரி பாலைக்கும், ஆய்ச்சியர் குரவை முல்லைக்கும், குன்றக்குரவை குறிஞ்சிக்கும் களங்கள்.

கானல்வரியில் இடம் பெறும் இரண்டு அடிப்படையான திணை கள் மருதமும், நெய்தலும். இவற்றிலும் மருதம் குறைவு, நெய்தல் மிகுதி. பூம்புகாரும் மருதப்பகுதியிலும் (ஆற்றங்கரையி லும்), நெய்தற்பகுதியிலும் (கடற்கரையிலும்) அமைந்துள்ளது தானே. அதற்கேற்பவே அதன் இருபகுதிகள்-மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் ஆகியவை அமைந்துள்ளன.

சிலப்பதிகாரக்கதைப்படி, கோவலனுக்கு ஊடல் (மருதத்தின் உரிப்பொருள்) பிடிப்பதில்லை. கண்ணகி ஊடவே இல்லை. மாதவி கூட முதலில் கூடலும், பிறகுதான் ஊடலும் அளிக்கிறாள். அந்த ஊடலைக் கொஞ்சம் மிகுதியாக (ஆற்றுவரியில்) வெளிப் படுத்தும்போது பிரிவு ஏற்பட்டுவிடுகிறது. நெய்தலின் உரிப் பொருள் புலம்பல் என்றால் அதற்குக் காரணம் நீண்ட பிரிவு, நிரந்தரப் பிரிவு, புலம்பலை உண்டாக்கும் ஐயப் பிரிவு. முதலில் கண்ணகிக்கு நீண்ட பிரிவு நிகழ்கிறது; பின்னர் கோவலன் மதுரை செல்வதால் மாதவிக்கும் பிரிவு நிகழ்கிறது. எனவே மருதம் குறைவு, நெய்தல் மிகுதி.

ஆற்றுவரியில், “சோழன் உன்னைவிட்டு கங்கையைப் புணர்ந் தாலும் புலவாய் வாழி காவேரி” என்று புலவாமல் இருப்பதைப் பெண்களின் சிறப்பாக்குகிறான் கோவலன். மாதவிக்கு இதனைப் பொறுக்க முடியவில்லை. “செங்கோல் வளையாமையே காவிரி யின் சிறப்புக்குக் காரணம்” என்று பாடுகிறாள் அவள். இங்கு கங்கையும் காவிரியும் உருவகங்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மற்ற கானல்வரிப்பாடல்களிலும் உருவகங்கள் மிகுதி. குறிப்பாகக் குருகு, மாலை, ஓதம் போன்ற சொற்கள் பெண்ணைக் குறிப்பனவாகவும் அலை என்பது ஆணைக் குறிப்பதாகவும் அமைகின்றன. இவை கோவலனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதைக் காட்டுவனவாக அமைகின் றன. இதுதான் மாதவி ஊடலுக்குக் காரணம்.

உண்மையில் மாதவி ஒரு மனைவியாக ஊடல்கொள்ளத் தக்க வள்தான். அவளுக்கு மணிமேகலை என்ற குழந்தை பிறந்திருக் கிறது. குழந்தை பிறந்த வைபவத்தை மிகச் சிறப்பாக நடத்திய வன் கோவலன். சங்க இலக்கியத்தில் தலைவிக்குத்தான் குழந்தைப்பேறு உண்டு. பரத்தைக்குக் குழந்தைப்பேறு கிடையாது. சிலப்பதிகாரத்தில் இந்த மரபினை இளங்கோவடிகள் மாற்றுகிறார். பரத்தைக்குக் குழந்தைப் பேற்றினைத் தருவதன் வாயிலாக அவளைப் பரத்தை என்ற அந்தஸ்திலிருந்து மீட்டு உயர்த்தி மனைவி என்ற அந்தஸ்தினைத் தருகிறார். காப்பியத் தலைவி யான கண்ணகியை தெய்வமாக்க வேண்டி அவளுக்குக் குழந்தை இல்லாமல் செய்கிறார்.

மாங்காட்டு மறையோன் வழி கூறியபின், யாவரும் தளர்ச்சி யுற்றிருக்க, கோவலன் நீர் கொணரச் செல்லும்போது வயந்த மாலை வடிவில் வனசாரிணி தோன்றுகின்ற நிகழ்வுதான் இந்தக் கருத்தை நாம் கொள்ளக் காரணமாகிறது. ஏன் வனசாரிணி வயந்தமாலை வடிவைத் தேர்ந்தெடுக்கவேண்டும்? அவள் கோவ லனிடம் பிழைமொழி பேசியதாக மாதவி கருத வேண்டிய தேவை என்ன? ஏன் அவளை மாதவி துறந்தாள்? துறந்தபின் வயந்த மாலை ஏன் கோவலனை நாடி வரவேண்டும் என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு அனுசரணையான பகுதிகள் கானல்வரியில் உள்ளன. சான்றாக “மாலை (வசந்தமாலை என்ற குறிப்பு) நீ ஆயின் மணந்தார் அவராயின் ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மருள்மாலை” என்ற நேரடியான கூற்றைக் காணுங்கள்.

ஆக, கானல்வரி ஒன்றைச் சொல்வதுபோல இன்னொன்றைச் சொல்கிறது, அதாவது ஒன்றிற்கு பதிலீடாக இன்னொன்றை வைக்கிறது என்பது உருவக அமைப்பு. இதை நாம், ஒரு குறியின் குறிப்பீடு, இன்னொரு குறியின் குறிப்பீட்டிற்கான குறிப்பானை ஏற்பது என்று விளக்கலாம்.

“பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகாஅர் ஆயினும் நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர்” என்று புகார்க்காண்டம் தொடங்குகிறது. ஆனால் அதன் இறுதி நிகழ்ச்சியாக வருவது கோவலன் கண்ணகியுடன் புகாரை விட்டு அகன்றான் என்பது. இதேபோல மதுரைக் காண்டமும் மதுரையைப் ‘பதியெழு அறியா மூதூர்’ என வருணித்துத் தொடங்குகிறது. ஆனால் அதிலிருந்தும் எல்லோ ருமே பெயர்கிறார்கள் இறுதியில் – கண்ணகி உள்படத்தான். இம் மாதிரி இணைமுரண்கள் சிலப்பதிகாரத்தின் கட்டமைப்புக்குச் சிறப்புச் செய்கின்றன.

சிலப்பதிகாரத்தில் எத்தனையோ இயற்கை இறந்த நிகழ்வுகள் வருகின்றன. அவற்றின் காரணமும் உருவகப் பாங்கும் தனித் தனியே விரிவாக ஆராயத்தக்கது. காடுகாண் காதையில் நீர் கிடைக்காத மயக்கத்தினால் கோவலனின் கண்களுக்கு வன சாரிணி என்றதோர் உருவம்-அதுவும் மாங்காட்டு மறையோன் கூறியதால்-தென்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது கோவல னின் மனமயக்கம் என்றாலும் அவனுக்கு வயந்தமாலையின் உருவம் தோன்றத்தான் காரணம் என்ன? மாதவியின் வடிவமே தோன்றி யிருக்கலாமே? இம்மாதிரிக் கேள்விகள் ஒரு குறித்த முடிவை நோக்கிச் செலுத்துகின்றன.

ஆக, கானல் வரியின் சினையெச்ச அமைப்பு திணைப் பார்வை நோக்கிச் செலுத்துகிறது. உருவக அமைப்பு இன்னொரு பெண் ணுடன் கோவலன் தொடர்பு கொண்டான், அதனால்தான் மாதவி ஊடல் கொண்டாள், “எழுதும்” என்று பன்மையில்-மாதவியையும் உள்ளடக்கி-கோவலன் கூறிய பிறகும் மாதவி எழாமல் – கோவல னுடன் செல்லாமல் இருந்தாள் என்ற முடிவுக்குச் செலுத்து கின்றது.

சிலப்பதிகாரத்தில் இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் சில வருகின்றன. கோவலன் வனசாரிணியைக் காணுதல், அதைப் பாய்கலைப் பாவை மந்திரத்தால் கட்டுதல், கண்ணகி “கள்வனோ என் கணவன்” என்று கேட்கும்போது சூரியன் பதிலளித்தல், கோவலன் வெட்டுண்டபிறகு கண்ணகியைத் தழுவி “இருந் தைக்க” எனச் சொல்லிச் செல்லுதல், கண்ணகி தன் இடப்பக்க முலையைத் திருகி எறிதல், கண்ணகியின்முன் அக்கினித் தேவனும் மதுராபதி தெய்வமும் வந்து தோன்றுதல், கண்ணகி மலைமீது குறவர்கள் நோக்க, கணவனுடன் வானுலகு செல்லுதல், கடைசியில் செங்குட்டுவன் காண மின்னல்வடிவில் கண்ணகி தோன்றுதல், மூன்றுகுழந்தைகள் தங்கள் பழம்பிறப்பு உணர்த்தல் ஆகியன இப்படிப்பட்ட மீயியற்கைச் செய்திகள். இவை யாவும் உருவகங்களே. கானல்வரியைத் தவிர பிற வரிப் பாடல்களும் மன மயக்கத்தினால் ஏற்பட்ட நிகழ்வுகள்-அதாவது ஆசிரியரின் கற்பித உருவகங்கள் என்றே கொள்ள ஏது இருக் கிறது.

உருவகம் என்பது பதிலீடு. கனவில் இது எப்படிச் செயல்படு கிறது என்பதை ஃப்ராய்டு விளக்கியிருக்கிறார். உருவகம், சினை யெச்சம் ஆகிய இரண்டு செயல்முறை களாலும் கனவுத்தோற்ற விளைவு ஏற்படுகிறது. கனவில், உருவகம் செறிவாக்கம் (காண்டென்சேஷன்) என்பதைக் கட்டமைக்கிறது. சினையெச்சம் இடப்பெயர்ச்சி (டிஸ்ப்ளேஸ்மெண்ட்) என்பதை ஆக்குகிறது. ஒருவனுக்குப் பகைவன் தீங்கு செய்துவிடுவான் என்ற பயம். அவன் ஒரு குள்ளநரி தன்னைத் தாக்குவதைப் போலவும் தனக்கு அதனால் காயம் ஏற்படுவதைப் போலவும் கனவு காண்கிறான். இங்கே பகைவனைக் குள்ளநரி ஆக்குவது உருவகச் செயல், செறிவாக்கம். பதிலீடு. அவன் தாக்குகின்ற செயலின் பின்னணி, விளைவு என்பன இடப்பெயர்ச்சி. அதாவது கனவின் மீதிப் பகுதியைக் கனவு காண்பவன் பூர்த்திசெய்து கொள்கிறான். அந்தக் கனவுக்கு ஒரு பின்னணியை உருவாக்கிக் கொள்கிறான். ஆனால் அது தன் பகைவனைக் குறித்தது என்பதை அவன் அறிவதில்லை. கனவு என்பதே இவ்விதமாக செறிவாக்கத்தினாலும் (உருவகத்தி னாலும்) இடப்பெயர்ச்சியினாலும் (சினையெச்சத்தாலும்) உருவா குவது என்று ஃப்ராய்டு கண்டார்.

சோழன் இமயத்தில் புலிபொறித்தது, பாண்டியன் மீன் இலச்சி னை பொறித்தது, சேரன் இமயத்தை வென்றது போன்றவை ஒரு சமூகத்தின் கூட்டுக்கனவுகள். அதனால்தான் அவை மீட்பு இயக் கங்கள் தோன்றக் காரணமாக அமைகின்றன. சிலப்பதிகாரத்தில் சேரன் படையெடுப்பும் ஒரு சமூகத்தின் கூட்டுக்கனவுதான். கண்ணகியை தெய்வமாக்குவதும் ஒரு கூட்டுக்கனவுதான். பாலிய லில் அதிக ஈடுபாடு காட்டுகின்ற உணர்ச்சி வயப்பட்டதொரு சமூகம், பெண்ணை ஒருபுறம் தனக்குப் பாலியல் அடிமையாகவும் இன்னொருபுறம் தாய் வடிவத்தில் வழிபாட்டுக்குரியவளாகவும் கட்டமைக்கிறது. தாய்ப்படிமத்தில் கட்டமைக்கப்படும் வடிவங்க ளில் ஒன்றே தாய்த் தெய்வம் பெண்தெய்வம் என்னும் கருத் துருவங்கள். இதற்கு இன்றைய தமிழ்நாட்டு அரசியல் படிமங்களே நல்ல சான்று.

புகார்க்காண்டம் முழுவதும், மதுரைக்காண்டத்தில் சில இடங்க ளிலும் ‘மகரவெல்கொடி மைந்தனின்’இருப்பும் செயலும் தொடர்ந்து சொல்லப்படுகின்றன. மகரவெல்கொடி மைந்தன் மன்மதன். பாலியல் சேர்க்கையின் கடவுள். (சிலப்பதிகாரம் ஏராள மான வடமொழிப் புராணக்கதைகளை எடுத்தாள்கிறது. அவற்றில் ஒன்று இது.) மகரவெல்கொடி மைந்தன் நகர மெங்கும் சுற்றித் திரிவதாகக் காட்டும் இளங்கோ, அவன் மனைவி ரதியைப் பற்றிய குறிப்பேதும் தரவேயில்லை. மாறாக அவனுடன் இள வேனில், தென்றல் காற்று ஆகியவை சுற்றுவதாகவே அமைக் கிறார். பாலியலுக்கான கடவுளேயானாலும் ரதி, பெண். எங்கோ ஒடுங்கி இருக்கவேண்டியவள். கணவனைப் போலச் சுற்றித்திரிய அவளால் இயலாது. சிலப்பதிகாரம், பாலியல் ஆசை, தமிழ்இன உணர்வு என்ற இரண்டு அடிக்கட்டுமானங்களால் ஆகியிருக்கிறது.

மிகுஉணர்ச்சியின்போது ஏற்படும் மயக்கநிலையும் கனவு போன்றதே. கண்ணகி அழுது அரற்றிக் “காய்கதிர்ச்செல்வனே கள்வனோ என் கணவன்” என்று கேட்பது யதார்த்தமானதே. நமக்குத் தீங்கு ஏற்படும்போது “கடவுளே உனக்குக் கண்ணில் லையா” என்று கேட்பது போன்றது அது. நமக்கு எந்தக்கடவுளும் விடைகூறுவதில்லை. கண்ணகியின் மனமயக்கத்தில், அவளுக் குக் கதிரவனே விடையளிப்பதுபோல ஒரு காட்சி ஏற்படுகிறது என்று நாம் விளக்கலாம். (இதில் இளங்கோவடிகளின் பங்கு சிறப் பானது. எல்லாவித மனமயக்கங்களும் “இவ்வூர் எரியுண்ணும்” என்ற ஒரே இலக்கை நோக்கிச் செலுத்துவதாக அவர் படைக் கிறார்.) கண்ணகிக்கு இவ்வித மயக்கக்காட்சி ஏற்படுவது உருவகம்.

இதுபோன்றே இரவின் இருண்ட போதில் ஏற்படும் அவள் மனமயக்கமே தன் கணவன் தன்னிடம் “இருந்தைக்க” எனக்கூறி விடைபெற்றுச் செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. அக்கினித்தேவன் தன்னிடம் ஏவல் கேட்பது போலவும் மதுராபதி காரணம் கூறி விளக்குவது போலவும் தோன்றச் செய்கிறது. இவை யாவும் உருவகங்கள்.

“ஒருமுலை இழந்த திருமாபத்தினி” என்று கண்ணகி குறிக்கப் பட்டாலும் ‘முலை முகம் திருகி’ என்ற தொடரை நோக்குவது அதன் மெய்யான பொருளை வெளிப்படுத்தக் கூடியது. அவ்வாறா யின் அது இயற்கை இறந்த நிகழ்ச்சி ஆகாது. இதை உண்மை என்றே கொண்டால், கண்ணகி கணவனை இழந்ததால் தன் பாலியல் சுகத்தினை இழந்தமைக்கு உருவகமாகிறது என்று கொள்ளலாம். பாலியல் சுகத்தினை இழப்பது அல்லது கட்டுப்படுத் துவது என்பது இந்திய மரபில் அருஞ் செயல்களை ஆற்றக்கூடிய – அட்டமாசித்திகளைப் பெறக்கூடிய – குண்டலியை எழுப்பக்கூடிய ஆற்றலைத் தரும் என்ற நம்பிக்கையைக் காட்டும். இது ஒரு சிறந்த உருவகம் என்பதில் ஐயமில்லை.

இந்த உருவகங்களின் அடியில் ஒரு கருத்துருவம் செயல்படு கிறது. அது தமிழ் வெற்றி என்ற கூட்டு நனவிலிக்கு எதிராகவும் இயங்குகிறது. சான்றாக, அக்கினி தேவனுக்கு விடையிறுக்கும் கண்ணகி, “பசு, பார்ப்பார், அறவோர், பத்தினிப் பெண்டிர் முதலி யவர் களை விட்டு தீத்திறத்தோர் பக்கமே சேர்க” என்கிறாள். பசு இன்றைக்கும் ஒரு அரசியல் பின்னணியாக இயங்கும் படிமம். தீத்திறத்தோர் யார்? தீமை செய்பவர்களா? உடலுழைப்பில் ஈடுபடு பவர்களா? உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவருக் குமே – குயவர், கம்மியர், சலவையாளர் போன்ற எவராக இருப்பி னும் – தீ தேவையானது. எனவே தீத்திறத்தோர், அதாவது தீயைப் பயன்படுத்துபவர், உழைக்கும் மக்கள் என்று கொள்ளத் தகும். இங்கு வரும் பார்ப்பார் பற்றிய குறிப்பு இப்படி நோக்கச் செய்கிறது.

சிலப்பதிகாரத்தில் எடுத்துக்காட்டாக வரும் கதைகள் அனைத் தும் (பொய்ச்சான்று கூறி பூதத்தின் வாய்ப்பட்ட ஒருவன் தவிர) பார்ப்பனர் பற்றியவை. கோவலன் கண்ணகி திருமணமே “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட” நடக்கிறது, பார்ப்பனச் சடங்கில் தான் தொடங்குகிறது காப்பியம். அதில்தான் முடிவும் அடைகி றது. “கோவலன் கண்ணகி தீவலம் செய்வதைக் காண்பார்கள் கண் என்னை” என்ற வருணனையை, சினையெச்சமாக்கி, இறுதியில் “செங்குட்டுவன் யாகம் செய்ததைக் காண்பார்கள் கண் என்னை” என்று கூட்டிக் கொள்ளவேண்டும்.

மதுரைக்கு வழி சொல்பவன் மாங்காட்டு மறையோன். மாதவியின் கடிதத்தைக் கொண்டுவந்து கொடுப்பவன் கோசிகமாணி. கோவலனின் நண்பன் மாடலன். அவனுடைய கூற்றின்படி, கோவ லன் யானையிலிருந்து காப்பது ஓர் முதிய பார்ப்பனனை, கீரிப் பிள்ளை காரணமாகக் கைவிடப்பட்டவளையும் கோவலன் காக்கி றான். மதுராபதி சொல்லும் கதைகளில் வரும் கீரந்தை, பராசரன் உட்பட அனைவரும் பார்ப்பனர்கள். மாடலன் இறுதியாகச் செங்குட்டுவனைத் தூண்டுவது பார்ப்பன வேள்வி செய்யச் சொல்லி. சிலப்பதிகார இறுதியில் கண்ணகியின் கோயிலுக்கும் அவள் வழிபாட்டுக்கும் இருந்த முக்கியத்துவம் குறைந்து போய், “வேள்வி செய்து அரசர்களை வழியனுப்பிவிட்டு செங்குட்டுவன் சென்றான்” என்று கதை முடிகிறது. கண்ணகியின் தோழியும் ஒரு பார்ப்பனியே. ‘அரசன் பின்னோர்’ என்ற சிறப்புப் பெற்ற செல்வ வளம் மிக்க வணிகர்கள் பார்ப்பனியத்தை ஆதரித்ததில் ஆச்சரிய மில்லை. ஆனால் ஒரு முரண்பாடு: அவர்கள் சமணர்களாக இருக்கிறார்கள், பார்ப்பனச் சடங்குகளின்படி நடக்கிறார்கள். எனவே ஒருவிதத்தில், வைதிகர்களான வேளாளருக்கும் சமணர் களான வணிகருக்கும் ஏற்பட்ட முரண்பாடுதான் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் தெளிவாகிறது என்ற கருத்து கேள்விக் குள்ளாகிறது.

தமிழ்க் கருத்தியலும் வடஆரியர் கருத்தியலும் விரவிய காப்பி யம் என்று சிலப்பதிகாரத்தை நோக்க இந்த நிகழ்வுகள் இடமளிக் கின்றன. தமிழ்க்கருத்தியலையும் ஆரியர் கருத்தியலையும் விரவு வதுதான் இளங்கோவடிகளின் நோக்கம் என்று நமக்குப் புலனா கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் பார்ப்பனியத்துக்குத் தரப்படுவதால் சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்றோ, சமணக்காப்பியம் என்றோ சொல்லக்கூடவில்லை. இளங்கோவடிகளையும் சமணத் துறவி என்று சொல்ல முடியவில்லை. சேரன் செங்குட்டுவனைப் போல அவரும் ஒரு சைவராகவே இருந்திருக்கக் கூடும்.

கவுந்தியடிகள் என்னும் முக்கியப் பாத்திரத்தையும், கோவலன் கண்ணகி சாவக நோன்பிகளாக இருப்பதையும் வைத்துத்தான் சிலப்பதிகாரம் சமணக் காப்பியம் எனப்படுகிறது. அக்கால வணிகர் கள் தாங்கள் கடல்மேற் செல்வதற்கு இடங்கொடாத வைதிக சமயத்திலிருந்து விலகிச் சமணர்களாக இருந்ததில் ஆச்சரிய மில்லை. இன்றும் பெருவணிகர்கள் பலர் (வடநாட்டிலும்) சமணர் களே. தமிழ்நாட்டில் வட்டிக்கடை வைத்திருக்கும் எத்தனை ஜெயின்களை நாம் அறிவோம்? இதனால் எல்லாம் சிலப்பதிகாரம் சமணக் காப்பியம் ஆகிவிடாது.

கோவலனைக் கவுந்தியடிகள் மதுரைப் பயணத்துக்கு முன்பே அறிந்தவராதல் கூடும். அவர்களுக்கிடையில் பரிச்சயமான பேச்சு இடம் பெறுகிறது. மதுரைக்குச்செல்லும் காரணத்தை கவுந்தியடி கள் வினவும்போது “உரையாட்டில்லை உறுதவத்தீர்” என்று முரட்டுத்தனமாக பதிலுரைக்கிறான்.

மதுரைப் பயணத்தின்போது கவுந்தி, கண்ணகியின்மீது அள வற்ற பாசத்தை வளர்த்துக் கொள்கிறார். தனது அறச்சாலையில் தான் கண்ணகியை முதன்முதலாகக் காண்பவர், உறையூர் மதிற்புறம் செல்வதற்குள் “எள்ளுநர் போலும் இவர் என் பூங் கோதையை” என்று தன் மகளாக நினைக்குமளவுக்கு மாறுகிறார், மதுரைப் புறஞ்சேரி செல்வதற்குள் “கற்புடை இத்தெய்வம் அல்லது வேறு பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்” என்று சான்றிதழ் தருமளவுக்குச் சென்றுவிடுகிறார். அவருடைய இத்தன் மையை உணரும் சாரணர்கள் “பவந்தரு பாசம் கவுந்தி கெடுக” என்று கூறியதில் ஆச்சரியமில்லை. பாசத்தைக் கடவாமல் கண்ணகிக்காக உயிர் நீத்தவரல்லவா கவுந்தி?

காப்பிய அமைப்பை நோக்கும்போது இயற்கை இறந்த நிகழ்ச்சி களை இளங்கோவடிகள் நம்புவதுபோல்தான் தோன்றுகிறது. இன் றும் “தெய்வம் ஏறுகிறது, எதிர்காலத்தைச் சொல்கிறது” என்பது முதலாக சாதாரண குறிகேட்பவர்கள், ஜோசியம் கேட்பவர்கள் வரையிலான கருத்தியல் அது. எனவே கண்ணகியை தெய்வமாக் கும் அவருடைய எண்ணத்திற்கேற்றவாறு காட்சிகளைப் படைத் துக்கொள்கிறார். ஆனால், இயற்கை இறந்த நிகழ்ச்சிகள் அனைத் தும் கண்ணகிக்கு மட்டும் தெரிகின்றனவே அன்றி உடனிருந்த மக்கள் யாருக்கும் அவை புலப்படவில்லை. எனவே அவற்றின் புறவயமதிப்பு கேள்விக்குரியதாகிறது. கண்ணகி வானுலகம் சென் றதாகக் குறவர்கள் கூறுவது ஒன்றே புறவய நிகழ்வு. அதுவும் பொது நம்பிக்கை, பொதுக்கருத்துருவ அடிப்படையில் படைக்கப் பட்டதாகலாம்.
கானல்வரியின் அமைப்புப் பற்றிப் பார்த்தோம். அடுத்தது வேட்டுவ வரி. வேட்டுவ வரியிலும் தெய்வமேறிய சாலினியின் மனமயக்கமே கண்ணகியை தெய்வமாக நோக்கியது. ஆனால் இளங்கோவடிகள் இங்கு மட்டும், “பேதுறவு மொழிந்தனள் மூதாட்டி” என்று கண்ணகி புன்முறுவல் கொள்வதாகப் படைக் கிறார். (தர்க்கவிளக்கம் அளிக்க முற்படுகிறார்.)

கண்ணகியை தெய்வமாகக் காண்பது வருவதுரைத்தல் என் னும் உத்தி. வருவதுரைத்தல் உத்திகள் யாவும் (இவை மட்டு மல்ல, பின்னோக்கு உத்திகளும்தான்) சினையெச்சங்களே. எச்சத் தன்மை அவற்றில் இருக்கிறது. பின்னால் நிகழப் போவதையோ முன்வந்ததையோ வாசகர்கள் இட்டு நிரப்பிக்கொள்ள வைக்கின் றன அவை.

வேட்டுவ வரியின் உருவகப் பாங்கும், அதன் திணையமைப் பில் வெளிப்படுகிறது. “முல்லை குறிஞ்சி ஆகியவை வேனிற் காலத்தில் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்று வரு ணித்ததற்கேற்ப, வேட்டுவ வரி நிகழுமிடம் முல்லைப்பாலை. (குறிஞ்சி மழை பெறும் மலைப்புறமாதலின் அது பாலையாகும் வாய்ப்பு குறைவு). எயினர் பற்றிய பார்வை இதில் வருகிறது. முல்லை திரிந்து பாலையானதுபோல, இந்த எயினர்கள் தங்கள் இயல்பு திரிந்து அறவோராக மாறிவிட்டார்கள் என்கிறாள் சாலினி. பாலையின் உரிப்பொருள் பிரிவு. தலைவனும் தலைவி யும் சேர்ந்து இடம்பெயர்ந்தாலும் தொல்காப்பிய நோக்கில் பாலை யாகவே கருதப்படும். எனவே கோவலன் கண்ணகி பயணமும் பாலையாகிறது. மேலும் எதிர்வரப்போகும் பெரும்பிரிவின் உருவ கமாகவும் அது அமைகிறது.
மதுரையை நோக்கிய பயணத்தில் தீயசகுனங்கள் எதிர்ப்படு கின்றன. இவை வரப் போவதை முன்னறிவிப்பவை என்ற முறை யில் சினையெச்சங்களே. முக்கியமாக அடைக்கலக் காதையின் தொடர்கள் நம்மைச் சிந்திக்கவைக்கின்றன. மாதரியிடம் கவுந்தி, “இம் மடந்தைதன் கணவன் தாதையைக் கேட்கில் தன்குல வாணர்….கருந்தடங்கண்ணியடு கடிமனைப் படுத்துவர்” என்று அறிமுகப்படுத்துகிறார். மதுரையைக் காணச் சென்ற கோவலன் தன்குலவாணரைக் காணாது வந்தது ஏன் என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

பிறகு “தவத்தோர் அடைக்கலம் தான் சிறிதாயினும் மிகப் பேரின்பம் தருமது கேளாய்” என்கிறார். இங்கு மிகப்பேரின்பம் என்ற சொல் குறிப்பு முரணாகவும் சிலேடையாகவும் அமைகிறது. ஏனென்றால் கவுந்தி எடுத்துக்காட்டும் எட்டி சாயலன் கதையில் கடைசியாக அவனும் அவன் மனைவியும் “முட்டா இன்பத்து முடிவுலகு எய்தினர்” என்று கூறப்படுகிறது. இவ்விதக் குறிப்பு முரண்களை மிகுதியாகக் காண இயலும்.
ஆய்ச்சியர் குரவையும் வரும் அவலத்தை முன்னுரைக்கும் உருவகமே. இளங்கோவடிகளின் பெயர்உருவகத்தன்மை (name symbolism) இங்கே மிகப் பொருத்தமாகிறது. கோவலன் என்ற பெயர் கோபாலன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழ்வடிவம். கோபாலன்-அதாவது பசுக்களை மேய்ப்பவன் என்று பெயர்பெறும் கண்ணன், யமுனையில் ஆடி வளர்ந்தவன், அவன் காதலி நப் பின்னை. கோவலன் கண்ணகியை மெய்யாகவே கண்ணன் – நப்பின்னை வடிவமாகக் காண்கிறாள் மாதரி.

இந்த ஒப்புமை ஒரு பொருந்தாமையை உட்கொண்டது. பாகவ தக் கதைப்படி கண்ணனின் தோழியாகிய நப்பின்னை ஏற்கெனவே திருமணமானவள்.

ஒரு வேடிக்கையான செய்தி, யமுனையில் கண்ணன் கோபிய ரின் கூறை கொண்டான் என்றால் இங்கு இந்தக் கண்ணன் தன் “கூறைகோட்பட்டுக் கோட்டுமா ஊர்வதாகக்” கனவு கண்டவன். கூறை கோட்பட்டுக் கோட்டுமா ஊர்தல் என்பது இந்தப் பூவுலக உடலைத் துறந்து வானுலகு எய்துவதை உருவகமாக்குகிறது.
முல்லை நிலத்தின் உரிப்பொருள் ஆற்றிஇருத்தல். கணவனின் வருகைக்காக ஆறுதலோடு காத்திருத்தல், தன் இல்லறக் கடமை களை ஆற்றிஇருத்தல் என்றெல்லாம் இச்சொல் பொருள்படும். இந்தப் பின்னணியில், கோவலன் இறந்தபிறகு வானுலகு செல் கையில் கண்ணகியிடம் “இருந்தைக்க” என உரைப்பது பொருள் பொதிந்ததாகிறது. முல்லைத் திணையில் தலைவன் தலைவி யிடம் “ஆற்றியிரு” எனக்கூறிவிட்டுச் சிறிதுகாலம் கழித்துக் கார் காலத் தொடக்கத்தில் விரைந்து திரும்பிவருவான். அதுபோல இங்கும் இவளை “ஆற்றி இரு” என்றவன், சிறிதுகாலத்தில் வானு லகத் தேர்ப்பாகரொடு கண்ணகியை ஏற்றுக்கொள்ள வருகிறான் போலும்.

கண்ணகி தன் இல்லறக் கடமையாற்றுவது – ஆற்றியிருப்பது முதலில் சொல்லப்பட்டாலும் பிரிவு பிரிவுதானே? இங்கு கோவலன் முதல்நாள் மதுரையைக் காணச் சென்ற நிகழ்வோடு சிலம்பை விற்கச் செல்லும்போது நிகழும் நிகழ்ச்சிகளை ஒப்பிட் டுக் காண்பது பயனளிக்கும். கோவலன் கொலைக்களப் பட்டபின் தீச்சகுனங்கள் நிகழ்கின்றன. அவற்றிலிருந்து ஆவினத்தை மட்டு மல்ல, கண்ணகியையும் காக்குமாறுதான் (அவள் காண) ஆய்ச் சியர் குரவை நிகழ்கிறது. முல்லைநிலமும் முல்லைக் கருப் பொருளும் உரிப்பொருளும் முற்றிலும் ஆய்ச்சியர் குரவையில் பொருந்தியிருக்கின்றன.

குன்றக்குரவை உண்மையில் மதுரைக்காண்டத்தின் இறுதிப் பகுதியாக இருக்கவேண்டியது. அதனுடன் கண்ணகியை தெய்வ மாக்கும் கதை முடிவுறுகிறது. கண்ணகியைக் கண்டு “இவளை தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே” என்று குறவர்கள் ஏற்ற போதே அவள் சாதாரண, எளிய மக்களின் தெய்வமாகிவிட்டாள். அவளைப் பெருமக்களின் பெருந்தெய்வமாக்கும் முயற்சிதான் செங்குட்டுவனின் கல் கொணரும் செயல். பெருந் தெய்வங்களுக் குத் தான் கற்கோயில் கட்டுதல், நீர்முழுக்கு (கும்பாபிஷேகம்)ச் செய்தல், பார்ப்பனர்களின் ஆசீர்வாதம் எல்லாம் தேவை. “வையங் காவல் பூண்ட நின் நல்யாண்டு ஐயைந்திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள வேள்வி செய்யாதியாங்கணும் மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை. எனவே நான்மறை மருங்கின் வேள்விப்பார்ப்பான் அருமறை மரபின் அரசர்க்கு ஓக்கிய பெருநல் வேள்விநீ செய்தல் வேண்டும்” என்கிறான் மாடலன். அதைத்தான் செங்குட்டுவன் தென்தமிழாற்றல் உணர்த் திய பின் வடக்கிலிருந்து திரும்பிவந்து செய்கிறான் என்பது சிறந்த சூழல்முரண். அதுமட்டுமல்ல, “பத்தினிக் கோட்டத்து வேள் வியும் விழாவும் நாடொறும் வகுத்து ….ஏகினான்” வடதிசை வணக்கிய மன்னவர் ஏறான செங்குட்டுவன் என்கிறார்.

மாடலன் கற்பிக்கும் வைதிக வேள்வி நெறிமுறை தமிழகம் முழுதும் பரவுகிறது. பகுதியின் வெற்றி – பார்ப்பனரின் வெற்றி – தமிழ்ச் சமூக வெற்றி ஆகிறது.

கண்ணகிக்குக் கோயில் எடுத்தாலும் கொண்டாடினாலும் அவள் குறவர் தெய்வமாகவே இன்றுவரை நிற்கிறாள். மாடல னின், மாங்காட்டு மறையோனின் பெருந்தெய்வ வழிபாடுதான் பொதுவழிபாடாக எஞ்சிநிற்கிறது.

இளங்கோவடிகளின் காப்பியத்தில் காணப்படும் அளவுக்குத் தமிழ் உணர்வு நேராகப் பிற காப்பியங்களில் காணக்கூடியதாக இல்லை என்பது அனைவர்க்கும் தெரிந்தது. வில்லவன் கோதை சேரனிடம் சொல்கிறான்- “இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடாக் கிய நீ”. வடக்கு-தெற்கு என்ற முரண்சொற்கள் வஞ்சிக்காண்டம் முழுவதும் பலமுறை ஆளப்படுகின்றன. வடதிசை மருங்கின் மன்னர், தென்தமிழ் ஆற்றல் என்ற சொற்கள் பலமுறை இடம் பெறுகின்றன.

சிலப்பதிகாரம்-சிலம்பு + அதிகாரம் என்பது அனைவரும் அறிந் தது. ஆனால் சிலம்பு என்பது இங்கு கண்ணகியின் சிலம்பைக் குறிக்கவில்லை. சிலம்பு என்றால் மலை. மலைக்குரிய சேரனின் வெற்றி, தமிழின் வெற்றி, தமிழ்நாட்டின் வெற்றி ஆக்கப்படுகிறது. பகுதி முழுமைக்கு ஆகிறது. சேரநாடு (கேரளம் ஆனபிறகும்தான்) வடக்கின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டது. அதுவே தமிழ்நாட் டுக்கும் ஆகிறது. வடக்கின் பண்பாடு வெற்றி பெறுகிறது, உண் மையில் தமிழகத்தின் பண்பாடு தாழ்கிறது என்பதே சிலப்பதிகாரம் காட்டும் செய்தி.

குறவர்களின் குரவை நடப்பது மலையொன்றின் மீது. அங்குதான் கண்ணகி வானுலகு ஏறினாள். இவ்விதம் வானுலகு ஏறவும் தெய்வங்கள் வானிலிருந்து இறங்கவுமான இடத்தை Axis Mundi என்பார்கள். குறவரின் செவ்வேள் குன்றம் இவ்விதப் பொதுமை அச்சாகிறது. இதுவரை நிகழ்ந்தது ஒரு பயணம். கண்ணகி நெய்தல் நிலத்திலிருந்து தொடங்கி மருதம், பாலை, முல்லை வழியாக நடந்து கடைசியாகக் குறிஞ்சியை அடைந்த நிகழ்வு. கீழிடத்திலிருந்து மேலிடத்திற்கு உயர்வதற்கான உருவ கம் இந்தப் பயணம்.
கோவலன் முல்லை நிலத்தோடு நின்று விட்டான். அவனால் கண்ணகியளவு உயர முடியவில்லை. உடன்வந்த கவுந்தியடிக ளும் அவ்வாறே. மற்றவர்களின் பயணங்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் அவை புறப்பட்ட இடத்திற்கே திரும்பச் செல்பவை. சுழல்வட்டப் பாதைகள். சேரன் செங்குட்டு வனும் மாடலமறையோனும் இமயத்திற்குச் சென்றுவிட்டுப் பிறகு தத்தம் இடங்களுக்கே திரும்பிவிடுபவர்கள்.

கண்ணகியும் மலையை நோக்கிச் செல்கிறாள், சேரனும் இமய மலையை நோக்கிச் செல்கிறான். கண்ணகியின் நோக்கம் கணவ னோடு மதுரை அடைதல், இடையில் வையையாறு குறுக்கி டுகிறது. வையையாற்றைக் கடந்து பாண்டியனைப் பழிதீர்த்து மேற்கு மலைக்குக் கணவனைக் காணச் செல்கிறாள் கண்ணகி.

சேரனின் நோக்கம் இமயத்திலிருந்து கல் கொணர்வது. இடை யில் கங்கை குறுக்கிடுகிறது. அதைக் கடந்து கனகவிசயரை வென்று கல்கொணர்ந்து கோயிலமைக்கப் போகிறான் செங்குட்டு வன். இவன் இலக்கு-கோயில் அமைப்பது. கண்ணகியைத் தெய்வமாகக் காணல் என்பதாக அமைகிறது.

கணவன் மானத்தைக் காக்கப் போராடும் கண்ணகிபோல், கனகவிசயர் இழிவாகப் பேசிவிட்டதால் தமிழர் மானத்தைக் காக்கச் சேரன் போகிறான். மானத்தைக்காத்தல் என்பது தமிழர்க்கு உகந்த செயலாகக் காட்டப்படுகிறது. மீட்பு வாதம், பழம்பெருமை பேசுதல் போன்றவற்றிற்கும் இந்த நோக்கு அடிப்படையாகிறது. பழந்தமிழ்ப் பெருமை பேசுவதற்கு அடிப்படையாக அமைவன கற்பும் வீரமும். பாலைநிலச் சாலினி கண்ணகி கற்பின் தெய்வ மாகப் போவதை முன்-உரைக்கிறாள் என்றால், செங்குட்டுவன் தமிழ் வீரத்தைக் காக்கவும் கண்ணகிக்குக் கோயில் சமைக்கவும் வடநாட்டுக்கு எழுவதை எழுச்சிப்-பாலை என்கிறார் இளங்கோ வடிகள்.

இனி வேறுசில முக்கியமான சினையெச்சங்கள் பற்றிச் சிறிது காணலாகும். மங்கல வாழ்த்துப் பாடலாக ஞாயிறு, திங் கள், மழை ஆகியவற்றைப் போற்றுவது சினையெச்ச அமைப்பு. கதாபாத்திர வருணனையிலிருந்து மனிதர்களைப் புரிந்துகொள்ளச் செய்வதும் சினையெச்ச அமைப்புதான்.
கோவலன் செவ்வேளுக்கும் கண்ணகி அருந்ததிக்கும் ஒப்பிடப் படுகின்றனர். செவ்வேள் என்று கோவலனைக் குறித்த நோக்கம் கண்ணகி-மாதவி இருமாதரை ஏற்பதால் தெளிவாகிறது. கோவல னைச் செவ்வேளுக்கு ஒப்பிட்டால் வடமொழி மரபுப்படி என்றால் தேவசேனைக்கும் தமிழ் மரபுப்படி என்றால் வள்ளிக்கும் கண்ணகி யை ஒப்பிடலாம். ஆனால் அருந்ததி என்ற பெயர்க்குறியீடு பெரிய முரண்பாட்டை உருவாக்குகிறது.

சப்தரிஷிமண்டலம் என்னும் ஏழுநட்சத்திர மண்டலத்திலுள்ள ஏழு நட்சத்திரங்களும் ஏழு முனிவர்களாம். அவர்களில் வசிட்டரு டைய மனைவி அருந்ததி மட்டும் செவ்வேளுக்குத் தாய்ப்பால் புகட்டச் செல்லவில்லை. பிற அறுவரும் அறுமுகச் செவ்வேளுக் குப் பாலருத்தி அவன் தாய்மார் ஆகிவிட்டனர். அருந்ததி ஒருத்திதான் அவ்வாறு கறைபடாதவள், தூய கற்புடையவள். இதெல்லாம் தெரிந்துதான் அருந்ததியைக் கண்ணகிக்கு உருவக மாக்குகிறார் இளங்கோவடிகள். ஆனால், பாவம் இந்தச் சேர்க் கைதான் (செவ்வேள்-அருந்ததி, கோவலன்-கண்ணகி) பொருந்தா மல் போகிறது.

குறிப்புமுரண் (ஐரனி) என்பது சினையெச்சத்தின் வெளிப்பாடு களில் ஒன்று. (அது போல அங்கதம் (சடையர்) என்பது உருவகத் தின் வெளிப்பாடுகளில் ஒன்று என்பார்கள்.) நாடக முரணாகக் “கவவுக்கை நெகிழாமல் தீது அறுக” என்ற குறிப்பை வைத்ததைப் பலரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
கண்ணகியின் கதை விரிவாக ஐந்து நிலங்களுக்கான பாடல்க ளையும் தருகிறது என்றால் வஞ்சியிலேயே சேரமாதேவி ஐந்து நிலப்பாடல்களையும் கேட்கிறாள் என்ற குறிப்பு வருகிறது. இது வும் சேரன் செங்குட்டுவனின் கதை கண்ணகி கதையின் உருவகச் சேர்க்கை என்பதைக் காட்டுகிறது.
கண்ணகி கதை சினையெச்சமாக அமைவதை நன்கு உணர்ந் தவன் மாடல மறையோன். அவன் சேரன்

செங்குட்டுவனிடம் கூறும் “மாதவி மடந்தை கானற்பாணி, கனகவிசயர்தம் முடித் தலை நெரித்தது” என்ற சொற்கள் இதனைத் தெளிவுபடுத்து கின்றன. அவனுடைய காரணகாரிய அறிவாற்றலையும் ஒரு நிகழ்வின் அடிப்படைத் திருப்பத்தை உணர்ந்துகொண்ட முறை யையும் இவை காட்டுகின்றன. பெண்டிர் கற்புதான் அரசர் முறை செய்வதற்கு அடிப்படையாக அமைகிறது என்று மதுரைக் காண்டத்தில் கூறும் இளங்கோவடிகள், “அருந்திறலரசர் முறை செயின் அல்லது பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது” எனப் ‘பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை’ என்று வஞ்சிக்காண்டத்தில் சொல்வது முரணாக இருக்கிறது.

மாலதியின் வரலாறு இருமுறை இடம் பெறுகிறது. வலியுறுத் தலுக்கென என்று நோக்கினால், எதற்கு வலியுறுத்தல்? சேரநாட் டின் சின்னமான சாஸ்தா அல்லது சாத்தனைப் (இன்றைய வழக்கில் ஐயனார்) போற்றி மனத்தில் பதியவைக்கவே எனத் தோன்றுகிறது. ஒரு வேறுபாடு, இன்றைய சாஸ்தா பிரம்மசாரி. அன்றைய சாஸ்தாவோ மானிட உருவம் கொண்டு தேவந்தி என்னும் பார்ப்பனப் பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறான்.

இதுவரை நோக்கியவற்றால் சிலப்பதிகாரத்தில் உருவகம் சினையெச்சம் எவ்விதம் செயல்பட்டு அதன் கருத்தியலை உருவாக்குகின்றன, எவ்விதக் காப்பியமாகக் கட்டமைக்கின்றன என்பது தெளிவாகிறது.


டால்ஸ்டாயும் தாஸ்தாயேவ்ஸ்கியும்

டால்ஸ்டாயும் தாஸ்தாயேவ்ஸ்கியும்

(ஜார்ஜ் ஸ்டைனர் எழுதிய விமரிசனக் கட்டுரை ஒன்றின் கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது. எழுதப்பட்ட ஆண்டு 1996. பின்னர் இது ‘டால்ஸ்டாயா, தாஸ்தாயேவ்ஸ்கியா?’ என்னும் தலைப்பில் ‘நிகழ்’ இதழ் ஒன்றில் வெளிவந்தது.)

ரஷ்யாவின் மிகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள் டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி இருவரும் என்பதில் எவருக்கும் சந்தேகமி ருக்க இயலாது. ‘அன்னா கரினினா’, ‘போரும் சமாதானமும்’ போன்ற முக்கியமான நாவல்களைப் படைத்தவர் டால்ஸ்டாய். ‘கரமசாவ் சகோதரர்கள்’, ‘குற்றமும் தண்டனையும்’ போன்ற முக் கியமான நாவல்களைப் படைத்தவர் தாஸ்தாயேவ்ஸ்கி. இவர்கள் இருவரும் தங்கள் தங்கள் அளவில் மேதைகள் என எவரும் நிறுவவேண்டிய அவசியமேயில்லை. இருவர்க்கும் இடையிலான வேறுபாடுகள்தான் முக்கியமானவை. ஜார்ஜ் ஸ்டைனரின் திறனாய்வு, அந்த வேறுபாடுகளை நாம் எளிதில் மனம் கொள்ள உதவி செய்கிறது. குறிப்பாக இலக்கிய அணுகுமுறை, சமயநெறி போன்றவற்றில் காணப்படும் வேறுபாடுகளை நன்கு அறியமுடி கிறது. இருவரிலும் இலக்கியச் சிறப்பில் மேலானவர் தாஸ்தாயேவ்ஸ்கியே என்று ஐயமின்றி நிறுவுகிறார் ஸ்டைனர்.

1
செவ்வியக்கால, மறுமலர்ச்சிக்கால அவல நாடகங்களுக்கு இணையான முறையில் அவல வடிவங்களைப் படைக்கவேண் டும் என்ற ஆவலில் படைப்பாளர்கள் ஈடுபட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் கனவு இசையில் மட்டுமே நிறைவேறியிருக்கிறது. இப்செனும் செகாவும் தோன்றியபோது பழைய வீரயுக நோக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது. இருப்பினும் அவல நாடகத்தின் தலைசிறந்த மேதையை -தாஸ்தாயேவ்ஸ்கியை -அந்நூற்றாண்டு அளித்தது. ‘பேதை’ (The Idiot), ‘பீடிக்கப்பட்டவன்’ (The Possessed), ‘கரம சோவ் சகோதரர்கள்’ போன்ற படைப்புகளைக் கண்ட அளவிலேயே அவற்றைப் பெரும் அவல நாடகங்கள் என நம் மனம் அறிந்து கொள்கிறது. ஒரு விமரிசகர், தாஸ்தாயேவ்ஸ்கியை ‘ரஷ்யாவின் ஷேக்ஸ்பியர்’ என்றே புகழ்ந்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண் டில் கிடைத்தற்கரிய விஷயமாகவே அவல நாடகம் இருந்தது. எனினும் போதிலேர், நீட்சே போன்ற ஆசிரியர்களிடம் அவல நோக்கின் கூறுகள் உள்ளன. இரண்டே இரண்டு இலக்கிய ஆசிரி யர்களிடம்தான் வாழ்க்கை பற்றிய வெளிப்படையான, முதிர்ந்த அவல நோக்கினைக் காண்கிறோம். ஹெர்மன் மெல்வில், தாஸ் தாயேவ்ஸ்கி ஆகிய இருவர்தான் அவர்கள்.

2
ஹெகல், நாடகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது `இயக்கத்தின் முழுமை’ என்கிறார். தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களுக்கு முற் றிலும் இக்கூற்று பொருந்தும். தாஸ்தாயேவ்ஸ்கியின் எல்லா நாவல்களிலும் நாடகப்பாங்கு நிறைந்துள்ளது என்றாலும், நாடக மதிப்புகள், மரபுகள் ஆகியவை முற்றிலும் கடைப்பிடிக்கப் பட் டுள்ள தன்மையை முழுமையாகப் `பேதை’ நாவலின் தொடக்க இயல்களில் காணலாம். இந்த இயல்கள் இருபத்திநாலு மணி நேர நிகழ்ச்சிகளைக் கொண்டவை. `பீடிக்கப்பட்டவன்’ நாவலின் பெரு மளவு நிகழ்ச்சிகள் நாற்பத்தெட்டு மணிநேர எல்லையில் நிகழ்பவை. `கரமசோவ் சகோதரர்க’ளில், விசாரணை முழுவதும் ஐந்து நாட்களில் நிகழ்கிறது. இவை தாஸ்தாயேவ்ஸ்கியின் நோக் குக்கும் உள்நோக்குக்கும் மிக மையமானவை.

இலக்கியத்தில் காலம் பற்றிய பிரச்சினைகள் சிக்கலானவை. இதிகாசமும் காவியமும் நீண்ட கால உணர்வைத் தோற்றுவிக் கின்றன. நாடகம் இதற்கு மாறுபட்டது. நாடக நிகழ்ச்சிகள் இயங்கும் கால எல்லை ‘சூரியனின் ஒரு சுற்றாக’ (ஒரு நாளாக) இருக்கவேண்டும் என்று அரிஸ்டாடில் கால ஒருமைப்பாட்டுக் கட்டுப்பாடே (யூனிடி ஆஃப் டைம்) இருக்கிறது. கால ஒருமைப் பாடு பற்றிய இக்கட்டளை, நிகழ்ச்சி ஒருமைப்பாட்டை (யூனிடி ஆஃப் ஆக்ஷன்) வலியுறுத்துவதற்காக ஏற்பட்டதே ஆகும்.

தாஸ்தாயேவ்ஸ்கி, ஒரு நாடகாசிரியரின் கோணத்திலிருந்து காலத்தை உணர்ந்தவர். மிகக்குறுகிய காலவட்டத்திற்குள் எண் ணற்ற சிக்கலான நிகழ்ச்சிகளைத் திணித்தலும் அவற்றை இசைவுபடுத்தலும் அவருக்குக் கைவந்த கலைகள். இந்தச் செயல் திணிப்புகள், அவருடைய நாவல்களுக்கு ஒரு பயங்கரக் கனவுத் தோற்றத்தைத் தந்துவிடுகின்றன. ஓர் அலைபோல, மெதுவாக, உயர்ந்தும் தாழ்ந்தும் இயங்குமாறு டால்ஸ்டாய் தம் நாவலை நடத்துகிறார். தாஸ்தாயேவ்ஸ்கியோ காலத்தைக் குறுக்கி வளைக் கிறார். பகலைப் போல இரவையும் தம் கதாபாத்திரங்களின் முழு மோதல்கள், வெறுப்புகள் ஆகியவை திணிந்ததாக அமைக்கிறார். மயக்க பிம்பங்களைத் தருகின்ற பகல்களும், பீட்டர்ஸ்பர்கின் வெள்ளை இரவுகளும் தாஸ்தாயேவ்ஸ்கி தருபவை. டால்ஸ்டாய் காட்டுவனவோ ஆண்ட்ரூ இளவரசன் கிடக்கும் விஸ்தாரமான பகற்பொழுதுகளும், லெவின் அமைதியைக் காணும் நட்சத்திர இரவுகளும்.

“நாடகக் கோணத்திலிருந்து பார்க்கும்போது, மோதல் இயக்கத் திற்கு உதவாத எந்த ஒரு நாடகக் கதாபாத்திரமும் அல்லது கதா பாத்திரப் பண்புக்கூறும் தேவையற்றவை” என்கிறார் ஜார்ஜ் லூகாச். தாஸ்தாயேவ்ஸ்கியின் எழுத்துத் திறனை ஆள்வது இந்தக் கொள்கைதான்.

3
அமைப்பு ரீதியாக, `பேதை’தான் தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களில் மிக எளிமையானது. மிஷ்கினின் அழிவு பற்றி முன் னுரைத்தல் தொடங்கி, உண்மையான கொலைவரை ஒரு வரைபடத்திட்ட எளிமையோடு கதை நேராகச் செல்கிறது. பழைய கால முதலாக வரும் துன்பியல் நாயகனின் புதிர்த் தன்மையை நேரடியாக முன்வைக்கிறது. இளவரசன், கள்ளமற்றவனும்தான், அதேசமயம் குற்றமுள்ளவனும்தான்….. இளவரசன் மிஷ்கினின் குற்றம், அவனிடம் இயல்பான அன்புக்கும் அதிகமான அளவில் கருணை இருப்பதுதான். ஏனெனில் அன்பிலும் குருட்டுத்தனம் உண்டு. இளவரசிகள் அக்லேயா, நாஸ்டாசியா இருவரையும் காதலிக்கிறான். எனினும் அவனது அன்புப்பிடிக்குள் இருவருமே வரவில்லை. மூவருக்கு இடையிலான முக்கோணக்காதல் தாஸ் தாயேவ்ஸ்கியை வசீகரித்த ஒரு கதைக்கரு. துன்பியல் போக் குக்கு மிகவும் ஏற்றது. தாஸ்தாயேவ்ஸ்கி இரண்டுபேரை, இருவ ரில் ஒருவரையும் விலக்காமல் – காதலிக்க முடியும் என்று நம்பி னார். இதில் பிறழ்வு ஏதுமில்லை. மாறாக, அன்பு செலுத்தும் ஆற்றலை இது மிகுவிக்கிறது என்பது அவர் கருத்து.

நாவலின் பல இடங்களில் மிஷ்கின், பாலியல் உறவுக்குத் தகுதியற்றவன் என்று சொல்ல முற்படுகிறார். `பேதை’ நாவலின் முடிவை எப்படி அமைப்பது என்பது பற்றி தாஸ்தாயேவ்ஸ் கியினால் பல நாட்கள் நிச்சயிக்க இயலவில்லை. ஒரு பிரதியில் நாஸ்டாசியா, மிஷ்கினை மணக்கிறாள். மற்றொன்றில், திருமண நாளுக்கு முன் இரவு அவள் தப்பிச் சென்று வேசியர் விடுதி ஒன்றிற்கு ஓடிவிடுகிறாள். இன்னொரு பிரதியில் அவள் ரோகா ஜினை மணந்து கொள்கிறாள். இன்னொரு பிரதியில், அவள் அக்லேயாவை மிஷ்கினின் வைப்பாட்டி ஆக்கி விடும் சாத்தியம் உண்டா என்று ஆராய்ந்து கொண்டிருந்தார். இந்தமாதிரித் தடு மாற்ற நிலை, தாஸ்தாயேவ்ஸ்கியின் கற்பனையின் பரப்பைக் காட்டுகிறது. டால்ஸ்டாயின் படைப்புநிலை, அவரது கதாபாத் திரங்கள் மீது இடைவிடாத சர்வஞானக் கட்டுப்பாட்டினை உடையது. இதற்கு மாறாக, தாஸ்தாயேவ்ஸ்கி உண்மையான நாடகாசிரியர்களைப் போலவே கதாபாத்திரங்களின் தன்னிச்சை யான, எதிர்பாராத செயல் இயக்கத்தினைத் தமக்குள்ளாகவே மனக் காதினால் கேட்டு முடிவுசெய்தார்.

4
`குற்றமும் தண்டனையும்’ `பேதை’ `பீடிக்கப்பட்டவன்’ `பண்படா இளைஞன்’ `கரமசோவ் சகோதரர்கள்’ என்பவையும் பிற முக்கியக் கதைகளும் காதிக் (Gothic) மரபினைச் சேர்ந்தவை. காதிக் மரபி லிருந்தே தாஸ்தாயேவ்ஸ்கியின் சூழலமைப்பு, சிற்றறைகளில் நிகழும் கொலைகள், தெருக்களின் இரவுக்காட்சிகள், இவையடங் கிய தாஸ்தாயேவ்ஸ்கியினுடைய உலகம், அதன் கைவிடப்பட்ட எளிய நிலை, வலிந்து பிறர் பொருள் கவரும் காமுகத் தன்மை, அதன் மறைவான குற்றங்கள், நகரின் பேரிரவில் நிகழும் ஆன்மாவினை அழிக்கின்ற செயல்கள் ஆகியவை எழுகின்றன.

காதிக் இயல்போடு தொடர்புடையதுதான் உணர்ச்சிமயச் செய லமைப்பு (மெலோடிராமா). `குழந்தைப் பருவம்’, `சிறுவயதுப் பருவம்’ `இளமைப்பருவம்’ ஆகியவற்றில் டால்ஸ்டாய்க்கு யூஜின் சூவின் பாதிப்பு உண்டு. தாஸ்தாயேவ்ஸ்கியும் `பாரிஸ் நகரப் புதிர்கள்’ `அலைந்து திரிந்த யூதன்’ போன்ற படைப்புகளை அறிந்திருந்தார். அவர் காலத்திய முக்கிய ரஷ்யப் படைப்பாளிகள் எவரையும் விட அவர் ஒருவரே ஐரோப்பிய இலக்கியத்திற்கு வாரிசாகவும் திகழ்ந்தார். நரகத் தன்மை வாய்ந்த நகரப் படைப்புக்கு அடித்தளமாக விளங்கியவை இவரது படைப்புகளே.
தாஸ்தாயேவ்ஸ்கி காதிக் மரபுக்கும் மெலோடிராமா மரபுக்கும் கடன்பட்டவர் என்பதை மனத்திற்கொண்டு அவரது தொடர்ந்த கதைக்கருப் பொருளான `குழந்தைகள் மீது வன்முறை செலுத்து தல்’ என்பதைக் காணவேண்டும். `குற்றமும் தண்டனையும்’ நாவ லில் ஸ்வித்ரிகேலோல், இளஞ்சிறுமியர்க்குத் தான் இழைத்த கொடுமைகளை ஒப்புக் கொள்கிறான். தாஸ்தாயேவ்ஸ்கி, காதிக் மரபிலிருந்து சற்றும் வழுவாமல் இரு கதைகளைப் படைத்தார். `போபோக்’ `இகழத்தக்க மனிதனின் கனவு’ ஆகியவை அவை. தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் `இகழத்தக்க மனிதன்’ தான் சிறு பெண் ஒருத்திக்கு இழைத்த கொடுமையை நினைவு கூர்கிறான். இந்தக் கதைக்கரு, அவரது கடைசி நாவல் முழுமை யும் விரவிக் கிடக்கிறது.

குழந்தைகளைக் கொடுமைப்படுத்தல் – குறிப்பாக அவர்களைப் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல்தான் முழுத்தீமையின் அடையாளம், அதற்கு மாற்றே கிடையாது என்று தாஸ்தா யேவ்ஸ்கி கருதினார். இறைமைவாதம் பேசும் டால்ஸ்டாய், கடவுள் பழிவாங்குவார், தண்டிப்பார் என்கிறார். தாஸ்தாயேவ்ஸ் கியோ, இவ்வாறு குழந்தைகள் சித்திரவதைப்பட்டபின் எந்த வித மான பழிவாங்கல், அல்லது தண்டனையிலும் அர்த்தம் உண்டா என்று கேட்கிறார்.

5
ரஷ்ய நாவலின் மிக முக்கியமான தன்மை யதார்த்தப்போக்கு, ரஷ்ய வாழ்க்கையின் சமூக, தத்துவ, தர்மசங்கட நிலைமைக ளைச் சரியான முறையில் சித்திரித்துக்காட்டுதல் என்றார் பெலின்ஸ்கி. இந்த ஆணையை தாஸ்தாயேவ்ஸ்கி ஏற்றுக்கொண் டார். ஆனால் அவரது யதார்த்தப்படைப்பு, டால்ஸ்டாய், டர்கனீவ், கோங்கரோவ் போன்றோரது யதார்த்த முறையினின்றும் வேறு பட்டது. டர்கனீவ், கோங்கரோவ் படைத்த யதார்த்தம் மேலோட் டமானது. டால்ஸ்டாயினது யதார்த்தமோ, காலஞ்சென்றது, சம காலத்தின் வேதனைகளுக்கு அப்பாற்பட்டது. ‘தாஸ்தாயேவ்ஸ் கிய-யதார்த்தம்’ (அவரே, `பேதை’ நாவலுக்கான குறிப்புகளில் பயன்படுத்தியது இச்சொல்) துன்பியல்சார்ந்த ரொமாண்டிக் தன் மை கொண்டது. ரஷ்யச் சிக்கல் நிலைமைகள் பிறக்கும்போதே அவற்றை நாடக கணங்களுக்குள்-தீவிர வெளிப்பாட்டுக் கணங்க ளுக்குள் பொருத்தி, ஆழ்ந்து கவனிப்பதன்மூலம், முழுமையான உண்மையான சித்திரத்தை அளிப்பது. இவ்வாறான ஆழ்ந்த கவனித்தலுக்கு தாஸ்தாயேவ்ஸ்கி கையாண்ட உத்திகள், கடைத் தெருக்களில் தொங்கும் மலிவான கிளர்ச்சி நாவல்களிலிருந்து பெருமளவு எடுக்கப்பட்டவை.

தாஸ்தாயேவ்ஸ்கியின் துன்பியல் சார்ந்த ரொமாண்டிக் யதார்த்தம், அதன் காதிக் உட்கூறுகள் ஆகியவை, நாவல் பற்றிய டால்ஸ்டாயின் கருத்திலிருந்து அவருடையதை முழுவதும் வேறுபடுத்தின. டால்ஸ்டாயின் நாவல்கள் பொதுவாக இயல்பான மனித உருக்களைக் கொண்டவை. ஆரோக்கியமான பிம்பங்கள் நிரம்பியவை. திட்டமான ஒளி நிரம்பியவை. நாட்டுப்புற வாழ்க் கை சார்ந்தவை. டால்ஸ்டாயின் முல்லைத்திணை வாழ்க்கைப் பார்வை சமகால உணர்ச்சிமயச் செயலமைப்பை (மெலோடிராமா வை)ப் புறக்கணித்தது. அவருடையது இதிகாசப் பாணி எழுத்து. இதிகாசப்பாணி முல்லைத்திணை வாழ்க்கைப் பார்வையோடு தொடர்புடையது.

டால்ஸ்டாயின் கலைக்கும் தாஸ்தாயேவ்ஸ்கியின் கலைக்கு மான வேறுபாடுகள், உத்திவேற்றுமைகள், உலகக் கண்ணோட்ட வேற்றுமைகள் யாவுமே நகர்ப்புறப் பார்வை – நாட்டுப்புறப் பார் வை என்னும் என்றைக்குமுள்ள இருமை முரண்களுக்குள் அடங் குபவை என்று விமரிசகர்கள் கருதுகிறார்கள். தாஸ்தாயேவ்ஸ்கி யின் பாத்திரப் படைப்புகளுள் முக்கியமானது `கீழுலக மனிதன்’. தாஸ்தாயேவ்ஸ்கி, மனித ஆன்மாவின் பன்முக பிம்பம் பற்றிய கருத்துக்கு வந்தவர் – ஆழ்மன மொழியைக் கையாள்வதில் கை தேர்ந்தவர். மனிதனின் இரண்டு ஆளுமைகளில் ஒன்று, பகுத்தறி வுள்ளது – மனிதனின் சமூகப் பாத்திரம். மற்றொன்று, அவனுக்கு ஆவியுலகு, அடிமனம் போன்றவற்றைக் கொணர்வது – தர்க்க அறிவுக்குப் புறம்பானது, குற்றங்கள் புரிவது. மிஷ்கின், ரோகோ ஜின் போன்ற பாத்திரங்கள், இரண்டு தனித்த வேறான ஆளுமை கள் உடனுறையும் நிலையைக் காட்டுகின்றன. கோலியாத்கின் பாத்திரப்படைப்பு, கரமசோவ் பேயுடன் நடத்தும் உரையாடல் போன்றவற்றில் தாஸ்தாயேவ்ஸ்கி பிளவுபட்ட ஆளுமை (ஸ்கி ஸோஃப்ரீனியா) பற்றிய அறிவில் தலைசிறந்தவராக இருக்கிறார். எனினும் `கீழ் உலகிலிருந்து கடிதங்கள்’ என்ற படைப்பில்தான், அவர் மனித உணர்வு நிலையின் பலகுரல்கள் கொண்ட குழப்ப நிலையை ஒரே குரலில் நாடகப்படுத்தி வடிக்கும் பிரச்சினையில் வெற்றி பெற்றார்.

`கீழுலகிலிருந்து கடிதங்கள்’ இருபகுதிகளால் ஆனது. முதல் பகுதி சுதந்திர இச்சைக்கும் இயற்கையின் ஒழுங்குக்கும் இடை யிலான முரண்பாட்டைப் பற்றிய தனிமொழி. பயன் நோக்குவாத, அனுபவவாத மகிழ்நோக்கை எதிர்ப்பதே இதன் நோக்கம். கதைசொல்பவன் கொண்டுள்ள கீழுலகம், குறித்த இலக்கிய, வரலாற்று உள்ளர்த்தங்களை அடக்கியது. ஆன்மிக வெறுமை வாதத்தை எதிர்க்கும் தாஸ்தாயேவ்ஸ்கியின் கருத்துக்களைத் தொகுத்துக் கொண்டுள்ளது இந்நூல். இதில் ஆன்மாவும், தர்க்கத் துக்கு எதிரான அறிவும் முனைப் போடு ஒரு தீவிர எல்லையில் எதிர்க்கின்றன. தாந்தே நரகத்தில் ஒட்டுக்கேட்டது போன்ற அதிர்ச்சி தரக்கூடிய உண்மைகளை வாசகன் ஒட்டுக்கேட்கிறான்.
இதற்குமுன் இப்படிப்பட்ட பாத்திரப்படைப்பு இலக்கியத்தில் இருந்ததில்லை. “மேன்மக்களே, நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் – நீங்கள் அதைச் செவிமடுத்துக் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி – நான் ஒரு பூச்சியாக மாற அடிக்கடி விரும்பியிருக்கிறேன். ஆனால் என் ஆசையை அடைய முடிய வில்லை” என்கிறான் கீழுலக மனிதன். காஃப்காவின் `உருமாற் றம்’ கதைக்கான குறிப்பைக் கொண்டிருக்கும் இக்கருத்து, படைப்பு முழுதும் திரும்பத் திரும்ப வருகிறது. மற்ற ஆட்கள், கதைசொல் பவனை ஒரு ஈ எனக் கருதுகிறார்கள். அவன் தன்னைத்தானே `பூமியிலுள்ள மிகக் கேவலமான ஒரு புழு’ என வருணித்துக் கொள்கிறான். ‘பூச்சியாக ஆகுதல்’ என்னும் குறியீடு, பால்சாக் கிடமிருந்து தாஸ்தாயேவ்ஸ்கி பெற்றது என்கிறார்கள். இதில் நாம் காணும் புதுமை, இப்படிமத்தைத் தொடர்ந்து கையாண்டு மனிதனைக் கீழிறக்கும் – மனிதத் தன்மையற்றவனாக மாற்றும், அல்மனிதனாக்கும் உத்திதான். கீழுலக மனிதன். மனிதநிலையி லிருந்து தப்பிவந்துவிட்டவன். நவீன இலக்கியம் இன்றைய நமது உலகப்பார்வைக்குத் தந்திருக்கும் ஒரு முக்கியப் பங்களிப்பு, இந்த மனிதத்தன்மை இழப்பு.
`கீழுலகினின்றும் கடிதங்கள்’ நூலுக்குப் பின், நாம் மனிதன்மீது பூச்சிகள் ஆதிக்கம் கொள்ளத் தொடங்கிவிட்டன என்பதை அறி கிறோம். பழைய புராணங்கள், அரைத் தெய்வங்களைப் பாத்திரங் களாகக்கொண்டன. தாஸ்தாயேவ்ஸ்கிக்குப் பின்னரான தொன்ம வியல், அரைமனிதர்களாக இருக்கும் கரப்பான் பூச்சிகளைக் கொண்டுள்ளது. ரொமாண்டிக் கலையின் வாயிலாக வேகம் பெற்று வந்த தூய அறிவுக் கொள்கை மீது தெளிவான விமரி சனத்தை வைத்தது `கீழுலகினின்றும் கடிதங்கள்’ நூலின் பெரும் முக்கியத்துவம். ஹெகலிய இலட்சிய வாதத்தைத் தகர்த்தெறி கிறது இது.
இருத்தலியவாதிகள் தோற்றம் கொள்ளுமுன்னரே கீழுலகமனி தன் அபத்தநிலையின் மேன்மையைப் பிரகடனம் செய்கிறான். இதனால்தான் சுதந்திர அனுபவவாதிகளை எதிர்க்கும் எழுச்சிக் காரர்களான பாஸ்கல், பிளேக், கீர்க்கேகார்ட், நீட்சே வரிசையில் தாஸ்தாயேவ்ஸ்கியும் இடம்பெறுகிறார். நீட்சேவின் ஜாரதுஷ் டிரன், கீர்க்கேகார்டின் சமயவியல் தொடர்உருவகங்கள் ஆகிய வற்றை விட மேம்பட்ட இலக்கியச் சுவையுடன் இருப்பது இதன் சிறப்பு. தாஸ்தாயேவ்ஸ்கி இப்படைப்பின் மூலம் கவித்துவ தத்துவ ஆற்றல்களுக்குள் மிக அரிதாகிய ஒரு படைப்புச் சம நிலையினை அடைந்துவிட்டார்.
கொடிய வறுமையிலும் டால்ஸ்டாயினுடைய மனிதன், மனித னாகவே இருக்கிறான். கொடுமைக்குள்ளாகும்போது அவனது மானிடப் பண்பு ஆழமடைகிறது. டால்ஸ்டாய் மனிதனை `மாறாத பகல்ஒளியில்’ பார்த்தவர். மனிதன் விலங்காக வீழ்ச்சியடையும் மயக்க நிலை அவருக்கு அந்நியமானது. மிகக் கொடிய துயர் நோக்கிலும் டால்ஸ்டாயின் பாத்திரங்களுக்கு ஒரு மைய நம்பிக் கை உண்டு. மானிடர்கள் வெறுமனே துன்பங்களைத் தாங்கிக் கொள்வது மட்டுமல்ல, அவற்றைக் கடந்து உயர்வார்கள் என்பது டால்ஸ்டாயின் நம்பிக்கை. டால்ஸ்டாயின் தத்துவம் பகுத்தறிவு அடிப்படையிலானது. தாஸ்தாயேவ்ஸ்கியின் அபத்தவழி பாடு, சாதாரண வாழ்வியக்கங்களுக்கு உட்பட்டனவற்றைத் தாக்குவது போன்றவை டால்ஸ்டாய்க்குப் பைத்தியக்காரத் தனமாகத் தோன் றியிருக்கும்.
“தாஸ்தாயேவ்ஸ்கி, கன்பூசியஸ் சிந்தனைகளையும் புத்தர் கொள்கைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அது அவரைச் சாந்தப்படுத்தியிருக்கும்” என்று டால்ஸ்டாய் கார்க் கிக்குக் கூறினாராம். அப்போது கீழுலக மனிதன் தனது வளையி லிருந்து ஏளனமாகச் சிரித்திருப்பான். நம் காலம் அவனது ஏளனத்திற்கு உருக்கொடுத்திருக்கிறது. சாவுக்கிடங்குகளும், சித் திரவதைக்கூடாரங்களும் நிறைந்த உலகு. தனிப்பட்டும், கூட்ட மாகவும் மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் மனப்பான்மை – விலங்குத் தன்மை இவற்றில் தாஸ்தாயேவ்ஸ் கிக்கு இருந்த உள்ளொளியைக் காட்டுகிறது.
டால்ஸ்டாய் – தாஸ்தாயேவ்ஸ்கி இருவரது மெய்யியல்களும் எதிரெதிர் நிலையில் வேறுபடுகின்றன. இந்த உலகு, இதில் அவத ரித்துள்ள மனிதன் பற்றிய டால்ஸ்டாய் – தாஸ்தாயேவ்ஸ்கி மாறுபாடு, அவர்களது மாறுபட்ட புனைவு முறைகளின் மூலம் வெளிப்படுகிறது. இரு வேறுபட்ட கலைவடிவங்களை உருவாக்கு கிறது. உணர்ச்சியனுபவ எல்லைப் பரப்பில், கலைப்பொருள் மீதான ஆதிக்கத்தின் இடமகன்ற தன்மையில், வளத்தில், மனிதா பிமானத்தில், டால்ஸ்டாயின் மேதைமை சிறந்து விளங்குகிறது. ஆனால் அவரது தொன்ம உலகம் குறைபாடுடையது. இக்குறை பாடு அவரது படைப்பிலும் எதிரொலிக்கிறது. குறித்த சில பகுதி களில் நாவலின் கட்டுமானம் மங்கி, எடுத்துரைக்கும் முறை தடுமாறுகிறது. இந்த இடங்களில் எல்லாம், டால்ஸ்டாயின் தத்துவம் வெறுக்கும் எதிர்முனைகள், எதிர் கொள்ளாத பிரச்சினை கள், இவற்றைக் கதைப்போக்கு சந்திப்பதையும் நாம் காணலாம். இம்மாதிரி இடங்களில்தான் தாஸ்தாயேவ்ஸ்கி சிறப்படைகிறார்.

6
டால்ஸ்டாயின் நாவல்களில் வரும் பாத்திரங்கள் அவரது சிந்தனையின் அவதாரங்கள் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி முன் வைக்கப்படுகிறது. இப்பாத்திரங்கள் டால்ஸ்டாய் ஆட்டிவைக்கும் பொம்மைகள். டால்ஸ்டாய் தம் இதயத்தில் காணாத எதையும் நாம் நாவலில் காண்பதில்லை. இப்படிப்பட்ட சர்வசக்தி வல்லமை அவரது செய்நேர்த்தியின் அடிப்படைக் கோட்பாடுகளையே அழித்துவிடுகிறது. கடவுளைப் போலவே, டால்ஸ்டாயும் தமது சொந்த உயிர்ப்பையே தம் படைப்புகளுக்கு அளித்தார். ஆனால் இதற்குப் படைப்பாழத்தில் அவர் கொடுத்த விலை மிக அதிகம். ஆயினும் டால்ஸ்டாய் தமது பாத்திரங்களுக்கு வலுவான சூழல் களையும் வகுத்துக் கொடுத்து, நமக்கு அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை மிகப் பொறுமையான பாசத்தோடு விளக்கிச் சொல்லும் வகையில் சிறந்துநிற்கிறார்.

டால்ஸ்டாயின் முழுமை பொற்ற பாத்திரங்களும் எட்ட முடியாத விளைவுகளும், காண முடியாத உள்ளொளிகளும் உண்டு. இவை நாடகப்பாங்கின் விளைவாக வருபவை. ஒரு நாடகப் பாத்திரத்தின் முழுமையில் எப்போதுமே ஒரு எதிர்பாராத நிகழ்ச்சிக்கான சாத்தியமும் ஒழுங்கின்மைக்கான கொடையும் உள்ளன. செறிவு, நாடகத்தின் உயர் அழுத்தம், இவை ஒரு பகுதி அறிந்தும் ஒரு பகுதி அறியாமையிலும் ஆசிரியன் இருப்பதனால் உருவாகுபவை. தாஸ்தாயேவ்ஸ்கி தமது பாத்திரங்களை ஒரு இரசிகன் காணுவது போன்ற நிலையிலேயே (அடுத்து என்ன நிகழ்வதற்கு இருக்கிறது என்று தெரியாமல்) பார்க்கிறார். நிகழ்ச்சிகள் தாமாக விரியும் முறையில் நம்மைப் போலவே அவரும் குழம்புகிறார். அதிர்ச்சி அடைகிறார். டால்ஸ்டாய்க்கு இந்தத் தொலைவு இருப்பதில்லை.

டால்ஸ்டாயின் படைப்புத் தன்மையில் மிகப் பெரிய குறை யாகச் சொல்லப்படுவது அவருடைய நீதிபோதனை. அவருடைய எழுத்துகள் யாவும் ஒரு திட்டவட்டமான நோக்கம் உடையவை. இதை மீறியும் `அன்னா கரீனினா’ சிறந்த ஓர் அழகியல் படைப் பாக அமைந்துள்ளது. அதற்குக் காரணம், அதன் கவித்துவமான வடிவம், ஒழுக்க போதனையினை மறுப்பதுதான். இக்கவித்து வமான வடிவத்திற்கும் நீதிபோதனைக்கும் இடையே இடையறாத சமநிலையும் ஒழுங்கிசைவான இழுவிசையும் அமைகின்றன. டால்ஸ்டாயின் பாத்திரங்களிலேயே அன்னா மட்டும்தான் ஆசிரி யரின் கட்டுப்பாட்டிற்கும் முன்னறிவிற்கும் உட்படாமல் வெவ் வேறு திசைகளில் வளர்ந்து செல்கிறாள். இக்கதைப்பின்னல் அமைப்பினால் `அன்னா கரீனினா’வின் சமநிலை தப்பிக்கிறது.
`அன்னா கரீனினா’விற்குப் பிறகு டால்ஸ்டாயினுள்ளிருக்கும் அறவியல், நீதிபோதனையியல் தன்மை அவரது படைப்புகளில் முதன்மை பெறுகிறது. `இவான் இலியிச்சின் மரணம்’ `கிராய்ட்சர் சோனாடா’ என்ற அவரது இறுதிக்காலப் படைப்புகள் ஐயமின்றித் தலைசிறந்தவை. இவற்றில் அதீத அழுத்தம், கற்பனை மேலோங் கியிருப்பதனால் அல்ல. கற்பனைக் காட்சியின் குழப்பத்தினா லேயே ஏற்படுகிறது. பாஷ்-இன் ஓவியங்களில் வரும் குள்ள ஓவியங்களைப் போல இவற்றில் அதீத அழுத்தத்தினாலாகிய ஆற்றல்கள் நிரம்பி யிருக்கின்றன. `இவான் இலியீச்சின் மரணம்’ தாஸ்தாயேவ்ஸ்கியின் `கீழுலகினின்றும் கடிதங்கள்’ படைப்புக்கு எதிர்ப்பாதியாக இயங்குவது.

டால்ஸ்டாயின் மேதைமை, ஒரு தீர்க்கதரிசி – சமயசீர்திருத்த வாதியினுடையது. இறையியலாளருடையதன்று. `கிறித்துவ போதனை’ என்னும் தமது நூலில் டால்டாய் எழுதுகின்றார்: “ஒவ்வொரு மனிதனுக்குள்ளாகவும் கொதிகலனில் அடைபட்டிருக்கும் நீராவி போல அன்பு நிறைந்திருக்கிறது. இந்த நீராவி விரிவடைகிறது. பிஸ்டன்களை இயக்கி வேலை செய்கிறது”. விசித்திரமான இந்த உவமை, ஒரு மீட்பியக்கவாதியின் போதனை மொழியைப் போல எளிமையாக இருக்கிறது. தாஸ் தாயேவ்ஸ்கியின் மெய்யியலும் இறையியலும் கடுமை மிகுந் தவை. நவீனத் தத்துவ நோக்கில், குறிப்பாக இருத்தலிய நோக்கில், தாஸ்தாயேவ்ஸ்கியின் படைப்புகள் மிக முக்கியமா னவை. பெர்தியேவ் சொல்லுவதுபோல, “கரமசோவ் சகோதரர் களின் ஆசிரியர், பெரும் சிந்தனையாளர். ஒரு ஞானி. அதே சமயம், ஒரு “வாசகன் ஒரு மிகப் பரந்த விசித்திரமான புதிய சிந்தனைப் பிரபஞ்சத்திற்குள் முழுகிப்போகத் தயாராக இருந்தா லன்றி, தாஸ்தாயேவ்ஸ்கியைப் புரிந்துகொள்ள முடியாது”.

தாஸ்தாயேவ்ஸ்கியின் உலகம், தனிதத அமைப்பைத் தன்னுள் கொண்டுள்ளது. சுவர்க்கம்-நரகம், கிறிஸ்து-எதிர்க்கிறிஸ்து ஆகிய வற்றிற்கு ஊடாக, மனிதனின் அனுபவத் தளம், குறுகிய இடை வெளியில் நகருகின்றது. வீழ்ச்சியின் தூதர்களும் அருளின் முகவர்களும் நம் ஆன்மாவை அலைக்கழிக்கின்றனர். இவற்றின் அன்பின் அலைக்கழிப்பும் தாக்குதலும் நம்மை மிகுதியாக உட் கொள்கின்றன. தாஸ்தாயேவ்ஸ்கியின் வார்த்தைகளிலே மனித னின் மீட்பு என்பது அவனது `வடுப்படும்’ நிலையைச் சார்ந்தது. துன்பங்களோடு எதிர் நிற்றலும், மனச்சாட்சியின் சங்கடங்களும் மனிதனைக் கட்டாயமாகக் கடவுள் என்னும் தர்மசங்கட நிலை யைச் சந்தித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகின்றன.

தாஸ்தாயேவ்ஸ்கியின் உலகில், கிறிஸ்துவின் பிம்பமே ஈர்ப்பு விசையின் மையம். உண்மையை அல்லது பகுத்தறிவை விடக் கிறிஸ்துவே அவருக்கு முக்கியமானவர், எல்லையில்லா மேன் மையுடையவர் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். கடவுளின் குமாரன் உருவத்தின் மீது அவருடைய பார்வை உணர்ச்சிமய மான ஆழத்துடன் பதிந்திருந்தது. ஆகவே தாஸ்தாயேவ்ஸ்கியின் நாவல்களின் பெரும்பகுதியைப் புதிய ஏற்பாட்டிற்கு எழுதப்பட்ட உரைநூல்களாகவே வாசிக்க இயலும்.

தாஸ்தாயேவ்ஸ்கியின் இறையியல், மனிதன் பற்றிய அறி வியல் ஆகியவை முழுச் சுதந்திரம் என்னும் அடிப்படைக் கருது கோளின்மீது கட்டப்பட்டவை. மனிதன் பயப்படும் அளவிற்கு முழுச்சுதந்திரம் உடையவனாக இருக்கிறான். நல்லதையும் தீயதையும் கண்டறிவதற்கும், அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தனது சுதந்திரத்தைச் செயல்படுத்துவதற்கும் அவனால் முடியும். `பீடிக்கப்பட்டவன்’ நாவலில் முழுமை பெற்ற ஒரு சமூகத்திற்கான திட்டத்தை வெளியிடுகிறான். அது ராட்ச ஸத்தனமானது என்று தாஸ்தாயேவ்ஸ்கி காண்பது, சட்ட, தனி மனித, குடியுரிமைகளை அது அழித்துவிடும் என்பதால் அல்ல. (இவைபற்றி தாஸ்தாயேவ்ஸ்கி கவலைப்படுவதில்லை). அது, மனிதர்களைத் மனநிறைவு கொண்ட விலங்குகளாக ஆக்கிவிடு கிறது என்பதனால்தான். அவர்களது வயிறுகளை நிரப்பிவிட்டு அவர்களது ஆன்மிகத்தைத் திணறவைக்கிறது அது.

தனித்த அருள்வெளிப்பாடுகள், ஒளிக்காட்சிக்கணங்கள், மானிட ஆன்மாவுக்குள் நிகழ்கின்றன. அதனால் அது தூயதாகிறது. இந்தக் கணங்களில், ராஸ்கோல்னிகாவ் போன்ற கொடியவர்களும் பிரபஞ்சப் பேரன்பில் முழுகி நனைகிறார்கள். அருள் முழுக்கில் அல்யோஷா சந்தேகத்தின் பெருந்துன்பங்களிலிருந்து வெளிப்பட்டு எல்லா மனிதர்களையும், எல்லா உணர்தன்மையுள்ள இயற்கைப் பொருள்களையும் புகழ்ந்து தரையில் விழுந்து வணங்குகிறான். இந்த இயங்கியலிலிருந்து தாஸ்தாயேவ்ஸ்கியினுடைய தீமை பற்றிய கொள்கை எழுகிறது. தீமை இல்லாவிட்டால் மனிதனு டைய சுதந்திரத் தேர்வு செயல்பட இடமில்லை. கடவுளை அறிவதில் அவனை முன்னோக்கித் தள்ளுகின்ற அலைக்கழிப்பும் இல்லை. தாஸ்தாயேவ்ஸ்கியின் கருத்தினை நன்குணர்ந்த பெர்தி யேவ் கூறுகிறார்-“கடவுளின் இருப்பினை நிரூபிப்பதற்குச் சான்று, தீமை இருப்பதாகும். உலகில் முழுதும் நன்மையும் நேர்மையுமே நிறைந்திருந்தால் அங்கு கடவுளுக்கு அவசியம் ஏதுமில்லை. ஏனெனில் அப்போது உலகமே கடவுளாக இருக்கும். தீமை இருக்கிறது. அதனால் கடவுள் இருக்கிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் சுதந்திரம் இருக்கிறது, அதனால் கடவுள் இருக் கிறார் என்பதே”.

கடவுளைத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் அர்த்தம் இருக்குமானால், அதுபோலவே கடவுளை மறுப்பதும் சமமான யதார்த்தத்தில் நிகழவேண்டும். கிரிலோவ் காட்டுவதுபோல, யாருக்குச் சுதந்திரம் இருக்கிறதோ, ஆனால் கடவுளின் இருப்பினை ஒப்புக் கொள்ள முடியவில்லையோ, அவர்கள் சுயஅழிவுக்குள் செலுத்தப் படுகிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகம் ஒரு குழப்பமான அபத்த நிலை. பெருஞ்சேதம் விளைவிக்கும் மனிதத்தன்மையற்ற நிலை. கொடுமையான கேலிக் கூத்து. தாஸ்தாயேவ்ஸ்கிய பிரபஞ்சக் கோட்பாட்டில் தீயஆவி, சக்திகளுக்குத் தனித்ததோர் இடமிருக் கிறது.
தாஸ்தாயேவ்ஸ்கி தமது கதாபாத்திரங்களை ஒரு மாயச் சக்தி வலையால் சூழச்செய்தார். இவான் கரமசோவ் பேயுடன் உரையா டுதல் போன்ற மீயியற்கை நிகழ்ச்சிகள், தாஸ்தாயேவ்ஸ்கி யினுடைய `உடைபடக்கூடிய ஆன்மா’ கொள்கைக்கும் காதிக் உத்திகளுக்கும் உள்ள நெருங்கிய ஒருமைப்பாட்டினைக் காட்டு கின்றன. தாஸ்தாயேவ்ஸ்கி, புலனுணர்வு சார்ந்த உலகிற்கும், பிற உலகுகளுக்கும் கடுமையான எல்லைகள் எதையும் வகுக்க வில்லை. மெரேஷ்கோவ்ஸ்கி கூறுகிறார் – “டால்ஸ்டாய்க்கு வாழ்வு சாவு என்னும் என்றுமுள்ள எதிர்நிலையே இருந்தது. தாஸ்தாயேவ்ஸ்கிக்கு அவற்றின் ஒருங்கிணைவே கண்ணில் பட்டது”.

டால்ஸ்டாய், இந்த உலகின் நோக்கிலிருந்து, இவ்வுலக வாழ்க்கையிலிருந்து சாவை நோக்குகிறார். தாஸ்தாயேவ்ஸ்கி யோ ஆவியுலகின் கண்களோடு, இங்குள்ளவர்களுக்குச் சாவு என்று தோன்றுகின்ற எல்லையில் நின்றுகொண்டு வாழ்க்கை யைக் காண்கிறார்”. அனாதைகள், உடல் வலுவற்றோர், வலிப்புக் காரர்கள் போன்றோர் முக்கியமான நன்மை ஒன்றைப் பெற்றிருக் கிறார்கள். அவர்களது லோகாயத நிர்வாணத்துவமும், வலிப்பின் பிடிகளும், காமவுலகு-உடல்நலத்தன்மை ஆகியவற்றின் கோட்டை யைக் கிழித்து அவற்றினூடே புலக்காட்சியின் முழுமையைத் தருகின்றன. மிஷ்கினும் கிரிலோவும் வலிப்பு நோய் உடையவர் களே.

7
டால்ஸ்டாய்க்கும் தாஸ்தாயேவ்ஸ்கிக்கும் உள்ள முரண்பாடு கள் அவர்களது இறப்புடன் மறையவில்லை. மாறாக, தொடர்ந்து வந்த நிகழ்சசிகளால் அவை கூர்மையடைந்தும் நாடகப்படுத்தப் பட்டும் உள்ளன.

மார்க்சிய இலக்கிய விமரிசனம் ஓரளவு வளமான வகையில் டால்ஸ்டாயின் மேதைமை பற்றி ஆராய்ந்திருக்கிறது. தாஸ்தா யேவ்ஸ்கியின் படைப்புகளை அது பெரும்பாலும் கண்டனம் செய்துள்ளது அல்லது ஒதுக்கிவந்துள்ளது. மார்க்சியப் புரட்சியா ளன் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் உலகப்பார்வையினை தாஸ்தாயேவ்ஸ்கிய நாவல்கள் கொண்டுள்ளன. ஆனால் ரஷ்யா வுக்கு வெளியில் இதற்கு எதிர்மாறாக நிகழ்ந்துள்ளது. சமகாலச் சிந்தனையை டால்ஸ்டாயைவிட தாஸ்தாயேவ்ஸ்கி ஆழமாகப் பாதித்துள்ளார். நவீனக் கூருணர்வின் முக்கியத் தலைவர்களில் அவர் ஒருவர். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய நவீனப் புனைகதையின் உளவியலிலும் அபத்தத்தின் மெய்யியலிலும் துன்பியல் சார் சுதந்திரத்திலும் தாஸ்தாயேவ்ஸ்கியின் சிந்தனைக் கூறுகள் நிறைந்துள்ளன.

இவ்வாறு இறப்புக்கு அப்பாலும் இந்த இரு நாவலாசிரியர் களும் முரண் நிலையில் நிற்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால்,
டால்ஸ்டாய், இதிகாச மரபுகளின் தலைமை வாரிசு. தாஸ்தாயேவ்ஸ்கி, ஷேக்ஸ்பியருக்குப் பின்விளைந்த நாடக உணர்வுடையோருள் சிறந்தவர்.
டால்ஸடாய், தர்க்க அறிவு, மெய்ம்மை இவற்றில் திளைப்பவர். தாஸ்தாயேவ்ஸ்கி, பகுத்தறிவுவாதத்தை மறுப்ப வர், முரண்நிலையை நேசிப்பவர்.
டால்ஸ்டாய், நாட்டுப்புறச் சித்திரிப்பாளர் முல்லைத்திணை வாழ்க்கையை, மனப்பான்மையைச் சித்திரிப்பவர். தாஸ்தா யேவ்ஸ்கி நவீனப் பெருநகரங்களை மொழிப் பிராந்தியத்தில் சாதித்தவர்.
டால்ஸ்டாய், உண்மையின் தாகத்தில் தம்மையும் தம்மைச் சேர்ந்தவர்களையும் ஒருங்கே அழித்துக்கொண்டவர். தாஸ்தா யேவ்ஸ்கி, கிறித்துவுக்கு எதிராக இருப்பதைவிட, உண்மைக்கு
எதிராக நிற்பவர். முழுமையான புரிதல் இயலுமா எனச் சந்தேகம் கொண்டவர். அறிய இயலாததின் பக்கம் சார்ந்திருப்பவர்.
டால்ஸ்டாய், கோலரிட்ஜின் தொடரில் சொன்னால், “வாழ்க் கையின் நெடுவழியில் எப்போதும் தொடர்ந்து செல்பவர்”. தாஸ்தாயேவ்ஸ்கி, இயற்கைக்கு அப்பாற்பட்டதன் ஏமாற்று வழிகளுக்குள் ஆன்மாவின் உள்ளறைகளுக்குள், சதுப்புநிலங்க ளுக்குள் முன்னேறுபவர்.
டால்ஸ்டாய், புலன்களால் அறியக்கூடிய உலகினைச் சில எட்டுக்களால் கடந்து விடக்கூடிய பேருருவம், பருமையான அனுபவத்தின் மெய்ம்மை, தொட்டுணரும் தன்மை, புலன்க ளால் உணரும் முழுமை ஆகியவற்றைத் தருபவர்.
தாஸ்தாயேவ்ஸ்கி, மாயக்காட்சிகளின் விளிம்பில் நிற்பவர். ஆவியுலகு சார்ந்த மனித இயல்புக்கு அப்பாற்பட்ட குறுக்கீடுகளுக்கு இடம்தருபவர். (இவை இறுதியில் வெறும் கனவுகளின் மென்திரையாகவே முடியக்கூடும்.)
டால்ஸ்டாய், ஒலிம்பிய ஆரோக்கியம், உயிர்த்தன்மை இவற்றின் உருவம். தாஸ்தாயேவ்ஸ்கி, நோயும் பீடித்தலும் தாக்கும் சக்திகளின் மொத்த உருவம்.
என்று இவர்களுக்கிடையே வேற்றுமைகளை உணரமுடியும்.


புலம்பெயர் இலக்கியம்

pulam peyar ilakkiyam2பழங்காலத்தில் ஒரு நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்வதைப் புலம் பெயர்தல் என்று குறித்தார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் மிகுதியாகக் கிடையாது. பழந்தமிழகத்தில் நாடு என்பது மிகக்குறுகிய இடம்தான். இன்றைய பார்வையில் ஒரு முந்நூறு நானூறு கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு நாடுகள் வந்து விடும். இப்படி நாடுவிட்டு நாடு செல்பவர்களையும் அக்காலத் தமிழர் மதிக்க வில்லை. புலம்பெயர்வது என்ன-ஊரைவிட்டுச் செல்வதுகூட விரும்பப்பட வில்லை என்றே தோன்றுகிறது. பூம்புகார் நகரைப் பற்றிக் குறிப்பிடும்போது “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” அங்கு வாழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதாவது அந்த நகரத்தைவிட்டு மக்கள் இடம்பெயரவே மாட்டார்களாம்!

பழங்காலத்தில் சாதுவன் போன்ற வணிகர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்த செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்கிப் புலம்பெயர்ந்து வாழ்ந்ததற்கான குறிப்புகள் இல்லை. ஆனால் பழந்தமிழகத்தில் யவனர் சோனகர் போன்ற பிறநாட்டினர் வந்து வாழ்க்கை நடத்தி வந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட புலம்பெயர் ‘மாக்களைச்’ சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. (கவனிக்கவும்-புலம் பெயர்பவர்கள் ‘மாக்களாம்’–அதாவது மனிதத்தன்மையில் குறைந்தவர்களாம்!) புகார் நகரில் புகார் நகர மக்களோடும் புலம்பெயர் மாக்கள் “கலந்து இனிது உறைந்ததாகத்” தெரிகிறது.

ஆக, தமிழ்ச்சமுதாயம் அண்மைக்காலம்வரை புலம்பெயர்தலை அறியாத ஒரு நிம்மதியான சமுதாயம்தான். ஈழத்தமிழர்கள் அந்தநாட்டுக் குடிமக்களே ஒழிய, தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அல்ல. உண்மையில் இன்றுள்ள சிங்களவர்தான் அசோகச் சக்ரவர்த்தியின் காலத்தில் இலங்கையில் குடியேற்றப்பட்ட புலம்பெயர் மாக்கள். ஆனால் இன்று புலம்பெயர்ந்தவர்கள், உண்மைக் குடிகளான தமிழரை அழித்தும் வெளியேற்றியும் இருக்கும் தன்மை ஒண்டவந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாகத்தான் தோன்றுகிறது.

உண்மையில் தமிழ்நாட்டினருக்குப் புலம்பெயர் இலக்கியம் இல்லை. அண்மைக்காலத்தில் ஈழத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்குத்தான் புலம் பெயர் இலக்கியம் உண்டு. அதனால்தானோ என்னவோ தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இந்தத் துறையில் அதிக ஆர்வம் ஏற்படவில்லை.

ஆங்கிலேயர்கள் வந்தபிறகுதான் நகரத்தார் பலர் மலேயா போன்ற நாடுகளுக்குச் சென்றார்கள். கண்காணிகளால் இங்குள்ள ஏழைமக்கள் பலர் இலங்கை மலேசிய போன்ற நாடுகளுக்குத் தேயிலைத் தோட்ட, ரப்பர் தோட்ட உழைப்பாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். இவர்களைத்தான் முதன் முதலாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் எனக் குறிக்கமுடியும். இப்படிப்பட்ட புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி முதன்முதலில் சிறுகதை எழுதியவர் புதுமைப்பித்தன். நாற்பதுகள் ஐம்பதுகளில் சில சிறுகதைகள் வந்துள்ளன. ப. சிங்காரம் என்னும் எழுத்தாளர் தமது இரு நாவல்களில் மலேசியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளார். அநேகமாகப் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றித் தமிழ்நாட்டில் நாவல் எழுதியவர் அவராகத்தான் இருக்க வேண்டும். அகிலனின் ‘பால்மரக் காட்டினிலே’ போன்ற நாவல்களும் புலம் பெயர்ந்தவர்கள் பற்றியவைதான். புலத்திலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக மீண்டும் தாய்நாட்டுக்கு இடம்பெயர்ந்த பர்மாத் தமிழர்களைப் பற்றி மு. வ. ‘பெற்ற மனம்’ என்ற நாவலில் எழுதியுள்ளார். இவையெல்லாம் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றிப் பிறர் எழுதியவை.

pulam peyar ilakkiyam3நாற்பதாண்டுகளாகத்தான் வேலைதேடிப் புலம்பெயர்ந்த தமிழ்நாட்டவர்கள் சிலரைக் கூறமுடியும். அதிகமாகப் புலம்பெயர்ந்தது ஈழத்தமிழர்கள்தான். வேறு வழியில்லாமல் தங்கள் சொந்த நாட்டைவிட்டு அரசியல் காரணங்களுக்காக அந்நிய நாடுகளில் புகலிடம் தேடவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இன்று இலங்கைத் தமிழர்கள் கனடா முதல் ஆஸ்திரேலியா வரை, ஸ்வீடன் முதல் நைஜீரியா வரை உலகெங்கும் பலநாடுகளுக்கு வீசியெறியப்பட்டிருக்கிறார்கள். குடிபெயர்தலைக் குறிக்க மைக்ரேஷன், டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்னும் இரு சொற்களும் ஆளப்படுகின்றன. மைக்ரேஷன் என்பது ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குப் பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்தலாகக் காணக் கூடாது என்பது பன்னாட்டு வரையறை. உலகில் பல சமூகங்கள் புலம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சான்றாக ஆப்பிரிக்க மக்கள் பலநாடுகளுக்குப் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. அடிமைகளாகவே அவர்கள் அமெரிக்க நாட்டிற்கு மூன்று நூற்றாண்டுகள் முன்பு புலம்பெயர்க்கப்பட்டார்கள். யூதர்கள்தான் பல காலமாகவே உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள். புலம் பெயர்ந்தவர்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான டயஸ்போரா என்பது யூத மக்களில் புலம் பெயர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் இஸ்லாமியர் வாழ்ந்த நாடுகளிலிருந்து சில பகுதிகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்களுக்கென ஒரு நாடு ஏற்படுத்தப்பட்டது.

ஸ்டாலின் காலத்து ரஷ்யாவிலிருந்து பல எழுத்தாளர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களில் ரஷ்ய உருவவியல் குழுவைச் சேர்ந்த ரோமன் யாகப்சன் போன்ற பலருண்டு. ரஷ்ய உருவவியல் குழுவினர், செக்கோஸ்லவகியாவில் ப்ராஹா நகரில் முக்கியமான மொழியியல் வட்டத்தைப் பின்னர் உருவாக்கினார்கள். நவஃப்ராய்டியச் சிந்தனைக் குழுவினரும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தனர். ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்த முக்கியமானதோர் எழுத்தாளர் சோல்சினிட்ஸின். இவருடைய கேன்சர் வார்டு என்ற நாவல் புகழ்பெற்றது.

pulam peyar ilakkiyam4இந்தியாவின் வடபகுதியிலிருந்து பலர் ஐரோப்பாவுக்குச் சில நூற்றாண்டுகள் முன்னரே புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களை ஐரோப்பிய இலக்கியங்கள் நாடோடிகள் (ஜிப்சிகள்) எனப் பதிவுசெய்துள்ளன. இவர்கள் நிலம் விட்டு நிலம் பெயர்ந்துகொண்டே இருப்பதால் புதிதுபுதிதான பொருள்களை அறிமுகப்படுத்துபவர்களாகவும், அரிய நோய்களையும் எளிமையான இயற்கை முறைகளால் குணப்படுத்துபவர்களாகவும், மந்திரவாதம் சூனியவாதம் செய்பவர்களாகவும் ஐரோப்பிய இலக்கியங்கள் சித்திரித்துள்ளன. ஆனால் இடம்பெயர்பவர்களுக்கு ஒருபோதும் மதிப்புக்கிடையாது. எனவே இவர்களுக்கு எந்த ஐரோப்பிய நாடும் இடம்தராமல் இன்றுவரை விரட்டிக் கொண்டே இருக்கின்றன. ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலத்தில் இஸ்லாமியரும் புலம்பெயர வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அரசியல் தஞ்சம்கோரி இடம்பெயர்ந்தவர்கள், காலனியாதிக்க விளைவுகளின் பொருட்டுக் குடிபெயர்ந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். குடியேறிய வசதி படைத்தவர்கள், சென்ற நாட்டிலேயே குடியுரிமை பெற்றார்கள். இவர்கள் யாவருமே புலம்பெயர்ந்தவர்கள் என்பதில் அடங்குவர்.

புலம்பெயர்தல் என்ற சொல்லோடு புலம்புதலுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. என்றாலும் புலம்புதல், புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு முக்கியப் பொருளாக இன்று அமைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த வாழ்க்கை விடைசொல்ல முடியாத பல வினாக்களை எழுப்புகிறது. தாய்நாட்டில்(!) வசிக்கும் நம் போன் றோர் இத்தகைய பிரச்சினைகள் குறித்துச் சிந்திப்பதே இல்லை. நமது தமிழ் இன அடையாளம் பற்றி நாம் சிந்தித்திருக்கிறோமா? நாம் சுதந்திரமான, நமக்குரிய வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

புலம்பெயர் வாழ்க்கை பலருக்கு நல்வாழ்வைத் தந்தது போன்ற தோற்றம் இருப்பினும் உண்மையில் அதிக அளவுக்கு வலியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. இங்கேதான் நமக்கு வாழ்க்கையா, அங்கேதானா என்ற ஊடாட்டங்கள் அநேகமாக இன்று குறைந்துபோய் அங்கேதான் என்று பலருக்கு முடிவாகி விட்டது. என்றாலும் நம்பிக்கையற்ற நிலையில், புலம்பெயர் இலக்கியம் பெரும்பாலும் விரக்தியையும் சோகத்தையுமே கொண்டிருக்கிறது.

pulam peyar ilakkiyam6புலம்பெயர் இலக்கியம் குறித்து நிறைய விவாதங்கள் மேற்கிலும் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. புலம்பெயர் இலக்கியத்தைப் புகலிட இலக்கியம் என்றும் குறிப்பிடுகின்றனர். புகலிட இலக்கிய முயற்சிகளில் பின்வருவனவும் அடங்கும்:

1. அரசின் ஒடுக்குமுறை, இன அழிப்பு, அதனால் ஏற்படும் சீரழிவுகளை வெளிப்படுத்துவது;

2. புகலிடத்தின் புதிய சூழல்கள் தரும் அனுபவங்களை வெளிப்படுத்துவது;

3. போர் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் பற்றிய எவ்விதத் தொடர்புமற்ற, சாதாரண வாழ்க்கை பற்றிய படைப்புகள்.

என்றாலும் இவற்றை இன்னும் விரிவாகக் காண இடமிருக்கிறது.

ஃ பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே சீர்குலைந்துவரும் குடும்ப உறவுகள் அல்லது உறவு இடைவெளிகள் பற்றிய பிரச்சினை புலம்பெயர்ந்தவர்களுக்கு முக்கியமாகிறது. மண்ணை இழந்து, மக்களை இழந்து நிற்கும் ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சொத்து அவர்களுடைய மக்கள். அவர்களுக்குத் தமிழ் தெரிவதில்லை. புகலிடத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் நேற்றைய வாழ்க்கையை நிலைநாட்ட விரும்புகின்ற பெற்றோர்; இன்றைய வாழ்க்கையை மட்டுமே அறிந்து, நாளைய கனவில் மிதக்கும் இளந்தலைமுறையினர்- என உளவியல் ரீதியாகப் பிரிந்துவிடுகின்றனர்.

ஃ இளந்தலைமுறையினர்க்குத் தமிழ் தெரிவதில்லை என்றால், முன்பு சென்றவர்களுக்கு வாழுகின்ற நாடுகளின் மொழிகளோடும் கலாச்சாரத்தோடும் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை. அறிதலில் ஆர்வமற்ற போக்கும் நிலவுகிறது. அறிந்துகொண்டாலும் அவற்றைப் பின்பற்ற முடிவதில்லை. பிறருடன் நட்புறவு கொள்ள முடிவதில்லை.

ஃ மொழியறிவில்லாததால் சுரண்டலுக்கு பலியாகி, தொடர்ந்து சில குறிப்பிட்ட பணிகளுக்குள் உழலுகின்ற நிலை பல தமிழர்களுக்கு இருக்கிறது. இதனால் ஏற்படும் மனவியல் ரீதியான பாதிப்பும் மிகுதி.

ஃ உலகில் நமது மொழிதான் உயர்ந்தது, நமது கலாச்சாரம்தான் பழமையானது என்னும் மனப்பான்மை புகலிடத் தமிழர்கள் சிலருக்கு விடாப்பிடியாக இருக்கிறது. புகலிடத்திலும், தென்னிந்தியப் பொழுதுபோக்குச் சாதனங்களிலேயே மயங்கிக் கிடப்பவர்கள் பலர்.

pulam peyar ilakkiyam1புலம்பெயர் இலக்கியம் இப்போது இரு நாடுகளிலிருந்துமே எழுதப்படுகிறது. சொந்த நாட்டில், வாழ்வு மறுக்கப்பட்டவர் தாங்கள் இழந்துவிட்ட நாட்டையும் மக்களையும் உறவுகளையும் பற்றிய பிரிவாற்றாமையை வெளிப்படுத்துவதாகப் புகலிட இலக்கியம் இருக்கிறது. அவை தங்கள் வாழ்க்கை சூறையாடப்பட்டதற்கான காரணிகளைத் தேடுகின்றன. யுத்தத்தினால் விளையும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்துபவையாகச் சில உள்ளன. புகலிட நாட்டில், அதன் பண்பாடு, அரசியல் தன்மைகளுக்குள் அகப்பட்டு முகமிழந்து தவிக்கும் தவிப்பை உணர்த்துவதாகவும் புகலிட இலக்கியம் உள்ளது. இன்னொரு நாட்டில் அந்நியர்களாகவும், அந்நாட்டு மக்களுக்கு உபத்திரவம் தர வந்தவர்களாகவும் உதவாதவர்களாகவும் பார்க்கப்படும் நிலை இருப்பதால், அம்மக்கள் தங்களை தலித்துகளாகவே உணர்கின்றனர். மேம்போக்காக இன்று நிறவேற்றுமை இல்லை என்று சொல்லப்பட்டாலும், பல நாடுகளில், பலவித வீதங்களில், வெள்ளையர் -வெள்ளையர் அல்லாதவர் பாகுபாடு நிலவவே செய்கிறது.

“அதிகாரத்துக்கு எதிரான போராட்டம் என்பது மறதிக்கு எதிராக ஞாபகங்களின் போராட்டம்தான்” என்று செக்கோஸ்லவகிய எழுத்தாளர் மிலன் குண்டேரா குறிப்பிடுகிறார். நினைவுகள் இறக்கும்போது மனிதன் உயிர்ப்பற்ற பிணமாகிவிடுகிறான். நினைவுகள்தான் புலம்பெயரும் மனிதனைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. எனவே புலம்பெயர் எழுத்தாளர்கள் பெரும்பாலும் அதிகாரத்துக்கு எதிராக இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் தாய்நாடு கற்பனையானது என்பதுபோலவே புலம்பெயர்ந்த நாடும் அவர்களுக்குக் கற்பனைகளை எதிர்நோக்கியதாகவே இருக்கிறது. புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் இருத்தல் ஒரு நிலப்பரப்பில் காலூன்றியது அல்ல. ஒரேசமயத்தில் அவர்கள் காலனியாதிக்க இனவெறிக்கும், தமது சொந்த தொலைதூர நாட்டின் மூடநம்பிக்கைகளுக்கும் கொலைகளுக்கும் பெண்அடிமைத் தனத்துக்கும் எதிரானவர்கள். அவர்கள் புகலிட நாட்டிலும் அதிகார அரசியலுக்கு எதிராகவே இருப்பார்கள். தொலைதூரச் சொந்த நாட்டிலும் அவர்கள் அதிகார அரசியலுக்கு விமரிசகர்களாக இருந்தவர்கள்தானே அவர்கள்? ஆனால் வந்த நாட்டிலும் விடமுடியாத பழைய நம்பிக்கைகளும், அடிமைத்தனச் செயல்பாடுகளும் வந்தநாட்டின் வக்கிரங்களும் அவர்களை பாதித்து முரண்களை ஏற்படுத்துகின்றன. இந்த முரண்களுக்குள் வாழ்வதாகவே அவர்களது எழுத்துக்கள் அமைகின்றன.

இன்று உலகஅளவில் புலம்பெயர்ந்த இலக்கியத்தின் பாதிப்பும் வீச்சும் மிகுதி. இங்கிலாந்தில் வசிக்கும் சல்மான் ருஷ்தியின் நாவல்கள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. ஈரான் நாடு அவருக்குக் கொலைத் தண்டனை விதித்துள்ளது.

இந்திய வம்சாவளியினரில் இன்னொருவர் வித்யாதர் சூரஜ் பிரசாத் நைபால். டிரிடினாடில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்பவர். (அவருடைய ‘பெண்ட் இன் தி ரிவர்’ ஆப்பிரிக்கச் சர்வாதிகார ஆட்சியின்கீழ் வாழ்வதிலுள்ள பிரச்சினைகளை விளக்கும் நாவல்.)

ஜோசப் பிராட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர். ஸ்டாலின் காலத்தில் புலம்பெயர்ந்தவர். அமெரிக்காவில் இறந்தார். சுஜாதா பட், குஜராத்தில் பிறந்து பிரிட்டனில் வாழ்பவர். (மங்கீ ஷேடோஸ், ஸ்டிங்கிங் ரோசஸ் போன்ற நூல்களை எழுதியவர்). தஸ்லிமா நஸ்ரீன் பற்றி அறியாதவர் குறைவு. வங்காளதேசத்தில் பிறந்து அகதியாகச் சுற்றிவருபவர். (இவரது முக்கிய நாவல் லஜ்ஜா. )

சியாம் செல்வதுரை, இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்பவர். இவருடைய முக்கியமான நாவல் ஃபன்னி பாய். ஏ. சிவானந்தன், இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்தவர். ரேஸ் அண் கிளாஸ் என்ற இதழை நடத்திவரும் இவரது மிக முக்கியமான நாவல் ‘வென் மெமரி டைஸ்’. கம்யூனி டீஸ் இன் ரெசிஸ்டன்ஸ் என்னும் முக்கியமான நூலையும் எழுதியுள்ளார். ஜீன் அரசநாயகம், இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்த தமிழ்ப்பெண்கவிஞர்.

உலகில், புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமாக, பென் ஆக்ரி, செர்கே பேகஸ், ஏரியல் டாப்மேன், ழான் ஜோர்டன், இல்மஸ் குனே, மிலன் குண்டேரா, வோலே சோயிங்கா, தர்வேஷ் மஹமூத் எனப் பலர் உள்ளனர்.

புலம்பெயர் இலக்கியத்தின் அறிமுகமாகச் சில சான்றுகளை இங்கே காணலாம். சிறுகதைகள், நாவல்கள் பட்டியலையோ, எழுத்தாளர்கள் பெயர்களையோ சொல்வது பெயருதிர்த்தலாகவே அமையும். பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சுவடுகள் என்னும் கவிதைத்தொகுதி இங்கு நினைவுக்கு வருகிறது. நார்வேக்குப் புலம்பெயர்ந்த தம்பா என்பவரின் கவிதை இது. நார்வேயின் நீண்ட இரவு கவிஞரின் அகதி வாழ்க்கைக்கு உவமையாக அமைகிறது.

       நாழிகையாகியும் படுக்கைக்குச் செல்லாத சூரியனும்

       குளிர்ந்தும் இருள்போர்வை போர்த்தாத துருவதேசமும் கண்டுவியந்தேன்

       எனது தேசத்தின் துயர்தோய்ந்த இரவினின்றும் மீண்ட எனக்கு

       இங்கு ஒளித்திரளாய்ப் பகல் மிக நீண்டே தெரிகிறது. . . .

மக்பை என்னும் பறவை இடம்பெயராமல் தன் நாட்டிலேயே வசிக்கக்கூடியது. இது வ. ஐ. ச. ஜெயபாலனுக்கு ஆதரவின்மை, தனிமை இவற்றிற்கான குறியீடு ஆகிறது.

       உலகெங்கும்

       வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற

       மனிதச் சருகுகளாய்ப் புரள்கின்றோம்

       என் நம் தாய்நாடு

       ஓயாமல் இலை உதிர்க்கும்

       உயிர்ப்பிழந்த முதுமரமா?

இப்படிப்பட்ட கவிதைகளில் அந்தந்த நாட்டுப் புதிய சொற்களும் சொற்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன. அந்நியப்பட்ட உணர்வு புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் அதிகமாக இடம்பெறுவதில் ஆச்சரியமில்லை. ஈழக் கவிஞரும் திறனாய் வாளருமான சிவசேகரத்தின் ஒரு கவிதை (நையாண்டி) இது.

நாராய் நாராய் செங்கால் நாராய் / பழம்படு பனையின் கிழங்கு பிளந்து / பயன் மிக அறிந்த பனைசெறி நாட்டார் / வழிபல சென்றே பலதிசை பரந்தார் / வருகுவதெந்நாள் அறிவையோ நாராய். . . . .

அகதியின் வாழ்வின் இழிநிலை தாங்கி / அந்நிய மண்ணில் அண்டிக்கிடந்து / மிகநலி மாதர் தம்நகர் மீளும் / வகையென ஒன்றை மொழிவையோ நாராய். . . .

நாராய் நினக்கோ யாதும் ஊரே / நாராய் நின் இனம் யாவரும் கேளிர் / பாராய் எங்கள் மனிதரின் நிலையை / நாராய் நமக்கோர் நல்வழி கூறாய். . . .

மைத்ரேயி என்னும் கவிஞர் எழுதும் சுற்றுச்சூழல் கரிசனை மிக்க கவிதை இது:

       புற்றரையும் பசுங்காடும் / சலசலத்து நகர்ந்த சிற்றாறும் / கீச்சிட்டுச் சிற

       கடித்த புள்ளினமும் / ஊர்வனவும் விலங்கினமும் / காளானென

முளைக்கும் / தொடர்மாடிக் கட்டடங்களில் / காணாமற் போயின.

       நிலவும், கறுப்புப் பட்டில் / வெள்ளிக் கோலமிட்ட / நட்சத்திரங்களும்

       நகரத்துத் தெருவிளக்கில் / வாங்கு வாங்கு என / விளம்பரிக்கும்

       நியோன் விளக்கில் / மறைந்துபோயின.

       தொழிற்சாலைக் கழிவில் / வாகனப் புகையில் / விமான செய்திப்

       போக்குவரவில் / பஞ்சபூதங்களில் நாலுடன் / தொலைந்தது சூழல்.

       நேரடிச் சந்திப்புத் தொலைபேசியிலும் / தொலைபேசித் தொடர்பு இலத்

       திரனியற் கடிதத்திலும் / ஓய்வுநேரம் தொலைக்காட்சியிலுமாய்த் /

       தொலைந்தது உறவும் நட்பும்.

       தொடர்புசாதனம் கக்கும் குப்பையில் / மூளை சலவைபெற ரசனை

       கரைய / எண்ணியப் படுத்தப்பட்ட / கலை இலக்கியத்தில் / கணினி

       வரையும் ஓவியத்தில் / இயந்திர மனிதன் செதுக்கும் சிற்பத்தில் /

       அழகியல் தொலைய / உலகளாவிய இணையவலையூடு / கணினித்

       திரையில் மினுங்கும் மாய யதார்த்தத்தில் / நிஜ யதார்த்தம் தொலைய /

       எஞ்சுமா / மனிதநேயமும் / மானிட இருப்பும்?

இன்றைய பிரச்சினைகளை மிக எளிமையாக விளக்கி அழகாக நமது கவலையைக் கேள்வியாக முன்நிறுத்தும் கவிதை இது. புலம்பெயர்ந்த பிறநாட்டுக் கவிதைகளும் இவை போன்று ஒருவகையில் மனஅமைதி இழக்கவே உள்ளன. சான்று ஒன்று.

எங்கேயோ பிறந்தோம் / நான்கு திசைக் காற்றிலும் பரவினோம் / நூறு குழந்தைகள் / நூறு நாவுகளோடு பேசுகின்றன / நாளை நம் நாட்டுக்கு மீளவும் திரும்புவோமாயின் / கண்ணீரின் பொதுமொழியில் பேசுவோமென / நம்பிக்கை கொள்வோம்.

இது வியென் சின் என்ற வியட்நாமியக் கவிஞரின் கவிதை.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் சிலருடைய சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். அமுதன், பார்த்திபன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. பார்த்திபனுடைய ஒரே ஒரு சிறுகதையைப் பார்க்கலாம். இக்கதையில் ஜெர்மனி செல்ல விசாவோடு வீட்டில் காத்திருக்கும் ஒரு தமிழ்க்குடும்பம் முதலில் காட்டப்படுகிறது. அந்த ஊரில் ஒரு சிங்களப் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவனுக்குக் கடன் தொல்லை. கடனை அடைத்தாக வேண்டும் என்ற நிலையில் தமிழ்க் குடும்பத்தின் தலைவனைக் கைதுசெய்து சிறையில் மிரட்டி, வெளி நாட்டிலிருந்து பணம் வாங்கிக் கொடுத்தால் விட்டுவிடுவதாகச் சொல்கிறான்.

அடுத்த காட்சியில் இலங்கையிலிருந்து லாவோஸுக்குத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள். லாவோஸிலிருந்து அவர்கள் ஜெர்மனி செல்லவேண்டும். வேலையும் வாழ்வும் கிடைக்கும் கனவுகளில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

மூன்றாவது காட்சியில் ஜெர்மனியில் இம்மாதிரி மனித ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தமிழர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். லாவோஸிலிருந்து ஜெர்மனிக்குப் புறப்பட்டுவந்த தமிழர்கள் ஏற்றிய கப்பல் ஒன்று மூழ்கிப்போய்விட்டது. பிணங்கள் கடலில் மிதக்கின்றன. முழுகி இறந்தவர்களப் பற்றி ஒருவன் (சிவா) கவலை தெரிவிக்கிறான். அதைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த கப்பலைப் பற்றி-வியாபாரத்தைப் பற்றிக் கவலைப்படுமாறு அவனுடைய நண்பன் அறிவுரை சொல்கிறான்.

pulam peyar ilakkiyam8சிவாவுக்கு திடீரென்று ஒரு போன் வருகிறது. மாஸ்கோவில் நட்டநடுவீதியில் தெரிந்த ஒரு தமிழ்ப்பெண் இறந்து கிடக்கிறாள். அவனது நண்பன் ஒருவன் அதைத் தெரிவிக்கிறான். கைவிடப்பட்ட பெண்கள் நடுவீதியில் அநாதைப் பிணமாகக் கிடக்கக் கேள்வியுறும்போது மனம் கனக்கிறது.

தங்களுக்குத் தெரிந்த பெண். அவளது சாவை நண்பர்கள்மூலம் ஊரிலுள்ள அவளது பெற்றோர்களுக்குத் தெரிவிக்கலாமே என்று சிவா சொல்கிறான். அதை அவன் நண்பன் ஒப்புக்கொள்ளாமல் வேலையைப் பார்க்கச் சொல்கிறான்.

“வியாபாரம் நிற்கவில்லை. மனிதர்கள் மிருகங்கள் பழைய கப்பல்கள் நகர்ந்தபடியே இருக்கின்றன. அடுத்துவந்த நாட்களில் லாவோசிலிருந்து புறப்பட்ட ஆதிகால உக்ரெய்ன் கப்பல் ஒன்றில் பிள்ளை குட்டிகளுடன் இருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வண்ணக் கனவு கண்டுகொண்டிருந்தனர். கொழும்பிலிருந்து பலர் லாவோசுக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். “

என்று இக்கதை முடிகிறது. கதையின் தலைப்பு இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். ஈழத் தமிழர்கள் அயல்நாடுகளுக்குச் செல்லும்போது தொடக்கம் முதல் முடிவு வரை எத்தகைய அவதிக்கு ஆளாகிறார்கள் என்பதை இக்கதை மிக நன்றாகச் சொல்லியிருக்கிறது. தாய்நாட்டைப் பிரிந்த சோகத்தையும் புலம்பெயர் நாடுகளில் அவர்கள் தேடிச் செல்லும்-கருணைக்கு ஏங்கும்-பிரபஞ்ச மனிதர்கள் குறித்த அவஸ்தையையும் இதில் காணலாம்.

அயல்நாடுகளிலிருந்து நிறையச் சிறுபத்திரிகைகள் தமிழில் வந்தன. நின்று போயின. மறுபடியும் சில வருகின்றன. நம் தமிழின் புலம்பெயர் இலக்கியம் இன்று ஈழத்தமிழ் இலக்கியமாகவே இருக்கிறது. ஈழக்கவிதைகளை நோக்கும் போது, முதல் கட்டம், பழங்கால முதல் மகாகவி ஊடாக நீலவாணன் வரை எனலாம். இரண்டாவது கட்டக் கவிதைகள் சேரன் போன்றோருடைய போர்க் காலகட்டக் கவிதைகளாக அமைந்துவிட்டன. இன்று மூன்றாம் கட்டத்தில் இருக்கிறோம். புலம்பெயர் கவிதைக் காலம். இதன் பொருள்விரிவை நோக்கி, எஸ். பொ. அடுத்த நூற்றாண்டுத் தமிழர் இலக்கியம் புகலிடத்தில் மையம் கொள்வதாகக் கூறுகிறார்.

புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை நம் தமிழ்ச் சமூகத்திலும் சில புதிய நிலைமைகளைத் தோற்றுவித்திருக்கிறது. முன்பு நமக்கு ஆங்கிலத்தோடும் ஆங்கில வாயிலாகவும் மட்டுமே தொடர்பு. இன்று நமது இலக்கியமும் மொழியும் பல்வேறு வித்தியாசமான கலாச்சாரங்களோடும், மொழிகளோடும், இலக்கியப் பாரம்பரியங்களோடும் தொடர்புறுகின்றன. புலம்பெயர் எழுத்தாளர்கள் புதிய உணர்வுகளையும், அனுபவங்களையும் தமிழ் இலக்கியத்தில் வரைகிறார்கள். மேற் கத்தியச் சமுதாயத்தின் முன்னேற்றம், விநோதம், அபிவிருத்தி, தனிமனித சுதந்திரம், பாலியல் விடுதலை போன்றவற்றால் ஏற்படும் ஈர்ப்பு, நிறவாதம், இன பயங்கரவாதம், புரியாத பண்பாடு, பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம், அந்நிய நாட்டில் ஏற்படும் பயம், அங்கலாய்ப்பு, அந்நிய மாதல், சாதி வேற்றுமையை எதிர்கொள்ளல் என்று பொருள்விரிவு நிகழ்கிறது.

இன்று பல்வேறு மொழிகளும் பண்பாடுகளும் மோதுவது சர்வதேச அரங்கில் ஒரு நியதியாகிவிட்டது. இனங்களுக்கிடையில் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுகின்றன. மொழிகளும் கலாச்சாரங்களும் கலப்படைவது தவிர்க்க முடியாதிருக்கிறது. உலக இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சில படைப்புகளையேனும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அளித்திருக்கிறார்கள் என்பது நமக்குப் பெருமையே.


இலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு

இலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு 

(இந்தக் கட்டுரை  2009இல் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடந்த மொழிபெயர்ப்புக் கருத்தரங்கில் அளிக்கப்பட்டது.)

இலக்கியக் கொள்கை-திறனாய்வு இவற்றின் மொழிபெயர்ப்பு என்னும் இத்தலைப்பே பலருக்கு விசித்திரமாகத் தோன்றக்கூடும். ஆனால் இதுபற்றி நிறையப் பேசவேண்டிய அவசியம் இருக்கிறது.
மொழிபெயர்ப்பாளர்கள் என்றாலே நாவலை, சிறுகதையை, கவிதையை மொழிபெயர்ப்பவர்கள்தான் நமது நினைவுக்கு வருகிறார்கள். அப்படிப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். அவை பற்றிய பிரச்சினைகள்தான் நிறைய விவாதிக்கப்பட்டும் இருக்கின் றன. ஏன் நமது நினைவில் பிளேட்டோவின் ‘அரசியலை’ மொழிபெயர்த்த சாமிநாத சர்மாவோ, பல மார்க்சியத்தத்துவ, திறனாய்வு நூல்களை மொழிபெயர்த்த தர்மராஜனோ, அல்லது வெல்லக்-வாரனின் இலக்கியக்கொள்கையை மொழிபெயர்த்த குளோறியா சுந்தரமதியோ தோன்றுவதில்லை? எந்தவிதத்திலும் பிற மொழிபெயர்ப்பாளர்களின் பணிக்கு இவர்களது பணியைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இன்னும் பார்த்தால், எனது அனுபவத்தில் ஒரு நாவலை, கவிதையை மொழிபெயர்க்க ஆகும் நேரத்தைவிட, முயற்சியை விட அதிகமாக ஒரு திறனாய்வு அல்லது இலக்கியக் கொள்கை நூலை மொழிபெயர்க்க ஆகிறது. பேர்ல் பக்கையோ  நட்ஹாம்சனையோ அல்லது இன்னும் அண்மைக்கால ஆசிரியர்களையோ ஆங்கிலவாயிலாகத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் – அல்லது அவர்களைப் போன்றவர்களிடம் டெரிடாவையோ, லக்கானையோ மொழிபெயர்க்கக் கொடுத்துப் பாருங்கள், பிறகு தெரியும்.

நானறிந்தவரை, ஆங்கில இலக்கியம் படித்தவன் என்ற முறையில், ஆங்கில இலக்கிய மொழியை வசப்படுத்துவது எளிது. ஆனால் ஆங்கிலத் திறனாய்வு அல்லது இலக்கியக் கொள்கை மொழியை வசப்படுத்த அதற்கப்பாலும் போய் பிரமாண்ட முயற்சிசெய்யவேண்டும். சந்தேகமிருந்தால் இதனை நீங்கள் எந்த ஆங்கில ஆசிரியரிடமும் சரிபார்த் துக்கொள்ளலாம். அதனால்தான் பல ஆங்கில ஆசிரியர்களே ‘நமக்கேனடா வம்பு’ என்ற முறையில் எஃப் ஆர் லீவிஸ், ஐ ஏ ரிச்சட்ஸ் கால இலக்கியத் திறனாய்வைத் தாண்டி அமைப்பியம், பின்னமைப்பியம், பின்-நவீனத்துவம், குறியியல் போன்ற துறைகளுக்கு வருவதேயில்லை. இன்றைய இலக்கியத் திறனாய்வு அவ்வளவு சிக்கலானது. அது தொடாத துறையோ பயன்படுத்திக்கொள்ளாத துறையோ இல்லை. திரைப்படத்துறை முதல் தத்துவம் வரை, மக்கள்-கலாச்சாரத்திலிருந்து மனோதத்துவம் வரை எந்தத் துறையையும் அது விட்டுவைக்கவில்லை. ஒரு நல்ல திறனாய்வாளனுககு எமில் டர்க்ஹீமும் தெரிந்திருக்க வேண்டும், ஃப்ராய்டும் தெரிந்திருக்கவேண்டும், டெரிடாவும் தெரிந்திருக்கவேண்டும், விட்ஜன்ஸ்டீனும் தெரிந்திருக்க வேண்டும். “தெரிந்திருக்கவேண்டும்” என்பதைவிடப் “புரிந்திருக்கவேண்டும்”. ஒரு நல்ல நாவலாசிரியராகவோ நாவல் மொழிபெயர்ப்பாளராகவோ இருப்பதற்கு இவை எதுவும் தேவையேயில்லை.

நான் சிலகாலத்திற்கு முன்னால் அறிஞர் ஒருவரை “ஏன் திறனாய்வு மொழிபெயர்ப்பைப் பற்றி எவரும் பேசுவதில்லை?” என்று கேட்டேன்.அதற்கு அவர், “அது அறிவியல் போன்றது தானே? கலைச் சொற்கள் சரிவர மொழிபெயர்க் கப்பட்டு விட்டால் போதுமே, அதற்கப்பால் என்ன இருக்கிறது?” என்றார். இப்படித்தான் பல மொழிபெயர்ப்பாளர்கள் தவறாக நினைக்கிறார்கள். கலைச்சொற்கள்தான் மொழிபெயர்க்கப்பட வேண்டியவை, அதற்குப் பிறகு ஒன்றுமில்லை என்பது அவர்கள் நினைப்பு. “அப்படியானால், கலைச்சொற்கள்கூடத் தேவையில்லாத, நாவல் மொழி பெயர்ப்பை, கவிதைமொழிபெயர்ப்பைப் பற்றி ஏன் மாய்ந்து மாய்ந்து பேசுகிறீர்கள்” என்று கேட்டேன். விழித்தார்.

இங்கு திறனாய்வு மொழிபெயர்ப்புதான் பிறவகைகளை விடக் கடினமானது என்று நிலைநாட்டுவதோ ஒப்பிடுவதோ என் நோக்கமல்ல. இருந்தாலும் இதுவரை அதைப்பற்றிய போதிய அக்கறை செலுத்தப்படாததாலும், அது இன்றைக்கு மிகமுக்கியமாக, மிக அதிகமாகத் தேவைப்படுவதாலும் அதன் அருமையை உணர்த்தத்தான் மேற்கண்ட வாதம்.

மொழிபெயர்ப்பே ஒரு கலை என்பார்கள். ‘Translation is probably the most complex type of event yet produced in the evolution of cosmos’ (-Casogrande-1954) என்று காசோகிராண்ட் என்பவர் சொன்னார். மொழிபெயர்ப்பு ஒரு மிகச்சிக்கலான நிகழ்வு என்பது திறனாய்வு/கொள்கை மொழிபெயர்ப்புக்கு மிகவும் பொருந்தும். திறனாய்வு வெறும் அறிவுசார்ந்த விஷயம் மட்டுமல்ல, கலையும் கூடத்தான். உலகத்தைப் பற்றிய அனுபவத்தை முன் வைப்பது இலக்கியம் என்றால், ஒரு நூலைப் பற்றிய அனுபவத்தை முன்வைப்பது திறனாய்வு. அந்த விதத்தில் அது ஒரு கலைதான். மேலும் எப்படி ஒரு இலக்கியப் படைப்பு படிக்க ஏற்ற இலக்கியப் பண்புகளோடு அமைந்திருக்க வேண்டுமோ, அது போலவே திறனாய்வும் படிக்க ஏற்ற இலக்கியப்பண்புகளோடு அமையத்தான் வேண்டும். அப்போது தான் அது திறனாய்வு.

தமிழில் அப்படிப்பட்ட திறனாய்வு நூல்கள் அதிகம் உருவாக வில்லை என்பதால் பலபேர் திறனாய்வை இலக்கியமாக நோக்குவதே யில்லை. ஆனால் ஆங்கில இலக்கியம் படித்தவர்க்குத் தெரியும் – அவர்களது கல்வி பெரும்பாலும் அரிஸ்டாடிலின் ‘கவிதையியல்’ நூலிலிருந்தும், சர் ஃபிலிப் சிட்னியின் ‘அபாலஜி ஃபார் பொயட்ரி’ என்ற படைப்பிலிருந்தும் தான் தொடங்கும். அதற்கு முந்திய படைப்புகள்(சாஸர், செனேகா போன்றோர் எழுதிய நூல்கள் உட்பட) மத்தியகால ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டு விடுகின்றன. நாம் தமிழில் எப்படி தொல்காப்பியம் தான் முதலில் கிடைக்கிறது, அது இலக்கண நூல் என்று பெருமையடித்துக் கொள்கிறோமோ அதுபோல ஆங்கிலேயரும் நவீன ஆங்கிலத்தின் தொடக்கம் ஓர் இலக்கியக் கொள்கை நூலில் என்று பெருமை கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கொள்கை நூல்களும், ஜான் டிரைடன் காலந்தொடங்கி முறையான திறனாய்வு நூல்களும் ஆங்கிலத்தில் இருப்பதால், ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தின் செம்பாதியாகத் திறனாய்வு /கொள்கை நூல்களும் அமைகின்றன என்பதைக் கற்றோர் அறிவார்கள். அதனால் அங்கு (புகழ் பெற்ற டேவிட்லாட்ஜின் திறனாய்வுத் தொகுப்புகள் போல) ஏராளமான திறனாய்வு / கொள்கைத் தொகுப்புநூல்கள் உருவாகியிருக்கின்றன. அவற்றை யெல்லாம் தொடாமல் எந்த ஒரு ஆங்கில மாணவனும் முதுகலைகூட படித்துவிடமுடியாது. தமிழில்தான் இலக்கியத் திறனாய்வு/கொள்கை பற்றி எதுவும் அறியாமலே இலக்கிய அறிஞனாக வந்துவிடமுடியும். ஏன் ஆங்கிலத்திலிருந்தாவது கொள்கை / திறனாய்வு நூல்களை மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும் என்பதற்கு இந்தக் காரணமே போதுமானது. இன்னும் பல காரணங்கள் உண்டு.

நாம் ஆங்கிலக் காலனி அடிமைகள். இன்றும் கூடத்தான். நமக்கு என்றொரு திறனாய்வுப் பாரம்பரியம் இல்லை. சமஸ்கிருதப் பாரம்பரியத்தையும் நாம் ஸ்வீகரிக்கவில்லை. இன்னொன்று, சமஸ்கிருதப் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமானாலும் அதற்கு நமக்கு ஆங்கிலம்தான் தேவைப்படுகிறது. எப்படியிருப்பினும் கொள்கைகளுக்கோ திறனாய்வுக்கோ போகவேண்டுமானால் நாம் அயல்மொழிக்குச் செல்லவேண்டிய தேவையிருக்கிறது. எனவே ஆங்கிலவழித் திறனாய்வு நமக்குத் தேவைப்படுகிறது. மேலும், அ.ச.ஞானசம்பந்தன், மு.வ., தெ.பொ.மீ தொடங்கித் தமிழ்ப்பேராசிரியர்கள் அந்த முறைக்கு நம்மைப் பழக்கப்படுத்திவிட்டார்கள். நாம் முழுமையாகக் கற்றோமா என்பது வேறுவிஷயம்.

இலக்கியக் கொள்கை மொழிபெயர்ப்பு நமக்குப் புதியதும் அல்ல. தொல்காப்பியரே ஐந்திரம் என்ற சமஸ்கிருத இலக்கண நூலைக்கற்றவர் என்று பாயிரம் சொல்கிறது. அறிஞர் பி.எஸ்.எஸ்.சாஸ்திரியார், தொல்காப்பியர் வேதசங்கிதைகளின் உரைகளையும் யாஸ்கரது நிருக்தத்தையும் ஊன்றிப்படித்தவர் என்பதை நிலைநாட்டியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, சமஸ்கிருதத்திலிருந்து இலக்கியக் கொள்கைகள் -த்வனி, அலங்காரம், ரஸம், ஒளசித்யம், ரீதி போன்ற பலதுறைகள் சம்பந்தப்பட்டவை – ஏன் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை? இதற்கு அக்காலத்தில்நிலவிய சமஸ்கிருத ஆதிக்கம்தான் காரணம் என்பது என் கருத்து.

ஒரு காலனியாதிக்கம் இன்று என்ன செய்கிறதோ அதையே அன் றைய சமஸ்கிருத ஆதிக்கமும் செய்திருக்கிறது. தன் அடிமை நாட்டிலிருந்து விலை மதிப்புயர்ந்த பொருட்களைச் சொந்தநாட்டிற்குக் கொண்டுபோய், அதை விற்பனைச் சரக்காக்கியபின், திருப்பி விற்பதும், மதிப்பற்ற சரக்குகளை அடிமைநாட்டில் உள்ளவர்கள் தலையில்கட்டுவதும் எப்போதுமே ஆதிக்கக்காரர்கள் செய்பவைதான். அதை அன்றைக்கிருந்த சமஸ்கிருதக்காரர்களும் செய்திருக்கிறார்கள்.இங்கிருந்து சிறந்த கோட்பாடுகளையும் கொள்கைகளையும் தாங்கள் மொழிபெயர்த்துக்கொண்டு (சான் றாக, பரதரும் கௌடில்யரும் தென்னாட்டினர், தமிழ்நாட்டினர்; மேலும் பழங்காலத்தில் காஞ்சிபுரம், கும்பகோணம் போன்றஇடங்கள் சமஸ்கிருதக் கல்விக்கும் மொழிபெயர்ப்புக்கும் பெயர்பெற்றிருந்தன) உதவாத அணியலங்காரக் கொள்கைகள் (கொள்கைகள் கூட அல்ல, வெறும் பட்டியல்கள்) மட்டும் தமிழில் வருமாறு செய்துவிட்டார்கள். மேலும் இன்று எப்படி இந்தியப் படைப்பாளிகள் பலர் ஆங்கி
லத்தில் மட்டுமே எழுதுகிறார்களோ, அதுபோல அன்றைக்கு எந்தமொழிப் படைப்பாளிகளும் சமஸ்கிருதத்தில் எழுதுவதே மரபாக இருந்தது. (இவற்றிற்கெல்லாம், தமிழும்கூட பாகதத்திரிபு அல்லது சமஸ்கிருதத்திரிபு என்று கருதப்பட்டதும் ஒரு முதன்மையான காரணம்.)

இது மேலும் ஆராயப்படவேண்டிய ஒரு கோட்பாடு. தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கும்,சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கும் என்னென்ன நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்ற முழுமையான விவரம் கிடைத்தால் இதைத் தயக்கமின்றி நிலைநாட்டலாம். ஆனால் பின்னது வேண்டுமானால் கிடைக்குமே தவிர முன்னது கிடைக்க வழியில்லை. அவர்களுடைய மொழிபெயர்ப்பு நேர்மை அத்த கையது. ஆனாலும் இன்றைக்கு சமஸ்கிருத இலக்கியக் கொள்கைகளைக் கற்பது நமக்கு இன்றியமையாத் தேவை.

ஒருவகையில் முன்பு சொன்னதுபோல இலக்கியக்கொள்கை/திறனாய்வு மொழிபெயர்ப்பும் அறிவியல் மொழிபெயர்ப்பை ஒத்ததே. இரண்டிலுமே கலைச்சொல் உருவாக்கம் முக்கியம். சரியான நிகரன்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். அந்நிகரன்கள் நிலைப்படுத்தப்படுவது முக்கியம். அவை பின்னால் கையாளப்படுவது முக்கியம். ஆனால் திறனாய்வு மொழிபெயர்ப்பாளர்கள் இந்தப் பொறுப் பினை உணர்வதில்லை. அவர்கள் கலைஞர்களாகவும் இருப்பதால், தங்கள் முனைப்பை(ஈகோவை) யே முதன்மையாக நினைக்கிறார்கள். எனவே ஆளுக்கொரு மொழிபெயர்ப்புக்கலைச்சொல் உருவாக் குகிறார்கள். இந்நிலை பல குழப்பங்களுக்கு இடமளிப்பதோடு, இலக்கியத்துறைகளில் அவ்வாறுமொழி பெயர்க்கப்பட்ட துறைகள் பாடமாக வருவதற்கும் குந்தகமாகி விடுகின்றன.

அதேபோல ஆங்கிலத்தில் காணப்படும் மேற்கத்திய இலக்கியக் கொள்கைகளும் திறனாய்வு முறைகளும் ந்மக்கு இன்றியமையாத் தேவை. விமரிசன மனப்பான்மை இல்லாத, எல்லாவற்றையும் பாராட்டுகின்ற ஒரு சமுதாயம் அழிந்துபோய்விடும்.

உடனே “தமிழில் பழங்காலத்தில் திறனாய்வு இல்லையா, உரையாசிரியர்கள் திறனாய்வாளர்கள் இல்லையா” என்றெல்லாம் கேள்விஎழும். பழைய உரைகாரர்களை நான் விமரிசகர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் உரைகோள் (hermeneutics)இல் மட்டும் கவனம் செலுத்தியவர்கள் என்பதும் ஒருகாரணம்.(எனது கொள்கைப்படி உரைகோள் வேறு, திறனாய்வு வேறு) அவர்கள் மூலநூலாசிரியரிடம் எந்தக் காரணத்தைக்கொண்டும் குறைகாண்பதில்லை. இதனால்தான் மொழியியல் நோக்கில் அபத்தமான கருத்துகளைக்கூறும் நன்னூலுக்குக்கூட நான்கு உரைகள் இருக்கின்றன. உரைகாரர்கள் தமக்குள் “நீ செய்த உரை தவறு, நீ பொருள்கொண்டமுறை தவறு” என்று சாடிக்கொள்வார்களே தவிர, மூலநூலாசிரியனுக்கு இழுக்கு ஏற்பட ஒருகாலும் விடுவதில்லை. இது அப்பட்டமான தலைமை வழிபாடே அன்றி வேறல்ல.எனவே திறனாய்வு மனப்பான்மையும் அல்ல.

இதுமட்டுமல்ல, சங்கப்பலகை விரிந்து இடம் கொடுப்பதும், இலக்கியப்பகுதியை மூங்கைகேட்டுக் கண்ணீர் துளிர்ப்பதும் விமரிசனங்கள் ஆகுமா? இதுதான் திறனாய்வு என்று இப்போதும் நமது வணிகச்சினிமாக்காரர்கள் மட்டுமே நம்புகின்றனர். அவர்களுக்குக் கைதட்டினால், சூடம் கொளுத்தி னால், அலங்கார வளைவுகள் வைத்துவிட்டால் போதும். ஆனால் திறனாய்வு என்பது வேறு. தவ றான கருத்தைச் சொன்னாலும் கூட அதற்கு தர்க்கரீதியான ஆயிரம் காரணம் முன்வைக்கவேண்டும். எனவே தமிழர்களாகிய நமக்குத் திறனாய்வு மனப்பான்மையும் இல்லை, திறனாய்வு நூல்களும் இல் லை. ஆகவேதான் மொழிபெயர்ப்பாவது தேவைப்படுகிறது. இந்த ஜனநாயகக் காலத்தில் திறனாய்வு மனப்பான்மையற்றவர்கள் வாழத்தகுதியற்றவர்கள் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். தலைவர்க ளையும் அதிகாரிகளையும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களையும் கண்டவர்களையெல்லாம் வழிபடும் மனப்பான்மைதான் நம்நாட்டை இன்னும் அடிமைநாடாகவே வைத்திருக்கிறது.

தொல்காப்பியம்கூடத் துல்லியமான கலைச்சொல்லாக்கத்தைக் கடைப்பிடிக்கவில்லை. தமிழ்க் கொள்கைகளான திணைக்கோட்பாடு, கூற்றுமுறைகள் போன்றவற்றையெல்லாம் அமைப்பியமுறையில் செய்திருக்கும் அவர், சமஸ்கிருதத்தோடு ஒப்புநோக்கக்கூடிய மெய்ப்பாட்டியல் வரும்போதுகோட்டை விட்டுவிடுகிறார். மெய்ப்பாடு என்ற சொல் ரஸத்தைக் குறிக்கிறதா, பாவத்தைக் குறிக்கிறதா? பாவம் என்பது இலக்கியத்தில் அல்லது நாடக நடிகனிடம் அல்லது நடனமங்கையிடம் காணப்படுவது. ரஸம் என்பது வாசகராகிய நமக்கு ஏற்படும் விளைவு. ஒரு விதூஷகன் அழுகிறான் என்பது அவனிடம் காணப்படும் வியபிசாரிபாவம். நாம் அதைக்கண்டு சிரிப்பது நமக்குள்தோன்றும் ஹாஸ்ய ரஸவெளிப் பாடு. தொல்காப்பியம் இவ்விரு சொற்களையும் ஒன்றாக்கிக் குழப்ப, உரையாசிரியர்கள் தமக்குத் தோன்றியவாறு அதற்குப் பொருள் எழுத, படிக்கும் மாணவர்களுக்கு எப்போதுமே குழப்பம்தான்.

தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவுதர மொழிந்திடுதல் என்று பாரதியார் சொல்வார்.அது கவிதைக்கு மட்டுமன்று, மொழிபெயர்ப்புக்கு-குறிப்பாக இலக்கியக் கொள்கை மொழிபெயர்ப்புக்கு எவ்வளவு பொருந்தும் என்பதை உணர்ந்துபார்த்தால் புரியும்.

தெளிவற்ற மொழிபெயர்ப்புகளாக இருந்தாலும்கூட திறனாய்வுத்துறையில் நல்லதுதான். சமூகக்கொள்கை, திறனாய்வுக்கொள்கை நூல்களை எப்படி மொழிபெயர்க்கக்கூடாது என்பதற்குப்பழைய கால என்சிபிஎச் மொழிபெயர்ப்புகளாக வெளிவந்த நூற்றுக்கணக்கான (மாஸ்கோவி லிருந்து ரஷ்ய நூல்களாக வந்து மொழிபெயர்க்கப்பட்ட) நூல்கள் உதாரணம். அவை படிப்போரை ஈர்ப்பதைவிடப் புறந்தள்ளுவதையே அதிகமாகச்செய்துள்ளன என்று பலர்கூறக் கேட்டிருக்கிறேன். ஆயினும் ஒன்றுமே யில்லாததற்கு ஏதோ ஒன்று மேல் என்ற அளவில் அவற்றை நோக்கவேண்டும். தமிழவனின் ஸ்ட்ரக் சுரலிசம் எனக்கு அறவே புரியாமற்போனதினால்தான் நான் அமைப்பியம் பற்றிய நூல்களைப் படிக் கவே ஆரம்பித்தேன். அதற்குமுன் அமெரிக்கப் புதுத்திறனாய்வு வரை எனக்குப் பரிச்சயம் இருந்தது. ஆனால் தமிழவனின் நூல்தான் அமைப்புமையவாதமும் பின்னமைப்புவாதமும் நூல் எழுத எனக்கு உத்வேகம் அளித்தது. அதற்குப் பிறகு செய்தித்தொடர்பியல் கொள்கைகள் என்றநூல் எழுதினேன். அதில் பாதிக்குமேல் குறியியல் (semiotics)பற்றிய நோக்குதான். மூன்றாண்டுகளுக்குமுன் நவீனமொழி பெயர்ப்புக் கோட்பாடுகள் எழுதினேன். இம்மூன்று நூல்களிலும் நேரடியாகவோ மறை முகமாகவோ கொள்கை/திறனாய்வு மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கிறது. முக்கியமாக அமைப்புமையவாதம் நூலை எழுதியபோது மிகுதியான சொற்களுக்கு நானே சொல்லாக்கம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. உதாரணமாக deconstruction என்ற சொல்லை நான் அதில் தகர்ப்பமைப்பு என மொழி பெயர்த்தேன். ஏனெனில் de- என்ற முன்னொட்டுக்கு எதிர்மறையான பொருளன்றி, உடன்பாடாக, இன்னும் மிகுதியாக்கல் என்னும்பொருளும் உண்டு. பின்வந்தோர் அதைக் கட்டவிழ்ப்பு, கட்டுடைப்பு என்றெல்லாம் மொழியாக்கம் செய்தார்கள். (மேற்கண்ட தொடரில்கூட நான் Ôஉடன்பாடாகÕ என்று எழுதியிருப்பதை அவர்கள் ‘நேர்மறையாக’ என்று எழுதுவார்கள். தமிழ்மரபு என்பது மிகவும் அவசியம்-மொழிபெயர்ப்பாளர்களுக்கு).அவற்றில் ஒரு அர்த்தம் மட்டும் இடம்பெறும் குற்றம் இருப்பதன்றி, ஏதோ கட்டியதை உடைத்து அல்லது அவிழ்த்துவிடுதல்தான் Deconstruction என்பது போன்ற தவ றான அர்த்தமும் இடம்பெறுகிறது. அண்மையில் நாரங் என்பவரின் அமைப்பியம், பின்னமைப்பியம் பற்றிய ஹிந்திநூலைத் தமிழில் மொழிபெயர்த்த எச்.பாலசுப்பிரமணியன் எனது மொழியாக்கங்களைப் பெரும்பாலும் (தகர்ப்பமைப்பு என்பது உட்பட) பயன்படுத்தியிருக்கிறார் என்பது நிறைவு தந்தாலும் வேறு கவலைகள் இருக்கின்றன.
பொதுவாக மொழிபெயர்ப்பைப் பற்றி One translates a culture என்பார்கள். அதாவது நாம் மொழியை மொழிபெயர்க்கவில்லை, கலாச்சாரத்தை மொழிபெயர்க்கிறோம். இக்கூற்று பெருமளவு அறிவியல்-கலைச்சொல்லாக்க மொழிபெயர்ப்புக்குப் பொருந்தாது. ஆனால் இலக்கியத்திறனாய்வு /கொள்கை மொழிபெயர்ப்புக்கும் இது பொருந்துவதே.
கொள்கை மொழிபெயர்ப்பில் அவரவர் தன்முனைப்பு இருக்கும் அளவுக்கு தர்க்கம் இல்லை. இதுதான் முதற்கவலை. There should be more sense and less syntax என்பார் எஸ்ரா பவுண்டு.இலக்கியக்கொள்கை மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தேவையான முதல் தகுதி இதுதான். இன்றைய மொழி
பெயர்ப்புகளைப் பார்க்கும்போதோ full of sound and fury, signifying nothing என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
பொதுவாக, இலக்கியக் கொள்கை, திறனாய்வு சம்பந்தப்பட்ட சிலகலைச்சொற்களை அப்படி யே எழுத்துப்பெயர்ப்பும் செய்துவிடலாம். சில சொற்களை- உதாரணமாக, ரொமாண்டிசிஸம் என்ற சொல்லை- மொழிபெயர்ப்பதைவிட எழுத்துப்பெயர்ப்பு செய்வதே நல்லது. மொழிபெயர்க்கும்போது பின்வரும் முறைகளைக் கையாளலாம்.
1. முற்காலச் சொற்களைத் தக்கவாறு பயன்படுத்தல்
(உதாரணமாக, personification என்ற சொல்லை நானும்கூட மனிதப்படுத்தல், மானிடப்படுத்தல் என்ற
வகையிலேயே மொழிபெயர்த்துக் கையாண்டுகொண்டிருந்தேன். ஆனால் இப்படிச்செய்யத் தேவை
யில்லை. திணையுருவகம் என்ற சொல் முன்பே தமிழில் உள்ளது. இதனை தெ.பொ.மீ போன்றோர் கையாண்டிருக்கிறார்கள். திணையுருவகம் என்றால் என்ன? அஃறிணையை உயர்திணையாக்கலும் (மிகச்சில சமயங்களில்)உயர்திணையை அஃறிணையாக்கலும்தான். அதைத்தான் இப்போது இன்றைய பாணியில் மனிதப்படுத்தல் என்கிறோம். ஆனாலும், இன்றைய நவீன வெளிப்பாட்டு முறை கருதி இதனைப் பயன்படுத்த நேர்ந்துள்ளது.)
2. பழங்காலச் சொற்களை சற்றே மாறுபட்ட விதத்தில் வழங்குதல்.
3. இப்போதுள்ள வார்த்தைகளைப் புதிய அர்த்தங்களில் வழங்குதல்.
4. புதிய சொற்களை உருவாக்கல்.
5. இரண்டு அல்லது மூன்று சொற்களை இணைத்துப் புதுச்சொல் உருவாக்கல்.
6. கடன்வாங்கல்.
இவற்றுள் எந்த முறையையும் மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஒழுங்கு தேவை. சான்றாக, அறிவியலாக, தர்க்கரீதியான முறையில் நிரூபிக்கப்படத்தக்கதான துறையைக் குறிப்பதாக இருந்தால் – அதாவது ஆங்கிலத்தில் -logy, -ics போன்ற ஒட்டுகளில் முடியும்சொல்லாக இருந்தால், தமிழில் ‘இயல்’ என மொழிபெயர்க்கலாம். அதாவது biologyஐ உயிரியல் என்றும் physicsஐ இயல்பியல் என்றும்மொழிபெயர்ப்பதில் தவறில்லை.ஆனால் -ism எனப்படும் வாதக்கருத்துகளை எப்போதும் ‘-இயம்’ என்றுதான் மொழிபெயர்க்கவேண்டும். அந்தவகையில் நாம் காந்தியம், தலித்தியம், பெரியாரியம், மார்க்சியம், தேசியம் என்றெல்லாம் சொல்பவை சரி. ஆனால் ஸ்ட்ரக்சுர லிசத்தை அமைப்பியல் என்பது தவறு. அமைப்பியம், பின்னமைப்பியம், நவீனவாதம்,பின்நவீனவாதம் என்பன போலத்தான் மொழிபெயர்க்கவேண்டும். முன்பு கூறிய அறிவியல்களுக்கும் இவைகளுக்கும் பெருத்தவேறுபாடு உண்டு.

ரொமாண்டிசிஸம் என்ற சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச்சொல் எனக்குக் கிடைக்கவில்லை.அதனால் தக்கசொல் கிடைக்கும் வரை ரொமாண்டியம் என்றே பயன்படுத்தலாம். இது எழுத்துப்பெயர்ப்பு. ஆனால் ‘புனைவியல்’ என்றால் அது என்ன இயல், புனைகின்ற இயல்? இம்மாதிரி பொருளற்ற சொல்லாக்கங்கள்தான் இன்றைய திறனாய்வுலகில் பெரும்பாலும் வழங்குகின்றன. திறனாய்வுக் கலைச் சொற்களுக்குத் துல்லியம் தேவை அப்போதுதான் தொடர்ந்து கருத்துகள் வளர முடியும். காட்டை அழிப்பவன் தனது சந்ததிகளை நினைத்துப்பார்க்காதது போல, இம்மாதிரி மொழிபெயர்ப்பாளர்களும் தங்கள் சொல்மேல் கொண்ட ஆர்வத்தினால் பின்வரப்போகும் வளர்ச்சியில் அக்கறை கொள்வதில்லை. பின்நவீனத்துவம் என்ற சொல் வழக்குக்கு வந்த பின்னரும் ஒருசிலர் பின்னை நவீனத்துவம் எனப் பெயர்க்கிறார்கள். “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்றபோது ஒருவர் ‘பின்’, ‘முன்’ என்பனவெல்லாம் பெயர்ச்சொற்களுக்கு ஒட்டுகளாக வராது” என்று கூறினார். ஆனால் அவரே, பிற்பகுதி,பின்ன ழகு, பின்மண்டை என்றெல்லாம் பெயர்ச்சொற்களோடு சேர்த்து எழுதக்கூடியவர்தான். ஆக, நாம் ஆக்கிய சொல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்ற முனைப்பு தவிர வேறு எதுவும் இதில் இல்லை.

மிக ஆதாரமான கலைச்சொற்கள்கூடத் திறனாய்வுத்துறையில் நமக்கு இல்லை. இதற்கு உதாரணமாகத்தான் ரொமாண்டிசிஸம்  என்ற சொல் எடுத்துக்காட்டப்பட்டது. ஆனால் சிலசமயங்களில் அழகான மொழிபெயர்ப்பு எளிதில் கிடைத்துவிடுகிறது, அதுவே ஆபத்தாகவும் மாறிவிடுகிறது.உதார ணமாக நனவோடை என்றசொல். Stream of consciousness என்பதற்கு இதைவிடச் சிறந்த மொழி பெயர்ப்பு இருக்கமுடியாது. இதை முதலில் செய்தவர்கள் மிகுபாராட்டுக்குரியவர்கள்.ஆனால் இதுவே ஆபத்தாகவும் மாறிவிட்டது. ஏனென்றால், நனவோடை(நனவு என்பது உணர்வோடிருத்தல், பிரக்ஞை பூர்வ நிலை) என்பதைப் பலர் ‘நினைவின்'(சிந்தனையின்) ‘ஓடை'(ஓட்டம்) என்று பொருள் கொண்டு தமிழ் நாவல்களில் எங்கெங்கெல்லாம் நினைவுகள் சுழல்வதாக அல்லது ஓடுவதாக இவர்களுக்குத் தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் நனவோடை நாவல்கள் என்று ஆக்கிவிட்டார்கள். அதாவது தங்களுக்குத் தோன்றுகின்ற அர்த்தத்தை ஒரு புதிய கலைச்சொல்லுக்கு அளித்துவிடுதல் அல்லது எடுத்துக்கொண்டுவிடுதல். இது பெரிய ஆபத்தாகும்.

ஒரு ஆங்கிலக் கலைச்சொல்லுக்கு இரண்டு மூன்று தமிழ்க் கலைச்சொற்கள் சர்வசாதாரணம்.
Feminism என்ற சொல்லை நல்ல தமிழில் பெண்ணியம் எனக்கையாளத் தொடங்கியபின்னரும் பெண் நிலைவாதம் என்பவர்கள் இருக்கிறார்கள். ரொமாண்டிசிஸத்திற்கு புனைவியல், அதீத கற்பனா வாதம் என்று பல மொழியாக்கங்கள். அப்புறம் எல்லாவற்றுக்கும் ‘இயல்’ வேறு.
திறனாய்வு மனப்பான்மை எல்லாருக்கும் அவசியம். எனவே அதைக் கற்றுத்தரும் திறனாய்வுத் துறையை ஆங்கிலத்தில் வைத்திருந்து என்ன பயன்? ஜனநாயகப்படுத்தவேண்டுமானால்,அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால், அது தமிழில் இருககவேண்டும். அதனால் பிறஎல்லாத் துறைகளையும் விட திறனாய்வுத் துறை மொழிபெயர்ப்புகள் இன்றைக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. திறனாய்வுத் துறையில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் இல்லாதிருந்தால், சமூகவியல், உளப்பகுப் பாய்வு, மேற்கத்திய தத்துவம் போன்ற பலதுறைகளைப் பலர் படித்திருக்க்வேமாட்டார்கள். திறனாய்வு அந்த அளவுக்கு ஒருவருடைய வாழ்க்கையை மாற்றவல்லது. தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டபிறகு திறனாய்வின் அவசியம் கூடியிருக்கிறது. ஏனெனில் திறனாய்வின்றி இலக்கிய வளர்ச்சியில்லை. இலக்கிய வளர்ச்சி மிகுந்த காலங்களில் திறனாய்வு இலக்கியப்பயிருக்குப் பசுமை உரமாகவும், இலக்கிய வளர்ச்சி தேங்கியிருக்கும் காலங்களில் அதுவே தனிப்பயிராகவும் ஆகக்கூடியது என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

திறனாய்வு நூலையும் இலக்கிய வளத்தோடு எழுதமுடியும். உதாரணமாக எம். எச். ஆப்ராம் எழுதிய முக்கியமான ஒரு நூலின் பெயர் The Mirror and the Lamp என்பது. தான் அந்நூல் முழு
வதும் என்ன கருத்துகளை உணர்த்தவருகின்றாரோ அவற்றை ஒட்டி உருவகமாக இத்தலைப்பைத் தந்திருக்கிறார். எழுத்தாளனின் மனம் ஒரு கண்ணாடிபோன்று, பிரதிபலிப்பதாக அமைந்திருக்கவேண்
டுமா, அல்லது விளக்கு போன்று தானே ஒளிதருவதாக அமைந்திருக்கவேண்டுமா என்பது ஆதார
மான வினா. கண்ணாடி போல இருக்கவேண்டும் என்பது பிரதிபலிப்புக்கொள்கை, போலிசெய்தல் கொள்கை. பழங்காலத்திலிருந்தே செவ்வியம்Classicism இதைத்தான் வலியுறுத்துகிறது. நடப்பியத்திலும்Realism இதுவே ஆதாரமான கொள்கை. ரொமாண்டியத்தில் எழுத்தாளன் ஒளிதரும் விளக்கு போன்றவன். Ôஉள்ளத்தில் உண்மையளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்Õ.
உலகின் பல சிறந்த எழுத்தாளர்கள் திறனாய்வாளர்களும், இலக்கிய இயக்கங்களுக்குத் தலை மை தாங்கியவர்களும் கூட. இலக்கியத்துக்கு என்று நோபல்பரிசு பெற்றோரிலும்கூட எத்தனை எத்த னையோபேர் திறனாய்வாளர்களும் இருக்கிறார்கள். பால்ஹெய்சி(1910), மாரிஸ்மேட்டர்லிங்க்(1911), ரவீந்திரநாத் தாகூர்(1913), அனடோல் ஃப்ரான்ஸ்(1921), பெர்னாட்ஷா(1925), ஹென்றி பெர்க்சன் (1927), சிங்க்ளேர் லு£யிஸ் (1930),டி.எஸ். எலியட்(1948), ஆல்பர்ட் காம்யூ (1957), சால்வடோர் குவாஸிமோடோ(1959), ழான்பால் சார்த்ரு(1964), செஸ்லா மிலோஸ்(1980), வோல சோயிங்கா (1986), எனச் சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும் நாவல் அல்லது கவிதைத் துறையில் மட்டுமல்ல இலக்கியத்திறனாய்வுத் துறையிலும் சாதனை புரிந்தவர்கள்தான்.
எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான மொழிபெயர்ப்பாளர்கள் திறனாய்வுத்துறைக்குத் தேவை.
முறையான மொழிபெயர்ப்புகள் திறனாய்வுத்துறையில் குறைவு. அதாவது நாவல்-கவிதை போன்ற
துறைகளில்செய்வதைப்போல ஒருவரது படைப்பினை அப்படியே மொழிபெயர்த்துத் தருவது குறைவு.
உதாரணத்திற்குப் பலபேர் டி.எஸ்.எலியட்டின் கொள்கைகளை அறிந்திருப்பார்கள். ஆங்காங்கு மேற்
கோள் காட்டுவார்கள். தங்கள் பாணியில் முக்கியமான அவரது கருத்துகளை எடுத்துரைப்பார்கள். ஆனால் அவரது The Function of Criticism, Tradition and Individual Talent போன்ற ஏதாவது ஒரு கட்டுரையை அப்படியே மொழிபெயர்த்திருந்தால் அது எதிர்காலத்திற்குப் பாடமாக வைக்கப்படுவதற்கும், அசலாக எலியட்டின் கருத்துகளை அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கும் உதவும். அப்படித் தமிழில் நன்முயற்சிகள் வரவில்லை என்பது வருந்தத்தக்கது. மலையாளத்தில் அநேகமாக எல்லா
முக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளும் மொழிபெயர்க்கப்படும் நிலை இருக்கிறது.
அதேபோல, இலக்கியச் சொல்லகராதி ஒன்றும் தமிழுக்குத் தேவை. பிரின்ஸ்டன் என்சைக் ளோபீடியா ஆஃப் பொயடிக்ஸ் போன்ற ஒன்று. எம்.எச்.அப்ராம்ஸ் தொகுத்த இலக்கியச் சொல்லக
ராதியும் பார்வைநூலாகப் பெருவழக்குடையது. இம்மாதிரி நூல்கள் தமிழில் வெளிவந்தால் இலக்கி
யத் திறனாய்வு நன்கு வளர்ச்சிபெறும். விமரிசன வளர்சசியின்றி இலக்கியவளர்ச்சி, மொழிவளர்ச்சி மட்டுமல்ல- எந்த வளர்ச்சியுமே கிடையாது. விமரிசன நோக்கு இருந்திருப்பின் தமிழ் எழுத்துகளின் சீர்திருத்தம் உட்பட நிறைய மாற்றங்கள் எளிதாக நடந்திருக்கும். நேற்றைய மரபைக் காப்பாற்றவேண் டும் என்பதைவிட, நாளைய பயன்பாடுதான் முக்கியமானது.