நோயிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறை மக்களுக்கு உண்டு. அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல், புரிதல் இல்லாமல் அரசால் மட்டும் நோயிலிருந்து மக்களை காத்துவிட முடியாது. அரசின் அணுகுமுறை என்பது மக்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுடன் உரையாடுவதாக, அவர்கள் ஒத்துழைப்பைக் கோருவதாக இருப்பதுதான் முறையானது. அதுவே மக்களாட்சி.
கொரோனா தொற்று என்பது சட்ட ஒழுங்கு பிரச்சினையல்ல. வைரஸை கைது செய்ய முடியாது. இது ஒரு சுகாதாரப் பிரச்சினை. இந்த தொற்றின் துரிதமான பரவலால் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும்போது இது பெரியதொரு பொருளாதார பிரச்சினையாகவும் மாறுகிறது. இதெல்லாமே மக்கள் வாழ்வை நேரடியாக பாதிப்பது.
இது போன்ற அசாதாரணமான சூழ்நிலைகள் ஏற்படும்போது அரசு தன்னுடைய அதிகாரத்தை மட்டுமே நம்புகிறது. ஒப்புக்காக ஆட்சியாளர்கள் மக்களிடம் ஊடகங்களில் பேசுகிறார்களே தவிர அவர்களிடம் கருத்துக்களை கேட்பதில்லை. அவர்கள் தேவைகளை புரிந்து கொள்வதில்லை.
மக்கள் முதிர்ச்சியற்றவர்கள், கட்டுப்பாடற்றவர்கள், தங்கள் நலன்களை பேணத் தெரியாதவர்கள்; எனவே, குழந்தைகளை பெற்றோர்களும், ஆசிரியர்கள் கண்டித்து, தண்டித்து கட்டுப்படுத்துவதைப் போல மக்களை நட த்தவேண்டும் என்றுதான் அரசாங்கங்கள் நினைக்கின்றன. இதன் காரணமாக கொரோனா தொற்றால் மக்களாட்சி நெறிமுறைகள், மக்களின் சுதந்திரம் என்பதே பெருமளவு பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. சில முக்கிய பிரச்சினைகளை கவனிப்போம்.
மக்களின் நடமாட்டம்
கொரோனா கிருமிகள் எப்படிப் பரவும் என்பதை ஊடகங்கள் ஓயாமல் விளக்கி வருகின்றன. கொரோனா தொற்று இருப்பவர் இருமும்போதோ, தும்மும்போதோ அக்கம்பக்கத்தில் இருக்கும் பொருட்களில், தளங்களில் விழும் துளிகளில் இருக்கும் வைரஸ் பிறர் கரங்களில் பட்டு அவர்கள் உடலுக்குள் ஊடுருவுவதன் மூலம் பரவிவிடும். சில சமயங்களில் அந்த துளிகள் நேராகவே அருகிலிருப்பவர் சுவாசத்தில் கலக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த இருமலோ, தும்மலோ கடுமையாக இருக்க வேண்டியதில்லை. சாதாரணமாக ஒருவர் அவர் முகத்தை துடைத்துவிட்டு அந்த கையால் ஒரு பொருளை தொடும்போதே பரவலாம். இதனால் மக்கள் நெருக்கமாக கூடும் இடங்களில் தொற்று எளிதில் பரவிவிடும் என்று கருதப்படுகிறது. உதாரணமாக ஒரு விமானத்தில், ரயில் பெட்டியில் பயணம் செய்யும் ஒருவருக்கு தொற்று இருந்தால் அவர் கரங்கள் தொடும் கைப்பிடிகள் போன்றவற்றை தொடும் பலருக்கு அந்த தொற்று பரவலாம்.
இதன் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டிய தேவையை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்தன. தமிழ்நாடு மாநில அரசு 21ஆம் தேதி மாலையிலிருந்து பத்து நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. அனைத்து அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், உணவகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவித்தது. மத்திய அரசு 21/22 நள்ளிரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கை, நாடு தழுவிய லாக் டவுன் என்ற சமூக இயக்க நிறுத்தத்தை மூன்று வாரங்களுக்கு அறிவித்தது. இதன் மூலம் மக்கள் கூட்டமாக குழுமும் இடங்கள் பல மூடப்பட்டன. மக்கள் பெருமளவு வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
இதில் ஒரு முக்கிய பிரச்சினை தோன்றியது. வீட்டிலேயே இருப்பவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், காய்கறிகள் எப்படி கிடைக்கும் என்ற கேள்வி. பிற அத்தியாவசிய சேவைகளான குடிநீர், மின்சாரம், கழிவு நீர் அகற்றல், துப்புரவு செய்தல், மருத்துவம் போன்றவையும் கிடைக்க வேண்டும். இவையெல்லாம் அனைவருக்கும் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால் அதற்காக பலர் பணிகளில் ஈடுபட்டுத்தான் ஆகவேண்டும். வீட்டில் இருக்கும் பலர் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், இந்த தொழில்கள் தொடர்பாகவும் வெளியே செல்வதும் அவசியம்.
ஆனால் அரசு தெருக்களில் தங்கள் சொந்த வாகனங்களில் செல்வோரை காவல்துறையைக் கொண்டு கட்டுப்படுத்தத் துவங்கியது. அந்தந்த காவல்துறை ஆணையர்கள், ஆய்வாளர்கள் மனப்போக்கிற்கு ஏற்ப தெருக்களில் வாகனங்களில் செல்பவர்கள் லத்தியால் அடிக்கப்படுவதிலிருந்து, பலவிதமான தொல்லைகளுக்கு ஆளானார்கள். அவர்கள் தரும் வாய்மொழி விளக்கங்களை காவலர்கள் உதாசீனம் செய்தார்கள். மருந்து வாங்கி செல்கிறேன் என்று மருந்தைக் காட்டுபவரிடம் பொய் சொல்கிறாய் என்று வண்டியை பறிமுதல் செய்தார்கள். வயலுக்கு நீர் பாய்ச்ச செல்கிறேன் என்பவரை அச்சுறுத்தினார்கள். தங்கள் இஷ்டத்திற்கு அவர்களை முட்டிபோட்டு நடக்க வைப்பது, தோப்புக்கரணம் போட வைப்பது என்று பலவிதமாக அவமானப்படுத்தினார்கள். தெருவில் வாகனங்களில் செல்வதே குற்றம் என கெடுபிடி செய்தார்கள். மக்களை குற்றவாளிகள் போல நடத்தினார்கள்.
தெருவில் தங்கள் சொந்த வாகனங்களில் மக்கள் செல்வதால் யாருக்கும் தொற்று ஏற்படாது. அவர்கள் சென்று சேரும் இடங்களில், கடைகளிலோ, மருத்துவ மனைகளிலோ, வேறு பணியிடங்களிலோதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு பொது இடங்களில் கூடுவதை கண்காணிக்கலாமே ஒழிய அனைத்து இடங்களிலும் ஊடுருவி அனைவரையும் கண்காணிக்க முடியாது. ஆனால் வாகனங்களில் செல்லும் அனைவரிடமும் தேவையில்லாமல் கடுமை காட்ட த் தொடங்கினார்கள். வாகனங்களை பறிமுதல் செய்தார்கள். தேவையில்லாமல் சுற்றுகிறார்கள் என்றார்கள்.
மற்றொரு புறம் பல சந்தைகளில், கடைகளில் மக்கள் கூட்டமாக கூடினார்கள். அங்கெல்லாம் காவல்துறை எந்த இடையீட்டையும் செய்யவில்லை. தொலைக்காட்சிகளில் மக்கள் பலவிதமான கடைகளில், கடைவீதிகளில் கூடுவதையும் காட்டினார்கள்; வாகன ஓட்டிகளை காவல்துறை அத்துமீறி தண்டிப்பதையும் காட்டினார்கள். இதிலெல்லாம் மக்களின் தேவைகள், உரிமைகள் குறித்த எந்த அக்கறையும் இல்லாமல் அரசு தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டது.
இந்தியாவை பொறுத்தவரை தனிமனித உரிமைகள் குறித்த தெளிவான புரிதல் இன்னமும் ஏற்படவில்லை. அதனால் வாகனங்களில் செல்பவர்களை லத்தியால் அடிப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் உண்டு என்றே பொதுமக்களில் பலரும் கருதுகிறார்கள். ஆனால் இது மிகப்பெரிய மனித உரிமை மீறல். அரசு மக்கள் தங்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை தடை விதிக்கவில்லை. கூட்டமாக செல்வதைத்தான் தடை செய்துள்ளது. ஆனால் எந்த காரணத்தினாலோ வாகனங்களில் மக்கள் செல்வது ஆபத்தானது என்று கருதப்பட்டு அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏன், எதற்காக செல்கிறார்கள் என்பதையெல்லாம் பரிசீலித்து ஏற்றுக்கொள்ள காவலர்கள் பல இடங்களில் மூர்க்கமாக மறுத்துள்ளார்கள். இதனால் மக்கள் எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துள்ளார்கள். இது மிக மோசமான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது.
அடிப்படையில் ஒரு நோய் தடுப்பு முயற்சியை, சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக அரசும், காவல்துறையும் புரிந்துகொண்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மாநிலங்களிடையே போக்குவரத்தை தடைசெய்தல்
மக்கள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வதை பொதுவாக தடை செய்வதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் விவசாய விளைபொருட்கள், தானியங்கள் என பல்வேறு வர்த்தக பரிமாற்றங்களையும் மாநிலங்களிடையே தடை செய்ததன் நோக்கம் புரியவில்லை. ஒரு சில மாநிலங்களிடையே புரிந்துணர்வு இருந்தாலும், கர்நாடக முதல்வர் எடியூரப்பா கேரள வாகனங்களுக்கு முற்றாக அனுமதி மறுத்துள்ளார். அந்த வாகனங்கள் உள்ளே வந்தால் பெருமளவில் மரணங்கள் நிகழும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு கூறுவதற்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் என்ன இருக்க முடியும் என்று தெரியவில்லை. அந்த வாகன ஓட்டிகளை தொற்று உள்ளதா என்று சோதித்துப் பார்த்து கூட அனுமதிக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பண்டங்களை தடை செய்தால், அதனால் ஏற்படும் பொருள் இழப்பு ஒட்டுமொத்தமாக நாட்டையல்லவா பாதிக்கும். மேலும் அவசர சிகிச்சைக்கு செல்லக்கூடிய நோயாளிகளுக்கும் அனுமதி மறுத்துள்ளது கர்நாடகா. எந்த விதமான தடைகள் அவசியம், எவை அவசியம் இல்லை, எப்படி கூடியவரை எச்சரிக்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும் என்பதையெல்லாம் தொடர்புடைய மக்களுடன் கூட்டுறவு நோக்கில் விவாதிக்காமல், அரசாங்கங்கள் எதேச்சதிகாரமாக முடிவு செய்வது நோய் தடுப்பிற்கு உதவுவதை விட, சர்வாதிகார மனப்போக்கை உருவாக்கவே துணை புரியும். பொதுவாக மக்கள் அனைவரும் குற்றவாளிகளாக மாற சாத்தியமுள்ளவர்கள் என்ற நோக்கில் சட்ட ஒழுங்கு பிரச்சினையை அரசு அணுகும்; கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் நோயாளிகள் என்ற நோக்கில் அணுகுகிறது.
இதைவிட கொடூரமான பிரச்சினை வெளிமாநிலங்களில் பணி செய்பவர்கள் சொந்த மாநிலத்திற்கு நடந்தே ஊர் திரும்புவது. இவ்விதம் நடந்தே சென்றவர்கள் பலர் இறந்து போயுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் நினைத்திருந்தால் நெடுஞ்சாலைகளில் நடப்பவர்களை உடனே தடுத்து நிறுத்தி, அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்கள் ஆங்காங்கே தங்குவதற்கோ, அல்லது அவர்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்வதற்கோ ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் மக்கள் பயணம் செய்வதே சட்ட விரோதம், குற்றம் என்ற அபத்தமான மனநிலையின் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நடை பயணத்தை மிகவும் உதாசீனமாக கையாண்டுள்ளது மத்திய அரசு.
உத்தரவிடத்தான் அரசா?
இருபத்தோரு நாட்கள் ஊரடங்கு என்றால் பணிபுரியும் இட த்தில் தங்க வேண்டுமா, சொந்த ஊரில் தங்க வேண்டுமா என்று முடிவு செய்யும் உரிமை எந்த ஒரு தொழிலாளிக்கும், பணியாளருக்கும் உண்டு. அவர்களது கருத்தை அறிந்து, அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை புரிந்துகொண்டு அவர்களுக்காக விசேஷ பேருந்துகளை, ரயில்களை அரசு இயக்கியிருக்க வேண்டும். தேவையானால் அவர்களுக்கு கிருமி தொற்று இருக்கிறதா என்பதை பரிசீலித்துவிட்டுக் கூட அவர்களை பயணம் செய்ய அனுமதித்திருக்கலாம். அல்லது அவர்களை சொந்த ஊர் சென்ற பிறகு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியிருக்கலாம்.
மத்திய அரசும் சரி, கோயம்பேட்டிலும், பெருங்களத்தூரிலும் மார்ச் இருபதாம் தேதி இரவு மக்களை அலைமோத விட்ட தமிழக அரசும் சரி, மக்கள் ஊரடங்கின் போது தாங்கள் எங்கே வசிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உரிமை உள்ளவர்கள் என்பதை ஏற்கவில்லை. எந்த வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசாங்கம் சொன்னவுடன் மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கேயே தங்கிவிட வேண்டும் என்று நினைத்தார்கள்.
இது நோய் தடுப்பிற்கான அணுகுமுறை அல்ல; சர்வாதிகார அணுகுமுறை. மக்கள் அவ்வளவு கூட்டத்தில் அலைமோதாமல் உரிய பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்திருக்க முடியும். டெல்லி அனந்த் விஹார் பேருந்து நிலைய காட்சிகளும் பெரும் அவலத்தையே வெளிப்படுத்தின. இது போன்ற நிகழ்வுகளையெல்லாம் மக்களுடன் கூட்டுறவாக விவாதித்து முடிவுகளை எடுக்கும் பக்குவம் இருந்திருந்தால் தவிர்த்திருக்கலாம். ஒரு சில தினங்களில் ஊரடங்கு அறிவிக்கப் போகிறோம், சொந்த ஊர் சொல்ல விரும்புபவர்கள் குறிப்பிட்ட எண்ணிற்கு மிஸ்ட் கால் அல்லது குறுஞ்செய்தி அனுப்புங்கள் என்று கூறியிருந்தால், மக்களின் மனப்போக்கும் தேவையும் புரிந்திருக்கும். மக்களுடன் பேச, கலந்தாலோசிக்க அரசிற்கு எந்த வாய்ப்புமே இல்லையென்றால் எப்படி ஒரு ஆட்சியை மக்களாட்சி என்று அழைக்க முடியும் என்பதே கேள்வி.
மருத்துவத் துறை போதுமான தயாரிப்புடன் இல்லை; பொருளாதார இழப்புகளை அதனால் விளையக்கூடிய தேக்கத்தை, பின்னடவை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்றாலும் அரசு கொரோனா காலத்தில் தன் அதிகாரத்தை பல விதமான தடைகளை தினசரி விதிப்பதன் மூலம் நிறுவி வருகிறது. இது மக்கள் தங்கள் உரிமைகளை மறந்து அரசின் சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்திற்கு கொண்டு செல்லக்கூடாது. இந்த நிலையில் எதிர்கட்சிகளும் தேசிய பேரிடர் காலத்தில் அரசிற்கு ஒத்துழைக்கிறோம் என்ற பெயரில் அரசின் அத்துமீறிய நடவடிக்கைகளை, மெத்தனத்தை கண்டிக்காமல் விட்டுவிடக்கூடாது. அரசதிகாரம் என்பது என்றுமே மக்களாட்சியுடன் முரண்பட்டது என்ற அரசியல் தத்துவ அடிப்படையை நாம் மறந்துவிடக் கூடாது. கொரோனாவில் இருந்து நாம் கற்கும் பாடம் அதிகாரப் பரவலாக இருக்க வேண்டுமே தவிர, அதிகாரக் குவிப்பாக இருக்கக் கூடாது.
rajankurai@gmail.com, through minnambalam.