மொழி குறித்த மற்றொரு சந்தேகம்

திரு. அற்புதராஜ்: தொழில்+நுணுக்கம் தொழிற்நுணுக்கம் என்று இணைக்கலாமா?

நான்: லகரத்துடன் (ல்) வல்லினம் (க்,ச்,த்,ப்) சேர்ந்தால்தான் ற் அங்கே வரும்.

அதாவது பழங்கால வழக்கின்படி, நிலைமொழி இறுதியில் லகரம் வர, வருமொழி தொடக்கத்தில் வல்லினம் (க,ச,த,ப) வந்தால்தான் றகர ஒற்று அங்கே மிகும்.

உதாரணமாக பல் + பொடி=பற்பொடி, நெல் + குவியல் = நெற்குவியல், சொல் + சிலம்பம் = சொற்சிலம்பம் என்பது போல.

லகரமும, நகரமும் (ல் + ந், இரண்டுமே மெல்லினம்) சேரும்போது இடையில் வல்லினம் வர வாய்ப்பே இல்லை. மெல்லினமும் மெல்லினமும் சேரும்போது வல்லினம் எப்படி இடையில் வரக்கூடும்? இது மொழிதெரியாத பெரும்பிழையாகும். அழுத்தமிருப்பின், ல் + ந் = ன் என்றுதான் ஆகும். புல் + நுனி = புன்னுனி என்பது போல.

சொற்கள் சேரும்போது இடையில் அழுத்தம் இருந்தால்தான் சந்தி வரவேண்டும். தொழில், நுட்பம் ஆகிய இரண்டும் சேரும்போது
“தொழில்ந்ந்ந்நுட்பம்” என்பது போலச் சொல்லழுத்தம் வர வாய்ப்பில்லை. இதைத்தான் இயல்பு புணர்ச்சி என்றார்கள் பழங்காலத்தில். அதாவது சொற்கள் அப்படியே இயல்பாக வரும். இடையில் வேறு எதுவும் வராது என்பது பொருள்.

தமிழ் கற்பவர்கள் மொழிப் பயன்பாட்டை (பேச்சு, எழுத்து) வைத்து யோசிக்க வேண்டும்.
வெறுமனே (நன்னூல் போன்ற நூல்களின்) விதிகளை வைத்து யோசிப்பதால்தான் மொழி கெட்டுவிட்டது. ஏனெனில் அவற்றில் மொழிப்பயன்பாட்டை ஒட்டி எவ்விதம் விதிகள் உருவாயின என்று சொல்லப்படுவதில்லை.


மொழி குறித்த ஒரு சந்தேகம்

கேள்வி (விவேக்): வணக்கம் மாமா, ஆங்கில உரையாடல்களில் ஒருவர், well!, how are you? என்று பேசுகிறார் என்றால், ‘well’ என்ற சொல்லை தமிழில் எப்படி மொழிப்பெயர்ப்பு செய்வது?

பதில் : Well, your question is not correct. In speech, each and every language has its own customs and we need not/ should not translate them.

1) well என்ற சொல் அது ஒரு உரையாடலின் தொடர்ச்சியாக வருகிறது என்பதைக் காட்டுகிறது. கட்டாயம் மொழிபெயர்த்தாக வேண்டுமென்றால், ‘சரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்கலாம். (இங்கும் சரி… என்பது உரையாடலின் தொடர்ச்சியே.)

2) ஒரு ஜோக் உண்டு. தமிழில் “நீ உன் குடும்பத்தில் எத்தனையாவது பிள்ளை?” என்று கேட்பதை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க லாம்? how manyieth issue are you in your family என்றா? அதனால் தான் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பேச்சு மரபு உண்டு என்றேன்.

அவரவர் மொழியின் வழக்காற்றை அந்தந்த மொழியில் பயன்படுத்த வேண்டுமே அன்றி, மறறொரு மொழியின் வழக்காற்றை அல்ல. அதனால்தான் கேள்வி தவறு என்றேன்.
மேலும் ஒரு தெளிவாக்கம்.

3) மொழிப்பெயர்ப்பு அல்ல, மொழிபெயர்ப்பு-தான்.

வல்லினம் மிகும் இடங்களுக்கு வல்லின ஒற்று போடாமல் விடுவதை விட, தேவையற்ற இடங்களில் போடுவது மிகக் கொடுமையானது. இப்போதெல்லாம் தவறான வழக்குகளை யாராவது கொண்டுவந்துவிட, அதை அப்படியே பின்பற்றிவிடுகிறார்கள். உதாரணமாக, புகைப்பிடிப்பது. [ஓரெழுத்துச் சொல் (கைப் பிள்ளை) லுக்குப் பின், இரண்டாம் வேற்றுமையில் ஐ உருபு-க்குப் பின் (அதைச் செய்வது) வல்லெழுத்து வரலாம். மற்ற இடங்களில் வரலாகாது.]

இப்படித்தான் ஒரு கூமுட்டை நடிகன் அருணாசலம் என்ற சொல்லை “அருணாச்சலம்” என்று எழுதப்போக அதையே பின்பற்றுகிறார்கள் மற்ற கூமுட்டைகள். இப்படித்தான் தமிழ் கெடுகிறது. (ஆனால் சினிமாத்துறையில் இருந்த பஞ்சு அருணாசலம், இறுதிவ‍ரை தன் பெயரை அருணாசலம் என்றுதான் எழுதிவந்தார் என்பதை கவனிக்கவும், அந்தக் கூமுட்டை நடிகனுக்காகத் தன் பெயரை அவர் தவறாக எழுதவில்லை).




நாட்டைக் கெடுப்பவர்கள்

இதோ நாட்டை வீழ்த்தியவர்கள் விவரம்!

(டெல்லியினை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியா’ எனப்படும் நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் கிடைக்கிறது இத்தகவல் )

ஃ ஜனாதிபதி செயலகத்தின் மொத்தப் பதவிகள் – 49.
பிராமணர்கள் – 39,
SC/ST – 4,
OBC – 06.

ஃ துணை ஜனாதிபதி செயலகப் பதவிகள் – 7.
பிராமணர்கள் – 7,
SC/ST – 00,
OBC – 00.

ஃ கேபினட் செயலாளர் பதவிகள் – 20.
பிராமணர்கள் – 17,
SC/ST – 01,
OBC – 02.

ஃ பிரதமரின் அலுவலகத்தில்
மொத்த பதவிகள் – 35.
பிராமணர்கள் -31,
SC/ST – 02,
OBC – 02

ஃ விவசாயத் திணைக்களத்தின்
மொத்த பதவிகள் – 274.
பிராமணர்கள் – 259,
SC/ST – 05,
OBC – 10.

ஃ பாதுகாப்பு அமைச்சக பதவிகள் – 1379.
பிராமணர்கள் – 1300,
SC/ST – 48,
OBC – 31.

ஃ சமூக நல & சுகாதார அமைச்சகத்தின் மொத்த பதவிகள் – 209.
பிராமணர்கள் – 132,
SC/ST – 17,
OBC – 60.

ஃ நிதி அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள் – 1008.
பிராமணர்கள் – 942,
SC/ST – 20,
OBC – 46.

ஃ பிளானட் அமைச்சகத்தில் பதவிகள் மொத்தம் – 409.
பிராமணர்கள் – 327,
SC/ST – 19,
OBC – 63.

10 – தொழில் அமைச்சகத்தின்
மொத்த பதவிகள் – 74.
பிராமணர்கள் – 59,
SC/ST – 5,
OBC – 10.

ஃ கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த பதவிகள் – 121. பிராமணர்கள் – 99,
SC/ST -00,
OBC – 22.

ஃ கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் ஒட்டுமொத்தம் – 27.
பிராமணர்கள் – 25.
SC/ST – 00,
OBC – 2.

ஃ வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்திய தூதர்கள் – 140.
பிராமணர்கள் – 140,
SC/ST – 00,
OBC – 00.

ஃ மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் – 108.
பிராமணர்கள் – 100,
SC/ST – 03,
OBC – 05.

ஃ மத்திய பொதுச் செயலாளர்
பதவிகள் – 26.
பிராமணர்கள் – 18,
SC/ST – 01,
OBC – 7.

ஃ உயர் நீதிமன்ற நீதிபதிகள் – 330.
பிராமணர்கள் – 306,
SC/ST – 04,
OBC -20.

ஃ உச்ச நீதிமன்ற நீதிபதிகள் – 26.
பிராமணர்கள் – 23,
SC/ST – 01,
OBC- 02.

ஃ மொத்த I.A.S. அதிகாரிகள் – 3600.
பிராமணர்கள் – 2750,
SC/ST – 300,
OBC – 550,

கோயில்கள், ஜோதிடம், சாதி மதப் பாகுபாடு போன்றவை மட்டுமே பிராமணர்களின் தந்திரமான ஆயுதங்கள் ஆகும்.

நாட்டின் மக்கள் தொகையில்
3% க்கும் குறைவான பிராமணர்கள்
எவ்வாறு 90% பதவிகளைகளைப் பெற்றனர்?

3 விழுக்காடு பெரிதா 97 விழுக்காடு பெரிதா.?


தகவல் தொழில்நுட்பச் சொற்கள் சில

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் இவை. புலனத்தின் வாயிலாகப் பகிரப்பட்ட செய்தி இது :

WhatsApp – புலனம்

youtube – வலையொளி

Instagram – படவரி

WeChat – அளாவி

Messanger – பற்றியம்

Twtter – கீச்சகம்

Telegram – தொலைவரி

skype – காயலை

Bluetooth – ஊடலை

WiFi – அருகலை

Hotspot – பகிரலை

Broadband – ஆலலை

Online – இயங்கலை

Offline – முடக்கலை

Thumbdrive – விரலி

Hard disk – வன்தட்டு

GPS – தடங்காட்டி

cctv – மறைகாணி

OCR – எழுத்துணரி

LED – ஒளிர்விமுனை

3D – முத்திரட்சி

2D – இருதிரட்சி

Projector – ஒளிவீச்சி

printer – அச்சுப்பொறி

scanner – வருடி

smart phone – திறன்பேசி

Simcard – செறிவட்டை

Charger – மின்னூக்கி

Digital – எண்மின்

Cyber – மின்வெளி

Router – திசைவி

selfie – தம் படம் – சுயஉரு – சுயப்பு

Thumbnail சிறுபடம்

Meme – போன்மி

Print Screen – திரைப் பிடிப்பு

Inkjet – மைவீச்சு

Laser – சீரொளி

சொல்லாக்கக் குறைபாடுகள் சில இருப்பினும் பெரும்பாலும் பயனுடைய தொகுதி.


குளித்து மணல் கொண்ட கல்லா இளமை

இது புறநானூறு 243ஆம் பாட்டில் வரும் தொடர். அக்கவிதையை எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. “தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி” என்று பாடலில் வரும் தொடரினால் அவருக்கு இந்தப் பெயரை அளித்து விட்டிருக்கிறார்கள். பாட்டு இதோ:


இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவு வழி தழீஇ, தூங்குவழி தூங்கி,
மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறி, சீர்மிக
கரையவர் மருள, திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்து துடுமெனப் பாய்ந்து
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே – யாண்டு உண்டு ‍ கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே!

இது கவிதை. இதன் பொருள்:

இனி நினைந்து – இப்போது நினைக்கும்போது,
இரக்கம் ஆகின்று – பச்சாத்தாபமாக உள்ளது
திணிமணல் செய்வுறு பாவைக்கு – மணலில் செய்த பெண் உருவத்துக்கு அல்லது பொம்மைக்கு
கொய்பூத் தைஇ – பூக்களால் அலங்காரம் செய்து
தண்கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து – குளிர்ந்த மடுவில் குளிக்கும் பெண்களோடு கைகோத்து விளையாடி
தழுவு வழி தழீஇ – தழுவும் நேரத்தில் தழுவி
தூங்குவழி தூங்கி – ஓய்வெடுக்கும் நேரத்தில் ஓய்வெடுத்து
மறை எனல் அறியா மாயமில் ஆயமொடு – கள்ளம் கபடறியாத இரகசியமற்ற கரவற்ற இளைஞர் கூட்டத்தில் கலந்து
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து – உயர்ந்த கிளைகளைக் கொண்ட மருத மரங்களைக் கொண்ட துறைக்குச் சென்று
நீர் நணிப் படிகோடு ஏறி – நீரை நோக்கித் தாழ்ந்த மரக்கிளைகளில் ஏறி
சீர்மிக – எல்லாரும் பாராட்டும் படியாக, கரையவர் மருள – கரைகளில் இருப்பவர் வியந்து பார்க்கும்படியாக, திரையகம் பிதிர – நீர்ப்பரப்பு அலையடித்துத் திவலைகளை உதிர்க்க,
நெடுநீர்க் குட்டத்து – ஆழமான நீரையுடைய மடுவில்
துடுமெனப் பாய்ந்து – தடாலென்று குதித்து
குளித்து மணற் கொண்ட கல்லா இளமை – மூழ்கி மண்ணெடுத்து வந்த அறியாப் பருவத்து இளமைக் காலம்
அளிதோ தானே யாண்டு உண்டுகொல்லோ – இப்போது அரியதாகிவிட்டதே, அது எங்கே சென்றது?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி – பூண் போட்ட கெட்டியான தடியை ஊன்றிக் கொண்டு
இரும் இடை மிடைந்த சில சொல் – இருமலுக்கு இடையே தடுமாறித் தடுமாறிப் பேசுகின்ற சொற்கள் சிலவற்றுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்ட
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – மிகவும் முதியவர்களாகிவிட்ட நமக்கு (அல்லது எங்களுக்கு).


பெருமூதாளரேம் ஆகிய எமக்கு இளமைப் பருவம் யாண்டு உண்டு கொல் என்று முடிக்கவும்.
(உரை, எனது சொந்த உரை)

எனது மட்டுமல்ல, என்னைப்போல எழுபதுகளில் (அல்லது அறுபது வயதுக்கு மேல்) இருப்பவர்கள் அவ்வப்போது இளமைப் பருவத்து நினைவுகளில் வாழ்வதுண்டு. அதற்கான புறநானூற்று எடுத்துக்காட்டு இந்தக் கவிதை. இப்போது 82 வயதாகும் ஆல்பர்ட் அண்ணாச்சி கேட்டுக் கொண்டதற்காக இந்தக் கவிதையை எடுத்தேன். அதன் பொருளையும் எழுதினேன்.


கரும வினை

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்.
அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே, ஏனென்று எனக்குப் புரியவில்லை! ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.
மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான். மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்.
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்.
அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான். அதற்குத் தான் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன்
“என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை. கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர். சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின் றனர். நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர்! ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான்.
அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்.
“இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்… அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும், எனக்கு நல்ல வியாபாரமும் ஆகி என் கஷ்டம் தீரும்” என்றான் கடைக்காரன்.
அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது.
இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனத்தில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!
மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தைச் சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான். தான் யாரென்பதைக் காட்டிக்கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்.
அதன்பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் முந்திய நாள் அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு அவற்றைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அந்தக் கட்டினை அரசனிடம் தந்தான்.
அதைப் பிரித்துத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்.
அந்தக் கடைக்காரனைக் கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்.
அரசன் அந்தக் கடைக்காரனுக்குச் சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான். அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்.
அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது. அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்.
அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்.
குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மவினை என்றால் என்ன?” என்றார்.
பல சீடர்கள் அதற்குப் பல விதமாக “கர்மவினை என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்.
குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை, கர்மா (கர்மவினை) என்பது நமது எண்ணங்களே!
நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த உடன்பாடான எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்…
மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும்” என்றார் குரு.

சந்தேகம்1: இந்தக் கதையும் அதன் வாதமும் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் இது பலபேர் குழுமிய ஒரு சமூகத்துக்குப் பொருந்துமா? உதாரணமாக, ஓர் ஆட்சியாளன் தீய சட்டங்களைக் கொண்டுவந்து அதிக வரிவசூல் செய்து மக்களைத் துன்புறுத்துகிறான். அப்போது, அந்த மக்களின் எண்ணங்கள் ஆட்சியாளனை பாதிக்குமா? ஆனால் நமது நேர்ப் பார்வையில் எத்தனையோ தீய ஆட்சியாளர்கள் மிக நன்றாகத்தானே வாழ்ந்திருக்கிறார்கள்? உடனே, அவசரப்பட்டு அவர்கள் வாழ்க்கையிலோ மனத்திலோ சோகம் நிரம்பியிருந்திருக்கும், அவர்கள் சொந்த வாழ்க்கை நன்றாக இருந்திராது என்று பதில் சொல்லவேண்டாம். அது பொருத்தமன்று என்பது நமக்கே தெரியும்.

சந்தேகம்2: இந்தக் கர்மவினை என்பது 1 : 1 தன்மை கொண்டதா? அதாவது ஒருவனுக்கு ஒருவனின் எண்ணம் பாதிக்கும் என்று மட்டும் கொள்வதா? அல்லது 1 : பலர், பலர் : 1 என்ற தன்மை கொண்டதா?

சந்தேகம் 3: பலகாலமாக வழங்கி வரும் இத்தகைய கதைகளைக் கேட்டவர்களுக்கு நான் முன் சொன்ன சந்தேகங்கள் வந்திருக்காதா? வந்தால் ஏன் கேட்கவில்லை? ஒருவேளை கேட்டால் நாத்திகன் என்று முத்திரை குத்திவிடுவார்கள் மற்றவர்கள் என்று அஞ்சி ஒடுங்கி இருந்தனரா?


மகாபாரதம் – சில கேள்விகளும் பதில்களும்

கேள்வி 1 (கேட்பவர் விவேக்). தன்னுடைய காம இச்சைக்காக சாந்தனு தன மகனான பீஷ்மனை ப்ரஹ்மச்சரிய விரதம் மேற்கொள்ள செய்வது தவறில்லையா? Actually பீஷ்மனுக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்து குலத்தை தழைக்க செய்வது தானே ஒரு நல்ல தந்தைக்கு அழகு/ ஒழுக்கம் ?

பதில் (பூரணச்சந்திரன்). உன் முதல் கேள்வி மிகவும் ஏற்புடையது. இந்த நியாயமான கேள்விக்கு பதில் கிடையாது. சத்யவதி மாதிரி கீழ்ச்சாதிப் பெண்களை நினைத்தால் அந்தக்கால அரசர்கள் ஒரு நொடியில் தூக்கிச் சென்று அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ள முடியும். (இப்பொழுதே உ.பி.யில் அப்படித்தான் நடக்கிறது). இவனும் அப்படியே செய்திருக்கலாம். அப்படியிருக்கும்போது இது ரொம்ப மிகையாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இதற்காக ஒரு தேவதைக்கதை படைக்கப்படுகிறது.

அவள் சேதிநாட்டரசனின் மகள். மீன்வடிவ அப்சரஸ் ஒருத்தியை அவன் காதலித்ததால் மீன்நாற்றத்துடன் பிறந்து மச்சகந்தி எனப் பெயர் பெற்றவள். ஆனால் அவளுக்கு வியாசனை திருமணத்துக்குப் புறம்பான பந்தத்தில் கொடுத்த பராசர முனிவன் ஒரு யோசனை தூரம் அவள் உடலிலிருந்து நறுமணம் வீசுமாறு ‍செய்கிறான். அதனால் யோஜனகந்தி என்ற பெயர் பெறுகிறாள். பல காத தூரம் நறுமணம் வீசக்கூடிய உடலைப் பெற்ற ஒருத்தி சாதாரணப் பெண்ணாக இருக்கமுடியுமா? அதனால் அவள் (பின் வரப்போவதை அறியாமல்) “கண்டிஷன்” போடுகிறாள். (இங்குதான் காவியத்தின் அற்புதம் ஆரம்பிக்கிறது. a beautiful irony. எந்தப் பிள்ளைகளின் வம்சம் தழைப்பதற்காக பீஷ்மனை பிரம்மச்சாரியாக இருக்கச் சொல்கிறாளோ, அந்தப் பிள்ளைகள் அற்பாயுசில் மாண்டு போகிறார்கள். பீஷ்மனையும் பிரம்மச்சாரி ஆக்கிவிட்டதால் உதவாமல் போகிறான். திருமண உறவுக்கு முன் மற்றொருவனிடம் பெற்ற அவளது முதல்பிள்ளை வியாசன்தான் கெளரவ வம்சத்தை உருவாக்கவேண்டி வருகிறது.)
எப்படியிருப்பினும் சத்யவதி செய்ததும், சாந்தனு செய்ததும் தவறுகள்தான். ஆனால் அந்தத் தவறுகளில்தான் கதை தொடங்குகிறது. கதையின் தொடக்கத்தில் தவறுகளும், நம்பத்தகாத விஷயங்களும் இடம் பெறலாம் என்ற நோக்கில் இது ஏற்கப்படுகிறது.
இந்தத் தவறுகளின் விளைவுதான் (‍பெற்றவர்கள் செய்யும் தவறு பிள்ளைகளை பாதிக்கும் எனப் படுகிறது) வியாசனின் முதல் மகன் குருடனாகப் போவதும், இரண்டாவது மகன் தோல்நோய் (பாண்டு) பீடித்தவன் ஆவதும். மூன்றாவது மகன் அரச பரம்பரை அல்லாதவன் ஆவதும் (விதுரன்).

அந்தக் காலப் பழக்க வழக்கங்கள் பலவற்றை இது எடுத்துக் காட்டுகிறது. ஓர் அரசனுக்குப் பிள்ளை இல்‍லை என்றால் வேறு எவனிடமாவது அவன் பெண்டாட்டி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். அதாவது தாய்வழிச் சமூகமாக இருக்கிறது. ஆனால் அரச வம்சத்தைச் சேராதவர்கள் (விதுரன் போன்றோர்) அரசனாக முடியாது…

சுயம்வரத்தில் மணாளனைத் தேர்வு செய்வதும், பாஞ்சாலி ஐந்து பேரை மணப்பதும் தாய்வழிச் சமூக வழக்கங்கள்தான். ஆகவே பாரதம், தந்தை வழிச் சமூகம் முற்றிலும் உருவாகாத ஒரு காலத்தைக் காட்டுகிறது என்றுதான் தோன்றுகிறது. இதிலேயே உன் கேள்விக்கான பதிலும் அடங்கியிருக்கிறது. தாய்வழி கொண்ட அந்தக் காலத்தில் பெண்களுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது என்றால், சந்தனு தன் மனைவியை (எதிர்கால ராஜமாதாவை) எவ்வளவு ‍எச்சரிக்கையுடன் ‍தேர்ந்தெடுக்கவேண்டும்? அதுவும் ராஜவம்சத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமே ஆளவேண்டும் என்பதால்? ஆகவே இரண்டாவது அதீத சக்தி பெற்ற ஓர் இளம் பெண் கிடைக்கிறாள் என்னும்போது முதல் மனைவி பெற்ற மகனை பலிகொடுத்துவிட்டான் சாந்தனு.

ஒரு வேடிக்கையை நீ கவனிக்கவேண்டும். இராமாயணத்தை உருவாக்கியவன் வால்மீகி என்ற வேடன். மகாபாரதத்தைத் தொகுத்தவன் வியாசன் என்ற மீனவப்பெண் வயிற்றில் பிறந்த கீழ்ச்சாதிக்காரன். ஆனால் இந்தச் சாதிகளெல்லாம் மட்டும் பார்ப்பனர்களுக்கு ஆகவே ஆகாது. இது எப்படி? இவ்வளவு அறிவாற்றல் கொண்டவர்களாகப் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனர்களால் தங்களுக்கென தங்கள் சாதியால் ஒரு இதிகாசத்தை உருவாக்க முடிந்ததா?


மகாபாரதம் – சில எண்ணங்கள்

கேள்வி – பதில் வடிவத்தில்…

கேள்விகளுக்கு ஒரு முன்னுரை (கேட்பவர் விவேக்): மகாபாரதம் தான் இந்திய கலாச்சாரத்தின் (தமிழ்நாடு உட்பட) ஆகப்பெரிய படைப்பு என்பது போன்ற பிம்பம் இன்று உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம். மகாபாரதக் கதையை ஆய்வு செய்து பார்த்ததில் அது ஒரு சாதாரணப் பழிவாங்கும் கதையாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. இவாளெல்லாம் கூப்பாடு போடுவது போல பெரிய ஒழுக்கப் பண்புகள் கூட அதில் இருப்பதாக தெரியவில்லை. அதன் தொடர்ச்சியாகவே எனக்கு தோன்றிய சந்தேகங்களை கீழே தொகுத்துள்ளேன்.

பதில் (பூரணச்சந்திரன்) : மகாபாரதத்தில் எனக்கு ஒரு நிறைவு உண்டு. இராமாயணம் போல ‘உயர்ந்த’ ‘இலட்சியத் தலைவனைக் கொண்ட’ என்று வேஷம் போட்டுக் கொண்டு அது வரவில்லை. சாதாரண மக்களை, உள்ளது உள்ளது போல குற்றம் குறைகளுடன் படைப்பதில் அது இன்றைய நாவல் களை ஒத்துள்ளது. அதுதான் அதன் சிறப்பு. மகாபாரதத்தில் கண்ணன், பீஷ்மர் உள்பட எவனும் சிறந்தவனும் இல்லை, தலைவனும் இல்லை. எல்லாம் குறைகள் கொண்ட மனிதர்களே. கிருஷ்ணன் கீதை உரைத்ததும் அவன் இறைவன் அவதாரம் என்பதும் பின்னால் (நான்கைந்து நூற்றாண்டுகளேனும்) பின்னால் சேர்க்கப்பட்டது. அதனால் உன் முன்னுரையை பரிசீலிக்கலாம் என நினைக்கிறேன். மகாபாரதத் கிருஷ்ணன், துவாரகை நகரத்தைச் சேர்ந்த ஓர் இடையன். சாதாரண மனிதன்.
மகாபாரதம் போன்ற காவியங்களைப் படிக்கும்போது காவியப் பாத்திரம் இறைவன் என்று சொல்லி, அவன் செயல்களாக நிறைய இடைச் செருகல்கள் இருக்கும். அவற்றை ஒதுக்க வேண்டும். முதலில் நாம் அற்புதச் செயல்கள் தவிர்த்த நமக்கான ஒரு Plotஐ உருவாக்க வேண்டும். பிறகுதான் ஆய்வு செய்ய முடியும். இறைவன் செயல்களையோ, அற்புதச் செயல்களையோ யாராவது ஆய்வு செய்ய முடியுமா? நம் உச்சநீதிமன்றம் போல “நம்பிக்கை” என்று சொல்லிவிடுவார்கள்.
பார்ப்பனர்கள் இதை உயர்த்திப் பிடிப்பதில்‍லை. இராமன், சீதை பெயரை எல்லாம் வைத்துக் கொள்ளும் பிராமணர்கள் யாராவது தருமன், அர்ஜூனன், பீமன், திரெளபதி என்றெல்லாம் பெயர்வைத்துப் பார்த்திருக்கிறாயா? (கிருஷ்ணன் விதிவிலக்கு-கடவுள்). உண்மையில் மகாபாரதப் பெயர்கள் எல்லாம் கீழ்ச் சாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெயர்கள். அதுவே அதன் பண்பை எடுத்துக் காட்டுகிறது.

தலித்துகள் நிறையப்பேர் அர்ஜுனன், பீமன், திரவுபதி என்று பெயர் வைத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். திரவுபதி கீழ்ச்சாதிகள் வணங்குவதற்கென்று ஒதுக்கப்பட்ட கடவுள். நம் ஊரில் எல்லாம் கூட திரவுபதி கோயில் உண்டு. அவளும் ஒரு அம்மன் ஆகிவிட்டாள். திரவுபதி கோவிலில் சாதாரண மக்கள் பொங்கலிட்டு கூழ் ஊற்றுவதைப் பார்த்திருக்கலாம்.
அற்புதச் செயல்கள் தவிர்த்த ‘நமக்கான ஒரு பிளாட்’ என்பது முக்கியம். உதாரணமாக கிருஷ்ணன் திரவுபதிக்காக சேலையை வானத்திலிருந்து அனுப்பியதை அப்படியே ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும்? சபையிலிருந்த சாதாரண மக்கள் சிலர் சேலை கொடுத்து திரவுபதியைக் காப்பாற்றிய செயலாக இதைக் கொள்ளலாம். ஏனென்றால் ஆள்பவர்களைவிட ஆளப்படுபவர்களுக்கு மனிதாபிமானம் நிறைய உண்டு.

அதேபோல, அர்ஜுனனுக்கு சிவபெருமானே வேடன் வடிவத்தில் வந்து பாசுபத அஸ்திரம் கொடுத்தார் என்பது பாரதக் க‍தை. உண்மையில் ஏகலைவன் (ஏக-லவ்யன்) என்ற வேடன் அர்ஜுனனை விட அதி வில்வீரனாகத் திகழ்ந்திருக்கிறான். (அதனால் கட்டைவிரலை ஒரு பிராமணனுக்கு பலி கொடுக்க வேண்டிவந்தது.) அதனால் வில்வித்தையில் சிறந்த ஒரு வேடனே (மனிதனே) அர்ஜுனனுக்கு அஸ்திரம் வழங்கியிருக்கிறான் என்றே கொள்ளவேண்டும்.


பாரதத்தை நான் போற்றுவதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. அது மக்கள் கதை. என் காலம் வரை மகாபாரதக்கதை மேமாதத்தில் (கோடையில்) மழை வேண்டி கிராமப்புறங்களில் வாசிக்கப்படுவதும், கதாகாலட்சேபம் செய்யப்படுவதும் உண்டு. அன்றன்று (மதியம் 2 முதல் 5 வரை) நடத்திய பாரதக் கதையை இரவில் 10 மணிக்கு மேல் கிராமங்களில் கூத்துத்திடல்களில் ஆட்டமாக (தெருக்கூத்தாக)ப் போடுவார்கள். மக்கள் விடியவிடிய அவற்றைப் பார்ப்பது வழக்கம். இந்தச் சிறப்பு இராமாயணத்துக்குக் கிடையாது.
நான் திமிரியில் 1957 முதலாகப் படித்தபோது, அங்கு பாரதக்கதையும் தெருக்கூத்தும் தவறாமல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது.
மகாபாரதக் கதையை என்று கிராமங்களில் போடுவதை நிறுத்தினார்களோ, அன்றே தெருக்கூத்துக் கலை அழிந்து விட்டது.


கருத்தொடுக்குதல் புதிதன்று

இப்போதெல்லாம் மக்களின், ஊடகங்களின் பேச்சுச் சுதந்திரமும் வெளிப்பாட்டுரிமையும் நசுக்கப்படுகின்றது. காத்திரமான கருத்துத் தெரிவிக்கக்கூடிய அறிஞர்கள் காரணமின்றிச் சிறையில் அடைக்கப் படுகிறார்கள்.

இந்தப் போக்கு புதிதல்ல. ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே இருந்து வந்த ஒன்று. பின்னர் நமது சொந்த அரசியல் சட்டம் தயாரிக்கப்பட்ட பிறகும் (1950) அது மாறவில்லை. அம்பேத்கர் போன்றவர்கள் ஒரே இந்தியா என்ற சூத்திரத்தை வலியுறுத்தியதன் வாயிலாக மாநிலங்களின் கருத்துரிமைக்கு ஆப்பு வைத்து விட்டார்கள். கே. எம். முன்ஷி போன்றோர் கருத்துரிமையை வலியுறுத்திய அளவுக்கு அம்பேத்கர் பேச்சுச் சுதந்திரத்தை மிகுதியாக ஆதரித்ததில்லை என்பது வியப்பளிக்கலாம்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது அதற்கு எதிரில் இங்கிலாந்து போன்ற ஒற்றை அரசாவதா, அமெரிக்கா போன்ற கூட்டரசாவதா என்ற இரு வாய்ப்புகள் இருந்தன. இங்கிலாந்தை முழுமூச்சாகப் பின்பற்றிய நேரு, பட்டேல், அம்பேத்கர் போன்ற பெரியோர்களுக்கு அமெரிக்கக் கூட்டாட்சி மாதிரி ஏன் கண்ணில் படவில்லை என்று நான் யோசித்திருக்கிறேன். பல இனங்களும் மொழியினரும் வாழும் இந்த நாட்டில் அந்த முன்மாதிரியைப் பின்பற்றியிருந்தால் எத்தனையோ பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் அம்பேத்கர் போன்றவர்களும்கூட ஒற்றை இந்தியா என்ற ஒடுக்குதல் அமைப்பையே தேர்ந்தெடுத்தார்கள். அதிலிருந்து எந்த மாநிலமும் (பஞ்சாப், நாகாலாந்து, தமிழ்நாடு போன்ற) எந்த மாநிலமும் விலகிவிடக்கூடாது, அவர்கள் உரிமைகளை ஒடுக்கியேனும், அடிமையாக வைத்திருந்தேனும் ஒற்றை மைய அமைப்பு வேண்டும் என்று தேர்ந்தெடுத்தார்கள்.    

1962இல் சீனப் படையெடுப்புக்குப் பிறகு இந்தப் போக்கு அதிகரித்தது. 1963இல் பிரிவினை எதிர்ப்பு மசோதா என்ற ஒன்று நமது பாராளுமன்றத் தில் கொண்டுவரப் பட்டது. அதைப் பெரும்பான்மையினராக இருந்த காங்கிரஸ்காரர்களில் ஒருவரும் எதிர்க்கவில்லை என்பதில் வியப்பில்லை. நேரு அறிந்தே அந்த மசோதாவைக் கொண்டுவந்தார். மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது அது என்பதைப் பிறமாநிலத்தவரும் உணரவில்லை. திமுக மட்டுமே அதை எதிர்த்த நிலையில் அதைச் சட்டமாக்குதல் பற்றி விவாதித்த குழுவில் திமுகவைச் சேர்க்கவில்லை. ஏனெனில் திமுகவை ஒடுக்குகின்ற ‘திமுக எதிர்ப்பு மசோதா’ என்றுதான் அது அழைக்கப்பட்டது. மசோதாவைக் கொண்டு வந்த நேருவை நோக்கி

எங்களோடு தயவுசெய்து வாதிடுங்கள், மோதுங்கள், உங்கள் கருத்தை ஏற்கச் செய்யுங்கள். நாங்கள் திருத்தமுடியாதவர்கள் என்று நீங்கள் நினைத்தால், எங்களை விட்டுவிடுங்கள், மக்களிடம் செல்லுங்கள், அவர்களை அதை நம்பச் செய்யுங்கள். நீங்கள் இப்படிச் செய்தால்தான் அது நிஜமான ஜனநாயகம். பிற விஷயங்களில் நீங்கள் ஈடுபட்டால், அதற்குப் பெயர் ஜனநாயகம் அல்ல, வேறு ஏதோ ஒன்று.

என்று பாராளுமன்றத்தில் பேசினார் திரு. செழியன். இந்திய ஜனநாயகத்தில் “இந்தியா என்பது கூட்டாட்சி, ஒற்றை அரசு அன்று” என்பதை வலியுறுத்திப் பாராளுமன்றத்தில் எழுந்த முதல் குரல் என்று இதைக் கூறலாம். இதேபோல இந்திரா காந்தியும் தமிழகத்தின் உரிமையை மதிக்காமல் கச்சத் தீவினை ஸ்ரீலங்காவுக்குக் கொடையளித்ததைப் பார்த்திருக்கிறோம். பின்னர் ராஜீவ் காந்தியின் காலத்தில் இலங்கைத் தமிழர்களை ஒடுக்க ‘ஐபிகேஎஃப்’ என்ற பெயரால் படை அனுப்பப்பட்ட வரலாறு இங்குள்ள நடுத்தர வயதினர்க்கேனும் தெரியும் என்று கருதுகிறேன். அதன்பின் இந்திய வரலாறு என்பதே தமிழகத்தை ஒடுக்குகின்ற வரலாறு என ஆகிவிட்டது. மாநில அரசின் உரிமைகள் எதையும் மத்திய அரசு மதியாமை என்பதை எழுபதாண்டுகளாகவே கண்டுதான் வருகிறோம். இன்று அதன் உச்சநிலையை அடைந்திருக்கிறோம். வடக்கிற்கும் தெற்கிற்கும் உள்ள முரண்பாடு பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, சமூகநீதி எய்துதல், மதச் சகிப்புத்தன்மை, பார்ப்பன எதிர்ப்பு போன்ற பல நிலைகளில் செயல்படுகிறது. குறிப்பாக சித்தர், சிந்தனையாளர் மரபில் வந்த பன்முகச் சிந்தனையை ஆதரிக்கும் நமது பண்பாடு வேறு, மதத்திலும் அதிகாரத்திலும் ஒற்றைத் தன்மைதான் வேண்டும், அதற்கு சமஸ்கிருதம் மட்டுமே பயன்படும் என்ற வடநாட்டுச் சிந்தனை மரபு வேறு.


முக்தி பவன்

இந்த இந்திப் படத்தின் தலைப்பிலேயே அதன் அர்த்தம் இ்ருக்கிறது. மிக எளிய  கதை. ‘மோட்சத்துக்கான விடுதி’. தயானந்த குமார், ஒரு எழுத்தாளர்-கவிஞர், 77 வயது(தான்). ஒரு நாள் இரவு தனது அந்திம நாள் வந்துவிட்டதாகக் கனவு காண்கிறார். தன் மகன் ராஜீவிடம் தான் காசியில் (வாராணசி) தான் இறக்க வேண்டும் என்று கூறி தன்னை அழைத்துச் செல்ல வேண்டுகிறார். ராஜீவின் ஆபீஸ் வேலை அதிகம். பெண்ணுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படிப் பல வேலைகள் இருந்தாலும் தந்தையின் சொல்லைத் தட்டமுடியாமல் காசிக்குப் போகிறார். இருவரும் கங்கைக் கரையிலுள்ள முக்தி பவன் என்ற தங்கும்விடுதியில் சென்று ஓர் இருண்ட சிறிய அறையில் தங்குகிறார்கள். அங்கே 15 நாள்தான் தங்க முடியும். அதற்குள் உயிர் போனால் சரி, இல்லை என்றால் திரும்பிப் போய்விட வேண்டும். (வேடிக்கை என்னவெனில், காசிக்குச் சாக வேண்டும் என்று வருபவர்கள் யாரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லக்கூடாது. எங்கேயாவது அநாதையாகத்தான் போக வேண்டும், இல்லை தற்கொலைதான். இதுதான் பழைய மரபு.) 15 நாட்கள் கழிகிறது. தயாவுக்கு ஒருமுறை காய்ச்சல் வந்து அவர் போய்விடுவார் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். மருமகளும் பேத்தியும்கூட வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர் வாழ்க்கையின்மீது மிகப்பெரிய அளவு பற்றுக் கொண்டவர். பிழைத்துக் கொள்கிறார். விடுதி உரிமையாளர் அவர் பெயரை மாற்றி(!) மீண்டும் தங்குவதற்கு அனுமதி தருகிறார். தயாவுக்கு அங்கே வாழ்க்கைமீது பெரும் பற்று வருவதற்குக் காரணம் அங்கே 18 ஆண்டுகளாகத் தங்கி சமைத்துப் போட்டுக் கொண்டிருக்கும் விமல் என்ற பெண்மணி. ராஜீவினால் இருபது நாட்களுக்கு மேல் தங்க முடியாத நிலை. அலுவலகம் அழைக்கிறது. மிகுந்த மனவருத்தத் துடன் தந்தையை விட்டுச் செல்கிறார். அவர் சென்ற சில நாட்களில் தயா இறந்து விடுகிறார். அனைவரும் வந்து வழியனுப்பி வைக்கிறார்கள்.

குடும்பத்தில் ஒருவராக இல்லாமல் இருந்தாலும், வந்தவுடனே தயாவுக்கு ருசியான உணவளிக்கும் விமல் முதிர்ச்சி உடையவராகக் காண்கிறார். தயாவை விட நன்கு சிந்திக்கிறார். தயாவின் பேத்தி யாரோ ஒருவனைக் காதலிக்கிறாள். ராஜீவ் தான் பார்க்கும் மாப்பிள்ளைக்கு மணமுடிப்பதாக இருக்கிறார். விமல் சொல்கிறார்-“அவரவர் வாழ்க்கையை அவரவர்தான் வாழவேண்டும்.” தந்தை இறக்குமுன் வீட்டில் அவரது நோட்டிலும் இதே குறிப்பைத்தான் ராஜீவ் காண்கிறார். “அவரவர் தங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். அதன்படி நடங்கள்”.

பாத்திரப் படைப்புகள் அற்புதம். ஓரிரண்டு காட்சிகளிலேயே பேத்திக்கும் தாத்தாவுக்குமான பிணைப்பு அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்போ, அற்புதமோ அற்புதம். மிகச் சாதாரணமான சந்தர்ப்பங்களில் மிக இயல்பான நடிப்பில் (நம் தமிழ்ப்படங்களை நினைக்கும்  போது எரிச்சல் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை). யாரும் நடிப்பதாகவே தோன்றவில்லை. அவ்வளவாக ஒட்டாத கேரக்டர் லதா (ராஜீவின் மனைவி, மாமனாரின் இறப்பைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருக்கிறார்! அதைப் பற்றி கணவன் மனைவிக்குள் வரும் சிறுசண்டை பிரமாதம்). இறப்பைப் பற்றி இருந்தாலும் வாழ்க்கையை மிக இயல்பாக ரசிக்கும் படம். தயாகூட, முக்தி பவனுக்குச் சென்றவுடனே அங்கிருப்போரோடு ராம பஜன் செய்கிறார், டிவி பார்க்கிறார். ஆனால் வேலைகளுக்கிடையில் சிக்கிக் கொண்டிருக்கும் ராஜீவ்தான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தத்தளிக்கிறார்.

இவ்வளவெல்லாம் சிறப்புகள் இருந்தாலும், தயாவின் வாழ்க்கைப் பார்வை சுத்தமான இந்துத்துவப் பார்வை. ஒரு கவிஞரால் எப்படி ஓர் இருண்ட அறையில் தங்கி கங்கையில் போவதற்கான நாளை எதிர்பார்க்க முடிகிறது? ஒரு சுதந்திரமான ஆத்மாவைக் கொண்ட எழுத்தாளன், “என்னைக் கொண்டுபோய் ஒரு காட்டில், இயற்கைக் கிடையில், பசுந்தரையில், பறவைகளுக்கிடையில், மான்களுக் கிடையில் விட்டுவிடு” என்று கேட்பானே ஒழிய குகை போன்றதொரு அறையில் ராம்ராம் பஜனையோடு அந்திம நாளை எதிர்பார்த்துக் கிடக்க மாட்டான். இந்தப் பார்வை ஒன்றுதான் கதையோடு நான் ஒட்டவிடாமல் இடித்தது. இன்னும் படிமங்கள் குறியீடுகள்… போன்ற எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசலாம். உதாரணமாக, தனது சொந்தப் பெயருடன்கூட தயாவால் இறக்கமுடியவில்லை என்ற உண்மை. பிறகு, சாகச் செல்லும் தயா, போகும் வழியில் குட்டையில் நீந்தும் வாத்துகளுக்கு உணவு போடுவது. காசியில் நுழைந்தவுடனே (சாவியின் பாணியில் “அங்கே போயிருக்கிறீர்களா?” எனக் கேட்கலாம். ) அதன் புகழ்பெற்ற சந்துகள், இடித்துக் கொண்டுசெல்லும் மக்கள் (நல்லவேளை, எங்கும் வியாபித்திருக்கும் பசுக்களைக் காட்டவில்லை)–இவர்களைத் தாண்டி முக்தி பவனுக்குச் செல்லும் இவர்கள் வந்த ரிகஷா ஒரு சந்துக்குள் செல்லமுடியாமல் (தண்டவாள அ‍ரைக் கம்ப அடைப்பு) நிற்கும் முன்பாக ஒரு இறங்கு பாதையில் செல்கிறது. அதிலிருந்து வெளியேறுபவர்கள் ரிகஷாவைத் தள்ளிக் கொண்டு மேலே சென்றுதான் ஏற வேண்டும். இந்த மோசமான இறக்கம் தான் முக்தி–பாதையின் ஏற்றம்தான் வாழ்க்கை என்கிறமாதிரி ஒரு பிம்பம் கிடைக்கிறது. காசியின் அரிச்சந்திர காட், எரிக்கும் மயானம். அதன் கரையிலேயே பசுக்களை நிறுத்திவைக்கும் இடம், எரிக்கும் விறகுகள் குவித்துவைக்கப் பட்டிருப்பது…இப்படிப் பல.

படம் ஏறத்தாழ 1 மணி 40 நிமிடம். தயாவின் கேரக்டரைவிட மனத்தில் நிலைத்து நிற்பது மகன் ராஜீவின் (அதில் ஹுசேன்) கேரக்டர் தான். இயக்குநர் யாரோ ஒரு சிந்தி நபர். பெயர் பூட்டியானி. இசை இடறவில்லை. காட்சிப்படுத்தலும் படத்தொகுப்பும் சிறப்பாக உள்ளன.
இந்தப் படத்தை நான் பார்க்க அனுப்பிவைத்த நண்பர் திரு.மனோகரன் (மனோ) அவர்களுக்கும், செவ்வேளுக்கும் நன்றி.