ராபின் ஹூட்

தமிழ்நாட்டில் பல நாட்டுப்புறக் கதைகள் வழங்கிவருவதை அறிவோம். அது போல் இங்கிலாந்திலும் பல பழங்கதைகள் வழங்கிவருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ராபின்ஹூட் என்பது. இந்தப் பெயரை வாசகர்கள் பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். சந்தர்ப்பவசத்தினால், தான் கொள்ளைக் காரன் என்றோ, கொலைகாரன் என்றோ பெயரெடுத்து வாழ்ந்தாலும், பிறருக்கு உதவுகிறவர்கள் உண்டு. அல்லது பிறருக்கு உதவி செய்யப் போய் தான் கெட்ட பெயரெடுத்துக் கொள்ளும் நல்லவர்களும் உண்டு. மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி போன்ற திரைப்படங்கள் இம்மாதிரி வந்துள்ளன. புதுமைப் பித்தனும்கூட சங்கிலித்தேவன் என்ற திருடன் ஒரு கிழவிக்கு உதவியதைப் பற்றிய கதை எழுதியுள்ளார். நாமக்கல் கவிஞர் எழுதிய மலைக்கள்ளன் (எம்ஜிஆர் நடித்து திரைப்பட மாக வந்தது) ராபின்ஹூடைத் தழுவிய கதைதான்.

ஆங்கிலத்தில் ராபின்ஹூடைப் பற்றிப் பழங்காலத்தில் பல இசைப் பாடல்கள் (இவற்றை ballads என்பார்கள்) பாடப்பட்டுள்ளன. பின்னர் பல நாடகங்களும் திரைப்படங்களும் வந்துள்ளன. இப்படிப்பட்ட கதைகள் பல எல்லா மொழிகளிலும் உள்ளன.

ராபின்ஹூட் என்பவன் உயர்ந்த குடும்பத்தில் பிறந்த ஒருவன். அவன் காலத்தில் நார்மன்கள் எனப்படும் ஃபிரெஞ்சு இனத்தினர் இங்கிலாந்தில் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி புரிந்து வந்தார்கள். அவர்கள் ஆட்சி புரியாத இடங்களில் சாக்ஸன்கள் எனப்படும் இங்கிலாந்தின் சொந்த மக்கள் ஆட்சியில் இருந்தனர். இருவருக்கும் போராட்டம் நடந்த காலம் அது. சாக்சன் அரசனான சிங்கம்போன்ற வலிய இதயம் கொண்ட ரிச்சட் என்பவன் சிலுவைப் போருக்குப் போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது. அவனிடம் பணியிலிருந்த சாக்சன் பிரபு ஒருவர் போராட்டத்தில் கொல்லப்பட்டு அவர் மாளிகையும் கொளுத்தப்படுகிறது. அப்போது அநாதையாகி விட்ட அவரது மகன்தான் ராபின்ஹூட். அருகிலுள்ள காட்டில் ஷேர்வுட் காட்டில் மறைந்து வாசம் செய்கிறான்.

ராபின்ஹூட், வில் வித்தையில் வல்லவன். அவனைச் சுற்றி பாதிக்கப்பட்ட ஓர் இளைஞர் பட்டாளம் சேர்கிறது. அவர்கள் அருகிலிருந்த நாட்டிங்காம் என்ற நகரத்தின் தீய தலைவனை எதிர்த்து, அவனைக் கொள்ளையடித்து ஏழைமக்களுக்கு உதவுகிறார்கள். சட்டபூர்வமாக அரசாங்கத்தால் அவனைப் பிடிக்க முடியாததால் அவனுக்கு ‘அவுட்லா’ – சட்டத்திற்குக் கட்டுப்படாத வன், தேடப்படுபவன் என்ற பெயர் கிடைக்கிறது, நல்லவர்கள் அவனைப் போற்றுகிறார்கள், தீயவர்கள் அவனைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

ராபின்ஹூட் கதையில் முக்கியத் தீயவர் பாத்திரங்கள்: நாட்டிங்காம் நகரத் தலைவன் (ஷெரீப்), அவனுக்கு உதவும் பேராயர், ரிச்சட் ஆட்சியில் இல்லாத சமயத்தில் ஆண்டுவந்த அவன் தம்பி ஜான் ஆகியோர். ராபின்ஹூடைச் சேர்ந்தவர்களாக லிட்டில் ஜான், ஃப்ரையர் டுக், வில் ஸ்கேர்லட், ஆலன்-எ-டேல், ராபின்ஹூடின் மனைவி மரியான் ஆகியோர் உள்ளனர். ராபினுடன் இவர்கள் ஒவ்வொருவரின் சந்திப்பும் அதற்குப் பிறகு அவர்கள் அவனோடு சேர்ந்து ஈடுபடும் வீரசாகசச் செயல்களும் தனித்தனிச் சம்பவங்களாக அமைந்துள்ளன. இறுதியில் ராபின்ஹூட், சிலுவைப் போரிலிருந்து திரும்பிவந்த ரிச்சட் அரசனின் படையில் சேருகிறான், ஆனால் சூழ்நிலையால் பிரிகிறான். நிறைவாழ்க்கைக்குப் பிறகு அவனது மரணத்துடன் கதை முடிகிறது. சில கதைப் பதிப்புகள் அவன் இறந்தது கி.பி.1242இல் என்று சொல்கின்றன.

இக்கதையின் ஒருசில சம்பவங்களைப் பார்ப்போம். ஒருநாள் ஒரு கசாப்புக் கடைக்காரன் உடையில் நாட்டிங்காம் சந்தைக்கு ராபின் செல்கிறான். மக்களுக்கு மிகமிக மலிவாக மாமிசத்தை விற்கிறான். பிற கடைக்காரர்கள் முதலில் இவனைப் பார்த்து கோபப்படுகிறார்கள். அவர்கள் அனைவர்க்கும் பணத்தை வாரி இறைப்பதால், பிறகு யாரோ பிழைக்கத் தெரியாத பைத்தியம் என்று விட்டுவிடுகிறார்கள்.

நாள் முடிவில் அந்த வணிகக் குழுவினருக்கு நகரத்தலைவனின் வீட்டில் விருந்து நடைபெறுகிறது. அதற்கு ராபினையும் அழைக்கிறார்கள். அவனை நகரத் தலைவனின் வலப்புறம் மரியாதைக்குரிய இடத்தில் அமரவைக்கி றார்கள். நகரத்தலைவனிடம் தன்னிடம் மிகப்பெரிய நிலப்பரப்பில் இன்னும் நிறையப் பிராணிகள் இருப்பதாக அளந்துவிடுகிறான் ராபின். அவற்றை மலிவாக வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற பேராசையால் ஐநூறு பொற்காசுகளையும் சில ஆட்களையும் அழைத்துக் கொண்டு மறுநாள் காலை ராபினுடன் கிளம்புகிறான் ஷெரீப். ராபின் அவனைத் தன் காட்டுக்குள் அழைத்துச் சென்று அங்கு ஓடுகின்ற நூற்றுக்கணக்கான மான்களைத் தன் பிராணிகள் என்று காட்டுகிறான். அப்போதுதான் தான் ஏமாந்துவிட்டது தலைவனுக்குப் புரிகிறது. இருந்தாலும் ராபின், அவனது இளைஞர் பட்டாளம் முன்னால் அவனால் என்ன செய்ய முடியும்? அவனுக்கு நல்ல விருந்தளித்து விட்டு பணத்தைக் கேட்கிறான் ராபின். ஷெரீப் எதுவும் தராததால் தானே அவனிடமிருந்த ஐநூறு பொற்காசு களையும் பிடுங்கிக் கொண்டு அவன் மனைவி முந்தியநாள் அளித்த சிறந்த விருந்துக்காக நன்றி தெரிவித்துப் பாராட்டி அவனை அனுப்பி வைக்கிறான்.

இப்படிப் பல சம்பவங்கள். குறிப்பாக ஆலன்-எ-டேல் என்பவனுக்கு அவன் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துவைக்கும் காட்சி மிகச் சிறப்பானது. அதேபோல் தன்னைப் பிடிக்க முற்படும் பிஷப்பை ஏமாற்றித் தப்பும் காட்சிகளும். இம்மாதிரிக் காட்சிகள் திரைப்படங்களில் மிகுதி.

ராபின்ஹூட் மிக நீண்டகாலம் தன் இளைஞர் பட்டாளத்துடன் நன்றாக வாழ்கிறான். இறுதியில் அவனுக்கு நோய் ஏற்படுகிறது. தன்னை குணப் படுத்த வேண்டி, பக்கத்து கிராமத்தின் கன்னியாமடத் தலைவியிடம் அழைத்துச் செல்லுமாறு சொல்கிறான் ராபின். அவளுக்குப் பல உதவி களை ராபின் செய்திருந்தாலும் அவள் நன்றிகெட்டவளாக இருக்கிறாள்.

இங்கிலாந்தில் அக்காலத்தில் நோய்வாய்ப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் உடலில் இருந்து மிகுதியாக இரத்தத்தை வெளியேற்றிவிடுவார் கள். அதனால் கெட்டரத்தம் நீங்கி அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை. ராபினுக்கு நோய் வந்ததை அவனைக் கொல்வதற்குச் சரியான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறாள் மடத்தலைவி. அவன் இறப்பதற்கு வேண்டிய அளவு காயத்தை உண்டாக்கிவிடுகிறாள். ஓரிரவு முழுவதும் காத்திருந்த லிட்டில் ஜான், காலையில் சென்று பார்க்கும்போது ராபின் இறக்கும் நிலையில் இருக்கிறான். தான் கடைசியாக அம்புவிட வேண்டும், அது தன் கடைசி ஆசை என்று ராபின் சொல்கிறான். அப்படியே அவனை அம்பு எய்யுமாறு கூற, அது மிகச் சமீபத்திலேயே விழுகிறது. அது விழுந்த இடத்தில் தன்னைப் புதைக்குமாறும் மடத்தலைவியை மன்னித்து விடுமாறும் கூறிவிட்டு ராபின்ஹூட் இறந்துபோகிறான்.

பொதுவாக ஏழை பங்காளர்களாக இருக்கும் வீரசாகசத் தலைவர்கள் அதிகாரத்தை எதிர்ப்பதால் இளம் வயதிலேயே தண்டிக்கப்பட்டு மாண்டு போவதாகவே தமிழ்நாட்டுக் கதைகள் அமைந்துள்ளன. நிறைவாழ்வு வாழ்ந்து முதுமையில் இறப்பதாக வரும் ராபின்ஹூட் போன்ற கதைகள் இங்கு அரிதினும் அரிது.


விசித்திர உலகில் ஆலிஸ்

குழந்தைகளை மிகவும் கவர்ந்த நூல்கள் ஆங்கிலத்தில் சில உண்டு. அவற்றில் முதன்மையானது விசித்திர உலகில் ஆலிஸ்- “ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்”. ஆலிஸின் விசித்திர உலகம் குழந்தைகளை மட்டும் அல்ல, அவர்களைவிட அதிகமாகப் பெரியவர்களை இதுவரை கவர்ந்துள்ளது என்பது விசித்திரம்.

புனைகதைகளில் பலவகை உண்டு. நாம் இதுவரை பார்த்த ஆலிவர் ட்விஸ்ட், ராபின்சன் குரூஸோ, டிராகுலா, உலகைச் சுற்றி எண்பது நாட்கள், பிரதாப முதலியார் சரித்திரம், கலிவரின் பயணங்கள், டான் குவிக்ஸோட் இவை யாவுமே புனைகதையின் ஒவ்வொரு வகையை எடுத்துக் காட்டுபவை. அதுபோல லூயி கேரல் 1865இல் வெளியிட்ட இந்தக் கதையும் அர்த்தமறு (நான்சென்ஸ்) இலக்கியம், வெறுங்கற்பனை (ஃபேண்டசி) இலக்கியம் என்பதற்கு ஒரு சான்றாக அமைகிறது.

“சீட்டுக்கட்டு ராணி மாப்பிள்ளை தேடி ஊர்வலம் போனாள் ஒரு நாளில், கண்ணாலே ஜாடை செய்து கையோடு என்னைக் கொண்டு போனாள், தோழி வயது அறுபதுக்கு மேலே” என்று ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல். அது போன்ற பைத்தியக்காரத் தனம்தான் இந்தக் கதை.

ஆலிஸ் வளரிளம் பருவச் சிறுபெண். ஆற்றங்கரையின் பொன்னிற மாலையில் அவள் அக்காவுடன் ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது அவளுக்கு அரைத் தூக்கம். கண் மயங்குகிறது. வெயிஸ்ட்கோட் அணிந்த ஒரு வெள்ளை முயல் அவளைத் தாண்டி தன் பாக்கெட் வாட்சைப் பார்த்துக் கொண்டே, நேரமாகி விட்டதே என்று சொல்லிக்கொண்டு ஓடுகிறது. ஒரு குழிக்குள் செல்கிறது. அதைப் பின் தொடரும் ஆலிஸ், தானும் அந்தக் குழிக்குள் விழுந்து, ஒரு பெரிய ஹாலை அடைகிறாள்.

அங்கு அவள் புகமுடியாத ஒரு சிறிய கதவு. அதன் சாவி ஒரு மேஜைமீது உள்ளது. கதவுக்கப்பால் ஓர் அழகிய நந்தவனம் அவளை வா வா என அழைக் கிறது. எதிரில் “என்னைக்குடி” என எழுதப்பட்ட ஒரு பாட்டில். அதிலுள்ளதைக் குடித்தபோது சிறிய கதவுக்குள் செல்லும் அளவுக்குச் சுருங்கிவிடுகிறாள். ஆனால் சாவி இப்போது உயரமான மேஜை மீதல்லவா இருக்கிறது? “என்னைச் சாப்பிடு” என்று எழுதப்பட்ட ஒரு கேக்கைப் பார்க்கிறாள். அதை உண்டவுடன், மிகப் பெரிய உயரத்திற்கு வளர்ந்துவிடுகிறாள். மறுபடியும் கதவுக்குள் போகமுடியாதே என்று அழுது அழுது அவள் கண்ணீரே வெள்ளமாகப் பெருகி ஓர் ஏரியாகி விடுகிறது. அழும்போதே உருவம் மீண்டும் சுருங்கித் தன் கண்ணீர் வெள்ளத்தில் விழுகிறாள். ஒரு எலி அவளுக்கு வழிகாட்டி கரைக்கு அழைத்துச் செல்கிறது.

ஆலிஸ் மறுபடியும் வெள்ளை முயலைக் காண்கிறாள். முயல் அவளைத் தன் வீட்டுக்குச் சென்று சில பொருட்களை எடுத்துவரச் சொல்கிறது. முயல் வீட்டில் அவள் ஒரு பாட்டிலில் இருந்ததைக் குடிக்க, வீட்டின் அளவு வளர்ந்து விடுகிறாள். அவள்மீது காட்டுமிருகங்கள் கற்களை எறிகின்றன. ஆனால் விந்தை, அந்தக் கற்கள் கேக் ஆக மாறுகின்றன! ஒன்றை எடுத்துச் சாப்பிடும் ஆலிஸ், மீண்டும் அளவில் மிகச் சுருங்கிவிடுகிறாள். நந்தவனத்திற்குள் அலைகிறாள். ஒரு காளான் மீது அமர்ந்து ஜாலியாக ஹூக்கா பிடிக்கும் கம்பளிப்புழுவைப் பார்க்கிறாள். அது காளானின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு அளவில் வளரச் செய்பவை என்கிறது. காளானின் ஒரு பகுதியிலிருந்து தின்ற ஆலிஸின் கழுத்து மட்டும் நீண்டு மர உயரத்தை அடைகிறது. ஒரு புறா தன் முட்டையைத் தின்னவந்த பாம்பு அவள் என்று எண்ணித் தாக்குகிறது. உடனே காளானின் மற்றொரு புறத்திலிருந்து தின்று ஆலிஸ் இயல்பான உயரத்தை அடைகிறாள்.

மீண்டும் நந்தவனத்தில் ஆலிஸ், ஒரு துரைசானியின் வீட்டை அடைகிறாள். அப்பெண்மணி குழந்தைக்குப் பால் தருகிறாள், செஷயர் பூனை ஒன்றையும் வளர்க்கிறாள். ஆனால் ஆலிஸிடம் கடுமையாகப் பேசுகிறாள். பிறகு ராணியுடன் தான் ‘க்ராக்கெட்’ விளையாட்டை விளையாடப் போவதாகப் புறப்படுகிறாள், போகும்போது ஆலிஸிடம் தன் கைப்பிள்ளையைத் தருகிறாள், அது பன்றிக் குட்டியாகிறது! அதைக் காட்டில் விட்டு, ஆலிஸ் மீண்டும் செஷயர் பூனையைச் சந்திக்கிறாள். அது, அனைவரும், ஆலிஸ் உள்பட, பைத்தியங்கள் என்கிறது. மார்ச்முயலின் வீட்டுக்கு வழி சொல்லிவிட்டு அது வெறும் புன்னகையாகத் தேய்ந்துபோகிறது.

ஆலிஸ் மார்ச்முயலின் வீட்டுக்குச் செல்லும்போது, அதுவும், உயரத்தொப்பி அணிந்த பித்துப்பிடித்த ஒருவனும் (மேட்-ஹேட்டர்), அணில்போன்ற ஒரு பிராணியும் (டார்மவுஸ்) ஒரு தேநீர்விருந்தைச் சுவைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மூவரும் காலத்துடன் சண்டையிட்டதால் தேநீர்-அருந்து-நேரத்திலேயே இருக்குமாறு சபிக்கப்பட்டுள்ளன என்பதை உணர்கிறாள். அவைகளிடமிருந்து விடுபட்டு காட்டிற்குள் செல்பவள், ஒரு மரத்தில் கதவு  இருப்பதைக் கண்டு அதற்குள் புக, பழைய ஹாலுக்கே வந்துவிட்டாள்!

தான் எடுத்துவைத்திருந்த காளானில் கொஞ்சம் தின்று குள்ளமாகி, சாவியை எடுத்து, மறுபடியும் நந்தவனத்திற்குள் வருகிறாள். அங்கு அவள் சீட்டுக்கட்டு இதய ராணியுடன் க்ராக்கெட் விளையாட வேண்டி வருகிறது. அடிக்கும் தடியாக ஃப்ளமிங்கோ பறவைகள், பந்துகள் காட்டுப்பன்றிகள்! இந்தப் பைத்தியக்கார ஆட்டத்திற்குள் செஷையர் பூனை மீண்டும் வருகிறது. ஆலிஸுடன் உரையாடும் போது இடையில் புகும் இதயராஜாவை அது அவமதிப்பதால் அதன் தலையை வெட்டுமாறு ராஜா ஆணையிடுகிறான். ஆனால் இப்போது அந்தப் பூனையே வெறும் தலையாக இருக்கிறது! எனவே வெட்ட முடியவில்லை.

இடையில் துரைசானி ஆலிஸுடன் நட்புப்பாராட்ட வருகிறாள். இதயராணி அவளைத் துரத்திவிட்டு ஆலிஸ் போலி-ஆமையுடன் உரையாட வேண்டும் என்கிறாள். போலி ஆமையைக் காண க்ரிஃபின் என்ற மிருகத்தைத் துணையாக அனுப்புகிறாள். போலி ஆமை, க்ரிஃபின் ஆகியவற்றோடு ஆலிஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே விசாரணை நடக்க இருப்பதாக செய்தி வருவதால், க்ரிஃபின் அவளை க்ராக்கெட் அரங்கிற்குக் கொண்டு செல்கிறது.

அங்கு சீட்டுக்கட்டு ஜேக், ராணியின் உணவைத் திருடிவிட்டான் என்று விசாரணை நடக்கிறது. சாட்சியம் கூறப் பலர் அழைக்கப் படுகின்றனர். இடையில் வெள்ளைமுயல் ஜேக்கின் கடிதம் ஒன்றை ராஜாவிடம் அளிக்கிறது. அதில் கவிதை எழுதப்பட்டிருப்பதாக ராஜா சொல்கிறான். அவன் விளக்கத்தை ஆலிஸ் மறுக்கிறாள். ராணி கோபமடைந்து ஆலிஸ் தலையை வெட்டுமாறு ஆணையிடுகிறாள். ஆனால் ஆலிஸ் மிகப் பேருருவமாக வளர்ந்து, காலால் ராணி, ராஜா, ஜேக் உள்பட (சீட்டுக்கட்டினை) உதைத்துத் தள்ளுகிறாள்.

திடீரென்று பார்த்தால், ஆற்றங்கரையில், மாலைநேரத்தில், அவள் தன் அக்கா மடியில் படுத்திருக்கிறாள்! அவளிடம் தன் கனவைச் சொல்லிவிட்டுத் தேநீர் அருந்தச் செல்கிறாள்.

கதையின் சம்பவங்களின் ஊடாக நமக்கு அர்த்தம் எதுவும் புலப்படாவிட்டாலும், இக்கதை, சிறுபருவ வெள்ளை மனம் தவிர்க்கவியலாமல் ஏதோ ஒரு நிலையில் இல்லாமற் போவதையும், அதனால் ஏற்படும் துயரத்தையும் பேசுவதாக விமரிசகர்கள் சொல்கிறார்கள். மானிட வாழ்க்கையும் இக்கதையின் சம்பவங்கள் போல அர்த்தமற்ற புதிராக இருப்பதையும் இக்கதை எடுத்துக் காட்டுவதாகச் சொல்கிறார்கள்.

பாரதி தமது குயில்பாட்டில், குரங்கு, மாடு இவற்றுடன் காதல் புரியும் குயிலைக் காட்டுகிறார். இறுதியாக, “ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க, யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?” என்று கேட்கிறார்.

நாமும் பாரதியைப் பின்பற்றி, ஆலிஸ் கதைக்கு “விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ” என்று கேட்கலாம்.


காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட்

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான சுவாரசியமான தொடக்கத்தில் அமைகிறது. உதாரணமாக, கலிவரின் பயணங்களில், லிலிபுட் தீவை அவன் அடைவதும் அங்கு நிகழும் செயல்களும் ஒருவித கவர்ச்சியை அந்நாவலுக்கு ஊட்டி, அந் நாவலுக்குள் நம்மை இழுக்கின்றன. அதுபோலவே ஒரு வீரன், காற்றாலைகளை அரக்கர்களாக எண்ணி அவற்றுடன் ஈட்டியால் சண்டையிடுகின்ற ஒரு காட்சி என்னைப் பள்ளி வயதில் அந்தக் கதையைப் படிக்குமாறு தூண்டியது. அந்தக் கதைதான் டான் குவிக்சோட். (இதை டான் க்விஜோட்டே என்று படிக்க வேண்டும் என்பார்கள் இங்குள்ள ஸ்பானிய அறிஞர்கள். நமக்கு ஆங்கில உச்சரிப்புதான் சரிவரும்.)

இந்தக் கதையை எழுதியவர் ஸ்பெயின் நாட்டவர். மிகெல் டி செர்வாண்டிஸ் என்பது அவர்  பெயர். இதுதான் ஐரோப்பிய மொழிகளில் முதல் நாவலாகக் கொள்ளப்படுகிறது. 1605இல் இதன் முதல் பாகமும் 1615இல் இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்தன.   

நைட் (knight) எனப்பட்டவர்கள் (இன்றைய திரைப்படங்களில் இருபத்தைந்து பேரை ஒரே வீச்சில் அடிக்கும் ஹீரோ போன்ற) அக்காலப் போர்வீரர்கள். இவர்கள் பற்றிய கற்பனைச் சாகசக் கதைகள் ஸ்பெயினில் பதினாறாம் நூற்றாண்டில் மிகுதியாக உலவி வந்தன. அவற்றை மிகுதியாகப் படித்துத் தன்னை இழந்த (கட்அவுட் வைத்துப் பாலாபிஷேகம் செய்யும் இக்காலப் பைத்தியங்கள் (FANaticS) போன்ற) ஒருவன் தான் நம் டான் குவிக்சோட். அவன் பெயர் அலான்சோ. ஸ்பெயின் நாட்டின் லா மாஞ்சா பகுதியில் வசித்த ஒரு நடுவயது ஆள். (டான் என்றதுமே இன்றைய திரைப்பட “அட்டைக்கத்தி” நாயகர்களில் பலர் திரையில் வைத்துக் கொள்ளும் பெயர் அது என்பது ஞாபகம் வரவில்லையா?)

அத்தகைய “நைட்”டுகளில் தானும் ஒருவன் என்று எண்ணிக் கொள்ளும் அவன் வாள், ஈட்டியுடன் சாகசங்கள் புரியப் புறப்பட்டு விடுகிறான். “நைட்”-டுகளுக்கு ஒரு குதிரை, காதலி (இளவரசி), ஏவலாள் ஆகியோர் கட்டாயம் வேண்டும். இவனுக்கு ஒரு நலிந்த பெண் குதிரை, ரோசினான்டே, கிடைக்கிறது. காதலியாக ஒரு ஏழை விவசாயப் பெண்ணை (டுல்சீனியா) இளவரசி எனக் கற்பனை செய்துகொள்கிறான். அதன்பின் அவன் சண்டைகள் யாவும் டுல்சீனியாவை மையமாகக் கொண்டே நிகழ்கின்றன. உதாரணமாக இவனது முதல் பயணத்தில் ஒரு சத்திரத்தில் தங்குகி றான். அதை அரண்மனை என்று நினைத்துக்கொள்கிறான். ஒரு திருடனைக் காப்பாற்றுகிறான். சில வணிகர்கள் டுல்சீனியாவை ஏளனம் செய்தார்கள் என்று சண்டைக்குப் போய் அடிவாங்குகிறான். அவனது நண்பர்கள் சிலர் அவனை வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். அவன் படித்த புத்தகங்கள்தான் அவனது நிலைக்குக் காரணம் என்று பல புத்தகங்களைக் கொளுத்தியும் விடுகிறார்கள்.

ஆனால் டான் அவ்வளவு எளிதாகத் தளர்பவன் அல்ல. அவனது ஏவலாளாகச் சற்றே தெளிவான, ‘பொதுக்’கான ஆள் ஒருவன் (சாங்கோ பாஞ்சா) வாய்க்கிறான். அவனுடன் ஏற்படும் முதல் அனுபவம்தான் மேற்சொன்ன காற்றாலைத் தகடு களை அரக்கர்கள் என்று கருதிச் சண்டை புரிந்த கதை. இப்படி அவன் பயணத்தில் பல அனுபவங்கள். முடிவெட்டுபவன் கிண்ணத்தைத் தன் தலைக்கவசம் என்று பறித்துக் கொள்கிறான். வீரர்களின் கற்பனை ஒழுக்கவிதிகளைக் கடைப்பிடிப்பதா கக் கருதிக் காதலர்களை ஒன்று சேர்க்கிறான், பலவிதத் தொல்லைகளில் மாட்டிக் கொள்கிறான். ஏறத்தாழ அவனுக்குக் கிடைக்க வேண்டிய பல தண்டனைகளைப் பாவம், சாங்கோ ஏற்றுக் கொள்ள நேர்கிறது. டான் குவிக்சோட்டின் இரண்டு நண்பர்கள்- ஒரு மதகுருவும், மயிர்மழிப்பவனும்- அவனைக் காப்பாற்றி அழைத்துச் செல்பவர்கள்.

பத்தாண்டுகள் பிறகு வெளியான நாவலின் இரண்டாம் பகுதியில் வரும் நபர்கள் அனைவரும் டான் குவிக்சோட்டின் செயல்களைப் பற்றி முன்பே படித்து அறிந்தி ருக்கிறார்கள். அதனால் அவன் செல்லுமிடங்களில் எல்லாம் அவன் புகழ்(!) அவனுக்கு முன்னே செல்கிறது. இடையில் கதாசிரியர் (செர்வாண்டிஸ்) வேறு கதைக்குள் நுழைந்து, இது ஒரு மொழிபெயர்க்கப்பட்ட உண்மைக்கதை, ஹமீட் பெனென்கேலி என்ற மூர் இனத்து ஆசிரியர் எழுதியது, என்று ‘உதார்’ விடுகிறார்!

ஒரு தீய நகரத்தலைவன் (ட்யூக்)- நகரத் தலைவி (டச்சஸ்) ஆகியோரிடம் டானும் சாங்கோவும் மாட்டிக் கொண்டு தொல்லைப்படுகிறார்கள். டுல்சீனியாவை விவசாயப் பெண்ணாக ஒரு மந்திரவாதி மாயமாக மாற்றிவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். அந்த மாயத்திலிருந்து அவளை மீட்க சாங்கோ தன்னைச் சாட்டையால் ஆயிரக் கணக்கான முறை அடித்துக்கொள்ள நேர்கிறது. பிறகு ஒரு இளவரசியையும் அவள் காதலனையும் சிறைப் பிடித்து வைத்திருக்கும் ஒரு கற்பனை அரக்கனுடன் சண்டையிட மரக்குதிரைமீது ஏறி இருவரும் செல்கிறார்கள்.

கதையின் ஒரே ஒரு ஆறுதலான அம்சமாக, சாங்கோவுக்கு ஒரு நகரத்தை ஆளும் வாய்ப்பு கிடைக்கிறது. மிக நன்றாகவே பத்து நாட்கள் ஆட்சி செய்யும் அவன், பணம் இன்றித் திரும்பி வந்து அவமானப்படுகிறான். ஒரு வறுமை வாய்ப்பட்ட ஆட்சியாளனாக இருப்பதைவிட மகிழ்ச்சியான ஏவலாளனாக இருப்பதே சிறந்தது என்று முடிவு செய்கிறான்.

நகரத்தலைவி வீட்டில் ஒரு இளம்பெண் சாங்கோவின்மீது காதல் கொள்கிறாள். ஆனால் அவன் அவள் காதலை மறுக்கிறான். இந்த ஜோடியின் சந்திப்புகள் பார்ப்போர்க்கு மிகுந்த நகைச்சுவைக் காட்சிகளாக அமைகின்றன.

மறுபடி தன் பயணத்தைத் தொடர்கிறான் டான். பார்சிலோனாவில், மாறுவேடத் தில் அவன் நண்பன் ஒருவனே “வெண்ணிலவின் வீரன்” என்ற பெயர் பூண்டு அவனுடன் போர் செய்து அவனைத் தோற்கடிக்கிறான். தோற்ற டான் தன் இல்லத்துக்குத் திரும்பி வருகிறான்.

நோய்வாய்ப்பட்ட அவன், தான் இதுவரை ஈடுபட்ட செயல்கள் யாவும் மடத்தனம் என்பதை உணர்ந்து, தன்னிலை அறிந்து, தன் செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டு இறக்கிறான். அவனது இறப்போடு “நைட்”டுகளின் கதையும் முடிவுக்கு வருகிறது.

இறுதியாகக் கதைக்குள் நுழையும் பெனென்கேலி, டான் குவிக்சோட்டின் வரலாற்றைத் தான் எழுதியதற்கு வீரசாகசக் கதாநாயகர்களின் (“நைட்”டுகளின்) மறைவை அறிவிப்பதே முக்கியக் காரணம் என்று கூறுகிறார்.

இறுதியாக இந்த நாவல் நமக்குச் சொல்ல வருவதுதான் என்ன? “தமிழ் இளைஞர் இளைஞிகளே, வெறும் கதைகளில், கவர்ச்சிகளில், நடிகர்-நடிகையர் ஆட்டங்களில் மயங்கி வாழ்க்கையை இழக்காதீர்கள். உண்மையை நேருக்கு நேராகப் பார்த்து உங்கள் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.” அவ்வளவுதான்.


ஆனந்த மடம்

வந்தே மாதரம்!ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!வந்தே மாதரம்!

என்ற பாட்டு அகில இந்திய வானொலியில் நாளின் தொடக்கத்தில் ஒலிப்ப தைப் பலரும் கேட்டிருப்பீர்கள். இப்பாட்டை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜீ. (சட்டோபாத்யாய என்ற சொல் வங்காளியில் சாட்டர்ஜீ என்று சுருக்கமாக வழங்கப்படும்.) ஆனந்த மடம் என்ற அவரது நாவலின் இடை யில் இப்பாட்டு இடம்பெறுகிறது. இதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கீதமும் ஆகும். (பின்னர்தான் ஜனகணமன என்பது ஏற்கப்பட்டது.) இப்பாட்டை பாரதியார் இருமுறை மொழிபெயர்த்திருக்கிறார்.

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!

என்று தொடங்குவது பாரதியின் முதல் மொழிபெயர்ப்பு.

1860கள் தொடங்கி வங்கமொழியில் நாவல்கள் எழுதியவர் பங்கிம் சந்திரர். துர்கேச நந்தினி, கபால குண்டலா, மிருணாளினி போன்ற இவரது நாவல் கள் ஆனந்த மடத்திற்கு முன்னாலேயே எழுதப் பட்டவை. இவை தமிழில் 1950களில் த.நா. குமாரஸ்வாமி போன்ற ஆசிரியர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இந்தக் கதை வங்க மொழியில் 1952இல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. ஹேமேந் குப்தா இயக்கியிருந்தார். பிருத்வி ராஜ்கபூர், கீதா பாலி ஆகியோர் நடித்திருந்தனர்.

வங்கத்தில் 1770இல் கடும்பஞ்சம் ஏற்பட்டது. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலம். அப்போது அங்கே பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து ‘சந்நியாசிகள் எழுச்சி’ ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் கதை நடக்கிறது. கதையின் முக்கியப் பாத்திரம் மகேந்திரன். அவன் ஒரு ஜமீன்தார். பாதச்சின்ன(ம்) என்ற ஊரில் வசிக்கி றான். அவன் மனைவி கல்யாணி. குழந்தை சுகுமாரி. பஞ்சம் ஏற்பட்ட காரணத்தினால் அவன் குடும்பத்தோடு அருகிலுள்ள நகரத்திற்குப் பிழைப்புக்காக இடம்பெயர நேர்கிறது. வழியில் தம்பதியினர் பிரிகின்றனர். கல்யாணி குழந்தையுடன் கொள்ளைக்காரரிடமிருந்து தப்பிக்கக் காட்டுவழி யில் ஓடுகிறாள்.

சத்யானந்தா (கதைத்தலைவர்) கட்டளைக்கிணங்க அவளை ஜீவானந்தா என்பவன் கொள்ளைக்காரரிடமிருந்து காப்பாற்றுகிறான். இடையில் சத்யாவைக் கிழக்கிந்தியக் கம்பெனி சிப்பாய்கள் துரத்துகிறார்கள்.

ஜீவா, குழந்தையைத் தன் தங்கை நிம்மியிடம் விட்டுவிட்டு, கல்யாணியை  தங்கள் ஆசிரமமாகிய ஆனந்த மடத்தில் சேர்க்கிறான். அதில் உள்ளவர்கள் ‘சந்தன்’ என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதில் எல்லாருக்கும் ‘ஆனந்தா’ என்ற பட்டம் உண்டு. முஸ்லிம்களைக் கொல்வதையும் நவாபிடமிருந்து வங்க தேசம் விடுதலை பெறுவதையும் கடமையெனக் கொண்ட வர்கள். (அக் “கடமைக்கு” ஆங்கிலேயர் இடையூறாக இருப்பதால் அவர்களை எதிர்க்கிறார்கள்).

மகேந்திரனும் சந்நியாசிகள் கூட்டத்தில் சேர்ந்து வங்க “விடுதலை”க்காகப் போராட முனைகிறான். தற்செயலாக அவனும் ஆனந்த மடத்திற்கே வந்து சேர்கிறான். கணவன்-மனைவி இருவரும் இணைகின்றனர். சத்யாவின் கட்டளைப்படி மகேந்திரனின் சொத்து ஆனந்தமடத்திற்குப் போர்க் கருவி செய்யும் ஆலையைத் தொடங்கப் பயன்படுகிறது. ஏற்கெனவே மடத்தில் இருக்கும் பவானந்தா, ஒரு சிறந்த வீரனாகவும் சந்நியாசிகள் படைக்குத் தலைவனாகவும் இருக்கிறான்.

நிம்மியுடன் சாந்தி என்றபெண் இருக்கிறாள். அவள் அநாதை, வீராங்கனை, பிரம்மச்சாரிணி. ஜீவானந்தாவைக் காதலிக்கிறாள். சந்நியாசிகளின் படை யில் சேர விரும்புகிறாள். ஆனால் சத்யா அவளைத் தடுக்கிறார். சத்யா, ஜீவா, பவா, ஞானா முதலிய நான்கு பேர் மட்டுமே கையாளக்கூடிய ஒரு பெரிய வில்லை அவள் எளிதாகக் கையாளுவதால் சத்யா அவளைப் படையில் சேர அனுமதிக்கிறார்.  

சத்யா, மகேந்திரனுக்கு மாதாவின் மூன்று வடிவங்களை ஆசிரமத்தின் அடுத்தடுத்த மூன்று அறைகளில் காட்டுகிறார். முதல் வடிவம், எப்படி அவள் இருந்தாள் என்பது (ஜகதாத்ரி). நடுஅறையில் இருப்பவள், இப்போது எப்படி இருக்கிறாள் என்ற வடிவம் (காளி). மூன்றாவது அறையில் இருப்ப வள், இனிமேல் எப்படி இருக்கப் போகிறாள் என்ற வடிவம் (துர்க்கை).

கொஞ்சம் கொஞ்சமாகச் சந்நியாசிகளின் பலம் பெருகுகிறது. ஆட்கள் நிறையப் பேர் ஆனந்த மடத்தில் சேர்கிறார்கள். அதனால் மடத்தை ஒரு சிறிய கோட்டைக்கு இடம் பெயர்க்கிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியினர் அந்தக் கோட்டையைத் தாக்குகிறார்கள். கோட்டையினுள் பவானந்தாவுக் குத் துணையாக ஜீவானந்தாவும் சாந்தியும் இருக்கின்றனர்.

அவர்களிடம் போர்த் தளவாடங்கள் மிகுதியாக இல்லை. சந்நியாசிகளுக்குப் படைப்பயிற்சியும் கிடையாது. எனினும் கோட்டையைச் சுற்றி ஓடிய நதியை அரணாக வைத்து கம்பெனிச் சிப்பாய்களைத் தடை செய்கிறார்கள். நதியைக் கடந்து கோட்டைக்குள் வர ஒரு பாலம் இருக்கிறது. பாலத்திற் குள் புகுந்துவிட்ட கம்பெனிச் சிப்பாய்கள், பின்வாங்கிச் செல்வது போல் நடிக்கிறார்கள். அதை நம்பிய சந்நியாசிகள் கும்பல், கோட்டைக் கதவைத் திறந்துகொண்டு பாலத்தில் முன்னேறி வருகிறது. உடனே கம்பெனிச் சிப்பாய்கள் பீரங்கியால் அவர்களைச் சுடுகிறார்கள். சந்தியாசிகள் தரப்பில் பெரிய இழப்பு ஏற்படுகிறது. பவானந்தா இறந்துவிடுகிறான்.

இருப்பினும் ஜீவா தலைமையிலான படை கம்பெனிச் சிப்பாய்களின் ஆயு தங்களைக் கைப்பற்றி அவர்களைத் திருப்பிச்சுடுகிறது. இதனால் கம்பெனிச் சிப்பாய்கள் பின்வாங்கி ஓடுகின்றனர். இப்படியாக கலகப் படையினரின் முதல் தாக்குதல் முடிகிறது. போரில் ஜீவாவுக்கு பலத்த காயம் ஏற்படுகி றது. சத்யானந்தா கொடுத்த ஒரு மூலிகையைக் கொண்டு அவன் காதலி சாந்தி, ஜீவாவைக் காப்பாற்றுகிறாள். போரின் இறுதியில் ஜீவாவும் சாந்தி யும் காட்டுக்குச் சென்று துறவித் தம்பதிகளாக வாழ்வதாக முடிவு செய்கின்றனர்.

கதை இறுதியில் சத்யானந்தா தன் குருவிடம் பேசுகிறார்:

சத்யானந்தா: நான் எதிரியின் இரத்தத்தால் தாய்நாட்டின் மண்ணை நனைத்து அதை வளப்படுத்துவேன்.

குரு: யார் உனக்கு எதிரி? இங்கே பகைவரே இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியமைப்பதற்கு உதவிசெய்து உன் கடமையை முடித்துவிட்டாய். அவர்கள் நமக்கு நண்பர்கள். மேலும் நீண்டநாள் பிரிட்டிஷ்காரர் களை யாரும் எதிர்த்துச் சண்டை போட முடியாது. 

இக்கதை, சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களுக்கு அக்காலத்தில் பெரிய உத்வேகமாக அமைந்திருந்ததாம்! காரணம், இதில் வங்கநாட்டின் விடுதலை என்பதில் “இந்து”க்கள், சந்நியாசிகள் முன்னணிப் படுத்தப்படுகிறார்கள். முஸ்லிம்கள் எதிரிகள். ஆங்கிலேயர் “நண்பர்கள்” ஆகிவிட்டார்கள்!

‘தாய்’ எனச்சொல்லும் இடங்களில் எல்லாம் பங்கிம், இந்தியத் தாயை அல்ல, வங்கத் தாயைத்தான் குறிக்கிறார். “சுஜலாம்” பாட்டில் அக்கால பிளவுபடாத வங்கத்தின் மக்கள் தொகையான ஏழுகோடி பேருக்குத் தாய் அவள் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார். பாரதியார் போன்ற சுதந்திரப் போர்வீரர்கள் பிற்காலத்தில் அச்சொல்லைக் “கோடிகோடி மக்களின் தாய்” எனத் திருத்தி ‘இந்தியத்தாய்’ ஆக்கினார்கள். ஓர் ‘இந்து’ நாவலை ‘இந்தியச் சுதந்திர நாவல்’ ஆக்கிவிட்டார்கள்.

“வங்கத் தாய்க்குச் சுதந்திரம் வேண்டும்” என்பதற்கு பதில், “தமிழ்த் தாய்க்குச் சுதந்திரம் வேண்டும்” என்று எவரேனும் அக்காலத்தில் எழுதியிருந்தால் அது எப்படி நோக்கப்பட்டிருக்கும்? என்ன இருந்தாலும் ‘மாமியார்’ பார்வையில், தமிழ்த்தாய், இந்தியத்தாய் ஆக முடியுமா?


கலிவரின் பயணங்கள்

அரபுக்கதைகளில் சிந்துபாத் என்பவன் ஏழு விசித்திரமான கடற்பயணங்களை மேற்கொண்டது பற்றிப் பலரும் படித்திருப்பார்கள். அதேபோலத்தான் கலிவர் என்பவனின் பயணங்களை எழுதியிருக்கிறார் ஜானதன் ஸ்விஃப்ட் என்ற ஆங்கில எழுத்தாளர்.

என் சிறுவயதில் கலிவரின் லிலிபுட் பயணம் என்று சிறுவர்க்குரிய கதையாகவே படித்தேன்.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள் சேர்ந்த கிளப் ஒன்றினால் கடல்பயண நூல்களை ஏளனம் செய்யும் விதமான நூல் எழுதவேண்டும் என்ற பணி அவருக்கு அளிக்கப்பட்டதாகவும் அதன்படி இந்தக் கதையை 1725இல் ஸ்விஃப்ட் எழுதிமுடித்ததாகவும் சொல்லப்படுகிறது.

கலிவர் என்பவன் ஒரு கப்பலின் மருத்துவன். அவன் நான்கு கடற் பயணங்களை மேற்கொள்கிறான். ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும் ஒரு புயல் வீசுகிறது. நான்கு பயணங்களுமே கலிவருக்கு அவன் வாழ்க்கையில் புதிய அனுபவங்களை யும் பார்வைக் கோணங்களையும் தருகின்றன. (இங்கிலாந்தை, ஐரோப்பாவை ஏளனம் செய்ய அவனுக்குப் புதிய வாய்ப்புகளையும் தருகின்றன!)

முதல் கடற்பயணம்

கலிவர் தன் பயணத்தின்போது கப்பல் உடைந்து லிலிபுட் என்ற தீவைச் சென்று அடைகிறான். லிலிபுட் ஆட்கள் ஐந்து அங்குலத்திற்கும் குறைவான உயரம் உள்ளவர்கள். ஆகவே அங்கு அவன் பிரம்மாண்ட ராட்சதனாகத் தென்படுகிறான். அவர்களுக்குச் சில உதவிகளையும் செய்கிறான். முக்கியமாக பிளஃபுஸ்கு என்ற அருகிலுள்ள தீவினரின் படையெடுப்பிலிருந்து காப்பாற்றுகிறான். தொடக்கத்தில் லில்லிபுட் மக்கள் மிகவும் அன்பானவர்களாகத் தென்படுகிறார்கள் என்றாலும் விரைவில் அவர்கள் மிக மோசமான, சின்னப்புத்தி கொண்ட பிராணிகளாக இருப்பதை அறிந்துகொள்கிறான். ஒரு தீயை அணைத்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற வேண்டி அவன் தனது சிறுநீரைப் பயன்படுத்தியதற்காக அவன் பிற “குற்றங்களுக்கிடையில்” இராஜத்துரோகக் குற்றம் சாட்டப்படுகிறான். பிளஃபுஸ்கு தீவுக்குத் தப்பிச் சென்று ஒரு படகினைக் கண்டுபிடித்துக் கடலில் போகும்போது ஒரு கப்பலினால் காப்பாற்றப்பட்டு இங்கிலாந்தை அடைகிறான்.

இரண்டாவது கடற்பயணம்

இரண்டாவது பயணத்திலும் கப்பல் ஆட்களால் கைவிடப்பட்டு ப்ராப்டிங்னாக் என்ற தீவுக்குப் போய்ச் சேர்கிறான். அங்கு வளரும் புற்களே மரமளவு உள்ளன. மனிதர் 75 அடி உயரம் இருக்கிறார்கள். லில்லிபுட்டில் உள்ள மனிதர்கள் எப்படி இவனுக்கு அளவில் மிகச் சிறியவர்களாக இருந்தார்களோ, அது போலவே இவன் இந்தத் தீவில் உள்ள இராட்சத மனிதர்களுக்கு மிகச் சிறிய பிராணியாக இருக்கிறான். தானும் லிலிபுட் மக்களுக்கு முன்பு மிக வெறுப்பூட்டும் ஒருவனாகவே இருந்திருக்க வேண்டும் என்பதும் அவனுக்குப் புரிகிறது.

அவனைக் கண்டெடுத்த மனிதன் காட்சிப் பொருளாக அவனை வைத்துப் பணம் சம்பாதிக்கிறான், பிறகு அரசியிடம் விற்றுவிடுகிறான். அவனுக்கு ஒரு சிறு பெட்டி வீடு கட்டிததரப்படுகிறது. அதை எங்கும் கொண்டுசெல்கிறார்கள். அங்குள்ள அரசனிடம் அவன் ஐரோப்பாவைப் பற்றிக் கூறும்போது அந்த அரசன் கோபமடை கிறான். அப்போதுதான் இங்கிலாந்து உண்மையில் எப்படி இருக்கிறது என்பதற்கும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குமான வேறுபாடு அவனுக்குப் புரிகிறது.

ஒருமுறை அவனைக் கடற்கரைக்குக் கொண்டுசெல்லும்போது, ஒரு கழுகு அவனிருக்கும் பெட்டியைத் தூக்கிச் சென்று கடலில் போட்டுவிடுகிறது. வழக்கம்போல் ஏதோ ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டு இங்கிலாந்தை அடைகிறான்.

மூன்றாம் கடற்பயணம்

இச்சமயம் கலிவர் லாபுடா என்ற பறக்கும் தீவுக்குச் செல்கிறான். அதனால் ஆளப்படுகின்ற லக்னாக், க்ளப்டக்ட்ரிக் என்ற தீவுகளும் உள்ளன. க்ளப் டக் ட்ரிப் தீவுக்கு அவன் செல்லும் போது, அவனுக்கு இறந்தவர்களைத் திரும்ப அழைக்கும் சக்தி கிடைக்கிறது. சீஸர், ப்ரூடஸ், அரிஸ்டாடில், டே கார்ட்டே போன்றோரைச் சந்திக்கிறான். அதனால் அன்று எழுதப்பட்டுள்ள வரலாறுகள் பொய் எனத் தெரிந்து கொள்கிறான். லாபுடாவின் மக்கள் மிகுதியாகச் சிந்திப்பவர்களாகவும் பலவழி களில் சகிக்க முடியாதவர்களாகவும் உள்ளனர். பயனற்ற ஆய்வு களைச் செய்கின்றனர். அங்கே ஸ்டல்ட் ப்ரக் என்ற மக்களையும் சந்திக்கிறான். அவர்கள் முதுமை அடைந்த பின்னரும் இறப்பே இல்லாமல் உடல் பலமும் மனோபலமும் குன்றி செய்வதறியாமல் மிகுந்த சோர்வுடனேயே இருக்கிறார்கள் என்பதையும் மரணமற்ற வாழ்வு எவ்வளவு அருவருப்பானதாக இருக்கும் என்பதையும் காண்கிறான். பிறகு ஒரு வணிகனுடன் ஜப்பானுக்கு வந்து தன் நாட்டை அடைகிறான்.

நான்காம் கடற்பயணம்

நான்காம் கடற்பயணத்தில் கலிவர் ஹூய்ன்ஹ்னிம்கள் என்ற குதிரையினம் வாழ்கின்ற தீவுக்குச் சென்றுசேர்கிறான். அங்கே உள்ள குதிரைகள் பகுத்தறிவு மிக்கவையாக, பேசுகின்றவையாக உள்ளன. அங்குள்ள மக்கள் யாஹூ எனப்படுகிறார்கள். (Yahoo.com இந்தப் பெயரைத்தான் வைத்துள்ளது). அந்தக் குதிரையினத்தின் ஒழுங்கான, சீர்மையான, தூய்மையான, தொல்லையற்ற சமூகம், யாஹூ மக்களின் கெடுநோக்கும் விலங்குத்தன்மையும் கொண்ட சமூகத்திற்கு முற்றிலும் மாறாக உள்ளது. கலிவருக்கு இப்போது மனித இனத்தின் தீயகுணங்கள் அனைத்தும் புரிகின்றன. எனவே அவன் ஹூய்ன்ஹ்னிம்களோடு பல ஆண்டுகள் தங்கிவிடுகிறான். அவைகளிடத்தில் ஏற்படும் ஈடுபாட்டின் காரணமாகத் திரும்பி நாடுசெல்ல அவனுக்கு விருப்பமே இல்லாமல் போகிறது. எப்படியோ அத்தீவை விட்டுப் பிரிந்து ஒரு போர்ச்சுகீசிய கப்பலில் தன் நாட்டை அடைந்துவிடுகிறான்.

எனினும் பிற மனிதர்களை எல்லாம் யாஹூக்களாகவே கருதி அருவருப்பு அடைகிறான். அவனது குடும்பமே அவனுக்குப் பிடிக்காமல் போகிறது. எஞ்சியுள்ள நாட்களைத் தனிமையிலும், குதிரைகளுடன் பேசிக்கொண்டும் கழிக்கிறான்.

மனித இனத்தின் முரணுண்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த அங்கதக் கதையாக இது நோக்கப்படுகிறது.

லாபுடாவின் பயனற்ற அறிவியல் ஆய்வுகள் இன்றும் நமது மனித இனத்தின் (அமெரிக்க, ஐரோப்பிய, நாசா ஆய்வுகள் போன்ற) பயனற்ற ஆய்வுகளை கேலி செய்வனவாக உள்ளன.

ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்தையும் கடுமையாக விமரிசனம் செய்து சாடுகிறார். மனிதன் இயல்பாகவே கெட்டவனா, அன்றி கெட்டவனாக ஆக்கப் படுகிறானா என்றும் ஆராய்கிறார்.

கலிவர் பயணத்தின் ஒவ்வொரு பகுதியும் முன்னதற்கு முரணாக அமைகிறது. உதாரணமாக, கலிவர் தன் நான்கு பயணங்களினூடே வரிசையாக பெரியவனாக>  சிறியவனாக> அறிவுள்ளவனாக> அறிவற்றவனாக மாறுகிறான். அவன் பார்வை யிலும் ஐரோப்பிய மக்கள் இனம் முதலில் சிறந்த, ஆற்றலுடைய, அழகிய ஒன்றாக இருந்த நிலை போகப்போக மாறி, இறுதியில் கெடுநோக்கு மட்டுமே கொண்ட, அருவருப்பான, இழிவான யாஹு இனமாக மாறிப் போகிறது.

எனினும் இத்தகைய அறிவுக்கூர்மை கொண்ட விவாத வாசகச் சிக்கல் தன்மைகள் எதுவுமின்றி, இன்றுவரை சிறார்க்கு ஏற்ற கதையாக கலிவரின் லிலிபுட் பயணக்கதை மட்டும் (மிகச் சில சமயங்களில் ப்ராப்டிங்னாகும் சேர்த்து) பிரசுரம் செய்யப்பட்டுள்ளது என்பதுதான் இதன் சிறப்பாகும்.


புதுநெறி ஆத்திசூடி

பாவேந்தர் பாரதிதாசன் வழங்கிய புதுநெறி ஆத்திசூடி

  1. அனைவரும் உறவினர்
  2. ஆட்சியைப் பொதுமைசெய்
  3. இசைமொழி மேலதே
  4. ஈதல் இன்பம்
  5. உடைமை பொதுவே
  6. ஊன்றுளம் ஊறும்
  7. எழுது புதியநூல்
  8. ஏடு பெருக்கு
  9. ஐந்தொழிற்கு இறைநீ
  10. ஒற்றுமை அமைதி
  11. ஓவியம் பயில்
  12. ஔவியம் பெருநோய்
  13. கல்லார் நலிவர்
  14. காற்றினைத் தூய்மைசெய்
  15. கிழிப்பொறி பெருக்கு
  16. கீழ்மனம் உயர்வுசெய்
  17. குள்ள நினைவுதீர்
  18. கூன்நடை பயிலேல்
  19. கெடுநினைவு அகற்று
  20. கேட்டு விடையிறு
  21. கைம்மை அகற்று
  22. கொடுத்தோன் பறித்தோன்
  23. கோனாட்சி வீழ்த்து
  24. சதுர்பிறர்க்கு உழைத்தல்
  25. சாதல் இறுதி
  26. சிறார்நலம் தேடு
  27. சீர்பெறு செயலால்
  28. சுவைஉணர் திறங்கொள்
  29. சூழ்நிலை நோக்கு
  30. செல்வம் நுண்ணறிவாம்
  31. சேய்மை மாற்று
  32. சைகையோடு ஆடல்சேர்
  33. சொற்பெருக்கு ஆற்றல் கொள்
  34. சோர்வு நீக்கு
  35. தளையினைக் களைந்து வாழ்
  36. தாழ்வு அடிமைநிலை
  37. திருஎனல் உழுபயன்
  38. தீங்கனி வகைவிளை
  39. துன்பம் இன்பத்தின்வேர்
  40. தூயநீ ராடு
  41. தெருவெலாம் மரம்வளர்
  42. தேன்எனப் பாடு
  43. தைக்க இனிது உரை
  44. தொன்மை மாற்று
  45. தோல்வி ஊக்கம்தரும்
  46. நடுங்கல் அறியாமை
  47. நால்வகைப் பிறவிபொய்
  48. நினைவினில் தெளிவுகொள்
  49. நீணிலம் உன்இல்லம்
  50. நுண்ணிதின் உண்மைதேர்
  51. நூலும் புளுகும்
  52. நெடுவான் உலவு
  53. நேர்பயில் ஆழ்கடல்
  54. நைந்தார்க்கு உதவிசெய்
  55. நொடிதோறும் புதுமைசேர்
  56. நோய் தீ யொழுக்கம்
  57. பல்கலை நிறுவு
  58. பார்ப்பு பொதுப்பகை
  59. பிஞ்சுபழுக் காது
  60. பீடு தன்மானம்
  61. புதுச்சுவை உணவுகாண்
  62. பூப்பின் மணங்கொள்
  63. பெண்ணோடு ஆண்நிகர்
  64. பேய்இலை மதம்அலால்
  65. பைந்தமிழ் முதல்மொழி
  66. பொழுதென இரவுகாண்
  67. போர்த்தொழில் பழகு
  68. மறைஎனல் சூழ்ச்சி
  69. மாறுவது இயற்கை
  70. மிதியடியோடு நட
  71. மீச்செலவு தவிர்
  72. முகச்சரக்காய் வாழ்
  73. மூப்பினுக்கு இடம்கொடேல்
  74. மெய்கழிவு அயற்கின்னா
  75. மேலை உன் பெயர்பொறி
  76. மையம் பாய்தல் தீர்
  77. மொடுமாற்றுப் பொது இன்னா
  78. மோத்தலில் கூர்மை கொள்
  79. வறுமை ஏமாப்பு
  80. வாழாட்கு வாழ்வு சேர்
  81. விடுதலை உயிக்குயிர்
  82. வீடுஎனல் சாதல்
  83. வெறும்பேச்சு பேசேல்
  84. வேளையோடு ஆரஉண்
  85. வையம் வாழ வாழ்

நன்றி-பாவேந்தர்பாரதிதாசன் பேரவை


மேகதாது அணை

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்துவருகிறது. கடந்த காலங்களில் பல்வேறு காலகட்டங்களில் கர்நாடக அரசு முயற்சித்தும் தமிழக அரசின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டும் வந்தது. 1996ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. மேகதாதுவில் 2 நீர்மின் திட்டங்களையும் ஓகேனக்கல்லில் தேசிய நீர்மின் கழகம் அமைக்கும் என்கிற திட்டத்தையும் வைத்தது. தமிழ்நாடும் கர்நாடகாவுக்கு இதுகுறித்து பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின.

ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்நாடகா தாங்களாகவே மேகதாது திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்துபோது அந்த பேச்சுவார்த்தையிலிருந்து தமிழ்நாடு விலகிக்கொண்டது. ஒன்றியத்தில் பாஜக வந்தபிறகு அணை கட்டுவதற்கான முயற்சிகள் வேகம்பிடிக்க ஆரம்பித்தது . காவிரி நடுவர் ஆணைய உத்தரவை அமுல்படுத்த உச்சநீதிமன்றம் தெரிவித்து அரசிதழில் வெளியான பிறகு, கர்நாடகாவிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அணை கட்டுவதற்கான வேகம் அதிகரித்துள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தில் எழும் எதிர்ப்பை சமாளிக்க ஒன்றிய அரசு யோசித்து உருவாக்கிய திட்டம்தான் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம். மேகதாதுவில் அணை காட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சினையும் கிடையாது என கர்நாடக அரசு சொல்வது உண்மைக்குப் புறம்பானது.

மேகதாது அணை, கிருஷ்ணராஜ சாகர்-கபினி மற்றும் மேட்டூர் அணைகளுக்கு இடையே கட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மொழியில் “balancing reservoir” என்று அழைக்கப்படும் மேகதாது அணை கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்த்தேக்கங்களிலிருந்து வரும் நீரை தேக்கி குடிநீர் மற்றும் மின்னுற்பத்திக்கு பயன்படுத்துவதுதான் நோக்கம் என கர்நாடக அரசு சொல்கிறது.

தமிழ்நாட்டின் பார்வையில் மேகதாது அணையின் அடிப்படையே சிக்கல்தான். கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்தேக்கத்திலிருந்து வெளிவரும் “நீர்வழிப் பாதையில்” 67 டிஎம்சி கொள்ளளவில்  மேகதாது அணை அமைய இருப்பதால் கர்நாடகாவிற்கும் மேட்டூர் அணைக்கும் இடைப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர்  தமிழகத்திற்கு கிடைக்காமல் போகும்.

கடந்த 25 ஆண்டுகளில்,குறிப்பாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீர் இந்த இரு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீர்தான். கர்நாடகா திறந்துவிடும் நீர் கிடையாது. கிருஷ்ணராஜ சாகர் – மேட்டூர் அணைகளுக்கு இடையே உள்ளநீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து ஓடிவரும் நீரால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது.

இதுதான் கர்நாடகாவை உறுத்துகிறது.இதை குறிவைத்துதான் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் துடியாய்த் துடிக்கிறது.

கோதாவரி தண்ணீரை தமிழகத்திற்கு தருவதற்கு நதியின் வடிகால் பகுதியில் உள்ள ஐந்து மாநிலங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டாலும் தண்ணீர் வருமா என்பது பெரிய கேள்விதான். இந்தியாவின் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளதை நாம் நினைவில் கொண்டால் எந்த கோதாவரி தண்ணீரை திருப்புவீர்கள் என கேள்வி கேட்கலாம்.

ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசு நடத்தும் இந்த சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படவேண்டும், கோதாவரி-காவிரி இணைப்பு குறித்த எந்த கோரிக்கையையும் வைக்க தேவையில்லை.

தமிழ்நாடு அரசு கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் என்கிற அறிவிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது. கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தபோது ஓடிச்சென்று வரவேற்றார் அன்றைய முதல்வர்  எடப்பாடி.

நதிகளை இணைக்கிற அறிவிப்பே காவிரியில் நமக்கு உள்ள உரிமையை மறுக்கச் செய்வதற்கான வேலை என அப்போதேபூவுலகு  உள்ளிட்ட அமைப்புகள் எச்சரித்திருந்தனர். கடந்த வாரத்தில் மேகதாது அணை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த நாடகத்தைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம்.

இவ்விதமாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கூறியுள்ளது.

எந்த நதிநீரும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. இப்போது கிருஷ்ணா நதிநீர் சென்னைக்குக் கிடைப்பதைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். எல்லா நதிகளும் ஆந்திரத்தின் மையத்தில் உள்ளன. அங்கிருந்து தமிழ்நாட்டு எல்லைக்குள் நீரைக் கொண்டுவருவது அரிது, வர முடிந்தாலும், 90 சதவீத நதிநீர் இணைப்புப் பகுதி ஆந்திரத்தின் எல்லைக்குள் இருப்பதால் அவர்களே பயன்பெறுவார்கள் (திருடிக் கொள்வார்கள் என்பது சற்றே வன்மையான தொடர்).

இனிமேலும் கர்நாடகா எந்த அணையும் கட்டாமல் தடுப்பதும் நீரைச் சிக்கனமாகக் கையாள்வதும் மட்டுமே தமிழகத்தின் டெல்டாப் பகுதியின் நீர்த்தேவையை நிறைவு செய்யும். கோதாவரி இணைப்பே சாத்தியமில்லை என்கிறபோது கங்கை-காவிரி இணைப்பு முதலிய திட்டங்கள் பற்றிப் பேசவே வேண்டாம். ஏறத்தாழ கடல்மட்ட அளவில் உள்ள கங்கைச் சமவெளியிலிருந்து 1000 மீட்டருக்குமேல் தக்கணப் பீடபூமியில் நீரை ஏற்றி, பிறகு கோதாவரிச் சமவெளியில் இறக்கி, கிருஷ்ணா, பெண்ணை சமவெளியைத் தாண்டி, மீண்டும் 500 மீட்டருக்கு மேல் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைத் தாண்டி, அப்புறம் தமிழ்நாட்டுப் பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாற்றாங்கரைப் பகுதிகளைத் தாண்டி காவிரியில் கொண்டு வந்து இணைப்பார்களாம். எந்த முட்டாள் பொறியியலாளன் சொன்ன ஐடியாவோ இது?


உலகைச் சுற்றி எண்பது நாட்கள்

இன்று உலகத்தைச் சுற்றுவது என்பது ஒருவரிடம் உள்ள பணத்தைப் பொறுத்திருக்கிறது. பெரும்பணக்காரச் “சூரர்கள்” சொந்த விமானத்தில் இரண்டே நாளில்கூட உலகைச் சுற்றிவிட்டுப் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடலாம். “சூரர்” அல்லாதோர் வாழ்நாளெல்லாம் முயன்றாலும் விமானநிலையத்தின் வாசலைக்கூட தாண்டமுடியாது. இக்கதை எழுதப்பட்ட காலத்திலும் இதுதான் நிலைமை என்றாலும், அக்கால ‘அம்பானி’ ஒருவர் உலகத்தை 80 நாட்களில் சுற்ற எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருந்தது என்பதைத்தான் இக்கதை விவரிக்கிறது.

கதைத்தலைவர் பிலியாஸ் ஃபாக். அவரது வேலையாள் ஒரு பிரெஞ்சுக் காரன், பஸ்பார்தூ(த்). தான் உறுப்பினராக இருக்கும் ரிஃபார்ம் கிளப்பில் உலகைச் சுற்றி 80 நாட்களில் போய்வந்துவிடுவேன் என்று ‘பெட்’ கட்டுகிறார் ஃபாக். பந்தயப்பணம் அப்போது(1830) இருபதாயிரம் பவுண்டு. அவரது சொத்தில் பாதி.

அக்காலத்தில் விமானம் கிடையாது. மொத்தப் பயணமும் இரயில், கப்பல் வழியாக மட்டுமே. அவர் உலகைச் சுற்றுவேன் எனப் பந்தயம் கட்டக் காரணமாக இருந்தவை இரண்டு நிகழ்வுகள்.

ஒன்று, இந்தியாவின் குறுக்கே பம்பாய்-கல்கத்தா இரயில் பாதை அமைக்கப்பட்டு விட்டது என்ற செய்தி. மற்றது, அமெரிக்காவின் குறுக்கே மேற்குக்கரை முதல் கிழக்குக் கரை வரை இரயில் பாதை முற்றுப் பெற்றுவிட்டது என்ற செய்தி.

  1. லண்டனிலிருந்து சூயஸ் வழியாக இந்தியாவை (பம்பாயை) அடைதல்.
  2. பம்பாயிலிருந்து கல்கத்தா சென்று, அங்கிருந்து ஹாங்காங் செல்லுதல்.
  3. ஹாங்காங்கிலிருந்துயோகஹாமா வழியாக சான்பிரான்சிஸ்கோ.
  4. அங்கிருந்து அமெரிக்காவினூடாகப் பயணித்து நியூயார்க் அடைதல்.
  5. நியூயார்க்கிலிருந்து லண்டன் திரும்புதல் —

என்பது அவர் பயணத்திட்டம். இதைத் தான் எண்பதே நாட்களில் செய்வதாக அவரது பந்தயம். ஆனால்…

இங்கிலாந்து பேங்க்கைக் கொள்ளையடித்து விட்டுத்தான் உலகை அவர் ஜாலியாகச் சுற்றுகிறார் என்று அவரைக் கைதுசெய்ய ஃபிக்ஸ் என்ற சிஐடி சூயஸில் காத்துக் கொண்டிருக்கிறான். பிடியாணை வராமல் தாமதப் படுகிறது. அவரை ஏதாவதொரு இங்கிலாந்தின் காலனியப் பகுதியில்–இந்தியாவிலோ ஹாங்காங்கிலோ–கைது செய்துவிடுவது அவன் திட்டம்.

பம்பாயில் பஸ்பார்தூ ஓர் இந்துக்கோயிலுக்குள் ஷூவோடு நுழைந்து மாட்டிக் கொள்கிறான். எப்படியோ உயிர் தப்பித்து இரயிலைப் பிடித்தால், கல்கத்தா இரயில்பாதை முற்றுப் பெறவில்லை என்று தெரிகிறது. பாதி வழியில் இறங்கி, அவர்கள் யானை ஒன்றை அமர்த்திக் கொண்டு பயணம் செய்கிறார்கள். கணவன் இறந்ததால் உடன்கட்டை ஏறுமாறு செய்யப்பட்ட அவுதா என்ற பெண்ணை ஃபாக், பஸ்பார்தூ இருவரும் வழியில் காப்பாற்றி உடனழைத்துச் செல்கிறார்கள். இந்துக்கோயிலில் பஸ்பார்தூ புகுந்ததை வைத்துக் கல்கத்தாவில் கைதுசெய்து தாமதப்படுத்துகிறான் ஃபிக்ஸ். ஆனால் பணம் கொடுத்துச் சமாளித்து, ஹாங்காங் செல்கிறார் ஃபாக்.

பஸ்பார்தூவுக்கு போதை மருந்தளித்து அவனைத் தனியே பிரித்து விடுகி றான் ஃபிக்ஸ். அதன் மூலம் ஹாங்காங்கிலிருந்து யோகஹாமா (ஜப்பான்) செல்லும் கப்பலில் ஃபாக் செல்லவிடாமல் தடுக்கிறான். அதனால் ஷாங்காய் சென்று அதேகப்பலைப் பிடிக்க நினைக்கிறார் ஃபாக். எப்படியோ தப்பி முன்னால் யோகஹாமா வந்துவிட்ட பஸ்பார்தூவை ஒரு சர்க்கஸ் குழுவில் கண்டுபிடிக்கிறார். பிறகு எல்லாரும் (நண்பனாக நடித்து உடன் வருகின்ற ஃபிக்ஸ் உள்பட) சான்ஃபிரான்சிஸ்கோ செல்கிறார்கள். இடையில் அவுதா – ஃபாக் காதல்!

சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து நியூ யார்க் செல்லும் இரயிலைப் பிடிக்கி றார்கள். வழியில் அரசியல் சண்டைகள். பிறகு இரயில் ஒரு வலுவற்ற பாலத்தைக் கடந்து செல்ல முடியாத நிலை. எப்படியோ மிக வேகமாக ஓட்டிச் சென்று இரயில் அதைக் கடக்குமாறு செய்கிறார்கள்.

அடுத்து பிரெய்ரிப் பகுதியில் சிவப்பிந்தியர்களின் தாக்குதல் நிகழ்கிறது. அவர்கள் பஸ்பார்தூவைக் கடத்திச் செல்கிறார்கள். ஃபாக் அவர்களைத் தொடர்கிறார். அவர்களை விட்டு இரயில் சென்றுவிடுகிறது. பஸ்பார்தூ வைக் காப்பாற்றி அழைத்துவரும் ஃபாக், ஸ்லெட்ஜ் மூலமாகச் சென்று அடுத்த இரயிலைப் பிடிக்கிறார். ஆனால் அவர்கள் செல்வதற்குள் இங்கிலாந்து செல்லும் கப்பல் போய்விடுகிறது.

என்ன செய்வது இப்போது? மனம் தளராத ஃபாக், ஒரு கப்பலையே வாங்கு கிறார். வழியில் அதற்கு எரிபொருள் தீர்ந்துபோனதால், அக்கப்பலின் மரத் தையே எரித்து, இன்னல் பட்டு, அயர்லாந்து அடைந்து, பிறகு இங்கிலாந் தின் லிவர்பூலை அடைகிறார். அங்கே ஃபிக்ஸ் ஃபாக்-கைக் கைதுசெய்து தாமதப்படுத்துகிறான். [ஆனால் மூன்றுநாட்கள் முன்னதாகவே உண்மை யான பேங்க் திருடன் கைது செய்யப்பட்டுவிட்டான் என்ற செய்தி அவனுக் குக் கிடைக்கிறது. ஃபிக்ஸின் ‘உலகப் பயணம்’, முழுவிரயம்!]

ஃபாக் அடுத்த இரயிலில் லண்டனை அடையும்போது தான் வரவேண்டிய நேரத்திற்குச் சிலநிமிடங்கள் தாமதமாகிவிட்டதையும் பந்தயத்தில் தான் தோற்று விட்டதையும் காண்கிறார்.

பாதிச் சொத்து பயணத்தில் போயிற்று, மீதிச் சொத்து பந்தயத்திற்குப் போயிற்று. அவுதாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்யப் பஸ்பார்தூவை சர்ச்சுக்கு அனுப்புகிறார். அவன் மகிழ்ச்சியோடு துள்ளிக்குதித்துக் கொண்டு திரும்பி வருகிறான்–அவர்கள் கிழக்குப் புறமாக உலகைச் சுற்றியதால் ஒருநாள் கூடுதலாக அவர்களுக்குக் கிடைத்திருக் கிறது! (அந்தக் காலத்தில் டேட்லைன் வகுக்கப்படவில்லை). ஆக, உடனே புறப்பட்டுத் தன் நேரத்துக்குச் சரியாக ஐந்து நிமிடம் இருக்கும்போது ரிஃபார்ம் கிளப்பை அடைந்து, தன் பந்தயப் பணத்தை வெல்லுகிறார் ஃபாக்!

இந்த நாவலின் ஆசிரியர் ஜூல்ஸ் வெர்ன் (1828-1905) பிரெஞ்சுக்காரர். அறிவியல் புதினத்தின் தந்தை.

வெர்ன் அக்காலத்தில் கற்பனை செய்ததெல்லாம்–நீர்மூழ்கிக்கப்பல்கள் உள்பட–அவரது எட்டுக் கற்பனைகளேனும் பிற்காலத்தில் அப்படியே அறிவியலினால் உண்மையாயின என்று சொல்வார்கள். விண்வெளி முதல் ஆழ்கடல் வரை, மின்விளக்குகள் முதல் கணினி வரை அவர் தொடாத விஷயங்கள் இல்லை. நிலவுக்குச் செல்வது, எரிமலைக்குள் பயணிப்பது, வானில் பறப்பது முதல், நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்குள் சுற்றுவது, பூமியின் மையத்துக்கே செல்வது என்றெல்லாம் கற்பனையைப் பறக்கவிட்டவர் அவர்! “நாம் எல்லாருமே, ஏதோ ஒரு வகையில், ஜூல்ஸ் வெர்னின் வாரிசுகள்தான்” – புகழ்பெற்ற அறிவியல் புதின ஆசிரியர் ரே பிராட்பரி.

“அறிவியல் தவறுகளினால் ஆனதுதான். ஆனால் அவை பயனுடைய தவறுகள். ஏனென்றால் அவை கொஞ்சம் கொஞ்சமாக உண்மையிடம் கொண்டு சேர்க்கின்றன!” – ஜூல்ஸ் வெர்ன்.


டிராகுலா

இன்றைய இலக்கிய நூல்கள் வரிசையில் எனது கல்லூரிக்காலத்தில் படித்த ஒரு நாவலை அறிமுகப்படுத்த இருக்கிறேன். பயங்கர நாவல், காதிக் நாவல், வேம்பயர் நாவல் என்றெல்லாம் சொல்லப்படும் ஒரு இலக்கிய வகையை உருவாக்கிய கதை அது. டிராகுலா என்று பெயர். பேய்க்கதை. நான் 1967இல் கல்லூரியில் படிக்கும் காலத்திலும் ஒரு டிராகுலா கதை திரைப்படமாக வந்தது. அதைப் பார்த்துவிட்டு (வேலூரில் தினகரன் என்ற தியேட்டர். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.) இரவெல்லாம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு முன்னாலேயே அந்தக் கதையை நான் படித்திருந்தேன். எழுதியவர் பெயர் பிராம் ஸ்டோகர். இலக்கிய அறிஞர்கள் இம்மாதிரிக் கதைகளை இலக்கியம் என்ற வகைக்குள் சேர்க்க மாட்டார்கள். ஆயினும் என்னைப் பொறுத்தவரை இதுவும் இலக்கியம்தான்.

கதை, கடிதங்கள், டயரிக்குறிப்புகள், கப்பல் குறிப்புகள் வாயிலாகப் பெரும் பாலும் சொல்லப்படுகிறது. கதை நிகழுமிடங்கள் டிரான்சில்வேனியாவும் இங்கிலாந்தும். கதை ஓராண்டில் மே 3ஆம் நாள் தொடங்கி நவம்பர் 6இல் முடிகிறது. இந்த நாவல் 1897இல் வெளிவந்தது.

ஜானதன் ஹார்க்கர் ஒரு வழக்கறிஞன். அவன் கார்ப்பேதிய மலையிலுள்ள டிராகுலா என்ற பிரபுவின் மாளிகைக்குச் செல்கிறான். டிராகுலா பிரபு லண்டனில் ஒரு மாளிகை வாங்க உதவுவது அவன் வேலை. டிராகுலா ஒரு வேம்பயர். வேம்பயர் என்றால் இறந்தபிறகும் உயிருடன் மற்றொரு உடலில் உலவும் ஒரு பேய். கூர்மையான கடைவாய்ப் பற்கள். இரத்தம்தான் அவன் உணவு. உள்ளங்கையில் மயிர் இருக்கும். வேறு உருவில் இருந்தாலும் கண்ணாடியில் அவன் உண்மை வடிவம் தென்படும்…இத்தகைய பேய்க்கதைகளை நீங்களும் படித்திருப்பீர்கள்.

டிராகுலாவின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் ஹார்க்கர் அவன் மாளிகையில் சுற்றுகிறான். இரண்டு வேம்பயர் பெண்களைச் சந்திக்கிறான். டிராகுலா முதலில் அவனைக் காப்பாற்றினாலும் பிறகு அந்தப் பெண்களுக்கு ஹார்க்கரை இரையாக விட்டுவிட்டு வெளியே செல்கிறான். ஹார்க்கர் தப்பிக்கும் காட்சிகள் மயிர்க்கூச்செறிய வைப்பவை. எப்படியோ தப்பித்து புடாபெஸ்டில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான்.

டிராகுலா ஒருசில மண்பெட்டிகளுடன் தன் மாளிகையிலிருந்து லண்டனுக்குக் கப்பலில் வருகிறான். கப்பலில் உள்ள அனைவரும் இறந்துவிடுகின்றனர். கேப்டன் மட்டுமே அதை ஓட்டவேண்டி உயிருடன் விடப்படுகிறான். லண்டன் துறைமுகத்தை அடையும் முன்பே, ஒரு தரைப்பகுதியில் நாய்போன்ற ஒரு மிருகம் கப்பலில் இருந்து வெளியேறுகிறது.

லண்டனில் வசிக்கும் மீனா மரே என்பவள், ஹார்க்கருக்கு நிச்சயம் செய்யப்பட்டவள். அவளது தோழி லூசிக்கும் ஹோம்வுட் என்பவனுக்கும் திருமணம் நிகழஇருக்கிறது. அவனது நண்பர்கள் டாக்டர் செவார்ட், குவின்சி மாரிஸ் என்போர். லூசியைக் காண வருகிறாள் மீனா. அவளுக்கு ஹார்க்கர் பற்றிக் கடிதம் வந்ததால் புடாபெஸ்ட் சென்று சாகும் தருவாயில் இருந்த அவனைக் காப்பாற்றி அழைத்துவருகிறாள்.

லண்டனில் லூசி நோய்வாய்ப்படுகிறாள். தூக்கத்தில் நடக்கிறாள். அவளது நோயைக் கண்டுபிடிக்க வந்த பேராசிரியர் வான் ஹெல்சிங், அவளுக்கு அளவுக்கதிகமான இரத்தசோகை இருப்பதைக் காண்கிறார். இது பேயின்வேலை என்று கணிக்கும் அவர் பூண்டுகளை அவள் அறையில் போட்டு அவள் கழுத்திலும் மாலையாக அணிவிக்கிறார். ஆனால் அவள் தாய் அவற்றை அகற்றிவிடுகிறாள். செவார்டும் ஹெல்சிங்கும் இல்லாத போது ஓநாய் ஒன்று வீட்டுக்குள் புகுகிறது. அதிர்ச்சியால் தாய் இறக்கிறாள். பிற்பாடு லூசியும் இறந்துபோகிறாள்.

லண்டன் செய்தித்தாள்களில் ஓர் அழகிய பெண் உருவம் இரவில் பிள்ளைகளை எடுத்துச்செல்வதாகச் செய்தி வருகிறது. லூசி வேம்பயராக மாறிவிட்டதை அறிந்த வான் ஹெல்சிங், நண்பர்களுடன் சவப்பெட்டியைத் திறந்து பார்க்கும்போது அவள் உயிருடன் இருப்பதுபோல் காணப்படுகிறது. வாயில் இரத்தம். அவள் தலையை வெட்டி, இதயத்தில் சிலுவையைப் பாய்ச்சி, வாயில் பூண்டு திணித்து சவப்பெட்டிக்குள் இடுகிறார் பேராசிரியர். திருமணம் செய்துகொண்ட ஹார்க்கரும் மீனாவும் இவர்களுடன் இணைகின்றனர்.

இடையில் டிராகுலா டாக்டர் செவார்டின் பைத்தியக்கார நோயாளி ரென்ஃபீல்டுடன் தொடர்புகொள்கிறான். அவன் மூலமாக செவார்டு குழுவினரின் திட்டங்களை அறியும் டிராகுலா, மூன்று முறை மீனாவைத் தாக்குகிறான். அவன் மீனாவைத் தன் இரத்தத்தையும் குடிக்க வைக்கிறான். அதனால் அவளும் ஒரு வேம்பயராக மாறுகிறாள். வேம்பயர்கள் மண்ணில் மட்டுமே ஓய்வெடுக்க முடியும் என்பதால் அவனது வீட்டைத் தாக்கும் செவார்டு குழுவினர் அவன் கொண்டுவந்த மண் பெட்டிகளை புனிதப் படுத்தி, அவனுக்குப் பயன்படாமல் செய்கின்றனர். டிராகுலாவை அவனது இருப்பிடத்தில் சிறைப்படுத்த முயலுகின்றனர். ஆனால் அவன் மீதியிருக்கும் ஒரு மண்பெட்டியுடன் தன் டிரான்சில்வேனியா வீட்டுக்கு தப்பித்துச் செல்கிறான்.

மீனாவுக்கும் அவனுக்கும் மனத்தொடர்பு இருப்பதால், அவளை ஹிப்னடைஸ் செய்து அவள் மூலமாக அவன் செல்லும் வழியை அறிகின்றனர் செவார்டு குழுவினர். ருமேனியாவில் செவார்டு குழு இரண்டாகப் பிரிகிறது. பேராசிரியரும் மீனாவும் டிராகுலாவின் மாளிகைக்கு முன்னதாகவே சென்று வேம்பயர் பெண்களைக் கொல்கின்றனர். ஹார்க்கரும் ஹோம்வுட்டும் படகில் டிராகுலாவைத் துரத்துகின்றனர். குவின்சியும் செவார்டும் அவனைத் தரைமார்க்கமாகப் பின்தொடர்கின்றனர். இறுதியில் தன் பெட்டியை தன்தோழர்கள் உதவியால் ஒரு வேகனில் டிராகுலா ஏற்றும்போது நேரடியாகத் தாக்கி ஹார்க்கர் அவன் கழுத்தை வெட்டுகிறான், குவின்சி அவன் மார்பின் சிலுவையைப் பாய்ச்சுகிறான். டிராகுலா தூள்தூளாக உதிர்ந்து அழிகிறான். ஆனால் குவின்சி இறந்துபோகிறான். மீனா வேம்பயர் நிலையிலிருந்து மீள்கிறாள். சில ஆண்டுகள் கழித்து அவளுக்கும் ஹார்க்கருக்கும் பிறக்கும் ஆண்குழந்தைக்கு குவின்சி எனப் பெயர் இட்டதாகத் தெரியவருகிறது.

ப்ராம் ஸ்டோக்கர் ஏழாண்டுகள் மத்திய ஐரோப்பாவில் நிலவிய வேம்பயர் கதைகளையும் நாட்டுப்புறக் கதைகளையும் படித்து இந்த நாவலை எழுதியதாகத் தெரிகிறது. ஏறத்தாழ 1885 அளவிலேயே ரைடர் ஹேகார்டு, ருட்யார்ட் கிப்லிங், ஆர் எல் ஸ்டீவன்சன், கானன் டாயில், எச் ஜி வெல்ஸ் போன்ற ஆசிரியர்கள் தங்கள் இயற்கைமீறிய கதைகள் வாயிலாக இந்தக் கதையின் ஏற்றுக் கொள்ளும் வகையில் மக்கள் மனநிலையைத் தயார் செய்து வைத்திருந்தனர். எனவே முதலில் ஒரு வீரசாகசக் கதையாகவே இது வாசிக்கப்பட்டது. ஆனால் இது திரைப்படமாக வந்தபிறகு சிறந்த ஒரு பேய்க்கதையாக வாசிக்கப் படலாயிற்று. 1922இல் நுஸ்ஃபெராட்டு என்ற பெயரில் ஆசிரியர் அனுமதி பெறாமலே நாடகமாக அரங்கேற்றப்பட்டு பெரும் வெற்றி யடைந்தது.

வெளிவந்தவுடனே விமரிசகர்களின் பாராட்டைப் பெற்ற நாவல் இது. ஷெர்லக் ஹோம்ஸ் பாத்திரத்தை உருவாக்கிய கானன் டாயில், “பல ஆண்டுகளில் நான் மிகவும் சுவைத்த பேய்க்கதை இது” என்று ஸ்டோக்கருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவ்வளவு விறுவிறுப்பு. இரத்தத்தை உறைய வைக்கும் சித்திரிப்புகள். எனினும் இந்த நாவலின் வாயிலாகப் பெரும்பணம் ஒன்றும் ஸ்டோக்கருக்குக் கிடைக்க வில்லை. ஏழையாகவே இறந்தார்.

இக்கதை இன்றுவரை பலமுறை பல வடிவங்களில் திரைப்படமாக எடுக்கப் பட்டிருக்கிறது. இதை அடிப்படையாக வைத்தும் பல கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. 125 ஆண்டுகள் கழித்தும் இதற்கு இணையான பேய்க்கதை எதுவும் இன்றுவரை தோன்றவில்லை என்பது வியப்புக்குரிய செய்தி. நம் நாட்டுப் பேய்க்கதைகள் எல்லாமே வெறும் தமாஷ்தான்.


தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்

“எப்போதும் ‘அப்பால்’ மட்டுமே பார்க்கவேண்டுமா, ‘இப்பாலும்’ பார்த்தால் என்ன? தமிழில் உள்ள நல்ல படைப்புகளைப் பற்றியும் இந்தத் தொடரில் எழுதினால் என்ன?” என்று சில நண்பர்கள் கேட்டார்கள். சரி என்றேன். தமிழில் படித்த கதைகள் ஏராளம். எதைப் பற்றி முதலில் எழுதுவது? தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரம் பற்றியே எழுதலாமே…ஒன்றரை நூற்றாண்டுக்குமுன் வெளிவந்த அது இப்போது பலருக்கும் புதியதாகத்தானே இருக்கும்!

ஆங்கிலக் கதைகளை நான் பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்க நேர்ந்தது. தமிழின் கதை வேறு. என் அம்மாதான் இதில் எனக்கு முன்னோடி. அவர்கள் நான்காவது படித்து அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டார்களாம். ஆனால் படிப்பதை நிறுத்தவில்லை. பதின்மூன்று வயதில் திருமணமாகி புருஷன் வீட்டுக்கு வந்துவிட்டாலும் கையில் கிடைத்த கதைகளை எல்லாம் படிப்பது அவர்கள் வழக்கம். என் தந்தையும் ஊரில் உள்ள நூலகங்களில் எல்லாம் உறுப்பினராகி, என் தாயார் கேட்ட கதைப் புத்தகங்களை எல்லாம் வாங்கி வந்து கொடுத்தார். ஆக நான் பிறந்து ஐந்தாறு வயது ஆவதற்குள், என் அம்மா அக்கால நாவல்களை எல்லாம் தீர்த்துக் கட்டிவிட்டார்.

புலி எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி அல்லவா? அதனால் நானும் சிறு வயதிலிருந்தே கதைகள் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுவிட்டேன். நான் முதன் முதலில் படித்தது கல்கியின் சிவகாமியைத் தான். இருந்தாலும் சில காலத்துக்குள்ளாகவே பிரதாப முதலியார் சரித்திரம், கோகிலாம்பாள் கடிதங்கள், கமலாம்பாள் என்று ஆரம்பித்து விட்டேன். இப்படித் தரமான(!) நாவல்களில் தொடங்கினாலும் எனக்குப் பிடித்தவை என்னவோ அக்காலத் துப்பறியும் நாவல்கள்தான். ஜே. ஆர். ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்று. இடையில் வை. மு. கோதைநாயகி அம்மாளுடைய நாவல்கள். இவை பெரும்பாலும் குடும்பக் கதைகளாக இருந்தாலும் எல்லாவற்றிலும் துப்பறியும் கதைகளின் சுவையும் தேசபக்தியின் மணமும் நிறைய அறிவுரையும் இருக்கும். கல்லூரி சேர்ந்த காலத்தில்தான் மு.வ., நா. பார்த்தசாரதி, அகிலன் என்று பழக்கமானார்கள்.

பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை. சத்தியபுரி என்ற ஊரில் வாழ்ந்த பிரதாப முதலியார், நன் மதிப்புள்ள பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது சிறுவயது முதல் கதை தொடங்குகிறது.

இந்தக் கதையை வசதிக்காக நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

  1. முதல் பகுதி பிறப்பு வளர்ப்புப் படலம். இதில் பிரதாப முதலியும் அவன் தாய்மாமன் மகள் ஞானாம்பாளும் கனகசபை என்ற பையன் ஒருவனும் சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்தும் படித்தும் வருகின்றனர். பின்னர் கனகசபை ஒரு ஊருக்கே அதிபதி என்று தெரிய வருகிறது. பிரதாபனும் ஞானாம்பாளும் ஒருவரை ஒருவர் நேசித்து வளர்கின்றனர்.
  2. இரண்டாம் பகுதி திருமணப் படலம். பிரதாபனுக்கு திருமணம் பேசுகிறார் அவன் தந்தை. ஞானாம்பாளின் தந்தை சம்பந்தி முதலியார் திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை தன் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சொல்ல, திருமணம் முறிந்துவிடுகிறது.

பிறகு சம்பந்தி முதலியார் தன் பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையும், பிரதாபனின் தந்தை வேறு ஒரு பெண்ணையும் பார்த்து ஏற்பாடு செய்கிறார்கள். ஏட்டிக்குப் போட்டியாக இருவரும் ஒரே ஊரில் ஒரே நாளில் ஒரே வீட்டில் திருமணங்களை ஏற்பாடு செய்கிறார்கள்! ஆனால் பிரதாபன்-ஞானாம்பாள் இரு வீட்டாருமே திருமணத்தைத் திடீரெனத் தள்ளி வைக்க நேர்கிறது. இந்தச் செய்தி தெரியாமல் இவர்கள் பார்த்த மற்ற மாப்பிள்ளை, பெண் வீட்டார்கள் அந்த வீட்டுக்கு வந்துவிட, அவர்களுக்குள் திருமணம் முடிந்துவிடுகிறது.

இடையில் ஞானாம்பாளை ஒருவன் கடத்திச்செல்ல, பிரதாபன் அவளைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறான். பிறகு தடை ஏது? இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

மூன்றாம் பகுதி ஓடிப்போய் ஒன்றுசேர்ந்த படலம். ஞானாம்பாள் கருவுறுகிறாள். ஆண் குழந்தை பிறந்தால் தனக்கு சுவீகாரம் கொடுக்க வேண்டும் என்று சம்பந்தி முதலியார் கேட்க, பிரதாபன் தந்தை மறுக்க, தம்பதியர் பிரிகின்றனர். குழந்தையும் பிறக்காமல் போகிறது, ஞானாம்பாள் நோயுறுகிறாள். பிரிவு நீண்டுகொண்டே செல்கிறது. பிறகு கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு ஊர்களிலிருந்தாலும், திட்டமிட்டு ஒன்றாக ஓடிவிடுகின்றனர். வழியில் கனகசபையின் தந்தை தேவராஜ பிள்ளை ஆட்சி செய்கின்ற ஆதியூருக்கு வருகின்றனர். அங்கு தங்களைப் பிரிந்து தவித்திருந்த தாய்தந்தையருடன் ஒன்று சேர்கின்றனர். கதை இத்துடன் முடிந்திருக்க வேண்டியதுதானே?

நான்காம் பகுதி ஆட்சிப்படலம். ஆதியூரிலிருந்து வேட்டை காணச்சென்ற பிரபதாப முதலியை ஒரு யானை தூக்கிச் சென்று வேற்று நாட்டருகில் விட்டுவிடுகிறது. அந்நாட்டில் பிரதாப முதலி பல துன்பங்களையும் அனுபவித்து சிறையில் இருக்கிறான். அவனைத் தேடி ஆண்வேடத்தில் வந்த ஞானாம்பாள் அந்நாட்டின் அரசன் ஆகிறாள். அவள் பிரதாபனை விடுவிக்கிறாள், இருவரும் சில நாள் அவ்வூரை ஆட்சி செய்கின்றனர். அந்நாட்டின் பழைய அரசன் மகளாகிய ஆனந்தவல்லியைக் கண்டுபிடித்து அவளுக்கு முடிசூட்டுகிறாள் ஞானாம்பாள். பிறகு அனைவரும் தத்தம் ஊர்களுக்குத் திரும்பி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

இக்கதையைப் படிக்கும்போது, அது ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட சம்பவங்களைப் பற்றிப் பேசுகிறதா, இக்கால நிலைமைகளைப் பற்றிச் சொல்லுகிறதா என்று படிப்போர்க்குச் சந்தேகமே ஏற்பட்டுவிடும்.

உதாரணமாக, ஒரு திருடனைப் பிடித்து தேவராஜ பிள்ளை விசாரிக்கும் போது, அவன் “நான் ஒரு ரூபாய் திருடினேன், ஒப்புக் கொள்கிறேன், ஆனால் அரசாங்கத்திலிருந்து இலட்சக் கணக்கான ரூபாய்களைத் திருடிக் கொண்டு ஓடிப்போய் விடுகிறார்களே, அவர்களுக்கு என்ன தண்டனை? இன்னும் அரசாங்கமே மக்களைத் திருடுகின்றதே அதற்கு என்ன தண்டனை?” என்று கேட்கிறான். அவன் பேசும் வாதங்களைக் கேட்கும் போது இன்று நம் நாட்டில் வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் திருடிக் கொண்டு வெளிநாடுகளில் ஓடிப்போயிருக்கின்ற பல பேர்களும், ஊழலாட்சி புரிகின்ற தலைவர்களும் நம் நினைவுக்கு வருகின்றனர். இன்னும் இது போன்ற சம்பவங்கள் பலவற்றை வாசகர்கள் தாங்களே படித்து அனுபவிக்கத்தான் வேண்டும்.

இந்தக் கதையின் அறிவுக் கூர்மை மிக்க மாந்தரும், ஆண்களைப் பலவேறு சங்கடங்களிலிருந்தும் காப்பாற்றுபவர்களும் பிரதாபனின் தாயாரான சுந்தரத்தண்ணியும் அவன் மனைவி ஞானாம்பாளுமே. தமிழின் முதற் காவியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை பெண்ணின் பெருமை பேசுவனவாக அமைந்தன. அந்த மரபு மாறாமல் இந்த ‘ஞானாம்பாள் சரித்திரமும்’ பெண்ணின் பெருமை உரைப்பதாகவே அமைவது குறிப்பிடத் தக்கது.

நாவலின் நடை சற்றே பழையதாக இருந்தாலும் நம்மைச் சிரமப் படுத்துவ தில்லை. இதற்கு ஒரு ஆங்கில முன்னுரை அளித்துள்ளார் வேதநாயகர். அதில் யதார்த்தப் பாணியைப் பின்பற்றாமல், டாக்டர் ஜான்சனைப் பின்பற்றி அறமுரைத்தலையே இலக்காகக் கொண்டு எழுதியதாகச் சொல்கிறார். ஆனால் நாவல் என்னும்படி இன்றி, “எங்கெங்குக் காணினும் கதைகளடா”…என்னும்படி எண்ணற்ற கதைகளின் தொகுப்பாகவே இது அமைந்திருக்கிறது. ஒரு கதைக் களஞ்சியத்தையே முதல் நாவல் என நமக்களித்த வேதநாயகம் பிள்ளை நம் நினைவில் என்றென்றும் நிற்பார்.