கல்வி கற்றாலும் பல நூல்கள் படித்தாலும் நாம் கண்ணிருக்கும் குருடராகத்தான் வாழ்கிறோம். அப்படி உலகில் வாழுமாறு பழக்கப்படுத்தப்படுகிறோம்.
உலகிலுள்ள பெரும்பான்மையோர் ஏழைகளாகவும் துய்ப்பதற்கு ஒன்றுமில்லாதவர்களாகவும் இருக்கும்போது மிகச் சில பேர் மட்டும் வளமாக வாழ்கிறோம். இது முழுச் சுரண்டலன்றி வேறில்லை.
ஆனால் இதைப் பற்றி யெல்லாம் கவைலைப்படாமல் நம் தனிப்பட்ட வாழ்க்கைகளைப் பற்றி மட்டும் நோக்குமாறு கற்பிக்கப் பட்டிருக்கிறோம், நம் மக்களையும் இதே வழியில் பயிற்றுகிறோம். இவற்றைப் பற்றிப் பேசினால் பைத்தியக்காரன் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறோம்.
–ஒரு பைத்தியக்காரன்
Month: June 2023
உலகின் பெருமை
(இச்செய்தி புதியதல்ல, வள்ளுவர் என்றைக்கோ எளிமையாகச் சொல்லிச் சென்றதுதான்…)
ஓர் ஆசிரியர் தம் மாணவனிடம் கேட்டார். “தம்பீ, அவன் தன் கிராமத்திலேயே முதன்முதலாகப் படித்திருக்கிறான், அவனுக்கும் அவன் ஊருக்கும் அது பெருமை என்றாய் அல்லவா?”
“ஆமாம் சார்”
“அப்புறம், நம் தலைவர் இதைச் செய்திருக்கிறார், அதைச் செய்திருக்கிறார், மிகவும் பெருமையாக இருக்கிறது என்றாய் அல்லவா?”
“ஆமாம் சார்”
“அதுபோல இந்த உலகத்திற்கே மிகப் பெரிய பெருமை ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர், தெரியுமா உனக்கு?”
“இல்லை சார்”
“அப்படியானால் தெரிந்துகொள். நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் உலகு என்கிறார் வள்ளுவப் பெருமான்.”
“புரியவில்லை சார்”
“அதாவது, நேற்று ஒருவன் இருந்தான், ஆனால் இன்று பார்த்தால், அவன் இல்லை. அதுதான் இந்த உலகிற்குப் பெருமை என்கிறார் வள்ளுவர்.”
“சார், இது எப்படிப் பெருமையாகும்?”
ஒருவன் ஒரு பொருளைப் படைக்கிறான். அது பெருமை இல்லையா?
“ஆமாம் சார்”
அதை இன்னொருவன் வாங்கிப் பாதுகாப்பாக வைத்திருக்கிறான். அது பெருமை இல்லையா?
“ஆமாம் சார், முன்னதைவிட இது பெருமை.”
இன்னொருவன் அதை அழித்துவிடுகிறான். அது பெருமையல்லவா?
“எப்படி சார்? அழிப்பது எப்படிப் பெருமையாகும்?”
ஓர் ஆசிரியர் கரும்பலகையில் எழுதியதை அழித்துவிடுகிறார். அது பெருமையா இல்லையா?
எப்படி சார்? எப்படி அது பெருமை?
அவரால் அதே போல புதிதாக எழுதமுடியுமே. அதனால்தானே அழிக்கிறார்?
“நீ உன் பழைய வகுப்புகளில் படித்த எல்லாவற்றையும் வைத்திருக்கிறாயா?”
“இல்லை சார், நான்தான் அதைத் தாண்டிவிட்டேனே, என்னால் இப்போது புதிதாகவே எழுதமுடியுமே”
அது போலத்தான், இறைவனால் ஒன்றை அழித்தாலும் வேறொன்றை உருவாக்க முடியும். அதனால்தான் அழிக்கிறான். அது பெருமையல்லவா?
ஆமாம் சார்.
அதனால்தான் வள்ளுவர் சொல்கிறார், நெருநல் (நேற்று) இருந்த ஒருவன், இன்று இல்லை. அதுதான் உலகிற்குப் பெருமை என்று. ஏனென்றால் உலகினால் புதிது புதிதாக மனிதர்களை அல்லது வேறு ஜீவராசிகளை உருவாக்கவும் வாழவைக்கவும் முடியுமே?
ஆம். நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை. அதுதான் இந்த உலகிற்குப் பெருமை. அது வேறு புதிது புதிதாக ஜீவராசிகளை உருவாக்கும். பழையகால டைனோசார்கள் இன்று இல்லாமற்போனாலும் புதிதாக எத்தனையோ இனங்கள்…மனிதர்கள் போன்ற இனங்கள் தோன்றியிருக்கின்றன. ஏனெனில் உலகம் இன்றிருந்தபடியோ, மாறியோ தொடர்ந்து இருக்கும். அதுபோல இன்றுள்ள மனிதர்கள் அவ்வளவு பேருமே இல்லாமற் போனாலும் வேறு புதிய மனிதர்களோ வேறு இனங்களோ தோன்றுவார்கள். இது உலகின் பெருமை யல்லவா? ஆனால் இது மனிதனின் சிறுமையை, இயலாமையை ஞாபகப்படுத்துவது என்பதையும் நினைவில் கொள்.”