சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும்

2022 புத்தாண்டை மகிழ்ச்சியான சிறுவர் கதை ஒன்றுடன் தொடங்குவோம். கள்ளமற்ற சிறார்களைக் கொண்டாடுவதும், கிறித்துவின் தியாகவடிவமாக ஒரு பெருஞ்சிங்கத்தைப் படைத்திருப்பதும் ஆகிய கதை ஒன்றைக் காண்போம்.

“நார்னியாவின் காலவரிசைக்கதைகள்” (Chronicles of Narnia) என்பது சி. எஸ். லூயிஸ் (1898 – 1963) என்ற பேராசிரியரால் எழுதப்பட்டு சிறார்கள் (சிறுவர் சிறுமியர்) இடையிலே) புகழ்பெற்றது. ஏழு கதைகள் கொண்ட தொடர் இது. அதில் முதல் கதை ‘சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும்’. இது 1950இல் வெளியாயிற்று.

இந்தக் கதை 2005இல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. புகழ்பெற்ற அதன் மொழிமாற்ற வடிவத்தைத் தமிழ்ச் சிறார்களும் கண்டு களித்திருப்பார்கள். தமிழ்த் தொலைக்காட்சிகளில் அடிக்கடி திரையிடப்படும் படம் இது.

கதை 1940இல் நிகழ்கிறது. பீட்டர், சூசன், எட்மண்ட், லூசி என்ற நான்கு சிறார்களும் உலகப் போரின் காரணமாக லண்டனிலிருந்து வெளியேற்றப் பட்டு பேராசிரியர் டிகோரி கிர்க்கே என்பவருடன் ஒரு கிராமப்புற வீட்டில் தங்கியிருக்குமாறு அனுப்பப் படுகிறார்கள். பாவம், அவர்களுக்குத் தாங்கள் ஒரு மாய உலகிற்குள் பயணிக்கப் போகிறோம் என்பது அப்போது தெரியாது.

அந்த இருண்ட வீட்டைச் சுற்றி ஆராயும்போது லூசி ஒரு பெரிய ஆடையலமாரியைக் கண்டு அதற்குள் புகுந்தவள், அப்படியே நார்னியா என்ற மாய உலகிற்குள் சென்றுவிடுகிறாள். அங்கு மிருகங்கள் பேசுகின்றன. டம்னஸ் என்ற ஆட்டுமனிதனைச் சந்திக்கிறாள். தான் வெள்ளை விட்சின் (சூனியக்காரியின்) பணியாள் என்றும் லூசியை அவளிடம் அறிமுகப்படுத்த இருந்ததாகவும் டம்னஸ் சொல்கிறான். அந்தமாயயக்காரி, நார்னியா நாட்டின் அரசியாக வேடமிட்டு, அதைக் கிறிஸ்துமஸ் அற்ற நிரந்தரப் பனிக்காலத்தில் ஆழ்த்தியிருக்கிறாள்.

டம்னஸ் மனம் வருந்தி லூசியைத் திரும்பவும் அவள் வீட்டுக்கே அனுப்பிவிடுகிறான். மற்ற மூவரும் இவள் கதையை நம்ப மறுக்கிறார்கள். ஆனால் எட்மண்ட் ஆடையலமாரிக்குள் புகுந்து நார்னியாவில் வேறொரு இடத்துக்குச் சென்று விடுகிறான். வெள்ளை மாயக்காரியைச் சந்திக்கிறான். அவள் எட்மண்டுக்கு ஒரு கேக்கைக் கொடுத்து குஷிப்படுத்தி அவனது மற்ற உடன்பிறப்புகளைக் கொண்டுவந்தால் அவனை இளவரசன் ஆக்குவதாகச் சொல்கிறாள். எட்மண்டும் லூசியும் வீட்டுக்குத் திரும்புகின்றனர்.

சிலநாள் கழித்து நான்கு பேருமே நார்னியாவுக்குச் செல்கின்றனர். சதி செய்ததற்காக டம்னஸ் கைது செய்யப்பட்டுவிட்டான். நான்குபேரும் பீவர் தம்பதிகளுடன் நட்புக் கொள்கிறார்கள். “ஆதாமின் மகன்கள் இருவரும் ஏவாளின் மகள்கள் இருவரும் பாரவல் கோட்டையின் சிம்மாசனங்களில் அமரும்போது வெள்ளை மாயக்காரியின் ஆட்சி முடியும் என்றும் நார்னியாவின் உண்மையான அரசனாகிய அஸ்லான் என்னும் சிங்கம் கல்மேஜைக்குத் திரும்பும்போது இது நிகழும் என்றும் பீவர் தம்பதியர், சொல்கிறார்கள்.

எட்மண்ட் தனியே வெள்ளை மாயக்காரியின் அரண்மனைக்குச் சென்று அவள் பகைவர்கள் அனைவரும் கற்சிலைகளாக மாற்றப்பட்டிருப்பதைக் காண்கிறான். அவனிடமிருந்து சிங்கம் திரும்பவரப் போகிறது என்று அறிந்த மாயக்காரி, கல்மேஜையை நோக்கிப் படையெடுக்கிறாள். பிற சிறார்களையும் பீவர் ஜோடியையும் கொல்ல உத்திரவிடுகிறாள். ஆனால் அவர்கள் தப்பி கல்மேஜையை நோக்கிச் செல்கின்றனர். வழியில் பனி உருகுவதை நம்பிக்கைச் சின்னமாகக் கொள்கின்றனர். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தாவும் தோன்றிப் பரிசுகளும் ஆயுதங்களும் வழங்கி நம்பிக்கை அளித்துச் செல்கிறார்.

அதற்குள் மாயக்காரியின் சேனைத்தலைவனாகிய மோக்ரிம் என்ற ஓநாய் சேனையுடன் வந்துவிடுகிறது. அதைப் பீட்டர் கொல்கிறான். மாயக்காரி தோன்றி, “காலவிடியலின் ஆழ்ந்த மாயத்தால்” எட்மண்டைக் கொல்வதாகச் சொல்கிறாள். அஸ்லான் மாயக்காரியிடம் தனியாகப் பேசி எட்மண்டைக் காப்பாற்றுகிறது. அனைவரும் தங்கள் படைவீட்டுக்குச் செல்கிறார்கள்.

அஸ்லானைப் பின்தொடரும் சூசனும் லூசியும் அது மாயக்காரியால் எட்மண்டுக்கு பதிலாகக் கொலைசெய்யப்படுவதைக் காண்கின்றனர். ஆனால் அடுத்தநாள் காலை, “காலவிடியலின் மிகஆழ்ந்த மாயத்தால்” உயிர் பெறுகிறது அஸ்லான். அது அனைவரையும் மாயக்காரியின் அரண்மனைக்குக் கொண்டுசென்று, அங்கு கல்லாகியிருந்தவர்களையும் உயிர்பெறச் செய்கிறது. அவர்கள் அனைவரும் அஸ்லானின் சேனையில் சேர்கிறார்கள். போரில் அஸ்லான் மாயக்காரியைக் கொல்கிறது. நான்கு சிறார்களும் நார்னியாவின் ராஜா-ராணிகளாக பாரவல் கோட்டையில் முடிசூடுகிறார்கள்.

காலம் பறக்கிறது. இப்போது நான்கு சிறார்களும் இளைஞராகி விட்டனர். தன்னைப் பிடிப்பவர்களுக்கு வேண்டிய வரம் கொடுக்கும் வெள்ளைக் கலைமானைத் தேடி அவர்கள் ஒருநாள் நார்னியாவின் எல்லைக்குச் சென்று விடுகின்றனர். தாங்கள் வந்த ஆடையலமாரியை அவர்கள் மறந்து விட்டனர். இப்போது அதன்வழியே விருப்பமே இன்றி நுழைந்து தங்கள் பழைய வீட்டுக்குத் திரும்புகிறார்கள். ஆ! அவர்கள் இப்போது மீண்டும் பழையபடியே சிறார்களாக மாறிவிட்டனர்! இந்த உலகில் கால மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

தங்கள் கதையைக் கிர்க்கேயிடம் சொல்கின்றனர். அவர் “எதிர்பாராத ஓர் நாளில் நீங்கள் மீண்டும் நார்னியாவுக்குச் செல்வீர்கள்” என ஆசி வழங்குகிறார்.

இது ஒரு தொடர் உருவகக் கதை. கொல்லப் பட்டு, உயிர்த்தெழுகின்ற அஸ்லான் என்ற சிங்கம் கிறித்துவின் வடிவம். இதுபோல் பிற பாத்திரங்களும் உருவகங்களே.

நார்னியா கதைகள் அனைத்தும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. மேலும் தொலைக்காட்சித் தொடர், நாடகம், கணினி விளையாட்டு, வானொலி போன்ற அனைத்து ஊடகங்களும் இக்கதையைப் பயன்படுத்தி யுள்ளன. மாயக் கதை உருவாக்கத்தில் டோல்கியனுக்கு இணையாகப் பேசப்படும் ஆசிரியர் சி.எஸ். லூயிஸ்.


வள்ளலார்

சிதம்பரம் இராமலிங்கம் என்று எளிமையாகத் தன்னை அழைத்துக் கொண்ட திருவருட்பிரகாச வள்ளலார் சித்தி பெற்று 148 ஆண்டுகள் ஆகின்றன. அவரது நினைவைப் போற்றும் வகையான் அவரது வாழ்க்கைக் குறிப்புகளையும், அவற்றிற்கு உறுதுணையான அவர் இயற்றிய பாடல்கள் சிலவற்றையும் காண்போம்.

வள்ளல் இராமலிங்க அடிகளார் ஒரு தலைசிறந்த ஞானி. இந்த உலகம் உய்வதற்காக சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியையும், அந்நெறி தழைக்க சமரச சன்மார்க்க சங்கம் என்கிற அமைப்பையும், அற்றார் அழிபசி தீர்க்க சத்திய தருமச்சாலை என்ற உணவுச்சாலையையும், மன இருளை அகற்றி நித்திய ஜோதியை நினைவில் இருத்த சத்திய ஞான சபை என்கின்ற அருள் நிலையத்தையும் சிதம்பரம் அருகிலுள்ள வடலூரில் அமைத்து, இம்மானுடம் மரணமிலாப் பெருவாழ்வு காண விழைந்த அவர் ‘திரு அருட்பா’ என்னும் ஞான நூலையும் அருளிச் சென்றுள்ளார்.

அவரது வாழ்க்கைக் குறிப்புகள்:
இயற்பெயர்: இராமலிங்கம்
தந்தை: இராமையா பிள்ளை
தாயார்: சின்னம்மாள்
சமயம்: சைவம்
குலம்: வேளாண்குலம்
மரபு: கருணீகர் மரபு
தோற்றம்: 5-10-1823
(சுபானு ஆண்டு, புரட்டாசித் திங்கள், 21-ஆம் நாள்
ஞாயிற்றுக் கிழமை, மாலை 5:30 மணியளவில்)
பிறப்பிடம்: மருதூர் (சிதம்பரம் அருகே)
உடன் பிறந்தோர்:
தமையன்கள்:
சபாபதி
பரசுராமன்
தமக்கைகள்:
உண்ணாமுலை
சுந்தரம்.
ஆசிரியர்கள்:
தமையனார் சபாபதி பிள்ளை
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார்
ஞானாசிரியர்: அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
இதை வள்ளலாரின் கீழ்வரும் பாடல்கள் கூறும்:

நாதா பொன்னம்பலத்தே
அறிவானந்த நாடகஞ் செய்
பாதா துரும்பினும் பற்றாத
என்னைப்பணி கொண்டெல்லாம்
ஓதாது உணர உணர்த்தி உள்ளே
நின்று உளவு சொன்ன
நீதா நினை மறந்தென்
நினைக்கேன் இந்த நீணிலத்தே!
(நான்காம் திருமுறை பாடல் 2775)
**
………..
கற்றது நின்னிடத்தே
பின் கேட்டது நின்னிடத்தே
கண்டது நின்னிடத்தே
உட்கொண்டது நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே
இன்புற்றது நின்னிடத்தே
பெரிய தவம் புரிந்தேன்
என் பெற்றி அதிசயமே!
(ஐந்தாம் திருமுறை பாடல் 3044)
**
ஏதுமறியாது இருளில் இருந்த
சிறியேனை எடுத்து விடுத்து
அறிவு சிறிது ஏய்ந்திடவும்
புரிந்து ஓதுமறை முதற்
கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந்து உணர்த்தி
அருள் உண்மை நிலை காட்டி….
(ஐந்தாம் திருமுறை பாடல் 3053)
**
…………..
ஓதி உணர்ந்தவர் எல்லாம்
எனைக் கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்து உணர்வாம்
உருவுறச் செய் உணர்வே….
(ஆறாம் திருமுறை பாடல் 4112)
**
ஒன்றென இரண்டென
ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய
அருட் பெருஞ் ஜோதி
ஓதாது உணர்ந்திட ஒளி
அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்
பெரும் ஜோதி…!
(ஆறாம் திருமுறை பாடல் 4615 வரிகள் 21-24)
**
…………………
முன்னைப் பள்ளி பயிற்றாத
என்தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர்வித்து உடல்
பழுதெலாம் தவிர்த்தே
எனைப் பள்ளி எழுப்பிய
அருட்பெருஞ் சோதி
என்னப்பனே பள்ளி
எழுந்தருள்வாயே!
(ஆறாம் திருமுறை பாடல் 4891)
**
சோதி மலையில் கண்டேன்
நின்னைக் கண் களிக்கவே
துய்த்தேன் அமுதம் அகத்தும்
புறத்தும் பரிமளிக்கவே
ஓதி உணர்தற்கு அரிய
பெரிய உணர்வை நண்ணியே
ஓதாது அனைத்தும் உணர்கின்றேன்
நின் அருளை எண்ணியே!
(ஆறாம் திருமுறை பாடல் 5004)

ஞான வாழ்க்கை:
வள்ளலார் தமது பன்னிரண்டாம் வயதிலேயே
ஞான வாழ்க்கை வாழத்தலைப்பட்டார். கீழ்வரும் அவரது பாடல்களால் இதை அறியலாம்.

பன்னிரண்டாண்டு தொடங்கி நான்
இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது
அதனால் ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுள்ளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும்
இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த
வண்ணமே வகுப்பதென் நினக்கே!
(ஆறாம் திருமுறை பாடல் 3535)
**
பன்னிரண்டாண்டு தொடங்கி
இற்றைப் பகலின் வரையுமே
படியில் பட்ட பாட்டை
நினைக்கில் மலையும் கரையுமே
துனியாது அந்தப்பாடு முழுதும்
சுகமது ஆயிற்றே
துரையே நின் மெய்யருள்
இங்கு எனக்குச் சொந்தமாயிற்றே!
(ஆறாம் திருமுறை பாடல் 5041)
**
ஈராறாண்டு தொடங்கி
இற்றைப் பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை
நினைக்கில் இரும்பும் கரையுமே
ஏராய் அந்தப் பாடு
முழுதும் இன்பமாயிற்றே
இறைவா நின் மெய்யருள்
இங்கு எனக்குச் சொந்தமாயிற்றே!
(ஆறாம் திருமுறை பாடல் 5042)

திருமணம்:
1850-ல் உற்றார் மனம் நோகாது, தன்னுடைய தமக்கை உண்ணாமுலை அம்மையின் மகள் தனம்மாளை மணம் முடித்தாலும் அவர் இல்லறத்தை ஏற்கவில்லை. இதனையும் அவருடைய பாடல்களால் அறியலாம்:

முனித்த வெவ்வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன், மோகம் மேலின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்
குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பினேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்ததோறும் உள்
உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்
(ஆறாம் திருமுறை பாடல் 3452)
**
முன்னொரு பின்னும் நீ தரு மடவார்
முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபை நடத்தரசு
உன் புணர்ப்பலால் என் புணர்ப்பலவே
என்னொடும் இருந்திங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவதென்னோ
சொன்னெடு வானத்து அரம்பையர் எனினும்
துரும்பு எனக் காண்கின்றேன் தனித்தே!
(ஆறாம் திருமுறை பாடல் 3391)

வள்ளலாரின் மாணாக்கர்கள்:
தொழுவூர் வேலாயுத முதலியார்,இறுக்கம் இரத்தின முதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, காயாறு ஞானசுந்தர ஐயர், பண்டார ஆறுமுகம் அய்யா,
வீராசாமி முதலியார் ஆகியோர்

உறைவிட மாற்றம்:
சென்னை ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் வாழ்ந்து வந்த வள்ளலார் ஆரவாரம் மிகுந்த அவ்விடத்தைத் தவிர்த்து 1857-ல்
சிதம்பரம் அருகேயுள்ள கருங்குழி என்னும் கிராமத்தில் மணியக்காரர் வேங்கட ரெட்டியார் இல்லத்தில் 1867 வரை வாழ்ந்து வந்தார். இக்காலத்தில் அவர் நாள்தோறும் சிதம்பரம்
சென்று வழிபடுவது வழக்கம்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம்:

வள்ளல் இராமலிங்கம் கடவுள் ஒருவரே என்றும், அவரை அன்புடன் ஜோதி வடிவில் வழிபட வேண்டும் என்றும், சிறு தெய்வ வழிபாடு கூடாது, உயிர்ப்பலி கூடாது, புலால் உண்ணலாகாது, சாதி சமய வேறுபாடுகள் கூடாது, எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் ஆன்ம நேய ஒருமைப்பாடு வேண்டும், ஏழைகளின் பசி தீர்க்கும் ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல், புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா, இறந்தவரைப் புதைக்க வேண்டும்; எரிக்கக் கூடாது,
கருமாதி; திதி முதலிய சடங்குகள் தேவை இல்லை, போன்ற நெறிகளை வலியுறுத்திய
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

சத்திய தருமச்சாலை:

வள்ளல் பெருமானின் தலையாய கொள்கை
ஜீவகாருண்யம். புலால் மறுத்தலும், அற்றார் அழிபசி தீர்த்தலும் ஜீவகாருண்யத்தில் அடங்கும்.
எனவே அற்றார் அழிபசி தீர்க்கும் பொருட்டு, வடலூரில் சத்திய தருமச்சாலையை 1867-ல்
நிறுவினார். தமது உறைவிடமாக அதனையே ஏற்று
1870 வரை அங்கேயே உறைந்திருந்தார்.

சித்திவளாகம்: (மேட்டுக்குப்பம்)

தனிமையை நாடிய வள்ளலார் 1870-ல் வடலூருக்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பத்தில் வாழத் தொடங்கினார். தாம் உறைந்த அத்திருமாளிகைக்கு சித்திவளாகம் என்ற பெயரை அவரே இட்டார். அவர் சித்தி அடைந்த வளாகமும் அதுவே.

சத்திய ஞானசபை:
இறைவனை ஒளிவடிவில் கண்ட பெருமானார்
ஒளி வழிபாட்டிற்கென சத்திய ஞான சபை என்னும் வழிபாட்டு சபை ஒன்றை நிறுவ எண்ணினார்.
அன்பர்கள் உதவியுடன் வடலூரில் 1871-ல் பணிகள் தொடங்கப் பெற்று, 1872-ல் தைப்பூசம்
நன்னாளில் தொடங்கிய சத்தியஞான சபையில் தினமும் ஜோதி வழிபாடு நடைபெறுகின்றது.

சன்மார்க்கக் கொடி:
ஞானிகள் தம் கொள்கைளுக்காக கொடி ஏதும் கண்டதில்லை. வள்ளலார் ஒருவரே தமது மார்க்கத்திற்கு தனிக்கொடி கண்டவர். 1873-ல் தாம் உறைந்து வந்த மேட்டுக்குப்பம் சித்திவளாகத்
திருமாளிகையில் சன்மார்க்கக் கொடியைக் கட்டி பேருரை ஒன்றையும் ஆற்றினார்.

சித்தி
ஶ்ரீமுக ஆண்டு தைத் திங்கள் 19-ஆம் நாள் 30-1-1874, வெள்ளிக்கிழமை இரவு 12 மணி.
சித்திவளாகத்தின் திருமாளிகையில் தமது அறைக்குள் நுழைந்து, கதவைத் திருக்காப்பு
இட்டுக்கொண்டு, இரண்டரை நாழிகையில்
இறைவனோடு இரண்டறக் கலந்து ஞானசித்தி
பெற்றார். வள்ளலார் சுத்த தேகம், பிரணவ தேகம்,
ஞான தேகம், என்னும் மூவகை தேகசித்தியையும்
பெற்றவர். அத்தகைய தேகசித்தி பெற்றவர் உடம்பு நிலத்தில் விழாது. இறைவனோடு இரண்டறக் கலந்து ஞானசித்தி பெற்ற அவருக்கு மறுபிறவியும் இல்லை. மரணமிலாப் பெருவாழ்வு காண அவர் காட்டிய வழி சுத்த சன்மார்க்கம் என்பதாம். அதை வள்ளலார் கூற்றாலேயே காண்போம்:

இறப்பொழிக்கும் சன்மார்க்கம்:

‘துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்கச்
சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே
எஞ்சாத அருளாலே யான் பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேது செய் மரணத்துக் கெது செய்வோம் என்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ்ஜோதி கண்டு ஆடேடி பந்து
ஆடேடி..
(ஆறாம் திருமுறை பாடல் 4959)
**
உற்றமொழி உரைக்கின்றேன்
ஒருமையினால் உமக்கே
உற்றவன் அன்றிப் பகைவன்
என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும்
அழிந்திடக் காண்கின்றீர்
காரணம் எலாம் கலங்க வரும்
மரணமும் சம்மதமோ
சற்றும்இதைச் சம்மதியாது
என் மனந்தான் உமது
தன் மனம்தான் கன்மனமோ
வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம்
என்னொடும் சேர்ந்திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே!
(ஆறாம் திருமுறை பாடல் 5601)

திரு அருட்பா:
சென்னை கந்தகோட்டத்துள் வளர் முருகனையும், திருவொற்றியூர் ஈசனையும் சமயக் குரவர்களையும் சிதம்பரம் நடத்தரசையும், திருத்தங்களையும் தன்னுடைய ஞானத்தின் ஒளியை உலக மக்கள் உணரும் வண்ணம் சமரச சுத்த சன்மார்க்க நெறியமைந்த பாடல்களையும் பாடினார். எளிமையும் இனிமையும் கொண்ட அவரது அருட் பாக்களின் உருக்கம் கல்லும் கரைய வைக்கும் தன்மையது. மனிதன் உயரிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு வேண்டிய அத்துணை வழிகளையும் அவரது ‘திருஅருட்பா’ பாடல்களில் காணலாம். அவர் பாடிய 5818 பாக்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

அன்பு, தயவு இவைகளை இரு கண்களைப்போல் கருதிய வள்ளலார், ஞானத்தின் பழுத்த நிலையில் சமய நெறி மேவாது சன்மார்க்க நெறியைக் கண்ட பெருமான். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடி நின்ற வள்ளல். வாழ்க அவரது புகழ்!
**
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே!
**
அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி!
**

இக்கட்டுரையைத் தயாரித்து அளித்தவர் திரு. கோ. சுப்பிரமணியன் அவர்கள் (மேப்பத்துரை). புத்தாண்டுக்கு நல்ல தொடக்கமாக அமைய வேண்டி இது வெளியிடப் பெறுகிறது.