பரஜன்

பரஜா என்பது ஒரியா மொழியில் கோபிநாத் மோஹாந்தி என்பவர் ஒரிஸாவின் சோட்டாநாகபுரிப் பீடபூமிக் காடுகளில் வசிக்கின்ற மக்களைப் பற்றி எழுதிய நாவல். பரஜா என்பது (தமிழில் பரஜன்) அங்குள்ள காட்டுக்குடிகளில் ஓர் இனத்தவரின் பெயர். ராணா, பல்கர், தொம்பர், கடபர், கோண்டு போன்ற திராவிடப் பழங்குடி இனத்தவர்களின் எச்சங்களே இவர்கள். பரஜா என்ற சொல்லே பறையா என்பது போல ஒலிக்கவில்லையா?

கோபிநாத் மோஹாந்தி 1914இல் கட்டக்கில் பிறந்து 77 வயதில் 1991இல் மறைந்தவர். ஞானபீட விருது பெற்றவர். பத்மபூஷண் விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.

பரஜா நாவலின் கதை அந்தப் பழங்குடியின மனிதனான சுக்ரு ஜானி என்பவன் பற்றியது. அவன் மனைவி சாம்பரி ஓர் ஆட்கொல்லிப் புலியால் தாக்கப்பட்டு இறந்துவிட்டாள். அவனுக்கு இரண்டு மகன்கள்–மண்டியா, டிக்ரா. இரண்டு மகள்கள்–ஜிலி, பிலி. தன் மகன்களோடு இரவுபகலாகத் தன் நிலத்தில் பாடுபட்டு வருகிறான் சுக்ரு. தன் தந்தை விட்டுச் சென்ற சொத்துகளைத் தன் உழைப்பால் பெருக்கியிருக்கிறான். கதைத் தொடக்கத்தில் அவன் நன்றாகத்தான் இருக்கிறான். தன் வீட்டில் தன் மக்கள் திருமணமாகிப் பல்கிப் பெருகுவதையும் நிலம் விரிவடைவதையும் கனாக் கண்டுகொண்டு அமர்ந்திருக்கிறான். ஆனால் விதி இந்தக் காட்டு மக்களிடம் பலவேறு ரூபங்களில் விளையாடுகிறது. காட்டு அதிகாரிகள் அதில் ஒரு கோர ரூபம்.

பரஜா மக்கள் பயப்படும் ஒரே ஆள்–நகர்ப்புறத்திலிருந்து வருகின்ற காட்டுப் பாதுகாவலன் (ஃபாரஸ்டு கார்டு). விரும்பாத எவரையும் “காட்டு மரங்களை வெட்டினான், காட்டின் பகுதியை எரித்தான், காட்டில் தேன் சேகரித்தான்” என்றெல்லாம் ‘வழக்குப்’ போட்டுப் பழிவாங்கி விடுவான். பரஜா மக்கள் அவனுக்கு ஆண்டுதோறும் உழவுக்காணி (வரி) தரவேண்டும். மற்றபடி அவன் விரும்பும் அனைத்தையும்(!)கூடத் தர வேண்டும்.

இந்த அரசாங்கக் காவலனுக்கு சுக்ருவின் மகள் ஜிலி மீது ஆசை. அதனால் சுக்ரு கோபமடைகிறான். பரஜன்கள் பெண்களைக் கண்போல் காப்பவர்கள். தங்கள் பெண்கள் பிற இனத்தவரோடு உறவுகொள்ளச் சம்மதிக்காதவர்கள். ஒரு கோபமடைந்த பரஜா விலங்கைப் போன்றவன். பரஜா இனத்திற்கு நன்கு கள்ளமற்று உழைக்கவும், காட்டுக் காவலன் போன்ற ஆட்களுக்கு மரியாதை தரவும் தெரியும். ஆனால் தங்கள் மானத்தில் எவனும் கைவைக்கலாகாது. இந்தக் கோபமும் பிடிவாதமும் சுக்ருவின் வாழ்க்கையை முழுவதும் சீரழித்துவிடுகின்றன.

கார்டு, பழிவாங்குவதற்கெனப் பிற நகர்ப்புற அலுவலர்களோடு வருகிறான். சுக்ரு காட்டின் விதிகளைக் கெடுத்துவிட்டான், அனுமதியின்றி மரங்களை வெட்டிவிட்டான் என்று குற்றங்கள் அடுக்கப்படுகின்றன. உண்மையில் மரங்களை வெட்ட காவலனின் வாய்மொழி அனுமதியின்றி வேறு எழுத்து-அனுமதி எதுவும் கிடையாது. இவனை உன் அனுமதிப்பத்திரம் எங்கே என்று கேட்டு அதிகாரிகள் மிரட்டுகின்றனர். காவலன் இவன் புதிதாகப் பெற்ற நிலத்தைப் பிடுங்கிக் கொள்கிறான், எண்பது ரூபாய் தண்டம் (ஃபைன்) விதிக்கிறான். இது அந்த மக்களுக்குச் சுமார் முப்பது மாத வருவாய்க்குச் சமம். அக்காலத்தில் மூன்று ரூபாயில் ஒரு மாதத்தை ஓட்டுபவர்கள் அவர்கள்.

எனவே இவன் தனது மூத்த மகனிடம் குடும்பத்தை விட்டுவிட்டு தானும் தன் இளைய மகனும் நகர்ப்புறத்தில் சாஹுகார் (லேவாதேவிக்காரன், சேட்டு) ராமச்சந்திர பிஷோயி என்பவனிடம் அடிமைகளாகின்றனர். இவர்களை அடிமைகளாக்கிக் கொண்ட போது அந்த லேவாதேவிக்காரனின் ஆழ்ந்த கண்கள் தந்திரத்துடன் கனத்த புருவங்களின்கீழ் பளிச்சிட்டன. இவர்கள் இருவரையும் அடிமைகளாக ஏற்றுக் கொண்டு அவன் காசு தருகிறான். அவன்  வைத்திருக்கும் பத்திரங்கள், ஸ்டாம்புகள், சட்டப்படிவங்கள் எல்லாம் பரஜன் போன்ற பழங்குடிகளுக்குப் புரியாதவை, எட்டாதவை, அவர்களால் வெறுக்கப்படுபவை.

சாஹுகார், இவர்கள் இருவருக்கும் வருடக்கூலி ஐந்து ரூபாய் என்று சொல்கிறான். ஆனால் இவர்கள் வாங்கிய பணத்துக்கு வருடாவருடம் 50% வட்டி தர வேண்டும். இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் இவர்கள் இருவரும் கைநாட்டுகிறார்கள். அந்த சாஹுகாரனின் நிலத்தில் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்கிறார்கள். இவர்கள் வருமானமோ ஆண்டுக்கு ஐந்து ரூபாய். ஆனால் கொடுக்க வேண்டியது ஆண்டுக்கு 75 ரூபாய். எத்தனை ஜென்மங்கள் உழைத்து இவர்களால் கடனைத் தீர்க்கமுடியும்?

உழைப்பின் சோர்வு தெரியாமலிருக்க இவர்களுக்கு சோற்றுக்கு பதிலாக மஹுவா சாராயம் அளிக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் இவனது முதல் மகனும் இவன் மருமகனாக வரவேண்டிய மண்டியா என்பவனும் இவர்களுடன் சேர்ந்து அடிமையாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

ஆக வீட்டில் ஆண்துணை எவருமின்றி இரண்டு பெண்கள் ஜிலி, பிலி மட்டுமே தனித்து விடப்படுகிறார்கள். வீட்டில் வருமானமின்றிப் போனதோடு பிறரது ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் ஆளாகிறார்கள். சாஹுகாரிடம் அடிமைகளாகச் சென்றவர்களோ ஆண்டு அறுவடை நேரத்தில்கூட வீட்டுக்குச் செல்ல விடுமுறை அளிக்கப்படவில்லை.

இந்தச் சமயத்தில் சாலைபோடும் ஒப்பந்தக்காரர்கள் எல்லாக் காட்டுப்பகுதி கிராமங்களுக்கும் வேலையாட்களைத் தேடி வருகிறார்கள். ஆண்களுக்கு ஒரு நாள் கூலி மூன்றணா, பெண்களுக்கு இரண்டணா. இவர்களின் கிராமத்துக்கும் வருகிறார்கள். ஜிலி, பிலி இருவரும் அவர்களிடம் சேர்ந்து வயிற்றுக்காக உழைக்க வேண்டியதாகிறது. தங்கள் வீட்டை விட்டுப் புதிய இடம், புதிய உழைப்பு, புதிய புகை நாற்றம்…

நல்ல வேளை, இந்த நிலை சில மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. தன் நிலத்தை சாஹுகாரனிடம் அடகுவைத்துவிட்டு தன்னை விடுவித்துக் கொண்டு சுக்ரு வீட்டுக்கு வருகிறான்.

ஆனால் சாஹுகாருக்கு தன்னிடம் வீட்டைத் திருப்பிக் கொடுக்கும் எண்ணம் இல்லை என்பதை சுக்ரு புரிந்துகொள்கிறான். வயது முதிர்ந்த சாஹுகார் அதற்கு பதிலாக இவன் மகள் ஜிலியைக் கேட்கிறான். சுக்ருவுக்குத் தன்மகளைக் கொடுக்க மனமில்லை என்றாலும் இவனது கிராமவாசிகள் உட்பட எல்லாரும் அவனை வலியுறுத்துகிறார்கள். எனவே வேறுவழியின்றி தன் மகளை சாஹுகாருக்குத் திருமணம் செய்து தர வேண்டியிருக்கிறது. இடையில் கோர்ட் வழக்கும் தோற்றுப் போய் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறான் சுக்ரு.

கடைசியாக உயிர் பிழைகக ஒரே வழி–சுக்ரு போய் மருமகன் சாஹுகாரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டியதுதான் என்றாகிறது. அப்படிப்பட்ட எண்ணத்துடன்தான் அவன் புறப்படுகிறான். ஆனால் சாஹுகாரின் வீட்டுக்குச் சென்றவுடனே அவனுக்குள் ஏதோ ஆவேசம் புகுந்துகொள்கிறது. கோபத்தில் கொதித்த அவன் லேவாதேவிக்காரன் காலில் விழுவதற்கு பதிலாக ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவன்மீது விழுந்து அடி அடி என்று அடித்து அவனைக் கொன்றுவிடுகிறான்.

ஏறத்தாழ சினுவா அச்சுபே-யின் Things Fall Apart, பேர்ல் எஸ். பக்கின் The Good Earth  ஆகிய நாவல்கள் ஆப்பிரிக்காவிலும் , சீனாவிலும் நிகழ்ந்த இதே போன்ற விஷயத்தைத்தான் பேசுகின்றன. சோட்டா நாகபுரிப் பீடபூமியிலும் அதையொட்டிய மலைக்காடுகளிலும் கனரக உலோகங்கள் ஏராளமாக இருப்பதால் சுரங்கம் தோண்டுவதற்கென பெருமுதலாளிகள் படையெடுக்கிறார்கள். அவர்களோடு போராடி இந்தக் காட்டுவாசிகள் இப்படித்தான் இன்றுவரை வாழவேண்டியிருக்கிறது. இதை முதன்முதலில் நம் நாட்டுக்குச் சுதந்திரம் வருமுன்பாகவே (1945) பதிவுசெய்த கோபிநாத் பாராட்டுக்குரியவர்.


வீழ்ச்சி

ஆல்பர்ட் காம்யூ அல்ஜீரியாவில் பிறந்த ஃபிரெஞ்சு தத்துவஞானி. இருத்தலியக் கோட்பாட்டாளர். இருத்தலியம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இவரையும் ழான் பால் சார்த்தரையும் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும்.

1913இல் பிறந்தவர். 1960இல் மறைந்தார். 1957இல் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்நியன், காலிகுலா, வீழ்ச்சி என்பன இவரது நாவல்கள். தி மித் ஆஃப் சிசிஃபஸ், அந்நியன் போன்ற படைப்புகளில் இருத்தல் சார்ந்த அபத்தக் கோட்பாட்டினைத் திறம்பட முன்வைத்தவர். இக்கதை, காம்யூவின் நாவலான தி ஃபால் என்பதன் சுருக்கம்.

இதன் நாயகன் கிளமன்ஸ் என்பவன். கதையின் தொடக்கத்தில் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் மெக்சிகோ சிட்டி என்ற மதுஅருந்தகத்தில் ஓர் அறிமுகமில்லாத நபரிடம் ஒரு மதுபானத்தை எப்படி வருவிக்க வேண்டும் என்பது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறான். ஏனெனில் அந்த நபருக்கு டச்சு மொழி தெரியவில்லை. பார் காரனோ டச்சு மொழியைத் தவிர வேறு மொழி எதையும் அறியாதவன். ஆக அவனுக்கு உதவ வேண்டி கிளமென்ஸ் முன்வருகிறான். பேச்சினூடாக, அப் புதியவனும் இவனைப் போலவே பாரிஸ்-காரன் என்பது தெரிகிறது.

கிளமென்ஸ், பாரிசில் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞன். அவன் அதிகமாக எடுத்துக் கொள்வது விதவைகள், அநாதைகள் வழக்குகளைத் தான். அதாவது வழக்காட வழியற்ற ஏழைகளுக்கு உதவுகிறான். மேலும், தான் எப்போதும் பிறருக்கு உதவுபவன்–தெருக்களில் புதியவர்களுக்கு வழிகாட்டுவான், பஸ்சில் பிறருக்குத் தனது இருக்கையை வழங்குவான், ஏழைகளுக்குப் பிச்சை அளிப்பான், குருடர்கள் வீதியைக் கடக்க உதவுவான் என்று சொல்லிக் கொள்கிறான். அதாவது “உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்று உலகைப் பார்த்துச்  சொல்லும் ரகம். அதனால் தான் காட்டும் கருணையே தனக்கான பரிசாக விளங்குகின்ற அத்தகைய உயர்ந்த உச்ச நிலையை எய்திவிட்டவன்.

ஒரு நாள் இரவு. தன் இரவுத்தோழியுடன் காலம் கழித்துவிட்டு பான்ட் ராயல் வழியாகத் தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கிறான். அப்போது கருப்பு உடையணிந்த ஒரு பெண்மணி பாலத்திலிருந்து குதிக்கும் நிலையில் இருப்பதைக் காண்கிறான். ஒரு கணம் தயங்கி உதவிசெய்யலாமா என யோசிக்கிறான். பிறகு தன் வழியே செல்கிறான். ஆனால் சில கணங்கள் கழித்து ஓர் உடல் நீரில் விழும் சத்தம் கேட்கிறது. என்ன நடந்தது என்று புரிந்து ஒரு கணம் நிற்கிறான். ஆனால் எதுவும் செய்யவில்லை. கூக்குரலிடும் ஓசை பல முறை கேட்கிறது. பிறகு நீரோட்டத்தில் தேய்ந்து மறைகிறது. ஆனால் இவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தொடர்ந்து நிகழும் அமைதி எல்லையற்று நீடிக்கிறது. “நான் ஓட நினைத்தேன், ஆனால் அசையவும் முடியவில்லை…அதிக லேட்டாகி விட்டது… ரொம்ப தூரம் போய்விட்டது…” என்று சொல்லிக் கொள்கிறான். பிறகு மெதுவாக மழையில் நனைந்தவாறே போய்விட்டான்.

சுயநலமற்று பலமற்றவர்களுக்கும் அதிர்ஷ்டக் கட்டைகளுக்கும் தான் உதவுபவன் என்ற எண்ணம் கிளமென்ஸிடம் இருக்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தை அடியோடு புறக்கணித்து விடுகிறான். அவளுக்கு உதவியிருந்தால் தன் சொந்தப் பாதுகாப்பே கேள்வியாகி இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறான்.

பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்தச் சம்பவத்தை அவன் ஏறத்தாழத் தன் ஞாபகத்திலிருந்து அழித்துவிட்டான். மற்றொரு இனிய நாள். தன் கடமைகளைச் சிறப்பாக முடித்துவிட்டான். மேலும் நண்பர்களுடன் ஆளும் வர்க்கத்தின் கடின இதயம் பற்றியும் தலைவர்களின் போலித்தனம் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்தாயிற்று. தனக்குள் முழுமையின் ஒரு புதிய பெரிய பலம் பொங்கி எழுவதை உணர்கிறான். சுய திருப்தியோடு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு பான்ட் ராயல் அருகே திருப்தியாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கிறான். அந்தச் சமயத்தில் அவனுக்குப் பின்னாலிருந்து ஒரு பெருஞ்சிரிப்பு கேட்கிறது.

அது ஏதோ முன்பு தன் நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட ஒரு பிரமை என்று நினைக்கிறான். ஆனால் தொடர்ந்து அது நீரிலிருந்து எழுவதுபோலக் கேட்கிறது. அது அதிர்ச்சியூட்டுகிறது. ஏனெனில் பல ஆண்டுகள் முன்பு நீரில் அமிழ்ந்துபோன பெண்ணின் நினைவை அது தெளிவாகக் கொண்டு வருகிறது. தான் தன்னை ஒரு சுயநலமற்ற மனிதனாகப் பாராட்டிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்தச் சிரிப்பு எழுந்தது. அது இதயபூர்வமான, நட்புமிக்க, நல்ல சிரிப்பாகவும் இருக்கிறது. அது அவனுக்குள்ளிருந்தே எழும் சிரிப்பு என்பதை அது காட்டுகிறது. தான் ஊதிப் பெருக்கிக் கொண்ட தனது பிம்பத்திற்கும் உண்மையான சுயத்திற்குமான மோதல் தெளிவாகிறது. தனது போலித்தனம் வலியுடன் உணரத்தக்கதாக வெளித்தெரிகிறது.

மூன்றாவதாக ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஒரு சிக்னலில் அவன் தன் காரில் நிற்கும்போது விளக்கு பச்சையாக மாறிய பிறகும் முன்னால் வழியை மறித்திருக்கும் மோட்டார் சைக்கில்காரன் நகர மறுக்கிறான். வாகனத்தை நகர்த்தாதது மட்டுமல்லாமல் இவனை அடிப்பதுபோல மிரட்டவும் செய்கிறான். அவனை அடிப்பதற்காக கிளமென்ஸ் காரைவிட்டு இறங்கியபோது யாரோ ஒருவன், தன் கால்களுக்கிடையில் மோட்டார் சைக்கிலை வைத்திருக்கும் பரிதாபமான ஒருவனை அடிப்பது தவறு என்கிறான். ஆனால் திடீரென்று இவன் எதுவும் செய்வதற்கு முன்னர் அந்த மோட்டார் சைக்கில்காரன் இவனைத் தலையின் பக்கவாட்டில் அடித்துவிட்டு வேகமாகச் சென்று விடுகிறான். செயலற்று விழித்த கிளமென்ஸ், பிறக தான் என்ன செய்திருக்க வேண்டும் என்று யோசிக்கிறான். பொது இடத்தில் தான் அடிக்கப்பட்ட கேவலத்தை நினைத்து, வருத்தப்பட்டாலும், அதைப் பார்த்தவர்கள் அப்போதே மறந்துவிட்டுச் சென்றிருப்பார்கள், அதனால் தனது கெளரவத்திற்கு ஹானி எதுவும் வந்துவிடாது என்று நம்புகிறான்.

இந்த நிலையில் அவனுக்குத் தான் இதுவரை வெற்று கெளரவம், பிறரின் மதிப்பும் ஏற்பும், பிறர்மீதான அதிகாரமும் என்ற இவற்றிற்காகவே வாழ்ந்திருப்பது புலனாகிறது. இதனை உணர்ந்த பிறகு அவனால் முன்போல் எப்படி வாழ முடியும்?

சார்த்தர் இந்த நாவலை “மிகுந்த அழகியல் கொண்டது, ஆனால் மிகக் குறைந்த அளவே புரிந்துகொள்ளப்பட்ட நாவல்” என்று புகழ்ந்துள்ளார். கள்ளமற்ற தன்மை, இருத்தலின்மை, உண்மை ஆகியவை இந்த நாவலின் கருப்பொருள்களாக உள்ளன.


சூரியன் எப்படிக் கிடைத்தது நமக்கு?

ஆதிகாலத்தில் வெறும் இருள்தான் இருந்தது. மனிதர்கள் ஒருவர்மீது ஒருவர் மோதிக் கொண்டே இருந்தார்கள். உலகின் மறுபக்கத்தில் நிறைய வெளிச்சம் இருக்கிறது, ஆனால் பேராசை பிடித்த அவர்கள் அதைப் பகிர்ந்துகொள்ள ஒப்பமாட்டார்கள் என்று நரி கூறியது.


போஸம் என்ற பிராணி கொஞ்சம் ஒளியைத் திருடிக்கொண்டுவரச் சென்றது. எல்லா வற்றிற்கும் ஒளியூட்டிக்கொண்டு சூரியன் ஓர் உயர்ந்த மரத்தில் தொங்குவதைப் பார்த்தது. கொஞ்சம் சூரியத் துண்டினை எடுத்துத் தன் வாலில் மறைத்துக் கொண்டது. ஆனால் வெப்பம் அதன் வாலின் மென்மயிர்களை எரித்துவிட்டது. ஆகவேதான் போஸங்களுக்கு வாலில் மயிரின்றி மொட்டையாக இருக்கிறது.

பிறகு கழுகுபோன்ற பறவையான பஸார்டு என்பது தன் தலைமீது ஒளியைக் கொண்டுவர முயன்றது. அந்த முயற்சியும் வீணாயிற்று. வெப்பம் அதன் தலைமீதிருந்த இறகுகளை எரித்துவிட்டது. அதனால்தான் பஸார்டுகளுக்குத் தலை மொட்டையாக இருக்கிறது.

அடுத்தபடியாக சிலந்தி முயற்சிசெய்தது. அது களிமண்ணால் ஆன ஒரு கிண்ணத்தைச் செய்தது. பிறகு பெரிய வலை ஒன்று பின்னி வானில் அதை ஒரு பால்வழியாக அடுத்த பக்கம் செல்லுமாறு வீசியது. அதில் சென்று முழுச் சூரியனையும் களிமண் கிண்ணத்தில் பறித்து உலகின் இந்தப் பக்கமாகக் கொண்டுவந்துவிட்டது.
இப்படித்தான் நமக்குச் சூரியன் கிடைத்தது.

-செரோக்கீ நாட்டுப்புறக் கதை.


மாபெரும் கேட்ஸ்பி (The Great Gatsby)

The Great Gatsby என்பது ஸ்காட் ஃபிட்ஜெரால்ட் என்ற அமெரிக்க ஆசிரியரின் புகழ் பெற்ற நாவல் மட்டுமல்ல, இன்றுவரை தொடர்ந்து படிக்கப்படும் நாவலும்கூட. ஃபிட்ஜெரால்ட் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இந்த நாவல் 1925இல் வெளியாயிற்று.

1922 கோடையில் நிக் கேரவே என்பவன் மின்னசோடாவிலிருந்து நியூயார்க்கிற்கு பத்திர விற்பனையாளனாகப் பணி புரிவதற்கெனக் குடி பெயர்கிறான். வெஸ்ட்-எக் என்னுமிடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறான். அது புதுப் பணக்காரர்கள் வாழும் பகுதி. அவனுக்கு ஈஸ்ட்-எக் பகுதியுடன் தொடர்பிருக்கிறது. அது பழைய பணக்காரர்கள் வாழுமிடம். இருவிதப் பணக்காரர்களுக்கும் இடையில் மனப்பாங்கிலும் தாங்கள் கொள்ளும் மரியாதையிலும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

அங்கு அவன் உறவினள் டெய்சியும் அவள் கணவன் டாம் பக்கனனும் வசிக்கிறார்கள். டாம், யேல் பல்கலைக்கழகத்தில் நிக்கின் வகுப்புத் தோழனும்கூட. அங்கு ஜார்டன் பேக்கர் என்னும் கோல்ஃப் விளையாட்டுக்காரியை நிக் சந்திக்கிறான். டாம் திருமண உறவுக்கு அப்பால் ஒரு தொடர்பு வைத்திருப்பதாக அவள் சொல்கிறாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகு நிக் தனது அண்டைவீட்டுக்காரன் ஜே கேட்ஸ்பியைக் காண்கிறான். இருளில் அவன் லாங் தீவுப்பகுதியை நோக்கிக் கையை நீட்டியவாறு தென்படுகிறான். ஆனால் அங்கு பச்சை நிற ஒளியைத் தவிர வேறொன்றும் புலப்படவில்லை.

சிலநாள் கழித்து டாம் நிக்கை நியூ யார்க்கில் ஒரு விருந்திற்கு அழைக்கிறான். வழியில் டாம் தன் தொடுப்புக்காரியான மிர்ட்டில் வில்சன் என்பவளை அழைத்துக் கொள்கிறான். அவள் ஜார்ஜ் வில்சன் என்பவனின் மனைவி. வில்சன் ஒரு ஆட்டோ-கடை நடத்துகிறான், அது ஏழைகள் வாழும் ஆஷ்-வேலி என்ற குப்பை மேட்டுப் பகுதியில் இருக்கிறது.

பார்ட்டியில் மிர்ட்டில் குடித்துவிட்டு டெய்சியைக் கிண்டல் செய்கிறாள். டாம் அவளை முகத்தில் குத்தி மூக்கை உடைத்துவிடுகிறான்.

கேட்ஸ்பி, மிக ஊதாரித்தனமான விருந்துகளைச் சனிக்கிழமை இரவுகள் தோறும் நடத்துகிறான். அதில் ஒன்றில் கலந்துகொள்ளும் நிக், ஜார்டனைச் சந்திக்கிறான். கேட்ஸ்பியையும் நேருக்குநேர் முதன்முதலாகப் பார்க்கிறான். கேட்ஸ்பி, ஜார்டனிடம் தன் அந்தரங்கக் கதையைச் சொல்கிறான். அவன் முதல் உலகப் போருக்கு முன்னாலேயே டெய்சியைச் சந்தித்துக் காதல் கொண்டவன். அவளருகிலேயே இருக்கவும் அவளைக் காண்பதற்காகவுமே அவன் வெஸ்ட்எக் பகுதியில் இந்த மாளிகையை வாங்கியிருக்கிறான். கேட்ஸ்பியின் வேண்டுகோளுக்கிணங்க, டெய்சியுடன் ஒரு சந்திப்பை கேட்ஸ்பி நிகழ்த்த நிக் ஏற்பாடு செய்கிறான். சந்தித்தவுடன் அவர்கள் இருவரின் காதலும் மீண்டும் துளிர்த்து விடுகிறது.

டெய்சியைச் சந்திப்பதற்காகவே சனிக்கிழமை விருந்துகள் நடத்தப் பட்டன. அவளைப் பார்த்துவிட்டதால் கேட்ஸ்பி தன் சனிக்கிழமை விருந்துகளை நிறுத்திவிடுகிறான்.

தன்னுடனும், டாம், ஜார்டனுடனும் நிக்கையும் கேட்ஸ்பியையும் விருந்துக்கு வருமாறு டெய்சி அழைக்கிறாள். அவளுக்கும் கேட்ஸ்பிக்கும் இடையில் உள்ள ஆழ்ந்த அன்பை நிக் அறிகிறான். ஒரு நாள் நியூ யார்க்கிற்கு அனைவரும் செல்கின்றனர். அங்கு பிளாசா ஹோட்டலில் டாமுக்கும் கேட்ஸ்பிக்கும் டெய்சி சம்பந்தாக வாய்ச்சண்டை ஏற்பட்டு விடுகிறது. தன்னை மட்டுமே டெய்சி நேசிப்பதாகவும் அவள் ஒருபோதும் டாமை விரும்பியதில்லை என்றும் கேட்ஸ்பி சொல்கிறான். ஆனால் டெய்சி இருவரையுமே விரும்புவதாகச் சொல்கிறாள். அதனால் கேட்ஸ்பி அதிர்ச்சி யடைகிறான். கேட்ஸ்பி ஒரு கள்ளச்சாராயக்காரன் என்றும் அதனால்தான் பணம் சேர்த்தான் என்றும் டாம் இழிவுபடுத்துகிறான். பிறகு டெய்சியை கேட்ஸ்பியுடன் அனுப்பிவிடுகிறான். சற்று நேரம் கழித்து டாம், நிக், ஜார்டன் எல்லாரும் கிளம்புகின்றனர்.

டாம் கேட்ஸ்பி அளவுக்குப் பணக்காரன் அல்ல என்றாலும் அவனிடம் குலப்பெருமை அளவுக்குமீறி இருக்கிறது. கேட்ஸ்பி ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவன். எப்படியாவது முன்னேற வேண்டும், பணம் சேர்க்க வேண்டும், குறிப்பாக டெய்சியை அதைக் கொண்டு அடைய வேண்டும் என்னும் எண்ணம் படைத்தவனாக இருக்கிறான். டாமிடம் இல்லாத உண்மையும் நேர்மையும் காதலும் கேட்ஸ்பியிடம் இருக்கின்றன.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு விபத்து நேரிடுகிறது. மிர்ட்டில் ஒரு காரில் அடிபட்டு இறந்துவிடுகிறாள். தங்களுக்கு முன் சென்ற கேட்ஸ்பிதான் காரைச் செலுத்தியவன், தன் காதலி மிர்ட்டில் மீது மோதியவன் என்று டாம் நினைக்கிறான். கேட்ஸ்பி யிடமிருந்து டெய்சிதான் உண்மையில் காரைச் செலுத்தி வந்தவள், மிர்ட்டில்மீது மோதியவள் என்று நிக்கிற்குத் தெரியவருகிறது. ஆனால், பழியைத் தான் ஏற்றுக்கொள்ள கேட்ஸ்பி தயாராக இருக்கிறான்.

ஜார்ஜ் வில்சன் தன் மனைவி மீது காரைச் செலுத்தியவன் கேட்ஸ்பி என்று நினைத்துப் பழிவாங்க நினைக்கிறான். அதனால் கேட்ஸ்பியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறான். மாலையில் நிக் செல்லும்போது இருவர் பிணங்களையும் காண்கிறான்.

டெய்சியும் டாமும் வேற்றிடத்திற்கு ஓடிவிடுகின்றனர். கேட்ஸ்பியின் இறுதிச் சடங்கைக் கூட நிக் மட்டுமே ஏற்பாடு செய்யவேண்டியதாகிறது. கேட்ஸ்பியின் பணக்கார நண்பர்கள்–அவன் அளித்த விருந்துகளில் கலந்துகொண்டவர்கள்-அதுவரை அவனைக் கொண்டாடியவர்கள் ஒருவரும் ஈமச் சடங்கிற்கு வரவில்லை. கேட்ஸ்பியின் தந்தையும் வேறொருவரும் மட்டுமே சடங்கில் பங்கேற்கின்றனர்.

ஜார்டனுடன் நிக் உறவை முறித்துக்கொள்கிறான். அடுத்த முறை  டாமை அவன் சந்திக்கும்போது ஜார்ஜிடம் மிர்ட்டிலைக் கொன்றவன் கேட்ஸ்பி என்று “போட்டுக் கொடுத்தவன்” டாம்தான் என்று தெரியவருகிறது. உண்மையில் மிர்ட்டில் மீது கார் ஏற்றிக் கொன்றவள் டெய்சிதான் என்ற உண்மையை நிக் அவனிடம் கூறவேயில்லை.

நியூ யார்க் வாழ்க்கையின் இசைகேடான நிலை, வெறுமை ஆகியவற்றை ஆழ்ந்து உணரும் நிக், திரும்ப மின்னசோட்டாவுக்கே போக முடிவுசெய்கிறான். அதற்கு முன்னாளிரவு முன்பு கேட்ஸ்பி நின்றவாறு லாங் தீவைப் பார்த்த இடத்தில் சென்று நோக்குகிறான். அமெரிக்காவின் முதல் குடியேறிகளுடன் கேட்ஸ்பியை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அவர்களுக்கும் மேற்கத்தியக் கனவு என ஒன்று இருந்தது. பழமையின் நீரோட்டத்தை எதிர்த்து முன்னோக்கிச் செல்லும் படகுகளைப் போல, கேட்ஸ்பியைப் போல, பரந்து விரிந்த கைகளுடன் எல்லாரும் எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டியதுதான் போலும் என்று எண்ணுகிறான். கேட்ஸ்பிக்கு எப்படியாயினும் தன் கனவுகளை நனவாக மாற்றும் சக்தி இருந்தது என்றாலும், “எல்லாருமே அவரவர் பாணியில் (குறிப்பாகப் பணம் சேர்ப்பதில்) வெற்றி பெற்றாக வேண்டும்” என்ற “அமெரிக்கக் கனவு” முடிவுக்கு வந்ததைப் போல, கேட்ஸ்பியின் கனவும் முடிவுக்கு வந்துவிட்டது.


கறை படிந்த எல்லைநிலம்

டாக்டர் பனீஸ்வரநாத் ரேணுவின் மைலா ஆஞ்சல் (கறைபடிந்த எல்லைப்பகுதி) என்பது இந்தியில் எழுதப்பட்ட முக்கிய நாவலாகும். பிரேம்சந்தின் கோதான் நாவலுக்கு அடுத்த நிலையில் இந்தியில் இரண்டாவது சிறந்த படைப்பாக வைத்து இது எண்ணப்படுகிறது. இந்த நாவலில் காணப்படும் அளவுக்குச் சாதி வெறியும் ஆணவக் கொலைகளும் தமிழகத்தின் தென் பகுதியில் காணப்பட்டாலும், இதே அளவுக்குச் சாதிப் பிளவுகளை, பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். சுமார் 200க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உள்ள இந்த நாவலில் சாதிக்கு அப்பால் இயங்காதவர்கள் அபூர்வம்

.இது மைதிலி நாவல். மைதிலி இந்திய தேசிய மொழிகளில் ஒன்றாக தனியாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இதை இந்தி நாவல் என்றே சொல்வது மரபாக உள்ளது. மிதிலைப் பகுதியில் (பிஹார் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதி) பேசப்படும் மொழி மைதிலி. இது ஒரு வட்டார நாவல். இந்த நாவல் 1950களின் தொடக்கத்தில் வெளிவந்தது.

இந்திய சுதந்திரம் கிடைத்த வேளையில் மிதிலை நாட்டார் கதைகளையும் பாடல்களையும் பலவிதக் காதல்கதைகளையும்  கிராமப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டது இந்த நாவல். இதனால் கிராமப்புற வட இந்தியாவின் ஓர் அரிய சித்திரம் நமக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு தனிமனிதனின் கதையோ குடும்பத்தின் கதையோ அல்ல. ஒரு கிராமத்தின் கதை. எனவே இதில் தொடர்ச்சியான சிறுசிறு சம்பவங்கள் மட்டுமே உள்ளன. டாக்டர் பிரசாந்த்-கமலா, பாலதேவ்-லட்சுமி, காளிசரண்-மங்கலாதேவி, கலாசி-பூலியா என்ற நான்கு காதல் கதைகள் உள்ளன.

பிஹாரின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மேரீகஞ்ச் என்ற கிராமத்தில் கதை நிகழ்கிறது. 1946இல் இங்குள்ள ஆஸ்பத்திரியில் பிரசாந்த் குமார் என்ற லட்சிய பூர்வ டாக்டர் மலேரியா, காலாஅஜார் போன்ற நோய்களை குணப்படுத்த வருகிறான். கிராம மக்கள் அவனை மதிக்கின்றனர். (இவன் பூர்வகதை விரிவாகச் சொல்லப் பட்டுள்ளது. இவன் ஓர் அநாதைக் குழந்தை. பெற்றவள் கோசி ஆற்றில் போட்டுவிட்டுப் போய்விடுகிறாள். ஒரு நேபாளி பிராமணக் குடும்பம் தங்களது ‘ஆதர்ச ஆசிரமத்தில்’ இவனை விடுகிறது. அதை ஸ்நேகமயி என்பவள் மேற்பார்வை செய்கிறாள். அவள் வளர்ப்பினாலும் உதவியாலும் இவன் மெட்ரிகுலேஷன் படித்த பிறகு வாராணசிக்கு மருத்துவம் படிக்க வருகிறான். முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிப்பவன், ஒத்துவராமல் பிறகு பட்னா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்கிறான். பிறகு கிராமப்புற மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய லட்சியத்துடன் இந்த மூலைமுடுக்கு கிராமத்துக்கு வருகிறான்.) இந்த டாக்டர் ‘பாபு’ நோய்களை மட்டுமல்ல, மக்களின் மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது.

தாசில்தார் விசுவநாத் பிரசாத்தின் மகள் கமலாவை அவன் குணப் படுத்தும்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. கமலா கருவுறுகிறாள். இடையில் பிரசாந்த் ஒரு கம்யூனிஸ்ட் எனக் கைது செய்து பிறகு விடுவிக்கப்படுகிறான். கமலாவுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. நீலோத்பல் என்று அவனுக்குப் பெயர் வைக்கப்படுகிறது.

பாலதேவ் ஓர் இடையன் (யாதவ்). காங்கிரஸ் கட்சிக்காரன். அருகிலுள்ள பூர்னியா நகரைச் சேர்ந்தவன். அவன் அழகான தூய இந்தியில் காந்தியத்தைப் பேசுகிறான். ஆனால் அவன் பேசும் இந்தி இந்த மக்களுக்குப் புரியாத ஒன்று. இந்த கிராம மக்களை வைத்து ஒரு சுதந்திர ஊர்வலம் நடத்துகிறான். மஹந்த் சேவாதாஸ் என்பவன் கபீர் மடம் என்ற ஒன்றை நடத்துகிறான். அதில் வேலை செய்யும் லட்சுமி என்பவளை வைத்திருக்கிறான். ஆனால் அவள் வேலையைவிட்டு பாலதேவுடன் வாழச் செல்கிறாள்.

காளிசரண் என்பவனும் இடைச்சாதிதான். அவன் சிறந்த மல்யுத்த வீரன். அவன் காங்கிரஸ் கட்சியை விட்டு சோஷலிஸ்ட் கட்சிக்கு மாறி, உழைப்பாளர்கள், சாந்தலர்கள் ஆகியோரை வைத்து ஓர் அமைப்பைக் கட்டுகிறான். சர்க்காவில் நூற்கும் மங்கலா தேவி என்ற ஆசிரியையைக் காதலிக்கிறான். ஆனால் சோஷலிஸ்டுகள் கைதுசெய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகிறான்.

கலாசி என்பவன் ஒரு ஓஜா. மந்திரவாதி. நன்றாகப் பாடுபவன், நன்றாக கஞ்சிரா வாசிக்கிறான். தத்மா பகுதியின் பூலியா என்ற பெண்ணைக் காதலித்து மிகுந்த முயற்சிக்குப் பின் மணக்கிறான்.

கிராம மக்கள் சாதிக்கலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது, ஆண்களைப் பெண்கள் எதிர்த்துப் பேசக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளனர். உதாரணமாக மஹந்த் முழு கிராமத்துக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்கிறான்.

*பிராமணர்கள்- எங்களுக்குத் தனியான சிறப்பிடம் ஒதுக்கப்படாவிட்டால் சாப்பிடமாட்டோம்

*சிப்பாய்கள்- நாங்கள் நாட்டுக்காக போராடியவர்கள். மற்றவர்களுடன் சரிசமமாக உண்ண எங்களால் முடியாது.

*ஹிபரன் சிங்- எங்கள் சாதியினர் மாடுமேய்ப்பவர்களுடன் சமமாக அமர்ந்து உண்ணமாட்டார்கள்.

*யாதவர்கள்- தானுக்குகளுடன் சமமாக அமர்ந்து யாதவர்கள் உண்ணமாட்டார்கள்.

விருந்து எவ்வளவு நன்றாக நடந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

இடையில் மஹந்த் சேவாதாஸ் இறக்க, காசியிலிருந்து வரும் ஒருவன் மஹந்த் ஆக முயலுகிறான். அங்கேயே பணியில் இருந்த ராமதாஸை காளிசரண் மஹந்த் ஆக்குகிறான். அவன் வைப்பாட்டியாக ராம்பியாரி என்பவள் தன் குழந்தைகளுடன் அந்த மடத்திலேயே வசிக்கிறாள்.

மாறிவரும் காலத்தை தாசில்தார் விஸ்வநாத் உணர்கிறான். அவன் செல்வாக்கும் சரிகிறது. தன் பதவியைத் துறந்து காங்கிரஸ் உறுப்பினன் ஆகிறான். இடையில் ஓர் இந்துத்துவ கும்பல் (கருந் தொப்பிக்காரர்கள்) நிலைபெற முயல்கிறது. அதன் தலைவனாக ராம் கிர்பால் சிங்கும் அவனைச் சேர்ந்த ராஜபுத்திரர்களும் இருக்கிறார்கள். சாந்தலர்களும் கீழ்ச்சாதியினரும் சோஷலிஸ்டு கட்சியில் சேர்கிறார்கள். ஆனால் அது ஊழல்மிக்க கட்சியாகிறது. பவன்தாஸ் என்ற குள்ளன் காந்தியுடன் இருந்தவன். அவன் மேரிகஞ்சிற்கு வருகிறான். அப்போதுதான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதை மேரீகஞ்சினர் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

காந்தி இறக்கிறார். கிராமத்தினர் துக்கம் கொண்டாடுகின்றனர். பவன்தாஸ், தன் கட்சியின் ஊழல், சாதிப்பற்று இவற்றால் மனம் நொந்து போராடும்போது ஒரு மாட்டுவண்டியின் அடியில் சிக்கி இறக்கிறான். அவன் உடல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தூக்கி வீசப்படுகிறது.

ஒரு நிலச்சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதன் அடிப்படையில் நிலவுரிமை கேட்டு சாந்தலர்களும் கிராமவாசிகளும் நீதிமன்றம் செல்கின்றனர். அவர்கள் வழக்குகள் தள்ளுபடி செய்யப் படுகின்றன. இடையில் காங்கிரஸ் கட்சி ஜமீன்தாரி முறை ஒழிந்தது என்று அறிவிக்கிறது. கிராமத்து நிலம் ஏலம் விடப்படும்போது பணக்காரர்கள் நிலங்களை வாங்கிக் கொள்கிறார்கள். எங்கும் குழப்பமும் போட்டியும். விஸ்வநாத் பிரசாத் பழைய நிலவுடைமை முறைக்கே மாறுவோம் என்று சொல்லிப் பஞ்சாயத்துக்கு அழைக்கிறான். ஆனால் வன்முறை வெடிக்கிறது. சாந்தலர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். மிச்சம்மீதி இருப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

ஜோத்கி என்ற பார்ப்பனப் பூசாரி, கீழ்ச்சாதி மக்களால்தான் கலகமும் அமைதியின்மையும் ஏற்பட்டது, டாக்டர்கள் விஷ ஊசிபோட்டு நோயைப் பரப்புகிறார்கள், என்றெல்லாம் பிரசாரம் செய்கிறான். அவனை அனைவரும் நம்புகிறார்கள். டாக்டர் பிரசாந்த் ஊரைவிட்டு ஓடும் நிலை ஏற்படுகிறது. டாக்டர் இல்லாததால் ஜோத்கி ஒரு கைம்பெண்ணைப் பேய்பிடித்தவள் என்று சொல்லிக் கொல்லச் செய்கிறான். இப்படி நாவல் முடிகிறது.

இருந்தாலும் ஒரு உடன்பாட்டு மனநிலையில்தான் நாவல் முடிகிறது. டாக்டரும் விஸ்வநாத்தும் மனம் ஒன்றாகின்றனர். கிராம மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விஸ்வநாத், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து பிகா (ஒரு பிகா என்பது இன்றைய அளவில் 0.619 ஏக்கர்) நிலத்தை தானமாக அளிக்கிறான்.