ஒரு முதுவேனில் இரவின் கனவு

மானிட வாழ்க்கையின் இருண்ட இயல்பைக் காட்டும் ஈக்களின் தலைவன், டாக்டர் ஃபாஸ்டஸ் ஆகிய இரண்டு கதைகளைப் பார்த்ததனால் இன்று ஒரு தமாஷான, இனிய கதையைக் காணலாம். A Midsummer Night’s Dream என்ற இக்கதையை நாங்கள் எங்கள் எஸ்.எஸ்.எல்.சி (பதினோராம்) வகுப்பில் ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் ஏறத்தாழ 10 பக்கங்கள் கொண்ட உரைநடைக் கதையாகப் படித்தோம். (ஆண்டு 1963). அதற்கேற்றவாறு கவிதைப் பகுதியில் Puck என்ற குட்டித் தேவதை (Fairy) பாடும் பாடல் ஒன்றும் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. ஆம், இவை இரண்டுமே A Midsummer Night’s Dream என்ற ஷேக்ஸ்பியரின் நாடகத்தை ஒட்டியவைதான்.

ஒரு காலத்தில் ஏதென்ஸ் நகரத்தை தெஸீயஸ் என்பவன் ஆண்டு வருகிறான். அவன் ஹிப்போலிடா என்னும் பெண்ணை மணந்து கொள்ள ஆயத்தம் செய்து கொண்டிருக்கும்போது அவன் அரசவையைச் சேர்ந்த ஒருவன் – எகீயஸ் – குறுக்கிடுகிறான். அவன் தன் மகள் ஹெர்மியா வுக்காக டிமிட்ரியஸ் என்பவனை மணமகனாக ஏற்பாடு செய்திருக்கிறான். ஆனால் அதற்கு ஹெர்மியா மறுக்கிறாள். அவள் லைசாண்டர் என்பவனைக் காதலிக்கிறாள். தெஸீயஸ்ஹெர்மியாவைத் தன் தந்தைக்குப் பணிந்து போகுமாறு அறிவுரைக்கிறான். அல்லது அந்நாட்டின் பழைய சட்டப்படி, அவள் இறக்க வேண்டும் அல்லது டயானாவின் கோவிலில் கன்யாஸ்திரீயாகக் காலம் கழிக்கவேண்டும் என்கிறான்.

இதனால் லைசாண்டரும் ஹெர்மியாவும் பக்கத்திலுள்ள ஒரு காட்டுக்கு ஓடித் திருமணம் செய்துகொள்ள முனைகிறார்கள். ஹெர்மியா இந்த ரகசியத்தைத் தன் தோழி ஹெலினாவுக்குச் சொல்கிறாள். ஹெலினாடிமிட்ரியஸைக் காதலிப்பவள். அவனுக்கு ஹெர்மியா ஓடிப்போகப் போவதைச் சொல்கிறாள்.

அன்றிரவு லைசாண்டரும் ஹெர்மியாவும் ஓடிப்போகிறார்கள், ஆனால் காட்டில் வழி தெரியாமல் பிரிந்து போகிறார்கள்.

ஹெலினாவை விட ஹெர்மியாவைத் திருமணம் செய்து கொள்வதே பயனளிப்பது என்று நினைக்கும் டிமிட்ரியஸ், அந்தக் காதலர்களைத் தடுக்க வேண்டித் தானும் காட்டுக்குச் செல்கிறான். ஹெலினா அவனைப் பின் தொடர்கிறாள்.

இடையில், தெஸீயஸின் திருமணத்தில் நடிப்பதற்கு, பிரமஸ்-திஸ்பி என்ற ஜோடியின் சோகக் காதல் கதையை ஏற்பாடு செய்கிறார்கள், சில பணியாளர்கள். நிக் பாட்டம் என்ற நெசவாளன், பிரமஸாக நடிக்கிறான். இந்த ஆயத்தமும் காட்டில்தான் நிகழ்ந்தவாறிருக்கிறது.

அந்தக் காட்டில் தேவதைகளின் தலைவன், ஓபிரான். அவன் தன் மனைவி டைடானியாவுடன் சண்டையிட்டிருக்கிறான். அவளுக்கு ஒரு புதிய இந்தியப் பையன் வேலையாளாகக் கிடைத்திருக்கிறான். அவன் தனக்கு வேண்டும் என்று ஓபிரான் கேட்கிறான், ஆனால் டைடானியா தரவில்லை. அதுதான் சண்டைக்குக் காரணம். அவளைத் தன் வழிக்குக் கொண்டு வருவதற்காகத் தன் வேலையாள் பக் என்பவனை ஒரு ஊதாப் பூவின் சாற்றினைக் கொண்டுவருமாறு அனுப்புகிறான். அந்தச் சாற்றினைத் தூங்குபவர் கண்ணில் விட்டால், அவர்கள் எழுந்தவுடனே எந்தப் பிராணியை / மனிதனை முதலில் காண்கிறார்களோ அவர்கள்மீது காதல் வயப்பட்டு விடுவார்கள். ஆக, காதல் சாறு முதலில் உறங்கும் டைடானியாவின் கண்களில் ஊற்றப்படுகிறது.

இச்சமயத்தில் காட்டில் ஹெலீனாவும் டிமிட்ரியஸும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த ‘ஆளின்’ கண்களில் சாற்றினை ஊற்றுமாறு பக்கிடம் ஓபிரான் சொல்கிறான். அப்போதுதான் அவன் ஹெலீனாமீது காதல் கொள்வான். ஆனால் பக், ‘ஆளை’த் தவறாகப் புரிந்துகொண்டு லைசாண்டர் கண்களில் மருந்தினை ஊற்றிவிடுகிறான். ஆகவே ஹெலீனா அவனை எழுப்பும்போது, லைசாண்டர் அவள்மீது காதல் கொண்டு விடுகிறான்.

பணியாட்களின் நாடகத்தைக் காணும் பக், வேடிக்கைக்காக பாட்டத்திற்கு கழுதைத் தலையை அளித்துவிடுகிறான். டைடானியா தூக்கத்திலிருந்து எழும்போது முதன்முதலில் கழுதைத் தலை கொண்ட பாட்டத்தைக் காண்பதால் அவன்மீது காதல் கொண்டு கொஞ்சுகிறாள். தன் ஃபேரிகளைக் கொண்டு அவனை மகிழ்விக்கிறாள்.

இடையில், டிமிட்ரியஸும் லைஸாண்டரும் ஹெலீனாவைத் தொடர்கின்றனர். ஹெர்மியா குழப்பமடைகிறாள். இதை கவனித்த ஓபிரான், இந்நிலையை பக் சரிசெய்யுமாறு ஆணையிடுகிறான். பக் காதலர்களை திசைதிருப்பிவிட்டுத் தூங்குமாறு செய்கிறான். நான்கு பேரும் உறங்கும்போது லைஸாண்டர் கண்களில் மாற்று மருந்தை பக் விடுகிறான்.

ஓபிரான் டைடானியாவுக்கு மாற்று மருந்தளித்து அவளை எழுப்புகிறான். ஒரு கழுதையின் அருகில் தான் இருப்பதை உணர்ந்து அவள் அருவருப்பும் வருத்தமும் அடைகிறாள். ஓபிரானின் சொல்படி நடப்பதாக வாக்களிக்கிறாள். பாட்டத்தின் கழுதைத் தலையும் நீக்கப்படுகிறது. அவன் நாடகத்தில் நடிக்கச் செல்கிறான்.

தெசீயஸும் ஹிப்போலிடாவும் இளங்காலையில் ஒரு வேட்டைக்காகக் காட்டுக்குள் வருகிறார்கள். உறங்கும் நான்கு காதலர்களையும் எழுப்புகிறார்கள். இப்போது பிரச்சினை முடிந்துவிட்டது. லைசாண்டர் பழையபடியே ஹெர்மியாவின்மீது காதல் கொண்டிருக்கிறான். டிமிட்ரியஸ், ஹெலீனாவின் மீது. ஆகவே தீர்க்கவேண்டிய வழக்கு எதுவும் இல்லை. காதலர்கள் ஒன்று சேர, தெஸீயஸின் திருமணத்தில் பங்கேற்கிறார்கள். பிரமஸும் திஸ்பியும் என்னும் சோக நாடகம் தெஸீயஸ் முன்பு வேடிக்கையான இன்பியலாக நடிக்கப்படுகிறது. பக்கும் அவனைச் சேர்ந்த தேவதைகளும் “இதை ஒரு முதுவேனில் இரவின் வெறுங் கனவாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டி அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகின்றனர்.


டாக்டர் ஃபாஸ்டஸ்

டாக்டர் ஃபாஸ்டஸ் என்பது மார்லோ என்ற ஆங்கிலக் கவிஞர் இயற்றிய ஒரு நாடகம். அவர் ஷேக்ஸ்பியர் காலத்தினர் ஆயினும், அவரது இந்த நாடகம் முற்றிலும் வேறொரு தளத்தில் அமைந்திருக்கிறது.

டாக்டர் ஃபாஸ்டஸ் என்பவன் விட்டன்பர்க் என்ற ஊரில் வாழ்ந்த ஒரு மரியாதைக்குரிய ஜெர்மானிய அறிஞன். தர்க்கம், மருத்துவம், சட்டம், மதம் போன்ற எல்லா அறிவு வடிவங்களையும் கரை கண்டுவிடுகிறான் அல்லது அவ்வாறு கரைகண்டதாக நினைக்கிறான். அதனால், அதிருப்தி யுற்று மந்திர தந்திரங்களைக் கற்க முனைகிறான். அதையும் முழுவதும் கற்று, மெபிஸ்டோபிலிஸ் என்ற பேயை அழைத்து அவனுடன் ஓர் ஒப்பந்தம் செய்கிறான். அவனது எஜமான் லூசிபரிடம் (சாத்தானிடம்) ஃபாஸ்டஸ், தன் ஆன்மாவைத் தருவதாகவும் அதற்கு பதிலாக மெபிஸ்டோபிலிஸ் இருபத்து நாலு ஆண்டுகள் தனக்குச் சேவகம் புரிய வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தம் அமைகிறது. இடையில் அவன் வேலைக்காரனான வாக்னரும் கொஞ்சம் மந்திரதந்திரத்தைக் கற்றுக் கொண்டு அதன் வாயிலாக ராபின் என்பவனை விதூஷகனாக வைத்துக் கொள்கிறான்.

லூசிஃபர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறான். ஃபாஸ்டஸுக்கு அச்சமயத்திலேயே தன் மனம் திருந்தி ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனாலும் பேராசையினால் ஒப்பந்தத்தில் இரத்தத்தில் கையெழுத்திடுகிறான். அப்படிச் செய்யும் போதே, “ஏ மனிதனே ஓடிப் போய்விடு” (“Homo fuge”) என்ற வாசகங்கள் கையின்மீது நெருப்பாகப் பளிச்சிடுகின்றன. ஃபாஸ்டஸ் மறுபடியும் கலங்குகிறான். கலக்கத்தை நீக்க, மெபிஸ்டோபிலிஸ் அவனுக்கு ஏராளமான வளங்களையும் செல்வத்தையும் அறிவையும் வழங்கித் தேற்றுகிறான். ஃபாஸ்டஸின் எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் அவன், பிரபஞ்சத்தைப் படைத்தது யார் என்ற கேள்விக்கு மட்டும் விடை சொல்ல மறுக்கிறான். மீண்டும் ஃபாஸ்டஸ் கலக்கமுறுகிறான்.

தனக்கு ஒரு மனைவி வேண்டும் என்ற ஃபாஸ்டஸின் கோரிக்கையை மெபிஸ்டோபிலிஸ் மறுக்கிறான், ஆனால் உலகைப் பற்றிய அறிவுக்கான நூல்கள் அனைத்தையும் அளிக்கிறான். தனக்கு மனைவியையும் சுவர்க்கத்தையும் அளிக்காமையால் மெபிஸ்டோபிலிஸை அவன் சித்திரவதை செய்கிறான். ஏனெனில் கடவுள் என்ற சொல்லைத் தாங்கிக் கொள்ள அவனால் முடியாது. அப்போது நல்ல தேவதையும் கெட்ட தேவதையும் அவன் முன் தோன்றுகின்றன. நல்ல தேவதை அவனைத் திருந்துமாறு சொல்கிறது. கெட்ட தேவதை இப்போதுள்ள வழியையே கடைப்பிடி என்கிறது. இரண்டாவதை மீண்டும் தேர்ந்தெடுப்பதால், பேய்கள் ஒன்றுக்கு மூன்றாக-லூசிபர், பீல்சிபப், மெபிஸ்டோபிலிஸ் எனத் திரும்பி வந்து அவனை அடக்குகின்றன. இனிமேல் கடவுளைப் பற்றி சிந்திப்பதோ பேசுவதோ கிடையாது என்று வாக்களித்த பின் மெபிஸ்டோபிலிஸ் ஏழு கொடிய பாவங்களையும் மனிதரூபத்தில் அவன் முன் தோன்றச் செய்து கேளிக்கை யளிக்கச் செய்கிறான்.

இதற்குப் பின் ஃபாஸ்டஸ் டிராகன்கள் இழுக்கும் தேரில் ஏழுலகங்களையும் சுற்றி வருகிறான். ஒரு முறை ரோமுக்குச் செல்கிறான். ரோமின் அரசவையில் கண்ணுக்குப் புலப்படா மனிதனாக இருந்து மந்திரங்கள் செய்கிறான். போப்பின் விருந்தில் உணவைத் திருடுகிறான். அவர் காதில் அறைகிறான். இதன்பின் அவன் புகழ் பெருகுகிறது.

ஃபாஸ்டஸ் செய்வனவற்றில் பொது நலனுக்கானவை எதுவும் இல்லை, எல்லாம் சில்லறை விஷயங்களே. உலகைச் சுற்றி வருகிறான். அவனது பரந்த வானியல் அறிவு அவனுக்குப் புகழ் தேடித் தருகிறது. ஜெர்மன் பேரரசன் சார்லஸ் அழைப்பின் பேரில் அவன் அவைக்குச் சென்று அலெக்சாண்டரின் வடிவத்தைக் கண்முன் காட்டுகிறான். அவனை ஏளனம் செய்யும் அவையினர் தலையில் கொம்புகளை முளைக்க வைக்கிறான்.

இடையில் விதூஷகனான ராபினும் மந்திரம் கற்றுக் கொண்டு ராஃபே என்ற நண்பனுடன் நகைப்புச்செயல்கள் பலவற்றைச் செய்கிறான். ஒருசமயம் மெபிஸ்டோபிலிசையே அவன் அழைக்க, அவன் கோபித்துக் கொண்டு இருவரையும் விலங்குகளாக மாற்றுகிறான். கடைசியாக ஃபாஸ்டஸ் வான்ஹோல்ட் பிரபுவின் அவையில் பல அதிசயச் செயல்களைச் செய்து காட்டுகிறான். பலரையும் அவன் அவமானப்படுத்தியிருப்பதால், சில பழிவாங்கும் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. இருப்பினும் இறுதியாக அவனே வெற்றி பெறுகிறான்.

கடைசியாக இருபத்து நான்கு ஆண்டுகளும் முடியும் காலம் எய்துகிறது. அவன் மாணவன் வாக்னர் தோன்றி அவன் மரணத்துக்குத் தன்னைத் தயார் செய்துகொள்வதாக எடுத்துரைக்கிறான். அதற்கேற்ப ஃபாஸ்டஸும் தன் சொத்துகளை எல்லாம் வாக்னர் பேருக்கு எழுதி வைக்கிறான். இறுதி நாள் நெருங்க நெருங்கக் குடித்துக் கும்மாளமிடுவதில் தன் நேரத்தைச் செலவிடுகிறான். தன் மாணவர்களான அறிஞர் பட்டாளத்திற்கு விருந்துகள் வைக்கிறான். மெபிஸ்டோபிலிஸை அழைத்து, ட்ராய் நகர அழகி ஹெலனைக் கொண்டுவருமாறு சொல்கிறான். அவளின் தோற்றத்தால் பல அறிஞர்களை பிரமிக்க வைக்கிறான். அப்போது அவனுக்கு அறிவுரை புகலும் ஒரு கிழவனை விரட்டிவிடுகிறான். மீண்டும் ஹெலனை வரவழைத்து அவள் அழகைப் பாடுகிறான். கடைசி நாட்களில் தனக்கு ஆறுதலாக அவள் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறான்.

ஆனால் காலம் குறுகிக் கொண்டு செல்கிறது. அங்குள்ள அறிஞர்களிடம் சாத்தானிடம் தன் ஆன்மாவை விற்று ஆற்றலை வாங்கியதாக அவன் கூறியவுடன் அனைவரும் பயந்து ஓடிவிடுகின்றனர். கடைசி இரவில் அவனுக்கு பயமும் கழிவிரக்கமும் தோன்றுகின்றன. கருணைக்கு கெஞ்சுகிறான், ஆனால் மெபிஸ்டோபிலிஸ் அவனை ஏளனம் செய்து குத்திப்

பேசுகிறான். ஆனால் காலம் கடந்து போயிற்று. நரகத்தின் கதவுகள் திறக்கின்றன. மீண்டும் நல்ல தேவதையும் கெட்ட தேவதையும் தோன்றுகின்றன. நல்ல தேவதைக்கு இப்போது வேலை இல்லை என்பதால் ஓடிப்போய் விடுகிறது. பதினொரு மணி அடிக்கிறது. ஃபாஸ்டஸ் மீண்டும் மீண்டும் கடவுளையும் பிற பேய்களையும் கருணைகாட்டுமாறு வேண்டுகிறான். தன் தேர்வுகளுக்காக வருந்துகிறான்.

நள்ளிரவில் பேய்கள் பல வந்து அவன் ஆன்மாவை நரகத்திற்குக் கொண்டு செல்கின்றன. காலையில் வந்து நோக்கும் அறிஞர்களுக்கு அவன் உடலின் துண்டுகள் கிடைக்கின்றன. அவனுக்காக அவர்கள் இரங்கி ஈமச்சடங்கு நிகழ்த்தத் தீர்மானிக்கிறார்கள்.

இறுதிப்பகுதியில் நாடகத்தின் குழுப்பாடகர்கள் (கோரஸ்) தோன்றி ஃபாஸ்டஸின் பேரறிவும் வீணானது பற்றியும் சரியான முறையில் வாழ்க்கையின் தேர்வுகளைச் செய்ய வேண்டியது பற்றியும் பேசி அறிவுரை வழங்குகிறார்கள்.

இது ஒரு ஜெர்மானியப் பழங்கதை. இதனை கிறிஸ்டபர் மார்லோ நாடகமாகச் செய்ததைக் குறிப்பிட்டோம். மேதைமையில் ஷேக்ஸ்பியருக்குச் சமமாக மதிக்கப் பட்டவர். அவரது மால்டாவின் யூதன், இரண்டாம் எட்வர்டு போன்ற பல படைப்புகளும் புகழ் பெற்றவை. இரண்டு நூற்றாண்டுகள் கழித்து இந்தக் கதையை ஃபாஸ்ட் என்ற பெயரில் நாடகமாக ஜொஹான் வுல்ஃப்காங் வான் கெத்தே என்ற மாபெரும் ஜெர்மானியப் படைப்பாளி ஆக்கியுள்ளார்.

கடவுள் நம்பிக்கை அற்றவன் (அதீஸ்ட்) என்றாலே கெட்டவனாகத்தான் இருப்பான், தீய வழியைத்தான் தேர்ந்தெடுப்பான் என்ற பொதுப்புத்தியின் அடிப்படையில் இந்த நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. உண்மையில் மதங்கள் செய்த அளவு தீமையை எந்த நாத்திகனும் உலகில் செய்ததில்லை. மேலும் உலகின் மிகப் பெரிய தத்துவஞானிகள் உட்பட, உலகையே மாற்றிய சமூக சீர்திருத்தவாதிகள் உட்பட யாவரும் கடவுள் மறுப்பாளர்களாகவே உள்ளனர் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.


ஈக்களின் தலைவன் (Lord of the Flies)

ஓர் உலகப் போர் நடந்துகொண்டிருக்கிறது. அதன் இடையில் போர்க்காலக் குடிகள் வெளியேற்ற நடவடிக்கைப்படி பிரிட்டனிலிருந்து பள்ளிப் பையன்களை அழைத்துச் செல்லும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு யாருமற்ற ஒரு தீவில் விழுகிறது. அதிலிருந்து தப்பிய சிறுவர்கள் உயிர் பிழைத்து வாழ வேண்டித் தங்களை ஒரு சமுதாயமாக அமைத்துக் கொள்வதில் ஏற்படும் பரிதாபமே ஈக்களின் தலைவன் என்ற கதையாக உருவெடுத்துள்ளது.

முதலில் குழு இரண்டாகப் பிரிகிறது. சின்னஞ்சிறுவர்கள்- ஏறத்தாழ ஆறு வயது அளவினர் “சிறியோர்”; பத்துப் பன்னிரண்டு வயதுவரை இருந்தவர்கள் “பெரியோர்”. ரால்ஃப் என்பவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவன் சந்தோஷமாக விளையாடுங்கள், உயிர்தரித்திருங்கள், எப்போதும் இடைவிடாது ஒரு நெருப்பு எரிந்துகொண்டிருக்கச் செய்யுங்கள் என்று மூன்று விதிகளைத் தருகிறான். எப்போதும் ஒரு தீ எரிந்து கொண்டிருந்தால் ஏதேனும் கப்பல் அதைப் பார்த்து நிற்கலாம் என்றும் அவன் கூறுகிறான். அவனது தோழன் பிக்கி என்பவன் உதவியோடு அவன் தங்குமிடம் அமைப்பு, துப்புரவு போன்றவற்றிற்கான விதிகளை நிறுவ முனைகிறான். அனைவரையும் ஓரிடத்திற்கு அழைப்பதற்கு அவர்களுக்கு ஒரு சங்கு கிடைக்கிறது. தீயை உண்டாக்க பிக்கியின் கண்ணாடி பயன்படுகிறது. ஆக ஒருவிதமான ஜனநாயகம் அங்கு நிலைநிறுத்தப்படுகிறது. தலைமை ஏற்பதற்கான இரண்டு அடையாளங்கள் ரால்ஃபுக்குக் கிடைத்துவிட்டன.

ஆனால் குழுவில் அவனுக்கு எதிரியாக ஜேக் என்பவன் இருக்கிறான். தப்பிய சிறுவர்களில் பாடற் குழுவினர் சிலரை அவன் தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறான். ஆக இரண்டு “கட்சிகள்” ஏற்பட்டு விட்டன. நாகரிகத்தின் பக்கம் ரால்ஃபின் பையன்களும், காட்டுமிராண்டித் தனத்தின் பக்கம் ஜேக்கின் பையன்களும் உள்ளனர். ஏறத்தாழ இந்தியாவின் இருபெரும் கட்சிகள் நமக்கு நினைவுக்கு வரவில்லையா?

ஜேக்கின் குழுவினர், ஏதோ ஒரு புராண கால விலங்கு தீவிலிருப்பதாக ஒரு கதையை உருவாக்குகின்றனர். இடையில் ஓர் இரவில் தீவுக்குமேல் நடந்த வான்வழிச் சண்டை ஒன்றில் ஈடுபட்ட ஒருவன் பாராசூட்டில் குதிக்கிறான். குதித்தவன் இறந்துவிட மலையுச்சியில் அந்த பாரசூட் இறங்குகிறது. பகலில் பாராசூட்டின் உருவம் காற்றில் எழுந்து உட்கார்வது போலும், பிறகு அமிழ்வது போலும் தோன்றுகிறது. அதைத் தொலைவிலிருந்து பார்த்து புராண விலங்கென்று ஏற்கும் ஜேக்கின் குழுவில் பெரும்பான்மையினர் சேர்கின்றனர். இக்காலத்திலும் மூட நம்பிக்கையின் பக்கம் எந்தக் கட்சி இருக்கிறதோ அதுவே வெற்றி பெறுகிறதல்லவா?

விலங்குத்தனமான ஜேக்கின் குழுவினர் தங்களைப் பழங்குடி மக்களாகவே கருதிக் கொண்டு, முகத்தில் வண்ணம் தீட்டிக் கொண்டு, அவர்கள் போலவே நடனமாடுகின்றனர். அவர்கள் ஒரு பன்றியைக் கொன்று அதன் தலையை ஒரு கொம்பில் நட்டு அதை விலங்குக்குப் படைக்கின்றனர்.

ரால்ஃபின் குழுவின் சைமன் என்ற சிறுபையன் இருக்கிறான். தங்குமிடங்களை மேற்பார்வை பார்க்கும் பணியோடு சிறுவர்களை மேற்பார்வை செய்யும் காரியத்தையும் அவன் கவனித்து வருகிறான்.

பின்னர் தனது தனியிடத்தில் அவன் தனது மனமயக்கத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் கொம்பில் செருகப்பட்ட பன்றியின் தலை ஈக்களின் தலைவனாகத் தோன்றுகிறது. அந்தத் தலை அவனுடன் பேசுகிறது. அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தீமையின் குறியீடாக அவனுக்குத் தோன்றுகிறது. உண்மையில் விலங்கு என்று ஒன்று தீவில் இல்லை, மாறாக, ஒவ்வொரு பையனின் ஆழ்மனத்திலும் இருக்கின்ற விலங்குதான் அது. மேலும் சைமன் மனிதனின் ஆன்மாவைக் குறிக்கும் குறியீடு என்றும், அதனால் மற்றப் பையன்கள் அவனைக் கொன்றுவிடுவார்கள் என்றும் முன்னுரைக்கிறது. இதைக் கனவுபோலக் கண்டுணரும் அவன் மயக்கமடைகிறான்.

பிறகு அவன் மலைமீது சென்று பாரசூட்டைக் கண்டு உண்மையை அறிகிறான். இரவில் ஜேக்கின் குழுவினர் நிகழ்த்தும் காட்டுமிராண்டி ஆட்டத்திற்கு இடையில் அவன் வந்து சேர்கிறான். அவர்கள் சைமனையே புராண விலங்கு என்று நினைத்துக் கொன்று விடுகின்றனர்.

இப்போது பிக்கி உள்பட மூன்று பையன்கள் மட்டுமே ரால்ஃபுடன் உள்ளனர். ஜேக்கின் குழுவினர் பிக்கியின் கண்ணாடியைத் திருடிச் சென்று விடுகின்றனர். அதனால் தீவில் தீயை எழுப்ப இயலாமல் போகிறது. ஒரு கப்பலையும் அதனால் எல்லாரும் தவற விடுகின்றனர். மூட நம்பிக்கை அடிப்படையிலும், பன்றிக்கறியை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தும் அநேகமாக எல்லாரையுமே தன் பக்கம் இழுத்துக் கொள்கிறான் ஜேக்.

தன் கண்ணாடியைக் கேட்க பிக்கியும் அவன் நண்பர்களும் ஜேக்கிடம் செல்லும்போது, ஜேக் கூட்டத்தின் ஒரு பையன் அவன்மேல் ஒரு பாறையைத் தள்ளிக் கொன்றுவிடுகிறான். ரால்ஃபை விட்டுவிட்டு பிற இரு பையன்களையும் ஜேக் கைப்பற்றுகிறான்.

ரால்ஃபைத் தேடும் ஜேக்கின் குழுவினர், அவனை விரட்டுவதற்காகக் காட்டின் ஒரு பகுதியையே பற்றவைத்து விடுகின்றனர். நல்ல வேளையாக அந்தப் பெரும் தீயைக் கப்பல் ஒன்று காண்கிறது. அதிலிருந்து பிரிட்டிஷ் கப்பல் தலைவன் ஒருவன் இறங்கிவருகிறான். காட்டுமிராண்டிகளாக மாறிவிட்ட பையன்களின் கையில் சாவதற்கிருந்த ரால்ஃபை அவன் காப்பாற்றுகிறான். என்ன நடக்கிறது என்று அவன் விசாரிக்கும்போதுதான் அந்தப் பையன்களுக்குத் தாங்கள் ஒரு நாகரிக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஞானம் உறைக்கிறது. அனைவரும் தலையைக் குனிந்து அழுகின்றனர்.

நம் நாட்டின் இன்றைய நிலையை வில்லியம் கோல்டிங் எதிர்நோக்கி எழுதியதுபோல இருக்கிறது. நாகரிகமடைந்த மக்களின் மனங்களிலும் தேங்கியிருக்கும் கொலைவெறி, பிறரை மூட நம்பிக்கையின் பெயரால் சரணடைய வைத்தல், அடிப்படையான தீமை ஆகியவர்களை இச் சிறுவர்களின் கதை வாயிலாக எடுத்துக் காட்டுகிறது லார்ட் ஆஃப் தி ஃப்ளைஸ்.

ஈக்களின் அரசன் – லார்ட் ஆஃப் தி ஃப்ளைஸ் என்பது பைபிளில் சாத்தானைச் சேர்ந்த, அடுத்த நிலையிலுள்ள பேயைக் குறிக்கப் பயன்படும் சொல். சில சமயம் சாத்தானின் உருவமாகவும் பீல்சிபப் கருதப்படுகிறான். பேருண்டி கொள்ளுதலின் (gluttony) உருவமாகவும் இருக்கிறான். பேருண்டி என்பது உணவு உண்பதை மட்டுமல்லாமல் பணம் உள்ளிட்ட எந்தப் பொருளையும்  தனக்கெனப் பேராசையுடன் சேர்த்துவைத்துக் கொள்ளும் பண்பையும் குறிக்கிறது.

இந்த நாவலை எழுதிய வில்லியம் கோல்டிங் (1911-1993) ஆங்கில நாவலாசிரியர். இந்த நாவல் 1954இல் வெளியானது. 1983இல்அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. பிறகு சர் பட்டமும் பெற்றார். ஒருவகையில் இந்த நாவல் மனித சமூகத்தின் மீது அவருக்கிருந்த அவநம்பிக்கையைக் காட்டுவதாக உள்ளது.


சீவகன் கதை (சீவக சிந்தாமணி)

தமிழின் முதற்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி யாவுமே அவைதிகக் காப்பியங்கள். அதாவது, சைவ, வைணவ மதங்களையோ பிற வைதிக மதங்களையோ சார்ந்தவை அல்ல. அவற்றில் மூன்று ஜைனக் காப்பியங்கள், இரண்டு பெளத்தக் காப்பியங்கள். ஆனால் அவற்றில் முதலிரு கதைகள் மட்டுமே தமிழ் மண்ணில் விளைந்தவை. பிற வடநாட்டிலிருந்து இறக்குமதி ஆனவை. தமிழின் மூன்றாவது காப்பியமான சீவக சிந்தாமணியும் வடக்கில் விளைந்த கதையே. இக்காப்பியத்தை எழுதியவர் திருத்தக்க தேவர்.

இதன் கதைத் தலைவன் பிறந்தவுடனே ஒரு தெய்வம் “ஜீவ” (வாழ்க) என வாழ்த்துகிறது. எனவே அவன் ஜீவகன் (சீவகன்) எனப்படுகிறான். அவனைச் “சிந்தாமணியே” எனக் கொஞ்சுகிறாள் அவன் தாய். எனவே காப்பியப் பெயர் சீவக சிந்தாமணி ஆகிறது.

இராசமாபுரத்தில் வசிக்கும் சச்சந்தன் ஏமாங்கத நாட்டுக்கு அரசன். அவன் மனைவி விசயை. சச்சந்தன் திருமணமானதுடன் தன் மனைவியோடு இடையறாதிருந்து இன்பம் துய்க்க எண்ணம் கொண்டு, கட்டியங்காரன் என்ற அமைச்சனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கிறான். அவன் தீய எண்ணம் கொண்டவன். தானே அரசனாக விழைந்து, அந்தப்புரத்திலிருந்த அரசன்மீதே போர் தொடுக்கிறான். சச்சந்தன், நிறைகர்ப்பமாக இருந்த தன் மனைவியை ஒரு மயில் வடிவச் சிறு விமானத்தில் ஏற்றி அனுப்பி விட்டுப் போரில் உயிர் துறக்கிறான்.

விமானம் அருகிலுள்ள ஒரு சுடுகாட்டில் இறங்குகிறது. அங்கு விசயைக்குக் குழந்தை பிறக்கிறது. ஒரு தெய்வத்தின் உதவியால் கந்துக்கடன் என்ற பெருவணிகன் குழந்தையாக இருந்த சீவகனைக் கொண்டுசென்று வளர்க்கிறான். பின்னர் அவனுக்கே நந்தட்டன் என்ற ஆண் குழந்தையும் பிறக்கிறது. சீவகனுக்குப் பலவிதக் கலைகளையும், கல்வியையும் அச்சணந்தி என்ற முனிவர் வாயிலாகக் கற்பிக்கிறான் கந்துக்கடன். சீவகனின் பூர்விகத்தையும் அச்சணந்தி எடுத்துரைக்கிறார்.

சீவகனுக்குப் பல நல்ல நண்பர்கள் வாய்க்கின்றனர். அவர்களில் பதுமுகன் முதன்மையானவன். அச்சமயத்தில் வேடுவர் பலர் ஊரில் புகுந்து ஆயிரக் கணக்கான பசுக்களைக் கவர்ந்து செல்கின்றனர். கட்டியங்காரனின் படை அவர்களிடம் தோல்வியடைகிறது. தன் பசுக்களை மீட்டுத் தருபவர்களுக் குத் தன் மகள் கோவிந்தையையும் 2000 பசுக்களையும் அளிப்பதாக ஆயர்தலைவன் நந்தக்கோன் அறிவிக்கிறான். சீவகன் தன் நண்பர்களுடன் சென்று வேடர்களை வென்று பசுக்களை மீட்டுத் தருகிறான். நந்தக்கோனின் மகளைத் தன் நண்பன் பதுமுகனுக்குத் திருமணம் செய்துவைக்கிறான்.

கலுழவேகன் என்பவன் ஒரு வித்யாதரன். அவனுக்கு காந்தர்வ தத்தை என்று கலைவல்ல மகள் ஒருத்தி. அவன் இராசமாபுரத்தில் ஒரு வீணைப் போட்டி ஏற்பாடு செய்கிறான். வீணையில் தன் மகளை வெல்பவனுக்கு அவளை அளிப்பதாக அவன் அறிவிக்கிறான். சீவகன் வீணைப்போட்டியில் அவளை வென்று பரிசாகப் பெறுகிறான். இச்செயல் கட்டியங்காரனிடம் பொறாமையையும் பகைமையையும் தூண்டுகிறது.

இராசமாபுரத்தில் குணமாலை-சுரமஞ்சரி எனத் தோழியர் இருவர். அவரகளுக்குள் தங்களில் எவருடைய சுண்ணம் சிறப்பு வாய்ந்தது என்ற போட்டி எழுகிறது. சீவகனிடம் கொண்டு செல்கிறார்கள். குணமாலையின் சுண்ணமே சிறந்தது என்று தீர்ப்புரைக்கிறான். பிறகு குணமாலையை மதம்பிடித்த பட்டத்து யானையிடம் இருந்து சீவகன் காப்பாற்றுகிறான்.  இருவருக்கும் திருமணம் நிகழ்கிறது. பட்டத்து யானைக்குத் தீங்கு செய்தான் என்று கட்டியங்காரன் சீவகனைக் கொல்லப் படைவீரரை ஏவுகிறான். அவர்கள் இடையில் இருந்து சீவகனை சுதஞ்சணன் என்ற வித்யாதர நண்பன் காப்பாற்றி எடுத்துச் செல்கிறான்.

அவனிடமிருந்து பல ஊர்களையும் காண்பதாக விடைபெறும் சீவகன், பல்லவ தேசத்தில் சந்திராபம் என்ற ஊரை அடைகிறான். அந்நாட்டு அரசனின் மகள் பதுமையைப் பாம்பு தீண்டிவிட்டதாக அறிந்து அவளுக்கு சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான். அதனால் இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அவளை மணம் செய்துகொள்கிறான். ஆனால் உடனே அவளுக்குச் சொல்லாமலே அவளைவிட்டு நீங்கி, தக்க நாட்டில் கேமமாபுரம் என்ற ஊரை அடைகிறான்.

அங்கு வணிகனான சுபத்திரன் என்பவன் மகள் கேமசரியை மணம் புரிந்து கொள்கிறான். பின்னர் அவளுக்கும் கூறாமல் அவளைப் பிரிந்து மத்திம தேசத்தை அடைகிறான். அதன் தலைநகரான ஏமாமாபுரத்திற்குச் செல்கிறான். அங்குள்ள அரசனின்ஐந்து மைந்தர்களுக்கும் வில்வித்தை பயிற்றுவித்து, அவர்களின் தங்கையான கனகமாலையை மணம் புரிகிறான். அதற்குள் காந்தர்வ தத்தையின் உதவியால் அவனைத் தேடிக் கொண்டு நந்தட்டன் வந்தான்.

பிறகு பதுமுகன் ஆகிய துணைவர் அனைவரும் சீவகனைத் தேடிவந்தனர். சீவகன் தாய் விசயை தண்டகாரணியத்தில் ஒரு தவப்பள்ளியில் இருக்கிறாள், அவனைக் காண ஆவல் கொண்டுள்ளாள் என்ற செய்தியையும் தெரிவித்தனர். அதனால் கனகமாலையிடம் விடைபெற்று, அவர்களுடன் விசயையைக் காணச் சென்றான். அவள் அறிவுரை பல கூறியதுடன், கட்டியங்காரனை வெல்லத் தன் சகோதரன் கோவிந்தராசனின் உதவியைப் பெறுமாறும் கூறினாள்.

பின்னர் பயணத்தைத் தொடர்ந்த சீவகன், இராசமாபுரத்துக்குத் திரும்புகிறான். அவன் ஒரு கடையில் அமர்ந்தவுடனே அங்கு விற்காத பலநாட் பொருட்கள் விற்றுப்போயின. கடையின் உரிமையாளன், சாகரதத்தன் மகள் விமலை. பந்தாடிக் கொண்டிருந்த அவள் சீவகனைக் கண்டு காதல் கொண்டாள். அவளையும் சீவகன் மணம் புரிகிறான்.

இராசமாபுரத்தில் சுரமஞ்சரி ஒரு கன்னிமாடத்தில் அவனுக்காகத் தவமிருந்துகொண்டிருக்கிறாள். கிழவனாக உருவம் மாறிக் கன்னிமாடத்திற்குள் செல்கிறான் சீவகன். அங்கு வீணை வாசித்து சுரமஞ்சரியை மயக்கிக் காமன் கோயிலுக்கு வரச் செய்கிறான். அவள் வழிபடும்போது அசரீரியாக உன் காதலனைக் காண்பாய் என நண்பனை விட்டுக் கூறச் செய்கிறான். அவள் எதிரில் சீவகன் செல்ல, இருவரும் ஒன்றாகின்றனர்.

பின்னர் கந்துக்கடனிடம் விடைபெற்று, தன் மாமன் விதேய நாட்டரசன் கோவிந்தனைக் காணச் செல்கிறான். அவன் மகள் இலக்கணையை மணக்க வேண்டுமாயின் திரிபன்றிச் சக்கரம் சுழலும்போது அப்பன்றியை வீழ்த்தவேண்டும் என்று அறிவிக்கிறான் கோவிந்தன். அப்பன்றிகளை அடித்தபின் கட்டியங்காரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்று தன் நாட்டைப் பெற்றான். பிறகு இலக்கணையை மணம் புரிந்தான்.

பின்னர் பல ஆண்டுகள் நல்லாட்சி புரிந்து, தன் நாட்டைத் தன் மகன் சச்சந்தனுக்கு அளித்தான். அச்சணந்தி முனிவர் அவனுக்கு நிலையாமையை எடுத்துரைக்கிறார்.

ஒரு நாள் சோலையில் குடும்பத்துடன் களித்திருக்கிறான். அங்கு ஓர் ஆண் குரங்கு பலாப்பழம் ஒன்றைப் பறித்து தன் பெண்குரங்கிற்குத் தருகிறது. ஆனால் அதை அந்தத் தோட்டத்தின் காவல்காரன் பறித்துத் தின்கிறான். இப்படித்தான் சச்சந்தனின் அரசுரிமையைக் கட்டியங்காரன் பறித்துக் கொள்ள, அவனிடமிருந்து தான் நாட்டைக் கைப்பற்றியதை நினைவுகூர்கிறான் சீவகன். மாற்றங்கள் நிகழ்வதும் நிலையாமையும் உலகியல்பு என்பதை உணர்ந்து உடனே துறவு பூணுகின்றான். தவமிருந்து இறுதியாக முக்தி மங்கையையும் அடைகின்றான்.

நாமகளாகிய கலைமகளை அடைவதில் தொடங்கிய அவன் வாழ்க்கை, காந்தர்வ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை என்ற எட்டுப் பெண்களையும் தனக்குரிய மண்மகளையும் பெற்று, பத்தாவதாக முக்தி என்ற பெண்ணையும் அடைவதில் முடிகிறது. இவ்வாறு நூல் முழுவதுமே சீவகன் பெண்களை மணமுடிப்பதாகக் காட்டுவதால் இதை (திரு)மண நூல் என்று பழங்காலத்தில் அழைத்தார்கள்.

நிலையாமையே உண்மை, முக்தியே சிறந்த நெறி என்பதை அறிவிக்கத் திருத்தக்க தேவர் கொண்ட பாதை நெடியது. இதற்கு இவ்வளவு சிற்றின்ப மயமான கதையைப் படைக்க வேண்டுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

இக்காப்பியம் விருத்தப்பாக்களால் ஆனது. இதுவே கம்ப ராமாயணத்தினை விருத்தப்பாவில் இயற்றக் கம்பருக்குத் துணிவும் அளித்தது. பலவிதங்களிலும் கம்பரின் முன்னோடியான திருத்தக்க தேவர் தமிழிலக்கியம் உள்ளளவும் வாழ்வார்.


அன்னா கரீனினா

இப்போதும் நாம் அடிக்கடி நமது தொலைக்காட்சிச் சேனல்களிலும் பத்திரிகைகளிலும் பார்க்கும் செய்திதான். திருமணமாகி, குழந்தையும் பெற்ற பெண் ஒருத்தி, தன் முன்னாள் காதலனுடன் ஓடிப்போய் விடுகிறாள். கணவனை விட்டு, உறவினரின் ஆதரவை விட்டு, பாதுகாப்பான சமூக அந்தஸ்தினை விட்டு, ஏன் தன் குழந்தையைக் கூட விட்டுவிட்டுக் காதலனுடன் அவள் ஏன் ஓடவேண்டும்? நம் தமிழ்நாட்டுச் சமூக, குடும்ப மனோபாவம் அவள் நடத்தையைப் பற்றி எத்தகையதாக இருக்கிறது? அவள் கணவன் இந்த நிகழ்வை எப்படிச் சகித்துக் கொள்வான்? அல்லது புரிந்து கொள்வான்? இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ, அவனிடமும் அவளிடமும் என்ன என்ன குறைகள் இருந்திருக்கும்? ஒரு மண வாழ்க்கைக்குப் பின்னரும் அவள் தன் காதலனிடம் ஈடுபட, அவனிடம் என்னதான் இருந்திருக்கும்? இம்மாதிரிக் கேள்விகளுக்குப் பின் ஆழமான உளவியல், சமூகவியல் கேள்விகளும் இருக்கின்றன. திருமணம் என்ற சடங்கில் ஈடுபடும் ஆண்-பெண்களின் உணர்வுகள் மதிக்கப் படுகின்றனவா போன்ற எத்தனையோ கேள்விகள்.

இதே சமகாலக் கதையைத்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யாவின் ஒரு ராஜகுடும்பப் பின்னணியில் வைத்து அன்னா கரீனினா (1878) என்ற நாவலில் சொல்கிறார் லியோ டால்ஸ்டாய்.

மாஸ்கோவில் நாவல் தொடங்குகிறது. இளவரசன் ஸ்டிவா-வுக்கும், தவறான ஓர் உறவில் அவன் ஈடுபட்டிருந்தததைக் கண்டுபிடித்த அவன் மனைவி டாலிக்கும் இடையில் புகைச்சல். (இவர்களின் முழுப்பெயர்கள் நீண்டவை, வாயில் எளிதில் நுழையாதவையும்கூட). அப்போது அவனுக்குத் தன் தங்கை இளவரசி அன்னா கரீனினா வரப்போவதாகச் செய்தி வருகிறது. (கரீனினா = கரீனின்-இன் மனைவி). அப்போது டாலியின் தங்கை காதரினாவை (கிட்டியைக்)கைப்பிடிக்க லெவின் என்ற அவன் நண்பன் வருவதாகவும் இருக்கிறது. ஆனால் கிட்டி, வ்ரான்ஸ்கி என்ற இராணுவ அதிகாரியைக் காதலிக்கிறாள்.

அன்னா, டாலியைச் சமாதானம் செய்து குடும்பத்தில் அமைதியை உருவாக்குகிறாள். ஆனால் திருமணமாகி ஒரு மகனைப் பெற்ற அவள், வ்ரான்ஸ்கியின் பால் ஈடுபாடு கொள்கிறாள். தன் கணவன் கரீனின்-உடன் அவள் வாழ்க்கை வறண்டதாகவும் கணக்குப் போலவும் ஆனால் உயர்குடிச் சமூகத்துக்கு ஏற்ற சடங்காகவும் இருக்கிறது. அதனால்தான் அவளுக்கு வ்ரான்ஸ்கியின்மீது ஈடுபாடு ஏற்படுகிறது, அது மிகத் தூய்மையான காதலாக மலர்கிறது என்கிறார் டால்ஸ்டாய்.

கிட்டியால் தான் ஒதுக்கப்பட்டதால் சோர்வடைந்து தன் பண்ணைக்குச் சென்று விடுகிறான் லெவின். கிட்டி, வ்ரான்ஸ்கியின் காதல் கிடைக்காத தால் உடல்நலம் குன்றுகிறாள்.

முதலில் அன்னா, இந்த மனச் சஞ்சலத்தை ஒதுக்கிவிட்டு, பீட்டர்ஸ்பர்கில் உள்ள தன் குடும்பத்துக்குத் திரும்பத்தான் செய்கிறாள். ஆனால் வ்ரான்ஸ்கி அவளைப் பின் தொடர்கிறான். முதலில் ஒதுக்கினாலும் பின்னர் அன்னா அவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள். தன் கணவன் கரீனின்-இன் மறுப்புகளையும் சமாளிக்கிறாள். மேலும் கரீனினின் குழந்தை அவள் வயிற்றில் வளர்வதால் தன் தவற்றை ஒப்புக் கொள்கிறாள். ஒரு சமூகப் பழியாக அவள் ஆசை வளர்வதற்கு முன் அதை நிறுத்திவிடும்படி கரீனின் எச்சரிக்கிறான்.

இடையில் மாஸ்கோவில் கிட்டியும் லெவினும் மறுமுறை சந்திக்கும்போது திருமணத்திற்கு உடன்படுகின்றனர்.

அன்னாவின் தவறான தொடர்பு தொடர்வதால் கரீனின் மணவிலக்கிற்கு ஏற்பாடுசெய்கிறான். குழந்தை பிறந்ததால் உடல்நிலை மோசமாக இருந்த அன்னாவை மன்னிக்கிறான். சங்கடமடைந்த வ்ரான்ஸ்கி தற்கொலைக்கு முயலுகிறான். ஆனால் வ்ரான்ஸ்கி, அன்னா இருவருமே உடல் தேறி, ஐரோப்பாவுக்கு ஓடிவிடுகின்றனர்.

கிட்டிலெவினின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகச் சீரடைகிறது. ஐரோப்பாவுக்குச் சென்ற அன்னாவும் வ்ரான்ஸ்கியும் ஆசைவாழ்க்கை சலிப்புற்று பீட்டர்ஸ்பர்கிற்குத் திரும்புகின்றனர். திரும்பிவந்த வ்ரான்ஸ்கியை அவன் ஆண் என்பதால் ரஷ்ய சமூக உயர்வட்டம் பழையபடியே மரியாதையுடன் ஏற்றுக் கொள்கிறது. அன்னாவின் நிலை அவ்வாறில்லை. அவள் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்படுவதோடு அவள் மகனைப் பார்ப்பதற்கும் தடுக்கப் படுகிறாள்.

முற்றிலும் ஒதுக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்படும் அன்னா, பீட்டர்ஸ்பர்கை விட்டு வ்ரான்ஸ்கியின் கிராமப்புறப் பண்ணைக்குச் செல்கிறாள்.

அச்சமயம் லெவின், வ்ரான்ஸ்கி இருவர் பண்ணைகளுக்கும் வருகைதரும் டாலி, இரண்டு குடும்பங்களும் குழப்பத்திலும் கலக்கத்திலும் இருப்பதைக் கவனிக்கிறாள். இடையில் கிட்டியுடன் காதல் விளையாட்டில் ஈடுபடும் ஓர் உறவினனை லெவின் வெளித்தள்ளுகிறான். அதேசமயம் தன் அழகைப் பாதுகாத்துக் கொள்ள அன்னா கடும் முயற்சியில் ஈடுபடுகிறாள். தன்னைவிட்டு வேறு எவரிடமும் வ்ரான்ஸ்கி ஈடுபட்டுவிடக்கூடாது என்ற பொறாமையில் உழல்கிறாள்.

பல்வேறு காரணங்களால் எல்லாக் கதை மாந்தர்களும் மாஸ்கோவுக்கு இடம் பெயர்கிறார்கள். லெவின் அங்கு அன்னாவிடம் ஈடுபாடு காட்டுவதால் அவன் குடும்பத்தில் சண்டை வரும்போல இருந்தாலும் கிட்டி ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள். அதனால் அவன் குடும்பத்தில் சமரசம் ஏற்படுகிறது. ஸ்டிவா, கரீனினை மணவிலக்குச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறான், ஆனால் கரீனின் மறுக்கிறான். மனம் தளர்ந்த அன்னா போதை மருந்துப் பழக்கத்தில் ஈடுபடுகிறாள். வ்ரான்ஸ்கியுடன் தன் உறவு பாழாகிவிட்டது என்ற கலக்கத்தில் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறாள்.

கரீனின், அன்னாவுக்கும் வ்ரான்ஸ்கிக்கும் பிறந்த குழந்தையைத் தான் வளர்க்க ஏற்றுக் கொள்கிறான். மனமுடைந்த வ்ரான்ஸ்கி, ரஷ்ய-துருக்கியப் போரில் பணி செய்யச் சென்று விடுகிறான். லெவினுக்கு ஒரு திடீர் மனமாற்றம்-ஒரு வெளிப்படுத்தல் நிகழ்கிறது. கிறித்துவ மதிப்புகளில் ஈடுபாடு ஏற்படுகிறது. மனிதப் பிறவிகள் தவறுகள் செய்தாலும் அவர்கள் எப்படியாவது சுயநலம் சார்ந்த பேராசையிலிருந்து விலகி அன்புகொண்ட நல்வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்படுகிறது. எனவே தன் மனைவியுடன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வாழ்க்கையின் அர்த்தத்தையும் சமாதானத்தையும் பெற முனைகிறான். இக்கதையின் பிற கதை மாந்தர்களுக்குத்தான் அத்தகைய நல்வாழ்க்கை இசையாமல் போகிறது.

டால்ஸ்டாய் மாபெரும் எழுத்தாளர், போரும் சமாதானமும் போன்ற பெரும் வரலாற்றுக் கதைகளைப் படைத்தவர். அறநெறியில் ஈடுபாடு கொண்டவர். காந்திக்கும் வழிகாட்டி. அவரது மிகச் சிறந்த படைப்பு என்று கருதப்படுவது அன்னா கரீனினா. ஃப்ளாபேரின் மேடம் பவாரி என்ற நாவலை ஒத்ததாக இது நோக்கப்படுகிறது.

ஒரு குடும்ப வரலாற்றையே அநேகப் பாத்திரங்களுடன் நம் கண்முன் படைத்துக் காட்டியிருக்கிறார் டால்ஸ்டாய். இம்மாதிரி ஒரு சிறிய கதைச் சுருக்கம் எந்தச் சமூகத்திலும், குடும்பத்திலும் நிகழும் வரலாற்று மாற்றங்கள், சோகங்கள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், மகிழ்ச்சித் திளைப்புகள் ஆகிய அனைத்தையும் வெளிக் கொண்டுவர இயலாது என்பது வெளிப்படை.