டாக்டர் ஃபாஸ்டஸ்

டாக்டர் ஃபாஸ்டஸ் என்பது மார்லோ என்ற ஆங்கிலக் கவிஞர் இயற்றிய ஒரு நாடகம். அவர் ஷேக்ஸ்பியர் காலத்தினர் ஆயினும், அவரது இந்த நாடகம் முற்றிலும் வேறொரு தளத்தில் அமைந்திருக்கிறது.

டாக்டர் ஃபாஸ்டஸ் என்பவன் விட்டன்பர்க் என்ற ஊரில் வாழ்ந்த ஒரு மரியாதைக்குரிய ஜெர்மானிய அறிஞன். தர்க்கம், மருத்துவம், சட்டம், மதம் போன்ற எல்லா அறிவு வடிவங்களையும் கரை கண்டுவிடுகிறான் அல்லது அவ்வாறு கரைகண்டதாக நினைக்கிறான். அதனால், அதிருப்தி யுற்று மந்திர தந்திரங்களைக் கற்க முனைகிறான். அதையும் முழுவதும் கற்று, மெபிஸ்டோபிலிஸ் என்ற பேயை அழைத்து அவனுடன் ஓர் ஒப்பந்தம் செய்கிறான். அவனது எஜமான் லூசிபரிடம் (சாத்தானிடம்) ஃபாஸ்டஸ், தன் ஆன்மாவைத் தருவதாகவும் அதற்கு பதிலாக மெபிஸ்டோபிலிஸ் இருபத்து நாலு ஆண்டுகள் தனக்குச் சேவகம் புரிய வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தம் அமைகிறது. இடையில் அவன் வேலைக்காரனான வாக்னரும் கொஞ்சம் மந்திரதந்திரத்தைக் கற்றுக் கொண்டு அதன் வாயிலாக ராபின் என்பவனை விதூஷகனாக வைத்துக் கொள்கிறான்.

லூசிஃபர் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறான். ஃபாஸ்டஸுக்கு அச்சமயத்திலேயே தன் மனம் திருந்தி ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனாலும் பேராசையினால் ஒப்பந்தத்தில் இரத்தத்தில் கையெழுத்திடுகிறான். அப்படிச் செய்யும் போதே, “ஏ மனிதனே ஓடிப் போய்விடு” (“Homo fuge”) என்ற வாசகங்கள் கையின்மீது நெருப்பாகப் பளிச்சிடுகின்றன. ஃபாஸ்டஸ் மறுபடியும் கலங்குகிறான். கலக்கத்தை நீக்க, மெபிஸ்டோபிலிஸ் அவனுக்கு ஏராளமான வளங்களையும் செல்வத்தையும் அறிவையும் வழங்கித் தேற்றுகிறான். ஃபாஸ்டஸின் எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் அவன், பிரபஞ்சத்தைப் படைத்தது யார் என்ற கேள்விக்கு மட்டும் விடை சொல்ல மறுக்கிறான். மீண்டும் ஃபாஸ்டஸ் கலக்கமுறுகிறான்.

தனக்கு ஒரு மனைவி வேண்டும் என்ற ஃபாஸ்டஸின் கோரிக்கையை மெபிஸ்டோபிலிஸ் மறுக்கிறான், ஆனால் உலகைப் பற்றிய அறிவுக்கான நூல்கள் அனைத்தையும் அளிக்கிறான். தனக்கு மனைவியையும் சுவர்க்கத்தையும் அளிக்காமையால் மெபிஸ்டோபிலிஸை அவன் சித்திரவதை செய்கிறான். ஏனெனில் கடவுள் என்ற சொல்லைத் தாங்கிக் கொள்ள அவனால் முடியாது. அப்போது நல்ல தேவதையும் கெட்ட தேவதையும் அவன் முன் தோன்றுகின்றன. நல்ல தேவதை அவனைத் திருந்துமாறு சொல்கிறது. கெட்ட தேவதை இப்போதுள்ள வழியையே கடைப்பிடி என்கிறது. இரண்டாவதை மீண்டும் தேர்ந்தெடுப்பதால், பேய்கள் ஒன்றுக்கு மூன்றாக-லூசிபர், பீல்சிபப், மெபிஸ்டோபிலிஸ் எனத் திரும்பி வந்து அவனை அடக்குகின்றன. இனிமேல் கடவுளைப் பற்றி சிந்திப்பதோ பேசுவதோ கிடையாது என்று வாக்களித்த பின் மெபிஸ்டோபிலிஸ் ஏழு கொடிய பாவங்களையும் மனிதரூபத்தில் அவன் முன் தோன்றச் செய்து கேளிக்கை யளிக்கச் செய்கிறான்.

இதற்குப் பின் ஃபாஸ்டஸ் டிராகன்கள் இழுக்கும் தேரில் ஏழுலகங்களையும் சுற்றி வருகிறான். ஒரு முறை ரோமுக்குச் செல்கிறான். ரோமின் அரசவையில் கண்ணுக்குப் புலப்படா மனிதனாக இருந்து மந்திரங்கள் செய்கிறான். போப்பின் விருந்தில் உணவைத் திருடுகிறான். அவர் காதில் அறைகிறான். இதன்பின் அவன் புகழ் பெருகுகிறது.

ஃபாஸ்டஸ் செய்வனவற்றில் பொது நலனுக்கானவை எதுவும் இல்லை, எல்லாம் சில்லறை விஷயங்களே. உலகைச் சுற்றி வருகிறான். அவனது பரந்த வானியல் அறிவு அவனுக்குப் புகழ் தேடித் தருகிறது. ஜெர்மன் பேரரசன் சார்லஸ் அழைப்பின் பேரில் அவன் அவைக்குச் சென்று அலெக்சாண்டரின் வடிவத்தைக் கண்முன் காட்டுகிறான். அவனை ஏளனம் செய்யும் அவையினர் தலையில் கொம்புகளை முளைக்க வைக்கிறான்.

இடையில் விதூஷகனான ராபினும் மந்திரம் கற்றுக் கொண்டு ராஃபே என்ற நண்பனுடன் நகைப்புச்செயல்கள் பலவற்றைச் செய்கிறான். ஒருசமயம் மெபிஸ்டோபிலிசையே அவன் அழைக்க, அவன் கோபித்துக் கொண்டு இருவரையும் விலங்குகளாக மாற்றுகிறான். கடைசியாக ஃபாஸ்டஸ் வான்ஹோல்ட் பிரபுவின் அவையில் பல அதிசயச் செயல்களைச் செய்து காட்டுகிறான். பலரையும் அவன் அவமானப்படுத்தியிருப்பதால், சில பழிவாங்கும் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. இருப்பினும் இறுதியாக அவனே வெற்றி பெறுகிறான்.

கடைசியாக இருபத்து நான்கு ஆண்டுகளும் முடியும் காலம் எய்துகிறது. அவன் மாணவன் வாக்னர் தோன்றி அவன் மரணத்துக்குத் தன்னைத் தயார் செய்துகொள்வதாக எடுத்துரைக்கிறான். அதற்கேற்ப ஃபாஸ்டஸும் தன் சொத்துகளை எல்லாம் வாக்னர் பேருக்கு எழுதி வைக்கிறான். இறுதி நாள் நெருங்க நெருங்கக் குடித்துக் கும்மாளமிடுவதில் தன் நேரத்தைச் செலவிடுகிறான். தன் மாணவர்களான அறிஞர் பட்டாளத்திற்கு விருந்துகள் வைக்கிறான். மெபிஸ்டோபிலிஸை அழைத்து, ட்ராய் நகர அழகி ஹெலனைக் கொண்டுவருமாறு சொல்கிறான். அவளின் தோற்றத்தால் பல அறிஞர்களை பிரமிக்க வைக்கிறான். அப்போது அவனுக்கு அறிவுரை புகலும் ஒரு கிழவனை விரட்டிவிடுகிறான். மீண்டும் ஹெலனை வரவழைத்து அவள் அழகைப் பாடுகிறான். கடைசி நாட்களில் தனக்கு ஆறுதலாக அவள் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறான்.

ஆனால் காலம் குறுகிக் கொண்டு செல்கிறது. அங்குள்ள அறிஞர்களிடம் சாத்தானிடம் தன் ஆன்மாவை விற்று ஆற்றலை வாங்கியதாக அவன் கூறியவுடன் அனைவரும் பயந்து ஓடிவிடுகின்றனர். கடைசி இரவில் அவனுக்கு பயமும் கழிவிரக்கமும் தோன்றுகின்றன. கருணைக்கு கெஞ்சுகிறான், ஆனால் மெபிஸ்டோபிலிஸ் அவனை ஏளனம் செய்து குத்திப்

பேசுகிறான். ஆனால் காலம் கடந்து போயிற்று. நரகத்தின் கதவுகள் திறக்கின்றன. மீண்டும் நல்ல தேவதையும் கெட்ட தேவதையும் தோன்றுகின்றன. நல்ல தேவதைக்கு இப்போது வேலை இல்லை என்பதால் ஓடிப்போய் விடுகிறது. பதினொரு மணி அடிக்கிறது. ஃபாஸ்டஸ் மீண்டும் மீண்டும் கடவுளையும் பிற பேய்களையும் கருணைகாட்டுமாறு வேண்டுகிறான். தன் தேர்வுகளுக்காக வருந்துகிறான்.

நள்ளிரவில் பேய்கள் பல வந்து அவன் ஆன்மாவை நரகத்திற்குக் கொண்டு செல்கின்றன. காலையில் வந்து நோக்கும் அறிஞர்களுக்கு அவன் உடலின் துண்டுகள் கிடைக்கின்றன. அவனுக்காக அவர்கள் இரங்கி ஈமச்சடங்கு நிகழ்த்தத் தீர்மானிக்கிறார்கள்.

இறுதிப்பகுதியில் நாடகத்தின் குழுப்பாடகர்கள் (கோரஸ்) தோன்றி ஃபாஸ்டஸின் பேரறிவும் வீணானது பற்றியும் சரியான முறையில் வாழ்க்கையின் தேர்வுகளைச் செய்ய வேண்டியது பற்றியும் பேசி அறிவுரை வழங்குகிறார்கள்.

இது ஒரு ஜெர்மானியப் பழங்கதை. இதனை கிறிஸ்டபர் மார்லோ நாடகமாகச் செய்ததைக் குறிப்பிட்டோம். மேதைமையில் ஷேக்ஸ்பியருக்குச் சமமாக மதிக்கப் பட்டவர். அவரது மால்டாவின் யூதன், இரண்டாம் எட்வர்டு போன்ற பல படைப்புகளும் புகழ் பெற்றவை. இரண்டு நூற்றாண்டுகள் கழித்து இந்தக் கதையை ஃபாஸ்ட் என்ற பெயரில் நாடகமாக ஜொஹான் வுல்ஃப்காங் வான் கெத்தே என்ற மாபெரும் ஜெர்மானியப் படைப்பாளி ஆக்கியுள்ளார்.

கடவுள் நம்பிக்கை அற்றவன் (அதீஸ்ட்) என்றாலே கெட்டவனாகத்தான் இருப்பான், தீய வழியைத்தான் தேர்ந்தெடுப்பான் என்ற பொதுப்புத்தியின் அடிப்படையில் இந்த நாடகங்கள் எழுதப்பட்டுள்ளன. உண்மையில் மதங்கள் செய்த அளவு தீமையை எந்த நாத்திகனும் உலகில் செய்ததில்லை. மேலும் உலகின் மிகப் பெரிய தத்துவஞானிகள் உட்பட, உலகையே மாற்றிய சமூக சீர்திருத்தவாதிகள் உட்பட யாவரும் கடவுள் மறுப்பாளர்களாகவே உள்ளனர் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.

இலக்கியம்