மேலும் உனது கேள்விகளுக்கெல்லாம் பதில்களை இங்கே தொகுத்துத் தருகிறேன். இத்துடன் முடிக்கலாம் என்றும் தோன்றுகிறது.
க பூரணச்சந்திரன்: 1. சாந்தனு செய்தது, அவன் மனைவி கங்கை செய்தது எல்லாமே தவறுதான். ஓரவஞ்சனை.
2. ஒரு மனிதன் தன் செயல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறான், வெறும் சொற்களால் அல்ல என்பது உண்மை என்றால், மகாபாரதத்தின் அத்தனை கேரக்டர்களும் தவறு செய்தவர்கள், தீயவர்கள்தான். அதில் சந்தேகமேயில்லை.
3. தன் தம்பியின் சுயம்வரத்திற்கு பீஷ்மன் சென்றது தவறு. சென்றது மட்டுமல்ல, மூன்று பெண்களைத் தூக்கிக் கொண்டுவந்தது மிகமிகத் தவறு. அது அவனது பிரம்மச் சரியத்துக்கு ஏற்றதும் அல்ல. ஏன் விசித்திரவீரியன் செல்லவில்லை என்று தெரியவில்லை. சுயம்வரத்தில் பெண்தான் நாயகனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இங்கு பீஷ்மன் ஒரு பெண் தேவைப் பட்டதற்கு மூன்றுபேரை தூக்கிக் கொண்டுவருகிறான். இதுவே முரண்பாடுதான். (எந்த மூலிகை பயன்படும் என்று தெரியாமல் அனுமன் சஞ்சீவி மலையையே தூக்கி வந்தது போல இருக்கிறது இது). அம்பை ஏற்கெனவே ஒருவனை வரித்தவள் என்று தெரிந்து அவளை அவள் தந்தையின் இடத்திலேயே விட்டிருக்க வேண்டும். மற்றப் பெண்களை தூக்கி வந்தது காட்டு தர்பார். வல்லான் வகுத்ததே வாய்க்கால். ஆணாதிககத்தின் உச்சம்.
4. மகாபாரதக் கதை மாந்தர்க்கு குடும்ப வரைபடமே தேவை யில்லை. ஒருவனும் முறையாகப் பிறந்தவன் அல்ல. ஆனால் அதுதான் கதையின் தெய்விகத் தன்மையை காட்டுகிறது என்கிறார்கள். (எல்லாமே அற்புதச் செயல்கள் அல்லவா?)மேலும் குந்தியுடனும் மாத்ரியுடனும் உறவு வைப்பவர்கள் எல்லாமே தேவர்கள் அல்லவா? அவ்வளவு உயர்ந்தவர்கள் எல்லாரும். (அல்லது தேவர்கள் அத்தனை பேருமே அவ்வளவு இழிந்தவர்கள் என்றும் கொள்ளலாம். புராண தேவர்களுக்கு பெண்களைக் கூடி பிள்ளை தருவதை விட வேறு வேலை இருந்ததாகத் தெரியவில்லை).
தமிழர் ஒழுக்கம் இலட்சியப் படுத்தப் பட்டதுதான் (stylized). ஆனால் உலகியலுடன் நெருக்கமானது. மகாபாரதம் முற்றிலும் புனைவு. அதாவது உயர்ந்த மேன்மையான மனிதர்கள் முயன்றால் தமிழர்தம் இலட்சிய வாழ்வை அடையலாம். பாரதத்தில் போல எந்த மேன்மையான மனிதனும் சூரியனுடனும் யமனுடனும் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாது.
5. மகாபாரதம் ஒரு பங்காளிச் சண்டை என்பதற்கு மேல் வேறில்லை என்பது உண்மை.
6. கிருஷ்ணனைப் பற்றி நீ கேட்கும் கேள்விகளைக் கேட்டால் அதெல்லாம் அவரவர் தலைவிதி என்று கூறிவிடுவாரகள். கர்ணன் குந்தி புத்திரன் என்பதை வெளிப்படுத்தியிருந்தால் மகா பாரதப் போரே நடந்திருக்காது. பாண்டவர்கள் கர்ணனிடம் தஞ்சமடைந் திருப்பார்கள். துரியோதனனுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். எல்லாம் சுபம். ஆனால் அப்படி நடக்கலாகாது என்பதற் காகத்தான் இந்தக் கதைத் திருப்பங்கள் வைக்கப் படுகின்றன.
கடைசியாக, பாரதத்தை நீ நல்ல விமரிசனக் கண்ணோட்டத்துடன் பார்த்திருக்கிறாய். இதில் கதையமைப்பில் உள்ள தவறுகளாக நீ சுட்டிக் காட்டுவன சரியானவை, ஏற்கத் தக்கவை. ஆனால் ஒரு புராணக் கதையில், ஒரு பக்கம் கடவுளர்களும், மறுபக்கம் மனிதர்களும் ஊடாடும் ஒரு கதையில், எப்படி நல்லது கெட்டது என்பதை தீர்மானிப்பது? கேரக்டர்களும் அப்படியே தீர்மானிக்கப்பட முடியாதவை. பாரதக் கதையில் எனக்கு முக்கியமாகப் படும் சில நீதிகள்.
பங்காளிச் சண்டை, குறிப்பாக மண்ணுக்காகச் சண்டை கூடாது. அது அனைத்தையும் அழித்து விடும்.
பெண்களை இழிவுபடுத்தக் கூடாது (பாஞ்சாலியை துரியோதனன் செய்ததைப் போல, அல்லது மூன்று பெண்களை பீஷ்மன் தூக்கி வந்ததைப் போல…)இவை அனைத்துமே மோசமான எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன. பாஞ்சாலி சபதம் செய்ய வில்லை என்றால் பாரதப் போர் நடக்கக் காரணம் இல்லை. பாண்டவர்கள் எதுவும் வாங்காமல்கூடப் போயிருப்பார்கள். துகில் உரிக்கும்போதுதான் பீமன் துரியோததனைக் கொல்வதாகச் சபதம் செய்கிறான். அதேபோல அமபையும சிகண்டியாப் பிறந்து பீஷ்மனைக் கொல்கிறாள். பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பது இராமாயணத்தைவிட மகாபாரதத்தில் முனைப்பாக இருக்கிறது.
எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல பண்புகள், தீய பண்புகள் அனைத்துமே உள்ளன. உண்மையில் முற்றிலும் நல்லவன் என்றோ, தீயவன் என்றோ ஒருவனும் இல்லை. பலசமயம் நடத்தைப் பிறழ்வுகள்தான் உண்டு. இது இன்றைய உளவியல் நோக்கிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. எனவே எந்த மனிதனையும் அநாவசியமாக வெறுக்கவோ, அளவுக்கு அதிகமாக நேசிக்கவோ தேவையில்லை. எல்லா விஷயங்களிலும் ஒரு நடுநிலை தேவைப் படுகிறது.
இம்மாதிரிக் கருத்துகளைச் சொல்ல வந்ததாகத்தான் பாரதம் தோன்றியதாகப் படுகிறது. ஆனால் அந்தக்கால பிராமணர்களுக்கு இது போதியதாக இருந்திருக்காது. அதனால் எவனோ ஒருவன் தங்களுக்குச் சார்பாக, சாதியை வலியுறுத்த வேண்டி பகவத்கீதையை எழுதி இடையில் புகுத்திவிட்டான்.
கர்ணனை அவமானப் படுத்துமிடங்களிலும் ஏகலைவன் கதையிலும்…இப்படிப் பல இடங்களில் சாதி நிலைநிறுத்தத்தான் படுகிறது. அதில் சந்தேகமில்லை. மிக முக்கியமாக கவனத்தில் வராத சின்னச் சின்ன இடங்களில்கூட சாதித் தன்மை நோக்கப் படுகிறது. உதாரணமாக, குந்தி பாண்டவர்களுக்கு பதிலாக, ஒரு காட்டுச் சாதியினர் பிள்ளைகள் ஐவரையும் அவர்கள் தாயையும் அரக்கு மாளிகையில் படுக்க ஏற்பாடு செய்கிறாள். அவர்கள் கீழ்ச்சாதி என்பதால் திட்டமிட்டு எரிக்கப்படுகிறார்கள்.
பகவத் கீதை ஏற்கெனவே உள்ள சாதியமைப்பை இன்னும் அதிகமாக வலியுறுத்துகிறது. பிராமணர்கள், ஊழ்வினை, ஜாதிக்கொரு நீதி ஆகிய தங்கள் முக்கியமான கருத்துகளைக் கதையில் புகுத்தியும் ஆயிற்று. முடிந்தது மகாபாரதம்.
விவேக்: நன்றி மாமா.