பிரார்த்தனை

எனக்கு வழிபாடு செய்யும் வழக்கம் மிகச்சிறிய வயதிலிருந்தே உண்டாகிவிட்டது என்று தோன்றுகிறது. உண்டாக்கியவர் எனது தாய். அவர் முருக பக்தை. அதே போன்றதொரு பக்தியை எனக்கும் ஊட்டி வளர்த்தார்.

ஆனால் இப்போது கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, முதன்முதலில் நான் வழிபாடு (பிரார்த்தனை) செய்தபோது கூட நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்ததாகத் தெரியவில்லை. உலகம் முழுவதும் (அப்போது உலகம் என்பது என்ன என்பது பற்றி எனக்கு இருந்த அறிவு மிகக் குறைவாகவே இருந்திருக்க வேண்டும்) நன்றாக இருக்க வேண்டும் என்றே பிரார்த்தனை செய்தது நினைவில் இருக்கிறது. முதலில் நான் நன்றாக இருக்கவேண்டும் என்று தோன்றியிருக்கலாம். ஆனால் அது சரியில்லை என்று உடனே தோன்றி, என் அப்பா, அம்மா, தம்பி தங்கையர், குடும்பத்தினர் முதலிய அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தோன்றியது ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதுவும் சரியில்லை, என்னைச் சுற்றியுள்ளவர்கள், கிராமத்தார்கள், சமூகத்தினர் என்று விரிந்துபோய், இதெல்லாம் சரியில்லை, உலகம் முழுவதும் நன்றாக இருக்க ‍வேண்டும் என்பதாக அது விரிந்தது. இன்றுவரை உலகம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை என் உள்ளத்தில் இருக்கிறது. குறைந்தபட்சமாகக் கால்மணிநேரமேனும் (மிகமிகக் குறைந்த நேரம்தான்) அவ்வாறு தினந்தோறும் கருதுகிறேன். ஆனால் சில காலத்துக்குப் பிறகு- ஏறத்தாழ ஐம்பது வயதாகின்ற நிலையில் கடவுள் வழிபாடு என்ற கருத்து அடியோடு என்னை விட்டு அகன்றுவிட்டது. பின் யாரை நோக்கி வழிபாடு? இந்தப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்திடம், இயற்கையிடம் என்பதாக மாறிவிட்டது. இந்த மாற்றம் என் தந்தை, சிற்றப்பாக்களால் ஏற்பட்ட ஒன்று.

இந்த நேரத்தில் இதை நினைக்கக் காரணம், நேற்று–21 ஜூலை அன்று உலகமே அழிந்துவிடப்போவதாக மாயன் காலக்குறிப்பு கூறியதாகச் செய்தி வந்தது. உலகம் அழிய வேண்டும் என்பதற்கு எதிர்தானே உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பது?

உலகம் நன்றாக இருக்கவேண்டும் என்றால்–அதாவது உலகத்திலுள்ள மக்கள் மட்டுமல்ல, உயிர்கள் அனைத்துமே (தாவரங்களும் உயிர்கள்தான்) நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் கருத்து. அதனால்தான் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலாரால் பாட முடிந்தது. ஆனால் நம் சிந்தனைக்கு மாறாகத் தாவரங்கள் மிகுதியாக அழிக்கப்பட்டு விட்டன. விலங்குகள் அழிந்துகொண்டே வருகின்றன. மனிர்கர்கள் மட்டும் எல்லையற்றுப் பெருகுகிறார்கள். இது மிகவும் அபாயகரமான நிலை என்பதில் சந்தேகமில்லை.

மனிதர்களும்தான், எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதால் உடனே சிலர் கேட்பார்கள்–அது எப்படி முடியும் என்று. என் கருத்து, அனைவர்க்கும் அடிப்படைத் தேவைகள்–குறைந்தபட்சம் உணவு உடை உறையுளாவது கிடைக்கவேண்டும். பிறகு சமத்துவநிலையும் சம வாய்ப்பும் வேண்டும். அவ்வளவுதான். இதற்குமேல் என்ன ஆகிறான் என்பது அந்தந்த மனிதனின் உடல், மனத் தகுதிகளையும் சமூகத்தையும் பொறுத்தது. அதேபோல எதிரிகளும் பகைவர்களும் யாவரும் நன்றாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். எனக்கு உடல்ரீதியான பகைவர்கள் இல்லை. கருத்து ரீதியான பகைவர்கள் இருப்பின் அவர்கள் கருத்து காலத்தில் வெல்லுமாயின் வெல்லட்டுமே.


குறுந்தொகையில் ஒரு பா

குக்கூ என்றது கோழி அதனெதிர்/ துட்கென்றதென் தூஉ நெஞ்சம்/ தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்/ வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

இது ஒரு குறுந்தொகைச் செய்யுள். மருதத்திணையில்  சேர்க்கப் பட்டுள்ளது. காரணம், சங்கச் செய்யுள்களை வகைப்படுத்தும்போது முதற்பொருளுக்கு முதலிடம் தரவேண்டும் என்ற தொல்காப்பியக் கருத்திற்கேற்ப, வைகறை என்ற சொல்லைப் பார்த்தவுடனே மருதத்திணை எனக் கூறிவிட்டனர். பிறகு அதற்கு வலுச்சேர்க்க, ‘காதலரைப் பிரிக்கப் போகின்ற’ என்ற தொடர் வந்தவுடனே அவன் பரத்தை மாட்டுத்தான் போகப்போகிறான், அதனால் தலைவி வருந்துகிறாள் என்ற யூகத்தையும் சேர்த்து விட்டனர். ஆனால் நாம் விடியலில் தலைவன் பரத்தை  இல்லத்திலிருந்து திரும்பிவருவதாகத் தான் கண்டிருக்கிறோமே தவிரப் பிரிந்து போவதைக் கண்ட தில்லை.

ஆகவே, இப்பாடல் இரவுமுழுவதும் கணவனுடன் சேர்ந்திருந்த காதலி, “ஐயோ, வைகறை வந்து பிரிக்கிறதே” என்று கவலைப் படுவதைத்தான் குறிக்கிறது. எனவே இதைக் குறிஞ்சியில் சேர்த்திருக்க வேண்டும். அல்லது பிரிவின் நிமித்தம் என்று கொண்டால் பாலையிலாவது சேர்க்கலாம். மருதம் பற்றிய பிரிவில் வரக்கூடியதன்று.

சங்கக் கவிதைகளையும் நாம் வேறு அர்த்தங்களில் வாசிக்க நிறைய இடமிருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான் இந்தச் சான்றினைக் கூறினேன். பொதுவாக, என் மாணவர்களுக்கு, சங்க இலக்கியத்தைப் படிக்கும்போது ஏற்கெனவே அதில் குறிப்பிட்டுள்ள திணை-துறை விளக்கங்களைத் தவிர்த்துவிட்டு, முடியுமானால் எந்த உரையாசிரியர் குறுக்கீடும் இன்றிப் படியுங்கள் என்று சொல்வது என் வழக்கம். நமது மனநிலைக்கும் அறிவுக்கும் ஏற்பப் பொருள்கோள் அமைகிறது.


பேச்சுத்திறமை பாதை திறக்கும்

பணி இறுதியாண்டுகளில் பார்த்த சில நிகழ்வுகள்

என் பணியில் ஏறத்தாழக் கடைசி ஆண்டுகளில் (2005) சந்தித்த, முதுகலையில் என்னிடம் படித்த இரு மாணவர்களை மறக்க முடியவில்லை. காரணம், இருவரும் மீடியாக்களில் இப்போது அடிக்கடி தென்படுபவர்கள். எங்கள் கல்லூரியிலேயே எம்.ஃபில் இருவருமே செய்தார்கள். இருவரும் பட்டிமன்றத்தில் பேசிக் கல்லூரிக்குப் புகழ் சேர்த்தவர்கள்(!), அக்காலத்தில் திருச்சியில் புகழ் பெற்றவர்கள். ஒருவன் ஈரோடு மகேஷ், மற்றவள்(ர்) பூங்குழலி. இவர்கள் ஜோடியாகத்தான் பேச்சுப் போட்டிகளுக்கும் பட்டி மன்றப் பங்கேற்புகளுக்கும் செல்வது வழக்கம். வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று சக மாணவர்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால் பூங்குழலி, கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகு தொலைக்காட்சிச் செய்தி வாசிப்பாளர் ஆனார். புதிய தலைமுறை சேனலில் இப்போது வாசித்து வருகிறார் என்று நினைக்கிறேன். ஏறத்தாழ தினமும் பார்க்கிறேன். ஆனால் ஈரோடு மகேஷுக்குப் படித்தபிறகு சரியான பணி அமைய வில்லை என்றுதான் தோன்றுகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு புரோகிராமில் பணிபுரிந்துவந்தான். அதில் நான் பார்த்த அளவில் வெறுமனே கைதட்டிச் சிரிப்பதுதான் அவன் வேலையாக இருந்தது. வினவில் அவனைப் பற்றி ஒருசமயம் ஏதோ “உதவுங்கள் அவனுக்கு” என்பது போல செய்திக்குறிப்பு வந்தது. பார்ப்பனியத்தை வெறுக்கும் வினவு அமைப்பு, பார்ப்பனிய ஆதரவாளனான மகேஷுக்கு எப்படிப் பரிந்துரை செய்கிறது என்ற கேள்வி தோன்றியது. பிறகு இப்போது பார்த்தால் திமுக உணவளிக்கும் போஸ்டர்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு காட்சியளிக்கிறான். வினவிலும் திமுக போஸ்டரிலும் அவன் வந்ததைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி. பார்ப்பனிய ஆதரவாளன் என்பதற்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. தமிழ்த்துறை வினாடிவினா நிகழ்ச்சிகளை நான்தான் நடத்துவது வழக்கம். ஒருசமயம், அப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில், “எங்கள் திராவிடப் பொன்னாடே” என்ற பாடலைப் பாடியவர் யார் என்று கேட்டேன். உடனே எழுந்து “டி. ஆர். மகாலிங்க ஐயர்” என்றான். “அவரே தன்னை அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லை, போட்டுக் கொண்டதில்லையே அப்பா” என்றேன். நிகழ்ச்சி முடிந்த பிறகு தனியே வந்து “பார்ப்பனர்களின் கொடை தமிழகத்தில் ம‍றைக்கப்படுகிறது சார்” என்றான். இல்லையே, உ.வே. சாமிநாதையர் போன்றவர்களை எவ்வளவு போற்றுகிறோம் என்றேன். இல்லை சார், சங்க காலத்திலேயே கபிலர், பரணர் போன்றவர்கள் பார்ப்பனர்கள்தானே சார். பார்ப்பனர் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை. நியாயமாக கோவூர் கிழார் என்று போடுவது போல கபில ஐயர், பரண ஐயர் என்றுதான் போட வேண்டும் என்றான். அடப்பாவி, இவ்வளவு விஷமா உனக்கு என்று ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டது. ஆனால் அப்படிப்பட்டவன் வினவிடம் பரிந்துரை எப்படி வாங்கினான், திமுகவில் எப்படி எப்போது சேர்ந்தான் என்றுதான் எனக்குப் புரியவில்லை. பேச்சுத்திறன் எங்கேயும் எப்போதும் எவரிடத்திலும் பாதை திறந்துவிடும் போலும்.


மாற்று யாப்பு

அருணகிரிநாதர் கந்தரனுபூதியின் முதல் செய்யுள் இது.

நெஞ்சக்கன கல்லுநெகிழ்ந் துருகத்

தஞ்சத்தருள் சண்முகனுக் கியல்சேர்

செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே

பஞ்சக்கர வானைபதம் பணிவாம்

ஒவ்வோரடியிலும் மூன்று சீர்கள் உள்ளன. ஆகவே இது வஞ்சித்துறை. ஆனால் இதையே

நெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத்

தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்

செஞ்சொற் புனைமா லைசிறந் திடவே

பஞ்சக் கரவா னைபதம் பணிவாம்

இவ்வாறு பிரித்து நோக்கும்போது நான்கு சீர்கள் ஓரடியில் உள்ளன. இது கலிவிருத்தம் ஆகிறது.

அதே கந்தரனுபூதியின் இறுதிப் பாடலை நோக்குவோம்.  

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் அருள்வாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

சற்றும் சொற்பிரிப்புச் சிதைவின்றி இது அடிக்கு நான்கு சீர். கலிவிருத்தம்.  

உருவாயரு வாயுளதா யிலதாய்

மருவாய்மல ராய்மணியா யருள்வாய்

கருவாயுயி ராய்கதியாய் விதியாய்

குருவாய்வரு வாயருள் வாய்குகனே

என்று சீர்பிரித்தால் அடிக்கு மூன்று சீர். வஞ்சித்துறை.

கந்தரனுபூதி முழுவதுமே இப்படித்தான் அமைந்துள்ளது. இதில் எந்தவித யாப்பை நாம் கொள்ளப்போகிறோம் என்பது நமது மனத்தைப் பொறுத்தது. அருணகிரிநாதர் எவ்வகை யாப்பை மனத்திற்கொண்டு இயற்றினார் என்பதை நிச்சயிப்பது கடினம். ஏனெனில் முதற்பாவில் மும்மூன்று சீராகப் பிரிப்பது இயல்பாக அமைந்திருக்க, இறுதிப் பாவில் நந்நான்கு சீராகப் பிரிப்பது இயல்பாக உள்ளது.   இம்மாதிரியாக, பழங்கவிஞர்களின் ஒரே செய்யுளைப் பலவித யாப்புகளில் நோக்கலாம். பல தமிழ்ப் பாக்களை ஒருவகையாக அலகிட்டால் அறுசீர் யாப்பிலும், அவற்றையே வேறுவிதமாக அலகிட்டால் எண்சீர் யாப்பிலும் வருவதைக் காணலாம். இந்த ஜாலத்தை இருபதாம் நூற்றாண்டுக் கவிஞன் கண்ணதாசனின் பாக்களில் நாம் மிகுதியாகக் காண இயலும். பழங்காலத்தில் கம்பன் உள்ளிட்ட பல கவிஞர்களின் பாக்களில் இவ்விதத் தன்மையைக் காணலாம். ஆனால் அதை முதன்மையாக நோக்கமாகக் கொண்டு எவரும் எழுதவில்லை.