ஏரகத்துச் செட்டியார்

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை–மங்காத

சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்

ஏரகத்துச் செட்டியாரே.

இது ஒரு பழம்பாடல். மளிகைச் சரக்குகளின் பெயர்களை வைத்து, இந்த உடல் தேவையில்லை, நல்ல உள்ளம்தான் வேண்டும் என்று வேண்டும் பாடல் இது.

(ஏரகத்துச் செட்டியார்- முருகப் பெருமான், விளியாக அமைந்துள்ளது. வெங்காயம் = வெம்+காயம், வெம்மை மிக்க உடல். சுக்கானால்-சுக்குப் போல் இளைத்துவிட்டால். வெந்தயம்=வெந்த+அயம், அயச்செந்தூரம் போன்ற காயகல்ப மருந்துகள். வெம் + தவம் (வகரத்துக்கு பதில் யகரம் வந்தது என்றும் கொள்ளலாம், அப்படியானால் கடுமையான தவத்தால் ஆவதென்ன என்று பொருள்படும்) சீரகம் = சீர் + அகம், அகம் என்பது உள்ளம். பெரும் + காயம் = பெருமை மிக்க உடல். )


அமெரிக்கா, அமெரிக்கா!

ஓர் ஆங்கிலநாட்டு டாக்டர் சொல்கிறார்: “எங்கள் நாட்டில் மருத்துவம் மிக நன்றாக வளர்ந்துள்ளது. எங்களால் ஒரு மனிதனின் ஈரலைக்கூட மற்றொருவருக்கு வைத்துவிட முடியும். ஆறு வாரங்களில் அந்தமனிதர் எழுந்து வேலை தேடிச்செல்வார்”

‍ஜெர்மன் டாக்டர் சொல்கிறார் : “இது என்ன பிரமாதம்! நாங்கள் ஒரு மனிதனின் மூளையின் ஒரு பகுதியையே எடுத்து மற்றொரு மனிதனுக்கு மாற்றிவிடுவோம். நான்கே வாரங்களில் அந்த மனிதன் வேலை தேடச் சென்றுவிடுவார்.”

ரஷ்ய டாக்டர் சொல்கிறார் : “நண்பர்களே, நாங்கள் ஒரு மனிதனின் இதயத்தில் பாதியை எடுத்து மற்ற ஒருவருக்குப் பொருத்தி விட்டோம். அவர் இரண்டே வாரத்தில் குணமாகி வேலை தேடிச் செல்வார்.”

அமெரிக்க டாக்டர் சிரித்தார் : “நீங்கள் எல்லாரும் எங்களுக்குப் பின்னால்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரலோ, மூளையோ, இதயமோ இல்லாத ஓர் ஆளை நாங்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தோம். இப்போது நாட்டு மக்கள் அனைவருமே வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.”