ஊடகங்களின் பாரபட்சம்

நான்காண்டுகளுக்கு முன்பு நான் மொழிபெயர்ப்புக்கென சாகித்ய அகாதெமி விருது பெற்றபோது எந்தக் காட்சி ஊடகமும் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. என் பெயரோ நிழற்படமோ அவற்றில் வரவில்லை. இன்று யாரோ கேவி ‍ஜெயஸ்ரீ என்ற பெண்மணி மொழிபெயர்ப்பில் சாகித்ய அகாதெமி பெற்றமைக்கு விடாமல் எல்லா ஊடகங்களும் அந்த அம்மையாரின் முகத்தையும் பெயரையும் பேட்டியையும் வெளியிட்டுவருகின்றன. எனக்கு அந்த அம்மையார்மீது எந்தக் கோபமும் இல்லை. யார் என்றும் தெரியாது. ஆனால் அந்த அம்மாள் ஒரு பார்ப்பனியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால்தான் ஒருவேளை ஊடகங்கள் இவ்வளவு அக்கறை காட்டுகின்றனவோ என்னமோ? இம்மாதிரிப் போக்குகள் மனசுக்குக் கஷ்டமாக இருக்கின்றன.
அதற்கும் மேல் மலையாளத்திலிருந்து தமிழுக்குப் பெயர்ப்பதுதான் இந்தியமொழிகள் எல்லாவற்றிலும் எளியது. அந்த அம்மையாரும் கேரளத்தில் பிறந்தவராம். ஆக இது ஒரு பெரிய சாதனை என்று பேசுகின்றன புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள். சரி. இப்படித்தான் உலகம் என்று போக வேண்டியிருக்கிறது. ஆனால் இ்ந்த ஊடகங்கள் ஐம்பது புத்தகங்களை உயிரைக் கொடுத்து மொழிபெயர்த்தவனை–அதிலும் முற்றிலும் ஒரு கண் பார்வையை இழந்து, மற்றொரு கண்ணிலும் அரைகுறைப் பார்வையோடு, தமிழுக்கு ஏதேனும் நன்மை செய்தாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு மொழிபெயர்ப்பவனை எல்லாம் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.
ஆனந்தவிகடன்கூட மூன்று முறை என்னை விருதுக்கு உரியவனாகத் ‍தேர்ந்தெடுத்தபோதிலும் விருது வழங்கும் விழா மேடையில் வெளிப்படுத்திக் கொள்ளப் போதிய அவகாசம் அளித்ததில்லை. அதற்கு பதிலாக எத்தனையோ அர்த்தமற்ற கூத்துகளுக்கு பல மணி நேரம் வீணாக்கப்படுகிறது. மாலை 5 முதல் இரவு 12 மணி வரை நடக்கும் விழாவில் எனக்கு விருது வழங்கும்போது என்னை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு ஐந்து நிமிடம் தருவதற்கு மனம் ஒப்புவதில்லை, அங்குள்ள காம்பியர்களுக்கு. இதில் சாகித்திய அகாதெமிதான் விதிவிலக்கு. எங்களை நன்கு பாராட்டியதோடு, எங்கள் வெளிப்பாட்டிற்கும் உரிய நேரம் அளித்தார்கள்.


நம் சிந்தனைகள்

நாம் கனவு காண்கிறோம். நான் குறிப்பிடுவது அறிஞர் அப்துல் கலாம் சொன்ன இலட்சியத்துக்கான கனவல்ல. தூக்கத்தில் வரும் இயல்பான கனவு.

இனிமையான கனவுகளையும் கடுமையான கனவுகளையும் வெவ்வேறு சமயங்களில் காண்கிறோம். அந்த நேரங்களில் உங்கள் மன நிலையும் உடலியக்கமும் எப்படி இருந்தன? நல்ல கனவுகள் காணும் போது மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க உடல் இலகுவாக முகம் மலர்ந்து எழுந்திருக்கிறோம். ஒரு கெட்ட கனவாக இருந்தால் மனம் பதற உடல் வியர்க்க பாதி தூக்கத்தில் திடுக்கிட்டுப் பதறி எழுந்திருக்கிறோம்.

இவை எதனால்?

நம் ஆழ்மனம் மிக ஆற்றல் வாய்ந்தது. உடலுக்குள் பாயும் இரத்த ஓட்டம் முதலாக நம் நடை உடை பாவனை, போன்ற நம் செய்கைகள் நம் ஆழ்மனத்தைச் சார்ந்துள்ளன. ஆனால் ஆழ்மனத்தினால் தனக்குள் எழும் எண்ணங்களில் எது உண்மை எது பொய் என்று பகுத்தறிய முடியாது.

ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகளாகட்டும், அல்லது நிஜ வாழ்வின் நிகழ்ச்சிகளாகட்டும் எல்லாமே ஆழ்மனத்திற்கு ஒன்றுதான். கெட்ட கனவுகள் வரும்போது, அந்த கனவுகளை கனவென்று உணராமல் உண்மை என்றே ஆழ்மனம் நம்புகிறது. அதனால்தான் கனவின் தாக்கதிற்கேற்ப உடலில் அது பதற்றத்தையும் படபடப்பையும் ஏற்படுத்துகிறது.

ஆழ்ந்த உறக்கத்தில் மட்டுமல்ல, நாம் விழித்திருக்கும் போதும் நமக்குள் எழும் எண்ணங்களை அப்படியே உண்மை என நம்பும் ஆழ்மனம் அதற்கான விளைவுகளை நம் உடலில் ஏற்படுத்துகிறது. எப்படி ஒரு கனவை நாம் விழிப்போடு வெறும் கனவு தான் அது என உணரும் போது நம் உடலும் மனமும் நிதானத்திற்கு வருகின்றனவோ, அது போல் நமது மனத்தில் எழும் வேண்டாத எதிர்மறை எண்ணங்களையும் நாம் விழிப்புடன் கையாண்டால், அதிலிருந்து மீண்டு மனம் அமைதிப்படும். எதிர்மறை எண்ணங்களுக்குள்ளேயே மூழ்கினால் மனம் மகிழ்ச்சியற்றுத் தவிக்கிறது.

வாழ்க்கையின் எந்த நடப்பும் நமது நம்பிக்கையைச் சார்ந்தே உள்ளது. ஆழ்மனத்திற்குள் முடிந்தவரை நல்ல சிந்தனைகளை புகுத்தினால், நம்மைச் சுற்றியும் நல்ல சூழலை அமைத்துக் கொண்டால், எதிர்மறையான விஷயங்களை முடிந்தவரை தவிர்த்தால் நல்லது. இன்றைய பரபரப்பான சூழலில் இது முற்றிலும் சாத்தியமில்லை என்றாலும் இவை நம் ஆழ்மனத்தை பாதிக்க விடாமல் தற்காத்துக் கொள்வது நம் கைகளில் தான் இருக்கிறது.

எந்த ஒரு எதிர்மறை நிகழ்வையும் கடக்கும்போது அதை பயமாக, ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாக மட்டும் கொள்ளாமல், அதன் தர்க்கபூர்வமான அடிப்படைகளைப் பார்த்து, பிரச்சினைக்கான தீர்வையும் சேர்த்து யோசிப்போம்.

எந்தப் பிரச்சினையிலும் தீர்வுகளை அலசாமல் “எனக்கு எதுவும் சரியாக நடப்பது இல்லை” என்று நாம் சொன்னால், சரியாக இல்லை என்று நாம் கூறும் விஷயங்களையே மனம் தேடிப் பிடிக்கிறது. உண்மையில் நம் எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. ஒரு நாளைக்கு 60,000 சிந்தனைகள் சராசரியாக ஒருவர் மனத்தில் எழுவதாகச் சொல்கிறார்கள். பெரும்பாலும் ஒரே மாதிரியான எண்ணங்களே திரும்பத் திரும்பச் சுழன்று வந்தாலும் அவற்றை கவனத்தோடு கையாளும் போது ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் வாழ்வை நிறைக்கும்.

நாம் மனத்தில் எடுத்து இருத்திக் கொள்ள வேண்டிய நிகழ்வுகளும் நமக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். சில நேரம் வேண்டாத பொருள்களை நாம் எடுத்துச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.நாம் அதை தூர எறிகிறோம் அல்லது அதை நமக்கு வேண்டிய வகையில் மாற்றுகிறோம். அது போல் நமக்குள் சுழலும் எண்ணங்களையும் நமக்குப் பயனுள்ள முறையில் சீர் செய்தால் நம் வாழ்க்கை சீராக மகிழ்ச்சியாக இருக்கும்.