விகடன் இலக்கியத் தடம் இதழில் வெளியிட வேண்டி என்னைச் சில கேள்விகளுக்கு விடை கேட்டிருந்தனர். அவற்றை இங்கே வெளியிட்டிருக்கிறேன். இது ஆகஸ்டு மாதத் தடத்தில் வெளிவர இருக்கிறது.
1. கோட்பாடுகள்?–நம் சுயம் உள்பட சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட அனைத்திற்கும் பின்னால் எங்கும் எப்போதும் உள்ளவை.
2. தமிழர்கள்?–வந்தார் எல்லாரையும் வாழவைத்துத் தன்னை அழித்துக் கொண்டவர்கள்.
3. சாதி?–ஆண்சாதி. (அதனால்தானே எனக்கு ஒரு ‘பெண்சாதி’ கிடைத்தார்?) வேறு சாதிகளின் இருப்பு, சமூகத்தின் அவலம்.
4. ஊர்?–சிறுபாணாற்றுப்படையிலேயே இடம் பெற்ற ஊர். ஏ.எல். முதலியார் முதல் ஏ.ஆர். ரகுமான் வரை சிறந்த ஆளுமைகளை அளித்த ஊர்.
5. மார்க்சியம்?–இன்று உலகத்தையே பாலைவனமாக்கி அழிக்கின்ற கார்ப்பரேட் கொள்ளையர்களைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால், நமக்குத் தேவையான ஒரே கோட்பாடு.
6. விருதுகள்?–உண்மை மதிப்பைவிடப் பெரும்பாலும் சார்புநோக்கி அளிக்கப்படுபவை.
7. தமிழ் ஆய்வுகள்?–எங்கும் இருப்பதுபோல, இங்கும் வணிகமயம்.
8. என் பெருமிதம்?–வருகிறோம், போகிறோம். அதிகபட்சம் சில பத்தாண்டுகளுக்குள் மறக்கப் படுகிறோம்.
9. குடும்பம்?–பண்பாட்டுக்கும், தன்னம்பிக்கைக்கும் இருப்பிடம்.
10. என்னை எழுதத்தூண்டியவை?–பாலாறும் ஆர்க்காடும்.
11. வானமாமலை?–பலதுறை முன்னோடி. முதன்மையாக, நாட்டார் வழக்காற்று ஆய்வுகளுக்கு அடிப்படை அமைத்தவர்.
12. நான் யார்?–பிரம்மாண்டமான இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு நுண்ணுயிரி.
13. திணை?–ஒழுக்கம். பாலியல் அடிப்படையிலானது. தமிழுக்கே உரிய இலக்கியக் கோட்பாடு.
14. காதல்?–வயதுவந்தோர் நெருக்கம், பாலியல் உணர்வு, சேர்க்கையின் உயிரியல். அதற்கு மேல் வெறும் கட்டுக்கதைகள்.
15. மொழி?–ஒவ்வொரு தனிமனித சுயத்தையும் உருவாக்குவது, சிந்திக்க வைப்பது, கலாச்சாரத்தின் அடிப்படை.
16. இன்றைய இந்தியா?–பல்லாயிரம் இதழ்கள் கொண்ட ஒரு பண்பாட்டை ஒற்றை மதமாக, ஒருமொழிக்குக் குறுக்க நினைக்கும் சுயநலக்காரர்களின் இருப்பிடம்.
17. இன்றைய தமிழகம்?–நாளைய பாலைவனம்.
18. பரிந்துரைக்கும் நூல்–திருக்குறள். இதன்கண் இல்லாத எப்பொருளும் இல்லை.
19. பிடித்த சொல்?–எழுத்து. மனங்களை மாற்ற வல்ல ஆயுதம்.
20. குறைகள்?–யாரிடம் இல்லை? முடிந்தவரை திருத்திக் கொள்ளுங்கள், முடியாவிட்டால் நீங்களாக இருங்கள்.
21. இந்துமதம்?–சிந்துவெளிப் பண்பாடு, நாட்டார் வழிபாட்டு மரபுகள், சாதி அவலங்கள் உள்ளிட்டு இன்று வரை எப்படியோ நீடிக்கும் ஆயிரம் விழுதுகொண்ட ஆலமரம்.
22. பக்தி?–எனக்குப் பிடிக்காத ஒரு சொல். எவரிடமும் எதனிடமும் பக்தி தேவையில்லை.
23. ஆதிக்கக் கலாச்சாரம்?–எங்கிருந்தாலும் அழிக்கப்பட வேண்டியது, இன்று எங்கும் நிறைந்திருப்பது.
24. திராவிடம்–மொழிக்குடும்பம் என்றால் இச்சொல்லை ஒருவகையாக ஒப்புக் கொள்ளலாம். மற்றப் பயன்பாடுகள் ஏமாற்றுவேலைகள்.
25. அரசியல்/அரசாங்கம்?–அரசாங்கம் தவிர்க்கமுடியாத தீமை. அரசியல் அதில் பங்கு கொள்வதற்கான ஆயத்தம்.