நாமே வேளாண்மை செய்து நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதே தன்னிறைவு விவசாயம் என்று நம்மாழ்வார் சொல்வதுண்டு.
இப்போதெல்லாம் கடைகளில் வரும் எண்ணெய்கள் பாரபின் குரூட் ஆயில் கழிவுகள் கலந்துதான் விற்பனைக்கு வருகின்றன என்பதை நாம் அறிவோம்.
நாமே நம் வீட்டுத்தேவைகளுக்கு எண்ணெய் தயாரித்துக் கொள்ளலாமே என யோசனை தோன்றியது.
எங்கள் தோட்டத்தில் விளையும் தேங்காய்களை இதுவரை வெளியே விற்றுவிடுவேன். இம்முறை எண்ணெய் தயாரித்து விடுவது என முடிவெடுத்தேன்.
எங்கள் தோட்டம் வளமான மண் உடையது. அவ்வப்போது சாண உரம்மட்டுமே போடுவோம். 20 ஆண்டுக்கும் மேலான பழமையான மரங்கள் என்பதால் தேங்காய் நல்ல அடர்வாகவும், சுவையாகவும் இருக்கும்.
தேங்காய்களை உடைத்து இரண்டுநாள் வெயிலில் காயவைத்து சிறு கத்தியால் தோண்டினால் சில்லு தனியாகவும், பருப்பு தனியாகவும் வந்துவிடும்.
தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு மாதம் வெயிலில் காயவைத்தேன். நன்றாக காய்ந்து கொப்பரை ஆனதும் செக்கில் கொடுத்து எண்ணெய் ஆக்கி விட்டேன்.
நூறு தேங்காய்க்கு 12 லிட்டர் தேங்காய் எண்ணெய் கிடைத்தது. அதில் மீந்த தேங்காய்ப் பிண்ணாக்கைச் செக்குக்காரரே எடுத்துக்கொண்டதால் ஆட்டியதற்குக் கட்டணம் வாங்கவில்லை.
இப்போது என் வீட்டுச் சமையலுக்கு சுத்தமான, மணமான, கலப்படமில்லாத தேங்காய் எண்ணெய் தயார்! நீங்களும் முயற்சி செய்யலாமே நண்பர்களே!
Month: August 2016
யதார்த்தம் 1
நேற்று தற்செயலாக, ஒரு பால் பண்ணை வைத்திருக்கும் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
ரொம்ப நாளாக எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்.
“முன்னெல்லாம் ஒரு தெருவிலே நிறைய வீடுகளில் பசு இருக்கும். மேய்ச்சலுக்கு ஆள் வரும். எருமைகளும் நிறைய … பசும்பாலுடன் எருமைப் பாலைக் கலந்து விற்பது சாதாரணமாக நடக்கக் கூடியது. தண்ணீர் கலப்பார்கள்..சொல்ல வேண்டியதே இல்லை”
“திருவல்லிக் கேணியிலும் மயிலாப்பூரிலும் மாம்பலத்திலும் தெருக்களில் எல்லாம் மாடுகள் நின்னுக்கிட்டிருக்கும். அந்தக் காலங்களில் கூட காலை, மாலை இரு வேளைகளில் தான் பால் கிடைக்கும். ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் .. கோனார்களிடம் முன்பே சொல்லி வைக்க வேண்டும். சில வேளைகளில் பாலுக்கான டிமாண்ட் மிக அதிகமாக இருக்கும்.. குழந்தைக்கு நிறைய பால் பவுடர்கள் புழக்கத்தில் இருந்தன..
“ஆனால் இப்போ எல்லா இடமும் அபார்ட்மெண்ட் வீடுகள் .. மேய்ச்சல் நிலம் எல்லாம் கான்க்ரீட் மயம். விவசாய குடும்பங்களே மாடு வளர்ப்பதில்லை. என்னதான் வெண்மை புரட்சி , ஜெர்ஸி பசுக்கள், முர்ரா எருமைகள் என்றாலும் இப்போதுள்ள மக்கள் தொகைக்கு 24 X 7 பால் பாக்கெட் கிடைக்கிறது என்றால் லாஜிக் இடிக்குதே!..
“கண்ணு போட்டாத் தானே மாடு பால் தரும். அவ்வளவு கண்ணு இருந்தா மாடுகள் எண்ணிக்கை எங்கேயோ போயிருக்கணுமே … எப்படிங்க இவ்வளவு பால் கிடைக்குது ?”
“” தம்பி.. நீங்க எந்த உலகத்திலே இருக்கீங்க.. எல்லாம் 20:50:30 தான்..”
“அப்படின்னா ”
” 20 % தாங்க மாட்டுப் பால்.. 50% சோயா பால், மிச்சம் தண்ணி தான்.. நம்மூர்ல கூட சோயா பால் பேக்டரி இருக்குதே .. தெரியாதா? இருக்குற மாடுகளை வச்சிட்டு மாட்டுப் பால் மட்டும் கொடுத்தா ஆளுக்கு ஒரு ஸ்பூன் பால் கூட கிடைக்காது. நம்ம ஊர்ல இருந்து தினசரி 80000 லிட்டர் பால் சென்னைக்கு வேற அனுப்பணும்.. சொசைட்டி உத்தரவு.. எப்படி முடியும்?”
“எந்தத் தண்ணிய ஊத்துவீங்க?”
“ஹி .. ஹி .. ஊருணி, குளம், கம்மாத் தண்ணி தான்.. பின்ன அக்குவாபினா வாங்கியா ஊத்த முடியும்?”
“இல்ல.. பால் சொசைட்டில இந்த லாக்டோமீட்டர் எல்லாம் வச்சு பாக்க மாட்டாங்க ?”
“பாப்பாங்க”
“அப்புறம்?”
“பாப்பாங்க .. அவ்வளவு தான் தம்பி.. லாக்டோமீட்டர்லாம் பழசு.. வேற என்னென்னமோ டெஸ்ட் எல்லாம் பண்ராங்க இப்ப.…”
“சரி.. அப்போ எல்லா பாக்கெட் பாலும் அப்படித்தானா ?”
“அப்படி சொல்ல முடியாது…அதெல்லாம் ரேசியோ கொஞ்சம் வித்தியாசப்படும் . அவ்வளவுதான்.. ஆனா மாட்டு பால் 20% – 30% தான் தம்பி.. அது போக டிடர்ஜெண்ட்டு, ஸ்டார்ச், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா.. இன்னும் என்னன்னவோ”
“சின்னப் புள்ளைங்க இந்த பாலை குடிச்சா… யோவ்…
சோயாவுக்கே நிறைய சயிடு எபெக்டு இருக்குய்யா .. கொஞ்சம் கூடுச்சின்னா ஆஸ்த்மா, அலர்ஜி, Erectile dysfunction, ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு ஹார்மோன இம்பாலன்ஸு்…”
“அதுக்கு?”
“நாங்க சுத்தமான பசும் பால் சாப்பிடணும்னா?”
“நீங்கதான் பசு மாடு வளர்க்கணும்….சரி.. இதுக்கே இப்படி சொல்றீங்களே../வெள்ளி செவ்வாய்க்கு கடை வாசல்கள்ல உடைக்கிற தேங்காய்களை அள்ளி ஹோட்டல்களுக்கு தர்ற கான்ட்ராக்ட்., பெரிய ஹோட்டல்கள்ல ஓரு தடவை பூரி சுட்ட எண்ணெய் வாங்கி ரோட்டு கடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட்…கோழி கடைகள்ல மிச்சமாகிற தலை, குடல் வாங்கி சால்னா கடைகளுக்கு கொடுக்குற கான்ட்ராக்ட்…கிராமங்கள்ல நோய்வாய் பட்ட ஆடுகளை சல்லிசா வாங்கி கறிகடைகளுக்கு சப்ளை பண்ற கான்ட்ராக்ட்…இப்படி நிறைய இருக்கே…..
“முன்னாடில்லாம் ஊர்ல ஒருத்தன் ரெண்டு பேருக்கு கேன்சர் வரும்.. இப்போ ஒவ்வொரு பெரிய ஆஸ்பத்திரிலேயும் போய் பாருங்க… எத்தனை பேரு…”
“நான் முன்னாடி சாமி கும்பிட மாட்டேன் .. தி.க. குடும்பம் தம்பி.. இப்போ நான் கும்பிடாத கடவுள் இல்ல… பயம் தம்பி…பயம்!”
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 8
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 8
இந்திய வல்லரசு: உலகமயமாக்கலை விற்பனை செய்தல்
ஆழமாகும் சமமின்மை, வளரும் பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவற்றின் இடையில் எழும் இயற்கையான கேள்வி, எப்படி இந்த உலகமயமாக்கல் வடிவத்தை மக்கள்திரள் ஏற்றுக் கொள்ளுமாறு செய்தனர் என்பது. மாநில, தேசியத் தேர்தல்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையேனும் மக்களின் ஒப்புதலைப் பெறவேண்டிய அரசியல் கட்சிகள், முதலீட்டு நீக்கம், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் என்பவற்றை எவ்விதம் அவர்களிடம் விற்பனை செய்கின்றன?
கல்வியாளர்கள் – கொள்கை வகுப்போர் இடையில் உலகமயமாக்கல் பற்றி இன்னும் விவாதம் நடந்துகொண்டிருந்தபோதே, மேட்டுக்குடிக் கட்டத் திலிருந்து சீர்திருத்தங்கள் நகர்ந்து, வெகுமக்கள் கட்டத்திற்குச் சென்ற போதுதான் (1990களின் இடைப்பகுதியிலிருந்து) சாதாரணமக்கள், தாராளமயமாக்கலின் தாக்கத்தை உணரத் தொடங்கினர். பிஜேபி வழிநடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது (1998-2004) தாராள மயமாக்கலின் வெகுமக்கள் கட்டத்தின் பெரும்பகுதி நிகழ்ந்தது. காங்கிரஸ் வழிநடத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் அதைத் தொடர்ந்தது.
பழைய காந்திய இலட்சியமான சுதேசி அல்லது சுயசார்பு என்பதை இரண்டு கட்சிகளுமே “உலக அரங்கில் இந்தியாவை வல்லமையுள்ளதாக ஆக்கக்கூடிய எதுவும்” என்று அர்த்தப்படுத்தும் விதமாக மெதுமெதுவாக மறுவரையறை செய்தன. கொஞ்சம் கொஞ்சமாக நாம் சுதேசியைப் பற்றிக் குறைவாகவும், வல்லரசு என்பதைப் பற்றி மிக அதிகமாகவும் கேட்கத் தொடங்கினோம்.
1998இல் பிஜேபி அரசாங்கம் நடத்திய அணுச் சோதனைகளுக்குப் பிறகு வல்லரசு என்ற பேச்சு அடிக்கடி கேட்கப்படலாயிற்று. உலக அரங்கில் இந்தியாவின் கௌரவத் திற்கு மிகப்பெரிய சக்தி கொடுப்பனவாக இச்சோதனைகள் விளக்கப்பட்டன. ராப் ஜென் கின்ஸ் என்பவருடைய கூற்றுப்படி, பொருளாதார வட்டத்திலும், பிஜேபி அதேவித கௌரவத்தை உருவாக்கும் என்று உறுதியளித்தது.
“பிஜேபியின் பார்வையில், சர்வதேசச் சமூகத்தில் இந்தியா தனக்குரிய இடத்தை எடுத்துக் கொள்ளும் என்பதற்கு உலக மயமாக்கல் களமாக அமைந்தது; உலகப் பாதுகாப்புத் துறையில் 1998இன் அணுச் சோதனைகளால் இது அடையப்பட்டது போலவே, இந்தியாவின் தகவல்தொழில்நுட்ப நிபுணத்துவமும், வணிக புத்திக்கூர்மையும் இந்தியாவை உலகப் பொருளாதாரத் துறையிலும் செழிக்கவைக்கும்.”
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங்கின் பின்வரும் கூற்று ‘வல்லரசு சுதேசி’ (வல்லரசு இந்தியா) என்ற சொல்-அலங்காரத்திற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்.
“அறிவுத்தொழில்துறையில் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்….நாம் உலகத்தைச் சென்றடைந்து நமது இருப்பை உலகமயமாக்கலின் மூலமாகப் பதிவுசெய்து கொண்டிருக்கிறோம். இன்று இந்தியத் தொழில் முனைவோர் கொண் டாடப்படுகின்றனர். டாடா, டேவூ நிறுவனத்தை வாங்குவதையும், ரிலையன்ஸ் ஃப்ளாக் நிறுவனத்தை வாங்குவதையும் பாருங்கள். ஆய்வு வெளிநாடு செல்கிறது. மருந்துக் கம்பெனிகள் வெளிநாடு செல்கின்றன. இந்திய நிறுவனங்கள் வெளியே சென்று உலகமயமாகின்றன. இதுதான் சுதேசி.” (அழுத்தம் என்னால் தரப்பட்டது).
இன்று எல்லாக் கட்சிகளுமே வல்லரசு அந்தஸ்தை இந்தியா அடையப்போகிறது என்ற உறுதிமொழியைத் தங்கள் தேர்தல் பேச்சுகளில் பயன்படுத்துகின்றன. அயல்நாட்டு முதலீட்டுக்கு எதிராகக் காவலிருக்கும் சங்கப் பரிவார அமைப்பான சுதேசி ஜாக்ரண் மஞ்ச்-சும்கூட இந்தப் பார்வையை ஏற்றுக்கொண்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நீண்டகாலமாகக் கடுமையான விமரிசனம் செய்துவந்த சுதேசி ஜாக்ரண் மஞ்ச்சின் தலைவரான எஸ். குருமூர்த்தி, இந்துத்துவ நோக்கில் உலகமயமாக்கலை ஆதரிக்கின்ற சிந்தனையமைப்பான இந்தியன் ஃபர்ஸ்ட் ஃபவுண்டேஷனின் இயக்குநர் கள் குழுவில் அமர்ந்துகொண்டு, “உலகப் பொருளாதார பலத்தைப் பெற அளவிட்ட உலகமயமாக்கல் கருவியாகும்” என்று பேசுகிறார்.
ஆனால் இந்துத்துவ அணிகளின் உள்ளிருந்தே தனியார்மயமாக்கலுக்கும் உலகமயமாக்கலுக்கும் – குறிப்பாக, ஆர்எஸ்எஸ்-ஸின் கூட்டுத் தொழிற்சங்கமான ‘பாரதிய மஜ்தூர் சங்கத்’ (பிஎம்எஸ்)திடமிருந்தும்,
சிறு-உற்பத்தியாளர்களிடமிருந்தும் எதிர்ப்பு இருக்கிறது. இவர்களால் (பெரும்பாலும் சீனாவிலிருந்து) மலிவாக இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு எதிராகப் போட்டியிட முடியவில்லை. சங்கப் பரிவாரத்தின் அதிகப் போர்க்குணமுடைய பிரிவுகளிலிருந்து, மேற்கத்தியக் கலாச்சார இறக்குமதிகளுக்கும் (உதாரணமாக, காதலர்தினக் கொண்டாட்டம், அழகிப்போட்டிகள், மதுபான விடுதிகள்) குறிப்பிட்ட அளவில், அவ்வப்போது வன்முறை சார்ந்தும் எதிர்ப்பு இருக்கிறது. இதுபோன்ற நாசவேலைகள் செய்பவர்களை பிஜேபி மறைமுகமாக ஆதரிக்கிறது; அதேசமயம், மத்தியவர்க்கத்தினர்கள் இடையே தனக்கு வளர்ந்து வரும் வாக்கு ஆதரவினை பாதிக்காத அளவில் தன்னை அவர்களிடமிருந்து தொலைவு படுத்திக்கொள்ளவும் செய்கிறது.
சுதந்திரச் சந்தைகளை சற்றும் தயக்கமின்றி ஆதரிக்கும் கருத்தியல் சொல்லாடலை மேற்கொள்பவர்களில் மேலும் இரண்டு குழுவினர் உள்ளனர். முதலாவது குழுவினர், சங்கப் பரிவாரத்தின் மதவாத திட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள். “இந்துமதம், தனிநபரை மேம்படுத்தும் மதம்” என்ற விளக்கத்தை ஆதரிப்பவர்கள் இவர்கள். இவர்களில் முக்கியமானவர்களும், செல்வாக்கு மிகுந்தவர்களும் என, (முந்தியபகுதி ஒன்றிலேயே ஒரு விசித்திரமான அரசியல்-பொருளாதாரவாதி என்று நாம் கண்ட) சுப்பிரமணியம் சுவாமி, (நன்கு அறியப்பட்ட பொதுமனிதரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அரசுமுதலீட்டுநீக்க அமைச்சராகப் பணிபுரிந்தவருமான) அருண் ஷோரி ஆகியோரைக் கூறலாம்.
உலகெங்கிலுமுள்ள தொழிலதிபர்கள், பெருவணிகர்களின் செல்லப்பிள்ளை ஆகியுள்ள, குஜராத்தின் முதலமைச்சரான [இப்போது இந்தியப் பிரதமர்!] நரேந்திர மோடியையும் இவர்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். இம்மாதிரிக் கருத்து நோக்கினைக் கொண்டவர்களை இந்துத்துவ நவதாராளவாதிகள் எனலாம்.
இரண்டாவது குழுவினர், மதச்சார்பின்மையை (அல்லது குறைந்தபட்சம், இந்துத்துவம் அற்ற நோக்கினை) முன்நிறுத்தும் வலதுசாரிக் கட்சியினர். இவர்கள் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸின் பிரிவுபடுத்தும் முஸ்லிம் எதிர்ப்பு, கிறித்துவ எதிர்ப்புத் திட்டங்களை ஒதுக்குபவர்கள். தனிநபர் உரிமைகள், சுதந்திரம், சிறு அரசாங்கம், மதத்தையும் அரசையும் வேறுபடுத்தல் ஆகியவற்றில் செவ்வியல் தாராளவாத நிலைப்பாடுகளைப் பிரபலப்படுத்துபவர்கள். ஒருவிதமான இன்றைய சுதந்திராக் கட்சிக்காரர்கள். இந்தக் கருத்தியலைப் பகிர்ந்துகொள்பவர்களை நியாயமாக இந்துத்துவம்-சாராத நவதாராளவாதிகள் எனலாம்.
இந்துத்துவ நவதாராளவாதிகள், அமெரிக்க மதவாத நவபழமை வாதிகளுக்கு (தியோகான்கள் அல்லது இறையியல் பழமையாளர்கள்) நெருங்கிய கருத்தியல் உறவினர் ஆவர். அமெரிக்கத் தியோகான்கள், ரோமன் கத்தோலிக்க மதத்தின் இயற்கைச் சட்ட மரபிலிருந்து பெறப்பட்ட இறையியல் உலகப் பார்வையிலிருந்து தங்கள் தீவிர ஆர்வத்துடன்கூடிய அமெரிக்க தேசியவாதத்தையும், முதலாளித்துவ விருப்பத்தையும் நியாயப் படுத்துபவர்கள். (ட்ரம்ப்பை நினைவு கொள்ளுங்கள்!)
கொள்கைரீதியிலாவது அமெரிக்க அடிப்படைக் கோட்பாடான திருச்சபை – அரசு பிரிவினையை ஏற்றுக் கொள்ளும் மைய நீரோட்டச் சீர்திருத்தக் கிறித்துவப் பிரிவுகளைப் போலன்றி, தியோகான்கள், மதச்சார்பின்மையை ஒரு தீட்டாகவும், அமெரிக்காவின் கலாச்சார நோய்களுக்கு முதன்மையான மூலமாகவும் நோக்குபவர்கள். ஜியார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் விசுவாச அடிப்படை (தொழில்தொடக்க) முயற்சிகளுக்குத் தத்துவரீதியான நியாயப்படுத்தலை வழங்கியவர்கள். அமெரிக்க தேசத்திற்கு முன்நிபந்தனையும் முதலாளித்துவ சுதந்திரச் சந்தைகளின் செயல்பாட்டுக்கு முதல் தேவையும் கிறித்துவமத விசுவாசமே என்று வலியுறுத்துபவர்கள்.
இதேபோல, இந்திய தேசத்திற்கு முன்நிபந்தனையும், இந்திய முதலாளித்துவம் முறையாகச் செயல்படுவதற்கான முன் தேவையும் இந்து மதமே என்ற கருத்தியலை இந்தியத் தியோகான்களாகிய இந்துத்துவ நவதாராளவாதிகள் முன் வைக்கின்றனர். இந்த நிலைப்பாட்டை சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துகள் எடுத்துக்காட்டுபவை. 1970களில் இந்து மறுமலர்ச்சியையும் முதலாளித்துவத்தின் தலையிடாக் கொள்கையையும் இணைக்கவேண்டும் என்று சுப்பிரமணியம் சுவாமி கூறியபோது சிரித்து ஒதுக்கப்பட்டார். ஆனால் இதே சிந்தனைகள், பலவேறு பத்திகளிலும், இணையதள வலைப்பூக்களிலும் மறுசிப்பம் செய்து இன்று தரப்படும்போது, உள்நாட்டிலும், அயல்நாட்டிலுள்ள அயலக இந்தியர்கள் இடையிலும் புதிய வரவேற்பைப் பெறுகின்றன.
நேருவின் சமதர்மவாத, சகிப்புத்தன்மையின் எல்லாக் கூறுகளையும் கலைத்தெறியவும்,
ஆண்டுக்கு 10 சதவீதம் என மொத்த உள்நாட்டு உற்பத்தி வளரும்படி தனியார் துறை செழிக்கும்படியாக உள்கட்டமைப்பை ஆக்கவும், கொள்கைகளையும் வழங்குமளவுக்கு மட்டும் அரசைக் குறுக்கவும்,
தங்கள் ஆர்வங்களை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் செயல்தந்திர ஆர்வங்களுடன் ஒத்துச்செல்லவும்,
தேவையான அரசியல் விருப்புறுதியை இந்தியர்கள் வளர்த்துக் கொண்டால்,
2025அளவில் இந்தியா ஓர் உலக வல்லரசாக மாறும் என்று சுவாமி வாக்களிக்கிறார்.
இவை அனைத்தும் தேவை என்றே வைத்துக் கொள்வோம்!
இந்தப் பொருளாதார, அயல்நாட்டுக்கொள்கைச் சீர்திருத்தங்கள் இதற்குப் போதுமானவை அல்ல. மேலும் தேவையானது, இந்துஸ்தானத்தின் (இந்தியாவுக்கு அவர் விரும்பும் பெயர்) வெகுமக்களின் (முஸ்லிம்கள், கிறித்துவர்கள் உள்பட) இதயங்களிலும் மனங்களிலும், பள்ளிகள், அரசாங்கம், பெருவணிக நிறுவனங்களிலும் சமஸ்கிருத இந்துமதம் மீண்டும் அரியணை ஏறவேண்டும் என்பதே. பொருளாதார வல்லரசுத்தனம் என்பது இந்து மறுமலர்ச்சியோடு சேரும்போதுதான் வரும்!
“இந்தியா உலகப் பொருளாதார சக்தியாக மாறுவது போதாது. உலகமுறைமையில் அவள் உரிய இடத்தைப் பெற வேண்டுமானால், சுயசந்தேகம் அற்ற ஓர் ஆண்மையுள்ள மன அமைப்பினால் முழுமையான இணைப்பைப் பெறுவதோடு, கடந்த ஆயிரம் ஆண்டுகளாகச் சேகரித்த அழுக்கையும், தேவையற்ற மூட்டைமுடிச்சையும் சுத்தப்படுத்த ஓர் இந்து மறுமலர்ச்சிக்கும் ஆளாகவேண்டும்.”
வேடிக்கை என்னவெனில், தனியார் தொழில்களின் வழியிலிருந்து அரசு விலகியிருக்க வேண்டுமாம், ஆனால் மக்களின் பொதுப்பணத்தை மட்டும் இந்துமத மறுமலர்ச்சியை ஊக்கத்தோடு மேம்படுத்த அது பயன்படுத்தவேண்டுமாம்! சுவாமியும் அவருடைய சக இந்துத்துவ நவதாராளமய வாதிகளும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
அதாவது, பொருளாதார விஷயங்களில் அரசு குறைந்தபட்சப் பங்கும், இந்துமதத்தைப் பரப்புவதில் மிகப்பெரிய பங்கும் வகிக்கவேண்டும்.
இந்தியாவை ஆரியர்களின் தாயகமாக ஆக்கும் ‘சரியான வரலாற்றை’ அரசு கற்றுக்கொடுக்க வற்புறுத்தவேண்டும்.
மேலும், அறிவியலையும் இந்து ஆன்மிகத்தையும் வகுப்பறையில் ஒன்றாகக் கொண்டுவந்து ஒரு இந்திய முன்மாதிரிக் கல்வியை அரசு மேம்படுத்த வேண்டும்.
தங்கள் சொந்த மத நம்பிக்கைகள், மரபுகள் என்னவாக இருப்பினும் எல்லா இந்தியர்களும் இந்த ‘அறிவியல் ஆன்மிகத்தை’த் தங்கள் சொந்தப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ஏற்கவேண்டும்.
(இங்கும், அமெரிக்காவின் மத வலதுசாரியினரோடு இவர்களுக் குள்ள இணைவரைகள் மிக முனைப்பானவை. பழமைவாத நற்செய்தியினரும், கத்தோலிக்கக் குழுக்களும் புஷ்ஷின் வெள்ளை மாளிகையின் சக்தியைக் குழந்தை பெறும் உரிமை கள், ஸ்டெம்செல் ஆய்வு, விசுவாச அடிப்படையிலான முனைப்புகள் ஆகியவற்றில் சமூகத்தில் பழமைவாதச் சட்டங்களைக் கொண்டுவருவதற்குப் பயன்படுத்துவதில் எவ்வித உறுத்தலையும் அடையவில்லை. ஆனால் அரசாங்கத்தின் பொதுநலத்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியில் மிகப்பெரிய வெட்டுகளை மட்டும் ஆதரித்தார்கள்.)
இப்போது இந்துத்துவம் சாராத நவதாராளவாதிகளுக்கு வருவோம். 2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலகத்தில் பிஜேபி கூட்டாளியானதால் ஏமாற்றமடைந்து, சுந்திரச் சந்தையின் உற்சாகிகளில் பலர் பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பிக்க தீவிரமாகச் சிந்தித்தனர். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தொழிலதிபர்களில் இருவர் இம்மாதிரி திட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தனர். பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட தகவல்தொழில்நுட்ப, அயல்சேவைப் பயன்பாட்டு நிறுவனம் எம்பசிஸ். இதன் நிறுவனரும் தலைமை அதிகாரியுமான ஜயதீர்த் (ஜெரி) ராவ்,
“மலிவான வெகுஜனத் திட்டங்களில் ஒளிந்துகொள்ளாமல், வெளிப்படையான, தற்காப்புவாதமற்ற, சுதந்திரச் சந்தைகளுக்கு ஆதரவு தருகின்ற சுதந்திரா போன்றதொரு புதிய கட்சியைத் தொடங்கவேண்டும்”
என வாதிட்டுள்ளார்.
இந்தியாவில் மிக நன்கு அறியப்பட்ட மென்பொருள் குழுமமான இன்ஃபோசிஸின் நிறுவனரும் தலைமை அதிகாரியுமான நாராயணமூர்த்தி, பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பித்து, அதன் தளத்தில் நின்று தேர்தல்களைச் சந்திக்கத் தனது சொந்தப் பணத்திலிருந்து நாற்பதுகோடி ரூபாய்வரை செலவுசெய்ய விருப்பமாக உள்ளார் என்று சொல்லப்பட்டது.
நவதாராளவாதிகள் இடையில் மிகச் செல்வாக்குமிக்க குரலாக எழுச்சி பெற்று வந்துள்ள குர்சரண் தாஸ், பின்வருமாறு செய்யக்கூடிய ஒரு கட்சியை உருவாக்கவேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்:
“அரசியல் காரியங்களைவிடப் பொருளாதாரத்திற்கு முக்கியத் துவம் தரும், அதிகாரி வர்க்கத்தைவிடச் சந்தைகளை நம்பும். இதுவரை எந்தக் கட்சியும் செய்யாததைச் செய்யக்கூடியதாக இருக்கும்….அதாவது, பொருளாதார, சமூக, நிர்வாகச் சீர்திருத்தங்களை மக்களுக்கு விற்பதாக இருக்கும் .… கடைசி யாக, அது மதத்தைப் பொதுவெளி யிலிருந்து அகற்றித் தனி(நபர்) வெளிக்குள் இருத்தச் செயல்படும்.”
சுதந்திராக் கட்சியைப் போற்றுபவர்களுக்கு, இப்படிப்பட்டதொரு கட்சி தேர்தல்களில் வெற்றிபெறும் வாய்ப்பு மிகக் குறைவு என்று நன்றாகத் தெரியும். ஆகவே அவர்கள் இரண்டாவது சிறந்த வாய்ப்பைத் தேர்வுசெய்யத் தயாராக இருப்பதாகத் தோன்றுகிறது.
சுதந்திரச் சந்தையைப் பாதுகாக்கவும், வளர்ச்சிக்கு ஆதரவான தீர்வுகளைப் பொதுவட்டத்தில் தரவும், சிந்தனை அமைப்புகள், அரசுசாரா அமைப்புகளுடன் சேர்ந்து ஓர் இயக்கம் தொடங்கவேண்டும். தில்லியை அடிப்படையாகக் கொண்ட குடிமக்கள் சமூக மையம் (செண்டர் ஃபார் சிவில் சொசைட்டி), பிரகதி என்ற மாத இதழைக் கொண்டுவரும் வலைப்பூக்காரர்களின் சங்கமான ‘தி இந்தியன் நேஷனல் இண்டரஸ்ட்’ என்ற அமைப்பு உருவாக்கம், ஆங்கில நாளிதழ்களின் ஆசிரியவுரை, கருத்துப்பக்கங்கள் ஆகியவற்றில் காணப்படும் நவதாராளவாத நிலைப்பாடுகளின் அதிக அளவிலான நீடித்த தன்மை ஆகியவற்றால் இப்படிப்பட்ட இயக்கம் தோன்றுவதற்கான தொடக்கத்தை நாம் காணமுடியும். இம்முயற்சிகள் நாட்டின் தேர்தல் அரசியலில் ஏற்படுத்தும் நிஜமான தாக்கத்தைக் காலம்தான் கூற இயலும்.
இந்து வலதுசாரிகளின் கைகளில் பழைய சுதந்திராவைப் புகச் செய்த அதே தவறுகளையே நவ-சுதந்திராக்காரர்களும் செய்வதாகத் தோன்றுகிறது. ஏற்றத்தாழ்வுகள் ஆழமாக வேரூன்றியிருக்கும் இந்தியாவில், பெற்றுக்கொள்ளும் முனையிலிருக்கும் ஏழைகளுக்குத் தங்கள் முன்னோர்களைப் போல, நவசுதந்திராக்காரர்களும் “கீழ்நோக்கிக் கசிதல்” என்ற மந்திரத்தை மட்டுமே கொண்டுள்ளனர். தங்கள் முன்னோர்களைப் போலவே, அவர்களும், இந்தியக் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்து காணப்படும் படிநிலைசார்ந்த சிந்தனைப்போக்குகளின் மத அடிப்படைகளைப் புறக்கணிக்கிறார்கள், அல்லது மென்மையாகக் கையாளுகிறார்கள். அரசாங்கக் குறுக்கீட்டின் பாவங்கள் மீது மட்டுமே தங்கள் கோபத்தைக் குவிக்கிறார்கள்.
உதாரணமாக, கோத்ரா குற்ற நிகழ்வுக்கு பிஜேபி உடந்தையாக இருந்தமை ‘இறுதியாக’ அவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துவதற்கு முன்னால், அவர்கள் அதிகாரத்திலிருந்த பிஜேபியுடன் கூட்டுச்சேர்ந்து பணியாற்றத் தயாராக இருந்தார்கள்.
உரிமைகளைக் கொண்ட தனிமனிதருக்கு மரியாதை தருவதன் அடிப்படையிலான தத்துவரீதியான தாராள வாதத்தை, எந்தவகையிலும் பிஜேபி ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. குறைந்தபட்ச அரசு பற்றிய பிஜேபியின் கருத்தாக்கம், சாதிச் சமூகத்திலுள்ள சுயகட்டுப்பாட்டின் அடிப்படை ஒழுங்கை ஆதாரமாகக் கொண்டது.
தங்கள் நற்செயலாக, நவதாராள வாதிகள் பிஜேபி, சங்கப் பரிவாரம் ஆகியவற்றின் நச்சுத் தன்மை கொண்ட மத வாதத்தைப் புறக்கணித்துவிட்டார்கள்.
ஆனால் இந்தியச் சமூகத்தின் பொதுப்புத்தியாக இன்னும் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மானிடத்துவம் (இது ஒரு சாதிச் சமூகத்தின் உலகநோக்கு) என்பதன் தாராளமற்ற உலகநோக்குடன் மோதிப்பார்க்க அவர்கள் சிரத்தை மேற்கொள்ளவில்லை.
இந்திய தாராளவாதிகள், இந்து பாரம்பரியத்தன்மையின் தாராளமற்ற உலகநோக்கிற்குச் செயலூக்கத்துடன் சவால் விடும் வரையில், இந்துத்துவ நவதாராளவாதிகளைத் தாங்களே சேர்த்துக்கொள்ளவும், அல்லது அவர்களால் சேர்த்துக்கொள்ளப் படவுமான அபாயத்திலிருந்து தப்பிக்கவே முடியாது. ஒரு புதிய மதச்சார்பற்ற கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான சவாலைச் செயலூக்கத்துடன் அவர்கள் மேற்கொள்ளும்வரை, மதத்தைத் தனிமனித அளவில் நிறுத்துவது பற்றிய அவர்களின் பேச்சு பொருளற்றதாகத்தான் இருக்கும்.
இது வரை நாம் நோக்கியது இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் காணப்படுகின்ற அரசியல் பொருளாதாரப் பின்னணி பற்றிய ஒரு கண்ணோட்டம் ஆகும். இந்திய மேட்டுக்குடியினர், எவ்விதம் நேரு-காந்தியச் சிந்தனையான சுயசார்பு என்பதைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு, உலகச் சந்தைகளை நேசிக்கத் தொடங்கினார்கள் என்பதன் வரலாற்றை இது காட்டுகிறது.
புதிய பொருளாதாரத்தின் இலாபங்களை மிகப் பெரும்பான்மையினரான பணியாளர்கள் (பெற இயலாமல்) மூடிவிட்ட அதன் அமைப்புக்கூறுகளை இந்தக் கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது.
புதிய பொருளாதாரத்தில் பங்கேற்கத் தேவையான கலாச்சார மூலதனத்தைப் பெறுவதற்கான திறவுகோலாகிய கல்வி, குறிப்பாக உயர்கல்வி, மேலும் மேலும் வணிகமயமாகி வருவதைக் காட்டுகிறது. கடைசியாக, வல்லரசு அந்தஸ்துக் கனவின் வாயிலாக வெளிப்படுகின்ற தேசியப் பெருமிதத்தின் வளர்ச்சியையும் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 7
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 7
இந்தியாவில் உயர் கல்வி
உயர்கல்விதான் தனியார்மயமாக்கலுக்கான புதிய பிரதேசம் ஆகும். இன்று 1956இன் கம்பெனிச் சட்டத்தின்கீழ்ப் பதிவுபெற்ற எந்தச் சங்கமும், பொது அறக்கட்டளையும் அல்லது கூட்டுக்குழுமமும் ஒரு கல்வி நிறுவனத்தை அமைத்து, பிறகு அதைப் பல்கலைக்கழகமாக அறிவிக்க அரசை ஒரு சட்டமியற்ற வைக்கலாம்;
அல்லது அரசின் அதிகாரஅமைப்பு (பல்கலைக்கழக மானியக்குழு-யுஜீசி) அதற்குப் பல்கலைக்கழக ‘அந்தஸ்து’ தரவைக்கலாம்.
பல்கலைக்கழகம் என்ற பேராசைமிக்க அந்தஸ்தை அடைந்துவிட்டால், பிறகு தனக்கே உரிய விதிகளின்படி மாணவர் சேர்க்கையையும், கட்டணத்தையும் நிர்ணயிக்கலாம், படிப்புத்துறைகளின் உள்ளடக்கத்தை வகுக்கலாம், பாடம்நடத்தும் முறைகளையும் தானே நிச்சயித்துக்கொள்ளலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுவிட்டால், ஒரு ‘பாடம்நடத்தும் கடை’யாக இருப்பது, பட்டமளிக்கும் தகுதியையும், கட்டணங்கள், ‘நன்கொடைகள்’ வாயிலாகப் பணம் சேர்க்கும் தகுதியையும் பெற்றுவிடுகிறது.
கோட்பாட்டளவில், யுஜிசி வகுத்துள்ள சில குறைந்தபட்சத் தரங்களைப் பின்பற்ற வேண்டும் என்றாலும், அது ஒரு மிகப் பெரிய தடையல்ல. குறிப்பாகக் கல்வித்திட்டத்தில் மதத்தைப் புகுத்தும்நிலை வரும்போது. முந்தைய பிஜேபி நிர்வாகத்திலேயே, வேத சோதிடம் போன்ற துறைகளில் பி.ஏ., எம்.ஏ., பாடங்களுக்கு மட்டுமல்ல, பிஎச்.டி ஆய்வுக்கும் ஒப்புதல் தரப்பட்டது. அது மட்டுமின்றி, வாஸ்து சாஸ்திரம், கர்மகாண்டம் போன்ற விஷயங்களைப் புகுத்துவதையும் யுஜிசி ஏற்றுக்கொண்டுவிட்டது.
(ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கல்வியைக் காவிநீக்கம் செய்வதாக வாக்களித்திருந்தாலும், அறிவு பெருகுவதற்கும் பரவுவதற்கும் எதிரான இந்தப் பாடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இதற்கு ஒரு பகுதிக் காரணம், 2004இல் உச்சநீதிமன்றம் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் சோதிடத்தைப் பாடமாக நடத்துவதற்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் இருக்கலாம்.)
தனியார்மயமாக்கம் என்பது உயர்கல்வியைப் பெரு வணிகமாக மாற்றுகின்ற ஒன்று மட்டுமல்ல, அது கடவுளையும் சாமியார்களையும் வணிகத்தில் புகுத்தும் முயற்சியும் ஆகும் என்று காட்டுவதற்குச் சான்றுகள் பல உள்ளன.(உடனடி உதாரணம், இப்போது பத்திரிகைகளில் அடிபடுகின்ற பாபா ராம்தேவ்.) தனியாருக்குரிய, இலாபநோக்கிலான ‘கல்விபோதனைக்கடை’களுக்கு அனுமதிதரும் ஒழுங்கு முறை மாற்றங்கள், மத அறக்கட்டளைகளும், அசிரமங்களும், குருஜிக்களும் பூசாரிக் கல்வி, சோதிடம் ஆகியவற்றில் பட்டங்கள் தரும் வணிகத்தில் புகவும், நவீன நிறுவனங்கள் பாரம்பரிய நோக்கில் நிறுவப்படவும் வழிசெய்துள்ளன.
ஃ 2000இல் முழுமையாகத் தனியாரால் நிர்வகிக்கப்பட்ட (அதாவது அரசின் உதவிபெறாத), இலாபநோக்கற்ற, பல்கலைக்கழக ‘அந்தஸ்து பெற்ற’ நிறுவனங்கள் 21 மட்டுமே இந்தியாவில் இருந்தன. 2005இல் இந்த எண்ணிக்கை 70ஆக உயர்ந்தது, 2007இல் 117 ஆயிற்று. 1998க்குப் பிறகு உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அனைத்துமே தனியாருக்குச் சொந்தமானவை. அவற்றில் பல, பொதுநல அறக்கட்ட ளைகளாகப் பதிவுசெய்துகொண்டு, தங்கள் ‘இலாபநோக்கற்ற’ சேவைக்காக வரி விலக்கும் பெறுகின்றன.
என்றாலும், உண்மையில், அவற்றில் புகுவதற்கு, குறிப்பாகப் பொறியியல், மருத்துவ, வணிக நிறுவனங்களில் சேருவதற்கு, ‘நன்கொடைகள்’ என்ற வேஷத்தில் வரம்புகடந்த அளவிலான பணத்தைப் பெறுகின்ற அவை, மெய்யாகவே ‘கல்விபோதனைக் கடைகள்’ என்பதற்குமேல் ஒன்றுமில்லை. [அண்மையில் தமிழகத்தில் ஒரு கல்வி ‘வேந்தர்’ தன் பல்கலைக்கழகத்திற்குப் பொதுநிலங்களை அபகரித்தது, மாணவர்க ளிடம் மருத்துவப் படிப்பிற்குப் பலநு£று கோடி ரூபாய்கள் வசூலித்தது போன்ற விவரங்கள் சந்திசிரித்தன என்றாலும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. கல்வி என்ற பெயரால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம் என்ற பரந்த மனப்பான்மை! அல்லது மத்தியில் ஆளும் கட்சி சேர்ந்தவர் என்ற பயம் – ஏதோ ஒரு காரணம்!]
ஃ தொழிற்கல்லு£ரிகளான மருத்துவ, பொறியியல் கல்லு£ரிகள் உட்படத் தனியார் கல்லு£ரிகளின் எண்ணிக்கை 1990இல் 5748. இது 2003இல் 16865ஆக உயர்ந்தது. ஏறத்தாழப் பத்தாண்டுகளில், 11,117 கல்லூரிகள் புதிதாகத் தோன்றிவிட்டன.
ஃ 2003இல் 86.4 சதவீதப் பொறியியலாளர்கள் தனியார் கல்லூரிகளில் படித்து வெளிவந்தவர்கள். இந்த எண்ணிக்கை 1960இல் 15 சதவீதமாக இருந்தது. இதேபோல, 1960இல் தனியார் மருத்துவக் கல்லு£ரிகளில் படித்து வெளிவந்தோர் 6.8 சதவீதம். இது 2003இல் 40.9 சதவீதம் ஆயிற்று.
ஃ அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் தனித்தோ, நாட்டில் ஏற்கெனவே பெயர் பெற்றுள்ள கல்விநிறுவனங்களுடன் கூட்டாகவோ பட்டங்களை வழங்க அனுமதிக்க ஒரு திட்டம் இருக்கிறது. அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை நம் நாட்டில் அமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா, 2007இல் வரைவுபெற்றது. ஆனால் அரசியல் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில், குறைந்தது 130 அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள், பெரும்பாலும் அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் சேர்ந்தவை, உள்நாட்டைச் சேர்ந்த, பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத, தனியார் நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்துள்ளன. இவை, இரவோடிரவாகப் பறந்து போகும் செயல்பாடுகள் கொண்டவை; இவற்றின் பட்டங்கள் அவற்றின் சொந்த நாட்டிலேயே அங்கீகரிக்கப்படாதவை.
கொள்கையளவில், தனியார் அமைப்புகள் உயர்கல்வி நிறுவனங்களை அமைக்க அனுமதி தருவதில் தவறொன்றுமில்லை. உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு, யேல், ஸ்டான்ஃபோர்டு, எம்ஐடி, சிகாகோ போன்ற பல்கலைக்கழகங்கள் எல்லாம் தனியார் நிறுவனங்களே. நாட்டில் தெளிவாகவே நிலவும் பெரும்அளவு உயர் கல்வித் தேவைக்காகத் தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்று ஒருவர் வாதிடவும் செய்யலாம்.
உலகத்திலேயே பெரும் எண்ணிக்கையிலான கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும் இந்தியா பெற்றிருந்தாலும், கல்லூரி வயது மாணவர்களில் 10 சதவீதத்தினருக்கே இவை இடமளிக்கின்றன. (மாறாக, சீனா கல்லூரி வயது இளைஞர்களில் 20 சதவீதத்தினருக்கேனும் இடமளிக்கிறது. அமெரிக்கா வில் 80 சதவீதத்தினர் கல்லூரிக்குச் செல்கின்றனர்.)
இந்தத் தர்க்கம், இந்தியாவின் அடித்தள யதார்த்தங்களைப் புறக்கணிக்கிறது என்பதுதான் பிரச்சினை. தனியார்மயத்திற்கு ஆதரவாக வாதிடுவோர், அரசாங்கம் தொடக்கநிலை, இடை நிலைக் கல்வியில் கவனம் செலுத்துவது சமநிலையை உயர்த்தும்; கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியைத் தனியாரிடம் விடவேண்டும் என்ற உலக வங்கியின் பழமைக் கொள்கையை ஏற்கிறார்கள்.
1997இல் இந்திய அரசாங்கம் இந்தத் தர்க்கத்தை ஏற்றுக்கொண்டது. தொடக்கநிலைக் கல்விக்கு அப்பாலுள்ள கல்வி, அரசு தலையிடத் தகுதிபெறாத சேவை என அறிவித்தது. உயர்கல்விக்கு வழங்கப்படும் மானியம் அநியாயமானது என்றும், கல்லூரியில் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவுசெய்து படிக்க வேண்டிய பணக்காரர்களுக்கு ஆதர வானது என்றும் வாதிட்டது.
ஆனால் உயர்கல்விக்கு அளிக்கப்படும் மானியங்கள் மிகச் சிறிதளவாக இருந்தபோதும், பணக்காரர்களை மட்டுமே சேர்கின்றன என்று சொல்வது சரியல்ல. அரசாங்க மானியம் இல்லாதிருந்தால், இந்தியாவில் பெண்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடியினர்களில் இன்று நாம் காண்கின்ற முதல் தலைமுறைக் கல்லூரிக் கல்வி பெற்றோர் தோன்றவே வாய்ப்பிருந்திருக்காது.
தேவேஷ் கபூர், பிரதாப் பானு மேத்தா ஆகியோர் சுட்டிக்காட்டுமாறு:
“அரசு மானியங்கள் காரணமாக விளிம்புநிலை மக்கள் கல்விபெற அதிக வாய்ப்புக் கிடைத்துள்ளது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. 1950களில் உயர்கல்வி பயில்வோரில் ஆண்-பெண் விகிதம் 8.29:1 என்ற விகிதமாக இருந்தது. இது 1980களின் பிற்பகுதியில் 1.5:1 எனக் குறைந்து, இன்னும் குறைந்து வருகிறது….பெற்றோர் (மகள்களைவிட) மகன்க ளுக்கே தனியார் கல்விக் கெனச் செலவுசெய்யத் தயாராக உள்ளனர்….கல்வி மானியங்கள் வசதிபடைத்தவர்களுக்கே செல்கின்றன என்ற வாதத்திற்கு மற்றுமொரு எதிரான சான்று இது: பட்டியல்சாதியினர் (எஸ்சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) ஆகிய இந்தியாவின் மிக விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள், (மருத்துவ, பொறியியல்) தொழிற்கல்வி பெறுவது ஐம்பதுகளின் பிற்பகுதியில் 12:1 என இருந்தது, எண்பதுகளின் பிற்பகுதியில் 8:1 எனக் குறைந்துள்ளது.”
யதார்த்த நிலை இவ்வாறிருக்கும்போதும், உயர்கல்வி வணிகமயமாக்கப்படுவதற்கு ஆதரவு பெருகியே வந்திருக்கிறது. பிஜேபி வழி நடத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில், நடைமுறையில் உயர்கல்வி, வெள்ளித்தட்டில் வைத்துக் கூட்டுக்குழுமத் தொழிலதிபர்களுக்குப் படைக்கப்பட்டது. இந்திய முன்னணி வணிகக் குடும்பங்களின் முக்கியஸ்தர்களான முகேஷ் அம்பானியையும், குமாரமங்கலம் பிர்லாவையும் இந்திய அரசாங்கம் கல்விக் கொள்கையில் அறிவுரை கூற அழைத்தது.
கடந்த ஆண்டுகளில் உற்பத்தியான தொழிற்சாலைப் பணியா ளர்களைப் போலன்றி, இருபத்தோராம் நூற்றாண்டுக்குத் தேவையான அறிவுப் பணியாளர்களை உற்பத்திசெய்யும் பரந்த நோக்குடன் இவர்கள், மானிடக்கல்வித் துறைகள், நுண்கலைகள், நிகழ்த்துகலைகள் ஆகிய துறைகளில் தவிர அனைத்துக் கல்வியையும் கட்டுப்பாட்டு நீக்கத்திற்கும், தனியார் மயமாக்கத்திற்கும் பரிந்துரைசெய்தனர்.
மாணவர்கள் தங்கள் பட்டங்களுக்கான விலையைத் தருவதற்காக ‘கல்விக்கடன் தொழில்துறையை’ உருவாக்குவதோடு அரசாங்கத்தின் பங்கு குறைந்துபோனது. [அதானி, ரிலையன்ஸ் போன்ற பெரும் கூட்டுக்குழும நிறுவனங்களுக்கு இலட்சம் இலட்சமான கோடிகள் கடனளித்து, அவற்றை வசூலிக்கத் திராணியற்ற இந்த வங்கிக் கல்விக் ‘கடன் தொழிலகங்கள்’ (அவை வாராக் கடனாம்!), மாணவர்களிடமும் ஏதுமற்ற விவசாயிகளிடமும் அடியாட்களை வைத்துக் கடன் தொகையைப் பறிமுதல்செய்கின்றன!]
கல்வியை வணிகமயமாக்குவதற்குச் சட்டரீதியான ஆதரவும் உள்ளது. டி.எம்.ஏ. பாய் நிறுவனத்திற்கும் கர்நாடக அரசுக்கு மான வழக்கில், 2002இல் உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை வழங்கியபோது, இலாபநோக்குத் தனியார் கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் தன் ஆசீர்வாதத்தை வழங்கியது. மத, மொழிச் சிறுபான்மையினர் தங்கள் கல்விநிறுவனங்களைத் தங்கள் விதிகள், மதிப்புகளுடன், அரசின் நிதிக்கொடை மறுக்கப்படாமல் நிறுவிக் கொள்ளலாம் என்று அரசியல் சட்ட உரிமை (பிரிவு 30) கூறுகிறது.
இதற்குப் புதிய விளக்கமளித்த உச்சநீதிமன்றம், இதே உரிமைகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என முடிவு செய்தது. மேலும் இலாபம் என்பதற்கு “நியாயமான உபரி” என்று மறுவரையறை செய்து, தனியார் கல்லூரிகள் தங்கள் கட்டணத் தையும் சேர்க்கைவிதிகளையும் தாங்களே நிர்ணயித்துக் கொள்ள லாம் என்றும் நீதிமன்றம் அனுமதித்தது.
தனியார் மயமாக்கல், காவிமயமாக்கலுக்கு முடிவு என்றும் அர்த்தமல்ல. இந்துப் பாரம்பரியங்களை நவீனத் தோற்ற மளிக்கும் பாடத்திட்டத்தில் புகுத்துதல், தீங்கற்றதாக முழுமையாகத் தோற்றமளிக்கின்ற ‘மதிப்புக் கல்வி’ என்பதை அளிக்கும் நோக்கத்தின்மூலம் செயல்படுகிறது. மதிப்புக் கல்வியை மூன்றாம் நிலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் கூடத் தனியார் துறை எதிர்க்கவில்லை. சொல்லப் போனால், மேற்கத்திய அறிவில் சிறப்பானவற்றை பாரதீய (அதாவது இந்து) மதிப்புகளுடன் கலப்பது அவர்களின் வியாபார உத்தியின் ஒரு பகுதி.
தீங்கற்றதாகத் தோன்றினாலும், எல்லா அரசியல் கட்சிகளின் பாரம்பரியவாதிகளுக்கும் பள்ளிக் கல்வித்திட்டத்தில் இந்தியாவின் இந்து, முஸ்லீம், கிறித்துவ மரபினை விமரிசனமின்றிப் பாராட்டுவதைப் புகுத்துவதற்கு மதிப்புக் கல்விதான் உகந்த கருவியாக இருக்கிறது. பிஜேபி வழிநடத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 2000இல் கல்வித்திட்டத்தை மாற்றியபோது, ‘பள்ளிக் கல்வியை அது காவிமயமாக்கியது’ என்று சரியாகவே விமரிசனம் செய்யப்பட்டது. ஆனால் மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் 2005இல் புதிய தேசியக் கல்வித்திட்டச் சட்டகத்தை உருவமைத்தபோது, மாணவர்கள் தங்களுடன் வகுப்பறைக்குள் கொண்டுவரும் ‘உள்ளூர் அறிவு’, ‘உள்ளார்ந்த விவேகம்’ என்பவற்றை மதிக்கும் போர்வையில் எல்லாவிதமான அறிவுக்கெதிரான செய்திகளையும் அறிமுகப்படுத்துவதற்குத் தன் ஆசீர்வாதத்தை வழங்கியது.
(இதன் தொடர்ச்சியாகவே இப்போது புதிய கல்விக்கொள்கை மீண்டும் புகுத்தப்படுகிறது.)
“ஒரே உண்மை என்பது இல்லை, அறிவுக்குப் பலவேறு விதமான தோற்றங்களே உள்ளன என்ற பின்நவீனத்துவ வாதத்தைப் பயன்படுத்தி, உள்ளூர் அறிவையும், அறிவியல் கொள்கைகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தால், இரண்டு வித ஒழுங்கமைவுகளிலிருந்தும் மாணவர்கள் தாங்களாகவே சொந்தமாக அர்த்தத்தை உருவாக்கிக்கொள்வார்கள் என்று புதிய கல்வித்திட்டம் ஆசிரியர்களுக்கு அறிவுரைக்கிறது. அறிவின் பல்வேறு சாத்தியமான வடிவங்களுக்குள் ஆன்மிக அல்லது மதஅறிவை இணைப்பதற்குத் தடை எதுவமில்லை ஆதலின் மதத்தைப் பள்ளிக்கல்விக்குள் திருட்டுத்தனமாகக் கொண்டுவந்துவிட முடிகிறது. அரசியல் பொருளாதாரத்தில் தனியார்மயமாக்கலும், சிந்தனைக் களத்தில் சார்புநிலையும் மிக நன்றாக ஒத்துப் போவதுபோலத் தோன்றுகிறது.
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 6
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 6
பெயர்பெற்றோர்களின் வட்டாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, தொழிலகங்களையும், சுரங்கங்களையும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும், இலாபநோக்கைக் கொண்ட தனியார் மருத்துவ மனைகளையும், கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் அமைக்கவும், கோயில்களையும், ஆசிரமங்களையும், மரபுவழியான ‘அறிவியல்’களான சோதிடம், யோகம், ஆயுர்வேதம் ஆகியவற்றைப் பரப்பும் ‘ஆய்வுநிறுவனங்களை’ உருவாக்கவும் விவசாய நிலங்களையும் பழங்குடி மக்களின் நிலங்களையும் வாங்கி் ஏறத்தாழ இலவசமாகவே மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டுக்குழுமத்துறைக்கு வழங்கிவிட்டன.
கம்யூனிஸ்டுக் கட்சிகளும், தாராளமயத்திற்கு ஆதரவான பிற கட்சிகளுக்கு இந்த ‘நிலத்தைப் பிடுங்கும்’ செயலில் உடனாளிகளாக இருந்துள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட நானோ கார் உற்பத்திசெய்யும் தொழிலகத்தை உருவாக்க டாட்டா குழுமத்திற்கு நடைமுறையில் 997 ஏக்கர் வளமான விவசாய நிலத்தை மேற்கு வங்காளத்தின் கம்யூனிஸ்டு அரசாங்கம் பரிசாகவே தந்துவிட்டது. விவசா யிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் செய்த தீவிர எதிர்ப்பினால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலையை குஜராத் மாநிலத்திற்கு இடம்பெயர்க்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் பட்டது.
ஏழைகளிடமிருந்து நிலத்தைப் பறிப்பது செல்வங்களை உருவாக்குவதற்கு இன்றியமையாத காரணியாகவே மாறிவிட்டது.
கிராமப்புறம், சிறுநகரங்கள், பெருநகரங்களின் சேரிகள் ஆகியவற் றில் வாழும் ஏழைகள், நேரடி நிலப்பறிப்பினால் மட்டுமின்றி, பொதுத்துறை வேலை வாய்ப்புகளில் புறக்கணிப்பு, வேலைக் குறைப்பு ஆகியவற்றாலும் அவதிப்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பைக் குறைத்துவருவதாலும், உயர் தொழில்நுட்பத் திறன்களும், கலாச்சார முதலீடும் அற்ற அவர்களுக்கு் அமைப்புசார் தனியார் துறை கதவுகளை மூடி விட்டதாலும், மிகப் பெரும்பான்மையான ஏழைகள், அமைப்புறாத, அல்லது முறைசாராத் துறைகளில் ஏதோ ஒருவிதமாகப் பிழைப்பு நடத்துகிறார்கள்.
அமைப்பு சாரா வணிகத்துறை நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் (என்சிஈயுஎஸ்) சேகரித்த அரசாங்கத்தின் சொந்தத் தகவல்களின்படி, 2005இல் இந்தியாவின் மொத்த உழைப்புச் சக்தியான 4580 லட்சம் தொழிலாளர்களில், 86 சதவீதம் பேர், அதாவது 3950 லட்சம் பேர், அமைப்புறாத் துறைகளில் இருக்கிறார்கள். அதாவது, (கடைக்காரர்கள், தெரு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், கைவினைஞர்கள் போன்ற) சுய தொழில் செய்பவர்களாக, கூலிக்காக வேலைசெய்யும் நிரந்தரமற்ற தொழிலாளர்களாக, வீட்டு வேலைக்காரர்களாக, வேலைக்காரிகளாக, விவசாயக் கூலிகளாக இருக்கிறார்கள். உலகமயமாக்கலினால் உருவான வேலைப்பெருக்கம், பொருளாதாரத்தின் அமைப்புசார்ந்த, அமைப்புசாராத் துறைகள் இரண்டிலுமே இம்மாதிரி சங்கங்களற்ற, முறைசாராப் பணியாளர்களையே உருவாக்கியிருக்கிறது.
இந்தப் பரந்த முறைசாராத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச நலவாழ்வு அடித்தளமும் கிடையாது, அவர்களைக் கசக்கிப் பிழியும் சுரண்டலுக்கான உச்சபட்ச வரம்பும் கிடையாது. “முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள உறவு, சட்டப் படியான ஒப்பந்தங்களால் முறைப்படுத்தப்படாத ஒன்று. மதத்தின், வழக்காற்றின் பாரம்பரியத்தால் நெறிப்படுத்தப்படுவது. ஆதாயமின்மை, ஆதரவின்மை, கூப்பிட்டபோது வரவேண்டிய நிலை, கடனுக்கு ஈடுசெய்ய உழைப்பது, (அல்லது கொத்தடிமைத்தனம்) ஆகிய கட்டாயங்களால் மட்டுமல்லாமல், பால், மதம், சாதி போன்ற சமூக அமைப்பினாலும் அவர்களுடைய உழைப்பு வாங்கிக்கொள்ளப்படுகிறது” என்று பார்பாரா ஹாரிஸ்ஒயிட் கூறுகிறார்.
முறைசாராப் பொருளாதாரத்தில், நவதாராளவியத்தின் மோசமான விளைவுகள் ஒருவரின் சமூக பொருளாதார நிலைக்கேற்பத் தலைகீழ் விகிதத்தில் உணரப்படுகின்றன. அதாவது இந்த அளவுகோலில், மிகக் கீழ்நிலையில் இருப்பவர்கள், மிகமோசமாக பாதிக்கப் படுகிறார்கள். இந்திய மக்கள்தொகையில் பாதிப்பு எய்தக்கூடிய இருபெரும் பகுதியினரான தலித்துகளும், முஸ்லிம்களும் இதற்கு உதாரணங்கள். 88 சதவீத தலித்துகளும் 84 சதவீத முஸ்லிம்களும் முறைசாரா அல்லது அமைப்புறாத் துறைகளில் பிழைப்பு நடத்துகின்றனர். “தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து தொடங்கிய இந்த உயர்பொருளாதார வளர்ச்சிக்காலத்தில், இவர்கள், வேலையோ, சமூகப் பாதுகாப்போ இன்றி, மிகக் குறைந்த பிழைப்புத் தளத்தில், மிகப் பரிதாபமான, சுகாதார மற்ற, வாழத் தகுதியற்ற நிலைமைகளில் ஏழைகளாகவே உள்ளனர்” என்று அரசாங்கமே ஒப்புக்கொள்கிறது.
இருப்பினும், சந்தைச் சீர்திருத்தங்கள் தலித்துகளை விடுதலை செய்யக்கூடியவை என்று சில செல்வாக்குள்ள குரல்கள் எழுகின்றன. புதிய சந்தைப் பொருளாதாரத்தை தலித்துகள் எதிர்ப்பதற்கு பதிலாக, அதில் இணைந்துகொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்துவதில் ‘தி பயனியர்’ இதழின் கட்டுரையாளரான சந்திர பான் பிரசாத் முனைந்துள்ளார். 2002இல், பிரசாதும், அவருக்கு ஒத்த சிந்தனையுள்ள அறிவுஜீவிகளும் செயல் ஆர்வ லர்களும் தலித் முதலாளியத்திற்கான போபால் பிரகடனத்தை வெளியிட்டனர். தலித்துகள் சந்தைப் பொருளாதாரத்தில் நுழைவதற்கு ஏதுவாக ‘முதலாளியத்தை ஜனநாயகப்படுத்தவேண்டும்’ என்று அது அரசாங்கத்தையும் தொழில் துறைத் தலைவர்களையும் கேட்டுக்கொண்டது. இந்த இலக்கை அடைவதற்காக, சந்தைப்படுத்தக்கூடிய புதிய கல்வியை தலித்துகளுக்கு அளிக்குமாறும், அமெரிக்கப் பாணியிலான (வேற்றுமை நோக்காத) உடன்பாட்டுச் செயல்முறையை கூட்டுக்குழுமத் துறைகளில் கடைப்பிடிக்குமாறும் போபால் பிரகடனம் கேட்டுக்கொள்கிறது.
முதலாளியம் சாதிமுறையை உடைத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக, நாட்டின் சிலபகுதிகளில் உழைப்புச் சந்தையைச் சுருக்கியதன் விளைவாக, தலித்துகள் இடையே நுகர்வின் அளவும் கூலியின் அளவும் உயர்ந்துள்ளன என்று தலித் முதலாளியத்தை முன்வைப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது ஒரு கட்டுக்கதை என்பதுதான் இந்த நோக்கில் உள்ள ஒரே ஒரு பிரச்சினை. இந்தியாவில் உள்ள சாதியுறவுகளை முதலாளியம் கரைத்தழிக்கவில்லை. மாறாக, எவ்விதச் சமூகப் பாதுகாப்புமின்றி, மிகக் குறைந்த கூலிக்கு முதலாளிகள் கூப்பிட்ட குரலுக்கு வேலைசெய்ய வரும் ஒரு உழைப்பாளர் படையினைத் தக்கவைத்துக்கொள்ளவே அது முனைகிறது. சில இடங்களில் உள்ளூர் உழைப்புச் சந்தைச் சுருக்கம் தலித்துகளுக்கும் பிற பிற்பட்ட சாதியினருக்கும் பேரம்பேசும் சக்தியை உயர்த்தியிருந்தாலும், ‘பட்டியல் சாதியினராக இருப்பது’, ஒருவரை விவசாயக் கூலியாகவும் ஏழையாகவும் வைத்திருக்கும் வாய்ப்பினை இருமடங்கு ஆக்குகிறது என்ற மெய்ம்மை இருக்கவே செய்கிறது.
பலவழிகளில், இந்திய முஸ்லிம்கள் தலித்துகளைவிட மோச மாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் சுய தொழில் செய்பவர்கள். மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 13 சதவீதம் மட்டுமே அரசு அல்லது தனியார் துறைகளில் ஊதியம் பெறும் பணிகளில் உள்ளனர். வெறும் 5 சதவீதம் மட்டுமே அரசுத்துறைகளில் உள்ளனர். அண்மையில் சச்சார் குழு அறிக்கையின்படி, உலகமயமாக்கல் பிற சமுதாயத்தினரைவிட முஸ்லிம்களை அதிகமாக பாதித்துள்ளது. முஸ்லிம்களின் பாரம்பரியமான பட்டுத்தொழில், நெசவு, தோல், ஆடை உற்பத்தி போன்றவை மலிவான சீன இறக்குமதிகளால் அடிபட்டுள்ளன. இரத்தினக் கற்கள் வெட்டுதல், பித்தளைவேலை போன்றவை ஏற்றுமதிகள் வாயிலாக அதிக வளர்ச்சியைப் பெற்றாலும், அவற்றின் ஆதாயங்கள் அத்தொழில்களின் இந்து உரிமையாளர் களுக்கே செல்கின்றன.
சுருக்கமாக: உயரும் அலைகள், எல்லாப் படகுகளையும் உயர்த்துவதில்லை!
தனியார்மயமாகும் கல்வி
உணவு விடுதிகள் நடத்துவதையும், உணவு, தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசிகள் விற்பதையும் விட்டுவிட்டால், கல்வி உடல்நலம் போன்ற சமூக சேவைகளுக்கு அதிக மூலவளம் செலவிடலாம் என்ற அரசின் வாக்குறுதியை வைத்துப் பொதுத் துறை நிறுவனங்களைத் தனி முதலீட்டாளர்களுக்கு விற்றதைப் பகுதியளவேனும் நியாயப்படுத்தலாம். ஆனால் அப்படி நிகழவில்லை. மாறாக, கல்வி, குறிப்பாக உயர்கல்வி என்பது அரசு முதலீட்டு நீக்கம் செய்யப்படும் மற்றொரு துறையாகி விட்டது. எனவே சிலசமயங்களில் அரசின் கூட்டோடு இயங்குவதன்றிக், கல்வித்துறை தனியாருக்கு என்றே விடப்பட்டுவிட்டது.
அரசின் வருவாய் உயர்ந்துவந்தபோதும், கல்விக்கும் உடல்நலத்திற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திவீதத்தில் அரசு செலவிடும் தொகை ஏறத்தாழ மாறாமலும், அல்லது குறைந்தும் வந்துள்ளது. 2008-09 பட்ஜெட், தெளிவாகவே “வரியைக் குறை, செலவை இன்னும் குறை” என்ற நவதாராளமயக் கொள்கையைப் பின்பற் றியது. இதே கொள்கை அடுத்து வந்த பட்ஜெட்டுகளிலும் தொடர்ந்தது. முந்தைய ஆண்டைவிட அரசின் வருவாய் 15 சதவீதம் உயர்ந்தபோதிலும், தொடக்கக் கல்விக்கு பட்ஜெட்டில் 7 சதவீதமே உயர்த்தப்பட்டது. இது பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கே போதுமானதாக இல்லை, மேலும் முன்னரே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தைத் தொடக்கக் கல்விக்கு அளிப்பதாகச் செய்த வாக்குறு தியையும் நிறைவேற்றவில்லை. அரசின் கருவூலம் செல்வத்தில் நிரம்பி வழிந்த போதும், கல்விக்குச் செலவிடுவது மட்டும் 3 முதல் 4 சதவீத அளவிலேயே இருந்தது. அதில் பாதி மட்டுமே தொடக்க, மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்குச் சென்றது. [தமிழ்நாட்டில் இந்த நிலை இன்னும் மோசம்: மழலையர் பள்ளி களிலிருந்தே தனியார் மயமாக்கப்பட்டு கல்விக்கொள்ளை பிற எந்த மாநிலத்தையும்விட உச்சநிலையில் இருக்கிறது.]
நடைமுறையில், தனியார் மயமாகிப்போன, மிகப்பரிதாபத்திற்குரிய தொடக்கப் பள்ளிகளைப் பற்றி யாவருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது, பெரிய அளவில் இது பற்றி எழுதப்பட்டும் விட்டது. அரசுப் பள்ளிகள் சரிசெய்யவே முடியாத நிலையை எய்திவிட்டதால், சேரிவாழ் மக்கள்கூட தங்கள் குழந்தைகளை (குறிப்பாக ஆண் குழந்தைகளை) ஆங்கிலவழித் தனியார் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள். கட்டணத்திற்குக் கல்விதரும் இலாப நோக்குள்ள தனியார் பள்ளிகள் மிகச் சிறுநகரங்களிலும் தொலைதூர கிராமங்களிலும்கூட, நாடெங்கும் முளைத்துள்ளன.
அரசுப் பள்ளிகளுடைய இருளடைந்த நிலையை மேம்படுத்துவதற்கு பதிலாக, அமைதியாக, ஆனால் நிதானமாகப் பொதுச் சேவைகளிலிருந்து விலகிக்கொண்டிருக்கும் மத்தியவகுப்பினரின் உடந்தையோடு, அரசாங்கம் அவற்றைக் கெட்டுப்போக்கி ஒழித்துக் கட்ட முடிவுசெய்துவிட்டது என்று விமரிசகர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். 2008இன் கல்விக்கான உரிமை மசோதாகூட, “கல்விக்கான உரிமை என்பது சமமற்ற, தரங்குறைந்த கல்விக்கான ‘உரிமை’“ என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொண்டுவிட்டது. எல்லார்க்கும் பொதுவான பள்ளி முறைமையை உருவாக்குகின்ற இலட்சியம் சுத்தமாகச் செத்துவிட்டது.
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 5
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 5
கட்டம் 3: நவதாராளமயமாக்கம், 1991 முதல்
(தொடர்ச்சி)
இப்படிப் பொருளாதாரத்துக்குச் சக்தியை அளித்தாலும், 1996 தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றது. பின்னர் குறுகிய கால அரசாங்கங்கள் சில அமைந்ததன் பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) முதன்மைக் கட்சித்தலைவரான அடல் பிஹாரி வாஜ்பேயி, 1999 அக்டோபர் 13 அன்று பிரதமர் ஆனார்.
- பி ஜே பி அரசு
சுதேசி, ஒருங்கிணைந்த மானிடம் என்ற மூன்றாவது வழி ஆகிய வற்றின்மீது விசுவாசம் கொண்டதாகக் காட்டிக் கொண்டாலும், பிஜேபி தலைமை தாங்கிய என்டிஏ அரசாங்கம், 1991இல் காங்கிரஸ் அரசாங்கம் இயக்கிவிட்ட நவதாராளமயச் சீர்திருத் தங்களை மிகுந்த உற்சாகத்தோடு முன்னெடுத்துச் சென்றது.
அதிகாரத்தில் இல்லாத காலத்தில், பிஜேபி, உள்நாட்டு தாராளமயமாக்கல் (அதாவது, தனியார்மயமாக்கல்) என்பதைத் தான் ஆதரிப்பதாகவும், அயல்நாட்டுப் போட்டியிலிருந்து இந்தியப் பெருவணிகங்களைக் காப்பாற்றும் நோக்கில் அயல்நாட்டு தாராள மயமாக்கலை (அதாவது, உலகமயமாக்கலை) எதிர்ப்பதாகவும் விளக்கம் கூறியது.
ஆனால் அதிகாரத்துக்கு வந்துவிட்ட நிலையில், தனது இந்தியத் தொழில் பாதுகாப்புக்கொள்கையை அது கைவிட்டது, பொருளா தாரத்தின் முக்கியப் பகுதிகளான நுகர்வோர் பொருட்கள், மின் உற்பத்தி, தகவல்தொழில்நுட்பம், காப்பீட்டுத் தொழில்துறை ஆகியவற்றையும் அயல்நாடுகளுக்குத் திறந்துவிட்டது, அறிவுத் துறை உரிமைச் சட்டங்களையும் தாராளப்படுத்தியது. எல்லா வற்றுக்கும் மேல் முக்கியமாக, பிஜேபி அரசாங்கம், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டு, கல்வித்துறைத் தனியார்மய மாக்கலை எல்லாத் தளங்களுக்கும் கொண்டுசென்றது.
உயர் கல்வியை மதத்துறை உள்ளிட்ட தனியார் துறைக்குத் திறந்துவிட்டமை, மிகப் பெரிய ஊழல் நிகழ்வதற்கும், மக்களை பெரிய அளவில் சுரண்டுவதற்கும் ஏற்ற நிலையை உருவாக்கியது என்பதை நாம் விரிவாகப் பின்னர் ஆராய்வோம்.
நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக, 1991இல் பொதுத்துறை நிறுவனங்களை அரசாங்கம் விற்கத் தொடங்கியது. ஆனால் மெதுவாக, மூலதனநீக்கம் தனக்கென ஓர் உயிர்கொண்டது. பிஜேபி தலைமை தாங்கிய என்டிஏ அரசு, “இனிமேல் மூலதன நீக்கம் ஒரு தேர்ந்தெடுப்பு அல்ல, அது ஒரு கட்டாயம்” என்று அறிவித்தது. மூலதன நீக்கத்திற்கெனவே ஒரு தனி அமைச்ச கத்தை உருவாக்கி, நன்கறியப்பட்ட ஒரு பத்திரிகையாளரும், இந்து ஆதரவாளருமான அருண் ஷோரியிடம் அதன் பொறுப்பை விட்டது. மொத்தத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மேலும் மேலும் அரசுத் துறைகளின் பெரும்பகுதிகளை, இந்தியாவைச் சேர்ந்தவையோ, அயல்நாட்டவையோ, தனியார் நிறுவனங்களுக்கு விற்பதை எளிமையாக்கியது. அணுசக்தி, இராணுவம், இரயில்வே தவிரப் பிற அனைத்தும் போர்த்திறம் சாராதவை, எனவே தனியார் மயமாக்கத்திற்குத் தகுதியானவை என விடப்பட்டன.
- மீண்டும் காங்கிரஸ்
“இந்தியா ஒளிர்கிறது” என்று கூறிக் கொண்டபோதும், 2004 தேர்தலில் தேசியஜனநாயகக் கூட்டணி தோற்றது. காங்கிரஸ் தலைமை தாங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தலைமை ஏற்றது. நவதாராளவாதத்தின் சிற்பியாகிய மன்மோகன் சிங்கை கட்சி, புதிய பிரதமராகத் தேர்ந்தெடுத்தது. ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு, 1991இன் பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றியது. அதன் விளைவுகள்
அதிக ஜிடிபி (உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சி,
சமமின்மைகள் ஆழமாதல்,
ஐ.நா.வின் மனித வளர்ச்சிக் குறியீட்டின் அளவையில் இந்தியா, ஏற்கெனவே தானிருந்த பரிதாபகரமான 127ஆம் நிலையிலிருந்து 132க்கு நழுவியமை
எனப் பலதரமாக இருந்தன.
2009 பொதுத்தேர்தல்கள், உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி யின் இடையில் நிகழ்ந்தது. 1929இன் பெருஞ்சரிவுக்குப் பிறகு பார்த்திராத அளவு இது. இவ்வளவு காலம் வரை அமெரிக்கர்கள், உலகின் பிறபகுதிகளிலிருந்து சரக்குகளையும் சேவைகளையும் வாங்கும் பெருநுகர்வோராக நடத்தப்பட்டு வந்தவர்கள், கடனில் மூழ்கத் தொடங்கினர். இதனால் அமெரிக்கச் சந்தை நொறுங்கியது. தன்னுடன் அது அமெரிக்க அடமானச் சந்தையில் முதலீடு செய்திருந்த பெரிய பன்னாட்டு நிறுவனங்களையும் வங்கிகளையும் இழுத்துக்கொண்டு போயிற்று. அதன் அலைகளின் தாக்கத்தை உலக முழுவதிலும் உணரமுடிகிறது. உலக நுகர்வோர் தேவை குறைந்ததனால், பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்; வங்கிக் கடன்கள் உறைகின்றன; புதிய முதலீடுகள் வருவதாகத் தெரியவில்லை.
நவதாராளமய சித்தாந்தத்தின் ஒவ்வொரு விதியும், அதாவது தடையற்ற சந்தைகள் நல்லவை, அரசாங்க ஒழுங்குமுறைகள் தீயவை, தேசிய நலன்கள் தீயவை என்பவை இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளன.
இந்தியப் பொருளாதாரமும் இந்த நெருக்கடிக்கு விலக்கல்ல. சமீபத்திய பொருளாதாரத் தரவுகள் மோசமாக உள்ளன. அரசாங்கத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2007இன் இறுதிக் கால்பகுதியில் 8.9ஆக இருந்தது, 2008இன் அதே காலப்பகுதியில் 5.3ஆகக் குறைந்துபோயிற்று. 2008இன் கடைசி நான்கு மாதங்களில் பொருளாதாரம் 5 லட்சம் வேலைகளை இழந்தது. ஏற்றுமதிப் பகுதியில், மரபுசார்ந்த உடைகள், வைரங்கள், பிற கற்கள், ஆபரணத்துறை முதலாக நவீன தகவல் தொழில் நுட்பம் மற்றும் நிதித்துறை வரை, மிகுதியான பணிக்குறைப்புகளைச் சந்தித்தன.¢ஏற்றுமதிசாராத துறைகளான வீடு-மனைத் துறை, கட்டுமானம், தானியங்கித் தொழில் ஆகியவற்றையும் சரிவு விட்டுவைக்கவில்லை. அண்மையில் வெளிவந்த நியூயார்க் டைம்ஸின் ஓர் அறிக்கைப்படி, சமீபத்தில் பத்து லட்சம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள தனியார் பாதுகாப்புத்துறையில் மட்டுமே வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்தியாவின் பெருவணிக வளாகங்கள், கூட்டுக்குழும அலுவலகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஏன், நகர்ப்புறப்பகுதிகளின் அரசுப் போக்குவரத்துத் துறையிலும் தகராறுகளைச் சமாளிக்க இவர்கள் அமர்த்தப் பட்டுள்ளனர். ஏற்கெனவே ஆழமாக இருக்கும் வகுப்புப் பிரிவினைகள் மேலும் ஆழமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தும், காங்கிரஸ் தலைமை தாங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2009 தேர்தல் களில் வெற்றிபெற்றது. ‘ஆம் ஆத்மி’க்கு (சாதாரண மனிதனுக்கு) அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும், வாக்காளர்கள் நிலையான ஆட்சிக்கு வாக்களிக் கிறார்கள் என்று தோன்றியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வெற்றி, மேலும் சந்தைக்கு ஆதரவான சீர்திருத்தங்களை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவதாராளமயம் நிலைத்து நின்றுவிட்டது.
2014 தேர்தல்களில் நிலைமை மாறி, தனிப்பெரும்பான்மை பலத்தோடு பிஜேபி அரசு மோடியின் தலைமையில் பதவி ஏற்றிருக்கிறது. தாராளமயம் மேலும் தாராளமாகியுள்ளது.
- வளரும் ஏற்றத்தாழ்வு
ஏறத்தாழக் கால்நூற்றாண்டின் ‘புகழ்பெற்ற’ சீர்திருத்தங்களுக்குப் பிறகும், கீழ்நோக்கிச் செல்வம் பெருமளவு செல்லவுமில்லை. நல்ல வேலைவாய்ப்புகளின் வாயிலாக ஏழைகளை மேல்நோக்கி ஈர்ப்பதும் நிகழவில்லை. ஏதாவது வளர்ச்சி என இருப்பின், அது நடுத்தர வர்க்க, உயர்வருமானக் குழுக்களின் செல்வ வளர்ச்சி தான். அது பிறரின் ஏழ்மை வளர்வதால் நிகழ்கிறது.
நன்கறியப்பட்ட இந்தியப் பொருளாதார வல்லுநர் அமித் பாதுரியின் கூற்றுப்படி, “ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, வளர்ச்சியை ஊக்குவிக்கிறது; வளர்ச்சி அதிகரிப்பு மேலும் ஏற்றத்தாழ்வை ஊக்குவிக்கிறது”.
கீழ்வரும் இருவித ஆதாரங்களை நோக்குவோம்.
ஃ ஃபோர்ப்ஸ் நிறுவன உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா உயர்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் ஐ.நா.வின் மனித நல்வாழ்வின் உலகவரிசையில் சரிந்து வருகிறது. 2008இல் இந்தியாவில் 53 டாலர் கோடீஸ்வரர்கள் (அதாவது அமெரிக்க ஐக்கிய நாட்டு அளவில் 1,000,000,000 டாலர்களுக்கு மேல் ரூபாய் மதிப்பில் சொத்துள்ளவர்கள்) இருந்தனர். இதற்குமுன் 2007இல் இப்படிப்பட்டவர்கள் 40 பேர் இருந்தனர்; 2004இலோ 9 பேர்தான் இருந்தனர். வேறெந்த ஆசிய நாட்டையும் விட-சீனாவை விட, ஜப்பானை விட, இந்தியாவில்தான் பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். அடுத்த அளவில் சிறுகோடீஸ்வரர்கள் உள்ளனர்.
மெரில் லிஞ்ச்/ கேப் ஜெமினி அறிக்கை, இந்தியாவில் சிறு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2007 இல் ஒரு லட்சம் பேர். அது ஆண்டுதோறும் 20 சதவீத அளவு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இப்படிப்பட்ட செல்வர்கள் பெருக்கத்தைவிட இது இருமடங்காகும். இந்தச் செல்வ வளர்ச்சியின் பெரும்பகுதி ஏற்கெனவே அயல்நாட்டு இரகசிய வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுவிட்டது. சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ள இரகசியப்பணமான 2.2 டிரில்லியன் டாலரில் (220 இலட்சம்கோடி டாலரில்) 1.45 டிரில்லியன் டாலர் (145 இலட்சம் கோடி டாலர்) இந்தியர்களுக்குச் சொந்தமானது என்று அண்மைக்கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தக் கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்த பிரதமர் மோடியால் ஒன்றும் செய்ய இயலாத நிலையையே காண்கிறோம். சுவிஸ் வங்கிகளில் மிக அதிக அளவில் இரகசியக் கணக்கு வைத்திருக்கும் (ரஷ்யா, பிரிட்டன், உக்ரேய்ன், சீனா, இந்தியா) ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியா தலைமை வகிக்கிறது.
இப்படிப் பெருஞ்செல்வம் குவிந்துகொண்டிருக்கும் அதே வேளையில், இந்தியா மனித வளர்ச்சி அளவுகோலின் புள்ளியில் (எச்டிஐ) வீழ்ந்துகொண்டிருக்கிறது. உடல் நலம், கல்வி, வருவாய் ஆகிய மூன்று பரிமாணங்களில் மனித நல்வாழ்வை அளக்கும் புள்ளி இது. அனுபவமிக்க இதழியலாளரான பி. சாய்நாத் தொகுத்த புள்ளிவிவரத்தின்படி, 177 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா, ஏற்கெனவே 2000இல் தானிருந்த பரிதாபகரமான 124ஆம் இடத்திலிருந்து 2001இல் 127ஆம் இடத்துக்கும், 2008இல் 132ஆம் இடத்துக்கும் சரிந்தது. இவை மனச்சோர்வை அளிக்கும் தகவல்கள்.
இவை, இந்தியாவைத் தான் விரும்பும் வல்லரசுகளின் பட்டியலில் சேரவிடவில்லை. மாறாக, உலகத்தின் மிக ஏழ்மை யான நாடுகள் சிலவற்றின் குழுவில் சேர்க்கிறது. 128 புள்ளியாக இருந்தபோது, இந்தியா, நிலநடுக்கோட்டு கினி தீவை (127)விடப் பின்தங்கியும், சாலமோன் தீவுகளை (129) விடச் சற்றே மேலும் இருந்தது. தனது நெருங்கிய போட்டியாளர்களைவிடவும் இந்தியா மிக மோசமாகப் பின்னடைந்துள்ளது. 2007இன் மனித வளர்ச்சி அறிக்கையின்படி, பிரேசில் 70ஆம் இடத்திலும், ரஷ்யா 67ஆம் இடத்திலும், சீனா 81 ஆம் இடத்திலும் உள்ளன. (2000இல் 99ஆம் இடத்திலிருந்த சீனா, வியத்தகு வளர்ச்சியைப் பெற்று முன்னேறியுள்ளது.)
இந்தியாவின் வறுமையை அளக்கப் பலவித மேலாய்வுகள் உள்ளன என்றாலும், அவை முறையியல் சார்ந்த விவாதங் களுக்குள் மூழ்கிப்போயின. ஆனாலும், ஆங்கஸ் டீடன், ழான் ட்ரெஸி ஆகியவர்களின் மிக மதிப்புக்குரிய ஆய்வுகளில் ஒன்றை மேற்கோள் காட்டலாம்.
“நமக்குக் கிடைக்கும் பரந்த நோக்கில், பல மாநிலங்களிலும், முழு இந்தியாவிலும்கூட, தொடர்ந்து வறுமை இறக்கம் காண்பதாக இருக்கிறது….ஆனால் ஏழைகள், ‘மிகதீவிர ஏழ்மை’ அல்லது ‘ஏழ்மை’ நிலையிலிருந்து பொருளாதாரத்தின் அமைப்புறாத பகுதியை உருவமைக்கும் ஏழை உழைப்பாளிகளின் சமுத்திரத்தில்தான் கலக்க முடியும் என்று தோன்றுகிறது.”
அதிகாரபூர்வமான வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பினும், இந்திய மக்கள் தொகையின் இந்தப் பிரிவினர்-2004-2005இல், ஏறத்தாழ 83.6 கோடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஒரு நாளுக்கு இருபது ரூபாய் வருமானத்தில், அதுவும் எவ்விதச் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் நிழலும் இன்றி, வாழ்பவர்கள் [இது அப்போதைய டாலர் மதிப்பில் அரை டாலர், இப்போது மூன்றில் ஒரு டாலருக்கும் குறைவு].
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏழைகளுக்கு இறங்கி் வரவில்லை, அண்மைக்காலத்தில் வரவும் வராது என்பதற்கு அதற்குள்ளாகவே அமைந்துள்ள காரணங்கள் உள்ளன. தகவல் தொழில் நுட்பம் இயலச் செய்துள்ள சேவைப் பகுதியில்தான் பெரும்பாலான வளர்ச்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு,
ஆங்கிலத்தில் பேச்சுச் சரளம்,
மேற்கத்திய பெருவணிகத் தொழில்களிலும், கலாச்சார முறைமைகளிலும் பரிச்சயம்
ஆகியவை தேவை. இவை சாதாராண வெகுமக்களுக்குக் கிடைப் பதில்லை. இந்திய உற்பத்தித்துறை கல்லூரிக்குச் சென்று கல்விபெறாத, தனித்திறனற்ற உழைப்பாளர்களை மரபாக ஏற்றுக்கொண்டு, மத்தியதர வகுப்பினரின் ஊதியப் பாதையில் செல்ல வைத்தது. அது இந்தியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியில் 16 சதவீதப் பங்குதான் வகிக்கிறது. (சீனாவில் இது 35 சதவீதம்). இந்தப் பகுதி, (கணினி போன்ற) தானியங்கி எந்திரங்களின் வருகையாலும், அண்மைக்கால பொருளாதார இறக்கத்தினாலும், மக்களுக்கு வேலைதரமுடியாத ஒரு வளர்ச்சியையே கொண்டுள்ளது.
இந்த விவரங்கள், நிலைமையின் ஒருபுறத்தையே நமக்குக் காட்டுகின்றன. தனியார் துறை மிகப்பேரளவிலான நிலங்களைக் கவர்ந்துகொண்டமை இன்றைய நிலைமையாக உள்ளது. இதற்கு அரசும், வளர்ச்சி என்ற பெயரால் உதவிசெய்துள்ளது. இதற்கு “வளர்ச்சிசார் பயங்கரவாதம்” என்றே பெயரிட்டுள்ளனர்.
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 4
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 4
கட்டம் 3: நவதாராளமயமாக்கம், 1991 முதல்
சோவியத் கூட்டமைப்பு நாடுகளுக்கு 1989ஆம் ஆண்டைப்போல, இந்தியாவின் தாராளவாதிகளுக்கு 1991 அமைந்தது.
அதாவது அது ‘பழைய கெட்ட காலத்தின் முடிவு’ என்று பல பொருளாதாரவாதிகள் சொல்கின்றனர். இந்தியாவின் நன்கு கற்றறிந்த நவதாராளவாதியான குர்சரண் தாஸ், 1991 என்னும் ‘பொன் வசந்தத்தைப்’ பற்றி, அது
“இந்தியாவின் இரண்டாவது சுதந்திரம்….ஒரு பொருளாதாரப் புரட்சி…1947இல் நேரு தொடங்கிய அரசியல் புரட்சியை விட முக்கியமானது”
என்று நினைக்கிறார். 1991இல் இந்திய அரசாங்கம் தொடங்கி வைத்த நவதாராளவாத சீர்திருத்தங்களைக் கொண்டாடுவதற்கு, வியாபார பேரமையங்கள், பெரும்பாலான மையநீரோட்ட ஊடகங்கள், சுதந்திரச் சந்தைப் பொருளாதாரவாதிகள், இந்தியாவின் மேல்நோக்கி நகரக்கூடிய நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் ஆகியோர்க்கு வார்த்தைகளே இல்லை.
காங்கிரஸ் பிரதமரான (1991-96) நரசிம்ம ராவும், அவரது நிதி யமைச்சரான மன்மோகன் சிங்கும் (இவர் பின்னர் பிரதமரானார்) இந்தியாவைச் செல்வம், புகழ் ஆகியவற்றின் வேகப்பாதையில் செலுத்திய ‘புரட்சி நாயகர்கள்’ என்று புகழப்பட்டனர்.
முந்திய தலைமுறையில், மேட்டுக்குடியினர் தலைமையேற்ற நுகர்வோர் பெருக்கத்தினால் உண்டான வணிகப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி இருப்புக் குறைபாடு ஆகியவற்றுக்கு எதிர்வினையாக அமைந்தவை இந்த 1991 சீர்திருத்தங்கள். இதனுடன் 1990இன் வளைகுடாப் போரினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வும் சேர்ந்துகொண்டது. மோசமான பொருளாதார நிலைமை, முதலீடு அந்நிய நாடுகளுக்குச் செல்வதற்குக் காரணமாகியது. அதனால் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் பலர் தங்கள் சேமிப்புகளை இந்திய வங்கிகளிலிருந்து திரும்பப் பெற்றனர். அப்போது தான் சர்வதேசப் பணநிதி (ஐஎம்எஃப்), உலகவங்கி ஆகியவற்றிடம் பல கட்டுப்பாடுகளுடன்கூடிய கடனை இந்தியா பெறநேர்ந்தது.
அரசு-பொருளாதார உறவை முழுமையாக மாற்றியமைக்க இந்தக் கடன் ஒரு முகாந்திரமாக அமைந்தது. “இந்தியா தன் அரசாங் கத்தைப் பொருளாதாரத் தொழிலகங்களைச் சொந்தமாக வைத்திருப்பதையும் நடத்துவதையும் கைவிடவேண்டும்; அரசு மானியங்களைக் குறைக்கவேண்டும்; மேலும் சந்தை சார்ந்ததாக இந்தியப் பொருளாதாரத்தை ஆக்கவேண்டும்; சிவப்பு நாடாத் தன்மையைக் குறைக்கவேண்டும்” என்பவை கடனின் நிபந்தனை களின் ஒரு பகுதி. வழக்கமாகவே ஐஎம்எஃப்-உலகவங்கி விதிக் கும் நிபந்தனைகள்தான் இவை.
ஆனால் இந்தச் சீர்திருத்தங்களை ஓர் ஏழையான, ஆதரவற்ற இந்தியாவின்மீதான் நவஏகாதிபத்தியத் திணிப்பாகக் காண்பது தவறு. சூழ்நிலை மிகவும் சிக்கலானதாக இருந்தது. இந்தியத் தொழிலதிபர்களும் கொள்கை வகுப்போரும் இந்தச் சீர்திருத் தங்களை எதிர்க்கவில்லை. உண்மையில், அவர்கள் இந்தியர் களின் பணம் செய்யும், தொழில் முனையும், விலங்குத்தனத்தைக் கட்டவிழ்த்துவிடுவதற்குத் தேவையானதொரு ஊட்டச்சத்து ‘டானிக்’காக அதை வரவேற்றார்கள். அந்தச் சமயத்தில் உலக வங்கிக்காகப் பணிபுரிந்துகொண்டிருந்த கொலம்பியா பல்கலைக் கழகப் பொருளாதாரவாதியான அரவிந்த் பனகரியாவின் கூற்றுப்படி,
“இந்த நிறுவனங்களின் கட்டாயத்திற்கென தொடக்க தாராளமய ‘பாக்கெட்டை’ உலகவங்கி திணித்தாலும், முன்வைக்கப்பட்ட சீர் திருத்தங்கள் “இந்தியாவின் மூலத்தில் தோன்றியவை; இந்தியக் கொள்கை வகுப்போரின் ஒருமித்த மனப்பான்மையைப் பிரதிபலித் தவை.”
சர்வதேசப் பண நிதியம், உலகவங்கி ஆகியவற்றின் செல்வாக்கு செயல்பாடுகளின் முதல்கட்ட அளவில் நின்றுவிட்டது என்பது பலருக்கும் தெரிவதில்லை. 1991 டிசம்பரின் கட்டுமானச் சரிப்படுத் தல் கடனுக்குப் (எஸ்ஏஎல்) பிறகு, இந்திய அரசாங்கம் மறுபடியும் அதிகாரத்திற்கு வந்துவிட்டது”.
உண்மை என்னவென்றால், 1980களில் ராஜீவ் காந்தியின் தாராள மயச் சோதனைகள் தொடங்கி, இந்தியா அதுவரை பின்பற்றிய உள்முகநோக்குக் கொண்ட, அரசு நிர்வகித்த, பொருளாதாரப் பாதையிலிருந்து இந்தியத் தொழில்துறை விடுபடத் துடித்துக் கொண்டிருந்தது. ஏற்றுமதிச் சந்தைகளில் பங்கேற்க ஆர்வமாக வும் இருந்தது. அதற்குப் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டு தேவையாக இருந்தது. இந்திய வணிகத்தொழில்கள், தொலைத் தொடர்பு, நிதிச் சேவைகள், பங்குச் சந்தை வியாபாரம், இவை போன்ற பொருளாதாரத்தின் புதிய பகுதிகளுக்குள் நுழையவும் ஆர்வமாக இருந்தன. ஆகவே நடைமுறையில், நாட்டின் கூட்டுக்குழும(கார்ப்பரேட்)ப் பகுதி, தன்னைப் பெரிதாவதிலிருந் தும், தனியாகவோ, அயல்நாட்டுக் கூட்டுடனோ, உலக அரங்கில் பரவுவதிலிருந்தும் தடுத்துவந்த அரசுக் கட்டுப்பாடுகளை ஒழிக்கத் துடித்துக் கொண்டிருந்தது.
நரசிம்ம ராவும், ‘ஆக்ஸ்பிரிட்ஜ்’ கல்விகற்ற பொருளாதார நிபுண ரும் அவரது நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கும் ஐஎம்எஃப் – உலகவங்கி நிபந்தனைக்கட்டை ஒரு முழுமையான மாற்றத்திற் கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஹார்வர்டு எம்பிஏ வான ப. சிதம்பரத்துடனும், ஆக்ஸ்ஃபோர்டில் பயிற்சிபெற்ற புகழ் பெற்ற பொருளாதாரவாதியான மான்டெக்சிங் அஹ்லுவாலி யாவுடனும் மன்மோகன் சிங் கூட்டுச்சேர்ந்தார். இவர்கள் மூவரும் ‘கட்டுப்பாட்டு நீக்கக் கேளிக்கை’யில் ஈடுபட்டனர். பல ஆண்டுகள் கஷ்டப்பட்டுக் கட்டமைத்த சிக்கலான ஒழுங்குமுறைகளையும் சிலமணிநேரங்களில் சிலசமயங்களில், உடைத்துத் தள்ளிவிட்டனர். இரண்டு ஆண்டுகளில், ஒற்றையுரிமைகள் மீதான ஒழுங்கு முறைகளை எல்லாம் தளர்த்தியதோடு, வங்கித் துறை, விமானப் போக்குவரத்து, மின் உற்பத்தி, பெட்ரோலியம், கைப்பேசிகள் போன்ற அரசுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியார் துறைக்குத் திறந்து தாரை வார்த்துவிட்டனர். அயல்நாட்டு முதலீட்டுக்கும் 34 பெருந்தொழில்களில் பெரும்பான்மைநிலையில் அவை தானாகவே உரிமை பெறுமளவுக்குத் நாட்டைத் திறந்துவிட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக, பெருவணிகங்களுக்கும் வணிகக் குழுமங்களுக்கும் வரிகளைக் குறைத்தனர். சுங்க வரிகளையும் குறைத்தனர். முதலீட்டுச் சந்தையை பன்னாட்டு முதலீட்டாளர் களுக்குத் திறந்துவிட்டனர். இந்தியக் குழுமங்கள் அயல்நாட்டு நிதிச் சந்தைகளில் கடன் பெறவும் முதலீடு செய்யவும் அனுமதி யளித்தனர்.
இந்தச் சீர்திருத்தங்கள் யாவும் இந்தியப் பொருளாதாரத்தைப் பெருமளவு ஐஎம்எஃப்-உலகவங்கியின் சந்தை அடிப்படை வாதத்துக்கு ஒத்துச்செல்ல வைத்தன. சுதந்திர வணிகம், தடையற்ற முதலீடுகள், ஒழுங்குமுறை நீக்கம், அரசுத்துறைத் தொழில்க ளைத் தனியார் மயமாக்குதல் என்ற நவதாராளவாத ‘நற்செய்தி’யின் எல்லாக் கூறுகளையும் இந்தியக் கொள்கையாளர்கள் தழுவிக்கொண்டனர்.
நேருகாலத்திலிருந்து பாரம்பரியமாகப் பெற்ற “மனிதத் தன்மையோடு கூடிய வளர்ச்சி” என்ற பழைய சமதர்ம வாய்பாட்டை வாயளவில் சிலசமயம் கூறிவந்தபோதிலும், இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், “சந்தைகள் நல்லவை; அரசாங்கங்கள் தீயவை; உலகச் சந்தைக்கு மாற்று இல்லை;” என்ற புதிய மந்திரங்களைப் பெற்றுக்கொண்டனர்.
“உயரும் அலைமட்டம், எல்லாப் படகுகளையும் உயர்த்திவிடும்” என்ற ஒளிமயமான நம்பிக்கை, எல்லா இடங்களிலும் செல்லுபடியாவதில்லை!
வர்க்க-சாதி நெகிழ்ச்சிக்கான தடைகள் தாண்ட முடியாத அளவு கடினமாக உள்ள இந்தியா போன்றதொரு நாட்டில் இது நிகழ்வதே இல்லை என்பதை நாம் பின்னர் காணப்போகிறோம்.
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 3
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 3
கட்டம் 2: சோதித்துப் பார்த்தல், 1977-1991
இந்தக் காலப்பகுதி, காங்கிரஸ் கூட்டுக் கட்சிகள் அல்லாத, ஜனதாக் கட்சி 1977இல் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1980இல் இந்திரா காந்தி பிரதமராகத் திரும்பினார். 1984இல் அவர் கொலை செய்யப் பட்டார். இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி, அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றி 1991இல் தான் கொல்லப்படும் வரை நீடித்தார். இந்தத் தாய்-மகன் இரட்டையர், முதல் கட்டத்தில் இந்திரா காந்தியின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட கடுமை யான–ஆனால் நன்னோக்குடைய–திட்டங்களை இல்லாமல் செய் யும் பல சீர்திருத்தங்களை முடுக்கிவிட்டனர்.
இடையில் குறைந்த காலமே பதவியில் இருந்த ஜனதாக் கட்சி அரசாங்கம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் விஷயத்தில் எந்த விளைவும் அற்றதாக இருந்தது. இப்போது தனது திறனின்மை, ஊழல் ஆகியவற்றிற்காக மட்டுமே அது நினைவுகூரப்படுகிறது.
ஜனதாக் கட்சி என்பது பொதுவுடைமைக்கு எதிரான அரசியல் கட்சிகளின் கூட்டு; இந்திரா காந்திக்கும் அவசரநிலைக்கும் எதிரானது. இந்தக் கூட்டில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு முன்னோடி யான பாரதிய ஜனசங்கமும், பிற சில கட்சிகளும் இருந்தன. இவை அனுபவமிக்க சமதர்மவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறிய, ‘ஜே.பி’. என அழைக்கப்பட்ட, ஜயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய ‘முழுமைப் புரட்சி’ என்னும் இயக்கத்தில் பங்கு கொண்டவை.
கூட்டணியில்தான் என்றாலும், ஜனசங்கம் போன்ற ஓர் இந்து தேசியக் கட்சி மையத்தில் ஆட்சிக்கு வருவது அதுவே முதல்முறை.
ஜனதாக் கட்சி, காந்திய மற்றும் ஜனசங்கத்தின் இந்துப் பாரம் பரியப் பார்வையைக் கொண்டிருந்தது. பெருந்தொழில்களுக்கு மாறாக சிறிய, கிராமப்புற அடிப்படையிலான தொழில்களுக்கும் கிராமப் பஞ்சாயத்துக்கும் முக்கியத்துவத்துவம் தரப்பட வேண்டும் என மாற்ற விரும்பியது. ஆனால் இவ்வாறெல்லாம் இருப்பினும், தொழிற்கொள்கை மீது அதன் நிஜமான பாதிப்பு ஒன்றுமே இல்லை. நகர்ப்புற சிறு உற்பத்தியாளர்களுக்கும் விவசாயிக ளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என அழுத்தம் தரப்பட்டது தான் ஒரே ஒரு சிறிய மாற்றம்.
மிகுந்த அளவில் மாறாததும், மிகக் கட்டுப்படுத்தக்கூடியதுமான விதிமுறையமைப்புகளில் சிலவற்றுக்கு நியாயம் கற்பிக்கவும், சிலவற்றைத் தளர்த்தவுமான நிஜமான பணி, முதலில் அவற்றை உருவாக்கிய பொறுப்புள்ள ஒருவருக்கே வந்து சேர்ந்தது. அதாவது இந்திரா காந்திக்கு. அவருடைய கொலையைத் தொடர்ந்து, அவர் மகன் ராஜீவ் காந்திக்கு.
1980இல் இந்திரா காந்தி ஒரு புதிய வீச்சோடு பதவிக்குத் திரும் பினார். பொருளாதாரம் மிகக்குறைந்த அளவே செயல்படுகிறது என்பதும், தனியார் துறை மீதான கட்டுப்பாடுகள் வெகுதொலை வுக்குச் சென்றுவிட்டன என்பதும் அவருக்கே புரிந்தது. 1980 ஜூலையில் இந்திரா காந்தி ஒரு புதிய தொழிற்கொள்கையை அறிவித்தார். அவர் முதல்முறை (அவரசநிலைக்கு முன்னால்) பதவியிலிருந்தபோது ஏற்படுத்திய ‘கழுத்தை நெறிக்கும்’ ஆட்சிக்கு எதிராகச் சின்னச்சின்ன விலகல்களை முற்றிலும் எதிர் திசையில் கொண்டு செல்வதாக அது அமைந்தது. இந்தச் சீர்திருத்தங்கள், இறக்குமதிகள்மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கின, தனியார் தொழில்துறை மேலும் உற்பத்தித் திறனை அதிகரித்துக் கொள்ளவும், ஏகாதிபத்திய உரிமைக்கு எதிரான சட்டங்களின் பயமின்றித் தொழிலகங்கள் பெரிதாகவும் அனுமதி அளித்தன.
1984இல் இந்திரா காந்தியின் கொலைக்குப் பிறகு, அவருடைய மகன் ராஜீவ் காந்தி சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். முன் தலைமுறையின் சமதர்ம அல்லது காந்தியச் சிந்தனையினால் சிறிதும் தொல்லைப் படாமல், நவீன வசதிகளான தனியார் வாகனங்கள், வண்ணத் தொலைக்காட்சி போன்றவற்றை மேலும் ஏற்றுக்கொண்டு, நவீன தொழில்நுட்பத்தை வளர்த்தும், நிர்வாகத் திறனை மேம்படுத்தியும், பொருளாதாரப் போட்டியை ஊக்கு வித்தும் ராஜீவ் காந்தி இந்தியாவை இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்குள் செலுத்த முனைந்தார். மேற்கத்திய நுகர்வுப் பாணிகளை விரும்பிய நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவை இது அவருக்குப் பெற்றுத் தந்தது.
1980களின் மேட்டுக்குடியினர் தலைமை ஏற்ற இந்தக் கட்டுப்பாட்டு நீக்கம், தனியார் துறைகளின்மீது இருந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியது, இறக்குமதி செய்யப்பட்ட உதிரிபாகங்களிலி ருந்து தயாரிக்கப்பட்ட வாகனங்களையும் வண்ணத் தொலைக் காட்சிகளையும் வைத்துக் கொள்ளுமாறு நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியையும் நுகர்வோருக்கான வரிவிலக்கையும் தாராள மாக்கியது. இதன் விளைவாக நீடித்துழைக்கும் பொருள்கள் உற்பத்தித் துறை 1980களில் ஆண்டுக்கு 8 முதல் 22 சதவீதமாக வளர்ச்சியடைந்ததோடு, அது நுகர்வோர் பெருக்கத்தையும் உரு வாக்கியது. ஒட்டு மொத்த உற்பத்திவீதம் 5.6 சதவீதம் ஆகியது. இது கடந்த ஆண்டுகளின் ஜனதா கட்சியின் அவப்புகழ் பெற்ற ‘இந்து வளர்ச்சி வீதமான’ 3.5 சதவீதத்தைவிட மிகுதி. வெளி நாட்டுக் கடனும், கடன்மீதான வட்டியும் 1980களில் முன்னைவிட மூன்றுமடங்காக, 23.8 பில்லியன் டாலரிலிருந்து 62.3 பில்லியன் டாலராக அதிகரித்தது.
ஆனால், இறக்குமதி சார்ந்த இந்த நுகர்வோர் வளர்ச்சிக்கேற்ற வாறு ஏற்றுமதியின் அதிகரிப்பு இல்லை. இது, அயல்நாட்டுப் பணத்தின் இருப்புநிதியில், அந்நியச் செலாவணியில் ஒரு கடுமையான பற்றாக்குறை நிலையை உருவாக்கியது.
1991இல் ஒரு தேர்தல் கூட்டத்தில் ராஜீவ் காந்தி, ஸ்ரீலங்காவில் சிங்களருக்கு ஆதரவாக இந்தியாவின் குறுக்கீட்டை விரும்பாத ஓர் இலங்கைத் தமிழ்த் தற்கொலைப் படையாளியினால் கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டது. இரண்டு காந்திகளும் தொடங்கிவைத்த சிறிய சிறிய சீர்திருத்தங்கள், நவதாராளமயச் சீர்திருத்தங்கள் முழு அளவில் நிறைவேறுவதற்கான மேடையை அமைத்தன. அவற்றைச் செய்தவர் நரசிம்ம ராவ். ராஜீவ் காந்தி கொலையினால் கிடைத்த அனுதாப அலை வாக்குகளைக் கொண்டு 1991 ஜூனில் காங்கிரஸ் கட்சி தேர்தலை வென்றபோது அவர் பிரதமர் ஆனார்.
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 2
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 2
சுதந்திராக் கட்சி
நேருவின் அரசுவலிமை கொண்ட சமதர்மத்திற்கு சுதேசி என்பது மட்டுமே ஒரே எதிர்ப்பாக முன்வைக்கப் படவில்லை. 1950களின் பிற்பகுதி முதல் 1960கள் முழுவதும், நேருவின் பொருளாதாரத்திற்கு சுதந்திராக் கட்சியும் சவாலாக இருந்தது. அக்கட்சி குறைந்தபட்ச அரசாங்கக் கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரச் சந்தைகளுக்குச் சார்பான பழைய தாராளவாத நிலைப்பாட்டைக் கொண்டதாகும். (நாராயணமூர்த்தி, குர்ச்சரண் தாஸ் போன்ற பிரபலங்கள் பின்னர் பழைய சுதந்திராக் கட்சியை உயிர்ப்பிக்க முயன்றார்கள் என்பதால், அதன் வரலாற்றைச் சற்றே கவனிப்பது பயனுடையதாக இருக்கும்.)
தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியின் ஒரு காலக் கூட்டாளியுமான (இராஜாஜி எனப்பட்ட) சி. இராஜகோபாலாச்சாரி (இவருடைய மகள் காந்தியின் மகனை மணந்தார்) 1959இல் சுதந்திராக் கட்சியைத் தொடங்கினார். மிக உறுதியான சமூகப் பிற்போக்குவாதி அவர். இந்துமத மற்றும் கலாச்சார விஷயங்களில் ஊக்கத்தோடு இயங்கியவரும், பாரதிய வித்யா பவனை ஏற்படுத்தியவருமான கே. எம். முன்ஷி, சமதர்ம எதிர்ப்புவாதியாக மாறுவதற்கு முன்பு காங்கிரஸ் சமதர்மக் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரான மீனு மசானி என்னும் பொருளாதார வல்லுநர், ஆங்கிலவாதியான பார்சிப் பெருந்தொழிலதிபர் சர் ஹோமி மோடி, பிரிட்டிஷ் ஆட்சியில் உயர்நிலையில் பணிபுரிந்த அரசு அதிகாரிகள் பலர், சுதந்திராக் கட்சியின் மையக் குழுவில் இருந்தனர். (அண்மையில் மறைந்தவரும், இந்தியாவின் முன்னணி வலதுசாரி நு£ல் வெளியீட்டகமான வாய்ஸ் ஆஃப் இந்தியா என்பதை நிறுவியவரும், இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்மீது தீவிர எதிர்ப்புக் காட்டியவருமான சீதாராம் கோயல் என்பவரும் சுதந்திராக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.)
சுதந்திராக் கட்சியின் உறுப்பினர்களில் பாரம்பரிய அதிகாரசக்திகளான பெருநிலக்கிழார்கள், புதிய இந்தியக் குடியரசில் தங்கள் அரியணைகளை இழந்த ராஜாக்களும் அவர்களின் குடும்பத்தினர் போன்றவர்களும் அடங்குவர். தாராள வாதத்தில் உறுதிபூண்டிருந்தபோதிலும், அந்தக் கட்சி, தாராளமயத்துக்கு எதிராக இருந்த, பிற்போக்குவாதக் குழுக்களான ராம் ராஜ்ய பரிஷத், இந்து மகாசபை, ஜனசங்கம் போன்றவர்களுடன் தேர்தல் கூட்டு வைத்திருந்தது.
சுதந்திராக் கட்சியை மிகவும் வெறுத்தவரான நேரு, அதை, “பழைய இடைக் காலத்தைச் சேர்ந்த பிரபுக்கள், கோட்டை கொத்தளங்கள், ஜமீன்தார்களைக் கொண்ட கட்சி, மேலும் மேலும் பாசிசக் கொள்கைக்கு மாறிவருவது” என்று வருணித்தார்.
நன்கு படித்த தாராளவாதிகள், பிரதேச ராஜாக்கள், ராணிகள், பெருநிலக் கிழார்கள் போன்றோரை இணைத்த விஷயம், நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி இந்தியாவில் சோவியத் பாணியிலான திட்டமிட்ட பொருளாதாரத்தைப் புகுத்திவிடுமோ என்ற பயத்தினால் எழுந்த கடும் எதிர்ப்புதான். சுதந்திராக் கட்சி, சுதந்திரத்தின் வாயிலாக வளம் என்பதற்கு வாக்குறுதி அளித்தது. அதன் 21 அம்ச அறிக்கை,
தனிமனிதருக்கு உச்சபட்ச சுதந்திரம்,
அரசின் மிகக்குறைந்த குறுக்கீடு
என்பதற்குப் பொறுப்பேற்பதாக உறுதியளித்தது.
நடைமுறைச் சொற்களில், அரசின் மிகக்குறைந்த குறுக்கீடு என்பது: நிலச்சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு,
பெருந்தொழில் உற்பத்தியில் அரசுத்துறை ஈடுபடுவதற்கு எதிர்ப்பு,
குறைந்த வரிகளுக்கு ஆதரவு,
குறைந்த அரசுச் செலவினங்கள்,
எல்லையற்ற தனிமனிதர் சொத்துரிமை,
அரசாங்க அதிகாரத்தை எல்லைக்குள் வைத்தல்
என்பதாகும். அரசியல் தளத்தில், அக்கட்சி காந்தியின் தர்மகர்த்தா முறையை ஆதரித்தது. அதன்படி பணக்காரர்களும் வசதியாகப் பிறந்தவர்களும் தங்கள் பணத்தை ஏழைகளின் சேவைக்குப் பயன்படுத்தவேண்டும். இவை யாவும் சுதந்திரச் சந்தைக் கொள்கையோடு சேர்ந்து, செல்வத்தை மறுவிநியோகம் செய்வதில் அரசின் பங்கை இல்லாததாக்கி, வெறும் காவல்காரன் என்ற நிலைக்கு அதைக் குறைத்தது.
இந்தச் செவ்வியல் தாராளவாதக் கொள்கைகளுக்கு இன்று புத்துயிர் தரப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திராக் கட்சி முதலில் இவற்றை முன்மொழிந்தபோதும், அவற்றின் அளவில் எந்தத் தவறும் இல்லை என அமெரிக்கப் பொருளாதாரம் சார்ந்தோர் நம்பினர். [ரஷ்யாவின் சோஷலிசச் சோதனைகளின் தோல்வியில் நாம் கற்றுக்கொண்டது, சந்தைகளுக்கு எதிர்வினை புரியும் எவ்வித அமைப்பும் இல்லாவிட்டால், தடைகளும் சமநிலைப்படுத்தலும் இல்லாவிட்டால், அரசுத்துறை நிறுவனங்கள் தாமாகவே திறனற்றவையாக, ஊழல் நிறைந்தவையாக, ஆதிக்கம் செய்பவையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது என்பதைத்தான்.]
சுதந்திராக் கட்சி, இந்தியாவின் சமூக, கலாச்சார யதார்த்தங்களுக்குத் தொடர் பற்ற பொருளாதார தாராளவாதத்தின் எல்லைகளைத் தெளிவாகக் காட்டுகிறது. சாதி, வர்க்க அமைப்புகள், சமத்துவமின்மை, சுரண்டல், ஆகிய பிரச்சினைகளைச் சந்திக்க நேரும்போது அவை லோகாயதரீதியாகத் தீர்க்கப்படாமல், கடமை, ஒருங்கிசைவு, தர்மகர்த்தாத் தன்மை போன்ற ஆகாயக் கனவுகளால் தீர்க்கப்பட முடியும் என்று நம்புகின்ற பிற்போக்குப் பாரம்பரிய வாதத்தில்தான் தாராள வாதம் முடிவடையும் என்பதை சுதந்திராக் கட்சி காட்டுகிறது.
தனது காலத்திலேயே சுதந்திராக் கட்சி, வகுப்புவாத, பாசிஸப் போக்குகளை வளர்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இன்று அதைப் பின்னோக்கிப் பார்த்து, “சுதந்திராக் கட்சித் தலைவர்கள் இந்து தேசியவாதக் கருத்தியல்மீது பரிவுடைய வர்கள், இந்து மத, கலாச்சார நிறுவனங்களில் ஊக்கத்தோடு செயல்பட்டவர்கள்” என்று சிலர் வருணிக்கின்றனர். ஆனால் உண்மையில் இது தவறு.
சுதந்திராக் கட்சியைப் பற்றிய மிகச் சிறந்த ஆய்வின் ஆசிரியரான ஹோவர்ட் எர்ட்மன், “அந்தக் கட்சியின் தலைவர்கள் முழுஅளவில் பிற்போக்காளர்களாகவோ, தீவிர தேசியவாதிகளாகவோ இல்லை. அது எவ்வித வகுப்புவாத அல்லது குறுகிய இலட்சியங்களையும் முன்வைக்கவில்லை. அதை ஒரு ‘வகுப்புவாதக்’ கட்சி என்று சொல்வது தவறு. பாகிஸ்தானுடன் சமாதானமாகச் செல்லவேண்டும், முஸ்லிம்களின் காரணங் களுக்காக ஆதரவு வேண்டும் என்று அதன் தலைவர்கள் விரும்பினர். .சுதந்திராக் கட்சி மதச்சார்பற்ற தன்மையிலும், அரசியல் அமைப்பின் செயல்பாடுகளைக் கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இருந்தது” என்று கூறுகிறார்.
சி. இராஜகோபாலாச்சாரியும், கே. எம். முன்ஷியும் தீவிர இந்துக்கள் என்பதும், அரசியல் கூட்டங்களில் அவர்கள் பிரார்த்தனைகளையும், வேதம், பகவக்கீதை பற்றிய உரைகளையும் அறிமுகப்படுத்தினர் என்பதும் உண்மை. ஆனால் மதத் தன்மையை இவ்விதம் வெளிப்படுத்துவதைக் கட்சியின் பிற உறுப்பினர்கள் விரும்பவில்லை. அவர்களில் பெரும்பான்மையினர், மதச்சார்பு அற்றவர்க ளாகவும், பொதுவாழ்வு-தனிப்பட்ட வாழ்வு என்பதைப் பிரித்துநோக்கும் கொள்கையை மதிப்ப வர்களாகவும் இருந்தனர். இந்து தேசியவாதிகள் வழக்கமாகச் செய்வது போல, இந்துக்களை முஸ்லிம்களுக்கு எதிராக நிறுத்தி, நாட்டை மதஅடிப்படையில் அவர்கள் வரையறுக்கவில்லை. யாவற்றுக்கும் மேலாக, காந்தியப் பொருளாதார திட்டமான கைத்தொழில் முன்னேற்றம், பாரம்பரியத் தொழில்நுட்ப முன்னேற்றம் என்பதை அவர்கள் ஆதரிக்கவில்லை. மாறாக, நவீனமாகிய பெருந்தொழில், விவசாயப் பகுதிகளில் தொழில்களின் சுதந்திரம் என்பதற்கு ஆதரவாக நின்றனர். அவர்களுடைய சமூக, அரசியல் நிலைப் பாடுகளில் அவர்களை ‘மிதவாதிகள்’ என்றழைப்பதே பொருத்தமாகும்.
இருப்பினும், சுதந்திராக் கட்சி, தன் காலத்தில் மிகப் பழமைவாத, பிற்போக்குக் கட்சிகளான ராம் ராஜ்ய பரிஷத், இந்து மகாசபை, ஜனசங்கம் போன்றவற்றோடு அரசியல் கூட்டு வைத்திருந்தது. ஏன் இப்படிப்பட்ட தாராளவாதத்திற்கெதிரான குழுக்களுடன் அது சேரவேண்டும்?
இன்றைய பெரும்பாலான நவதாராளவாதிகளைப்போல, சுதந்திராக் கட்சியினரும் அரசுக் குறுக்கீட்டினால் ஏற்படும் தீமைகள், திறனின்மைகள் மீது தங்கள் வெறுப்பினைக் கொட்டினர். ஆனால், நமது கலாச்சார மரபுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தாராளத் தன்மையின்மை, அநீதி ஆகியவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டனர். அவற்றின்மீது சிறிதளவு கவனத்தையும் செலுத்தவில்லை. அரசு சார்ந்த சமதர்மத்தை எதிர்ப்பதில் ஒரே குறியாக இருந்த காரணத்தினால், சுதந்திராக்கட்சியின் தாராளவாதிகள்,
“பழைய சமூக முறைமையின் மூச்சடைக்கும் தீமைகள் பலவற்றை அவர்கள் எதிர்த்துப் பேசவில்லை. வலதுசாரியின் பக்கமுள்ள சுதந்திரத்தின் அபாயங்களை எதிர்த்தும் பேசவில்லை.”
மிகவும் கொடிய ஏழ்மையில் ஆழ்ந்திருந்த, தாங்கள் தேர்ந்தெடுத்த அரசின் உதவிக்கரத்தை வரவேற்ற, பெரும்பாலான வெகுமக்கள் மத்தியில் தங்கள் சுதந்திரச் சந்தை பற்றிய நம்பிக்கை எடுபடவில்லை என்பதை சுதந்திரா உறுப்பினர்களே புரிந்து கொண்டனர். வெகுமக்களைத் துன்புறுத்திய பலவித மான சமமின்மைகளுக்கு நிஜமான தீர்வுகளை வழங்காமல், அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு சுதந்திராக் கட்சி, மதத்தில் புகுந்துகொள்வதையும், காந்தியின் பழைய தர்மகர்த்தாக் கொள்கையைச் சற்றே மாற்றி ஏற்றுக்கொள்வதையும் தவிர வேறு வழி தரவில்லை.
இந்தியாவிலுள்ள சாதி மதம் சார்ந்த அநீதிகளுக்கான மூலங்களைத் தேடமுடியாமல் அல்லது விரும்பாமல் சுதந்திராக் கட்சி அவற்றை ஆன்மிகத் தளத்தில் தீர்க்கமுயன்றது. ஏழைகளாக இருந்தாலும், மரபான இந்துச் சமூகம் அவர்களின் ஆன்மிகத்தை மதிக்கிறது என்றார்கள் அக்கட்சியினர்.
கொடுமையான அரசாங்கக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்ட தனியார் தொழில்கள், உயர்ந்த ஆன்மிக மதிப்புகளால் வழிநடத்தப்படும், தங்களுடைய செல்வத்தைப் பொதுநன்மைக்கு அவை பயன்படுத்தும் என்று கூறியது சுதந்திராக் கட்சி.
பொருளாதாரம் பற்றிய நம் வரலாற்றை மறுபடியும் தொடரலாம்.
சுதந்திராக் கட்சி, 1960களில் ஜனசங்கத்துடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொண்டது. தனது சுதந்திரச் சந்தைக் கருத்தை வெற்றியின்றி மேடையேற்றியது. இதனால் ஜனசங்கத்துக்கு ஏழைகளுக்கு எதிரான பணக்காரர்களின் கட்சி என்ற பெயர் கிட்டியது. சுதந்திராக் கட்சியுடன் ஏற்பட்ட தொடர்பினால், சங்கப் பரிவாரத்தின் இன்றைய தலைமை சுதேசி பற்றியதான காந்திய மொழியில், தான் ஆதரவளிக்கும் உலகமயத்திற்கான ஆதரவை ஒரு பகுதியளவேனும் மறைத்துக்கொள்கிறது.
சுதந்திராக் கட்சியின் புது அவதாரமாக, 2005இல் புதிதாக நிறுவப்பட்ட இந்திய லிபரல் கட்சியும் அதன் முன்னோடி சந்தித்த அதே எதிர்ப்புநிலைகளை எதிர்கொண்டது. இந்தியாவிலிருந்து ‘சமதர்மத்தையும் குருட்டுப் பிடிவாதத்தையும் ஒழிக்க வேண்டும்’ என்று அப்புதிய கட்சி விரும்பியது. இந்தக் கட்சிக்காரர்களுக்கும் பாகிஸ்தான், இஸ்லாம், அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக எந்த வெறுப்பும் கிடையாது. எவ்வித இனவாதக் கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைக்கவில்லை. தனிப்பட்ட ஆதாயத்துக்கான இந்தியத் தொழில் முனைவுக்கு ஆதரவளிக்கவும், ஆசீர்வதிக்கவும் அவ்வப்போது இந்துப் புனித நூல்களான மனுஸ்மிருதியையும் அர்த்த சாஸ்திரத்தையும் மேற்கோள் காட்டினாலும், நவதாராளச் சந்தைச் சீர்திருத்தங்கள்மீது அவர்களின் ஈடுபாடு ஒரு மதவாத நோக்கு அற்ற தன்மையையே கொண்டுள்ளது.
இந்த முதல்கால கட்டத்திலேயே சுப்பிரமணிய சுவாமியைப் பற்றியும் குறிப்பிடவேண்டும். இந்து மறுமலர்ச்சி, சுதந்திரச் சந்தை இவைகளுக்கென ஒற்றை ஆளாகப் போராடுபவர் அவர். ஹார்வர்டில் படித்த பொருளாதார வாதி. சுப்பிரமணிய சுவாமி (பி. 1939) 1960களில் முதல்முதலாக ஜனசங்கத்தில் சேர்ந்தார். பிறகு ஜனதாக் கட்சியை உருவாக்க அதிலிருந்து வெளியேறினார். புதுதில்லியில் தேசிய மறுமலர்ச்சிக்கான மையம் என்ற ஒரு சிந்தனை அமைப்பை இயக்கினார். ஆர்எஸ்எஸ்ஸின் வார இதழான ‘தி ஆர்கனைசர்’ என்பற்குத் தொடர்ச்சியாகப் பத்திகள் எழுதி வருபவர்.
பொருளாதார வளர்ச்சியை இந்து மறுமலர்ச்சியோடு இணைப்பதுதான் சுவாமியின் திட்டம். தன் சகாக்களைப் போலவே, பகவத் கீதையிலும் வேதங்களிலும் மூழ்கும் கட்டாயப் பணியை அவரும் செய்தார். இந்து மேதைமை ஒன்றிணைப்புக்கு உதவுவது என்று கூறிய உபாத்யாயாவைப் போல அல்லாமல் அவர், இந்து அறிவுச்சூழல் தனிமனிதருக்கானது, சுதந்திரச் சந்தைகளையும் குறைந்த பட்ச அரசையும் வரவேற்கக்கூடியது என்று அறிவித்தார்.
1960களின் பிற்பகுதியிலும், 1970களின் தொடக்கத்திலும், இந்து மறுமலர்ச்சியுடன் கூடிய சுதந்திரச் சந்தைகளுக்கான அவருடைய பெரிய திட்டங்கள் எங்கும் செல்லுபடி ஆகவில்லை. 2005இல் அவர் எழுதிய ‘இந்திய மறுமலர்ச்சியின் புதிய அடிப்படைகள்’ என்ற நூல், அவருடைய தோல்வியுற்ற ‘இந்து மறுமலர்ச்சித் திட்டம்’ என்பதை உயிர்ப்பிப்பதுபோலத் தோன்றுகிறது. இந்தத் திட்டத்தை, இந்திரா காந்தி 1969இல் ஒரு ‘கோமாளி எழுதியது’ என்று கூறினாராம். இவரைப் பற்றிப் பின்னரும் காண வேண்டி வரும்.
சுயசார்பும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியும் கொண்ட நேரு காலத்தை அதன் சொந்த வெற்றிகளும் தோல்விகளுமே முடிவுக்குக் கொண்டுவந்தன.
[நவதாராளமயமாக்கல் (நியோலிபரலிசம்) என்றால் என்ன?
நவதாராளமயம் என்பது, நவசெவ்வியல் தாராளவாதம் என்பதன் சுருக்கம். தாராளவாதம் (லிபரலிசம்) என்ற மரபு நவீன பொருளாதாரத்தின் பல நூற்றாண்டுச் சிந்தனைகளிலிருந்து வருவதாகும். இது ஜான் லாக் (1632-1704), ஆடம் ஸ்மித் (1732-90), டேவிட் ரிக்கார்டோ (1722-1823) ஆகியவர்களின் எழுத்துகளிலிருந்து பெறப்பட்டது. தடையற்ற வணிகச் சக்திகள் ‘இயற்கையாகவே’ சமூகத்திற்கு வளத்தையும் சமாதானத்தையும் அளிக்கும் என்ற உறுதியை இக்கொள்கை வழங்கியது. தாராளவாதத்தின் அடிப்படைக் கொள்கை, தலையிடாக் கொள்கை (Laisses’ Faire Policy அல்லது ‘தங்கள் விருப்பப்படி மக்கள் செய்வாராக’ என்ற கொள்கை). தடையற்ற சந்தை என்ற நோக்கின் ஒரு பகுதி, வணிகத்திற்கு தேசத்தடைகளை நீக்குதல் ஆகும். இத்தடைகள் மூல வளங்களைத் திறம்பட முதலாளிகளுக்குள் ஒதுக்கிக்கொள்வதில் குறுக்கிடு கின்றன என்று மேற்கண்ட பொருளாதாரவாதிகள் கருதினர்.
தாராளவாதம் தோன்றிய பதினெட்டாம் நூற்றாண்டில், சிறுமுதலாளிகள் நிர்வகித்த சிறிய தொழில்கள்தான் இருந்தன, பணியாளர்களும் நுகர்வோரும் ஒரே சமுதாயத்தில், பிரதேசத்தில், நாட்டில் வாழ்ந்தனர். ஏறத்தாழப் பழங்கால வணிக அமைப்புதான் இருந்தது. நவதாராளவாதிகள் (நியோலிபரல்கள்) என்போர், இந்தப் பதினெட்டாம் நு£ற்றாண்டுச் சிந்தனையை மிக வேறுபட்ட இருபத்தொன்றாம் நு£ற்றாண்டின் மிகப்பெரிய உலக முதலாளித்துவத்திற்குப் பொருத்துகின்றனர். ஆனால் இப்போது, தொழிலுக்குச் சொந்தக்காரராக இருத்தல், உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றுக்கான உள்ளூர், உள்நாட்டுத் தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிட்டன என்பதை இவர்கள் கவனத்தில் வைக்கவில்லை.]
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 1
இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் – பகுதி 1
இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்கிறார்கள். இந்த ஆண்டு 8% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜிடிபி) எட்டுவோம், அடுத்த ஆண்டு 10% வளர்ச்சியை எய்துவோம், 2025இல் உலக வல்லரசாகி விடுவோம் என்கிறார்கள். இதில் காங்கிரஸ் ஆட்சியா, பிஜேபி ஆட்சியா என்ற வேறுபாடெல்லாம் இல்லை. ஆனால் நமக்குத் தெரிந்தவரை, இந்தியாவில் ஒருசில பணக்காரர்களின் தொகை அதிகரித்துள்ளது. ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். இலவசப் பொருள்களை நம்புகிறார்கள். அதையே நம்பி வாக்களிக்கவும் செய்கிறார்கள். விவசாயிகள் பிழைப்புக்கு வழியின்றித் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நடுத்தர மக்கள் தினசரி உயரும் விலைவாசியால் அவதிப் படுகிறார்கள். 1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது 1 டால ருக்கு 1 ரூபாய் என்று இருந்த மதிப்பு, இன்று 1 டாலருக்கு 68 ரூபாய் அளவுக்கு வீழ்ந்துள்ளது (“வளர்ச்சியடைந்துள்ளது” என்று ஒருவேளை பிரதமர் மோதி, மன்மோகன் சிங் போன்ற அரசியல், பொருளாதார நிபுணர்கள் சொல்லலாம்!)
அதனால்தான் ‘இந்தியப் பொருளாதார வளர்ச்சி’ என்று தலைப்பிடாமல் ‘பொருளாதார மாற்றம்’ என்று இக்கட்டுரைக்குத் தலைப்பிட்டுள்ளேன். (இக்கட்டுரையின் கருத்துகள் பெரும்பாலும் மீரா நந்தா என்பவர் எழுதிய God Market – Monthly Review Press, New York, 2009 என்ற நூலின் முதல் இயலில் சொல்லப்பட்டவற்றை ஒட்டி எழுதப்பட்டன). நமக்கு எப்போதுமே கொள்கை என்றால் விரோதம் அல்லது பயம். ஆனாலும் இன்றைய கால கட்டத்தில் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அடிப்படைத் தேவையாக இருக்கிறது. அதற்கு இந்தக் கட்டுரை உதவும்.
சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1. அடிப்படை அமைத்தல் காலம் (1947இல் விடுதலை பெற்றதிலிருந்து 1975இன் அவசர நிலைமை வரை);
2. சோதனைக் காலம் (1977இல் ஜனதாக் கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட திலிருந்து 1991இல் ராஜீவ் காந்தி கொலையும் பொருளாதாரச் சீர்திருத்தங் களின் தொடக்கமும் நிகழ்ந்ததுவரை);
3. நவதாராளமயமாக்கல் காலம் (1992 முதல் இன்று வரை).
காலகட்டம் 1: அடிப்படை அமைத்தல் காலம். (1947-1975)
முதல் காலகட்டம் (1947-75), ஜவஹர்லால் நேருவின் இலட்சிய மான திட்டமிட்ட பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்திய காலம். நாட்டைத் தொழில்துறையிலும் விவசாயத்துறையிலும் தன்னிறைவுள்ளதாக ஆக்கி, அதேசமயம், சமூகத்தின் எல்லாப் பிரிவுகளும் சமஅளவு வளர்ச்சியும் பொதுநலமும் உறுதிசெய்யப்படும் கடமை அரசுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட காலம்.
இக்கால கட்டத்தில் இந்தியத் திட்டமிடுவோர் மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தினர்.
1.இறக்குமதிகளைச் சாராமல் தொழில்துறையின் உள்கட்டமைப்பைக் கட்டுதல்;
2. பொருளாதாரத் துறையின் உயர்வுக்குத் தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை உருவாக்குவதற்கெனத் தேவையான உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குதல்;
3. நிலத்தைப் பகிர்ந்து பயிரிடுபவர்களுக்கும் நிலமற்ற விவசாயப் பணியாளர் களுக்கும் நிலத்தைப் பகிர்ந்து தருவதற்குத் தேவையான நிலச் சீர்திருத்தங்கள்.
நேருவின் கொள்கை சமதர்மம் என்ற பெயரைக் கொண் டிருந்தாலும், ரஷ்யா அல்லது சீனாவின் சமதர்மத்திற்கும் இதற்கும் வெகுது£ரம். நேருவின் மென்மையான, ‘ஃபேபியன்’ சமதர்மம், முதலாளித்துவத்தை அழிப்பதல்ல, மாறாக, அதன் உயர்வுக்கே வழிவகுக்கக்கூடியது, அதேசமயம் மக்களுக்குச் சிறிதளவேனும் நல்வாழ்வையும் நீதியையும் கொண்டு வருவதற்கான முயற்சி. இதைப் பற்றி விமரிசகர்கள் பலவேறு நிலைகளில் மதிப்பிட்டுள்ளனர்.
நேருவின் தொழிற் கொள்கை விருப்பமற்றதொரு முதலாளி வர்க்கத்தின்மீது அவர்களுடைய விருப்பங்களுக்கும் ஆர்வங் களுக்கும் எதிராகத் திணிக்கப்பட்ட தல்ல. தனியார் தொழில்களை நசுக்க ஏற்பட்டதுமல்ல. மாறாக, இந்தியாவின் முக்கியத் தொழில் பரம்பரையினர், பெருவிவசாயிகள், உயர்மட்டத் தொழிலாளர்கள், பெரும் அரசு அதிகாரிகள், பிற வெள்ளைக்காலர் பணியாளர்கள் ஆகியோர் அமைந்த ஆதிக்கக் கூட்டமைப்பின் முழு ஆதரவைப் பெற்றதாக அது இருந்தது. பொருளாதாரம் மேல்நோக்கிச் செல்லத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அரசிடம் மட்டுமே உள்ளன என்று அனைவரும் புரிந்துகொண்டிருந்தனர்.
இந்தியாவைச் சந்தித்த பிரச்சினைகளின் பிரம்மாண்டத்தினால், அது முதல் ஐந்தாண்டுக் காலப் பகுதியில் மிகக் குறைவாக, 3.5 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வளர்ச்சியுற்றது. ஆனால் இரண்டாம், மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் இறுதியில் (1956-61, 1961-66) இறக்குமதிக்குப் பதிலீட்டுமுறை இந்தியாவின் தொழில்துறை அமைப்புக்குத் தேவையான அடிப்படையை அமைப்பதில் வெற்றிகண்டது.
நேருவைப் பின்பற்றிய சமதர்மவாதிகள்மீதும், திட்டமிட்ட பொருளாதாரத்தை ஆதரிப்போர்மீதும், இப்போது உள்ளவர்கள் வெறுப்பைக் குவிப்பது மோஸ்தராகிவிட்டது. அதனால் அவர்களின் சாதனைகளை நாம் காண்பது முக்கியமானது. அவற்றில் சிலவற்றைப் பட்டியலிடலாம்:
1970களின் தொடக்கநிலையிலேயே இந்தியா உள்நாட்டுத் தொழிலுக்குத் தேவைப்படும் தரமான மூலதனச் சரக்குகள் உற்பத்தியில் ஏறத்தாழ முழுஅளவு தன்னிறைவு பெற்று விட்டது. தனது சொந்த எந்திரக்கருவிகள், இரசாயன உபகரணங்கள், எந்திரவியல் பொறிகள், கனரக, மற்றும் பிற மின்சாரக்கருவிகள், அடிப்படை உலோகங்கள், உலோகக் கலவைகள் ஆகியவற்றை இந்தியா உற்பத்திசெய்தது. தனது சொந்த எஃகு ஆலைகள், மின்உற்பத்தி நிலையங்களைக் கொண்டிருந்ததோடு, எல்லாவற்றுக்கும் மிக முக்கியமான, உலகிலேயே மிகப் பரந்த தனது இரயில்வே வலைப்பின்னலையும் வளர்ச்சியடையச் செய்தது.
இந்தச் சாதனைகள் பின்வரும் எல்லாவற்றுக்கும் அடித்தளமாக அமைந்தன.
இந்தக் காலப்பகுதி முழுவதும், இந்தியா சுதந்திரமடைந்த திலிருந்து 1964இல் அவரது மரணம் வரை இந்தியாவின் முதல் பிரதமரான நேருவே வழிகாட்டியாக இருந்தார். லால்பகதூர் சாஸ்திரியின் குறைந்தகால ஆட்சிக்குப் பிறகு, நேருவின் மகள் இந்திரா காந்தி, முதல் முறை 1966இலிருந்து 1977வரையும், பிறகு மீண்டும், அவசர (நெருக்கடி) நிலைக்குப் பிறகு 1980 முதல் அவர் கொலைசெய்யப்பட்ட 1984 வரையும் இருமுறை பிரதமராக இருந்தார்.
இந்திரா காந்தியின் முதல் ஆட்சி, அதாவது அவசரநிலைக்கு முந்தியது, பெரும் பாலும் இடதுசாரியைச் சிந்தனையைச் சார்ந்தது. பத்து அம்சத் திட்டத்திற்காக இன்று நினைவு கொள்ளப்படுகிறது. ‘வறுமையை ஒழிப்போம்’ (கரீபி ஹடாவோ) என அது உறுதியளித்தது. இத்திட்டம் மிகப் பரவலான கொள்கை மாற்றங்களை நுழைத்தது.
வங்கிகளையும் காப்பீட்டுக் கழகங்களையும் தேசியமயமாக்குதல்,
நகர்ப்புறச் சொத்துக்கு உச்சவரம்பு,
வணிக, நில, ஏகபோக உரிமைகள் மீது கட்டுப்பாடு,
உணவு தானியங்களின் பொதுவிநியோகம்,
நிலச்சீர்திருத்தம்,
விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல் (பசுமைப் புரட்சி)
போன்ற ஏழைகளுக்கு ஆதரவான, ஆனால் அரசு ஆதிக்கக் கொள்கை மாற்றங்கள் இவற்றில் அடங்கும். பொருளாதார நிறுவனங்கள்மீது அதிகமான அரசுக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய காரணம், வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் சிறிய நகர்ப்புற, கிராமப்புறத் தொழில்களுக்கு மூலவளங்களை அளிப்பதற்காகவே.
இந்தத் திட்டங்கள் ஏழைகள் மத்தியில் மிகப் பிரபல மாகியிருந்தன. ஆனால் இந்திரா காந்திக்கு அவரது சொந்தக் கட்சிக்குள்ளாகவே எதிர்ப்பு இருந்தது.
திட்டங்களின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அரசுக் கட்டுப்பாடுகளின் அதிகரிப்பு, மத்தியதர அதிகாரவர்க்கமும் அலுவலர்களும் பெரிதும் பயனடை யுமாறு வேண்டியவர்களைப் பணியில் அமர்த்துதல், ஊழல், இடைத்தரகு பெறுதல் போன்றவற்றிற்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கியது.
இந்தியப் பொருளாதாரம் ஏற்கெனவே முதிர்ச்சிநிலை அடைந்து விட்டது. இந்நிலையில் தனியார் முதலீடு தலைமை ஏற்க வேண்டும் எனப் பலர் விரும்பினர். இந்திரா காந்தியின் சீர்திருத்தங்கள் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை.
மேலும், எண்ணெய்ப் பிரச்சினையையும், 1970களின் தொடக்கத்தில் கடுமையான பஞ்சத்தையும் இந்தியப் பொருளாதாரம் சமாளிக்கவேண்டியிருந்தது.
இதற்கிடையில், 1975இல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் தேர்தல் குற்றங்களில் ஈடுபட்டதாக இந்திரா காந்தியைக் குற்றவாளி ஆக்கியது. (இன்று இம்மாதிரி ஒரு நிகழ்வுக்கு வாய்ப்பே இல்லை. மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் வெவ்வேறுவிதமான குற்றங்களைச் செய்ததாகக் கருதப்படுகின்றவர்களே ஆட்சிபுரிகின்றனர்!) பலவிதமான இந்த நெருக்கடிகளால் அவர் அவசரநிலைமையைச் செயல்படுத்தினார்.
சுதந்திரம் அடைந்தபிறகு ஏறத்தாழ 25 ஆண்டுகள் நீடித்த முதல் காலகட்டத்தில், நேருவின் அரசு நிர்வாக முதலாளித்துவத்திற்கு வலதுசாரிகள் (பொதுவுடை மைக்கு எதிரானவர்கள், முதலாளிகளை ஆதரிப்பவர்கள்) எதிர்ப்புகளைத் தந்தனர்.
அன்றிருந்த வலதுசாரிகள் இரண்டுவகை.
ஒன்று இந்து தேசியவாதக் கட்சிகள் (சமஸ்கிருத, ‘பாரத்மாதா கீ ஜே’, இந்துமதவாதிகள்).
மற்றொன்று ராஜாஜியின் சுதந்திரா கட்சி.
இந்தக் காலப்பகுதியில் இந்து தேசியவாத அமைப்புகள் பெரும்பாலும் மறைவாகவே இருந்தனர். அவர்களில் ஒருவரான நாதுராம் கோட்ஸே மகாத்மா காந்தியைக் கொலை செய்ததனால் ஏற்பட்ட மறைவு அது. அனுபவம் வாய்ந்த இரு இந்து தேசியவாத அமைப்புகளான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), இந்து மகாசபை என்பவற்றின் தலைவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. ஏனெனில் தேர்தல்களில் வெற்றி பெறுவதைவிட, இந்தியக் கலாச்சாரத்தின் இந்து அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான கலாச்சாரப் புரட்சியாளர்கள் என்ற நிலையில் அவர்கள் தங்களை வைத்துக் கொண்டனர்.
பொருளாதார விவாதங்களில் நேரடியாகப் பங்குபெறாவிட்டாலும், இவர்கள் நேருவாதிகளின் திட்டமிட்ட பொருளாதாரத்தின்மீது கடுமையான விமரிசனங்களை முன்வைக்கவே செய்தனர். இந்தியப் பொருளாதாரத்தின் சமதர்மத் தன்மையை இரண்டு கோணங்களிலிருந்து அவர்கள் எதிர்த்தனர்:
ஒன்று, சாதி அடிப்படையில் அமைந்த ‘ஒன்றுபட்ட மானிடம்’ (இண்டெக்ரல் ஹியூமனிசம்) என்ற நோக்கிலிருந்து;
மற்றது, தனிநபர் முக்கியத்துவத்தின்மீது அமைந்த முழுஅளவிலான சுதந்திரச் சந்தை முதலாளித்துவ நோக்கிலிருந்து.
==========================
ஒன்றுபட்ட மானிடம்
ஒன்றுபட்ட மானிடம் என்னும் தத்துவம் இன்றைய பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தின் முதல் பொதுச்செயலர் தீனதயாள் உபாத் யாயாவினால் 1965இல் முன்வைக்கப்பட்டது. இந்துத்துவத்தோடு சேர்ந்து, ஒன்றுபட்ட மானிடம்தான் இன்னும் பிஜேபியின் அதிகாரபூர்வமான தத்துவமாக இருக்கிறது. புதிய உறுப்பினர்கள் இந்தத் தத்துவத்தைத் தாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று உறுதிமொழி ஏற்கவேண்டும்.
உபாத்தியாயாவின் கருத்துப்படி, தனிமனிதர்களை ஓர் உயிருள்ள முழுமையாக, அல்லது குழுமனத்தோடு ஒன்றிணைப்பது, இந்து இந்தியாவின் உள்ளார்ந்த, உடன் பிறந்த இயற்கை அல்லது ‘சித்தி’ என்பதாகும். அவ்வாறு ஒன்றிணைந்த பிறகு, தனிமனிதர்களுக்கு அரசு போன்ற ஏதோ ஒரு புறச் சக்தியின் கட்டுப்பாடு தேவையில்லை. இதுதான் ஒன்றிணைந்த மானிடம் என்னும் கருத்து.
இந்திய மக்களின் சாதி சார்ந்த, பொருளுக்கு-பணத்துக்கு முதன்மை தராத, ஆன்மிகம்சார்ந்த கலாச்சார மதிப்புகளால் தேச வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகள் நெறிப்படுத்தப் படுவனவாக இருக்க வேண்டும்.
=======================
முரண்பட்ட இந்த இரு கருத்துகளுக்கும் ஆதரவை இந்து மதம், இந்து ஆன்மிகப் புனித நூல்களிலிருந்தே இந்துக் கருத்தியல்கள் பெற்றன என்பதுதான் ஆச்சரியம்! புதிய
நூல் வெளியீட்டகங்கள், சிந்தனைக் களஞ்சியங்கள், அவர்களின் கூட்டுக்குழும ஆதரவாளர்கள் பலர் ஆதரவில் இந்த இரு கருத்தியல்களும் பெரிய அளவில் மீண்டும் நுழைந்துகொண்டிருக்கின்றன. இந்துமதம் உயரிய நாகரிகம் என்றும், அதன் ஒன்றுபட்ட மானிடம் என்னும் இலட்சியம் உயரியது என்றும் நம்பப்படுகின்ற எல்லைக்குள் சுதந்திரச் சந்தைகளை இவை நுழைக்கின்றன.
காங்கிரஸ் சமதர்மவாதிகள் அரசுகளில் வைத்திருந்த உயரிய அரசியல்வாதிகளை ஒன்றுபட்ட மானிடவாதிகள் அயலார்கள் என்றும் இந்து-அல்லாதவர்கள் என்றும் தாக்கினர். ஆனால் அவர்கள் சுதந்திரச் சந்தை முதலாளித்துவத்தை ஏற்கவும் இல்லை. அவர்கள் பரிந்துரைத்தது ஒரு ‘மூன்றாவது வழி’. அது சமதர்மமும் அல்ல, முதலாளித்துவமும் அல்ல, தெளிவாக காந்தியச் சார்புடன் கூடிய சுதேசி அல்லது சுயசார்பினைக் கொண்ட ‘தார்மிக’ வழி.
ஒன்றிணைந்த மானிடவாதிகள், முதலாளிகளின் சுயநல இயல்பூக்கங்களுக்கு இரையாக மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தேசிய சமுதாயத்தின் நலன்களுக்காகத் தங்கள் ஆசைகளையும் தேவைகளையும் வரையறுத்துக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. இந்தியாவுக்குத் தேவையானது தர்மத்தை வளர்ப்பது. அதாவது, குடும்பம், சாதி, வணிகஅமைப்பு, தேசம் ஆகியவை ஒன்றிணைந்த அரசமைப்பின் உறுப்புகளாகத் தங்களைக் காணக் கற்றுக்கொள்ளக்கூடிய ஆண்களையும் பெண்களையும் உருவாக்குவது. உடலுக்கும் அதிலுள்ள உறுப்புகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்க இயலாததுபோல, வெவ்வேறு சாதிகளிலும் வர்க்கங்களிலும் பிறந்த தனிமனிதர்களின் ஆர்வங்களுக்கும் சமூகத்தின் பிற பகுதிகளுக்கும் முரண்பாடிருக்க இயலாது. இதுதான் இந்தியாவுக்கே சொந்தமான ‘மூன்றாவது வழி’. இது இந்தியாவின் இனப்பண்பிற்கு அயலான கொள்கைகளான சமதர்மத்துக்கும் முதலாளித்துவத்திற்கும் அப்பால் செல்லக்கூடியது. சமூக வாழ்க்கையின் பிற கூறுகளைப் போலவே, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையும் இந்துமத, ஒழுக்க மதிப்புகளோடு பிணைந்ததாகும்.
சுதேசி அல்லது சுயசார்பினைக் கொண்டாடிய காந்திய சமதர்மத்திலிருந்து கடன் பெற்ற சொற்களைக் கொண்டு, மெதுவாக, ஆனால் உறுதியாக, இந்த ஒன்றிணைந்த மானிடம் என்னும் தத்துவத்தை இந்து தேசியவாதிகள் பரப்பத் தொடங்கினர்.
ஒன்றிணைந்த மானிடம் என்ற கருத்தை காந்தியின் சுதேசி என்னும் கருத்தோடு ஓரளவு ஒப்பிடலாம். காந்தியின் சுதேசி, அயல் இறக்குமதிகளைவிட வட்டார, தேசிய விஷயங்களையும் நவீனப் பெருந்தொழில் சார்ந்த உற்பத்தியைவிட கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட சிறு தொழில்களையும் ஆதரித்தது. தொழில்களில் அரசுரிமையையும் பொருளாதாரச் செயல்பாடுகளில் கட்டுப்பாட்டையும் எதிர்த்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் அயல்நாட்டு இறக்குமதி செய்த பொருள்களைத் தெருக்களில் எரிக்க மக்களுக்குப் பரிந்துரைத்த சுதேசிப் போராட்டங்களின் நினைவுகளுடன் இக்கனவு ஒத்திருந்தது. நேருவின் பொருளாதார, தொழில் கொள்கை, பெரிய, அரசு கட்டுப்பாட்டிலிருந்த பொது நிறுவனங்களுக்கே தொடர்ந்து ஆதரவளித்தது.