ஜோசப் ஹெல்லரின் கேட்ச்-22

Catch22

ஜோசப் ஹெல்லரின் கேட்ச்-22

இது ஒரு அமெரிக்க நாவல். ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் இருக்கும். என் நண்பர் ராஜன் குறை ஒரு நாள் இந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். படித்துப்பாருங்கள், ரொம்ப நல்ல புத்தகம் என்றார். ஆனால் அப்போது ஏதோ வேலைகள். ஏறத்தாழப் பத்துநாட்கள் கழித்து அவரிடம் படிக்காமலே திரும்பக் கொடுத்தபோது என்னை மிகவும் கேவலமாகப் பார்த்தார். சரி, சமயம் வாய்க்கும்போது படித்துவிடவேண்டும் என்று நினைத்தேன். சில ஆண்டுகள் கழித்துத்தான் படிக்கமுடிந்தது.
மிகச் சிறப்பான சமூக அங்கதம், நையாண்டி, கேலி. கதையின் சூழல்கள் மிகவும் அபத்தமான நிலைகளுக்கும் மிகமோசமான துன்பியல் நிலைகளுக்கும் இடையில் ஊடாடுகின்றன. கதையைச் சொல்பவன், யோசேரியன் என்ற விமானப்படைக் கேப்டன்.
கேட்ச்-22ஐத் தமிழில் தர்மசங்கடம் என்று சொல்லலாம். ஒன்றைச் செய்தாக வேண்டும் என்று சிலசமயம் நமக்குத் தோன்றும், ஆனால் அதைச் செய்யவே முடியாதவாறு அந்த அபத்தமான சூழல் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட நிலையை கேட்ச்-22 எனலாம். உதாரணமாக, நான் அடிக்கடி என் கண்ணாடியைத் தொலைத்துவிடுவேன். அதைக் கண்டுபிடித்தாக வேண்டும். அப்போது தான் அடுத்தவரி படிக்கவோ எழுதவோ முடியும். ஆனால் அதைத் தேடுவதற்கே கண்ணாடி இருந்தால்தான் முடியும். இல்லாவிட்டால் தேடுவதற்குக் கண் தெரியாது. என்ன செய்வது? இது ஒரு கேட்ச்-22 சூழல் எனலாமா?
இந்த நாவலின் அபத்தமும் அப்படித்தான். அந்த படைத் தளபதி, தன் வீரர்களை மேலும் மேலும் மோசமான போர்ச்சூழல் பறத்தல்களில் ஈடுபடுத்துகிறார். தப்பிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தான் ஒரு பைத்தியம் என்று நம்பவைத்துவிட்டால் இராணுவத்திலிருந்து விடுவித்துவிடுவார்கள். ஆனால் ஒரு பைத்தியம் என்று ஒருவன் விண்ணப்பிக்கும் செயலே அவன் பைத்தியம் அல்ல என்பதைக் காட்டிவிடுகிறது. ஆகவே அவன் விடுவிக்கப்பட மாட்டான். மாறாக மேலும் மேலும் போரில் ஈடுபடுத்தப்படுவான்.
ஏறத்தாழ காஃப்காவின் கதைத் தன்மைகளைக் கொண்ட நாவல். நம் காலத்தின் அதிகாரஆட்சியின் மிகமோசமான குணங்களை இந்த நாவல்போல் எதுவும் விமரிசனம் செய்ததே இல்லை என்று சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆங்கில நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் இதைத் தயவுசெய்து படித்துப்பாருங்களேன். இம்மாதிரி தீர்க்கமாகச் சமகால விஷயங்களை விமரிசனம் செய்கின்ற நாவல் எதுவும் தமிழில் வெளிவரவில்லையே என்பது என் மனக்குறை.


இதென்னய்யா, ஜுஜுபி மேட்டர்…

chennai-dialects
மொழியில் ஆர்வம் கொண்டவன் என்ற முறையில் சென்னைத் தமிழ் எனக்கு மிகுந்த சுவையைத் தருகிறது. பலர் அதை இழித்தும் பழித்தும் பேசியிருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. விக்கிபீடியாவில் மெட்ராஸ் பாஷைக்கென்றே சில பக்கங்கள், பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது வியப்பாக இல்லையா?

மொழிகள் எவ்வாறெல்லாம் கலப்பு அடைகின்றன என்பதை ஆராய்பவர்களுக்குச் சென்னைத் தமிழ் ஒரு வரப்பிரசாதம். பம்பாயில்-குறிப்பாக பாலிவுட் (இதுவே தனிச் சிறப்புள்ள ஒரு சொல்தான்) பகுதியில் பேசப்படும் மொழி பம்பையா என்றே அழைக்கப்படுகிறது. அதுபோல மீன் பிடிப்பவர்களும் ரிக்க்ஷாக்காரர்களும் நிறைந்த வடக்குச் சென்னைச் சேரிமொழி சென்னைத் தமிழ் (மெட்ராஸ் பாஷை) என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
(குறிப்பு 1: சேரி என்பதைக் கீழ்ச்சாதி மக்கள் தங்கியிருக்கும் இடம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை-சேரி என்றால் சேர்ந்து வாழுமிடம் என்று அர்த்தம். பழந்தமிழில் பார்ப்பனச் சேரி போன்ற சொற்கள் புழங்கியுள்ளன. புதிய சேர்ந்து வாழும் இடமாக அமைக்கப்பட்ட பகுதி புதுச்சேரி எனப்பட்டது. இப்படித் தமிழகத்தில் பல சேரிகளைப் பார்க்கலாம். மலையாளத்தில் இது ஸேரி (வடஸேரி, செங்கணாஸேரி… என்று புழங்குகிறது.)
(குறிப்பு 2: இம்மாதிரிச் சொற்கள் காலப்போக்கில் இழிவான அர்த்தத்தைப் பெறுவதை மொழி வரலாற்றாசிரியர்கள் இழிபொருளாக்கம் என்கிறார்கள். உதாரணமாக சேரி என்ற சொல். நல்ல அர்த்தத்தைப் பழங்காலத்தில் பெற்றி ருந்த இந்தச் சொல் இப்போது இழிவழக்காக ஆகிவிட்டது. அதேபோலத்தான் நாற்றம் என்ற சொல். நாற்றம் என்றால் பழந்தமிழில் நறுமணம். இப்போது துர் நாற்றம்தான்! சென்னை மொழியில் கப்பு. இன்றைய தமிழில் நாற்றம் மிகுந்த நங்கையின் கூந்தல் என்று வருணிக்க முடியுமா, பாருங்கள்!)
நமது தொலைக்காட்சிகள், திரைப்படங்களும் சென்னை மொழியைப் பிரபலப் படுத்துகின்றன. உதாரணமாக, இது “ஜுஜுபி மேட்டர்பா” என்பார்கள். இதென்ன ஜுஜுபி? சின்ன விஷயம் என்று பெரும்பாலும் இது பொருள்படுகிறது, ஆனால், அதற்கு மேலும் இருக்கிறது.
கொஞ்சநாளைக்கு முன்னால் ஒரு வடநாட்டு மருத்துவப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சி வைட்டமின் அதிகமாகத் தேவை, நிறைய பழங்கள் தரவேண்டும் என்று சொல்லி, தரவேண்டிய பழங்களில் ஒன்றாக ஜுஜுபி பழம் என்பதைக் குறிப்பிட்டிருந்தது. ஆச்சரியமாகப் போய்விட்டது எனக்கு. உடனே அர்த்தத்தைத் தேடத் தொடங்கினேன். ஜுஜுபி என்றால் இலந்தைப் பழம்.

ஒரு விஷயத்தை இலந்தைப் பழ மேட்டர் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் தான் என்ன? எனக்கு உடனே பணமா பாசமா என்ற பழைய திரைப்படத்தில் வரும் “எலந்தப் பயம், எலந்தப் பயம்…செக்கச் செவந்த பயம்…இது தேனாட்டம் இனிக்கும் பயம்” என்ற ‘அற்புதமான தேனிசைத் தமிழ்ப்பாடல்’ (சொற்கள் எனது என்று யாரும் தயவு செய்து சண்டைபோட வேண்டாம், கலைஞர், ராஜ், மெகா தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் பயன்படுத்தியவை) நினைவுக்கு வந்தது. அந்தப் பாடல் இரட்டை அர்த்தம் தொனிப்பது. ஜுஜுபி மேட்டர்பா என்று ஒருத்தர் சொல்வதில் அந்த விஷயத்தின் சின்னத்தனம், சின்னத்தனம் (சின்னமாக இருக்கும் தன்மை) இரண்டுமே வெளிவருகின்றன என்பதுதான் முக்கியம்.
ஜுஜுபி என்ற சொல் கிரேக்கச் சொல்லாம். zizuphus என்ற சொல்தான் ஜுஜுபியாகத் திரிந்தது என்று சொல்கிறார்கள். அந்தக் கிரேக்கச் சொல்லுக்கும் இலந்தைப் பழம் என்றுதான் அர்த்தம்.
இதேபோல ஒருவர் ‘கில்மா மேட்டர்’ என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு பெண் தன் காதலனோடு உல்லாசமாக இருந்திருக்கிறாள். அதைத்தான் அவர் கில்மா மேட்டர் என்றார். விக்கிபீடியாவில் மெட்ராஸ் பாஷை என்பதைப் பற்றிய பதிவு, ‘அது சுத்தமான தமிழ்ச் சொல்’ என்று பறைகிறது. கில்மா என்று பெண்கள் இப்போது பெயர் வைத்துக்கொள்கிறார்கள். கில்மா என்று பெயர்கொண்ட-திரைப்படத்தைப் பற்றிய-சில இணையதளங்களும் இருப்பதாக அறிகிறேன். ஆகவே கில்மா என்றால் சினிமா என்றுதான் நான் நினைத்திருந் தேன். இன்னொரு இணைய தளம், அதுவும் பெண்ணைக் குறிக்கும் கிரேக்கச் சொல் என்று தெரிவிக்கிறது. Gilma is a Greek feminine name which means, “A beautiful young woman, dedicated and full of life.” சென்னை மொழியிலும் அது பெண்ணைப் பற்றிய விஷயம்தான்-ஆனால் மோசமான விஷயத்தை மட்டுமே அப்படிச் சொல்கிறார்கள் என்பது அதன் பிரயோகத்திலிருந்து தெரியவருகிறது.

பலபேர் சொல்திரிபுகளையும் மெட்ராஷ் பாஷையில் அடக்குகிறார்கள். அது எனக்கு உடன்பாடல்ல. அது கிளைமொழி உச்சரிப்பு பற்றிய ஆய்வில் வரவேண்டியது. உதாரணமாக, ‘வீட்டருகில்’ என்று சென்னைவாசிகள் சொல்லமாட்டார்கள். ‘ஊட்டாண்ட’ என்பார்கள். (மறுபடியும் ஓர் அருந்தமிழ்ப் பாடல்-”வா வாத்யாரே ஊட்டாண்ட நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்”). வீடு என்ற சொல், ‘வ’கரம் உதடு ஒட்டும் எழுத்தாக இருப்பதால் இன உதடு ஒட்டும் எழுத்தான ‘உ’ஆகிறது. அதனால் வீடு, ஊடு (அல்லது வூடு) ஆகிறது. வூடு+அண்(¬)ட=
வூட்டாண்ட. வீடு, அண்டை இரண்டுமே தூய தமிழ்ச் சொற்கள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
கடைசியாக ஒரு குறிப்பு. சிலபேர், ஒரு சமுதாயத்திலுள்ள உயர்ந்த விஷயங்க ளைப் பேசுவது மட்டுமே கலாச்சாரம் அல்லது பண்பாடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்தச் சமுதாயத்திலும் நன்மையும், தீமையும் உண்டு. எல்லாவற்றையுமே பேசுவதுதான் நிஜமான பண்பாடு. பைபிளில் அந்தக் காலத்திலேயே கே ((gay -ஓரினச் சேர்க்கையாளர்கள்) ஆசாமிகள் இருந்ததையும் அதுமட்டும் மிஞ்சிப்போனதனால் அந்த ஊரே அழிக்கப்பட்டதையும் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் இருந்தது, அக்கால யதார்த்தம். அவர்கள் அழிக்கப்பட்டதாகக் கூறுவது பின்வந்தோருடைய மன ஆறுதலுக்கான தீர்ப்பு.