தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம்

தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம் மனித அறிவினால் விளையும் கண்டுபிடிப்புகள் மிக விரைந்து பெருகிவருவது இந்த நூற்றாண்டின் தனித்தன்மை. பல நூற்றாண்டுகளாகத் தளர்நடையிட்டு வந்த வந்த பல அறிவுத் துறைகள், இந்த நூற்றாண்டில் ஒரு ஓட்டப்பந்தய வீரனின் வேகத்தோடு விரைந்து வளர்ந்தன. ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஏதோ ஒரு கொள்கையோ புத்தாக்கமோ அடுத்தநாட்டிற்குப் பரவிப் பாடப்புத்த கத்தில் இடம் பெறுவதற்குள் பழமையடைந்து விடுகின்ற காலம் இது. அறிவுத் துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை கலைச்சொற்கள். தக்க கலைச் சொற்களின்றிக் கருத்துகளைச் செம்மையாக, துல்லியமாக, சுருக்கமாக உணர்த்த முடியாது.

இந்த நிலையில்தான் தமிழ் கலைச்சொல்லாக்கத் துறையில் ஈடுபட நேர்ந்தது. இத்தகைய விழிப்பு காலம் கடந்தே ஏற்பட்டது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சென்ற நூற்றாண்டிலேயே அது ஏற்பட்டிருந்தால், மிக எளிதாக இந்த நூற்றாண்டில் புதிய கருத்துகளை நாம் உள்வாங்கிச் செரித்துக் கொண்டிருக்க முடியும்.

இதற்குமுன் ஒரு சிறிய செய்தியைச் சொல்லவேண்டும். தமிழில் கலைச்சொற்கள் அவசியமா என்று பலர் கேட்கிறார் கள். முதலில் கல்லூரி அளவில் இல்லாவிட் டாலும் பள்ளி வகுப்புகள் வரையிலேனும் தமிழ் வழிக்கல்வி இன்றி யமையாதது என்பதில் ஐயமில்லை. அந்த அளவிலேனும் கலைச்சொற்களை உருவாக்கித்தான் தீரவேண்டும். அது நம் கடமை. அந்தந்த மக்கள் அவரவர் தாய்மொழியில் பயிலாவிட்டால் புரிந்துகொண்டு அறிவைப் பெருக்குதலோ புதிய கண்டுபிடிப்பு களைச் செய்தலோ இயலாது என்பதை உளவியலார் எத்தனையோ பேர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

இந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் காற்பகுதி முடிந்த பிறகுதான் தமிழில் கலைச்சொற்கள் வேண்டும் என்ற விழிப்பு ஏற்பட்டது. அதற்கு இந்நூற்றாண் டின் தொடக்கத்தில் ஏற்பட்ட கல்விப் பெருக்கம் ஒரு காரணமாக அமைந்தது. தமிழ்ப்பொழில் இதழும் இருபதாம் நு£ற்றாண்டின் முதல் காற்பகுதி முடிந்த பிறகுதான் தோன்றியது. எனவே அதில் கலைச்சொல்லாக்கம் பற்றிய புதிய உணர்ச்சி வெளிப்பட்டதில் வியப்பில்லை.

தமிழ்ப்பொழிலில் கலைச்சொல்லாக்க முறைகள் பற்றித் தனியே கட்டுரைகள் வரையப்படவில்லை. கலைச்சொல் லாக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்டுரை கள் உண்டு. கலைச்சொல்லாக்கப் பகுதிகளும் உண்டு. நேரடியாகக் கலைச் சொல்லாக்க முறை பற்றி எவரும் கருத்துகள் தெரிவிக்காவிட்டாலும், பொழிலாசிரியர்களின் முன்னுரைகள், அவர்கள் அனுமதித்த கட்டுரைகள், விளம்பரங்கள் போன்றவற்றிலி ருந்து அவர்கள் எவ்வித முறைகளைக் கையாளுவதை ஆதரித்தார்கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ளமுடியும்.

அ. சாமி. வேலாயுதம் பிள்ளை, கலைச்சொற்கள் என்ற தலைப்பில் அறிவியல் தொடர்பான சொற்களை அவ்வப்போது வெளியிட்டார்.1 இவற்றில் கணிதம் முதலிடம் பெற்றது. அவர் கணித ஆசிரியராக இருந்தமை இதற்கு ஒரு காரணம் ஆகலாம். (இவரது கலைச்சொற்கள் வெளியான ஐம்பது பக்கங்களில் ஏறத்தாழ இருபத்தைந்து பக்கங்கள் கணிதத்திற்கே ஒதுக்கப்பட்டன.)

ஆ. ஆங்காங்கே என்ற தலைப்பில் கோ. தியாகராசன் என்பவர் ஒரு நீண்ட கலைச்சொற் பட்டியல் வெளியிட்டார்.2

இ. பொழிலாசிரியர், தமிழ் மொழி வளர்ச்சியில் ஒரு கூறு என்ற தலைப்பில் கலைச்சொற்கள் சிலவற்றை வெளியிட்டார்.3

இவற்றில் சாமி. வேலாயுதம் பிள்ளையின் முயற்சி 1941-44 ஆண்டுகளிலும், கோ. தியாகராசனின் முயற்சி 1950-53 ஆண்டுகளிலும், பொழிலாசிரியரின் முயற்சி 1972-73 ஆண்டுகளிலும் நடைபெற்றது. முதல் முயற்சி அறிவியற் சொற்களை மட்டும் உருவாக்கியது, பின்னர் நிகழ்ந்த இரு முயற்சிகளும் பொதுப் பயன்பாட்டிற்கென, பல்துறை அறிவுக்கென நிகழ்ந்தவை.

கலைச்சொல்லாக்கம் பற்றிய கருத்துரைகள் தமிழ்ப்பொழில் இதழில் அவ்வப்போது வெளியிடப்பட்டன. அவற்றுள் பின்வருவன அடங்கும்.

1. கலைச்சொல்லாக்கம் என்ற தலைப்பில் பொழிலாசிரியர் வரைந்த முன்னுரைக் கட்டுரை (ஆசிரியவுரை)-துணர் 16 பக். 116-17, 248-50, 278-79, 285-87, 353-57,

2. சொல்லாக்கக் குழு பற்றிக் கல்விச் செயலர்க்கு வரைந்த கடிதங்கள் (ஆங்கிலத் திலும், தமிழிலும்)-துணர் 16 பக். 283-88

3. கலைச்சொல்லாக்கம் (கட்டுரை)-அ. இராமசாமி கவுண்டர், துணர் 19 பக்.169-72, 223-36

4. கலைச்சொல்லாக்கம்-கோ. தியாகராசன், துணர் 23 பக்.231-36

5. கலைச்சொல்லாக்கம் (அறிக்கை)-வா. பொ. பழனிவேலன், துணர் 29 பக்.141-42

6. கலைச்சொற்களின் சீர்கேடு-ச. இராசகோபாலாச்சாரியார் (ராஜாஜி)-துணர் 22 பக்.238-43

7. தமிழில் கலைச்சொற்கள்-இராஜா சர். அ. முத்தையா செட்டியார், துணர் 22 பக். 200, 217-19

8. தமிழுக்கு வடசொல்லடியாகப் பிறந்த கலைச்சொற்களா?-தமிழ் அறிஞர் கழகம் வேண்டுகோள், துணர் 22 பக்.195-99

இவை தவிர துணர் 22இல் மிகுதியான வேண்டுகோள்கள், அறிக்கைகள், உரைகள் முதலியன இடம் பெற்றன. இவற்றை நோக்கும்போது துணர் 16 முதல் 22 வரை (1938-48) இப்படிப்பட்ட செய்தி கள் இடம் பெற்றுள்ளமை தெரிகிறது. இதற்கான காரணத்தை நோக்கலாம்.

அப்போதைய தமிழ்மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி ஆதரவினால் 1934இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பு ஏற்பட்டது.. இதன் முதல் மாநில மாநாடு 1934 ஜூன் 10, 11இல் சென்னையில் நிகழ்ந்தது. இம்மாநாட்டில் தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கிக் கல்வியைத் தமிழ்வழி பயிற்ற ஆவன செய்யவேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பெற்றது. இத்தீர்மானத்தின் படி 1934 அக்டோபர் 14 அன்று இச்சங்கத்தின் சார்பில், சொல்லாக் கக் கழகம் ஒன்று அமைக்கப்பெற்றது. இக்கழகத்தினரின் உழைப்பினால், ஒன்பது துறைகளில், பத்தாயிரம் கலைச் சொற்கள் கொண்ட தொகுப்பு ஒன்று, கலைச்சொற்கள் என்ற தலைப்பிலேயே 1938இல் வெளியிடப் பெற்றது.

இக்குழுவினர் உருவாக்கிய கலைச்சொற்கள், தமிழ் அடிப்படையில் சிறந்த முறையில், ஓர் எடுத்துக்காட்டு அளவில் அமைந்திருந்தன. எளிதில் புரியக்கூடியவையாகவும் இருந்தன. கூடியவரை நல்ல தமிழ்ச் சொற்களை மட்டுமே இவர்கள் அமைத்தனர். சாமி. வேலாயுதம் பிள்ளை தமிழ்ப் பொழிலில் வெளியிட்ட கலைச்சொற்கள், இதன் ஒருபகுதியே ஆகும். அவர் சொல்லாக்கக் கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவர் என்பது மனம்கொள்ளத் தக்கது. 1940

ஜூன் 8ஆம் நாள் சீனிவாச சாத்திரியார் என்பவர் தலைமையில் ஒரு கலைச் சொல்லாக்கக் குழு அமைக்கப்பட்டது.4 ஆட்சிச்சொற்களையும் கலைச்சொற்களையும் உருவாக்குவது இக்குழுவின் நோக்கம். ஆனால் இக்குழுவினரில் பலர் வடமொழிச் சார்பாளராக இருந்தனர்.5 இவர்கள் கலைச்சொல்லாக்கம் என்ற பெயரால் வடமொழியாக்கம் செய்தனர். சான்றுக்குச் சில சொற்களைக் காணலாம்.

disinfectant – பூதிநாசினி

electrolysis – வித்யுத் வியோகம்

basic (chem) – க்ஷாரமான

triangle – திரிபுஜை

similar – ஸஜாதீய

இம்மாதிரியான கலைச்சொற்கள் தமிழ்ப் பற்றுள்ளவர்களுக்கு எரிச்சல் ஊட்டியதில் வியப்பில்லை.6

இக்குழுவினர் சிலரையும், பிற சிலரையும் சேர்த்து 1947இல் சென்னை அரசாங்கம் ஒரு கலைச்சொல்லாக்கக் குழு அமைத்தது. இக்குழு வெளியிட்ட கலைச் சொற்கள் சீனிவாச சாத்திரியார் குழு வெளியிட்டவற்றையும் விஞ்சு வனவாக அமைந் தன. இவை வேடிக்கையும் வேதனையும் ஒருங்கே தருவனவாக அமைந்திருந்தன என்று சொல்லத் தோன்றுகிறது. சான்றுக்குச் சில சொற்களைக் காணலாம்.

hydrogen – அப்ஜனகம்

protein  – ஓஜஸ் திரவியம்

spinal chord – கசேரு லதை

berry – பூர்ண புஷ்டம்

undetermined – அநிஷ்கர்ஷித

census – குலஸ்த்ரீ புருஷபால விருத்த ஆயவ்யய பரிமாணம்

rotate – சக்ராக்ருதி

evaporation – பரிசோஷணம்

carpel – கர்ப்ப பத்ரம்

இக்குழுவின் மொழிபெயர்ப்புத் திறனைக் காட்டுவதற்கு மேற்கண்ட எடுத்துக் காட்டுகள் போதுமானவை எனக் கருத லாம். இராஜாஜி காலத்தில் வெளியிடப்பட்ட கலைச்சொற்களில் முப்பது விழுக்காடும், வட மொழிச் சொற்கள் பத்து விழுக்காடும், மணிப்பிரவாளச் சொற்கள் அறுபது விழுக்காடுமாக அமைந்த தொகுதி ஆயிற்று இது. எனவே இக்குழுவின் முயற்சிகள், தமிழறிஞர் குழுக்கள், மாவட்டப் புலவர் கழகங்கள், செனை மாகாணத் தமிழ்ச்சங்கம், பிற தமிழ்ச்சங்கங்கள் அனைத்தின் எதிர்ப்புக்கும் உள்ளாயின. இந்த எதிர்ப்புகளைத் தமிழ்ப் பொழில் அவ்வப்போது வெளியிட்டது. கரந்தைத் தமிழ்ச்சங்கமும் இது குறித்துக் கூட்டங்கள் நடத்தின் தன் எதிர்ப்புகளையும் ஆலோசனைகளையும் வெளியிட்டது.7 இதன் விளைவாக, சீனிவாச சாத்திரியார் குழுவின் கலைச்சொற்களைத் திருத்தியமைக்க இரா.பி. சேதுப்பிள்ளை, இ.மு. சுப்பிர மணிய பிள்ளை, அ. முத்தையா ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.8 இது தான் இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் தமிழ்ப்பொழிலில் மிகுதியாகக் கலைச் சொற்கள் பற்றிய வேண்டுகோள்களும் கட்டுரைகளும் வெளிவந்த காரணம். (இதற்கு விதிவிலக்கு, துணர் 45இல் வெளியான கலைச்சொல்லாக்கம் என்ற கட்டுரை).

கலைச்சொல்லாக்கத்தைக் குறித்துப் பொழிலாசிரியர் கருத்து பின்வருமாறு: “அறிவியல்துறையில் புதிதுபுதிதாகக் கண்டுபிடிக்கப்படுகின்ற பொருள்களுக்கு வேறு வழியின்றித் தொடக்கத்தில் வேற்றுமொழிச் சொற்களைக் கடன்வாங்கினாலும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஏற்ற தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதே தக்கது. இன்றியமையாத பிறமொழிச் சொற்களைத் தேவைப்படும் காலத்திற்குப் பயன்படுத்தலாம்….(அவற்றையும்) கூடியவரையில் தமிழ்மொழியில் தன் வயப்படுத்திய சொற்களாகவே அமைத்துக் கொள்ளவேண்டும்.”9 சுருக்கமாகச் சொன்னால், மொழிபெயர்ப்பையும் சொற்பெயர்ப்பையும் தேவைக் கேற்றவாறு பயன்படுத்தலாம் என்பது தமிழ்ப்பொழிலின் கருத்து. ஆனால் சொற் பெயர்ப்பு, தமிழ் ஒலியமைதிக் கேற்றவாறு அமைதல் வேண்டும். தக்க சொல் கிடைத்தவுடன் அதை நீக்கிவிடவேண்டும் என்பதும் இந்த இதழின் கருத்து எனக்கூறலாம்.

அடிக்குறிப்பு

1. துணர் 15 பக். 361-64, 404-09, துணர் 16 பக். 102-03, 259-63, 323-26, 358, 376-81, துணர் 17 பக். 139-42, 211-16, 358-61, துணர் 18 பக். 29-32, 121-24, 241-43.

2. துணர் 25 பக் 189-93, துணர் 26 பக்.41-46, 209-14, 289-94, 393-97 துணர் 27 பக். 41-46, 97-102, 204-08, 281-86, 337-40, 383-88, துணர் 28 பக். 19-24, 57-60, 61-6497-100, 151-56, 179-83, 207-08, துணர் 29 பக். 120-24.

3. துணர் 45 பக். 3, 4, 67, 68, 99, 100, 130-32, 164, 19, 230, 261, 262, 293, 294, 324-26, 358, 387, 388.

4. சீனிவாச சாத்திரியார் குழுவில் தமிழறிஞர் ஒருவருமே இல்லை எனச் சென்னைத் தமிழறிஞர் கழகம் கருத்துரை வெளியிட்டது. அது உண்மைதான். இக்குழுவில் இருந்தோர் பின்வருமாறு:

வி.எஸ். சீனிவாச சாத்திரியார, தலைவர்

கே. சுவாமிநாதய்யர், ஆங்கிலப் பேராசிரியர், சென்னை

டாக்டர் சி. ஆர். ரெட்டி

ஆர். எம். ஸ்டாத்தம்

எச். சி. ஸ்டோக்

ஏ. டேனியல், குண்டூர்

டி. சூரியநாராயணா

வித்வ ஜி. டி. சோமயாஜி

டி. சி. ஸ்ரீநிவாசய்யங்கார் (மதுரைத் தமிழ்ச் சங்கம்)

என். வெங்கட்ராமய்யர், கள்ளிக்கோட்டை

வி. ராஜகோபாலய்யர், கொள்ளேகால்

டி. ராம பிஷோரி, மங்களூர்

சி. கே. கௌசல்யா, இராணி மேரிக் கல்லூரி

அனந்த பத்மநாப ராவ், பிச்சாண்டார் கோவில்

மொகமது அப்துல் ஹக்

தமிழ்க் கலைச் சொல்லாக்கக் குழுவிற்கு ஒரே ஒரு தமிழறிஞர்கூடக் கிடைக்காமல் போயினார் போலும்!

5. சீனிவாச சாத்திரியார் குழுவைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் சரியாக எடையிட்டது. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், நீ. கந்தசாமிப் பிள்ளை சென்னைக் கல்வித் துறைச் செயலருக்கு ஒரு கடிதம் விடுத்தார். அதில் அவர் கூறியிருந்த சில செய்திகள்:

“8-6-40இல் கலைச்சொல்லாக்கத்திற்கு அமைக்கப்பெற்ற சாத்திரியார் குழு ஒரே போக்குடையது, மிகச் சிறியது, சிறிதும் திறமையற்றது. இச்சாத்திரியார் குழுவிற்குத் தரப்பட்ட ஆய்வுக்கூற்றுகள் (tமீக்ஷீனீs ஷீயீ க்ஷீமீயீமீக்ஷீமீஸீநீமீ), குறுகிய வை, ஈரெட்டானவை, பிழையுடையவை. இக்குழுவின் தாங்குரைகள், ஒருபோக்குடையன, முரண்பாடுடையன, இயன்முறை யற்றன. தகுதியற்றன, குறுகியநோக்கமுடையன, செயல்முறைக் கொவ்வாதன, வீணான வை, பிடிவாதமுடையன.”

6. இது பற்றிச் சென்னைத் தமிழறிஞர் கழக அறிக்கையைத் தமிழ்ப்பொழில் துணர் 22 பக். 220-22இல் காண்க.

7. கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்திய கூட்டங்கள், அவற்றில் சங்கத்தின் தலைவர் ஆ. யா. அருளானந்தசாமி நாடார் ஆற்றிய உரைகள், அவற்றில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோள், தமிழறிஞர் கழகத் தின் வேண்டுகோள் ஆகியவற்றின் விவரங்களைத் தமிழ்ப்பொழில் துணர் 22 பக். 225-28, 229-31, 236-37, 209-12, 167-68, 220-22 ஆகிய பக்கங்களில் காணலாம்.

8. தமிழ்ப்பொழில் துணர் ப. 230. 9. பொழிலாசிரியர், தமிழ்மொழி வளர்ச்சியில் ஒரு கூறு, தமிழ்ப்பொழில், துணர் 45, ப.4.

குறிப்பு: தமிழ்ப் பொழில் 1925 முதல் வெளிவந்த இதழ். நான் அதில் முதல் ஐம்பதாண்டு இதழ்களை என் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன்.


கலைச்சொற்கள்

தமிழில் கலைச்சொற்கள் ஆக்கம் ஒருகாலத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அறுபதுகளின் தொடக்கம் அந்தக்காலம் என்று சொல்லலாம். தமிழ்வழிக் கல்வியைக் கல்லூரிகளில் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் முனைப்பாக இருந்த காலம் அது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்களும், கோவையில் ஜி. ஆர். தாமோதரன் போன்ற ஆர்வம் கொண்ட தனி அறிஞர்களும் முயன்று கலைச்சொற்களை எல்லாத் துறைகளிலும் உருவாக்கினர். குறிப்பாகக் கலைக்கதிர் போன்ற இதழ்கள் இத்துறையில் ஆற்றிய தொண்டு பெரியது. அவையெல்லாம் இன்று எங்கே போயின, குறைந்தபட்சம் பொது(அரசு) நூலகங்களிலேனும் உள்ளனவா என்பது தெரியவில்லை. கன்னிமரா நூலகத்தில் ஒருவேளை காப்பாற்றப்பட்டு எங்கோ ஒரு மூலையில் இருக்கலாம்.

கலைச்சொற்கள் எல்லா மொழிகளிலும் ஒற்றைச் சொல்லாக அல்லது ஒருசொல் நீர்மையதாக அமைந்திருக்கும். இதற்கு விதிவிலக்குகள் குறைவு. பலசொற்களில் விளக்கவேண்டிய ஒரு அறிவியல் கருத்தை-அது திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட வேண்டியிருப்பதால், ஒற்றைச்சொல்லில் எடுத்துரைப்பது கலைச்சொல். கலைச்சொற்களில் முன்னொட்டுகள் பின்னொட்டுகள் இருப்பினும் அவை ஒரேசொல் தன்மையைப் பெறவேண்டும். சான்றாக, அட்மாஸ்பியர் என்ற சொல்லை நோக்கினால், அட்மா + ஸ்பியர் என்ற இரு சொற்களால் ஆகியிருந்தாலும் அது ஒரேசொல் போலவே தோற்றமளிக்கிறது. பெரும்பாலான ஆங்கிலக் கலைச்சொற்கள் இரு சொற்களால் ஆனவை என்றாலும் அவை ஒற்றைச்சொல் தன்மையைப் பெற்று விட்டன. சான்றாக, பயாலஜி என்பது பயோ + லஜி என்ற இரு சொற்கள் இணைந்தது என்றாலும் யாரும் அதைப் பிரித்துப் பார்ப்பதே இல்லை. மேலும் பயோ, லஜி ஆகியவை ஒட்டுகளின் தன்மையைப் பெற்றுவிட்டன.

தமிழில் அவ்வாறு ஒருசொல்நீர்மைத்தாகக் கலைச்சொற்கள் இல்லை என்பது வருந்தத் தக்கது. சான்றாக, சுற்றுச்சூழலியல் என்ற சொல், சுற்று, சூழல், இயல் என்ற மூன்று முழுச் சொற்கள் கொண்டதாக உள்ளது. ஆங்கிலத்தில் ஒரே சொல்லாக உள்ளதையும் தமிழில் இரண்டு அல்லது மூன்று சொற்கள் கொண்டே பெயர்க்கவேண்டியுள்ளது. gale என்ற ஆங்கில ஓரசைச்சொல்லைத் தமிழில் கடுங்காற்று என்று ஆக்குகிறோம். இது இரண்டுசொற்களைக் கொண்டு அமைகிறது. தமிழ்ப் பற்றாளர்கள் முதலில் கவனம் செலுத்தவேண்டிய பகுதி இதுதான்.

ஒருசொல்லாக அடிப்படைக் கலைச்சொல் அமைவதனால்தான் அதை வைத்துப் பிறகு முன்னொட்டும் பின்னொட்டும் சேர்த்து மேலும் பல கலைச் சொற்களை ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆக்கமுடிகிறது. தமிழில் அவ்வாறு செய்ய இயலாமல் போகிறது. ஆண்டாலஜி என்ற ஒருசொல் நீர்மைத்தான ஆங்கிலச் சொல்லைத் தமிழில் இயல் + திட்ட + வாதம் என மூன்று சொற்கள் கொண்டதாக அமைக்க வேண்டி வருகிறது. அதனால் அதை விரிவுபடுத்த முடியாமல் போகிறது. ஆண்டலாஜிகல், ஆண்டலாஜிகலி என்றெல்லாம் ஆங்கிலத்தில் எளிதாக விரிவுபடும்போது, தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரு சொல்லைச் சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனவே கலைச் சொல்லை ஆக்கும்போது ஒரேசொல்லாக ஆக்குங்கள்.

தமிழில் வினைச்சொற்களை மட்டுமே இதற்கு விதிவிலக்காக வைத்துக் கொள்ளலாம். சான்றாக, -ize என முடியும் ஆங்கில வினைச்சொற்களை இருசொல் கொண்டவையாக ஆக்கலாம். nationalize – தேசியமயமாக்கு, நாட்டுடைமையாக்கு என்பதுபோல. இவையும் மூன்று சொற்களாக உள்ளன. எனவே ‘தேசியமாக்கு’ என்று இரண்டே சொற்களில் கொண்டுவருவது நல்லது.


மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும்

தமிழை நடைமுறையில் கையாள முனையும்போதும், தமிழில் பாடங்களைக் கற்பிக்கும்போதும் எழும் சிக்கல்களில் மொழிபெயர்ப்பதா ஒலிபெயர்ப்பதா என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த விஷயத்தில் தூயதமிழாளர்கள் குழப்பி விட்டவை பல. தமிழைப் பாதுகாக்கின்ற நோக்குதான் அவர்களிடம் இருக்கிறதே ஒழிய, அதன் வளர்ச்சி பற்றிய நோக்கு இல்லை. பயிருக்கு வேலியிட்டுப் பாதுகாத்தால் மட்டும் அது வளர்ந்துவிடுமா? அல்லது வளரும் பயிரை அப்படியே விட்டுவிட்டால் அது பாதுகாப்பாக இருந்துவிடுமா? பாதுகாப்பு வேறு வளர்ச்சி வேறு என்பது முதலில் தெளிவாக வேண்டும். முதலில் வளர்ச்சி, பிறகுதான் பாதுகாப்பு. வளர்ச்சியே இல்லாமல் பாதுகாப்பு எதற்கு? தமிழில் திராவிட இயக்கக் காலத்தில் உருவானவர்கள் எல்லாம் பாதுகாவலர்கள் தான். சான்றாக முத்தமிழ்க் “காவலர்” போன்ற அடைமொழிகளைப் பார்த்தாலே தெரியும்.
நடைமுறையில் புழங்கிவரும் பல சொற்களை அப்படியே தமிழில் ஏற்றுக்கொள்ளலாம். அதிகமாகப் புழங்காத சொற்களைத் தமிழ்ப்படுத்துவது போதுமானது. சான்றாக, பம்பு (pump) என்ற சொல்லை எதற்குக் கஷ்டப்பட்டு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கவேண்டும்? அதற்கு இவர் ஒன்று சொல்ல, அவர் ஒன்றுசொல்ல, நேரான சொல் கிடைப்பதே இல்லை. சிமெண்டு, பட்ஜெட் போன்ற சொற்களை ஒலிபெயர்த்தால் போதும். மொழிபெயர்ப்பு தேவையில்லை. தொடக்கத்தில் இருந்தே எந்தமாதிரிச் சொற்களை ஒலிபெயர்க்கலாம், எவற்றை மொழிபெயர்க்கலாம், எவற்றுக்கு மட்டும் கலைச்சொற்கள் தேவை என்ற தெளிவு இருந்திருந்தால் இன்று தமிழை எவ்வளவோ வளப்படுத்தி இருக்கலாம்.
சிலர் எந்தச் சொல்லையும் உருவாக்கிப் பயன்படுத்தினால் காலப்போக்கில் அது நின்றுவிடும், கொஞ்சம் காத்திருக்கவேண்டும் என்பார்கள். உதாரணமாக ‘பஸ்’ என்ற சொல்லுக்குப் ‘பேருந்து’ என்ற மொழிபெயர்ப்பு வந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டாயிற்று. ஆனாலும் நடைமுறையில், பேச்சுவழக்கில் இன்றும் பஸ் என்ற சொல்தான் புழங்குகிறதே ஒழிய பேருந்து என்ற சொல் பயன்பாட்டுக்கு வரவே இல்லை. ஆகவே இம்மாதிரி முயற்சிகளை வீண் என்றுதான் சொல்லவேண்டும்.


ராபர்ட் கால்டுவெல்

robert 2தமிழ்மொழி செம்மொழி என இன்று அதைப் பற்றி நன்கு அறியாதவராலும் சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம், பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு அளித்த அங்கீகாரம். அதற்குப் பிறகு அநேகமாக முக்கிய திராவிட மொழிகள் அனைத்தும் செம்மொழி அந்தஸ்தினை அரசு அங்கீகாரத்தினால் பெற்றுவிட்டன.

ஒரு மொழி செம்மொழி அல்லது உயர்தனிமொழி என்ற அந்தஸ்தினை அரசு அங்கீகாரத்தினால் மட்டும் பெற இயலாது. அவ்வாறு பெறுவது சில அரசியல், பொருளியல் காரணங்களுக்காக; ஓட்டு வாங்குவதற்காக, செம்மொழிகளுக்கென அளிக்கப்படும் நிதிக்கொடைகளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சி என்றே கொள்ளத்தகும். 1902ஆம் ஆண்டில் பரிதிமாற் கலைஞர் தமிழை உயர்தனிச் செம்மொழி என்று யாவரும் உணரவேண்டும் என்றாரே, அதுதான் உண்மையான அங்கீகாரம். அதற்கு முன்பாகவே தமிழின் பெருமையை-சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது அது என்று-நிலை நாட்டினாரே கால்டுவெல், அதுதான் உண்மையான அங்கீகாரம்.

ஒரு மொழி உயர்தனிச் செம்மொழி என்பது அதன் பெருமையை உணர்ந்த அறிஞர்களால் வெளிப்படுத்தப்படுவது. அதன் பண்பை அறிந்த அம்மொழியினரால் முதலில் உணரப்பட்டு, பிறகு உலகினர் பலராலும் ஏற்கப்படுவது. அது ஏதோ சாதிச்சான்றிதழ் போல அரசு முத்திரை குத்திக் கொடுக்கும் சான்றிதழ் அல்ல. அப்படி ஒரு சான்றிதழைப் பெறுவது நமக்கு கௌரவமும் அல்ல. பழங்காலத்திலிருந்தே இவ்விதமாகப் பெருமை உணரப்பட்ட செம்மொழிகள்தான் ஹீப்ரூ, லத்தீன், கிரேக்கம், பாரசீகம், சீனம், அராபியம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள். கால்டுவெல்லின் பணி, தமிழ் இவற்றில் எதற்கும் எவ்விதத்திலும் குறைந்த மொழியல்ல என்பதை நிறுவிச் செம்மொழிகள் வரிசையில் அதைச் சேர்த்தது.

இன்று உலகில் மொழிக்குடும்பங்கள் பல உள்ளன. இந்தோ ஐரோப்பிய (முன்னால் இந்தோஆரிய என்று வழங்கப்பட்டது), ஆப்பிரிக்க, யூராலிக்-ஆல்டாய்க், சீன-திபேத்திய, திராவிட, தென்கிழக்காசிய, மலாய்-போலினீசிய, பப்புவன், ஆஸ்திரேலிய, அமெரிக்க இந்திய, பாஸ்கு எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். நம் வடநாட்டு (ஆறிய) அறிஞர்களுக்கு எல்லாமே சமஸ்கிருதத்திலி ருந்து பிறந்தவை என்று சொல்லிவிட்டால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு, தமிழ் மறுமலர்ச்சி நிகழ்ந்த நூற்றாண்டு. இதன் முதல் பாதியில் மேற்கத்தியச் சிந்தனைகளின் பரவல் நிகழ்ந்தது, இரண்டாம் பாதியில் திராவிட நாகரிகம் என்ற கொள்கை தோன்றியது. இவையிரண்டின் விளைவு, இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ்த்தேசிய இயக்கம்.

ஒரு மொழியின் மறுமலர்ச்சி என்பது அதற்குரிய இனத்தின் அடையாளத்தை நினைவூட்டுகிறது. இறுதியாக அதன் பண்பாட்டுப் பாரம்பரியத்தை அந்த தேசிய இன விடுதலைக்குரிய தேவையாக மாற்றுகிறது. ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டில் உருவான மறுமலர்ச்சி, தேசிய அரசுகள் எழுவதற்கு வழிகோலியது. தமிழர்களைப் பொறுத்தவரை மிக நீண்ட வரலாறும் பாரம்பரியமும் இலக்கியமும் உடையவர்கள். ஆனால் அவற்றை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்தவர்கள். தங்கள் இன அடையாளத்தையும், கடந்தகால வரலாற்றையும் அரசியலையும் அறிவ தற்குத் தமிழ் மறுமலர்ச்சி காரணமாயிற்று. ஆங்கிலக் கல்வியும், வீரமாமுனிவர் தொடங்கி, கால்டுவெல், ஜி. யூ. போப் வரை கிறித்துவச் சமயப் பணியாளர்களின் மொழிப் பணியும் இதற்குத் துணைபுரிந்தன. தமிழ் நாகரிகத்தின் பெருமை, முதன்முதலாக ராபர்ட் ப்ரூஸ் ஃபுட் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளில் தெரிய வந்தது. அதற்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களை சி. வை. தாமோதரம் பிள்ளை, உ. வே. சாமிநாதய்யர் போன்றோர் வெளிப்படுத்தினர்.

தமிழ் நாகரிகமும் மொழியும் ஆரியச் சார்பற்றவை என்ற உணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஏற்பட்டது. இதற்குக் காரணமாக அமைந்தவர்களில் ராபர்ட் கால்டுவெல், ராமலிங்க அடிகள், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, தண்டபாணி சுவாமிகள் போன்றோர் குறிப்பிட வேண்டியவர்கள்.

robert 3ராபர்ட் கால்டுவெல் (மே 7, 1814 – 28 ஆகஸ்டு 1891) அயர்லாந்தில் கிளாடியில் ஸ்காட்லாந்தியக் குடும்பத்தினர்க்குப் பிறந்தார். இளமையிலேயே லண்டன் மிஷனரி சொசைட்டியில் சேர்ந்தார். அது அவரை கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற அனுப்பியது. அங்கு அவர் ஒப்பியல் மொழியியலிலும் இறையியலிலும் சிறந்த தேர்ச்சி பெற்றார். பன்மொழிப்புலமை அவருடைய ஒப்பியலாய்வுக்கு உதவியது. ஆங்கிலம் தமிழ் மட்டுமன்றி, கிரேக்கம், ஹீப்ரூ, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஜெர்மன், ஆகிய மொழிகளில் தேர்ச்சியுள்ளவர். பதினெட்டு மொழிகள் அறிந்தவர் என்று சிலர் பாராட்டியிருக்கிறார்கள்.

24 வயதில் சென்னைக்கு வந்தார். பிறகு எஸ். பி. ஜி. என்ற சபையில் சேர்ந்து திருநெல்வேலிப் பிரிவின் பேராயராகப் பணி புரிந்தார்.

robertதிராவிட மொழிகளைத் தனி இனம் என்று நிறுவிய கால்டு வெல்லின் பணிக்கு ஈடு இணையில்லை. வேறெந்த ஐரோப்பியரின் தமிழ்ப்பணியையும் இதற்கு ஈடு சொல்ல முடியாது. 1856இல் அவரது ஒப்பிலக்கண நூல் வெளியிடப்பட்டது. நூறாண்டுகளுக்குப் பின் அவருடைய பணியின் சிறப்பை உணர்த்தும் வகையில் தமிழ்ப் பொழில் இதழ், 1958இல், இடையன்குடி (கால்டுவெல் வாழ்ந்த ஊர்) தான் தமிழகத்தின் திருப்பதி, அதற்குத் தமிழர்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் (யாத்திரை) சென்று வரவேண்டும் என்று உணர்ச்சிபூர்வமான செய்தியொன்றை வெளியிட்டது. கால்டுவெல், ஒப்பிலக்கணத்தை வெளியிட்டது மட்டுமல்ல, அதன் பின்னணியிலிருக்கும் தமிழ்ப் பண்பாட்டின் பெருமையையும் நன்கறிந்தவர். “தான் பிறரால் பெறுவதை விட அதிக வெளிச்சத்தைப் பிறருக்கு அளிக்கும் மொழி தமிழ்” என்று அவர் பாராட்டியிருக்கிறார்.

கால்டுவெல்லின் நூல் (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) லண்டனில் வெளியிடப்பட்டபோது உடனே விற்றுத் தீர்ந்துவிட்டது. உடனே இரண்டாம் பதிப்பு வெளியாயிற்று. இதற்காக அவருக்கு 1866இல் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தினால் LL.D பட்டம் அளிக்கப்பட்டது. பிறகு டர்ஹாம் பல்கலைக்கழகம் இவருடைய திருச்சபைப் பணிக்கென D.D. பட்டமும் அளித்தது. கால்டுவெல்லின் நூல், அவரது வாழ்நாளிலேயே பல பதிப்புகளைக் கண்டது. பின்வந்த பதிப்புகளில் அவர் சில முக்கியக் கருத்துகளைச் சேர்க்கவும் செய்தார். சான்றாக, கொரமாண்டல், மலபார் போன்ற சொற்களுக்கு விளக்கங்கள் பின்னர்ச் சேர்க்கப்பட்டவை.

அவர் நூல் ஏறத்தாழ 600 பக்கங்களுக்கு மேல் கொண்டது. நூலின் தொடக்கப்பகுதியில் திராவிட என்ற சொல்லை விளக்குவதோடு செம்மை பெற்ற மொழிகள், செம்மைபெறா மொழி களுக்கான வேறுபாடுகளையும் அவர் விளக்குகிறார். இப்பகுதியில் திராவிட இலக்கியம் பற்றிய விவரங்களும் உள்ளன. இரண்டாவது பகுதியை நாம் ஏழு பிரிவுகளாக நோக்கலாம். ஒலிகள், வேர்ச்சொற்கள், பெயர்ச்சொல், எண்ணுச் சொற்கள், இடப்பெயர்கள், வினைச் சொல், அருஞ்சொல் உறவுகள் ஆகியவை அவை.

இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வில்லை என்றாலும், கவிதை, தத்துவம், சட்டம், கணிதம், கட்டடக்கலை இசை, நாடகம் போன்றவற்றில் அவர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள் என்று பாராட்டுகிறார் கால்டுவெல். அதனால் அவர்கள் தத்தம் மொழிகளில் சிறந்த இலக்கணங்களைப் படைத்ததில் வியப்பில்லை. ஆனால் பலமொழிகள் கொண்ட இந்திய நாட்டில் அவர்கள் ஏனோ ஒப்பியல் துறையில் ஈடுபடவில்லை. இதற்கு சமஸ்கிருதமே ஆதி மொழி, பிற எல்லாம் அவற்றிலிருந்து பிறந்தவை என்று ஒருதலையாக அவர்கள் முடிவுகட்டிவிட்டதே காரணம்.

ஆனால் திராவிட மொழியினம் என்ற கருத்தோ, திராவிடம் என்ற சொல்லோ அவர் புதிதாகக் கண்டுபிடித்ததன்று. அவருக்கு முன்னரே சென்னை செயின்ட் ஜியார்ஜ் கோட்டைக் கல்லூரியிலும், சென்னை இலக்கியக் கழகத்திலும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவிட்டன. அதற்கும் முன்னால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நேபாளத்தில் வாழ்ந்த ஹாட்ஜ்சன் என்பவர், தென்னிந்திய மொழிகளில் பலசொற்களைத் தொகுத்து வெளியிட்டார். அவற்றில் ஆரியமொழியினத் தொடர்பற்றவைகளை திராவிட என்ற சொல்லால் குறிப்பிட்டிருந்தார். திராவிட என்ற சொல்லை உருவாக்கியவரும் அவர்தான். அதற்குப் பிறகு குறிப்பாக எஃப். டபிள்யூ. எல்லிஸ் (அப்போதைய சென்னைக் கலெக்டர்) என்பாரின் பணியைக் கூறவேண்டும். திராவிடம் என்ற சொல்லையும் திராவிடக் குடும்பம் என்ற சொல்லையும் அவர் ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தார். ஆனால் அவர் ஒப்பிலக்கணப் பணியில் ஈடுபடவில்லை.

ராஸ்மஸ் கிறிஸ்தியன் ராஸ்க் என்பவரும் முன்னரே தென்னிந்திய மொழிகளை இந்தோ ஆரிய இன மொழிகளோடு தொடர்புபடுத்த முடியாது என்று கூறியிருந்தார். இதேபோல், பம்பாயில் டாக்டர் ஸ்டீவன்சன் என்பவரும் பம்பாய் ஏஷியாடிக் சொசைட்டி பத்திரிகையில் சில கட்டுரைகளில், வடநாட்டு மொழிகளில் காணப்படும் சொற்கள் பல தென்னிந்திய மொழிகளுடன் மட்டுமே தொடர்புறுத்தக்கூடியவை என்ற தகவலை வெளியிட்டிருந்தார். அவருடைய பணிகள், தென்னிந்திய மொழிகள் தனி இனம் என்ற கருத்துக்கு வருவதற்குப் பின்வந்த அறிஞர்களுக்கு உதவியாக இருந்தன.

கால்டுவெல் முக்கியமாகத் தமது நூலில் வலியுறுத்திய கருத்துகள்-

1. தென்னிந்திய மொழிகள் தமக்குள் உறவுகொண்டவை.

2. அவை சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை அல்ல.

3. வேறெந்த ஆரியஇன மொழியுடனும் தொடர்புடையவை அல்ல.

4. அவை சித்திய மொழியினத்தோடு குறிப்பாக ஃபின்னிஷ் போன்ற மொழிகளோடு தொடர்பு கொண்டவையாக இருக்கலாம்.

5. தென்னிந்திய மொழிச் சொற்கள் பல வடநாட்டு மொழிகளில் காணப்படுகின்றன.

6. திராவிட மொழிக்குடும்பத்தில் பன்னிரண்டு மொழிகள் உள்ளன. அவற்றில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு என்ற ஆறு மட்டுமே பண்பட்ட மொழிகள். தோடா, கோட்டா, கோண்டு (Gond), கோண்டு (Khond). ஒராவோன், ராஜ்மஹல் இவை பண்படா மொழிகள். (இன்று ஆஃப்கானிஸ்தானத்தில் வழங்கும் பிராஹுயி மொழி பின்னர்தான் அறியவந்து சேர்க்கப்பட்டது.)

7. பண்பட்ட மொழிகளில் செவ்வியல் மொழியாக இருப்பது தமிழே. அது மட்டுமே இன்று சமஸ்கிருதத்தை விலக்கித் தனியாக நிற்கக்கூடிய மொழி.

மேலும் பேச்சுமொழியாக உள்ள தமிழே, அதிகமாக சமஸ்கிருதச் சொற்கள் கலவாமையால், பழந்தமிழ் மொழியை ஒத்துள்ளது என்கிறார். அவர் கையாண்ட முறையியலை ஒருவாறு இப்படிக் கூறலாம்:

1. திராவிட, ஆரிய மொழிக்குடும்பங்களின் வரலாற்றுப் பழமையைத் தேடுதல்.

2. திராவிட மொழிகள் தம் காலத்திலும் பேசப்பட்ட இடங்களைக் கண்டறிதல்.

3. அவற்றின் இலக்கியப் பழமையையும் மரபையும் வரலாற்றையும் தேடியறிதல்.

4. அவை தம் மூலமொழி மரங்களிலிருந்து எப்போது கிளைகளாயின என்பதைக் கண்டறிதல்.

5. தத்தம் தாய்மொழிகளுக்கு எந்த அளவுக்குக் கடன்பட்டுள்ளன என்பதை அளவிடுதல்.

6. அடிப்படை மொழியிலிருந்து அவை கடன்பெற்றுள்ளதற்கு மேலாக, அவற்றின் தனிச்சிறப்புகள் எவை எனக் கண்டறிதல்.

7. அவற்றின் இலக்கண அமைப்புகள், எல்லைகள், ஓரினமாதல்கள், வேற்றினமாதல்கள், ஏற்புகள், தொகுத்தல்கள், பண்பாட்டு மயமாக்கல்கள் போன்றவற்றைக் கண்டறிதல்.

8. அவை தனியாகப் பிரிந்தபின் ஏற்பட்ட இலக்கியங்களைக் குறிப்பாகச் சொல் தொகுப்புகளுக்கென நோக்குதல். இவற்றுடன் கால்டுவெல், மரபுத்தொடர்கள், பிற சொற்கள், யாப்பு, தொடர் அமைப்புகள், கல்வெட்டு வடிவங்கள் போன்றவற்றையும் நாடினார். இவற்றின் வாயிலாகத்தான் தமிழுக்கெனத் தனிச்சிறப்புள்ள அடையாளம், வரலாறு, பழமை, தூய்மை, தனித்தன்மை உண்டு என்ற முடிவுக்கும் அவர் வந்தார். மேலும், பழமை, சீர்மை, தெளிவு, கட்டுப்பாடு, மாசின்மை, இலட்சியத் தன்மை, உலகளாவிய தன்மை, பகுத்தறிவுநோக்கு, ஒழுங்கு, மானிடநேயத்தன்மை ஆகியவை கொண்டிருப்பதால் தமிழ் உயர்தனிச் செம்மொழி எனப்படுவதற்குத் தகுதி வாய்ந்தது என்கிறார்.

அவருக்குக் கிடைக்காத தமிழ் நூல்கள் பல. சங்க இலக்கியங்களை அவர் படித்திருப்பார் எனத் தோன்றவில்லை. அவர் ஒப்பிலக்கண நூலை வெளியிட்ட பின்னரே அவை பதிப்பிக்கப்பட்டன. தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரை அவர் காலத்தில் வெளி வந்திருந்தாலும் அவர் ஆழ்ந்து தொல்காப்பியம் முழுமையையும் படித்திருப்பது இயலாதென்றே தோன்றுகிறது. இவை போன்ற நூல்களையெல்லாம் அவர் கற்றிருந்தால் அவரது ஆய்வு இன் னும் செழுமைப்பட்டிருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். அவர் காலத்துப் பல ஐரோப்பியர்களைப் போல அவர் நன்னூலையே தமிழ் இலக்கணத்துக்குப் பிரமாணமாகக் கொண்டிருந்தால் அதில் வியப்பில்லை.tamilதிராவிட என்ற சொல் தமிழின் சிதைந்த வடிவம் என்று கூறும் கால்டுவெல், எங்குமே அந்தச் சொல்லை ஒரு மக்களினத்தைக் குறிப்பதாகப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு மொழியினத்தைக் குறிப்பதற்காக மட்டுமே அதை அவர் ஆளுகின்றார். (இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் கால்டுவெல் நன்றாகவே அறிந்திருந்தார். மக்களினம் வேறு, மொழியினம் வேறு. இந்தோஆரிய மொழியினம் ஒன்று என்பதனால் இங்கிலாந்து-ஸ்பெயின் முதல் இந்தியாவரை ஒரே இன மக்கள் என்பதோ, ஒரே தேசம் என்பதோ பொருந்தாத ஒன்று. சீன மொழியினம் ஒன்று என்பதற்காக, மஞ்சூரியவைச் சேர்ந்தவனும், மாண்டரின் மொழி பேசும் சீனனும், திபேத்தியனும், ஜப்பானியனும், நாகாலாந்துக்காரனும் ஒரே நாடாகி விடுவார்களா? இது திராவிட என்ற சொல்லை இன்று கையாளுபவர்கள் புரிந்து கொள்ளவேண்டிய முக்கியக் கருத்து.)

அவரது ஒப்பிலக்கண நூலைச் சாடுபவர்களும் இருக்கிறார்கள். இந்தியத் திருநாட்டின் வடநாட்டு திராவிட வெறுப்பாளர்கள் மட்டுமல்ல, சில வரலாற்று ஆய்வாளர்களும் அந்தக்காரியத்தைச் செய்கிறார்கள். சான்றாக, யூஜீன் எஃப். இர்ஷிக் சொல்கிறார்: “தமிழின் பழமையையும், தூய்மையையும் பேசுபவர்களுக்கு சமஸ்கிருதத்திற்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதத்தை அது அளித்தது.” வடநாட்டுப் போலி ஆய்வாளர்களுக்கோ, அயல்நாட்டு ஆய்வாளர்கள்தான் தமிழர்களை இந்தியக் கலாச்சாரத்திலிருந்து தனிமைப் படுத்திவிட்டார்கள் என்ற அபிப்பிராயம்.

இவற்றுடன் அவர் அகழ்வாராய்ச்சித் துறையிலும் ஈடுபட்டிருந்தார்; தென்னிந்திய மொழிகளைப் பற்றிய செய்திகள் கொண்ட சமஸ்கிருதக் கையெழுத்துப்படிகளையும் வெளிக்கொணர்ந்தார். கி.மு. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாலமோனின் ஆட்சியிலேயே துகி (தோகை) போன்ற தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பதையும், வேதங்களிலே இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்டி, ஆரியர்களின் வருகைக்கு முற்பட்டது திராவிட நாகரிகம், அது இந்தியா முழுவதும் பரவியிருந்தது (பிராஹுயி மொழியும் பிற பண்படா திராவிட மொழிகளும் இதற்குச் சான்று) என்பவற்றை நிரூபிக்கிறார். அகழ்வாராய்ச்சித் துறையில் நாட்டம் இருந்ததன் காரணமாகவே அவர் திருநெல் வேலிச் சரித்திரம் என்ற நூலை எழுத முடிந்தது. மேற்கண்ட இரு நூல்களைத் தவிர சமயத் தொடர்பான பதினான்கு நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதியுள்ளார். (அவற்றில் வேடிக்கையான ஒரு நூல் குடுமி பற்றிய நோக்குகள்-Observations on Kudumi என்பது என்று நான் நினைக்கிறேன்.)robert 62010 மே 7ஆம் நாள் அவருக்கு (ஐந்து ரூபாய்) அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 2011 பிப்ரவரியில் இடையன்குடியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதில் அவருடைய படமும் திறக்கப்பட்டது. அதற்குமுன்னரே 1968இல் உலகத் தமிழ் மாநாட்டின்போது சென்னைக் கடற்கரையில் அவருக்குச் சிலை திறக்கப்பட்டது. சென்னையில் ஒருமுறை வரலாற்றாசிரியர் எம். எஸ். எஸ். பாண்டியன், “தென்னிந்தியாவில் கிறித்துவத்திற்கும், தென்னிந்தியப் பண்பாட்டு விழிப் புணர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கும் கால்டுவெல்லின் பணிக்குக் கடந்த இருநூறு ஆண்டுகளில் ஈடு இணையில்லை” என்று பாராட்டினார். இந்து நாளிதழும், ஏழை பங்காளர் என்றும், முன்னோடிச் சீர்திருத்தவாதி என்றும் அவரைப் பாராட்டியிருக்கிறது (2007 நவம்பர் 6 இதழ்).


ஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்

ஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்

இக்காலத்தில் பன்னாட்டுத் தொடர்பு மிகுதியாகி விட்டது. பன் னாட்டுச் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. இந்தியாவிலேயே பல மொழிகள் பேசப்படுகின்றன. அந்தந்த கலாச்சாரத்தைச் சேர்ந்த மனிதர்கள், இடங்கள் போன்றவற்றின் பெயர்கள் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன. ஆனால் அப்பெயர்களைச் சரிவர உச்சரிப்பதில் எவரும் அக்கறை காட்டுவதில்லை. சரிவர ஒலிபெயர்ப்புச் செய்வதில்லை. அதிலும், தமிழில் வடநாட்டு மொழிகளில் உள்ள சில ஒலிகள் இல்லாதபோது, உச்சரிப்பும் தவறாகிறது. மேலும் பெரும் பாலான தமிழ் நாட்டவர் ஹிந்தி போன்ற மொழிகளைக் கற்றுக் கொள்வதும் இல்லை.

சரி, தமிழில் நாம் தவறாக உச்சரித்தால்தான் என்ன? வட நாட்டவரும் நம் பெயர்களைத் தவறாகத் தானே உச்சரிக்கிறார் கள்? இப்படிச் சிலர் கேட்கிறார்கள். இதற்கு இரண்டு விடைகள் சொல்ல முடியும். ஒன்று, தமிழ் நாட்டைத் தவிரப் பிற மாநிலங்களில், வடமொழி அட்சரங்கள் அப்படியே உள்ளன. அதனால் அவர்கள் சரியானபடி உச்சரிக்க முடிகிறது. இன்னொன்று, அவர்கள் தமிழ்ப் பெயர்களைத் தவறாக உச்சரித்தால்

நாமும் அப்படியே தவறாக உச்சரிக்க வேண்டுமா என்ன?

வடநாட்டு மொழிகள் பலவற்றில் சொற்கள் அகரத்தில் (குறில்) முடியும் தன்மை படைத்தவை. அவற்றைத் தமிழ்ப்படுத்தும்போது அவற்றை ‘ஆகாரமாக்குதல்’ தவறு. உதாரணமாக ‘பரத’ என்பது வடநாட்டுச்சொல். இதை பரதன் என்று தமிழாக்குவது மரபே ஒழிய ‘பரதா’ என்று நீட்டக்கூடாது. ‘ராம’ என்ற சொல்லை இராமன் என்று ஆக்குவதே தமிழ் மரபு. ‘ராமா’ என்பது ஆங்கிலத் தாக்கத்தினால் விளைந்த பிழை. அதேபோல ‘பரத’ என்பதை ‘பரத்’ என்று ஆக்குவதும் இந்திமொழியை அரைகுறையாகக் கற்றவர்கள் கடைசி அகரத்தைவிட்டுப் படித்ததால் ஏற்பட்ட பிழையே. ஆனால் இக்காலத்தில் இவை வழுவமைதிகளாக ஏற்கப்பட்டுப் பிறகு ஃபேஷனாகவும் மாறிவிட்டன. (உதாரணமாக ரமேச என்ற வடசொல் ‘ரமேசன்’ என வருவது மாறி ரமேஷ் ஆகிவிட்டது. மகேச > மகேசன் என வரவேண்டியது மகேஷ் ஆகிவிட்டது. ரமேச, மகேச என அகர ஈறு கொண்டவையே அசலான வட சொற்கள். இதுபோலவே ‘சங்கர’ என்ற சொல்லும் தமிழில் ‘சங்கரன்’ என்றாக வேண்டும். ஆனால் ‘சங்கர்’ (‘ஷங்கர்’ என்பது விபரீதம்!) என வழக்கில்வந்த வடிவத்தையும் நாம் இன்று ஏற்கிறோம்).

அஃறிணை, நபும்சகத் திணைச் சொற்களெனில் அகர ஈற்று  வடமொழிச் சொற்களை ‘ம்’ சேர்த்து ஆக்கவேண்டும். உதாரண மாக ‘சாகர’ என்பதை ‘சாகரம்’ஆக்கவேண்டும். ‘யோக’ என்பதை யோகம் என்று ஆக்கவேண்டுமே ஒழிய ‘யோகா’ அல்ல. ‘விருக்ஷ’ என்பதை ‘விருட்சம்’ ஆக்கவேண்டும். ஆகாரத்திலே(நெடில்) முடியும் வடசொற்கள் எனில் அவற்றை ‘ஐ’ கொண்டு தமிழில் முடிக்கவேண்டும். உதாரணமாக கலா> கலை, சிலா> சிலை, கதா> கதை என்பதுபோல. ‘பரீக்ஷா’ என்பது தமிழில் பரீட்சை என ஆகும். சீவகசிந்தாமணி எழுதிய திருத்தக்க தேவர் விமலை (விமலா), பதுமை (பத்மா), விசயை (விஜயா) என்றெல்லாம் அழகாக ஒலிபெயர்ப்புச் செய்தார். இன்று யாரும் அவரைப் பின்பற்றுவதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.

வங்காள மொழிக்கென பிரத்தியேகமான சாதிச்சொற்கள் உண்டு. பிராமணரைக் குறிக்கும் ‘பந்த்யோபாத்யாய’ என்பது ஆங்கிலேயர்களால் ‘பானர்ஜி’ ஆகியது. ‘சட்டோபாத்யாய’ என்னும் சொல் ‘சட்டர்ஜி’ ஆகியது. ‘முகோபாத்யாய’ என்னும் சொல் ‘முகர்ஜி’ ஆகியது. ‘கங்கோபாத்யாய’ என்னும் பெயர் ‘கங்கூலி’ ஆகியது. சரத்சந்திர சட்டோபாத்யாய என்னும் பெயரையே நாம் சரத்சந்திர சட்டர்ஜி என்கிறோம். மேலும் வங்காள மொழி உச்சரிப்பும் எழுத்தமைப்புகளும் விசித்திரமானவை. Ray என்று ஆங்கிலத்தில் எழுதுவார்கள். அதை ‘ராய்’ என்று படிக்கவேண்டுமே தவிர ‘ரே’ ஆக்கக்கூடாது (உதார ணமாக சத்யஜித் ராய் தானே தவிர? ரே அல்ல). மிகப் பிரபல மான ‘தாகூர்’ என்ற சொல்லும்கூட வடநாட்டு ‘டாகுர்’(takur) என்ற சொல்லின் ஆங்கில எழுத்துக் கூட்டலால் ஏற்பட்ட பிழையான உச்சரிப்பே. எனினும் வழக்குக்கு வந்துவிட்டமை கருதி இச்சொல் அப்படியே ஆளப்படுகிறது. Sen என்னும் சொல்லை ‘சென்’ எனத் தமிழில் எழுதுவதும் தவறு. ‘சேன’ என்னும் சொல்தான் ‘Sen’ என வங்காளியில் எழுதப்படுகிறது.  ஆகவே KESAB SEN என்றால் கேசவ சேன அல்லது கேசவசேனர் எனவே பெயர்க்க வேண்டும.;

பெரும்பாலும் வங்காள மொழியில்

B-யில் தொடங்கும் சொற்கள் தமிழில் வகரத்திலேயே வரும். BASU என்பதை தமிழில் ‘வசு’ என்றாக்கவேண்டும். ‘போஸ்’ அல்ல. Jagadish Chandra Bose > ஜகதீச சந்திர வசு. ‘பங்காள’ என்னும் அவர்களது சொல் லைத்தான் (ஆங்கிலத்தில் ‘பாங்ளா’ எனப் பிழையாக உச்சரிக்கப் படுவது) – நாம் ‘வங்காளம்’ என நமது உச்சரிப்புப்படி ஆக்குகிறோம். வங்காளியில் பிரமீளா என்ற சொல் தான் ரோமேலா எனத் தவறாக உச்சரிக்கப்படுகிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

மறுபடியும் வடமொழிக்கே சற்று வந்து முடிப்போம். Vajpayi என்ற சொல் ‘வாஜபேயி’ என்று உச்சரிக்கப்படவேண்டுமே தவிர வாஜ்பாய் அல்ல. வாஜ பேயம் என்பது ஒரு யாகம். அதைச் செய்த பிராமணர்கள் வாஜபேயி எனப்பட்டனர். ‘பேயி’ என்றால் ஒரு மாதிரியாக இருக்கிறது என்று நாம் ‘பாய்’ ஆக்கி விட்டோம். ‘ஒரு மாதிரியாக இருக்கிறது’ என்பதற்காகவே தவறாக ஆக்கப்படும் சொற்கள் பல. உதாரணமாக Advani என்பதை ஆடவாணி என்று சொல்ல வேண்டும். ஆடவாநீ என்பது போல அது இருக்கிறது என்பதால் அத்வானி என ஆக்கி விட்டோம். இப்படி மொழியில் ஏற்படும் வேடிக்கைகளும் பல. எப்படியோ, பலர் தவறு செய்தாலும் என்வரையில் தவறாக உச்சரிக்கக் கூடாது என்றே நினைக்கிறேன். ஆனாலும் Spanish, German, French சொற்களை நூல்களில் எழுதும்போது பல சமயங் களில் தவறு நேர்ந்துவிடுகிறது. என்ன செய்வது? எல்லா மொழிகளையும் ஒருவர் கற்றுக்கொள்ள முடிவதில்லை.

ஆனால் இன்றைக்கு இணையம் இதற்கு நல்ல உதவி செய்கிறது. அதில் மிக எளிதாக ஒலிபெயர்ப்புச் செய்து கொள்ள முடியும். முடிந்தால் அம்மாதிரி உதவியைப் பெற்று சரியான ஒலிபெயர்ப்பைச் செய்வோம். வடமொழிச் சொற்களைத் தமிழில் பெயர்ப்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. அதையேனும் ஒழுங்காக இக்காலத்தினர் பின்பற்றினால் போதும். சற்றே நேரம் கிடைக்கும் போது பழைய கால ஆசிரியர்களுடைய நூல்களை வாசித்தால் இந்த மரபு எளிதில் வசமாகிவிடும்.

 


இதழ்களில் மொழிநடை

mozhi4
எந்த ஒரு பிரதி உருவாக்கத்திற்கும் மொழிதான் அடிப்படையாகிறது. இலக்கண விதிகளுக்கு உட்பட்டு எழுத்து உருப்பெறுகிறது. அது பல்வேறு வகையான பிரதிகளில் பலவித மாற்றங்களை அடைகிறது. அம்மாற்றங்களையும் புதுமையாக்கங்களையும் கண்டறிந்து ஒரு குறிப்பிட்ட பிரதியின் மொழிப்பொதுமைகளையும் சிறப்புத்தன்மைகளையும் வகைப்படுத்திக் காட்ட மொழியியல் அணுகுமுறை உதவுகிறது.
எந்தப் பிரதியிலும் மொழி அமைந்திருக்கும் ஒருவித ஒழுங்கான அமைப்பைத்தான் மொழிநடை என்கிறோம்.
ஒரு சொல்லையோ தொடரையோ வாக்கியத்தையோ ஆராயும்போது அது வெளிப்படும் சூழல், பின்னணி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டுதான் ஆராய முடியும். அப்போது அப்பிரதியின் கருப்பொருள் (தீம்) மொழிக்குத் தொடர்பு உடையதாகிறது.
ஒரு பத்திரிகை, தனது மொழியில், சொற்களில் செய்தியை ஒழுங்குபடுத்தி அமைக்கிறது. அதன் வாயிலாகத் தனது பார்வையை முன்வைக்கிறது. வாழ்க்கையைக் குறிப்பிட்ட கோணத்தில் அதன் வாயிலாக எடுத்துக் காட்டுகிறது. வாசகனிடமும் ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்துகிறது. இவையாவும் ஆராயப்பட வேண்டியவை. காரணம், செய்தித்தாள்கள் வெற்றிடத்தில் உருப் பெறுவதுமில்லை; பிறகு அதனை மக்கள் படிப்பதுமில்லை. சிறப்பாக, விளம்பரங்கள், குறிப்பிட்ட வகைமாதிரியான நுகர்வோரை மனத்தில்கொண்டு உருவாக்கப்படுகின்றன. விளம்பரங்கள் அளவுக்கு இலக்குப்படுத்தாவிட்டாலும், பதின்வயதினர், நடுத்தரவயது அலுவலகம் செல்வோர், கணிப்பொறியாளர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள் எனப் பல்வேறு தேவைகள் கொண்ட குறிப்பிட்ட வாசகர் குழுக்களை மனத்தில் கொண்டே இதழ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒரு பத்திரிகையின் பணி, வாழ்க்கை பற்றிய ஒரு புதிய ஆழ்ந்த உள்ளொளியை அல்லது தரிசனத்தை அளிப்பதல்ல. மேலோட்டமான ஒரு வாழ்க்கைப் பிரதிபலிப்பை அளிப்பதே. வாசகனுக்கு அசலான ஓர் அனுபவத்தை அளித்து அதை மனத்தில் வாழச் செய்வதும் அதன் பணியல்ல. அதாவது பத்திரிகையின் பணி, அக-யதார்த்தத்தைப் படியெடுப்பதல்ல. புற-யதார்த்தத்தை ஓரளவு சரிவர வெளிக்காட்டுவது. அதனால்தான் செய்திகளை எளிதாக மொழி பெயர்க்க முடிகிறது. அதேசமயம், தன் வெளியீட்டினை வாசகன் பகிர்ந்து கொள்ளப் பத்திரிகை தன் சொற்களையும் தொடர் அமைப்புகளையும் கவனத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அவற்றைத் தனது நோக்கத்திற்கு ஏற்றவாறு வளைக்கவும் வேண்டியிருக்கிறது.
இலக்கியக் கருவிகள் பற்றி நிறைய ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பது எளிது. அதுபோலப் பத்திரிகை நடைக்கான கருவிகளை நாம் இனம் கண்டு பயன்படுத்துவதில்லை. எனினும் கவிதையில் கையாளப்படும் கருவிகள்தான் உரைநடையிலும பயன்படுத்தப்படுகின்றன. கவிதைக்கும் பத்திரிகை உரைநடைக்கும் மொழிக்கருவிகளைக் கையாளுவதில் உள்ள வேறுபாடு முழுமையானதல்ல. அதாவது இருவித மொழிகளும் வேறானவை அல்ல. இவற்றிற்கிடையிலுள்ள வேறுபாடு ஒப்பியல் நிலையிலானது. அதாவது இலக்கியங்களில் ஒருவிதமாகவும், பத்திரிகை சார்ந்த உரைநடையில் சற்றே வேறுவிதமாகவும் மொழிக்கருவிகள் கையாளப்படுகின்றன என்பதே பொருள்.
இங்கு இதழ்கள் எவ்விதம் மொழியின் பல்வேறு மூலவளங்களைப் பயன்படுத்தித் தங்கள் வாசகர்களை உருப்படுத்தி, அவர்களை இலக்குப்படுத்தவும் செய்கின்றன என்பதைக் காண்போம். இதற்கு இதழ்கள் விளித்தல் (அட்ரஸ்), சுட்டற்சொற்கள் (டீயிக்சிஸ்), முன்யூகங்கள் (ப்ரிசப்போசிஷன்ஸ்) போன்ற மொழித்தன்மைகளைப் பயன்படுத்துகின்றன. எந்த அளவுக்கு ஒரு பத்திரிகை இவற்றைப் பயன்படுத்தி வெற்றியடைகிறது என்பது பத்திரிகை ஆசிரியர்களைப் பொறுத்திருக்கிறது. உதாரணமாகப் பழங்காலத்தில், பாரதியார், திரு.வி.க., வரதராஜுலு நாயுடு போன்றோர் தங்கள் மொழியைத் தனிச் சிறப்புடன் பயன்படுத்தினார்கள் என்பதும், அவர்களது மொழியை நுணுகி ஆராயும் நிலை தேவைப்படுகிறது என்பதும் அனைவர்க்கும் தெரியும்.
மொழியில் எவ்வித கவனத்தையும் வாசகன் செலுத்தாமல் இருக்கும் அளவிற்கு-அதாவது, மொழி சற்றும் வாசகனுக்கு இடைஞ்சலாக இல்லாமலிருக்கும் வண்ணம்-இன்றைய பத்திரிகைகள் மொழியைப் பயன்படுத்த முயலுகின்றன. அவற்றினுடைய கவனமான மொழித் தேர்ந்தெடுப்பை இது காட்டுகிறது. ஒரு திறந்த ஜன்னலைப்போலப் புறக்காட்சிகள் மிக எளிமையாகத் தெரியும் வண்ணம் அவை ஓர் இலகுவான வாக்கிய அமைப்புமுறையைத் தேர்ந்தெடுக்கின்றன. இம்மாதிரி வாசகர்களின் கவனத்தை ஈர்க்காத மொழி, பூச்சிய நிலை மொழி (zero level language) என்று அழைக்கப்படுகிறது. ஆயினும் பலசமயங்களில் பத்திரிகை மொழி வாசகனது ஆழ்மனப் பிரக்ஞையில் குறுக்கிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. எந்தப் பத்திரிகையும் பூச்சிய நிலை மொழியைப் பயன்படுத்துகிறது என்று மொழியியல்பு அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேசமயம், எல்லாப் பத்திரிகைகளும் மொழியை ஒரே மாதிரியாகக் கையாளுவது இல்லை. சில பத்திரிகைகள் பிறவற்றைவிட அதிகமான தொழில்நுட்பத்தைக் காட்டுகின்றன.
சில இதழ்களில் மொழி பூச்சிய நிலைக்கு நெருக்கமாக, அர்த்தம் பெருமளவு ஊடுருவக்கூடியதாக, கவர்ச்சி காட்டாததாக, அதிகமான உணர்வுப் பொருளையும் பொருள்மயக்கத்தையும் காட்டாததாக அமைகிறது. இவ்வகை மொழி கவிதையைவிடக் காட்சி ஊடகங்களுக்கு நெருக்கமானது. இதன் நோக்கம் உள்ளடக்கத்தில் அதிக கவனத்தைக் குவித்து, சொல்லுகின்ற விஷயத்தைப் பற்றி வாசகனைச் சிந்திக்கச் செய்வதாகும். இங்கு கவனம் நடை மீது செல்வதில்லை. தினமணி இதற்கு ஓரளவு நல்ல உதாரணம். தினமணி கருத்துச் சொற்களையும் அருவச் சொற்களையும் அதிகமாகப் பயன்படுத்துவதால் அதன் வாசகர்கள் அதிக கவனத்தோடு படிக்கவேண்டியதாகிறது. எளிய வாசகர்கள் கருத்து சார்ந்த உரைநடையைப் படிப்பதைச் சிரமமாகக் கருதுவதால் அதன் வாசகர் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது.
இன்னொரு வகையான பத்திரிகைகள், மொழியின் ஊடுருவ இயலாத் தன்மையையும் பொருள் உட்புக முடியாத் தன்மையையும் அறிந்தோ அறியாமலோ பயன்படுத்துகின்றன. அதனால் பொருள்மயக்கங்கள், சிலேடைகள், மையப் பொருளிலிருந்து வெளிச் சுழற்சிகொள்ளும் உணர்வுப் பெருக்கம் ஆகியன அவற்றின் நடையில் உருவாகின்றன. இம்மாதிரிப் பத்திரிகைகள், இலக்கியச் சிறுபத்திரிகைகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் மொழியமைப்புகள் காட்சி ஊடகங்களைவிடக் கவிதைக்கு நெருக்கமானவை.
இவ்விரண்டு நிலைகளுக்கும் இடையில் பிற பத்திரிகைகளின் மொழி அமைகிறது தினமலர், தினத்தந்தி ஆகியவற்றின் மொழி இதற்கு நல்ல உதாரணம்.
வாசகர்களை விளித்தல்
வாசகர்களைச் செய்தியின்பால் ஈர்க்க வேண்டும். இதற்குப் பயன்படும் மொழியமைப்புதான் வாசக விளி எனப்படுகிறது. வாசகர்களை விளிக்கப் பலவேறு வகையான உத்திகள் கையாளப்படுகின்றன. விளம்பரங்கள், நேரடி அழைப்பு முறையையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. விளம்பரங்களில் நீங்கள் என்னும் முன்னிலைச் சொல் மிகுதியாகப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இது நேரடியான அழைப்புக்கு ஓர் அறிகுறி.
நம்ப முடியாத விலை! ரூ.7990இல் ஆரோக்கியத்தை உங்கள் வீட்டிற்கு
எடுத்துச் செல்லுங்கள்! (எல்.ஜி. குளிர்சாதனப்பெட்டி விளம்பரம்)
கேள்விகளைப் பயன்படுத்துதல், முன்யூகங்களைப் பயன்படுத்துதல், ஆணைத் தொடர்களைப் பயன்படுத்துதல் (“போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!”) போன்றவை விளித்து உரைப்பதற்கு உதாரணங்கள்.
செய்தி சொல்வதிலும் விளித்தல் பயன்படுகிறது என்றாலும் சற்றே மறைவான முறையில் அது செயல்படுகிறது. மறைவாக இருப்பதற்குப் பலவித உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, ஒலிக்கோலங்களைப் பயன்படுத்துதல். எதுகை, மோனை, அளபெடை, இயைபு முதலிய தொடைகள் செய்யுளுக்குத் தேவை எனப் பழங்காலத்தினர் கருதினார்கள். இன்று பத்திரிகைகளில் அளபெடை தவிர ஏனைய தொடைகள் அனைத்தும் கையாளப்படுகின்றன. இவற்றுள்ளும் மோனைத் தொடையின் பயன்பாடு மிக அதிகம். எதுகை அதற்கு அடுத்த நிலையிலும, இயைபு குறைவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
எல்லாப் பத்திரிகைகளும் ஓரளவேனும் இவ் ஒலிக்கோலங்களைப் பயன்படுத்தினாலும், சில பத்திரிகைகள் இவற்றைக் கூடுதலாகப் பயன்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, தினமணி, தினத்தந்தி ஆகியவற்றைவிட, தினமலர் ஒலிக்கோலங்களை அதிகமாகப் பயன்படுத்துகிறது. பத்திரிகைகளால் மோனை விரும்பிப் பயன்படுத்ததப்படுகிறது என்பதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைத் தர இயலும். உதாரணமாக, தினத்தந்தி பத்திரிகையில், உள்பக்கச் செய்தித் தலைப்பு ஒன்று:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் / சங்கிலித் தொடர் அட்டூழியங்கள்
இங்கு மோனை மட்டுமல்ல, ஒரு செய்யுளடிக்குத் தேவையான இசைக்கோலமும் (சந்தமும்) கூடுதலாகப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின்
சங்கிலித் தொடரட் டூழியங்கள்
என்று மும்மூன்று சீர்கள் கொண்ட யாப்பாகவே அமைக்கலாம்.
நேற்று “மந்திரி”; இன்று “எந்திரி”
ஜெ.வின் அரசியல் திருவிளையாடல்
என்னும் செய்தியில், எதுகைக்காகவே கொச்சைச் சொல் கையாளப்படுகிறது.
பேச்சுவழக்கினைக் கைளாளுதலும் கவர்ச்சி நடையும்
பேச்சுவழக்குச் சொற்களைப் பல்வேறு நிலைகளில் பத்திரிகைகள் கையாளுகின்றன.
கோட்டையில் கேக் வழங்கி உற்சாகம்! வேறெதுக்கு? எல்லாம் மந்திரிகள்
மாற்றம்தான்!
இச்செய்தியில் வாசகர் விளிப்புடன், பேச்சுநடையும் பயன்படுத்தப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்களின் நடை, பொதுவாகப் பேச்சு வழக்கு நடை என்று வருணிக்கப்பட்டாலும், அதில் பல்வேறு நிலைகள் உள்ளன. சி.பா. ஆதித்தனாரின் கொள்கையை தினத்தந்தி அப்படியே கடைப்பிடித்தது. “பேச்சு வழக்குச் சொற்களைக் கொச்சை நீக்கி எழுதுக” என்பது ஆதித்தனாரின் கட்டளை. தினமணியின் கொள்கை, தரமான பொதுநடை (ஸ்டாண்டர்டு காமன் ஸ்டைல்) என்பதாக உள்ளது. தினமலரின் கொள்கை முற்றிலும் வித்தியாசமானது. கண்டிப்பாகக் கொச்சைச் சொற்களைப் புதிது புதிதாகக் கையாண்டே தீரவேண்டும் என்பது அதன் கொள்கை. தினமலரின் பிராபல்யத்துக்கு இது ஒரு முக்கியக் காரணம். உதாரணங்கள்-
அரசு டாக்டர் குண்டு போடுகிறார் – எம்.எல்.ஏ. லஞ்சம் கேட்டாராம்
கலெக்டர்கள் மாநாட்டில் ஜெ. ஆவேச சபதம்
கந்து வட்டியை ஒழிக்க அதிரடி
ஆர்.எம்.எஸ். அலுவலகங்களுக்கு வேட்டு
பவுனுக்கு ரூ.100க்கு மேல் எகிறியது! தங்கம் விலை கிடுகிடு உயர்வு!
அன்னிய மண்ணில் மாமூல் சொதப்பல் அபாரதோல்விக்கு இந்தியா அடித்தளம்
66 சதவிகிதம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கொடுத்தாச்சு
சாதாரணப் பேச்சுவழக்கு நடை என்பதற்கு அப்பாலும்போய், கொச்சைக் குறுமொழியை தினமலர் வழங்குவதற்கு மேற்கண்டவை நல்ல உதாரணங்கள். ஓரிரு தசாப்தங்களுக்கு முன்பு தினத்தந்தி மட்டுமே கொச்சைக்குறுமொழியைப் பயன்படுத்திவந்தது. உதாரணமாக, கத்தியால் குத்தினான் என்று அக்காலத்தில் தினத்தந்தி போடாது. சதக் சதக்கென்று குத்தினான் என்றுதான் செய்தி வெளியிடும். இதனை தினத்தந்தியே இன்று தாண்டிவந்துவிட்டபோதும், விடாமல் பயன்படுத்தும் நாளிதழ் தினமலர் ஒன்று மட்டுமே.
இதற்கும் மிஞ்சி, பேச்சுநடையைப் பயன்படுத்துகிறோம் என்னும் சாக்கில் ஆங்கிலச் சொற்களையும் கலந்து கவர்ச்சிகரமாகக் கையாளுவது தினமலரின் பாணி. உதாரணம்,
…… விடுதலை செய்வதுதான் வீரப்பன் ஸ்டைல்
…… ஒரு தேர்ந்த அரசியல்வாதி ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டிருக்கிறான் வீரப்பன்.
நாகப்பா தன் பொறுப்பில் இல்லை என்று சூப்பராக ஒரு அறிக்கையை காசெட்டில் அனுப்பிவிட்டு நாகப்பாவை போட்டுத் தள்ளிவிட்டு இருக்கிறான்.
வேறுவிதமான கவர்ச்சி முறைகளையும் தினமலர் கையாளுகிறது.
வரவேற்பில் தள்ளுமுள்ளு பல்டியடித்தார் எம்.எல்.ஏ.
தள்ளுமுள்ளு என்பது தில்லுமுல்லு என்ற சொல்லை நினைவுகூட்டவேண்டும் என்னும் நோக்கிலேயே புதுக் கொச்சைச் சொல்லாக தினமலரால் ஆக்கப்பட்டது. (இது இப்போது தடியடி என்பதுபோல, எல்லாத் தொலைக்காட்சிச் செய்திகளிலும் பொதுச்சொல்லாக ஏற்கப்பட்டுவிட்டது).
இன்னொரு உதாரணம்:
இதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஜெயலட்சுமியைச் சுற்றிவந்து ஐ லவ் யூ சொல்லிக் காதலித்தாராம் விஜயகுமார்.
இருமுறை எழுவாய் விஜயகுமார் வருவது இருக்கட்டும், இச்செய்தியை, விஜயகுமார் ஜெயலட்சுமியைக் காதலித்தாராம் என்று எளிதாகச் சொல்லிச் செல்லக்கூடாதா? அதிலும் காதலித்தாராம் என்பதிலுள்ள -ஆம் விகுதி அது இன்னொருவரிடமிருந்து பெறப்பட்ட கூற்று என்பதற்கும் மேலாகச், செய்தியின் உறுதியற்ற தன்மையை, வதந்தித்தன்மையைக் காட்டுகிறது.
இம்மாதிரி ஒரு செய்தியை, இம்மாதிரி ஒரு நடையில், ஆங்கிலப் பத்திரிகை எதிலாவது காணமுடியுமா? தமிழ்ப் பத்திரிகைகளின் தரத்தினை எந்த அளவு இந்த நாளிதழ் கீழிறக்கியுள்ளது என்பதற்கு ஓர் உதாரணம் இது.
சுட்டற்சொற்களைப் பயன்படுத்தலும் முன்னறிவும்
காலம், இடம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களையும் இடப்பெயர்களையும் சுட்டற்சொற்கள் (டீயிக்டிக்) என்கிறோம். இவை ஒரு செய்தியை அதன் சூழலோடு தொடர்புபடுத்துபவை. உதாரணமாக, தினத்தந்தி, அப்துல் கலாம் இன்று சென்னை வருகை எனச் செய்தி வெளியிட்டு, பிறகு முதன்மைப் பத்தியில் இன்று (சனிக்கிழமை) என விளக்கம் அளிக்கிறது. இம்மாதிரிச் சொற்கள் நமது முன்றிவைப் பயன்படுத்துவதற்குத் துணையாக அமைகின்றன என்பதற்குமேலாகச் செய்தி வெளியீட்டில் இவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை.
பல சமயங்களில் நாம் செய்திகளைப் படிக்கும்போது முன்பின் தொடர்ச்சி, சூழல், நமது முந்தைய அறிவு ஆகியவற்றை இணைத்தே செய்தியைப் புரிந்துகொள்கிறோம். இதனைப் பத்திரிகைகள் சரிவரக் கையாளவேண்டும். உதாரணமாக, தினத் தந்தியின் தலைப்புச் செய்தி:
பதவி ஏற்றபிறகு முதல்முறையாகச் சென்னை வருகை
அண்ணா பல்கலைக்கழக வெள்ளிவிழாவை
அப்துல் கலாம் தொடங்கிவைத்தார்
இங்கு பதவி ஏற்றபிறகு என்பதற்கு நாம் குடியரசுத்தலைவர் பதவி ஏற்றபிறகு என நமது முன்னறிவைப் பயன்படுத்திப் பொருள்கொள்கிறோம். சிலசமயங்களில் இத்தன்மையைப் பத்திரிகைகள் சரிவரப் பயன்படுத்தாமையால் தவறுகள் நேரிடுவதைக் காணலாம்.
இந்தியாவிலேயே காற்றில் மாசு குறைவாக உள்ள நகரம் சென்னை
அடுத்த தலைப்பு:
கான்பூருக்கு முதலிடம்
இச்செய்தியைப் படித்தபோது, மாசு குறைவாக உள்ள என்ற முந்திய வரித் தொடரை வைத்து, ‘கான்பூர் மாசு குறைவாக இருப்பதில் முதலிடம் வகிக்கிறது’ என்றுதான் செய்தியைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் முதல் தொடருக்கு இது முரண்படுகிறதே, என்ன செய்வது? அதனால், பெருநகரங்களில் சென்னையும் சிறுநகரங்களில் கான்பூரும் மாசு குறைவான இடங்கள் என்று ஒரு சமாதானம் எழுந்தது. ஆனால், உண்மையில் செய்தி, கான்பூரில் மாசு மிக அதிகமாக இருக்கிறது என்பதுதான். முன்னறிவைத் தொடர்புபடுத்தி வாசிக்கும்போது சரிவர செய்தித்தொடர்ச்சி அமையாமையால் ஏற்பட்ட பிழை இது.
மொழியியல் ரீதியாக நடையை ஆராய்தல்
நடைபற்றி ஆராயும் மொழியியல் அணுகுமுறைகளை நான்கு வகையாகப் பார்க்கலாம். மொழிநடையை ஆராய, பத்திரிகைகளில் காணப்படும்
சொற்பயன்பாட்டு நிலை
தொடரமைப்பு நிலை
எடுத்துக்கூறல் நிலை
வருணிப்பு நிலை
ஆகிய நான்கினையும் ஆராய வேண்டும். சொற்களை ஆராயும்போது, அவற்றை
முரண்சொற்கள்,
தேய்ந்துபோன உருவகச் சொற்கள்,
பன்முறை ஆளப்பெறும் சொற்கள்,
கதைப்பொருள் வெளிப்பாட்டுச் சொற்கள்,
கொச்சைச் சொற்கள்,
பிறமொழிச் சொற்கள்,
மரபுமீறிய சொற்கள்
என்றெல்லாம் பிரித்து ஆராயலாம். இதைத்தவிர வேறு பலவித முறைகள் உண்டு.
தொடரமைப்பை ஆராயும்போது, வாக்கியத்திலுள்ள
விலகல்கள், மாற்றங்கள், விடுபடல்கள், செறிவாக்கங்கள்
ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.
எடுத்துக்கூறல் என்னும்போது, செய்தி எந்தெந்தக் கூறுகளுக்கு அழுத்தம் தருகிறது என ஆராய்வதும், நோக்குநிலை ஆய்வும் முக்கியமானவை. மேற்கோள்கள் முதலியன எப்படி அமைந்துள்ளன என்பதும் இதன்பாற்படும். திரும்பத்திரும்ப வரும் கூறுகள் எவை, அவை என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பதையும் ஆராய வேண்டும்.
வருணிப்பை ஆராய நாம் பழைய அளவுகோல்களையே சற்று மாற்றிப் பயன் படுத்தலாம். வருணனைக்கூறுகளாக அமையும் உவமை, உருவகம், குறியீடு, தொன்மம், பிற அணிகள் ஆகியவற்றைப் பத்திரிகைகள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டலாம். இவற்றிலும் திரும்பத்திரும்ப வரும் வருணனைக் கூறுகள் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை.
மேற்கண்ட சொற்கள் பயன்பாட்டுநிலை, தொடரமைப்பு நிலை, வருணிப்பு நிலை, எடுத்துரைத்தல் நிலை என்னும் நான்கையும் பின்வரும் ஆய்வுமுறைகளுள் ஒன்றில் அமைத்துப் பார்க்கவேண்டும்.
அ. தொடர்நிலை மற்றும் வாய்பாட்டுநிலைத் தேர்வுகள் பற்றிய ஆய்வு (syntagmatic and paradigmatic choices)
ஆ. மொழியின் தனித்துவக் கூறுகள் பற்றி மட்டும் நோக்குகின்ற ஆய்வு (idiosyncratic features)
இ. இயல்புநிலையிலிருந்து ஏற்படும் விலகல்களை மட்டும் ஆராய்கின்ற ஆய்வு (deviations from the norms)
ஈ. தொடரைவிடப் பெரிய அமைப்புகளாக இயங்கும் சூழல் போன்றவற்றுடன் தொடர்பு கொள்வதான மொழியியல் கூறுகள் பற்றிய ஆய்வு.
இனி இவற்றைத் தனித்தனியே காண்போம். முதல் அணுகுமுறைக்குத் தேவையான அடிப்படைகள் பற்றிச் சற்றே விளக்கலாம். ஒரு வாக்கியத்தில் இருவித அமைப்கள் உள்ளன என்று மொழியியலாளர்கள் கூறுவார்கள்.
வாய்பாட்டுநிலை அமைப்பு (paradigmatic structure)
சொல்தேர்வில் செயல்படும் நிலை இது. ஒருவாக்கியத்தில் அமையக்கூடிய பலவிதமான சொற்கள்-அவற்றிற்குச் சமமாகப் பயன்படுத்தக்கூடிய வேறுசொற்கள்-ஏன் குறித்த சொற்களைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது பற்றியது இது.
தொடரியல் அமைப்பு (syntagmatic structure)
தேர்ந்தெடுத்த சொற்களை எந்த முறையில், வரிசையில், தொடராக அமைக்கப் போகிறோம் என்பது பற்றியது இது.
இவ்விரு அமைப்புமுறைகளையும் செய்திக்கதைகளுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும். ஒரு செய்திக்கதை என்பது ஒரு வாக்கியம் போன்றே, காலத்தொடர்ச் சியில் அமையும் ஓர் எடுத்துரைப்பு. ஆகவே அதன் வருணனை, சூழல் போன்ற அம்சங்கள் யாவும் வாய்பாட்டுநிலை அமைப்பில் வருவன. அதேபோலச் சம்பவங்களும் வாய்பாட்டுநிலை அமைப்பிலே வரும். இவற்றைத் செய்தியாசிரியர்கள் தக்கவிதமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் செய்தி எடுத்துரைப்பு என்பது தொடரியல் அமைப்புப் போன்றது. அதாவது நிகழ்ச்சிகளைக் காலவரிசைப்படி அல்லது வேறு ஏதேனும் முறைப்படி வரிசையாக அமைப்பதுதான் எடுத்துரைப்பு.
இவ்வித ஆய்வுமுறை, ஒரே செய்தியை அல்லது ஒரே விஷயத்தைப் பல்வேறு இதழ்கள் வெவ்வேறு விதமாக எப்படி வெளியிடுகின்றன என்று ஒப்பீட்டு நிலையில் ஆராய்வதற்குப் பெருமளவு உதவும். ஒரு பத்திரிகை செய்கின்ற சொல் தேர்வு, வாக்கியத் தேர்வு போன்றவை எப்படி ஒரு குறித்த அர்த்தச் சாயையை உருவாக்குகின்றன என்பதை இந்த அணுகுமுறையினால் நிர்ணயிக்க முடியும்.
உதாரணமாக, ஒரே செய்தி எப்படி மூன்று நாளிதழ்களில் வெளியாகியிருக்கிறது என்பதை இங்கே காண்போம்.
———————————————–
தினத்தந்தி
106 நாள் பணய கைதியாக இருந்தவரின் பரிதாப முடிவு
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட
நாகப்பா கொல்லப்பட்டார்
நடுக்காட்டில் உடல் மீட்பு
என நான்கு வரிகளாகத் தலைப்பு அமைந்த பிறகு, முதன்மைப் பத்தி பின்வருமாறு அமைகிறது.
சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட கர்நாடக முன்னாள் மந்திரி நாகப்பா கொல்லப்பட்டார். அவரது உடல் நடுக்காட்டில் கண்டெடுக்கப்பட்டது.
————————————————–
தினமலர்
கொன்றது யார்? வீரப்பனா, அதிரடிப்படையா?
நடுக்காட்டில் நாகப்பா பிணம்!
106வது நாளில் எல்லாம் முடிந்தது
ஆயுதங்களுடன் காட்டுக்குள் புகுந்தனர் கொள்ளேகால் மக்கள்
தமிழர்களுக்கு குறி வாகனங்கள்மீது தாக்கு
கிருஷ்ணா ராஜினாமா எதிர்க்கட்சிகள் ஆவேசம்
தினமலர் செய்தி, மூன்று வரிகளாக அமைந்திருக்கிறது. முதலிரு வரிகளுக்குப் பிறகு வரும் நான்கு தொடர்களும் நான்கு கட்டங்களில் மூன்றாவது வரியாக அமைந்துள்ளன.
———————————————–
தினமணி
காட்டில் அழுகிய நிலையில் நாகப்பா உடல்
வீரப்பன் கடத்திய 106வது நாளில் பரிதாபம்
என இரண்டே வரிகளில் தினமணித் தலைப்பு அமைந்திருக்கிறது. பிறகு முதன்மைப் பத்தி பின்வருமாறு அமைந்துள்ளது:
முன்னாள் அமைச்சர் எச். நாகப்பாவின் உடல் 106 நாள்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு வயது 66.
————————————————-

இம்மூன்று செய்திகளையும் பலவேறு விதங்களில் நாம் ஆராயலாம்.
உதாரணமாக, தினமணியும், தினத்தந்தியும் மதிப்புக்குரிய ஒருவருக்குப் பிணம் என்னம் சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன. தினமலர் அச்சொல்லைத் தயக்கமின்றிப் பயன்படுத்தியுள்ளது.
தினமலரில் மிகுசொற்பயன்பாடு (வெற்றெனத்தொடுத்தல்) அதிகம். தினமணியில் மிகுசொற்பயன்பாடு இல்லை.
அதேசமயம், தினமலரில் செய்தி வெளிப்பாட்டில் கவர்ச்சி அதிகம். (வெவ்வேறு வண்ணங்களில் மூன்று வரித் தலைப்புகளையும் அமைத்துள்ளதோடு, மூன்றாவது வரியை நான்கு வண்ணங்களில் நான்கு கட்டங்களாகப் பகுத்து நான்கு துணைத் தலைப்புகளையும் வெளியிட்டிருக்கிறது. வெளியிடும் முறை மட்டுமின்றிச் சொல்லும் விதமும் கவர்ச்சியாக அமைந்திருக்கிறது.
இங்கே தினமலர் நடுக்காட்டில் நாகப்பா பிணம் என மோனையைக் கையாளுவதைக் காணலாம்.
தினத்தந்தியும் முதல் தலைப்புக்கும் இரண்டாம் தலைப்புக்கும் தொடர்பு படுத்த இதைக் கையாள்கிறது.
தினமணி அறவே மோனையைக் கையாளவில்லை.
தினமலரில், 106வது நாளில் எல்லாம் முடிந்தது என்பதில் எல்லாம் என்ற சொல்லுக்குத் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுத்து, பலவாறான யூகங்களுக்கு இடம் அளிக்கிறது. இது தேவையற்ற, தவறான அமைப்பு.
அதேபோல, தினமலரில் கடைசி வரியில் கடைசித் தலைப்பு-கிருஷ்ணா ராஜினாமா எதிர்க்கட்சிகள் ஆவேசம்- என்பது தவறான பொருள்கொள்ளும் முறையில் உள்ளது. இதைப்படிப்பவர்கள், கிருஷ்ணா ராஜினாமா செய்துவிட்டதாகவும், எதிர்க்கட்சிகள் அதனால் ஆவேசம் கொண்டதாகவும்தான் பொருள்கொள்வார்கள். இவ்வாறு பொருள் மயக்கம் ஏற்படும் முறையில் செய்தியமைப்பது தவறாகும்.
இந்த முதல்வகை அணுகுமுறையிலுள்ள குறை என்னவென்றால், ஒரு செய்தி ஆசிரியன் கொள்ளக்கூடிய தேர்வுகளின் எண்ணிக்கை எல்லையற்றது. நமக்குக் கிடைக்கக்கூடிய இதழ்களின் எண்ணிக்கையும் மிகுதி. எனவே எல்லாத் தேர்வுகளையும் கண்டறிந்து ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம்.
இரண்டாவது அணுகுமுறை, தனித்துவக் கூறுகளை மட்டும் ஆராய்வது. அர்த்தமும் அதன் விளைவும் சொல் அல்லது தொடரமைப்புத் தேர்வுகளைச் செய்வதன் ஒருங்கிணைப்பில்தான் தனித்துவக்கூறுகள் உருவாகின்றன. இத்தனித்துவக் கூறுகள், விஷயரீதியாகவோ அழகியல்ரீதியாகவோ முக்கியத்துவம் அற்றவையாகவும் இருக்கலாம். எல்லாத் தனித்துவக் கூறுகளும் ஒரு செய்திக் கதையின் முழுமைக்கும் கருப்பொருள் அமைவுக்கும் காரணமாக அமைபவை என்று சொல்லமுடியாது. எனினும் கருத்தியல் ரீதியான பாதிப்பினை உருவாக்குவதில் இவை செயல்படும்.
மூன்றாவது அணுகுமுறை, இயல்பு (நார்மல்) என்று பொதுவாகக் கருதப்படும் நிலையிலிருந்து ஏற்படும் விலகல்கள் பற்றிய ஆய்வு. சாதாரணச் சொற்பயன்பாடு அல்லது தொடரமைப்புமுறை என்னும் பொதுமொழி அளவுகோல்களிலிருந்து ஏற்படும் விலகல்களை இதில் ஆராய்கிறோம். இங்கும், அந்த விலகல்கள் செய்தி விஷயத்தோடும் முழுமையோடும் தொடர்பற்றவையாக இருக்கும் அபாயம் உள்ளது. ஆனால் இவையும் கருத்தியல்ரீதியாகச் செயல்படுபவையே. இம்மாதிரி விலகல்கள், ஒரு நாளிதழின் கோணங்கித்தனமான செயல்களாக இருக்கலாம். உதாரணமாக, ஒரு சமயம், சோ ராமசாமி, தனது துக்ளக் பத்திரிகையில், ஃபீஸ் போன்ற ஆங்கிலச் சொற்களை fஈஸ் என்றாற்போல எழுதிவந்தார். அண்மைக்காலங்களில் இம்மாதிரிக் கோணங்கித் தனங்களை மிகுதியாகச் செய்வது தினமலர் இதழ்தான். உதாரணமாக,
நியூசி. பந்துவீச்சில் இந்தியா காணாபோச்சு
என்பது தினமலரின் ஒரு தலைப்புச் செய்தி. நியூசிலாந்தை நியூசி. என்று எழுதுவது பொதுவாக அனுமதிக்கப்பட்ட குறுக்கம் எனலாம். காணாமல் போச்சு என்று எழுதினால்கூடப் பொறுத்துக்கொள்ளலாம். (போச்சு என்று எழுதுவதே தவறு, போயிற்று என்று எழுதவேண்டும் என்பது ஆதித்தனார் கொள்கை.) இதேபோல
எடைகுறை ரேஷன் கடைகள்மீது நடவடிக்கை
என்பது இன்னொரு தலைப்பு.
இம்மாதிரியான சொற்பயன்பாடுகளைத்தான் கோணங்கித்தனம் என்கிறோம். கோணங்கித்தனங்களால் கவர்ச்சி ஏற்படுத்தி விற்பனையை அதிகரிக்க முடியும் என்னும் தவறான மனப்பான்மைதான் இதற்குக் காரணம். இக்கோணங்கித்தனங்களை இதழின் எல்லாப்பகுதிகளிலும் காணலாம்.
விலகல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஆராய்வது எல்லாச் சமயங்களிலும் பயன்படாது. விலகல்கள் பற்றிய ஆய்வு ஓரளவுதான் வழிகாட்டுவதாக இருக்கும். எது இயல்பானது அல்லது திட்ட அமைப்பு (நார்ம்) என்னும் அடிப்படையைச் சரிவர நிர்ணயிப்பது கடினம்.
நான்காவது அணுகுமுறை வாக்கியம் அல்லது அதற்கு அப்பாற்பட்ட பெரும் அமைப்புகளை மட்டுமே கணக்கிலெடுக்கக்கூடியது. வாக்கியத்திற்கு அப்பாற்பட்ட விரிவான (பத்தி போன்ற) அமைப்புகளினால் மட்டுமே ஒட்டுமொத்தமான செய்திக் கதை அல்லது பிற இதழியல் பெருங்கூறுகளின் அர்த்தம் என்பதை அறியமுடியும். ஆனால் சில சமயங்களில் ஒரே ஒரு வாக்கியம்கூடக் கருப்பொருள் அமைதிக்குத் துணை செய்வதாக அமையவும் கூடும். சில சமயங்களில் பல வாக்கியங்களில் அல்லது பத்திகளில் கருப்பொருள் பரந்துபட்டுப் பிரிந்திருக்கலாம்.
படைப்புத் திறன்
மொழியினாலாகிய விஷயத்தை ஒரு விளையாட்டுப் பொருளாகக் கருதுவதும், அதனைப் பிரித்துப் பல கூறுகளாக்கி வேறுவேறு விதங்களில் இணைத்துப் பார்த்துப் புதிய சொற்களை உருவாக்குவதும் இலக்கியப் படைப்புகளுக்கான இயல்பு மட்டுமல்ல, பத்திரிகைத் தமிழுக்கும் உரியதுதான். உதாரணமாக, தொலைக்காட்சி புகுந்த ஆரம்ப நாட்களில், தினத்தந்தி அதனைப் படரேடியோ என்றே அறிமுகப்படுத்தி எழுதி வந்தது. பின்னர்தான் தொலைக்காட்சி என்னும் சொல் பரவியது. அதற்குப்பின் அச்சொல்லை தினத்தந்தி விட்டுவிட்டது. மொழியின் விளையாட்டுத் தனமான, படைப்பாக்கமிக்க, திறன்மிக்க சொற்பயன்பாட்டைக் காட்டுவது இது என்றே சொல்லலாம்.
ஒரு சூழலுக்குரிய சொல்லை வேறு சூழலில் படைப்பாக்கத்திறனோடு பயன்படுத்தலாம். உதாரணமாக, தினமலர், நடிகர் பார்த்திபனின் படத்தைப்போட்டு, அவரது கனவு ஒன்றினைக் குறிப்பிட்டு, பார்த்திபன் கனவு எனத் தலைப்பிட்டுள்ளது. இது வேடிக்கையானதாக இருப்பினும், படைப்புரீதியான பயன்பாடுதான். ஆனால் இந்தமாதிரி முறைகளைத் தாறுமாறாகக் கையாள முடியாது. அதில் சூழல் ஏற்புத் தன்மையும், இலக்கண அமைப்பினை மீறாத நுண்ணுணர்வும், மொழியின் அடிப்படைத் தன்மையறிவும், இயலபான உருபன்களை உருவாக்கும் தன்மையும் போன்ற எத்தனையோ தகுதிகள் செயல்படவேண்டும்.
தமிழ் இதழ்களில் பிழைகள்
தமிழ்மொழி நடை பற்றிப் பேசும்போது தமிழ் இதழ்களில் காணப்படும் ஏராளமான பிழைகளைப் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது.
ஆங்கில இதழ்கள் பிழையற்ற ஆங்கிலத்தைக் கையாளுகின்றன. தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை மொழிநடையிலும் சொல்தேர்விலும் காட்டும் அக்கறையினைப் பார்த்தாலே இது புரியும். இவை தவிர Know your English என்பது போன்ற பகுதிகளையும் பிழைதவிர்ப்பதற்கென்றே நடத்திவருகின்றன.
பொதுவாக, தமிழ் இதழாசிரியர்களுக்கும், இதழ்களில் பணிபுரிபவர்களுக்கும் பிழையற்ற முறையில் நல்ல தமிழைக் கையாளவேண்டும் என்ற நினைப்பு கிடையாது. மாறாக, இலக்கணம் தெரிந்திருப்பதையே கேலிசெய்பவர்கள்தான் பத்திரிகைகளில் இருக்கிறார்கள். மேலும் ஓரளவேனும் இலக்கணம் தெரிந்த, பிழையற்ற நடையில் எழுதக்கூடியவர்களைத் தமிழ் இதழ்கள் தேர்ந்தெடுப்பதில்லை. தமிழ் முதுகலை படித் திருப்பதோ, இதழியல் துறையில் பட்டமோ பட்டயமோ வாங்கியிருப்பதோ, தமிழ்ப் பத்திரிகைத் துறையில் நுழையத் தகுதிக் குறைவாகவே எண்ணப்படுகின்றன. ஆங்கிலத் தைப் பிழையற்ற முறையில் பேசவும் எழுதவும் வேண்டும் என்னும் முயற்சியில் நூற்றில் ஒரு பங்கினைக் கூடத் தமிழுக்கு நாம் செய்வதில்லை என்பது நம் அடிமை மோகத்தையே காட்டுகிறது. மேலும் தினத்தந்தி இதழுக்கு ஆதித்தனார் வெளியிட்டது போன்ற நாள்-தாள் கையேட்டை எல்லாப் பத்திரிகைகளும் உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும்.
தினமலர் திரைமலர் 13-09-2002 தாள் இரண்டாம் பக்கத்தில் ஒரு பத்தி முழுவதும் குழுந்தைகள் என்றே அச்சாகியுள்ளது. எவ்வளவு பொறுப்போடு பத்திரிகை ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. தமிழ் இதழ்கள் (குறிப்பாக தினமலர்) சந்தியைக் கட்டாயம் பயன்படுத்தக்கூடாது என்றே கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. உதாரணமாக, தினமலரின் சில தலைப்புகள்:
இதற்காக தமிழகத்துக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்
வரதட்சணை கொடுமை பட்டதாரி பெண் உயிரோடு எரிப்பு
இன்ஜி. கல்லூரி ஆசிரியருக்கு தனி பயிற்சி கல்லூரி
ஆங்கிலச் சொற்கள் பயன்பாடு
ஏற்ற தமிழ்ச் சொற்கள் இல்லாத நிலையில் அல்லது அவை வெகுவாகப் பரவாத நிலையில் ஆங்கில அல்லது பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஏற்ற தமிழ்ச் சொற்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாமல் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவது தமிழை அவமதிப்பதாகும். உதாரணமாக தினமலரில் ஒரு செய்தி:
டெலிமெடிசின் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்
இதே செய்தியை தினமணி, தொலைமருத்துவத் திட்டம் என்று அழகாகத் தமிழ்ப் படுத்தி வழங்கியுள்ளது. தினமலரின் இன்னொரு தலைப்புச் செய்தி:
விழாவில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையேயான நெட்வொர்க்கை
ஜனாதிபதி அப்துல் கலாம் தொடங்கிவைத்தார்.
இதையும் தினமணி, தமிழ்ப்படுத்தியே (பொறியியல் கல்லூரிகளில்…..வலைப்பின்னல் தொடர்பை) வழங்கியிருக்கிறது.
தன்வயமாக்கல்
தமிழில் எப்படிச் சொற்களைத் தன்வயமாக்க வேண்டும் என்னும் முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தாமை தமிழறிந்தவர்களுக்கு வெறுப்பை அளிக்கிறது. உதாரணமாக, ப்ரச்னை என்பது வடசொல். இதனைப் பிரச்சினை என்று ஒலிப்படுத்த வழங்கவேண்டும். (பலபேர் தவறாக பிரச்சனை என்று எழுதுகின்றனர்.) தினமலர் விடாப்பிடியாகப் பிரச்னை என்ற வடிவத்தையே கையாளுகிறது. தினமணி யும் தினமலரும் எழுதுபவர்களைப் பொறுத்து பிரச்சினை, பிரச்சனை என்று வெளி யிடுகின்றன.
வடமொழிச் சொற்களையும் கிரந்த எழுத்துகளையும் இன்று இதழ்களில் கையாளுவது தவிர்க்க இயலாதது. ஆனால் இதழாளர்களுக்கு இச்சொற்களைக் கையாளத் தெரிவதில்லை. உதாரணமாக, விசேஷம் என்பதை விஷேசம் என்று எழுதுகிறார்கள். லக்ஷ்மி என்பதை அநேகமாக 99 சதவீதத்தினர் லஷ்மி என்றே இப்போது ஆக்கிவிட்டார்கள். ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும் Lakshmi எனக் K போட்டு எழுதத் தவறுவதில்லை. உகர ஊகாரங்கள் கிரந்த எழுத்துகளோடு படும் பாடு சொல்லத் தரமன்று. ஜூன் ஜூலை என்பதை நாள்காட்டிகள் உட்பட எல்லா இடங்களிலும் ஜீன், ஜீலை என்றே காண்கிறோம். ஷ¨-வைத் தவறாமல் ஷீ என்றே எழுதுகிறார்கள்.
அகரத்தில் முடியும் வடசொற்களை -ம் சேர்த்து எழுதுவது தமிழ் முறை. உதாரணமாக யோக-யோகம், இந்துத்துவ-இந்துத்துவம், தத்துவ-தத்துவம் இப்படி. ஆனால் இவற்றையெல்லாம் ஆகாரமாக்கி(!), யோகா, இந்துத்துவா என்றே எழுதப் பழக்கியவர்கள் பத்திரிகைக்காரர்கள்தான்.
பத்திரிகை ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அது இலட்சக்கணக்கான பேருக்குப் போய்ச் சேருவதன் காரணமாக அதில் பிழைகளின்றி மொழியைக் கையாள வேண்டும். அறிந்தோ அறியாமலோ ஒருவர் செய்யும் பிழைகள், ஏராளமான பேர் காப்பியடிக்கக் காரணமாக அமைந்துவிடுகின்றன. உதாரணமாக, நினைவு கூர்வது என்னும் சொல்லைப் பத்திரிகைக்காரர்கள், தவறாகக் கையாண்டு, நினைவு கூறுவதாக்கிவிட்டார்கள். சந்தியைத் தவிர்க்கும் தினமலர், எவனோ ஒருவன் தவறாகப் பயன்படுத்தியதால் இன்றுவரை அருணாச்சலேஸ்வரர் என்றே எழுதிவருகிறது. பிறகு “சீன வானொலிக் கருத்தரங்கில் பிழையின்றித் தமிழைக் கையாள வலியுறுத்தினார் கள்” என்றும் செய்தி வெளியிடுகிறது!
தேய்ந்த சொற்களைப் பயன்படுத்தல்
பத்திரிகைத் துறையில் பலசமயம் அர்த்தமற்றுத் தேய்ந்துபோன சொற்கள் கையாளப்படுகின்றன. இதற்கு எந்தப் பத்திரிகையும் விதிவிலக்கு அல்ல. உதாரணமாக, தமிழகத்தில் அமைதி நிலவுகிறது என்று இதழ்களில் எழுதமாட்டார்கள். தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது என்றுதான் எழுதுவார்கள். பிற தேய்ந்து போன சொற்பயன்பாடுகளுக்குச் சில உதாரணங்கள்-
அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது
போர்க்கால அடிப்படையில் உதவிகள் செய்யப்படுகின்றன
குண்டர் சட்டம் பாய்ந்தது
எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
லஞ்ச லாவண்யத்தை விரட்டாவிட்டால் வளர்ச்சி என்பது கனவுதான்
அர்த்தம்புரியாமலே இவற்றை எழுதுகிறார்கள். உதாணரமாக, அனுசரித்தல் என்றால் ஒத்துப்போதல், சரிவர ஒழுகுதல் என்பதுதான் பொருள். உதாரணமாக, புதுப் பெண்ணுக்கு மாமியார் வீட்டில் அனுசரித்து நடந்துகொள் என்று அறிவுரைப்பார் கள். இந்தச் செய்தியின்படி, நாம் எய்ட்ஸ் தினத்துக்கு ஒத்து நடந்துகொள்ள வேண்டுமா? அல்லது எல்லாரும் எய்ட்ஸ்தினத்திற்கு ஒத்து நடந்துகொள்கிறார்களா?
இவற்றில் மிகமோசமான சொற்பயன்பாடு லஞ்ச லாவண்யம் என்பது. லாவண்யம் என்றால் அழகு. அதனால்தான் பெண்கள் லாவண்யா என்று பெயர் வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் நமது பத்திரிகைகள் அர்த்தமில்லாமல் லஞ்ச லாவண்யம் என்று எழுதுகின்றன. ஒரு பத்திரிகையாளரிடம் பேசும்போது, அவர் லாவண்யம் என்றால் ஊழல் என்றே பொருள் சொன்னார்!
வேடிக்கையான மொழிபெயர்ப்புகள்
செய்திகளைப் பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து வெளியிடுகின்றன பத்திரிகைகள். ஆனால் வேடிக்கையாகவும் மொழிபெயர்ப்புகள் அமைந்து விடுகின்றன. உதாரணமாக, தினமலர் தலைப்புச் செய்தி ஒன்று:
சென்னையில் அப்துல் கலாம் சபதம்
அனைவரையும் அறிவாளி ஆக்குவோம்!
அனைவரையும் எழுத்தறிவுள்ளவர் ஆக்குவோம் என்று இந்தச் செய்தி இருக்க வேண்டும். படிக்கவைப்பதால் ஒருவரை எழுத்தறிவுள்ளவர் ஆக்கலாம், அனைவரையும் அறிவாளி எப்படி ஆக்குவது? சொல்லுக்குச் சொல் பலசமயங்களில் மொழி பெயர்க்கிறார்கள். உதாரணமாக சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது என்ற தொடரைப் பாருங்கள். Red carpet welcome என்பதை ஆடம்பரமான வரவேற்பு என்று பெயர்க்கவேண்டும்.
மேலே சுட்டிக்காட்டியவை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு என்ற அளவிலான உதாரணங்களே.
தலைப்புச் சொற்களை இனம் புரியாது பயன்படுத்தல்
செய்தி விளம்பரங்களை அவசரக் கோலத்தில் பெயர்த்தல்
அறிவியல், ஏனைத்துறைக் கலைச்சொற்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாமை
போன்றவை தமிழ் இதழ்களில் மிகுதி. தினமலர் மிகமோசமான ஆங்கிலச் சொற்கலப்பினைச் செய்கிறது, வேண்டுமென்றே கலப்புநடை ஒன்றை உருவாக்கி வருகிறது என்றே சொல்லலாம். சில உதாரணங்களைப் பாருங்கள்:
கர்ப்பிணிப் பெண்களுக்கு அங்கு கிடைக்கும் ட்ரீட்மெண்ட்தான் உலக அளவில் அதிரச் செய்யும்.
கங்குலி கம்பெனி சாதிக்குமா?
யு.இ.எல். பவர் திவெறும்பூர் ஷோரூம் அன்இண்டக்ரேடட் அசோசியேட்ஸ் திறப்புவிழா
பார்லிமெண்டில் அமைச்சர் உறுதி
கரண்ட் வராததற்கு இப்படியும் காரணம்?
பக்கத்துக்குப் பக்கம் இப்படித்தான்.
நிறுத்தற்குறிகளின் தவறான பயன்பாடு
நிறுத்தற்குறிகளை (குறிப்பாக மேற்கோள் குறிகளை)த் தவறான முறையில் பயன்படுத்துவது தமிழ்ப்பத்திரிகைகளில் அதிகமாகக் காணப்படும் ஒன்று. உதாரணம்:
அப்போது அவன் ஜமீலா ஜலாலிடம், “தப்பித்துக்கொண்டதாக நினைக்காதே”
என்றும், “உன்னுடைய காரில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும்” கூறியுள்ளான்.
இதில் மேற்கோள் குறி தவறாகக் கையாளப்பட்டதல்லாமல், வாக்கியப் பிழையும் சேர்ந்துள்ளது.
வெற்றெனத் தொடுத்தல் (வெர்பாசிடி)
தேவைக்கதிகமான சொற்களைப் பயன்படுத்திக் குறைவான செய்தியைத் தருதல் வெற்றெனத் தொடுத்தல் எனப்படும். உதாரணமாக:
அமெரிக்க வெளியுறவுத் துறை மனித உரிமை பற்றி விடுத்துள்ள அறிக்கை:
தீவிரவாதிகளுடன் மோதல் என்ற பெயரில் போலீஸார் ஆட்களைச் சுட்டுக்
கொல்வது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்க் குற்றம் சாட்டப்படாமல்
வைக்கப்பட்ட சந்தேகத்தின்பேரில் பிடிபட்ட நபர்கள் கொலைசெய்யப்படுதல்,
காவல் கைதிகளைத் துன்புறுத்திய, கற்பழித்த போலீஸாரை விசாரித்து
நடவடிக்கைகள் எடுக்காமலிருப்பது, பெண்கள் உரிமை தொடர்பான
சட்டங்களை பாரபட்சமற்ற முறையில் அமல் செய்ய மறுப்பது, வரதட்சிணை,
சாவுகள் அதிகரித்தல், குழந்தைத் தொழிலாளர்களைச் சுரண்டி வேலை
வாங்குதல், வகுப்புவாத வன்முறைகள் கட்டுப்படுத்தாமல் பெருகிவருதல்
முக்கியப் பிரச்சினைகளாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(இச் செய்தியிலுள்ள எழுத்துகள் 350, சொற்கள் 70)
இச்செய்தியை முழுமையாகவே கீழ்க்காணும் முறையில் வெளிப்படுத்தலாம்.
அமெரிக்க அரசு இந்தியாவில் மனித உரிமை மீறப்படுவதைச் சுட்டிக்காட்டி
யுள்ளது. தீவிரவாதிகளுடன் மோதல் என்ற பெயரால் மக்களைச் சுட்டுக்
கொல்வது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் விசாரணையின்றித் தனிச்
சிறையில் அடைப்பது, சந்தேகத்தில் பிடித்த நபர்களைக் கொல்லுதல், பெண்
கைதிகளைத் துன்புறுத்தும், கற்பழிக்கும் போலீஸார்மீது நடவடிக்கை எடுக்
காமலிருத்தல், பெண்ணுரிமைச் சட்டங்களைச் செயல்படுத்தாமை, வரதட்சி
ணைக் கொடுமை, குழந்தைகளை வேலைவாங்குதல், வகுப்புவாத வன்முறை
போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
(எழுத்துகள் 250, சொற்கள் 44)
இதுவரை பார்த்தவற்றால், நாளிதழ்களில் பணிபுரிவோர் கவனமுடன் செய்திகளை அளிக்கவேண்டும் என்பது பெறப்படும். தேவையான மொழிப் பயிற்சி கொடுக்கப்பட்டால் பத்திரிகையாளர்களின் தமிழ்நடை இலக்கணச் சீர்மை கெடாமல், தெளிவாகவும் திரிபின்றியும் அமையும். நாளிதழ்களில் பணிபுரிவோருக்குத் தனியார் நிறுவனங்களோ பல்கலைக்கழகங்களோ ஓரிருவார வகுப்புகளை நடத்திப் பயிற்சி கொடுத்தால் செய்தித்தாள்களின் நடையில் விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக நமது மொழியைப் பிழையின்றிக் கையாள வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
மொழிநடையில், குறிப்பாகச் சொற்களைப் பயன்படுத்துவதில், பத்திரிகைகள் தவறான முன்மாதிரிகளை அளித்துவிடுவதால், காலப்போக்கில் பொதுமக்களின் பெரும்பகுதியினர் அத்தவறுகளை எவ்விதத் தயக்கமும் இன்றிச் செய்கின்றனர். ஏனெனில் நாளிதழ்கள் அன்றாடம் இலட்சக்கணக்கணக்கான மக்களைச் சென்றடைபவை. ஆகவே இதழியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கும் செய்திகளைத் திருத்தமுற எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் பயிற்சி கொடுப்பது காலம் கருதிச் செய்யும் தொண்டாகும்.
நமது தமிழ் நாளிதழ்கள் மொழியை ஒரு கருவி என்று மட்டுமே கருதுகின்றன. ஆனால் மொழி நமது பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்றுவது மட்டுமன்றி, மனிதனின் சிந்தனையைக் கட்டமைப்பது, அவனைச் சமூகவயமாக்குவது, அவனை நாகரிகத்தில் புகவைப்பது போன்ற பணிகளையும் செய்கிறது. ஆகவே தவறான மொழிப்பயன்பாடு என்பது சமூகத்தைப் பற்றிய தவறான புரிந்துகொள்ளலே ஆகும். இன்று தலித்தியம், பெண்ணியம், பிற்காலனியம் போன்ற கோட்பாடுகள் மொழிக்கு முதன்மை தந்து எப்படி மொழி கருத்துகளை உருவாக்குகிறது என்பதை ஆராய்கின்றன. பத்திரிகைகள் நல்ல முன்னுதாரணங்களாக இருந்து சரியானதொரு மொழிநடையை மக்களுக்கு அளித்து வழிகாட்ட வேண்டும்.
செய்திகளின் தரத்திற்கேற்பவும், வெளியிடும் நோக்கத்திற்கேற்பவும் மொழி நடை அமைகிறது என்பதில் ஐயமில்லை. தரமற்ற சினிமாச் செய்திகளையும் காதல்-கொலை விவகாரங்களையும் தரமற்ற அரசியல் விஷயங்களையும் வெளியிடும் நிலை இருக்கும் வரையில் தமிழ்ப் பத்திரிகைகளின் நடை மாறாது. இவற்றை வெளியிடுவதில்தான் அவைகளின் நோக்கமும் தெரிகிறது. வணிகரீதியாகச் செய்திகளைக் கவர்ச்சிகரமாக வெளியிடவேண்டும் என்று மட்டுமே நினைப்பது அறியாமை. இன்று எல்லாப் பத்திரிகைகளுமே வணிகநோக்கில்தான் நடத்தப்படுகின்றன. வணிக நோக்கின்றி இன்று பத்திரிகை நடத்த முடியாது. ஆனால் வணிகத்தில் அடிப்படை நேர்மை என்பது இருக்கிறது. வாங்குபவனையும் மனிதனாக மதித்து அவனுக்கும் பயன்பட்டுத் தானும் வளர்ச்சியடைவதுதான் நல்ல வணிகம்.
(மயிலாடுதுறை அ,வ,அ, கல்லூரியில், 03-01-2003 அன்று இக்காலத் தமிழ் இதழ்களின் நோக்கும் போக்கும் என்னும் பொதுத்தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை.)

______


மொழிபற்றிய சொல்லாடல்-தொடர்ச்சி

mozhippirachchanai-3
நவம்பர் 2005இல்ஏறத்தாழ ஒன்பதாண்டுகளுக்கு முன்பு கோவையில் ஒரு கூட்டத்தில் பேசியபோது பொருள்முதல் வாதம்கருத்துமுதல் வாதம் இவையிரண்டிற்கும் முன்னால்பொருள்முதல் வாதத்திற்கே அடிப்படையாக இருப்பது மொழிமுதல் வாதம் என்று பேசினேன். பொருளைப் பொருள்படுத்த வைப்பதும்,கருத்தைக் கருவுயிர்க்க வைப்பதும் மொழிதான். ஒருவகையில் சொன்னால்மொழிதான் அது பேசும் மக்களின் உயிர்நிலையாக இருக்கிறது. ஆதிகாலம் போலமனிதன் மொழியின்றிச் சைகையில் பேசும் காட்டுமிராண்டியாக மாறினால் ஒழியமொழியின் முதன்மையை மனிதர் எவரும் கேள்விகேட்க முடியாது. குறிப்பாகஇந்தியாவில்,மொழியைத் தாயாகதெய்வமாகப் போற்றும் மரபு இருக்கிறது. தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதால் என்ன ஆகப்போகிறதுவறுமை ஒழியப் போகிறதா என்று கிண்டல் செய்தார்கள் அக்கால மார்க்சியக்காரர்கள். தமிழ்நாடு எனப் பெயர் மாற்றுவதோகடவுள் வாழ்த்துக்குப் பதிலாகத் தமிழ் வாழ்த்துப் பாடுவதோஅடிப்படைப் பிரச்சினை எதையும் தீர்க்கப் போவதில்லை என்பது நமக்குத் தெரியும். அவை தமிழர்களின் மனத்தில்இது நம் நாடு, நம் மொழி என்ற உணர்வை ஏற்படுத்தும் குறியீட்டுச் செய்கைகள். இந்த மொழியுணர்வுதான் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் ஏற்படக் காரணமாகவும் அமைந்தது. இன்று பிற மாநிலங்கள் அனைத்தும் தத்தம் மொழியை நன்கு வளர்ப்பதைக் காண்கிறோம். தமிழ்நாட்டைத் தவிர.

mozhi1

மதச்சார்பில் பாகிஸ்தான் பிரிந்துபோனபோதுவட இந்தியர்கள் இந்தியாவையும் இந்துஸ்தான் ஆக்க முனைந்தார்கள். அவர்கள் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,தென்னிந்தியப் பண்பாடு ஆகியவை தனித்தன்மை கொண்டவை அல்ல. ஒரு சமயம் என் மாணவர் ஒருவர் கேட்டார்: “முஸ்லிம்கள் மசூதியிலிருந்து தினசரி மைக் வைத்துக்கொண்டு புரியாத அரபுமொழியில்தான் தொழுகை நடத்துகிறார்கள். கிறித்துவர்களும் பலவிதங்களில் (தாங்கள் சூடிக்கொள்ளும் பெயர் உள்பட) மேற்கத்தியக் கலாச்சாரக் கூறுகளைப் பின்பற்றுகிறார்கள். அப்படியிருக்கும் போது நாமும் சமஸ்கிருதத்தைக் கோயில் மொழியாகவழிபாட்டு மொழியாக ஏற்றுக்கொண்டால் என்ன?” என்று கேட்டார். நான் சொன்னேன்: “அரபு மொழியில் தொழுவதால் ஒரு முஸ்லிம் அரேபியன் ஆகிவிடுவதில்லைஅராபியப் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு என்று சொல்லப்போவதில்லை. கிறித்துவர்களும் அவ்வாறே. ஆனால் சமஸ்கிருதத்தைக் கோயில்மொழி என்று ஏற்றுக் கொள்வதில் பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. தமிழ் இசைதமிழ் நாடகம்தமிழ் இலக்கியம்தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட அனைத்துமே சமஸ்கிருதத்திலிருந்து வந்தவைசமஸ்கிருதம் தான் அனைத்துக்கும் ஆதாரம் என்று உடனே சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். நாம் வடமொழியை எதிர்ப்பதற்கான காரணமும் இதுதான்” என்றேன்.

பாகிஸ்தான் பிரிந்துபோனதும் செய்த முதல்வேலையேகாஷ்மீருக்காக இந்தியாவின்மீது படையெடுத்ததுதான். அதனால் பாகிஸ்தானுக்கு இந்தியா பகைநாடானது மட்டுமன்றிமதத்தீவிரவாதமும் தோன்றிவிட்டது. இவ்வாறே மொழிவழி மாநிலங்களாகப் பிரித்ததும்மாநிலங்களில் மொழிவழிச் சிறுபான்மை பிரச்சினை தோன்றிவிட்டது. அது மட்டுமன்றிஏற்கெனவே நான் எழுதியது போலகாவிரி நீர்ப்பகிர்வுமுல்லைப் பெரியாற்றுச் சிக்கல்,எல்லை ஆக்கிரமிப்புகள்பண்பாட்டு ஆக்கிரமிப்புகள் எனப் பல பிரச்சினைகள் தோன்றிவிட்டன.

ஓர் அன்பர்மனம் வருந்தி எனக்குத் தனியே மடல் எழுதியிருந்தார். “நீங்கள் சொல்லும் தீர்வுகள் யாவும் திராவிடம் என்று பேசும் பிறமொழியினர்க்கு ஊக்கமளிக்குமே தவிரதமிழர்களை எவ்விதம் வாழவைக்கும்” என்று கேட்டிருந்தார். அதற்குத்தான் நான் முன்னர் எழுதிய கட்டுரையில் மதச் சிறுபான்மை நிலையையும்,மொழிச் சிறுபான்மை நிலையையும் ஒப்பிட்டுப் பேசியிருந்தேன். பாகிஸ்தான் தனிநாடாகச் (இந்திய முஸ்லிம்களைப் பிரித்துக்கொண்டுதான்) சென்று விட்டது என்பதற்காக நாம் இங்கிருக்கும் முஸ்லிம்களை வேற்று நாட்டவர்களாகக் கருதமுடியாது. அதுபோலவே இங்கேயே முந்நூறு நானூறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மொழிச் சிறுபான்மையினரையும் இந்நாட்டைவிட்டு வெளியே போ என்று கூறமுடியாது என்பதுதான் நிதரிசனம்.

mozhi4
பல கருத்துகளை நாம் சிந்திக்கும்போதும், பேசும்போதும், எழுதும்போதும் நொந்த மனத்துடன்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் உணர்ச்சி வேறுஅறிவு வேறு. உணர்ச்சிரீதியாகப் பேசினால் எங்கும் தீர்வு வராது. உதாரணமாகமுல்லைப் பெரியாற்றுப் பிரச்சினையில் கேரளாவுக்கு என்னதான் ஆட்சேபணை என்பது எனக்குப் புரியவேயில்லை. அங்குள்ள கட்சிகள் அரசியலைச் சாக்கு வைத்து உணர்ச்சிரீதியாக அவர்களைப் பிரிக்கின்றன. இவை போன்ற நிலைப்பாடுகள் எந்த நாட்டுக்கும் உகந்தவை அல்ல. அதுபோலத்தான்திராவிடம் என்ற ஒரு நாடு என்றும் இருந்ததும் இல்லைஇருக்கப்போவதும் இல்லை. திராவிட மொழியினம்தான் இருக்கிறது என்ற அறிவுபூர்வமான வாதத்தை முன் வைத்தால் சிலருக்கு ஏன் பற்றிக்கொண்டு வருகிறது என்பது எனக்குப் புரியவில்லை. வரலாற்றை தயவுசெய்து நன்கு பாருங்கள்படியுங்கள்.

ஒரு வகையில் மொழிவழி தேசியம்மாநிலங்களுக்குள்ளான பகைமையை மிகுதிப்படுத்தவே உதவுகிறது. அதற்காக அது தேவையில்லை என்று ஒதுக்கவும் முடியவில்லை. தமிழ்நாடு ஏன் தனிநாடாக வேண்டும் என்பதற்கு-காவிரிப்பிரச்சினைதமிழ்மீனவர் பிரச்சினைகச்சத்தீவு பிரச்சினை முதலாகதமிழ் ஈழப் பிரச்சினை,மையஅரசுப் பதவிகளில் தமிழர்கள் ஒதுக்கப்படுவதுசமஸ்கிருதஇந்தி ஆதிக்கப் பிரச்சினை வரை-நூறு நல்ல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அப்படித் தனித்து நாம் இயங்க முடியாது என்பதுதான் உண்மையாகவும் இருக்கிறது. இந்நிலையில் நாம் ஒருவிதமான விட்டுக்கொடுக்கும் போக்கைத்தான் கடைப்பிடிக்க வேண்டி வருகிறது. தமிழ்நாடு தனிநாடாகும் நிலை இன்று இல்லை. நாம் இந்தியாவிற்குள்தான் இருக்கப்போகிறோம். ஆகவே தேசிய இன உரிமைகளை ஒப்புக்கொள்கின்ற ஒரு கூட்டாட்சிமுறை குறித்துத்தான் நாம் சிந்திக்கமுடியும்.

நான் சொல்லும் இந்தத் தீர்வுகள் என் தனித்த சிந்தனையும் அல்ல. கோவையில் திரு.ஞானி அவர்களுடனும், நண்பர்களுடனும் இதுபற்றிப் பல முறை பேசியிருக்கிறோம். தாய்மொழியை அறிமுகத்தோடு நிறுத்திவிடாமல் அதைத் தொடர்ந்து கற்கவேண்டும்அதிலேயே பள்ளிகல்லூரிப் பாடங்களையும் பயிலவேண்டும்கோயில் முதல் நீதிமன்றம் வரை எங்கும் தாய்மொழியே புழங்கவேண்டும்ஒரு மொழிமாநிலத்தில் பிறமொழிக்காரர் குடியுரிமையோடு இருந்தால் அவருக்கும் அம்மாநில மொழியே தாய்மொழியாகும் என்றெல்லாம் பலமுறை விவாதித்திருக்கிறோம்.

mozhi2
சிலர் எப்போதும் ஆதிக்கக்காரர்களாகவே தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். தங்களுக்கு ஆதரவான கருத்தியலை உருவாக்கி நம்பவைக்கின்றனர். ஏற்க வைக்கின்றனர். வடமொழி தமிழுக்கு அந்நியமானது என்றாலும் அது இப்படித்தான் ஆதிக்கப் போக்கையே ஆதியிலிருந்து தமிழ்நாட்டில் கைக்கொண்டு வந்துள்ளது. தமிழ் தற்காப்புப் போக்கையே சங்ககாலம் முதலாகக் கைக்கொண்டு வருவதைக் காண்கிறோம். தமிழ்மொழி இலக்கிய வரலாறு முழுவதும் இந்தப் போக்கு அடியோட்டமாக இருக்கிறது. இந்தியா ஒரு நாடு என்றால் அதில் வடமொழிக்கு அந்நியமான பண்பாடு எதுவும் இருந்துவிடக் கூடாது என்று மற்றவர்களை அடிமைப்படுத்த முனைவதில் என்ன நன்மை இருக்கிறதுஅடிமைப்படுத்துபவர்கள் தாங்களும் அடிமைகளே என்பதை முதலில் உணர வேண்டும்.

ஆனால் இவையாவும் தமிழனின் குறைபாடுகளே. தமிழர்கள் இன்றைய உலகச் சூழலுக்கு ஏற்பத் தங்களை அமைத்துக் கொள்ளவில்லை. தமிழை அறிவுமொழி ஆக்குவதற்கு மாறாகஉணர்ச்சிமொழியாகவும் கேளிக்கைமொழியாகவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் கேளிக்கைவேண்டி தமிழ்ச் சினிமாவையும் பட்டிமன்றத்தையும் நாடும் அதே நண்பர்கள்அறிவைத் தேட வேண்டுமென்றால் ஆங்கிலத்திடம் தஞ்சமடைகின்றனர். உலக அளவிலான வரலாற்றுச் சூழலைத் தமிழர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்பத் தமிழை வளர்க்க வேண்டும்.

இந்த நிலை நீடித்தால்தமிழ் அழியும் நாள் தொலைவில் இல்லை. தமிழன் பற்றின்றி நடந்துகொண்டு,தன்னையும் தன் பண்பாட்டையும் கோட்டைவிட்டுவந்தேறிகளும் வடவர்களும் எல்லாம் எங்களது என்கிறார்களே என்று புலம்புவதால் என்ன பயன்தமிழ் உணர்வு இல்லாதவரை தமிழ் இனம் எவ்விதம் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும்தமிழ் இன்றிருக்கும் நிலையே இன்னும் ஒரு நூற்றாண்டு நீடித்தால்,எதிர்காலத்தில் தமிழ் இருக்காது. ஒரு வேளை “டமில்” இருக்கலாம்அப்போதும் சில ஆய்வாளர்கள் “டமிலின்” மூலமொழி தமிழாசமஸ்கிருதமாஆங்கிலமாதெலுங்காஉருதுவா என்றுகூட ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.


மொழிப்பிரச்சினை-ஒரு நோக்கு

mozhippirachchanai-3
இந்தியா பலமொழிகள் பேசப்படும் ஒரு தேசம் என்கிறார்கள். (இந்தக் கூற்று சற்றே விவாதிக்கப்பட வேண்டியது.) ஒரு தேசம் என்பதற்கு ஒரு மொழிஒரு கலாச்சாரம்ஓர் இனம் என்பது அடிப்படைத் தேவை. இந்தியாவிலோ பல மொழிகள்பல கலாச்சாரங்கள்பல இனங்கள். வேண்டுமானால்பல கலாச்சாரங்கள் சேர்ந்த ஒரு நாடாக (தேசமாக அல்ல) அமைந்தது இந்தியா என்று கூறலாம். தேசம் என்பதை “நேஷன்” என்போம்நாடு என்பதை “கண்ட்ரி” என்போம். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. உதாரணமாகசிலப்பதிகாரக் காலத்தில்சேரநாடு இருந்தது,சோழநாடு இருந்ததுபாண்டியநாடு இருந்தது. ஆனால் இவையனைத்தும் சேர்ந்தது தமிழ் தேசம்‘. இந்தக் கருத்து சிலப்பதிகாரக் காப்பியத்தில் உள்ளதனால்தான் அதை தேசியக் காப்பியம் என்கிறார்கள்.

இந்தியா ஒரு தேசம் என்று ஏற்காவிட்டாலும்கூடபழங்காலத்திலிருந்தே அருகருகில் இருப்பதன் காரணமாகஒரு மொழி பேசுபவர்கள்இன்னாரு மொழி பேசுபவரிடம் கலந்தே ஆகவேண்டிய ஒரு கட்டாயம் மிகப் பழங்காலத்திலிருந்து இன்றுவரை இருந்துவருகிறது. இன்னும்கேட்டால் காலப்போக்கில் மிகுதியாகியிருக்கிறது. இந்தியாவில் அரசியலமைப்புப்படி ஆட்சிமொழிகளாகப் பதினெட்டு மொழிகளும் சாகித்திய அகாதெமியின் அங்கீகாரப்படி இலக்கிய வளமுள்ள மொழிகளாக இருபத்திரண்டு மொழிகளும் ஏற்கப்பட்டுள்ளன.

இன்று இந்தியாவில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு-நதிப்பிரச்சினைவேலை வாய்ப்புப் பிரச்சினைவளர்ச்சிப் பிரச்சினை போன்ற பலவற்றிற்கு அடிப்படை மொழிப்பிரச்சினை. பெல்காம் மராட்டியர்களுக்குச் சொந்தமானதா,கன்னடர்களுக்குச் சொந்தமானதா போன்ற இடப்பிரச்சினைகள் உட்படப் பலவற்றிற்கும் அதுதான் காரணம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து போன்ற ஒரே மொழி பேசப்படுகின்ற நாடுகளில்கூடஅவர்கள் தங்கள் தேவைக்கேற்ப பிரெஞ்சுஜெர்மன்லத்தீன்கிரேக்கம் போன்ற பல மொழிகளைப் பயிலுகிறார்கள். இருபத்திரண்டு மொழிகள் இருக்கின்ற நம் நாட்டில் பிறமொழிகளைப் பற்றிய அறிவு எவ்வளவு இன்றியமையாதது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனவே இந்தியர் ஒவ்வொருவருக்கும் மூன்று நான்கு மொழியறிவு இருப்பது நன்மையே தரும். அவற்றை முறையாகப் படிப்பதும் நல்லதுதான்.

பலமொழியறிவு வேலைவாய்ப்புக்கு மட்டுமல்லபண்பாட்டு வளர்ச்சிக்கும் பரந்த மனப்பான்மைக்கும் பிறரைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் அவசியம். தன் ஊருக்குள்ளாகவே குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பவனுக்கும்அதே ஊரில் பிறந்தாலும் பலமொழியறிவு பெற்றவனுக்கும்அந்த ஊரிலிருந்து பலவேறு பிரதேசங்களுக்கும்அயல்நாடுகளுக்கும் சென்று சுற்றிவந்தவனுக்கும் நிச்சயமாகப் பண்பாட்டு நோக்கில் பாரதூரமான வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஒரு மொழியறிவு என்பது மொழியை அறிவது மட்டுமல்ல,ஒரு கலாச்சாரத்தையும்பண்பாட்டையும் புரியவைப்பது அது. மற்றொருவித வாழ்க்கை முறையைச் சொல்லித் தருவதுமற்றவன் ஏன் நம்மைவிட வேறுபட்டு இருக்கிறான்வாழ்க்கை நடத்துகிறான்வேறுபட்டுச் சிந்திக்கிறான். அதை நாம் எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதைச் சொல்லித் தருவது.

ஆகவே என்னைப் பொறுத்தவரை தமிழர்கள் நான்கு மொழிகளேனும் கற்கவேண்டும் என்று பரிந்துரை செய்வேன். அது அவரவர் தேவைக்கும் தொழிலுக்கும் ஏற்ப அமையலாம். உதாரணமாகதமிழில் பக்தி இலக்கியத்தைச் சொல்லித் தருகின்ற ஒரு பேராசிரியர்தமிழுடன் ஆங்கிலம்சமஸ்கிருதம்இந்தி ஆகிய மூன்றையும் படிப்பது பயனுடையதாக இருக்கும். நவீன சமூகவியல் தத்துவக் கருத்துகளைக் கற்றுத்தரும் பேராசிரியராக இருந்தால் பிரெஞ்சுஜெர்மன் படிப்பது பயனுடையது. திருச்சியில் ஜாபர்ஷா தெரு முழுவதும் செயற்கைக் கற்கள் உற்பத்தியும் வியாபாரமும் நடப்பது எனக்குத் தெரியும். அவர்கள் வியாபாரத்துக்கென சூரத்,பம்பாய் என்று அலைபவர்கள். அவர்களுக்கு மராட்டிகுஜராத்தி தெரிந்தால் நல்லது. எதுவுமே இல்லைநான் விவசாயி என்பவன்கூட சமஸ்கிருதத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது நல்லது. மனத்தை விரிவுபடுத்த பலமொழிக்கல்வி ஒரு பயனுள்ள சாதனம்.

ஆனால் இங்கே ஒரு தெளிவைச் சொல்லிவிட வேண்டும். எத்தனை மொழிகள் படித்தாலும்முதலில் தாய்மொழியே முதன்மையானது. தாய்மொழி வழிக்கல்விதான் உண்மையான படைப்பாற்றலையும் கண்டுபிடிப்பறிவையும் ஆக்கசக்தியையும் உருவாக்கக்கூடியது. இது இன்று சரிவர இல்லாததனால்தான் தமிழ்நாட்டில் வெறும் மனப்பாடப் பொம்மைகள் உருவாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்து இருநூற்றுக்கு ஆயிரத்துநூற்றுத் தொண்ணூறுக்கு மேல் மதிப்பெண் வாங்கி வெளிவருபவர்களையும் பார்க்கிறோம். ஒரு பதினைந்து இருபதாண்டுகளாகப் படித்து வெளியில்வந்த மாணவர் கணக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி மதிப்பெண் வாங்கியவர்களெல்லாம் வெறும் வயிற்றுப் பிழைப்புப் பொறியியலாளர்களாகவும் மருத்துவர்களாகவும் ஆனதன்றி வேறு என்ன ஆனார்கள்இதுவே போதும்இதற்குமேல் சமூகம் வேண்டாம்,நாடு வேண்டாம்இனம் வேண்டாம்படைப்பாற்றல் வேண்டாம் என்று தமிழ் நாட்டவர் நினைப்பதனால்தான் ஆங்கிலத்துக்கு முதன்மையும்மனப்பாடக் கல்விமுறையும் நடைமுறையாகிவிட்டன.

mozhippirachchanai-4
இன்னொரு தெளிவையும் சொல்லவேண்டும். பல மொழிகள் கற்பது ஆரோக்கியமானது. ஆனால் பிறமொழிகள் ஓர் இனத்தின்மீது ஆதிக்கம் செய்ய விடலாகாது. இந்தியைக் கற்கவேண்டும் என்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஒன்றுஅது தமிழைவிட மேம்பட்டது என்ற கருத்து உருவாகக்கூடாதுஅது தேசியமொழி என்று கூறக்கூடாது. இரண்டாவதுதாய்மொழியைத் தவிர வேறு எந்தமொழியைக் கற்பதும் தன்ஆர்வத்தினால் (வாலண்டரியாக) இருக்க வேண்டுமே தவிரக் கட்டாயமாக்கக்கூடாது.

mozhippirachchanai-5
வடமாநிலத்தவர்கள்-குறிப்பாக மையமாநிலத்தவர்கள் எனப்படுவோர் (மத்தியப்பிரதேசம்ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம்பிஹார் போன்றவை இதில் அடங்கும்) இந்தியை மட்டும் படித்தால் போதும்தாங்கள் வேறு எந்த மொழியையும் உள்படப் படிக்கமாட்டோம் என்கிறார்கள். இந்த மனப்பான்மைதான் பல பிரச்சினைகளை உருவாக்குகிறது. இந்தியா ஒரே தேசமாம்ஆனால் உ.பி.க்காரன் ஒரே மொழிதான் படிப்பானாம்ஆனால் தமிழ்நாட்டுக்காரன் தாய்மொழியாகத் தமிழ்வேலைக்காக ஆங்கிலம்தேசபாஷை என்பதற்காக இந்தி,வேலைக்காக இன்னும் ஏதாவது ஒரு மொழி என்று படிக்கவேண்டுமாம். ஏன் இந்த வேற்றுமைபாரபட்சம்?தமிழன் இந்தி படித்தால்இந்திக்காரன் நான்கில் ஒரு தென்னாட்டு மொழியாவது படிக்கட்டுமேஆந்திராக்காரன் வங்காளி படித்தால்வங்காளத்தவன் மலையாளமாவது படிக்கட்டுமேஇன்று லக்னோவில் இருப்பவன் இந்தியில்-தன் தாய்மொழியில்-ஐஏஎஸ் எழுதி எளிதில் வெற்றி பெறமுடியும். ஆனால் தமிழன் ஆங்கிலத்திலோ,இந்தியிலோ எழுதியாக வேண்டும். இரண்டுமே அவனுக்குத் தாய்மொழியல்லபிறமொழிகள்.

மும்மொழித்திட்டம் என்பதை நடைமுறைப்படுத்தினால்இந்தியா முழுவதும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு சில மாநிலங்களில் ஒரு மொழி படித்தால் போதும்இன்னும் சில மாநிலங்களில் இருமொழி படித்தால் போதும்வேறுசிலவற்றில் மூன்று மொழிகள் படிக்கவேண்டும் என்பது சரியான முறை அன்று. இதற்குக் கல்வி மத்தியஅரசின் பொறுப்பில் இருக்கவேண்டும். மாநில அரசு இதில் தலையிடக்கூடாது. ஒரு மலையாளி மலையாளம்இந்திஆங்கிலம் என மூன்று மொழி படித்தால்ஒரு மத்தியப்பிரதேசக்காரனும் இந்தி,ஆங்கிலம்தென்னாட்டு மொழி ஒன்று என மூன்றுமொழிகள் படிக்கவேண்டும். கண்டிப்பாக வடக்கிலுள்ளவர்களுக்குத் தென்னகத்து மொழி ஒன்று கற்பிக்கப்பட வேண்டும். தெற்கில் இருப்பவர்கள் இந்தியோ,வேறு எந்த வட மாநிலத்து மொழியோ ஒன்று கண்டிப்பாகக் கற்கவேண்டும்.

இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. மூன்று தலைமுறைகளுக்குமேல் ஒரு பகுதியில் தங்கினால் அந்தப் பகுதியின் மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக் கொள்ளவேண்டியதும் அவசியம். மூன்று தலைமுறைகள் என்பது ஏறத்தாழ நூறாண்டுகள். உதாரணமாகமூன்று தலைமுறைக்கு மேல் நிலையாக மைசூரிலோ பெங்களூரிலோ நிலையாகத் தங்கி வீடுவாசலோடு வாழும் தமிழர்கள் கன்னடத்தைத்தான் தாய்மொழியாகக் கொள்ளவேண்டும். பம்பாயில் ஐந்து தலைமுறையாக வாழும் பிஹார்க்காரன்மராட்டியையே தன் தாய்மொழி எனக் கற்கவேண்டும்,குறிப்பிட வேண்டும். இதில் போய்ப்போய் வருபவர்கள் (floating population) பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நிலையான சொத்து-பழைய காலச் சொற்படி ஸ்தாவர ஆஸ்தி என்பதின்றி அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் பணிக்காக அலைபவர்களை இதில் சேர்க்கத் தேவையில்லை. ஒரு தமிழன் அசாமுக்குப் போய் அரசுப்பணி செய்யலாம். அவன் தன் பணிக்காலம் முழுவதையும் அங்கே கழிததுவிட்டுபிறகு தமிழகத்திற்குத் திரும்பிவந்தால் அவனை அசாமிப் பட்டியலில் சேர்க்கமுடியுமாஆனால் அங்கேயே வீடு வாங்கி,பிள்ளைகளுக்கும் அங்கேயே வேலைவாங்கிக்கொடுத்துஅங்கேயே நிலையாகத் தங்கிஅவன் தலைமுறையினர் அங்கு வாழத்தொடங்கினால் அவர்களை அசாமியர்களாகவே கருதவேண்டும்.

இன்றைய மக்கள் கணக்கெடுப்பு முறையில் இந்தக் கணக்கீட்டைச் செய்வது எளியது. இது தேசிய இனப்பிரச்சினைச் சவாலுக்கு ஒரு தீர்வாகவும் அமையும்.


சிரிப்பும் பெயர்ப்பும்

sirippum2

தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி கிடையாது என்றுதான் தோன்றுகிறது. காரணம், ஆங்கிலத்தில் humour, joke என்றெல்லாம் வழங்கப்படும் சொற்களுக்குத் தமிழில் ஏற்றதாக எதுவும் கிடையாது. அவனுக்கு அழுகை வருகிறது, இவனுக்கு அச்சம் தோன்றுகிறது, அவருக்குப் பெருமிதம் அதிகம் என்றெல்லாம் சொல்கிறாற் போல், இவனுக்கு நகை தோன்றுகிறது என்று சொல்லமுடியாது. குறைந்த பட்சம், இன்றைய தமிழில் சொல்லமுடியாது. சொன்னால் எங்கே நகை என்று ஓடுவார்கள். நகைப்பு என்று சொல்லலாமே என்கிறீர்களா? அது நகைக்கும் செயலைக் குறிக்குமே (தொழிற்பெயர்) தவிர, நகைப்பை ஏற்படுத்தும் ஒரு செயலையோ சொற்கூட்டத் தையோ குறிக்காது. இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தமிழ்க்கவிதையைப்பார்த்தால் நகைச்சுவையை மட்டும் அதிகம் காணமுடியவில்லை. காளமேகப் புலவர் ஒருவர்தான் கவனத்திற்கு வருகிறார். அதற்குப்பின் கவிமணி தேசிகவிநாயகம்தான். மொழியியலாளர்களின் கருத்துப்படி ஓர் இனம் எந்த எந்தப் பொருள்களை அல்லது சிந்தனைகளைப் பயன்படுத்துகிறதோ அதற்கு நிறைய சொற்கள் மொழியில் காணப்படும். எது அந்த இனத்தின் பயன்பாட்டில் இல்லையோ அதற்கான சொற்களும் இருக்காது. அந்த அடிப்படையில், தமிழினத்திற்கு நகைச்சுவைத்துறையில் சொற்பஞ்சம். அப்படியானால் மொழியாளர்கள் கருத்துப்படி தமிழர்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி கிடையாது என்று தானே அர்த்தம்?

மரபில் வந்துவிட்ட சொற்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தமிழில் விதிஇருப்பதால், தக்கசொற்கள் கிடைக்கும் வரை humour என்பதற்கு ஹாஸ்யம் என்றும், joke என்பதற்கு நகை(ச்சுவைத்)துணுக்கு என்றும் வைத்துக்கொள்வோம். நகைச்சுவைத்துணுக்கு என்பதில் இடையில் சுவை என்பது வேறு சுவைக்கேடாகக் குறுக்கிடுகிறது. நகைத்துணுக்கு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நகை என்றால் தமிழர்களுக்குத் தங்கநகைதான் ஞாபகத்திற்கு வரும். நகைத்துணுக்கு என்றால் யாராவது துண்டாகிப்போன நகை என்றுநினைப்பார்கள். நகைத்துணுக்கு என்பதைவிட சிரிப்புத்துணுக்கு என்பது பொருத்தமாகஇருக்கும் என்று தோன்றுகிறது. நகை என்பது அத்தியாவசியமான சொல்லாக இல்லாமல் ஆபரணம், சிரிப்பு என்ற இரண்டையும் குறிக்கும்போதே மொழியியலாளர் கருத்து சரி என்று படவில்லையா?

ஆங்கிலத்தில் நகைச்சுவை சம்பந்தமான பேச்சு அல்லது எழுத்துச் சொற் கோவையைக் குறிக்கப் பலசொற்கள் இருக்கின்றன. wit என்பது அறிவுத்திறன் வாய்ந்த நகைச்சுவை எழுத்து அல்லது பேச்சு. humour என்பதும் உயர்ந்தவகையில் சிரிப்பினை உண்டாக்க வல்லதே. joke என்பது மட்டமானது. ஹாஸ்யம் என்பது உலகளாவியது, ஜோக் என்பது மாறுவது” என்று ஆங்கிலத்தில் பழமொழி உண்டு. Repartee (சாதுரியமான பதில்) என்பது ஒருவருடைய தாக்குதலுக்கு உடனடியாக எதிர்வினை செய்து மட்டம் தட்டுமாறும் சிரிப்புவருமாறும் பேசுதல். இவற்றிற்குச்சான்றுகள் தரலாம்.

ஒருவர் பிரார்த்தனை செய்கிறார்: “Lead me not into temptation. I can find the way myself”. இது wit எனப்படுவதில் அடங்கும்.

“மகளே, உன் வீட்டுக்காரர் மிகவும் லேட்டாக இரவில் வீட்டுக்கு வருகிறாரே. உங்கம்மா இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையா?”

“சொன்னாங்கப்பா. ஆம்பிளைங்க எந்தக் காலத்திலும் மாறுகிறதே இல்லைன்னாங்க”

இது ஹாஸ்யம் அல்லது humour என்ற வகையைச் சேர்ந்தது.

“அடுத்தவீட்டுக்காரர் அவர் வேலைக்குச் செல்லும் முன்னால் அவருடைய மனைவிக்கு முத்தம் கொடுத்துவிட்டுச் செல்கிறார். நீங்களும் ஏன் அப்படிச் செய்யக் கூடாது?”

“எனக்கு விருப்பந்தான். ஆனால் எனக்கு அந்தம்மா யாரென்றே தெரியாதே”

இது joke அல்லது சிரிப்புத்துணுக்கு என்ற வகை.

Repartee என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம்: அறிஞர் அண்ணாதுரையிடம் சட்டசபையில் (அவரை இழிவுபடுத்துவதற்காக) “உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புண்டா?” என்று கேட்டார்கள். அவர் சொன்னார்: “நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல, அவர் படி தாண்டாப் பத்தினியும் அல்ல”.

சிரிப்புத்துணுக்குகளை பன்னிரண்டு வகையாகப் பிரிக்கலாம் என்று கருதுகிறேன்.

1. குறிப்பிட்ட இனத்தை அல்லது குழுவைப்பற்றிய துணுக்குகள். சர்தார்ஜி ஜோக்குகள் இப்படிப்பட்டவை. கருமிகள், ஊமைகள், அசுத்தமானவர்கள், குருட்டுத்தனமான விசுவாசத்தைக் காட்டுபவர்கள், மொழியைச் சிதைத்துப் பேசுபவர் கள், தந்திரசாலிகள் போன்றவர்களைப் பற்றிய துணுக்குகளையும் இதில் சேர்க்கலாம். இந்திப் படங்களில் தமிழர்களைக் கேலிசெய்ய பட்டையாக விபூதி தரித்த, குடுமி வைத்த ஒருவனைக்காட்டி, அவன் வாக்கியத்திற்கு வாக்கியம் ஐயோ என்று கூறி இந்தியைக் கொச்சையாகப் பேசுவதாகக் காட்டுவார்கள். இது போன்றவை. (“ஐயோ, மை க்யா கரூம்? ஐயோ, முஜே மாலும் ஹீ நஹீந் த்தா யா இஸ் தரஃப் ஹோகா”). இதேபோல தமிழில் வடநாட்டவரை – குறிப்பாகப் பட்டாணியரை அடையாளப் படுத்த, “நம்பள் சொல்றான், நிம்பள் கேக்கிறானில்ல. ஜல்தி பத்தாய்ரம் தர்றான்” என்பதுபோல உரையாடல் அமைப்பார்கள்.

2. அரசியல் துணுக்குகள். அரசியல் சூழல்கள், அரசாங்க நடைமுறைகள், தேசிய குணங்கள், அரசியல் தலைவர்கள், எம்எல்ஏ-எம்.பிக்கள் போன்றவர்களை எள்ளி நகையாடுதல் போன்றவை இப்படிப்பட்டவை. அரசியல் தேசமுழுவதற்கும் பொதுவா னதால் இவை ஜனரஞ்சகமான பிரபலமான சிரிப்புத்துணுக்குகளாக இருக்கின்றன. தமிழ்ப் பத்திரிகைகளில் இவற்றை மிகுதியாகக் காணலாம்.

3. பாலியல் சிரிப்புத்துணுக்குகள்-விபசாரம், ஆபாசம், பாலியல் அறியாமை, பாலியல் திறன்,  கவர்ச்சி, போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சிரிப்புத்துணுக்குகள் இவ்விதம். உதாரணத்திற்கு ஒன்று:

முதலிரவுப் படுக்கையில் கணவன் மனைவியிடம்:: “டார்லிங், உன் வாழ்க்கையில் நான்தான் முதல் ஆண்மகன் என்று சொல்வாயா?”

மனைவி (கூர்ந்து பார்க்கிறாள்): “இருக்கலாம்.. உங்கள் முகம் பரிச்சயமாகத்தான் தெரிகிறது”

4. மதசம்பந்தமான சிரிப்புத்துணுக்குகள். சமயசம்பந்தமான விஷயங்கள், மூட நம்பிக்கைகள், சாமியார்கள், கடவுளர்கள் போன்ற விஷயங்களைப் பற்றிய சிரிப்புத்துணுக்குகள்.

5. பொருளாதார நிலை பற்றிய சிரிப்புத்துணுக்குகள். பற்றாக்குறை, ஏழ்மை, பிச்சைக் காரத்தனம் போன்றவை பற்றிய துணுக்குகள் இவ்வகை. ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர்களின் பொருளாதாரப் பழக்கவழக்கங்களும் இவற்றில் கேலிக்குள்ளாகும். உதாரணத்திற்கு ஒன்று:

துயர்நோக்காளன்: “என் டம்ளரில் பாதி காலியாக இருக்கிறது”.

மகிழ்நோக்காளன்: “என் டம்ளரில் பாதி நிரம்பியிருக்கிறது”.

பன்னாட்டுக்கம்பெனி வேலைக்குறைப்பு ஆலோசகன்: “தேவைக்கு அதிகமாக ஒரு டம்ளர் இருக்கிறது”.

6. முட்டாள்தனம் பற்றிய, அல்லது வயதானதால் ஏற்படும் மறதி போன்றவை பற்றிய சிரிப்புத் துணுக்குகள்.

7. ரிபார்ட்டி எனப்படும் சாதுரியமான பதிலடிகள். (முன்பே உதாரணம் தரப்பட்டது. என்றாலும் இன்னொன்று பார்க்கலாம்):

பெர்னாட்ஷாவிடம் ஒரு நடிகை கூறினாள்: “நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் உங்கள் அறிவும், என் அழகும் சேர்ந்த குழந்தைகள் பிறப்பார்கள் இல்லையா?” அவர் சொன்னார்:”அம்மணி, மாறிப் பிறந்துவிட்டால் என்ன செய்வது?”

இதை quickwit என்று சொல்பவர்கள் உண்டு.

8. சமூகத்திற்கு எதிரான குடி, திருட்டு, பயங்கரவாதம் போன்ற குற்றங்கள் பற்றிய சிரிப்புத் துணுக்குகள். இவையும் தமிழ் இதழ்களில் மிகுதியாகவே வருகின்றன.

9. சீருடை நகைச்சுவை பற்றிய சிரிப்புத்துணுக்குகள். போலீஸ், இராணுவம், முதலானவர்கள் முதல், சீருடை அணிந்த ஹோட்டல் சர்வர்கள் வரை இது செல்லும். உதாரணம் ஒன்று:

என்நண்பன் நேவி(கடற்படை)யில் சேர்வதற்காக மருத்துவச்சோதனைக்கு உட்பட வேண்டியிருந்தது. அவன் தோள்பட்டை சரியாக இல்லாததால் முழுதும் உயரமாகக் கையைத்தூக்க இயலவில்லை. “என்ன செய்யலாம்” என்று கீழ்நிலை மருத்துவர் கேட்டார். “ஒன்றும் பாதகமில்லை. பாசாக்கிவிடுங்கள். சரணடையும் போது தவிர அவனுக்கு ஒன்றும் பிரச்சினை ஏற்படாது” என்றார் உயர்மருத்துவர்.

10. வேலைகள் பற்றிய சிரிப்புத்துணுக்குகள். இதில் ஆசிரியர்-மாணவர், கல்விநிறுவனங்கள், மாணவர்களுக்குள்ளான நகைச்சுவை, வக்கீல்கள், மருத்துவர்கள், தொழில்செய்வோர், வணிகர்கள், எழுத்தர்கள், அதிகாரிகள் போன்றோர்பற்றிய நகைத்துணுக்குகள் அடங்கும். சான்று,

என் மகன் எல்கேஜி வகுப்பிலிருந்து மாறி யுகேஜி வகுப்புக்கு வந்தான். வகுப்பு மாறியது ஏன் என்று அவனுக்கு விளங்கவில்லை. அவன் பாஸாகிவிட்டதால் அந்த வகுப்புக்கு மாறியிருப்பதாக நான் விளக்கினேன். “பாவம் மம்மி, அப்ப எங்க மிஸ் ஃபெயிலாயிட்டாங்க” என்றான். “அவங்க அதே கிளாஸ்ல தானே இருக்காங்க”.

11. குடும்பத்துணுக்குகள். தாத்தா, பாட்டி, பெற்றோர், பிள்ளைகள், மாமன், மைத்துனன் போன்ற உறவு முறைகள் பற்றிய சிரிப்புத்துணுக்குகள்.

12. மொழியியல் சார்ந்த துணுக்குகள். சொற்பிழைகள், அச்சுப்பிழைகள், சிலேடைகள், கேலிகள், நையாண்டிகள், உச்சரிப்பு, சொல் அல்லது வாக்கியம் சார்ந்த தவறுகள் யாவும் இவ்வகையில் அடங்கும்.

இவற்றுடன் இப்போது பிரபலமாயிருக்கிற ‘கடி’களையும் ஒருவகையாகச் சேர்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு ஒன்று:

“காதைப் பொத்திக்கொண்டிருக்கும் கொரில்லாவை(மனிதக் குரங்கை) என்னவென்று அழைக்கலாம்?”

“எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். நீ என்ன அழைத்தாலும் அதற்குக் கேட்கப் போவதில்லை”.

மொழியியல்சார்ந்த சிரிப்புத்துணுக்குகளை மொழிபெயர்ப்பதுதான் மிகவும் கடினம். பிற எல்லாவகைத்துணுக்குகளையும் ஒருவாறு எளிதாக மொழிபெயர்த்து விடலாம். ஆனால் ஒரேமாதிரி உச்சரிப்புகொண்ட சொற்கள்(homonyms), பல அர்த்தங்கொண்ட சொற்கள்(polysemy), பொருள்மயக்கம், சிலேடை, உருவகம் போன்ற வை அமைந்த சிரிப்புத்துணுக்குகளை எளிதில் மொழிபெயர்க்க முடியாது. உதாரணத் திற்கு ஒன்று-

Boy: Here, honey. Sweets to the sweet.

Girl: Oh, thank you. Won’t you have some of these nuts?

இங்கு nuts என்றசொல்லில் அமைந்திருக்கும் சிலேடையை மொழிபெயர்க்கமுடியாது. நட்ஸ் என்ற சொல்லுக்கு கடலை, பட்டாணி போன்ற முழுப்பருப்புகள் என்ற அர்த்தம் மட்டுமல்ல, பைத்தியம் என்ற பொருளும் உண்டு. மொழிபெயர்ப்பில் இந்த அர்த்தத்தைக் கொண்டுவர முடியாததால் அது தோல்வியடைகிறது.

மொழிபெயர்க்கும்போது மூல(இங்கு ஆங்கில)ப் பிரதியில் உண்டான அதே விளைவு உண்டாக வேண்டுமானால் இரட்டை அர்த்தம், கேலி, நையாண்டி, ஒரேவடிவம் கொண்ட சொல், பலபொருள் கொண்ட சொல், உருவகப்பாங்கான சொல் போன்றவற்றை எழுத்துமாற்றம்தான் (transliteration) செய்யவேண்டும். அதாவது அந்த ஆங்கில வார்த்தையைத் தமிழில் அப்படியே எழுதிவிட வேண்டும். உதார ணமாக, பின்வரும் துணுக்கினைப் பாருங்கள்,

பில்கேட்ஸ் இறந்து சொர்க்கத்திற்குப்போகிறார். அவருக்குச் சிறிய வீடொன்று மட்டும்தான் அளிக்கப்படுகிறது. காலை வாக்கிங் போகும்போது அழகான சூட் அணிந்த ஒருவனைச் சந்திக்கிறார். அந்த சூட் அவரை மிகவும் கவர்கிறது. எங்கே கிடைத்தது என்று விசாரிக்கிறார். அவன் சொர்க்கத்தில் தனக்கு அந்தமாதிரி சூட்டுகள் ஐம்பது, இரண்டு மாளிகைகள், படகுகள், கார் போன்றவசதிகள் கிடைத்திருப்பதாகக் கூறுகிறான். இவையெல்லாம் கிடைக்க, அப்படி நீ என்ன செய்தாய் என்றுஅவனை விசாரிக்கிறார். அவன் டைட்டானிக் கப்பலின் கேப்டனாக இருந்ததாகக் கூறுகிறான். உடனே எரிச்சலோடு செயிண்ட் பீட்டரை (சொர்க்கத்தின் வாயிற்காவலர்)ப் பார்க்க ஓடுகிறார் பில்கேட்ஸ்.

“இதென்ன அநியாயம்? டைட்டானிக் கப்பல் தலைவனுக்கு இவ்வளவு வசதி, விண்டோஸ் கண்டுபிடித்த எனக்கு ஒரு சிறிய இடம்தானா?”

“நாங்களும் விண்டோஸைப் பயன்படுத்துகிறோம்” என்கிறார் பீட்டர். “டைட்டானிக் ஒரு முறைதானே கிராஷ் ஆகியது?”

இதில் எத்தனை சொற்கள் அப்படியே எழுத்துப் பெயர்ப்புசெய்யப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கவும். குறிப்பாக punch line ஆகிய கிராஷ் என்பது மிக முக்கிய மானது. இதற்குப் பதிலாக உடைதல், நொறுங்குதல், போன்ற தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினால் இதன் நகைச்சுவை போய்விடும்.

சிலேடையும் மேற்கூறியது போலத்தான். உதாரணமாக,

Why did the Pope cross the road?

Why, he crosses everything…

இங்கு கிராஸ் எனப்படும் சொல்லின் சிலேடைதான் முக்கியம். he crosses everything என்பது முக்கியவரி(punch line).

மிக அதிகமாகக் கலாச்சாரத்தன்மை கொண்ட துணுக்குகளையும் மொழி பெயர்க்க ஆவதில்லை. உதாரணமாகக் கீழ்வரும் ஆங்கிலத் துணுக்கைப் பாருங்கள்:

As I was hugging my teenage son goodnight, he said, “you are my favourite mum in the whole world”. “I am your only mum, silly” I replied smiling. “OK” he said matter-of-factly. “You are my most favourite woman”.

“What’ll happen when you get a girlfriend?” I teased.

“Then there’ll be a tie”, he decided.

இத்துணுக்கில் வரும் சொற்கள், பழக்கவழக்கங்கள் யாவும் ஆங்கிலக் கலாச்சாரத்திற்கே உகப்பானவையாக இருப்பதால், இதனை அவ்வளவு எளிதில் தமிழில் மொழி பெயர்த்துவிடமுடியாது. பெயர்த்தால் ஒருவித அருவருப்புதான் ஏற்படும். சான்றாக, அதன் மொழிபெயர்ப்பைத்தான் பாருங்களேன்.

குட்நைட் சொல்வதற்காக என் டீனேஜ் மகனைத் தழுவியபோது அவன் சொன்னான்: “இந்த உலகத்திலேயே எனக்குப் பிடித்தமான அம்மா நீ ஒருத்திதான்”. “உன் ஒரே அம்மா நான்தான்” சிரித்துக்கொண்டே திருத்தினேன். “சரிதான்” என்று யதார்த்தமாகச் சொன்னவன், பிறகு

“நீதான் எனக்கு மிகவும் பிடித்தமான பெண்” என்றான்.

“உனக்கு ஒரு கேர்ல்-பிரண்ட் கிடைத்தால் என்ன சொல்வாய்?” என்று விளையாட்டாகக் கேட்டேன். “அப்படியானால் ஒரு டை (tie – சம எண்கள் பெற்ற இரு விளையாட்டுக் குழுக்களிடையே ஏற்படும் போட்டி) ஏற்படும்” என்று முடித்தான்.

சில சமயங்களில் பழமொழிகள்கூட சிரிப்பூட்டுவதாக அமையலாம். இது ஆங்கில வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சீனப் பழமொழி. “விளக்குச் செலவைக் குறைக்க சீக்கிரம் படுத்தால், இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாம்”.

மேற்கண்ட துணுக்குகள் எல்லாமே ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிகைகளிலிருந்து (ஆங்கிலத்திலிருந்து) தமிழுக்குப் பெயர்க்கப்பட்டவை. இம்மாதிரி நிறைய ஜோக்குகளை மொழிபெயர்த்த அனுபவத்திலிருந்து வெளிப்படும் சில கருத்துகளைத் தொகுத்துப்பார்க்கலாம்.

1. எல்லாவகையான சிரிப்புத்துணுக்குகளையும் மொழிபெயர்க்க இயலும். ஆனால் சிலவகைத் துணுக்குகளை மொழிபெயர்க்கும்போதுதான் மூலமொழியில் உண்டானது போன்ற  நகைச்சுவை விளைவு ஏற்படுகிறது.

2. இவ்வகை மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது மொழிபெயர்ப்பாளர்கள் சுதந்திரமான மொழிபெயர்ப்பு முறையையோ, அல்லது மிக விசுவாசமான சொல்லுக் குச் சொல் முறையையோ கையாளுவதில்லை. இயங்கியல் நிகர்மை (dynamic equivalence) காணும் முறையே கையாளப்படுகிறது.

3. ஒரே ஜோக்கை வெவ்வேறு ஆட்கள் மொழிபெயர்க்கும்போது அவை வெவ்வேறு வகையாக, இருவேறு வடிவங்களாக மாறிவிடுகின்றன.

4. துணுக்குகளை மொழிபெயர்க்கும்போது பஞ்ச்லைன் எனப்படும் நகைச்சுவை விளைவை உண்டாக்கக்கூடிய வாக்கியம்தான் முக்கியம். அதனை வெற்றிகரமாக மொழிபெயர்ப்பதில் தான் ஜோக்கின் வெற்றி அடங்கியிருக்கிறது. அப்படி பஞ்ச் லைனை மொழிபெயர்க்கும்போது, மூலமொழியில் என்ன விளைவு ஏற்பட்டதோ அதேபோன்ற விளைவு இலக்குமொழியிலும் ஏற்படுமாறு பெயர்க்கவேண்டும்.

5. பிரச்சினைக்குரிய சிரிப்புத்துணுக்குகள் எனப்படுபவை, மொழியியல் ரீதியான சிரிப்புத் துணுக்குகள்தான். இவற்றை மொழிபெயர்க்கும்போது பலவகை உத்திகள் தேவைப்படுகின்றன. அப்படியும் சரியான விளைவு ஏற்படும் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் விரிவாக மொழிபெயர்ப்பதும் பயன்தரும்.

6. உருவகங்கள், மரபுத்தொடர்கள்போன்றவை துணுக்கில் இருந்தால் அவற்றின் பொருளைத்தான் மொழிபெயர்க்கவேண்டும்.

7. எந்த வகை இரசிகர்களுக்குரியது, எந்தச் சூழலுக்குரியது என்பது துணுக்கின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போதே விளங்கவேண்டும். அந்தமுறையில் மொழி பெயர்ப்பு அமைய வேண்டும்.

sirippum1

8. சிரிப்புத்துணுக்குகளின் மொழிபெயர்ப்புகளை நாம்எளிதில் மதிப்பிடலாம். அப்படி மதிப்பிடும்போது பொதுவாக மூலமொழியில் அதன் விளைவை அடிப்படையாகக் கொண்டே மதிப்பிடவேண்டும். அப்படித்தான் மதிப்பிடுகிறார்கள். வேறுவகையில் சொன்னால், எந்த அளவு நகைச்சுவை உண்டாக்கும் திறன் மூலமொழித்துணுக்கிற்கு இருக்கிறதோ அந்தத் தன்மையே இலக்குமொழியிலும் அளவுகோலாகச் செயல்படு கிறது. ஏனெனில் துணுக்குகள் பெயர்ப்புகளாக இருந்தாலும் மூலமொழியில் படிப்பதைப் போன்ற விளைவுக்காகவே வாசிக்கப்படுகின்றன. ஆகவே துணுக்குகளின் மொழிபெயர்ப்பு, அவைசரியான விளைவைஅல்லது நகைச்சுவையை உண்டாக்குவத னால்தான் நியாயம்செய்யப்படும். பிற மொழிபெயர்ப்புகள் பொதுவாக மூலமொழிக் குள்ள விசுவாசத்தை வைத்து மதிப்பிடப்படும். ஆனால் சிரிப்புத் துணுக்குகளை மதிப்பிடுவது அப்படி அல்ல.

நகைச்சுவைத் துணுக்குகளையும் ஒருவித நாட்டுப்புற இலக்கிய வகையாக மதிக்கவேண்டும். தன்னிச்சையாக, முன்னேற்பாடின்றி, இலகுவாகத் தோன்றுகின்ற தன்மை அவற்றிற்கு இருக்கிறது. ஏற்பாட்டோடு செய்யப்படும் இலக்கிய வகை அல்ல இது. ஏற்பாட்டோடு எழுதும்போது சுவை காணாமற்போய்விடுகிறது. அயல்நாட்டு அல்லது அயல் கலாச்சாரத்தைச் சேர்ந்த துணுக்குகளை மொழிபெயர்ப்பது, அவர்களைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள- குறிப்பாக அவர்கள் வைத்திருக்கும் நல்ல/மோசமான பழக்கவழக்கங்கள், சமூக விலக்கங்கள்(taboos) போன்றவற்றையெல்லாம் எளிதில் அறிந்துகொள்ள உதவுகின்றது. குறிப்பாக, மொழிரீதியான துணுக்குகளை மொழிபெயர்ப்பது இருமொழிகளிலும் ஆற்றல்பெற உகந்த நல்ல பயிற்சி. பலசமயங்களில் அயல் கலாச்சாரத்தினரின் பேச்சுமொழியை விரைவில் அறிந்துகொள்ளவும் நல்ல பயிற்சியாகும்.


தமிழைக் கையாளுதல்

tamil-3

ஏனோ நாம் ஆங்கிலத்திற்கோ இந்திக்கோ தரும் மரியாதையை நமது தாய்மொழி யான தமிழுக்குத் தருவதற்கு மறுக்கிறோம். தமிழர்களாகப் பிறந்தும், நமக்குள் ளேயே ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறோம், இந்திக்காரனோ வடநாட்டுக்காரனோ வந்தால் விழுந்துவிழுந்து அரைகுறை இந்தியிலாவது பதில் சொல்கிறோம். ஆங்கிலத்தைக் கற்பதற்குச் செலவிடும் நேரத்தில் நூற்றில் ஒரு பங்குகூடத் தமிழுக்குச் செலவிடுவதில்லை.

பலசமயங்களில் நமது பேச்சிலும் எழுத்திலும் கையாளும் சொற்களும் தொடர் களும் ஆங்கிலத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. மேலும் சிற்றிதழ்கள் பெருகியபிறகு, அவரவர் இஷ்டத்துக்கு-மரபு கொஞ்சமும் தெரியாமல், தெரிந்து கொள்ள முயற்சியும் செய்யாமல்-சொற்களை உருவாக்கும் தன்மையும் வந்து விட்டது. ஆங்கிலத்தை இலக்கணபூர்வமாகக் கையாளுவதற்குச் செலவிடும் நேரத்தில் நூற்றில் ஒரு பங்கையும் தமிழைச் சரிவர அறிந்துகொள்வதற்குச் செலவிட மனம்வராத அலட்சிய மனப்பான்மை. பல ஆங்கிலப் பத்திரிகைகள் know your English மாதிரியான தொடர்களை வெளியிட்டு வருகின்றன. (“your” இங்கிலீஷாம், அது ஏதோ நமது தாய்மொழி போல! It is always, and ever will be, Englishman’s English only.) அதனால் தமிழைக் கையாளுகின்ற முறை பற்றிச் சற்றே தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது. இன்றைக்கு இரண்டு சொற்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

புரிதல்-புரிந்துகொள்ளுதல்

பலபேர் இப்போதெல்லாம் அவன் புரிந்துகொண்டான் என்பதைப் புரிந்தான் என்றே எழுதுகிறார்கள். இது தவறாகப் புரிந்துகொள்ளுதல் என்பதற்கு பதிலாக தவறான புரிதல் என்கிறார்கள். இம்மாதிரிக் கையாளுவது பிழை.

புரிதல் என்றால் செய்தல். அதனால்தான் “ஆட்சிபுரிந்தான்”, “தவறு புரிந்தான்” போன்று அதைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நான் சொன்னதை “அவன் புரிந்தான்” என்றால் அது நான் சொன்னதை அறிந்துகொண்டான் என்ற அர்த்தத்தைத் தராது, நான் சொன்னதைச் செய்தான் என்ற பொருளையே தரும்.

புரிந்துகொள்ளுதல் என்றால் ஒன்றை மனத்திற்குள் சரியான தன்மையில் வாங்கிக்கொள்ளுதல். கொள்ளுதல் என்ற சொல் மிகை என்று கருதி இப்படிப் புரிதல் என்றே கையாளுகிறார்கள் போலும்!

பழையகாலத்தொடர் ஒன்று-நலம்புரி கொள்கை நான்மறையாளர்….இங்கே நலம்புரிகொள்கை என்பதற்கு நல்லதைச் செய்கின்ற கொள்கை உடைய என்று தான் பொருள்.

உன்னுடைய புரிதல் தவறு என்றால் அர்த்தம்-your doing is not correct.
உன்னுடைய புரிந்துகொள்ளுதல் தவறு என்றால் அர்த்தம்- your understanding is not correct.
ஆங்கிலத்திலும் understanding என்ற சொல் இருக்கிறது. புரிந்துகொள்ளுதலில், கொள்ளுதலை விட்டுவிட்டதுபோல, understanding-இல் under-ஐ விட்டுவிடுவார் களா? (வெறும் ஸ்டேண்டிங் வேறு, அண்டர்ஸ்டேண்டிங் வேறு என்பது உங்க ளுக்கு நன்றாகவே தெரியும். அதுபோலத்தான் புரிதல் வேறு, புரிந்துகொள்ளுதல் வேறு.)

எதிர்மறை-நேர்மறை

உடன்படுதல் என்ற அர்த்தத்தில் இக்காலத்தில் நேர்மறை என்ற சொல்லைக் கையாளுகிறார்கள். “இது நேர்மறைக் கூற்று” என்கிறார்கள். “அவன் நேர்மறையாகப் பேசினான்” என்கிறார்கள். இவை “இது உடன்பாட்டுக்கூற்று”, “அவன் உடன்பட்டு (அல்லது ஒப்புதலோடு) பேசினான்” என்று வரவேண்டும்.

பாசிடிவ்-நெகடிவ் போலத் தமிழிலும் இருக்கவேண்டும் என்று கருதி எதிர்மறைக்கு எதிராக நேர்மறை என்ற சொல்லை உருவாக்கி விட்டார்கள் போலும்! தமிழ் மரபு உடன்பாடு, எதிர்மறை என்பதுதான். அவன் உடன்பட்டுப் பேசினான், எதிர்மறையாகப் பேசினான். அவன் நேர்மறையாகப் பேசினான் என்றால் தவறு.

எதிர்மறை-என்பது எதிராக மறுத்துரைப்பது என்ற தொடரிலிருந்து உருவாகிறது.

மறுப்பது என்பது இங்கே “மறை” என்றாகிறது. மறை என்றால் கூற்று என்றோ,  வேதம் என்றோ அர்த்தமில்லை. (“மறைவாக வை”, “மறைத்துக்கொள்” என்று ஓர் அர்த்தம் இருக்கிறது.) அதனால் ‘நேர்மறை’ என்றால், “(ஓர் ஆளை) நேராக மறுப்பது”, ‘எதிர்மறை’ என்றால் “(ஓர் ஆளை) எதிராக மறுப்பது” என்றுதான் பொருள்கொள்ளமுடியும். (துரதிருஷ்டவசமாக, இரண்டுமே ஒன்றுதான்!)